Search This Blog

3.1.10

கலைஞரும் - உலகத் தமிழ் மாநாடும்


தமிழால் ஒன்றுபடுவோம்!

1995 ஜனவரியில் தஞ்சையில் எட்டாவது உலகத் தமிழ் மாநாடு நடந்து முடிந்து 15 ஆண்டுகளுக்குப்பின் கோவை மாநகரில் 2010 ஜூன் திங்களில் உலகத் தமிழ் செம்மொழி மாநாடு நடைபெற உள்ளது.

தமிழ் செம்மொழி என்ற அறிவிப்புக்குப்பின் நடைபெறும் முதல் மாநாடு என்கிற முறையில் இம்மாநாட்டுக்குத் தனிச் சிறப்பு உண்டு.

எதிலும் அரசியல் என்னும் ஒட்டகமும் நுழையும் தன்மை தமிழ் மண்ணில் இருப்பதால், இதிலும் அதன் வாடை வீசத்தான் செய்கிறது.

முதலமைச்சர் மானமிகு மாண்புமிகு கலைஞர் அவர்களைப் பொறுத்தவரை மிகுந்த பொறுப்புணர்ச்சியுடனும், தன்னடகத்துடனும், கட்சிகளைக் கடந்து இம்மாநாடு ஒட்டுமொத்த தமிழர்களின் உண்மை உணர்வுகளை வெளிப்படுத்தவேண்டும் என்ற எண்ணத்தில் அவரின் அணுகுமுறைகள் சிறப்பாக அமைந்துள்ளன என்பது உண்மை.

ஒரு முதலமைச்சர் என்ற அதிகாரத் தோரணை சிறிதும் இன்றி, பங்கேற்க முடியாது என்று கூறுகிறவர்களையும் கூடப் பக்குவமாக எழுதி ஒருமைப்படுத்தும் பண்பாடு சாதாரணமானதல்ல.

இந்த அளவுக்கு இவர்களிடமும் ஒரு முதலமைச்சர் இறங்கிப் போகவேண்டுமா என்ற ஒரு கருத்துகூட ஏற்பட வாய்ப்புள்ளது. அந்தச் சம்பிரதாயங்களையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு, நோக்கத்தின் முக்கியத்தைக் கருதி, அதற்கு முதன்மை இடம் கொடுத்து, மிகப்பெரிய அளவுக்குப் பெருந்தன்மையைக் காட்டி நடந்துகொண்டு வருகிறார்.

இதற்கு மேலும் சில கட்சிகள், சில தலைவர்கள் இம்மாநாட்டைப் புறக்கணிக்க எத்தனிப்பது அத்தகையவர்களை வரலாறுதான் முழு அளவு அடையாளம் காட்டும்.

அறிஞர் அண்ணா அவர்கள் முதலமைச்சராக இருந்து சென்னையில் உலகத் தமிழ் மாநாட்டை நடத்திய காலகட்டத்தில், எதிரும் புதிருமாக அரசியலில் இருந்த நிலைமையை மறந்து காங்கிரஸ் கட்சியும் அதில் பங்கு கொண்டதை ஒரு முன் மாதிரியாகக் கொள்ளவேண்டும்.

தமிழ் செம்மொழி குறித்தும், உலகத் தமிழ் மாநாடுகள் குறித்தும் முதலமைச்சர் கலைஞர் அவர்கள் முரசொலியில் எழுதியுள்ள தொடர் கட்டுரைகள் தகவல்களின் ஆவணப் பெட்டகமாகும்.

தமிழ் செம்மொழிபற்றி யார் முதலில் கருத்துக் கொண்டார்கள் என்ற வரிசையில் பார்க்கப் போனாலும் திராவிட இயக்கத்திற்கு முக்கிய இடம் உண்டு.

1918 மார்ச் 30, 31 ஆகிய நாள்களில் நடைபெற்ற தஞ்சை, திருச்சி பார்ப்பனர் அல்லாதார் மாநாட்டில் கீழ்க்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தீர்மானம் 8 (ஆ)

எல்லாப் பழைமையான மொழிகளைப் போல பழைமையான வளமான, உயர்தரமாக உருவாக்கப்பட்ட பலதிறப்பட்ட இலக்கியங்களைக் கொண்டது தமிழ்மொழி. இது பல்கலைக் கழகத்தால் பாரசீக, அரேபிய, சமஸ்கிருத மொழிகட்கு ஈடாக மதிப்பிட்டுச் செம்மொழி என ஏற்றுக்கொள்ளப்படவேண்டும்.

முன்மொழிந்தவர்: திரு. ஜே.பி. நல்லுசாமி பிள்ளை பி.ஏ., பி.எல்., மதுரை. வழிமொழிந்தவர்: திரு. ந.மு. வேங்கடசாமி நாட்டார், தமிழ்ப் பண்டிதர், எஸ்.பி.ஜி. கல்லூரி, திருச்சிராப்பள்ளி. ஆதரித்தவர்: திருமதி அலர்மேலு மங்கை தாயாரம்மாள், சென்னை.

இந்தப் பாரம்பரியத்தில் வந்த கலைஞர் அவர்கள் முதலமைச்சராகவிருக்கும் இந்தக் காலகட்டத்தில் தமிழ்மொழி செம்மொழியானதும், உலகத் தமிழ் செம்மொழி மாநாடு நடப்பதும் வரலாற்றில் என்றென்றும் பேசப்படக் கூடிய புகழ்மிக்க அத்தியாயங்கள் ஆகும்.

வெறும் ஆர்ப்பாட்டம், கலை வண்ணம் என்கிற அளவோடு இம்மாநாடு முடிந்துவிடாமல், இந்திய ஆட்சி மொழிகளின் பட்டியலில் தமிழுக்குச் சிம்மாசனம் கிடைக்கவேண்டும் என்பது உள்பட பயனுள்ள நோக்கங்கள் நிறைவேற்றப்பட இம்மாநாடு உந்து சக்தியாக இருக்கும் என்கிற நன்னம்பிக்கையை முதலமைச்சர் கலைஞர் அவர்களின் உரையும், பேட்டியும் (31.12.2009) அளிக்கின்றன.

உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் இதுவரை 1244 தமிழ்ப் பிரதிநிதிகள் பங்கேற்பர் என்ற செய்தி தமிழர்களின் காதுகளில் தேன் வந்து பாயக் கூடியதாகும்.

இந்தப் பெருமையிலும், சாதனையிலும் அனைத்துத் தரப்பினரும் தங்களுக்கும் பங்கு உண்டு என்று காட்டிக் கொள்ளவேண்டாமா?

வேறு எதிலும் ஒன்றுபட முடியாத தமிழர்கள், தமிழால் ஒன்றுபட்டனர் என்ற புது வரலாற்றைப் பதிவு செய்யவேண்டாமா? எதிர்மறைச் சிந்தனைக்கு விடை கொடுத்து நேர்முகச் சிந்தனைக்கு இடம் கொடுக்கவேண்டுமாய் தாய்க்கழகமும் கேட்டுக்கொள்கிறது.

----------------”விடுதலை” தலையங்கம் 2-1-2010

0 comments: