Search This Blog

Showing posts with label கடவுள்-மதம். Show all posts
Showing posts with label கடவுள்-மதம். Show all posts

3.2.12

பாவத்தைப் போக்க வந்த பரமபிதா -பைபிள் கூறும் உண்மைகள்


உலகிலுள்ள மக்கள் அனைவரையும் உலுக்கி எடுக்கும் வார்த்தை ஒன்று உண்டானால் அது பாவம் என்பதாகும். அது ஒருவனைப் பிடித்துக் கொண்டால் அவன் பாவியாகிவிடுகின்றான். அப்படிப்பட்ட பாவம் உலகத்தில் எப்போது தோன்றியது? எப்படித் தோன்றியது? அதை விரட்டுவது எப்படி என்ற விவரங்கள் உலகின் பெரும்பான்மையான மக்களுக்குத் தெரியாமலே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

அந்த விவரங்கள் பைபிளிலேயே இருக்கின்றது என்ற உண்மை எல்லோருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லாததால், எல்லோருமே தெரிந்து கொள்ளும்படிச் செய்வது அவசியமாகின்றது. முழுமையாகத் தெரிந்து கொள்ள தேவன் உலகத்தைப் படைத்த ஆதிகாலத்திலிருந்தே வரவேண்டும்.

(பேதுரு 3:5) பூர்வ காலத்தில் தேவனுடைய வார்த்தையினாலே வானங்களும், ஜலத்தினின்று தோன்றி நிலைகொண்டிருக்கிற பூமியும் உண்டாயின.

இறைவனாகிய தேவன் ஆதிநாளிலே பூமியையும், சூரியனையும், சந்திரனையும், நீரையும், காற்றையும் படைத்தார். பூமியில் வாழ்வதற்கு ஆதாம், ஏவாள் என்று பெயரிடப்பட்ட ஆண், பெண் இருவரையும் படைத்தார். பூமியிலே அவர்கள் மகிழ்ச்சியோடு வாழ்வதற்காக கார்டன் ஆப் ஈடன் (Garden of Eden) என்ற தோட்டத்தையும் உருவாக்கி அதில் அவர்களை ஆனந்தமாக வாழும்படிச் செய்தார் சில நிபந்தனைகளுடன்.

ஆதாம், ஏவாள் இருவருக்கும் இறைவன் விதித்த நிபந்தனைகள் என்ன என்று பார்ப்போம். அவர்கள் இருவரும் தோட்டத்திலோ, உலகின் மற்ற பகுதிக்கோ எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். எதை வேண்டுமானாலும் சாப்பிடலாம். ஆனால், இறைவனால் அமைக்கப்பட்ட கார்டன் ஆப் ஈடன் என்ற தோட்டத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்திலே உள்ள ஒரு குறிப்பிட்ட மரத்தின் கனியை மட்டும் சாப்பிடக்கூடாது. மேலும், அந்தக் கனி இருக்கும் மரத்தின் அருகில்கூட போகக் கூடாது என்று நிபந்தனையாக மட்டுமல்லாது கட்டளையாகவும் கூறியிருந்தார்.

ஆண்டவனின் ஆணைப்படியே நடந்து ஆனந்தமாக வாழ்ந்து வந்தார்கள் தேவனால் படைக்கப்படாத சாத்தானைக் காணும் வரை.

சாத்தானின் ஏமாற்று வார்த்தைகளில் சிக்கிய ஆதாமும், ஏவாளும் தேவனுடைய கட்டளைப்படி நடக்காமல், எந்தக் கனியைக் கண்டிப்பாகச் சாப்பிடக்கூடாது என்று தேவன் கட்டளை யிட்டிருந்தாரோ அந்தக் கனியை இருவரும் சாப்பிட்டார்கள். பழத்தைச் சாப்பிட்ட மறுவிநாடியே பாவம் அவர்கள் இருவரையும் பிடித்துக் கொண்டது. மேலும், அவர்கள் இருவரும் பாவிகள் ஆகிவிட்டனர். இந்தப் பாவமானது அவர்கள் இருவரோடு மட்டும் விடாமல், ஆதாம், ஏவாள் இருவருக்கும் பிறந்த அவர்களின் சந்ததியினரையும் தொடர்ந்து பிடித்துக் கொண்டது. இதனால் ஆதாம், ஏவாளுக்குப் பின் தோன்றிய உலக மக்கள் அனைவரையும் பாவம் பிடித்து பாவிகளாக மாறினார்கள்.

பாவம் என்றால் என்ன? அது எப்போது எப்படித் தோன்றியது என்ற கேள்விக்கு விடை இப்பொழுது எல்லோருக்கும் நன்றாக, தெளிவாக விளங்கியிருக்கும். உலகில் இப்படித் தோன்றிய பாவத்தைப் போக்கவே இயேசு பூமிக்கு வந்தார்.

1. மத்தேயு (1:15) பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார். அவர்களில் பிரதான பாவி நான்.

இப்படியாக உலகில் தோன்றிய பாவத்தினால் ஜனங்கள் பாவியாகி விட்டதால், அந்தப் பாவிகளைக் காப்பாற்றவே இயேசு உலகிற்கு வந்தார் என்பதனைப் பைபிள் மூலம் தெளிவாகத் தெரிந்து கொள்கின்றோம். ஆதாமையும், ஏவாளையும் அவர்களால் உண்டான உலக மக்கள் அனைவரையும் பாவியாக்கியது அவர்கள் சாப்பிட்ட பழத்தினால் அல்லவா. அப்படியானால் அவர்கள் சாப்பிட்ட பழத்தில் என்னதான் மகிமை இருக்கின்றது. இதனுடைய மகத்துவம்தான் என்ன? மர்மம்தான் என்ன என்பதையும் நாம் கண்டிப்பாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஆதாம், ஏவாள் இருவரும் சாப்பிட்ட பழத்தின் பெயர் ஆங்கிலத்தில் புரூட் ஆப் நாலெட்ஜ் (Fruit of knowledge), தமிழில் அறிவுக் கனி என்பதாகும்.

அதாவது, உலகத்தைப் படைத்த தேவன் ஆதாம், ஏவாள் இருவரையும் படைக்கும் பொழுது அவர்கள் இருவரது அறிவையும் எடுத்து, அதைப் பழமாக்கி தோட்டத்திலுள்ள ஒரு மரத்திலே வைத்துவிட்டு ஆதாம், ஏவாள் இருவரையும் முட்டாள்களாக உலாவ விட்டிருந்தார். அவர்கள் இருவரும் சாத்தானின் பேச்சைக் கேட்டு அறிவுக்கனியைச் சாப்பிட்டதால் அறிவாளி ஆகிவிடுகிறார்கள்.

ஒரு மனிதன் அறிவாளியாக ஆவது என்பது இயேசுவின் கணிப்பின்படி பாவியாக ஆவது என்பதாகும். எனவேதான் இந்தப் பாவத்தைப் போக்கி, அதாவது அவர்களுடைய அறிவைப் போக்கி மனிதர்களை மீண்டும் பழைய நிலைக்கு, அதாவது அவர்களை முட்டாள்களாக மாற்றுவதற்காகவே இயேசு பூமிக்கு வந்தார் என்பது தெளிவாக நமக்குத் தெரிய வருகின்றது.

மத்தேயு (3:11) மனந்திரும்புதலுக்கென்று நான் ஜலத்தினால் ஞானஸ்நானங் கொடுக்கிறேன்.

ஜலத்தினால் ஞானஸ்நானம் கொடுத்து மக்களிடமுள்ள பாவத்தைப் போக்குவதாகக் கூறி ஜனங்களிடையே பிரச்சாரத்தை ஆரம்பித்தார். பாவத்தைப் போக்கக்கூடிய ஞானஸ்நானம் என்றால் என்ன? ஜலத்தைக் கொண்டு ஞானஸ்நானம் செய்வது என்பது எப்படி என்ற கேள்வி எழக்கூடும்.

ஞானம் என்றால் அறிவு. ஸ்நானம் என்றால் கழுவுதல், குளிப்பாட்டுதல் என்று பொருள். ஒரு மனிதனுடைய பாவத்தைப் போக்க அதாவது அவனுடைய அறிவைப் போக்க, அவனுடைய அறிவை ஜலத்தினாலே கழுவி, குளிப்பாட்டி ஞானத்தை ஸ்நானம் செய்து முட்டாளாக்குவதுதான் இயேசு தேர்ந்தெடுத்த வழி. இதே முறைதான் இன்றும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

எவ்வளவோ முயன்றும் இயேசுவால் பன்னிரெண்டு பேர்களை மட்டுமே சீடர்களாக ஆக்கி முழு முட்டாள்களாக மாற்ற முடிந்தது. பதிமூன்றாவது நபரான யூதாசை இயேசுவால் பாதிதான் முட்டாளாக மாற்ற முடிந்தது. பாதி அறிவாளியாக இருந்தான். பாதி அறிவாளியாக இருந்த யூதாஸ் இயேசுவின் செயலை பிலாத்து மன்னனிடம் காட்டிக் கொடுத்தான்.

மாற்கு (15:15) அப்பொழுது பிலாத்து இயேசுவை வாரினால் அடிப்பித்து, சிலுவையில் அறையும்படிக்கு ஒப்புக்கொடுத்தான்.

மாற்கு (15.24) அவரைச் சிலுவையில் அறைந்தார்கள்.

மாற்கு (15:37) இயேசு மகா சப்தமாய்க் கூப்பிட்டு ஜீவனை விட்டார்.

பூமிக்கு வந்த நோக்கம் முழுமையாக முடிவடையாமல் இறக்க நேரிட்டதால், ஆவி வடிவமெடுத்து இயேசு தன்னுடைய பன்னிரெண்டு சீடர்களைச் சந்தித்து, தாம் பூமிக்கு வந்த நோக்கத்தை அவர்கள் மூலம் நிறைவேற்றுவதற்காக அவர்களிடம் வந்து கீழ்க்கண்டவாறு கட்டளையிடுகிறார்.

மத்தேயு (28:18) இயேசு சமீபத்தில் வந்து அவர்களை நோக்கி,

மத்தேயு (28:19) நீங்கள் புறப்பட்டுப் பேய், சகல ஜாதிகளையும், சீஷராக்கி அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்து,

மத்தேயு (28:20) நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேஷம் பண்ணுங்கள்.

அவர்களுடைய ஞானத்தை ஸ்நானம் செய்து அவர்களுடைய பாவத்தை, அதாவது அறிவைப் போக்கி, புனிதர்களாக அதாவது முட்டாள்களாக மாற்றுங்கள். முட்டாள்களாக மாறிவிட்டார்களா? என்பதைக் கண்டுகொள்வதற்குச் சில வழிமுறைகளையும் கூறினார்.

மாற்கு (16:16) விசுவாசமுள்ளவனாகி ஞானஸ் நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான்.

மாற்கு (16:17) விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன: என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள்.

மாற்கு (16:18) சர்ப்பங்களை எடுப்பார்கள். சாவுக்கேதுவான யாதொன்றையும் குடித்தாலும் அது அவர்களைச் சேதப்படுத்தாது.

மனிதர்களுக்கு அறிவை உண்டாக்கிய சாத்தானாகிய பிசாசுவை விரட்டியடிப்பார்கள். பாம்புகளைக் கையிலே பிடிக்கச் சொன்னாலும் பிடிப்பார்கள். சாவைத் தரக்கூடிய விஷத்தைக் குடித்தாலும் சாகமாட்டார்கள் என்று சொன்னாலும் நம்புவார்கள். இதில் எதையேனும் நம்ப மறுத்தால் அவர்களுடைய ஞானம் சரியாக ஸ்நானம் செய்யப்படவில்லை. அவர்கள் புனிதர்களாக அதாவது முட்டாள்களாக மாறவில்லை என்பதை நாம் எளிதாகக் கண்டு கொள்ளலாம் என்று இயேசு எல்லா விஷயங்களையும் அவர்களுக்கு விளக்கமாக எடுத்துரைத்தார். அதன்பின்,

லூக்கா (24:51) அவர்களை ஆசீர்வதிக்கையில் அவர்களை விட்டுப் பிரிந்து பரலோகத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டார்.

மாற்கு (16:20) அவர்கள் புறப்பட்டுப் போய் எங்கும் பிரசங்கம் பண்ணினார்கள்.
கொர்த்தியர் (1:23) நாங்களோ சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவைப் பிரசங்கிக்கிறோம்.

ரோமர் (6:6) நாம் இனி பாவத்துக்கு ஊழியம் செய்யாதபடிக்கு

ரோமர் (6:12) சாவுக்கேதுவான உங்கள் சரீரத்தில் பாவம் ஆளாதிருப்பதாக மாற்கு (1:4) யோவான் வனாந்திரத்தில் ஞானஸ்நானம் கொடுத்து பாவமன்னிப்புக்கென்று மனந்திரும்புதலுக்கேற்ற ஞானஸ்நானத்தைக் குறித்துப் பிரசங்கம் பண்ணிக் கொண்டிருந்தான்.

மாற்கு (1:8) நான் ஜலத்தினால் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்தேன் என்று பிரசங்கித்தான்.

இவ்வாறாக உலக முழுவதும் பல இடங்களையும் சுற்றி பல்வேறு விதமாகப் பிரசங்கம் செய்து அனைத்து ஜாதியிலும் அநேகம் பேருக்கு ஞானஸ்நானம் செய்து புனிதர்களாக அதாவது முட்டாள்களாக மாற்றினார்கள். தன் வாழ்நாளிலேயே இயேசுவால் பன்னிரெண்டு பேர்களை மட்டுமே பாவத்தைப் போக்கிப் புனிதர்களாக மாற்ற முடிந்தது. ஆனால், இயேசுவால் புனிதர்களாக மாற்றப்பட்ட பன்னிரெண்டு சீடர்களும் உலக முழுவதும் பெரும்பான்மையான மக்களைப் புனிதர்களாக, அதாவது முட்டாள்களாக மாற்றி இயேசுவுக்குள் பலப்படுத்தினார்கள். ஒருவன் ஸ்நானம் பெற்று முழுமையான இயேசுவின் விசுவாசியாக அதாவது கிறித்தவனாக மாறிவிட்டான் என்று சொன்னால் அவன் ஒரு முழு முட்டாளாக மாறிவிட்டான் என்றே அர்த்தம்.

ரோமர் (5:14) ஆதாம் முதல் மோசே வரைக்கும் ஆதாமின் மீறுதலுக்கொப்பாய் பாவஞ் செய்தவர்களையும் ஆட்கொண்டது.

1. யோவான் (3:8) பாவஞ் செய்கிறவன் பிசாசினாலுண்டாகிறான். ஏனெனில், பிசாசானவன் ஆதி முதல் பாவஞ் செய்கிறான். பிசாசினுடைய கிரியைகளை அழிக்கும்படிக்கே தேவனுடைய குமாரன் வெளிப்பட்டார். ரோமர் (16:20) சீக்கிரமாய் சாத்தானை உங்கள் கால்களின் கீழே நசுக்கிப் போடுவார்.

ஆதியிலேயே சாத்தானுடைய செயல்பாடுகளால் பூமியில் பாவம் உண்டாயிற்று. அந்தப் பாவத்தைப் போக்கவே இயேசு பிறந்து வர வேண்டியதாயிற்று. சாத்தானால் உண்டான ஞானத்தை, ஸ்நானம் செய்து ஒவ்வொருவருடைய பாவத்தை அதாவது அறிவைப் போக்கி அவர்களை இயேசுவுக்குள் பலப்படுத்தினாலும் ஞானஸ்நானம் பெற்றவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் பாவியாகவே அதாவது அறிவாளியாகவே பிறக்க ஆரம்பித்து, இதனால் ஞானஸ்நானம் பெற்று கிறித்துவின் விசுவாசியாக மாறிய ஒவ்வொரு குடும்பத்தாரும் தங்களுக்குக் குழந்தை பிறந்தவுடன் அந்தக் குழந்தையை சர்ச்சுக்குக் கொண்டு சென்று அந்தக் குழந்தையின் ஞானத்தை ஸ்நானம் செய்து அதனுடைய பாவத்தை - அறிவைப் போக்கி இயேசுவின் விசுவாசியாக்கி, கிறித்தவனாக மாற்றி வீட்டுக்குக் கொண்டுவரும் நிகழ்ச்சியானது தொடர்ந்து நடந்து வருகின்றது என்ற விஷயம் எல்லோருக்கும் தெரிந்த உண்மையாகும். ஆதாம், ஏவாள் காலத்திலிருந்தே இப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடந்து கொண்டிருப்பதை உண்மையென்று பைபிளும் ஒப்புக் கொள்கின்றது. அப்படியானால், பாவத்தை - அறிவை நிரந்தரமாகப் போக்கும் வழிதான் என்ன? அறிவை உண்டாக்கிய சாத்தானை நசுக்கி அழிப்பதுதான் அதற்கு ஒரே தீர்வு. அப்படியானால் சாத்தானை அழிப்பதற்கு இயேசு மறுபடியும் பிறந்து வரவேண்டுமே. அதுவும் சீக்கிரமாய் வரவேண்டுமே.

(வெளி 22:20) இவற்றைச் சாட்சியாக அறிவிக்கிறவர் மெய்யாகவே நான் சீக்கிரமாய் வருகிறேன் என்கிறார். ஆமென், கர்த்தராகிய இயேசுவே வாரும்.

சாத்தானை நிரந்தரமாக அழித்து, பூமியின் மேலுள்ளோரின் பாவத்தை அதாவது அறிவை நிரந்தரமாகப் போக்கி அவர்களை நிரந்தர முட்டாள்களாக மாற்றி இரட்சிக்க பரம பிதாவாகிய இயேசு மீண்டும் சீக்கிரமாய் பிறந்து வர தயார் ஆகிவிட்டார். பாவத்தை, அதாவது அறிவை நிரந்தரமாகப் போக்கிக் கொள்ள நீங்கள் தயாரா? இயேசுவே சீக்கிரமாய் வாரும். ஆமென்.

கிறித்தவர்களும், கிறித்தவ மதபோதகர்களும் மற்றவர்களைப் பாவிகளே என்று அழைப்பதற்கான காரணமும், இயேசு விரைவில் வருகிறார் என்று கூறுவதன் காரணமும் எல்லோருக்கும் புரிந்திருக்கும் என நம்புகிறோம்.

-------------------- ஆய்வாளன் ”உண்மை” 1-15 2012 இதழில் எழுதிய கட்டுரை

5.3.11

குரங்கைக் கும்பிடும் இந்தியர்கள்!


சின்னஞ்சிறு நிலத்தில் குவிந்துகொண்டு, சாம்ராஜ்யங்கள் வீழ்ச்சியடைவதையும், வர்ணிக்க முடியாத கொடுமைகள் நிகழ்வதையும், பெரிய நகரங்களின் மக்கள் படுகொலை செய்யப் படுவதையும் சலனம் இல்லாமல் பார்த்துக் கொண்டிருந்த அந்தச் சமூகங்களின் காட்டுமிராண்டித்தனமான தன்னகங்காரத்தை நாம் மறக்க முடியாது;

இயற்கையில் நிகழும் சம்பவங்கள் சம்பந்தமாக எவ்வளவு அக்கறை காட்டினார்கள்? தவிர எந்த ஆக்கிரமிப் பாளனுடைய கவனமானது இதன் மீது விழுந்துவிட்டால், இந்தச் சமூகங்கள் எதிர்க்க வகையில்லாமல் ஆக்கிரமிப்புக்கு இரையாயின.

இந்தத் தேக்கம் நிறைந்த அசைவற்ற வாழ்க்கை அகவுரவ வாழ்க்கை - சிருஷ்டிக்கும் திறனில்லாத செயலற்ற வாழ்க்கை நேர்மாறான விளைவுகளையும், சிருஷ்டித்தது. கட்டுக்கடங்காத நாசகார சக்திகள் - நோக்கமில்லாமல் அழிக்கும் சக்திகள் குமுறி எழுந்தன. இந்துஸ்தானத்தில் கொலையே ஒரு தெய்வச் சடங்காயிற்று.

இதை நாம் மறக்கக் கூடாது. இந்தச் சிறு சமூகங்கள் ஜாதி வேறுபாடுகளாலும் அடிமை முறையாலும் களங்கமடைந்திருந்தன. மனிதனைச் சூழ்நிலைக்கு எஜமானனாக்குவதற்குப் பதிலாக, அவனைச் சுற்றுச் சார்புக்கு அடிமைப்படுத்தின.

தானாக வளர்ந்து கொண்டிருந்த சமூக நிலையை, ஒரு பொழுதும் மாறாத இயற்கை விதியாகச் செய்தன. இவ்விதமாக இயற்கையையே மனிதன் கும்பிட்டு வணங்கும் மிருகத்தனமான நிலைமையைச் சிருஷ்டித்தது. இயற்கையின் எஜமானனாகிய மனிதன், குரங்காகிய அனுமான் முன்பும், பசுமாட்டின் முன்பும் தெண்டனிட்டு வணங்கியதில் இந்தச் சிறுமை காட்சியளித்தது. இவற்றையும் நாம் மறக்கக் கூடாது.

----------------இந்தியாவைப் பற்றி மார்க்ஸ் -எங்கெல்ஸ் -- நன்றி :-”விடுதலை” 4-3-2011

10.11.10

சட்டசபையில் கடவுள் பட்டபாடு! - ஒரு தொகுப்பு



ஆண்டவனாலும் ஆகவில்லை

கிட்டப்பா (தி.மு.க.): பிற்போக்குக் கூட்டணியினர் ஆண்டவன் படத்தைப் போட்டு மிகவும் கேவலமான தவறான பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். ஆனால் ஆண்ட வனால் கூட அவர்கள் கட்சிகளைக் காப்பாற்ற முடியவில்லை. ஆண்டவனின் சக்தியையும் மீறி மாயூரத்தில் நான் வெற்றி பெற்றேன்.

(30.3.1971 அன்று ஆளுநர் உரைக்கான நன்றிப் பேச்சின் போது)


காவிரிப் பிரச்சினைக்கு குருவாயூரப்பன்

தியாகராசன் (த.அ.கழகம்): குருவாயூரப்பனுக்குத் தமிழ்நாடு அரிசி வழங்குகிறது. இந்த நிலையில் காவிரி நீர் பற்றி சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்தச் சிக்கலுக்கு நல்ல முடிவு ஒன்று ஏற்பட குருவாயூரப்பன் அருள் புரிவாரா?

அமைச்சர் ப.உ.ச.: பக்தர்கள் எனப்படுவோர் வேண்டிக் கொள்ள வேண்டிய விஷயமல்லவா இது.

(காவிரிச் சிக்கல் பற்றி தமிழ்நாடு அரசின் தீர்மானம் மீதான விவாதத்தின் போது: 8.7.1971)

கும்பி வெம்பிய குருவாயூரப்பன்

சங்கமுத்துத் தேவர் (சிண்டிகேட்): குருவாயூரப்பன் கோயிலுக்கு தமிழகத்தில் இருந்து இப்போது அரிசி அனுப்பப்பட்டு வருகிறதா?

அமைச்சர் ப.உ.ச.: ஆம்; அனுப்பப்பட்டு வருகிறது.

நரசிம்மன்: கேரளத்தின் திருவனந்தபுரத்தில் பத்மனாபசாமி கோயில் உள்ளது. அப்படி இருக்க குருவாயூரப்பன் கோயிலுக்கு மட்டும் - ஏன், அரிசி தமிழ்நாட்டிலிருந்து வழங்கப்படுகிறது?

அமைச்சர் ப.உ.ச.: இந்தக் கோயிலுக்கும் தமிழ்நாட்டு அரிசி அனுப்பப்பட்டு வருகிறது.

ஆறுமுகம்: தமக்கு அரிசி வேண்டும் என்று குருவாயூரப்பனே தமிழ்நாடு அரசிடம் மனு செய்து கொண்டிருந்தாரா?

அமைச்சர் ப.உ.ச.: இல்லை; தர்மகர்த்தாக் குழுவினர்தான் விண்ணப்பம் அனுப்பியிருந்தார்கள்.

பொன்னப்ப நாடார் (சிண்டிகேட்): கேரள அரசே குருவாயூரப்பனுக்கு அரிசி வேண்டும் என்று கேட்டதா - அல்லது தர்மகர்த்தாக் குழுதான் அரிசி கேட்டதா?

அமைச்சர் ப.உ.ச.: தர்மகர்த்தாக் குழுதான் கேட்டது.

வீராசாமி (தி.மு.க.): ஆண்டவன்தான் மக்களுக்குப் படியளப்பதாகச் சொல்வார்கள்; இப்போது ஆண்டவனுக்கே (குருவாயூரப்பனுக்கு) தமிழ்நாடு அரசு தான் படியளக்கிறது. (சிரிப்பு)

- (கேள்வி நேரம்: 8.7.1971)


அர்ச்சனைக்கு அப்ளிகேஷன்

சுப்ரமணியம் (தி.மு.க.): சமஸ்கிருதத்தில்தான் அர்ச்சனை செய்ய வேண்டுமென்று அரசுக்கு ஆண்டவன் விண்ணப்பம் போட்டிருந்தாரா?

அமைச்சர் கண்ணப்பன்: அப்படி விண்ணப்பம் எதுவும் போடவில்லை; தமிழ் உணர்ச்சி உள்ளவர்கள் மூலம் தமிழ் அர்ச்சனை வேண்டும் என்று ஆண்டவன் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

கே.எம்.சுப்பிரமணியம் (சிண்டிகேட்): ஆண்ட வன் கேட்டாரா என்றெல்லாம் கூறி புண்படுத்தலாமா?

அவைத் தலைவர் மதியழகன்: ஆண்டவனைப் புண்படுத்துகிறமாதிரி கேட்கவில்லை.

கே.எம்.சுப்பிரமணியம் (சிண்டிகேட்): மனிதர்களை அவமானப்படுத்துவதே ஆண்டவனை அவமானப்படுத்துவது போல் தான்.

அவைத் தலைவர்: அப்படி எதுவும் இல்லை.

-(கேள்வி நேரம், 12.7.1971)


ஆண்டவனுக்கும் அரசின் பாதுகாப்பு

அனந்தநாயகி (சிண்டிகேட்): ஜனாதிபதி, ஆளுநர் போன்றவர்களின் உயிரைப் பாதுகாக்க அரசு ஏற்பாடு செய்வதாகக் கூறப்பட்டது; ஆண்டவனே அவர்களுக்கு அளிக்கும் பாதுகாப்பு தவிர அரசு பாதுகாப்பு கொடுக்கத் தேவையா?

கலைஞர்: சில சமயங்களில் ஆண்டவனையே கூட அரசு காப்பாற்ற வேண்டிய நிலை ஏற்படுகிறது.

- (கேள்விநேரம், 17.6.1971)


சைவ ஓட்டல்களில் சிவ-பார்வதி தாண்டவம்

சங்கமுத்துத் தேவர் (சிண்டிகேட்): சென்னை எத்தனை சைவ - அசைவ ஓட்டல்களில் உணவு - நாட்டியம் நடத்த அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது?

கலைஞர்: ஆறு புலால் உணவு விடுதிகளுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது; சைவ விடுதிகள் எதற்கும் அனுமதி இல்லை.

வீராசாமி (தி.மு.க.): சைவர்கள் எனன பாவம் செய்தார்கள்? உணவு நடனத்தை சைவ விடுதிகளிலும் நடத்த அரசு ஏற்பாடு செய்யுமா? கலைஞர்: சைவ விடுதிகளில், வேண்டுமானால் சிவ- பார்வதி நடனம் ஏற்பாடு செய்யப்படலாம்.

-(கேள்வி நேரத்தின் போது, 21-7-1971) 29-10-2010

9.8.10

கோயில்களும் - கடவுள்களும்


குலத் தலைவர்கள் ராஜாக்களாக வளர்ந்து வந்தனரல்லவா? அவர்களு டன் புரோகிதர்களும் (பண்பாட்டு ஆதிக்கத்தைப் பெற்றிருந்தவர்கள்) வளர்ந்து வந்தனர். சில குலங்களில், ஒருவேளை, பல குலங்களிலும் ஒரு கட்டத்தில் குலத் தலைவரே நல்ல போர் வீரராகவும், நல்ல புரோகிதராகவும், நல்ல ஆட்சியாளராகவும் ஒருங்கே அமைவது இயல்பாக இருந்தது.

இத்தகையவர்கள் வாழ்ந்திருக்கும் பொழுதே தங்களுடைய சிலைகளையும் உருவங்களையும் உருவாக்கி அவற்றை வழிபடுகின்ற மய்யங்களை உண்டாக் கினர்.

எகிப்தில்தான் இது முதன்முதலாக உண்டானதாகக் கருதப்படுகின்றது.

நோவாவின் யாகபீடம் ஒரு கோயிலாக இருக்கவில்லை. ஆபிரகாம் அதனைச் சீர்ப்படுத்தியதாகச் சொல்லும்பொழுது அது ஒரு கோயிலாக இருக்கவில்லை.

ஆரியர்களுடைய யாக பூமியும் ஒரு கோயிலாக இல்லை.

க்ஷேத்ரம் (கோயில்) என்றால், சமஸ்கிருத மொழியில் வயல், விளைச்சல் நிலம், இருப்பிடம் என்றெல்லாம் பொருள்.

உணவைத் தேடுவதில் ஈடுபட்ட மனிதன், உணவை உற்பத்தி செய்ப வனாக வளர்ந்தது பல ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகுதான். அது விவசாயத்துடன்தான் ஆரம்பித்தது. விவசாயம் வளர்ச்சியடைந்த பிறகு தான் அவன் நிரந்தரமாக ஓரிடத்தில் தங்கத் தொடங்கினான்.

விவசாயம் வளர்ந்து வந்த ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் கோயில்கள் தோன்றின. கட்டடம் கட்டுதலும் வாஸ்து சிற்பமெல்லாம் அதனுடன் வளரவேண்டிய நிலையும் ஏற்பட்டது.

பூமியை அளந்து கணக்கிடுகின்ற க்ஷேத்ர பலன், க்ஷேத்ர கணிதம் முதலிய வையும் இதனுடன் வளரத் துவங்கின.

சமுதாயத்தில் விவசாயத்தின் ஆரம்பம், பெரிய முன்னேற்றத்தின் விடியலாக இருந்தது.

இந்தச் சூழ்நிலையில்தான் க்ஷேத்ரங்கள் கோயில்களாக ஆயின. தனியுடைமைச் சொத்து முறை வளர்ந்து வரவும் செய்தது.

எகிப்திலுள்ள ஃபரோவர்கள் தங்களைத் தாங்களே கடவுள்களாக்கி வழிபடுகின்ற கோயில்களைக் கட்டி னர்.

அவர்கள் தங்களைக் கடவுள் என்றும் கடவுளின் அவதாரம் என்றும் கடவுளின் தூதர்கள் என்றும் சூழ் நிலைக்கேற்ப பிரச்சாரம் செய்து மக்களிடையே வழிபாட்டு வழக்கத்தை வளர்த்தனர்.

இத்தகையவர்கள் இறந்தால் அவர்களை அடக்கம் செய்ததும் ஒருவகை கோயில்களில்தான். அவை தான் பிரமிடுகள். அவற்றின் உள்ளே உடல்களை மம்மிகளாக ஆக்கி வைத்து, அதற்கு உணவையும் ஆயுதங்களையும் அரச மரியாதைக்குரிய பொருள்களை யும் அருகில் வைத்துதான் அடக்கம் செய்தனர்.

ஏறத்தாழ கி.மு. மூன்றாம் நூற்றாண் டில்தான் எகிப்தில் இந்த முறை ஆரம் பித்தது.

எகிப்திலும், சீனாவிலும் ஆப்பிரிக்காவிலுள்ள வேறு சில நாடுகளிலும் இத்தகைய ஏற்பாடுகள் இருந்ததாகத் தெரிகின்றது.

இந்தக் கோயில்களுக்குச் சொத் துக்களையும் பிற வசதிகளையும் செய்து கொடுத்தனர்.

இந்தியாவில் புத்த விகாரங்கள் தான் கோயில்கள் உருவாக ஊக்கம் அளித்தன.

ரிக் வேதத்தில் கூறப்படுகின்ற யாகங்களுக்காக அமைக்கப்பட்ட யாக வேதிகள்தான் கோயில்களுடைய தொடக்கம் என்று சிலர் உரிமை கொண்டாடுவதுண்டு. ஆனால் இதுவே உண்மையென்று நிரூபிக்கப்படவில்லை. இப்பொழுது வங்காள தேசத்தைச் சேர்ந்த சிட்டாங்குக்கு அருகிலுள்ள நாகரியிலும், பஸ் நகரிலும் தான் இந்தியாவின் மிகப் பழைமையான கோயிலின் இடிபாடுகள் கண்டுபிடிக் கப்பட்டன.

கிறிஸ்துவுக்கு முன்பு மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை இவையென ஊகிக்கின்றனர். ஒழுங்கான வட்ட வடிவில் அமைந்த சிறிய கோயில் கள் இவை. மரமும் களிமண்ணும் பயன் படுத்தி மேல் தளம் அமைக்கப்பட்டு உள்ளது. மண்டபமும் கர்ப்பக்கிருகமும் வலம் வரும் அமைப்பும் சேர்ந்ததே கோயில். விஷ்ணு சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கலாம் என்று கருதப் படுகின்றது.

கோயில்கள் எகிப்திலும், பாபிலோ னியாவிலும் உருவாகின்ற காலத்தில் ஒவ்வொரு பிரதேசங்களிலும் பண்டைய மதங்கள் உருக்கொண்டிருந்தன. இந்த மதங்களுடைய தலைமையிடத்தில் சர் வாதிகாரியாக இருந்தவர்கள் அந்தந்தப் பிரதேச ஆட்சியாளர்கள்தான். அவர்கள் மன்னராகவும், குலத் தலைவராகவும், படைத் தலைவராகவும் ஒருங்கே இருந்தனர். சவுலும், தாவீதும் இதற்கு எடுத்துக் காட்டுகளாவர்.

இந்தக் கோயில்களில் சிலைகளாக வைக்கப்பட்டிருந்தது மன்னரோ, அந்தப் பிரிவைச் சேர்ந்தவர்களேதான். சமூக அமைப்பின் பொருளாதார இயல்பு, அடிமைஉடைமை நிலைதான். கோயில்களிலுள்ள கடவுள்கள் உடைமை வர்க் கத்தின் சின்னமாகவும் உருப்பெறவும் செய்தன. இது மிகவும் இயல்பான ஒரு பரிணாம வளர்ச்சியாகவே இருந்தது.

ஆரம்பகால ஒரு கடவுள் நம்பிக்கை அக்னாதோண் ஃபரோவாவின் ஆட் சிக் காலத்தில்தான் தோன்றியது. அவர் அம்மன் ஃபோட்டப் என்ற பட்டப் பெயருடைய எகிப்தின் வலிமை பெற்ற பேரரசராக இருந்தார். கி.மு. 1424 முதல் 1388 வரைதான் இவருடைய ஆட்சிக் காலம் என்று கருதப்படுகின்றது. அட்டோண் என்று அழைக்கப்படுகின்ற சூரிய கடவுள்தான் அவர் பரப்பிய ஒரே கடவுள். அந்த சூரிய கடவுளின் அருமைக்குரிய வாரிசுதான் தான் என்று அவர் பிரச்சாரம் செய்தார். பல கடவுள் வழிபாட்டை அவர் அழிக்க முயன்றார்.

முன்பே சூரியக் கடவுள் மற்ற கடவுள்களுடன் சேர்ந்து வழிபடப்பட்டு வந்தது. இப்பொழுது அவற்றையெல்லாம் புறக்கணித்துக் கொண்டு சூரியன், ஒரு கடவுள் நிலைக்கு உயர்த்தப்பட்டது.

இதைத் தொடர்ந்து மித்ர மதம் ஒரு பெரிய சக்தியாக வளர்ந்தது.

இந்தச் சூழ்நிலையிலிருந்துதான் யூத மதமும், யூத குலத்தின் தனிக் கடவுளான யஹோவா என்ற ஒரு கடவுள் உணர்வும் பிறந்தது.

---------------------மதமும் பகுத்தறிவும் நூலிலிருந்து

21.6.10

அறிவியலுக்கும், மதத்துக்குமிடையே நடக்கும் போராட்டம்


என்றுமில்லாத அளவில்
அறிவியலுக்கும், மதத்துக்குமிடையே நடக்கும் போராட்டம்

ஜக் சுரையா

அண்மைக் காலமாக கிறித்துவ தேவாலயத்தின்மீது சுமத்தப்பட்டு வரும் பாலியல் வன்முறைக் குற்றச்சாற்றுகளைப் பற்றி கூறும்போது, பிரபல கடவுள் மறுப்பாளர் ரிச்சர்ட் டாகின்ஸ் கூறுகிறார்: குழந்தைகளின் உடல்கள் மீது பாதிரியார்கள் பாலியல் தாக்குதல் நடத்தியதை விட, மதம் என்னும் நோய்க்கிருமியைப் புகுத்தி குழந்தைகளின் மனதுக்கு அவர்கள் இழைக்கும் தீங்கை நினைத்துத்தான் நான் அதிகமாகக் கவலைப்படுகிறேன். வேறு சொற்களில் கூறுவதானால், ஆன்மிகப் படையெடுப்பின் மூலம் குழந்தைகளின் மனதைக் கெடுப்பது அவர்களின் உடல்களைக் கெடுப்பது போலவே, இன்னும் அதைவிட மோசமான, தீயசெயலாகும் என்பதுதான். கடவுள் இறந்துவிட்டார் என்று நீட்சே அறிவித்து 150 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், கடவுளின் மீதான போர் இந்த 21 ஆம் நுற்றாண்டில் ஏன் உச்ச கட்டத்தை எட்டியுள்ளது?

வரலாற்றில் இதற்கு முன் எப்போதும், 15_17 ஆம் நூற்றாண்டு காலத்தில் கத்தோலிக்க மத எதிர்ப்பாளர்மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட கொடுமைகளின் போதும், பூமி சூரியனைச் சுற்றுகிறது என்று கூறியதற்காக கலீலியோ மீது மத நிந்தனைக் குற்றம் சுமத்தப்பட்டபோதும் கூட, அறிவியலும் மதமும் இத்தகைய ஒரு போராட்டத்தில் ஈடுபட்டதே இல்லை.

உயிரையே சோதனைச் சாலையில் உருவாக்க முடியும் என்ற அளவிற்கு அறிவியல் தனது ஆற்றல் பற்றி உரிமை கொண்டாடி படைப்புத் தொழிலைக் கடவுளிடம் இருந்து கைப்பற்றி வரும் நிலையில், அதனைத் தொடர்ந்து மதங்களிடமிருந்து வன்முறைத் தாக்குதல்கள் தொடுக்கப்படுவது தவிர்க்க இயலாததாக ஆகிவிட்டது. அதன் விளைவாக எந்த விதமான மத நம்பிக்கையும் தாக்குதலுக்கு உள்ளானது. இந்த முரண்பாட்டின் மய்யத்தில் இரண்டு அடிப்படையான கேள்விகள் எழுகின்றன. பிரபஞ்சம் எவ்வாறு தோன்றியது? உயிர்கள் எவ்வாறு தோன்றின? என்பவைதான் இவை. பிரபஞ்சம் தோன்ற பெரு வெடிப்புதான் காரணம் என்றும், டார்வினின் இயற்கைத் தேர்வுதான் உயிரினத் தோற்றம் மற்றும் வளர்ச்சிக்குமான காரணம் என்றும் அறிவியல் கூறுகிறது. பிரபஞ்ச தோற்றத்துக்கும், உயிர்களின் படைப்புக்கும் உயர் ஆற்றல் கொண்ட, நுண்ணறிவுடன் வடிவமைக்கும் (Intelligent Design) படைப்பாளி எனும் கடவுள் ஒருவர் இருக்கிறார் என்றும் மதம் கூறுகிறது. உயர்ந்த படைப்பாளியான கடவுள் என்று ஒருவர் இருந்தால், அந்தக் கடவுளைப் படைத்தவர் யார் என்று கடவுள் மறுப்பாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

இவர்களில் மிகவும் முக்கியமானவர், வழுக்குப் பாதைக்கு எதிராக எச்சரிக்கை அளிக்கும், அமெரிக்க மனஇயலாளர் சாம் ஹாரிஸ் என்பவர் ஆகும். கடவுளை நீங்கள் ஒருவர் மறுத்தால் மட்டும் போதாது; மதம் என்னும் நோய்க்கு இரையாகக் கூடிய வாய்ப்பு உள்ள குழந்தைகள் உள்பட அனைவரின் சார்பாகவும் நீங்கள் கடவுளை மறுக்க வேண்டும் என்று அவர் கூறுகிறார்.

மதப் போர்களின் மூலமாகவும், மதக் கருத்துக்கு எதிரானவர்கள்மீது மேற்கொள்ளப்பட்ட அடக்கு முறை மூலமாகவும் கடந்த ஆயிரமாண்டில் பகுத்தறிவுக்கு ஒவ்வாத வன்முறை மற்றும் துன்பங்கள் மனித இனத்தின்மீது மதத்தின் பெயரால் இழைக்கப்பட்டதால் கடவுள் மறுப்பாளர்கள் மதத்தைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்துகின்றனர். இந்த மத வன்முறை கிறித்துவ மதத்துடன் நின்றுவிட வில்லை. தங்களின் பெண்களை இழிவாக நடத்தி, அவர்களின் கல்வி மற்றும் அறிவினை மழுங்கடிக்கும் முஸ்லிம் தாலிபான்களும் தங்கள் செயல்களுக்கு பதில் சொல்லவேண்டியவர்களே. தமிழர்களின் நியாயமான கோரிக்கைகளை புத்த மதத் தலைவர்கள் ஏற்றுக் கொள்ள மறுத்ததன் விளைவே பல ஆண்டு காலம் இலங்கையில் நடந்து வந்த உள்நாட்டுப் போராகும்; இப்போரினால் ஏற்பட்ட வடுக்கள் மறைய பல தலைமுறைகள் பிடிக்கும்.

முப்பத்து முக்கோடி தேவர்களைக் கொண்ட இந்து மத பாரம்பரியத்தில் கடவுள் மறுப்பு என்பது இந்தியர்களுக்கு அந்நியமான கருத்தேயாகும். இந்து மதத்தில் பெருமையாகக் கூறிக்கொள்ளப்படும் தத்துவமே, இந்த உலகம் எப்படி தோன்றியது? எப்படி முடியும்? கடவுள் மட்டுமே அறிவார்; ஒருவேளை கடவுளுக்கும் தெரியாமல் இருக்கலாம் என்பதுதான்.

தேவாலயம் போன்ற மத அமைப்புகளுக்கு எதிரானவர்கள்தான். கூட்டு வழிபாட்டுக்கு ஏற்படுத்தப்பட்டது தேவாலயம் என்ற அமைப்பு. இத்தகைய கூட்டு வழிபாட்டு முறை இந்து மதத்தில் இல்லை. இந்து மதத்தை அரசியலாக்கி இந்துத்வா கொள்கையை நிலைநிறுத்த சங் பரிவாரங்கள் மேற்கொண்ட முயற்சிகளும் பலிக்கவில்லை.

- நன்றி: டைம்ஸ் ஆஃப் இந்தியா -கிரஸ்ட் எடிஷன் 5.6.2010
தமிழில்: த.க.பாலகிருட்டிணன்

19.6.10

ஜீசஸ் என்ற நல்ல மனிதனும், கிறிஸ்து என்னும் அயோக்கியனும்


மதமும் அதிகாரமும் ஒன்று சேரக்கூடாது

பிலிப் புல்மேன்

ஜீசஸ் என்ற நல்ல மனிதனும், கிறிஸ்து என்னும் அயோக்கியனும் என்ற நூலை எழுதி வெளியிட்டுப் அண்மையில் புகழ் பெற்றுள்ளவர் பிலிப் புல்மேன் என்பவர். ஏசு, கிறிஸ்து என்ற இரு கதாபாத்திரங்களை அறிமுகப் படுத்தியுள்ள இந்த நூலில் கத்தோலிக்க தேவாலயத்தைக் கடுமையாக விமர்சிப்பவராக ஏசுவை அவர் சித்திரித்துள்ளார். புல்மேன் ஒரு பள்ளி ஆசிரியர். இவர் எழுதிய Dark Materials என்ற நூல் இவருக்கு கோடிக்கணக்கான ரசிகர்களையும், பல விருதுகளையும் பெற்றுத் தந்துள்ளது. அண்மையில் அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பது இங்கே தரப்படுகிறது.

இங்கிலாந்து நாட்டின் மிகுந்த புகழ் பெற்ற நாத்திகர் என்று உங்களைப் பற்றி கூறுகிறார்களே?

உண்மையில் அவ்வாறு கூறப்படுவதை நான் ஏற்றுக் கொள்வதில்லை. முன்பு இருந்ததை விட, வேறு எவ்வாறாகவும் இருப்பதை விட அதிகமாக என்னை நான் நாத்திகன் என்று நிச்சயமாக நினைப்பதில்லை. பெயர்ச்சொற்களில் குறிப்பிடப்படும் அடையாளங்களை நான் விரும்புவதில்லை. வினைச்சொற்களால் அடையாளப்படுத்துவதையே நான் விரும்புகிறேன். அடையாளம் காண்பது என்பது மாற்றம் பெற இயன்ற செயல்பாடு மிக்க, ஆற்றல் மிகுந்த நடைமுறையே அன்றி, மாற்றமற்ற நிலையாகத் தேங்கி நிற்கும் ஒன்று அல்ல. கடவுள் நம்பிக்கை கொண்டவனல்ல நான் என்பது பொதுமக்களிடையே அடையாளம் பெற்றுள்ள எனது முக்கிய அம்சங்களில் ஒன்று என்ற உண்மையை நான் ஒப்புக் கொண்டாலும், என்னைப் பற்றி அறியப்பட்டுள்ளது இது மட்டுமே என்றால், என்னைப் பற்றி எத்தகைய குறுகிய கண்ணோட்டம் நிலவுகிறது, என்னைப் பற்றிய உண்மை எவ்வளவு குறைவாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது, என்ன குறுகிய அளவில் நான் புரிந்து கொள்ளப்பட்டுள்ளேன் என்றே நான் நினைக்கிறேன்.

ஜீசஸ் என்ற நல்ல மனிதனும், கிறிஸ்து என்னும் அயோக்கியனும் மற்றும் Dark Materials என்னும் ஒன்றுக்கொன்று தொடர்புடைய தங் களின் மூன்று புதின நூல்கள் கத்தோ லிக்க தேவாலயத்திற்கு எதிரான ஆற்றல் மிகுந்த உருவகக் கதைகளாகும். முறை யாக அமைக்கப்பட்ட மத அமைப்புக்கு எதிரானவரா தாங்கள்? அல்லது கடவுள் என்னும் கருத்திலேயே தாங்கள் நம்பிக்கை கொண்டிருக்கவில்லையா-?

எந்த வகையான ஒரு கருத்துக்கும் எதிராக இருப்பது முட்டாள்தனமானதாக இருப்பதாகும். எனது விருப்பமின்மை அல்லது ஏற்பின்மை எட்ட இயலாத தொலைவில் உள்ள, மிகவும் பழமையானதும், மிகப் பல மக்களுக்கு அர்த்தம் நிறைந்ததாகவும் இருக்கும் கடவுள் போன்ற ஒரு கருத்துக்கு, நான் கூறுவது அல்லது செய்வது எதனாலும் தீங்கு நேர்ந்துவிடாது. நான் ஏற்றுக் கொள்ளாமல் கண்டிப்பதெல்லாம் மதமும் அரசியலும் கலப்பதைத்தான். மதத் தலைவர்கள் அரசியல் அதிகாரத்தையும் பெறும்போது, எல்லாமே விரைவில் மிக மிக மோசமானவைகளாக ஆகிவிடுகின்றன.

ஏசுவிற்கு கிறிஸ்து என்ற இரட்டைச் சகோதரர் இருப்பது என்பது போன்ற தங் களின் கருத்து பெரும்பாலான கிறிஸ்து வர்களுக்கு தெய்வ நிந்தனையாகவே தோன்றுகிறது. இந்த எண்ணம் உங் களுக்கு எவ்வாறு வந்தது?

அது தெய்வ நிந்தனையாக இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம். ஆனால் இரட்டையர்களின் முக்கியத்துவத்தைப் பற்றிய கருத்து என்னவோ, கிறித்துவ மதத்தைப் போலவே பழமையானதாகும். சந்தேகப் பிறவியான தாமஸ் ஒரு இரட்டைப் பிறவி. மனிதனான ஏசுவின் இயல்புக்கும், புராணக்கதையின் கிறிஸ்துவின் இயல்புக்கும் இடையே உள்ள வேறுபாட்டை நாடகமாக்கவே நான் முயன்றுள்ளேன்.

கிறிஸ்தவ மதத்தவராக வளர்ந்தவர் நீங்கள். கிறித்துவ தேவாலயத்தை இந்த அளவுக்கு உங்களை விமர்சிக்கச் செய்தது எது-?

வெறுமனே கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்ததும், வரலாற்றினைப் படித்ததும்தான்.

கிறிஸ்துவ தேவாலயத்தைப் பற்றி தாங்கள் எழுதியிருப்பது இஸ்லாம், யூத மதம் போன்ற மற்ற மதங்களைப் பொறுத்தவரையிலும் கூட உண்மையாகத் தான் இருக்க வேண்டும். இதனை நீங்கள் ஒப்புக் கொள்கிறீர்களா-?

எனக்குத் தெரியவில்லை. நான் நினைப்பது போன்று உருவானது என்பதால், கிறித்துவ மதத்தைப் பற்றி என்னால் எழுத முடியும். கிறிஸ்துவ மதத்தைப் பொறுத்தவரை நான் எனது வீட்டில் இருப்பதைப் போன்றது. அதன் நம்பிக்கைகளும், கதைகளும் எனக்குப் புதியவையல்ல. கிறித்துவ மதச் சடங்குகளும், கூட்டு வழிபாடுகளும் என் நினைவில் பசுமையாக இருக்கின்றன. மற்ற மதங்களை இது போன்று நான் அறிந்திருக்கவில்லை. அவர்கள் கதைகளைக் கூற நான் முயலமாட்டேன்.

அடிப்படை மதவாதிகளைப் போலவே கூச்சலிடும் மூடநம்பிக்கையா ளர்கள் தானே ரிச்சர்டு டாகின்ஸ் போன்ற புதிய நாத்திகர்களும்? மதத்தைப் பற்றி இரு வேறு கருத்து கொண்டு இருக்கும் இரு சாராரின் நியாயமான குரலைக் கேட்க விடாமல் மூழ்கடிக்கும் கூச்சலல்லவா அது? அது ஒரு தவறான குற்றச்சாட்டு. உயிர்த்தோற்ற உயிரியல் துறையில் டாகின்ஸ் ஒரு மாபெரும் மேதை அவரிடம் இருப்பதைப் போன்ற வெளிப்படையான நேர்மையை வேறு எங்கும் காணமுடியாது. மிகுந்த ஆற்றலுடனும், மிகவும் தெளிவாகவும் அவர் எழுதுகிறார். அவரால் கண்டிக்கப்படும், விமர்சிக்கப் படும் மனிதர்கள் அதை விரும்புவதில்லை. எவர் ஒருவருக்கும் தீங்கு விளைவிக்க டாகின்ஸ் விரும்பியதாக நான் எப்போதும் கேள்விப்பட்டதே இல்லை. தன் கருத்தை ஏற்றுக் கொள்ளாதவர்களின் தலையை வெட்டவேண்டும் என்று பதாகை எடுத்துக் கொண்டு அவர் தெருவில் வந்து கேட்பதை நீங்கள் பார்க்காத வரை, அவரது கருத்து மதஅடிப்படை வாதிகளின் கருத்து போன்றது என்ற குற்றச்சாட்டு ஆதாரமற்றது, அடிப்படையற்றது.

(நன்றி: டைம்ஸ் ஆஃப் இந்தியா கிரெஸ்ட் எடிஷன் 5.6.2010
தமிழில்: த.க.பாலகிருட்டிணன்)---"விடுதலை” ஞாயிறுமலர் 19-6-2010

30.3.10

சாமியார்களுக்கெல்லாம் இது கெட்ட நேரம்




(மார்ச் 18 ஆம் தேதி தான் பிடாடி ஆசிரமத்திற்கு கட்டா யம் வருவேன் என்று சாமி நித்யானந்தா உறுதிபடக் கூறினார்; ஆனால் அவ்வ று வரவேயில்லை - மாய மாக மறைந்துவிட்டார்!)

நான் கோயில்களுக்கெல்லாம் அதிகமாகப் போவதில்லை. கடந்த முறை அமெரிக்க நாட்டின் சீட்டிலுக்கு நாங்கள் சென்றிருந்தபோது உங்களின் பிறந்தநாளன்று, கடவுளின் ஆசி பெற ஒரு கோயிலுக்கு நாம் செல்ல வேண்டும் என்று என் மனைவி கல்யாணி கூறினார். 2009 ஆகஸ்ட் 27 தேதி எனது 70 ஆவது பிறந்த நாள்.

சீட்டில் நகரத்து நித்யானந்தசாமி வேதகோயில்

போயிங் விமான நகரமாக சீட்டில் நகரின் ரெட்மாண்ட் பகுதியில் உள்ள நித்யானந்தா வேத கோயில்தான் அருகில் உள்ள கோயில் என்று எனது மருமகள் மஞ்சுளா கூறினார். இந்தப் பெயரை அப்போதுதான் முதன் முதலாக நான் கேட்-டேன். கிர்க்லேண்டில் வசிக்கும் எங்-களது இளைய மகன் கவுரங்கும், மரு-மகள் மஞ்சுளாவும் மாலை 6 மணிக்குப் பிறகு அவர்களது டயோடா பியரிஸ் காரில் எங்களை அழைத்துக் கொண்டு சென்றனர். அப்போது அங்கு வந்திருந்த எங்களது மூத்த மகன் கவுரவ்கும் சேர்ந்து கொண்டார். ஒரு சில நாட்களுக்கு முன்புதான் அந்தக் காரை வாங்கியிருந்த கவுரங், தான் ஒரு நாத்திகன் என்றும், கவுரவ் கோயில்களுக்கும் திருவிழாக்களுக்கும் அங்கு கொடுக்கப்படும் சாப்பாடு அயிட்டங்களுக்காகத்தான் செல்கிறார் என்றும் கூறினார்.

நித்யானந்த வேதக் கோயிலின் வாசலில் இருந்த உயரமான பெண் தொண்டர் ஒருவர் எங்களை வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றார். வாழ்க்கைக்கு வேதப் பேரறிவைக் கொண்டு வரும் நோக்கத்தில் நித்யானந்த பரமஹம்சர் கட்டியுள்ள நான்கு கோயில்களில் இதுவும் ஒன்று என்று அவர் கூறினார். நாங்கள் பெங்களூருவைச் சேர்ந்தவர்கள் என்பதை அறிந்தவுடன், தானும் பெங்களூருவுக்கு அருகில் பிடாடியில் உள்ள ஆசிரமத்தில் சில வார காலம் தங்கிவிட்டு இப்-போதுதான் திரும்பியிருப்பதாக அப்பெண் தொண்டர் கூறினார்.

புன்னகையுடன் கூடிய இளைஞரான நித்யானந்த சாமியின் புகைப்படம் வருபவர்களை வரவேற்பது போல் தோற்றமளித்தது. அவரது சிறிய உடலுக்கு அவர் அணிந்திருந்த காவித் தலைப்பாகை பொருத்தமில்லாதது போலத் தோன்றியது. தரைதளத்தில் ஆசிரமம் அமைந்திருந்த அந்தக் கட்டடம் நகரின் மிகவும் முக்கியமான வணிக வளாகப் பகுதியில் அமைந்திருந்தது. நித்யானந்தா வேத மய்யம் என்ற பெயர்ப்பலகை தனது செயல்பாடுகளைப் பற்றி விளக்குவதாக நுழைவாயில் அருகே அமைக்கப்பட்டிருந்தது. முன்னதாக இருந்த வரவேற்பறையை அடுத்து உள்ளே சற்று பெரிய அறை ஒன்று இருந்தது.

கோயிலின் கருவறைக்குச் செல்லும் வழியில் இருந்த ஹால் பெரியதாக இருந்தது. அழகான, நல்ல நிறம் கொண்ட ஒரு பூசாரி, வழிபாடு சடங்குகளைச் செய்து கொண்டும் மேற்பார்வையிட்டுக் கொண்டும் இருந்தார். அவருக்கு வயதில் இளைய பயிற்சித் தொண்டர்கள் உதவி செய்து கொண்டிருந்தனர். ஊதுவத்தி எரியும் வாசம் வந்து கொண்டிருக்க, கற்பூரம் ஏற்றி தீபாராதனை காட்டப்பட்டு, தீர்த்தமும், குங்குமமும், பூக்களும் பிரசாதமாக வழங்கப்பட்டன. அங்கு வந்திருந்த பக்தர்களில் சில அயல்நாட்டினரும் இருந்தனர். வெளியே வரும் வழியில் இருந்த சிறு அறை ஒன்றில் இலைகளால் ஆன கோப்பைகளில் பிரசாதங்கள் வைக்கப்பட்டிருந்தன. குறைந்த அளவு நன்கொடை 1 டாலர் என்று பெயர்ப்பலகை தெரிவித்தது.

சோதனை செய்து வெற்றி கண்ட ஆன்மீக வியாபாரம்

சில வார காலத்தில் சுவாமிஜி வர இருக்கும்போது நடத்தப்பட இருக்கும் பயிற்சி முகாமுக்கு ஆள்களை சேர்ப்பதில் தொண்டர்கள், குறிப்பாக பெண் தொண்டர்கள் மும்முரமாக இருந்தனர். தங்குமிடம், உணவு உள்ளிட்ட இந்த முகாமுக்கான நன்கொடைக் கட்டணம் 6,000 டாலர்கள். மற்ற ஆன்மிகத் தலைவர்களால் சோதனை செய்து வெற்றி பெற்ற ஆன்மிக வியாபாரம் இது என்பது வெட்ட வெளிச்சமாகத் தெரிந்தது. அவரது ஆசிகளையும், தங்களைக் குணப்படுத்தவேண்டும் என்று கோரியும் வரும் இமெயில் கடிதங்களைக் கையாளக்கூட இயலாத அளவுக்கு அவரைப் பின்பற்றும் தொண்டர்கள் கூட்டம் பெருகியது. தனது ஆசிகளைக் கோரும் இத்தகைய தொண்டர்கள் தினமும் காலை 7 மணி முதல் 7.20 வரை வரதமூர்த்தியைத் தொழ வேண்டும் என்று ஆலோசனை கூறி சாமிகள் கேட்டுக் கொண்டார். அங்கு வைக்கப்பட்டிருந்த கணினியில் எங்கள் வருகையைப் பதிவு செய்த பின் நாங்கள் வெளியேறினோம்.

நாங்கள் இந்தியாவிற்குத் திரும்பிய பின் சிறிது காலம் சென்றபின், தனது நகைச்சுவைப் பேச்சுக்குப் பெயர் போன ராமகிருஷ்ண மடத்தின் மூத்த துறவி ஒருவரைப் பார்த்து, சாமி நித்யானந்தாவைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா என்று கேட்டேன். கேள்விப்பட்டது மட்டுமல்ல; பிடாடி அருகே உள்ள அவரது ஆசிரமத்திற்கும் நான் சென்றிருக்கிறேன். நான் சென்றிருந்தபோது அவர் அங்கிருக்கவில்லை; ஆனால் விருந்தோம்பல் நன்றாகவே இருந்தது என்று கூறிய அவர், பாமர மக்களை எவ்வாறெல்லாம் ஏமாற்றுகிறார்கள் என்று தனது ஆற்றாமையை வெளிப்படுத்தினார்.

கள்ளக் காதல் மட்டுமா?
கள்ள நோட்டுகளுமா?

சாமி நித்யானந்தாவுடன் தமிழ் சினிமா நடிகை ஒருவர் சல்லாபம் செய்த வீடியோ காட்சிகள் தொலைக் காட்சியில் ஒளிபரப்பப்படுவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பு நடந்தது இது. யூடியூப் மற்றும் கூகுல் ஆகியவற்றின் மூலம் அவருக்குக் கிடைத்த விளம்பரத்தைவிட மிகப் பெரிய விளம்பரம் இந்த தொலைக் காட்சி ஒளிபரப்பின் மூலம் நித்யானந்தாவுக்குக் கிடைத்தது. பாலியல் திறமை மட்டுமல்லாமல், கள்ள நோட்டு அடிக்கும் திறமையும் அவருக்கு இருக்கிறது என்று பேசப்படுவதற்குக் காரணமாக, அவரிடமிருந்து பணத்தைத் திருடிக் கொண்டு போன ஒருவனிடம் இருந்த அந்தப் பணம் கள்ள நோட்டுகள் என்று கண்டு பிடிக்கப்பட்டது அமைந்தது.

தற்போது நடைபெறும் கும்பமேளாவிற்குப் பிறகு மார்ச் 18 ஆம் தேதிதான் பிடாடி ஆசிரமத்திற்குக் கட்டாயமாக வருவேன் என்று உறுதிபடக்கூறிய நித்யானந்தா அவ்வாறு வரவில்லை என்பதுடன் மாயமாக மறைந்துவிட்டார். கற்பழிப்பு, முறையற்ற பாலியல் உறவு போன்ற ஏழு குற்றச்சாற்றுகள் அவர் மீது காவல்துறையால் பதிவு செய்யப்-பட்டுள்ளன. அவரது பக்தர்களும் மற்ற பொதுமக்களும் அவரது வருகைக்-காகக் காத்திருக்கின்றனர்.

இப்போதெல்லாம் சாமியார்களுக்குக் கெட்ட காலம்தான். ஒன்று வானத்து நட்சத்திரச் சேர்க்கைகளாலோ, அல்லது திரை நட்சத்திரச் சேர்க்கைகளாலோ அவர்களுக்குக் கெட்ட பெயர்தான்.

விபசார தரகர் டில்லி திவேதி சாமியார்

அதிகம் படிக்கவே செய்யாத 39 வயது திவிவேதி டில்லியில் செக்யூரிடி பாதுகாவலராக வாழ்க்கையைத் தொடங்கி, பின்னர் மசாஜ் பார்லர் பணியாளராக மாறினார். சதைத் தொழில் நடத்தியதற்காகவும், திருட்டுக் குற்றத்துக்காகவும் பல முறை கைது செய்யப்பட்ட இவர் தன்னைத்தானே சந்த் சாமி பீமானந்த்ஜீ மகராஜ் சித்ரகூட்வேல் என்று அழைத்துக் கொண்டார். உயர்ரக விபச்சார விடுதியாக செயல்பட்டு வந்த அவரது ஆசிரமத்தில் இல்லாமல், இப்போது அவர் சிறையில் ஓய்வு எடுத்துக் கொண்டு இருக்கிறார். ஆளுக்குத் தகுந்தபடி ஒழுக்கக் கொள்கையை மாற்றிக் கொள்ளும் உடுப்பி மடம்

இது போன்று எவரோ ஒருவரை வைத்துக் கொண்டு மொத்த ஆன்மிக பெருமக்களையும் குறைகூறக்கூடாது என்று சிலர் கூறுவர். ஆனால் இது தவறான கருத்தாகும். மிகவும் தொன்மை வாய்ந்ததும், பாரம்பரியம் மிக்கதுமாகக் கருதப்படுவதுமான மாத்வ பிரிவைச் சேர்ந்த உடுபி ஷிரூர் சாமி லட்சுமிவார தீர்த்த மடத்துக்கு மூன்றாவது முறையாக தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பரய சாமிக்கு 15 ஆண்டு காலமாக ஒரு பெண்ணுடன் பாலியல் தொடர்பு உள்ளது என்று தெரிந்த பிறகும் தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளார் என்றால் என்னவென்று சொல்வது?

ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த மடத்து தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவர் கடல் கடந்து பயணம் செய்தவர் என்ற ஒரே காரணத்துக்காக கிரஷ்ண விக்ரகத்தைத் தொடக்கூட அனுமதிக்கவில்லை. அதற்கு முன்பு, தனது பக்தர் ஒருவரின் மகளின் மீது தான் காதல் கொண்டு விட்டதாகவும், அவரை மணந்து கொள்ள இருப்பதாகவும் வித்யா பூஷண சாமி கூறியபோது, அவருக்கு எதிராக மாதவ மடம் திரண்டு எழுந்தது. அவர் தனது துறவைக் கைவிட்டு-விட்டார் என்ற போதும், அவரது நேர்மைக்காகப் பாராட்டப்பட்டார். அவரது பஜனைகளுக்கு மக்கள் கூட்டம் குவிந்தது; அவரது நிகழ்ச்சிகளின் குறுந்தகடுகள் பெரும் அளவில் விற்பனை ஆயின.

பெண் துறவிகளை கருவுறச் செய்த ஜைனத்துறவி

யார் அதிக அளவு எண்ணிக்கையிலான பக்தைகளைக் கெடுத்தது என்பதில் ஜெய்பூரில் இருந்த இரு ஜைன முனிவர்களிடையே போட்டி ஏற்பட்டது. இதுபற்றி பக்தர் ஒருவர் காவல்துறையில் புகார் அளித்தபோது, ஒரு முனிவர் தற்கொலை செய்து கொண்டார். வேறு இடத்தில் இருந்த மற்றொருவர் புலியையும் சைவமாக வளர்க்க முடியும் என்று சொல்லி வந்தவர். இந்த முனிவர், இரண்டு பெண் ஜைனத் துறவிகளைத் தொடர்ந்து பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி வந்தார். பல முறை அவர்-கள் கருவுற்று, பின்னர் அவரால் கருக்கலைப்பு செய்யப்பட்டவர்கள். இந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து எழுந்த கூச்சலும், எதிர்ப்பும் அதிக நாள்கள் நீடிக்கவில்லை. தவறு செய்தவர்களைத் தண்டித்து வெளியேற்றுவது என்பது இல்லாமல், பணபலத்தினால் இந்த நிகழ்ச்சி பற்றிய விவரமே மூடி மறைக்கப்பட்டு புதைக்கப்பட்டது.

பாதிரியாரின் ஒழுக்கக் கேட்டை பார்த்ததால் கொலை செய்யப்பட்ட பெண்

அதனைஅடுத்து, கேரளாவில் பாதிரியார் ஒருவரால் நடத்தப்பட்ட கிறித்தவ அமைப்பைச் சார்ந்த கன்னியாஸ்திரீ ஒருவரும் ஓர் ஆணும் கொலை செய்யப்பட்ட வழக்கு ஒன்று எழுந்தது. பாலியல் உறவு கொண்டிருந்ததைக் கண்டதுதான் கொலையுண்ட பெண் செய்த குற்றம். இந்த வழக்கை மூடி முறைக்க அனைத்து வகையான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் மத்தியப் புலனய்வுத் துறை அதிகாரி ஒருவரின் தீவிர விசாரணையில் முழு உண்மையும் வெளிவந்தது.

வெளிச்சத்துக்கு வரும் நிகழ்ச்சி ஒன்று என்றால், வெளியே வராதவை நூறு இருக்கின்றன

வெளிச்சத்துக்கு வரும் ஒவ்வொரு வெட்கப்படத்தக்க நிகழ்ச்சி ஒன்று என்றால், இது போன்ற செய்தி வெளி-வராத நிகழ்ச்சிகள் நூற்றுக்கணக்கில் உள்ளன. அப்படியிருக்கும்போது மக்கள் கூட்டம் ஏன் சாமியார்களையும், சாமியாரிணிகளையும் தேடிச் செல்கிறது? ஆன்மிக ஆறுதலைத் தேடிச் செல்கிறோம் என்று அவர்கள் கூறுவதே ஒரு ஏமாற்றுவேலை. தங்களின் உண்மையான அல்லது கற்பனையிலான பிரச்சினைகள் இது போன்ற சாமியார்களின் பக்கத்தில் இருந்தால் தீர்ந்துவிடும் என்று இந்தப் பக்தர்கள் (இவர்களும் சிலநேரங்களில் கயவர்களே) கருதுவதுதான் உண்மையான காரணமாக இருக்கக்-கூடும்.


------------நன்றி: தி நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ், 29.3.2010 இல் என். நரசிம்மன் அவர்கள் எழுதியகட்டுரை -தமிழில்: த.க.பாலகிருட்டிணன் “விடுதலை” 29-3-2010

29.3.10

போப் மன்னிப்பு கேட்டால் போதுமா?



நீங்கள் மிகவும் கொடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளீர்கள். நான் மிகவும் வருந்துகிறேன். உங்கள் நம்பிக்கை பாழ்பட்டுவிட்டது. உங்கள் சுயமதிப்பு சூறையாடப்பட்டுவிட்டது.

நான் வெட்கப்படுகிறேன் என்பதை வெளிப்படையாகவே தெரிவித்துக் கொள்கிறேன்.

தேவாலயங்களின் மரியாதை குலைக்கப்பட்டதற்கான அவமானச் செயல் தவிர்க்கப்பட்டிருக்கவேண்டும். அத்தகைய குற்றத்தைப் புரிந்தவர்கள் நிச்சயமாகக் கடவுளின் முன்பு பதில் சொல்லியே தீரவேண்டும். இவர்களின் பாபங்களைப் பற்றி விசாரிக்கும் நியாய விசாரணையின்போது பதிலளித்தே ஆகவேண்டும்.

இவ்வளவும் எழுதியிருப்பது போப். கத்தோலிக்க மதத்தின் உலகத் தலைவர். ஆம். மன்னிப்பை எழுத்து மூலமாகவே தந்துள்ளார். பாதிக்கப்பட்டவர்களுக்குத் தந்துள்ளார். என்ன பாதிப்பு? யார் பாதிக்கப்பட்டனர்?

அயர்லாந்து நாட்டுக் கத்தோலிக்க மதத்தைச் சார்ந்த சிறுவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பாலியல் வன்செயலுக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். அசிங்கமான இந்தச் செயலைச் செய்தவர்கள் யாரோ காலிகளோ, அயோக்கியர்களோஅல்லர். காமாந்தகாரம் பிடித்த காலிகள், அயோக்கியர்கள். வெள்ளை அங்கி அணிந்து கொண்டு தங்கள் அயோக்கியத்தனங்களை மறைக்க முயலும் கத்தோலிக்க பாதிரிகள்தான் அவர்கள்.

பெரும் தவறுகள் தேவாலயங்களில் நடந்து விட்டன என்று அந்நாட்டு கத்தோலிக மதத் தலைமை ஒத்துக் கொள்கிறதாம். நடந்த கேவலமான செயல் தவறா? குற்றங்கள் அல்லவா! 30 ஆண்டுகளாகத் திட்டமிட்டுச் செய்யப்பட்டு வரும் குற்றங்கள் ஆகும்.

வெறும் மன்னிப்புத் தாள்கள் போதுமா? இக் குற்றங்களைக் கேடயங்களாக இருந்து மறைத்துக் கொண்டு இருக்கும் மத முகமூடி கிழித்தெறியப்பட வேண்டாமா? போப் சிந்திக்கவேண்டும். அவரது மதத்தவர் சிந்திக்கவேண்டும்.

பாதிரியார்களைத் தேர்ந்தெடுக்கும் முறை பற்றி யோசிக்கிறாராம் போப். ஒழுக்கமான, மனிதத் தன்மையுள்ள, அறிவுடன் கூடிய ஆன்மிகப் பள்ளிகள் குறைவாக இருப்பதே, இப்படிப்பட்ட பாதிரிகள் வருவதற்குக் காரணம் என்று கண்டு பிடித்திருக்கிறாராம். அது சரியல்ல.

மாற்று முறை கண்டறியப்படவேண்டும் என்று புலம்புகிறராம் போப். புலம்புவதை விட்டுவிட்டுப் புத்தியைப் பயன்படுத்த வேண்டும்.

முறைகெட்ட பாலியல் புணர்ச்சி முறைகளுக்குக் காரணம் - பெண்ணோடு புணர்வது பாபம் என்று கூறும் மதக் கருத்துகள் அல்லவா? பாதிரிகள் திருமணம் செய்து கொள்வதை அனுமதிக்கும் வேறொரு கிறித்துவப் பிரிவில் இம்மாதிரிக் குற்றங்களைக் காணோமே!

எனவே சரியான வழியில் போப் சிந்திக்க வேண்டியதும் செயல்படவேண்டியதும் மதமவுடீகக் கொள்கைகளை மாற்றி அமைப்பதும்தான் தேவையே தவிர, மன்னிப்பு அல்ல!

மதம் மீதுள்ள அக்கறையல்ல இந்த யோசனைக்குக் காரணம்! மனித மாண்புகள் மதிக்கப்படவேண்டும் என்ற கவலைதான் காரணம்!


------------------- சு.அறிவுக்கரசு அவர்கள் 28-3-2010 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

28.3.10

நட்சத்திர ஓட்டலில் கடவுள் கல்யாணம்



வருகின்றன 29 ஆம் தேதி பங்குனி உத்திரமாம். அன்றைய நாளில்தான் கடவுள்கள் கல்யாணம் பண்ணிக் கொண்டதுகளாம். சிவன்_ பார்வதி, முருகன்_ தெய்வானை, ரங்கமன்னார்_ஆண்டாள் என்று பலதுகளும் வாழ்க்கை இணை ஏற்பு விழாவை நடத்திக் கொண்டது இந்த நாளில்தான் எனக் கதை.

சிவனின் உடல் வியர்வையில் ஒரு குறிப்பிட்ட ஜாதி மக்களே ஒட்டு மொத்தமாகப் பிறந்ததாகவும் ஒரு கதை. வியர்வையில் விந்தும் சினை முட்டையும் சேர்ந்து இருந்ததா என்பதற்கு விவரம் யாரும் தரவில்லை.

இந்தக் கதைகளுக்கு மாறாக சிவன்_ பார்வதி விவாகம் மகா சிவராத்திரி நாளன்று நடந்ததாம். ஷிவ்விவாஹ் இம்மாதம் 12 முதல் 14 தேதிகளில் வடக்கே நடந்ததாம். நீலப்பட்டு வேட்டி மட்டுமே கட்டிக் கொண்டிருந்த சிவன், சிவப்புப் பட்டுச் சேலை கட்டிய பார்வதியை விவாகம் செய்து கொண்டதாம். எல்லாக் கடவுள்களும் வந்திருந்தனவாம்.

விவாக வைபவத்தைக் காண பிரம்மன், விஷ்ணு, இந்திரன் ஆகியவை வந்ததாகச் செய்தி. எழுதியிருப்பது தி இந்து ஏடு. பார்த்து அறிந்து உறுதி செய்த பிறகுதான் வெளியிட்டிருக்கும்(?) என நம்பலாமா?

சிவன்_பார்வதி திருமணத்திற்குப் புரோகிதம் பார்த்த பிரம்மாவின் காமவெறி நினைப்பினால் நெருப்பே அவிந்துவிட்டதாகச் சேதி கூறுகிறது புராணம். இந்தக் கல்யாணத்தில் எப்படி நடந்தது என்று ஏடு எழுதவில்லை. அய்ந்து நட்சத்திர ஓட்டலில் நடந்ததாகவும் சூட் அணிந்தவர்கள் கலந்து கொண்டதாகவும் எழுதப்பட்டுள்ளது. அவர்கள் பெண் வீட்டாராகத்தான் இருப்பார்கள் என்று யூகம். மணமகனே புலித்தோலை அரைக்கசைத்து இருக்கும் ஆள்தானே! தந்தை பெரியார் சொன்ன மாதிரி நூல், ஆடை போன்றவை கண்டுபிடிக்கப் படாத காலக் கடவுள்தானே!

----------------------- சு.அறிவுக்கரசு அவர்கள் 28-3-2010 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

22.3.10

தகாத உறவு பாதிரியார்கள் போப் பெனிடிக்ட் மன்னிப்பு


ஜெர்மனி, அயர்லாந்து உள்ளிட்ட நாடுகளில், கத்தோலிக்க பாதிரியார்கள், சிறுவர்களுடன் தகாத உறவு வைத்துக் கொண்டதற்காக, போப் பெனிடிக்ட் மன்னிப்பு கேட்டுள்ளார்.

ஜெர்மனி, அயர்லாந்து, ஆஸ்திரியா, நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து, அமெரிக்கா என பல்வேறு நாடுகளில் கத்தோலிக்க பாதிரியார்கள், பல ஆண்டுகளாக சிறுவர்களுடன் தகாத உறவு வைத்துள்ளனர். இது தொடர்பாக வாடிகன் நகரில் உள்ள போப் பெனிடிக்ட்டுக்கு ஏராளமான புகார்கள் வந்தன. குறிப்பாக, அயர்லாந்தில் இந்த புகார்கள் அதிகம் காணப்பட்டது. அயர்லாந்து நாட்டின் சார்பில், இது குறித்து ஒரு ஆணையம் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

ஒரு பாதிரியார் நூற்றுக்கும் அதிகமான சிறுவர்களுடன் உறவு கொண்டதை ஒப்புக் கொண்டுள்ளார். மற்றொரு பாதிரியார், இரண்டு வாரத்துக்கு ஒரு முறை சிறுவர்களுடன் உறவு கொள்வதை, 25 ஆண்டுகளாக செய்து வந்துள்ளதை ஒப்புக் கொண்டுள்ளார்.

போப் பெனிடிக்ட், ஜெர்மனியில் உள்ள முனிச் நகர பிஷப்பாக, 1977ஆம் ஆண்டு முதல் 1981ஆம் ஆண்டு வரை பணியாற்றியுள்ளார். அவர், பிஷப்பாக இருந்த கால கட்டத்திலும் இது போன்ற சம்பவங்கள் நடந்துள்ளன.எனவே, போப் பெனிடிக்ட் இச்சம்பவங்களுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும், தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ஜெர்மனி பார்லிமென்ட் கீழ் சபையின் துணைத் தலைவர் உல்ப்கேங் தியர்ஸ், பெனிடிக்ட்டை சந்தித்து கோரினார்.

நாளுக்கு நாள் பாதிரியார்கள் மீதான புகார்கள் அதிகரித்து வந்ததால் இதற்கு தீர்வு காண்பதற்காக கடந்த வாரம் போப் பெனிடிக்ட் வாடிகன் தேவாலயத்தின் உயர்மட்ட நிருவாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.பாதிரியார்களின் தகாத உறவால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், தேவாலய நிர்வாகிகளுக்கும் அவர் சமீபத்தில் மன்னிப்பு கடிதம் எழுதியுள்ளார். போப் தனது கடிதத்தில் குறிப்பிடுகையில், பாதிரியார்கள் தாங்கள் செய்த தவறான செயலை ஒப்புக்கொள்ள வேண்டும். இந்த செயல்கள் உங்கள் மதிப்பின் தரத்தை தாழ்த்தக்கூடியது. இந்த தகாத செயலால் பாதிக்கப்பட்டவர்களிடம் மன்னிப்பு கேட்கிறேன். உங்களுக்கு நேர்ந்த இந்த துயரம் குறித்து வெட்கமும் வேதனையும் அடைகிறோம். அயர்லாந்து நாட்டு பாதிரியார்கள் செய்த துரோகச் செயல் குறித்து விசாரிக்கப்படும். அயர்லாந்து மக்கள், தேவாலயங்கள் மீது மீண்டும் நம்பிக்கை கொள்ளும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.போப்பின் இந்த எட்டு பக்க கடிதத்தால் மற்ற நாட்டு கத்தோலிக்கர்கள் அதிருப்தியடைந்துள்ளனர். அயர்லாந்து நாட்டு சம்பவங்களைத் தான் போப் கண்டித்திருக்கிறார். அனைத்து நாடுகளுக்கும் இவரது மன்னிப்பு கடிதம் பொருந்தவில்லை என, அமெரிக்க கத்தோலிக்கர்கள் தெரிவித்துள்ளனர். தவறு செய்த பாதிரியார்களை பதவி விலக வற்புறுத்தும்படி போப் இந்த கடிதத்தில் தெரிவிக்காததற்கு சிலர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.


------------------- நன்றி:- “விடுதலை” 22-3-2010

22.2.10

மதவாதிகளே பதில் சொல்லுங்கள்! - 15




ஆறாவது குருவாக ஆக்கப்பட்டவர் குரு அர்ஜனின் மகன் ஹர்கோவிந்த். தன்னுடன் எப்போதும் இரண்டு வாள்களை வைத்துக் கொண்டிருந்தவர். ஒன்று சக்தி என்றும் மற்றொன்று பக்தி என்றும் விளக்கம் அளித்தார். துறவிக்குரிய தன்னலமறுப்பும் (Piri) அரசர்க்குரிய கம்பீரமும் (Miri) ஒருங்கே அமையப் பெற்றி-ருந்தவர். உண்மையான மன்னர் (Sacha Badshah) என்று அழைக்கப்-பட்டதற்கேற்ப, படை திரட்டி, குதிரைகளில் சவாரி செய்வதை அறிமுகப்படுத்தியவர். படை திரட்டியதோடு கோட்டை கொத்தளங்களையும் கட்டியவர். சுருங்கச் சொன்னால் சாமியார்களைப் போர் வீரர்களாக்கியவர் அகிம்சை என்பதைக் கோழைத்தனம் என்றவர்.

தனது 14 ஆம் வயதிலேயே ஏழாவது சீக்கிய குரு ஆனவர் ஹர் ராய். குரு ஹர்கோவிந்தின் மூத்த மகன் பாய்குர்டித்தாவின் மகன். இவரும் 1661 ஆம் ஆண்டில் தமது 30 ஆவது வயதில் காலமானார்.

தனது இரண்டாம் மகன் ஹரிகிருஷ்ணனை எட்டாவது குருவாக்கினார். ஒன்பதாவது குருவானவர் தேஜ்பகதூர். அவர் காலத்தில் காஷ்மீர்ப் பார்ப்பனர்கள் அமர்நாத் யாத்திரை போக விரும்பினார்களாம். அந்தப் பார்ப்பனர்களில் ஒருவரான கிர்பாராம் என்பவர் கனவு கண்டாராம்; அந்தப் பார்ப்பனர்களைச் சீக்கிய மதகுருவான தேஜ்பகதூர் மட்டுமே காக்க முடியும் எனக் கண்டாராம். காரணம் கலியுகக் காவலர் அவர்தானாம். உடனே பார்ப்பனர்கள் பஞ்சாபில் அனந்தபூர் வந்து குருவைச் சந்தித்தனராம். தங்களுக்குத் தேவைப்படுவதை எடுத்துக் கூறினார்களாம். இந்துக்களை முசுலிம்களாக மதம் மாறும்படி அவுரங்கசீப் ஆணையிட்டிருப்பதையும் அதற்கு ஆறுமாத காலம் அவகாசம் தந்திருப்பதையும் தெரிவித்தார்கள். நிலைமையைத் தெரிந்து கொண்ட தேஜ்பகதூர் பார்ப்பனர்களிடம் முதலில் தேஜ்பகதூர் மதம் மாறினால் நாங்களும் மதம் மாறத்தயார் எனக் கூறிவிடுங்கள் என்றாராம்.

இதையறிந்த முகலாய மன்னர் அவரை டில்லிக்கு வரவழைத்து சிறையில் அடைத்து விட்டார். சில நாள்களில் அவரைக் கொன்று விட்டனர். உயர் ஜாதிப் பார்ப்பனச் சின்னமான பூணூல் மனிதர்களிடையே ஏற்றத்தாழ்வை ஏற்படுத்துகிறது எனக் கூறி பூணூலையே அணிய மறுத்து ஜாதிப் பிளவுகளுக்குச் சம்மட்டி அடி கொடுத்தவர் குருநானக். ஜாதிப் பிரிவுகளை எதிர்த்து அவரால் புதிதாக உருவாக்கப்பட்ட மதம் சீக்கியம். ஆனால் அம்மதத்தின் ஒன்பதாவது குரு பூணூல் மேனிகளைக் காப்பதற்காகத் தம்முயிரைத் தியாகம் செய்கிறார். அந்த தியாகத்தின் பலன் என்ன? இனிமேல் நாங்கள் பூணூலை அணிய மாட்டோம் என்று பார்ப்பனர்கள் உறுதி மொழி ஏற்றனரா? அல்லது குறைந்த அளவு காஷ்மீர்ப் பார்ப்பனப் பண்டிட்டுகளாவது அம்மாதிரி அறிவித்தார்களா? இல்லையே! குரு தேஜ் பகதூரின் உயிர்த்தியாகம் விழலுக்கு இறைத்த நீராகிவிட்டதே! ஓர் இயக்கத்தின் நோக்கங்கள் நீர்த்துப் போனால் விளைவுகள் எப்படி ஆகும் என்பதை எடுத்துக் காட்டுகிறதே! ஜாதி ஒழிப்புக்காக உருவான மதம் ஜாதியாலேயே பிளவுபடும் நிலை வந்துவிட்டதே!

மதவாதிகளே, என்ன பதில்?

குழந்தைப் பேறு இல்லாத மன்னர் ஒருவர் குருதேஜ் பகதூரிடம் வந்தாராம். குழந்தை வேண்டும் என்றாராம். அப்படியே ஆகட்டும் என்று குரு ஆசீர்வதித்தாராம். அவருக்குக் குழந்தை பிறந்ததாம். இது போன்ற பல அற்புதங்களை அவர் செய்தாராம். மூட நம்பிக்கைகளைக் கண்டித்தும், அவற்றை ஒழிக்க வேண்டும் என்கிற நோக்கத்தோடும் உண்டாக்கப்பட்ட மதத்தின் கதி காலப்போக்கில் எப்படி ஆனது என்று கவனிக்க வேண்டும்.

பத்தாம் குருவாக வந்த கோவிந்த் ராய், பிகாரின் பாடலிபுத்திர நகரைச் சேர்ந்தவர். வில் வித்தை கற்று அடிக்கடி விலங்குகளை வேட்டையாடச் சென்றவர். 52 கவிஞர்களைக் கூட்டி வைத்து கவி அரங்குகளை நடத்தியவர். சமக்கிருதம், பாரசீகம் ஆகிய மொழிகளில் புலமை பெற்றவர், கவியரங்குகளில் மேற்கண்ட மொழிக் கவிதைகளைப் பாடியும் பாடச் செய்தும் மகிழ்ந்தவர். இந்த வகையில் இவர், தன் முன்னோர் குருக்களின் பாதையிலிருந்து விலகி வாழ்ந்தவர். மக்களின் மொழியில் மதக் கருத்துகள் இருக்க வேண்டும் என்று புத்தரைப் போலவே குருநானக்கும் மற்றவர்களும் உழைத்தனர். புத்தர் பாலிமொழியைப் பயன்படுத்தியதைப் போல சீக்கிய குருமார்கள் குருமுகி மொழியை வளர்த்தனர். அந்தப் பாதையை விட்டு மாறிய பத்தாம் குரு சமக்கிருதம், பாரசீக மொழிகளை வளர்த்துள்ளார். இம்மாதிரிச் செயலை புத்த மதத்தைச் சேர்ந்த நாகார்ஜுனன் என்பார் கூடச் செய்து புத்த வழியிலிருந்து பிசகினார். அத்துடன் நிறுத்தாமல் சீக்கிய குரு நாட்டில் நிலவி வந்த கட்டுக் கதைகளையெல்லாம் எழுத்தில் வடிக்கும் வேலையைச் செய்தார்.

1699 ஆம் ஆண்டில் சீக்கியர்களை எல்லாம் அனந்தபூர் நகருக்கு வரச் செய்து அவர்கள் முன்னிலையில் நின்றுகொண்டு தனது வாளுக்கு ரத்த அபிஷேகம் தேவைப்படுகிறது; தனது தலையைக் கொடுக்கும் துணிவுள்ளவர்கள் வாருங்கள் என அழைத்தார். ஒருவரும் வரவில்லை. (ஏமாற்றமும் எரிச்சலும் ஏற்பட்டிருக்கும்). மூன்றாம் முறையும் கேட்டபோது கத்ரி எனும் ஜாதியைச் சேர்ந்த தயாராம் எனும் 30 வயது இளைஞர் முன்வந்தார். மேடையில் மறைவான இடத்திற்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டார். கூட்டம் பதைபதைப்புடன் பார்த்துக் கொண்டிருந்தபோது குரு வெளியே வந்தார். அவரின் கையிலிருந்த வாளிலிருந்து ரத்தம் சொட்டிக் கொண்டிருந்தது. ஆனாலும் மறுபடியும் ஒரு வாலிபனைக் கேட்டார் குரு. கூடியிருந்தோர் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டது. என்ன ஆயிற்று குருவுக்கு என்று பலரும் முணுமுணுக்கத் தொடங்கினர். என்றாலும் இந்த முறை ஒரு ஜாட் இளைஞர் முன்வந்தார், உயிர்த்தியாகம் செய்ய! மூன்றாம் முறையும் ஓர் உயிரைப் பலி கேட்டார் குரு. ஒரு வாலிபர், துவாரகாவைச் சேர்ந்த மொக்கம்சந்த் என்பவர் முன்வந்தார். அவர் கதை முடிந்ததும் நான்காம் முறையாகவும் ஓர் ஆள் வேண்டும் எனக் கேட்டார் குரு.

கூடியிருந்தவர்களில் பெரும்பாலோர் ஓட்டம் பிடித்தனர். என்றாலும் ஹிம்மத்சந்த் எனும் வாலிபர் முன்வந்தார். அய்ந்தாம் முறையாகவும் உயிர்ப்பலி வேண்டும் என்ற போதும் ஒருவர் வந்தார். பலியிடும் இடத்திற்கு அவரை குரு அழைத்துச் சென்றபோது, மக்கள் குருவின் தாயாரையும் குருவின் ஆலோசகர்களையும் கூட்டி இந்தப் பிரச்சினையில் தலையிடுமாறு கேட்டுக் கொண்டனர். அவர்களும் மேடைக்கு வந்தபோது குருவும் உயிர்த்தியாகம் செய்ய ஒப்படைத்துக் கொண்ட 5 பேர்களும் மறைவிடத்தை விட்டு வெளியே வந்தனர். கூட்டம் மகிழ்ச்சியில் ஆரவாரித்தது. 5 முறையும் ஆடுகளை வெட்டி ரத்தம் தோய்ந்த வாளுடன் காட்சி அளித்து குரு நாடகம் நடத்தினார் என்ற விவரம் கூட்டத்திற்குக் கூறப்பட்டது.

ஓர் அண்டா நிறைய நீர் நிரப்பி அதனைக் கண்டா எனும் இருபுறமும் கூர் உள்ள கத்தியால் கலக்கி அது-தான் அமிர்தம் என்று கூறி, அய்ந்து இளைஞர்களையும் குடிக்க வைத்தார். அவர்கள் மதத்தில் சேர்த்துக் கொள்ளும் சடங்கு (Baptism) இதுதான். அதன்பின் அமிர்தத்தை அவரும் ருசித்தார். அந்த நொடி முதல் குருகோவிந்த் சிங் என்றாகிவிட்டார். அன்றைய நாளில் 20 ஆயிரம் பேர் சீக்கியர்களாகினர். வெட்டப்படாத தலை மயிர், தாடி, மீசை (கேசம் Kesh, இரும்பு வளையல் (கடகம் Kada), இறுக்கமான உள்ளாடை (கச்சம் Kangha) கையில் எப்போதும் சீப்பு (கங்கா முயபோய), கத்தி (கிர்பான் Kirpan) வைத்திருக்க வேண்டும் என்பது சீக்கியர்களின் அடையாளம் ஆக்கப் பட்டது. அந்த அமைப்பின் (கல்சா) அடையாளங்கள் என்றானது.

சீக்கியர்கள் புகைக்கக்கூடாது. போதை தரும் பானங்களைப் பருகக்கூடாது. காஷர் (இறைச்சியை) உண்ணக்கூடாது. மனைவியைத் தவிர வேறு பெண்களிடம் ஆசை வைக்கக்கூடாது. எல்லா சீக்கியர்களும் சமமானவர்கள் என்பதால் வேற்றுமை பாராட்டக்கூடாது. ஏற்றத் தாழ்வு என்ணுவதோ பார்ப்பதோ கூடாது. ஜாதிப் பிளவுகள் கூடாது. நிறைய கூடாதுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஆனால் கடைப்பிடிக்கப்படுகிறதா?

முக்கியமாக சமுதாயத்தைக் கூறு போட்டுப் பிளவுபடுத்தும் ஜாதி முறையை ஆதரித்து அனுஷ்டிக்கும் மதமாக இருப்பது குறித்து வெட்கப் படுவதேயில்லை. வெளிநாடுகளுக்குப் போனாலும் மத அடையாளத்தை ஜாதி பாகுபாடுகளின்படி வாழ்ந்து காட்டுகிற நிலை உள்ளதே! உணவு உண்பது தனி மனிதனின் விருப்பு, வெறுப்பு, பழக்கம், ருசி போன்றவை சம்பந்தப்பட்டது. அதில் மதம் குறுக்கிடுவதை எந்த மதமாக இருந்தாலும் ஏற்க முடியாது. உணவில் கட்டுப்பாடு விதிப்பதை இந்த மதமும் செய்துள்ளது. யூத மதத்தில் கோஷர் உணவு என்கிறார்கள். சீக்கிய மதத்தில் காஷர் (இறைச்சி) கூடாது என்கிறார்கள். கொல்லப்படும் கோழி, ஆடு, மாடு என்பவற்றைக் கழுத்தை அறுத்துக் கொல்ல வேண்டும் என்கிறது இசுலாம். ஒரே வெட்டாக வெட்டிக் கொல்ல வேண்டும் என்கிறது சீக்கியம்.

எல்லா மதங்களைப் போலவே, மறு உலகம், மறுவாழ்வு என்பதை சீக்கியமும் பேசுகிறது. இவ்வுலக வாழ்க்கையைப் பயணிகள் தங்கிச் செல்லும் சத்திரம் போல என்று பேசுகிறது.

குரு கோவிந்த்சிங்கிற்குப் பிறகு குரு பரம்பரை ஒழிக்கப்பட்டு கடைசி குரு எனப் புனித நூலை (ஆதி கிரந்தம்) அறிவித்து விட்டார்கள். 36 பேர்கள் எழுதிய பாடல்கள் இதில் இடம் பெற்றுள்ளன. காலையும் மாலையும் அதை வணங்கவேண்டுமாம். (கடைப்-பிடிக்க வேண்டியது அல்லவா முக்கியம்?) அதை விட வேடிக்கை, வெண்சாமரம் வீசிக்கொண்டேயிருப்பார்கள் புத்தகத்திற்கு (வேர்க்குமோ?)

கடைசியாக குருகோவிந்த் சிங் சொல்லிய வரிகள்தான் புனித நூலில் உள்ளனவாம். ஆறாயிரம் பாடல்களாம். 31 ராகங்களாம். கடவுள் ஒன்றுதான், அதன் பெயர் உண்மை. அதுதான் அனைத்-தையும் படைத்தது, அதற்குப் பிறப்பும் இல்லை, இறப்பும் இல்லை, தானே உருவானது, குருவின் அனுக்கிரகம் மூலம் மட்டுமே அதனை அடைய முடியும் என்று முக்கியமாகக் கூறுகிறது.

யூதத்திற்கு மோசே, கிறித்துவத்திற்கு யேசு, இசுலாத்திற்கு முகம்மது நபி, என்ற வகையில் சீக்கியத்திற்கு குரு. எனவேதான் அந்த மதத்தில் குரு ஆக வருவதற்கு இவ்வளவு போட்டிகளோ? சீக்கியர்களின் அடையாளமாகக் கருதப்படும் தலைப்பாகையில் கூட ஜாதி வேற்றுமை வெளிப்படுத்தப்படுகிறது. கூம்பு வடிவத் தலைப்பாகையைத் தாழ்த்தப்பட்டோர் அணியக்கூடாதாம். மேல்புறம் தட்டையாக இருக்கும் வகையிலான தலைப் பாகையைத்தான் அணிய வேண்டுமாம். இந்து மதம், தாழ்த்தப்பட்டவர்கள் தலைப்பாகையே கட்டக்கூடாது என்றது. அதற்கு இது பரவாயில்லை எனத் தோன்றுகிறது.

கொள்கைகளைப் பறக்கவிட்டுவிட்ட மதம் என்கிற பட்டியலில் சீக்கியமும் சேர்ந்து கொண்டு விட்டது!


------------------- சு. அறிவுக்கரசு அவர்கள் 22-2-2010 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

மதவாதிகளே பதில் சொல்லுங்கள்! -14


மதவாதிகளே, பதில் சொல்லுங்கள்!


அமர்தாசுக்கு அடுத்து குருவாக நியமிக்கப்பட்டவர் குரு ராம்தாஸ். இவர் குரு அமர்தாசின் மருமகன். தம் மனைவி பீபிபானி என்பவருக்குத் திருமணப் பரிசாகப் பேரரசர் அக்பர் வழங்கிய கிராமத்தில் ஒரு புதிய நகரை இவர் உருவாக்கினார். அதுதான் இன்றைய அமிருதசர். அவர் வெட்டிய குளம்தான் அமிருதசர் எனப்படுகிறது. பொற்கோயில் என்று அழைக்கப்படும் ஹர்பந்தர் சாகிப் குருத்வாரா அப்போது கட்டத் தொடங்கப்படவில்லை. குரு ராம்தாஸ் பொறுப்பு ஏற்று 7 ஆண்டுகளில் இறந்துவிட்டது ஒரு காரணம். (7 நாள்களில் கும்பகோணம் சங்கர மடத்தலைவர் இறந்து போனார் எனும்போது 7 ஆண்டுகளைப் பெரிதாக நினைக்க வேண்டும்.)

தம் இளைய மகன் அர்ஜன் தாஸ் என்பவரைத் தனக்குப் பிறகு குருவாக நியமித்தார் குரு ராம்தாஸ். குடும்பத் தலைமை தலைகாட்டத் தொடங்கிவிட்டது. இதனை குரு ராம்தாசின் மூத்த மகன் பிரீத்தி சந்த் ஏற்காமல் எதிர்க்கத் தொடங்கினார்.

இதைப் பற்றிக் கவலைப்படாமல் குரு அர்ஜன்தாஸ் ஹர்மந்தர் சாகிபைப் (பொற்கோயில்) கட்டும் பணியைத் தொடங்கினார். இப்பணியை அடிக்கல் நாட்டித் தொடங்கி வைத்தவர் மியான் மிர் எனும் முசுலிம் பெரியவர். நான்கு பக்கங்களிலும் வாசல் வைத்துக் கட்டி யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் உள்ளே வரலாம் என்று திட்டம்.

குரு பதவி கிடைக்காத குரு அர்ஜன்தாசின் அண்ணன் பிரீத்தி சந்த் ஒரு காரியம் செய்தார். தாமே பாடல்கள் எழுதினார். அவற்றை (முதல்) குரு நானக் பாடியதாகப் பரப்பி அமிருதசர் வரும் பக்தர்களிடம் பரப்பி வந்தார். இதை அனுமதித்தால் கண்டதும் குருநானக் பெயரில் வந்துவிடும் என்று பயந்து குரு அர்ஜன்தாஸ், அதிகாரப் பூர்வப் பாடல்களைத் தொகுத்தார். நான்கு குருமார்களின் பாடல்களையும் சேர்த்து தாம் எழுதியவற்றையும் இணைத்து போற்றி என்றும் புனித எழுத்துகள்என்றும் கூறப்படும் தொகுப்பை இறுதி செய்தார். அன்றைய நாளில் பிரபலமாக இருந்த இந்து சாமிகளின் பாடல்கள், முசுலிம் புனிதர்களின் பாடல்கள் ஆகியவற்றையும் இதில் இணைத்திருந்தார். பிரீத்தி சந்த் சும்மா இருக்கவில்லை. முகலாயர்களின் நீதிமன்றத்தில் புகார் செய்தார். இந்து முசுலிம் இறைத் தூதர்களை இழிவு செய்யும் விதத்தில் பாடல்கள் இருப்பதாகப் புகார். பேரரசர் அக்பர் அந்த நூலைப் பார்வையிட்டு, அம்மாதிரி ஏதும் இல்லை என உணர்ந்தார்.

அக்பருக்குப் பின் அரசரான ஜஹாங்கீர் குரு அர்ஜன் சிங்கிற்குக் கட்டளை பிறப்பித்தார். புனித நூலில் இந்து, முசுலிம் மதங்களைப் பற்றிக் கூறப்பட்டு இருக்கும் கருத்துகளை நீக்கிவிடவேண்டும் என்று கட்டளை. குரு அர்ஜன்சிங் இதனை ஏற்க மறுத்தார். இதற்காகஅவருக்கு 2 லட்சம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டது. குரு தண்டம் கட்டவில்லை. அரசு காஜி குருவை கைது செய்து கொடுமைப்படுத்தினார். தொடர்ந்த கொடுமைகளுக்குப் பிறகு ஆற்றில் குளிக்கப் போனவர் திரும்பவில்லை. மறைந்து விட்டார்.

ஜாதிகளை எதிர்த்துத் தொடங்கப்பட்ட சீக்கிய மதம் இன்று எப்படி உள்ளது? ஜாதிப் பிரிவினைகளைக் கொண்டிருக்கிற இரு மதங்களில் இந்து மதத்திற்கு அடுத்து சீக்கிய மதம் என்கிற பெருமையைப் பெற்றிருக்கிறதே! இந்து மதத்தைப் போலவே ஜாதிக் கொடுமைகளைத் தாழ்த்தப்பட்ட ஜாதியினருக்குச் செய்வதில் கொடி கட்டிப் பறக்கிறதே! நான்கு வாயில்கள் உள்ளன என்றாலும், எல்லா வாயில்களிலும் எல்லா ஜாதியினரும் உள்ளே வரலாம் என்ற அமைப்பில் குருத்வாராக்கள் கட்டப்பட்ட மதத்தில், தாழ்த்தப்பட்டோர் நுழைய முடியாத நிலை, நுழையாத நிலை உள்ளதே! தங்களை அவமானப்படுத்தும் வழிபாட்டு இடத்திற்கு வருவதற்கு மனம் இல்லாதவர்கள் தனிக் கட்டடம் கட்டிக் கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது என்றால், இந்து மதம் போலவேதானே சீக்கியமும்? தங்களுக்கென தனி குருமார்களை உண்டாக்கிக்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது என்றால்... இந்து மதத்தை விட இந்த மதம் எந்த வகையில் உசத்தி? கடல் கடந்து வாழும் நாடுகளில் கூட, ஜாதி வேற்றுமை பாராட்டிக் கொலையும் செய்யும் நிலை இருக்கிறது என்று சொன்னால்... சமூகம் எங்கே ஒன்றாக இருக்கிறது?

அரசு ஆணை பிறப்பிக்கப்பட்ட பிறகும்கூட அதற்குப் பயந்து திருத்தப்படாத புனிதநூல் தாழ்த்தப் பட்டவர்களின் நலனுக்காகவும் உரிமைகளுக்கும் புதிதாக எழுதப்படும் நிலை தலைகீழாகப் புரட்டிப் போடப்பட்டிருக்கிறது என்றுதானே காட்டுகிறது?

மதவாதிகளே பதில் சொல்லுங்கள்!

-------------------------சு. அறிவுக்கரசு அவர்கள் “விடுதலை” 20-2-2010 இல் எழுதிய கட்டுரை

20.2.10

மதவாதிகளே பதில் சொல்லுங்கள்! - 13




இந்தியாவில் தோன்றிய மதங்கள் என்று சில உண்டு. ஆரியப் பார்ப்பன வேதக் கொடுமைகளை எதிர்த்து உண்டான சமணம் (ஜைன), பவுத்தம் (சாக்கியம்) அவற்றில் குறிப்பிடத்தக்கவை. இரண்டின் தோற்றுநர்களும் அரச குடும்பத்தைச் சார்ந்தவர்கள் என்ற காரணத்தினால், அரசன் எவ்வழி குடிகள் அவ்வழி என்ற தன்மையில் அவை இந்தியாவில் பரவின. அவற்றிலும் பவுத்தம் இந்தியாவை விட்டே விரட்டப்பட்டது எனக் கூறத்தக்க வகையில் வெகு குறைவானவர்களால் மட்டுமே கடைப்பிடிக்கப்படும் மதமாக உள்ளது. சிறுபான்மையர் தகுதி தங்களுக்கு வழங்கப்படவேண்டும் என்று மனுச்செய்யும் நிலையில் சமணமதம் உள்ளது. இவை தவிர ஒரு மதம் இந்தியாவில உருவாக்கப்பட்டது என்றால் அது சீக்கிய மதம். இந்து, முசுலிம் மதக் கொடுமைகளின் காரணமாக உருவாக்கப்பட்ட மதம். இரண்டு மதங்களின் கலவை இந்த மதம் என்றே கூறலாம்.

இந்த மதத்தை உருவாக்கினவரான குருநானக், மூட நம்பிக்கைகளை அர்த்தம் அற்ற சடங்குகளை செல்லரித்துப் போன சம்பிரதாயங்களைத் தம் இளவயது முதலே எதிர்த்தவர். தம் தந்தை கண்டித்த போதும் பின்வாங்காமல் இருந்தவர். இந்துக்களில் உயர் ஜாதி எனப்படும் ஜாதியில் பிறந்த நானக் ஜாதி வழக்கப்படி பூணூல் அணிந்து கொள்ள மறுத்தார். தொடக்க காலம் தொட்டே, இந்து மதத்தைக் கெடுத்துக் குட்டிச் சுவராக்கி வரும் ஜாதிப் பிரிவினைகளைக் கடுமையாக எதிர்த்தார். இந்து மதத்தில் நிலவி வரும் இக்கொடும் பழக்கம் மதம்மாறி இசுலாமியர்களாக மாறிவிடவர்களையும் விட்ட பாடில்லை. நீண்ட நெடுங்காலமாக ஊறிப்போன இக்கொடுமை அங்கும் தொடரப்பட்டு, சையத்கள், ஷேக்குகள், முசல்லிகள், மவுலவிகள் என்றெல்லாம் பிரிவினை ஏற்படுத்தியிருப்பதையும் அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

வலுத்தவன், இளைத்தவன், ஏழை பணக்காரன், மேல் ஜாதி கீழ் ஜாதி இவை போன்ற ஏற்றத் தாழ்வுகளால் ஏழைகளும் ஒடுக்கப்பட்டவர்களும் வதைக்கப்படுவதைக் கண்டு மனம் சகிக்காமல், பாடும் போது கடவுளைச் சாடினார் குருநானக். ஆம், அவர் கடவுள் நம்பிக்கையாளர். ஆனால் குற்றமற்ற படைத்தவனாக (திணீறீறீமீ சிக்ஷீமீணீஷீக்ஷீ) கடவுள் இருக்க வேண்டும் என விரும்பினார். (அப்படி ஒரு கடவுள் இல்லை; இனிமேல் உருவாக்கப்பட்டால்தான் உண்டு.) எனவே தம் பாடலில்,

ஏதுமறியா ஆடு,மாடுகளைச் சிங்கம்

அடித்துக் கொன்றால் அதற்குப் பொறுப்பை

ஆண்டவன்தான் ஏற்கவேண்டும்

என்று திட்டவட்டமாகப் பாடினார். (ஏற்கிறானா?) பேதமற்ற சமுதாயத்தைப் படைக்க வேண்டும் என்கிற உயர் எண்ணத்தினால் உருவாக்கப்பட்டதுதான் சீக்கிய குருத்வாராக்களில் உள்ள குடுகா லங்கர் எனும் பொது உணவுச் சாலை அனைவர்க்கும் இலவயமான உணவு வழங்கப்படுமிடம்.

புத்தரைப் போலவே, குரு நானக்கும் உயர்ஜாதி, பிரபுக்களின் மொழிகளான சமக்கிருதம், பாரசீக மொழிகளை விரும்பாமல் சாமானிய மக்கள் பேசும் மொழியையே பெரிதும் போற்றினார். இந்துக்கள் சமக்கிருதத்தையும் இசுலாமியர் பாரசீகத்தையும் கொண்டாடினர். அந்நேரத்தில் இருந்த பக்தி இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் சாதுகரி எனும் மொழியில் பேசி அதனைப் பிரபலப்படுத்தினர். பாடல்கள் வடிவில் தம் கருத்துகளை வடித்துக் கொடுத்து மக்களிடையே பரப்பினார். அதிலுங்கூட, இசுலாமியக் கவிதை வடிவங்களான சிஹார்ஃபி, பாராமாஹ், கஃபி போன்றவற்றில் கவிதை புனைந்தார். இந்துக்களின் செய்யுள் வடிவங்களான சந்தா, அஷ்டபதி, டோஹா, சுலோகம் போன்றவற்றில் பாடல்களைப் பாடினார். இரு சமயங்களுக்கும் சிறப்பானவற்றைக் கடைப்பிடித்துச் சமமாக நடந்து கொண்டார்.

குடும்பம், மனைவி, பிள்ளைகள் என்று வாழ்ந்திருந்தாலும் தனக்குப் பின் தன் வாரிசுகளிடம் தாம் உருவாக்கிய இயக்கத்தை ஒப்படைக்கவில்லை. அவருடைய மகன் அவருக்குப் பிறகு தலைமை தாங்க வேண்டுமென்று விரும்பினார்; இவர் சம்மதிக்கவில்லை. தன்னைப் பின்பற்றும் ஆயிரக்கணக்கானோரில் லெஹ்னா எனும் பெயருடையவரை நியமித்தார். தம் கரங்களால் அவரை, ஆசீர்வாதம் செய்தாராம். அதனாலேயே அவர் குரு அங்கத் என்று அழைக்கப்படுகிறார். (அங் என்றால் கை எனப் பொருள்). இன்றைய குருமுகி எழுத்து வடிவை இவர் திருத்தம் செய்து மக்களிடையேயும் மாணவர்களிடையேயும் பரவிடச் செய்தார்.

குருஅங்கதுக்குப் பிறகு குரு அமர்தாஸ் மூன்றாவது குருவாக நியமிக்கப்பட்டார். இவரும் தொண்டர்களில் ஒருவர்தான். இதனை இவரின் மகன்கள் ஏற்கவில்லை என்றாலும் குரு அங்கத் கவலைப்படவில்லை. சீக்கியர்களின் முதல் குருவான குரு நானக், சீக்கியர்கள்அடிக்கடி கூடிப்பேச வேண்டும்; ஒவ்வொரு நாளும் காலையிலும் மாலையிலும் கூட்டங்கள் நடைபெறவேண்டும் என விதித்தார். அதற்கேற்ப மூன்றாம் குரு அமர்தாஸ் ஏற்பாடுகள் செய்து, அதனைச் சீர்படுத்துவதற்காகவும் நாடெங்கும் பரப்புவதற்காகவும் 146 பேர் கொண்ட அமைப்பை உருவாக்கினார். சிவமதத்தில், நாயன்மார், வைணவத்தில் ஆழ்வார், கிறித்துவத்தில் சீடர்கள் என்பதைப் போன்று இவர்கள். இவர்களில் 52 பேர் மகளிர். நாடு முழுக்கப் பயணம் செய்து கொள்கைகளைப் பரப்பினர்.

பேதமற்ற மனித சமுதாயத்தைப் படைக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் குரு அமர்தாஸ் ஏற்படுத்தியதுதான் உணவுச் சாலை. ஜாதி, மத வேறு பாடின்றி எல்லாரும் ஒன்றாக அமர்ந்து உண்ண வேண்டும், அப்படி உண்ட பிறகுதான் குருவைச் சந்திக்க வரவேண்டும், வரமுடியும் என்கிற ஏற்பாட்டைச் செய்தார். இந்து மதத்தவரிடையே நிலவி வந்த ஜாதிப் பாகுபாடுகளையும் அதனால் ஏற்பட்ட ஏற்றத் தாழ்வுகளையும் போக்கிச் சமன் செய்யும் ஏற்பாடாகும் இது. இந்தச் செயலுக்காக எந்நாளும் நினைக்கப்பட வேண்டியவராக அவர் திகழ்கிறார்.

ஒரு முறை இவர் லாகூரில் தங்கியிருந்த போது அங்கு வந்த முகலாயப் பேரரசர் அக்பர் இவரைச் சந்திக்க விரும்பி வந்தார். பொது உணவுச் சாலையில் உணவருந்தினால்தான் குருவைப் பார்க்க முடியும் என்பது அவரிடம் எடுத்துச் சொல்லப்பட்டது. பேரரசர் அனைவருடனும் ஒன்றாக அமர்ந்து உணவுண்ட பின்னரே குருவைப் பார்த்தார். உள்ளபடியே சமரசம் உலவியிருக்கிறது.

--------------------தொடரும்.., சு.அறிவுக்கரசு அவர்கள் ”விடுதலை” 19-2-2010 இல் எழுதிய கட்டுரை

19.2.10

மதவாதிகளே, பதில் சொல்லுங்கள்! -12




மதத்திற்காகச் சண்டையிட்டு மாளும் மனிதர்களைத் தியாகிகள் என்று வருணித்து அடிப்படை வாத, தீவிரவாத, பயங்கரவாதச் செயல்களுக்கு ஆள் பிடித்து வருகிறார்கள். ரிச்சர்டு டாகின்ஸ் கூறுவது போல, ஒன்றும் அறியாதவர்கள் இதனை நம்பி, தியாகி ஆகி, எளிதில் சொர்க்கம் போகலாம் என்று மனித குண்டுகளாக மாறுகிறார்கள். (முஜாஹிதீன், அல்கொய்தா போன்ற பயங்கரவாத அமைப்புகள் இப்படித்தான் ஆள் சேர்க்கிறார்கள். இந்து மதத்தில் யக்ஞம் (வேள்வி) நடத்துவதும் அதில் விலங்குகளைப் போட்டு பொசுக்குவதும் எதற்காக என்று கேட்டால், அவை சொர்க்கம் போகின்றன எனப் பித்தலாட்டம் பேசினார்கள். அப்போதுதான் சார்வாகர்கள் (வேத கால நாத்திகர்கள்) கேட்டார்கள் உங்கள் பெற்றோரைப் போட்டுப் பொசுக்கினால், அவர்களும் சொர்க்கம் போவார்களே! என்று. இதே கேள்வியைத் தூண்டிவிடும் மதத்தலைவர்களைப் பார்த்துக் கேட்கவேண்டும்.

இம்மாதிரியான நிலை ஆப்கானிஸ்தான் நாட்டில் நிலவுகிறது. 1983 முதல் சூடான் நாட்டில் தொடர்ந்து நடக்கிறது. இந்நாட்டின் மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கினர் முஸ்லிம் அல்லாதவர்கள், என்றாலும் இசுலாமியச் சட்டம் அமல்படுத்தப்பட்டதால் அவர்கள் கொடுமைப்படுத்தப்பட்டு 5 லட்சம் பேர்களுக்கு மேல் கொல்லப்பட்டுள்ளனர். இந்தோனேஷியாவிலும் இதே கதை. 1965 முதல் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 4 லட்சத்திற்கும் மேலே. மனிதர்களின் காதுகளை அறுத்து மாலையாகக் கழுத்தில் அணிந்து கொண்டு வரும் முசுலிம் போராளிகளைப் பற்றி கார்டியன் வார ஏடு தன் 23.9.1990 இதழில் எழுதியது.

அய்ரோப்பா ஆனாலும் ஆசியா ஆனாலும், கிறித்துவர்கள் ஆனாலும், முசுலிம்கள் ஆனாலும், பயங்கரமான கொடுமைகளைச் செய்தவர்களே! ஆனால், அதே நேரத்தில், அதே பகுதிகளில் வாழும் ஆயிரக்கணக்கான நாத்திகர்கள் அப்பழுக்கற்ற வாழ்க்கையை நடத்துவதோடு தம் சகமனிதர்களின் (எந்த நம்பிக்கை கொண்டவர்கள் ஆனாலும்) நல வாழ்வுக்காக உழைக்கும் உன்னத நிலையில் உள்ளனர் என்பதை உணர்கிறேன்.

இசுலாமில் நிறைய கடமைகள் - முடிவற்ற கடமைகள்- கடைசிவரை கடைப்பிடிக்கவேண்டிய கடமைகள்- கடவுளுக்காகச் செய்யப்படவேண்டிய கடமைகள் - அறிவுக்கெட்டாத கடவுளால் விதிக்கப்பட்ட கடமைகள்- மனிதர்களால் கடைப்பிடிக்கப்பட்டே தீரவேண்டிய கடமைகள் அப்படிச் செய்யாவிட்டால் அவற்றிற்காகப் பதில் சொல்லித் தீர வேண்டிய (அதாவது தண்டனை அனுபவிக்க வேண்டிய) கடமைகள் ஏராளமாக உள்ளன. ஏன் அந்த நிலை? இந்த மதத்தின் தொடக்க காலத்தில், இறைத் தூதராகவும் அரசியல் வாதியாகவும் செயல்பட்டு ஒரு புதிய சமுதாயத்தைக் கட்டியதோடு ஒரு அரசையும் நிறுவினர். இந்த அரசிலிருந்து மதம் பிரிக்கப்படாமல் ஒன்றாக இருந்ததுதான் இதற்குக் காரணம்.

மாத்யூ எழுதிய பைபிளில் (22.-17) சீசருக்குத் (அரசன்) தொடர்பானவற்றைக் கடவுளுக்குத் தொடர்பானவற்றை சீசருக்கும் கடவுளுக்குத் தொடர்பானவற்றைக் கடவுளுக்கும் செய்யவேண்டும் எனக்கட்டளையிடப்பட்டுள்ளது. அதாவது அரசும் மதமும் தனித்தனி. அதனால் முகமது நபியின் அரசோடு மதமும் இணைந்தே இருந்தது. அதனால் முசுலிம்களின் அன்றாட வாழ்க்கை முறை (மார்க்கம்)யான சன்னா (Sunna) என்பதே குர் ஆன் கருத்துகளின் அடிப்படையிலேயே அமைந்துள்ளது. இசுலாமியச் சட்டங்களும் குர்ஆன்படியேதான். இவற்றிற்கு விளக்கம் கூறும் பொறுப்பை ஏற்றுக் கொண்டவர்கள் ஃபகிஹ் (Faqih) எனப்பட்டார்கள்.

ஆளாளுக்கு விளக்கம் கொடுக்க முற்பட்டு, இன்றைய அளவில் நான்கு பேர்களின் விளக்கங்கள் மட்டுமே நிலை பெற்றுள்ளன. பழைமையான இசுலாமி எனப்படும் சன்னி பிரிவில் இந்த நான்குமே சமமாகக் கருதப்படுகின்றன.

(1) மாலிக் இப்ன் அப்பாஸ் எழுதியவை முவட்டா (Muwatta) எனப்படும், அவை ஆப்ரிக்க நாடுகளில் உள்ள முசுலிம்களால் கடைப்பிடிக்கப்படுகின்றன. ஆனாலும் எகிப்தின் கீழ் பகுதி, ஜான்சியார், தென் ஆப்ரிக்காவில் பின்பற்றுவோர் இல்லை.

(2) ஈராக்கில் பிறந்த அபு அனீபா என்பவரின் விளக்கங்கள் ஹனிபி எனப்படுகின்றன. இவை இந்தியா, துருக்கி ஆகிய நாடுகளில் பின்பற்றப்படுகின்றன.

(3)அல்ஷஃபி என்பாரின் விளக்கங்களின்படி இந்தோனேஷியா, எகிப்தின் கீழ் பகுதி, மலேசியா, ஏமன் நாடுகளில் உள்ள முசுலிம்கள் வாழ்கின்றனர்.

(4) அகமது இப்ன் ஹன்பால் என்பவர் பாக்தாது நகரைச் சேர்ந்தவர். அல் ஷஃபியின் சொற்பொழிவுகளைக் கேட்டவர். என்றாலும் குர்ஆன் படைக்கப்பட்டது என்பதை ஏற்க மறுத்துப் பலவித கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டவர். இவரது விளக்கங்களைத்தான் தற்கால சவூதி அரேபியாவில் பின்பற்றுகிறார்கள். அவர்கள் வஹாபி (பிரிவினர்) என்று அழைக்கப்படுகின்றனர்.

எனவே குர்ஆன்படி ஒழுகுவதாகக் கூற முடியாதவாறு, நான்கு பிரிவுகள் உள்ளன.

இன்னொரு பக்கத்தில், இறைத் தூதரான முகமதுவின் கூட்டாளிகளின் வழியைப் பின்பற்றுவதா, அல்லது அவரின் வாரிசுகளின் வழியைப் பின்பற்றுவதா என்பது ஒரு சிக்கலான கேள்வி. கி.பி. 900இல் இசுலாமியச் சட்டம் மிகவும் (கெட்டிப்படுத்தப்பட்டு) கடுமையாகக்கப்பட்டு விட்டது. அதை இனி யாராலும் மாற்ற முடியாது என்றாகி விட்டது. குர் ஆனின் வாசகங்கள் அமைக்கப்பட்ட எழுத்துகளின்படிதான் நடக்க வேண்டுமே தவிர, என்ன பொருளில் அவ்வெழுத்துகள் எழுதப்பட்டன என்றே பார்க்கக் கூடாது. அய்ரோப்பிய நாடுகளின் சட்டங்கள் (கிறித்துவ நாடுகளின் சட்டங்கள்) மனிதர்களுக்கா என்றும் மாறுதலுக்கு உட்பட்டவை என்றும் உள்ளன. ஆனால் (இசுலாமிய) ஷிரியா சட்டங்கள் தெய்வீகமானவை, மாற்ற முடியாதவை. அறிவுக்குப் புலப்படாத அல்லாவினால் மட்டுமே அவை மாற்றப்படக்கூடியவை.-(அந்தப் பூனைக்கு யார் மணி கட்டுவது?)

அப்படிப்பட்ட அவை,7 மற்றும் 9 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில், டால்முடிக் யூதம், சந்தேகத்திற்கிடமான கிறித்துவம் (பாரசீக) ஜொராஷ்ட்ரிய மதம் ஆகியவற்றுடன் இசுலாம் உருவாவதற்கு முன்பிருந்த அரேபியப் பண்புகள் முதலியவை கலந்து உருவாக்கப்பட்டுள்ளன என்றே அறிவார்ந்த ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அதில், வரலாற்றுப் பிழைகள், அறிவியல் தவறுகள், முரண்பாடுகள், இலக்கணப் பிழைகள் மலிந்துள்ளன என்கின்றனர். முரண்பாடுகள் நிறைந்து ஒன்றுக்கொன்று எதிர்மறையான கருத்துகள் மலிந்துள்ள அந்நூல் அருளாளன் எனப்படும் இறைவனுக்குப் பொருத்தமான நூலாக இல்லை என்கிறார்கள். அதை எப்படி நம்பி ஏற்பது?


---------------சு.அறிவுக்கரசு அவர்கள் 18-2-2010 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

18.2.10

மதவாதிகளே பதில் சொல்லுங்கள்! - 11




யேசு உண்மையில் வாழ்ந்தவர் அல்ல என்றும் அவரது வரலாறு பற்றி அய்யப்பாடு தெரிவித்தும் புரூனோ பாயர் (1809_1882) எம். ராபர்ட்சன் (1856_1933) ஆர்தர் ட்ரூஸ் (1865_1935) போன்ற பல ஆசிரியர்கள் எழுதியுள்ளனர். 1957, 1959, 1967 ஆகிய ஆண்டுகளில் இந்தக் கருத்தை விளக்கிய பல நூல்கள் பார்ஸ், நியூயார்க் ஆகிய ஊர்களில் வெளிவந்துள்ளன. லண்டன் பல்கலைக் கழகத்தின் பிர்க்பாக் கல்லூரிப் பேராசிரியர் ஜி.ஏ.வெல்ஸ் கிறித்து கட்டுக் கதை பற்றி எழுதியுள்ளார்.

யேசுவைப் பற்றிக் குர்ஆனில் உள்ளவை எல்லாமே மூடத்தனமானவையாகவும், அவர் நிகழ்த்திய அற்புதங்கள் பற்றியனவாகவுமே உள்ளன. இவற்றையெல்லாம் பேதைகளே நம்புவார்கள். இதில் எழுதப்பட்டிருக்கும் செய்திகள் உண்மை என்றால், யேசு உயிருடன் உலவிய சரித்திர மனிதன்தான் என்று எண்பிப்பதற்காக ஏன் கிறித்துவர்கள் குர்ஆனை ஆதாரமாகக் காட்டுவதில்லை? யேசுவின் காலத்திற்கு 600 ஆண்டுகளுக்குப் பின்னர் எழுதப்பட்டது என்பதாலா? பைபிள் கூட யேசு காலத்திற்கு 50_60 ஆண்டுகளுக்குப் பிறகு எழுதப்பட்டவைதானே!

அய்ரோப்பாவிலும் அமெரிக்காவிலும் யேசுவின் வாழ்வு கட்டுக்கதை என்கிறதும் உண்மையில் வாழ்ந்தவரல்ல என்கிறதும் ஆக கருத்துகள் கடந்த 150 ஆண்டுகளுக்கு மேலாகத் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. அதனை எழுதிய புருனோபாயர் 1842 இல் அவர் பணியாற்றிய பான் (ஜெர்மனி Bonn) பல்கலைக் கழக பதவியில் பேராசிரியர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். ஆனால் மற்றொரு பேராசிரியர் வெல்ஸ், லண்டன் பல்கலைக் கழகத்தில் 1971 வரை பணியாற்றி இன்னமும் உயிருடன் (1994) இருக்கிறார்.

1835 இல் வெளிவந்த Life of Jesus - Critically Examined (யேசுவின் வாழ்வு - பகுத்தறியும் ஆய்வு) எனும் நூலில் டேவிட் ஸ்ட்ராஸ் எழுதும்போது, பைபிளில் எழுதப்பட்டிருப்பவற்றை வரலாறாக ஏற்க முடியாது என்றும் அவை செயற்கையான மதக் கட்டுக் கதைகள் என்றே கூறிவிட்டார்.

யூத, கிரேக்க, ரோமானிய மக்கள் கருத்தின் கலவைதான் கிறித்துவம் என்றும் அது முதல் நூற்றாண்டில்தான் உருவானது என்றும் பாயர் கூறியுள்ளார். அனைத்தையும் படைக்கும் ஆற்றல் பெற்றதாகக் கிரேக்கச் சொல்லான லோகோஸ் (Logos) குறிக்கிறது; அதனையே கடவுளுக்குச் சமமாக ஆக்கி செயின்ட் ஜான் எழுதிய மறைநூலில் குறிப்பிடப்பட்டு அதன் அவதாரமாக யேசு ஆக்கப்பட்டார் என்று கூறியுள்ளார். டயனாவின் அப்பல்லோனியஸ் என்பார் யேசுவுக்கு முன் பிறந்தவர்; அவரது வாழ்வைப் போலவே யேசுவின் வாழ்க்கைச் சம்பவங்களையும் அமைத்துள்ளார்கள். நாடோடியாகத் திரிந்து தனக்கு அற்புதங்கள் செய்யும் சக்தி இருப்பதாகக் கூறித் திரிந்தவர்; நீரோ மற்றும் டாமிடியன் போன்ற ரோம மன்னர்களின் காலத்தில் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை ஏற்பட்டு அஞ்சி வாழ்ந்தவர். அவரைப் பின்பற்றியவர்கள் அவரைக் கடவுளின் மகன் என்றே கூறி இறந்தபின் உயிர்த்தெழுந்து தங்களின் கண்முன்னால் சொர்க்கத்திற்குப் போனதாகப் பேசிக் கொண்டிருந்தார்கள். (யேசுவின் கதையோடு எல்லா வகையிலும் ஒத்து வருகிறதே!)

இதே கருத்தை வ்ரெட் (Wrede) கல்தாஃப் (Kalthoff) ஆகிய ஆசிரியர்களும் தெரிவித்திருக்கின்றனர். ரோமானிய மன்னர்களின் காலத்தில் ஏறக்குறைய அறுபது சரித்திர ஆசிரியர்கள் வாழ்ந்திருக்கின்றனர். யேசுவின் கதையை உறுதிப் படுத்துகிற மாதிரி ஒருவர் கூட எழுதவில்லையே!

யேசுவைக் கொன்ற 40 முதல் 80 ஆண்டுகளுக்குப் பிறகு பைபிள்கள் எழுதப்பட்டுள்ளன. அவற்றையும் மாத்யூ, மார்க், லூக், ஜான் ஆகியோர் எழுதவில்லை; பெயர் தெரியாத எழுத்தாளர்கள் எழுதியுள்ளனர். மாத்யூ, மார்க், லூக் ஆகியோர் எழுதியவை சுருக்கமான பைபிள்கள் (Synoptic Gospels) என்று அழைக்கப்படுகின்றன. காரணம் அவற்றின் பொருளடக்கமும், வார்த்தைகள் அமைக்கப்பட்டுள்ள விதமும் ஒரே மாதிரியாக அமைந்துள்ளன. மார்க் எழுதிய பைபிள்தான் முதலில் வந்தது.

அக்காலத்தில் நிலவிய பழக்க வழக்கங்களின் தொகுப்பாக வேண்டுமானால் பைபிளைக் கருதலாமே தவிர, வரலாற்று நூலாக ஏற்கமுடியாது எனத் திட்டவட்டமாக ஹாஃப்மேன் கூறியுள்ளார்.

மார்க் முதன் முதலில் பைபிள் எழுதுவதற்கு முன்பாகவே எழுதப்பட்டவை (பவுல்) பால் எழுதிய கடிதங்கள். யேசுவின் வாழ்க்கை சம்பவங்கள் என்று பைபிளில் வருபவை ஒன்றைப் பற்றிக் கூட இந்தக் கடிதங்களில் குறிப்பு இல்லை. யேசுவின் பெற்றோர் பற்றி சிறுகுறிப்புகூட இல்லை. கன்னிமேரி குழந்தை பெற்றது பற்றியும் இல்லை. யேசு பிறந்த நாசரேத் பற்றியோ, ஜான் (யோவான்) நடத்தி வைத்த ஞானஸ்தானம் பற்றியோ ஜுடாஸ், பீட்டர் (பேதுரு) பற்றியோ கூட எதுவும் கிடையாது. இந்த விவரங்களை பேராசிரியர் ஜி.ஏ. வெல்ஸ் ஆய்ந்து வெளியிட்டுள்ளார். பலரும் கூறுவது போல மார்க் எழுதிய (முதல்) பைபிள் யேசு பிறந்த 70 ஆம் ஆண்டில் எழுதப்படவில்லை என்றும் 90ஆம் ஆண்டில்தான் எழுதப்பட்டது என்றும் நிறுவியுள்ளார்.

அப்பேர்ப்பட்ட யேசுவைப் பற்றி குர்ஆன் விசேஷமாகக் குறிப்பிடவேண்டிய தேவை என்ன? குறிப்பிட்டிருந்தாலும் கூட யேசுவைத் தேவகுமாரன் என்று குறிப்பிடவில்லை; கடவுளின் பணியாளர் என்று தான் (சூரா 19_-30, 35) குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த இரண்டு மதங்களும் தொடக்கத்தில் தொடர்பும் பிளவும் கொண்டு சமுதாயத்தில் நிலவி, அவரவர் கொள்கைகளை அவரவர் நிலப் பகுதியின் அடிப்படையில் அராபிய, பாலஸ்தீன என்று தெரிந்தெடுத்துக் கொண்டு விட்டனர். யூத, கிரேக்க, ரோமானியக் கருத்துகளின் அடிப்படையில் கிறித்துவம் என்றால் டால்முட் பிரிவு யூதம், சிரியா கிறித்துவம் ஆகியவற்றுடன் மறைபொருளாக கிரேக்க, ரோமன் கருத்துகளும் சேர்ந்த கலவையாக இசுலாம் விளங்குகிறது என்பதே அறிஞர்களின் கருத்து.

சிரியா கிறித்துவத்திலிருந்து இறுதித் தீர்ப்பு நாளை இசுலாம் எடுத்துக் கொண்டது. அதை அப்படியே படிப்படியாக சித்திரமாக வரைந்து காட்டுவது போன்று விளக்குகிறது. எக்காளம் ஊதுவது, சொர்க்கத்தில் பிரித்து நிறுத்துவது, மலைகள் பொடிப் பொடியாக உடைந்து தூளாகுதல், வானம் இருட்டாவது, கடல் நீர் சூடாகிக் கொதிப்பது, பிணம் புதைத்த இடங்கள் திறந்து அதன் வழியே மனிதர்களும், ஜிண்களும் கணக்கு பார்க்கப்பட அழைக்கப்படல், அவரவர் செய்த பாவ, புண்ணியங்கள் நியாயத் தராசில் நிறுத்தி எடை பார்த்தல், பிறகு கடவுள் சொர்க்கமோ, நரகமோ அளித்தல் என்பவை எல்லாமே அதன் பிரதி பலிப்புகள்தாம்.

இதிலும் கூட குர்ஆன் வாசகங்களில் சில சிக்கல்கள். அல்லாவின் பாதையில் போரிட்டுக் கொல்லப்பட்டவர்களை மரித்தவர்கள் என்று நிச்சயமாக எண்ணாதீர்கள். தம் ரப்பினிடத்தில் அவர்கள் உயிருடனேயே இருக்கிறார்கள்- (அவனால்) அவர்கள் உணவளிக்கப்படுகிறார்கள் (சூரா 3-_169) என எழுதப்பட்டுள்ளது. எனவே இறந்தவர்கள் எல்லாம் இறந்தவர்களல்லர்; மதச் சண்டையில் செத்தவர்கள் மரிப்பதில்லை, வாழ்கிறார்கள், மேல் உலகத்தில் அவர்கள் கடவுளின் கையால் சாப்பிடுகிறார்கள்.

---------------தொடரும்

---------------- சு. அறிவுக்கரசு அவர்கள் 17-2-2010 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

16.2.10

மதவாதிகளே பதில் சொல்லுங்கள்! -10


மதவாதிகளே, பதில் சொல்லுங்கள்!


மனிதனையும் உயிர்களையும் தாவரங்களையும் படைத்ததாகக் கடவுள் உரிமை கொண்டாடுகிறது. படைக்கப்பட்டபோது, புவியில் செடி கொடிகளே முளைக்கவில்லை; காரணம் கடவுள் மழையைப் பொழிவிக்கவில்லை, நிலத்தில் பாடுபட மனிதன் இல்லை, எனக் கூறிவிட்டு, ஓடை நீர் பாய்ந்து நிலப் பகுதி முழுதையும் நனைத்து வைத்தது எனக் கூறப்பட்டுள்ளது முதல் நூலில் (பைபிளில்). இந்த ஓடையை, அல்லது ஓடைகளை யார் படைத்தது? விடை இல்லை.

பின்னர் மனிதனை மண்ணிலிருந்து கடவுள் படைத்ததாம். படைத்த உருவத்தின் மூக்குத் துளைகளில் உயிரை ஊதியவுடன், மனிதன் உயிருள்ளதாக மாறினான் என்று படைப்பைக் கூறுகிறது ஆதி ஆகமம். அதற்குப் பிறகு, எல்லா விலங்குகளையும் நிலத்திலும் எல்லாப் பறவைகளையும் வானத்திலும் படைத்தாராம். அவற்றை மனிதனிடம் கொண்டு வந்து நிறுத்திப் பெயர் சொல்லுமாறு கடவுள் கேட்டதாம். மனிதன் என்ன என்ன சொன்னானோ அவையெல்லாம் அவற்றின் பெயர்கள் ஆகின. விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் மனிதனே பெயர் வைத்தான்.

முதல் மனிதனான ஆதாமுக்கு உதவி செய்ய யாரும் இல்லையாதலால் அவனை ஆழ்ந்த தூக்கத்தில் ஆழ்த்திய கடவுள் அவனது விலா எலும்பு ஒன்றினை முறித்து எடுத்து அந்தக் காயத்தைச் சதையால் மூடியதாம்; அந்த விலா எலும்பிலிருந்து பெண்ணைப் படைத்து மனிதனிடம் அழைத்து வந்ததாம். அப்போது மனிதன் கூறினானாம். இது என் எலும்பின் எலும்பு; சதையின் சதை,மனிதனிடம் (Man) இருந்து படைக்கப்பட்டதால் மனுஷி (Woman) என அழைக்கலாம் என்றானாம். அவர்கள் அப்போது அம்மணமாகத்தான் இருந்தனர். இதுதான் முதல் நூலில் கூறப்பட்டுள்ள மனிதப் படைப்பு.

வழி நலான குர்ஆன் கூறுவது இப்படிப் போகிறது: (ஆதி) மனிதரைக் களி மண்ணிலிருந்துள்ள சத்தினால் படைத்தோம் (சூரா 23-12) என்று தொடங்கி அந்தப் படைப்புப் பணியின் ஒவ்வொரு கட்டமாக விவரிக்கிறது. பின்னர் நாம் (மனிதனைப் படைப்பதற்காக) அவனை ஒரு பாதுகாப்பான இடத்தில் இந்திரியத் துளியாக்கி வைத்தோம்.(சூரா 23-13). பின்னர் அந்த இந்திரியத் துளியை அலக் என்ற நிலையில் ஆக்கினோம். பின்னர் அந்த அலக்கை ஒரு தசைப் பிண்டமாக்கினோம். பின்னர் அத்திசைப் பிண்டத்தை எலும்புகளாகவும் ஆக்கினோம். பின்னர் அவ்வெலும்புகளுக்கு மாமிசத்தை அணிவித்தோம். பின்னர் நாம் அதனை வேறு ஒரு படைப்பாக (மனிதனாக)ச் செய்தோம். (இவ்வாறு படைத்தவனான) அல்லா பெரும் பாக்கியமுடையவன் (படைப்பாளர்களில் எல்லாம்) மிக அழகான படைப்பாளன் என்று சூரா 23-14 கூறுகிறது.

இது அல்லாவே கூறியது என்கிறார்கள். அல்லா தனக்குத் தானே பாக்கியம் உடையவன் என்றும் அழகானவன் என்றும் கூறித் தன் முதுகைத் தானே தட்டிக் கொள்கிறது. இதைத்தான் சிக்மண்ட் ஃபிராய்டு நார்சிசம் என்று வகைப்படுத்தியுள்ளார்.

அடுத்தது ஒன்று, படைப்பாளர்களில் எல்லாம் மிக அழகான... என்றால் எத்தனை படைப்பாளர்கள்? பிரம்மா, கர்த்தர் என்று பிற மதப் படைப்பாளர்களைக் கணக்கில் எடுத்துத் தனக்குத்தானே வழங்கப்பட்ட சான்றிதழா?

இது இப்படியிருக்க சூரா 77-20 முதல் 23 வரை என்ன கூறுகிறது? அற்ப நீர்த் துளியிலிருந்து உங்களை நாம் படைக்கவில்லையா? பின்னர் அதனைப் பத்திரமான இடத்தில் (கர்ப்பத்தில்) உறுதியாக ஆக்கி வைத்தோம். ஒரு குறிப்பிட்ட (கால) அளவு வரை எனக் கூறுகிறது.

சூரா 21-30 இல்... உயிருள்ள ஒவ்வொன்றையும் நாம் தண்ணீரிலிருந்து படைத்தோம்... என்றும், சூரா 25-54 இல்... அவன்தான் மனிதனை நீரிலிருந்து படைத்து, பின்னர் அவனுக்கு வம்சத்தையும் சம்பந்தங்களையும் ஏற்டுத்துகிறான் என்றும், சூரா 24-45 இல்... எல்லா உயிர்ப் பிராணிகளையும் அல்லா நீரிலிருந்து படைத்துள்ளான் எனக் கூறப்பட்டுள்ளது.

படைத்தது என்பதையே ஏற்றுக் கொள்ள அறிவும் அறிவியலும் இடம் கொடுக்காதபோது, எதைக் கொண்டு படைத்தது என்றால் என்ன? அது ஒரு பிரச்சினையே அல்ல, கற்றவர்களுக்கு!

450 கோடி ஆண்டுகளுக்கு முன்பு புவி உருவானது என்றால் அதில் உயிர்கள் உருவான காலம் 100 கோடி ஆண்டுகளுக்குப் பிறகுதான் என்கிறது அறிவியல். The Origin of Life எனும் தலைப்பில் 1938 இல் ரஷிய உயிர் வேதியியல் அறிஞர் ஓபரின் என்பார் எழுதிய நூலில் உயிர்கள் உருவான விதம் பற்றி விவரித்துள்ளார். தொடக்கக் காலத்தில் புவியில் வேதிப் பொருள்கள் நிறைந்திருந்தன. தொடர்ந்து நடைபெற்ற பெட்ரோ கெமிகல் நடவடிக்கைகளின் விளைவாக அமினோ அமிலங்கள் உருவாகின. இவற்றின் மூலம் புரொட்டீன் மூலக் கூறுகள் உற்பத்தியாகிடும் வாய்ப்பு உருவானது. இலட்சக் கணக்கான ஆண்டுக்காலம் செல்லச் செல்ல, வேதியியல் தேர்வுக் கேற்ப இவை சிக்கலும் உறுதியும் நிறைந்தனவாகி, உயிர்களின் தோற்றத்திற்கான முன்னோடிகளாகின. அவரைத் தொடர்ந்து மில்லை ஃபாக்ஸ், பொன்னம்பெருமா போன்ற அறிவியலாளர்கள் பலரும் ஆய்வுக் கூடத்தில் அமினோ அமிலம் அடங்கிய ஆர்கனிக் கலவையைத் தயாரித்து வெற்றி கண்டு இதனை உறுதிப்படுத்தி உள்ளனர்.

இதே அடிப்படையில், சார்லஸ் டார்வின் 1859 இல் தம் கண்டுபிடிப்பை வெளியிட்டார். உயிர்கள்அனைத்தும் தனித்தனியே படைக்கப்பட்டன அல்ல. அவை உருமலர்ச்சி பெற்றவை (தோன்றின) எனத் தெளிவாக்கினார்.

டார்வினின் பரிணாமக் கொள்கையை ஆய்வு செய்து, ஏற்றுக் கொண்டு, அறிவியல் தொடர்பான விவாதங்களில் கலந்து கொண்டு பரிணாம வாதத்தை நிலை நிறுத்திய அறிவியலாளர், ட்டி.எச். ஹக்ஸ்லி (T.H.Huxley) கீழ்நிலை விலங்குகளுடன் மனிதனுக்குள்ள தொடர்பு (Man’s relations to Lower animals) எனும் நூலை எழுதியுள்ளார். நாய்களின் கருமுட்டையைக் கணக்கில் எடுக்கத் தொடங்கி, பல உயிர்களுடன் மனித உயிருக்கு இருக்கக்கூடிய தொடர்பு பற்றி ஆய்ந்து, பிறகு முடிவாகத் தம் கருத்தை இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மனிதனின் ஆதித் தோற்றமும் படிப்படியாக நடைபெற்ற அவனுடைய வளர்ச்சியும் நிச்சயமாக மனிதனுக்கும் கீழான நிலையிலுள்ள விலங்குகளைப் போலவே உள்ளன; மனிதன் கிட்டத் தட்ட வாலில்லாக் குரங்கை (Apes) ஒத்திருக்கிறான். முதுகெலும்புள்ள பிராணிகளின் (பல்லி, பாம்பு, தவளை, மீன் போன்றவை) சினை முட்டையைப் போலவே, மனிதக் கருமுட்டையும் (Ovum) இருக்கிறது. ஆனால் நாயிலிருந்து மனிதன் மாறுபட்டு இருக்கிறான். வாலில்லாக் குரங்கை ஒத்திருக்கிறான். மனிதர்களைப் போலவே வாலில்லாக் குரங்குகளின் கருமுட்டை மஞ்சள் குழம்புப் பகுதி உருண்டை வடிவிலேயே அமைந்துள்ளது; மேலும் இரண்டின் தொப்புள் கொடிகளும் ஒரே மாதிரியானவை. எனவே மனிதனும் வாலில்லாக் குரங்கும் ஒத்ததாக அமைந்துள்ளன என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை.

எனவே, மனிதனும் பரிணாம வளர்ச்சியின் ஓர் அங்கம்தான். குரங்குகள், லெமூர்கள், மரத்தில் வாழும் ஷ்ரூ (Shrew) க்கள் வாலில்லாக் குரங்குகள் ஆகியவை மனிதனுடன் நெருக்கமான தொடர்பு உடையவை. இதனை அறிவியலின் அனைத்து அங்கங்களான Geopaleontlology, Biogeography, Biochemistry, Serology, Immunology, Genetics, Embryology, Parasitology, Morphology, Psychology, Ethology போன்ற அனைத்தும் ஆதரித்து சாட்சி அளிக்கின்றன.

எதுவுமே இல்லாமல், கடவுள் தூதனுக்குச் சொன்னது, தூதன் எனக்குச் சொன்னான், நான் உங்களுக்குச் சொன்னேன், இதை நம்புங்கள், நம்பாவிட்டால் நடப்பதே வேறு என்று அச்சுறுத்துகின்ற மத நூல்களாகவே உள்ளன.

மனிதன் பிறப்பில் இத்தனை என்றால் கடவுளுக்கு ஒரு மகன் பிறந்த கதையிலும் ஏகப்பட்ட முரண்கள். அது ஏற்கெனவே விளக்கப்பட்டுள்ளது. இது போன்ற கதைகள் அந்தக் காலத்தில் நிறைய உலவி வந்தன. பெர்சியுஸ் எனும் கன்னியைத் தங்கத்தால் அபிஷேகம் செய்தபோது அவள் கருவுற்றாள் எனும் கதை இருந்தது. அட்டிஸ் என்பானின் தாய் நாநா, மாதுளம்பழம் சாப்பிட்டதால் கருவுற்றாள் என்ற கதையும் வழங்கியது. (பாயசம் சாப்பிட்டதால் கருவுற்ற ராமன் கதை இந்து மதத்தில் பிரசித்தம் பெற்றது.) இப்படிப் பிறந்ததாகக் கூறப்படுபவர்கள் பலர் பெரிய மனிதர்களாகவே இருந்தனர். கணிதமேதை பிதாகரஸ், பிளேட்டோ, அகஸ்டஸ் (ரோமப் பேரரசன்) போன்ற சிலர் இப்படிப் பிறந்தவர்கள் (இவர்களைக் குறிக்கும் வகையில் கிரேக்க மொழியில் Parthenogenesis என்கிற சொல்லே உருவாகியுள்ளது என்றால் உடலுறவு இல்லாமல் குழந்தை பெற்றுக் கொள்வது சகஜமாக இருந்திருக்கிறது. அந்த வகையில் யேசுவின் பிறப்பையும் சேர்க்க வேண்டுமே தவிர, அற்புதம் என்று எதுவும் கிடையாது. யேசுவுக்குத் தெய்வீகத் தன்மையைக் கொடுக்க வேண்டும் என்ற ஆசையில் இதைச் செய்திருக்கிறார்கள் என்றுதான் கொள்ள வேண்டும். இப்படிச் சொன்னால் மக்கள் எளிதாக நம்பிவிடுவார்கள் என்கிற எண்ணமும் காரணம்.

யேசு பிறப்பதற்கு 132 ஆண்டுகளுக்கு முன்பே மொழி பெயர்க்கப்பட்ட கிரேக்க நாட்டின் பழைய ஏற்பாடு நூலில் கன்னி கருவுறும் செய்தி குறிக்கப்பட்டுள்ளது. அதை அப்படியே எடுத்து இவர்களின் பைபிளில் செருகிக் கொண்டு விட்டனர். ஹீப்ரு மொழியில் கன்னி என்பதற்கு Bethulah என்ற சொல், இந்தச் சொல் அவர்களின் பைபிளில் இல்லை; மாறாக இளம் பெண் எனப் பொருள்படும் Haalmah என்ற சொல்தான் ஆளப்பட்டு உள்ளது. மதவாதிகள் மிகவும் முயற்சி செய்து இளம் பெண் என்றாலே,கன்னிப் பெண் என்றுதான் பொருள் என வாதாடிப் பார்த்தனர். முடியவில்லை. கிறித்துவர்களை எதிர்க்கும் நிலையில் யூதர்கள் இதைச் சுட்டிக்காட்டி கிறித்துவர்கள் செய்த அபத்தத்தைப் பற்றிப் பேசினர்.

உடனே, கிறித்துவர்கள் கதையைக் கொஞ்சம் திருத்தி, பரிசுத்த ஆவிக்குப் பிறந்தார் யேசு என்று ஆக்கிக் கொண்டனர்.

யேசு கடவுளின் மகன் எனும் கதையை யூதர்கள் ஏற்பதில்லை. அவர்களுடைய மறை நூலான பழைய ஏற்பாட்டில் ஒரு காப்பாற்றுபவர்(Messiah) வருவார் என எழுதி வைத்துக் கொண்டிருக்கிறார்கள். எனவே பிறந்து வந்தது கடவுளின் மகன் அல்ல, கடவுளின் பணியாளர் (Ebel Yahweh) தான் என்கிறார்கள்.

அத்தோடு மட்டுமல்ல, கிறித்துவர்களின் மறை நூலான பைபிளை (அய்ந்துபேர் எழுதியிருப்பதில்) பால், ஜான், மார்க் ஆகிய மூவரும் கன்னிமேரிக்கு யேசு பிறந்தார் என்ற கதையை நம்பவில்லை. மற்ற இருவரான மாத்யூவும், லூக்கும் மட்டுமே நம்பி எழுதி உள்ளனர்.

இப்படிக் குழப்பமான பிறப்புக்கு ஆளான யேசு, தொட்டில் குழந்தையாக இருந்த போதே பேசியதாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. (சூரா 19-30 முதல் 33). நிச்சயமாக நான் அல்லாவுடைய அடியேனாக இருக்கிறேன். அவன் எனக்கு வேதத்தைக் கொடுத்திருக்கிறான். இன்னும் என்னை நபியாக ஆக்கியிருக்கிறான். இன்னும் நான் எங்கிருந்தாலும் அவன் என்னை முபாரக் ஆனவனாக (நற்பாக்கியம் உடையவனாக) ஆக்கியிருக்கின்றான். மேலும், நான் உயிருடன் இருக்கும் காலமெல்லாம் தொழுகையையும் ஜகாத்தையும் (நிறைவேற்ற) எனக்கு வஸிய்யத் செய்து (கட்டளையிட்டு) இருக்கிறான். என் தாயாருக்கு நன்றி செய்பவனாக (என்னை ஏவியிருக்கிறான்). நற்பேறு கெட்ட பெருமைக்காரனாக என்னை அவன் ஆக்கவில்லை. இன்னும் நான் பிறந்த நாளிலும், நான் இறக்கும் நாளிலும் (மறுமையில்) நான் உயிர் பெற்று எழும் நாளிலும் என்மீது சாந்தி நிலைத்திருக்கும் என்று (அக்குழந்தை) கூறியது என இருக்கிறது.

மூன்று வயதிலேயே பதிகம் பாடியது என்று ஞானசம்பந்தனைப் பற்றி எழுதி வைத்திருக்கும் இந்து மதக் கதையைத் தோற்கடிக்கும் கிறித்துவ மதக் கதை.

ஆனால், அப்படி ஒரு யேசு உண்மையில் இருந்தாரா?

-------------------- தொடரும்.....


------------------- சு. அறிவுக்கரசு அவர்கள் 14-2-2010 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை