Search This Blog

19.1.10

மும்பை தாக்குதல் - கர்கரேயைக் கொன்றது யார்? - 8(முகமூடி அணிந்துள்ள ஆர்.எஸ்.எஸ். அதன் ஆயுதமான ஹிந்துத்வத்தை எப்படியெல்லாம் சந்தர்ப்பத்திற்கேற்ப பயன் படுத்துகிறது என்பதைப் புரிந்து கொள்ள மிக அருமையான நூல் கர்கரேயைக் கொன்றது யார்? என்ற தலைப்பில், ஓய்வு பெற்ற அய்.பி.எஸ். அதிகாரியும் விருப்ப ஓய்வு பெற்று பதவி விலகிய மகாராஷ்டிர அய்.ஜி.யுமான முஷ்ரப் அவர்கள் எழுதியுள்ள நூல்!

பல திடுக்கிடும் உண்மைகள், மறைக்கப்படும் செய்திகள், இவற்றிற்கெல்லாம் மூல காரணங்கள் பார்ப்பனப் பிடிப்புக்குள் சிறைப்பட்டுள்ள அல்லது பார்ப்பனமயமான இந்திய உளவுத் துறையும், இந்திய ஊடகத்துறையும், கடமை தவறி ஒரு குலத்துக்கொரு நீதி சொல்லும் மனுநீதியின் மறு உருவங்களாகத் திகழ்கின்றன.

இந்நூல் முன்னுரை, மற்றும் முக்கிய சில அத்தியாயங்களை தமிழ் கூறும் நல்லுலகம் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக, மானமிகு சு.அறிவுக்கரசு அவர்கள் தமிழாக்கம் செய்து தருகிறார்; படியுங்கள்; (பேச்சாளர்கள்) பரப்புங்கள்.

- ஆசிரியர் கி.வீரமணி)நேற்றைய கட்டுரையின் தொடர்ச்சி....

அய்.பி.இன் அடாவடி

1993 வரை அய்.பி.இல் முசுலிம் ஒருவர் அதிகாரியாக இருந்ததே கிடையாது என்கிற உண்மை ஒன்றிலிருந்தே அது எந்த அளவுக்கு வகுப்பு வாதத்தன்மை வாய்ந்தது என்பதை விளங்கிக் கொள்ளலாம். (‘‘கம்யூனிசம் கம்பாட்’’ ஏடு செப்டம்பர் 1993, ‘‘தி டெலிகிராப்’’, ‘‘கல்கத்தா’’ 18.3.1994 மற்றும் ‘‘தி சன்டே’’ 27 மார்ச் - 2 ஏப்ரல் 1994 ஏடுகள்). 1993 க்குப் பிறகு சில முசுலிம் அதிகாரிகள் பணிக்குத் தேர்ந்து எடுக்கப்பட்டும், காவல்துறையிலிருந்து அனுப்பப்பட்டும், பணி புரிந்தார்கள் என்றாலும் அவாகள் எவ்வாறு நடத்தப்பட்டார்கள் என்பதும் அவர்கள் மீது எந்தளவுக்கு நம்பிக்கை வைத்திருந்தார்கள் என்பதும் வேறொரு செயலின்மூலம் விளங்கிக் கொள்ள முடியும். முசுலிம் உள்துறை செயலாள-ருக்கு, அவர் அய்.பி.க்குத் தலைமை அதிகாரியாக இருந்த நிலையிலும் எந்தவித அறிக்கையையும் அனுப்பாமல் இருந்தார்கள் என்பதிலிருந்தே விளங்கிக் கொள்ளலாம். மத்திய உள்துறைச் செயலாளராக முதன் முதலில் நியமிக்கப்பட்ட முசுலிம் அதிகாரி, தம்மிடம் அய்.பி. எந்த அறிக்கையையும் கண்களில் காட்டுவதில்லை என்று புகாரே கூறினார்: அவர்-தான் அந்த அமைப்பின் தலைவராகக் கருதப்பட வேண்டிய உயர்நிலை அலுவலர் என்று காவல்துறை டைரக்டர் ஜெனரல் ஆக இருந்து ஓய்வு பெற்ற கே.எஸ். சுப்ரமணியம் முசுலிம் இந்தியா எனும் ஏட்டின் நவம்பர் 2008 இதழில் எழுதியிருந்தார்.
உள்துறை அமைச்சராக இருந்த முப்தி முகம்மது சயீதை எப்படி நடத்தினார்கள் என்பது தெரியவில்லை. இவர்கள் அலட்சியப்படுத்தி இருக்க முடியாது. ஏனென்றால் அப்போதைய பிரதமரான வி.பி.சிங் அவர்கள் பார்ப்பனர்களின் ஜாதகத்தை நன்கு தெரிந்து வைத்திருந்தவர் என்பதால்.-அவர் ஆட்சிக் காலத்தில் அய்.பி. அடக்கி வாசித்திருக்கும்; ஆட்சி மாறினால்தான் விசை கொடுத்த பொம்மை போல திருப்பித் தாக்கலாம் என்ற நினைப்புடன்.
அய்.பி.பொறியில் அரசு
மராத்தி மாதமிருமுறை ஏடான ‘‘பகுஜன் சங்கர்ஷ்’’ (30-5-2008) இதழில் கீழ்க்கண்டவாறு எழுதியுள்ளது:


1990 இல் பதவி வகித்த பிரதமரும் உள்துறை அமைச்சரும் சில முக்கிய விசயங்களில் கமுக்கமாக விசாரணை செய்து, சிலரின் தொலைப் பேசிகளை ஒட்டுக் கேட்டு கண்காணிக்குமாறு கேட்டுக் கொண்ட காரணத்தினால், அய்.பி. பலம் பொருந்திய அமைப்பாகக் கருதிக் கொண்டு, பாகிஸ்தானின் அய்.எஸ்.அய். அமைப்பைப் போல அரசுக்கே கட்டளையிடவும் சில வேளைகளில் மிரட்டவும் தொடங்கிவிட்டது. அய்.பி. சேகரித்துவைத்துள்ள ரகசியத் தகவல்களும் தொலைப்பேசிப் பேச்சுகளும் கசிந்து வெளியே செல்லக் கூடிய வாய்ப்பு உள்ளது எனக் கூறி அரசை சரிப்படுத்தி அதிகாரப் பூர்வமற்ற முறையிலும் கூட தொலைப்பேசிப் பேச்சுகளைக் கேட்கவும் கமுக்க விசாரணைகள் நடத்திடவும் (அதற்குத் தங்களுக்கு எவ்வித அதிகாரமும் இல்லாத நிலையிலும்) அவர்களாகவே அதிகாரத்தை எடுத்துக் கொண்டார்கள்.


தங்களைப் போன்றே கொள்கை கொண்ட அதிகாரிகள் தொலைப் பேசித் துறையில் இருப்பதைப் பயன்படுத்திக் கொண்டு, இதே செயலைத் தொடர்ந்து செய்து அதனை ஒரு வழக்கமாகவே ஆக்கிக் கொண்டுவிட்டனர். இதற்கான ஆணைகள் அரசிடமிருந்து பெறப்பட்டனவா என்பது தெரியவில்லை; அதேபோல, இப்படி ஒரு செயல் நடைபெறுகிறது என்பதாவது அரசுக்குத் தெரியுமா என்பதும் தெரியவில்லை. ஆனால் அந்தப் பழக்கம் இன்னமும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. அய்.பி.க்குக் கொடுக்கப்பட்டுள்ள இந்த ஆயுதம் இருபுறமும் கூர்மையுள்ளது என்பதும் அரசுக்கு எதிராகவே அது பயன்படுத்தப்படக்கூடும் என்பதையும் அரசு விளங்கிக் கொள்ளவில்லை. தொலைப் பேசித் துறையில் முக்கிய பதவியில் ஆர்.எஸ்.எஸ்.காரர் ஒருவரை நியமித்து விட்டால், எவ்வளவு பெரிய பொறுப்பில் இருப்பவராலும், அதிகாரம் உடையவராக இருந்தாலும், அவரது தொலைப் பேசிப் பேச்சுகளை ஒட்டுக் கேட்டு அய்.பி. மிரட்டும் அளவுக்கும் போகக்கூடிய மோசமான விளைவுகளை இது ஏற்படுத்தும். அந்த வகையில் அரசு வைத்த பொறியில் அதுவே மாட்டிக் கொண்டது.


வேறொரு அமைப்பின் மூலம் அரசுக்குத் தேவையான தகவல்களைப் பெறுவதற்கான வழி இல்லாத காரணத்தால் அய்.பி. சொல்வதையெல்லாம் முழு உண்மை என்றே எடுத்துக் கொள்ளவும் அதனைச் சரிபார்க்கவும் கூட வாய்ப்பு இல்லாத நிலை உள்ளது. ஒருவகையில் இதனை, எல்லாம் தெரிந்த, எங்கும் நிறைந்த அமைப்பாக அரசு கருதுவதால் அது சர்வசக்தி உள்ளதாகஆகி, அரசின் ஏனைய முக்கிய அங்கங்களையும் பயன்படுத்தி பார்ப்பனியர்களின் செயல்களை நாட்டில் ஒருங்கிணைக்க ஏதுவாயிற்று. சுருங்கச் சொன்னால், பாகிஸ்தானின் அய்.எஸ்.அய். அமைப்பைப் போன்று தன் எஜமானனையே விழுங்கும் ஆயிரம் தலை நாகம் அளவுக்கு அய்.பி. நாட்டில் வளர்ந்து விட்டது.


ஊடகங்களின் பெரும்பான்மை மற்றும் அய்.பி. உளவுத்துறை ஆகிய இரண்டு வலுவான ஆயுதங்களைக் கொண்டு, மிகக் குறைந்த காலத்திற்குள்ளாகவே, ஆர்.எஸ்.எஸ். தன் கூரிய நகங்களை நாட்டின் குறுக்கும் நெடுக்குமாகப் பரப்பிப் பற்றிடச் செய்துவிட்டது. இன்றைய நிலையில் 30 ஆயிரம் நகரங்களில் 44ஆயிரம் (ஷாகா) கிளைகளைக் கொண்டுள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை தெரியவில்லை. 70 முதல் 80 லட்சம் வரை இருக்கலாம். ‘அவுட்லுக்’ ஏட்டில் (22-.11.-2008) ஒன்பது, பதினொன்று அல்ல; நவம்பர் செப்டம்பர் அல்ல எனும் தலைப்பிலான தம் கட்டுரையில் பிரபல எழுத்தாளர் அருந்ததிராய், ஆர்.எஸ்.எஸ். 45 ஆயிரம் கிளைச் சங்கங்கள் மற்றும் 70 லட்சம் உறுப்பினர்களின் மூலமாக வெறுப்புக் கொள்கையை இந்தியா முழுவதும் பரப்புகிறது என்று எழுதியுள்ளார்.


முழுக்கவும் தீங்கான நோக்கங்கள் கொண்ட ஆர்.எஸ்.-எஸ்.சுக்குக் கீழ்க்காணும் துணைஅமைப்புகள் இருக்கின்றன:


1. இந்து ஜாக்ரான் மஞ்ச்_ போராடும் பிரிவு
2. பஜ்ரங் தள்_ போராடும் பிரிவு
3. பாரதிய ஜனதா கட்சி - அரசியல் பிரிவு

4. ஏ.பி.வி.பி.- _ மாணவர் பிரிவு
5. வித்யா பாரதி_ - கல்விப் பிரிவு - (13ஆயிரம் பள்ளிகள், 70 ஆயிரம் ஆசிரியர்கள், 170 லட்சம் மாணவர்கள்).
6. அகில பாரதிய கிரகக் பஞ்சாயத்-_ நுகர்வோர் அமைப்பு
7. வனவாசி கல்யான் ஆசிரமம்-_ பழங்குடியினர் நலம்
8. அகில பாரதிய சாகித்ய பரிஷத்_ - இலக்கியம்.
9. பிரக்யா பாரதி _- சிந்தனை மய்யம் (கொள்கை உருவாக்கம்).
10 தீன்தயாள் ஆராய்ச்சி இன்ஸ்டிடியூட்
11. பாரதிய இதிகாச சங்கலன் யோஜனாலயா_ வரலாற்று ஆய்வு
12 சான்ஸ்கிரிட் பாரதி_ - மொழி
13. சேவா பாரதி_ -குடிசைப் பகுதி-யினர் நலம்
14. இந்து சேவா பிரதிஸ்தான்
15. சுவாமி விவேகானந்தா மெடிகல் மிஷன்_ -உடல் நலம்
16. தேசிய மருத்துவர் அமைப்பு
17. பாரதிய குஷ்ட நிவாரண சங்கம்_ -குட்ட நோயாளிகள் பராமரிப்பு
18. சாகர் பாரதி - கூட்டுறவு இயக்கம்
19. பாரத் பிரகாசன்- _ செய்தி ஏடுகள், பிரச்சார வெளியீடுகள் அச்சிட்டு வெளியிடுதல்
20. சுருசி பிரகாசன்_ -அச்சிடல், வெளியிடல்
21. கோகித் பிரகாசன்_ -அச்சிடல், வெளியிடல்
22. ஞானகங்கா பிரகாசன்_- அச்சிடல், வெளியிடல்.
23. அர்ச்சனா பிரகாசன்_- அச்சிடல், வெளியிடல்
24. பாரதிய விசார் சாதனா_- அச்சிடல், வெளியிடல்
25. சாதனா புஸ்தக்_- அச்சிடல், வெளியிடல்
26. ஆகாஷ்வாணி சாதனா_- அச்சிடல், வெளியிடல்
27. சமாஜிக் சம்ரசதா மஞ்ச்_- சமூகக் கூட்டமைப்பு
28. விஸ்வ இந்து பரிசத்_- மதச்சார்புப் பணி
29. விவேகானந்த கேந்திரம்_- தத்துவப் பிரிவு
பட்டியல் நீளும்.


ஆர்.எஸ்.எஸ்.சும் அதன் மூர்க்கத்தனமான துணை அமைப்புகளான விசுவ இந்து பரிசத், பஜ்ரங்தள், இந்து ஜாக்ரான் மஞ்ச் ஆகியவை நாட்டை இந்து நாடு ஆக்குகிறோம் எனக்கூறி பார்ப்பனர் நாடு என ஆக்கிப் பார்ப்பனர்களைச் சமூகத்தின் தலைமைப் பொறுப்புக்குக் கொண்டு வந்து மதத்தை மட்டும் அல்லாமல் அரசையும் கட்டி ஆள எண்ணுகிறார்கள். இந்த எண்ணத்தை மனதில் கொண்டு, மேலே விவரித்தவாறு, சீர்திருத்த இயக்கங்களின்பால் மக்களின் ஈர்ப்பு செல்லாது தடுக்கும் நோக்கில், பல நூற்றாண்டுக் காலமாக இந்துக்கள் மீதும் தாழ்த்தப்பட்டோர் மீதும் நிகழ்த்தப்பட்ட வன்கொடுமைகளை மறைத்திடும் தன்மையில், இந்து மக்களுக்கும் சிறுபான்மையர்க்கும் பிளவு உண்டாக்கும் வகையில், கமுக்கமாக (ஜாதி) இந்துக்களுக்கும் தாழ்த்தப்பட்டோருக்கும் மோதலை உருவாக்கி வருகின்றனர். சிறுவயது முதலே மூளைச் சாயம் ஏற்றப்பட்டு ஆர்.எஸ்.எஸ். ‘ஷாகா’க்களால் பயிற்சி அளிக்கப்பட்ட பார்ப்பனிய தொண்டர்கள் இருபால் இந்து இளைஞர்களைஅணுகி அவர்களிடம் தங்களின் நச்சுக் கருத்துகளைப் பரப்பி இந்திய வரலாற்றைத் திரித்துக் கூறி, குறிப்பாக முசுலிம்கள், கிறித்துவர்கள் ஆகிய சிறுபான்மை யரைப் பற்றித் தவறாகத் தகவல்கள் தருகின்றனர். வகுப்பு மோதலை உருவாக்க எந்தச் சர்ந்தர்ப்பத்தையும் நழுவவிடாத அவர்களுக்கு கூட்டம் நிறைந்த திருவிழா, மத நிகழ்ச்சிகள் போன்றவை பெரும் வாய்ப்பை நல்குகின்றன.


தொண்டர்களைத் தவிர தொழில் செய்பவர்கள், கற்றறிந்த வரலாற்றாளர்கள், எழுத்தாளர்கள், நாடகாசிரியர்கள், இதழாளர்கள், அரசு அலுவலர்கள் உள்பட ஆர்.எஸ்.எஸ்.சுக்கு ஆதரவாளர்களாக இருப்பவர்கள் என அனைவரும் வகுப்பு மோதல் போக்கினை ஊதி வளர்த்து, பார்ப்பனியர்களின் பெருமையைப் போற்றிப் புகழ்ந்து அவரவர் ஈடுபட்டுள்ள துறைகளில் கடமையைச் செய்கின்றனர். தாங்கள் பங்கு கொள்ளும் எந்தவொரு விருந்து, விழாக்கள், பயணங்கள் போன்ற அனைத்திலும் முரண்பாடான தங்கள் கொள்கைகளைத் திணித்து முசுலிம்களுக்கு எதிர்ப்பான சூழலை உருவாக்கிடத் தவறுவதே கிடையாது.
நச்சுக் கிருமிகளை இடைவிடாமல் பார்ப்பனிய அமைப்புகள் பரவவிட்டுக் கொண்டிருக்கும் நிலையில், சமூக நிலை மிகவும் இறுக்கமாகி, சிறிய பொறி கூடப் பற்றிக் கொள்ளும் பெரு நெருப்பாகி வகுப்புவாத விபத்துகளை உற்பத்தி செய்துவிடும். அப்படித் தொடரும் கலவரங்களில் இந்துக்களும் தாழ்த்தப்பட்டோரும் பெரும் துன்பங்களை அனுபவித்து, அவர்தம் குடும்பங்களிலும் சொல்லொணாத் துயரங்களை அனுபவித்து, இருபால் இளைஞர்களும் வழக்கு, காவல் நிலையம், வழக்குமன்றம் என்று அலைந்து, தங்கள் எதிர்காலத்தைப் பாழாக்கிக் கொள்ளும் நிலை. இதற்கு நேர் மாறாகப் பார்ப்பனிய வன்முறையாளர் கள் இதனைத் தூண்டி விட்டுவிட்டு, கலவரம் தொடங்கும்போது காணாமல் போய் மறைந்து கொண்டு விடுவார்கள்; அகப்பட்டுக் கொண்ட முசுலிம்களும் இந்துக்களும் மாட்டிக் கொண்டு பல ஆண்டுகளுக்கு போலீஸ்,கோர்ட் என்று அலையும் நிலை. இப்படிப்பட்ட வகையில் இந்துக்களும் முசுலிம்களும் தங்களுக்குள் அடித்துக் கொள்ளும் நிலையை ஆர்.எஸ்.எஸ். மற்றும் பார்ப்பனிய அமைப்புகள் ஏற்படுத்துகின்றன.
1893 இல் நடைபெற்ற வகுப்பு மோதல் பற்றி விரிவாக இந்நூலில் எழுதிடத்தேவையில்லை. ஆனாலும், சுருக்கமாகச் சொன்னால் அந்தக் கலவரத்தின் மூலம், பார்ப்பனியச் சக்திகள் பொது மக்களிடம் சமூக, மதப் பிடிப்பை வலுப்படுத்திக் கொண்டு பலவித ஆதாயங்களை அடையும் நிலை ஏற்பட்டுவிட்டது.

------------------(தொடரும்) - “விடுதலை” 17-1-2010

0 comments: