Search This Blog

1.1.10

2010ஆம் ஆண்டை செழுமைப்படுத்துவோம்!ஒவ்வொரு நாளும் புது நாள் தான்- புதுப்பிறப்புதான். இதில் ஆண்டுப் பிறப்பு என்பதை ஒரு வரவு -செலவு கணக்காகக் கொண்டு சிந்திப்பதற்காகப் பயன்படுத்திக் கொள்கிறோம். அவ்வளவுதான்.

அந்த வகையில் 2009ஆம் ஆண்டில் உலகளவிலும், இந்திய அளவிலும், தமிழ்நாடு அளவிலும் நடைபெற்ற நிகழ்வுகளை அசைபோட்டுப் பார்ப்பதன் மூலம் புத்தாண்டின் போக்கு எப்படி இருக்க வேண்டும் என்று திட்டமிடலாம்.

உலகெங்கும் வன்முறைப் போக்கு தலைவிரித்தாடியுள்ளது. அதுவும் மதங்களின் பெயரால் அது நடந்திருப்பது - மதத்தைப் பற்றிய கணிப்பில், நம்பிக்கையில் மறுபரிசீலனையை ஏற்படுத்துவதற்குப் பயன்பட வேண்டும். அடிப்படைவாதம் என்கிற போக்கு அபாயகரமானது என்பதை மக்கள் நேரிடையாகவே அனுபவித்திருக்கிறார்கள். பாகிஸ்தானிலும் ஆப்கானிஸ்தானத்திலும், பாலஸ்தீனத்தின்மீதும் என்ன நடந்தன என்பதை நாட்டு மக்கள் அறிவார்கள்.

இலங்கையில் சிங்களப் பேரினவாதம் தலைக்கொழுப்பேறி, அந்த நாட்டின் மண்ணுக்குரிய பல்லாயிரக்கணக்கான மக்களைக் கொன்று குவித்ததோடு அல்லாமல், பல லட்சக்கணக்கான ஈழத் தமிழர்களை உயிரை மட்டும் அனுமதித்து சித்திரவதை செய்து கொண்டு இருக்கிறது. மும்பையில் தாஜ் ஓட்டலில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதம் சகித்துக் கொள்ளப்பட முடியாத ஒன்றாகும். பொருளாதாரத்தில் வளர வேண்டிய இந்த பாகிஸ்தான் நாடு ஏன் இந்த வம்பு தும்புகளில் தலையை நீட்டுகிறது என்று தெரியவில்லை. பாகிஸ்தானுக்குள்ளும் மதத்தின் பெயரைச் சொல்லி அன்றாடக் கலவரங்கள்!

இந்தியாவிலோ மாலேகாவ் குண்டு வெடிப்பு பல அதிர்ச்சித் தகவல்களை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துவிட்டது. இந்த குண்டு வெடிப்பின் பின்னணியில் இருந்தவர்கள் இராணுவத்தில் பணியாற்றும் அதிகாரிகள்; இந்துத்துவாவின் கொடிய கரங்கள் இந்திய இராணுவம் வரை உறை போட்டு ஊடுருவியிருக்கிறது என்பது எவ்வளவுப் பெரிய ஆபத்தான போக்கு! இந்து ராஷ்டிரம் அமைக்க திட்டம்; இஸ்ரேலின் துணையோடு அதை முடிப்பது வரை திட்டம் தீட்டியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த ஆபத்தான பேர் வழிகளை மிக சாமர்த்தியமான முறையில் கண்டுபிடித்து நாட்டு மக்களுக்கு அடையாளம் காட்டிய உளவுத்துறை அதிகாரி ஹேமந்த்கார்க்கரே படுகொலை செய்யப்பட்டது எப்படி? அதில் சதி இருக்கிறது என்கிற சந்தேகம் சாதாரண மனிதர்களுக்கு மட்டுமல்ல; மத்திய அமைச்சர் அப்துல்ரகுமான் அந்துலேக்கே ஏற்பட்டது என்றால் சாதாரணமா? இந்துத்துவா சதிப் பின்னல் இந்தியாவில் பலமாக இருக்கிறது என்று எண்ணுவதற்குச் சரியான காரணங்கள் இருக்கின்றன.

இவ்வளவையும் தாண்டி நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் மதவாத சக்திகள் மண்ணைக் கவ்வின என்பது மகிழ்ச்சியான செய்தியாகும்.

தமிழ்நாட்டு மக்களின் 150 ஆண்டு கனவான சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் மதவாத சக்திகளால் ராமன் என்ற கற்பனை இதிகாசப் பாத்திரத்தைக் காட்டி முடக்கப்பட்டு இருப்பது வெட்கித் தலைகுனியத் தக்கதாகும். 2009 இல் ஏற்பட்ட கொடுமைக்கு 2010 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டு மக்கள் பொங்கி எழுந்து பழி தீர்க்க வேண்டும் என்ற சூளுரையை இந்நாளில் எடுத்துக் கொள்வோம்!

தந்தை பெரியார் அவர்கள் காண விரும்பிய அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் என்ற கனவு - 2010 இல் நனவாகும் என்பதில் அய்யமில்லை. 2010 இல் கோவையில் உலகத் தமிழ் செம்மொழி மாநாடு நடைபெறுவது தமிழர் பண்பாட்டு மறுமலர்ச்சித் திசையில் ஒரு மைல் கல்லாக இருக்கும்.

2009 இல் ஒரு முக்கிய தீர்ப்பு - பொது இடங்களில் அரசுக்குச் சொந்தமான இடங்களில் கட்டப்படும் எந்த மதக் கோயில்களையும், சின்னங்களையும் இடித்துத் தள்ள வேண்டும் என்கிற உச்சநீதிமன்ற தீர்ப்பாகும்.

கழகத் தோழர்கள் இத்தகு கோயில்களை அடையாளம் கண்டு மாவட்ட ஆட்சியர், நகராட்சி ஆணையர்களின் கவனத்துக்குக் கொண்டு செல்ல வேண்டும். அதன் மூலம் மக்கள் மத்தியில் மத மாச்சரியங்களை உண்டு பண்ணும் அடையாளங்கள் இல்லாமல் போகும்.

2009_இல் சாமியார், கோயில் அர்ச்சகர்களின் காலித்தனங்கள் பக்தியுள்ள மக்களையும் விழிப்புறச் செய்துள்ளன.

காவல்துறையில் ஒரு தனிப் பிரிவையே ஏற்படுத்தி சாமியார்களின் நடவடிக்கைகளைக் கண்காணித்து உடனுக்குடன் உரிய தண்டனைகளைப் பெற்றுத் தர வேண்டும்.

கொலை வழக்கில் சிக்கியிருக்கும் காஞ்சி சங்கராச்சாரியார் வழக்கில் சாட்சியங்கள் பிறழ் சாட்சியங்களாக ஆக்கப்பட்டு வருகின்றன. இதில் காவல்துறை சரியான கண்காணிப்புத் தேவை; கவனத்துடன் செயலாற்றி குற்றவாளிகளைத் தப்பிக்க விட்டு விடக் கூடாது.

யாராகவிருந்தாலும், சட்டத்தின் நடவடிக்கைகளிலிருந்து தப்பிக்க முடியாது என்ற எண்ணத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும். 2009 ஆம் ஆண்டை அரிமா நோக்காகக் கண்டு 2010ஆம் ஆண்டைச் செழுமைப்படுத்துவோமாக!


--------------------"விடுதலை” தலையங்கம் 1-1-2010

1 comments:

அப்பாதுரை said...

ஆதரிக்கப்பட வேண்டிய கருத்து.