Search This Blog

31.8.13

ஆண்டவனார் தூங்குகின்றார்!அயர்ந்த நித்திரை!எப்பொழுது எழுந்திருக்கப் போகிறார்?

புதுமை இலக்கியப் பூங்கா - ஆண்டவனார் தூங்குகின்றார்!


திராவிட இயக்க முன்னோடிகளில் ஒருவர் கே.ஏ.மதியழகன். தமிழக அமைச்சராகவும், சட்டப்பேரவைத் தலைவராகவும் பணியாற்றியவர் தென்னகம் என்ற வார இதழின் ஆசிரியராக இருந்தவர். கருத்து வளம் செறிந்த கட்டுரைகள் பல வரைந்த திராவிட இயக்க எழுத்தாளர். அவரது படைப்புகளில் ஒன்று உண்மை வாசகர்களுக்காக...

நானிலம் ஆண்டவனாரின் நாடக மேடை. மனித குலத்தார் அவர் ஆட்டுவிக்கும் கருவிகள். தேவைகளையும், தெவிட்டாத ஆசைகளையும், இச்சைகளையும், இன்ப எண்ணங்களையும், நம்பிக்கையையும், நடுக்கத்தையும், காதலையும், கசப்பையும் அவர்கள் வாழ்விலே நிரப்புகிறார். ஆனந்த ஊற்றுக்களைத் தொடுகிறார். வீணையின் நாதத்தை மீட்டுகிறார். விஷ ஜந்துக்களின் கொடுக்குகளால் கொட்டுகிறார். பொறிகளை அமைக்கிறார். பள்ளங்களை வெட்டுகிறார்.
இந்தக் கூத்து ஒரு தொடர் நாடகம்.
அவரது கைப் பாவைகளாகிய இவர்கள் போராடுவதையும் தோல்வியுறுவதையும் கவனிக்கிறார். ஒருவனை ஒருவன் ஏமாற்றுவதையும் தன்னையே ஏமாளியாக்குவதையும் கவனிக்கிறார். எல்லாக் குற்றங்களையும் புரியத் தூண்டுகிறார். பிறப்புகளையும், இறப்புகளையும் கவனிக்கிறார். தொட்டில் அருகே எழும் தாலாட்டுக் கீதத்தையும் சவப்பெட்டியருகே எழும் அழுகை ஓலத்தையும் செவிமடுக்கிறார்.
இரக்கம் என்பது இறைவனாரிடம் எள்ளளவும் இல்லை! சலிப்பு, சஞ்சலங்கள், தற்கொலை, கோர முடிவுகள் _ இவைகளைக் கண்டு குதூகலப்படுகிறார். படுகொலைகள், பயங்கரத் தாக்குதல்கள், விபச்சாரம், நீக்கப்பட்ட குழந்தைகள், நிராதரவான தன்மை ஆகியவற்றைக் கண்டு புன்னகை புரிகிறார். எளியோர் வதை புரிவதையும், மதலையைக் கொள்ளை கொடுத்த மாதாக்களையும், சிறைக் கம்பிகளுக்குப் பின் நிற்கும் நிரபராதிகளையும், தூக்கு மேடையின் மீது நிற்கும் தூயவர்களையும் பார்க்கிறார். குற்றம் கொலு வீற்றிருப்பதையும், கபட வேஷம் தரித்திருப்பதையும் காண்கிறார்.
மழையை நிறுத்திக் கொள்கிறார்; அவரது கைப்பாவைகள் பசியால் துடிக்கின்றனர். பூகம்பத்தின் பெயரால் பூமியைப் பிளக்கிறார்; பலர் விழுங்கப்படுகின்றனர். வெள்ளத்தை அனுப்புகிறார்; பலர் மூழ்கடிக்கப்படுகின்றனர். எரிமலையிலிருந்து நெருப்பைக் கக்குவிக்கிறார்; அந்தக் கனலிலே பலர் கருகிச் சாகின்றனர். புயற் காற்றை அனுப்புகிறார்; அதிலே பலர் சிக்கிச் சின்னா பின்னமடைகின்றனர். இடியின் வேகத்தால் இறப்புடன் மோதுகின்றனர். நீரிலும் காற்றிலும் கண்ணுக்குத் தெரியாத வாழ்வின் வைரிகளை, துன்பத்தின் தூதுவர்களை நிரப்புகிறார்; அவர்கள் மூச்சு விடும்போதும், நீர் அருந்தும்போதும் கவனிக்கிறார். அவர்களின் சதைகளையும் நடுங்கும் நரம்புகளையும் உண்டு கொழுக்க கான்சர் வியாதி உண்டு பண்ணுகிறார். இரத்தக் குழாய்களில் விஷத்தை நிரப்பிப் பாம்புகளை உண்டு பண்ணுகிறார். அவர்களின் எலும்புகளை நொறுக்கவும் கொட்டுகிற இரத்தத்தை உறிஞ்சவும் வனாந்திர மிருகங்களை உண்டு பண்ணுகிறார்.
சில பரிதாபத்திற்குரியவர்களைப் பைத்தியக்காரனாக்குகிறார். அவர்களை, இருளிலே கூசும் கண்களுடனும் கூரிய நகங்களுடனும் தோன்றுகிற பூதங்களாகிய கற்பனையுடன் போராட வைக்கிறார். சிலரைச் சிந்தனை ஜோதியே யின்றி இருள் செறிந்த வாழ்விலே திணற வைத்துச் சீரழிக்கிறார். துயரங்கள், அநீதிகள், வறுமையின் கந்தலாடை, தேவையின் சுருங்கிய கரங்கள், தாயை இழந்த சேய்கள், அங்கங்கள் பங்கமானோர், குஷ்டரோகிகள் _ இவை அத்தனையையும் பார்க்கிறார்.

புரண்டோடுகிற கண்ணீர் தெரிகிறது. கோவெனக் கதறும் புலம்பல் கேட்கிறது. பள பளவெனப் பிரகாசிக்கும் வாட்கள் தெரிகின்றன. துப்பாக்கியின் வேட்டுச் சத்தம் கேட்கிறது. இரத்தம் தோய்ந்ததால் சிவப்பேறிய போர்க்களம் _ பிணங்களின் வெளுத்துப்போன முகங்கள் தெரிகின்றன.
ஆனால் அவர்கள் அஞ்சுகிற நேரத்தில் நையாண்டி புரிகின்றார்; அவர்களின் ஆபத்தான அழிவு நேரத்தில் நகைத்துச் சிரிப்பொலியால் நிரப்புகின்றார். இவை அத்தனைக்கும் தப்பி உயிருடன் விடப்பட்ட துர்ப்பாக்கியமான கைப்பாவை முழங்காலிட்டு இருதய சுத்தியாக இந்த சுதந்திரக்கார எத்தனுக்கு வணக்கம் செலுத்த வேண்டும்!
சொல்லப் போனால் ஆண்டவர்கள் அவர்களுடைய அருமைக் குழந்தைகளைக் காப்பாற்றி ஆதரிக்கவில்லை. அதற்குப் பதிலாக மனிதர்கள் ஆண்டவர்களைக் காப்பாற்றி ஆதரித்துள்ளனர். பல ஆலயங்களைக் கட்டியுள்ளனர். ஆடு, மாடு, குழந்தைகளைப் பலியிட்டனர். பலி பீடங்களை இரத்த அபிஷேகத்தால் நனைத்தனர். தங்களிடமிருந்த வெள்ளி, தங்கம், வைரம் ஆகியவைகளை வழங்கினர். புரோகிதர்களுக்கு அன்ன ஆகாரமும் ஆடை அணி வகைகளும் அளித்தனர்.
ஆனால் ஆண்டவர்களோ பிரதி உபகாரம் ஏதும் செய்யவில்லை. இருட்டிலே ஒளிந்துள்ள தெய்வங்கள் அவர்களின் கோரிக்கைகளுக்குப் பதிலிறுக்கவில்லை. கூக்குரலைச் செவிமடுக்கவில்லை. குறிப்பொன்றும் காட்டவில்லை. கரம் கொடுக்கவில்லை. கருணை மொழியொன்றும் புகலவில்லை. பாராமுகமாய், கேளாக் காதாய், செவிடுகளாய், குருடுகளாய், ஊமைகளாய் உன்மத்தம் பிடித்தவர்களாய்த் தமது சிங்காதனங்களிலே கொலு வீற்றிருந்தனர். ஆலயங்களின் கோபுரங்கள் உயர்ந்தன. பிரார்த்தனையின் ஒலிச் சத்தம் அதிகரித்தது. ஆனால் ஆண்டவனார் தூங்கினார். பலன்தான் ஏதும் இல்லை.
தெய்வங்களைத் திருப்திப்படுத்துவதற்காக மனிதன் என்னென்ன செய்துள்ளான் என்பதை எண்ணிப் பாருங்கள். தனது பகுத்தறிவைத் துறந்துள்ளான். அறிவின் சுடரை அணைத்துக் கொண்டுள்ளான். ஆதாரம் இல்லாமலும் ஆதாரத்திற்கு எதிராகவும் பலவற்றை நம்பியுள்ளான். தன்னையே இழித்தும் பழித்தும் கொண்டுள்ளான். உபவாசங்களும் உண்ணாவிரதப் பட்டினிகளும் இருந்திருக்கின்றான். அங்கங்களைப் பங்கப்படுத்திக் கொண்டான். மேனியிலே சூடுகளைப் போட்டுக் கொண்டுள்ளான். குருதியைக் கொட்டியுள்ளான். உடன் பிறந்த மனித குலத்தோரைக் கொலை புரிந்துள்ளான். கொட்டறைகளில் அடைத்துள்ளான். கொடுமை பல புரிந்து அழித்துள்ளான்; மனைவி மக்களைப் பிரிந்திருக்கிறான். அநாதையாக ஆரண்யங்களிலே வாழ்ந்துள்ளான். சூடம், சாம்பிராணி, தூபதீப நைவேத்யம் செய்து கொண்டு, ஜபமாலையை உருட்டிக் கொண்டு, கமண்டல நீரை மெய்யிலே தெளித்துக் கொண்டு, கண்களை மூடிக் கொண்டு, முழங்கால் புழுதியிலே தண்டனிட்டுப் புரண்டு வேண்டியுள்ளான். ஆனால் கடவுளர்கள் மௌனிகளாய் _ ஊமைகளாய் இருந்தனர் _ கற்களைப் போல ஊமைகளாய் இருந்தனர்.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியிலே தித்திக்கும் வளம் நிறைந்த கருத்துடைய இத்தகு வசீகர வசனங்களை எத்தனையோ ஆயிரம் மேடைகளில் சொற்பெருக்காற்றினான், அமெரிக்க சிந்தனையாளன் இங்கர்சால். அறிவின் தூதர்கள் மேற்கொண்ட திருப்பணியின் விளைவு இன்று அந்த நாட்டு ஆண்டவர்களாகிய ஓடின், தார், அபொல்லோ, மினர்வா, ஜூபிடர், மெர்குரி போன்றவர்களைக் கண்காட்சி மண்டபத்திலேதான் சந்திக்க முடியும்.
நம்முடைய ஆண்டவர்களோ, அவர்களெல்லாம் கண்டு பொறாமைப்படும் பெருநிலையிலேயுள்ளவர்கள். திருவரங்கம் கோவில் கர்ப்பக்கிரகத்திலே தீப்பிடித்தாலும் பிடித்தது! எவ்வளவு அக்கறை! எவ்வளவு கவலை! மூன்று மந்திரிமார் கோவிலைப் பிரதட்சணம் வந்தனர். சட்டசபையிலே கேள்வி. சனாதனிகள் மத்தியிலே சர்ச்சை, லோகத்திற்கு என்ன நாசம் சம்பவிக்குமோ என்ற சம்சயம்!
அடேயப்பா! எந்தக் குடிசை பற்றி எரிந்தபோது, இவர்கள் வயிறு பற்றி எரிந்தது? மனிதர்களிடம் காட்டும் அக்கறையைவிட, மந்திரிமார்கள் மகேஸ்வரனிடம் காட்டும் அக்கறைக்கு ஒன்றும் குறைவே கிடையாது. அந்தஸ்திலே மட்டும் என்ன குறைவாம்? ஆயிரம் ஏக்கர் நன்செய், புன்செய், தோப்பு, துரவு, வெள்ளி வாஹனம், தங்க ரிஷபம்; வைர நகைகள், கோட்டையோ கொத்தளமோ எனச் சந்தேகிக்கத் தக்க கோவிற் பங்களா வாசம்! அவைகளைப் பரிபாலிக்க அர்ச்சகர்கள். அவர்கள் செய்யும் ஆறுகால பூஜை, ஆண்டுக்கொரு கலியாணம், ஆனி மஞ்சனம், ஆருத்ரா தரிசனம், மாசிமகம், மதுரைச் சித்திரை _ அப்பப்பா! இந்த நாட்டுக் கோடீஸ்வரர்களுக்கேது அந்தக் குதூகல வாழ்வு! வருமானம்! இந்த ஆண்டு (1969) சனவரித் திங்கள் திருமலை _ திருப்பதி தேவஸ்தானங்களில் வெங்கடேஸ்வரர் கோவிலுக்குக் கிடைத்த வருவாய் மட்டும் ரூபாய் இரண்டு லட்சத்து இருபத்தொன்றாயிரம்! கோவில் அதிகாரி அறிவித்துள்ள கணக்கே இவ்வளவு!
சாதாரணமாய்க் கன்னமிடுபவன், கள்ளக் கையொப்பமிடுபவன், காயப்படுத்துபவன், கொலை செய்பவன், கொள்ளை அடிப்பவன் இப்படி, ஆயிரங் குற்றங்கள் நாட்டில் நடைபெறுகின்றன அல்லவா? அவைகளைக் கண்டுபிடித்து நீதிமன்றத்திலே தண்டனை கொடுக்கப்படுகிறதல்லவா? நமது ஆண்டவர்கள் புரிந்த குற்றத்திற்குத் தண்டனை கொடுப்பது என்று ஆரம்பித்தால் நமது நீதிமன்றத்தில் பத்து ஆண்டுகளுக்கு வேறு வேலையே நடக்காது. தேவ காரியத்திற்கே சரியாய்விடும்.
அகல்யாவைக் கற்பழித்தான் தேவர்கோன் இந்திரன்; மாற்றான் மனைவியை மருவலாமா? தெய்வயானை இருக்கும்போது குறமகள் வள்ளியை மணந்தான் குமரக் கடவுள் முருகன். இருதாரம் ஏற்புடைத்தா? தாருகாவனத்து ரிஷி பத்தினிகளிடம் மூலக் கடவுளர்கள் மூவரும் பிச்சைக்காரர்கள் போல் நிர்வாணமாய் நின்றனர். ஆபாசத்தின் உச்ச கட்டமல்லவா? கண்ணன் வெண்ணெயைத் திருடினான். கானலோலன் நாரதர் கலக மூட்டினான். பாண்டவர் பாஞ்சாலியைச் சூதாடினர். பரசுராமன் தாயைக் கொன்றான். அயோத்தி இராமன் கர்ப்பிணி சீதாவை ஆரண்யத்திற்கனுப்பினான். ஆரண்ய விசுவாமித்திரன் அழகு மேனகைக்குக் காதற் கொழுந்து சகுந்தலையைக் கொடுத்தான்! சேச்சே! வெட்கமாயும் இருக்கிறது; கூச்சமாயும் இருக்கிறது எடுத்துக் கூற!
செந்தமிழிலே சொற் சித்திரம் தீட்டுவதானாலும், செம்பஞ்சுத் தூரிகையிலே வண்ணச் சித்திரம் தீட்டுவதானாலும், உளியிலே உருக்குவதானாலும் ஆபாசம் அருவெறுப்பைத்தான் கொடுக்கும். அழகு நிர்வாணமானதுதான் என்று மனித மனம் ஒத்துக்கொள்வதில்லை போர்வை தேவைப்படுகிறது. பொலிவு அங்குதான் உதயமாகிறது. நமது மந்திரிமார்கள் அவசர அவசரமாக ஆபாச சுவரொட்டி விளம்பரங்களைத் தடுக்க மசோதா கொண்டு வந்தார்கள்.
மத சம்பந்தமான புராண ஏடுகள், ஓவியங்கள், சித்திரங்கள், ஆலயங்களிலே உள்ள கற்சிலைகள், தேர்களிலே செதுக்கப்பட்டுள்ள காமக்களி நடனங்கள் ஆகியவற்றை எந்தச் சட்டமும் தடுக்காது; கட்டுப்படுத்தாது. எப்படியிருக்கிறது நியாயம்? ஆண்டவர்கள் பாடே அதிர்ஷ்டம்தான்! அதற்குக் குறுக்கே நிற்க நாம் யார்?
புராண ஏடுகளிலே நிறைந்த போதைக் கருத்துகள் எத்தனை மலைமலையாக இருக்கின்றன! அவையெல்லாம் ஆபாசத்தைத் தூண்டவா?
பிருந்தாவனத்தில் நந்தகுமாரன் _ பேசும் பொற்சித்திரம் போன்ற பெண் பதுமைகள் _ புல்லாங்குழல் இனிமையிலே சில்லெனத் துள்ளும் உள்ளம் _ நீராடுந் துறைதனிலே ஆயர் மகளிர் _ மரத்தின் உச்சியிலே நீலவண்ணன் _ பொன்னவிர் மேனிக்குப் போர்வை இல்லாததால், அந்தப் பிரதிபலிப்பிலே தண்ணீரும் தங்கமெனப் பிரகாசிக்க அந்தப் பொன்மயமான காட்சி புல்லாங்குழலூதியின் கார் வண்ணமேனிக்கும் கானகத்தின் பளபளப்பை அமளிக்க, கூசும் கண்களும், கொடுக்க மாட்டேன் உங்கள் சேலைகளை என்று கூறிய காட்சி _ ஏட்டுச் சுவடியிலானாலும், வீட்டுச் சுவர்களிலானாலும் இந்திரியங்களெனும் துட்டக் குதிரைகளுக்கு அறிவெனும் கடிவாளத்தையா பூட்டும்?
தமிழகத்துத் தேவாலயங்களிலே, தில்லையிலே, திருவாரூரிலே, திருவரங்கத்திலே, காஞ்சியிலே, கன்னியாகுமரியிலே, ஆயிரங்கால் மண்டபங்களிலும், கோவிற் பிரகாரங்களிலும் உருவாக்கப்பட்டிருக்கும் சிற்பங்கள் ஜீவாத்மாவிற்கும், பரமாத்மாவிற்கும் உள்ள உறவு முறையை உபதேசிக்கின்றனவா, ஆணுக்கும் பெண்ணுக்குமுள்ள உறவு முறைகளை ஓதிக்கொண்டிருக்கின்றனவா? திவ்ய ஷேத்திரங்கள் என்கிறார்களே, அந்த ஊர்களிலுள்ள தேர்களிலே செதுக்கப்பட்டிருக்கும் சித்திரங்கள் காமவேள் நடனசாலையை ஞாபகப்படுத்துமா, கடவுளின் அருட்கருணையைக் கிளறுமா? இதுவெல்லாம் ஆபாசமில்லையாம்!

ஏனெனில் கடவுள் முலாம் பூசப்பட்டிருக்கிறதே! என் செய்வது?
அரசியல் சட்டத்திலேயே ஆண்டவனுக்கு அளிக்கப்பட்டுள்ள இடம் மிகப் பெரியது. ஜனநாயகம் என்றுதான் பேசுகிறோம். சர்வேஸ்வரனுக்குக் கொடுக்கப்பட்டுள்ள அந்தஸ்து, சாமான்யமானவர்களாகிய நமக்கேது? அதிலும் இந்த நாட்டு ஈஸ்வரர்கள் விஷயமே அலாதியானது. வேறு நாட்டிலும்தான் மத சுதந்திரம், கடவுள் சுதந்திரம் இருக்கின்றன. ஆனால் வித்தியாசம் உண்டு. ஒரே ஓர் உதாரணம்:
எந்தக் குடிமகனும் தனது விருப்பப்படி கடவுளைத் தொழவும், மதவிரோதமான பிரச்சாரம் செய்யவும் இந்த நாட்டு அரசியல் சட்டம் உரிமையளிக்கிறது _ இது ரஷ்ய நாட்டு அரசியல் சட்டம்.
எந்தக் குடிமகனும் தனது விருப்பப்படி கடவுளைத் தொழவும், மத சம்மந்தமான பிரச்சாரம் செய்யவும் இந்த நாட்டு அரசியல் சட்டம் உரிமையளிக்கிறது _ இது இந்திய அரசியல் சட்டம்.

சூட்சமம் புரிகிறதா? ரஷ்ய நாட்டில் எந்தக் கடவுளையும் தொழலாம். கடைப்பிடிக்கலாம். கதாகாலட்சேபம் செய்யக்கூடாது. ஆனால் பகுத்தறிவுக் கொள்கைப் பிரச்சாரம் அனுமதிக்கப்படும். ஊக்குவிக்கப்படும் _ இங்கு எவரும் எந்தக் கடவுளையும் பூசிக்கலாம். ஆனால் கண்ணப்ப நாயனார் சரித்திரமும், ருக்மணி கல்யாணமும், சிறீராம பட்டாபிஷேகமும்தான் பிரச்சாரம் செய்யப்பட வேண்டும்.
பகுத்தறிவு தலைகாட்டக் கூடாது. மத சம்மந்தமான பிரச்சாரம் இருக்கலாம். மதத்திற்கு விரோதமான பிரச்சாரம் தவறு. சட்டப்படி குற்றம். புரிந்ததா? காரணம் கேட்காதீர்கள்!

மரகதத்தீவு, _ அயர்லாந்து தேசமுள்ளதே அந்த நாட்டினர், இங்கிலாந்து இணையற்றதாய் இருந்தாலென்ன, எங்களுக்குத் தனித் தாயகம் வேண்டுமென்றனர் விடுதலை பெற்ற வீரக்கோட்டத்தினர். அவர்களும் அவனி புகழ் அரசியல் சட்டம் செய்துள்ளனர். அந்தச் சட்டத்தில் ரோடுகள் போட, ரயில் பாதை அமைக்க, மின்சார விளக்கு அமைக்க, குடி தண்ணீர், சாக்கடை வசதிகளைச் செய்ய, கோவில் பணத்தை உபயோகிக்கலாம் என்று சட்டமியற்றி நடைமுறையிலும் நடத்துகிறார்கள். கதையல்ல, அய்ரிஷ் அரசியல் சட்டத்தின் எட்டாவது விதி இதுதான்.
நமக்கு எட்டாக் கோட்டையோ எனக் கொட்டாவி விடாதீர்கள்.
கோட்டையேறாவிட்டால்கூடப் பரவாயில்லை! சிதம்பரம் கோவில் பற்றிக் குழியுமல்லவா பறித்து விட்டார்கள்! நம்முடைய அரசியல் சட்டம்தான் அடிப்படை உரிமைகள் அனுமதித்துள்ளதே. இத்தகு கருத்துகளுக்கு இடமில்லையா? என்று கேட்டு விடாதீர்கள். அது பெரிய கதை. க்ஷேமநல சர்க்கார் என்றுதான் இந்த அரசுக்குப் பெயர். யாருடைய க்ஷேமம், நலம் என்பதிலேதான் வேறுபாடு.
ரோடு போட அல்ல, மின்சார விளக்கு அமைக்க அல்ல, ரயில் எஞ்சின் வாங்க அல்ல _ கோவில்களின் நிர்வாகத்தை ஒழுங்குபடுத்தவும், பெருச்சாளிகளைப் பொறியிலே சிக்க வைக்கவும், கமிஷனர்கள் நியமிக்க வேண்டும். பொது மக்கள் தர்மகர்த்தாக்களாகவும் டிரஸ்டிகளாகவும் அமையத் தக்க அதிகாரம் படைத்த இந்து அறநிலையப் பாதுகாப்புச் சட்டம் என்ற சட்டத்தை 1951இல் சென்னை சர்க்கார் நிறைவேற்றியது. பல கோவில்களை அதன் அதிகாரத்திற்கு உட்படுத்திப் பதிவு செய்தனர்.
சிதம்பரத்தை விட்டுவிட முடியுமா? தில்லை மூவாயிரம் க்ஷேத்திரமாயிற்றே! இங்கு தானே,

குனித்த புருவமுங் கொவ்வைச்
செவ்வாயிற் குமிண் சிரிப்பும்
பனித்த சடையும் பவளம் போன்
மேனியிற் பால் வெண்ணீறும்
இனித்தமுடைய எடுத்த பொற்பாதமும்
உள்ள நடராசப் பெருமான் நர்த்தனமாடுவதாகத் திருநாவுக்கரசர் சொல்லுகிறார்?
தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டிற்கும் இறைவா போற்றி!

என்கிறார்களே, பொன்னம்பலத்தான் புவனம் முழுதிற்கும் சொந்தமல்லவா என்ற அடிப்படையில் அட்டவணையில் சேர்த்தது.
அரசு தலையிடும் கோவில்களில் தீட்சதர்களின் கண்களிலே தீப்பொறி பறந்தது. வழிபடுவதற்கு வேண்டுமானால் உரிமையுண்டு. வாரிசுகள் நாங்களல்லவோ? என்ன அதிகாரம் இந்த குட்டி சர்க்காருக்கு என்று இலட்சார்ச்சனையில் திட்டவில்லை; வழக்கு மன்றம் ஏறினர். வாதாடினர். சென்னை சர்க்கார் எங்கள் உரிமைகளிலே தலையிட முடியாது, இது எங்கள் சொத்து என்றனர். சிதம்பரம் சபாநாயகர் கோவில் வழக்கு என்று அதற்குப் பெயர்.
வழக்கு மன்றம் ஏறிவிட்டால், வரலாறெல்லாம் வந்துதானே ஆக வேண்டும்? தீட்சதர்கள் தங்கள் பூர்வோத்திரம் கூறினர். கனோஜி நாட்டுப் பிராமணர்கள் நாங்கள், இரணிய வர்ணன் என்பவன் எங்கள் மூதாதையரை இங்கு அழைத்தான். கோவில் எழுப்பித்தான். இதன் முழு உரிமைகளும் எங்களைச் சேர்ந்தவை. வாரிசு முறை இங்குச் செல்லாது. ஒவ்வொரு திருமணத்தாலும், பிறப்பாலும் அந்த உரிமை பெறப்படுகிறது. தில்லைப்பெண் எல்லையைத் தாண்டாது. ஒவ்வொரு திருமணமான தீட்சதனும் கோவிலுக்குப் பாத்தியதை உடையவன். அவர்கள்தான் அர்ச்சகர்கள், அந்நியர் தலையிடுவது அரசியல் சட்டத்திற்கு விரோதம். ஆகவே, அறநிலையப் பாதுகாப்புச் சட்டம் முரணானது என்றனர்.
கோவில் மணி அடிக்கிறது. அர்த்த ஜாம பூஜை போல் தெரிகிறது! ஆண்டவனார் தூங்குகின்றார். அயர்ந்த நித்திரை. அவர் எப்பொழுது எழுந்திருக்கப் போகிறார்? நெடுநாளாகத் தூங்கிக் கொண்டே இருக்கிறார். மணியோசை நமது மாந்தரையாவது எழுப்பக் கூடாதா?

                             ----------------------------------கே.ஏ.மதியழகன்- நூல்: முத்துப்பந்தல்

30.8.13

சூத்திர பஞ்சம பட்டங்கள் எப்போது ஒழியும்?



சகோதரர்களே! நாம் தீண்டாதவர்கள் என்று சொல்லப்படுவதற்கும், தீண்டாதவர்களாய் நடத்தப்படுவதற்கும் முக்கியக் காரணமென்ன என்பதை யோசித்துப் பாருங்கள். வெள்ளைக்காரர்களிலாவது, துருக்கியர்களிலாவது, சீனா ஜப்பான்காரர்களிலாவது தங்கள் நாட்டு மக்களில் யாரையாவது தீண்டாத ஜாதியாராகவும், கீழ் ஜாதியாராகவும் நடத்துகின்றார்களா? யாராவது அந்தப்படி நடத்தப்பட சம்மதித்துக் கொண்டிருக்கிறார்களா? நம் நாட்டில் மாத்திரம் ஏன் அம்மாதிரி தீண்டாதார்களாய் நடத்தப்பட வேண்டும்? நாமும் ஏன் வெகு காலமாகவே அதற்கு இணங்கி நம்மை நாம் தீண்டாதாரர் என்றே எண்ணிக் கொண்டு இருக்க வேண்டும்? என்பன போன்ற விஷயத்தை யோசித்துப் பாருங்கள்.
அன்றியும், வெளிநாட்டிலிருந்து வந்த கிறிஸ்தவனாவது, முகமதியனாவது நம்மைத் தீண்டாதாரராய் நடத்துகின்றார்களா? அன்றியும் சீனா, ஜப்பான் ஆகிய இடங்களில் இருந்து வரும் சைனாகாரன், ஜப்பான்காரன் முதலிய பவுத்தவர்களாவது நம்மைத் தீண்டாதவர்களாக நடத்துகின்றார்களா? இல்லையே.
மற்றபடியார் நம்மைத் தீண்டாதாராய் யார் நடத்துகின்றார்கள் என்று கவனித்துப் பாருங்கள். நம் நாட்டிலே பிறந்து நம் நாட்டிலே வளர்ந்து நம்மிடம் வேலை வாங்கி வாழ்ந்து வரும் மக்கள்தான் நம்மைத் தீண்டாதாரர்களாய் நடத்துகின்றார்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள்.
ஆனால், ஏன் அவர்கள் அம்மாதிரி நடத்துகின்றார்கள்? என்று பாருங்கள். நாமும் அவர்களும் ஒரே தேசத்தார் என்பதற்காகவா? அல்லவே அல்ல. மற்றெதற்காக என்றால் நாமும் அவர்களும் ஒரே மதக்காரர்கள் என்பதற்காகவே அல்லாமல் வேறு எந்தக் காரணத்தாலுமல்ல. அதாவது நம்மையும், நம்மைத் தீண்டாதவர்களாகப் பாவிக்கும் மக்களையும் ஒரே மதத்தின் கீழ் சேர்த்து எல்லோரும் இந்துக்கள் என்றும் இந்து மதக்காரர்கள் என்றும் சொல்லிக் கொள்வதாலேயே ஒழிய வேறில்லை. பெரிதும் வேறு நாட்டாரும், வேறு மதக்காரர்களுமான இஸ்லாம் மதக்காரரையும், பவுத்தரையும், கிறிஸ்தவரையும் தீண்டாதார் என்று யாராவது சொல்லுகின்றார்களா? அல்லது அவர்களாவது மற்றவர்கள் அப்படிச் சொன்னால் பொறுத்துக் கொண்டு இருப்பார்களா? ஒரு நாளும் பொறுத்துக் கொண்டிருக்க மாட்டார்கள்.
ஏனெனில், அவர்கள் மதத்தில் தீண்டாமை என்பதான ஒரு பிரிவு இல்லாததாலும் சுயமரியாதையே பிரதானமானதனாலும் அவர்களை யாரும் அந்தப்படி சொல்ல முடியாது. சொன்னாலும் அவர்கள் பொறுத்துக் கொண்டிருக்க மாட்டார்கள். உடனே புத்தி கற்பித்து விடுவார்கள் ஆதலால், நம் தலையின் மீது நாம் சுமந்து கொண்டிருக்கும் இந்து என்னும் மதம்தான் நம்மைத் தீண்டாதவர்களாக ஆக்கி இருக்கின்றதே யொழிய வேறு எந்தக் காரணத்தினாலும் நாம் தீண்டாதார்கள் அல்ல என்பதை இப்போது நீங்கள் உணருகின்றீர்களா? ஆகவே, நம்மில் எவன் ஒருவன் தன்னை இந்து என்று சொல்லிக் கொள்ளுகின்றானோ அவனெல்லாம் தன்னை மற்றொரு இந்து என்பவன் தீண்டாதான் பறையன், பஞ்சமன் என்று சொன்னால் கோபிக்கவோ ஆட்சேபிக்கவோ சிறிதும் இடமில்லை என்று உறுதியாய்ச் சொல்லுவேன். இந்து மதத்தில் தீண்டாமை உண்டு என்பதுடன் வெகு காலமாக நம் முன்னோர்கள் காலம்தொட்டு நாம் சண்டாளப்பறையராய் தீண்டாதாரராய் நடத்தப்பட்டு வந்திருக்கின்றோம். நம்மை நாம் இந்து என்று சொல்லிக் கொள்வதன் மூலம் நாமே நம்மை தீண்டாதார் என்று ஒப்புக் கொண்டும் வந்திருக்கின்றோம். அப்படி இருக்க இன்று நாம் திடீரென்று நமக்குச் சுயமரியாதை வந்து விட்டவர்கள் போல வேடம் போட்டுக் கொண்டு நம்மை யாரும் தீண்டாதார் என்று சொல்லக் கூடாது என்று சொன்னால் அதற்கு ஏதாவது அர்த்தமுண்டா?
இந்தப்படி நாம் சொல்லிக் கொள்வதாலேயே மற்றவர்கள் பயந்து கொள்ளுவார்களா?
ஒரு மனிதன் தன் மேலெல்லாம் மலத்தை எடுத்துப் பூசிக் கொண்டு வந்து எதிரில் நின்று என்னைப் பார்த்து யாரும் அசிங்கப்படக்கூடாது. என்னை எட்டிப்போ என்று யாரும் சொல்லக் கூடாது என்று சொன்னால் யாராவது கேட்பார்களா? அல்லது அது நியாயமாகவாவது இருக்குமா? அல்லது மலம் பூசிக்கொண்டு வருபவர்களைப் பார்த்து யாரும் அசிங்கப்படக்கூடாது, எட்டி நில் என்று சொல்லக் கூடாது என்று இண்டியன் பினல் கோட்டில் அதாவது கிரிமினல் சட்ட புஸ்தகத்தில் ஒரு செக்ஷன் போட்டு அதற்கு ஒரு வருஷ தண்டனை என்றும் போட்டு விட்டதனாலேயே அந்தப்படி அசிங்கப்பட்டு எட்டி நில் என்று சொன்னவர்களில் இரண்டொருவரைத் தண்டித்து விடுவதாலேயே அசிங்கப்படும் குணத்தை மக்களிடம் இருந்து மாற்றிவிட முடியுமா? என்று யோசித்துப் பாருங்கள்.
இது போலவே தான் இந்துக்களில் மற்றொரு சாரார் தங்கள் மதத்தைச் சேர்ந்த மற்ற மக்கள் தங்களைச் சூத்திரர் என்று யாரும் கூப்பிடக் கூடாது என்றும், சூத்திர ரென்றால் ஆத்திரம் கொண்டடி என்றும் சொல்லுகிறார்கள், எழுதி ஆங்காங்கு தொங்க விடுகிறார்கள். இதுவும் பேதத்தன்மை என்றே சொல்வேன். ஏனெனில், தன்னை இந்து என்று சொல்லிக்கொள்ளும் எவனையும் (அதாவது அவன் பார்ப்பனரல்லாதவனாய் இருந்தால்) அவனைச் சூத்திரன் என்று கூப்பிட உலகத்தில் உள்ள எல்லா மக்களுக்கும் உரிமை உண்டு. அழைப்பவன் மூடனேயாவான். ஏனெனில், இந்து மதத்தில் சூத்திரன் என்கின்ற வகுப்பு உண்டு என்பதானது பார்ப்பனரொழிந்து ஏனையோருக்கும் உரித்தானது என்பதும், இந்துவாய் இருக்கும் ஒவ்வொருவரும் ஒப்புக்கொள்ள வேண்டியதேயாகும். இந்துக்களுக்குள் எத்தனை உட்பிரிவு சமயக்காரர்கள் இருந்தாலும் அத்தனை சமயமும் சூத்திரனையும், பிராமணனையும், பஞ்சமனையும் (பறையனையும்) ஒப்புக் கொண்டே இருக்கின்றது.
அன்றியும் இந்த முறையானது இந்துமத உட்பிரிவுச் சமயங்களாகிய சைவத்தின் சிவபுராணத்திலும், பெரிய புராணத்திலும், 63 நாயன்மார்களிலும், மற்றும் சங்கராச்சாரிகளிலும் இருக்கிறது என்றால், பிறகு இதை ஆட்சேபிக்க யாருக்கு, எந்தச் சைவனுக்கு உரிமை உண்டு என்று யோசித்துப் பாருங்கள். அதுபோலவே வைணவத்திலும் அவர்களது ஆழ்வாராதிகளிலும், பகவத் பாகவத பக்தர்களிலும், நாலாயிரப் பிரபந்தம், இராமாயண முதலிய இதிகாச புராணங்களிலும் ஆதாரம் இருக்கின்றது என்றால், பிறகு இதை ஆட்சேபிக்க யாருக்கு, எந்த வைணவனுக்கு உரிமை உண்டு என்று யோசித்துப் பாருங்கள். மற்றும் இந்து மதத்திற்கு ஆதாரமான வேத சாஸ்திரம், ஸ்மிருதி முதலியவைகளிலும் இருப்பதோடல்லாமல் பகவான் வாக்குகளிலும், ரிஷிகள் வாக்குகளிலும் இருக்கின்றது என்றால், பிறகு இதை ஆட்சேபிக்கின்ற இந்து என்பவன் யோக்கியனாகவோ, அல்லது அறிவுடையனாகவோ இருக்க முடியுமா என்று யோசித்துப் பாருங்கள்.
ஆகவே, நம்மவர்கள் தங்களுக்குச் சூத்திரப்பட்டமும், தீண்டாதார் பஞ்சமர் என்கிற பட்டமும் வேறு யாராலோ கொடுக்கப்பட்டதாய் கருதி மற்றவர் பேரில் கோபப்படுவது வடிகட்டின அறிவீனமே யாகும். ஏனெனில், எவன் ஒருவன் தன்னை இந்து என்று சொல்லிக் கொள்ளுகின்றானோ அவனெல்லாம் சூத்திரப்பட்டமும், பஞ்சமப் பட்டமும் தானே எடுத்து தன் தலையில் சூட்டிக்கொண்டு திரிகின்றவனாவானே தவிர வேறில்லை.
இந்தியாவில் இந்துமதம் உள்ளவரை சூத்திரனும், பஞ்சமனும் ஒரு நாளும் மறைந்து போகமாட்டார்கள். அதுபோலவே இந்துமத வேதமும் சாஸ்திரமும், இராமாயணம், பாரதமும், பெரிய புராணம் சிவபுராணம், திருவிளையாடல் புராணம் முதலியவைகளும் உள்ளவரையிலும் சூத்திரப் பட்டத்தையும், பஞ்சமப் பட்டத்தையும் ஒழித்துவிடுவது என்பது முடியவே முடியாது.
---------------------------------------``எவனெழுதினாலென்ன என்ற புனைப்பெயரில் தந்தை பெரியார் அவர்கள் எழுதிய கட்டுரையின் ஒரு பகுதி. (குடிஅரசு 25.10.1931)

29.8.13

கிருஷ்ணன் என்றோரு மானுடன்

நூல் மதிப்புரை : கிருஷ்ணன் என்றோரு மானுடன்

நெய்வேலி நிலக்கரி நிறுவனத் தொழிலாளியான நண்பர் ப.ஜீவகாருண்யன் - செய்யாறு வட்டம், வெம்பாக்கம் என்ற கிராமத்தில் பூத்த இலக்கியப் புதுமலர் - ஆற்றல் வாய்ந்த எழுத்தாளர் - படைப்பாளி - புதிய கோணத்தில் சிந்திப்பவர்; புராணங்கள் மறுவாசிப்புக்கு உட்படுத்தப்பட்டால்...? என்பதற்கு நல்ல விடையாக அவர் தந்ததே `கிருஷ்ணன் என்றொரு மானுடன் என்ற நூல். இந்நூலுக்கு  திசை எட்டும் ஆசிரியர் குறிஞ்சிவேலனின் இந்த அணிந்துரை பல்வேறு தகவல்களின் களஞ்சியமாக உள்ளது - படித்துப் பயன் பெறுக.
- ஆசிரியர்

புராணங்களையும் இதிகாசங்களையும் மறு வாசிப்புக்கு உட்படுத்தி பல்வேறு மௌனங்களுக்கு விடை தேடும் முயற்சிகள் இன்று இந்தியாவின் அனைத்து மொழிகளிலும் நடந்து வருகின்றன.
அந்த வகையில் நம் பாரதத்தின் இரு பெரும் இதிகாசங்களாகக் கருதப்படும் மகாபாரதமும் இராமாயணமும் மறு வாசிப்புக்கு உட்படுத்தப்பட்டு பல சோதனை முயற்சிகள் தொடர்கின்றன. பாரதத்தின் முக்கிய கதாபாத்திரமான கிருஷ்ணனின் மகன்களில் ஒருவனான சாம்பன் பற்றிய நாவல் ஒன்று, வங்க மொழியில் வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தியது. அதற்கு சாகித்ய அகாதமி விருதும் வேறு பல பரிசுகளும் கிடைத்துள்ளன.
மராத்தியில் ம்ருத்தியுஞ்செய என்னும் பெயரில் மகாபாரத நாவல் வெளிவந்துள்ளது. இது மகாபாரதத்தின் கர்ணனை முன்னிலைப்படுத்தி, அவனுடைய பார்வையில் மகாபாரதக் கதைப் போக்கு செல்கிறது. மிகவும் அற்புதமான பல புதிய கோணங்களைத் திறந்துவிடும் இந்த நாவலும் மராத்திய மொழியில் இலக்கிய உன்னத நிலையை அடைந்துள்ளது.
அதேபோல் யுகாந்தா என்னும் நாவலும் மராத்திய மொழியில் வெளியாகியுள்ளது. சூதர்கள் வாய்மொழியாகப் பாடித் திரிந்த மகாபாரதக் கதையை வியாசர் காப்பியமாக விரிவாக்கி அதில் பவனி வரும் பாத்திரங்களான காந்தாரி, குந்தி, திருதராட்டிரன், திரௌபதி, கிருஷ்ண வாசுதேவன் ஆகியோரின் எண்ணங்களாக விரிந்து செல்லும் இந்த நாவலை அய்ராவதி கார்வே நவீன முறையில் அமைத்து மறு சிந்தனைக்கு மக்களை அழைத்துச் செல்கிறார்.
இதே மராத்தி மொழியில் வி.ஸ.காண்டேகர் எழுதிய `யயாதி என்னும் நாவலும் அற்புதம் நிறைந்தது. யயாதியை ஒரு பெண் பித்தனாக முன்னிருத்தும் மகாபாரதத்தினின்றும் சற்று விலகி ஆழமாகச் சிந்திக்கும் காண்டேகர், பெருங்கவி காளிதாசனுடன் ஒத்துப் போய், அசுரக் குரு சுக்கிராச்சாரியின் மகளான தேவயானியை அக்கினியையும் அந்தணர்களையும், சாட்சியாகக் கொண்டு திருமணம் முடித்தாலும், அந்த தேவயானியோ யயாதிக்கு வழங்க வேண்டிய அன்பை வழங்க மறுத்து உதாசீனப்படுத்தியதால்தான் அவளின் பணிப் பெண்ணான சர்மிஷ்டையை யயாதி நெருங்க, அவளும் அந்த அன்பை மனமுவந்து வழங்குகிறாள் என்பதுபோல் மறுவாசிப்புக்கு நாவலை உட்படுத்தியுள்ளார்.
ஒரிய மொழியில், பிரதிபாராய் வடிவமைத்த யாக்ஞசேனியும் திரௌபதியின் பார்வையில் மகாபாரத இதிகாசத்தை வாசகனுக்கு அறிமுகப்படுத்துகிறது. கிருஷ்ணனுக்கு திரௌபதி எழுதும் கடித வடிவில் இந்த நாவல் விரிந்து செல்கிறது. சொர்க்கத்துக்குப் பூத உடலுடன் நடந்து சென்றபோது கால் தடுமாறி விழுந்த திரௌபதி, இமயத்தின் பனிப்பாறைகளில் படுத்தவாறு மிகவும் உணர்ச்சிவயப்பட்டு தன் வாழ்க்கையில் நேர்ந்த ஒவ்வொரு கட்டத்தையும் பற்றி இதயக் குருதி பீறிட்டொழுகும்விதத்தில் கிருஷ்ணனுக்கு எழுதும் கடித வடிவ நாவல்தான் இது. பெண்மைக்கு எதிரான கடுமையான புதிர்களுக்கு எதிராகப் போராடும் பெண் சிந்தனையின் வெளிப்பாடு மட்டுமல்ல; உலகெங்கும் உள்ள மனித வர்க்கத்திற்காக பேசுகின்ற ஒரு புதுமை மனம்தான் திரௌபதியினுடையதாக இதில் சித்தரிக்கப்பட்டுள்ளது. அதனால்தானோ என்னவோ இந்த நாவலுக்கு ஞான பீட விருதும் கிடைத்துள்ளது.
சமகாலப் படைப்புகளிலேயே வங்காளிக்கு அடுத்து புதுமைகளைப் பெற்றிருக்கும் மலையாள மொழியில் எம்.டி. வாசுதேவன் நாயரின் ரண்டாமூழம், பி.கே. பாலகிருஷ்ணனின் இனி ஞான் உறங்ஙட்டெ என்னும் நாவல்களும் மகாபாரத இதிகாசத்தை மறு சிந்தனைக்கு உட்படுத்தும் படைப்புகளே.
பீமனின் பார்வையில் விரிந்து செல்லும் மகாபாரதம் அனைத்து வெற்றிகளுக்கும் தான் ஒருவன் காரணமாக இருந்தாலும் தன்னை எவ்வாறு தர்மன், கிருஷ்ணன், குந்தி, திரௌபதி, விதுரர் ஆகியோர் வஞ்சிக்கிறார்கள் என்பதைத் தோலுரித்துக்காட்டும் படைப்பாக ரண்டாமூழம் இருப்பதுடன், பாண்டவர்களின் பிறப்பிலுள்ள ரகசியங்களையும் அப்பட்டமாக விண்டுரைக்கிறது.
இனி ஞான் உறங்ஙட்டெ நாவலும் திரௌபதியின் குற்றவுணர்வின் வழியாக, தார்மீக ரோஷாக்னி மூலமாக பயணித்து ஒட்டுமொத்த பெண்ணினத்தின் துயரமாக உருவாகி, உலக வாழ்வின் யதார்த்தமாகவும் உள்மனச் சலனமாகவும் விரிந்து கர்ணனின் கதையைப் புதிய வடிவில் கூறுகிறது.
மகாபாரதப் பாத்திரங்களின் கதையை நான் எழுதவில்லை. மனித சமுதாயத்தின் பல்வேறு முகங்கள், உணர்வுகள், உறவுகள், முரண்கள் பற்றி பிரக்ஞை இந்த நாவலை எழுதி முடிக்கும்வரை இருந்தது. சிற்சில இடங்களில் ஒன்றிரண்டு புதிய பாத்திரங்களைச் சேர்க்கும்போது நாவலின் பரிணாமம் பெருகியது... என்று தன்னிலை விளக்கத்தை அளித்த எஸ்.எல்.பைரப்பா தமது பருவம் நாவலில் மனிதநேய மகாபாரதக் கதையைச் சொல்லியிருக்கிறார்.
எஸ். ராமகிருஷ்ணனின் உப பாண்டவம்  மகாபாரத காலத்திய மக்களைப் பேச வைக்கிறது. அரசர்களையும் அவர்களின் போர்களையும் அதிகம் தொடாமல் சாதாரணமானவர்களின் உள்மனப் போராட்டங்களையும் அவர்களின் வாழ்வியலையும் முழுமையாகப் பிரதிபலிக்கிறது.
இவ்வாறு மகாபாரதக் கதை பல இந்திய மொழிகளில் பலரின் மறு சிந்தனைகளில் புதிய கோணங்களில் உருவாக்கம் பெற்றது போல் நண்பர் ப. ஜீவகாருண்யனின் கிருஷ்ணன் என்றொரு மானுடன் என்னும் இந்தப் புதிய படைப்பைப் படிக்கும்போது நான் ஏற்கெனவே படித்திருந்த பன்மொழிப் படைப்புகளும் என் உள்மனச் சிந்தனைகளில் ஓடின.
ஜீவகாருண்யனின் இந்த நாவலும் கிருஷ்ணன் என்கிற ஒரு மானுடப் பிறவியின் இன்ப துன்பங்களை, அவனின் வாழ்க்கையில் நேர்ந்த வெற்றி தோல்விகளை, மானுடனாகப் பிறந்தாலே இறப்பும் உண்டு என்கிற யதார்த்தத்தை நீரோட்டமான, வாசகனை மிரட்டாத, தேங்க வைக்காத எளிதான மொழி நடையில் உருவாக்கப்பட்டுள்ளது.
மகாபாரதக் கதைதானே, பிற மொழியில் நாம் படிக்காத வேறு எதை இவர் புதுமையாகச் சொல்லப் போகிறார்? என்று நினைத்து இருபது முப்பது பக்கங்களைப் படிப்பதற்குள் நம்மை ஆவேசமாக உள்ளிழுத்துச் செல்கிறது நாவலின் உத்தி.
கிருஷ்ணனின் மாமன் கம்சனைப் பற்றி விவரிக்கும் உண்மை நம்மைத் திடுக்கிடச் செய்கிறது. ... கம்சனுடன் பிறந்தவர்கள் நியகிரோதன், சுநாமன், கங்கன், சுபூமிபன், சங்கன், சுதனன், அநாதிருஷ்டன், புஷ்டிமான் என்று ஏழு ஆண்கள் கம்சா, கம்சவதி, சுதனூ, கங்கா, ராஷ்ட்ரபாலி ஆக அய்ந்து பெண்கள். இவர்கள் அனைவரும் உக்கிரசேனரின் குணத்தில், தோற்றத்தில் ஓரளவு குறை _ நிறை உடையவர்களாக இருக்கிறார்கள். ஆனால் கம்சன் அப்படியில்லை.
காரணம், அவன் பிறப்பு அப்படி என்று அறிந்தவர்கள் சொல்கிறார்கள். திருமணம் முடிந்து சில ஆண்டுகள் வரையில் குழந்தை பாக்கியம் இல்லாமலிருந்த கம்சனின் தாய், துராவுக்கு அருகிலுள்ள இந்திரகிரி காட்டுக்கு பொழுதுபோக்காக குதிரையில் சென்றாள். நெடு நெடு உயரமும் உயரத்திற்கேற்ற கனமான உடலும் கொண்டு ஓங்குதாங்காக இருந்த துருமீளன் என்ற காட்டு மனிதனுக்கு ஒரு மாலை நேரத்தில் வயப்பட்டவள் பன்னிரண்டு நாட்கள் இரவும் பகலும் அவனுடன் உல்லாசமாக இருந்து கம்சனைக் கருத்தரித்து அரண்மனை திரும்பினாள். தலைமகன் கம்சனையடுத்து மற்ற குழந்தைகள் அனைவரையும் உக்கிரசேனரின் வித்தாகப் பெற்றெடுத்தாள்.
ஒரு கொடூரக் குணமுடையவன் எங்கிருந்து உற்பத்தியானான் என்பதிலிருந்தே நாவலின் மூலம் நமக்குப் புலப்படாத பல தகவல்கள் கிடைக்கப் போகின்றன என்பதைச் சூசகமாக வெளிப்படுத்துகிறார் ஆசிரியர்.
கிருஷ்ணன் கோபியர்களிடம் செய்யும் குறும்புத்தனங்களும் அவன் ஒரு மானுடப் பிறவிதான் என்பதைப் புலப்படுத்தும் விதமாகவும் மானுடப் பிறவிக்கேயுரிய ஆசாபாசங்களை நிரூபிக்கும் வகையிலும் கீழ்வரும் சம்பவம் வாசகரைப் பரவசப்படுத்தும்.
ஆடையில்லாமல் நிர்வாணமாக நீரில் இறங்கியது தேவ குற்றம்! செய்துவிட்ட பாவத்திற்குப் பரிகாரமாக தலைக்கு மேலாக இரு கைகளையும் தூக்கி வணங்கி ஆடைகளைப் பெற்றுக் கொள்ளுங்கள்! என்றேன். சூட்சுமம் நிறைந்த எனது வார்த்தைகளில் பயந்துபோன பெண்கள், பார்ப்பவர்களைப் பித்தாக்கும் தங்களின் பிறப்புறுப்புகளை ஒரு கையால் மறைத்து, என்னை முறைத்து வணங்கும் பாவனையில் ஒரு கையைத் தலைக்கு மேலாக உயர்த்தி நின்றனர். நான் அவர்களை மீண்டும் பயமுறுத்தினேன்.
பெண்களே, ஒரு கையையுயர்த்துவது வணக்கம் ஆகாது. ஒற்றைக்கை வணக்கம் பாவத்திலும் பாவம் நிறைந்தது. முறையாக இரு கைகளையும் உயர்த்தி வணங்கி ஆடைகளை வாங்கிக் கொள்ளுங்கள்! என்று.
கிருஷ்ணனுக்கு சக்கராயுதம் கிடைத்தவிதம் பற்றி ஆசிரியர் அலசும் ஆராய்ச்சியும் அறிய வேண்டிய ஒன்றாக உள்ளது. கிருஷ்ணனின் இளம் வயதில் ப்ரவர்ஷன குன்றுக்குச் சென்றபோது அக்குன்றின் பூர்வகுடித் தலைவனின் மகள் மேல் மையல் கொள்ள, தலைவனின் மகளும் கிருஷ்ணனை விரும்பி ஏற்றுக் கொள்வதுடன், அந்த அன்பின் பரிசாக ஒரு அதிசய ஆயுதத்தை அளித்தாள். அந்த விசித்திர ஆயுதம் கண்ணெதிர் மிருகங்களைக் குறி தவறாமல் தாக்கி வீழ்த்துவதுடன் மீண்டும் எய்தவரிடமே வந்துசேரும் தன்மையில் வடிவமைக்கப்பட்டிருந்தது. அதையே ஒரு நளின வட்டத்தட்டாக வடிவம் மாற்றியது மட்டுமே கிருஷ்ணனின் யுக்தி என்கிறார் நாவலாசிரியர்.
ஓரிடத்தில் கிருஷ்ணனுக்கு அத்தை குந்தியின் நினைவு வந்தபோது, குந்தியின் உறுதியான சில முடிவுகள் அவனுக்குப் பயத்தையே ஏற்படுத்தியது. அதே நேரத்தில்  அவளின் அந்த உறுதியான முடிவால் பெண்ணியத்திற்கு இழைக்கப்படும் கொடுமைகளை எதிர்கொள்ளும் திறன் குந்தியிடம் உள் மனதில் ஆழமாகப் படிந்துள்ளதும் அவளின் வார்த்தைகளாக நாவலில் உலவவிட்டிருக்கும் ஆசிரியரின் எண்ணமும் வெளிப்படுகிறது.
... கிருஷ்ணா, ஆண்மையற்ற பாண்டுவுக்கு வாழ்க்கைப்படுவதற்கும் முன்பாகவே போஜனின் தேரோட்டியிடம் கர்ணனின் பிறப்புக்கு விளைநிலமாக எனதுடலை விரும்பிப் பலிகொடுத்த தொடர்ச்சியில் இன்றுவரை நான் பாவப் பட்டவளாக இருக்கிறேன் என்பது உண்மைதானென்றாலும் என்னிலும் அதிகம் பாவப்பட்டவளாக, கஷ்டப்படுபவளாக திரௌபதி இருக்கிறாள்! பெண்களின் கண்ணீர் கூரிய வாளினும் கொடியது என்பதை உணராதவனாக துரியோதனன் பாண்டவர் களுக்குத் தொல்லை கொடுக்கும் எண்ணத்தில் அறம் பிறழ்ந்து எனக்கும் திரௌபதிக்கும் அளவில்லா துன்பம் கொடுத்து விட்டான். திரௌபதிக் கெதிராக துரியோதனன் இழைத்திருக்கும் குற்றத்திற்குரிய தண்டனையை அந்தக் கொடியவன் யுத்தத்தின் வழியில் தவறாமல் அனுபவித்துத் தீர வேண்டும்! இழந்துவிட்ட ராஜ்யத்திற்கு மாற்றாக அய்ந்து கிராமங்கள் கேட்பது, சமாதானம் பேசுவது, தூது செல்வது இவையெல்லாம் முதுகெலும் பில்லாதவர்கள் செய்கின்ற காரியங்கள். சகுனி நடத்திய சூதாட்ட சூழ்ச்சியில் முதுகெலும்புகளை இழந்து நின்ற பாண்டவர்கள் பதின்மூன்றாண்டுகள் பட்ட சிரமங்களுக்குப் பிறகு இழந்திருந்த முதுகெலும்புகளைப் பெற்றுவிட்டார்கள்! என்ற எனது நம்பிக்கை பொய்த்துவிடக் கூடாது...
என்று கூறியபோது துரியோதனனுக்கு எதிராக குந்தியிடம் திரண்டிருந்த ஆவேசம் தெள்ளத் தெளிவாக நாவலில் வெளிப்படுகிறது.
யுத்த தர்மம் என்பதைக் கூட தெளிவாக ஓரிடத்தில் பீஷ்மர், கிருஷ்ணனின் வாய்மொழியாக விளக்குகிறார் நாவலாசிரியர்.
... யுத்தம் பகலில் மட்டும்தான் நடக்க வேண்டும். இருட்டிய பிறகு சங்குகளின் முழக்கத்துடன், சண்டையை நிறுத்தி, இரு அணிகளும் கூடாரங்களுக்குத் திரும்ப வேண்டும். காயப்பட்டு, களைத்து யுத்த பூமியிலிருந்து வெளியேறுபவர்களைக் கொல்லக்கூடாது. நால்வகைச் சேனையும் தமக்குரிய எதிர்ச் சேனையுடன் மட்டுமே மோத வேண்டும். எந்த வீரனோடும் குழுத் தலைவனோடும் துவந்த யுத்தம் செய்ய யாரும் அறைகூவல் விடுக்கலாம். அறைகூவலை ஏற்பவன் களத்தில் தயார் நிலையில் வந்து நின்ற பிறகுதான் அவனோடு அறைகூவல் செய்தவன் மோத வேண்டும். ஒருவருக்கொருவர் எதிரான போரில் மற்றவர் தலையிடக் கூடாது. சரணடைந்தவர்களை, புறமுதுகிட்டுத் தப்பியோடுபவர்களை, சிறைபிடிக்கப்பட்டவர்களை, ஆயுதமிழந்தவர்களை, சாரதிகளை, கவசமிழந்தவர்களை, வீரர்களுக்கு ஆயுதங்கள், உணவுகள் கொணர்ந்துதரும் பணியாளர்களைக் கொல்லக் கூடாது. சங்கு ஊதுபவர்கள், தாரை, தப்பட்டை முழக்குபவர்கள் மீது ஆயுதம் பிரயோகிக்கக் கூடாது...
கிருஷ்ணனை ஒரு மனிதனாக உருவாக்கி, இந்த நாவல் முழுவதும் ஒரு மானுடனுக்குரிய செயல்களைச் செய்ய வைத்து, மனிதனாகப் பிறந்தவனுக்கு இறப்பும் நிச்சயம் உண்டு என்னும் இயல்பான நிலையில் மகாபாரதக் கதையை அற்புதங்கள் இல்லா யதார்த்த நிகழ்வுகளைக் கொண்ட நாவலாகப் படைத்து வெற்றி கண்டுள்ளார் ஜீவகாருண்யன்.
அதுமட்டுமல்ல, கிருஷ்ணனின் இறுதி மூச்சு நிற்கும் நேரத்திலும் கூட மானுடருக்கேயுரிய பங்காளிப் பகையை நாவலாசிரியர் விளக்குகிறார்.
... குடும்ப உட்பகையின் காரணமாக என்றோ எனக்கு நேர் எதிரியாகியிருந்த தாயாதி ஜரா, பிரபாச தீர்த்த பெரும் பரப்பில் யாதவ இனம் வேரற்ற பெருமரமாக வீழ்ந்துவிட்ட கொடுமை குறித்துக் கொஞ்சமும் கவலை கொள்ளாமல், கிருஷ்ணனைக் கொல்வதற்குச் சரியான சந்தர்ப்பம் வாய்த்தது என்னும் மகிழ்வுடன் மரம் ஒன்றின் பின்னால் மறைந்து நின்று தனது நெஞ்சுக்குள் கனன்றிருந்த நெடு நாட்களின் பகைமைக்கு இன்று பழி தீர்த்துக் கொண்ட விதம் என்னை ஆச்சரியப்படுத்திற்று. பாதி கணுக்கால் வரை கூர்மையுடன் துளைத்து நிற்கும் அம்பின் முனையில் நிச்சயம் ஏதோ கொடிய விஷம் தடவியிருக்க வேண்டும் என்பதை உணர்ச்சியற்று உறையும் உடலின் செயலிழப்பில் தெளிவாக உணர முடிந்தது. சகோதரன் ஜரா விருப்பமுடன் என் மீது செலுத்திய விஷ அம்பு தனக்கு விதிக்கப்பட்ட கடமையின் உறுதியில் வாசுதேவ கிருஷ்ணன் எனது உயிர்ப் பானத்தை ஆவலுடன் உறிஞ்சிக் குடிக்க ஆரம்பித்துவிட்டது: என்ன காரணத்திற்காக எனக்கு இப்படியொரு மரணம்? என்னும் எண்ணத்தை மீறி மரணம் என்னளவில் இப்போது மிகுந்த மதிப்பிற்கும் நேசிப்பிற்கும் உரியதாகி விட்டது என்று முடிக்கும் கட்டத்திலும் மனிதனின் ஆசாபாசங்களை, பழிவாங்கும் பங்காளிப் பகையை விவரிக்கிறார் ஆசிரியர்.
நான் பல்வேறு மொழிகளில் பல்வேறு மறு வாசிப்புத் தன்மையுள்ள கதைகளைப் படித்தபோது, இப்படிப்பட்ட மறு வாசிப்புக்கேற்ற கலைப் படைப்பு தமிழில் இல்லையே! என்னும் வருத்தம் என் மனதில் பல ஆண்டுகளாக உழன்று கொண்டிருந்தது. அந்த வருத்தம் தற்போது ஜீவகாருண்யனின் கிருஷ்ணன் என்றொரு மானுடன் என்ற இந்த மாபெரும் இதிகாசப் படைப்பைப் படித்து முடித்தபோது கரைந்துவிட்டது என்பது மிகையற்ற உண்மை.
ப. ஜீவகாருண்யன் இந்த நாவலில் கையாண்டுள்ள, உத்தி, மொழி, வடிவமைப்பு போன்றவைகள் புதிய கோணத்தில் அமைந்துள்ளன; அதுமட்டுமல்லாமல், நாம் இதுவரையில் கேள்விப்படாத பல நிகழ்வுகளை இந்நாவலில் புதிய கோணத்தில் கோர்த்துள்ளார். மகாபாரதம், பாகவதம் ஆகியவற்றின் கலவைகள் நாவலில் ஒரு முழுப் பரிணாமம் பெற்று முழுமை பெற்றுள்ளன. அந்தவகையில் ஜீவகாருண்யன் இந்த இதிகாசத்தை ஒரு முற்போக்குச் சிந்தனைக்குக் கொண்டு சென்றுள்ளார் என்பதும் பாரதக் கதையை மறுவாசிப்புக்கு உட்படுத்தியுள்ளார் என்பதும் போற்றுதலுக்குரிய செயலாகும்.

                         ------------------------ “உண்மை” ஆகஸ்ட் 16-31 - 2013

28.8.13

கிருஷ்ணனுக்கு ஜெயந்தி கொண்டாடலாமா? கோபப்படாதீர் - சிந்திப்பீர்!


தமிழர் தலைவர் கேள்வி


பாவ யோனியிற் பிறந்தவர்கள் பெண்கள் என்று கூறுகிற கீதையை அருளியதாகக் கூறப்படும் கிருஷ்ணனுக்கு, விழா (ஜெயந்தி) கொண்டாட லாமா? - சிந்திப்பீர் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

நாளை *(28.8.2013) கிருஷ்ணன் பிறந்த நாளாம்! கோகுலாஷ்டமி என்ற பெயரால் ஒரு நாள் அரசு விடுமுறை - அதுவும் மதச் சார்பின்மை முத்திரையை அரசியல் சட்டத்தின் முகப்பிலேயே ஏற்றிப் பிரகடனப்படுத்தியுள்ள அரசுகள் - விடுமுறை - பல கோடி ரூபாய்கள் நட்டம்! 

ஹிந்து மதத்தவரில் கிருஷ்ணனைக் கடவுளாகக் கொண்டாடும் மதத்தில் ஒரு பிரிவினர் தவிர, மற்றவர்கள் எல்லோரும் பேன் குத்திக் கொண்டு, சோம்பல் முறித்துக் கொண்டிருக்கும் பக்தி போதை ஏற்பாடு இது; மதச் சார்பின்மையை கேலிக் கூத்தாக்கும் செயல் இது!

பிள்ளை விளையாட்டே!

1. பிறப்பும் இறப்பும் இல்லாத கடவுள். (ஹிந்து மதத்தில்) பிறப்பதும், இறப்பதும் எல்லாம் வள்ளலார் கூறியபடியே பிள்ளை விளையாட்டு அல்லாமல் வேறு என்ன?

2. கடவுள் கற்பனைதான் என்றாலும் மனிதர்களுக்கு ஒழுக்கத்தைப் பரப்ப இப்படி ஒன்று தேவையில்லையா? என்று கேட்கும் அதிமேதாவிகள் உள்ளனர். அவர்களைக் கேட்க விரும்புகிறோம்.

அ) கண்ணன் ஒழுக்கத்தைச் சொல்லிக் கொடுத்த கடவுளா? சின்ன வயதில் வெண்ணெய் திருடி, பெரிய வயதில் குளத்தில் குளித்த பெண்களின் புடவைகளைத் திருடி, மரத்தின் மீதேறி அமர்ந்து, நிர்வாண நிலைப் பெண்களை அப்படியே நீரினை விட்டு வெளியேறிடச் சொல்லி, அதை ரசித்து, சுவைத்து, பெண் கேலியை முதன் முதலில் துவக்கி  வைத்தவன் - சராசரி மனிதன் கூட செய்ய வெட்கப்படும் செயலைச் செய்து, கிருஷ்ண லீலை என்று கொண்டாடுவது ஒழுக்கத்தை வளர்ப்பதா? ஒழுக்கத்தைச் சிதைப்பதா? பக்தர்கள் சிந்திக்கட்டும்!

சண்டை மூட்டிய கடவுள்!

ஆ) பகவத் கீதை உபதேசம் என்ற பெயரால் சகோதரர்களிடையேகூட சண்டை போர் துவக்கி ஒருவரை ஒருவர் அழிக்கும் வண்ணம் தூபம் போட்ட செயல் அருவருக்க, கண்டிக்கத்தக்க செயல்கள்.

(இ) வன்முறை மட்டுமல்ல, மனித குலத்தைப் பிளவுபடுத்தும் ஜாதி - வர்ண தர்மத்தை சதுர்வர்ணம் மயாஸ்ருஷ்டம் - நான்கு ஜாதிகளை நானே உண்டாக் கினேன்; நானே நினைத்தாலும்கூட ஜாதிக்கென்ற தர்மங்களை - குலதர்மத்தை - மாற்றிடவே முடியாது என்று கூறி, ஜாதி - வர்ணாஸ்ரமக் கொடுமையை நிலை நாட்டிய சமத்துவ விரோதியான ஒருவரைவிட சமூகத்திற்குக் கேடு செய்தவர்கள் யார் இருக்க முடியும்?

கோபப்படாதீர் - சிந்திப்பீர்!

இப்படிப்பட்ட மனித குலத்திற்குரிய சமத்துவம், சகோதரத்துவத்திற்கு எதிராகவும், பெண்களை பாவயோனிகள் என்று வர்ணித்தவருமான ஒருவரை கடவுளாக வணங்கிடுவது அறியாமை, மூடநம்பிக்கை காட்டுமிராண்டித்தனம் அல்லாது வேறு என்ன?

கோபப்படாமல் சிந்தியுங்கள் - பக்தி வந்தால் புத்தி போகும் என்ற பெரியார் மொழி எவ்வளவு சரியானது என்று உணருகிறீர்களா?

---------------------------------------------கி.வீரமணி தலைவர், திராவிடர் கழகம் சென்னை  27.8.2013

27.8.13

மதமும் சாமியும் - தந்தை பெரியார்



இன்று நான் குறிப்பிட்ட நேரத் திற்கு வந்து சேர்ந்து விட்டேன். ஆனாலும் மிக்கக் களைப்போடு வந்திருக்கிறேன். சரியாக 24 மணி நேரம் இரயிலில் பிரயாணம் செய்து விட்டு - 10, 15 மைல் மோட்டாரிலும் வந்திருக்கிறேன். ஆகையால் இன் றைய விஷயத்தைப் பற்றி நான் சரிவரப் பேசமுடியா தென்றே கருது கிறேன். அன்றியும் அதிக நேரமும் பேசமுடியாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.
நிகழ்ச்சிக் குறிப்பில் எனக்கு இன்று குறிப்பிடப்பட்டிருக்கும் விஷ யம் "இந்தியப் பொருளாதாரம்" என்பதாகும். இது என்னைக் கேட்டுப் போட்டதல்ல என்றாலும், எந்தத் தலைப்பிலானாலும் என்னுடைய சங்கதி ஏதோ அதைத்தான் சொல்லுவது என் குணம் என்பது நீங்களும் தலைவரும் அறிந்ததேயாகும். ஆனா லும் பொருளாதாரம் என்னும் தலைப்பும் மிக்க நல்ல தலைப்பே யாகும். இதன் மூலம் எனது சங் கதியைச் சொல்ல முடியாவிட்டால் பின் எதன் மூலம்தான் சொல்லக் கூடும்? ஆனால், எனக்கிருக்கும் கஷ்டமெல்லாம் அதிக நேரம் பேசமுடியாதென்பதேயாகும். ஆதலால் மன்னிக்கக் கோருகின்றேன்.

சகோதரர்களே! பொருளாதாரம் என்கின்ற வார்த்தை நம்ம நாட்டில் தற்காலம் உள்ளதுபோல் முன் காலத் தில் இருந்ததாகச் சொல்ல முடியாது. முன்காலத்தில் எல்லாம் பொருளை உடைத்தாயிருக்கவும், பணம் காசைக் கையாளவும் சிலருக்கே உரிமை இருந் தது. மற்றவர்களுக்குத் தானியம் தவிர வேறு ஒன்றும் பெற உரிமை கிடையாது. நாட்டு வழக்கிலும் பணங் காசு - புழக்கமும் கிடையாது. எல்லா வாழ்க்கையும் பண்டமாற்றை அடிப் படையாகக் கொண்ட தாகவே இருக் கும். ஒரு பண்டத்தைக் கொடுத்து மற்றொரு பண்டத்தை வாங்கிக் கொள்ளுவார்கள். கைத்தொழில் காரர்கள், கூலியாள்கள், ஏவான்கள் எல்லோருக்கும் தானியமே கொடுப் பது வழக்கம். மந்திரிகளுக்கும் அரசன் பூமி மானியம் விடுவதே தவிரப் பணமாக ஏதும் கொடுப்ப தில்லை. எனக்குத் தெரிய 40,50 வருஷங் களுக்கு முன் வேஷ்டி கொடுப்பவன், உலோகப் பாத்திரம் கொடுப்பவன், நகை செய்து கொடுப் பவன். தோட்டங்களுக்குக் கலப்பை, ஏர், செய்து கொடுப் பவன், செருப்புத் தைத்துக் கொடுப்பவன், சுவர் வைப் பவன் முதலிய வர்கள் எல்லோரும் தானியம் தான் வாங்கிக் கொள்ளு வார்கள். சில ஆட்களுக்கு வருஷத் திற்கு இவ்வளவு என்று இருக்கும்.
பெருத்த மிராசுதாரர்களிடம் பார்த் தாலும் தானியத்தைத் தான் பூமியில் பெரிய பெரிய குழிகள் ஆழமாக வெட்டி, போட்டு வைத்திருப்பார்கள். பண்டமாற்றைத் தவிர சாதாரண ஜனங்கள் பணமாய்ப் பார்ப்பது மிக்க அபூர்வமாகவே இருக்கும். பெருத்த மிராசுதாரர்களிடமும், அரசாங்கப் புழக்கம் முதலியவற்றிலும் பணம் புழங்கினதானாலும் அதுவும் மிகச் சிறு நாணயமாகத் தான் இருக்கும். ரூபாய் என்கிற பெயர் கூட இந்த நாட்டுப் பாஷையல்ல. நாணயமும் அல்ல. சின்னப்பணம் அதாவது ரூ 1க்கு 10 கொண்டதாக இருக்கும். விலை பேசுவதிலும் எத்தனை பணம் என்றுதான் கேட்பார்கள். செல்வ முள்ள வனையும் பணக்காரன் என்று தான் சொல்லுகின்ற வழக்கம் இன்றும் உண்டு. அரசியல் அபராதம் முதலியவற்றிலும் 100 பணம் 200 பணம் 500 பணம் என்று பணக் கணக்கில் தான் கணக்குச் சொல்லு வதாகும். சமீப காலம் வரை கூட மலையாளத்தில், திருவாங்கூர் - கொச்சி ராஜ்ஜியத்தில் சிவில் கோர்ட் டில் ரூபா என்று பிராது போடுவ தில்லை. 10 ஆயிரம் ரூபாய்க்குப் பிராது போடுவதா னாலும் அதைப் பணமாகப் பெருக்கி அந்தப் பண எண்ணிக் கையைக் காட்டித்தான் பிராது போடும் வழக்கம் இருந்து வந்தது. சில இடத்தில் இன்றும் இருக்கிறது.
ஆகவே ரூபாய் என்பதும், பவுன் என்பதும் வெளிநாட்டு நாணயங்கள். அவை நம் நாட்டிலே புழங்கக் கூடிய நிலை ஏற்பட்டதே பொருளாதார நிலையில் நம் நாடு முன்னையை விடச் சற்று உயர்வடைந்தது என் பதைக் காட்ட அறிகுறியாகும். எனவே பொது வாகப் பார்த்தால் பொருளா தாரம் நம் நாட்டில் குறைவு என்று நான் சொல்ல மாட்டேன். மற்ற நாட்டை விட இந்த நாடு பொருளாதாரத்தில் குறைந்த தல்ல. இந்தியாவை நம்பி அனேக நாடுகள் தங்கள் வாழ்வை நிச்சயித்துக்கொண்டிருக்கின்றன.
இந்தியாவின் பொருளாதாரத்தில் நாட்டமில்லையானால் வெள்ளைக் காரனுக்கு இங்கு வேலையில்லை. இது போலவே இதற்கு முன் வெளி நாட்டிலிருந்து இந்த நாட்டுக்கு வந்த அரசர்களுக்கும் அவர்களுக்கும், முன் வந்த ஆரியர்களுக்கும் இந்த நாட்டில் வேலையே இல்லை.
ஆகவே இவ்வளவு உயர்ந்த பொரு ளாதார நிலையுடைய இந்திய நாடு இந்த நாட்டு மக்களில் பெரும்பான் மையான பேர்களை வயிறார உண்ணவும், இடுப்பார உடுக்கவும், மானமோடு பிழைக்கவும் முடியாதபடி வேறு பல காரியங்கள் கொடுமைப் படுத்துகின்றன. அவற்றில் முக்கிய மானவை மதமும், கடவுளும், அடுத்த ஜென்மமுமேயாகும்.
மனிதன் எவ்வளவு சம்பாதித் தாலும், மனிதனுக்கு எவ்வளவு கிடைத்தாலும், எவ்வளவு விளைந் தாலும் அனேகமாய் எல்லாவற்றையும் மேல் கண்ட மூன்றுமே அபகரித்துக் கொள்ளுகின்றன. அதிலும் உலகத் தில் வேறு எப்பாகத்திலும் காண முடியாத மாதிரி இந்த நாட்டில், இம் மூன்றினாலும் பிழைப்பதற்கென்றே பிறவியை ஆதாரமாகக் கொண்டு சில வகுப்புகள் ஏற்பட்டு, அந்த நிலை களைக் காப்பாற்றிக் கொண்டு பாடுபடாமல் வயிறு வளர்ப்பதோடு, சகல போக்கியங்களையும் தங்க ளுக்கே உரிமையுமாக்கிக் கொண்ட தால், இந்த உலகம் உள்ள வரை இந்தியாவின் பொருளாதாரம் இப்படியே இருக்கும்படியாக ஏற்பட்டு விட்டது. அது மாத்திர மல்லாமல் இந்த நாட்டில் அரசனுக்கும் குடி களுக்கும் இருக்கும் முறையும், முதலாளிக்கும் தொழிலாளிக்கும் இருக்கும் முறையும், மிராசுதாரனுக் கும் குடியான வனுக்கும் இருக்கும் முறையும், படித்தவனுக்கும் படிக்காத வனுக்கும் இருக்கும் முறையும், மேல் ஜாதிக்காரனுக்கும் கீழ்ஜாதிக்காரனுக் கும் இருக்கும் முறையும் பார்த்தால், இந்த நாட்டு மக்களில் 100க்கு 90 பேர்களுடைய பொருளாதார நிலை இன்றைய நிலையைவிடக் கடுகு அளவு கூட மாறி முன்னேற்ற மடைய முடியவே முடியாது என்பது எனது உறுதி. ஆகவே இம்முறைகளும், முன் சொல்லப்பட்ட மதம், கடவுள், அடுத்த ஜன்மம் ஆகிய கொள்கைகளும், இந் தியா எவ்வளவு வளம் பொருந்திய நாடானாலும், செல்வம் பொருந்திய தானாலும், பொன்விளையும் "புண் ணிய" பூமியானாலும், தபோதனர்கள், அவதாரங்கள், ஆழ்வார்கள், நாயன் மார்கள், முனிகள், ரிஷிகள், மகாத் மாக்கள் பிறந்த நாடானாலும், பஞ்சநதி, அஷ்டநதி, ஜீவநதியாய் ஓடுகின்ற நாடானாலும், தரித்திரமும், கூலியும், இழிவும், பஞ்சமும், நோயும் இந்தியாவுக்கு நிரந்தரச் சொந்தமான தேயாகும் என்பதைக் கவனத்தில் வையுங்கள்.
நம்முடைய பொருளாதாரக் கஷ்ட மெல்லாம் முதலாவது, அனாவசிய மான செலவுகளும், அவற்றிற்கும் அதிகச் செலவுகளுமாகும். இந்திய மக்களின் 100க்கு 90 பேர்களுடைய சம்பாதனைகள் அனாவசியமான வற்றிற்கும், குருட்டுப் பழக்கம், மூட நம்பிக்கையானவற்றிற்கும், சோம் பேறியாய் வாழ்கின்றவர்களின் சுக போகத்திற்கும் செலவு செய்யப்படுவ தனாலேயே வீணாய் விடுகின்றன.
இரண்டாவது, சுலபத்தில் ஒரே பக்கமாகப் பொருள் களெல்லாம் போய்ச் சேரும்படியாகியும் விடுகின்றன.
மூன்றாவதாக, மனிதனுக்கு உள்ள நேரமும், சக்தியும் குறைந்த வரும் படிக்கே செலவாகும்படியான முறை களே இங்கு வெகு காலமாய் இருந்து வருகின்றன.

அதாவது,
புத்தியைச் செலவழித்து, குறைந்த நேரத்தில் அதிகமான வேலைகள் நடைபெறவும், அதனால் அதிக சம்பாதனை அடையும் மார்க்கம் தேடவுமான துறையானது அடியோடு அடைபட்டுப் போய்விட்டது. இத்தி யாதி காரணங்களே இந்தியாவின் பொருளாதாரத்தின் குறைவிற்குக் காரணங்களாகும்.
சாமி, பூசை, உற்சவம், புண்ணி யம், யாத்திரை ஆகியவற்றின் பெயரால் தனித்தனிச் செலவும், அவற்றிற்காக நடைபெறும் பொது ஏற்பாட்டுச் செலவும் கணக்குப் பார்த்தால், மனி தனின் மொத்த வரும்படியில் ஒரு குறிப் பிட்ட பாகம் வீணாவதைக் காணலாம்.
பிறகு, மதத்தைக் காரணமாய் வைத்து ஏற்பாடுகள் செய்திருக்கும் சடங்குகளையும், அவற்றிற்காகும் செலவுகளையும் கணக்குப் பார்த்தால், அதுவும் ஒரு குறிப்பிட்ட பாகத் தைக் கவர்ந்து கொள்வதைப் பார்க்க லாம்.
மற்றும், மனிதன் வாழ்க்கையில் பிரவேசிக்கும் போதே பெரும்பான்மை யோர் அவர்களது கல்வி, கல்யாணம் முதலிய வற்றால் ஏற்பட்ட கடனின் பேரிலேயே வாழ்க்கையைத் தொடங்க வேண்டியிருக்கின்றது. இவை எல்லாம் சேர்ந்து அவசிய மான காரியங்களுக்குப் பொருள் இல்லாமல் கஷ்டப்படும்படிச் செய்து விடுவதுடன், சதா தரித்திரர்களாகவும், கடன்காரர் களாகவும் இருக்கவேண்டிய தாய் இருக்கின்றது.
இவை மாத்திரமல்லாமல், நாட்டின் பொருளாதார நிலையை விருத்தி செய்ய அவசியமான பொதுத் தொழிற் சாலைகள், யந்திர சாலைகள் முதலியவை ஏற்பாடு செய்வ தற்கும் மார்க்கமில்லாமல், பொருள்களை எல்லாம் மேல்கண்ட சடங்குகளும், வாழ்க்கை முறைகளும் கவர்ந்துக் கொள்வதோடு, கோவில் கட்டுதல், சாமிக்கு நகை, வாகனம் முதலியவை செய்துவைத்தல், மற்றும் உற்சவம், பூசை ஆகியவற்றிற்குப் பண்டு, பூமிகள் முதலிய சொத்துகள் ஒதுக்கி வைத்தல் ஆகிய காரியங்கள் பெரும், பெரும் தொகைகளைக் கவர்ந்து கொள்ளுகின்றன.
ஆகவே, இந்த மாதிரியான எல்லாம் - எல்லாப் பொருள் களும் நாசமாகிக் கொண்டும், வீணாகிக் கொண்டும் இருக்கையில், இந்த நாடு எந்தக் காலத்தில்தான் - எந்த வகையில்தான் பொருளா தாரத்தில் சீர் அடைய முடியும்? என்பதை நீங்களே யோசித்துப் பாருங்கள். நம் நாட்டுப் பொருளாதாரக் கஷ்டத்திற்கு மற்றொரு காரணத் தையும் சற்றுக் கவனித்துப் பாருங்கள். நம்முடைய வாழ்க்கைத் தன்மையை மேல் நாடுகளைப் பார்த்து நாளுக்கு நாள் செலவை அதிகரித்துக் கொண்டு வருகின்றோம். போக போக்கியங் களை அதிகப் படுத்திக் கொள்ளு கின்றோம். முன்னையை விட அதாவது 30,40,50 வருஷங்களுக்கு முன் நாம் இருந்ததை விட அதிகமான ஆடம்பரங்களை விரும்புகின்றோம். மேல்நாட்டு நடை, உடை பாவனை களைக் கண்டு காப்பியடித்துப் படிப்படியாக உயருகின்றோம். இவை எல்லாம் நமக்குத் தகாதென்றோ, குற்றமேன்றோ சொல்ல வரவில்லை. ஆனால், மேல்நாட்டார் எப்படித் தனது பொருளாதார நிலையை உயர்த்திக் கொண்டே தனது வாழ்வின் சுக போகத்தையும் உயர்த்திக்கொண்டு போகின்றனரோ அதுபோலவே, நாமும் பொருளாதார நிலையை உயர்த்திக் கொண்டும், வாழ்க்கைத் தன்மையின் அவசியத்திற்கேற்ற வரு வாய்க்கு வகை செய்து கொண்டும் தானே அதில் பிரவேசிக்க வேண்டும். அதுவுமில்லாமல், இதுவு மில்லாமல் வெறும் மனப்பால் குடிப்பதில் என்ன பயன் அடையக்கூடும் என்பதை யோசித்துப் பாருங்கள். மேல் நாட் டான் குறைந்த நேரத்தில் அதிக வேலை செய்து நம்மைப் பார்க்கிலும் பன்மடங்கு இலாபம் அடை கிறான். அதனால் அவர்கள் சுகமனுபவிக்க மார்க்கம் ஏற்படுத்திக் கொள்ளு கிறார்கள். நமக்கு ஒரு நாள் சராசரி வரும்படி 2 அணா. மேல் நாட் டானுக்கு ஒரு நாள் சராசரி வரும்படி 2 ரூபாய். இதற்குக் காரணம் அவன் வேலை துரிதமே ஒழிய, வேலை சாமர்த்தியம் அல்ல என்பதை ஞாபகத் தில் வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் 10 மணி நேரம் செய்யும் வேலையை மேல் நாட்டான் ஒரு மணி நேரத்தில் செய்து விடுகிறான். அதற்கேற்ற சாத னங்களை அவன் கையாளுகிறான். அதற்காகவே மேல் நாட்டுச் செல் வத்தையும், அறிவையும், ஊக்கத்தை யும் செலவு செய்து அந்த நிலை அடைந்திருக்கின்றான். அப்படிப்பட்ட வனைப் பார்த்து வேலை செய்வ திலும், சம்பாதிப்பதிலும் காப்பி அடிக் காமல் அதாவது, அதுபோல் நடக்கா மல், அவன் அனுபவிப்பதில் மாத்திரம் காப்பி அடித்து, அவனைப் போல் நடக்க ஆரம்பித்தால் சாத்தியப்படுமா? - பொருளாதாரம் இடம் கொடுக்குமா? என்று யோசித்துப் பாருங்கள்.
நமது நாட்டுப் பொருளாதார நிபுணர்கள் செத்துப் போன கைத் தொழில்களை உயிர்ப்பிக்க வேண்டும் என்கின்றார்கள். உதாரணமாக இராட் டினத்தில் நூல் நூற்கவேண்டும், கைத்தறியால் வேஷ்டி செய்ய வேண்டும் என்கின்றார்கள். போதாக் குறைக்கு தக்களியில் நூல் நூற்பது தேசியப் பொருளாதார பக்தியாக, குழந்தைகளும் நாமும் கற்பிக்கப்படு கிறோம். ஒரு நாளைக்கு ஒரு பெண் இராட்டினத்தில் நூல் நூற்றால், கால் ராத்தல் அல்லது காலேவீசம் ராத்தல் நூற்று 1அணா அல்லது அதிகமானா லும் 0-1-6 அணா கூலி தான் அடை யக்கூடும். அதுவும் வெகு மோசமான சரக்கைத்தான் உற்பத்தி செய்யக் கூடும். மேல்நாட்டானோ ஓர் ஆள் ஒரு நாளையில் இதை விடக் குறைந்த நேரத்தில், இதை விடக் குறைந்த கஷ்டத்தில், இதைவிட உயர்ந்த சரக்காக 5 ராத்தல் 6 ராத்தல் நூற்று, தினம் இரண்டு ரூபாய் சம் பாதிக்கிறான். ஆகவே மேல் நாட்டார் தினம் 2 ரூ சம்பாத்தியத்திற்கும், நம் நாட்டான் தினம் 2 அணா சம்பாதிக் கவும் இதுவும், மற்றும் இது போலவே விவசாயத் துறையிலும், வியாபாரத் துறையிலு முள்ள காரணங்களாகு மேயல்லாமல் வேறு ஒரு காரணமு மல்ல. சமூக சீர்திருத்தம் சம்பந்த மான விஷயங்களுக்கு, நம் பண்டி தர்கள் எப்படித் தொல்காப்பியர் காலத்திற்குப் போய் ஆராய்ச்சி செய்து அந்தக்கால நாகரி கத்தைக் கொண்டு சமூக முன் னேற்றம் செய் யப் பார்க்கின்றார்களோ அது போலவே, நமது தேசியப் பொரு ளாதாரப் பண்டிதர்கள் அதைவிட முந்திய காலத்திய கைத்தொழில் களைக் கண்டுபிடித்து, அந்தத் துறை யில் பொருளா தாரத்தை முன்னுக்குக் கொண்டுவரப் பார்க்கின்றார்கள்.
ஆகவே, இந்தியப் பொருளாதார நிலைக்கு இந்தியர்களும், அவர்களது மதமும், கடவுளும், சடங்குகளும், கர்நாடகத்தில் (பழமையில்) பித்துக் கொண்ட தலைவர்களுமே காரண மல்லாமல் வேறு ஒன்றும் முக்கியக் காரணமல்ல என்பது என் அபிப் பிராயம்.
சகோதரர்களே! வருஷம் ஒன் றுக்கு கோடிக்கணக்கான ரூபாய்கள் மதம், கடவுள், சடங்கு ஆகியவற்றிற் குச் செலவாவதை மறுக்கின்றீர் களா? பல கோடிக்கணக்கான ரூபாய் கள் சாமி, கோவில், பூசை, உற்சவம், நகை, வாகனம் ஆகிய வற்றிற்காக அடங்கி, முடங்கிக் கிடக்கின்றதை நீங்கள் மறுக்கின் றீர்களா? எனவே இந்தத் துறைகள் எல்லாம் புதிய முறை  - ஆராய்ச்சி முறை - மேல் நாட்டு முறை ஆகியவற்றில் கைத் தொழிலும், வியாபாரமும், விவசாய மும் செய்யப்பட்டு, குருட்டுப் பழக்கம், மூடநம்பிக்கை, சுயநலக்காரர்கள் சூழ்ச்சி ஆகியவற்றில் இருந்து மீண்டு விட்டோ மானால் நமது பொருளாதார நிலை தானாகவே உயருமா? இல்லையா? என்பதையும், அந்தப்படிச் செய்யாத காரணமே இன்றைய தரித்திர நிலைக்குக் காரணமா? இல்லையா? என்பதையும் நீங்களே யோசித்துப் பாருங்கள். எனவே, எனக்குக் கொடுத்த விஷயத் தின் தலைப்பில் எனக்குத் தோன்றி யதைத் தங்களுக்கு எடுத்துச் சொன்னேன். இது சரியா? தப்பா என்று யோசித்துப் பார்த்து, உங்கள் மனதிற்குச் சரி என்று தோன்றியதை வைத்துக் கொண்டு மற்றதை உடனே மறந்து விடும்படியாய்க் கேட்டுக் கொண்டு இவ்விஷயத்தை முடிக்கிறேன்.
-----------------------------27.12.1930இல் களக்காடு அய்க்கிய முஸ்லிம் சங்கத்தில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு, (குடிஅரசு 18.1.1931).

26.8.13

பக்தி, கடவுள் நம்பிக்கை பார்ப்பனர்களுடையவும், அயோக்கியர்களுடையவும் வஜ்ராயுதங்கள்

இராஜாஜியும், சங்கராச்சாரியாரும் மக்களிடையே பக்திப் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். எப்போதையும்விட இப்போது அதிகமாகச் செய்து வருகிறார்கள். பேச்சு, பேசும்போதும் ``மக்களுக்கு இப்போது வரவர கடவுள் பக்தி குறைந்து வருகிறது என்று பேசி வருகிறார்கள். அதன் கருத்து என்ன என்று சிந்திப்போமானால், மக்களிடம் வரவர காலப் போக்கில் மூட நம்பிக்கைகள் குறைந்து விலகி வருகிறது என்பதுதான் பொருளாகும்.

ஏன் என்றால் அந்தச் சொல்லை உண்டாக்கினவர்களே மக்களிடம் ஒரு முட்டாள்தனமான நம்பிக்கை ஏற்படவேண்டும் என்கின்ற கருத்தில்தான் உண்டாக்கினார்கள் என்று சொல்ல வேண்டும். ஏன் இப்படிச் சொல்லுகிறேன் என்றால் அந்தச் சொல், அதாவது பக்தி என்கிற சொல் ஓர் அர்த்தமற்ற பொருளற்ற சொல்லேயாகும்.

விளக்கமாகச் சொல்லவேண்டுமானால் முதலாவது பக்தி என்ற சொல் தமிழ்ச்சொல் அல்ல; வடமொழிச் சொல் ஆகும். அதற்குச் சரியான ஒரு தமிழ்ச் சொல்லே இல்லை. பக்தி என்னும் சொல்லுக்கு தமிழில்- அகராதிகளில் குறிப்பிடப்பட்டிருக்கும் சொற்கள் அன்பு - வழிபாடு - நம்பிக்கை என்ற சொற்கள்தாம்.

சாதாரணமாக ஒரு மனிதன் ``பக்திமானாய் இருக்கிறான், ``அவன் தெய்வநம்பிக்கை உடையவன் என்றால் அதற்கு அடையாளம் என்ன?

1. பட்டை நாமம்
2. விபூதிப்பட்டை
3. கழுத்தில் கொட்டை
4. வாயில் ராமா -ராமா, சிவா - சிவா என்பது.
5. எதற்கெடுத்தாலும் ஆண்டவன் செயல், பகவான் செயல் என்பது.
6. கோவில்களுக்குப் போவது
7. அங்கு போய் கண்ணை மூடிக்கொண்டு கையைக் கூப்பி நிற்பது.
8. அப்போது வாயால் எதையாவது முணுமுணுப்பது.
9. நெடுஞ்சாண்கிடையாய் விழுந்து கும்பிடுவது.
10. மனதில் எதையாவது விரும்புவது.
11. கோவில் பார்ப்பான் எதையாவது கொடுத்தால் அதை வாங்கித் தலையில் கொட்டுவதும், வாயில் கொஞ்சம் போட்டுக் கொண்டு மீதியை உடலில் கொஞ்சம் தடவிக்கொள்வது.
12. பிறகு சாமி அறையைச் சுற்றுவது.
13. தேவாரம், பிரபந்தம், இராமாயணம், பாரதம் முதலிய நூல்களைச் சத்தமாய்ப் படிப்பது.
14. வீட்டில் பூசை அறை வைத்து பூசை செய்வது.
15. உற்சவங்களுக்குப் போவது.
16. ஸ்தல யாத்திரை செய்வது.
17. இவை முதலியவை மாத்திரமல்லாமல் பார்ப்பனர்களை சாமி என்று கூறி கண்டவுடன் கும்பிடுவது, அவனுக்குக் கண்டபடி அள்ளிக் கொடுப்பதுவரை செய்யும் காரியங்கள்தான் இன்று பக்தியாய் இருக்கின்றதே ஒழிய மற்றபடி மனிதனின் நல்ல எண்ணம், நாணயம், ஒழுக்கம், நேர்மை, இரக்கம், ஈவு முதலிய நல்லவற்றைக் கொண்டிருப்பதோ, மோசடி, துரோகம், பித்தலாட்டம், திருட்டு, புரட்டு, பொய், ஏமாற்றுதல் முதலிய தீர குணங்கள் இல்லாமல் இருப்பதோ ஒருநாளும் ஒருவரிடமும் பக்தியாய், தெய்வ நம்பிக்கையாய் இருப்பவர்களிடம் காண முடிவதில்லை.

எனது 87 ஆண்டு வாழ்வில் மனிதர் என்பவர் எவரிடமும் காண முடியவே இல்லை. அது மாத்திரமல்லாமல், அவை இருக்கவேண்டும் என்கிற கட்டாயமும் அவர்களுக்கு இல்லை. இவற்றுக்கும், பக்திக்கும் சம்பந்தமும் இல்லை என்றுதான் முடிவு செய்யவேண்டும்.

இப்படிப்பட்ட பக்தி மனிதனுக்கு எதற்காக வேண்டும் என்றால், மனிதனை மடையனாக்கவும், அயோக்கியர்கள் எளிதில் அவனைச் சுரண்டவும் பயன்படுவதால் ``மனிதனுக்குப் பக்தி அவசியமானது என்று பிரச்சாரம் செய்யவேண்டி ஏற்பட்டுவிட்டது. ஒரு யோக்கியன் பக்தி செய்யவில்லையானால், கடவுளை நம்பவில்லையானால் அவனுக்குத்தான் என்ன கேடு வரும்? மற்றவர்களுக்குத்தான் என்ன கேடு சம்பவிக்கும்? பொதுவாக மக்களுக்குப் பக்தி இல்லாவிட்டால் பார்ப்பானுக்கும், அயோக்கியர்களுக்கும் பிழைப்பு, வாழ்க்கை நடவாது.

பொதுவாக நாட்டில் பக்தி கொண்ட முட்டாள்களால்தான் இவ்விரு கூட்டம் வாழ்வதுடன், எல்லாவித கெட்ட குணங்களும் மக்களைப் பீடிக்க வசதி ஏற்படுகிறது. இதனால்தான் சங்கராச்சாரி, ராஜகோபாலாச்சாரி, கதாகாலட்சேப ஆச்சாரிகள் முதல் எந்தப் பார்ப்பனரும் எந்த சமயநூல் புராணங்களும் ``பக்தியினால் அல்லாமல் வேறு எந்தக் காரணத்தாலும் மனிதன் மோட்சமடைய முடியாது என்று தினமும் பேச்சுக்குப் பேச்சு மற்ற மக்களுக்கு உபதேசம் செய்து வருகிறார்கள்.

மற்றும் பக்தியினால் பாவம் தீரும் என்கின்ற சொல்லே மிக அயோக்கியத்தனமும், பித்தலாட்டமும் பெரும் கேடும் நிறைந்த சொல்லாகும். மற்றும் பக்தியும் வழிபாடும் பூசையும் வணக்கமும் பிரார்த்தனையும் ``மனிதன் செய்த எப்படிப்பட்ட பாவத்தையும் தீர்க்குமே என்று கூறப்படுகிறதே ஒழிய, இவை பாவம் செய்யாமலிருக்கச் செய்யும் சக்தி, தன்மை அற்றதாகவே இருந்து வருகின்றன. நாட்டில் ``மக்களுக்குக் கடவுள் நம்பிக்கை ஏற்பட வேண்டும் என்ற கருத்தைச் சொல்லிக் கொண்டு செய்த எந்தக் காரியத்தாலும், எந்தக் கோவிலினாலும், எந்தக் குளம் தீர்த்தங்களாலும் மனிதனை ``பாவ காரியங்கள் செய்யாமல் தடுக்கவே முடியவில்லையே!
ஆகையால் பக்தி, கடவுள் நம்பிக்கை என்பவை எல்லாம் பார்ப்பனர்களுடையவும், அயோக்கியர்களுடையவும் வஜ்ராயுதங்களேயாகும்.

--------------------------------தந்தை பெரியார் அவர்கள் எழுதிய தலையங்கம் -(விடுதலை, 29.12.1965).

25.8.13

ஜாதியின் பெயரால் இடஒதுக்கீடு இல்லாத கால கட்டத்தில் நிலை என்ன?

படித்தவர் ஏட்டைக் கெடுத்தார்...


சாதியற்ற சமுதாயம் சாத்தியமே என்ற ஒரு கட்டுரையைத் தீட்டி யுள்ளார் மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை பல்கலைக் கழகத்தின் மேனாள் துணைவேந்தர் பேராசிரியர் முனைவர் க.ப. அறவாணன்.

கட்டுரையின் தலைப்பைப் பார்த்த மாத்திரத்தில் களித்தோம். உள்ளுக்குள் சென்றால் -_- இவர் எப்படி அறவாணன் அய்யங்கார் ஆனார் என்று எண்ணித் திகைத்தோம்.

இடஒதுக்கீடு என்பது பிரிட்டிஷார் கொண்டு வந்தது என்றும், மக்களைப் பிரிக்க முடியாதவாறு அந்தந்த சாதிக்குள்ளேயே நிரந்தரமாக நிலைப் படுத்த பிரிட்டிஷார் இந்த ஆணையை நடைமுறைக்குக் கொண்டு வந்தனர். முன்பிருந்த சாதிப் பிரிவினையை இது மேலும் வலுப்படுத்தியது.
###
கல்வி நிறுவன நுழைவு, அரசு நியமனங்கள் இன்ன பிற எந்த இடத்திலும் சாதிப் பிரிவிற்கு இடமே இருக்கக் கூடாது. இம்முறை தொடருமானால் நாம் பரம்பரை பரம்பரையாக சாதிகளைக் காக்கவே கவனம் செலுத்திடுவோம்! என்று எழுதித் தள்ளி விட்டார்.

ஆரியர் --_ திராவிடர் என்பது வெள்ளைக்காரன் சூழ்ச்சி என்று பார்ப் பனர்கள் சொல்லுவதில்லையா -_ அதே பாணியில் நமது பேராசிரியரும் பேனாவை  ஓட்டியுள்ளார்.

முதலில் ஜாதியை தமிழில் சாதி யாக்கியதே அடிப்படை குற்றமாகும். இதன் மூலம் ஜாதியைத் தமிழர்க்குரிய மூலமாக மாற்றிக் காட்டப் பார்க்கிறார் நமது பேராசிரியர்.

ஜாதியின் காரணமாக கல்வி மறுக் கப்பட்ட மக்களுக்கு - _ அந்த ஜாதி அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கப் படுவதற்கான உளவியல், அறிவியல் கார ணத்தை அவர் புரிந்து கொண்டதாகத் தெரியவில்லை.. இன்னும் சொல்லப் போனால் அம்மை நோயைப் போக்க அம்மைக் கிருமிகளிலிருந்து தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டதற்கு ஒக்கும். சூத்திரனுக்கு எதைக் கொடுத் தாலும் கல்வியைக் கொடுக்காதே என்று ஆக்கி வைக்கப்பட்ட வருண சமூக அமைப்பில், அந்த சூத்தி ரனுக்குக் கல்வியைக் கொடுக்க அந்தச் சூத்திரத் தன்மையைப் பயன்படுத்தாமல் வேறு எதைப் பயன்படுத்துவது? மருந்தில்கூட விஷம் உண்டே! அதை ஏன் பருகுகிறோம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டாமா?

இரண்டு முறை ஆச்சாரியார் (ராஜாஜி) முதல் அமைச்சராக சென்னை மாநிலத்திற்கு வந்தாரே -_  அந்த இரண்டு முறையும் அவர் செய்தது எதனை? ஏற்கெனவே இருந்த பள்ளிகளை மூடியதுதான் அவர் செய்த உயர்ந்த பட்ச சாதனை.

ஜாதியின் பெயரால் இடஒதுக்கீடு இல்லாத கால கட்டத்தில், குறிப்பாக 1914இல் நம் நாட்டின் நிலை என்ன?

சென்னை சட்டமன்ற மேலவைக் கூட்டத்தில் காலஞ்சென்ற குன்சிராமன் நாயர் கேட்ட கேள்விக்கு சென்னைப் பல்கலைக்கழகத்தில் பதிவு செய்யப்பட்ட பட்டதாரிகள் 650 பேர்களில் பார்ப்பனர்கள் 452, பார்ப் பனர் அல்லாத இந்துக்கள் 12 பேர்; பிற இனத்தவர் 74 பேர் என்று கூறப் பட்டதே _ அந்த நிலை இப்பொழுது மாறியுள்ளதற்குக் காரணம் இட ஒதுக்கீடுதானே?

சென்னைப் பல்கலைக் கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளில் இப்பொழுது படிக்கும் பார்ப்பனர் அல்லாத மாண வர்கள் 1,45,450 - _ சதவீத கணக்கில் 89 ஆகும்.

(சென்னை பெரியார் திடலில் நடை பெற்ற நீதிக் கட்சி 95ஆம் ஆண்டு விழாவில் உரையாற்றிய சென்னை பல்கலைக் கழகத் துணைவேந்தர் திருவாசகம் அளித்த புள்ளி விவரம் இது. 20-_11-_2010).

மருத்துவக் கல்லூரியில் சேர்வ தற்குச் சமஸ்கிருதம் படித்திருக்க வேண் டும் என்ற நிபந்தனை இருந்ததைப் பேராசிரியர் அறவாணன் அறியாதவரா? பனகல் அரசர் பிரதமராக இருந்த போதுதானே அது தூக்கி எறியப் பட்டது. அந்தத் தடை மட்டும் இருந் திருந்தால் தமிழர்களில் மருத்து வர்களைக் கண்டிருக்க முடியுமா?

2013_2014 மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை பற்றிய புள்ளி விவரம் என்ன தெரியுமா?

மொத்தம் 2172 இடங்கள் இதில் திறந்த போட்டிக்குரிய இடங்கள் 673.
இந்தத் திறந்த போட்டியில் உயர் ஜாதிக்காரர்கள் 50, பிற்படுத்தப்பட்டோர் 442, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 140, பிற்படுத்தப்பட்டவர் (முஸ்லிம்) 18, தாழ்த்தப்பட்டவர் 21, தாழ்த்தப்பட்டவர் (அருந்ததியர்) 1, மலைவாழ் மக்கள் -1
இடஒதுக்கீடு அடிப்படையில் பெறப்பட்ட இடங்கள்: பிற்படுத்தப்பட் டோர் 576, மிகவும் பிற்படுத்தப்பட் டோர் 434, பிற்படுத்தப்பட்டோர் (முசுலிம்) 76, தாழ்த்தப்பட்டோர் 328 தாழ்த்தப்பட்டோர் (அருந்ததியர்) 63, மலைவாழ் மக்கள் 22.

இந்த மாற்றங்கள் எப்படி நிகழ்ந்தன? இடஒதுக்கீட்டின் அடிப் படையில் தானே! இந்த வளர்ச்சி எல்லாம் கூடாது என்பதுதான் அறவாணரின் ஆசையா?
நம்முடைய அரசர்கள் காலத்தில் எல்லாம்கூட கல்வி பார்ப்பனர் களுக்குத் தானே! - அந்த வரலாற்றை யெல்லாமா நினைவூட்ட வேண்டும்?

11ஆம் நூற்றாண்டில் சோழ அரசர் கள் தென்னார்க்காடு மாவட்டத்தைச் சேர்ந்த எண்ணாயிரத்தில் ஒரு பெரிய கல்விக் கழகம் கண்டனர். அங்கே 140 மாணவர்கள் கலை பயின்றனர். 14 ஆசிரியர்கள் அறிவு புகட்டினர். ஆசிரியர்கட்கும், மாணவர்கட்கும் தினந்தோறும் நெல் அளந்து தரப் பட்டது. 45 வேலி நிலம் அக் கல்லூரிக்கு அளிக்கப்பட்டது. அங்கு சொல்லிக் கொடுக்கப்பட்டது என்ன தெரியுமா? வேதங்களும், சமஸ்கிருத இலக்கணமும் மீமாம்சம் வேதாந்த தத்துவங்களே! (ஆர். சத்தியநாதய்யர் -_ இந்திய வரலாறு)
இந்த வேதங்களும் மீமாம்சத் தத்துவங்களும் யாருக்குச் சொல்லிக் கொடுக்கப்பட்டன? படித்தவர்கள் பார்ப்பனர்கள் மட்டுமே தான் என் பதை முனைவர் பட்டம் பெற்ற பேரா சிரியர் அறவாணன் அவர்களுக்குத் தெரிவிக்க வேண்டுமா?

ஜாதியை ஒழிக்கக் கல்வி தேவை யில்லை என்பது அவரது வாதமா? ஜாதி அடிப்படையில் கல்வி மறுக்கப் பட்டதால் தான் அந்த ஜாதி அடிப் படையில் வாய்ப்பு அளிக்கப்பட்டது _ இதற்குப் பெயர்தான் சமூகநீதி என்பது!
கல்வி கற்றவர்களிடத்தில் தான் பெரும்பாலும் ஜாதி மறுப்பையும், ஜாதி மறுப்புத் திருமணத்தையும் எதிர் பார்க்கவும் முடியும்; - அது நடந்து கொண்டும் தானிருக்கிறது.

ஜாதி அடிப்படையில் இடஒதுக்கீடு அளிக்கப்பட்டதால்தான் ஏதோ ஜாதி உயிரோடு இருப்பது போலவும், இந்த இடஒதுக்கீடு இல்லாத காலத்தில் ஜாதியே இல்லாதது போலவும் எழுதுவது மெத்த படித்த பேராசிரியருக்கு அழகல்ல.

தந்தை பெரியாரும், நீதிக்கட்சித் தலைவர்களும் ஒரு நூற்றாண்டு பாடுபட்டு, சட்டரீதியாக இடஒதுக் கீட்டை நிலை நிறுத்துவதற்குப் பாடு பட்ட தன்மையைப் பார்ப்பனர்களோடு சேர்ந்து கொண்டோ, அல்லது அவர்களுக்குக் கைத்தடியாக இருந்து கொண்டோ கல்லெறிவது ஒடுக்கப்பட்ட மக்களுக்குச் செய்யும் பச்சைத் துரோகமாகும்!

ஜாதி அடிப்படையில் இடஒதுக் கீடுக்காகப் பாடுபடும் கழகம்தான் ஜாதி ஒழிப்புக்காகவும் பாடுபடுகிறது என்பதை மறந்துவிட வேண்டாம்; ஒரு சிறு துரும்பைக் கூட ஜாதி ஒழிப்புக்காகக் கிள்ளிப் போடாமல் சமூகப் பொறுப்பு ஏதுமில்லாமல் பேனா பிடிப்பதுதான் சமுதாயத்துக்குச் செய்யும் தொண்டா?
பார்ப்பனர்களைத் தமிழர்கள் என்று முன்பொரு முறை எழுதி இப்படித் தான் சிக்கிக் கொண்டார்.

படித்த தமிழர்கள் அருள்கூர்ந்து தந்தை பெரியார் அவர்களை மேலும் படிக்க வேண்டும் _ ஆழமாக படிக்க வேண்டும் _ என்பதுதான் நமது கனிவான வேண்டுகோள்.

ஒரு தாய் வயிற்றில் பிறந்த எல்லா மக்களுக்கும் சம அனுபவம் இருக்க வேண்டும் -_ என்று கருதி, ஒன்றுக் கொன்று குறைவு, அதிகம் இல்லாமல் பார்த்துக் கொள்வது எப்படி ஒரு தாய்க்கு இயற்கைக் குணமாக இருக்குமோ, அதுபோலத்தான் எனக்கு தோன்றுகிறது. மற்றும் அந்தத் தாய் தனது மக்களில் - உடல் நிலையில் இளைத்துப் போய் வலிவுக் குறைவாய் இருக்கிற மகனுக்கு, மற்ற குழந்தைகளுக்கு அளிக்கிற போசனையைவிட எப்படி அதிகமான போசனையைக் கொடுத்து, மற்ற குழந்தைகளோடு சரி சமானமுள்ள குழந்தையாக ஆக்க வேண்டுமென்று பாடுபடுவாளோ, அதுபோலத்தான் நான் மற்ற வலுக் குறைவான பின் தங்கிய மக்களிடம் அனுதாபம் காட்டுகிறேன்.  இந்த அளவு தான் நான் பார்ப்பனரிடமும் மற்ற வகுப்புக்களிடமும் காட்டிக் கொள்ளும் உணர்ச்சி ஆகும்
                      ------------------------- தந்தை பெரியார், விடுதலை 1.1.1962

தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், சாகுமகராஜ், மகாத்மா பாபுலே போன்ற சமூகச் சிந்தனை யாளர்கள் எல்லாம் ஏன் ஜாதி அடிப் படையில் இடஒதுக்கீடு கேட்டார்கள்? அவர்களைவிட இந்தச் சமுதாயத் தைப்பற்றி மிக ஆழமாகச் சிந்தித்து முடிவுக்கு வந்து விட்டதாக வெறும் பட்டப் படிப்பு மேதைகள் நினைக் கிறார்களா? என்று தெரியவில்லை.

ஜாதி ஒழியும் வரை
கடைசியாக நான் கூறுவது நமக்கு அழிவையும், கீழ்த் தன்மையையும், வசதியின்மை யையும் கொடுக்கிற இந்த ஜாதிகள் ஒழிந்து, மக்களுக்குச் சமமான தன்மை வரும் வரை இப்போதைய பிற்பட்ட வகுப்பினருக்கு அறிவு வளர்ந்து, நாகரிகம் அடைந்து அரசியலில் கலந்து கொள் வதற்காகக் கல்வி, உத்தியோகம் முதலியவைகளில் அவரவர்களின் எண்ணிக்கைக்குத் தகுந்தபடி விகிதாச்சாரம் அளிக்கப்பட வேண்டும் என்பதுதான்
(விடுதலை 9.4.1950)

அமெரிக்கர் அறிஞரின் பார்வையில்...
அமெரிக்க நாட்டைச் சேர்ந்த தேசிய சங்கம் (National  Association for Equal Opportunities) என்ற அமைப்பின் தலைவர் சார்லஸ் லியான்ஸ்  (Charles Lyons) என்பவர் 1.2.1981 அன்று சென்னையிலே செய்தியாளர்கட்குப் பேட்டி அளித்தார். இவ்வமைப்பைச் சேர்ந்த 10 உறுப்பினர்கள் இந்தியாவுக்கு வந்துள்ளனர். நசுக்கப்பட்ட மக்களுக்கு இந்தியாவில் மேல் நிலைக் கல்வி எப்படி அளிக்கப்படுகிறது என்பதை ஆராய அக்குழு இந்தியா வந்துள்ளது.
எங்கள் நாட்டில் நீக்ரோக்கள் பிரச்சினையும், உங்கள் நாட்டுத் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் பிரச்சினையும் ஒன்றாகவே உள்ளது. இந்தியாவில் தற்போது நடைமுறைப்படுத்தி வரும் இடஒதுக்கீடு முறை மிகவும் பாராட்டப்பட வேண்டிய சரியான முறையாகும். நிற அடிப்படையிலே வேறுபாடு காட்டக்கூடாது என்று அமெரிக்காவில் சட்டம் இருந்தாலும், வாய்ப்புகள் வழங்கப்படுவதில் மிகப் பெரிய இடைவெளி இருந்து வருகிறது.            _ இந்து 2.2.1981 
--------------------------------------------------------------------------------------------------------------------------
அமர்த்தியா சென் பார்வையில்....

அமெரிக்காவில் ஒவ்வொரு நிறுவனத்திலும் கறுப்பர்களுக்கு வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடு அளிக்கப்படுகிறது. ஒவ்வொரு 11 பேர்களுக்கும் ஒரு கறுப்பர் என்ற விகிதாசாரம் பின்பற்றப்படுகிறது.
இன்னுமொரு கூடுதல் தகவல்: தென்னாப்பிரிக்காவில் கிரிக்கெட் விளையாட்டில் கூட கறுப்பர்களுக்கென்று இடஒதுக்கீடு செய்யப்படுகிறது.
எந்த காரணத்தினாலோ ஒடுக்கப்பட்ட மக்கள், ஒரு கட்டத்தில் விழிப்புணர்வு பெற்று மேலே ஏறுவதற்கு இது போன்ற வாய்ப்புகள் அவசியம் என்பதை சமூக நீதியில் அக்கறை கொண்டவர்கள் ஒப்புக் கொள்கிறார்கள். நோபல் அறிஞர் அமர்த்தியா சென் இதுபற்றிக் கூறியிருப்பதை எடுத்துக்காட்டுவது பொருத்தமாகும்.
“Even the issue of merit getting diluted through reservation had to be looked at carefully. While it was very possible that a person benefiting out of reservation might not perform as well as a person selected purely for merit, one had to look beyond just the “bend in the river” to see the “Shape of the river” and see the larger benefit to society over a longer period of time.
While the “neeti” argument would only provide a simplistic answer to this
problem, the “nyaya” argument would look at the problem from a long - term
perspective”
இடஒதுக்கீடு அளித்தால் தகுதி குறைந்துவிடும் என்ற கருத்தை எச்சரிக்கையோடு பார்க்க வேண்டும். தகுதி அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவரையும், இடஒதுக்கீடு அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவரையும் ஒருக்கால் ஒப்பிட்டுப் பார்த்தால், அதை எப்படிப் பார்க்க வேண்டும்? ஒரு நதியின் வளைவை மட்டும் பார்க்கக் கூடாது. நதியின் ஒட்டு மொத்த போக்கினைக் காண வேண்டும். அதுபோல்தான் நீண்டகால கண்ணோட்டத்தில் இடஒதுக்கீட்டுக் கொள்கையால் சமூகத்திற்குக் கிடைக்கும் பயன்களை நோக்க வேண்டும்.
நீதி என்ற அடிப்படையில் இதற்கு மிக எளிமையான பதிலை எட்டிவிட முடியாது. நியாயத்தின் அடிப்படையில் நீண்ட கால நோக்கில் இதைப் பார்க்க வேண்டும்.
(பொருளாதார சிந்தனைக்காக நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென் - சென்னை அய்.அய்.டி.யில் 22.12.2009
--------------------------------------------------------------------------------------------------------------------------
--------------------------------- மின்சாரம் அவர்கள் 24-8-2013 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை