Search This Blog

4.1.10

அய்யப்பனின் மகரஜோதி மோசடி அம்பலம்


எப்படி அனுமதிக்கிறது ஓர் அரசு?

சபரிமலை அய்யப்பன் கோயிலுக்குப் பக்தர்கள் செல்லும் பருவம் (season) தொடங்கப்பட்டு விட்டது. கேரள மாநிலத்தில் உள்ள இக்கோயிலுக்குத் தமிழ்நாட்டிலிருந்து செல்லும் பக்தர்களே அதிகம். இப்பொழுது இந்த வியாதி இலங்கைவரைக்கும் பரவி அங்கிருந்தும் வரத் தலைப்பட்டுள்ளனர். 400 பேர் கப்பல்மூலம் சென்னைக்கு வந்து இறங்கியுள்ளனர்.

பொங்கலையொட்டி மகர ஜோதி பிரதானமாக பெரிதாகப் பேசப்படும். அய்யப்பன் கோயில் விஷயத்தில் இந்த மகரஜோதி என்பதே மிகப் பிரதானமான ஒன்றாகும்.

ஆனால், இந்த மகரஜோதி உண்மையானதல்ல மோசடியானது. கேரள அரசாங்கமே தமது அதிகாரத்தின்கீழ் பணியாற்றும் மின்சாரத் துறை ஊழியர்களைப் பயன்படுத்தி செயற்கையாகக் காட்டப்படும் தீபம் என்பது கேரளப் பகுத்தறிவாளர்களால் 1973, 1980, 1982 ஆகிய ஆண்டுகளில் நிரூபிக்கப்பட்டுவிட்டது. கேரளப் பகுத்தறிவாளர்களின் இந்தச் செயல்பாடு குறித்து மும்பையிலிருந்து வெளிவந்த பிளிட்ஸ் ஏடு (16.1.1982) படங்களுடன் வெளியிட்டு அம்பலப்படுத்தி விட்டது. இது குறித்து விசாரணை ஆணையம் அமைக்கப்படவேண்டும் என்று கேரள மாநில அரசுக்கு அம்மாநிலப் பகுத்தறிவாளர்கள் ஒரு வேண்டுகோளை வைத்தனர்; அரசு அசைந்து கொடுக்கவில்லை.

கேரள மாநிலப் பகுத்தறிவாளர் கழகத் தலைவர் ஜோசப் எடமருகு கேரள மாநில முதலமைச்சர் ஈ.கே. நயினார் அவர்களைச் சந்தித்துச் சொன்னபோது, உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார்; அதே நேரத்தில் அதனைத் தடை செய்ய முடியாது என்றும் கூறிவிட்டார்.

இப்பொழுது அடுத்தடுத்து பல தரப்புகளிலிருந்தும் உண்மைகள் ஒப்புக்கொள்ளப்பட்டு வெளிச்சத்திற்கு வந்துவிட்டன. தெகல்கா ஆங்கில இதழ் (21.6.2008) சில உண்மைகளை வெளி உலகுக்குக் கொண்டு வந்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 14 ஆம் தேதி மகர விளக்கு தானாகத் தெரியும் என்றனர். சபரிமலைக் கோயிலின் காப்பாளர் பந்தளம் மகாராஜா குடும்பம் இக்குடும்பத்தின் பி. ரவிக்குமார் சொல்லுகிறார்: எங்கள் வீட்டுப் பெரியவர்கள் மூன்று தடவை கொளுத்தவேண்டும் என்று கூறி ஆள்களை அனுப்புவார்கள் என்று ஒப்புக்கொண்டார்.

இந்தியா விடுதலை பெற்ற பிறகுதான் காட்டு இலாகாவும், மின்சாரத் துறையும் சேர்ந்து மோசடியைத் தொடங்கினர். கற்பூரத்தை மூட்டை மூட்டையாகக் கொட்டி கொளுத்தி மகர விளக்கு என்று காட்டுவார்கள். இதற்கான சைகை மாலை 6.30 மணிக்குக் கோயிலிலிருந்து அனுப்பப்படுகிறது.

பொன்னம்பலமேடு, மோசடியை அம்பலப்படுத்திடப் பகுத்தறிவாளர்கள் முயன்றனர். 1973 இல் 24 பேர்கள் கொல்லத்திலிருந்து பொன்னம்பலமேட்டுக்கு வந்து குறிப்பிட்ட நாளில் பட்டாசுகளை வெடித்து பக்தர்களின் குழப்பத்தைத் தெளிவிக்க முயற்சித்தனர். கைது செய்து வழக்குத் தொடுத்தது கேரள மாநில அரசு. இந்தியக் குற்றச் சட்டப்படி எந்தக் குற்றமும் பகுத்தறிவாளர்கள் செய்யவில்லை என்று வழக்கினைத் தள்ளுபடி செய்தது நீதிமன்றம்.

1980 ஆம் ஆண்டிலும் திருச்சூரிலிருந்து பொன்னம்பலமேடு வந்து வழக்கமான திசைக்கு எதிர்த்திசையில் விளக்கைக் கொளுத்திக் காட்டி அம்பலப்படுத்தினர் பகுத்தறிவாளர்கள்.

இப்போது அய்யப்பன் கோயில் தலைமைப் பூசாரி கண்டரேறு மகேஸ்வரரு மகர விளக்கை மனிதன்தான் இயக்குகிறான் என்று ஒப்புக் கொண்டுள்ளார். தேவஸம் போர்டு தலைவர் சி.கே. குப்தனும் இதனை ஒப்புக்கொண்டு இருக்கிறார். இதற்கு மேலாக அறநிலையத்துறை அமைச்சர் ஜி. சுதாகரன் அவர்களும் மோசடி உண்மைதான் என்பதை ஒப்புக்கொண்டு விட்டார் என்று தெகல்கா வெளியிட்டது.

இதற்குமேலும் என்ன ஆதாரம் வேண்டும் அய்யப்பனின் மகரஜோதி மோசடி என்பதற்கு? மோசடி என்று தெரிந்த பிறகும் ஓர் அரசு இதனை அனுமதிக்கிறது என்றால், அரசே மோசடிக் குற்றத்திற்கு ஆளாகிவிட்டது என்றுதானே பொருள்?

மதம், கடவுள், பக்தி என்ற பெயரால் கண்ணுக்குத் தெரிந்த ஒரு மோசடியை அனுமதிப்பது என்பது மக்கள் மத்தியில் எத்தகைய எண்ணத்தை ஏற்படுத்தும்?

சாமியார்களும், அர்ச்சகர்களும் மோசடி வேலைகளில் ஈடுபடுவதும், ஆபாச லீலைகளில் ஈடுபடுவதும் இந்த அடிப்படையில்தானே! காவி கட்டிக்கொண்டு எந்த காலித்தனத்தில் ஈடுபட்டாலும் அரசாங்கமோ, நீதித்துறையோ கிட்டே நெருங்காது என்ற தைரியத்தில்தானே இவ்வளவு அயோக்கியத்தனமான செயல்களில் துணிந்து ஈடுபடுகின்றனர்?

மோசடி என்று தெரிந்திருந்தும் ஒரு அரசு (அதுவும் மார்க்சிஸ்ட் அரசு) இப்படி நடந்துகொள்வது மிகவும் தரந்தாழ்ந்தது; தலைகுனியத் தக்கது. நிருவாகம், சட்டம், நீதியைக் குழிவெட்டிப் புதைப்பதாகும்.

பகுத்தறிவாளர்கள் இந்த நிலையை ஒவ்வொரு மனிதரிடத்திலும் கொண்டு செல்வதை ஒரு கடமையாகக் கருதவேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.


----------------------- “விடுதலை” தலையங்கம் 4-1-2010

1 comments:

Raju said...

அருமை! ஆனால் அந்த தியான மனநிலை கொண்டு வர வைக்கும் யுக்தி... ஆர்மி ட்ரெயினிங் மாதிரி, மனகட்டுபாடு வர வைக்கும் வித்தை, பெரியார் சொன்ன மாதிரி, சவுக்கடி.... அதற்கு என்ன பொய்யும் சொல்லலாம்... ஈரோடு பெருமாள் கோவிலில் பெரியார் தர்மகர்த்தாவாக இருந்தார் தெரியுமா? ஏன்? அங்கேயாவது குளறுபடி இல்லாமல், மக்கள் நீட்டாக இருப்பார்கள்.... என்று தான் என நினைக்கிறேன். அப்புறம் பெரியார் ஜாதி தான் நான்! ( நம்பிக்கையிலும் கூட! ).

அப்புறம் இந்த பண்டிகை விஷயங்கள், நம் கலாசார விருந்து உன்ன ஒரு யுக்தி. நல்லது தானே? நற்குடியில் பிறந்த எல்லோரும் இதை ஆதரிப்பார்கள். அவதார் படத்தில் ஒரு நம்பிக்கையில் கனாடி போட்டு பார்ப்பது போன்று....

என் டாக்டர் அக்கா சொல்றாங்க.... கோவிலில் தான் நல்ல இம்முனைசெசன் நடக்குது. உன் உடல் பலமடையும். கண்ட நோய் எதிர்ப்பு கிருமிகள் அடித்து நொறுக்கும் விதிகளை இயற்க்கை கொடுத்த உன் செல்கள் செய்யும்.

ஆமாம் எப்படிங்க இந்த செல்கள் தானா இயங்குது?