Search This Blog

4.1.10

பகுத்தறிவுப் பாதையே பயனுள்ள பாதை


ஓய்வுபெற்ற பேராசிரியர் த.பழமலய் அவர்கள்நேற்று (3.1.2010) குறிஞ்சிப்-பாடியில் நடைபெற்ற துணைப் பொதுச்செயலாளர் துரை.சந்திரசேகரன் அவர்கள் மகள் அறிவுப்பொன்னி_ எழில்வடிவன் ஆகியோர் தம் வாழ்விணை ஏற்பு விழாவில் அவர் எழுதிய தெரியாத உலகம் என்னும் பல சிந்தனைக் கட்டுரைகளை அரிய தகவல்களைக் கொண்ட நூல் ஒன்றினை எனக்கு அளித்தார்.

பகுத்தறிவுப் பேராசிரியர் த.பழமலய் அவரது பெயரை மலய் என்ற எழுத்துக்களால் எழுதுவார். தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தின் அடுத்த கட்டத்திற்கும் செல்ல வேண்டும் என்ற ஆர்வம் உடைய முற்போக்குச் சிந்தனையாளர்.

பல்வேறு இளம்நாற்றுக்களையெல்லாம் விளைந்த நெற்பயிர்களாக மணிகளாக ஆக்கிய ஆசான் அவர். அவரது அந்த நூலைப் பலரும் வாங்கிப் படிக்க வேண்டும்.

பகுத்தறிவுச் சிந்தனை ஓட்டங்கள் மிளிரும் அந்நூலில் (நான் திரும்பும்போதே படித்துச் சுவைத்தேன்), கொசுவிற்கு வலை, எலிக்குப் பொறி என்கிற தலைப்பில் அவர் எழுதியுள்ள - எழுப்பியுள்ள அறிவார்ந்த கேள்விகளுக்கு எளிதான விடை, இரட்டை வாழ்வோர் பலருக்கு கிடைக்காது. என்றாலும் அதை அறிந்து கொள்வது நல்லதல்லவா?

அறிதோறு அறியாமை கண்டற்றால் என்று அவர் புத்தகத்தைத் திறக்கும்போதே எழுதி சிந்திக்க வைக்கிறார். தகவல் களஞ்சியம் அந்நூல் - இதோ அச்சிறு கட்டுரை:

கொசுவிற்கு வலை, எலிக்குப் பொறி

மகாபலிபுரம் பாறைச் சிற்பம் ஒன்று. குட்டி பால் குடிக்கிறது. தாய்க்குத் தகப்பன் குரங்கு பேன் பார்க்கிறது. காவிய நயம் கமழும் கல் உருவங்கள்! நல்ல குடும்பம்!

அந்த ஏழாம் நூற்றாண்டுச் சிற்பியை நான் இன்றும் புகழ்கிறேன். அவனுக்குப் பகுத்தறிவு இருந்திருக்கிறது. அது மனிதர்களுள் பலருக்கு இல்லையே என்று வருந்தினானோ! குரங்குகளுக்கு இருக்கிறது பாருங்கள்! என்று உளிமொழியால் அறைந்தானோ!

அந்தக் குரங்குகள் தங்களைப் பிடித்திருக்கும் பேன்களையும் உண்ணிகளையும் ஒழித்துக் கட்டுவதற்குக் கடவுளர்களைத் தேடிக் கொண்டிருக்கவில்லை. பூசாரிப் பொய்யர்களை அவை நம்பவில்லை. தங்களை நம்பின, தங்கள் கைகளை நம்பின, மூளையைக் கொஞ்சம் செலவழித்தன. குரங்குகள் இன்றும் பேன் மருந்து கண்டுபிடித்துவிட வில்லைதான். அது அவற்றின் சிறுமை என்று சொல்லமாட்டேன். இன்னும் அறிவு பெறாத, நமது மனிதர்களின் சிறுமைகளுக்கு முன் அது எம்மாத்திரம்?

ஓ, அசுவினித் தேவர்களே, எங்களது தானியக் களஞ்சியங்களுக்குள் துளையிட்டு நுழையும் எலிகளை அழியுங்கள். இல்லையேல் எங்களது கூலங்களை எல்லாம் எலிகள் தின்று தீர்த்துவிடும். எங்கள் களஞ்சியங்களைக் காப்பாற்றுங்கள் (வேதம், 3000_2000 கி.மு)

உரோமானியர், புழுபூச்சிகளைத் தோற்றுவிக்கும் ஒரு கடவுளை நம்பினர். அப்பல்லோ கடவுள் திருநாளில், அதற்குக் காளைகளைப் பலியிட்டனர். சமாதானமாக இருக்குமாறு வேண்டினர்.

பயிர்பச்சைகளுக்கு வந்துற்ற நோய்களைப் பற்றியும் புழுபூச்சிகளைப் பற்றியும் பைபிளில் பல இடங்களில் பேசப்பட்டிருக்கின்றன. மனிதர்கள் இழைக்கும் பாவங்களுக்குத் தண்டனையாக, வானுலகில் இருந்து இவை வல்லமை உள்ள கடவுளால் அனுப்பி வைக்கப்படுவதாக நம்பப்பட்டது.

தாங்கள் செய்யும் பாவங்களாக ஏதோ ஒரு வகையில் எல்லாச் செயல்களையுமே குறைப்படுத்திக் குழப்பிக் கொண்ட மனிதர்கள் எதற்கு எடுத்தாலும் கடவுளைக் கற்பித்தனர். தங்கள் கற்பிதங்களைத் தாங்கள் மெய் என்று நம்பினர். பாவனைகளால் சமாதானம் செய்து கொள்வதே வழி என்று துணிந்தனர். அடைக்கலம், சரணாகதி, என்று தஞ்சம் புகுந்தனர். பலி, சாந்தி, நேர்ந்து கொள்ளல், வேண்டுதல், போற்றுதல் என்று மக்களுக்கு மதம் பிடித்தது.

இந்தக் கூத்துகளுக்கு இடையில் நமக்குப் பகுத்தறிவும் இருந்து வந்திருப்பதுதான் மானுடத்தின் பெருமை.

அதர்வணவேதத்தில் கொசுக்களை ஒழிக்கும் மணமும் புகையும் தரும் சில இரசாயனப் பொருள்கள் சொல்லப் பெற்றிருக்கின்றன.

பண்டைய எகிப்தில் களஞ்சியங்களைக் காக்கப் பூனைகளை வைத்திருந்தனர். அவை எலிகளைப் பிடிப்பதில் எத்துணைத் திறனுடையவையோ அத்துணைக்கு விலை மதிக்கப் பெற்றனர்.

எகிப்து அறிஞர்கள் கொசுவலையைப் பற்றியும் குறிப்பிட்டிருக்கின்றனர்.

பாகவதபுராணத்தில் (கி.பி. 10_11 நூ)வீட்டில் இறந்து கிடக்கும் எலிகளைக் கண்டால், உடனே வீட்டை விட்டு வெளியேறிவிட வேண்டும் இது பிளேக் (Plague) என்னும் கொள்ளைநோய். பிளேக் என்னும் சொல் தொல்லை, தொந்தரவு என்னும் பொருளது.

சொரி, சிரங்குகளுக்குக் கந்தகத்தை மருந்தாகக் கண்டனர் கிரேக்க மருத்துவர்கள்.

குடுகுடுப்பைக்காரனைப் போலப் பலநிற ஆடையை அணிந்து குழல் ஊதும் இசைஞன் ஒருவன் (Pied Piper) தனது இசையால் உலகில் உள்ள எலிகளை எல்லாம் தன்பின் வரச்செய்வது கடலில் இறக்கிக் கொல்கிறான் என்றொரு பழங்கதை. எலிகளைக் கொன்று தீர்த்துவிட மனிதர்கள் எப்படி எப்படியோ கற்பனை செய்து பார்த்திருக்கின்றார்கள்.

சோற்றுக்கடவுளாகப் பானைவயிற்றுக் கணபதியைக் கற்பித்துப் பயிரை அழிக்கும் எலிகளை அடக்கும்படி வேண்டினர் பாரதத்தார். அவர் அடக்கியதாகப் பாவனை கொண்டு எலியை அவருக்கு ஊர்தியாக வடித்தனர். ஆனால் இந்தக் கதைகளால் எல்லாம் என்றும் காரியங்கள் ஆனதாகத் தெரியவில்லை. பிள்ளையார் கோயில் பெருச்சாளிகளைப் பிடிக்கவும் எலிப்பொறிதான் வேண்டி இருக்கிறது.

படக்கடைகளில் விநாயகர் படங்கள் விற்பனை ஆகின்றன. இரும்புக் கடைகளில் எலிப் பொறிகள் விற்பனை ஆகின்றன. அதில் ஒன்றையும் இதில் ஒன்றையும் வாங்கிப் போய் வீட்டில் வைக்கின்றனர் பலர். இது எப்படி? இவர்கள் எதனை நம்புகின்றனர்? எலிகளைப் பிடிக்க எலிப் பொறிகளைத்தான் நம்புகின்றனர். விநாயகர்? அது வேறாம்! அந்த வேறு என்ன? அதனைத்தான் நாம் மூடநம்பிக்கை என்று கூறுகிறோம்.

சொரிக்குக் கந்தகத்தையும், கொசுவிற்கு வலையையும், எலிக்குப் பூனையையும் பொறியையும் கண்டுபிடித்தவர்களின் பகுத்தறிவுப் பாதை நமக்குப் பயனுள்ள பாதை.

பொறி தட்டும் கேள்விகள் அல்லவா?


-------------------4-1-2010 “விடுதலை” யில் கி.வீரமணி அவர்கள் எழுதிய ”வாழ்வியல் சிந்தனைகள் ”

1 comments:

sujin said...

அந்தக் குரங்குகள் தங்களைப் பிடித்திருக்கும் பேன்களையும் உண்ணிகளையும் ஒழித்துக் கட்டுவதற்குக் கடவுளர்களைத் தேடிக் கொண்டிருக்கவில்லை. பூசாரிப் பொய்யர்களை அவை நம்பவில்லை,பாதிரி பொய்யர்களையும் நம்பவில்லை ......