Search This Blog

22.1.10

சோதிடம் பற்றி கல்லூரி மாணவிகள்முனைவர் இராமாத்தாள் அவர்களின் தலைமையிலான மகளிர் ஆணையம் மிகவும் தேவையான அவசியமான ஆய்வு ஒன்றினை நடத்தியிருக்கிறது.

தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் உள்ள கல்லூரிகளில் கடந்த இரு மாதங்களாக அந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. எதன் அடிப்படையில் வாழ்க்கைத் துணையைப் பெண்கள் தேர்வு செய்ய விரும்புகின்றனர் என்னும் ஆய்வுதான் அது.

97 விழுக்காடு பெண்கள் தங்களுக்கு வாய்க்கவிருக்கும் துணைவரின் கல்வி, வேலை வாய்ப்பு, குடும்பப் பின்னணி இவற்றோடு ஜாதகப் பொருத்தம் தேவையில்லையென்றும், அதே நேரத்தில் மருத்துவப் பரிசோதனை இரு தரப்பிலும் தேவையென்றும் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளனர்.

நம் நாட்டுக் கல்வி என்பது பெரும்பாலும் வயிற்றுப் பிழைப்புக்கான லைசென்ஸ்தான்; அது பகுத்தறிவையோ, அறிவியல் மனப்பான்மையையோ வளர்க்கக் கூடியது அல்லவென்றாலும், அதனையும் மீறிக் கல்லூரி மாணவிகள் பெரும்பாலும் ஜாதகப் பொருத்தம் தேவையில்லை என்று கருத்துத் தெரிவித்திருப்பது நம்பிக்கையளிப்பதாக உள்ளது. 2.4 விழுக்காடு பெண்களே ஜாதகப் பொருத்தம் தேவையென்று கூறியுள்ளனராம்.

ஜாதகப் பொருத்தம் பார்த்து, நல்ல நாள், நேரம் பார்த்துத் திருமணம் செய்து கொள்வோர்தான் சுகமாக வாழ்கிறார்கள்; ஆயுள் கெட்டியாக வாழுகிறார்கள் என்பதற்கு எந்தவிதமான ஆதாரமும் கிடையாது.

விவாகரத்துக் கோரி குடும்ப நீதிமன்றங்களில் மனு போடுவார்கள் எல்லாம் ஜாதகப் பொருத்தம் பார்க்காதவர்கள்தான் என்று சொல்ல முடியுமா?

ஜாதகப் பொருத்தம் பார்க்காமல் திருமணம் செய்துகொள்வோர் வாழ்க்கை தோல்வி கண்டுவிட்டது; அற்ப ஆயுளில் மாண்டு விட்டார்கள் என்றுதான் சொல்ல முடியுமா?

ஜாதகம் என்பதே பிறந்த நேரத்தை வைத்துக் கணிக்கப்படுவதுதானே!

எது பிறந்த நேரம்? குழந்தை தலையை நீட்டிய நேரமா? அல்லது பூமியில் விழுந்த நேரமா? நர்சு தமது கடிகாரத்தைப் பார்த்த நேரமா? அல்லது வெளியில் வந்து உறவினர்களிடம் சொல்லும் நேரமா? எந்த நேரம் என்று தந்தை பெரியார் கேட்டாரே, இதுவரை பதில் உண்டா?

ஒரு குழந்தை பிறந்த அதே நேரத்தில் இன்னொரு நாய்க்குட்டி பிறந்திருந்தால் இரண்டும் ஒரே குணத்தோடு, ஆயுளோடு இருக்குமா?

நாய்க்குட்டி பிறந்த நேரத்தையும், மணமகன் பிறந்த நேரத்தையும் கொடுத்து சோதிடம் பார்க்கச் சொன்னால், எந்த சோதிடனாவது அது நாய்க்குட்டிக்குரியது என்று சோதிடம் சொல்லுவானா?

60 ஆண்டுகளுக்குமுன் நம் மக்களின் சராசரி வயது 30 தானே! இப்பொழுது ஆண்களின் சராசரி வயது 63.3 ஆகவும், பெண்களின் சராசரி வயது 66.3 ஆகவும் உயர்ந்துள்ளதே! இதற்குக் காரணம் என்ன?

மருத்துவ வளர்ச்சி ரீதியாகப் பதில் சொல்ல முடியுமே தவிர, சோதிட ரீதியாகப் பதில் சொல்ல முடியுமா?

இன்னும் நவக்கிரகங்களை (அதாவது ஒன்பது கிரகங்களை)ப்பற்றி தானே பேசிக் கொண்டு இருக்கிறார்கள்?

1781 இல் யுரேனசும், 1846 இல் நெப்டியூனும் 1930 இல் புளூட்டோவும் கண்டுபிடிக்கப்பட்டனவே இவற்றிற்குச் சோதிடப் பலன் உண்டா?

இதில் வேடிக்கை என்னவென்றால் சூரியன் என்பது நட்சத்திரம். ஆனால், சோதிடத்தில் அதனைக் கிரகத்தின் பட்டியலில்தானே சேர்த்துள்ளனர்? நவக்கிரகத்தில் பூமிக்கு இடம் இல்லை; ஆனால், பூமியின் துணைக் கிரகமான சந்திரனுக்கு இடம் உண்டு.

படித்தவர்கள் இதுபற்றியெல்லாம் சிந்திக்கவேண்டும்.

கல்லூரி மாணவிகள் பெரும்பாலோர் சோதிடத்தைப் புறந்தள்ளிக் கருத்துக் கூறியது வரவேற்கத்தக்கது. தேவையான ஓர் ஆய்வை நடத்திய மகளிர் ஆணையத்துக்கும் நமது பாராட்டுகள்.

--------------------- “விடுதலை” தலையங்கம் 22-1-2010

0 comments: