Search This Blog

27.1.10

பாம்பு - சாபம் - விமோசனம் -அர்ச்சகப் பார்ப்பனர்களுக்கு மட்டும் எப்படித் தெரிந்தது?


பாம்பு - சாபம் - விமோசனம்

வைரமோதிரச் சூரிய கிரகணம் முன்பு வந்தது 15 ஆண்டுகளுக்கு முன். இப்போது கங்கணச் சூரிய கிரகணமாம்! நிலவால் மறைக்கப்படும் சூரியன் நம் கண்களுக்குத் தோன்றும் தோற்றத்தை அழகுணர்ச்சியோடு உருவகப்படுத்திப் பெயர் வைத்து விட்டனர்.

இதேபோன்ற மறைப்பு 108 ஆண்டுகளுக்கு முன்புதான் ஏற்பட்டது என்றாலும், அது இயற்கையின் நிகழ்வுதானே! அறிவற்றவர்கள் இதனைப் பயன்படுத்தி என்னென்ன செய்து விட்டார்கள்! தாலி கழுத்தில் தங்காது, எனவே மஞ்சள் கயிறைக் கட்டிப் புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என்று தாலிக் கயிறு வணிகர்கள் கிளப்பிவிட்ட புரளியில் எவ்வளவு பேர்கள் அதைச் செய்தனர்! சில பெண்கள் ஒருபடி மேலே போய், அரச மரத்திற்கே தாலி கட்டிவிட்டனர். அரச மரம், தாலி கட்டிய புருஷன் ஆகிவிட்ட நிலையில் மற்ற சடங்குகள் எல்லாம் நடக்குமா, மரத்திடம்?

நேற்று, திருவண்ணாமலையில் ஆண் கடவுளுக்கும் பெண் கடவுளுக்கும் ஊடல் திருவிழாவை நடத்தியிருக்கிறார்கள். பக்த கே(டி)கள்! ஊடல் முடிந்ததும் கூடல் நடந்தால்தான் இன்பம் அதிகம் என்கிறார் வள்ளுவர். தெய்வீகத் தம்பதியரான இவர்களும் கூடி முயங்கினார்களா என்பதை ஏடுகள் எழுதவில்லை. இருட்டடிப்புச் செய்து விட்டன- இருட்டில் நடந்ததனாலோ?

சூரிய மறைப்பினால் ஏற்பட்ட சாபத்தைப் போக்கிக் கொள்ள நல்ல பாம்பு ஒன்று , வில்வ இலையைத் தன் வாயால் கவ்விக் கொண்டு லிங்கத்தின் மீது போட்டு பூஜித்தது என்று புருடாவை ஓர் ஏடு வெளியிட்டுள்ளது. இதுதான் சாக்கு எனக் கருதி அர்ச்சகப் பார்ப்பனர்கள் ஒவ்வொரு கிரகணத்தின் போதும் பாம்பு சாபத்தைப் போக்கிக் கொள்ள இம்மாதிரிச் செய்கிறது என்று கதை அளந்திருக்கிறார்கள். பாம்பு லிங்கத்தைக் கும்பிடுவதை இப்போதுதான் பார்த்தார்களாம். சினிமா படப்பிடிப்பு போல, காமராமேன் சகிதமாகத்தான் பாம்பு சாமி கும்பிட்டுச் சாபத்தைப் போக்கிக் கொள்கிறது. எல்லாம் சரி, பாம்புக்கு சாபம் என்றும் கிரகணம் தோறும் வருகிறது என்றும் அர்ச்சகப் பார்ப்பனர்களுக்கு மட்டும் எப்படித் தெரிந்தது?

இதையெல்லாம்., காவல்துறை விசாரித்து உண்மையை வெளிப்படுத்த வேண்டும். இல்லையேல், ஏமாற்றிப் பிழைப்பவர்கள் ஏராளம் பெருகிவிடுவர்.

பாம்பு கருவறைக்குள் போகிறது என்ற தலைப்பில் ஒரு படத்தை வெளியிட்டிருக்கிறது நாளேடு! ஏற்கெனவே காஞ்சிபுரத்தில், மச்சேஸ்வரன் கோயில் கருவறையில் ஒரு பாம்பு நுழைந்தது. அப்பாம்பின் பெயர் தேவநாதகுருக்கள். இப்போது தேப்பெருமாநல்லூர் சிவன் கோயிலில் பாம்பு நுழைகிறது. விஷயம் முத்திப்போகும் முன்பு விசாரிப்பது நல்லது.!!!


----------------------------------தி.க. பொதுச் செயலாளர் மானமிகு சு.அறிவுக்கரசு அவர்கள் 23-1-2010 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

0 comments: