சங்கராபுரம் அருகில் ஜாதிய மோதல் கண்டிக்கத்தக்கது
கோயில் திருவிழா ஜாதி மோதலுக்குத்தானா?
ஜாதிவாத அரசியல் தமிழ்நாட்டில் எடுபடாது!
தமிழகக் காவல்துறையின் நுண்ணறிவுப் பிரிவு என்ன செய்கிறது?
வருமுன் காக்கத் தவறுவது - ஏன்?
தமிழர் தலைவர் ஆசிரியர் முக்கிய அறிக்கை
விழுப்புரம் மாவட்ட சங்கராபுரம் அருகில் நடை பெற்றுள்ள ஜாதிக் கலவரத்தைக் கண்டித்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
தமிழ்நாட்டில் ஜாதிக் கலவரங்கள் அவ்வப்போது நிகழ்ந்து கொண்டே உள்ளன.
கிராமப்புறப் பகுதிகளில் தேர் திருவிழா, கோயில் திருவிழா என்பவை - வடலூர் வள்ளலார் அவர்கள் மனங் குமுறி சொன்னதைப் போல் - எல்லாம் பெரியவர்களின் பொம்மை விளையாட்டு, தான் என்றாலும், இதில் அடிதடி, ஜாதி மோதல்கள், குறிப்பாக ஒடுக்கப்பட்டோருக் கிடையேதான் - இந்த படி நிலை பேதம் வளர்க்கும் ஜாதிகளிடையே இப்படி முட்டி மோதி ரத்தம் சிந்தி, வீடுகள் எரிக்கப்பட்டு, பல உயிர்கள் பலியாக்கப்பட்டு, ஏழை - எளிய மக்கள் குடும்பம் குடும்பமாய் பாதிக்கப்படும் காட்சி சர்வ சாதாரணம்!
கோயில் திருவிழா என்ற பெயரில்...
விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் பகுதியில் உள்ள சேஷ சமுத்திரம் என்ற சிற்றூரில் இரு பிரிவினரிடையே தேர் இழுப்புத் திருவிழாவையொட்டி பெருங் கலவரம். அப்பகுதியில் 79 குடும்பங்கள் - 250 பேர் வசித்து வருகின்றனர்.
அப்பகுதியில் தாழ்த்தப்பட்டோர் பகுதியில் உள்ள மாரியம்மன் கோயில் தேரோட்டம் நடத்துவது தொடர்பாக இரு பிரிவினரிடையே (ஜாதியினரிடையே) பிரச்சினை இருந்து வருகிறது.
கடந்த 4 ஆண்டுகளாக இதனால் இத்திருவிழா நடை பெறவில்லை. காரணம் விழா நடத்த காவல்துறை அனுமதிக்கவே இல்லை. தேர் திருவிழா நடத்த வட்டாட்சியர் (தாசில்தார்) இரு தரப்பினரிடமும் நடத்திய பேச்சு வார்த்தை காரணமாக தேர்த் திருவிழா நடத்த முடிவு செய்யப்பட்டது. பொது வீதிகளில் தேரோட்டம் கூடாதா?
தேரைப் பொதுப் பாதை வழியாக இழுத்துச் செல்வது என்றும் முடிவு செய்யப்பட்டது; சுடுகாட்டுக்குத் தனி பாதைபோல தேர் ஓட்டத்திற்கும் தனித் தனி வீதிகளா? இப்படி ஒரு முடிவு எடுக்கப்பட நேர்ந்ததுகூட வெட்கப் படத்தக்கதே!
எதிர் தரப்பினர் திரண்டு வந்து தேர்மீது பெட்ரோல் குண்டுகளை வீசினர். இதில் தேர் எரிந்தது; தீயை அணைக்க முயன்ற போலீசார் மீதும் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டு தாக்குதல் - தெரு விளக்குகள் அடித்து நொறுக்கப்பட் டுள்ளன. 4 வீடுகள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன!
காவல்துறையின் நுண்ணறிவுத் துறையின் செயல்பாடு இதுதானா?
தமிழக காவல்துறையின் நுண்ணறிவுப் பிரிவு (சி.அய்.டி.) முன்கூட்டியே, சட்டம் ஒழுங்கு துறை, காவல்துறை அதிகாரிகளிடம் கூறி எச்சரிக்கை செய்திருக்க வேண்டாமா? காவல்துறையின் இந்த இரு பிரிவினர்களுக்கிடையே நுண்ணறிவுப் பிரிவுக்கு நல்ல ஒருங்கிணைப்பு பல இடங்களில் இருப்பதில்லை. அதனால் சீர்கேடு எளிதில் வந்து விடுகிறது!
இப்படி கோயில் திருவிழாக்கள் - குறிப்பாக கிராமங்களில் கிராம மக்களை ஒன்றுபடுத்தப் பயன்பட வில்லை; மாறாக அவர்கள் ஜாதி அடிப்படையில் அடித்து நொறுக்கி நாசப்படுத்தி, வீட்டை எரிக்கும் கொடுமைகள் தான் பரவலாக நடந்து வருகின்றன. கண்டதேவி தேரோட் டத்தில் இதே போல் நடந்தது. தருமபுரி, மரக்காணம், சேஷ சமுத்திரம் என்று தொற்றுநோய்ப் போலப் பரவ அனுமதிக்கலாமா!?
இந்த லட்சணத்தில் பிஜேபி ஆர்.எஸ்.எஸ். இந்து முன்னணி போன்ற மதவெறி அமைப்புகள், அதனைச் சார்ந்த குருமூர்த்திகள் ஜாதியை சிலாகித்துப் பேசும் அவலமும் தொடர்கிறது.
தமிழ்நாடு அரசு செய்ய வேண்டியது என்ன?
காவல்துறையால் சாதிக்க முடியாதது ஜாதி கட்டுக் கோப்புதான் சாதிக்கிறது என்று பைத்தியக்காரனுக்கு கள் ஊற்றியதுபோல சில பார்ப்பனர்கள் உளறுகின்றனர். ஜாதிவாத அரசியல் தமிழ்நாட்டில் எடுபடாது என்று தெரிந்திருந்தும் ஏனிந்த நிலை? தமிழ்நாட்டில் தமிழ்நாடு அரசும் இதில் அரசியல் லாப - நட்டம் பார்க்காமல் உரிய நடவடிக்கைகளைக் கடுமையாக எடுக்க வேண்டும்.
எதற்கு இந்த திருவிழாக்கள் ஊர் அமைதியைக் கெடுப்பதற்கா?
காவல்துறை அதிகாரிகள்மீதே பெட்ரோல் குண்டு வீசுவது சர்வ சாதாரணமாக ஆகி விட்டது. தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு இப்படி அவலத்திற்கு ஆளாகலாமா?
திட்டமிட்ட கூலிப்படை கொலைகள், தாலி முதல் தங்க சங்கிலி பறிப்பு என்று அன்றாட நிகழ்வுகள் இன்று வானிலை நிலவரம்போல இன்றைய கொலை, தாலி சங்கிலி பறிப்பு என்ற ஒரு அட்டவணையே போடுகின்றன - சில ஏடுகள்!
மது போதையைவிட மோசமானது பக்தி போதை
ஜாதி, மதம் மனிதர்களை வாழ வைக்கவில்லை; மாறாக இரத்தம் சிந்தவே வைத்து வருகிறது அனு தினமும். பக்திப் போதை - மது போதையைவிட மோசமானது என்று புரிகிறதல்லவா?
விரைவில் அமைதி திரும்பட்டும் அனைவரும் ஒன்றுபட்டு வாழட்டும்.
பாதிக்கப்பட்டோருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்!
-------------------கி.வீரமணி திராவிடர் கழகம், தலைவர் சென்னை - 17.8.2015
0 comments:
Post a Comment