Search This Blog

13.8.15

பார்ப்பன ஆதிக்க ஆட்சி உள்ளவரை ஜாதியும், இழிநிலையும் ஒழியாது!-பெரியார்

பார்ப்பன ஆதிக்க ஆட்சி உள்ளவரை ஜாதியும், இழிநிலையும் ஒழியாது!

இந்தக் கூட்டமானது 82-ஆம் ஆண்டு பிறந்த நாள் எனக்குத் தோன்றி இருக்கின்றமைக்குப் பாராட்டவும், நாட்டின் விடுதலைக்காகச் சிறை சென்றவர்களைப் பாராட்டவும் கூட்டப்பட்டதாகும். 

எந்தப் பேரால் இருந்தாலும் நம் நாட்டு மக்களின் மாபெரும் இழிவை நீக்கிக் கொள்ள வேண்டும் என்பதை விளக்கவே இக்கூட்டம் கூட்டப்பட்டு உள்ளது ஆகும். எனக்கு 82-வயது ஆகின்றது. இப்படி நீண்ட நாள் வாழ்வது உடல் அமைப்பைப் பொறுத்ததே ஒழிய பாராட்டுதலால் அல்ல.

தாய்மார்கள் சிறைக்குச் சென்று வந்தார்கள்; மீண்டும் போராட்டத்தில் கலந்து கொள்ளவே சென்றார்கள். 10000-கணக்கான மக்கள் இந்திய நாட்டின் யூனியன் படத்தைக் கொளுத்தினார்கள். 3000-பேர் மட்டும் கைது செய்யப்பட்டு அதில் 600, 700-பேர்கள் மீது மட்டும் (ஆட்சியாளர்) வழக்குத் தொடுத்துச் சிறைக்கு அனுப்பினார்கள். இந்த நங்கவரம் ஊர் பெண்மணிகள் 5 (அய்ந்து) பேர் சிறை சென்றதும் பாராட்டுதற்கு உரியதாகும். பெண்கள் சமுதாயத்திற்கு வழி காட்டியாகவே சிறை சென்றார்கள். அவர்கள் அடுத்தும் சிறைக்குப் போகத் தயாராக இருக்கின்றார்கள்.

இந்தக் கூட்டத்தில் பல விஷயங்கள் பற்றிப் பேச வேண்டி இருக்கின்றது. இந்த நங்கவரம் கிராமத்திற்கு 2- (இரண்டு) தடவை வந்துள்ளேன். பேசி விட்டு நேரே போய்விடுவேன். இந்தத் தடவை ஊர்வலத்தில் என்னைப் பல மைல் இழுக்கடித்தபடியால் ஊர்களைச் சுற்றிப் பார்க்க வாய்ப்புக் கிடைத்தது. கூட்டத்துக்கு நாள் கேட்டவர்கள் ஊர்வலம் உண்டு என்று என்னிடம் கூறவில்லை. வந்தபிறகு தான் ஊர்வலம் உண்டு என்று உணர்ந்தேன். எனக்கே சங்கடமாகத்தான் இருந்தது. ஆனால் ஊரைச் சுற்றிப் பார்க்க வாய்ப்புக் கிடைத்ததே என்ற அளவில் மட்டும் திருப்தி அடைகின்றேன்.

தோழர்களே! இயக்கப் பிரச்சாரத்துக்கு அடிப்படை உதவியாக இருப்பது நம் கழகப் புத்தகங்களைப் பரப்புவதுதான். பிரச்சாரத்துக்கு நூல்கள் முக்கிய காரணம் ஆகும். எனக்குப் பின்னாலே இப்படிப்பட்ட காரியம் நடக்குமா என்பது சந்தேகம். ஆகவே வாய்ப்பு உள்ள போதே எல்லாவற்றையும் வாங்கிப் படித்துப் பார்ப்பதுடன் பாதுகாக்கவும் வேண்டும்.

இந்தக் கிராமத்தில் பெரிய பண்ணைத் தலைவர்களாக இருப்பவர்கள் இந்த  ஊர் விவசாயிகளின் நலத்துக்கு மாறாக நடக்கின்றார்கள். சரிவரக் கவனிப்பது இல்லை என்று முறையீடு செய்யப்பட்டுள்ளது. இது மிகவும் வருந்தத்தக்கது. சாதாரணமாகக் கிராமத்தில் இருக்கின்ற நிலச்சுவான்தார்கள் கிராம மக்களிடம் அன்பாக இருப்பது கடமையாகும்.

நண்பர்கள் முறையீட்டில் சடடப் பிரச்சினை உரிமைப் பிரச்சினை எப்படி இருக்குமோ தெரியாது. ஆனால் மனிதக் பிரச்சினைப்படி செல்வவான்கள் பொறுப்பும், கவலையும் உள்ளவர்கள். அவர்கள் சாதாரண விஷயங்களில் விட்டுக் கொடுத்து மக்களுக்கு உதவுவதுதான் அறிவுடைமையாகும்.

இங்கு இரண்டு காரியங்கள் - பணத்தில் பெரியவர்கள் என்பது ஒன்று; ஜாதியிலே பெரியவர்கள் என்பது ஒன்று. இதன் காரணமாகக் கொடுமைப்படுத்தினால் வெறுப்பும் ஆத்திரமும் தான் வளரும் என்பது இயற்கை. 

இது என்ன ஆகிவிடும் என்று ஆத்திரப்படாமல் அறிவுடன் சிந்திக்க வேண்டும்.

இங்கு, பண்ணையில் மட்டும் நீதி இல்லை என்பது மட்டுமல்ல, அதிகாரிகள் இடத்திலும் நீதி இல்லை என்று எடுத்துச் சொன்னார்கள். அதிகாரிகளும் பார்ப்பனர்கள் என்றார்கள். பார்ப்பனர் அல்லாதார் (திராவிடர்கள்) இருந்தாலும் அப்படித்தான் நடப்பார்கள். அவர்களே (பண்ணையார்கள்) பணக்காரர்கள் - செல்வாக்கு உடையவர்கள் - மேல்சாதிக்காரர்கள். இவர்களை ஏன் விரோதித்துக் கொள்ள வேண்டும் என்று எண்ணி நடப்பார்கள்.

இந்தத் தமிழ் நாட்டைப் பார்ப்பனர் அல்லாத மந்திரிகள் (அமைச்சர்கள்) ஆண்டபோதிலும் இவர்களாலும் ஒன்றும் செய்ய முடியாது. இவர்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டிய நிலையில்தான் இருக்கிறார்கள். இந்தப் பிரச்சினை மந்திரிகளுக்கு எட்டினாலும் துணிந்து செய்வார்களா என்பது சந்தேகம்.

குறிப்பிட்ட சம்பந்தப்பட்ட மந்திரிகள் நேர்மையாக நடந்தால், இடம் யாருடையதாக இருந்தாலும் அதனை அக்குவயர் செய்து (அரசு கையப்படுத்த) பொது மக்களுக்குக் கொடுக்க வேண்டியது தான் ஆட்சியின் முறைமை. 200-ஏக்கராவிற்கு மேல் பயிர் இடுபவர்களுக்குத் தானியம் அடிக்கக் களம் இல்லாமல் அவதிப்படுகின்றனர். நேர்மையான அதிகாரிகள், அரசாங்கம் இப்படிச் செய்வதுதான் முறைமையாகும். இந்தப் பிரச்சினைக்குப் பரிகாரம் பூமியை (அரசு தன்வசப்படுத்துதல்) அக்குவயர் பண்ணிப் பொதுமக்கள் காரியத்துக்காக ஒதுக்க வேண்டும்.

இன்று பணக்காரன் பேரிலும் வெறுப்பு உள்ளது. பார்ப்பனர் பேரிலும் வெறுப்பு உள்ளது. இந்தப் பிரச்சினை நாளா வட்டத்தில் பலாத்காரத்தைத் தோற்றுவிக்கும்படியான நிலையைத்தானே தானாகக் கொண்டு வந்துவிடும்? புத்திசாலித்தனமாக, இந்நிலை தவிர்க்கப்பட வேண்டியதுதான். பொது மக்களுக்கு, விவசாயிகளுக்குக் களம் இல்லையென்பது அநியாயமானது. பணக்காரர்கள் தங்கள் நிலத்தைத் களமாக வைத்துக் கொள்ளலாம்; ஆனால் ஏழைகள் எங்கே போவார்கள்?

தீர்மானத்தில் பரம்பரை பாத்தியதைகளை விவசாயிகள் விட்டுவிடவும், முதலாளி ஆதிக்கம் ஏற்படும்படியான நிலை ஏற்பட்டு இருப்பதாகவும் எழுதியுள்ளார்கள். என்னிடம் கூறினால் நான் அரசாங்கத்திடம் எடுத்துச் சொல்வேன் என்று கூறியுள்ளார்கள். நான் எதையும் நேரடியாகச் சொல்லுவதில்லை. பொதுக்கூட்டத்தில் பேசுவேன் - அது அரசாங்கத்துக்கும் போகும்.

தோழர்களே! அரசாங்கம் விவசாயிகளிடம் கந்தாயம் (நிலவரி) வாங்குபவர்கள். எனவே மக்களுக்குச் சவுகரியம் செய்து கொடுப்பது கடமையாகும். இப்போதைய கலெக்டர்கள் (மாவட்ட ஆட்சியாளர்கள்) இதில் கவனம் செலுத்துபவர்களாகப் பெரும்பாலும் இல்லை. வெள்ளைக்காரன் ஆட்சிக் காலத்தில் அப்படி இருந்தது. இன்று அப்படி இல்லை. நல்ல பிள்ளையாக நடந்து பதவி உயர்வும், பலனும் அடைவதில் கருத்துடையவராக இருக்கின்றனர். எனவே அரசாங்கம் இதில் கவலை எடுத்துப் பரிகாரம் தேடினால்தான் வகையுண்டு.

தோழர்களே! இனிக் கழகக் கொள்கைகளைப் பற்றிப் பேசுகின்றேன். ஜாதி இழிவுக்குப் பரிகாரம் ஏற்பட தமிழ் நாட்டு ஆட்சி தமிழர் ஆகிய நம்மிடம் வரவேண்டும். ஜாதிக்குப் பரிகாரம் ஏற்பட இன்றைய ஆட்சியாளர்கள் கையில் இருந்து மாறி ஆட்சி துலுக்கன் (இசுலாமியர்) கைக்கோ, வெள்ளைக்காரன் கைக்கோ போக வேண்டும். நாம் இந்த இழிநிலையில் இருக்க கடவுளும், மதமும், சாஸ்திரமும் ஆகும். வேறு ஆட்சி வந்தாலொழிய இவைகள் ஒழியாது. ஜாதி ஒழிய முடியாது. நமது மதம் - இந்து மதம் - நமது கடவுள் மதம் சாஸ்திரங்களைப் பாதுகாப்பது நமது அரசாங்கம். அரசாங்கம் இப்படி இருக்கையில் சாதியை ஒழிக்க முடியாது. ஆட்சி பார்ப்பான் கையில் உள்ளது. இந்து மதம் பாதுகாக்கப்பட வேண்டும் - மேல்ஜாதிக்காரர்கள் மேல் ஜாதியாகவும், கீழ்ச்ஜா திக்காரர் கீழ்ச்ஜாதியாகவும் எப்போதும் இருக்க வேண்டும் என்பதுதான் பார்ப்பனர்கள் குறிக்கோள். இந்த நாட்டுக்கு முகமதியரோ, வெள்ளையனோ ஆட்சியைக் கைப்பற்றாதவரை விமோசனமே இல்லை.

வட நாட்டில் முகம்மதியர்கள் செல்வாக்குடன் ஆண்ட காலத்தில் இந்த நாட்டு அரசர்கள் சாதியையும், மதத்தையும், பார்ப்பானையும் காப்பாற்றுவதுதான் தருமம் என்று எண்ணி ஆண்டும் வந்திருக்கின்றனர். கவலை எடுத்துச் ஜாதி முறைகளை ஒழிக்கப் பாடுபடவில்லை என்று எடுத்துரைத்தார். மேலும் பேசுகையில் ஜாதி வித்தியாசம் முஸ்லிம்கள் என்பவர்கள் இடையே இஸ்லாமை பற்றித் தெளிவுபடுத்தியும், நமது கடவுள், மதம், சாஸ்திரம், ஜாதி இந்த மத்திய ஆட்சி ஆகியவை ஒழிக்கப்பட வேண்டியது அவசியம்.

-------------------------------- 26.10.1960 அன்று நங்கவரத்தில் பெரியார் ஈ.வெ.ரா. சொற்பொழிவு. ”விடுதலை”, 10.11.1960

0 comments: