Search This Blog

23.1.10

பெரியார் மணியம்மைப் பல்கலைக் கழகம் - ஒரு விளக்கம்

புடம் போட்டுப் பார்க்கிறார்கள்!


1960 ஆண்டுகளிலே நான் தஞ்சை மருத்துவக் கல்லூரி மாணவன். எங்கள் என். சி. சி மாணவர் துப்பாக்கி சுடும் பயிற்சிக்கு ஒரு பொட்டல் இடத்திற்குச் செல்லுவோம். ஆழ்ந்த பள்ளங்கள், மேடுகள் நிறைந்த அந்தப் பகுதிக்கு யாருமே வரமாட்டார்கள்.

தந்தை பெரியார் நூற்றாண்டு விழா அவர் போற்றிய பெண் கல்விக்குப் பயன்படும் மாதிரிக் கொண்டாடப்படவேண்டும் என்று மானமிகு ஆசிரியர் அவர்கள் விரும்பினார்கள். கல்வி நிறுவனங்களில் திறமைசாலியான அய்யா மணிசுந்தரம் ஆலோசனையின் பேரில் பின் தங்கிய தஞ்சையில் தொழில்நுட்பக் கல்லூரி தொடங்கப்பட்டது. அந்தக் காட்டிலே தகரக் கொட்டகையிலே பல பெரியார் பெருந்தொண்டர்கள் இரவுக் காவலர்களாகத் தொண்டாற்றினார்கள். முட்புதர்கள் மொய்த்த தரை எங்கும்" என்றிருந்த இடம் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து சோலைவனமாகி விட்டது.

பலருடைய அயராத தொண்டினாலும் ஆசிரியர் அவர்களின் செல்லக் குழந்தையாக வளர்க்கப்பட்டதாலும், அந்த நிறுவனம் இன்று ஆல்போல் தழைத்துள்ளது. ஆசிரியப் பெருமக்கள் கனடா, அமெரிக்கா போன்ற நாடுகளில் பயிற்சி பெற்றும், செயின்ட் ஜான் பல்கலைக் கழக அரவணைப்போடும் பல நல்ல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு பல பாராட்டுக்கள், பரிசுகள் பெற்று முதல் தரமாக விளங்கி வருகிறது.

அங்கே உலகின் முதல் பெண்கள் பொறியியல் கல்லூரி தொடங்கப்பட்டது. அல்லும் பகலும் அரும்பாடுபட்டு மானமிகு ஆசிரியர் அவர்களும்,அங்குள்ள ஆசிரியப் பெருமக்களும், தஞ்சைத் தரணியிலே ஊன்றி வளர்க்கப்பட்ட நல்.இராமச்சந்திரனின் அயரா உழைப்பாலும் அது பெரியார் மணியம்மைப் பல்கலைக் கழகம் ஆனது. மற்றவர்கள் எல்லாம் வெளிநாடுகள் சென்றால் அவர்கள் குடும்பத்திற்கு என்ன வாங்கலாம் என்றுதான் ஆலோசிப்பார்கள். தமிழர் தலைவர் அய்யா அவர்களும், இராமச்சந்திரன் அவர்களும் பல்கலைக் கழகத்திற்கு என்ன செய்யலாம், என்ன வாங்கலாம் என்றுதான் ஓய்வில்லாமல் பல துறை வல்லுநர்களைச் சந்திப்பதும், கலந்துரையாடலில் நேரத்தை செலவழிப்பதையும் நேரிலேயே பார்த்து அறிந்து கொண்டவன் என்பதனால் உறுதியாகச் சொல்கின்றேன். என்னைப் போன்ற பல தமிழர்கள், பல துறை வல்லுநர்கள் அமெரிக்காவிலே கலந்து கொண்டவர்கள் உண்டு. அவர்களுக்குப் பலமுறை ஆசிரியர் அவர்கள் நன்றி தெரிவித்துப் பாராட்டியுள்ளார்கள்.

வல்லம் வந்து பார்த்து சென்ற பலர் ஆச்சரியப்பட்டு நெஞ்சாரப் பாராட்டி தாங்களே மனமுவந்து நன்கொடையும், உதவிகளும் செய்துள்ளார்கள். அது ஒரு பெரிய பட்டியலே என்றாலும், தலைவர்கள் வி.பி.சிங், ஜெயில்சிங், அப்துல் கலாம், கருப்பையா மூப்பனார், தமிழக முதல்வர்கள், பல வெளிநாட்டுப் பேராசிரியர்கள், உலகெங்கும் வாழ் தமிழ் அறிவியல் வல்லுநர்கள் பலர் என்று பட்டியல் நீளும்.

காஞ்சி சங்கராச்சாரியைப் போல ஒரே நாளில் உண்டான இந்தியாவின் சுவிஸ் வங்கி போன்று பணத்துடன் தொடங்கப்பட்டதல்ல. மக்களால், மக்களுக்காக, மக்கள் உதவியுடன் தொடங்கப்பட்ட மக்கள் பல்கலைக் கழகம்.

ஒவ்வொரு கல்லும், மரமும் அங்கே கதை சொல்லும். மக்களின் வியர்வையும், கருஞ்சட்டைப் படையின் குருதியும் அங்கே உயிருடன் வாழ்கின்றது. எவ்வளவு மக்கள் தொண்டு, எவ்வளவு சிறப்புகள், பெருமைகள் பெற்று நடந்து வருகிறது. நேரிலே வந்து ஆராய்ச்சி செய்த குழுவின் அறிக்கை ஆதரித்துள்ளதே. பெரியார் பெருந்தொண்டர்களின் குடும்பங்களே அந்த வெள்ளை யானைக்குத் தீனி போட வேண்டும் என்று கட்டணம் கட்டித் தானே படிக்கின்றார்கள். எத்தனைச் செல்வந்தர்கள் ஆதரிக்கிறார்கள். ஒரு சிலர் தானே! கருஞ்சட்டைப் படையின் நன்கொடைகள் தானே பெரும்பாலும்.

நன்றி கெட்ட நாய்கள் சில குரைத்துள்ளன. நாய்களுடன்கூட ஒப்பிடக் கூடாது. நாயாவது மோப்பம் பிடித்து ஆராய்ந்து பார்க்கும். எலும்புத்துண்டுக்கு ஆசைப்பட்டோ, இல்லை வேண்டாதவர்களின் வம்புப் பேச்சின் உண்மையை அறியாமலோ, இல்லை பதவி மமதையிலோ எந்த நோக்கத்துடனோ செயல்பட்டுள்ளது வன்மையாகக் கண்டிக்கப் பட வேண்டியது. தாங்கள் அமர்ந்துள்ள நாற்காலிகளை அசிங்கப்படுத்தும் இந்த அதிகார வர்க்கங்கள் தங்கள் வக்கிரப் புத்தியை ஒதுக்குவது அவர்களுக்கும் நல்லது, மக்களுக்கும் நல்லது. நேர்மையாக ஆராய்ந்து செயல்பட வேண்டியவர்கள் தவறிழைப்பது பல்லாயிரம் மக்களையும்,தமிழினத்தின் முன்னேற்றத்தையும் பாதிக்கிறது என்ற மலை போன்ற உண்மையை உணர முடியாதவர்கள் பட்டங்களையும் பதவிகளையும் தூக்கியெறிய வேண்டும். அல்லது தூக்கியெறியப்படுவார்கள்.

ஆசிரியர் ஒருமுறை விமானத்தில் பயணம் செய்யும்போது அருகிலிருந்த அம்மையார் கடுகடுவென்று இருந்தாராம். அப்புறம் ஆசிரியர் அவர்கள், பணிப்பெண், மற்ற வணக்கம் செய்பவர்களுடன் எப்போதும் போல அன்புடனும், அடக்கத்துடனும், கலகலப்பாகவும் பேசியதையெல்லாம் பார்த்து விட்டு அந்த அம்மையார் சொல்லியுள்ளார். உங்களைப் பார்த்தால் ரொம்ப நல்லவர் போலத் தோன்றது. இருந்தாலும் உங்க மேலே நேக்கு ரொம்ப கோபம் என்று கூறியுள்ளார். நீங்கள் யாரென்றே எனக்குத் தெரியாதே, தெரியாமல் கால் பட்டுவிட்டதா, என்ன நடந்தது? ஏன் கோபப்படுகிறீர்கள்? என்று கேட்டுள்ளார். அதெல்லாம் ஒண்ணுமில்லே. நீங்க அடக்கமா நேக்கு வழி விட்டேள், மரியாதை ரொம்ப தர்ரேள் மத்தவாளுக்கு. ஆச்சரியப்பட்டேன். நேக்கு கோபம் என் கடைசிப் பெண்ணுக்கு இடம் கிடைக்காமல் செஞ்சுட்டேள், அதான் கோபம், என்றாராம். மற்றக் குழந்தைகள் எல்லாம் நன்னா படிச்சுப் பெரியாளா இருக்கா. இவளுக்கு மட்டும் அட்மிஷன் கிடைக்காமல் இட ஒதுக்கீட்டால் ஆயிடுத்து என்றாராம். ஆசிரியர் பொறுமையாகக் கேட்டுள்ளார்.

ஒரே ஒரு மகளுக்குக் கிடைக்கவில்லை என்று இவ்வளவு கோபப்படுகின்றீர்களே, எங்கள் குழந்தைகள் எத்தனை கோடிப் பேர், எவ்வளவு வேதனையும், வருத்தமும், ஏமாற்றமும், எத்தனை ஆண்டுகள் அடைந்திருப்பார்கள், ஒரே நிமிடம் எண்ணிப் பாருங்கள் என்றாராம்.

நீங்க சொல்றது சரிதான், ஆனா நேக்குக் கோபம் கோபம்தான் என்று விடை பெற்றாராம்.

தந்தை பெரியாரும், பெரியார் நிறுவனங்களும், ஆசிரியர் அவர்களும், அவரது தொண்டர்களும் எத்தனையோ முறை, புடம் போட்டுப் பார்க்கப்பட்டுள்ளார்கள்.

நெருப்பை ஊதியவர்கள்தான் சூடுபட்டிருக்கிறார்களே தவிர, தங்கம், புடம் போடப்பட்ட தங்கமாகத்தான் ஒளிர்கிறது. நெருப்பை ஊதுபவர்களே, ஆசை தீர ஊதுங்கள்.

அவமானம் உங்களுக்கு; இனமானம் எங்களுக்கு. அது தான் பெரியார் கண்ட பாதை.

வாழ்க பெரியார்!


-------------------சோம. இளங்கோவன் சிகாகோ, (அமெரிக்கா) அவர்கள் எழுதிய கட்டுரை --நன்றி:- “விடுதலை” 23-1-2010

0 comments: