Search This Blog

10.1.10

சேதுசமுத்திரக் கால்வாய்த் திட்டம் வெற்றி பெறும் வரை ஓயாது நமது குரல்

சேதுசமுத்திரக் கால்வாய்த் திட்டம்:
வெற்றி முரசு கொட்டும் வரை ஓயாது நமது குரல்!


இராமன் பாலம் பிரச்சினையில் அதிமுக, பி.ஜே.பி. யினரின் மாய்மாலத்தை திராவிடர் கழகம் முறியடிக்கும்.

இராமன் பாலம் இருக்கிறது என்று கூறுவோரே, தனுஷ்கோடி பகுதி இயற்கைச் சீற்றத்தால் அழிந்து போனதே, அதை உருவாக்க வேண்டும் என்று என்றைக்காவது நீங்கள் குரல் கொடுத்தது உண்டா?

- திருப்பூரில் தமிழர் தலைவர் (6-.5.-2007)

சேதுசமுத்திரக் கால்வாய்த் திட்டம் வெற்றி பெறும் வரை ஓயாது நமது குரல்

1860 ஆம் ஆண்டு தொடங்கி வெறும் பேச்சளவில் இருந்து வந்த சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்திற்கு மத்தியில் உள்ள அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் 2005 மே 19 இல் ஒப்புதல் வழங்கப்பட்டது. ரூ.2427.40 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்படும் இத்திட்டம் தமிழர்களின் நீண்ட நாள் கோரிக்கையாகும்.

இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால் நாட்டுக்குக் கிடைக்கக்கூடிய பலன்கள் பலப்பல.

அன்னிய செலாவணி மிச்சம், பொருளாதார வளர்ச்சி, வேலை வாய்ப்பு போன்ற பல நன்மைகள் இத்திட்டத்தினால் கிடைக்கவிருக்கின்றன.

இந்த நிலையில், மக்கள் நலனில் அக்கறை உள்ள எவரும் இத்திட்டத்தை வரவேற்கவே செய்வார்கள்.

பாபர் மசூதியை இடித்து நாட்டில் மதவாத அரசியலை நடத்திய மதவாத சக்திகள் இந்தப் பிரச்சினையிலும், இந்தத் திட்டத்தால் ராமர் பாலம் இடிக்கப்படுகிறது என்ற மாய்மாலக் கூச்சலைக் கிளப்பி மக்கள் மத்தியில் மதவாத உணர்வைத் தூண்டியும், நீதிமன்றம் சென்றும் திட்டம் நிறைவேற்றப்படுவதற்குக் குந்தகம் விளைவிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தனுஷ்கோடிக்கும் தலைமன்னாருக்கும் இடையே அமைந்துள்ள மணல் திட்டுகள் ஆதம் பாலம் என்று காலம் காலமாக வழங்கப்பட்டு வருகிறது. பவளப் பூச்சிகளின் சுண்ணாம்புச் சுரப்பால் உண்டான கட்டுமானமே இந்தப் பவளப் பாறைகள் என்றும், உலகின் பல பாகங்களிலும் இத்தகைய திட்டுகள் உண்டென்றும் விலங்கியல், நிலவியல், தாவரவியல் அறிஞர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

இந்தத் திட்டத்தை இப்பொழுது எதிர்க்கும் பாரதிய ஜனதா மத்தியில் ஆட்சியில் இருந்த போது ஆதம்பாலம் வழியாக சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் உருவாக்க ஒப்புதலும் அளிக்கப்பட்டது என்கிற விவரத்தை அன்றைய மத்திய கப்பல், சாலைப் போக்கு வரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் டி.ஆர்.பாலு அவர்கள் மாநிலங்-களவையிலேயே தெளிவுபடுத்தியுள்ளார். (4.-5.-2007)

ராமன் பாலம் என்ற மதவாதக் கண்ணோட்டத்-தோடு பிரச்சினையைக் கிளப்பி வரும் மதவாத சக்திகளோடு, முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்களும் கைகோத்துக் கொண்டிருக்-கிறார். 2001 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக அளித்த தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட வாக்குறுதிக்கு முரணான நிலைப்பாடாகும்.

அத்தேர்தல் அறிக்கையில் (10-.5.-2001) குறிப்பிட்டுள்ளதாவது:

இந்திய தீபகற்பத்தைச் சுற்றி இதுவரை தொடர்ச்சியான கப்பல் போக்குவரத்திற்கு ஏற்ற பாதைகள் இல்லை. மேற்கிலிருந்து கடல் வழியாக கிழக்கு நோக்கி கப்பல்கள் செல்ல வேண்டுமானால், இலங்கையைச் சுற்றிக் கொண்டுதான் செல்ல வேண்டியுள்ளது. இதற்குத் தீர்வாகத்தான் சேது சமுத்திரத் திட்டம். இத்திட்டத்தின்படி ராமேசுவரத்திற்கும், இலங்கையின் தலை மன்னாருக்கும் இடையில் உள்ள ஆடம்ஸ் பிரிட்ஜ் பகுதியில் கப்பல் போக்குவரத்துக்குத் தடையாக உள்ள மணல்மேடுகள், பாறைகள் இவற்றையெல்லாம் அகற்றி ஆழப்படுத்தி, கால்வாய் அமைப்பதுதான் சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தின் தலையாய நோக்கம் என்று குறிப்பிட்டுள்ளது.

ஆடம்ஸ் பிரிட்ஜ் என்றும், மணல் மேடுகள் என்றும் அதிமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டு இருந்ததற்கு மாறாக இன்று ராமர் பாலம் என்று மதவாத சக்திகளுடன் இணைந்து குரல் கொடுக்கிறார் அதிமுக பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதா. இது கடைந்தெடுத்த முரண்பாடு அல்லாமல் வேறு இல்லை.

-------------------------திராவிடர் கழகம் கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தின் தீர்மானம்: (8.-5.-2007)


தனுஷ்கோடி அழிந்தபோது ராமன் வில் எங்கே போனது?

கேள்வி: சுனாமி வந்ததைத் தடுத்தது ராமர் பாலம்தானே?

தமிழர் தலைவர்: இப்பொழுது சுனாமி வருவதை முன் கூட்டியே கண்டுபிடிப்பதற்கு பல நாடுகளில் பல அறிவியல் கருவிகள் வந்துவிட்டன. இராமேஸ்வரத்திற்கு அருகில் இருந்ததுதான் தனுஷ்கோடி. புயலினால் கடல் நீரினால் அழிந்ததே, அதை ஏன் அந்த ராமர் தடுக்கவில்லை? நீங்கள் சொல்லுவதாகக் கூறும் எந்த பாலமும் தடுக்கவில்லையே. தனுஷ் என்றால் வில்தானே! அந்த ராமனும், வில்லும் ஏன் தனுஷ்கோடியைக் காப்பாற்ற வில்லை?

மாற்று வழி அல்ல; இது ஏமாற்று வழி

கேள்வி: சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் மாற்று வழியில் செயல்பட்டிருந்தால் 2500 கோடி ரூபாய்க்குக் குறைவாகத் திட்டமிட்டு செய்திருக்கலாம்.

தமிழர் தலைவர்: இது மாற்று வழி இல்லை. மற்றவர்களை ஏமாற்றுகின்ற வழி. இந்த சேது சமுத்திரத் திட்டம் நடைபெறக்கூடாது என்று சொல்லுகிறவர்களின் வழி இது. ராமன் பாலம் 17 லட்சம் வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்டது என்று சொல்லுகின்றார்கள். 17 லட்சம் வருடங்களுக்கு முன்பு கட்டடக் கலை (Civil Engineering) இருந்த தற்கு எங்காவது ஆதாரம் உண்டா?

(தமிழர் தலைவர் பேட்டி 8-.5.-2007)

சென்னை உயர்நீதிமன்றத்தில் திராவிடர் கழகம் தாக்கல் செய்த மனு

ராமன் பாலம் 17 லட்சம் ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது என்பதும் ராமனால் கட்டப்பட்டது என்பதும் அறிவியலுக்கும் புறம்பான அறிவற்ற கற்பனையே என்றும், மக்களுக்கு நன்மை பயக்கும் திட்டத்தைத் தடுத்து நிறுத்திடச் சதி செய்யப்படுகிறது என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் திராவிடர் கழகத்தின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் தமிழர் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

சேதுக்கால்வாய்த் திட்டத்தைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும், ராமன் கட்டிய பாலத்தைக் காப்பாற்ற வேண்டும் என்றும் மக்கள் நல விரோதமான வழக்குகளை ஜனதா கட்சியின் தலைவர் சுப்பிரமணியசாமி என்பவரும் இந்து முன்னணி நிறுவனர் ராமகோபாலன் என்பவரும் தனித்தனியே சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கின் விசாரணை (29-5-2007) சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்நிலையில் இந்த வழக்கில் தங்களை இணைத்துக் கொள்ள மனு ஒன்றினை திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தாக்கல் செய்தார். மத்திய அரசுக்கு ஆதரவாகத் தந்துள்ள இந்த மனுவில் திராவிடர் கழகம் தெரிவித்துள்ளதாவது:

இரண்டாயிரம் கோடி ரூபாய் செலவில் தொடங்கப்பட்டுள்ள இந்தத் திட்டத்தில் அறிவியல், தொழில்நுட்ப வல்லுநர்களின் ஆராய்ச்சி அடிப்படை யிலான முடிவுகளை மத உணர்ச்சிகள் மீறும் நிலையை அனுமதிக்கக்கூடாது. வழக்கு மனுவில் கூறப்பட்டுள்ள வாதங்கள் அனைத்தும் கற்பனையும், ஆதாரமற்றவையும் ஆகும்.

அறிவற்ற வாதமே ராமன் பாலம் என்பது 17 லட்சத்து 25 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது என்பது அறிவியலுக்கு அப்பாற்பட்ட கற்பனை என்றும், புனைந்து கூறப்படும் கதை என்றும், அறிவற்ற் செயல் எனவும் கருதப்பட வேண்டும். நாசா ஒளிப்படம் எடுத்துள்ளது என்பது கூட கடலில் மணல் திட்டு உள்ளது என்பதைத்தான் காட்டுகிறதே தவிர, அதனை மனிதன் கட்டினான் என்றோ, அதுவும் ராமன் கட்டினான் என்றோ கூறுவதற்கு ஆதாரமே கிடையாது.

சதிச் செயலே

வழக்குதாரர்கள் சட்டப்படியான என்ன பரிகாரத்தைக் கோரி இந்த வழக்கு போட்டிருக்கிறார்கள் என்று தெரியவல்லை என ஆச்சரியப்படும் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, ஒரு பெரிய மக்கள் நலத் திட்டத்தைக் கெடுக்க வேண்டும் என்று சதிச் செயலே தவிர, வேறல்ல என்றும், திட்டப் பணிகள் பாதி அளவு முடிந்த நிலையில், வழக்கு போட்டிருக்கிறார்கள் என்பதையும் எடுத்துக் கூறியுள்ளார். நீதிபதிகள் பி.ஜோதிமணி, ஆர். சுதாகர் ஆகியோரின் முன்னிலையில் வழக்கு பற்றிக் கூறப்பட்டது. வழக்கை ஜூன் 14 ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.

(விடுதலை - 30.5.2007)

கலைஞரின் தொலைநோக்குப் பார்வை

தென் மாவட்டங்களில் ஜாதிக் கலவரம் நடை பெற்ற போது முதலமைச்சர் கலைஞர் நீதியரசர் இரத்தினவேல்பாண்டியன் தலைமையில் குழு ஒன்றை அமைத்து இந்தப் பகுதிகளில் அமைதி நிலவ, ஜாதிக் கலவரங்கள் ஏற்படாமல் தடுக்க தொலைநோக்குத் திட்டங்களைத் தருமாறு கேட்டுக்கொண்டார்.

நீதியரசர் தந்த அறிக்கையிலே முக்கியமாகக் குறிப்பிட்டது இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பைப் பற்றியதாகும். தொழிற்சாலைகளை உருவாக்க வேண்டும் என்று அறிக்கை கொடுத்தார்கள்.

அதையெல்லாம் மனதிற்கொண்டுதான் முதலமைச்சர் கலைஞர் அவர்கள் சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை எப்படியும் நிறைவேற்ற வேண்டும் என்பதிலே ஒரு வைராக்கியத்துடன் உறுதியாக இருக்கிறார் - செயல்படுத்த முனைகிறார்.

இலங்கை அரசுக்காக வாதாடுகிறார்கள்

சேது சமுத்திரத் திட்டத்திற்கு முட்டுக்கட்டை போடுபவர்கள் யாருக்காக வாதாடுகிறார்கள்? இலங்கை அரசுக்காகத்தான் வாதாடுகிறார்கள். சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் செயலுக்கு வந்தால், இலங்கைத் துறைமுகத்துக்குக் கிடைத்து வரும் வருமானத்துக்கு ஆபத்து வரும். அவர்களுக்காக வாதாடுபவர்களை என்ன சொல்லலாம்? (Anti-National) என்ற வார்த்தையையே பயன்படுத்தினார் முதலமைச்சர் கலைஞர். துரோகிகள் என்று கூடக் கூற அவர் தவறவில்லை.

--------------------(திராவிடர் கழகம் நடத்திய இராமநாதபுரம் மாநாட்டில் தமிழர் தலைவர் கி.வீரமணி 1-.8.-2007)

மதநம்பிக்கைக்கு இடம் கொடுத்தால் நாடு வளர்ச்சி அடையுமா?

2300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சேது சமுத்திரத் திட்டம் நிறைவேறிவிடும். அந்தத் திட்டம் நிறைவேறிவிடக் கூடாது என்பதற்காக அரசியல் தரகரான ஒருவர் உச்சநீதிமன்றத்திற்குச் சென்று அதைத் தடுத்தே தீரவேண்டுமென்று முயற்சி செய்தார். உச்சநீதிமன்றம் தடை வழங்கவில்லை. இடைக்காலத் தடைதான் வழங்கியுள்ளது.

அவர்கள் என்ன காரணம் சொன்னார்கள் என்றால், இது எங்களுடைய நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டது என்று சொன்னார்கள். மத நம்பிக்கைக்கு இடம் கொடுத்தால் நாடு வளர்ச்சி அடையாது.

இன்றைக்குக் குடும்பக் கட்டுப்பாட்டை நாடு முழுக்க அரசாங்கம் வலியுறுத்தி வருகிறது. பிள்ளைகளை ஆண்டவன் கொடுக்கிறார் என்று மதவாதிகள் சொன்னார்கள்.ஆனால், அரசாங்கம் அதை எல்லாம் பொருட் படுத்தாமல் இன்றைக்கு வரைக்கும் செயல்படுத்திக் கொண்டுதானே வருகிறது? மத நம்பிக்கையில் தலையிடக் கூடாது என்றால், குடும்பக் கட்டுப்பாட்டை அரசு கையில் எடுத்துக் கொள்ள முடியுமா?

ஒரு மனிதன் குளிக்கும் பொழுது குளியல் அறை வரையில்தான் அவனுக்கு சில உரிமை உண்டு. அதே உரிமை வெளியே கிடையாது. அது போல, மத நம்பிக்கை என்பது அவரவருடைய பூஜையறை வரைதான் இருக்க வேண்டுமே தவிர, அதை வெளியில் கொண்டு வரக்கூடாது.

ஒருவர் நம்பிக்கை என்ற பெயரால் என்னுடைய தாத்தா என் கனவில் வந்தார். உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அமர்ந்திருக்கின்ற இடம் எங்களுடைய பரம்பரைச் சொத்து. இது எங்களுடைய நம்பிக்கை என்று சொன்னால், நீதிபதிகள் உடனே அதை ஏற்றுக் கொண்டு தாங்கள் அமர்ந்திருக்கின்ற இடத்தை விட்டு எழுந்து போய்விடுவார்களா? அந்த வாதத்தை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏற்றுக் கொள்வார்களா?

இன்றைக்கு தொல்பொருள் ஆய்வுத் துறையினர், அறிவியலாளர்கள் சொல்லியிருக் கின்றார்கள். அகமதாபாத் விண்வெளி ஆய்வு அறிவியலாளர்கள், உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில், ராமன் பாலம் என்பதும் இல்லை. ராமன் என்பவனும் இல்லை. இவை எல்லாம் கற்பனை; ராமாயணமே ஒரு கற்பனைக் கதை என்று சொல்லிவிட்டார்கள்.

இன்றைக்கு ஆட்சியில் இருக்கின்ற மத்திய அரசு பி.ஜே.பி., ஆர்.எஸ்.எஸ். கூட்டத்தைத் திருப்தி செய்வதற்காக கடமையைச் செய்த, உண்மையைச் சொன்ற அதிகாரிகளைத் தண்டிப்பதா?

மும்தாஜ் நினைவாக தாஜ்மகாலை ஷாஜகான் கட்டினான். இது வரலாறு. நாம் கண்கூடாகக் காண்கிறோம். ஆனால், ராமன் பாலம் என்பது மத அடிப்படைவாதிகள், புராணிகர்களின் கற்பனை.

கலைஞர் மகள் வீட்டின் மீதே பெட்ரோல் குண்டு வீசுவதா?

சேது சமுத்திரத் திட்டம் நிறைவேறிவிடக் கூடாது என்பதற்காக குறுக்குசால் ஓட்டுகிறார்கள். முதல்வர் கலைஞர் அவர்கள் பெரியாரின் ஈரோட்டுக் குருகுலத்தில் பயின்றவர். அதனால் இந்தத் திட்டத்தை எதிர்க்கின்ற மதவாதிகளுக்குக் கொள்கை பூர்வமான விளக்கத்தைத் தந்து கேள்வி கேட்டார்.

அதற்கு மறுப்பு சொல்ல முடியாத வக்கற்றவர்கள் பெங்களூருவில் உள்ள முதலமைச்சரின் மகள் வீட்டின் மீது பெட்ரோல் குண்டுகளை வீசியிருக்கிறார்கள். அது மட்டுமல்ல. பெங்களூருவில் தமிழகப் பேருந்தைக் கொளுத்தி இருக்கிறார்கள். இரண்டு தமிழர்களைத் தீயிட்டுக் கொளுத்தியிருக்கின்றார்கள்.

இந்தக் காலிக் கூட்டத்தைக் காப்பாற்ற அனுமதிக்கலாமா? காலிக் கூட்டத்தின் வாலை ஒட்ட நறுக்குவோம். மதவெறியைத் தலை தூக்கவிடாமல் வேரோடும், வேரடி மண்ணோடும் ஒழிப்போம்!

---------------(சேதுசமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றக் கோரி திராவிடர் கழகம் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது தமிழர் தலைவர் கி.வீரமணி (19-.9-.2007)

தேர்தலுக்கு வேறு பிரச்சினை கிடைக்கவில்லை

பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்., மனப்பான்மை உடைய பார்ப்பனர்களின் முந்திரிக்கொட்டைத் தனம் அது! பா.ஜ.க. மற்றும் அதிமுக உள்நோக்கத்துடன் செயல்படுகின்றன.

1. 2008 ஆம் ஆண்டிலோ, 2009 ஆம் ஆண்டிலோ பொதுத் தேர்தல் வரவிருக்கும் முன்னர் இத்திட்டத்தை விரைந்து முடிக்கவிடாமல் செய்ய வேண்டும்.

2. தேர்தலுக்கு வேறு பிரச்சினை மூலதனம் கிடைக்கவில்லை. அதற்கு ராமனைத் தேடிப் பிடித்துள்ளனர்!

3. பா.ஜ.க.வில் வாஜ்பேயி - அத்வானி உட்கட்சிச் சண்டை கீழ்மட்டம் வரை அதனை மறைக்கவே, திசை திருப்பவேதான் இராமன் பாலம் என்ற இந்த பூச்சாண்டி!

நர்மதா அணை பிரச்சினை: உச்சநீதிமன்ற தீர்ப்பு உண்மைகள் ஆதாரபூர்வமாக நீதிமன்றத்தில் மத்திய அரசு கூறியுள்ளவற்றைச் சுட்டிக் காட்டி விளக்கியிருக்கிறோம்.

நர்மதா அணைக்கட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் முன்பு கொடுத்துள்ள தீர்ப்புப்படி, பெரும் நிதியைச் செலவழித்து செயல்படுத்தும் திட்டத்தை - அரசின் முடிவிற்கு மாறாக முடக்கி வைக்க முடியாது - கூடாது என்பதை மனதிற்கொண்டு இதிலும் வெற்றி பெற வழி உண்டு. தமிழ் மக்கள் இதனை அறிந்து கொள்வார்களாக!

----------------- தமிழர் தலைவர் அறிக்கை 24-.9.-2007

அகல ரயில் பாதை இல்லை

நாடாளுமன்றத்தில் அமைச்சர் சொல்லுவார். ஆளுங்கட்சி சார்பில் பெரிய தொழிற்சாலை தமிழ் நாட்டில் வைக்காததற்குக் காரணம் அகல ரயில் பாதைகள் இல்லை. ஆகவேதான் பெரிய தொழிற் சாலைகள் கொண்டு வரமுடியவில்லை என்று சொல்லுவார்.

உடனே இன்னொருவர் எழுந்து அடுத்த கேள்வி கேட்பார் ஏன் அகல ரயில் பாதை இல்லை என்று; உடனே அதற்கும் மத்திய அமைச்சர் அரசாங்கத்தின் சார்பில் பதில் சொன்னார். பெரிய தொழிற்சாலை இல்லை. ஆகவே அகல ரயில் பாதை இல்லை என்று.

இப்பொழுது அப்படிச் சொல்லுவதற்கே வழி இல்லாமல் அகல ரயில் பாதையும் வந்தாகிவிட்டது. பெரிய தொழிற்சாலையும், தானே உருவாகிறது.

இதற்கு முட்டுக்கட்டை போடுவது எப்படி என்று-தான் ரொம்ப பேர் குறுக்குசால் ஓட்டுகிறார்கள்.

திராவிட இயக்கத்தின் தோள் மீதே நின்று கொண்டு எங்களுடைய உயரம் எவ்வளவு என்று பார்த்தீர்களா? என்று கேட்டுக் கொண்டே இப்படி ஒரு கேள்வி கேட்கிறார்கள். அதுதான் வேடிக்கை.

சேதுசமுத்திரத் திட்டம் நிறைவேற்றப்பட்டால் தி.மு.கட்சிக்கு பெருமை வந்துவிடும் என்பதற்காகவே இந்தத் திட்டத்தை முடக்க நினைக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். இதற்கு என்ன வழி? மக்களை சிந்திக்க வைக்க வேண்டாமா? மக்களுக்குப் பகுத்தறிவு சிந்தனை வந்தால் நாம் பயப்பட வேண்டிய அவசியம் இல்லையே!

பெரியார் கொள்கை முடிந்துவிடவில்லை

மக்களுக்குப் பகுத்தறிவு, சுயமரியாதை உருவாக்குவதுதான் கருப்புச் சட்டைப் பட்டாளத்தினுடைய வேலை.

சுயமரியாதை இயக்கத்தினுடைய தொண்டு தேவை. பெரியார் இயக்கத்தினுடைய கொள்கை முடிந்துவிட்டது. தேவையில்லை என்று யாரும் நினைக்கக்-கூடாது. ஏனென்றால் , மூட நம்பிக்கை மனிதனுடைய தன்னம்பிக்கையை அழிக்கும்.

------------------------(சாக்கோட்டை கூட்டத்தில் தமிழர் தலைவர் 10-.8-.2007)

தமிழர் தலைவர் எழுப்பிய கேள்வி

தமிழர்களின் நீண்ட கால எதிர்பார்ப்புத் திட்டத்தைத் தடுக்க விரும்புபவர்கள் இரண்டு இடங்களைப் பாதுகாப்பாகக் கருதுகிறார்கள். ஒன்று ராமன்; இரண்டாவது நீதிமன்றம்.

உச்ச நீதிமன்றம் அவசர அவசரமாக ஞாயிற்றுக்கிழமையில் கூடி ஆணை பிறப்பிக்கிறது. நாட்டில் லட்சக்கணக்கான வழக்குகள் ஆண்டுக் கணக்கில் தேங்கிக் கிடக்கின்றன. அவற்றில் எல்லாம் காட்டாத அவசரத்தை மக்களுக்குத் தேவையான - நீண்ட காலமாக எதிர்பார்த்துக் கொண்டு காத்திருக்கக் கூடிய ஒரு திட்டத்தை முடக்குவதில் காட்டவேண்டுமா?

110 கோடி மக்களின் பிரதிநிதிகள்தான் நாடாளு மன்ற உறுப்பினர்கள். அவர்கள் எல்லாம் சேர்ந்து ஒரு முடிவை எடுக்கிறார்கள். மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளிக்கிறது. 2500 கோடி ரூபாயில் திட்டம் உருவாகிறது. இந்த நிலையில் இரண்டு நீதிபதிகள் உட்கார்ந்து கொண்டு, அந்தத் திட்டத்திற்குக் குந்தகம் விளைவிக்கக்கூடிய தன்மையில் ஆணை பிறப்பிக்கலாமா? அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றம் தலையிடலாமா? நீதிமன்றமே அரசை நடத்த விரும்புகிறதா?

இங்கே மத்திய அமைச்சர்கள் இருக்கிறார்கள். நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள். பல கட்சி-களின் தலைவர்கள் இருக்கிறார்கள். இந்தப் பிரச்சினைக்கு ஓர் முடிவைக் காண வேண்டியது மிகவும் அவசியமாகும்.

---------------------(பட்டினிப் போராட்டத்தில் பங்கேற்றவர்களைப் பாராட்டி தமிழர் தலைவர் 1-.10-.2007)


-------------------தொகுப்பு: மின்சாரம் -"விடுதலை” 10-1-2010

0 comments: