Search This Blog
4.1.10
தந்தை பெரியாரே எழுதிய சுயசரிதை - 3
தந்தை பெரியாரே எழுதிய சுயசரிதை - 3
இந்தச் சம்பவம் பிரபலப்பட்ட சந்தர்ப்பத்தில், என் கடைக்கு பராரியாய் ஒரு வாலிபன் வந்து வேலை கேட்டான். அவன் மேட்டுப்பாளையத்தில் ஒரு சாயபு கடையில் குமாஸ்தாவாக இருந்ததாகச் சொன்னான். அவனுக்கு, உடனே நான் வண்டிச் சரக்குவிலைபோடும் வேலை கொடுத்து, பிறகு கணக்கு வேலை கொடுத்தேன். சிறிது காலம் பொறுத்து அவன் கல்யாணத்தைப்பற்றி அவன் தாயார் என்னை வந்து கேட்டார்கள். ‘பெண் எங்கே?’ என்றேன். ‘பெண்ணும்
நீங்கள்தான் பார்த்துச் செய்யவேண்டும்’ என்று சொன்னார்கள். உடனே நான் யோசித்தேன்; ஒரு தாலுகா சேவகம் நாயுடு வீட்டில் அவர் வைப்பாக வைத்துக்கொண்டிருந்த மனைவிக்கு ஒரு மகள் இருந்தது; என் குமாஸ்தா ஒரு வேளாள வகுப்பு, என்றாலும் இதைக் கட்டிக்கொள்ளக் கேட்டேன், சம்மதித்தார். தாலுகா சேவகன் மனைவியும் கொடுக்கச் சம்தித்தார். கலப்பு மணம் என்கிற பெயரில் ‘சதுர், பாட்டுக் கச்சேரி, பல்லக்கு, ஊர்வலம்’ என்கிற தடபுடலில்
அத்திருமணம் நடந்தது, காரணம், திருமணத்திற்கு கடைகளில் பணம்
வசூல் செய்தேன். ‘சமபந்தி சாப்பாடு’ விருந்து நடந்தது; ஊர் பூராவும் கலந்துகொண்டது; இது ‘ஜாதிபேதம் நீக்கல்; சமபந்தி உணவு; கலப்பு
ஜாதி மணம்; மூன்றும் கூடியதால் - என் வயதொத்த முதலாளி பிள்ளைகள், குமாஸ்தாக்கள், எனது வாலிப சிநேகிதர்கள் ஆகியவர்கள் மனதில் பெரிய மாறுதல், சீர்திருத்த உணர்ச்சியை ஏற்படுத்தி, காரியத்தில் நடக்கும்படியும் செய்துவிட்டது. எப்போது என்றால், இன்றைக்கு 40, 45 வருடங்களுக்கு முன்னால் - அதுவும் பணக்கார, வைதீக குடும்பத்தில் இருக்கின்ற என்னால், என்றால், இது,
உண்மையில் மிக அதிகமானதே . . . . அந்தக் காலத்துக்கு.
மேலும், அப்போது இந்த விதமே நான் மற்றும் சில காரியத்தில் வெற்றி பெற்றுக்கொண்டே வந்தேன். எப்படி என்றால் ‘தாசி வகுப்பு ஆண்களுக்கு’ அந்தக் காலத்தில் மிக மிகக் குறைவான மதிப்பு. ஆனால், அவர்களில் சிலரோடு நான் கைகோர்த்துக்கொண்டு திரிவேன். அந்த வகுப்பில் சில நண்பர்கள் எனக்கு உண்டு. அவர்களை, என் கூடவே இருக்கச் செய்து, வெகு சமமாய் நடத்துவதோடு - நான் விருந்துக்குச் செல்லும் எங்கள் வகுப்பார் வீடுகளில் எல்லாம்கூட அழைத்துப் போய் பக்கத்தில் உட்காரவைத்து சாப்பாடு போடச் செய்து சாப்பிடுவேன். எங்கள் ஜாதியார் சற்று வருத்தப்படுவார்கள். நான் கவலைப்படமாட்டேன். இப்படி, சில சாயபுமார்கள் வீட்டுக்கு, நான் என் நண்பர்களோடு விருந்துக்கு அழைத்துப் போவதும், அவர்களை அழைத்து எங்கள் பந்தியில் உட்காரவைத்து சாப்பிடச் செய்வதும் சகஜமாயிற்று.
பிறகு, அதிகாரிகள் நேசம் ஏற்பட்டது. எங்கள் ஊர், அப்போதைய ரயில்வே ஸ்டேஷனில் எனக்கு வெகு செல்வாக்குண்டு; ஏன் என்றால், எங்களுக்கு அங்கு பல கட்டடங்கள் உண்டு; ரயில்வே சிப்பந்திகள் பலர் எங்கள் வீட்டில் குடியிருப்பவர்கள். ரிப்ரெஷ்மெண்ட் ரூம் மேனேஜரும் அங்கு எங்கள் வீட்டில் குடி இருப்பவர்; எனக்கு அவர் மைனர் ஸ்நேகமானார். ஈரோடு ஸ்டேஷன், வெள்ளைக்காரர் சாப்பிடும் டின்னர் ஸ்டேஷன்; நல்ல பெரிய அந்தஸ்து வெள்ளையருக்கு டின்னர் தயார் செய்தால் நல்ல பண்டங்கள் செய்யப்பட்டிருக்கும். அவர்கள் சாப்பிட்டுப் போனபின், ஏதாவது சாப்பிடுகிறாயா? டர்க்கி, பவுல் இருக்கிறது. “இந்த மீன் இருக்கிறது. அந்த பன்றிக் கறி இருக்கிறது’’ என்று சொல்லுவார்; ஏன் என்றால், நான் மதுபானம் செய்வதில்லை; என்றாலும் எனக்கு ஜாதிபேதம் இல்லை என்பது அவருக்குத் தெரியும். ஆனால், அவர் மது
அருந்துவார்; என்றாலும் ரிப்ரெஷ்மெண்ட் ரூமில் தண்ணீர்கூட சாப்பிடமாட்டார்; என்றாலும், எனக்கு வழங்கச் சொல்லுவார்; என்னுடன் வரும் ஸ்நேகிதருக்கும் வழங்கச் சொல்லுவார். குறைந்த சார்ஜ் போட்டு சரிப்படுத்திக் கொள்ளுவார். இதனால், நான் அனேகரை கூட அழைத்துப் போய் அங்கு சாப்பிடும்படி செய்துவிட்டேன். இது மெல்ல மெல்ல வளர்ந்தது. ஞாயிற்றுக் கிழமையானால் டிப்டி கலெக்டர், டிப்டி சூப்ரிண்டென்டண்ட், எக்ஸைஸ் இன்ஸ்பெக்டர் ஆகிய இந்த அதிகாரிகள் ஒரு காலத்தில் பார்ப்பனரல்லாதவர்களாகவும், உண்மையில் நாணயமும் நேர்மையும் உடையவர்களாவும், லஞ்சம் வாங்காதவர்களாகவும் இருந்தார்கள். அவர்களில் சிலர் எங்கள் வீட்டில் குடி இருப்பவர்கள்; அவர்கள் எனக்கு சிநேகமானார்கள், காரணம், ஈரோடு வக்கீல்கள் எல்லோரும் பார்ப்பனர்கள். நான் ரீடிங் ரூம், டென்னீஸ் கோர்ட் செக்கரட்டரி; அப்பொழுது எங்கள் அதாவது, இந்த அதிகாரிகளுடன் கலந்து பேசும் பேச்சு, நடத்தை ஆகியவைகளில் ‘பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதவர்’ என்கின்ற உணர்ச்சி ததும்பும்;
சந்திக்கும்போதெல்லாம் இதை முதலில் பேசுவோம். இந்த சமயத்தில் உள்ளூரில் உள்ள பார்ப்பன வக்கீல்களும், முன்சீப்பு உள்பட பார்ப்பன சர்க்கார் சிப்பந்திகளும் எங்கும், அவர்கள் கூடினால் எங்களைப் பற்றிய பொறாமைப் பேச்சே பேசுவார்கள். இது அடிக்கடி என் காதுக்கும், அதிகாரிகள் காதுக்கும் வரும்; இதையும் பேசிக்கொள்வோம்.
இந்த உணர்ச்சியுள்ள சட்டைக்கார டாக்டர் ஒருவர், எங்களுடன் சேர்ந்தார்; அவருக்கும் எனக்கும் அதிக நேசம். நான் மாலை நேரத்தில் அங்கு போய் அவர் குடும்ப சகிதம் உட்கார்ந்து பேசிக்கொண்டிருப்பேன். அவர் வீட்டில் ஒரு குழந்தை பிறந்த நாள்; தடபுடலாகச் செய்து, அன்றிரவு அங்கு என் செலவில் டின்னர். இந்த அதிகாரிகளையும் அழைத்தேன். கோயமுத்தூர் பிரபல வக்கீல்கள் சம்பந்த முதலியார், வேணுகோபால் பிள்ளை இவர்களும் எனக்கு ஸ்நேகிதர்கள் ஆனதால் அவர்களையும் அழைத்தேன். நாங்கள் 15 பேர் மாத்திரம், டின்னர் சாப்பிட்டோம், என்னைத் தவிர மற்றவர்கள் யாவரும் மது அருந்துவார்கள். நன்றாய் அருந்திக் கொண்டே சாப்பிட்டார்கள். நான் ஒருவன்தான் நல்ல
நினைவோடு இருக்கின்றேன்; என்றாலும் எங்கள் பேச்சு முழுவதும்
துவக்கத்தில் இருந்து நள்ளிரவு 2 மணிவரையில் பார்ப்பன மேலதிகாரிகள், பார்ப்பன நீதிபதிகள், தங்கள் கீழுள்ள பார்ப்பன சிப்பந்திகள் ஆகியவர்கள் செய்கிற அக்கிரமங்கள், விஷமங்கள் ஆகியவைகளைப்பற்றியே பேசினோம். அன்றுமுதல் ஒரு கூட்டு உணர்ச்சி; அது நாளுக்கு நாள் வளர்ந்தது; ஈரோட்டிற்கு முன்சீப் தமிழன் வருவதே இல்லை - வந்தாலும் அவர்கள் பார்ப்பனர்களுக்கு
அடிமையாகவே இருப்பார்கள். ஏன் என்றால், முன்சீப்புகளின் மேல் அதிகாரிகள், ஜில்லா ஜட்ஜுகள் பார்ப்பனர். ஜில்லா சிரஸ்தார், பார்ப்பனர்; ஆதலால் பயப்படுவார்கள். மற்றபடி டிப்டி கலெக்டர், டிப்டி சூபரிண்டென்டண்ட், எக்ஸைஸ் இன்ஸ்பெக்டர் இவர்களின் மேலதிகாரிகள் பெரிதும் வெள்ளையர்கள். இந்த அதிகாரிகளும் சற்று கை சுத்தமுள்ளவர்கள். ஆதலால், பயமில்லாமல் பேசுவார்கள்.
அப்போது ஈரோட்டில், வக்கீல்கள் எல்லாம் நான் முன் குறிப்பிட்டபடி பார்ப்பனர்கள்; ஒரு பார்ப்பனரல்லாத வக்கீல் வேண்டுமென்று, ஒருவரைப் பிடித்து வந்து, மாதம் 40, 50 கைச்செலவு செய்து ஈரோட்டில் நிலை நிறுத்தினேன். இப்படியெல்லாம் செய்வதன்மூலம் பார்ப்பனர்களுக்கு நான் எதிர்ப்பாய் இருப்பது எல்லோருக்கும் தெரிந்தாலும், பார்ப்பனர்கள் என்னிடம் சிநேகமாகவே இருந்தார்கள்.
ஏனெனில், என் தகப்பனார் நல்ல பார்ப்பன பக்தர் நானும், அவர்களுக்கு நல்ல பிள்ளையாக நடந்து, வேண்டிய உதவி செய்துகொண்டு இருந்தேன்; என் தகப்பனார் இறந்தார். நான் அவருடைய அந்தஸ்து பெற்று ‘பெரிய மனிதன்’ ஆனேன். ஊர் பெரிய தனம் பூராவும் என் கைக்கு வந்துவிட்டது; முதலாவது, நான் ஒரு ஆடம்பர மைனர். இரண்டாவது, சில காலிகளும் என் கூடவே இருப்பார்கள். மூன்றாவது, நான் ஒரு பெரிய மனிதன் மகன். நான்காவது, அதிகாரிகள் ஸ்நேகம்.
அய்ந்தாவது, ஊர் காரியங்கள், தகராறுகள், விவகாரங்களை நானே மேலே எடுத்துப் போட்டுக்கொண்டு பைசல் செய்வது; இவ்வளவும் இருந்தாலே ஒருவனுக்கு ஊரில் செல்வாக்கு இருக்கும். இவற்றைவிட மற்றொரு குறிப்பிடத் தகுந்த விஷயம் என்னவென்றால், அப்போது இன்கம்டாக்ஸ் டிபார்ட்மெண்ட் இல்லை. தாசில்தார், டிப்டி கலெக்டர்தான் இன்கம்டாக்ஸ் போடவேண்டும். அவர்கள் உள்ளூர் கணக்கப் பிள்ளை, மணியக்காரர், ரெவின்யூ இன்ஸ்பெக்டர்
சொன்னபடிதான் போடுவார்கள். ஆனால், தாசில்தாரும், டிப்டி கலெக்டரும் ஊரில் ஒரு பெரிய யேக்கியமான வியாபாரியைக் கூப்பிட்டு அல்லது சென்று இரகசியமாய் விசாரித்துக்கொண்டு, இரண்டையும் சரிபார்த்துத்தான் போடுவார்கள். இந்த காரியத்துக்கு ஏற்றபடி ‘பெரிய யோக்கியமான வியாபாரியாய்’ இருந்தவர் என் தகப்பனார். அவர் இருக்கும்போதே, சில சமயங்களில் நான் போய், அவர்களுக்கு வேண்டிய தகவல்கள் இது விஷயமாய் சொல்லுவேன். அவர்களுக்கு, நானே ‘பெரிய யோக்கியமான வியாபாரி’ யாகிவிட்டேன். அந்த இடத்திற்கு யார் வந்தாலும் முன்னவர் செய்தபடி என்னைத்தான் கேட்பார்கள். இந்த சங்கதி எங்கள் ஊர் கணக்கு மணியக்காரருக்குத் தெரியும். ஏன் என்றால், அவர்களும் அப்போது என் வயசுக்காரர்கள். எனது 2-ந்தர கூட்டங்களில் இலர்கள் கலந்தே இருப்பார்கள். ஆதலால், இவர்களுக்கும் என்னைக் கேட்டுத்தான் வியாபாரிகள் வரும்படி
தெரிந்தாகவேண்டும். என்னைக் கேட்காவிட்டால், அதிகாரிகளிடம் நான் வேறு மாதிரியாய்ச் சொல்லிவிட்டால், இவர் சிபாரிசு கெட்டுப்போகும். வியாபாரிகளிடமும் இதற்கு ஆக இவர்கள் வாங்கிய மாமூல் பணம் திரும்பக் கொடுக்கவேண்டிவரும். ஆதலால், இவர்களும் என்னைக் கேட்டே இன்கம் டாக்ஸ் லிஸ்ட் தயார் செய்வார்கள். பிறகு, மெல்ல மெல்ல வர்த்தகர்களுக்கும் தெரியும். ஆதலால் கணக்கப்பிள்ளை (கர்ணம்) பட்டாமணியக்காரர், ரெவின்யூ இன்ஸ்பெக்டர் முதல் எல்லா அதிகாரிகளும் எனக்குத் தெரிந்தவர்கள் என்கின்ற காரணத்தினால், எல்லா வர்த்தகர்களும், கணக்கு மணியக்காரர்களும்கூட என்னிடம் வந்தே ‘குறைந்த அளவுக்கு’ சிபார்சு செய்து கொள்ளவேண்டியதாகி விட்டதால்; வருவார்கள்.
அடுத்தாற்போல் ஊரில் என்கரோச்மெண்ட் என்னும் நில ஆக்கிரமிப்பு என்கின்ற தொல்லை அதிகம். அப்போது இந்த சர்வேக்கள் வேலை முனிசிபாலிட்டிக்கு இல்லை; அதற்கும் கணக்கு மணியக்காரர்கள்தான் அதிகாரிகள். ஆதலால், அது சம்மந்தமான, இல்லாவிட்டால் கட்டடம் இடிபடும் சிபாரிசுக்கும் என்னிடம்தான்
வருவார்கள். ஆஸ்பத்திரி டாக்டர்; எனக்கு வேண்டியவர்; குடும்ப சிநேகிதர்போல் இருப்பார். அந்த சிபாரிசுக்கு என்னிடம்தான் வருவார்கள். ஏனெனில் - ஆஸ்பத்திரி டாக்டர்கள் ஆங்கிலோ இந்தியர்கள். நான் ஹானரெரி மாஜிஸ்ட்ரேட்டாகவும் இருந்தேன். டிப்டி கலெக்டர் எனக்கு சிநேகமானதால் மாஜிஸ்ட்ரேட் எந்த பெஞ்சு
கேசுக்கும் என் அபிப்பிராயம்தான் கேட்பார். இதனால், பெஞ்சு கேசில் பட்டுக்கொண்டவர்களும் என்னிடம் வருவார்கள். நான் பெஞ்சில் முக்கிய வாயாடி; பெஞ்சு மாஜிஸ்ட்ரேட் ஆனதால், புண்ணுக்கழுத்து பிடிக்கிற எஸ்.பி.சி.ஏ. இன்ஸ்பெக்டர் என் கடையில் வந்து காத்திருப்பார்.
இதனால், செக்கு ஆட்டும் வாணியச் செட்டியார்கள் (ஈரோட்டில், அப்போது 150 செக்குபோல் ஓடும்) எனக்கு ரொம்பவும் வேண்டியவர்கள். ஒத்தவண்டி, குதிரை வண்டிக்காரர்கள் சிலர், இறங்கிக் கும்பிடுவார்கள். இப்போதைய இம்பீரியல் பாங்கிக்கு அப்போது ‘ மதறாஸ் பாங்கி’ என்று பெயர். அந்த பாங்கி ஏஜெண்ட் ஒரு துரை. அவருடைய காஷ்கீப்பர் போட்ட மதிப்பு, அதாவது எந்தெந்த வியாபாரிக்கு எவ்வளவு கடன் கொடுக்கலாம், 3 மாதத்துக்கு ஒரு முறை அவர்கள் அந்தஸ்து எப்படி இருக்கிறது என்பதைப்பற்றிக் கேட்க என்னைக் கூப்பிடுவார். ஆதலால்,
கேஷ்கீப்பர் எனக்கு வேண்டியவரானதால் வியாபாரிகளும் சிலர் எழுந்து
வணங்குபவர்களாக இருப்பார்கள்; நான் ரீடிங்ரூம் செக்ரடரி, மகாஜன ஸ்கூல் செக்ரடரி, டென்னீஸ் கோர்ட் செக்ரடரி, தேவஸ்தான கமிட்டி பிரசிடென்ட் முகலிய பல உத்தியோகங்கள் எனக்கு உண்டு; இந்த நிலையில் முனிசிபல் தேர்தலுக்கு நிற்பவர்கள் என்னைக் கேட்காமல் எப்படி நிற்க முடியும்? நான் நினைத்தபடிதான் தேர்தல். அப்புறம் நானே ‘நாய்க்கர்’ (என் தகப்பனார்) ஆகிவிட்டேன். நான் போகாமல் எந்த வீட்டிலும் கல்யாணம் நிச்சயதார்த்தம் நடக்காது; நான் போகாமல் அநேக வீட்டில் ப்ரேதம் எடுக்கப்படமாட்டாது; எந்த கல்யாணத்தில் எந்த மேளத்தானை வைப்பது. எந்த தாசியை சதுருக்கு, பாட்டுக்கு வைப்பது என்பதும் என்னைக்கொண்டே செய்யும்படி ஆகிவிட்டதால், இந்தக்
கூட்டமும் எனக்கு ரொம்பவும் வேண்டியவர்களாகவும் மிகவும் கீழ்ப்படிபவர்கள் ஆகவும் ஆகிவிட்டார்கள். கடைசியில், நானே முனிசிபல் சேர்மனும் ஆகிவிட்டேன்.
இதுவரை என் வியாபாரம் சிறிதாவது, அதாவது அக்காலத்தில் ஒரு வருஷத்துக்கு ஒரு 500 ரூபா இன்கம்டாக்ஸ் வரி கட்டுகிற அளவுக்கு நடந்தது; சேர்மென் ஆனதும், என் வியாபாரம் குறைந்தது. அப்போது எனது தானிய மண்டியில் வேலை பார்த்த ஆள் பணம் கையாடிவிட்டார்.
எனக்குச் சொந்தமான பஞ்சாலை ஜின்னிங் (பேக்டரி) எண்ணெய் செக்கு (ரோட்டரி) ஆகிய எந்திர சாலையில் வேலை செய்த ஏஜெண்ட்,
நான் சரியாய் வேலைகளை கவனித்து அவருக்கு தக்கது செய்வதில்லை
என்று சொல்லி விலகிவிட்டார். நான் சிபாரிசு செய்து ஜாமீன் போட்டு
கடன் வாங்கிக் கொடுத்த வியாபாரிகள் பணம் கட்ட முடியாமல் என்மீது
குறை கூறும்படியான அளவுக்கு வாய்தாவில் டியூ கட்டாமல் தவறிவிட்டு
விடுவார்கள்போல் தோன்றிற்று. உடனே, வியாபாரத்தைக்கூட
கவனியாமல் விழுந்துபோன வியாபாரிகள் பொறுப்பை நான்
ஏற்றுக்கொண்டு அவர்கள் சொத்துக்களை விற்று அவர்களை மீட்டு
விட்டு என் பஞ்சாலையை விற்றுவிட்டு, வியாபாரம் மாத்திரம் நன்றாய்
ஏற்பாடு செய்துகொண்டு, சேர்மன் வேலையையும், ஊர் வேலையையும்
செய்துகொண்டு நல்ல பிரபலமாய் இருந்து வருகிறேன்.
இந்த சந்தர்ப்பத்தில் சி. ராஜகோபாலாச்சாரியார் அவர்கள் சேலம் சேர்மேன்; டாக்டர் வரதராஜுலு நாயுடு அவர்கள் ஜஸ்டிஸ் கட்சிக்கு எதிர்ப்பாகவும், பெசண்ட் அம்மைக்கு எதிர்ப்பாகவும் (பெயர் ஞாபகமில்லை. ஏதோ ஒரு பெயருடன் திருப்பூரில்) ஒரு வாரப் பேப்பர் நடத்திக்கொண்டு சந்தா சேர்க்க ஈரோட்டுக்கு வந்தார். அவருக்கு ஈரோடு கடைவீதிகளில் பல சந்தா சேர்த்துக் கொடுத்து, வீட்டில் விருந்து செய்து, பெருமைப்படுத்தினேன்; என்றாலும், அப்போது நான் பெசண்ட் அம்மைக்கு வேண்டியவனாகவும், ஈரோடு பிரம்மஞான சபைக் கூட்டத்திற்கு மெம்பராகவும் இல்லாமல் இருந்தாலும் வக்கீல்
எல்லாம் அதில் மெம்பரானதால், அவர் நட்புக்கு அடிக்கடி போய் வருபவனாகவும் இருந்தேன்; பெசண்ட் அம்மையை இன்டென்ட் செய்த காலத்தில் சர்க்காருக்கு விரோதமாக, அந்தம்மைக்கு அனுகூலமாக, பல காரியங்கள்கூட செய்துகொண்டு இருந்த சமயம்; ஏனெனில், எனக்கு அரசியலிலும் ஆசை இருந்தது. இண்டியன் பேட்ரியட் பத்திரிகை அடிக்கடி என்னைப்பற்றி புகழ்ந்து எழுதும்; ஆசிரியர்
கருணாகரமேனனுக்கு என்மீது அன்பு உண்டு; அதில், அப்போது உதவி
ஆசிரியராய் இருந்த ரங்கைய்யர் எனக்கு நல்ல பழக்கமுடையவர். இந்தக் கூட்டத்தில் இருந்த என்னை டாக்டர் வரதராஜுலு நாயுடுவின் சினேகமானது பெசண்ட் அம்மைக் கூட்டத்திலிருந்து பிரித்துவிட்டது.
டாக்டர் வரதராஜுலு நாயுடுமீது மதுரையில் கேசு நடந்தபோது, சி. ராஜகோபாலாச்சாரியாரும், டாக்டர் நாயுடுவும் ஈரோடுக்கு வந்துதான், கேஸ் விசாரணைக்கு மதுரைக்குப் போவார்கள்; இதற்கு முன்பே எனக்கும், சி. ராஜகோபாலாச்சாரியாருக்கும் அவர் வக்கீல் என்கிற முறையில் பழக்கம் இருந்தது. சில ஆண்டு விழாக்களில் பேசியிருக்கிறோம். ஆச்சாரியார் முனிசிபல் சேர்மனானதால், நானும் சேர்மனாயிருந்ததால் ஈரோட்டு சேனிடேஷன், ரோட்டு நன்றாக இருப்பதாக ஈரோடுக்கு கேசுக்கு வரும்பொழுதெல்லாம் சொல்லி
என்னைப் புகழுவார். “ஈரோடு, இயற்கையில் நல்ல சாக்கடை வசதியும், ரொம்பவும் குறைந்த மைல் நீளமுள்ள ரோட்டமைப்பாகவும் அதிக பணவரும்படி உள்ள முனிசிபாலிடி ஆனதாலும், ஈரோடு உங்கள் கண்ணுக்கு அப்படித் தோன்றுகிறது” என்று நான் சொன்னேன். இதைக் கேட்டு அவர் மகிழ்ச்சியடைந்து “நாயக்கர் உண்மையிலேயே பெருமையை வெறுப்பவர் என்பதாக நன்றாய்த் தெரிகிறது” என்று மேலும் புகழ்ந்தார். “இவ்வளவு சாமர்த்தியம் இருப்பதால்தான், தாங்கள் கெட்டிக்கார வக்கீலாக இருக்கிறீர்கள்”என்றேன்; கூட இருந்தவர்கள் சிரித்தார்கள்; எங்களுக்குள் அன்பு ஏற்பட்டது; இந்த அன்பு இருக்கும்போது, ஆச்சாரியார், டாக்டர் நாயுடு கேசு விஷயமாக செல்லுகையில் நம்மவீட்டிற்கு நாயுடு உடன் வந்தபோது, ‘நாயுடு கேசுக்கு வக்கீலாக வருகிறார்; பீசு இல்லாமல் பேசுகிறார்’ என்ற காரணத்தால் ஆச்சாரியாரிடம் எனக்கு அதிக அன்பு. நெருங்கிய
தொடர்புகொண்டு பெசண்டம்மைக்கு விரோதமாக வேலை செய்தேன். நாயுடு ஸ்நேகம் காரணமாக நான் அந்த தொண்டில் இழுக்கப்பட்டேன்.அவர்கள் கூப்பிடும் கூட்டங்கட்கெல்லாம் செல்ல ஆரம்பித்தேன்.
-------------------------------தொடரும்.....
-------------------நூல்:- “தந்தை பெரியாரே எழுதிய சுயசரிதை” பக்கம்: 11 - 18
Labels:
பெரியார்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment