Search This Blog

14.10.11

பௌத்தம் என்பது ஒரு மதமா? - பெரியார்

யார் புத்தன்?

புத்தர் விழா என்கிறபோது தேங்காய், பழம் வைத்துக் கும்பிடுவது என்பதல்ல: புத்தர் விழாக் கொண்டாடுகிறோம் என்றால் அதன் மூலம் ஏதாவது ஒரு படிப்பினைப் பெற வேண்டும். நான் முன்னுரையிலேயே சொன்னேன் நாத்திகன் என்பதாக. நாத்திகன் என்றால் வேத சாத்திர புராண இதிகாசங்களுக்கு மாறான கருத்துள்ளவன்; இப்போது இருந்து வரும் மதத்திற்கு மாறான கருத்துடையவன். இப்படி இருந்தால்தான் புத்தரைப் பற்றிச் சரியாகப் பேசமுடியும். அப்படியில்லாமலே பேசலாம் என்றால் அதற்கு மிகவும் சாமர்த்தியம் வேண்டும். அதாவது மக்களை நன்கு ஏமாற்றப் பழகியிருக்க வேண்டும். இப்படிப்பட்ட ஒரு சாரார் புத்தரை இருடிள் மகான்களைப்போல ஒருவராகவே பேசுகிறார்கள்.

புத்தர் மகானோ, ரிசியோ அல்லர்; இந்தத் தன்மையை எதிர்த்தவர். அந்தக் காரணத்தினால்தான் நாம் இன்று புத்தரைக் கொண்டாடும்படியான நிலை இருக்கிறது. புத்தர் எப்படி மகானோ, ரிசியோ இல்லையோ அதே போல் பௌத்தம் என்பதும் ஒரு மதமல்ல. பலபேர் பௌத்தம் என்பதைத் தவறாக ஒரு மதம் என்றே நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். ஒரு மதம் என்றால் கண்டிப்பாக அதற்கு ஒரு கடவுள் வேண்டும். மோட்சம் நரகம் வேண்டும். ஆத்மா, பாவ புண்ணியம், அவற்றிற்கு ஏற்றாற் போல் தண்டனை இவைகளெல்லாம் வேண்டும். இன்னும் சிறந்த மதம் என்பதற்கு ஒரு கடவுள் போதாது. பல கடவுள்கள் வேண்டும். அவற்றிற்குப் பெண்டாட்டி, பிள்ளைக்குட்டி, வைப்பாட்டி இவைகளெல்லாம் வேண்டும். இப்படியெல்லாம் இருந்தால்தான் அது மதமாகும்.

இன்று பிறிதொரு இடத்தில் புத்த செயந்தி விழா அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது. புத்தர் (சயந்தி எனும்) பிறந்தநாள் விழா, 1956 மே மாதம் 24, 25, 26, 27 தேதிகளில் கொண்டாடுவது என்று சென்னை புத்த சயந்தி விழாக் கொண்டாட்டக் குழுவினரால் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. திராவிடர் கழகத்தாராகிய நாம் இவ்விழாவில் கலந்து கொள்ள வேண்டுமென்று விழாக் குழுவினரால் அழைக்கப்பட்ட அழைப்பைக் கழகச் சார்பாக முழுமனத்தோடு ஏற்றுக் கொண்டிருக்கிறேன். ஆதலால், திராவிடர் கழகத் தோழர்களும் மற்றும் எல்லாத் தாபனத் தோழர்களும் புத்தர் பிறந்தநாள் 2500ஆவது ஆண்டு விழா. சென்னை உட்பட தமிழ் நாடு எங்கும் சிறப்பாய் நடைபெறவும், புத்தர்பிரான் பிரச்சாரம் செய்யவும் ஆன எல்லா விதமான முயற்சியும் செய்ய வேண்டுமாய் வேண்டிக் கொள்ளுகிறேன். நான் அறிந்தவரை புத்தர் அறிவுரையில் முக்கியத்துவமானவை:-

1. எதையும் உன் அறிவைக் கொண்டு நன்றாய் ஆராய்ந்து பார்

2. உன் அறிவுக்குச் சரி என்று தோன்றியவைகளையே ஏற்றுக் கொள்

3. உனக்கு விளங்காத தன்மையில் கடவுள், ஆத்மா, தேவர், மேல் உலகம், கீழ் உலகம், மோட்சம், நரகம் என்றும்; பிராமணன், சூத்திரன் - பஞ்சமன் என்றும் சொல்லப்படும் வெறும் கற்பனைச் சொற்கள் முதலியவைகளை நம்பாதே உலகில் உள்ள சீவன்களில் எல்லாம் மனிதன் எப்பொருளையும் ஆராய்ந்து பகுத்தறிந்து உணரும் உயர்ந்த அறிவுள்ள சீவன் ஆவான் - என்பதே ஆகும்.

கடவுள் சொன்னார் என்றும், வேத சாத்திரம் சொல்லுகிறது என்றும், மகான் சொன்னது என்றும், வெகுபேர் பின்பற்றுகிறார்கள் என்றும், வெகுநாளாக நடந்து வருகிறது என்றும் கருதி எதையும் நம்பி விடாதே; உன் ஆராய்ச்சி அறிவு என்ன சொல்லுகிறதோ அதை நம்பு என்றும் சொல்லி இருக்கிறார்.

---------------- தந்தை பெரியார் -"விடுதலை" தலையங்கம், 19.4.1956

0 comments: