இந்நாள்
இதே நாளில்தான் 1954இல் ஈரோட்டில் ஆச்சாரியார் கல்வித் திட்ட எதிர்ப்பு மாநாடு நடைபெற்றது. மிகப் பெரிய ஊர்வலமும் நடைபெற்றது. மாநாட்டுத் தலைவர் எஸ்.ஜி. மணவாளராமானுஜம்-திறப்பாளர் தினத்தந்தி நிறுவனர் சி.பா. ஆதித்தனார் - மாநாட்டை தந்தை பெரியார் கூட்டினார் - திராவிடர் கழகம் நடத்தியது.
மாநாட்டைத் திறந்து வைத்த சி.பா. ஆதித்தனார் புள்ளி விவரங்களுடன் அரிய கருத்துகளை எடுத்து வைத்தார்.
சில தகவல்களையும் எடுத்துக் காட்டினார்.
தமிழ்நாட்டில் ஆண் குழந்தைகள் பாதிப்பேர்களுக்கு மேல் பள்ளிக்-கூடம் போகாமல் இருக்கிறார்கள் என்பதும் பெண் குழந்தைகளில் 100-க்கு 70 பேர் பள்ளிக்கூடம் போகாமல் இருக்கிறார்கள்.
***
சென்னை சட்டசபையில் 29.7.53 இல் இந்தக் கல்வித் திட்டத்தை நிறுத்தி வைக்க வேண்டுமென்று தீர்மானம் வந்தபோது தீர்மானத்துக்கு ஆதரவாக 139 பேர்களும், திரு. ராஜகோபாலச்சாரியாருக்கு ஆதரவாக 137 பேர்களும் வோட்டு செய்தார்கள். ஆகவே ராஜகோபாலாச்சாரியாரின் உயிர் நாடி போன்ற கல்வி திட்டம் நிறுத்தி வைக்கப்பட வேண்டுமென்று சட்டசபை கட்டளையிட்டது. வேறு ஒரு முதலமைச்சராக இருந்தால் உடனே பதவியை ராஜினாமா செய்திருப்பார்கள். அதுதான் நேர்மை; அதுதான் ஜனநாயகம், ஆனால் கவர்னரின் தயவினால் நியமனம் என்ற புழக்கடை வழியாக சட்டசபைக்கு வந்த திரு. ராஜகோபாலாச்சாரியாருக்கு ஜனநாயகம் ஏது? வெட்கம் ஏது? சுரணை ஏது? என்று மிக அருமையாக ஆச்சாரியாரை அடையாளம் காட்டினார் ஆதித்தனார் அம்மாநாட்டில். காங்கேயத்தில் இடைத் தேர்தல் வந்தது. இந்தக் குலக் கல்வித் திட்டம் மக்கள் முன் வைக்கப்பட்டது. மக்கள் காங்கிரசைத் தோற்கடித்தார்கள். அப்பொழுதும்கூட ஆச்சாரியார் பதவி விலகவில்லை.
மூன்று மாதங்களுக்குள் குலக் கல்வித் திட்டத்தை லாபஸ் வாங்காவிட்டால் தீவிர நடவடிக்கை என்று ஈரோடு மாநாடு அறைகூவல் விடுத்தது.
தாக்குப்பிடிக்க முடியவில்லை ஆச்சாரியாரால்; பதவியை விட்டே ஓடினார். இல்லை விரட்டப்பட்டார்!
அரை நேரம் பள்ளியில் படிக்க வேண்டும்; அரை நேரம் அப்பன் தொழிலைப் பிள்ளைகள் செய்ய வேண்டும் என்ற அந்தக் குலக் கல்வித் திட்டம் தொடர்ந்திருந்தால், பார்ப்பனர் அல்லாத பிள்ளைகள் கல்வியில் வளர்ச்சி பெற்று இருப்பார்களா? இன்றைக்குப் பதவியில் அட்டாணிக் கால் போட்டு அமர்ந்திருக்கும் தமிழர்கள் கொஞ்சம் நன்றி உணர்ச்சியுடன் சிந்திப்பார்களாக!
--------------- மயிலாடன் அவர்கள் 24-1-2010 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை
1 comments:
எல்ல பதிவுக்கும் சரியாய் பத்து ஓட்டு விழுதே அந்த ரகசியம் என்ன ?
Post a Comment