Search This Blog

4.10.11

காந்தியார் பிறந்த நாளும் - காமராசர் நினைவு நாளும்


நினைக்க வேண்டிய நாள்

காந்தியார் பிறந்த நாளும் (1869) பச்சைத் தமிழர் காமராசர் நினைவு நாளும் (1975) நேற்று நாடெங்கும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது.

இந்நாள்கள் வெறும் சடங்கு சம்பிரதாயங்களுக்கு உரிய நாள்கள் அல்ல. சமபந்தி போஜனம் நடத்தி தீண்டாமை ஒழிந்துவிட்டது என்று நம் முதுகை நாமே தட்டிக் கொள்ளும் தற்புகழ்ச்சி நாளும் அல்ல.

காந்தியார் என்றால் யார்? 125 ஆண்டுக் காலம் வாழ்வார் என்று திருத்தணி ஜோதிடர் கிருஷ்ணமாச்சாரி எல்லாம் சொன்னார்கள்.

79 வயதில் அவர் மரணம் அடைந்தார் என்று சொல்ல முடியாது - அவர் கொல்லப்பட்டார் என்றே கூறவேண்டும். ஏன் கொல்லப்பட்டார்? சிறுபான்மை யினருக்கு ஆதரவாக இருந்தார் என்று கூறி இந்து மத வெறியரான நாதுராம் கோட்சே என்ற ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனனால் கொலை செய்யப் பட்டார்.

இந்திய அரசின் சிறுபான்மை விவகாரங்கள் அமைச்சகம் வெளியிட்ட விளம்பரத்தில் என்ன கூறப் பட்டுள்ளது?

காந்தி பிறந்த இந் நன்னாளில் சிறுபான்மையினருக்கு அதிகாரமளிப்பதற்காக நம்மை நாமே மறு அர்ப்பணம் செய்வோம் என்று கூறப் பட்டுள்ளது.

காந்தி பிறந்த அந்த மாநிலத்தில்தான் சிறு பான்மையினருக்குச் சவால் செங்குத்தாக எழுந்து நிற்கிறது. 2002 இல் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட சிறுபான்மையினரான முஸ்லீம் மக்கள் கொன்று குவிக்கப்பட்டனர்.

முஸ்லீம் கர்ப்பிணிப் பெண்களின் குடல் கிழிக்கப்பட்டு எடுக்கப்பட்ட சிசு தீயில் வீசி எறியப்பட்டு, அதனைக் கண்டு மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தனர்.

இதற்கெல்லாம் காரணமான அம்மாநில முதல் அமைச்சர் நரேந்திரமோடிதான் பி.ஜே.பி.யின் பிரதமருக்கான வேட்பாளராம். (இப்பொழுதே அவர் பிரதமராக வந்துவிட்டதாக ஒரு நினைப்பு!)

காந்தியாரைப் படுகொலை செய்த நாதுராம் கோட்சேயைக் கதாநாயகனாகச் சித்திரித்து - அவனைக் கடவுளாக்கிக் காட்டும் மை நாதுராம் கோட்சே போல்தே! என்னும் நாடகத்தை வடமாநிலங்களில் வீதிக்கு வீதி நடத்தினர் - மத்திய பி.ஜே.பி. ஆட்சியின்போது.
நான் காந்தி என்னும் தனிமனிதனைக் கொல்ல வில்லை. ஓர் அரக்கனைக் கொன்றேன் என்பது அந்த நாடகத்தில் வசனம்.

காந்தி கொலை செய்யப்பட்டபோது, இந்த நாட்டுக்கு காந்தி நாடு என்று பெயர் சூட்ட வேண்டும். மதத்துக்கு காந்தி மதம் என்று பெயர் சூட்டவேண்டும் என்றார் பகுத்தறிவுப் பகலவனாம் தந்தை பெரியார். காந்தியைக் கொல்லுவதற்குக் காரணமான இந்து மதவாதம் என்ற கொடுமை எப்பொழுதும் கண்களில் நிற்க வேண்டிய - கருத்தில் இருக்க வேண்டிய எச்சரிக்கை விளக்குகள்தான் - தந்தை பெரியார் அப்படிக் கூறியதற்கான காரணம்!

காந்தி கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான சவர்க்காரின் படம் நாடாளுமன்றத்திலே வைக்கப்பட்டு, ஆண்டுதோறும் மலர் தூவி மரியாதை செய்யப்படுகிறது. ஆம், காந்திக்கும் மரியாதை, சவர்க்காருக்கும் மரியாதை!

இப்பொழுது என்ன நிலைமை என்றால் காந்தி யாரைக் கொன்ற கூட்டத்தின் - அமைப்பின் இன்றைய கதாநாயகன் இந்தியாவை ஆளப்போகிறாராம் - இந்தியாவுக்குப் பிரதமராம்!

எச்சரிக்கை! எச்சரிக்கை!!
நேற்று பச்சைத் தமிழர் காமராசர் மறைந்த நாள். இவரை இந்தியாவின் தலைநகரமான டில்லியில் ஒரு பட்டப் பகலில் தீ வைத்துக் கொளுத்திக் கொல்ல முயன்ற கூட்டமும் இதே காவி வன்முறைக் கும்பல்தான் - சங்கராச்சாரி கும்பல்தான்.

இந்நாள்கள் - இந்தச் சிந்தனைகளை என்றும் அசை போடும் நாள் மட்டுமல்ல. மதவாதத்தை மண்ணோடும், மண்ணடி வேரோடும் வீழ்த்திட உறுதி எடுத்துக்கொள்ள வேண்டிய, மதச் சார்பின்மையைத் தூக்கிப் பிடிக்க வேண்டிய சூளுரைக்கும் வரலாற்றுக் குறிப்பு நாள் - மறவாதீர்!

இதே காவி வன்முறைக் கும்பல்தான் - சங்கராச்சாரி கும்பல்தான். இந்நாள்கள் - இந்தச் சிந்தனைகளை என்றும் அசை போடும் நாள் மட்டுமல்ல. மதவாதத்தை மண்ணோடும், மண்ணடி வேரோடும் வீழ்த்திட உறுதி எடுத்துக்கொள்ள வேண்டிய, மதச் சார்பின்மையைத் தூக்கிப் பிடிக்க வேண்டிய சூளுரைக்கும் வரலாற்றுக் குறிப்பு நாள் - மறவாதீர்!

------------------"விடுதலை” தலையங்கம் 3-10-2011

0 comments: