Search This Blog

16.3.23

தோள் சீலைப் போராட்டம்

 

தோள் சீலைப் போராட்ட நாயகர் சமூகப் போராளியான வைகுண்டர் - அய்யா வழி

சமூக நீதி மறுக்கப்பட்டு, அதிகார மனிதர்கள் ஜாதி, மதத்தின், அரசியலின் பெயரால் பிற மக்கள் மேல் வன்கொடுமை நிகழ்த்தும்போது, அவைகளை எதிர்த்துப் போராடிப் புதுச் சமூக விழுமியங்களையும், அறங்களையும் வென்றெடுக்கும் போராளிகளைச் சமூகமே உருவாக்குகிறது. பதினெட்டு மற்றும் பத்தொன்பதாம் நூற்றாண்டுக் காலத்தில் கேரளத்திலும் கேரளத்தின் ஆட்சிக்குட்பட்டிருந்த இன்றைய தமிழ்நாட்டின் குமரி மாவட்டப் பகுதியிலும் மக்களுக்கான மாபெரும் போராளிகள் உருவானார்கள். அவர்கள் அய்யன்காளி, நாராயண குரு மற்றும் வைகுண்ட சாமி என்னும் முத்துக்குட்டி சாமிகள். இவர்களில் காலத்தால் மூத்த, மிகப் பெரிய விழுப்புண்கள் பெற்ற சமூகப் போராளியான வைகுண்டரை அறிந்துகொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.

1050 ஜாதிகள்

அக்காலங்களில் கேரளம், 1050 ஜாதிகள் கொண்டதாக, பார்ப்பனர்களிடையே உயர்ந்தவர்களாகக் கருதப்பட்ட நம்பூதிரிகளின் ஜாதிய ஆட்சிக் கூடாரமாக இருந்தது. நம்பூதிரிகளும், நாயர்களும், வெள்ளாளர்களும் கூட்டுச் சேர்ந்து மிகக் குரூரமான முறையில் மனுதர்ம நடைமுறைகளை அமல்படுத்தி, யாரும் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு ஜாதி வன்கொடுமைகளை நிகழ்த்திக் கொண்டிருந்தார்கள். அன்றைய கேரளத்தைப் ‘பைத்தியக்காரர்களின் கூடாரம்’ என்றார் விவேகானந்தர்.

எந்த ஜாதியாக இருந்தாலும் மீன் மாமிசம் சாப்பிடுபவர்கள் தாழ்ந்த ஜாதி. மாட்டுக் கறி சாப்பிடுபவர்கள் மிகவும் தாழ்ந்த ஜாதி. நாடார்களும் ஈழவர்களும்  தாழ்ந்த ஜாதி. புலையர்கள் தாழ்ந்த ஜாதி யிலும் தாழ்ந்த ஜாதி. அவர்கள் அடிமைகளாவே நடத்தப்பட்டார்கள். பெண்கள் மாதவிலக்குக் காரணமாகத் தாழ்ந்தார்கள்.

நம்பூதிரிகளை நாயர்கள் நெருங்கலாம். தொடக்கூடாது. நம்பூதிரிகளிடம் இருந்து நாடார், ஈழவர் போன்றோர் முப்பத்தாறு அடி தள்ளியும், புலையர் போன்றோர் தொண்ணூறு அடி தள்ளியும் நிற்க வேண் டும். நாயரிடம் இருந்து நாடார், ஈழவர்கள் பன்னிரண்டு அடி தள்ளியும், புலையர் போன்றோர் அறுபத்து நான்கு அடி தள்ளியும் நிற்கவேண்டும். இப்படியே 1050 ஜாதிகளுக்கும் தூரக் கணக்குகள் இருந்தன. தீட்டுத் தூரத்தை மீறுபவர்கள், நாயர்களால் கடுமையாகத் தண்டிக்கப்பட்டார்கள்.

கேரள அரசர்கள் மக்களிடம் வசூலித்த வரியைப்போல, உலகின் வேறு எந்த நாட்டிலும் வசூலிக்கப்பட்டதா என்பதை ஆராய வேண்டும். குறிப்பாக நாடார்களும் ஈழவர்களும் இந்த வரிவிதிப்பால் மிகவும் துன்பத்துக்கு ஆளானார்கள்.

வரிக்குமேல் வரி

சுமார், நூற்றுக்கும் மேற்பட்ட வரிகளை அவர்கள் செலுத்த வேண்டியிருந்தது. உயிரோடு இருக்கும் 16 முதல் 60 வயதுக்குட்பட்ட ஆண்கள் தலைவரி செலுத்த வேண்டும். செத்தவர்களுக்கும் வரி. சொத்து மதிப்பில் 40 சதவிகிம் வரி. நாடார்கள் தங்கள் வீட்டுக்கும், வீட்டுக்கு ஓலை போட்டாலும் வரி. புல் அறுக்கிறவர்களும், சுமை தூக்குபவர்களும் வரி செலுத்த வேண்டி இருந்தது. பனை ஏறுகிறவன், அவன் ஏறும் ஏணிக்கு வரி; பனை ஏறும்போது அவன் காலில் இட்டுக் கொள்ளும் தளை நாருக்கும் வரி; நிலத்தைத் தரிசாகப் போட்டாலும் வரி. பெண்களுக்கு முலை வளர்ந்தால் முலை வரி, தாலிக்குத் தாலி வரி. சிலவகை ஆடைகள் அணிகள் அணிய, குடைபிடிக்க, பல்லக்கில் போக வரி. மீசை வளர்த்தால் கூட வரி  உண்டு. கல்யாணத்துக்கும் வரி. கருமாதிக் கும் வரி.

எல்லாவற்றுக்கும் மேலான கொடுமை, நாடார் மற்றும் ஈழவர் பெண்கள் தங்கள் மார்பை மறைக்க அனுமதிக்கப்பட வில்லை. அது ஒரு மரியாதைச் சின்னமாகக் கருதப்பட்டது. நம்பூதிரி பெண்கள் இறைவனுக்கு முன்னால், மார்பைத் திறந்து போட்டார்கள். நாயர் பெண்கள், தமக்கு மேலே உள்ளோர், நம்பூதிரிகள், அரசு அதிகார மய்யத்தினர்கள் முன் மார்பைத் திறந்து போட வேண்டும். நாடார், ஈழவர் முதலான தாழ்த்தப்பட்ட நிலையிலிருந்த பெண்கள் எப்போதுமே எவர் முன்பும் மார்பை மூட முடியாமல் இருந்தது. அவர்கள் இடுப்புக்குக் கீழே, முட்டிக்கு மேலே மட்டும் ஏதேனும் சாக்கு மாதிரியான ஆடை (முண்டு) அணிந்து கொள்ளலாம். குடத்தை இடுப்பில் சுமக்கக் கூடாது. தலையில்தான் சுமக்க வேண்டும். மொத்தத்தில் நாய், மாடுகள், பன்றிகளுக்குச் சுதந்திரம் இருந்த அளவுக்குக்கூட தாழ்ந்த நிலையில் வைக்கப்பட்ட மக்களுக்கு இல்லை.

இவ்வளவு தாழக் கிடப்பாரைக் கை தூக்கி விடக் காலம் இருபெரும் சக்திகளை உருவாக்கித் தந்தது. ஒன்று சீர்த்திருத்தக் கிறிஸ்தவம். மற்றது, வைகுண்ட சாமியின் தோற்றமும் தொண்டும்.

1810-க்குப் பிறகு திருவிதாங்கூர் (கேரளா) அரசு, கிழக்கிந்திய கம்பெனியின் கட்டுப் பாட்டுக்குள் வந்தது. அது ஆங்கில, அய்ரோப்பிய கிறிஸ்தவச் சமயப் பாதிரியார்களின் வருகைக்கு நல்ல வழியாக அமைந்தது. குறிப்பாக இந்தப் பகுதியின் கல்வி வளர்ச்சிக்கு சீர்திருத்தக் கிறிஸ்தவம் ஆற்றிய பங்கு மகத்தானதாகும். முறையான, ஜாதி அடிப்படையில் அல்லாத நீதிமன்றங்களையும், தாழ்த்தப்பட்டவர்க்கும் பெண்களுக்கும் இடம் கொடுத்த கல்விக் கூடங்களையும் இந்தக் கிறிஸ்தவர்களே முதல் முறையாக இந்தப் பகுதியில் அமைத்தார்கள்.

 வைகுண்டரின் தோற்றம்

இந்தச் சூழலில்தான் வைகுண்டர் தோன்றுகிறார்.

வைகுண்ட சாமி, கன்னியாகுமரி மாவட்டத்தில் குமரிக்கு அருகே உள்ள சாஸ்தான் கோவில்விளை (அதன் இன்றைய பெயர் சாமித்தோப்பு) என்ற ஊரில் 1809-ஆம் ஆண்டு ஏப்ரல் 19-ஆம் தேதி, பொன்னு நாடார் - வெயிலம்மை தம்பதிக்கு இரண்டாவது குழந்தையாகப் பிறந்தார். இந்த ஆண்டில் மயிலாடியில் சீர்த்திருத்த கிறிஸ்தவ சமயம் வேர்விட்டது. வைகுண்ட சாமிக்குப் பெற்றோர் சூட்டிய பெயர் முடிசூடும் பெருமாள் என்பது. அக்காலத்தில் இப்படியான இரட்டைப் பெயர்கள் வைக்க நாடார்கள் அனுமதிக்கப்படவில்லை. ஆகவே பள்ளிக்கூடத்தில் அவருக்கு முத்துக்குட்டி என்று வைக்கப்பட்டது. வைகுண்ட சாமி, தன் வாழ்க்கை முறையினூடகவே, சமூக வாழ்க்கையையும் கூர்ந்து நோக்கிக் கற்றுக் கொண்டு வந்தார். தென் திருவிதாங்கூரின் இந்த நாகர்கோவில் குமரிப் பகுதி ஏடுகள் நிறைந்த மாவட்டம். மாலையானால் மக்கள் ஏடு படிக்கும் பழக்கம் உள்ளவர்கள். வைகுண்டர் ஏடும் எழுத்தும் கற்றார். தாமரைக் குளம் கிறிஸ்தவப் பள்ளியிலும் அவர் கற்றிருக்கிறார். கிறிஸ்தவ விவிலியத் தில் (பைபிள்) அவருக்கு நிறைந்த ஞானம் இருந்தது. இளமையிலேயே சீர்திருத்த மனோபாவம் அவரிடம் இருந்தது.    

அந்தக் காலத்தில் பொதுக் கிணற்றில் எல்லா ஜாதியாரும் நீர் அருந்த முடியாது. வைகுண்டர் ஒரு சமூகப்புரட்சி செய்தார். அவரே ஒரு கிணறு வெட்டி பள்ளு பறை என்று சொல்லப்பட்ட அனைத்து ஜாதியாரையும் அந்த முந்திரிக் கிணற்றில் குளிக்கவும் குடிக்கவும் செய்தார். இதன் மூலம் ஜாதி ஒடுக்கு முறைக்கு ஆக்கபூர்வமான ஒரு புதிய மறுப்பைத் தந்தார்.

கல்விப் பணியிலும் தீவிரமான கவனம் செலுத்தினார் வைகுண்டர். தன் சீடர்களைக் கொண்டு பல நிழல் தாங்கல்களை ஏற்படுத்தினார். நிழல்தாங்கல்கள் பகலில் பள்ளிக்கூடங்களாகவும், இரவில் சமூகக் கூடங்களாகவும், இராப் பள்ளிக் கூடங்களாகவும் செயல்பட்டன. வழிப்பாட்டு மன்றமாகவும் அவை செயல்பட்டன. வைகுண்டர், ஹிந்து மதத்தில் இல்லாத கூட்டு வழிபாட்டு முறையை ஜாதி பேதமின்றி உருவாக்கிக் தந்தார். அன்புவழி, சமயம் முதல்முதலாகக் கூட்டு வழிபாட்டு முறையை எல்லாத் தாழ்த்தப்பட்ட வகுப்பார்க்கும் உரிய முறையை ஏற்படுத்தியது.

தலைப்பாகை

அக்காலத்தில் அடிமைச் சின்னமாக, நாடார்கள் உள்ளிட்டு தாழ்த்தப்பட்ட ஜாதியார் எவரும், தலைப்பாகை அணியக் கூடாது. வைகுண்டர், ‘நீ யாருக்கும் அடிமை இல்லை. தலைப்பாகையைக் கட்டு’ என்றார். தலைப்பாகை கட்டிக் கொண்டே கோயிலுக்குள் பிரவேசம் செய்ய வேண்டும் என்றார். இன்னும், வைகுண்டர் உருவாக்கிய பதிகளில் (கோயில்களில்) அந்த நிலைமையே நீடிக்கிறது. தலைப் பாகையோடுதான் உள்ளே நுழைய வேண்டும்.

பெருந்தெய்வக் கோயில்களில் தாழ்த்தப்பட்டோர்க்கு நுழைவுரிமை இல்லை, அக்காலங்களில். இன்றும்கூட பல கோயில்களில் அப்படித்தான். ஆகவே, வைகுண்டர் தாமே பல பதிகளைக் கட்டினார். அவர் வாழ்நாளில் ஏழு பதிகளையும், ஏழு நிழல் பதிகளையும் கட்டி இருக்கிறார்.

வைகுண்டர் உருவாக்கிய கோயில்களில் சிலைகள் இல்லை. மாறாகக் கருவறையில், கண்ணாடியும், கண்ணாடி முன் ஒரு விளக்குச் சுடரையும் வைத்தார். கண்ணாடியினுள் தெரியும் நீயே கடவுள். உனக்குள் சுடரும் ஒளியே கடவுள். உருவ வழிபாட்டுக்கு மாற்றான ஒளி வழிபாட்டை மக்களுக்கு அறிமுகப்படுத்திய முதல் ஞானி வைகுண்டர் என்றால் தவறு இல்லை. ஒளி ஜாதி மதம் இனம் கடந்த இயற்கை. சூரியன் போல எல்லோருக்கும் மேலே இருந்து எல்லோருக்கும் சமமாக ஒளியைத் தருவது. சமத்துவமே இயற்கை அல்லது கடவுள்.

கோயிலுக்குள் ஆரவாரத்தை மறுத்தார் வைகுண்டர். ‘காணிக்கை போடாதீங்கோ, காவடிகள் தூக்காதீங்கோ' என்றார் அவர்.

வைகுண்டரின் புகழும் தத்துவங்களும் திருவிதாங்கூர் அரசனை அச்சம் கொள்ள வைத்தன. அவன், அவரைச் சிறைபிடிக்க நினைத்தான்...

மேலாடைக்குத் தடை

கேரள மாநிலத்தின் பெரும் பகுதியும் தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களான கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளும் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கீழ் மன்னராட்சியின் கட்டுப்பாட்டில் இருந்தன. அப்போது மனுதர்ம அடிப்படையில் ஆட்சி நடந்து வந்த ஹிந்து நாடாக இருந்தது. அந்தக் கால கட்டத்தில் ஜாதீயக் கொடுமைகளால் மக்கள் அதிக அடக்குமுறைக்கு ஆளாகினர். இந்த திருவிதாங்கூர் சமஸ்தானத்தால் தாழ்த்தப்பட்டவர்கள் என்று ஒதுக்கி வைக்கப்பட்ட சாணார்(நாடார்), பரவர், ஈழவர், முக்குவர், புலையர் உள்ளிட்ட 18 ஜாதியைச் சேர்ந்த பெண்கள் மேலாடை அணிவதற்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. இவர்கள் மார்பகத்தை திறந்து போடுவதுதான் உயர் ஜாதியினருக்குத் தரும் மரியாதை என்று தரம் தாழ்ந்த எண்ணத்தில் திருவிதாங்கூர் சமஸ்தானம் ஒரு நடைமுறையை வகுத்திருந்தது. இதன்படி 18 ஜாதிகளைச் சேர்ந்த பெண்கள் மேலாடை அணியாமல் அவமானத்துடன் வாழ்ந்து வந்தனர். இந்த அடக்குமுறையை எதிர்த்து சீர்திருத்த கிறித்தவத்தை ஏற்றுக்கொண்ட நாடார் ஜாதியைச் சேர்ந்த மக்கள் தங்கள் ஜாதிப் பெண்களுக்கு மார்பை மறைத்து சேலை அணிய உரிமை கோரிப் போராடத் தொடங்கினர். இது தோள் சீலைப் போராட்டம் எனப்பட்டது. 37 ஆண்டு போராட்டத்துக்குப் பிறகு திருவிதாங்கூர் அரசு நாடார் கிறிஸ்தவப் பெண்களுக்கு தோள் சீலை அணியவும், மார்பகங்களை மறைக்கவும் உரிமை அளித்தது.

