Search This Blog

20.1.10

கடவுள் சக்தியாவது வெங்காயமாவது!


சிற்பி

அவினாசி மற்றும் திருமுருகன்பூண்டி சிற்பக் கூடங்களில் உருவாக்கப்பட்ட அர்த்த நாரீஸ்வரர் சிலை லண்டனுக்கும், பிரித்யங்கரா தேவி சிலை தூத்துக்குடிக்கும் அனுப்பப்படுகின்றன என்றும், இந்தியாவில் தயாரிக்கப்படும் சாமி சிலைகள் பல நாடுகளுக்கும் அனுப்பப்படுகின்றன என்றும் படங்களோடு சாங்கோபாங்கமாக ஒரு நாளேடு செய்தி வெளியிட்டுக் கூத்தாடுகிறது.

கடவுள் இல்லை, இல்லவேயில்லை என்று நீங்கள் என்னதான் கரடியாகக் கத்தினாலும் வெளிநாடுகளுக்குக்கூட இங்கிருந்து கடவுள் சிலைகள் அனுப்பி வைக்கப்படுகின்றன என்று குத்திக்காட்டுவதுதான் இப்படி செய்திகளை வெளியிடுவதன் நோக்கமாகும்.

தந்தை பெரியார் அவர்கள் ஒருமுறை சொன்னது போல, முட்டாள்கள் என்ன இந்தியாவுக்கு மட்டுமே சொந்தமா, என்ன?

ஒன்றை இந்த இடத்தில் சுட்டிக்காட்டியாகவேண்டும். இந்தச் சிலைகள் கலைவண்ணத்துடன் உயரிய திறனுடன் உருவாக்கப்பட்டுள்ளன என்பதுதான் உண்மையே தவிர, இந்தச் சிலைகளுக்குச் சக்தியுண்டு; இவை வெறும் உலோகங்கள் அல்ல - கடவுள்கள்தான் என்று சத்தியம் செய்வார்கள் பக்தக்கோடிகள்.

இதுபற்றி பிரபல சிற்பி கணபதி ஸ்தபதி என்ன கூறுகிறார் என்று பார்க்கலாமா? குமரிமுனையில் 133 அடி உயரத்தில் திருவள்ளுவர் சிலையை உருவாக்கிக் கொடுத்த மேதையவர் _ அத்தகையவரே என்ன சொல்லுகிறார்?

ஒரு கடவுள் சிலையை வடிவமைக்கிறதுன்னா சும்மாவா? யார் பார்த்திருக்காங்க கட வுளை? அவர் எப்படி யிருப்பார்னு யாருக்குத் தெரியும்? எங்களால் மட்டும் எப்படி அத்தனைத் தத்ரூபமா ஒரு கல்லுல அவரைக் கொண்டுவர முடியுது? கோயிலுக்குப் போன உடனே அந்தச் சிலையைப் பார்த்து ஏன் அத்தனைப் பரவசப்படறீங்க?

நீங்க அனுபவிக்கிற பரவசத்தை, பக்தியைக் கொண்டு வரணும்னா ஒரு கல்லு, சிலையா மாறணும். அந்தக் கல்லுக்கு உயிர் வரணும். அப்பத்தான் கையைக் கூப்பி வணங்க முடியும். அந்த உயிரை யாரு கொடுக்குறாங்க? நாங்கதானே? எங்ககிட்ட அப்படி என்னதான் வித்தை இருக்குன்னு தெரிஞ்சுக்கவேண்டாமா?

(கல்கி பேட்டி, 11.6.2006).

இதன் பொருள் என்ன?

ஒரு கல்லை சிலையாக்கி, அதில், தன்னிடம் உள்ள கலைத் திறனால் ஈர்ப்புக் கவர்ச்சியை ஏற்படுத்துபவர் சிற்பி அவ்வளவுதானே தவிர, அதில் கடவுள் சக்தியாவது வெங்காயமாவது! எதுவும் கிடையாது என்பது இப்பொழுதாவது விளங்குகிறதா? இல்லையா?

ஆக, கடவுளை க(ல்)-பித்தவர் சிற்பிதானே _ மனிதன்தானே!

--------------- மயிலாடன் அவர்கள் 20-1-2010 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

0 comments: