Search This Blog

30.1.10

பெரியார் மணியம்மை பல்கலைக் கழகம் மக்கள் பல்கலைக் கழகம் - கி.வீரமணி விளக்கம்

தமிழர் தலைவரின் கனிவான அறிவிப்பும் - வேண்டுகோளும்!

பெரியார் மணியம்மை பல்கலைக் கழகம் என்னும் மக்கள் பல்கலைக் கழகத்தின்நிகர்நிலைப் பல்கலைக் கழக தகுதியை எந்தவித விளக்கமும் கேட்கப் படாமல் ரத்து செய்து உச்சநீதிமன் றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பட்டியலைத் தொடர்ந்து, பெற்றோர்கள், நலம் விரும்பிகளின் கருத்தினை ஏற்று, பெரியார் மணியம்மை பல்கலைக் கழக சட்டப் பாதுகாப்புக் கான நிதி ஒன்றினை பெரியார் மணியம்மை இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜியின் தலைவர் கி. வீரமணி அவர் கள் அறிவித்து விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

நாட்டின் 44 நிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள் நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களாக நடத்திடத் தகுதியற்றவை என்ற ஒரு பட்டியலை நான்கு பேர் கொண்ட ஒரு குழு தெரிவித்தது. பல்கலைக்கழக மானியக் குழுவின் சார்பில் 4, 5 அகில இந்தியக் கல்வியாளர்கள் நான்கு, அய்ந்து நாள்கள் நேரிடையாக ஒவ்வொரு நிகர்நிலைப் பல்கலைக் கழகத்திற்கும் சென்று பார்வையிட்டு, அலசி ஆய்வு செய்து அளித்த அறிக்கையைப்பற்றிக் கவலைப்படாமல் சம்பந்தப்பட்ட நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களிடம் விளக்கம்கூடக் கேட்காமல், தன்னிச்சையாக எப்-பொழுதோ யாரோ ஒருவர் உச்சநீதிமன்றத்தில் தொடுத்த வழக்கினைக் காரணம் காட்டி ரத்து செய்துள்ளது.

அதிர்ச்சியும், வேதனையும்

அந்தப் பட்டியலில் பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக் கழகமும் இடம்பெற்றிருந்ததைக் கண்டு மிகுந்த அதிர்ச்சிக்கும், வேதனைக்கும் ஆளானோம்; நம்மைப் போலவே பல பெரிய அறிஞர்கள், கல்வியாளர்கள், பொறுப்பான பதவி வகிப்பவர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் உள்பட பல பொதுதரப்பட்டவர்களும்கூட அதிர்ச்சி அடைந்து நம்மிடம் அதனைத் தெரிவித்து, நமக்கு ஆறுதல் கூறி, ஊக்கப்படுத்துவதில் போட்டி போட்டுக்கொண்டு முன்வந்தனர். இதைவிட எங்களுக்குப் பெரும் நிம்மதியும், மன வேதனை போக்கும் மாமருந்தும் வேறு ஏது?

எந்த முகாந்திரத்தின் அடிப்படையில்?

எந்த முகாந்திரத்தின் அடிப்படையில் பெரியார் மணியம்மை பல்கலைக் கழகம் தகுதியற்றது என்று தீர்மானிக்கப்பட்டிருக்கிறது என்பது எங்களுக்கே தெரியாத ஒரு நிலை; பழைய கால மிசா கைதிபோல, என்ன குற்றத்திற்காக மிசா கைதியாக்கி சிறைக்கு அழைத்து வந்தனர் என்பது விடுதலை ஆன பின்னரும் ஏன், இதுவரையிலும்-கூடத் தெரிந்து-கொள்ள வாய்ப்பில்லாத கொடுமை அது!

அதுபோன்ற ஒரு விசித்திர நிலைதான் இப்போதும்! நீதிமன்றம்தான் ஜனநாயகத்தில் மக்களின் கடைசி நம்பிக்கை என்று கூறப்படுகிறது.

வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், அதன் முக்கிய அம்சங்கள்பற்றி நாம் எந்த விரிவான விளக்கத்தையும் தருவது சட்டப்படி சரியானதல்ல என்பதால், பல விவரங்கள் நீதிமன்றத்தில் எடுத்துரைக்கப்படும் வாய்ப்பு உண்டு.

இதற்கிடையில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடத்தி நியாயத்தைப் பெறவேண்டிய நிலையில், பல பெற்றோர்களும், நல்லெண்ணங் கொண்டவர்களும், நலம் விரும்பிகளும் நம்மிடம் கடந்த ஒரு வாரமாக தொலைப்பேசியிலும், நேரிலும் (உலகத்தின் பல நாடுகளிலிருந்தும்கூட) நாங்கள் எப்படி இதில் உதவிட முடியும்; எங்கள் பங்களிப்பும் இருக்கவேண்டும் என்று வற்புறுத்தி வருகிறார்கள்.

இது ஒரு மக்கள் பல்கலைக்கழகம்

நம்முடைய பல்கலைக்கழகம், மற்றவர்களைப்போல தனியார் உரிமையுள்ள பல்கலைக் கழகம் அல்ல; மாறாக, மக்களுக்கே சொந்தமான மக்கள் பல்கலைக் கழகம் (People's University) என்பதால், மக்களின் ஒத்துழைப்பும், பங்களிப்பும் வேண்டும் என்று வற்புறுத்தியதோடு, வழக்கு நடத்த உதவிடும் வகையில் நாங்களே நிதி உதவியும், எங்களால் முடிந்த அளவுக்கு செய்யக் காத்திருக்கிறோம்; உடனே அறிவியுங்கள் என்று வற்புறுத்தி வருகிறார்கள்.

கடந்த இரண்டு, மூன்று நாள்களாக மிகவும் சிந்தித்து, அவர்களது அறவழிப்பட்ட ஆதரவு பேராதரவினைப் பயன்படுத்திக் கொள்வது அவசியம் என்ற முடிவுக்கு வந்துள்ளோம். இப்பல்கலைக்கழகம் தந்தை பெரியார் அவர்களும், அன்னை மணியம்மையார் அவர்களும் உருவாக்கிய அறக்கட்டளையால், பல்துறை அறிஞர்களின் வழிகாட்டுதலோடு நடத்தப்படுவதாகும் என்பதாலும், இது கல்லூரியாகத் தொடங்கப்பட்டதுமுதல் மக்களின் சிறுதுளி பெருவெள்ளம் என்ற நிதி உதவி அடிப்படையில் வளர்ந்துவரும் ஒரு மக்கள் பல்கலைக் கழகம் என்பதால், நமது நல விரும்பிகளான பெற்றோர்களின் விருப்பத்திற்குப் பணியவேண்டியது நமது முக்கிய கடமையல்லவா!

பெரியார் - மணியம்மை பல்கலைக் கழக
சட்டப் பாதுகாப்புக்கான
வழக்கு நிதி

எனவே, பெரியார் மணியம்மை பல்கலைக் கழக சட்டப் பாதுகாப்புக் கான வழக்கு நிதி என்ற ஒரு நிதிக் குழு அமைக்கப்படுவதோடு, அதன் பொருளாளராகப் பொறுப்பேற்க தஞ்சை பெருமகனார் திரு.கே.ஆர். பன்னீர் செல்வம் அவர்கள் முன்வந்துள்ளமைக்கு மிக்க நன்றி!

ஆலோசனைக் குழு பிறகு அறிவிக்கப்படும். நிதித்துறை நிபுணர்கள் திருவாளர்கள் எஸ். இராச ரத்தினம், தணிக்கையாளர் டி.என். மனோகரன் போன்ற பெருமக்கள் வழிகாட்டுதலின் மேற்பார்வையோடு, இது இயங்கும் என்பதையும் மிகுந்த கனிவுடன் மக்கள் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறோம்.

தலைவர்,

பெரியார் மணியம்மை இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி

-----------------------”விடுதலை” 30-1-2009


0 comments: