Search This Blog

17.11.14

சமஸ்கிருதம் - ஓர் கலாச்சாரத் திணிப்பே!


சென்ற வாரம் அவசர அவசரமாக மத்திய அரசு நிர்வாகத்தின் கீழ் இயங்கும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பப் பட்டது. அந்த அறிக்கையில் இந்தி, ஆங்கிலம், ஜெர்மன் என்ற மூன்று மொழிகளில் ஜெர்மன் படிக்கும் மாணவர்கள் இனி ஜெர்மனை விருப்பப் பாடமாக மட்டுமே படிக்கலாம் என்றும் 3-ஆம் இடத்தில் சமஸ்கிருதம் சொல்லித் தரப்படும் என்று கூறியிருந்தார்கள். 

 இதன் படி இதுவரை ஜெர்மன் படித்த மாணவர்கள் இனிசமஸ்கிருதம் படிக்கவேண்டும். வரும் கல்வியாண்டு களில் ஜெர்மன் இருந்த இடத்தில் சமஸ்கிருதம் இருக்கும் என்றும், இந்தி, ஆங்கிலமொழியுடன் சமஸ்கிருதத்தையும்   படிக்கும் நிலை உருவாக்கப்பட்டுள்ளது. எப்போதும் போல் சமஸ்கிருதத்தை மட்டும் வலியுறுத்தினால் கடுமையான எதிர்ப்பு கிளம்பும் என்ற நிலையில், சில மாநில மொழி களை விருப்பப்பட்டால் கற்கலாம் என்று ஒரு வரி சேர்த் துள்ளார்கள்.


அறிவியல் மொழிகளில் ஆங்கிலத்திற்கு அடுத்த இடத்தில் ஜெர்மன் இருப்பது உலகம் அறிந்த ஒன்று, பல்வேறு வானியல் கண்டுபிடிப்புகள் ஜெர்மன் மொழியில் இருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்க்கப்பட்டன. இன்றும் பல்வேறு தொழில் நுட்ப வார்த்தைகள் ஜெர்மன் மொழியில் தான் உள்ளன! 

அதை அப்படியே ஆங்கில வடிவில் படிக்கிறோம்.    தாய்மொழிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் தென்கொரியா, சீனா,ஜப்பான் போன்ற நாடுகள் அறிவியல் மொழியாக ஜெர்மனியைத் தேர்ந்தெடுத்து அதை பொறியியல், மருத்துவம் போன்ற கல்வியில் இரண்டாம் இடம் கொடுத்து கற்பித்து வருகின்றன.  அறிவியல் வளர்ச்சி இன்று மிகவும் முன்னேற்றம் கண்டுகொண்டு இருக்கும் இந்தக் காலகட்டத்தில், மூட நம்பிக்கையை வலியுறுத்தும் சாஸ்திரங்கள் நிரம்பிய குழப்பமான, தெளிவற்ற இலக்கணம் மற்றும் உச்சரிப்பிற்கு பயன்படாத ஒரு மொழியை வலுக்கட்டாயமாகத் திணிப்பது ஏன்?   தொலைக்காட்சி நிகழ்ச்சிஒன்றில் பாஜக ஆதரவாளர் ஒருவர் பேசும் போது சமஸ்கிருதம் என்று மட்டும் ஏன் பார்க்கிறீர்கள்?


இந்தியாவில் இதர மொழிகளில் ஏதாவதும் என்று உள்ளதே அதை ஏன் பார்க்கவில்லை? என்கிறார்.    இது எப்படி உள்ளதென்றால், தற்போது கார்ப்பரேட் நிறுவன விளம்பரங்களில்  வருவது போன்று இருக்கிறது; அதாவது சில பொருட்களை மிகவும் குறைந்த விலை மதிப்பில் பெரிதாக விளம்பரப்படுத்துவார்கள். ஆனால் ஒரு மூலையில் நிபந்தனைக்கு உட்பட்டது என்று சிறியதாக எழுதி இருக்கும். இதே ஏமாற்று வேலைதான் இங்கும் கேந்திரிய வித்யாலயாவில் சமஸ்கிருதத் திணிப்பு நடக்கிறது.


ஆர்.எஸ்.எஸ் கட்டளையில் இயங்கும் பாஜகவின் அரசு இதர மாநில மொழிகளில் அக்கறையிருந்தால் அட்டவணையில் உள்ள அனைத்து மொழிகளின் பெயரையும் சொல்லியிருக்கவேண்டுமே. அதைவிட்டு விட்டு சமஸ்கிருதத்தை மட்டும் தெளிவாகச் சொல்லி விட்டு மற்றதை எல்லாம் விளம்பரங்களில் வரும் நிபந் தனைக்கு உட்பட்டது என்று சொல்வது போல் உள்ளது.


இவர்கள் எதற்காக ஆட்சிக்கட்டிலில் இருந்து சமஸ் கிருதத்தைத் திணிக்க இவ்வளவு அழுத்தம் கொடுக் கிறார்கள்? 

1. சமஸ்கிருதம் என்ன அறிவியல் வளர்ச்சிக்கான மொழியா?

 2. சமஸ்கிருதம் இந்திய நாட்டில் அல்லது வேறு எங்காவது பேசப்படுகிறதா?

3. சமஸ்கிருதத்தில் ஏதாவது நற்பண்பாட்டு வரலாற்று நூல்கள் உண்டா?

4. சமஸ்கிருதத்தில் உலகளாவிய அறிவியல் கட்டுரைகள் ஏதாவது அரங்கேறியுள்ளனா? அதை உலக அறிவியல் அறிஞர்கள் அங்கீகரித்துள்ளனரா?

 5. அது ஏன் செத்த மொழியானது?


இப்படி நாம் கேள்வியை அடுக்கிக்கொண்டே போக லாம்.

 இதற்கு பாஜக அரசு விடை தருமா? 

ஏன் மாண வர்களின் எதிகாலத்தை சமஸ்கிருதம் என்னும் உப்புச் சப்பற்ற மொழியைக் கற்றகவைத்து பாழுங்கிணற்றில் தள்ளப் பார்க்கிறார்கள்?   

 சமஸ்கிருதத் திணிப்பு எதிர்ப்பு ஜி 20 மாநாட்டிலும் கிளம்பியுள்ளது. ஆம், ஜெர்மனிய பிரதமர் ஏஞ்சலா மார்கெல் ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் ஜி-20 மாநாட்டில் மோடியைச் சந்தித்து கேந்திர வித்யாலயா பள்ளியில் முக்கிய மொழிப்பிரிவில் இருந்து ஜெர்மன் நீக்கப்பட்டதை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.    

இதுவரை இந்தியாவில் மட்டும் இந்துத்துவ சக்திகளின் சமஸ்கிருதத் திணிப்பிற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது, தற்போது சர்வதேச அளவில் அழுத்தம் துவங்கியுள்ளது.   நாட்டில் எவ்வளவோ சிக்கல்கள் உள்ளன; அதைப்பற்றி சிறிதும் கவலைப்படாமல் சமஸ்கிருதம், இந்துத்துவா பரவல், சிறுபான்மையினர் மீதான காழ்ப்புணர்ச்சி, போன்ற வற்றில் மாத்திரம் கவனம் கொண்டு இயங்குவது இந்தி யாவை மீண்டும் பல நூற்றாண்டுகளுக்கு பின்னுக்குக் கொண்டு செல்வதற்கு தயாராகிறார்கள்  என்று தான் பொருள்! 

மத்தியில் அமைந்துள்ள பிஜேபி ஆட்சி - இதுபோன்ற கலாச்சார நடவடிக்கைகளை முன்னெடுத்துக் கொண்டு செயல்படக் கிளம்பி விட்டது. இந்து ராஜ்ஜியத்தை உண்டாக்கும் திசையில் இவை எல்லாம் முன்னோட்ட நடவடிக்கைகள்! அரசியல் கட்சிகள், மத்தியில் உள்ள பா.ஜ.க. ஆட்சியை வெறும் பொருளாதாரப் பாதையில் மட்டும் பார்த்து விமர்சனம் செய்வதில்தான் கருத்துச் செலுத்திக் கொண்டு இருக்கின்றனர் அவற்றையெல்லாம் விட ஆபத்தானது பிஜேபியின் இந்துத்துவா பார்வையாகும்.


இதில் மற்ற மாநிலங்களைவிட தந்தை பெரியார் பிறந்த  - சுயமரியாதை இயக்கம், திராவிட இயக்கம் தோன்றி வளர்ந்த தமிழ்நாடுதான் குரலை சுனாமியாக வெடித்துக் கிளப்பிக் கொடுத்து, இந்தியாவை வழி நடத்த வேண்டும். திராவிடர் கழகம் இதற்கு வழிகாட்டியாக இருக்கும்; எடுத்த எடுப்பிலேயே சமஸ்கிருதத் திணிப்பை எதிர்த்து வரும் 20ஆம் தேதி போராட்ட அறிவிப்பை கொடுத்து விட்டது; இளைஞர்கள், மாணவர்கள் கவனத்தை ஈர்க்க வேண்டும்; அதனைச் செய்வோம் கழகத் தோழர்களே இந்தக் களத்தைச் சூடாக்குவீர்!

                    ------------------------"விடுதலை” தலையங்கம் 17-11-2014

19 comments:

தமிழ் ஓவியா said...


நாட்டுக்கே வழிகாட்டும் வகையில் மதவாதத்தை வீழ்த்திட புதுச்சேரியில் முன்னுதாரண நடவடிக்கை

சமூகநீதி சக்திகளை ஒருங்கிணைத்தது திராவிடர் கழகம்

தமிழர் தலைவர் முயற்சிக்குப் பல தரப்பினரும் பாராட்டு!

புதுச்சேரி நவ.17 மதவாதத்தை வீழ்த்த வும், சமூக நீதியை முன்னெடுக்கவும் ஒத்த கருத்துள்ள அமைப்பு களை ஒன்றிணைத்து பொதுக் கருத்து - திராவிடர் கழகத் தலை வர் கி. வீரமணி அவர் களின் தலைமையில் புதுச்சேரியில் நடை பெற்ற கலந்துரையாட லில் உருவாக்கப்பட்டது.

புதுச்சேரி ஓட்டல் அண்ணாமலை கருத் தரங்க அறையில் 8.11.2014 அன்று மாலை 5 மணிக்கு புதுவையில் மதச்சார்பின் மைக்காகவும், சமூக நீதிக் காகவும் பாடுபடக்கூடிய ஒத்த கருத்துள்ள கட்சி கள், அமைப்புகளின் கலந் துரையாடல் கூட்டம் திராவிடர் கழகத் தலை வர் - தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

மதச்சார்பற்ற - சமூக நீதிக்கான முன்னணியாக செயல்படவேண்டிய தருணத்தில் தமிழர் தலை வரின் புதுவை வருகையை ஒட்டி இக்கூட்டம் கூட் டப்பெற்றது. அவசியத்தை உணர்ந்து ஒத்த கருத் துள்ள அமைப்பினர் இக்கூட்டத்தில் பங்கேற்று முக்கிய கருத்துக்களை எடுத்துரைத்தனர்.

பல்வேறு அமைப்பினர்

புதுவை மாநில திமுக அமைப்பாளர் டாக்டர் எம்.ஏ.எஸ்.சுப்பிரமணியன், இந்திய கம்யூனிஸ்டுகட்சி தேசிய குழு உறுப்பினர் இரா.விசுவநாதன், கீதநாதன், தனராமன், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு சார்பில் த.முருகன், ஏ.பெரு மாள், விடுதலை சிறுத் தைகள் புதுவை மாநில செயலாளர் பாவாணன், இந்திய கம்யூனிஸ்டு (மா-லெ) அமைப்பு சார்பில் கோ.பழனி, புதிய நீதிக் கட்சி சார்பில் செ.பொன் னுரங்கம், மீனவர் விடு தலை வேங்கை சார்பில் மங்கையர் செல்வன், தமிழக மக்கள் ஜனநாயக கட்சி சார்பில் எம்.ஏ. அஷ் ரப், சமூகநீதிப் பேரவை சார்பில் இரா.தாமோ தரன், முஸ்லீம் அமைப்பு கள் சார்பில் எச்.ஹைல்லா, அப்துல்சமது, முகமது அலி, திராவிடர் கழக புதுச்சேரி மாநில தலை வர் சிவ.வீரமணி, மண் டலத் தலைவர் இரா.சிவ ராஜ், பொதுச் செய லாளர்கள் முனைவர் துரை.சந்திரசேகரன், இரா. ஜெயக்குமார், மண்டலச் செயலாளர் அறிவழகன், கழக மாணவரணி செய லாளர் பிரின்சு என்னா ரெசு பெரியார் ஆகியோர் கூட்டத்தில் பங்கு கொண் டனர்.


தமிழ் ஓவியா said...

அரசியல் வேறுபாடு வெளியிலே...

கூட்டத்திற்குத் தலைமை வகித்த திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர் கள் குறிப்பிட்டதாவது:-

அவரவர் அரசியல் நிலைப்பாடு என்பதை தனியே வைத்துக் கொள் ளுங்கள். அதே சமயம் மதவெறிக்கு எதிராக, ஜாதிவெறிக்கு எதிராக சமூகநீதிக்கு ஆதரவாக ஒரே அணியில் திரள வேண்டும் என்ற உணர்வைப் பெறுங்கள். மதச்சார்பற்ற அணியாக, சமூகநீதிக்கான அணியாக ஷிமீநீறீணீக்ஷீ திக்ஷீஷீஸீ/ஷிஷீநீவீணீறீ யிவீநீமீ திக்ஷீஷீஸீ) ஓரணியில் திரண்டு ஒருங்கிணைந்து செயல் பட வேண்டிய அவசி யத்தை உணருங்கள். இட ஒதுக்கீடு முழுமையாகப் பெற மதவெறி ஆட்சி யிடமிருந்து மக்களைப் பாதுகாத்திட ஒத்த கருத்துள்ள அமைப்புகள் ஒருங்கிணைந்து செயல் பட வேண்டும். தமிழகத் தின் அரசியல் நிலைவேறு. புதுவை மாநிலத்தின் சூழல் வேறு. மாறுபட்ட அரசியல் உள்ள மாநிலம் இது. இடஒதுக்கீடு கூடாது என்பது தான் ஆர்.எஸ். எஸ்ஸின் அடிப்படைக் கருத்து. ஜாதி இருக்க வேண்டும், வர்ணாசிரமம் நிலைக்க வேண்டும் என் பது அவர்களின் எண் ணம். ஆனால் ஜாதிவாரி கணக்கெடுப்பு கூடாது என்பார்கள். ஏன்? இட ஒதுக்கீடு ஒழிக்கப்பட வேண்டும் என்ற கார ணத்தால் சமூகநீதிக்கு சவால்விடும் நிலைக்கு அவர்கள் வந்துள்ளார்கள். அவற்றையெல்லாம் முறி யடிக்க நமக்குள் ஒற்றுமை அவசியம். சமூகநீதியை பாதுகாக்க ஆதரவு சக்தி களை ஒருங்கிணைத்து உங்கள் மாநிலத்தின் தன்மைக்கு ஏற்ப செயல் பட வேண்டிய பொறுப்பு உங்களுடையது.

தனியார் துறையின் வளர்ச்சியும் இடஒதுக்கீடு ஒழிப்பும் அதுபோலவே இன் னொரு பக்கம் பொதுத் துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரைவார்க் கும் போக்கு. மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி அறிவிப்பு செய் துள்ளார். அதுபற்றி இதில் பொருளாதார நோக்கம் மட்டுமே கார ணமல்ல. இடஒதுக் கீட்டை ஒழித்திடலாம் என்பதும்தான். அதனால் தான் நாமும் பொதுத் துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்காதே என்பதோடு, தனியார் துறையிலும் இடஒதுக்கீடு தேவை என வலியுறுத் துகிறோம்.

உயர்ஜாதி, கார்ப் பரேட் ஆட்சியே இப் போது மத்தியில் நடப்பது. தந்திரமும், சூழ்ச்சியும் தான் அவர்களின் நிலைப் பாடு. சிறுபான்மையினர் என்று சொல்லக்கூடாது. மதச்சார்பின்மை என்று சொல்லக்கூடாது. சமூக நீதி கூடாது என்பதுதான் அவர்களின் எண்ணம்.

நம்முடைய ஒரே இலக்கு என்பது பி.ஜே.பி. ஆட்சியின் இந்துத்துவா போக்கை, சமூக நீதிக்கு எதிரான போக்கை முறி யடிப்பதுதான். இப்போது ஏற்பட்டுள்ள ஆபத்தை தடுத்து மக்களைப் பாதுக் காப்பதுதான் நம்முடைய பொது நோக்காக இருக்க வேண்டும். அடுத்தடுத்து புதுவையின் மதச்சார்பற்ற - சமூக நீதியில் அக்கறை யுள்ள நீங்கள் கூடி மதச் சார்பற்ற - சமூகநீதிக்கு ஆதரவான அணியை வலுப்படுத்துங்கள் சிறப் பாக செயல்படுங்கள். உங் களுக்கு எப்போதும் துணை யிருக்கும் திராவிடர் கழகம் என்று தமிழர் தலைவர் தமது தலைமை உரையில் குறிப்பிட்டார்.

தமிழர் தலைவருக்குப் பாராட்டு

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் இக் கலந்துரையாடல் மூலம் செய்துள்ள பணி வர லாற்றுச் சிறப்புக்குரியது என்றும், கடந்த காலத்தில் புதுவையில் பிற்படுத் தப்பட்டோர் இடஒதுக் கீடு பெற்றோம் என்றால் அதில் ஆசிரியரின் பங்கு மறக்க முடியாதது என் றும், புதுவையில் காலூன்ற முயற்சிக்கும் பி.ஜே.பி.யை முறியடிப் போம் என்றும், விடுதலை ஏடே எங்களுக்கு அவ்வப் போது வழிகாட்டும் திசைகாட்டி என்றும், முக்கியமான சூழலில் எங்களை ஆசிரியர் ஒருங்கிணைத்துள்ளார் என்றும், ஆக்டோபஸ் வடிவமான பி.ஜே.பி.க்கு துணைபோகும் என். ரங்கசாமி ஆட்சிக்கு சரியான பாடம் புகட்டிட இதுவே தக்க தருணம் என்றும் கூட்டத்தில் பங்கேற்ற தலைவர்கள் தங்கள் கருத்துக்களை பதிவு செய்தனர். புதுவை யிலும் 69% இட ஒதுக் கீட்டை பெற இணைந்து போராடுவோம் என்றனர். அடுத்துகூடி மதச்சார் பின்மை, சமூகநீதி எனும் தடத்தில் வீரியத்துடன் செயல்பட அமைப்பினை ஏற்படுத்திக் கொள்வது என்ற முடிவுடன் கலந் துரையாடல் கூட்டம் நிறைவு பெற்றது. புது வைக்கு தமிழர் தலை வரின் வருகை சமூகநீதிக் கான மதச்சார்பற்ற ஒரு வலுவான அணியை அமைப்பதற்கான கருத் துருவாக்கத்தை ஏற்படுத் தியது என்றே சொல்ல வேண்டும். முடிவில் மண் டல தி.க. தலைவர் இரா. இராசு நன்றி கூறினார்.

Read more: http://viduthalai.in/e-paper/91317.html#ixzz3JKrg4UxY

தமிழ் ஓவியா said...

மெய்ப்பிக்க முடியும்!


புராணங்கள் என்பதெல்லாம் நம்மை அடிமைப்படுத்தி நம் உழைப்பைப் பார்ப்பான் உறிஞ்சி உழைக்காது வாழவும், நம்மை முட்டாளாக ஆக்கி, முன்னேற்றமடையாமல் தடுக்கவும் பார்ப்பனர்களால் கற்பனையாகச் செய்யப்பட்ட கதைகளேயாகும். இவை களை ஆதாரங்களோடு மெய்ப்பிக்க முடியும். - (விடுதலை, 17.3.1961)

Read more: http://viduthalai.in/page-2/91302.html#ixzz3JKryAtu8

தமிழ் ஓவியா said...

செத்தவர் - பிழைத்தார்! அலட்சிய நீக்கத்தால்!

செத்தவர் பிழைப்பரோ என்று ஒரு சித்தர் பாடல் உண்டு. ஆனால் இப்போது செத்தவர் பிழைக்கவும் செய்கின்றனர் என்பது அதிசயமான செய்தி அல்லவா? இன்று ஒரு நாளேட்டில் (17.11.2014) வந்துள்ள செய்தியைப் படியுங்கள்.

11 மணி நேரத்திற்குப் பின் உயிருடன் எழுந்த பாட்டி

இறந்து விட்டதாக அறிவிக்கப் பட்டு, பிணவறையில் வைக்கப்பட்ட 91 வயது பாட்டி, 11 மணி நேரத்திற்கு பின், எழுந்து டீ கேட்டதால், பிண வறை ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

போலந்து நாட்டின், ஆஸ்டிரோ லுபெலஸ்கி நகரை சேர்ந்த ஜெனினா கோல்கிவிஸ் 91. கடந்த 6ஆம் தேதி காலை, ஜெனினாவின் இல்லத்தில், அவரை பரிசோதித்த டாக்டர் வைஸ்லாவா, அவர் இறந்து விட்டதாக சந்தேகமடைந்து, அருகில் உள்ள மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் அனுப்பினார்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவமனை டாக்டர்கள், ஜெனினா இறந்து விட்டதாக அறிவித்ததையடுத்து, அவரது உடலை ஒரு பையில் வைத்து மூடிய ஊழியர்கள், பிண வறையில் வைத்தனர்.

ஏறக்குறைய, 11 மணி நேரத்திற்குப் பின், மற் றொரு உடலை, பிணவ றையில் வைப்பதற்காக வந்த ஊழியர்கள், ஜெனி னாவின் உடல் அசை வதைக் கண்டு அதிர்ச்சியடைந்து, பையை திறந்து பார்த்தனர்.

இவர்களைப் பார்த்ததும், எழுந்து அமர்ந்த ஜெனினா, குடிப்பதற்கு சூடாக டீ கேட்டார்.

இதுகுறித்து, தகவலறிந்து மருத்துவ மனை டாக்டர்கள், ஜெனினா நலமுடன் இருப்பதை உறுதி செய்து, அவரை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

- இப்படியும் நடைபெறுகிறது. சாகாதவரைச் சரியாகக் கண்டுபிடிக்கத் தெரியாத மருத்துவர்களின் அலட்சியப் போக்கே இதற்கான முக்கிய காரணமாகும்!

முதல் டாக்டருக்கு சந்தேகம் வந்ததால் தான் அவர் அந்த 91 வயது பாட்டியை ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார்; ஆனால் அந்த மருத்துவ மனை டாக்டர் பொறுப் புணர்ச்சியுடன் தனது கடமையைச் செய்ய வில்லை என்பது புரிகிறது!

பையில் வைத்து மூடப்பட்டு 11 மணி நேர வாசம் பிணங்களுடன் - பிணவறையில் வாழ்ந்துள்ளார் அந்த வார்சா- போலந்து பாட்டி!

கால் அசைவைக் கண்டு அறிந்த பிணவறை ஊழியர் கவனம் பாராட்டத் தகுந்தது! அவர் அலட்சியம் காட்டி யிருந்தால், இந்த வார்சா பாட்டி திரும்பி இந்த பூவுலகத்திற்கு புறப்பட்டிருக்க முடியாதே!

சில டாக்டர்களின் அலட்சியத்தால் இப்படி பலப்பல நேர்ந்து விடுகிறது!

அறுவை சிகிச்சை செய்து கத்தியையோ, கத்திரிக்கோலையோகூட உடலுக்குள்ளேயே வைத்து தைத்து விட்ட மறதி நாயகர்களும் உண்டே! மறதியில்லை என்றால் அலட்சியம் தானே காரணம்! இப்படிப்பட்டவர் களை மன்னிக்கக் கூடாது. தண்டனை வழங்கவே செய்ய வேண்டும்.

மாரடைப்பால் இறந்தவரைக்கூட மீண்டும் உயிர்த்து எழ, மார்பில் குத்திக் குத்தி, அல்லது வாயில் வாயை வைத்து மூச்சுக் கொடுத்து முயற்சிகள் செய்வதும், அதன் மூலம் நின்று போன இதயத் துடிப்பு மீண்டும் இயங்கத் தொடங்குவதும் (10 ஆயிரத்தில் ஒன்றுதான் என்றாலும் கூட) மருத்துவர்களின் தொண்டற மாகக் கருதப்படும் நிலையில், இப் படியும் சில அலட்சியங்கள் அக்கிர மங்கள் நடைபெறவே செய்கின்றன

இதனைத் தடுக்க அத்தகைய டாக்டர்களை சில ஆண்டு காலம் மருத்துவத் தொழில் புரியாமல் தடுத்து வைத்து தண்டனை தந்தே ஆக வேண்டும்.

எற்றென்று இரங்குவ செய்யற்க - செய்வானேல் மற்றன்ன செய்யாமை நன்று - குறள் (655)- ஆசிரியர் கி.வீரமணி

Read more: http://viduthalai.in/page-2/91304.html#ixzz3JKsA0j4g

தமிழ் ஓவியா said...

அரசு வாகனங்களில் சிவப்பு, நீல நிற விளக்குகளை யார் பயன்படுத்தலாம்?

சென்னை, நவ.17:தமிழக அரசின் உள்துறை முதன்மை செயலாளர் அபூர்வ வர்மா பிறப்பித்துள்ள உத்தரவு: சுழலும் சிவப்பு விளக்குளை மாநில ஆளுநர்கள், முதல்வர்கள், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி, சட்டப்பேரவை தலைவர், மாநில அமைச்சர்கள், உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆகிய 6 பேர் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

சுழலும் வகையில் இல்லாமல் சாதாரண சிவப்பு விளக்குகளை சட்டப்பேரவை துணை தலைவர், தலைமை செயலாளர், ஆலோசனை குழுவின் தலைவர் மற்றும் உறுப் பினர், மாநில ஆலோசனை குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள், மாநில மனித உரிமைகள் ஆணையத் தின் தலைவர், மாநில சிறுபான்மை ஆணையத்தின் தலைவர், மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவர், மாநில சட்ட ஆணையத் தின் தலைவர், மாநில நுகர்வோர் தீர்ப்பாயத்தின் தலைவர், மாநில தேர்தல் ஆணையர், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர், சென்னை உயர் நீதிமன்ற அரசு தலைமை வழக்கறிஞர், மாநில திட்ட ஆணையத் தின் துணை தலை வர், தமிழ்நாடு மாநில கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் ஆணையர் ஆகிய 14 பேர் மட்டுமே பயன்படுத் தலாம்.

இதே போல நீல நிற சுழலும் விளக்குகளை காவல்துறை டி.ஜி.பி., கூடுதல் டி.ஜி.பிக்கள், அய்.ஜி.க்கள், டி.அய்.ஜி.க்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், மாநகர காவல் ஆணையர்கள், மாநகர கூடுதல் ஆணையர்கள், இணை ஆணையர்கள், துணை ஆணையர்கள், கான்வாய்க்கு முன் பாதுகாப்புக்காக செல்லும் வாகனங்கள், கூடுதல் ஆணையர்கள், கூடுதல் கண்காணிப்பாளர்கள், துணை கண்காணிப்பாளர்கள், கூடுதல் துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள் (சட்டம், ஒழுங்கு) பயன்படுத்திக் கொள்ளலாம்.

சில அதிகாரிகள் பணி காரணமாக சாலை வழியாக செல்லும் போது அவர்கள் தடுக்கப்படாமல் இருக்க நீல வண்ணம் கொண்ட சுழலும் விளக் குகளை பயன்படுத்திக் கொள்ளலாம். அதன்படி, அரசு துறை செயலாளர்கள், துறை தலைவர்கள், மாவட்ட ஆட்சி யர்கள், மாநகராட்சி ஆணையர்கள், பொது துறை நிறுவனங்கள், வாரியங் களின் தலைவர்கள், மாவட்ட நீதி பதிகள், பெருநகர முதன்மை நீதிபதி கள், உயர்நீதிமன்ற பதிவாளர்கள், கூடுதல் ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர்கள், துணை கலெக்டர்கள், வருவாய் கோட்டாட்சியர், மாநக ராட்சி மேயர்கள், மாவட்ட பஞ் சாயத்து தலைவர்கள் ஆகிய 11 பேர் மட்டுமே பயன்படுத்தி கொள்ளலாம்.

மேலும் அவசர காலங்களில் இயக்கக்கூடிய தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை வாகனங்கள், போக்குவரத்து துறையின் அமலாக்கப் பிரிவு வாகனங்கள், காவல்துறையின் ரோந்து வாகனங்கள் ஆகியவை சிவப்பு, நீலம், வெள்ளை என்ற மூன்று வகையான நிறங்களில் எதையும் பயன்படுத்தி கொள்ளலாம். அதே சமயம் ஆம்புலன்ஸ் வாகனங்களை ஊதா நிற கண்ணாடியை கொண்ட ஒளிரும் சிவப்பு விளக்குகளுடன் பயன்படுத்தலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Read more: http://viduthalai.in/page-2/91305.html#ixzz3JKsZhFpB

தமிழ் ஓவியா said...

மருத்துவ குணம் நிறைந்த வாழைத்தண்டு


வாழை, அறிவியல் வகைப்பாட்டின் பூண்டுத் தாவரங்களைக் கொண்ட பேரினம் ஆகும். தென்கிழக்கு ஆசியாவில் தோன்றிய வாழை முதன் முதலாக நியூகினியாவில் உருவானது. வாழையின் அனைத்துப் பகுதிகளும் பயன்படும்.

எனவே, இது பூரண மருத்துவக் குணம் கொண்ட தாவரமாக கருதப்படுகிறது. அந்தக் காலத்தில் வாழை மரத்தை அரம்பை, கதளி, அமணம் என்று அழைத்தார்கள். தமிழர் கலாச்சாரத்தில் வாழை மரத்தின் பயன்பாடு அன்றாடம் இருந்தது. தன்னை முழுமையாக மருத்துவப் பயன்களுக்காகவே அர்ப்பணித்துக் கொண்ட மிக முக்கிய தாவரம் ஆகும்.

வாழைத்தண்டு பல நோய்களுக்கு மகத்தான மருந்தாக இருப்பது நம்மில் பலருக்குத் தெரியும். ஆனால், நமக்குத் தெரியாத பல மருத்துவ குணங்களைக் கொண்டிருக்கிறது வாழைத்தண்டு என்கிறார் சஞ்சீவனம் ஆயுர்வேத தெரபி சென்டரை சேர்ந்த மருத்துவர் யாழினி.

இன்று நாம் உண்ணும் உணவு அதிக மசாலா சேர்க்கப்பட்டு காரமான உணவாகவும் வறட்சியான உணவாகவும் இருக்கிறது. இன்றைய இளம் தலை முறையினர் ரசாயனங்கள் நிறைந்த குளிர் பானங்களையும் துரித உணவுகளையுமே உட்கொள்கின்றனர்.


தமிழ் ஓவியா said...

மது, புகை போன்ற தீய பழக்கங்களாலும் மற்றும் நம் வேலைப்பளு காரணமாகவும் தண்ணீர் அதிகம் குடிக்கும் பழக்கத்தைக் குறைத்துக் கொண்டோம். இவற்றினால் சிறுநீரகத்தில் கற்கள் உண்டாகின்றன. அதேபோல சரியான நேரத்தில் சிறுநீரை வெளியேற்றாமல் அடக்குவதாலும் சிறுநீரகத்தில் கற்கள் உண்டாகின்றன. இதற்கான அருமருந்து என்றால் அது வாழைத்தண்டுதான்.

வாழைத்தண்டின் மருத்துவ குணங்கள்

கசப்பும் துவர்ப்பும் சேர்ந்த சுவை கொண்ட வாழைத் தண்டின் அனேக மருத்துவக் குறிப்புகள் பற்றி நமது முன்னோர் ஆயுர்வேத புத்தகங்களிலும் ஓலைச் சுவடிகளிலும் கூறியிருக்கிறார்கள். இது பித்தத்தைத் தணித்து தேவையற்ற கபத்தை நீக்கும் வல்லமை பெற்றது.

கொழுப்பைக் குறைக்கும். வயிற்றுப் புண்களைக் குணப்படுத்தும். சிறுநீர் எரிச்சலைப் போக்கும். சிறுநீர் பாதையில் கல் அடைப்பு இருப்பவர்களுக்கு மிகச் சிறந்தது. நமது உடலில் நோய்கள் தோன்றக்கூடிய காரணங்களில் ஒன்று உடல் பருமன். இது அளவுக்கு அதிகமான உணவை உண்பதாலும், உடலுக்குத் தேவையான உழைப்பு இல்லாததாலும் ஏற்படுகிறது.

வாழைத்தண்டு மாதிரி ஸ்லிம்மாக இருக்கா பாரு என்று சில பெண்களைப் பார்த்து வியந்து கூறுவதுண்டு. வாழைத் தண்டிலுள்ள நீர்ச்சத்தும் நார்ச்சத்தும் அதிகப் படியான சதையைக் குறைத்து உடலை சிக்கென மாற்றும். இதிலுள்ள வைட்டமின் பி6, ஹீமோகுளோபின் மற்றும் இன்சுலின் உற்பத்திக்கு பெரிதும் உதவுகிறது. இதிலுள்ள பொட்டாசியம் இதய தசைகளை வலுவடையச் செய்கிறது.

வைட்டமின் ஏ மற்றும் சி நிறைந்த வாழைத்தண்டு, தோல் நோய்களுக்கு மிகச்சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. இருமல், காது நோய், கர்ப்பப்பை நோய்கள், மஞ்சள் காமாலை, விஷக்கடிகளால் ஏற்படும் வலி மற்றும் இதர நோய்களுக்கு வாழைத்தண்டு மிகச் சிறந்த மருந்தாகத் திகழ்கிறது.

மருத்துவ ரீதியாக வாழைத்தண்டினை உபயோகிக் கும் முறை: வாழைத்தண்டை இடித்து, சாறு பிழிந்து, அத்துடன் முள்ளங்கி சாறு அரைபாகம் சேர்த்து காலை, மாலை இரு வேளையும் 100 மி.லி. குடித்துவர கல்லடைப்பு நீங்கும். நீர் எரிச்சல், நீரில் ரத்தம் கலந்து போவதைக் குணப்படுத்தும்.

வயிற்றில் நீர்க்கட்டி இருந்தால் வெறும் வயிற்றில் வாழைத்தண்டு சாறு குடித்து வந்தால் நாள டைவில் குணமாகும். கோடைக் காலத்தில் வாழைத்தண்டு அதிகம் சேர்த்துக் கொள்வதன் மூலம் உடல் வெப்பம் குறையும். இது ஒரு சிறந்த . உடலில் உள்ள நச்சுப் பொருளை வெளியேற்றி ஆரோக்கியம் தரும். வாழைத்தண்டு சாறு ஒரு நாள் மற்றும் பார்லி கஞ்சி ஒரு நாள் என்று சாப்பிட்டு வர சிறுநீர்க்கற்கள் பொடிப்பொடியாகி சிறுநீருடன் வெளி யேறும்.

வாழைத்தண்டு சூப் (வாழைத்தண்டு சிறு துண்டுகள், இஞ்சி, எலுமிச்சைச் சாறு, சின்ன வெங்காயம், மிளகு, சீரகம்) 200 மி.லி. வாரத்தில் மூன்று நாள் சாப்பிட்டால் ரத்தத்தில் உள்ள கொழுப்புச் சத்து குறையும். இது நீரிழிவு நோயாளிகளுக்கு ஒரு சிறந்த மருந்தாகவும் உணவாகவும் உள்ளது. வாழைத்தண்டுடன் வாழைப்பூ சேர்த்து உட்கொண்டால் மாதவிடாய் கோளாறுகளால் உண்டாகும் அதிகப்படியான ரத்தப் போக்கு, வயிற்று வலி நீங்கும்.

இரண்டு அவுன்ஸ் வாழைத்தண்டு சாற்றை நாள்தோறும் குடித்து வந்தால் வறட்டு இருமல் நீங்கும். வாழைத்தண்டை உலர்த்தி, பொடி செய்து அத்துடன் தேன் கலந்து சாப்பிட்டு வர மஞ்சள் காமாலை நோய் குணமாகும்.

வாழைத்தண்டை சுட்டு அதன் சாம்பலை தேங்காய் எண்ணெயில் குழப்பி தடவி வர தீப்புண்கள் ஆறும். வாழை சாற்றுடன் திரிபலா சூரணம் சேர்த்து அருந்த மலச்சிக்கல் நீங்கி அதனால் ஏற்பட்ட மூல நோய் மற்றும் ஆசனக் கடுப்பு நீங்கும்.

உங்கள் கவனத்துக்கு...

சிறுநீரை அதிகரிக்கச் செய்யும் என்பதால், வயதானவர்கள் வாழைத்தண்டை உணவில் சேர்த்துக் கொள்வதைக் குறைத்துக் கொள்வது நல்லது. வாழைத்தண்டை வாரத்தில் மூன்று நாள்களுக்கு மேல் சேர்த்துக் கொள்வது உசிதமல்ல. வாழைத்தண்டு குளிர்ச்சி யானது என்பதால், அதை உண்ணும் நாட்களில் மற்ற குளிர்ச்சியான பொருள்களைக் குறைத்துக்கொள்ளவும்.

Read more: http://viduthalai.in/page-7/91347.html#ixzz3JKtZpSWA

தமிழ் ஓவியா said...

உடல் எடையை குறைக்கும் பழச்சாறு

உடல் எடையை குறைக்க பல்வேறு வழிகள் உள்ளன. அவற்றில் ஒன்று தான் பழச்சாறுகள் மூலம் எடையை குறைப்பது. அது எப்படி ஜூஸ் குடிப்பதன் மூலம் எடையை குறைக்க முடியும் என கேட்கிறீர்களா.

உண்மையிலேயே பழச்சாறு குடித்தால் அடிக்கடி பசி ஏற்படுவதை குறைத்து நீண்ட நேரம் வயிற்றினை நிறைத்து வைத்திருக்கும். இதனால் கண்ட கண்ட உணவு பொருட் களை சாப்பிடமாட்டோம். இப்போது உடல் எடையை குறைக்க உதவும் பழச்சாறுகளை பார்ப்போம்.

எலுமிச்சை சாறு: பொதுவாக எலுமிச்சை உடல் எடைக்குறைப்பதற்கு முக்கிய பங்கு. அதிலும் ஏழே நாட்களில் எடையில் மாற்றம் தெரிய, எலுமிச்சை சாறில் 1 சிட்டிகை உப்பு, மற்றும் தேன் சேர்த்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்தால், உடலில் தங்கியுள்ள தேவையற்ற கொழுப்புகள் கரையும்.

தக்காளி சாறு: ஏழே நாட்களில் எடையில் நல்ல மாற்றம் வேண்டுமெனில், 3 தக்காளியை வேக வைத்து அதனை அரைத்து, அதில் வெல்லம் சேர்த்து தினமும் மூன்று வேளை குடித்து வரவேண்டும்.

அவகேடோ சாறு: அவகேடோவை அரைத்து ஜூஸ் போட்டு, தேன் சேர்த்து குடித்து வந்தால், தொப்பை குறைந்துவிடும். மேலும் இதில் நல்ல கொழுப்புகள் இருப்பதால், உடலில் உள்ள கலோரிகளை எரித்துவிடும்.

திராட்சை சாறு: திராட்சைப் பழத்தில் வைட்டமின்கள் மற்றும் நல்ல கொழுப்புகள் இருப்பதால், இதனை சாறு எடுத்து குடித்து வந்தால், உடல் எடை குறைவதோடு, சருமமும் நன்கு பொலிவோடு இருக்கும்.

கொய்யாப்பழச் சாறு: கொய்யாவில் வைட்டமின் சி அதிகம் உள்ளதால், இதில் சாறு எடுத்து வாரத்திற்கு இரண்டு நாட்கள் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், அது உடலில் உள்ள கொழுப்புக்களை கரைத்துவிடும்

ஆரஞ்சு பழச்சாறு: ஆரஞ்சு பழ ஜூஸை குடித் தாலும், எடையில் மாற்றம் தெரியும். அதிலும் ஆரஞ்சுப் பழச் சாறில் சிறிது தேன் சேர்த்து குடிக்க வேண்டும். குறிப்பாக வெதுவெதுப்பான தண்ணீரில் ஜூஸ் போட்டு குடிக்க வேண்டும்.

அன்னாசி பழச்சாறு: அன்னாசியை மட்டும் அரைத் தால், அது கெட்டியாக சாறு போன்று இருக்கும். ஆகவே அதில் சிறிது தண்ணீர் சேர்த்து கலந்து பசியாக இருக்கும் நேரத்தில் குடித்தால் பசியானது உடனே அடங்கும்.

Read more: http://viduthalai.in/page-7/91346.html#ixzz3JKtrZKPJ

தமிழ் ஓவியா said...

நோய்களை குணப்படுத்தும் வெங்காயம்


நாலைந்து வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தை சேர்த்து அரைத்து சாப்பிட்டால் பித்தம் குறையும்.

* வெங்காய நெடி சில தலைவலிகளை குறைக்கும். வெங்காயத்தை வதக்கி சாப்பிட்டால் வெப்பத்தால் ஏற்படும் ஆசனக் கடுப்பு நீங்கும்.

* வெங்காய சாற்றையும், வெந்நீரையும் கலந்து வாய் கொப்பளித்து, வெறும் வெங்காய சாற்றை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவினால் பல்வலி, ஈறுவலி குறையும்.

* வெங்காயத்தை அவித்து தேன், கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் உடல் பலமாகும்.

* வெங்காயத்தை வதக்கி வெறும் வயிற்றில் சாப்பிட்டால் நரம்பு தளர்ச்சி குணமாகும்.

* படை, தேமல் மேல் வெங்காயம் சாற்றை தடவினால் மறைந்துவிடும்.

* வெங்காய ரசத்தை நீர் கலந்து குடித்தால் நன்கு தூக்கம் வரும்.

* வெங்காயம் குறைவான கொழுப்பு சத்து உள்ளது. எனவே குண்டானவர்கள் தாராளமாக வெங்காயத்தை பயன்படுத்தலாம்.

* மாரடைப்பு நோயாளிகள், ரத்தநாள கொழுப்பு உள்ளவர்கள் சின்ன வெங்காயம் சாப்பிடுவது நல்லது.

* வெங்காயத்தை தினமும் சாப்பிட்டால் டி.பி நோய் குணமாகும்.

கண் வெப்பம் குறைய

வெள்ளை நந்தியாவட்டைப் பூவை எடுத்து கண்களில் மேல் வைத்து அடிக்கடி ஒற்றிக்கொண்டே இருந்தால் கண்களில் ஏற்படும் வெப்பம் குறையும்.

கண் நோய்கள் குறைய

புளியம் பூவை அம்மியில் வைத்து அரைத்துக் தலையில் பற்றுப் போட்டு வந்தால் கண் நோய்கள் குறையும்.

மூக்கடைப்பு குறைய

லவங்கப்பட்டைத் தூளை எடுத்து நீர் விட்டு குழைத்து சிறிது தலையில் தேய்த்து விட்டு சிறிது நேரம் கழித்து குளித்து வந்தால் மூக்கடைப்பு குறையும்.

Read more: http://viduthalai.in/page-7/91348.html#ixzz3JKu0Qruf

தமிழ் ஓவியா said...

இன உணர்வு - சமூகநீதி - பகுத்தறிவு அடிப்படையிலானது நமது பணி! தலையங்க விமர்சனம் 100 ஆவது அமர்வில் தமிழர் தலைவர்


தலையங்க விமர்சனம் - 100 கருத்தரங்க மேடையில், டில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் பணியாற்றிய ஆய்வுத் துறை அறிஞரும், திராவிடர் இயக்க எழுத்தாளருமான பேராசிரியர் மறைந்த எம்.எஸ்.எஸ்.பாண்டியன் உருவப் படத்தினை தமிழர் தலைவர் திறந்து வைத்தார். உடன் வளர்தொழில் ஜெயகிருஷ்ணன், புதிய தலைமுறை குணசேகரன், இண்டியன் எக்ஸ்பிரஸ் ஜெயக்குமார், கலையரசன், ஜோதி ராமலிங்கம் ஆகியோர் உள்ளனர் (சென்னை அரும்பாக்கம், 16.11.2014).

சென்னை, நவ.17- இன உணர்வு, சமூகநீதி, பகுத்தறிவு அடிப்படையிலான பணிகள் நமது பணிகளாகும் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

தலையங்க விமர்சனம் என்கிற தலைப்பில் சென்னை யில் ஊடகவியலாளர்களிடை யேயான கலந்துறவாடலாக வும், சிறப்பு அழைப்பாளர்களின் கருத்துச் செறிவான சொற்பொழிவுகளுடனும் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை மாலை நேரத்தில் நடைபெற்று வருகிறது. தலையங்க விமர்சனம் நிகழ்வின் 100 ஆவது அமர்வாக சென்னை அரும்பாக்கம் பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலையில் கமலாம்பாள் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

தொடக்க நிகழ்வாக சமூக மாற்றமும் ஊடகங்களும் எனும் தலைப்பில் கருத்தரங்கம் நெல்சன் சேவியர் தலைமையில் நடைபெற்றது. கு.தமிழரசன் வரவேற்றார். நடுநிலையும் ஊடகங்களும் எனும் தலைப்பில் டான் அசோக், சமூகநீதியும் ஊடகங்களும் தலைப்பில் ஜீவ சகாப்தன், தமிழ்நாட்டின் உரிமைகளும் ஊடகங்களும் தலைப்பில் கா.எழிலரசன் உரையாற்றினர். ச.மணிகண்டன் நன்றி கூறினார்.

தலையங்க விமர்சனம் 100 ஆவது அமர்வில் வரலாற் றாய்வாளர் பேராசிரியர் எம்.எஸ்.எஸ்.பாண்டியன் மறைவையொட்டி படத்திறப்பும், நினைவேந்தலும் புதிய தலைமுறை மு.குணசேகரன் தலைமையில் நடைபெற்றது. பி.இளங்கோ சுப்பிரமணியன் வரவேற்றார். வளர்தொழில் க.ஜெயகிருஷ்ணன் முன்னிலையில் கி.பாபுஜெயக்குமார், கலையரசன் நினைவேந்தல் உரை ஆற்றினார்கள்.

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் எம்.எஸ்.எஸ். பாண்டியன் படத்தைத் திறந்துவைத்து சிறப்புரை ஆற்றினார். வேயுறுதோளிங்கன் நன்றி கூறினார்.

பங்கேற்றோர்

விழாவில், மேனாள் சட்டமன்ற உறுப்பினர் சோம. இராமச்சந்திரன், மேனாள் மாமன்ற உறுப்பினர் டி.ஆர். கோவிந்தன், எம்.கே.மோகன், வழக்குரைஞர் பரமசிவம், மங்களதாஸ், எழிலரசன், ப.ரகுமான், மு.அசீப், வில்வநாதன், பார்த்தசாரதி, தாமோதரன், இராமு, உமா உள்பட பலர் பங்கேற்றனர்.

தமிழர் தலைவர் உரை

தமிழர் தலைவர் ஆற்றிய உரையில் குறிப்பிட்டதாவது:

மிகுந்த துயரமும், மகிழ்ச்சியும் கலந்த நிகழ்வாக இந்நிகழ்ச்சி உள்ளது. திராவிட வரலாற்றாய்வாளர் எம்.எஸ்.எஸ்.பாண்டியன் படத்திறப்பும், தலையங்க விமர்சனம் 100 ஆவது நிகழ்வும் நடைபெறுகிறது.

ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் மாலையில் இப்படி ஒரு நிகழ்வு நடைபெறுகிறது என்று சொன்னாலே அதுவே மிகப்பெரிய சாதனை. ஏனென்றால், எங்களிடத்திலே தேதி கேட்கும்போதுகூட கூட்டங்கள் நடத்துவதற்கு முன்பெல் லாம் ஞாயிற்றுக்கிழமையாகப் பார்த்துக் கொடுங்கள் என்று சில ஆண்டுகளுக்கு முன்னாலே ஞாயிற்றுக்கிழமையைக் கேட்பார்கள்.

தந்தை பெரியார் அவர்கள் பிரச்சாரத்தையே முக்கியமாகக் கருதி தொண்டு செய்தவர். அவர் கேட்பார், என்னப்பா, ஞாயிற்றுக்கிழமை என்று சொன்னால் வாரத்துக்கு ஒருநாள் தான் பிரச்சாரம் பண்ணனுமா? மற்ற நாள்களில் எல்லாம் கருத்துகளைப் பரப்ப வேண்டாமா? எந்த நாளாக இருந்தால் என்ன? வருபவர்கள் வரட்டும் நான் பேசுவதற்குத் தயாராக இருக்கிறேன் என்று தந்தை பெரியார் அவர்கள் சொல்லுவார்கள். கூட்டம் ஞாயிற்றுக் கிழமை அன்றுதான் அதிகமாக வரும். ஆகவேதான் கேட்கிறோம் என்று அதற்கு விளக்கம் சொல்லுவார்கள்.

தமிழ் ஓவியா said...

ஆனால், அதே தோழர்கள் இந்தத் தொலைக்காட்சிகள், ஊடகங்கள் எல்லாம் வந்தபிறகு தலைகீழாக நிலைமை மாறி, ஞாயிற்றுக்கிழமையைத் தவிர, வேறு கிழமைகளில் தேதி கொடுங்கள் என்று கேட்பார்கள். காரணம் ஞாயிற் றுக்கிழமை என்றால் எல்லோரும் சினிமா, தொலைக்காட்சி முன் உட்கார வேண்டும்.

அன்றைக்கு அலுவலகத்தை விட்டுப் போனால், அன்றைக்கு முழு ஓய்வாக வீட்டில் உட்கார்ந்து கொள்ளவேண்டும். அதுவும் தொலைக்காட்சி முன்னாலே சலிப்பில்லாமல் உட்கார்ந்திருக்கவேண்டும். அது எவ்வளவு பெரிய தொல்லைக்காட்சியாக இருந்தாலும் அதைப்பற்றிக் கவலைப்படாமல் பார்த்துக்கொண்டு இருக்கின்ற அப்படி ஒரு நிலை ஏற்பட்டுவிட்டது.

இதுமாதிரி அறிவுப்பூர்வமான, சிந்தனையைத் தூண்டு கின்ற ஆழமான கருத்துப்பகிர்வுகளை உருவாக்கக்கூடிய ஒரு நல்ல முயற்சியை நம்முடைய தோழர்கள் இந்தப் பகுதியிலே செய்கிறார்கள் என்று சொன்னால், அவர் களுக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள், பாராட்டுகளை நான் தெரிவித்துக்கொள்கிறேன்.

நான் இந்த நிகழ்ச்சிக்கு வருகை தந்ததே அவர்களை ஊக்கப்படுத்தவேண்டும். அவர்களைப் பாராட்ட வேண்டும். இப்படிப்பட்ட முயற்சிகள் மேலோங்க வேண்டும். அதுவும் தமிழர்களுக்கு இப்படிப்பட்ட சிந்தனை வருகிறது என்று சொன்னால், அதை மேலும் மேலும் நாம் வளர்த்துக்கொண்டு போகவேண்டும். அது மேலும் மேலும் உயரவேண்டும். அந்த உணர்வுகள் பெருகவேண்டும் என்பதுதான் நம்முடைய ஆசை.

எனவே, அப்படிப்பட்ட நிகழ்ச்சியிலே வருவதிலே, உங்களையெல்லாம் சந்திப் பதிலே, அதுவும் அருமைத் தோழர்கள் சோமா ராமச் சந்திரன் போன்றவர்களை சந்திப்பதிலே எல்லையற்ற மகிழ்ச்சி. ஆனால், அதேநேரத்திலே நாம் செய்திருக்கிற கடமை ஒரு துன்பமான ஒரு சூழலில்கூட நம்முடைய நன்றி உணர்வையும், இன உணர்வையும் மிகப்பெரிய அளவிலே நாம் இங்கே காட்டுகின்றோம் என்பதற்கு அடையாளம்தான் அருமை திராவிடர் இயக்க ஆய்வாள ரான பேராசிரியர் திரு.எம்.எஸ்.எஸ்.பாண்டியன் அவர் களுடைய படத்தை இங்கே திறந்து வைத்திருப்பது.

தமிழ் ஓவியா said...


மூன்று நாட்களுக்கு முன்னாலே பெரியார் திடலிலே இந்த நிகழ்வு நடைபெற்றது. நான் இரண்டாவது முறையாக அவரது படத்தைத் திறந்து வைக்கக்கூடிய ஒரு வாய்ப்பு இந்த ஒரு வாரத்துக்குள்ளாக குறுகிய காலத்திலே கிடைத்திருக்கிறது. மிகப்பெரிய இழப்பைப்பற்றி, நண்பர் பாபு ஜெயக்குமார் சொன்னார்; அதுபோலவே ஜெய கிருஷ்ணன் அறிவார். அவருடைய நேரடி மாணவராக இருக்கக்கூடிய கலையரசன் மிகவும் உருக்கமாக பல்வேறு செய்திகளைச் சொன்னார். அதைவிட ஆழமாக பல்வேறு ஆய்வுகளைப்பற்றிக்கூட நம்முடைய மு.குணசேகரன் அவர்கள் சொன்னார்.

நம்முடைய திராவிடர் இயக்கத்தைப்பற்றி சரியான புரிதலோடு வந்தவர்கள் மிகமிகக் குறைவு. இன்றைக்கும் பல பேராசிரியர்கள் இருக்கிறார்கள். ஆனால், அவர் களுக்கு அறிவு இருக்கிறது. துணிவு இல்லை. அதுதான் மிக முக்கியமானது.

விமர்சனங்களை அறிவியல் ரீதியாக புராணங்களை, பகுத்தறிவுக் கருத்துகளைச் சொல்லும்போது தந்தை பெரியார் அவர்கள் சொல்லுவார்கள், எனக்குத்தான் இது தெரியும் என்று நான் சொல்லமாட்டேன். என்னைப் போலவே தெரிந்தவர்கள் ஏராளம் இருக்கிறார்கள்.

நம் சமுதாயத்தில் அறிவுக்கு பஞ்சமில்லை. ஆனால், சொல்பவருக்கு சொன்னால் என்ன விளைவு ஏற்றபடுமோ? என்று அந்த விளைவைத் தாங்கமுடியாது என்கிற காரணத்தாலே, நெருங்கவே முடியாத காரணத்தாலே இவர் அஞ்சியஞ்சிச் சாவார், இவர் அஞ்சாத பொருளில்லை அவனியிலே என்று சொல்லக்கூடிய அளவுக்கு, அய்யோ கெட்ட பெயர் வந்துவிடுமே, அய்யோ இதைத் தாங்க வேண்டிய நிலை ஏற்படுமே, நம்முடைய அடையாளத் தைக் காட்டலாமா? என்று இருப்பார்கள்.

இதுதான் பார்ப் பனர்களுக்கும், நம் இனத்துக்கும் இருக்கிற மிகப்பெரிய வேறுபாடு. அதைத்தான் யோசித்துப்பார்க்க வேண்டும். அவன் ஒரேயொரு ஆள் இருந்தால்கூட அந்த விஷ மத்தை எவ்வளவு பக்குவமா செய்ய வேண்டுமோ, தன் னுடைய அடையாளத்தை எப்படிக் காட்ட வேண்டுமோ அதை செய்துவிடுவான். நம் ஆள் நூறுபேர் இருந்தால்கூட நம்மைப்பற்றி விமர்சனத்தை சொன்னான் என்றால், நம் ஆள் எதுவும் சொல்லமாட்டான்.

உதாரணமாக சொல்லவேண்டுமானால், திராவிட இயக்கத்தைக் கொச்சைப்படுத்துவதற்கு வேறு எந்த வழியும் இல்லை. கடைசியாக ஒன்றை ஆரம்பித்து விட்டான் ஊழல் என்று. ஊழல் என்று சொல்லிவிட்டு, அந்த இடத்தில் அவர்கள் வந்து உட்கார்ந்துகொள்வதற்கு கனவு காணுகிறார்கள். அப்துல் கலாம் சொல்லியதுபோல, கனவு காண்பது எல்லாருக்கும் உள்ள உரிமை. கனவு காணுவதில் ஒன்றும் தப்பில்லை. ஆனால், அந்தக் கனவு நிச்சயமாக நடக்காத கனவாக ஆகும் என்று சொல்லக்கூடியதே.

பல பேருக்குத் தெளிவே இல்லாமல் இருக்கிறது. எது நடைபெற்ற ஊழல், எது யூகத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது என்பதற்கே வித்தியாசம் தெரியாமல் இரண்டுமே ஒன்றுதான் என்று நினைக்கிறார்கள். வெண் ணெய்யும் ஒன்றுதான், சுண்ணாம்பும் ஒன்றுதான் என்று நினைக்கிறார்கள். கானல் நீரும் ஒன்றுதான், கடல்நீரும் ஒன்றுதான் என்று நினைக்கக்கூடிய அளவுக்கு இருந்தால் அதனுடைய விளைவுகள் என்ன?

நம்முடைய பணிகள் இன உணர்வு, சமூகநீதி, பகுத்தறிவு அடிப்படையிலான பணிகள் ஆகும். ஊடகங் களை நம்பி திராவிட இயக்கம் இல்லை. ஊடக தயவால் இல்லை. மக்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். எம்.எஸ்.எஸ்.பாண்டியன் போன்ற பல பேராசிரியர்களை உருவாக்குங்கள். சரக்குக் குறைவாக இருந்தாலும், அவர்களைப் பாராட்டுங்கள்.

அதிகமாக சரக்குகளை அவர்கள் உருவாக்கிக் கொள்வார்கள். நம்முடைய இளைஞர்கள் கருத்துப் பகிர்வில் ஆற்றல்மிக்கவர்கள், நம்முடைய அறிவு சாதாரணமானதல்ல. இந்த தன்னம் பிக்கையோடு பயணங்களை நடத்துவோம் என்று மேலும் பல்வேறு கருத்துகளைச் சொல்லி உரையாற்றினார். (முழு உரை பின்னர்).

-இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர்கள் அவர்கள் உரையாற்றினார்

Read more: http://viduthalai.in/page-8/91349.html#ixzz3JKuyjz6z

தமிழ் ஓவியா said...

1923-1926

1923-1926 காலகட்டம் - சென்னை மாநிலத்தில் நீதிக் கட்சி என்னும் பொற்கொடி ஒளிவீசிய காலகட்டம். பார்ப்பனர்களால் மகாமகா சாணக்கியர் என்று வரு ணிக்கப்பட்ட பனகல் அரசர் (ராமராயநிங்கர்) பிரதமராக இருந்து பார்ப்பனர் அல்லாத மக்களின் நெஞ்சமெல்லாம் பால் வார்த்த பண்பாளர்.

இவர் பிரதமராக (றிக்ஷீமீனீவீமீக்ஷீ) இருந்த காலத்தில்தான் அது வரை ஆங்கிலேயர் வசமே இருந்து வந்த சென்னை மாநில மருத்துவத் துறை, இந்தியர் கைக்குள் வருவ தற்கான சட்டம் இயற்றப் பட்டது.

(ஜஸ்டிஸ் கட்சியினர் வெள்ளைக்காரர்களுக்கு வெண்சாமரம் வீசியவர்கள் என்று வாய்ச் சுளுக்கேறிப் பேசிய - பேசுகிற பார்ப்பனக் கொழுந்துகளுக்கு இது அர்ப்பணம்!).

எதிர்ப்பு எந்தப் பக்கத் தில் இருந்து வந்தாலும், அது இந்த நாட்டிற்கு நன் மையை விளைவித்தால் அதை வரவேற்கத் தயா ராய் இருக்கின்றேன். தீமை விளைவிக்குமானால், அதை எதிர்த்து முறியடிப் பேன் என்று சட்டமன்றத் தில் பனகல் முழங்கினார். வெள்ளையர்கள் பனகலை விழுந்து குதறாமல் இருந் ததுதான் பாக்கி.

மருத்துவக் கல்லூரியில் சேர சமஸ்கிருதம் படித் திருக்கவேண்டும் என்று இருந்த நிபந்தனையை நெட்டித் தள்ளி, பார்ப்பனர் அல்லாதாரும், மருத்துவக் கல்லூரியில் காலடி எடுத்து வைக்கக் கதவைத் திறந்து விட்ட கண்ணியம்மிக்க கல்விக் காவலரும் அவரே!

இந்து அறநிலையப் பாதுகாப்புச் சட்டத்திற்கும் இந்தப் பெருமகன் காலத் தில்தான் பந்தற்கால் நாட் டப்பட்டது. அதுவரை அக் ரகாரத்தில் படுத்துறங்கிய வைக்கோல் போராகத்தான் கோவில்கள் குவிந்து கிடந் தன.

கடவுளச்சி அபிராமி யின் காதில் ஒரு நாள் மின்னிய கம்மல் மறுநாள் கோவில் குருக்கள் அப்பா சாமி பட்டரின் பாரியாள் காதுகளிலும் கண்ணடிக்கும்.

யார் கேட்க முடியும்? கர்ப்பக் கிரகத்துக்குள்ளி ருந்தாலும் சாமி பக்தர் களுக்கும், சாமிக்கும், தரகு வேலை பார்க்கும் ஆசாமி யும் சாமி!! சாமிக்கும், சாமிக்கும் பரிவர்த்தனை நடந்தால் யார்தான் மூக்கை உள்ளே நுழைக்க முடியும்?

திருவாளர் சத்தியமூர்த்தி அய்யர் அப்பொழுது முழங்கினாரே பார்க்கலாம்:

நீதிக்கட்சியினர் பிரா மணர்களை மட்டும் எதிர்க்க வில்லை. கடவுளையும் எதிர்க்கக் கிளம்பிவிட் டார்கள், மதத்தை அழிக்க முனைந்துவிட்டார்கள். ஆண்டவனையே சட்டம் போட்டுக் கட்டுப்படுத்தும் அடாத செயலை எவரும் ஆதரிக்கமாட்டார்கள்.

மதத் தின் புனிதத் தன்மையைக் கெடுக்கும் இம்மசோதாவை ஜாதி, மத வித்தியாசமின்றி, கட்சிப் பாகுபாடின்றி ஒரு மனதாக எதிர்க்கவேண்டும் என்று கொட்டித் தீர்த்தார்.

1923-1926 காலகட்டத் தில் இரண்டாவது நீதிக்கட்சி யின் சாதனைகள் விரிவா னவை. - மயிலாடன்

குறிப்பு: நீதிக்கட்சியின் இரண்டாவது அமைச்சரவை பதவி ஏற்ற நாள் இப்பொன்னாள் (19.11.1923).

Read more: http://viduthalai.in/e-paper/91413.html#ixzz3JZSHHBbb

தமிழ் ஓவியா said...

கிரிக்கெட் சூதாட்டம் சீனிவாசய்யர்?

அய்.பி.எல். கிரிக்கெட் டில் நடைபெற்ற சூதாட்டம் குறித்து முகுல்முட்கல் தலை மையில் அமைக்கப்பட்ட விசாரணைக் குழு தன் அறிக்கையை வெளியிட் டுள்ளது. இதில், சீனிவாச னுக்கு நேரடியாக தொடர்பு இல்லை என்றாலும், சீனி வாசன் உள்பட 4 பேரும் ஒரு விளையாட்டுக்காரர் நடத்தை விதிகளை மீறியதை அறி வார்கள்; ஆனாலும், அதைத் தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்கிறது அறிக்கை.

தெரிந்ததை மறைத்ததும் குற்றம்தானே!

சீனிவாச அய்யரின் மரு மகன் குருநாதன் மெய்யப் பன் பெட்டிங்கில் ஈடுபட் டது உறுதி செய்யப்பட்டுள் ளது.

Read more: http://viduthalai.in/e-paper/91423.html#ixzz3JZScqdaz

தமிழ் ஓவியா said...

சர்ச்சில் பெண் பிஷப்புகள் இந்து மதம் என்ன செய்யப் போகிறது?


லண்டன், நவ.19- இங்கிலாந்தில் பெண் பிஷப்புகள் நியமனம் செய்யப்பட உள்ளனர். இந்து மதம் என்ன செய்யப் போகிறது என்பது கேள்வியாக எழுந்துள்ளது.

1994 ஆம் ஆண்டுமுதல் பெண் பாதிரியார்கள் இங்கி லாந்தில் நியமிக்கப்பட்டனர். ஆனால், தேவாலயத்தின் சீனியர் பதவி வகிக்க முடியாத நிலை இருந்தது. பிஷப் பதவி தரப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது.

2012 இல் ஒரே ஒரு பெண் பிஷப் நியமிக்கப்பட்டார். நாடாளுமன்றமும், பிஷப் பொது மன்றக் குழுவும் ஆதரவு அளித்துவிட்டனர்.

கிறித்துவ மதத்தில் ஒரு பெரிய திருப்பமாக இது கருதப்படுகிறது. இந்து மதத்தின் ஆகமங்களிலேகூட பார்ப்பனரைத் தவிர மற்றவர்கள் அர்ச்சகர் ஆகக்கூடாது என்று கூறும் நிலையில், பெண் அர்ச்சகர் பற்றி நினைத்துப் பார்க்கத்தான் முடியுமா?

Read more: http://viduthalai.in/e-paper/91417.html#ixzz3JZSuTHiG

தமிழ் ஓவியா said...

முல்லைப் பெரியாறு - பாடம் பெறுமா கேரளா?

முல்லைப் பெரியாறு அணையில் 136 அடிக்குமேல் தண்ணீரைத் தேக்கக் கூடாது; அப்படித் தேக்கினால் அணை உடையும், இடுக்கி மாவட்டமே நீரில் மூழ்கும்; இலட்சக்கணக்கான மக்கள் மடிவார்கள் என்று பெருங்குரல் கொடுத்தது கேரள அரசு.

999 ஆண்டுகளுக்குக் குத்தகை என்பது சட்டப்படி யான நிலை; 1885 இல் போடப்பட்ட ஒப்பந்தம் இது. சட்டமாவது - ஒப்பந்தமாவது - தூக்கி எறியுங்கள் என்ற மனப்பான்மையில் ஆட்டம் போட்டது கேரள அரசு.

கேரள மாநில அரசின் கூச்சல், அடாவடித்தனமாக இருந்ததன் விளைவாக 152 அடி தண்ணீர்த் தேக்க வாய்ப்பு இருந்தும் 136 அடி அளவில் நீர்மட்டம் குறைக்கப்பட்டது.

கேரள அரசு சொல்கிறபடி அணை பலமாக உள்ளதா இல்லையா என்று கண்டறிய ஆய்வுக் குழுக்கள் அமைக்கப்பட்டன.

மிட்டல் தலைமையிலான ஏழு பேர் கொண்ட நிபுணர் குழு கொடுத்த அறிக்கையின் அடிப்படையில் முல்லைப் பெரியாறு அணையில் 136-லிருந்து 142 அடியாக உயர்த்தலாம் என்று உச்சநீதிமன்றமே தீர்ப்பு அளித்தது (27.2.2006).

அந்தத் தீர்ப்பினை முடக்கிட தனிச் சட்டம் ஒன்றையும் கேரள அரசு கொண்டு வந்ததுண்டு (18.3.2006).

2006 இல் தீர்ப்பு வழங்கியும் அதனை நடைமுறைப் படுத்துவதற்கு எட்டு ஆண்டுகள் தேவைப்பட்டன என்பதைக் கவனிக்கவேண்டும் - அதுவும் உச்சநீதி மன்றம் காதைத் திருகித் தீர்ப்பை அளித்ததற்குப் பிறகு.

8000 ஏக்கர் நிலப் பரப்பில் இருந்த முல்லைப் பெரியாறு 4000 ஏக்கருக்குச் சுருக்கப்பட்டது. இந்தத் தேக்கடிப் பகுதிகள் எல்லாம் சுற்றுலாப் பயணிகளிடம் வியாபாரம் நடத்தும் வணிக வளாகமாக மாற்றி அமைக்கப்பட்டது. நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் 5 நட்சத்திர விடுதிகள் எழிலாக உருவாக்கப்பட்டன.

தண்ணீரை 136 அடியிலிருந்து 142 அடி ஆக்கினால், 152 அடியாக உயர அனுமதித்தால், இந்த அய்ந்து நட்சத்திர விடுதிகள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.

இப்பொழுது 142 அடி தண்ணீர் உயர்ந்துள்ள நிலையிலேயே, ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகள் எல்லாம் மூழ்க ஆரம்பித்துவிட்டன என்ற செய்தி வெளிச்சத் துக்கு இப்பொழுது வந்துவிட்டன. இதற்குப் பிறகாவது கேரள அரசு புத்தி கொள்முதல் பெறுமா என்பதுதான் முக்கிய கேள்வியாகும்.

1979 முதல் 35 ஆண்டுகாலமாக கேரள அரசின் சட்ட விரோதமான - நியாய விரோதமான - மக்கள் விரோதமான நடவடிக்கையால் தென்மாவட்டங்களில் 38 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் தரிசாகின. 86 ஆயிரம் இரு போக சாகுபடிகள் ஒரு போகச் சாகுபடியாக பின்னுக்குத் தள்ளப்பட்டன.

இப்பொழுதுகூட கேரள அரசு திருந்தியபாடில்லை. முல்லைப் பெரியாறு பாதையில் புதிய அணை கட்டும் திட்டத்தில் முழு மூச்சாக இறங்கியுள்ளது.

கருநாடகமும், இதே வேலையில் இறங்கியுள்ளது. இந்தச் சட்ட விரோத நடவடிக்கைகளை - உச்சநீதிமன்ற தீர்ப்புகளையெல்லாம் குப்பைக் கூடையில் தூக்கிப் போடும் நீதிமன்ற அவதூறுகளையெல்லாம் மத்திய அரசு கண்டுகொள்வதேயில்லை. சட்டத்தின் ஆட்சி எந்தத் தரத்தில் உள்ளது என்பதற்கு இவையெல்லாம் கற்றூண் போன்ற சாட்சியங்களே!

தேசியத்தை உடைக்கப் போவது தேசியத்தை எதிர்க்கும் கட்சிகளல்ல; தேசியம் பேசும் கட்சிகளும் - ஆட்சிகளுமே!

Read more: http://viduthalai.in/page-2/91426.html#ixzz3JZTIXfEL

தமிழ் ஓவியா said...

உரிமையைப் பெறும் வழி


நாம் நம்முடைய உரிமைகளைப் பெறுவது என்றாலே என்ன அர்த்தம் என்றால், நம்முடைய உரிமைகளைப் பறித்து வருகிற எதிரிகளின் ஆதிக்கம் அழிவு என்றுதான் அர்த்தம் ஆகும். அவர்களுடைய அழிவின்மீதுதான் நாம், நம் உரிமைகளைப் பெற முடியும்.
_ (விடுதலை, 30.5.1951)

Read more: http://viduthalai.in/page-2/91425.html#ixzz3JZTPodlD

தமிழ் ஓவியா said...

சாமியாரா? சண்டைக்காரரா?: அரியானாவில் வன்முறை

பர்வாலா (ஹிஸார்), நவ.19_ அரியானாவில் நீதி மன்ற அவமதிப்பு வழக்கில் ஆஜராகாத சாமியார் ராம்பாலை கைது செய்வ தற்காக, அவருடைய ஆசிர மத்துக்குச் சென்ற காவல் துறையினருக்கும், ராம் பாலின் ஆதரவாளர் களுக்கும் இடையே செவ் வாய்க்கிழமை ஏற்பட்ட மோதல் கலவரமாக உரு வெடுத்தது.

இதில், பெண்கள், காவல் துறையினர், செய்தியாளர்கள் உள்பட நூற்றுக்கும் மேற் பட்டோர் காயமடைந்தனர்.
இதுகுறித்து காவல் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

கொலை வழக்கு ஒன்றில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சாமியார் ராம்பால் நேரில் ஆஜராகாததால், அவருக்கு பஞ்சாப்-ஹரியாணா உயர் நீதிமன்றம் ஜாமீனில் வெளிவர முடியாத பிடி ஆணை உத்தரவைப் பிறப் பித்தது.

மேலும், அவரை வெள் ளிக்கிழமை நேரில் ஆஜர் படுத்துமாறும் உத்தர விட்டது. இதையடுத்து, அவரைக் கைது செய்வ தற்காக, ஹிஸார் மாவட் டம், பர்வாலாவில் உள்ள அவருடைய ஆசிரமத்துக்கு துணை ராணுவப் படை யினருடன் செவ்வாய்க் கிழமை சென்றோம்.

ராம்பாலின் ஆதரவா ளர்கள், ஆசிரமத்தின் வாயிற் கதவுகளை மூடி, எங்களை உள்ளே செல்ல முடியாமல் தடுத்து நிறுத்தி னார்கள். உள்ளே அனு மதிக்குமாறு பல முறை கூறியும், அவர்கள் வாயிற் கதவுகளைத் திறக்கவில்லை.

இதையடுத்து, உள்ளே நுழைய முயன்ற எங்கள் மீது ஆசிரமத்துக்கு உள்ளே இருந்து ராம்பாலின் ஆதரவாளர்கள் கற்களை வீசித் தாக்கினர். துப்பாக்கி யால் சுட்டதுடன் பெட் ரோல் குண்டுகளையும் வீசினர்.

ஆசிரமத்துக்கு உள்ளே இருக்கும் பொதுமக்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாத வகையில் நாங்கள் பதில் தாக்குதல் நடத்தினோம்.
இதையடுத்து, ஆசிரமத் துக்கு வெளியில் திரண்டி ருந்த கூட்டத்தை கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் விரட்டி யடித்தோம்.

நீண்ட நேரம் நீடித்த இந்த மோதலில் பெண்கள், காவல்துறையினர், செய்தி யாளர்கள் உள்பட நூற்றுக் கும் மேற்பட்டோர் காய மடைந்தனர். தொலைக் காட்சி நிறுவனங்களின் சாதனங்கள் சேதப்படுத்தப் பட்டன. காயமடைந்த வர்கள் மருத்துவமனை களில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று அந்த காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.

ஆயிரம் பேர் தவிப்பு: இதனிடையே, அந்த ஆசிர மத்துக்குள் குழந்தைகள், பெண்கள் உள்பட ஆயிரத்துக்கும் மேற் பட்டோர் இருப்பதாகவும், அவர்களை வெளியே வர விடாமல் ராம்பாலின் ஆதரவாளர்கள் தடுப்பதாக வும் ஆசிரமத்தில் இருந்து தப்பி வந்தவர்கள் தெரி வித்தனர். மேலும், தங்களை பாதுகாப்பு அரணாகப் பயன்படுத்தி ராம்பாலின் ஆதரவாளர்கள் காவல் துறையினர் மீது தாக்கு தலில் ஈடுபட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

முன்னதாக, ஆசிர மத்தில் ராம்பால் இல்லை என்றும், உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வரும் அவருக்கு ரகசிய இடத்தில் சிகிச்சை அளிக் கப்பட்டு வருவதாகவும் ஆசிரம செய்தித் தொடர் பாளர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் மாநிலக் காவல்துறை டிஜிபி எஸ்.என்.வசிஷ்ட், செய்தி யாளர்களிடம் கூறுகையில், "எங்களுக்குக் கிடைத்த தகவல்களின்படி, ராம்பால் இன்னமும் ஆசிரமத்தில் தான் இருக்கிறார்; நிலை மையை மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார் கண்காணித்து வருகிறார்' என்றார்.

Read more: http://viduthalai.in/page-3/91433.html#ixzz3JZTkgCCA

தமிழ் ஓவியா said...

யாரிந்த ராம்பால்?

ஹரியாணா மாநிலம் சோனிபட் மாவட்டம் தானா கிராமத்தில் 1951 செப்டம்பர் 8இல் ராம் பால் பிறந்தார். டிப்ளமோ என்ஜினீயரிங் படித்த அவர் அரியானா மாநில நீர்ப்பாசனத் துறையில் 2000ஆம் ஆண்டு மே மாதம் வரை பணியாற்றினார்.
அனுமாரின் தீவிர பக்தரான ராம்பால் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக அவரை பூஜித்து வருகிறார். 1999இல் சட்லக்கில் அவர் தனது முதல் ஆசிரமத்தை தொடங்கினார். பின்னர் ரோட்டக், பர்வாலா ஆகிய பகுதிகளிலும் ஆசிரமத்தை தொடங்கினார். பேஸ்புக், யு டியூப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் ராம்பால் அதிக ஆர்வம் கொண்டவர். யு டியூபில் அவரை ஆயிரக் கணக்கானோர் பின்தொடர்கின்றனர்.

சட்டத்துக்கும் ராம்பாலுக்கும் எப்போதுமே ஏழாம் பொருத்தம்தான். 2000ஆம் ஆண்டில் ஆர்ய சமாஜ் ஆதரவாளர்களுக்கு எதிராக சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்த ராம்பால் பல்வேறு வழக்குகளை எதிர் கொண்டார்.
2006ஆம் ஆண்டில் அவருடைய ஆசிரமத்தில் இருதரப் பினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்தார். அதில் சாமியார் ராம்பாலுக்கு நேரடி தொடர்பு உள்ளதாகக் கூறப்படுகிறது. அந்த வழக்கில்தான் ராம்பாலை கைது செய்ய காவல்துறையினர் தேடுகின்றனர்.

2008ஆம் ஆண்டு ஏப்ரலில் ரோட்டக் ஆசிரமத்தில் மிகப்பெரிய மோதல் ஏற்பட்டது. இதேபோல் பர்வாலா ஆசிரமத்தில் 2013ஆம் ஆண்டில் மிகப்பெரிய மோதல் வெடித்து 10 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதுபோல் சாமியார் ராம்பால் மீது மேலும் பல்வேறு வழக்குகள் உள்ளன. அவர் ஏற்கெனவே ஒருமுறை கைது செய்யப்பட்டு சிறிதுகாலம் சிறைவாசம் அனுபவித்தார். 2008 ஏப்ரலில் அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். அதன் பின்னர் அவரை காவல்துறையினரால் கைது செய்ய முடியவில்லை.

Read more: http://viduthalai.in/page-3/91433.html#ixzz3JZTsZ2kT