போராட்டத்திற்கான காரணம்

ஏழாம், எட்டாம் நூற்றாண்டுகளில் ஜென்மி சம்பிரதாயமும், 10 மற்றும் 11 ம் நூற்றான்டுகளில் ஆரியப் பிராமணர்களினதும் (நம்பூதிரிகள்) ஆதிக்கம் சேர நாட்டில் ஓங்கத் தொடங்கிய வேளையில் ஜாதிக் கட்டுப்பாடுகள் உருவெடுத்தன. 12ஆம் நூற்றாண்டில் இந்தக் கட்டுப்பாடுகள் ஜென்மி சம்பிரதாயத்தின் உத்வேகத்தால் அதிகரித்து, மேல்ஜாதி ஹிந்து என்றும், கீழ்ஜாதி ஹிந்து என்றும் பாகுபாடுகள் உருவாகி காணாமை, நடவாமை, தொடாமை போன்ற சமுதாய முறைகள் உருவாகிற்று. இந்த தீமைகளில் ஒரு பிரிவு தான் தாழ்த்தப்பட்ட மக்கள் இடுப்புக்கு மேலும், முட்டுக்கு கீழும் ஆடை அணியக்கூடாது என்றக் கட்டுப்பாடு. உயர்ந்த ஜாதி ஹிந்துக்களின் முன்பு தாழ்த்தப்பட்ட பெண்கள் மறைக்கப்படாத மார்பகங்களுடன்தான் மரியாதை செலுத்த வேண்டும். சான்றாக நம்பூதிரிகளின் முன்பு சூத்திர நாயர் பெண்கள் மார்பகங்களை மறைக்க கூடாது, அதேப் போன்று ஜாதி வரிசையின் அடிப்படையில் கீழ் ஜாதி ஹிந்து பெண்கள் அனைவரும் மார்பகங்களை மறைக்காமல் நடமாட வேண்டும் என்பது மரபாகிவிட்டது. இவ் உடைக் கட்டுப்பாட்டை மீறினால் மரணத் தண்டனை விதிக்கப்பட்டது.

உடை கட்டுப்பாடு

திருவிதாங்கூர் சமஸ்தானத்தால் தாழ்த்தப்பட்டவர்கள் என்று ஒதுக்கி வைக்கப்பட்ட மக்கள் தங்கள் இடுப்பிற்கு மேல் உடை அணிய மறுக்கப்பட்டனர். கலாச்சாரம் என்ற போர்வையில் பெண்களுக்கும் இது திணிக்கப்பட்டது. உயர் ஜாதி பெண்கள் தங்கள் மார்பை மறைக்க அனுமதி அளிக்கப்பட்டது என்றாலும் நம்பூதிரிப் பிராமணர்கள் முன்பு அனைத்து ஜாதிப் பெண்களும் திறந்த மார்புடனே நிற்க வேண்டும் என்ற ஈனக் கட்டுப்பாடு இருந்தது. இந்த உடை கட்டுப்பாடுகள் மிகக் கடுமையாக கடைப்பிடிக்கப்பட்டன. உடை அணியும் விதத்தை வைத்தே மக்களை உயர்ந்தவர்களாகவும் தாழ்ந்தவர்களாகவும் அடையாளப்படுத்தப்பட்டார்கள். கொத்தனாவிளை என்ற ஊரில் 1822ஆம் ஆண்டு ஒரு சிறிய போராட்டம் நடைப்பெற்றது. அதன் பிறகு 37 வருட காலம் இப்போராட் டம் மூன்று கட்டங்களாக நடைபெற்றது. முதல் கட்டப் போராட்டம் 1822 முதல் 1823 வரையும், இரண்டாம் கட்டப் போராட்டம் 1827 முதல் 1829 வரையும், மூன்றாம் கட்டப் போராட்டம் 1858 முதல் 1859 வரையும் நடைப்பெற்றது.

முதல் போராட்டம்

சீர்திருத்தக் கிறிஸ்தவ சமயத் தொண்டரான மீட் பாதிரியார் கிறிஸ்தவ பெண்கள் மார்பகங்களை மறைக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். இதனால் கிறிஸ்தவ பெண்கள் தங்கள் மார்பகங்களை துணிந்து மறைத்ததுமல்லாமல், அதற்கு மேல் ஒரு மேலாடையையும் பயன்படுத்தினர். இதனால் மேல் ஜாதியினர் கலவரம் செய்தனர். மே மாதம் 1822ஆம் ஆண்டு கல்குளம் மற்றும் இரணியல் பகுதிகளில் கலவரம் வெடித்தது. இதன் காரணமாக மீட் அய்யர் என்ற அய்ரோப்பிய மறைப்பணியாளர் ஆங்கிலேய தளபதி கார்னல் நேவால் என்பவருக்கு இந்நிகழ்வுகளைப் பற்றி விரிவாக கடிதம் எழுதினார். இதன் பயனாக ஆங்கிலேய தளபதி கார்னல் நேவால் பத்மநாபபுரம் நீதிமன்ற விசாரனைக்கு உத்தரவிடுகிறார். இதன் பயனாக 1823ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட நீதிமன்ற உத்தரவுப் படி சீர்திருத்தக் கிறிஸ்தவர்களுக்கு மட்டும் குப்பாயம் என்ற உடையை அணியலாம் என்று தீர்ப்பளிக்கப்படுகிறது.

இரண்டாம் கட்டப் போராட்டம்

மிக அதிகமாக பாதிக்கப்பட்ட இடங்களான ஆத்தூர், திற்பரப்பு, கண்ணனூர், அருமனை,உடையார்விளை, புலிப்பனம் ஆகிய இடங்களில் மீண்டும் 1827ஆம் ஆண்டு போராட்டம் வெடித்தது. 1823ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணை ஒரு நிரந்தரமான தீர்வை அளிக்கத் தவறியது. இந்த ஆணையின் அடிப்படையில் கிறிஸ்தவப் பெண்கள் உயர்ஜாதிப் பெண்கள் அணிவது போன்ற ஆடைகள் அணியக் கூடாது என்று தடை விதிக்கப்பட்டது. இதனால் கிறிஸ்தவ நாடார் பெண்களிடம் அதிருப்தி ஓங்கியது. கிறித்தவ நாடார் பெண்கள் தங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்ட குப்பாயம் என்ற மேலாடையை விட அய்ரோப்பிய மறைப்பணியாளர்கள் மற்றும் உயர் ஜாதி பெண்கள் அணியும் உடைகளை அணிய ஆரம்பித்தனர். இவர் களைப் பின்பற்றி ஹிந்து நாடார் பெண்களும் மேலாடை அணிய ஆரம்பித்தனர். இவர்களுக்கு முத்துக்குட்டி (வைகுண்டர்) போன்றோர் மிகவும் உறுதுணையாக இருந்தனர். இதற்கு ஆட்சியில் இருந்த நாயர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மூன்றாம் கட்டப் போராட்டம்

1858ஆம் ஆண்டு விக்டோரியா மகராணியின் பிரகடனத்தையடுத்து தோள் சீலைப் போராட்டம் தீவிரமடைந்தது. 

நெய்யாற்றின்கரையில் தொடங்கியப் போராட்டம் பாறசாலை, நெய்யூர் போன்ற ஊர்களுக்கும் பரவியது. பல இடங்களில் தெருக்களிலும், சந்தைகளிலும் பெண்கள் தாக்கப்பட்டனர். பெண்களின் மேலாடைகள் கிழித்து எறியப்பட்டன. ஆண்கள் தங்கள் உயிருக்கு பயந்து பல இடங்களில் ஒளிந்து வாழ்ந்து வந்தனர். பெண்கள் மற்றும் குழந்தைகள் அய்ரோப்பிய மறைபரப்பாளர்களின் பங்களாக்களில் ஒளிந்து தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொண்டனர். டிசம்பர் 30, 1859 ஆம் நாள் கோட்டாறுப் பகுதியில் வைத்து கிறிஸ்தவ நாடார்களுக்கும் உயர் ஜாதி நாயர்களுக்கும் இடையே மிகப் பெரிய சண்டை மூண்டது. ஹிந்து நாடார்களும் கிறிஸ்தவர்களுடன் இதில் கைகோர்த்து கொண்டனர்.

உடை உடுத்த உரிமை

இப்போராட்டத்தின் விளைவாகவும் ஆங்கிலேயர்களின் நெருக்கடியின் காரணமாகவும் திருவிதாங்கூர் அரசரும், திவானும் அனைத்து நாடார் பெண்களும் மத வேறுபாடு இல்லாமல் குப்பாயம் என்கின்ற மேலாடை அணியலாம் என்று உரிமை அளித்தனர். இதற்கான அரசாணை 26, சூலைத் 1859ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. ஆனால் உயர் ஜாதி பெண்கள் அணிவது போன்ற ஆடை அணிய தடை விதிக்கப்பட்டது. இந்த உரிமைகளை மற்ற கீழ் ஜாதியினருக்கு அரசு வழங்கவில்லை. எனினும் கிறிஸ்தவப் பெண்கள் அனைவரும் மேலாடை அணிந்தனர்.

வைகுண்ட சாமிகள்

வைகுண்டசாமிகள் என்பவர் குமரியில், அன்று பெரிதும் ஒடுக்கப்பட்ட நாடார் சமுதாய மக்களின் தன்மானத்திற்காகப் போர்க்கொடி தூக்கிய பெருமகனார் ஆவார்.

கன்னியாகுமரிக்கு அருகில் பூவண்டன்தோப்பு எனும் கிராமத்தில் நாடார் சமூகத்தில் பிறந்தவர் (1809)

முடிசூடும் பெருமாள் என்று பெயரிடப்பட்டார். தாழ்ந்த ஜாதியினருக்கு இத்தகு மேன்மை தாங்கிய பெயரைச் சூட்டக்கூடாது என்பதுதானே மனுதர்மம்? மன்னர்ஆட்சி தடுத்தது. விளைவு புதுப்பெயர் முத்துக் குட்டி.

அன்றைய தினம் திருவிதாங்கூர் மன்னர் ஆட்சியில் மரம் ஏறும் மக்கள் சாணார் என்று அழைக்கப்பட்டனர். உரிமைகள் அறவே மறுக்கப்பட்ட பரிதாபத்துக்குரியவர்களாக அவர்கள் ஒடுக்கப்பட் டனர். நம்பூதிரிப் பார்ப்பான் எதிரே வந்தால் அவர்கள் 36 அடிதூரம் விலகி நிற்க வேண்டும். நாயரிடமிருந்து 12 அடி தூரம் ஒதுங்க வேண்டும். பொதுவீதிகளில், சாலைகளில் நடக்க உரிமையில்லை. பெண்கள் ரவிக்கை (தோள் சேலை) அணிந்திடத் தடை!.

மன்னர் ஆட்சி மனுதர்ம ஆட்சியாகச் சீறியது. இந்த நிலையில் தான் வைகுண்ட சாமிகள் என்று பிற்காலத்தில் அழைக்கப்பட்ட முத்துக்குட்டி சமத்துவ சங்கம் என்ற ஓர் அமைப்பைத் தொடங்கினார்.

அவர் ஆன்மிகக் குடைக்குள்ளேயே சீர்திருத்தங்களைச் செய்ய முன்வந்தார். அதே நேரத்தில் உருவ வழிபாட்டை எதிர்த்தார். காணிக்கை கொடுப்பது கண்டிப்பாகக் கூடாது என்றார். மாந்திரீகர்களிடம் மதி மயங்காதீர் என்று எச்சரித்தார்.

தாழ்த்தப்பட்டவர்களின் வீடுகளில் உணவருந்துமாறு தம் சீடர்களுக்குக் கட்டளையிட்டார்.

காவி நிறத்தில் வெள்ளைத் தீபச் சுடரைத் தாங்கிய கொடியை அறிமுகப்படுத்தினார். ஒரு வகையில் வடலூர் வள்ளலார் இராமலிங்க அடிகளின் சாயலை இவரிடம் காண முடியும்.

மன்னரையும் பார்ப்பனர்களையும் எதிர்க்கத் துணிந்த அவர் 110 நாள்கள் கொடுஞ்சிறையையும் அனுபவிக்க நேர்ந்தது.

இன்றைய நிலை என்ன தெரியுமா? சென்னை மணலியில் அவருக்குக் கோயில் கட்டி கோபுரங்கள் எழுப்பி, தேர்த் திருப் பணியையும் நடத்தியுள்ளனர்.

எந்த உருவ வழிபாடு கூடாது என்றாரோ, அந்த உருவ வழிபாட்டை, அவரையே கடவுளாக்கி நடத்துகின்றனரே.

கடவுள் இல்லை; இல்லவே இல்லை என்று தந்தை பெரியார் சிலைகளின்கீழ் கடவுள் மறுப்பு பொறிப்பதன் முக்கியத்துவம் புரிகிறதா?


                    -------------------------------------
மயிலாடன்  அவர்கள் “விடுதலை”  20-4-2010  இதழில் எழுதிய கட்டுரை

0 comments: