Search This Blog

5.1.10

இந்துமத பரிபாலன மசோதாவும் பார்ப்பனர்கள் சூழ்ச்சியும்

பனகல் ராஜாவுக்கு ஜே!

தென்னாட்டுப் பார்ப்பனர்களின் எவ்வளவோ சூழ்ச்சிக்கும் தப்பி இந்துமத பரிபாலன மசோதா என்று சொல்லப்படும் தேவஸ்தான மசோதா சட்டசபையில் சட்டமாக நிறைவேறி விட்டது. தேவஸ்தானச் சட்டம் சட்டசபைக்கு வந்தவுடன் பலர் அதை முட்டித் தள்ளிவிட என்ன என்னமோ சூழ்ச்சிகள் செய்து பார்த்தும் சுமார் 500 திருத்தப் பிரேரேபணைகளைக் கொண்டுவந்து தங்களால் ஆனவரையில் அதை ஒழிக்கப் பார்த்தார்கள். கடைசியாகப் பொது ஜனங்களின் அதிகப்படியான பிரதிநிதிகளும் சர்க்காரும் இவைகளுக்குக் கொஞ்சமும் மனந்தளராமல் ஒரே உறுதியாய் இருந்து சட்டத்தை நிறைவேற்றி விட்டார்கள். திருத்தப் பிரேரேபணைகளின் யோக்கியதைகளைச் சரியாய் கவனித்து வந்தவர்களுக்கும் சட்ட சம்மந்தமாய்க் கிளப்பப்பட்ட ஆட்சேபனைகளைச் சரியாய்க் கவனித்து வந்தவர்களுக்கும், இச்சட்டத்தை ஆட்சேபித்தவர்கள் கருத்து என்ன என்பது விளங்காமல் போகாது.

இதில் பொதுமக்கள் கவனத்தைக் கவரத்தக்க ஒரு திருத்தப் பிரேரேபணையைப் பற்றி இதில் பிரதாபிப்போம். அதாவது எல்லா கோவில்களிலும் பஞ்சமர்கள் என்றும் ஒடுக்கப்பட்டவர்கள் என்றும் சொல்லப்படும் வகுப்பாரும் கோவில்களுக்குள் சென்று சுவாமி தரிசனம் செய்ய உரிமை இருக்கத்தக்க வண்ணம் ஒரு திருத்தப் பிரேரேபணையைக் கொண்டு வந்தார்கள். இந்த திருத்தப் பிரேரேபணையானது தாழ்ந்த வகுப்பார் என்பவர்கள் தெருவில்கூட நடக்ககூடாது என்று வாதாடும் கூட்டத்தாராகிய பார்ப்பனர்களின் சூழ்ச்சியாலேயே இரண்டு வித உத்தேசத்துடன் கொண்டுவரப்பட்டது. அதாவது, அதை ஒப்புக் கொண்டாலும் கஷ்டம், ஒப்புக் கொள்ளாவிட்டாலும் கஷ்டம் என்கிற இரட்டை வெட்டில் ஜஸ்டிஸ் கட்சியாரைக் கொண்டுவந்து சங்கட நிலையில் நிறுத்தச் செய்த குயுக்தியான தந்திரமாகும். எப்படியெனில் அதை ஒப்புக் கொண்டால் அச்சட்டத்தையே நிறைவேறாமல் செய்ய நமது பார்ப்பனர்களுக்கு சவுகரியமேற்பட்டுவிடும். முதலாவது, இச்சட்டத்தை சட்டசபைக்கு மறுபடியும் கொண்டு வரவேண்டியிருந்த அவசியமென்ன வென்றால் அதில் சில சட்ட சம்மந்தமான குறைகள் இருந்து விட்டதுதான். அக் குற்றங்களை நிவர்த்தி செய்து அமலுக்குக் கொண்டு வருவதற்காக மறுபடியும் சில சிறு திருத்தங்களோடு சட்டசபை மூலமாய் நிறைவேற்றி இந்தியா கவர்ன்மெண்ட்டுக்கு அனுப்ப வேண்டியதாயிற்று. இச்சட்டத்தை மறுபடியும் சட்டசபைக்கு கொண்டுவர வைசிராய் பிரபுவிடம் பனகால் அரசர் அனுமதி கேட்க சென்ற இரண்டு மாதத்திற்கு முன் டில்லி போயிருந்தபோது நமது பார்ப்பனர்கள் இங்கிருந்து சில மடாதிபதிகள் பேரால் பல தந்திகளும் மகஜர்களும் அனுப்பி சட்டத்தில் அதிக திருத்தம் செய்யப் போகிறார்கள் என்றும், இதனால் மதம் கெட்டுப் போய்விடும் என்றும், பெரிய கலகம் ஏற்படும் என்றும் மிரட்டினார்கள். இதை நம்பி வைசிராய் பிரபு பனகால் அரசருக்கு சில குறிப்பிட்ட நிபந்தனையின் மேல் மறுபடியும் திருத்த மசோதா கொண்டு வர அனுமதி கொடுத்தார்.

இது நமது பார்ப்பனர்களுக்கு நன்றாய்த் தெரியும். ஆதலால் சட்டத்தில் ஏதாவது பிரமாதமான திருத்தங்கள் செய்து அதை மந்திரி ஒப்புக் கொண்டால் இதை ஆதாரமாய் வைத்துக் கொண்டு வைசிராய் பிரபுவிடம் போய் பழக்கத்திற்கு விரோதம், வழக்கத்திற்கு விரோதம், சாஸ்திரத்திற்கு விரோதம், வேதத்திற்கு விரோதம், மதத்திற்கு விரோதமென்று மாரடித்து அவர் அனுமதி கிடைக்கவிடாமல் செய்து அதைச் செல்லுபடியற்றதாக்கிச் சட்டத்தையே ஒழித்து விடலாம் என்கிற கெட்ட எண்ணத்தின் பேரிலும், ஒரு சமயம் இதை மந்திரி ஒப்புக் கொள்ளாவிட்டால் தாழ்ந்த வகுப்பார் என்கிறவர்களைத் தூக்கிவிட்டு அவர்களிடம் போய் நாங்கள் உங்களைக் கோவிலுக்குள் விட அனுமதிக்கும்படியான சட்டம் செய்யத் திருத்தம் கொண்டு வந்தோம்; அதை உங்கள் ஜஸ்டிஸ் கட்சியார்தானே தோற்கடித்து விட்டார்கள்; இதிலிருந்து தாழ்ந்த வகுப்பாருக்கு நாங்கள் உதவியாயிருக்கிறோமா? ஜஸ்டிஸ் கட்சியார் உதவியாயிருக்கிறார்களா? என்பதை தெரிந்து கொள்ளுங்களென்று சொல்லி, ஜஸ்டிஸ் கட்சியார் பேரில் தாழ்த்தப்பட்ட வகுப்பாருக்குத் துவேஷத்தை உண்டாக்கி விடலாம் என்கிற கெட்ட எண்ணத்தின் பேரிலும் இத் திருத்தத்தைக் கொண்டு வந்தார்கள். இதை லட்சியம் செய்யாமல் மந்திரி கட்சியார் தைரியமாய் எதிர்த்துத் தோற்கடிக்கச் செய்தது அவர்களின் புத்திசாலித்தனத்தைக் காட்டுகிறது.

ஏனெனில் தாழ்த்தப்பட்ட வகுப்பாரின் நிஷ்டூரம் வருமே என்பதாகப் பயந்து திருத்தத்தை ஒப்புக் கொண்டிருப்பார்களேயானால் கண்டிப்பாய் வைசிராய் பிரபு சட்டத்தையே நிராகரித்திருப்பார். அப்படி நிராகரிக்கப்பட்டு அமலுக்கு வரமுடியாத சட்டத்தில் எந்த பிரேரேபணையை சேர்த்தால்தான் என்ன பிரயோஜனம்? ஆதலால் ஏதாவது ஒரு சட்டத்தை நிறைவேற்றி அதற்கு எல்லா அனுமதியும் பெற்று அது முதலில் அமலுக்கு வரும்படி செய்து கொண்டால் பிறகு தனித்தனியாய் இவ்விதத் திருத்தம் கொண்டு வருவதில் யாருக்கு ஆட்சேபனை இருக்கிறது என்று பார்த்தால் அப்பொழுதுதான் இந்தப் பார்ப்பனரின் தாராள குணமும் அவர்கள் சிஷ்யர்களின் தாராள குணமும் நன்றாய்த் தெரியும். இதைப் பற்றி நாம் ஸ்ரீமான் ஆர். வீரய்யன் அவர்களைக் கண்டு பேசியதில் அவர்கள் இப்பார்ப்பனர்களின் சூழ்ச்சியை நன்றாய் அறிந்திருப்பதாகவே தெரிய வந்தது. அவர் சொன்னதென்னவென்றால் இச் சட்டத்திற்கு வைசிராய் பிரபு சம்மதம் கொடுக்காமல் நிராகரித்து விடுவதற்கு ஆதாரம் வேண்டுமென்றே இத் திருத்தம் கொண்டு வந்தார்கள் என்றே எனக்குத் தோன்றிற்று. இது பாசாகி இருந்தால் கண்டிப்பாய் இந்தச் சட்டம் முழுதுமே நிராகரிக்கப்பட்டு அடிப்பட்டுப்போகும் என்பதும் எனக்குப் பட்டது என்று சொன்னார். அப்படியானால் தாங்களும் ஏன் இதை ஆதரித்தீர்கள் என்று கேட்டதில் நான் ஆதரித்திராவிடில் இந்தப் பார்ப்பனர்கள் எனக்கும் என் சமூகத்தாருக்கும் கோவில் பிரவேசம் கிடைப்பதில் சம்மதம் இல்லை என்று கட்டி விட்டு, பின்னால் சமயம் வரும்போது நானும் கோவில் பிரவேசத்தை எதிர்த்தவன் என்கிற ரிக்கார்டு செய்து கொள்வார்கள். ஆதலால்தான் நான் ஆதரித்தேனேயொழிய வேறல்ல என்ற பொருள்படச் சொன்னார்.

உண்மையில் இப்பார்ப்பனர்கள் தாழ்த்தப்பட்டவர்களைக் கோவிலுக்குள் செல்லவோ சம உரிமை கொடுக்கவோ இஷ்டப்பட்டு அத்தீர்மானம் கொண்டு வந்திருப்பார்களே யானால் இப்பொழுதும் ஒன்றும் முழுகிப் போய் விடவில்லை. சுயராஜ்யக் கட்சியார் என்கிற பார்ப்பனர் நாங்கள் தெரிந்தெடுக்கப்பட்டால் தாழ்ந்த வகுப்பார் என்று சொல்லப்படுகிற இந்துக்கள் எல்லோரையும் சென்னை மாகாணத்தில் பொதுவாயுள்ள எல்லா கோவில்களுக்குள்ளும் பிரவேசிப்பதைத் தடுப்பவர்களுக்கு 6 மாதம் தண்டனையும் 1000 ரூபாய் அபராதமும் போடப்படும் என்று இந்தியன் பீனல் கோடில் ஒரு திருத்தமும் தேவஸ்தானச் சட்டத்தில் ஒரு திருத்தமும் கொண்டு வருகிறோம் என்று எழுதி விளம் பரப்படுத்தட்டுமே பார்ப்போம். இப்படி செய்வார்களானால் எலெக்ஷனில் இவர்கள் வெற்றி பெற எல்லோரும் முயற்சி செய்யலாம். அதில்லாமல் உள்ள சட்டத்தையும் கூடப் போடுவதற்காகத் தந்திரம் செய்து கொண்டு நீலிக் கண்ணீர் விட்டால், ஜஸ்டிஸ் கட்சியார் இதற்கு ஏமாந்து விடத்தக்க அவ்வளவு பைத்தியக்காரரா என்றுதான் நாம் கேட்கிறோம். பொதுவாக செல்வாக்குள்ள பத்திரிகைகள் எல்லாம் பார்ப்பனர்கள் கையில் இருப்பதால் அவர்கள் தங்கள் பத்திரிகையில் இந்தப் பித்தலாட்டங்களை வெளிப்படுத்தாமல் ஜஸ்டிஸ் கட்சியாரிடம் பொதுஜனங்களுக்கு வெறுப்பும் துவேஷமும் உண்டாகும்படி தாறுமாறாக உண்மைக்கு விரோதமாய் எழுதி வந்ததின் பலனாய் பாமர ஜனங்கள் ஏமாந்து விட்டார்கள் என்றே சொல்லுவோம். இவ்விஷயத்தைப் பற்றி சில தாழ்த்தப்பட்ட வகுப்பாரிடமிருந்தும் நாடார் வகுப்பாரிடமிருந்தும் பார்ப்பனரல்லாத கட்சியார் பேரில் குறைகூறி பல கடிதங்கள் வந்து கொண்டிருக்கின்றன. அதற்காகவே இதை எழுதுகிறோம். இம்மாதிரி பார்ப்பனர்களால் கட்டிவிட்டுக் கொண்டிருக்கும் விஷமங்களுக்கு எவ்வளவு தான் பதில் சொல்லிக் கொண்டிருக்க முடியும். பார்ப்பனப் பத்திரிகைகளே தமிழ்நாட்டில் பெரும்பாலும் செல்வாக்குப் பெற்று உலவி வருவதாலும் பார்ப்பனரல்லாத பத்திரிகைகள் பெரும்பாலும் இதைப்பற்றி ஒரு சிறிதும் கவலைப்படாமல் வயிற்றுப் பிழைப்பையோ போலித் தலைமைப் பதவியையோ தாட்சண்ணியத்தையோ நோக்கமாகக் கொண்டு நடந்து வருவதால் உண்மை அறிய முடியாமல் போகிறது. பார்ப்பனப் பத்திரிகைகளை நம்பி ஏமாந்து போய்த் தங்கள் சமூகத்திற்குக் குழி வெட்டிக் கொள்ளாதிருக்குமாறும் பார்ப்பனருக்கும் அவரது சிஷ்யர்களுக்கும் ஓட்டுச் செய்யா திருக்குமாறும் எச்சரிக்கிறோம்.

------------------- "குடிஅரசு" துணைத்தலையங்கம், 26-09-1926

0 comments: