Search This Blog

31.1.10

காந்தியார் படுகொலை செய்யப்பட்டது ஏன்?இன்று காந்தியார் நாதுராம் கோட்சே என்ற ஆர்.எஸ்.எஸ். இந்து மதப் பார்ப்பனரால் படுகொலை செய்யப்பட்ட நாள்.

காந்தியார் அவர்களைக் கொன்ற இந்து மத வாதம் இன்னும் உயிர்த் துடிப்போடு இருந்துகொண்டுதான் இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால், அந்த வாதம் கலாச்சாரம் என்ற பெயராலும், இந்துத்துவா என்னும் பெயராலும் மூர்க்கத்தனமான வேகத்துடன் செயல்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது.

தந்தை பெரியார் இதுபற்றிக் கூறும் கருத்து மிகவும் கருதத்தக்கதாகும்.

புத்த தர்மம் கெட்டது யாரால்? சமண தர்மம் கெடுக்கப்பட்டு சமணர்கள் கழுவேற்றப்பட்டது யாரால்? மற்றும் பாதகமானதும், வஞ்சனையானதுமாகிய பல கொடுஞ்செயல்கள் புராண காலத்திலும், சரித்திர காலத்திலும் நடந்ததாகக் காணப்படுபவை யாரால் நடந்தவைகள்?

இவை போன்றவைகளைக் கூர்ந்து கவனிப்போமேயானால், காந்தியார் போன்ற பெரியார்கள் பார்ப்பனரால் படுகொலை செய்யப்பட்டது என்பது அதிசயமோ சிறிதும் ஆச்சரியமோ அல்ல என்பதை உணருவோம். இதற்காகப் பார்ப்பனச் ஜாதியைக் குறை கூறுவது முற்றும் சரியானதாகிவிடாது. அவர்கள் தங்கள் சுயநல வாழ்வுக்காக ஏற்படுத்திக் கொண்டிருக்கும் மதக் கற்பனைகளே இப்படிப்பட்ட பார்ப்பனர்களை உற்பத்தி செய்யும் விளை நிலமாக இருந்து வருகிறது.

உண்மையிலேயே மத மாச்சரியம், வகுப்பு மாச்சரியம், இன மாச்சரியம் முதலிய துவேஷங்களுக்குப் பார்ப்பன மதம் தவிர மற்றபடி, இந்த நாட்டில் வேறு காரணம் யாராவது சொல்ல முடியுமா? தனிப்பட்ட எந்தப் பார்ப்பனரை நாம் குற்றம் கூறக்கூடும் என்று கேட்கிறோம்.

நன்றாக ஆழ்ந்து நிதான புத்தியுடன் கூர்ந்து சிந்திப்போமேயானால், வெள்ளையன் ஆட்சி கூடாது, முஸ்லிம் ஆட்சி கூடாது என்ற உணர்ச்சியை இந்திய மக்களுக்கு ஊட்டவும், அதனால் குரோதம், துவேஷம் ஏற்படவும், அதனால் வெட்டு, குத்து, கொலை, கொள்ளை, நாசம் ஏற்படவும் பார்ப்பன மதம் காரணமல்லாமல் வேறு ஏதாவது கொள்கைகள், திட்டங்கள், ஆட்சி தர்மங்கள் காரணம் என்று யாராலாவது சொல்ல முடியுமா? சொல்லக் கூடுமானால், வெள்ளையன் ஆட்சியும், முஸ்லிம் ஆட்சியும் ஒழிந்தன; இந்துஸ்தான் சுய ஆட்சி பெற்றது என்று சொல்லப்பட்ட பின்பும் இந்து _ முஸ்லிம் போராட்டம் என்னும் பேரால் இந்த ஒரு ஆண்டு காலமாக நடந்துவரும் அட்டூழியமான நடத்தைகள் நடப்பதற்குப் பார்ப்பன மதம் காரணமல்லாமல் வேறு காரணம் என்று யாராவது, எதையாவது சொல்ல முடியுமா?

திராவிட நாட்டில் இதுபோது நடந்துவரும் திராவிட _ ஆரியர் நாடு பிரிவினைப் போராட்டங்களுக்கும், பார்ப்பன மதம் காரணம் என்பதல்லாமல் வேறு காரணம் ஏதாவது சொல்ல முடியுமா? இப்படிப்பட்ட ஒரு மத தர்மம் காந்தியாரைக் கொன்றதில் அதிசயமென்ன என்று திரும்பவும் கேட்கிறோம்.

----------------------------- “குடிஅரசு”, 7.2.1948

காந்தியார் அவர்கள் படுகொலை செய்யப்பட்ட இந்த நாளில் தந்தை பெரியார் அவர்கள் கூறியுள்ள மேற்கண்ட தகவல்களும், கருத்துகளும் மிகக் கவலையோடு சிந்திக்கப்படவேண்டியவையல்லவா?

நாட்டில் விரும்பப்படும் சமத்துவம், சகோதரத்துவம், சமூகநீதி இவையொட்டிய அனைத்து முன்னேற்றமான வளர்ச்சிப் பணிகளுக்கும் படுகேவலமான முறையில் தடையாயிருப்பது காந்தியாரைக் கொன்ற அந்த பார்ப்பனிய மதவாத சக்திகள் _ உணர்வுகள் இன்றும் தொடர்ந்து கொண்டிருப்பதுதானே?

20 ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் 1992 டிசம்பர் 6 இல் இந்தியாவில் என்ன நடந்தது? 75 ஆயிரம் முதல் ஒரு லட்சம்வரை மக்கள் கூடி இன்னொரு மதத்தின் வழிபாட்டுத் தலத்தைப் பட்டப் பகலில் பெரிய தலைவர்களின் தூண்டுதலால் நேரிடையான பார்வையில் அடித்து உடைத்து நொறுக்கப்பட்டனவே இதன் தன்மை என்ன?

2002 இல் குஜராத் மாநிலத்தில் பாரதீய ஜனதா கட்சி ஆட்சி, நரேந்திர மோடி என்பவரின் தலைமையில் சிறுபான்மை மக்களான முஸ்லிம் மக்களைக் குறி வைத்துத் தாக்கி வேட்டையாடி பல்லாயிரக்கணக்கான மக்கள் குரூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டனரே அவர்களின் வீடுகளும் தொழில் நிறுவனங்களும் தீயிட்டுக் கொளுத்தப்பட்டு சாம்பலாக்கப்பட்டனவே!

தொழு நோயால் துன்புறும் மக்களுக்குத் தொண்டூழியம் செய்ய வந்த கிறிஸ்துவ பாதிரியாரையும், அவரின் இரண்டு மகன்களையும் அவர்கள் தூங்கிக் கொண்டிருந்தபோது தீ வைத்துக் கொளுத்தித் திமிர் முறித்தார்களே!

மருத்துவமனையில் புகுந்து மருத்துவப் பணிகளைச் செய்துகொண்டிருந்த நர்சுகள் கிறித்துவர்கள் என்ற காரணத்தால் அவர்களைப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கித் தூக்கி எறிந்தார்களே!

செத்துப்போன பசுமாட்டின் தோலை உரித்தார்கள் தாழ்த்தப்பட்டவர்கள் என்பதற்காக அவர்களைப் படுகொலை செய்தார்களே!

இந்தக் கொடுமைகள் எல்லாம் தந்தை பெரியார் அவர்கள் கணித்துச் சொன்னபடி 21 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும்கூட கூச்சம் இல்லாமல் நடந்துகொண்டிருக்கின்றனவே!

நேரு குடும்பத்தைச் சேர்ந்த ஒரு சிறுவன் முஸ்லிம்களின் கைகளை வெட்டுவேன், தலையை துண்டிப்பேன்; நாக்கை அறுப்பேன் என்று பொதுக்கூட்ட மேடையில் நாசகாரத் தன்மையில் எப்படி பேச முடிகின்றது?

நான்தான் நாதுராம் கோட்சே பேசுகிறேன் (மை நாதுராம் கோட்சே போல்தா) என்று இந்தியாவின் தலைநகரத்திலேயே நாடகம் போட்டு காந்தியார் என்ற அரக்கனைக் கொன்றோம்! என்று மார்தட்டினார்களே!

உலக உத்தமர் என்றும், தேசப்பிதா என்றும் பெரும்பான்மையான மக்களால் மதிக்கப்பட்ட ஒரு தலைவரை எந்த ஒரு கூட்டம் பச்சைப் படுகொலை செய்ததோ, அதே கூட்டம் இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் தலைகொழுத்துத் துள்ளித் திரிகிறதே!

மீண்டும் தந்தை பெரியார் அவர்களின் கருத்துரையை உள்வாங்கிக் கொண்டால் என்ன செய்யப்படவேண்டும் என்பது விளங்காமல் போகாது!

-------------------- “விடுதலை” தலையங்கம் 30-1-2010

0 comments: