Search This Blog

5.10.11

இராமலிங்க அடிகளார் ஏன் வடலூர் வந்தார்?


வடலூர் இராமலிங்க அடிகளாரின் பிறந்த நாள் இந்நாள் (1823).

தொடக்கத்தில் திருவொற்றியூர் சிவன்மீதும், கந்தக் கோட்டம் முருகன்மீதும், சிதம்பரம் நடராசன் மீதும் பாமாலை சூட்டிய - சராசரி பக்தராக இருந்த இராமலிங்கஅடிகள், பார்ப்பனீயத்தின் சூதுகளை, புனை சுருட்டுகளை, மோசடிகளைக் கண்டு - அவற்றினின்று முற்றாக விலகி ஆன்மீகவாதிகளுக்குத் தனிப் பாதை காட்டினார்.

தொடக்கத்தில் உருவவழிபாட்டை மெச்சிப் பாடிய அடிகள் காலத்தால் முதிர்ச்சி அடைந்த பருவத்தில் உருவ வழிபாட்டை வெறுத்து, தன்னால் வடலூரில் உருவாக்கப்பட்ட சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞானசபையில் வெறும் ஜோதியை ஏற்றி வைத்தார். தன்னால் உருவாக்கப்பட்ட அமைப்புகளின் பெயரில் இடம் பெற்றிருந்த வேத என்ற சொல்லைத் தூக்கி எறிந்தார்.

ஏழைகளுக்கு அன்னம் படைக்க அவர் மூட்டிய அடுப்பின் நெருப்பு இதுவரை அணையவில்லை என்பது அடிகளாரின் அருள் உள்ளத்தை, பசிப்பிணியைப் போக் கும் அறவுள்ளத்தை, மனித நேயத்தின் அடர்த்தியை உணர முடியும்.

அடிகள் ஏன் வடலூர் வந்தார்?

சிதம்பரம் நடராசரைப் பற்றிப் பாடல்கள் எழுதி உருகிய வள்ளலார், நடராசனை நேரில் பக்கம் சென்று தரிசிக்க விரும்பினார். தீட்சதர்கள் தடுத்தனர். வள்ளலார் மருண்டார்! இதற்கு எதிராக சிதம்பரம் தலமொன்றை உண்டாக்கி, அங்கே நட ராசனை வரவழைப்பேன் என்று சூளுரைத்தார் - அதுதான் வடலூரில் அவர் நிறுவியதாகும். பிற்காலத்தில் அந்த உருவ வழிபாட்டையும் வெறுத்தார். அருட்பெருஞ்ஜோதி தனிப் பெருங்கருணை என்கிற சன்மார்க்கத்தைத் தந்தார்.

அவர் எழுதிய ஆறாவது திருமுறைதான் அவரின் உண்மையான முழு வடிவத்தை வெளிப்படுத்தக் கூடியதாகும்.

1873 அக்டோபர் 22 இல் சித்தி வளாகத்தில் சன்மார்க்கக் கொடியை ஏற்றி உரையாற்று கையில் தன் உள்ளத்தை முழுமையாகத் திறந்து காட்டினார்.

நாம் நாமும் முன் பார்த்தும், கேட்டும் வைத்துக் கொண்டிருந்த வேதம், ஆகமம், புராணம், இதிகாசம் முதலிய கலைகள் எதனினும் லட்சியம் வைக்கவேண்டாம். ஏனென்றால், அவைகளில் ஒன்றிலாவது குழு உக்குறியின்றித் தெய்வத்தை இன்னபடி என்றும் தெய்வத்தினுடைய உண்மை இன்னதென்றும் கொஞ்ச மேனும் புறங்கவியச் சொல்லாமல் மண்ணைப் போட்டு மறைத்துவிட்டார்கள்... இது போல் சைவம், வைணவம் முதலிய சமயங்களிலும் லட்சியம் வைக்கவேண்டாம்- என்று வெளிப்படையாகக் கூறிவிட் டாரே!

சாதியிலே மதங்களிலே சமய நெறிகளிலே

சாத்திரச் சந்தடிகளிலே கோத்திரச் சண்டையிலே

ஆதியிலே அபிமானத்து அலைகின்ற உலகீர்

அலைந்தலைந்து வீணே நீர் அழிதல் அழகலவே

என்று வெட்டொன்று துண்டு இரண்டாகக் கிழித்து எறிந்து விட்டாரே.

அவர்தம் மரணம் கூட மர்மமானதுதான் - ஜோதியாகிவிட்டார் என்பதெல்லாம் ஏமாற்று வேலை.

வள்ளலார் காலத்தில் தென்னார்க்காடு மாவட்ட ஆட்சியாளராக விளங்கிய கார்ஸ்டியன் என்பவர் புராணம், சாத்திரம் முதலியவற்றை அவர் கண்டித்ததைப் பொறுக்காத சமயவாதிகள் கற்பூரத்தை இட்டு அவர் எலும்புகூட கிட்டாவண்ணம் எரித்துவிட்டனர் என்று குறிப்பிட்டுள்ளார்.

வள்ளலாரைப்பற்றிப் பேசுவோர் இந்த வரலாறுகளை எல்லாம் மறைப்பது ஏன்?

------------------ மயிலாடன் அவர்கள் 5-10-2011 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

0 comments: