Search This Blog

6.10.11

செவ்வாய்த் தோஷம் பார்க்கும் மூட சோதிடர்களுக்கு மரண அடி!


செவ்வாயில் தண்ணீர்!

செவ்வாய்த் தோஷம் பேசும் - பார்க்கும் மூட சோதிடர்களுக்கு மரண அடி விழுந்து விட்டது. கிரகங்களை அவற்றின் விஞ்ஞான தன்மையோடு பார்க்காமல், அவற்றின்மீது அபார சக்திகளைக் கற்பித்து அவை மனித வாழ்வைப் பாதிக்கச் செ ய்கின்றன என்று கதை விடுவதை இனியாவது நிறுத்த வேண்டும்.

செவ்வாயில் தண்ணீர் எதிர்பார்த்ததைவிட அதிகமாகவே இருக்கிறது; மனிதர்கள் குடியேறி வாழ வாய்ப்புண்டு என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு நிலையம் 2003-ஆம் ஆண்டில் ரூ.3600 கோடி செலவில் எஸ்பிரிட், ஆப்பர்சூனிட்டி என்ற இரு ஆய்வுக் கலன்களை செவ்வாய்க் கிரகத்துக்கு அனுப்பி வைத்தன. ஸ்பிரிட் ஆய்வுக் கலம் மணிக்கு 19790 கிலோ மீட்டர் வேகத்தில் 38 கோடி கிலோ மீட்டர் தூரத்தை ஏழு மாத காலம் பயணம் செய்து 3.1.2004 அன்று செவ்வாயில் இறங்கியது. ஆப்பர்சூனிட்டி ஆய்வுக்கலம் 2004 ஆம் ஆண்டு ஜனவரி 24ஆம் தேதி செவ்வாய்க்கிரகத்தில் இறங்கியது.

இவ்விரு விண்கலங்களும் செவ்வாய்க் கிரகத்தின் எதிர் எதிர் இடத்தில் (மறுபக்கம்) இறங்கி அங்குள்ள பாறைகளைத் தோண்டி துருவிப் பார்த்து ஆய்வு செய்து படங்களை அனுப்பி வைத்தன.

2007ஆம் ஆண்டு ஆகஸ்டு 4ஆம் தேதி அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலம், பகடெனா என்ற இடத்தில் உள்ள ஜெட்பிரபல்கல் லெபாரட்டரி எனும் ஆய்வு நிலையத்திலிருந்து 4,200 கோடி டாலர் செலவில் உருவாக்கப்பட்ட போனிக்ஸ் செயற்கைக் கோள் 2007ஆம் ஆண்டு ஆகஸ்டு 4ஆம் தேதி செவ்வாய்க்கு அனுப்பப்பட்டது. மணிக்கு 21 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் பறந்து 9 மாதம் பயணித்து 25.5.2008 அன்று செவ்வாயில் இறங்கியது. முன்னிலும் அதிக ஆய்வுகளை நடத்திய இது கனிமங்கள் பாறைகள், பனிக்கட்டிகள் என்று பல வகைகளிலும் ஆய்வு செய்து நம்பிக்கையை ஏற்படுத்தியது.

தொடர்ந்து இவ்வாறு அனுப்பப்படும் விண் கலங்களால் இப்பொழுது ஒரு தெளிவான முடிவுக்கு வந்துள்ளனர்.

செவ்வாய்க்கிரகத்தில் உள்ள காற்று மண்டலத்தின் மேல் பகுதியில் எங்கு பார்த்தாலும் தண்ணீர் நிறைந்து காணப்படுகிறது என்பது மனிதகுலத்திற்கு மகிழ்ச்சி நிறைந்த தகவலாகும்.

மனிதர்கள் வாழ்வதற்கான ஆதாரம் கிடைத்து விட்டது என்று விஞ்ஞானிகள் மகிழ்கின்றனர். ஏற்கெனவே சந்திர மண்டலத்தில் குடியேறிடலாம் என்று உறுதி செய்யப்பட்டு விட்டது. நிலாவுக்கு உல்லாசப் பயணம் சென்றுவர பல நாடுகளில் சுற்றுலா மய்யங்களே தொடக்கப்பட்டு விட்டன என்ற சேதி வெளி வந்தது.

அடுத்த கட்டமாக செவ்வாய்க் கிரகமும் மனிதனின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டது என்பது மனித அறிவின் மகத்தான ஆற்றலையும், கண்டு பிடிப்பையும் பறைசாற்றக் கூடியதாகும்.

அறிவியல் இவ்வளவு கண்டுபிடிப்புகளைக் குவித்துக் கொண்டிருக்கும் இந்த வளமான சிந்தனைச் செழிப்புக்கிடையே செவ்வாய்த் தோஷம்பற்றி பேசும் சோதிடர்களும் படித்த - படிக்காத பாமரர்களும் இருப்பது கண்டு வாயால் சிரிக்க முடியவில்லையே. ஆம்! அவர்களின் அறிவை மத - மூடக்கிரகணம் பிடித்து ஆட்டுகிறது.

சூரியனிலிருந்து நான்காவது கிரகம் - பூமிக்கு அடுத்த வெளி வட்டத்தில் இருக்கக் கூடியது செவ்வாய்க் கிரகம். அது தன்னைத் தானே ஒரு முறை சுற்ற 24 மணி நேரம் 37 நிமிடம் ஆகிறது. சூரியனை ஒரு முறை சுற்றிவர ஓர் ஆண்டு 321 நாட்கள் ஆகின்றன.

வினாடிக்கு 24 கிலோ மீட்டர் வேகத்தில் சூரியனைச் சுற்றி வருகிறது செவ்வாய்க்கிரகம். பூமியின் பாதி அளவே உள்ளது. செவ்வாய்க்கிரகம். இதற்கு இரு துணைக் கோள்கள் உண்டு. ஒரு துணைக் கிரகம் 9340 கிலோ மீட்டர் தூரத்திலும், மற்றொரு துணைக் கிரகம் 23500 கிலோ மீட்டர் தொலைவிலும் செவ்வாய்க் கிரகத்தைச் சுற்றி வருகின்றன.

2003ஆம் ஆண்டு ஆகஸ்டு 27ஆம் தேதி செவ்வாய்க்கிரகம் 9 கோடியே 70 லட்சம் கிலோ மீட்டர் தூரத்திலிருந்து அய்ந்தரைக் கோடி கிலோ மீட்டர் தூரத்திற்கு பூமியை நெருங்கி வந்தது. அதனால் பூமிக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவும் இல்லை.

இவ்வளவு விஞ்ஞான தகவல்கள் செவ்வாயைப் பற்றி கண்டுபிடிக்கப்பட்ட பிறகு செவ்வாய்த் தோஷம் உள்ள பெண்ணுக்குச் செவ்வாய்த்தோஷம் உள்ள மாப்பிள்ளையைத்தான் தேட வேண்டும் என்று கூறி, சிலருக்கு திருமண வயது கடந்த போன கொடுமையும் நடப்பதுண்டு.

மக்களை வஞ்சிக்கும் இந்த சோதிட மூடத்தனத்தைத் தடை செய்ய வேண்டும் மக்கள் நல அரசுகள்.

0 comments: