Search This Blog

9.1.10

பகுத்தறிவுப் பிரச்சாரம் செய்வதற்குச் சட்ட ரீதியான கூடுதல் அங்கீகாரம்


நல்ல தீர்ப்பு

மகாராட்டிர மாநிலத்தில் பாசின் என்பவரால் எழுதப்பட்ட இசுலாம் _ அரசியல் உலகின்மீது முஸ்லிம்களின் படையெடுப்பு என்ற நூல் 2003 இல் வெளியிடப்பட்டது. இந்த நூல் மத உணர்வைப் புண்படுத்துகிறது என்று கூறி, அம்மாநில ஆட்சியால் தடை செய்யப்பட்டது.

அதனை எதிர்த்து நூலாசிரியர் பாசின், உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

இந்த வழக்கை நீதிபதிகள் ரஞ்சனாதேசாய், சந்திரசூட் மற்றும் ஆர்.எஸ். மொஹிதி ஆகியோர் விசாரித்து, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பினை வழங்கியுள்ளனர்.

நூலின் மீதான தடையை நீக்க நீதிபதிகள் மறுத்தாலும் மத உணர்வு புண்படுகிறது என்று பொய்யழுகை செய்யும் மாய்மாலம் பண்ணும் கூட்டத்தின் செவுளில் அறைவதுபோல தீர்ப்புக் கூறியுள்ளனர்.

அரசமைப்புச் சட்டத்தில் உறுதி அளிக்கப்பட்டுள்ள பேச்சுச் சுதந்திரம், கருத்தை வெளிப்படுத்தும் சுதந்திரம் போன்ற அடிப்படை உரிமைகளின்கீழ் மதங்களை, அது இஸ்லாமாக இருந்தாலும் சரி, இந்து மதமாக இருந்தாலும் சரி, கிறித்துவ மதமாக இருந்தாலும் சரி, விமர்சனம் செய்வது அனுமதிக்கப்பட்ட ஒன்றுதான்; மதத்தை விமர்சனம் செய்வதற்காக ஒரு நூலை தடை செய்துவிட முடியாது; சம்பந்தப்பட்ட நூலில் கூறப்பட்ட சில தவறாகக் கூடவிருக்கலாம். ஆனால், தம் கருத்தை வெளிப்படுத்த ஒருவருக்கு உரிமையுண்டு என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

எழுதப்படும் நூல் உள்நோக்கம் கொண்டதாக குறிப்பிட்ட ஒரு மதத்தின்மீது பகைமையைத் தூண்டிவிடுவதாக இருக்கக்கூடாது என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தந்தை பெரியார் அவர்களின் தலைமையில் ஒரு முக்கால் நூற்றாண்டுகாலம் பகுத்தறிவுப் பிரச்சாரம் முழு வீச்சில் நடந்திருக்கிறது. நூற்றுக்கணக்கான வெளியீடுகளும் கொண்டு வரப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கில் பொது மக்களிடம் பரப்பப் பட்டும் உள்ளன. தந்தை பெரியார் அவர்களின் மறைவிற்குப் பிறகும் அந்தப் பிரச்சாரப் பணிகள் புயல் வேகத்தில் நடந்துகொண்டும் இருக்கின்றன.

தந்தை பெரியார் அவர்களின் இராமாயணப் பாத்திரங்கள் எனும் நூல் இந்தியில் சச்சு ராமாயணா என்று மொழி பெயர்க்கப்பட்டது. அதனை உத்தரப்பிரதேச அரசு தடை செய்தது. அதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. உச்சநீதிமன்ற நீதிபதி வி.ஆர். கிருஷ்ண அய்யர் உ.பி. அரசு விதித்த தடை செல்லாது என்று கூறிவிட்டார்.

அதேநேரத்தில், அன்னை மணியம்மையார் காலத்தில் தந்தை பெரியார் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவையொட்டி சென்னை பெரியார் திடலில் இராவண லீலா நடத்தப்பட்டு, இராமன், சீதை, லட்சுமணன் உருவங்கள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன.

தசரா பண்டிகை என்று கூறி வட இந்தியாவில் குறிப்பாக, புதுடில்லியில் ஆண்டுதோறும் இராவணன் உருவத்தைக் கொளுத்தி மகிழ்கிறார்கள். அந்த நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர், பிரதமர் போன்றவர்கள் குடும்பத்துடன் அமர்ந்து களிக்கின்றனர். அதனைக் கண்டிக்கும் முகத்தான் இராவண லீலா இந்த வகையில் நடத்தப்பட்டது.

அது குறிப்பிட்ட மத நம்பிக்கையாளர்களின் மனதைப் புண்படுத்துவதாக வழக்குத் தொடுக்கப்பட்டது. கீழ் நீதிமன்றத்தில் தண்டனை விதிக்கப்பட்டது; மேல் முறையீட்டில் மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்குத் தள்ளுபடி செய்யப்பட்டு தண்டனை ரத்து செய்யப்பட்டது.

ராம் லீலா நடத்துவதற்கு எப்படி உரிமையுண்டோ, அதே உரிமை இராவண லீலா நடத்துவதற்கும் உண்டு என்று மாவட்ட நீதிபதி சோமசுந்தரம் தீர்ப்பளித்தார்.

அதற்குப்பின் இப்பொழுது ஒரு உயர்நீதிமன்றத்தில் இப்படி ஒரு தீர்ப்பு என்பது கருத்துச் சுதந்திரத்திற்கு மரியாதை கிடைத்திருக்கின்றது என்பதோடு, பகுத்தறிவுப் பிரச்சாரம் செய்வதற்குச் சட்ட ரீதியான கூடுதல் அங்கீகாரம் கிடைத்து இருக்கிறது என்பதில் அய்யமில்லை.

தீ மிதித்தால் எங்கள் மனம் புண்படுகிறது; மூட நம்பிக்கைகளை முறியடிக்கும் வகையில் வேடங்கள் புனைந்து சென்றால், எங்கள் மனம் ஆழமாகவே புண்படுகிறது என்று மதவாதிகள் கூச்சல் போடுவதும், அவர்களின் புகார் மனுவைக் கையில் வைத்துக்-கொண்டு, காவல் துறையினர் பகுத்தறிவாளர்களை அழைத்து மூட நம்பிக்கை ஊர்வலம் நடத்தக்கூடாது என்பதும், அப்படியே நடத்தினாலும் அதில் குறிப்பிட்ட அம்சங்கள் இடம்பெறக்கூடாது என்றும் சொல்வார்களேயானால், அப்படி சொல்பவர்கள்தான் நீதிமன்ற அவமதிப்பு செய்பவர்கள் ஆவார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

கழகத் தோழர்களும் மும்பை உயர்நீதிமன்ற ஆணையின் நகலை எப்பொழுதும் கையிருப்பில் வைத்திருக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.


--------------------”விடுதலை” 9-1-2010

0 comments: