Search This Blog

19.1.10

மும்பை தாக்குதல் - கர்கரேயைக் கொன்றது யார்? - 7அ




(முகமூடி அணிந்துள்ள ஆர்.எஸ்.எஸ். அதன் ஆயுதமான ஹிந்துத்வத்தை எப்படியெல்லாம் சந்தர்ப்பத்திற்கேற்ப பயன் படுத்துகிறது என்பதைப் புரிந்து கொள்ள மிக அருமையான நூல் கர்கரேயைக் கொன்றது யார்? என்ற தலைப்பில், ஓய்வு பெற்ற அய்.பி.எஸ். அதிகாரியும் விருப்ப ஓய்வு பெற்று பதவி விலகிய மகாராஷ்டிர அய்.ஜி.யுமான முஷ்ரப் அவர்கள் எழுதியுள்ள நூல்!

பல திடுக்கிடும் உண்மைகள், மறைக்கப்படும் செய்திகள், இவற்றிற்கெல்லாம் மூல காரணங்கள் பார்ப்பனப் பிடிப்புக்குள் சிறைப்பட்டுள்ள அல்லது பார்ப்பனமயமான இந்திய உளவுத் துறையும், இந்திய ஊடகத்துறையும், கடமை தவறி ஒரு குலத்துக்கொரு நீதி சொல்லும் மனுநீதியின் மறு உருவங்களாகத் திகழ்கின்றன.

இந்நூல் முன்னுரை, மற்றும் முக்கிய சில அத்தியாயங்களை தமிழ் கூறும் நல்லுலகம் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக, மானமிகு சு.அறிவுக்கரசு அவர்கள் தமிழாக்கம் செய்து தருகிறார்; படியுங்கள்; (பேச்சாளர்கள்) பரப்புங்கள்.

- ஆசிரியர் கி.வீரமணி)




13.1.2010 வெளிவந்த கட்டுரை யின் தொடர்ச்சி..
.
பார்ப்பனியக் கட்டுப்பாட்டில் அய்.பி.


தொடர்ந்து ஆண்ட ஆட்சிகள் எல்லாம் தங்கள் அரசியலைக் கவனித்துக் கொண்டிருந்ததால், பார்ப்பனியர்கள் அய்.பி.அய்க் கைப்பற்றியுள்ளனர் என்பதைப் புரிந்து கொள்ள மிகவும் தாமதம் ஆகி விட்டது. இந்தக் கால கட்டத்தில் அய்.பி. இறுக்கமான நடைமுறைகளைக் கொண்ட அமைப்பாக வளர்ந்து விட்டதால், அது முடிந்து போய்விட்ட விசயம் என்று அரசு சும்மா இருக்க வேண்டியதாகிவிட்டது. அய்.பி.இன் தலைமை அதிகாரியை அரசுதான் நியமிக்க உரிமை படைத்தது என்றாலும், நடைமுறையில் அதற்கான வாய்ப்பே இல்லை. பதவியிலிருந்து வெளிச் செல்லும் இயக்குநரே, தனக்குப் பின்னால் இன்னாரை நியமிக்கலாம் எனப் பரிந்துரைப்பதும் எந்தக் கேள்வியும் இல்லாமல் அரசு அதனை ஏற்றுக் கொள்வதும் நடைமுறையாகிவிட்டது. இரண்டே சந்தர்ப்பங்களைத் தவிர்த்து, மீதியெல்லாம் இதுவே நடைமுறையாகிவிட்டது. பார்ப்பனரல்லாத ஒருவர் தலைமைப் பொறுப்புக்கு நியமிக்கப்பட்டாலும் அதனால் எவ்வித மாற்றமும் ஏற்படுவதில்லை. வெளியிலிருந்து வரும் அப்படிப்பட்டவர்கள் எந்த வித மாறுதல்களையும் செய்து விடாதபடி தடுக்கும் அளவுக்குப் பார்ப்பனர்கள் செல்வாக்கு உள்ளது; அப்படியும் புதியவர் பிடிவாதமாக இருப்பாரேயானால் அவருக்கும் அரசுக்கும் தர்மசங்கடமான சூழ்நிலைகளை உண்டு பண்ணி, தங்கள் வழிக்குக் கொண்டு வந்து விடுவார்கள்.


இந்தியப் பிரதமர் தினமும் 15-20 நிமிடங்கள் அய்.பி. இயக்குநரிடம் செலவிட்டு, நாட்டில் ஏற்பட்ட முக்கிய சம்பவங்கள் குறித்தும் எதிர்காலத்தில் நடைபெறக்கூடியவை பற்றியும் கேட்டு அறிவார்; சமூக, அரசியல், இன, வகுப்புப் பிரச்சினைகள், சர்வதேச உளவுச் செய்திகள் போன்றவை இதில் அடங்கும். இதேபோல தினந்தோறும் அய்.பி. இயக்குநர், உள்துறை அமைச்சரிடமும் விளக்குவார். பாதுகாப்பு மற்றும் அயல் உறவுத் துறை பற்றிய செய்திகள் இருந்தால் அவை பற்றி அந்தந்த அமைச்சர்களிடையே விளக்குவார்.
இப்படி, நாள்தோறும் பிரதமரிடமும் உள்துறை அமைச்சரிடமும் தெரிவிப்பதை பார்ப்பனிய சக்திகள் கடந்த சில வருடங்களாகப் பெருமளவு தவிர்த்து, தங்களை பிற துறைகளிலிருந்து துண்டித்து காப்பு வலையில் வைத்துக் கொண்டுவிட்டனர். எப்படியென்றால்,


1. ‘‘மிக முக்கிய மந்தனத் தகவல்’’ என்றும் ‘‘ரகசிய நடவடிக்கை’’ என்ற பெயரிலும் பல செய்திகளை பிரதமர் அலுவலகம், உள்துறை அமைச்சகம், அயல் உறவு அமைச்சகம், பாதுகாப்பு அமைச்சகம் போன்றவற்றிற்குத் தங்கள் செயல்பாடுகள்பற்றி எதுவும் தகவல் அளிப்பதில்லை.


2. பாதுகாப்பு கருதியும், நாட்டின் கவுரவம் காத்திடவும் பல செய்திகளை மாநில அரசுகள், யூனியன் பிரதேச அரசுகள், உயர்நிலை அதிகாரிகள், காவல்துறையின் உயர் நிலை அதிகாரிகள், நீதித் துறையினர் போன்றவர்களுக்கு அளிக்காமல் இருக்கும் செயலுக்குப் பிரதமர் அலுவலகம் ஒப்புதல் அளித்திருக்கிறாற் போன்ற தோற்றத்தை உருவாக்கி இருக்கின்றனர்.


3. மறைமுக நடவடிக்கை, ரகசிய நடவடிக்கை, ஆட்சிக்கெதிரான கலவரங்களைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கை, பயங்கரவாதத் தடுப்பு நடவடிக்கை, உள் நாட்டுப் பாதுகாப்பு, வெளிநாட்டு உறவுகள் பாதிப்பு என்றெல்லாம் பல பதப் பிரயோகங்களைச் செய்து தங்கள் நடவடிக்கைகளை முழுவதுமே வெளிப்படையற்ற தன்மையில் அமைத்துக் கொண்டுள்ளனர்.


இத்தகைய நிலைமைகளின் காரணமாக, மத்திய மாநில அரசுகள், அரசு அதிகாரிகள், காவல் துறையினர் போன்றோர் அய்.பி.இன் அறிவுரைகளை அணுவளவும் பிசகாமல், அது ஏதோ பிரதமரின் அலுவலகத்தினின்று வந்ததைப் போன்று கடைப்பிடிக்கின்றனர். அத்தகைய அறிவுரைகளின் நம்பகத் தன்மை குறித்து எந்தவித சந்தேகமும் கொள்ளாமல், பிரதமர் அலுவலகம், உள்துறை அமைச்சகம் போன்றவற்றுடன் தொடர்பு கொண்டு சரி பார்த்துக் கொள்ளாமலும் அப்படிச் செய்தால் ‘‘உச்ச ரகசியம்’’ கசிந்துவிடும் என்பதைப் போலக் கீழ்ப்படிகின்றார்கள். அப்படிச் செய்யாவிட்டால் தங்கள் மீது 1923 ஆம் ஆண்டின் ரகசியக் காப்புச் சட்டம் பாயும் என்று அஞ்சி அதன் நம்பகத்தன்மை பற்றிக் கவலைப்படுவதில்லை. அய்.பி.இன் மூடி-மறைக்கும் செயல்கள் இந்த வகையில் எந்த விதமான சிக்கலும் கேள்வியும் இல்லாமல் நடைபெற்று வருகின்றன. ‘‘உச்ச ரகசிய’’ செய்திகள் பற்றி சுதந்தரமான செய்திப் பரிமாற்றம் ஏதும் இல்லாத நிலையில் அவை பிரதமர் அலுவலக ஒப்புதல் பெற்றவையா என்பதை ஒருவர் தெரிந்து கொள்ளும் வாய்ப்பே கிடையாது. பிரதமர் அலுவலகம், உள்துறைஅமைச்சர்அலுவலகம் ஆகியவற்றிற்கு சில விஷயங்கள் பற்றி எதுவும் தெரியாத நிலை கூட இருக்கலாம். அந்த வகையில் கடந்த கால அய்.பி.இன். நடவடிக்கைகள் மிகவும் தடிமனாகி விட்டதால், பிரதமரோ உள்துறை அமைச்சரோ அவற்றை ஊடுருவிப் பார்த்திட முடியாது என்கிற அய்யமே ஏற்பட்டுள்ளது.

--------------- (தொடரும்) "விடுதலை” 16-1-2010

0 comments: