Search This Blog

7.1.10

ஆவி எத்தனை ஆவியடா!




இந்து மதத் தத்துவங்கள் என்பவையெல்லாம் படிப்பவனைக் குழப்பும். எதுவும் தெளிவாக இருக்காது. இந்து மதம் மிகவும் ஆழமாக வலியுறுத்தும் ஆத்மா என்பதற்கான விளக்கங்களைப் பார்த்தால் கற்றாழைச் சாற்றை விளக்கெண்ணெயோடு சேர்த்து அதில் கிரீஸ் போட்டுக் கலக்கினாற் போன்று இருக்கும்.

கேண உபநிசத் கூறுவது போல் இதற்குப் பிறப்புமில்லை, இறப்புமில்லை. எங்கிருந்தும் வரவில்லை, வேறு ஒன்றாக மாறவில்லை. ஆதிக்கும் முதலான ஆத்மா உடல் அழியும்போது கூடவே அழிவதில்லை என்கிறது. செத்துப் போனவனின் ஆத்மா வேறொன்றின் உடலுக்குள் புகுந்து கொள்கிறது என்கிறார்களே, அப்படியானால் அந்தப் புது ஆளைப் பொறுத்த மட்டில் ஆத்மா எங்கிருந்தோ வந்ததுதானே! இந்த உண்மைக்கு மாறாக, கேணத்தனமாக கேண உபநிசத் கூறுகிறதே! ஆத்மாவிலிருந்து விண்வெளி தோன்றியது. விண்வெளியிலிருந்து காற்றும், காற்றிலிருந்து நெருப்பும், நெருப்பிலிருந்து நீரும், நீரிலிருந்து புவியும், புவியிலிருந்து செடி இனமும், செடி இனத்தில் இருந்து உணவுப் பொருளும், உணவுப் பொருள்களிலிருந்து விந்தும், விந்திலிருந்து மானிட இனமும் தோன்றின என்கிறது தைத்ரிய உபநிசத். உலகமும், உயிர்களும் எவ்வளவு எளிதாகத் தோன்றின என்பதை விவரித்துவிட்டது பாருங்கள்! உயிர்கள் தோற்றம் பற்றி உலகத்தின் பாதிப் பகுதியை ஆறு ஆண்டுகள் சுற்றி ஆராய்ந்து அறிவித்தார் டார்வின். இவன் சுலபமாக எல்லாம் வானத்திலிருந்து வந்தவை எனக் கூறிவிட்டான்.

அதனால்தான் சார்வாகர்கள் வானத்தை விலக்கி நான்கு தனிமங்கள் மட்டுமே உள்ளன எனக் கூறினரோ?

யாகத்தில் சாதுவான விலங்குகளைப் பலியாகத் தருவது இந்து மதப் பழக்கம். குதிரை, பசு, காளை, ஆடு போன்றவை மனித குலத்துக்குப் பயன்படும் விலங்குகள். ஆண்டவனைத் திருப்தி செய்கிறேன் எனக்கூறிக் கொண்டு இவற்றை யாக நெருப்பில் வெட்டிப் போட்டு வதக்கிப் பார்ப்பனர்கள் தின்றனர். உயிர்ப் பலி கூடாது என்று தடுத்தவர்களைச் சமாளிப்பதற்கு பார்ப்பனர்கள் சொன்ன சமாதானம் என்னவென்றால், யாகத்தில் பலி கொடுக்கப்பட்ட விலங்குகள் மோட்சம் (சொர்க்கம்) போகின்றன என்றனர். சொர்க்க லோக வாழ்வு அவ்வளவு சுலபத்தில் கிடைக்கக்கூடியதா? எவ்வளவோ உழைத்தாலும், தியாகங்கள் செய்தாலும், இறப்புக்குப் பின் சொர்க்கம் கிடைக்கும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை. நரகம் கிடைத்துவிடலாம்.

ஆனால், யாகத்தில் பலியிடப்படும் விலங்குகளுக்கு உறுதியாகச் சொர்க்க லோகம் கிடைக்கும். அதைத் தடுக்கலாமோ என்று சமாளித்துச் சாப்பிட்டனர் பார்ப்பனர்கள்.

உலக வரலாற்றில் மலிந்திருந்த பல மூட நம்பிக்கைகளில் பலி தருவது ஒரு பெரும் மூட நம்பிக்கை ஆகும். செய்துவிட்ட தவறுக்குப் பரிகாரம் பலி தருவது என்று வலியுறுத்தப்பட்டது. நல்ல விளைச்சல் இல்லையா? மன்னனின் தவறான ஆட்சிதான் காரணம், ஆகவே மன்னனை வெட்டிப் பலி கொடு! என்றெல்லாம் நம்பிக்கைகள் விதைக்கப் பட்டு மன்னர்களே கூட பலியிடப்பட்டனர். அத்தகைய வலிமை புரோகித வர்க்கத்துக்கு உண்டு.

புத்திசாலியான மன்னர்கள் தாங்கள் பலி இடப்படுவதற்குப் பதிலாக வேறு ஆளை நியமனம் செய்து பலியிடுவது நடந்துள்ளது. இப்படிப்பட்ட பதிலிகள் பெரும்பாலும் சிறையில் வாடும் போர்க் கைதிகளாகவே இருந்தனர். சண்டையில் சாகாமல் தப்பிப் பிழைத்தவர்களைப் பலிகடாக்களாக ஆக்கி விட்டனர்.

பலி கொடுக்கப்பட்ட விலங்கு, சொர்க்கம் போகிறது என்பது உண்மையானால், உன் தந்தையைப் பலி கொடேன், அவர் நிச்சயம் சொர்க்கம் போவார் அல்லவா? என்று கேட்டு மடக்கினர் சார்வாகர்கள்!

தம் அடிமடியில் கை வைக்கிறார்கள் என்றவுடன் பார்ப்பனர்கள் சார்வாகத்தையே ஒழித்து விட்டனர்!

ஆவிகள் (Spirits) உண்டு என்கிற மூட நம்பிக்கை பல மதங்களிலும் குடி கொண்டிருக்கிறது. கிறித்துவப் பிரச்சாரகர்கள், அஞ்ஞானிகளே, நீங்கள் கெட்ட ஆவியின் பிடியில் இருந்து விடுவிக்கப்படவேண்டும்; நான் அதற்காக ஜெபிக்கிறேன் என்றுதான் ஆரம்பிக்கிறார்கள்.

பலவிதமான ஆவிகளை இதற்காக இவர்கள் கற்பித்து உலவவிட்டிருக்கிறார்கள். சாவு நிகழப் போகிறது என்பதை அறிந்து ஓலமிடும் ஆவி, இதே காரியத்தைச் செய்யும் நாய் வடிவப் பேய், தூங்குபவனை படுக்கையில் அமுக்கி அச்சுறுத்தும் ஆவி, தூங்கிக் கொண்டிருக்கும் ஆணுடன் உடல் உறவு கொள்ளும் பெண் பேய், செத்துப் போனவர்கள் உலவும் ஆவி போன்று பல ஆவிகளை உலவ விட்டிருக்கிறார்கள்.

ஒரு பெண் ஆவி, குளம் குட்டைகளில் இருக்குமாம். ஆண்களுடன் கூடிக் கலவி செய்து குழந்தை பெற்றுத் தருவதன் மூலம் ஓர் ஆன்மாவை அடையுமாம் அந்த ஆவி. இந்த மூட நம்பிக்கையின்அடிப்படையில் ஓர் ஆங்கில சினிமா கூட எடுக்கப்பட்டுள்ளது. அந்த ஆவி அன்டைன் (Undine) எனப்படுகிறது.

ஸ்காட்லாந்து நாட்டு ஆவி, நீரில் மூழ்குபவரைக் காப்பாற்றுவதற்காகக் குதிரை உருக்கொண்டு வருமாம். இதனை கெல்பி (Kelpie) என்கிறார்கள்.

ஜெர்மனி நாட்டின் குறும்புக்கார ஆவி, புராதன வீடுகளில் குடிகொண்டு எதையாவது விசமமாகச் செய்து கொண்டு இருக்கும். இதற்கு கோபோல்டு (Kobold) என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.

ரோமாபுரியினரின் வீடுகள் ஒவ்வொன்றிலும் ஆவி உண்டாம். அவை லார் எனப்படும். அந்தக் குடும்பத்தின் இறந்து போனவர்களில் நல்லவர்கள் இந்த வகை ஆவியாகிக் குடும்பத்தவர்க்கு நன்மை செய்வார்களாம்.

ஆவி, எத்தனை ஆவியடா!


--------------------நன்றி:- “விடுதலை” 1-1-2010