Search This Blog

6.1.10

தந்தை பெரியாரே எழுதிய சுயசரிதை - 4


தந்தை பெரியாரே எழுதிய சுயசரிதை - 3

இதற்கு மத்தியில், ஜஸ்டிஸ் கட்சிக்கு விரோதமாக, ‘ சென்னை மாகாண சங்கம்’ என்ற பெயரால், பார்ப்பனரல்லாதாருக்கென்றே ஒரு சங்கம் துவங்கி வேலை செய்துவந்தது. அந்த “மெட்ரா° பிரசிடென்ஸி அஸோஸியேஷன்” என்ற சங்கத்துக்கு கேசவபிள்ளை தலைவர், லாட். கோவிந்ததா°, சல்லா குருசாமி செட்டியார், நாகை வி. பக்கிரிசாமிபிள்ளை, (காயாரோகணம் அவர்கள் தகப்பனார்) நான் ஆகியவர்கள் உபதலைவர்கள். டாக்டர் நாயுடு, திரு. வி. கல்யாணசுந்தர
முதலியார் அவர்களும் கார்யதரிசிகள் என்பது எனது ஞாபகம். அதில், நான் அதிக பங்கெடுத்துக்கொண்டேன். பத்திரிகைக்கு 1000 ரூபா கொடுத்தேன். 1000 ரூபாயுக்கு மேல் செலவு செய்து ஈரோட்டில் நான் வரவேற்புக் கழக தலைவனாக இருந்து லாட். கோவிந்ததாஸ் தலைமையில் ஒரு மகாநாடு நடத்தினேன். அதில் தமிழ்நாடு பிரபலஸ்தர்களும், தொண்டர்களும், முக்கியமான காங்கிரஸ்
தலைவர்களும் அறிமுகமானார்கள். விஜயராகவாச்சாரியார், சி. இராஜகோபாலாச்சாரியார், டாக்டர் ராஜன், சீரங்கம் கொடியாலம்
வாசுதேவ அய்யங்கார் பிள்ளை, கே.வி. ரங்கசாமி அய்யங்கார் முதலிய பார்ப்பன பிரமுகர்களும் மற்றும் எனக்கு முன்பு சாதாரண வியாபாரி என்கின்ற முறையில் அறிமுகமாகியிருந்தார்கள். பலரும் அரசியலிலும் சினேகமானார்கள். ஆனதால், பல வெளியூர் வியாபாரிகளும் சிதம்பரம் பிள்ளை, கல்யாணசுந்தர முதலியார், ஆதி நாராயண செட்டியார் முதலியவர்களும் அப்பொழுது முதல் அதிக சினேகிதர்கள் ஆனார்கள்.

அந்த மகாநாட்டில் 100-க்கு 50-க்குக் குறையாமல் பார்ப்பனரல்லாதாருக்கு உத்தியோகப் பிரதிநிதித்துவம் கொடுக்கப்படவேண்டும் என்று தீர்மானம் செய்யப்பட்டது. இதன் பயனாய் அரசியல் சம்பந்தமான எல்லாக் கூட்டங்களுக்கும், மகாநாடுகளுக்கும் நான்
அழைக்கப்பட்டேன். நானும் ஈரோட்டிலிருந்து பெரும் கூட்டத்தோடு
ஒவ்வொரு மகாநாட்டுக்கும் சென்றுவந்தேன். எனக்கு, என் தொழிலைவிட இதில் அதிக பற்று உணர்ச்சி ஏற்பட்டுவிட்டது. இந்த சந்தர்ப்பத்தில் ராஜகோபாலாச்சாரியார் சேலம் விட்டு, சென்னைக்கு போய்விட நினைத்தார். தன்னுடன் இருந்து, வேலை செய்ய என்னையும் அழைத்தார். தான் சேலம் சேர்மன் வேலையை விட்டுவிடுவதாகச் சொன்னார். டாக்டர் நாயுடு என்னையும் சேர்மன் வேலையை விட்டுவிட்டு தங்களோடு கலந்து அரசியல் காரியமே செய்யலாம் என்றார். மூவரும் கலந்து பேசியதில் எனக்கு துணிவு ஏற்பட்டு நானும் சம்மதித்துவிட்டேன்.


சர்க்கார் நடத்தையைக் கண்டித்து சேர்மன், தாலுகா போர்ட் பிரசிடெண்ட், ஜில்லா போர்ட் மெம்பர், யுத்தக் கமிட்டி கார்யதரிசி, ஹானரரி ரிக்ரூடிங் ஆபீசர் முதலிய பல கவுரவ வேலைகளை ஒரே காகிதத்தில் ராஜினாமா கொடுத்தேன். இது நடந்து பத்திரிகையில் வெளிவந்தவுடன் “சுதேசமித்திரன்”, “ ஹிந்து” இரண்டும் தலையங்கம் எழுதி என்னைப் புகழ்ந்து பிரமாதப்படுத்திவிட்டன. இதைப் பார்த்து அப்பொழுது சென்னை சர்க்கார் லோகல் முனிசிபல் டிபார்ட்மெண்ட் இலாகா நிர்வாகச் சபை மெம்பரான சர்.பி. ராஜகோபாலாச்சாரியார், தன்னை ஈரோடு ரயில்வே ஸ்டேஷனில் வந்து, அடுத்த நாள் காலையில் சந்திக்கும்படி சென்னையிலிருந்து தந்தியனுப்பினார். அப்போது,அவரை ரயிலில் போய் பார்த்தேன். பக்கத்தில் அவரது மலையாள மனைவி இருந்தார்; அந்த அம்மையாரிடம் அடிக்கடி என்னைப்பற்றி அவர் பேசுவது வழக்கம். அந்த அம்மையாரும், என்னிடம் அன்பாய்ப் பேசுவார்கள். அப்போதைக்கு, சுமார் இரண்டு மாதத்திற்குமுன், ஈரோட்டில் நான் சேர்மனாக இருந்து, ‘தண்ணீர்க் குழாய் துவக்க விழா’ நடந்தபோது, அதை நடத்த பி. ராஜகோபாலாச்சாரியாரை அழைத்ததற்கு, அவர் மனைவியுடன் வந்து துவக்க விழா நடத்தினபோது, என்னைப் பற்றி மிகமிகப் புகழ்ந்து பேசியதை அந்தம்மையும் கேட்டுக்கொண்டிருந்தார், ஆதலால், அந்தம்மையிடம் நான் சேர்மன் பதவியை ராஜினாமா கொடுத்துவிட்டதாக இவர் சொன்ன உடன், அந்தம்மையார் வருத்தப்பட்டு என்னை ராஜினாமாவை வாபஸ் வாங்கிக் கொள்ளும்படி செய்வதாக இந்தம்மையார் கணவனுக்கு சொல்லியிருக்கிறார். இதை அனுசரித்து, அந்தம்மையார் என்னைக் கண்டதும் அன்பாய் வரவேற்று, தனக்குப் பக்கத்தில் உட்காரச் சொன்னார்; நான் உட்கார்ந்தேன். உடனே அவர் கணவர் வண்டியை விட்டுக் கீழே இறங்கி, பிளாட்பாரத்தில் நின்றுகொண்டார். அம்மையார் “நாயக்கரே, நீங்கள் ராஜினாமா கொடுத்துவிட்டீர்களாம். நிஜமா?” என்றார். நான் “ஆம்”என்றேன். “அது சரியல்ல; எங்கள் அய்யர் உங்களுக்கு ராவ் சாகிப் பட்டம் சிபார்சு பண்ணியிருக்கிறார்; அய்யருக்கு அவமானமாய் விடும். அய்யர் ரொம்பவும் வருத்தப்படுகிறார். உங்களுக்கு, மேலும் ஏதோ உத்தியோகம் கொடுக்கவேணும் என்று யோசித்துக் கொண்டிருக்கிறார். நீங்கள் கண்டவங்க பேச்சைக் கேட்டு அப்படிச் செய்யாதீர்கள். அதை வாபஸ் வாங்கிக் கொள்ளுங்கள்” என்றார். “ செய்துபோட்டேனே அம்மா, இனி, வாபஸ்வாங்கினால் எனக்கு அவமானம். ஆபீஸிலும் நான் எல்லோரிடமும் சொல்லிவிட்டேன். ஊரிலும் கலெக்டர் முதல் கேட்டும் ‘மாட்டேன்’ என்று சொல்லிவிட்டேன். இனி, எப்படி வாபஸ் வாங்குவது? மன்னிக்கவேண்டும்.” என்று கெஞ்சினேன். அய்யர் (சர்.பி. ராஜகோபாலாச்சாரியார்) இதை ஜாடையாகப் பார்த்துக்கொண்டிருந்தார். ‘முடியவில்லை’ என்று அறிந்து, வந்து, வண்டிக்குள் ஏறினார். நான் எழுந்து நின்றேன். என் கையைப் பிடித்து “சிட்டவுன் மை பாய் (உட்காரு என் மகனே)” என்று உட்கார வைத்து, “நீ அப்படிச் செய்யாதே. உனக்கு பாலிடிக்ஸ் தெரியாது. உனக்கு அது தகுதியல்ல. நீ நல்ல வியாபாரி; உனக்கு வேண்டிய பெருமை ஏராளமாக இருக்கிறது . . . அதற்கு ஏன் போகிறாய்? . . . கவர்ன்மெண்டில், உன் மீது நல்ல அபிப்ராயம். கலெக்டரும் உன்னைப்பற்றி, நிறையச் சிபாரிசு செய்திருக்கிறார். என் பேச்சைக் கேள். நான் உன் தகப்பனார் - உங்கய்யா, எனக்குத் தெரிந்தவர். நான் உங்கள் ஊரில் சப்- கலெக்டராக இருந்தேன். என்ன சொல்கிறாய்? என்னிடமே ஒரு கடிதம் எழுதிக்கொடு . . . ‘ நான் ராஜினாமாவை வாபசு வாங்கிக் கொண்டேன்” என்று சொல்லி, ஒரு கடிதத்தைக் கொடுத்தார். நான் “மன்னிக்கவேண்டும். ஊரிலேயே குடி இருக்கமுடியாது. யார் யாரோ சொல்லி முடியாது என்று சொல்லிவிட்டேன்” என்றேன். “என்னமகாப்பிரமாதமாய் பேசுகிறாய். பண்டித மதன் மோகன் மாளவியாவே தான் கொடுத்த ராஜினாமாவை வாபஸ் வாங்கிக்கொண்டார். போன வராத்தில்; நீ என்ன பிடிவாதம் செய்கிறாய்?” என்றார்; நான் மறுபடியும் “மன்னிக்கவேண்டும்” என்று கைகூப்பி கும்பிட்டேன்; “நீ தவறு செய்கிறாய்; பொது ஜனங்களுக்கும் துரோகம் செய்கிறாய். உனக்கும் விரோதம் செய்து கொள்ளுகிறாய். உன் இஷ்டம் போ” என்று சொல்லி என்னை அனுப்பிவிட்டார். ரயில் புறப்பட்டுவிட்டது. இதற்குப் பிறகு ஊரில் எனக்கு இன்னமும் அதிக பெருமை ஏற்பட்டுவிட்டது.

இரண்டு மூன்று நாளில் ஈரோட்டுக்கு வந்த சி.ஆரிடமும், டாக்டர் நாயுடுவிடமும்
இதைச் சொன்னேன். அவர்களுக்கு என்னைப்பற்றி, மிகப் பெரிய எண்ணம் ஏற்பட்டுவிட்டது. ஒரு நல்ல ஆள் அவர்களுக்குக் கிடைத்ததாகக் கருதிக்கொண்டு என்னிடம் அதிக மரியாதை காட்டினார்கள். சி.ஆர். அவர்கள், என்னை சென்னைக்கு வந்துவிடும்படி அழைத்தார். தான் வாடகைக்கு வாங்கிக் குடியிருக்கும் பங்களாவில், ஒரு பாகம் இடம் காலியாய் இருப்பதாகவும், மனைவியுடன் வரும்படியும் அழைத்தார். டாக்டர் நாயுடு, என்னை சென்னைக்குப்
போகவேண்டாமென்றும், இஷ்டப்பட்டால் சேலத்துக்கு வந்து தன்னுடன்
ஒன்றாக குடும்பத்துடனே இருக்கலாம் என்றும்அழைத்தார். எனக்கு எங்காவது போய்விடலாம்; ஈரோட்டில் இருக்கவேண்டாம் என்றே தோன்றிற்று. ஆனால், ஈரோட்டு வியாபாரிகள், “நீங்கள் எங்கும் போகக்கூடாது, ஈரோட்டில் இருந்துகொண்டே எங்கு வேண்டுமானாலும் போங்கள்; நீங்கள் போய்விட்டால் ஊருக்கு மதிப்பு கெட்டுப்போகும்” என்றார்கள். என் மனைவிக்கு இவர்கள் வருவதும், போவதும் நான் வேலையை ராஜினாமா கொடுத்தும், சர்க்கார் ‘மெம்பர் டைடில்’ கொடுப்பதாகச் சொல்லியும் நான் ஒப்புக்கொள்ளாததும், ஊரையும், வீடு
வாசலையும், மாடுகளையும் விட்டுவிட்டு வெளியூருக்கு ஒண்டிக்குடியாய்ப் போவதும் சிறிதும் பிடிக்கவில்லை.

“ உனக்கு என்ன பயித்தியமா, நம்ம நிலை என்ன? சங்கதி என்ன? ஆளு அம்பு வாழ்க்கை என்ன? இவைகளை, திடீரென்று விட்டுவிட்டு யாரிடம் ஒப்புவித்துவிட்டுப் போவது? நீ வேண்டுமானால் போ; நான் வெளியூருக்குப் போய் ஒண்டிக்குடியாய் இருக்க முடியாது” என்று சொன்னார்கள். நான் “சரி, எங்கும் போகவில்லை இங்கேயே இருக்கிறேன். நீ மாத்திரம், நான் சொல்லுகிறபடி நடக்கவேண்டும்” என்றேன். ‘சரி’ என்று ஒப்புக்கொண்டார்கள். மகாநாடுகளுக்கும், காங்கிரஸ் மகாநாட்டுக்கும் நான் ஈரோட்டிலிருந்து பெருங்கூட்டத்துடன் செல்வேன். மகாநாடுகளில் எனக்குத் தனி மரியாதை இருக்கும்.

இந்த நிலையில், சென்னையில் இருப்பவர்களிடமிருந்து அரசியல் ஆதிக்கத்தைக் கைப்பற்றவேண்டும் என்பதாகக் கருத்துகொண்டு, ஒரு இரகசியக் கூட்டத்தை சீரங்கத்தில் சி.ஆர். கூட்டினார். அதில் சேலம் விஜயராகவாச் சாரியார், சி. ராஜகோபாலாச்சாரியார், டாக்டர். டி.எஸ்.எஸ். ராஜன், ஆதி நாராயண செட்டியார், ஜார்ஜ்ஜோஸப், டாக்டர் நாயுடு, நான் ஆகியவர்களே முக்கியமாய்க் கூடிப் பேசினோம். அதில் முக்கியமாகப் பேசினது “பெசண்டம்மையார் ஆதிக்கத்தை
ஒழிப்பதுதான்” இதற்கு ஒரு கமிட்டி நியமித்து, பண வசூல் செய்வது; ஊர் ஊராய் சென்று பிரச்சாரம் செய்வது ஆகியவை நோக்கம். பிரச்சாரத் திட்டம் என்னவென்றால், ‘பெசண்ட் அம்மை எங்கள் பிரதிநிதி அல்ல, அந்த அம்மாள் அபிப்பிராயம், இந்த நாட்டு மக்கள் அபிப்ராயமல்ல’ என்று உலகறியச் செய்யவேண்டும் என்பவையாகும். இதைச் செய்யச் சொன்ன கஸ்தூரி ரங்க அய்யங்கார் கூட்டம் இதில் ஒட்டிக்கொள்ள தைரியம் இல்லை. அது மாத்திரமல்லாமல், சி.ஆர். முன்னுக்கு வருவதும், அப்போது அவர்களுக்கு பொறாமையாய் இருந்தது. இதை அறிந்து சி.ஆர். ஓரு தனிக்கட்சி மாகாணத்துக்கே ஏற்படுத்த முயற்சித்தார்; அதற்கும் நாங்கள் சம்மதித்தோம்; திரு.வி.க. அவர்களும் இதில் முக்கிய பங்குகொண்டார். உடனே, சென்னை
சவுந்தர்ய மகாலில் அது நடக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அதற்குப் பெயர்
“மெட்ராஸ் நேஷனலிஸ்ட் அஸோஸியேஷன்.” அது கஸ்தூரி ரங்க
அய்யங்கார் கூட்டம் இதில் கலந்துகொண்டதற்குக் காரணம் - நான்,
டாக்டர் நாயுடு, திரு.வி.க. மூவரும் இதில் கலந்ததால் பார்ப்பனரல்லாதாரிடம் உள்ள செல்வாக்கு, தங்களுக்குப் போய்விடுமே என்ற பயம்தான். மற்றும் ஆந்திரா, மலையாளம், தமிழ் ஆகிய எல்லா நாடுகளிலிருந்தும் பிரதிநிதிகள் வந்தார்கள். இது பெரிய பிரபல மகாநாடாக ஆகிவிட்டது. வி.ஓ. சிதம்பரம்பிள்ளை, தண்டபாணிப் பிள்ளை ஆகியவர்களும் கலந்துகொண்டார்கள். அது பல
தீர்மானங்கள் செய்தது. அதில் 100-க்கு 30 ஸ்தானங்களுக்குக் குறைவில்லாமல் பார்ப்பனரல்லாதார் களுக்கு உத்தியோகம், பிரதிநிதித்துவம் எல்லாம் கொடுப்பது என்பதாக ஒரு தீர்மானம் செய்தது. இதற்கு முக்கியக் காரணம் நானேயாகும். டாக்டர் நாயுடுவும், திரு.வி.க.வும் உத்தியோக விகிதாச்சாரத்துக்கும் வகுப்பு உணர்ச்சிக்கும் அப்போது எதிர்ப்பானவர்கள். நான் ஒவ்வொன்றுக்கும் வகுப்பு வீதம் கேட்பவன். அதனால், எனக்காக அதைச் செய்தார்கள். அந்த மகாநாட்டுக்கு நான்கு காரியதரிசிகள், சி.ஆர். பிரதம காரியதரிசி, நான், டி. பிரகாசம், கே.பி. கேசவமேனன் மூவர் முறையே தமிழ், ஆந்திரம், கேரளம் ஆகிய மூன்று நாட்டுக்கு காரியதரிசிகள். விஜயராகவாச்சாரியார் தலைவர், கஸ்தூரி ரங்க அய்யங்கார், சிதம்பரம் பிள்ளை உபதலைவர்கள்.

இந்த இடத்தில் ஒரு முக்கிய சங்கதி; என் ஞாபகத்துக்கு வருகிறது. அதாவது ‘மதராஸ் நேஷனலிஸ்ட் அசோசியேஷனுக்கு’ சி. விஜயராகவாச்சாரியாரை தலைவராக பிரேரேபித்து மக்கள் ஒப்புக்கொண்ட உடன், சி. கஸ்தூரிரங்க அய்யங்கார் அவர்களை உபதலைவராக சி. ராஜகோபாலாச் சாரியார் பிரேரேபித்தார். உடனே வி.ஓ. சிதம்பரம் பிள்ளை அவர்கள் பெயரையும் நான் பிரேரேபித்து, இரண்டு உபதலைவர் இருக்கவேண்டும் என்று சொன்னேன். என். தண்டபாணிபிள்ளை இதை ஆமோதித்தார். கஸ்தூரிரங்க அய்யங்காருக்கு இது பிடிக்கவில்லை. சி.ஆர். அவர்கள் ‘ஒரே உபதலைவர் போதும்’ என்றார். இது வாதத்துக்கு இடமாய்விட்டதுடன், வி.ஓ. சிதம்பரம் பிள்ளைக்கு இந்த மரியாதை கொடுப்பது கஸ்தூரிரங்க அய்யங்கார் கூட்டத்திற்கும் மற்றும் சில பார்ப்பனர்களுக்கும் பிடிக்கவில்லை என்று அக்கூட்டத்தில் உள்ள பல பார்ப்பனரல்லாத மக்கள் உள்ளத்தில் பட்டுவிட்டது; சி.ஆர். ஆச்சாரியார் இதை சமாளிக்க என்னென்னமோ செய்து பார்த்தார். அவர் சாமர்த்தியம், கூட்டத்தில் பலமான பிளவு ஏற்படும்படி செய்துவிட்டது. உடனே, கூட்டத்தை ஒத்திவைத்து மாலைக் கூட்டத்தில் முடிவு செய்துகொள்ளலாம் என்று தள்ளி வைக்கப்பட்டுவிட்டது. நானும், டாக்டர் வரதராஜுலு நாயுடுவும், திரு.வி.க. அவர்களும், ராஜகோபாலாச்சாரியாரும் ஒரே காரில் ஏறி ஜாகைக்கு வரும்போது வழியில் ஆச்சாரியார் - உபதலைவர் நியமன சம்பவத்துக்கு சமாதானம் சொல்லும் முறையில், எங்களைப் பார்த்து, “இன்றைய நடவடிக்கை, ஜஸ்டிஸ்கட்சியாரே மேலானவர்கள் என்று கருதும்படியாக ஆகிவிட்டதே” என்று சொன்னார். அதற்கு நாங்கள் ஒருவரை ஒருவர் பார்த்து ஜாடை செய்துகொண்டதோடு நான் ஆச்சாரியாரைப் பார்த்து “தலைவர் விஜயராகவாச்சாரியார், உபதலைவர் கஸ்தூரிரங்க அய்யங்கார். தாங்கள் தலைமை காரியதரிசி இப்படி இருக்கும்போது ஒரு தமிழர் உபதலைவர்களில் ஒருவராகக் கூட இருக்க தங்களுக்கு இஷ்டமில்லை என்பதாக மக்கள் நினைக்கும்படியாக ஏற்பட்டுவிட்டதால்தான் சிலர் அந்தப்படி கிளர்ச்சிசெய்தார்களே ஒழிய, மற்றபடி வேறு காரணம் ஒன்றுமில்லை” என்று நான் சமாதானம் சொன்னேன்; ஆச்சாரியார் பேசவில்லை; மாலைக் கூட்டத்தில் ஒரே உபதலைவர் போதும் என்கின்ற பிரேரேபனைக்கு கஸ்தூரிரங்க அய்யங்கார் கட்சி ஓட்டு சேகரிப்பதாக சேதி தண்டபாணி பிள்ளையால் தெரிந்தது. ஆந்திரா, மலையாள பிரதிநிதிகள் எனது பிரேரேபனைக்கு எதிராக ஓட்டு செய்வார்கள் என்பதாகவும் தெரியவந்தது. உடனே நான் 50 ரூ. எடுத்து தண்டபாணிபிள்ளை அவர்களிடம் கொடுத்து 100 டெலிகேட் டிக்கெட் வாங்கி 100 தொழிலாளர் தோழர்களை அழைத்துவரும்படி செய்துவிட்டோம். மாலைக் கூட்டம் சௌந்தர்ய மகாலில் கூடிற்று; தொழிலாளர்கள் 100 பேர் வந்து உட்கார்ந்துவிட்டார்கள்; என் பிரேரேபனை ஜெயித்து விடும் என்று அய்யங்கார் கோஷ்டி தெரிந்துகொண்டது. இந்த சமயத்தில் ஆச்சாரியார் ஒரு தந்திரம் செய்து ஒரு சமாதான தீர்மானம் கொண்டுவந்தார். அது என்னவென்றால், 4 உபதலைவர்கள் - அதில் வி.ஓ.சி. உள்பட சத்தியமூர்த்தி அய்யரும் ஒருவர் - என்பதாக பிரேரேபித்தார்; நான் ஒப்புக்கொண்டேன்; மற்ற தோழர்கள் அதாவது டாக்டர் நாயுடு, திரு.வி.க., தண்டபாணிப்பிள்ளை ஆகியவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை. இவர்கள், ஒப்புக்கொள்ளாததால் 4 உபதலைவர்கள் தீர்மானம் தோல்வியுறும் போலாகிவிட்டது; பிறகு, ஓட்டுக்கு விடாமலேயே எனது பிரேரேபணை ஒப்புக்கொள்ளப்பட்டு கஸ்தூரி ரங்க அய்யங்காரும், வி.ஓ. சிதம்பரம் பிள்ளையும் உபதலைவர்களானார்கள். சத்தியமூர்த்தி அய்யருக்கும், ஏ. ரெங்கசாமி அய்யங்காருக்கும் அந்த கமிட்டியில் மெம்பர் பதவிகூட கிடைக்கவில்லை. டாக்டர் நாயுடு, டி.எஸ்.எஸ். ராஜன், திரு.வி.க. ஆகியோரும் மற்றும் பலரும் முக்கிய மெம்பர்கள். இதன் பயனாய் சென்னையில் மாகாணத்துக்கே தலைவர்களாக இருந்துவந்த ரங்கசாமி அய்யங்கார் கோஷ்டிக்கும், பெசண்ட் கோஷ்டிக்கும், ராஜகோபாலாச்சாரியார் கோஷ்டியாக இருந்த எங்கள்மீது பொறாமை ஏற்பட்டது. நாங்கள் மூவரும் அதாவது நான், ஆச்சாரியார், நாயுடு ஆகிய மூவரும் அதிக நண்பர்களாகிவிட்டோம். எங்களுக்கு விரோதமாய் கஸ்தூரிரங்க அய்யங்காரும், ரெங்கசாமி அய்யங்காரும் தங்கள் பத்திரிகைகளில் ஜாடையாகவும், சத்திய மூர்த்தி அய்யரைக் கொண்டு வெளியிடங்களில் வெளிப்படையாகவும் எதிர்ப் பிரச்சாரம் செய்யச் செய்தார்கள். நாங்கள் ஆச்சாரியாரை கண்ணைமூடிக்கொண்டு ஆதரித்ததால் அவர்கள் செல்வாக்கு குறைய ஆரம்பித்தது. அநேக பார்ப்பனர்களும் எங்களை ஆதரிக்க முன்வந்துவிட்டார்கள்.

இந்தக் காலத்தில்தான் காந்தியார் அரசியலில் விளம்பரமாகினார். இவருக்கு சி.ஆர். மிக்க உதவி; பஞ்சாப் படுகொலை நடந்த சமயம்; அதன் பயனாய் நாடெங்கும் ஆத்திரம் பொங்கி எழுந்த
காலம். பஞ்சாப் படுகொலையைக் கண்டித்து, எங்கும் கண்டனக்கூட்டம்.
இந்த வருஷம் 1919 என்பது ஞாபகம். இந்த டிசம்பரில் மோதிலால் நேரு
தலைமையில் அமிர்தசரசில் காங்கிரஸ் மகாநாடு ஏற்பாடாகியிருந்தது.
இந்த காங்கிரஸ் மகாநாடு பிரபல காங்கிரசாகிவிட்டது. நானும் ஆச்சாரியாரும் இந்துமித்திரன் கூட்டமும் ஏராளமான மக்களும் சென்றிருந்தோம். அங்கு சென்று நேரில் அந்த படுகொலை சம்பவங்களைப் பார்த்த பிறகு எனக்கு மிகுந்த ஆத்திரம் வந்தது. நான் தீவிர தேசியவாதியாகிவிட்டேன்.

--------------------- -------------------நூல்:- “தந்தை பெரியாரே எழுதிய சுயசரிதை” பக்கம்:18 - 25

0 comments: