Search This Blog

13.1.10

தைத்திங்கள் முதல்நாள் தான், தமிழ்ப் புத்தாண்டு

தைத்திங்கள் முதல்நாள் தான், தமிழ்ப் புத்தாண்டு என்று சட்ட ரீதியாகத் தொடங்கி மகிழ்ச்சியோடு கொண்டாடுவோம்; வட மொழிச் சொற்கள் கொண்ட 60 ஆண்டுகள் நம்முடைய காலக் கணிப்புக்குப் பயன்படாது என்று தமிழக முதல்வர் கலைஞர் குறிப்பிட்டார். சென்னையில் நடைபெற்ற முத்தமிழ்ப் பேரவையின் 32 ஆம் ஆண்டு இசை விழாவில் அவர் பேசும்போது இவ்வாறு குறிப்பிட்டார்.
மேலும் அவர் பேசியதாவது:இதை நாங்கள் தமிழ் ஆண்டாக ஒப்புக் கொள்ள முடியாது என்று சிலர் பத்திரிகைகளிலே எழுதி இருக்கிறார்கள்; சிலர் முதல்நாளே கூட மறுப்பு தெரிவித்திருக்கிறார்கள். சொன்னவர் யாரென்றால் ஒரு மலையாளி என்றால் சரி, ஒரு தெலுங்கர் என்றால் சரி, ஒரு கர்நாடகத்தைச் சேர்ந்தவர் என்றால் சரி, ஒரு இந்திக்காரர் என்றால் சரி, சொன்னவர் ஒரு தமிழரேதான். தமிழர் என்று தான் ஒப்புக் கொள்ள வேண்டும். தமிழ்ப் புலவர்களே கூட இது தமிழ் ஆண்டு ஆகாது. ஏற்கெனவே நமக்கு அறுபதாண்டுகள் இருக்கின்றன. அதையே பின்பற்றலாம் என்று எழுதுகின்றவர்கள், சொல்கின்றவர்கள் உண்டு.


திராவிடர் கழகத்தாருடைய பிரச்சார அடிப்படையிலே இதை நான் சொல்லவில்லை. தந்தை பெரியார் அவர்கள் திராவிடர் கழகத்தின் வாயிலாக எடுத்துச் சொன்ன கருத்துகளின் அடிப்படையில் நான் சொல்லவில்லை. நமக்கு இருக்கின்ற அறிவு, சிந்தனை அதைக் கொண்டு செய்யக் கூடிய ஆராய்ச்சி இதன் அடிப்படையில சீர்தூக்கிப் பார்த்தால், இந்த 60 ஆண்டுகள் என்ற வடமொழிச் சொற்களைக் கொண்ட இந்த ஆண்டுகள் நம்முடைய வாழ்க்கைக்கு காலக் கணிப்புக்குப் பயன்படுமா என்பதை தயவு செய்து எண்ணிப் பார்க்க வேண்டும்.அறுபதாண்டுகளில் - பிரபவ, விபவ, சுக்கில, பிரமோதூத, பிராஜேர்பத்தி, ஆங்கிரச, சிறீமுக, பவ, யுவ, தாது, ஈஸ்வர, வெகுதான்ய, பிரமாதி, விக்கிரம, விஷூ, சித்திரபானு, சுபானு, தாரண, பார்த்திப, சர்வஜித்து விஜய, ஜய, மன்மத, துன்முகி, ஹேவிளம்பி, விளம்பி என்று தொடர்ந்து குரோதன, அட்சய என்று முடிகிறது. சரி, இந்த அறுபதாண்டு என்ற கணக்கு எப்படி என்றால், நாரதருக்கும் மகாவிஷ்ணுவிற்கும் பிறந்த பிள்ளைகள் என்று புராணத்திலே இருக்கிறது. நாம் ஒப்புக் கொண்டுதான் தீர வேண்டும். ஏனென்றால் புரா ணத்திலே இருப்பதால் ஒப்புக் கொள்ள வேண்டும். ஒரு வேளை சரித்திரத்திலே இருந்தால் ஒப்புக் கொள்ளத் தேவையில்லை. இருவருக்கும் ஒரு விதமாக விபரீதமான ஆசை ஏற்பட்டது. நாம் இருவரும் ஆணும் பெண்ணுமாக மாறி கலவி செய்து ஏன் குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளக் கூடாது என்று எண் ணினார்கள்! எண்ணியது தெய்வங்கள் அல்லவா? ஆகவே எண்ணியது நிறைவேறியது. அப்படி பிறந்த குழந்தைகள் அறுபது. அந்த அறுபது குழந்தைகள் தான், நான் இப்போது சொன்னேனே, இந்தப் பெயருக்கு உரிய குழந்தைகள்.சரி, அது வரையில் ஒப்புக்க் கொள்வோம்.


ஆனால் நம்முடைய வயதுக் கணக்குக்கு, அல்லது காலக் கணக்குக்கு அந்தக் கதை ஒத்து வருமா? அதைப் பின்பற்ற முடியுமா என்பதை தயவு செய்து எண்ணிப்பார்க்க வேண்டும். இந்த மண்டபம் இருக்கின்ற இடம் சாதாரண இடமல்ல. சிந்திக்கத் தெரிந்தவர்கள் உள்ள பகுதி இது. எதையும் ஏன், எப்படி என்று தங்களுக்குள்ளாகவே கேட்டு விடை காணக் கூடியவர்கள் நிறைந்த பகுதி இது. பொதுவாகச் சொன்னால் நிரம்பப் படித்தவர்கள் நிறைந்த பகுதி. அந்தப் பகுதியாக இருக்கின்ற காரணத்தால் இங்கிருந்து அவர்களுக்கு இந்தச் செய்தி போகாவிட்டாலும், காலையிலே அவர்கள் இதை உணர முடியும் என்பதற்காகச் சொல்லுகிறேன்.


இந்த அறுபதாண்டுகள் கணக்கு, காலக் கணக்குக்கு ஒத்து வராது. எப்போது ஒத்து வருமென்றால், மனிதனின் சராசரி வயது, அந்தக் காலத்துத் தமிழனுடைய சராசரி வயது, முப்பது, நாற்பது என்றிருந்தபோது வேண்டுமானால் ஒத்துவரலாம். இப்போது 84 அய்யும் தாண்டி விட்டேன். இப்போது எப்படி அறுபதாண்டுகள் கணக்கு ஒத்து வரமுடியும். என்னைப் பொறுத்த வரையில் நான் பிறந்த ஆண்டு இப்போதுள்ள வருடக் கணக்கின்படி ரக்தாட்சி ஆண்டு, ரக்தாட்சி ஆண்டு அந்த அறுபதில் 58ஆவது ஆண்டு. ரக்தாட்சி, குரோதன அட்சய என்பதோடு அறுபதாண்டுகள் முடிகிறது. சரி, இன்னொரு பத்து, பதினைந்து ஆண்டுகள் சென்று என்னை தம்பி பாரதிராஜா போன்றவர்கள் பார்த்து நீங்கள் எந்த வருஷம் பிறந்தீர்கள், வயது என்ன என்று கேட்டால், நான் ரக்தாட்சி வருஷம் பிறந்தேன் என்று சொன்னால் அப்படி யென்றால் உங்களுக்கு வயது இரண்டு தான் ஆகிறதா? என்று கேட்பார்கள்.


எனவே ஒழுங்கான கணக்கு, சரியான கணக்கு, வருஷக் கணக்கானாலும் சரி, வயதுக் கணக்கானாலும் சரி, எந்தக் காலக் கணக்கானாலும் சரி, அது கணக்காக இருக்க முடியாது. ஆகவேதான் அந்த வடமொழி என்ற எழுத்தின் மீதுள்ள வெறுப்பால் அல்ல. அந்தக் கணக்கு சரிப்பட்டு வரவில்லை என்பதால் அதை நாம் விலக்கி வைக்க வேண்டியிருக்கின்றது. அதனால்தான் தொடர்ச்சியான எண்கள் நாம் நம்முடைய பண்பாட்டிற் கேற்ப எப்படி ஆங்கிலேயர்கள் கிறிஸ்து பிறந்த ஆண்டு அதற்குப் பிறகு, அதற்கு முன்பு என்று வைத்திருக்கிறார்களோ, அதைப் போல நமக்கு யார்? கிறிஸ்து? நமக்கு யார் நபி? நமக்கு யார் சிவனோ, பார்வதியோ, சைவர்கள் கணக்கின்படி பார்த்தாலும், அல்லது வேறு எந்தக் கணக்கின்படி பார்த்தாலும், திருவள்ளுவர்தான் நமக்கு காலக் கணக்கு.
திருவள்ளுவருக்கு முன், திருவள்ளுவருக்குப் பின் என்ற இந்தக் கணக்கை எடுத்துத் தான் சுவாமி வேதாசலம் என்ற வடமொழிப் பெயரிலே இருந்த பெரும்புலவர் - பல புலவர்களுக்கெல்லாம் வழிகாட்டியாக இருந்தவர் - இன்றைய தமிழர்களுடைய தன் மான உணர்வுக்கு அன்றைக்கு வித்திட்டவர் - தண்ணீர் பாய்ச்சியவர். அந்த சாமி வேதாச்சலம் - தன்னுடைய பெயரை சாமி வேதாசலம் என்பதை, மறைமலை அடிகளார் என்று மாற்றிக் கொண்டு, தான் மாற்றிக் கொண்டால் மாத்திரம் போதாதென்று ஆண்டுக் கணக்கையும் மாற்றி, இனி தமிழனுடைய கலை, கலாச்சாரம் எல்லாம் தமிழிலேயே மாற வேண்டு மென்கின்ற அந்த மாற்றத்தையும் செய்த மாமனிதர்தான், மறைமலை அடிகளார்.

அதனால்தான் 1967 இல் ஆட்சிக்கு வந்தவுடன் அண்ணா முதலமைச்சர், நான் பொதுப் பணித்துறை அமைச்சர். அப்போது சைதாப்பேட்டையிலே இருந்த பாலத்திற்கு - அது கட்டப்பட்ட நேரத்தில் அதற்கு என்ன பெயர் வைக்கலாம் என்று கேட்டதும், நான் எழுதிக் கொடுத்த பெயர், மறைமலைஅடிகள் பாலம் என்பதாகும்.
இப்படி நம்முடைய மனதிலே ஆழப் பதிந்திருக்கிற ஒரு சொல். ஒரு பெயர், மறைமலை அடிகள். அவரால் சொல்லப்பட்ட கருத்துதான் எடுத்துச் சொல்லப்பட்ட புதையல்தான் - தமிழ்ப் புத்தாண்டு தை முதல் நாள் ஆரம்பமா கிறது என்பது. எனவேதான் சொன்னேன். நம்முடைய சாரதா நம்பி ஆரூன் அதற்காக வருத்தப்படத் தேவையில்லை. நாம் பேசியிருந்தால் நம்முடைய தாத்தா பெயரை இவ்வளவு நேரம் அவர் சொல்லியிருப்பாரா என்று அவர்கள் பெருமைப்பட்டுக் கொள்ளலாம் என்பதை மாத்திரம் அவர்களுக்குக் கூறிக் கொள்கிறேன்.- இவ்வாறு முதல்வர் கலைஞர் உரையாற்றினார். (30.1.2008)

0 comments: