கனல் தெறிக்கிறார் காசி ஆனந்தன்
திருமணத்தை நடத்தி வைக்க இருக்கும் தமிழர் தலைவர் ஆசிரியர் வீரமணி அவர்களை என்றென்றும் எங்களால் மறக்கமுடியாது.
1983 இல் நாங்கள் எல்லாம் ஈழத்தில் தேடப்பட்ட போது, தமிழ் மண்ணை மிதித்த நேரத்தில் எங்களைத் தாங்கிப் பிடித்தவர் தமிழர் தலைவர் ஆவார்கள். அதனை என்றைக்கும் மறக்க மாட்டோம்.
தமிழர்களைப் பொறுத்தவரையில் மூன்று தவறுகளைச் செய்யக்கூடாது. முட்டாள்தனத்தின் காரணமாக தமிழன் அயலானை ஏற்கக்கூடாது-அயலானைப் போற்றக்கூடாது - அயலானை நம்பக் கூடாது.
கடைசி நேரத்தில் தமிழர்கள் 30 ஆயிரம் பேர்கள் கொல்லப்பட்டார்கள் என்றால் அதன் பொருள் என்ன? ஒரு குடும்பத்துக்கு மூன்று பேர்கள் என்று வைத்துக் கொண்டால்கூட 10ஆயிரம் குடும்பங்கள் அழிக்கப்பட்டுவிட்டன.
இந்தப் பத்தாயிரம் குடும்பங்கள் அய்யரை அழைத்து, அருந்ததி பார்த்து, சடங்குகளைச் செய்து திருமணங்களைச் செய்து கொண்டவர்கள்தானே! எந்த சாஸ்திர சம்பிரதாயங்கள் மந்திரங்கள், சடங்குகள் தமிழர்களைக் காப்பாற்றின? இதற்கு மேலும் நாங்கள் இதை ஏற்க வேண்டுமா?
கடவுளை நம்பினோம் கந்தா, கடம்பா, மகேசா எங்களைக் காப்பாற்று! காப்பாற்று! என்று கத்தினோம், கதறினோம். எந்தக் கடவுளும் எங்களைக் காப்பாற்றவில்லையே. இதற்கு மேலும் கடவுளை நாங்கள் நம்ப வேண்டுமா?
இரண்டரை லட்சம் தமிழர்களின் வீடுகள் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டன. அத்தனையும் வாஸ்து பார்த்துக் கட்டப்பட்டவைதான். எந்த வாஸ்து சாஸ்திரம் எங்கள் தமிழர்களின் வீடுகளை இடிக்காமல் காப்பாற்றியது? இதற்கு மேலும் நாங்கள் வாஸ்துவை ஏற்கவேண்டுமா?
2076 சைவக் கோயில்கள் தரைமட்டமாக்கப்பட்டன. அந்தக் கடவுள்களால் தங்கள் கோயில்களையே காப்பாற்றிக் கொள்ள முடியவில்லையே! கோயில்களுக்குச் சென்று வந்த எம் மக்களையும் காப்பாற்றவில்லை. இதற்கு மேலும் கோயில்களுக்கு நாங்கள் செல்லவேண்டுமா?
ஆரியர்களின் மூடநம்பிக்கைகளை ஏற்று நாங்கள் அழிந்ததுதான் மிச்சம். இதற்கு மேலும் ஆரியத்திற்கு நாம் அடிபணிய வேண்டுமா? மூடச் சடங்குகளைப் பின்பற்றி, வாஸ்துவை நம்பி இவற்றையெல்லாம் நம்பி நம்பி ஏற்று ஏற்று வீணாகிப் போனோமே! வீணாகிப் போனோமே!!
நமது இளைஞர்கள் இவற்றையெல்லாம் உணர வேண்டும். நமது மாணவர்கள் கைகளில் ராக்கிக் கயிறுகளைக் கட்டிக் கொண்டு அலைகிறார்களே! ராக்கிக்கும், தமிழர்களுக்கும் என்ன சம்பந்தம்? ஏன் இந்த ஆரிய அடிமைத்தனம்?
நாம் தமிழர்களாகவே வாழ்வோம் - அது போதும் - பரந்த மனப்பான்மை எல்லாம் வேண்டவே வேண்டாம். அதனால் நாம் இழந்தது போதும், அழிந்தது போதும் போதும்; தமிழ் ஈழம் மலர்ந்தே தீரும் என்று உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் உணர்ச்சிக் கனல் மழை பொழிந்தார்!
---------------------------- “விடுதலை” 28-1-2010
0 comments:
Post a Comment