'ஸ்ரீ' போய் 'திரு' வந்தது எப்படி?
நூல் : நீதிக்கட்சி வரலாறு தொகுதி -1, தொகுதி -2
ஆசிரியர் : க. திருநாவுக்கரசு
வெளியீடு : நக்கீரன் பதிப்பகம்,
1, அன்னை நாகம்மை தெரு,
மந்தைவெளி, சென்னை - 28.
தொலைப்பேசி : 044-2493 4574
மொத்தப் பக்கங்கள் : 1078
விலை : ரூ. 1,200.00
தாழ்த்தப்பட்டோரின் இழிவான பெயர் நீக்கப்பட்டது
தாழ்த்தப்பட்ட பழங்குடி மக்கள் பஞ்சமர், பள்ளர், பறையர் எனும் இழிவான பெயர்களால் அழைக்கப்பட்டு வந்தனர். இப்படி அப்பழங்குடி மக்களை அழைப்பது அவர்களை அவமானப்படுத்தும் செயலாகும் என்று நீதிக்கட்சி கருதியது. ஆகவே, நீதிக்கட்சித் தலைவர்களுள் ஒருவரான டாக்டர் சி. நடேசனார் திராவிடர் சங்கத்தின் சார்பில் அரசாங்கத்திற்கு ஒரு மகஜரைச் சமர்ப்பித்தார். அம்மகஜரில் தாழ்த்தப்பட்ட பழங்குடி மக்களை இழிவான பெயர்களில் அழைப்பதைவிட்டு - அச்சொற்களை நீக்கிவிட்டு ஆதித்திராவிடர்கள் என்ற வரலாற்றுப் பெயரை உறுதிப்படுத்தும் முறையில் அரசாங்கம் அங்கீகாரம் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது. டாக்டர் சி. நடேசனார் அரசாங்கத்திற்கு ஒரு மகஜர் அளித்ததோடு நின்றுவிடாமல் 1920ஆம் ஆண்டு சென்னை நகரமன்றத்திலும் இது குறித்து ஒரு தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றினார்.
1921ஆம் ஆண்டு சென்னை மாகாணத்தில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு எடுக்கப்பட்டது. அதுபோது பஞ்சமர் முதலான பெயருக்குப் பதிலாக நீதிக் கட்சியின் வேண்டுகோளின்படி ஆதித்திராவிடர் எனும் பெயரைச் சேர்க்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது. இதையொட்டிதான் ஆதித்திராவிடர் என்ற சொற்களைப் பயன்படுத்த வேண்டும் என்று சென்னை மாகாண சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. 1922ஆம் ஆண்டு மார்ச் திங்கள் 25ஆம் நாள் பெயர் மாற்றத்திற்கு முறையான உத்தரவினை நீதிக்கட்சி அரசு வெளியிட்டது.
வேறு எந்தக் கட்சியும் தாழ்த்தப்பட்ட மக்களைப் பற்றிச் சிந்திக்காத காலத்திலேயே நீதிக்கட்சி அவர்களைப் பற்றிப் பரிசீலிக்கத் தொடங்கிவிட்டது என்பதையே ஆதித்திராவிடர் பெயர் மாற்ற உத்தரவு எடுத்துக்காட்டுகிறது.
நீதிக்கட்சி பாரதியின் பாடல்களைப் பறிமுதல் செய்ததா?
நீதிக்கட்சி ஆட்சியின் போது பாரதியாரின் பாடல்கள் பறிமுதல் செய்யப்பட்டது என்பதாகச் சிலர் பேசியும் எழுதியும் வருகிறார்கள். ஆனால், உண்மையில் பாரதியார் பாடல்கள் எப்படி பறிமுதல் செய்யப்பட நேர்ந்தது என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.
பர்மா நாட்டில் தமிழர்கள் மிகுதியாகக் குடியேறி வாழ்ந்து வந்தார்கள். அவர்களுக்கான தமிழ் நாளேடுகளும் அங்கே வெளிவந்து கொண்டு இருந்தன. இவை காங்கிரஸ் சார்புள்ள ஏடுகளாகும். இவ்வேடுகளில் பாரதியாரின் பாடல்களைப் பயன்படுத்தியதோடு அன்றி அவை பர்மா அரசுக்கு எதிரானவை - இராஜ துவேஷமானவை என்ற உணர்ச்சியைத் தோற்றுவித்து எழுதின. இதனால் பர்மா அரசு பாரதியாரின் பாடல்கள் இராஜ துவேஷமானவை என்கிற முடிவுக்கு வந்தது. பாரதியார் பாடல்கள் எங்கிருந்தாலும் அவற்றைப் பறிமுதல் செய்ய வேண்டும் என 7.8.1928இல் பர்மா அரசு உத்தரவையும் பிறப்பித்தது.
இவ்வுத்தரவைப் பிறப்பித்ததோடு அதனை செயிண்ட் ஜார்ஜ் கோட்டை கெசட்டில் வெளியிடுமாறு அனுப்பி வைத்தார்கள். அவ்வுத்தரவு 11.9.1928இல் வெளியான சென்னை கோட்டை கெசட்டின் முதல் பாகத்தில் பர்மா சர்க்கார் அறிக்கையாக வெளிவந்தது. இதன் அடிப்படையில்தான் சென்னை மாகாணத்தில் இருந்த பாரதியாரின் புத்தகங்களைப் பறிமுதல் செய்தார்கள். நீதிக்கட்சி பாரதியாரின் பாடல்களைப் பறிமுதல் செய்ய எந்தவித உத்தரவையும் பிறப்பிக்கவில்லை. இதற்கு முழுக்காரணம் பர்மா அரசாங்கம்தான்! பாரதியாரின் பாடல்களைப் பறிமுதல் செய்ததற்கு எந்தவிதத்திலும் சம்பந்தமில்லாத நீதிக்கட்சியினர் பெயரிலும் சட்டமெம்பர் திவான் பகதூர் கிருஷ்ணன் நாயர் பெயரிலும், சர் உஸ்மான் பெயரிலும் பழி சுமத்துவது சரியானது அன்று. இரட்டை ஆட்சியில் நீதிக்கட்சியின் அதிகாரம் என்ன? - என்பதும் காங்கிரசாருக்குத் தெரிந்தும் பாரதியார் பாடல்களைப் பறிமுதல் செய்த விவகாரத்தோடு நீதிக்கட்சியைச் சம்பந்தப்படுத்திப் பிரச்சாரம் செய்து வந்தனர்.
******
பெரியார் வேண்டுகோளும் தமிழ்மொழியை அரசியல் மொழியாக்கத் தீர்மானமும்
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே தமிழ்மொழியின் சீரிளமைத் திறமும் ஆற்றலும் பொதுமக்களிடையே நாள், வார, மாத ஏடுகளின் மூலமாகவும் புதிய தமிழ் நூல்களின் வருகையாலும் பரவத் தொடங்கிவிட்டது. சென்னை மாகாணம் பல மொழிகளைத் தாய்மொழியாகக் கொண்ட வசிப்பிடமாக மாறிவிட்டு இருந்தது. ஏற்கெனவே தமிழகத்தில் தெலுங்கு மொழி 300 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி மொழியாக இருந்து வந்தது. அதன் வீச்சும் நெடியும் 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் குறைந்தபாடில்லை. பல தமிழ்க் குடும்பங்களில் 19ஆம் நூற்றாண்டிலும் 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் தெலுங்கை ஒரு மொழியாகப் படித்து வந்தனர். ஆங்கில ஆட்சியின் அழுத்தம் அதிகமானபோது ஆங்கிலத்தின் வீச்சு அரசு நிருவாகத்திலும் பொது மேடைகளிலும் எதிரொலித்தது. தாய்மொழியைப் பற்றிய சிந்தனையை வயிற்றுப்பாடு மூழ்கடித்தது என்று கூறினாலும் தாய்மொழி உணர்ச்சி உடையவர்கள் குரல் எழுப்பவே செய்தனர்.
இந்திய விடுதலை இயக்கத்தினர், ஹோம் ரூல் இயக்கத்தினர், நீதிக்கட்சியினர் போன்ற அரசியல்வாணர்கள் தத்தமது கருத்துகளை நாட்டு மக்கள் புரிந்து கொள்ளவும் அந்தந்தக் கட்சியினர் தத்தமது கொள்கைகளை எடுத்து வைப்பதற்கும் தாய்மொழி மூலமான தொடர்பு கட்டாயம் தேவை என்ற நிலை உருவாகிவிட்டது. இந்தியா முழுமையும் இத்தொடர்பு வெவ்வேறு கோணத்தில் தோன்றியது. தமிழகத்தில் 1918 முதல் கட்சி நடவடிக்கைகளைத் தமிழில் நடத்த வேண்டும் என காங்கிரஸ் தீர்மானித்தது. பொது மேடைகளில் தமிழில் பேசவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதனூடே மொழிவழித் தேசிய உணர்வுகளும் வளர்ச்சி அடையத் தொடங்கின. 1920ஆம் ஆண்டிலேயே டாக்டர் சி.நடேசனார் தமிழ் மொழியின் பழைமையைப் பற்றியும் அதன் இலக்கியங் களைப் பற்றியும் சட்டமன்றத்தில் எடுத்துரைத்தார்.
வகுப்புவாரிப் பிரதிநிதித்துவமும், அரசியல் மற்றும் உத்தியோகங்களில் இடஒதுக்கீடும் முக்கியப் பிரச்சினையாக இருந்ததைப் போல் மொழிப் பிரச்சினை முதலாம் இந்தி எதிர்ப்புப் போராட்டம் (1937_-1940 வரை) இல்லை என்றே சொல்ல வேண்டும். மொழிப் போருக்குப் பிறகுதான் அரசியல் வானில் மொழியின் முக்கியத்துவம் பெரிதும் உணரப்பட்டது. முதல் மொழிப் போரில் கட்டாய இந்தி திரும்பப் பெறப்பட்டது என்பது திராவிட இயக்கத்திற்குக் கிடைத்த முக்கியமான வெற்றியாகும்.
பெரியார் இதன் அடுத்தகட்டமாக இரண்டுவித நடவடிக்கைகளை மேற் கொண்டார். ஸ்ரீ என்பதற்குப் பதிலாக திரு என்பதைப் பயன்படுத்த வேண்டும் என மாநாடுகளிலும் கமிட்டிக் கூட்டங்களிலும் தீர்மானம் நிறைவேற்றி அரசுக்கு நீதிக்கட்சியின் அமைப்புகள் அனுப்பி வைத்தன. இத்தீர்மானங் களுக்குப் பிறகு பெரியார் கீழ்க்காணும் வேண்டுகோள் ஒன்றினை அவரது பெயரால் ஈரோட்டிலிருந்து 10.03.1942இல் வெளியிட்டார். அவ்வேண்டுகோள் இதுதான்:-
ஐயன்மீர்,
நாம், நமது மகாநாடுகளிலும், கமிட்டிக் கூட்டங்களிலும், நம் மக்களுடைய பெயர்களுக்கு முன்பாக மரியாதை வார்த்தையாக இப்போது சர்க்காரால் உபயோகப்படுத்தப்படும் ஸ்ரீ என்கிற வார்த்தைக்குப் பதிலாக திரு என்கிற வார்த்தையை உபயோகப்படுத்த வேண்டும் என்று தீர்மானம் செய்து, சென்னை சர்க்காருக்கு அனுப்பி இருந்தது யாவரும் அறிந்திருந்ததேயாகும்.
இப்போது சென்னை சர்க்காரார் அந்தப்படி மாறுதல் செய்யும் விஷயத்தில் பொதுமக்களின் அபிப்பிராயம் அறிய விரும்புகிறார்கள் எனத் தெரிவதால், தாங்கள், தங்கள் ஊரில் உடனே ஒரு பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்து, அந்தப்படி மாற்ற வேண்டியது பற்றி தீர்மானம் நிறைவேற்றி, அதை சர்க்கார் சீப் செக்ரெடரி, மதராஸ் கவர்ன்மெண்ட், மதராஸ் என்ற விலாசத்துக்கு உடனே அனுப்பிக் கொடுத்து, விடுதலைக்கும் தெரிவிக்க வேணுமாய் வேண்டிக் கொள்ளுகிறேன். இது மிகவும் அவசரமான காரியமாகும்.
மற்றும், தங்கள் ஊரில் வேறு சங்கங்கள் இருந்தாலும் அதன் மூலமாயும் தீர்மானம் அனுப்பலாம். (விடுதலை 15-.03.1942).
1943ஆம் ஆண்டு மார்ச் மாதத்திலே திருநெல்வேலி இந்து கலாசாலையில் உள்ள கொட்டகையில் சென்னை மாகாண தமிழர் 9ஆவது மாநாடு நடைபெற்றது. மாலையில் நடைபெற்ற இம்மாநாட்டிற்கு இராவ் பகதூர் சி.எம். இராமச்சந்திர செட்டியார் தலைமை தாங்கினார். இம்மாநாட்டில் தீர்மானிக்கப்பட்ட செய்திகள் கவனங் கொள்ள வேண்டியதாக உள்ளது.
(1) சில மாதங்களுக்கு முன்பு மரணமடைந்த ஞானியாரடிகள், சுந்தரமூர்த்தி ஓதுவார், கந்தசாமியார் ஆகியோருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
(2) தமிழ் மக்களுடைய சட்ட திட்டங்களை வகுத்தெழுத கா.சு. பிள்ளையைத் தலைவராகக் கொண்ட ஒரு கமிட்டியை நியமிப்பதாயும்,
(3) தமிழ்நாட்டில் தமிழ்மொழியை அரசியல் மொழியாக ஆக்க வேண்டுமென்று அரசாங்கத்தாரைக் கேட்டுக்கொள்வதாகவும்,
(4) சொல்லாக்க வேலையைச் செய்வதற்காக வி.எஸ். சீனிவாச சாஸ்திரியைத் தலைவராகக் கொண்ட கமிட்டியைக் கலைத்துவிட்டு சென்னை மாகாண தமிழ்ச் சங்கத்தார் செய்து வைத்துள்ள கலைச்சொற்கள் அடங்கிய நூலை அரசு அங்கீகரிக்கவும்,
(5) இது சம்பந்தமாக கவர்னரைப் பேட்டி காண எஸ்.முத்தையா முதலியாரைத் தலைவராகக் கொண்ட ஒரு கமிட்டியை நியமித்தும்,
(6) உயர்நிலை, ஆரம்பப் பாட சாலைகளில் தமிழ்ப் பாடம் தமிழ்ப் பண்டிதர்களால் கற்பிக்க ஆவன செய்யவும்,
(7) தமிழ் வித்துவான்களுக்கு ஆங்கிலப் பேராசிரியருக்குக் கொடுக்கும் சம்பளம் வழங்கப்பட வேண்டுமென்றும்,
(8) அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நாதசுரம் தேர்வு வைக்கும்படியும்,
(9) தமிழர் திருமணம் போன்ற சடங்குகளை தமிழிலேயே நடத்த வேண்டும் எனவும்,
(10) தமிழ்நாட்டிற்குத் தனி மாகாணம் ஏற்படுத்தித் தரும்படி அரசைக் கேட்டுக் கொண்டும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. (விடுதலை 29.03.1943).
இத்தீர்மானங்களை மீண்டுமொரு முறை படித்துப் பாருங்கள். இவை 1943ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டு இருக்கின்றன. தீர்மானத்தைப் படிக்கிற போதே பிரச்சினையின் போக்கும் சிக்கலும் தெரிந்துவிடும். தமிழர் மாநாடு எனப் பெயரிடப்பட்டாலும் நீதிக்கட்சி இவற்றையெல்லாம் செயல்படுத்தியாக வேண்டும் என்கிற கட்டாயத்தில் சிக்கலை அணுகியது. அதற்கான சமூகச் சூழலும் எழுச்சியுற்றது.
-------------” உண்மை” அக்டோபர் 1-12 2011
0 comments:
Post a Comment