(முகமூடி அணிந்துள்ள ஆர்.எஸ்.எஸ். அதன் ஆயுதமான ஹிந்துத்வத்தை எப்படியெல்லாம் சந்தர்ப்பத்திற்கேற்ப பயன் படுத்துகிறது என்பதைப் புரிந்து கொள்ள மிக அருமையான நூல் கர்கரேயைக் கொன்றது யார்? என்ற தலைப்பில், ஓய்வு பெற்ற அய்.பி.எஸ். அதிகாரியும் விருப்ப ஓய்வு பெற்று பதவி விலகிய மகாராஷ்டிர அய்.ஜி.யுமான முஷ்ரப் அவர்கள் எழுதியுள்ள நூல்!
பல திடுக்கிடும் உண்மைகள், மறைக்கப்படும் செய்திகள், இவற்றிற்கெல்லாம் மூல காரணங்கள் பார்ப்பனப் பிடிப்புக்குள் சிறைப்பட்டுள்ள அல்லது பார்ப்பனமயமான இந்திய உளவுத் துறையும், இந்திய ஊடகத்துறையும், கடமை தவறி ஒரு குலத்துக்கொரு நீதி சொல்லும் மனுநீதியின் மறு உருவங்களாகத் திகழ்கின்றன.
இந்நூல் முன்னுரை, மற்றும் முக்கிய சில அத்தியாயங்களை தமிழ் கூறும் நல்லுலகம் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக, மானமிகு சு.அறிவுக்கரசு அவர்கள் தமிழாக்கம் செய்து தருகிறார்; படியுங்கள்; (பேச்சாளர்கள்) பரப்புங்கள்.
- ஆசிரியர் கி.வீரமணி)
இத்தகைய திட்டங்களை வகுத்தவர்களே கூட, எதிர்காலத்தில் பார்ப்பனியச் சக்திகளுக்கு அரசியல் ஆதாயத்தையும் தேர்தலில் வெற்றிகளையும் பெற்றுத் தரும் மந்திரக் கோலாகப் பயன்படும் எனக் கற்பனை செய்து பார்த்திருக்க மாட்டார்கள். வகுப்புக் கலவரங்களைத் தூண்டிவிடுவதன் மூலம், சீர்திருத்த இயக்கங்களுக்கு எதிரான பார்ப்பனிய அமைப்புகள் தேர்தலிலும் வெற்றி பெற உதவிடும் என்பதைத் தூண்டி விட்டபோது அவர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. சீர்திருத்த இயக்கம்80 விழுக்காடு செல்வாக்கு பெற்றிருக்கும் பகுதியில் கூட, வகுப்புக் கலவரத்தைத் தூண்டிவிட்டால், அப்பாவி இந்துக்கள் எல்லா-வற்றையும் மறந்துவிட்டு பார்ப்பனியச் சக்திகளின் பக்கம் சுற்றி வருகின்றனர். தங்கள் அரசியல் லாபங்களுக்காக இந்தச் சூழ்நிலையை ஆர்.எஸ்.எஸ். பயன்படுத்திக் கொண்டது. ஆர்.எஸ்.-எஸ்.சின் இந்தச் செயல்பாட்டை எதிர்கொள்ளும் வகையில் , மதச் சார்பற்ற கொள்கையோடு ஓர் அரசியல் கட்சி இல்லாததால், பா.ஜ.கட்சி பல மாநிலங்களிலும் அதிகாரத்திற்கு வர முடிந்தது; மத்தியிலும் ஆட்சியைப் பிடிக்கும் நிலை பாபர் மசூதி இடிப்புக்குப் பின் நிகழ்ந்தது. ஆனால் இந்நிலை நீண்ட நாள் நீடிக்காது. வகுப்பு மோதல்களை பார்ப்பனியச் சக்திகள் தூண்டிவிடுவதை மக்கள் அறிந்தே வைத்திருக்கிறார்கள். குஜராத் கலவரங்களுக்குப் பிறகு, ஆர்.எஸ்.எஸ்.-காரர்கள் அம்பலப்பட்டு நிற்கின்றனர்; முசுலிம்களைப் பற்றித் தவறாகப் பேசுவதற்கு வேறு வழிமுறைகளைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.
படலம் -9
1818 இல் பிரிட்டிஷார் புனேயின் பார்ப்பன பேஷ்வாக்களின் ஆட்சிப் பகுதியைத் தம் பகுதியுடன் இணைத்துக் கொண்டனர். சத்ரபதி சிவாஜியின் வம்சத்தினரைத் தள்ளிவிட்டுப் பார்ப்பனிய பேஷ்வாக்கள் உண்மையான ஆட்சித் தலைமையில் இருந்த நிலை திரும்பவும் வரவேண்டும் என்கிற ஆசையில இருந்தனர். மக்களாட்சிக் காலத்திலும் அதிகாரத்தைப் பிடிக்க ஆசைப்பட்டு, அதற்கான அரசியல் வலிமை அவர்களுக்கு இருக்கிறதோ இல்லையோ அந்த நிலையை அடைவதற்கு ஆசைப்படுவதைக் கீழ்க் காணும் செய்தியால் அறியலாம். சுமிதா குப்தா எனும் பத்திரிகையாளர் எழுதியுள்ள சிறு விவரக் குறிப்பு இதனை விளக்கும்.
அவுட் லுக் (30-3-2009) இதழில் அந்த அம்மையார் எழுதுகிறார்:
என்னுடைய பார்ப்பன சகா ஒருவர் வி.என். காட்கிலிடம் அரசியல் அரங்கில் பார்ப்பனர்களின் பிடி தளர்ந்திருப்பதைப் பற்றிக் கூறினாராம். வெளிநாட்டில் படித்துப் பாரிஸ்டர் பட்டம் பெற்று மூன்று முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளராகவும் இருந்த காட்கில் சிரித்துக் கொண்டே, மகாராட்டிராவில், மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்பே பார்ப்பனர்கள் (பேஷ்வாக்கள்) மராத்தியர்களை ஆட்சியில் அமர அனுமதித்து அவர்களே உண்மையில் ஆட்சி செய்ததன் மூலம் அந்தப் பிரச்சினைக்குத் தீர்வு கண்டனர்’’ என்று கூறினாராம்.
மிகவும் முற்போக்கானவர் எனக் கருதப்படும் பார்ப்பனரின் கருத்தோட்டமே இப்படி என்றால், வன்முறையாளரான பார்ப்பனர்கள் எப்படி இருப்பார்கள் என்பதைக் கண்டு கொள்ளலாம்.
கடந்த 115 ஆண்டுகளில் இந்தியாவில் நடந்த ஜாதிச் சண்டைகள், வகுப்புக் கலவரங்கள் ஆகியவற்றைக் காணும் போது (பட்டியல் கீழே தரப் பட்டுள்ளது) 1893 இல் திட்டமிட்டுச் செய்யப்பட்ட வகுப்புக் கலவரம் முதல், தற்போதைய மும்பை, சி.எஸ்.ட்டி, காமா, ரங்கபவன் சந்து பயங்கரச் செயல் (நவம்பர் 2008) வரை ரகசிய, மெல்லிய இழை ஒன்று எல்லாவற்றிலும் இணைந்திருப்பதை அறிந்து கொள்ள முடியும்; அந்த மெல்லிய இழை மகாராட்டிரப் பார்ப்பனச் சக்தி தவிர வேறில்லை.
1. 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மகாராட்டிரத்தில் மகாத்மா ஜோதிராவ் புலே தொடங்கிய சமூக சீர்திருத்த இயக்கத்திடம் பொது மக்கள் ஈர்க்கப்படுவதைத் தடுக்கும் நோக்கத்துடன் 1893 இல் மராத்தியப் பார்ப்பனர்கள் திட்டமிட்டுத் தூண்டிய இந்து முசுலிம் கலவரம்,
2. சமூகத்தின் முசுலிம்களுக்கு எதிராக வெறுப்புக் கிருமிகளைப் பாய்ச்சும் பார்ப்பனிய அமைப்புகளான இந்து மகாசபை, ஆர்.எஸ்.எஸ். போன்றவை மகாராட்டிரத்தில் தொடங்கப்பட்டன.
3. இந்து மகா சபாவின் ஸ்தாபகர் வி.டி.சவர்க்கார் ஒரு மராத்திப் பார்ப்பனர். அதன் தலைமையகம் மகராட்டிரத்தில் உள்ள புனே.
4. ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தைத் தோற்றுவித்து அதன் முதல் தலைவராக இருந்த டாக்டர் ஹெக்டேவர் ஒரு மராத்திப் பார்ப்பனர். அதன் தலைமையிடமும் மகாராட்டிராவில் உள்ள நாக்பூர். (அப்போதைய மத்திய மாகாணம்). டாக்டர் ஹெக்டேவரின் பின் வந்த இரண்டு தலைவர்களான கோல்வால்கர் (குருஜி) மற்றும் பாலாசாகேப் தேவரஸ் ஆகியோரும் மராத்திப் பார்ப்பனர்கள். தற்போதைய தலைவர் மோகன் பகவத் மகாராட்டிரத்துக்காரர் தான். சர்சங்சாலக் எனப்படும் தலைமைப் பொறுப்பில் ராஜேந்திரசிங்ஜி மற்றும் கே. சுதர்சன் ஆகிய இருவரைத் தவிர அனைவரும் மராத்திப் பார்ப்பனர்களே! அண்மையில் தி இந்து ஏட்டில் வெளிவந்த செய்தியின்படி ஆர்.எஸ்.எஸ்.சின் முக்கிய பொறுப்பாளர்களில் 57 விழுக்காட்டினர் மகாராட்டிரத்தைச் சேர்ந்த பார்ப்பனர்களே.
5. மகாத்மா காந்தியைக் கொலை செய்யச் சதித் திட்டம் தீட்டப்பட்டதும் மகாராட்டிரத்தில்தான்; ஏறத்தாழ சதிகாரர்கள் அனைவரும், முக்கிய கொலைக் குற்றவாளியான நாதுராம் கோட்சே உள்பட, மகாராட்டினப் பார்ப்பனர்களே!
6. சாவுக்குப் பிறகும் கூட மகாத்மா காந்தியை விடவில்லை. கொலை செய்து 50 ஆண்டுகளுக்குப் பிறகு, அதன் பொன்விழாவைக் கொண்டாடுவது போல, நான் நாதுராம் கோட்சே பேசுகிறேன் எனும் தலைப்பில் நாடகம் நடத்தி, கொலை செய்தவனை நாயகனாக்கி, அமைதியின் காவலரான காந்தியைக் கொன்றதற்கு, பாகிஸ்தானுக்கு 55 கோடி ரூபாயைக் கொடுக்கச் சொன்னதுதான் காரணம் எனக் கூறி, கொலைகாரனைப் பெரிய தேசபக்தன் போலக் காட்டினர்.
இந்த நாடகம் நடந்த கொட்டகையில் முதல் வரிசையில் பார்ப்பனர்களே உட்கார்ந்து கொண்டு கதாநாயகன் (வேறு யார் கோட்சேதான்) சொல்லும் வசனங்களுக்கெல்லாம் பலத்த கைதட்டல் கொடுத்துக் கொண்டு இருந்ததால் பின் வரிசையில் இருந்தவர்களும் அதைப் பின்பற்றினர்; இந்தியச் சமூகத்தில் கூட ஒரு விழுக்காடு கூட இல்லாத பார்ப்பனர்களை மீதி 99 விழுக்காடுப் பேர் பின்பற்றும் அவலத்தைப் போல!
இந்த நாடகத்திற்கு மகாராட்டிரத்தில் எந்த ஒரு எதிர்ப்பும் இல்லை, இங்கொன்றும் அங்கொன்றுமாக வைக்கப்பட்ட பதாகைகளைத் தவிர! சில மதச்சார்பற்ற, சீர்திருத்த இயக்கங்கள் அவற்றை வைத்தன. பாபு, உங்களைக் கொன்றவர்கள் இன்னமும் உயிருடன் இருப்பதைக் கண்டு நாங்கள் வெட்கப்படுகிறோம் என்ற வாசகங்கள் எழுதி வைக்கப்பட்டன. என்றாலும் காந்தியின் தீவிர அனுதாபியான குஜராத்தைச் சேர்ந்த சுனிபாய் வைத்யா சிறு நூல் ஒன்றை சூரஜ் சேம் துல் என்ற தலைப்பில் எழுதினார்; நாடகத்தை சகட்டு மேனிக்குக் கண்டனம் செய்திருந்தார். அவர் எழுதியவாறு, 1934 முதல் காந்தியின் உயிரைப் பறிக்க ஆறுமுறை பார்ப்பனர்களால் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. நான்கு முயற்சிகள் நடந்தபோது, நாட்டுப் பிரிவினை என்ற பேச்சே கிடையாது. பாகிஸ்தானுக்கு 55 கோடி ரூபாய் தருவது என்கிற பிரச்சினையே எழவில்லை. இத்தகைய முயற்சிகளில் நான்கு மகாராட்டிரத்தில் நடந்தன. அவற்றில் மூன்று முயற்சிகளில் நாதுராம் கோட்சே சம்பந்தப்பட்டுள்ளார். இரண்டு சம்பவங்களில் மகாராட்டிரத்தின் பிற்போக்குத் தனமான இயக்கங்கள் ஈடுபட்டன.
-------------------------- "விடுதலை” 18-1-2010
0 comments:
Post a Comment