Search This Blog

Showing posts with label பெரியார்-மயிலாடன்-மூடநம்பிக்கை- பார்ப்பனியம். Show all posts
Showing posts with label பெரியார்-மயிலாடன்-மூடநம்பிக்கை- பார்ப்பனியம். Show all posts

16.3.23

தோள் சீலைப் போராட்டம்

 

தோள் சீலைப் போராட்ட நாயகர் சமூகப் போராளியான வைகுண்டர் - அய்யா வழி

சமூக நீதி மறுக்கப்பட்டு, அதிகார மனிதர்கள் ஜாதி, மதத்தின், அரசியலின் பெயரால் பிற மக்கள் மேல் வன்கொடுமை நிகழ்த்தும்போது, அவைகளை எதிர்த்துப் போராடிப் புதுச் சமூக விழுமியங்களையும், அறங்களையும் வென்றெடுக்கும் போராளிகளைச் சமூகமே உருவாக்குகிறது. பதினெட்டு மற்றும் பத்தொன்பதாம் நூற்றாண்டுக் காலத்தில் கேரளத்திலும் கேரளத்தின் ஆட்சிக்குட்பட்டிருந்த இன்றைய தமிழ்நாட்டின் குமரி மாவட்டப் பகுதியிலும் மக்களுக்கான மாபெரும் போராளிகள் உருவானார்கள். அவர்கள் அய்யன்காளி, நாராயண குரு மற்றும் வைகுண்ட சாமி என்னும் முத்துக்குட்டி சாமிகள். இவர்களில் காலத்தால் மூத்த, மிகப் பெரிய விழுப்புண்கள் பெற்ற சமூகப் போராளியான வைகுண்டரை அறிந்துகொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.

1050 ஜாதிகள்

அக்காலங்களில் கேரளம், 1050 ஜாதிகள் கொண்டதாக, பார்ப்பனர்களிடையே உயர்ந்தவர்களாகக் கருதப்பட்ட நம்பூதிரிகளின் ஜாதிய ஆட்சிக் கூடாரமாக இருந்தது. நம்பூதிரிகளும், நாயர்களும், வெள்ளாளர்களும் கூட்டுச் சேர்ந்து மிகக் குரூரமான முறையில் மனுதர்ம நடைமுறைகளை அமல்படுத்தி, யாரும் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு ஜாதி வன்கொடுமைகளை நிகழ்த்திக் கொண்டிருந்தார்கள். அன்றைய கேரளத்தைப் ‘பைத்தியக்காரர்களின் கூடாரம்’ என்றார் விவேகானந்தர்.

எந்த ஜாதியாக இருந்தாலும் மீன் மாமிசம் சாப்பிடுபவர்கள் தாழ்ந்த ஜாதி. மாட்டுக் கறி சாப்பிடுபவர்கள் மிகவும் தாழ்ந்த ஜாதி. நாடார்களும் ஈழவர்களும்  தாழ்ந்த ஜாதி. புலையர்கள் தாழ்ந்த ஜாதி யிலும் தாழ்ந்த ஜாதி. அவர்கள் அடிமைகளாவே நடத்தப்பட்டார்கள். பெண்கள் மாதவிலக்குக் காரணமாகத் தாழ்ந்தார்கள்.

நம்பூதிரிகளை நாயர்கள் நெருங்கலாம். தொடக்கூடாது. நம்பூதிரிகளிடம் இருந்து நாடார், ஈழவர் போன்றோர் முப்பத்தாறு அடி தள்ளியும், புலையர் போன்றோர் தொண்ணூறு அடி தள்ளியும் நிற்க வேண் டும். நாயரிடம் இருந்து நாடார், ஈழவர்கள் பன்னிரண்டு அடி தள்ளியும், புலையர் போன்றோர் அறுபத்து நான்கு அடி தள்ளியும் நிற்கவேண்டும். இப்படியே 1050 ஜாதிகளுக்கும் தூரக் கணக்குகள் இருந்தன. தீட்டுத் தூரத்தை மீறுபவர்கள், நாயர்களால் கடுமையாகத் தண்டிக்கப்பட்டார்கள்.

கேரள அரசர்கள் மக்களிடம் வசூலித்த வரியைப்போல, உலகின் வேறு எந்த நாட்டிலும் வசூலிக்கப்பட்டதா என்பதை ஆராய வேண்டும். குறிப்பாக நாடார்களும் ஈழவர்களும் இந்த வரிவிதிப்பால் மிகவும் துன்பத்துக்கு ஆளானார்கள்.

வரிக்குமேல் வரி

சுமார், நூற்றுக்கும் மேற்பட்ட வரிகளை அவர்கள் செலுத்த வேண்டியிருந்தது. உயிரோடு இருக்கும் 16 முதல் 60 வயதுக்குட்பட்ட ஆண்கள் தலைவரி செலுத்த வேண்டும். செத்தவர்களுக்கும் வரி. சொத்து மதிப்பில் 40 சதவிகிம் வரி. நாடார்கள் தங்கள் வீட்டுக்கும், வீட்டுக்கு ஓலை போட்டாலும் வரி. புல் அறுக்கிறவர்களும், சுமை தூக்குபவர்களும் வரி செலுத்த வேண்டி இருந்தது. பனை ஏறுகிறவன், அவன் ஏறும் ஏணிக்கு வரி; பனை ஏறும்போது அவன் காலில் இட்டுக் கொள்ளும் தளை நாருக்கும் வரி; நிலத்தைத் தரிசாகப் போட்டாலும் வரி. பெண்களுக்கு முலை வளர்ந்தால் முலை வரி, தாலிக்குத் தாலி வரி. சிலவகை ஆடைகள் அணிகள் அணிய, குடைபிடிக்க, பல்லக்கில் போக வரி. மீசை வளர்த்தால் கூட வரி  உண்டு. கல்யாணத்துக்கும் வரி. கருமாதிக் கும் வரி.

எல்லாவற்றுக்கும் மேலான கொடுமை, நாடார் மற்றும் ஈழவர் பெண்கள் தங்கள் மார்பை மறைக்க அனுமதிக்கப்பட வில்லை. அது ஒரு மரியாதைச் சின்னமாகக் கருதப்பட்டது. நம்பூதிரி பெண்கள் இறைவனுக்கு முன்னால், மார்பைத் திறந்து போட்டார்கள். நாயர் பெண்கள், தமக்கு மேலே உள்ளோர், நம்பூதிரிகள், அரசு அதிகார மய்யத்தினர்கள் முன் மார்பைத் திறந்து போட வேண்டும். நாடார், ஈழவர் முதலான தாழ்த்தப்பட்ட நிலையிலிருந்த பெண்கள் எப்போதுமே எவர் முன்பும் மார்பை மூட முடியாமல் இருந்தது. அவர்கள் இடுப்புக்குக் கீழே, முட்டிக்கு மேலே மட்டும் ஏதேனும் சாக்கு மாதிரியான ஆடை (முண்டு) அணிந்து கொள்ளலாம். குடத்தை இடுப்பில் சுமக்கக் கூடாது. தலையில்தான் சுமக்க வேண்டும். மொத்தத்தில் நாய், மாடுகள், பன்றிகளுக்குச் சுதந்திரம் இருந்த அளவுக்குக்கூட தாழ்ந்த நிலையில் வைக்கப்பட்ட மக்களுக்கு இல்லை.

இவ்வளவு தாழக் கிடப்பாரைக் கை தூக்கி விடக் காலம் இருபெரும் சக்திகளை உருவாக்கித் தந்தது. ஒன்று சீர்த்திருத்தக் கிறிஸ்தவம். மற்றது, வைகுண்ட சாமியின் தோற்றமும் தொண்டும்.

1810-க்குப் பிறகு திருவிதாங்கூர் (கேரளா) அரசு, கிழக்கிந்திய கம்பெனியின் கட்டுப் பாட்டுக்குள் வந்தது. அது ஆங்கில, அய்ரோப்பிய கிறிஸ்தவச் சமயப் பாதிரியார்களின் வருகைக்கு நல்ல வழியாக அமைந்தது. குறிப்பாக இந்தப் பகுதியின் கல்வி வளர்ச்சிக்கு சீர்திருத்தக் கிறிஸ்தவம் ஆற்றிய பங்கு மகத்தானதாகும். முறையான, ஜாதி அடிப்படையில் அல்லாத நீதிமன்றங்களையும், தாழ்த்தப்பட்டவர்க்கும் பெண்களுக்கும் இடம் கொடுத்த கல்விக் கூடங்களையும் இந்தக் கிறிஸ்தவர்களே முதல் முறையாக இந்தப் பகுதியில் அமைத்தார்கள்.

 வைகுண்டரின் தோற்றம்

இந்தச் சூழலில்தான் வைகுண்டர் தோன்றுகிறார்.

வைகுண்ட சாமி, கன்னியாகுமரி மாவட்டத்தில் குமரிக்கு அருகே உள்ள சாஸ்தான் கோவில்விளை (அதன் இன்றைய பெயர் சாமித்தோப்பு) என்ற ஊரில் 1809-ஆம் ஆண்டு ஏப்ரல் 19-ஆம் தேதி, பொன்னு நாடார் - வெயிலம்மை தம்பதிக்கு இரண்டாவது குழந்தையாகப் பிறந்தார். இந்த ஆண்டில் மயிலாடியில் சீர்த்திருத்த கிறிஸ்தவ சமயம் வேர்விட்டது. வைகுண்ட சாமிக்குப் பெற்றோர் சூட்டிய பெயர் முடிசூடும் பெருமாள் என்பது. அக்காலத்தில் இப்படியான இரட்டைப் பெயர்கள் வைக்க நாடார்கள் அனுமதிக்கப்படவில்லை. ஆகவே பள்ளிக்கூடத்தில் அவருக்கு முத்துக்குட்டி என்று வைக்கப்பட்டது. வைகுண்ட சாமி, தன் வாழ்க்கை முறையினூடகவே, சமூக வாழ்க்கையையும் கூர்ந்து நோக்கிக் கற்றுக் கொண்டு வந்தார். தென் திருவிதாங்கூரின் இந்த நாகர்கோவில் குமரிப் பகுதி ஏடுகள் நிறைந்த மாவட்டம். மாலையானால் மக்கள் ஏடு படிக்கும் பழக்கம் உள்ளவர்கள். வைகுண்டர் ஏடும் எழுத்தும் கற்றார். தாமரைக் குளம் கிறிஸ்தவப் பள்ளியிலும் அவர் கற்றிருக்கிறார். கிறிஸ்தவ விவிலியத் தில் (பைபிள்) அவருக்கு நிறைந்த ஞானம் இருந்தது. இளமையிலேயே சீர்திருத்த மனோபாவம் அவரிடம் இருந்தது.    

அந்தக் காலத்தில் பொதுக் கிணற்றில் எல்லா ஜாதியாரும் நீர் அருந்த முடியாது. வைகுண்டர் ஒரு சமூகப்புரட்சி செய்தார். அவரே ஒரு கிணறு வெட்டி பள்ளு பறை என்று சொல்லப்பட்ட அனைத்து ஜாதியாரையும் அந்த முந்திரிக் கிணற்றில் குளிக்கவும் குடிக்கவும் செய்தார். இதன் மூலம் ஜாதி ஒடுக்கு முறைக்கு ஆக்கபூர்வமான ஒரு புதிய மறுப்பைத் தந்தார்.

கல்விப் பணியிலும் தீவிரமான கவனம் செலுத்தினார் வைகுண்டர். தன் சீடர்களைக் கொண்டு பல நிழல் தாங்கல்களை ஏற்படுத்தினார். நிழல்தாங்கல்கள் பகலில் பள்ளிக்கூடங்களாகவும், இரவில் சமூகக் கூடங்களாகவும், இராப் பள்ளிக் கூடங்களாகவும் செயல்பட்டன. வழிப்பாட்டு மன்றமாகவும் அவை செயல்பட்டன. வைகுண்டர், ஹிந்து மதத்தில் இல்லாத கூட்டு வழிபாட்டு முறையை ஜாதி பேதமின்றி உருவாக்கிக் தந்தார். அன்புவழி, சமயம் முதல்முதலாகக் கூட்டு வழிபாட்டு முறையை எல்லாத் தாழ்த்தப்பட்ட வகுப்பார்க்கும் உரிய முறையை ஏற்படுத்தியது.

தலைப்பாகை

அக்காலத்தில் அடிமைச் சின்னமாக, நாடார்கள் உள்ளிட்டு தாழ்த்தப்பட்ட ஜாதியார் எவரும், தலைப்பாகை அணியக் கூடாது. வைகுண்டர், ‘நீ யாருக்கும் அடிமை இல்லை. தலைப்பாகையைக் கட்டு’ என்றார். தலைப்பாகை கட்டிக் கொண்டே கோயிலுக்குள் பிரவேசம் செய்ய வேண்டும் என்றார். இன்னும், வைகுண்டர் உருவாக்கிய பதிகளில் (கோயில்களில்) அந்த நிலைமையே நீடிக்கிறது. தலைப் பாகையோடுதான் உள்ளே நுழைய வேண்டும்.

பெருந்தெய்வக் கோயில்களில் தாழ்த்தப்பட்டோர்க்கு நுழைவுரிமை இல்லை, அக்காலங்களில். இன்றும்கூட பல கோயில்களில் அப்படித்தான். ஆகவே, வைகுண்டர் தாமே பல பதிகளைக் கட்டினார். அவர் வாழ்நாளில் ஏழு பதிகளையும், ஏழு நிழல் பதிகளையும் கட்டி இருக்கிறார்.

வைகுண்டர் உருவாக்கிய கோயில்களில் சிலைகள் இல்லை. மாறாகக் கருவறையில், கண்ணாடியும், கண்ணாடி முன் ஒரு விளக்குச் சுடரையும் வைத்தார். கண்ணாடியினுள் தெரியும் நீயே கடவுள். உனக்குள் சுடரும் ஒளியே கடவுள். உருவ வழிபாட்டுக்கு மாற்றான ஒளி வழிபாட்டை மக்களுக்கு அறிமுகப்படுத்திய முதல் ஞானி வைகுண்டர் என்றால் தவறு இல்லை. ஒளி ஜாதி மதம் இனம் கடந்த இயற்கை. சூரியன் போல எல்லோருக்கும் மேலே இருந்து எல்லோருக்கும் சமமாக ஒளியைத் தருவது. சமத்துவமே இயற்கை அல்லது கடவுள்.

கோயிலுக்குள் ஆரவாரத்தை மறுத்தார் வைகுண்டர். ‘காணிக்கை போடாதீங்கோ, காவடிகள் தூக்காதீங்கோ' என்றார் அவர்.

வைகுண்டரின் புகழும் தத்துவங்களும் திருவிதாங்கூர் அரசனை அச்சம் கொள்ள வைத்தன. அவன், அவரைச் சிறைபிடிக்க நினைத்தான்...

மேலாடைக்குத் தடை

கேரள மாநிலத்தின் பெரும் பகுதியும் தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களான கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளும் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கீழ் மன்னராட்சியின் கட்டுப்பாட்டில் இருந்தன. அப்போது மனுதர்ம அடிப்படையில் ஆட்சி நடந்து வந்த ஹிந்து நாடாக இருந்தது. அந்தக் கால கட்டத்தில் ஜாதீயக் கொடுமைகளால் மக்கள் அதிக அடக்குமுறைக்கு ஆளாகினர். இந்த திருவிதாங்கூர் சமஸ்தானத்தால் தாழ்த்தப்பட்டவர்கள் என்று ஒதுக்கி வைக்கப்பட்ட சாணார்(நாடார்), பரவர், ஈழவர், முக்குவர், புலையர் உள்ளிட்ட 18 ஜாதியைச் சேர்ந்த பெண்கள் மேலாடை அணிவதற்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. இவர்கள் மார்பகத்தை திறந்து போடுவதுதான் உயர் ஜாதியினருக்குத் தரும் மரியாதை என்று தரம் தாழ்ந்த எண்ணத்தில் திருவிதாங்கூர் சமஸ்தானம் ஒரு நடைமுறையை வகுத்திருந்தது. இதன்படி 18 ஜாதிகளைச் சேர்ந்த பெண்கள் மேலாடை அணியாமல் அவமானத்துடன் வாழ்ந்து வந்தனர். இந்த அடக்குமுறையை எதிர்த்து சீர்திருத்த கிறித்தவத்தை ஏற்றுக்கொண்ட நாடார் ஜாதியைச் சேர்ந்த மக்கள் தங்கள் ஜாதிப் பெண்களுக்கு மார்பை மறைத்து சேலை அணிய உரிமை கோரிப் போராடத் தொடங்கினர். இது தோள் சீலைப் போராட்டம் எனப்பட்டது. 37 ஆண்டு போராட்டத்துக்குப் பிறகு திருவிதாங்கூர் அரசு நாடார் கிறிஸ்தவப் பெண்களுக்கு தோள் சீலை அணியவும், மார்பகங்களை மறைக்கவும் உரிமை அளித்தது.

போராட்டத்திற்கான காரணம்

ஏழாம், எட்டாம் நூற்றாண்டுகளில் ஜென்மி சம்பிரதாயமும், 10 மற்றும் 11 ம் நூற்றான்டுகளில் ஆரியப் பிராமணர்களினதும் (நம்பூதிரிகள்) ஆதிக்கம் சேர நாட்டில் ஓங்கத் தொடங்கிய வேளையில் ஜாதிக் கட்டுப்பாடுகள் உருவெடுத்தன. 12ஆம் நூற்றாண்டில் இந்தக் கட்டுப்பாடுகள் ஜென்மி சம்பிரதாயத்தின் உத்வேகத்தால் அதிகரித்து, மேல்ஜாதி ஹிந்து என்றும், கீழ்ஜாதி ஹிந்து என்றும் பாகுபாடுகள் உருவாகி காணாமை, நடவாமை, தொடாமை போன்ற சமுதாய முறைகள் உருவாகிற்று. இந்த தீமைகளில் ஒரு பிரிவு தான் தாழ்த்தப்பட்ட மக்கள் இடுப்புக்கு மேலும், முட்டுக்கு கீழும் ஆடை அணியக்கூடாது என்றக் கட்டுப்பாடு. உயர்ந்த ஜாதி ஹிந்துக்களின் முன்பு தாழ்த்தப்பட்ட பெண்கள் மறைக்கப்படாத மார்பகங்களுடன்தான் மரியாதை செலுத்த வேண்டும். சான்றாக நம்பூதிரிகளின் முன்பு சூத்திர நாயர் பெண்கள் மார்பகங்களை மறைக்க கூடாது, அதேப் போன்று ஜாதி வரிசையின் அடிப்படையில் கீழ் ஜாதி ஹிந்து பெண்கள் அனைவரும் மார்பகங்களை மறைக்காமல் நடமாட வேண்டும் என்பது மரபாகிவிட்டது. இவ் உடைக் கட்டுப்பாட்டை மீறினால் மரணத் தண்டனை விதிக்கப்பட்டது.

உடை கட்டுப்பாடு

திருவிதாங்கூர் சமஸ்தானத்தால் தாழ்த்தப்பட்டவர்கள் என்று ஒதுக்கி வைக்கப்பட்ட மக்கள் தங்கள் இடுப்பிற்கு மேல் உடை அணிய மறுக்கப்பட்டனர். கலாச்சாரம் என்ற போர்வையில் பெண்களுக்கும் இது திணிக்கப்பட்டது. உயர் ஜாதி பெண்கள் தங்கள் மார்பை மறைக்க அனுமதி அளிக்கப்பட்டது என்றாலும் நம்பூதிரிப் பிராமணர்கள் முன்பு அனைத்து ஜாதிப் பெண்களும் திறந்த மார்புடனே நிற்க வேண்டும் என்ற ஈனக் கட்டுப்பாடு இருந்தது. இந்த உடை கட்டுப்பாடுகள் மிகக் கடுமையாக கடைப்பிடிக்கப்பட்டன. உடை அணியும் விதத்தை வைத்தே மக்களை உயர்ந்தவர்களாகவும் தாழ்ந்தவர்களாகவும் அடையாளப்படுத்தப்பட்டார்கள். கொத்தனாவிளை என்ற ஊரில் 1822ஆம் ஆண்டு ஒரு சிறிய போராட்டம் நடைப்பெற்றது. அதன் பிறகு 37 வருட காலம் இப்போராட் டம் மூன்று கட்டங்களாக நடைபெற்றது. முதல் கட்டப் போராட்டம் 1822 முதல் 1823 வரையும், இரண்டாம் கட்டப் போராட்டம் 1827 முதல் 1829 வரையும், மூன்றாம் கட்டப் போராட்டம் 1858 முதல் 1859 வரையும் நடைப்பெற்றது.

முதல் போராட்டம்

சீர்திருத்தக் கிறிஸ்தவ சமயத் தொண்டரான மீட் பாதிரியார் கிறிஸ்தவ பெண்கள் மார்பகங்களை மறைக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். இதனால் கிறிஸ்தவ பெண்கள் தங்கள் மார்பகங்களை துணிந்து மறைத்ததுமல்லாமல், அதற்கு மேல் ஒரு மேலாடையையும் பயன்படுத்தினர். இதனால் மேல் ஜாதியினர் கலவரம் செய்தனர். மே மாதம் 1822ஆம் ஆண்டு கல்குளம் மற்றும் இரணியல் பகுதிகளில் கலவரம் வெடித்தது. இதன் காரணமாக மீட் அய்யர் என்ற அய்ரோப்பிய மறைப்பணியாளர் ஆங்கிலேய தளபதி கார்னல் நேவால் என்பவருக்கு இந்நிகழ்வுகளைப் பற்றி விரிவாக கடிதம் எழுதினார். இதன் பயனாக ஆங்கிலேய தளபதி கார்னல் நேவால் பத்மநாபபுரம் நீதிமன்ற விசாரனைக்கு உத்தரவிடுகிறார். இதன் பயனாக 1823ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட நீதிமன்ற உத்தரவுப் படி சீர்திருத்தக் கிறிஸ்தவர்களுக்கு மட்டும் குப்பாயம் என்ற உடையை அணியலாம் என்று தீர்ப்பளிக்கப்படுகிறது.

இரண்டாம் கட்டப் போராட்டம்

மிக அதிகமாக பாதிக்கப்பட்ட இடங்களான ஆத்தூர், திற்பரப்பு, கண்ணனூர், அருமனை,உடையார்விளை, புலிப்பனம் ஆகிய இடங்களில் மீண்டும் 1827ஆம் ஆண்டு போராட்டம் வெடித்தது. 1823ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணை ஒரு நிரந்தரமான தீர்வை அளிக்கத் தவறியது. இந்த ஆணையின் அடிப்படையில் கிறிஸ்தவப் பெண்கள் உயர்ஜாதிப் பெண்கள் அணிவது போன்ற ஆடைகள் அணியக் கூடாது என்று தடை விதிக்கப்பட்டது. இதனால் கிறிஸ்தவ நாடார் பெண்களிடம் அதிருப்தி ஓங்கியது. கிறித்தவ நாடார் பெண்கள் தங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்ட குப்பாயம் என்ற மேலாடையை விட அய்ரோப்பிய மறைப்பணியாளர்கள் மற்றும் உயர் ஜாதி பெண்கள் அணியும் உடைகளை அணிய ஆரம்பித்தனர். இவர் களைப் பின்பற்றி ஹிந்து நாடார் பெண்களும் மேலாடை அணிய ஆரம்பித்தனர். இவர்களுக்கு முத்துக்குட்டி (வைகுண்டர்) போன்றோர் மிகவும் உறுதுணையாக இருந்தனர். இதற்கு ஆட்சியில் இருந்த நாயர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மூன்றாம் கட்டப் போராட்டம்

1858ஆம் ஆண்டு விக்டோரியா மகராணியின் பிரகடனத்தையடுத்து தோள் சீலைப் போராட்டம் தீவிரமடைந்தது. 

நெய்யாற்றின்கரையில் தொடங்கியப் போராட்டம் பாறசாலை, நெய்யூர் போன்ற ஊர்களுக்கும் பரவியது. பல இடங்களில் தெருக்களிலும், சந்தைகளிலும் பெண்கள் தாக்கப்பட்டனர். பெண்களின் மேலாடைகள் கிழித்து எறியப்பட்டன. ஆண்கள் தங்கள் உயிருக்கு பயந்து பல இடங்களில் ஒளிந்து வாழ்ந்து வந்தனர். பெண்கள் மற்றும் குழந்தைகள் அய்ரோப்பிய மறைபரப்பாளர்களின் பங்களாக்களில் ஒளிந்து தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொண்டனர். டிசம்பர் 30, 1859 ஆம் நாள் கோட்டாறுப் பகுதியில் வைத்து கிறிஸ்தவ நாடார்களுக்கும் உயர் ஜாதி நாயர்களுக்கும் இடையே மிகப் பெரிய சண்டை மூண்டது. ஹிந்து நாடார்களும் கிறிஸ்தவர்களுடன் இதில் கைகோர்த்து கொண்டனர்.

உடை உடுத்த உரிமை

இப்போராட்டத்தின் விளைவாகவும் ஆங்கிலேயர்களின் நெருக்கடியின் காரணமாகவும் திருவிதாங்கூர் அரசரும், திவானும் அனைத்து நாடார் பெண்களும் மத வேறுபாடு இல்லாமல் குப்பாயம் என்கின்ற மேலாடை அணியலாம் என்று உரிமை அளித்தனர். இதற்கான அரசாணை 26, சூலைத் 1859ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. ஆனால் உயர் ஜாதி பெண்கள் அணிவது போன்ற ஆடை அணிய தடை விதிக்கப்பட்டது. இந்த உரிமைகளை மற்ற கீழ் ஜாதியினருக்கு அரசு வழங்கவில்லை. எனினும் கிறிஸ்தவப் பெண்கள் அனைவரும் மேலாடை அணிந்தனர்.

வைகுண்ட சாமிகள்

வைகுண்டசாமிகள் என்பவர் குமரியில், அன்று பெரிதும் ஒடுக்கப்பட்ட நாடார் சமுதாய மக்களின் தன்மானத்திற்காகப் போர்க்கொடி தூக்கிய பெருமகனார் ஆவார்.

கன்னியாகுமரிக்கு அருகில் பூவண்டன்தோப்பு எனும் கிராமத்தில் நாடார் சமூகத்தில் பிறந்தவர் (1809)

முடிசூடும் பெருமாள் என்று பெயரிடப்பட்டார். தாழ்ந்த ஜாதியினருக்கு இத்தகு மேன்மை தாங்கிய பெயரைச் சூட்டக்கூடாது என்பதுதானே மனுதர்மம்? மன்னர்ஆட்சி தடுத்தது. விளைவு புதுப்பெயர் முத்துக் குட்டி.

அன்றைய தினம் திருவிதாங்கூர் மன்னர் ஆட்சியில் மரம் ஏறும் மக்கள் சாணார் என்று அழைக்கப்பட்டனர். உரிமைகள் அறவே மறுக்கப்பட்ட பரிதாபத்துக்குரியவர்களாக அவர்கள் ஒடுக்கப்பட் டனர். நம்பூதிரிப் பார்ப்பான் எதிரே வந்தால் அவர்கள் 36 அடிதூரம் விலகி நிற்க வேண்டும். நாயரிடமிருந்து 12 அடி தூரம் ஒதுங்க வேண்டும். பொதுவீதிகளில், சாலைகளில் நடக்க உரிமையில்லை. பெண்கள் ரவிக்கை (தோள் சேலை) அணிந்திடத் தடை!.

மன்னர் ஆட்சி மனுதர்ம ஆட்சியாகச் சீறியது. இந்த நிலையில் தான் வைகுண்ட சாமிகள் என்று பிற்காலத்தில் அழைக்கப்பட்ட முத்துக்குட்டி சமத்துவ சங்கம் என்ற ஓர் அமைப்பைத் தொடங்கினார்.

அவர் ஆன்மிகக் குடைக்குள்ளேயே சீர்திருத்தங்களைச் செய்ய முன்வந்தார். அதே நேரத்தில் உருவ வழிபாட்டை எதிர்த்தார். காணிக்கை கொடுப்பது கண்டிப்பாகக் கூடாது என்றார். மாந்திரீகர்களிடம் மதி மயங்காதீர் என்று எச்சரித்தார்.

தாழ்த்தப்பட்டவர்களின் வீடுகளில் உணவருந்துமாறு தம் சீடர்களுக்குக் கட்டளையிட்டார்.

காவி நிறத்தில் வெள்ளைத் தீபச் சுடரைத் தாங்கிய கொடியை அறிமுகப்படுத்தினார். ஒரு வகையில் வடலூர் வள்ளலார் இராமலிங்க அடிகளின் சாயலை இவரிடம் காண முடியும்.

மன்னரையும் பார்ப்பனர்களையும் எதிர்க்கத் துணிந்த அவர் 110 நாள்கள் கொடுஞ்சிறையையும் அனுபவிக்க நேர்ந்தது.

இன்றைய நிலை என்ன தெரியுமா? சென்னை மணலியில் அவருக்குக் கோயில் கட்டி கோபுரங்கள் எழுப்பி, தேர்த் திருப் பணியையும் நடத்தியுள்ளனர்.

எந்த உருவ வழிபாடு கூடாது என்றாரோ, அந்த உருவ வழிபாட்டை, அவரையே கடவுளாக்கி நடத்துகின்றனரே.

கடவுள் இல்லை; இல்லவே இல்லை என்று தந்தை பெரியார் சிலைகளின்கீழ் கடவுள் மறுப்பு பொறிப்பதன் முக்கியத்துவம் புரிகிறதா?


                    -------------------------------------
மயிலாடன்  அவர்கள் “விடுதலை”  20-4-2010  இதழில் எழுதிய கட்டுரை

15.5.14

கடவுள் நம்பிக்கையை விட தன்னம்பிக்கை அதிகம் -ஜப்பானியர்களைப் பாரீர்


தினம் ஒரு தகவல் பகுதியில் நாள்தோறும் வெளியிடும் தினத்தந்தியில் ஒரு தகவல் வெளி யாகியுள்ளது.

ஜப்பானில் கோவில்களை அரிதாகத்தான் பார்க்க முடியும். நாங்கள் வருடத்துக்கு ஒருமுறை புது வருடம் பிறக்கும் போதுதான் கோவிலுக்குச் செல்வோம்.  மற்றபடி கோவிலுக்குச் சென்று பணத்தையும், நேரத்தையும் செலவழிப்பது கிடை யாது. கடவுள் நம்பிக்கை யைவிட, எங்களுக்குத் தன்னம்பிக்கை அதிகம் என்கிறார்கள் ஜப்பானியர்கள் (தகவல் அனுப்பி உதவியவர்: சீ.இலட்சுமி பதி, தாம்பரம்)

இரண்டாம் உலகப் போரின்போது அணு குண்டு வீச்சுக்கு ஆளா னது ஜப்பான். ஹீரோ ஷிமா, நாகசாகி நகரங்கள் தரைமட்டமாக்கப்பட்டன.

70 ஆண்டுகளுக்குப் பின் ஜப்பான் உலகளவில் தலை நிமிர்ந்து இன்று நிற்பதற்குக் காரணம் தினத்தந்தி வெளியிட்ட அந்தத் தகவல்தான்.

கடவுள் நம்பிக்கை யைவிட தன்னம்பிக்கை அதிகம் என்று ஜப்பானி யர்கள் கருதுவதும், செயல்படுவதும் தான் அதன் வளர்ச்சிக்குக் கார ணமாகும்.

மரம் வைத்தவன் தண்ணீர் ஊற்றுவான்; அவனன்றி ஓரணுவும் அசையாது என்று திண் ணைத் தூங்கி வேதாந்தங் களைப் பேசிக் கொண்டி ருந்தால், ஜப்பான் மிகப் பெரிய வளர்ச்சியைக் கண்டு இருக்குமா?

ஒரு நாளில் இராகு காலம், எமகண்டம், குளிகை என்றுகூறி நான் கரை மணிநேரத்தைப் பாழ்படுத்தும் இந்து மத இந்தியா எங்கே? கோவி லுக்குச் சென்று நேரத்தை யும், பணத்தையும் செல வழிக்க மறுக்கும் ஜப்பான் எங்கே?

இந்து மதத்தில் ஒவ் வொரு நாளுக்கும் சாங்கியம் உண்டு; விரதங்கள் உண்டு; மாதம் தவறி னாலும் பண்டிகைகள் தவறாது; கோவில் க்ஷேத் திராடனம், புண்ணிய முழுக்குகள் என்று காலத் தையும், பொருளையும், உடல்நலனையும் நாசப் படுத்துவது கொஞ்சமா நஞ்சமா?

அரசுக்குக் கொடுக் கும் வரியைவிட புரோ கிதனுக்கும், அர்ச்சகனுக் கும் கொடுக்கும் தட்ச ணைகள்தானே இங்கு அதிகம். செத்த பிறகும் திதி என்ற பெயரால் புரோகிதப் புடுங்கல்! சுரண்டலின் மறுபெயர் தான் இந்து மதமும் அதன் சடங்கு முறைகளும்.

ஜப்பானியர் என்றால் குள்ளர்கள் என்பதைக் கூட விஞ்ஞான வளர்ச்சி யால் மாற்றி அமைத்து விட்டார்களே!

ஜப்பானைப் பார்த்தாவது குள்ளத்தனமான புத்தியைத் தூக்கி எறிந்து, நிமிர்ந்த அறிவியலைப் பின்பற்றக் கூடாதா?

வாழ்க பெரியார்!

---------------------------- மயிலாடன் அவர்கள் 14-05-2014 "விடுதலை” யில் எழுதிய கட்டுரை

23.9.13

கடவுள் வாழ்த்துப் பாடும்போது கூப்பிய கரங்களுடன் நிற்பதோ நிற்காததோ தனி மனிதனின் உரிமை -மும்பை உயர்நீதிமன்றம்


இந்து ஏட்டில்  முதல் பக்கத்தில் ஒரு தகவல் (21.9.2013) மும்பை நகர் அருகில் உள்ள ஒரு ஊர் நாசிக்; சஞ்சய்சால்வ் என்பவர் அவ்வூர்ப் பள்ளியின் ஆசிரியர்.
நாள்தோறும் நடக்கும் கடவுள் வாழ்த்துப் (Prayer) பாடலின்போது கை கூப்பி வணங்க வேண்டும். ஆசிரியர் சஞ்சய் அவ்வாறு செய்வதில்லை. பள்ளி நிரு வாகம் வலியுறுத்தியபோது நான் ஒரு நாத்திகன் - இதில் எல்லாம் எனக்கு நம் பிக்கை கிடையாது என்று கறாராகக் கூறி விட்டார்.

சும்மா இருக்குமா நிருவாகம்? பல தொல்லைகளைக் கொடுத்தது; நியாயமாக அவ ருக்கு கிடைக்க வேண்டிய சம்பள உயர்வு பதவி உயர்வு களில் கை வைத்தது.

கடமை உணர்வோடு சிறப்பாகப் பணியாற்றும் ஆசிரியர் அவர் - அவரின் தனிக் குறிப்பேடும் அதைத் தான் வெளிப்படுத்துகிறது.

நிருவாகத்தின் நடவடிக் கையை எதிர்த்து நீதிமன்றம் சென்றார் அந்த ஆசிரியர். நீதிபதி (Abhayoka) நேர்மை யானவர் - சட்டப்படியானவர் போலும்.
நிருவாகத்திற்குச் சாட் டையடி கொடுத்தது மும்பை உயர்நீதிமன்றம். கடவுள் வாழ்த்துப் பாடும்போது கூப்பிய கரங்களுடன் நிற்பதோ நிற்காததோ தனி மனிதனின் உரிமை; அதில் தலையிட நிருவாகத் திற்கு அதிகாரம் கிடையாது. எனவே 2008ஆம் ஆண்டு முதல் அவருக்குச் சேர வேண்டிய சம்பள உயர்வு, பதவி உயர்வு களை வழங்க வேண்டும் என்று மிகச் சரியான ஆணை பிறப்பித்து விட்டது நீதிமன்றம்.

அரசு அலுவலகங்களில் ஆயுத பூஜை கொண்டாட லாம் - விடுமுறை நாட்களில் தானே பூஜை செய்கிறார்கள் என்று சொல்லுகின்ற மதுரைக் கிளை உயர்நீதிமன்ற தீர்ப்பையும் இந்த இடத்தில் நினைத்துப் பார்த்துத் தலை குனிய வேண்டும்.

சேது சமுத்திரத் திட் டத்தை எதிர்த்துத் தொடுக் கப்பட்ட வழக்கில் உச்சநீதி மன்ற நீதிபதி ஆர்.வி. இரவீந்திரன், வினா ஒன்றை எழுப்பினார். ராமனுக்காக வக்காலத்து வாங்கி வந்த வழக்குரைஞரைப் பார்த்து; ஒரு வழிபாட்டுத் தலம் 25 கி.மீ. நீளம் இருக்க முடியுமா? என்பது தான் அந்த நறுக் கான கேள்வி.
அதே நீதிபதி ஆர்.வி. இரவீந்திரன் அவர்கள்தான் திருவனந்தபுரம் பத்பநாபசாமி கோயில் புதையல் தொடர் பான வழக்கில் சோதிடப் பைத்தியங்களின் காதைப் பிடித்துத் திருகினார்.

பல கருவூல அறை களைக் கொண்ட அந்தக் கோயிலில் பி என்ற அறையைத் திறப்பதா கூடாதா என் பதைக் கண்டறிய அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் சோழிகள் போட்டு குறி பார்க்கும் தேவப்பிரஸ்னம் நடத்தியதாகச் சொன்ன போது, நீதிபதி ஆர்.வி. இரவீந்திரன் இவ்வழக்கு நீதிமன்றத்தில் முடிவு செய் யப்படுகிறதா? அல்லது ஜோதிடர்களால் முடிவு செய் யப்படுகிறதா? என்று கேட் டார் (3.9.2011).

இப்படியும் அறிவியல் கண்கொண்டு பார்க்கும் நீதிபதிகள் இருக்கத்தான் செய்கிறார்கள். 

Tail Piece: கல்வி நிறுவ னங்களில் பிரார்த்தனைக்கு அமெரிக்க நீதிமன்றம் தடை விதித்த சேதி தெரியுமா? 

  ---------------------- மயிலாடன்  அவர்கள் 22-9-2013 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

17.12.12

ஆலமரத்துக்கும், ஆண் குழந்தைக்கும் என்ன சம்பந்தம்?

ஆலமரத்துக்கும், ஆண் குழந்தைக்கும் என்ன சம்பந்தம்?

இது என்ன குருட் டுத்தனமான கேள்வி. சம் பந்தா சம்பந்தம் இல்லாத கேள்வி என்று எடுத்த எடுப்பிலேயே கேட்க தோன்றும்.

ஆனால் சம்பந்தம் இருக்கிறது என்று கூறி அந்த ஆலமரத்தையே வெட்டி இருக்கிறார்கள் என்றால் யாரும் எளிதில் நம்ப  மாட்டார்கள்.

ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி அருகே தானத்தம்பாளையத்தில் தான் இந்த அநியாயம்  நடந்திருக்கிறது.

இந்த ஊரில் 35 குடும்பங்கள் உள்ளன; ஆனால் ஆண் வாரிசு கிடையாதாம். 50 ஆண்டுகளுக்கு முன் சின்னப்பன் கவுண்டர் என்பவருக்குத் திருமணம் நடந் தது. ஆண் வாரிசு இல்லை; இரண்டாவது கல்யாணமும் செய்தார்; அதிலும் பலன் கிட்ட வில்லை.

அவ்வளவுதான் யாரோ ஒரு கிறுக்கன் சொன்னானாம்; ஊருக்குள் ஆலமரம்  வைத்தால் ஆண் வாரிசு பாக்கியம் கிட்டும் என்று சொல்ல, சின்னப்பக் கவுண்டர் ஆலங்கன்று வைத்து மரத்தை உண்டாக்கினார்.

மூன்றாவது கல்யாணம் செய்தார் ஆண் குழந்தை பிறந்ததாம். பிறகு யாருக்கும் ஆண் குழந்தையே இல்லையாம். ஊருக்குள் இன் னொரு ஜோசியக்காரன்  ஒன்றைக் கொளுத்திப் போட்டானாம். ஆல் தழைத்தால் ஆண் வாரிசு தரிக்காது என்றானாம் - அந்த (ஆல)மர மடையன்!
உடனே ஊர்கூடி ஆல மரத்தை மொட்டையடித் தனர் - வேரில் ஆசிடும் ஊற்றினர்.

விடயம் வட்டாட்சியருக்குத் தெரியவே. பறந்து வந்தார் அந்தவூருக்கு. ஆலமரத்தை வெட்டியது சட்ட விரோதம் என்றுகூறி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஒரு சோதிடன் ஆண் வாரிசுக்கு ஆலமரம் வேண்டும் என்றான். இன்னொரு சோதிடனோ ஆல் தழைத்தால் ஆண் வாரிசு தழைக்காது என்றான்.
யார் சொல்லுவது உண்மை? அப்பனும்  -பிள்ளையும், கழுதையைச் சந்தைக்குக் கொண்டு சென்ற கதையாக அல்லவா இருக்கிறது.
ஆல மரத்தை வெட் டினால் அதிகாரிகள் வருவார்கள் என்று  எந்த சோதிடனும் சொல்லவில்லையே! குழந்தை பிறப்பு ஆண் - பெண் பிறப்பு என்பதற்கு மருத்துவ ரீதியாக பல காரணங்கள் உண்டே! இந்த மூடத் தனத்தை எதிர்த்து எழுத நம்மை விட்டால் யார் இருக்கின்றனர்?


                  ----------------------- மயிலாடன் அவர்கள் 17-12-2012 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

24.7.12

IIT என்றால் Iyer and Iyengar Technology


ஒரு காலத்தில் சொல்லப்படுவதுண்டு AIR என்றால் All Iyer and Iyengar Radio; LIC என்றால் Licentiate Iyer and Iyengar Corporation; SRy என்றால் Sri Rangam Railway என்றெல்லாம் சொல்லுவதுண்டு. அந்த அளவிற்கு இவை எல்லாம் அக்கிரகாரவாசிகளின் வேலை வாய்ப்பு உல் லாசப் பூங்காக்களாக கொழித்தன.

இப்பொழுது IIT என்றால் என்ன பொருள்? Iyer and Iyengar Technology என்பது இன்றளவுக்கும் உள்ள உண்மை யான நிலவரமாகும்.

ஒவ்வொரு அய். அய்.டி.யும் ஆயிரம் ஏக்கர் நிலப் பகுதியில் ஒய்யாரமாக பார்ப்பனர்களுக்கு மட்டுமே குத்தகைக்கு விடப்பட்டு ஒண்டிக்கட்டையாகக் காட்சி அளிக்கிறது.

மாணவர் சேர்க்கையிலும் சரி, ஆசிரியர், பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்களும் சரி, அங்கே உள்ளே நுழைந்தால் அது ஒரு பெரிய அக்கிரகாரமாகவே காட்சி அளிக்கும். அவாள் வீட்டுப் பிள்ளைகளுக்கு, அந்த வளாகத்துக்குள்ளேயே கல்வி கற்க உயர் தட் டுக் கல்விக் கூடங்கள் -இத்தியாதி! இத்தியாதி!!

எடுத்துக்காட்டாக மொத்தப் பேராசிரியர்கள் 400 எனில் பார்ப்பனர்கள் 282 பேர் (70 விழுக்காடு) முன் னேறிய உயர்ஜாதி பார்ப்பனர் அல்லாதார் 40 பேர் (10 விழுக்காடு) பிற்படுத்தப்பட்டோர் 57 (14 விழுக்காடு) தாழ்த் தப்பட்டோர் 3 (0.75 விழுக்காடு) கிறித்தவர் 15 (3 விழுக்காடு) முசுலீம் - பூச்சியம்.

இதுதான் நிலைமை. தாழ்த்தப்பட்டவர்களுக்குப் பெயரளவுக்கு இட ஒதுக்கீடு. தப்பித் தவறி உள்ளே நுழைந்தாலும் பட்டம் பெற்று வெளியே வருவது அரிதே!

இப்படிப்பட்ட அக்கிர காரத்தில் முதன்முத லாக அய்.அய்.டி. பிற்படுத்தப்பட்ட வகுப்புப் பணியாளர் நலச்சங்கம் உருவாக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கதே. தாழ்த்தப்பட்டோர் நலச் சங்கமும், பிற்படுத்தப் பட்டோர் நலச் சங்கமும் ஒருங்கிணைந்து அக்கிரகார ஆதிக்கத்திற்குத் தண்ணீர் காட்டு வார்களாக! இந்தி யாவுக்கே பெரியார் பிறந்த மண் இந்த வகையிலும் வழிகாட்டி யுள்ளது பாராட்டுக் குரியதே!

---------------- மயிலாடன் அவர்கள் 24-7-2012 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

11.7.12

உண்மையை ஒப்புக் கொண்ட கோயபல்சு துக்ளக் சோ


கேள்வி: இலவசங்களைக் கொடுத்து மக்களிடம் ஓட்டு வாங்கிவிட லாம் என்ற அரிய தத்துவத்தை முதலில் கண்டுபிடித்த ஜீனியஸ் காங்கிரசா, தி.மு.க.வா?

இவர்கள் எல்லாம் இல்லை. இதை முதலில் கண்டு பிடித்தது கோயில்கள்தான். விபூதி, குங்கு மத்தோடு நிற்காமல், இலவசமாக வெண்பொங்கல், சர்க்கரைப் பொங்கல், புளியோதரை, தயிர்சாதம், வடை என்று பிரசாதம் கொடுத்தால் பக்தர்கள் வருவார்கள் என்று கண்டு பிடித்தது அவர்கள்தான்.

--------------------------(துக்ளக்- 20.6.2012)

அப்பாடி! முதன் முதலில் ஒரே ஒரு உண்மையை ஒப்புக் கொண்டுள்ளார் கோயபல்சு துக்ளக் சோ. ராமசாமி.

கோயிலில் கூட்டம் கூடுகிறது, கூடுகிறது, பக்திப் பரவசவெள்ளப் பெருக்கைப் பாரீர்! பாரீர்!! நாத்திகமெல்லாம் படுத்துண்டுட்டுது என்று பல்லவி பாடிய வட்டாரத் திலிருந்து ஒரு உண்மை உதறித் தள்ளி வெளியே வந்து விழுந்துவிட்டது.

இந்த இலவசம் என்ற ஒன்று இல்லையாயின் கோயில்களில் கூட்டமா வது, கீட்டமாவது - என்று உதட்டைப் பிதுக்கி உண் மையை ஒப்புக் கொண்ட தற்காக நாமும் ஒரே முறை சோ அய்யர் வாளைப் பாராட்டலாம் தான்!

ஒன்றை விட்டுவிட் டாரே! அது போலவே இலஞ்சம் உற்பத்தியான தும் சாட்சாத் இந்தக் கோயில்களில்தான் என் பதையும் ஒப்புக் கொண் டிருந்தால் பேஷா நன்னாயிருக்குமோல்லியோ!

ஆதிலட்சுமி, அகோர மூர்த்தி, நான் உனக்குச் கண்ணடக்கம் செய்து வைக்கிறேன்; வெள்ளியாலே ரிஷபம் ஏற்பாடு செய்கிறேன். என் பிள்ளையாண்டான் பரிட்சையில் பேஷா பாஸாகனும், என் ஆத்துக்காரருக்கு புரமோசன் கூடிய விரைவில் கிடைக்கணும்; என் சிரேஷ்ட புத்திரிக்கு நல்ல வரன் கிடைக்கணும் னு வேண்டிக் கொள்கிறார்களே... இதற்குப் பொருள் என்னவாம்?

இலஞ்சம் அல்லாமல் வேறு என்ன வாம்? இதையெல்லாம் செய்து வைச்சாதான், உண்டியலில் பணம் போட் டால்தான் எம்பெருமான் அருள் பாலிப்பாருன்னு ஆகிவிட்ட பிறகு, இலஞ்சம் உற்பத்தியாகும் இடம் இந்தக் கோயில்கள்தான் என்று அடுத்த இதழில் சோவாள் எழுதுவாளா?

--------------------- மயிலாடன் அவர்கள் 7-7-2012 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

10.7.12

தேசியமாம் தேசியம்- என்னாங்கப்பா தேசியம்?


தேசியமாம் தேசியம்- என்னாங்கப்பா தேசியம்? திராவிடர் கழகப் பேரணிகளில் கருஞ் சிறுத்தைகள் முழக்க மிடுவதுண்டு. இது ஏதோ கோபதாபத்தில், எரிச்சலில் போடப்பட்ட முழக்கம் இல்லை.

நாட்டு நடப்பின் நாடியைப் பிடித்து ஒலிக்கப்பட்ட முழக்கம். குறிப்பாக இந்தி யாவில் நதிநீர்ப் பிரச்சினை ஒன்று போதும் - இந்தியாவில் தேசிய நீரோட்டம் எந்த டி.எம். சியில் இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ள!

இதில் என்ன வேடிக்கையென்றால், இந்தியத் தேசியம் பேசும் காங்கிரசாக இருந்தாலும் சரி, சர்வ தேசியம் பேசும் கம்யூனிஸ்டுகளாக இருந்தாலும் சரி, நதிநீர்ப் பிரச்சினையில் குள்ள மனிதர்களாகத்தான் நடந்து கொள்கிறார்கள்.

குறிப்பாக கருநாடக மாநிலத்தில் காங்கிஸ், ஜனதாதளம், பி.ஜே.பி. ஆட்சிகள் மாறி மாறி வந்திருந்தாலும் சட் டப்படி தமிழ்நாட்டுக்குக் கொடுக்க வேண்டிய தண்ணீரைக் கொடுக்காமல் தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் காட்டி வருகின்றன.

முல்லைப்பெரியாறு நீர்ப் பிரச்சினையில் கம்யூனிஸ்டு ஆட்சியானாலும் சரி, காங்கிரஸ் ஆட்சியானாலும் சரி உச்ச நீதிமன்றம் சொன்னாலும் போய் வா மகனே! என்று போர் முரசு கொட்டுகின்றன.

இப்பொழுது டில்லிக்கும், அரியானாவுக்கும் இடையே உடைசல் எழுந்துள்ளது. யமுனை நதியிலிருந்து டெல்லிக்கு அளிக்கப்பட்டு வந்த குடிதண்ணீருக்கும் பிரச்சினை!

குடிநீருக்கே வயிற்றில் அடியாம்! ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற டில்லி முதல் அமைச்சர் ஷீலா தீட்சித் தம் வீட் டுக்கு, அமைச்சர்கள் வீட்டுக்குத் தடையில் லாமல் வழங்கப்பட்டு வந்த குழாய் இணைப்பைத் துண்டிக்கச் செய்துவிட்டாராம்.

இப்பொழுது கொஞ்சம் யோசித்துப் பார்க்கட்டும் 22 கேரட் தேசிய திலகங்கள். திராவிடர் கழகப் பேர ணியில் கருஞ்சிறுத்தைகளின் முழக்கம் நியாய மானதுதானே!

--------------- ------- மயிலாடன் அவர்கள் 10-7-2012 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

4.7.12

கிரிக்கெட் விளையாட்டும்! - வாஸ்து மூடநம்பிக்கையும்!


அய்.பி.எல். கிரிக்கெட் இந்தியாவில் நடந்தது அல்லவா? இறுதிப் போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் சென்னை யில் நடைபெற்றது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற என்ன செய்தது தெரியுமா?

அணியின் ஒப்பனை அறையில் கூடுதலாகக் கண்ணாடிகள் வைக்கப் பட்டன. அப்படி வைத்தால் வாஸ்து பிரமாதமாக இருக்கும் என்று எவனோ ஒரு வாஸ்து கிறுக்கன் சொன்னதைக் கேட்டு இந்தக் கிரிக்கெட் சூதாட்ட விளையாட்டுக் காரர்களும் நம்பினார்கள்.

கண்ணாடிகள் எல்லாம் வைக்கப்பட்டன. விளைவு. ஊத்திக்கிட்டது தான் மிச்சம். தோல்வியைத் தழுவியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

விளையாட்டில் வீரத்தையும், விவேகத்தையும் காட்ட வேண்டியிருக்க, இப்படி முட்டாள்தனத்தையும், மூட நம்பிக்கையை யும் தேடி அலைகிறார்களே - காரணம் தன்னம்பிக்கையும் சுயபுத்தியும் இல்லாததுதான்.

சில கிறுக்கர்கள் குறிப்பிட்ட நிறத்தில் உள்ள கைக்குட்டையை மைதானத்தில் பயன்படுத்தினால்தான் சிறப்பாக விளையாட முடியும் என்ற நம்பிக்கையோடு களத்தில் இறங்குகிறார்கள்.

கடவுள் பக்தி, நம்பிக்கை என்பது எத்தனை எத்தனை வகைகளில் தான் தனி மனிதனையும், சமூகத்தையும் சீரழிக் கிறது பார்த்தீர்களா?

கடந்த முறை உலகக் கால்பந்து போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள் என்பதை ஆக்டோபஸ் முடிவு செய்யும் என்று கூறப்பட்டது.

யூரோ கப் போட்டியில் அது போன்றவை இல்லை. ஒருக்கால், உலகப் போட் டிக்குத்தான் வருமோ! இந்தியாவைப் பொருத்த வரை இந்து மனப்பான்மை என்ற ஒன்று இருக்கிறது. எதிலும் தன்னம்பிக்கையைக் காயடிக்கக் கூடியது அது. நெருக்கடியான கால கட்டத்தில் மன உறுதியோடு விளையாட வேண்டும் என்ற துணிவு இவர்களுக்கு அறவே கிடையாது. வெட்கக் கேடு!

வானத்தையே வளைத்து எழுதும் ஏடுகள் இந்த மூட நம்பிக்கைகள்பற்றி எல்லாம் மூச்சுவிடாது - காரணம், மூட நம்பிக்கைகளில் மூழ்கிக் கிடப்பவை தானே இந்து ஏடுகளும்!

-------------------- மயிலாடன் அவர்கள் 4-7-2012 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

28.6.12

கணேசனும், லட்சுமியும், காளியும் அமெரிக்கனைச் சுட்டெரிக்காதது ஏனோ?


இந்துக்களின் ஆக்ரோஷ கடவுளான காளியை அமெரிக்காவில் ஒரு நிறுவனம் எதற்குப் பயன்படுத்திக் கொண்டு இருக்கிறது தெரியுமா? காளியின் பெயரால் பீர் அறிமுகமாகியுள்ளது. (இதில் கோபப்பட என்ன உள் ளது? இந்துக் கடவுள்கள், அவதாரங்கள் குடிக்க வில்லையா?)

லட்சுமியின் படம் அமெரிக்காவின் கழிப் பறையில் ஓவியமாக வரையப்பட்டதுண்டு. விநாயகரின் படம் பெண்களின் உள்ளாடைகளில் இடம் பெற்றது.

செருப்புகளில் விநாயகர் குடியிருந்தார். சிவபுரத்து நடராசன் சிலை கடத்தப்பட்டு, நாட்ரன்துரையிடம் அமெரிக்காவில் சரண் அடைந்தது. நடராசர் நடனமாடுவது போல இருந்த காட்சி அவர்களை ரசிக்கச் செய்தது. அவர் கையில் இருந்த தட்டை சிகரேட் தூளைப் படியவைக்கும் (ஹளா கூசயல) கிண்ணமாகப் பயன் படுத்திக் கொண்டார்.

இந்துக்களின் மனம் மிகவும் புண்படுத்தப்பட் டது என்று குரல் கொடுத்தனர். நாடாளு மன்றத்தில் பி.ஜே.பி. உறுப்பினர் ரவிசங்கர் பிரசாத் அனல் கக்கி னார். அமெரிக்கத் தூதரை அழைத்து நடந்த காரியங்களுக்காக மன்னிப்புக் கேட்கச் செய்ய வேண்டும் என்று ஆர்ப்பரித்தார் - ஒன்றும் நடந்துவிடவில்லை.

மகாவிஷ்ணு பன்றி அவதாரம் எடுக்கலாம். பைரவருக்கு நாய் வாகனமாக இருக்கலாம், காங்கேய முனிவன் கழுதைக்குப் பிறக்கலாம். மாண்டவ்ய முனிவர் தவளைக்குப் பிறக்கலாம். சவுனக முனி நாய்க்கும் பிறக்கலாம்; ஜாம்பவந்தர் கரடிக்குப் பிறக்கலாம்.

மகாவிஷ்ணுவின் மார்பின் கறுப்பு மயிரில் கிருஷ்ணன் பிறக்கலாம் வெள்ளை மயிரில் அவன் அண்ணன் பிறக்கலாம்!

இப்படியாக சாத்திரம் புராணங்கள் எழுதி வைத்துக் கொண்டு இருப்பவர்கள் அமெரிக்கக்காரன் இந்துக் கடவுள்களைக் கேலி செய்து விட்டான் என்று குதிப் பதில் பொருளுண்டோ!

அவன் செய்ததாவது கேலி, நீ செய்ததோ, அசிங்கம் - ஆபாசமாயிற்றே!

அதுசரி உங்கள் கணேசனும், லட்சுமியும், காளியும் அந்த அமெரிக்கர்களை ஒன்றும் செய்யவில்லையே! உம் கடவுள் சக்தி பூஜ்ஜியம் தானோ!

அதுவும் காளி சிவமூர்த்தியின் கோபாக்னியாயிற்றே - பத்ரகாளியாயிற்றே. அந்த அமெரிக்கனைச் சுட் டெரிக்காதது ஏனோ? குடலைக் கிழிக்காதது ஏனோ! எல்லாம் உல்டாப் தானோ!

---------------- மயிலாடன் அவர்கள் 28-6-2012 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

24.6.12

செத்தமொழியைச் சிங்காரிக்க பார்ப்பனர்கள் படும் பாடு!

இனப்பற்று

சென்னை மயிலாப்பூரில் சமஸ்கிருத கல்லூரி ஒன்று இருக்கிறது. அத னோடு இணைந்து செயல்படுவது குப்புசாமி சாஸ்திரி சமஸ்கிருத மய்யம் ; அரசிடம் இருந்து நிதி உதவி பெற்று வந்த இந்த மய்யம் 1995ஆம் ஆண்டுக்குப் பிறகு அந்நிதி கிடைக்காமையால் தள்ளாடியது.

மின்னஞ்சல் வழியாக இந்த நிலையை அறிந்து கொண்ட ரவி என்ற பார்ப் பனர் பதைபதைத்துப் போனார்! தான் ஆடாவிட் டாலும் சதை ஆடாதா என்ன!

ரவி தன் பார்ப்பன நண்பர்களோடு இணைந்து இந்த மய்யத்தைத் தூக்கி நிறுத்தும் வேலையில் ஈடுபட்டு அதில் வெற்றியும் பெற்றுள்ளார். (சிருங்கேரி மடம் நடத்தும் சமஸ்கிருத வகுப்புகளுக்குச் சென்று சமஸ்கிருதம் கற்று வரு கிறாராம்)
என்னென்ன முயற்சிகளை மேற்கொண்டாராம் - இந்த ரவி? பெரிய பெரிய நிறுவனங்களில் பணியாற்றும் பார்ப்பனர்களோடு ஒருங்கிணைப்பாளராக யிருந்து தொடர்பு கொண்டு, நிதியின் வாய்க்காலைத் திறக்கச் செய்து மய்யத்தை அழிவிலிருந்து காப்பாற்றி விட்டார். இன்னொரு திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த மய்யத்தில் வெளியிடப்படும் ஆராய்ச்சி நூல்களை வாழ்நாள் உறுப்பினராக இரண்டாயிரம் ரூபாய் செலுத்தி, பெற்றுக் கொள்ளலாம் என்பதுதான் அந்தப் புதிய திட்டம்.


மய்யத்திற்கு நிதியும் ஆயிற்று; மய்யத்தில் நூல்கள் விற்பனையும் ஆயிற்று. ஒரே கல்லால் இரண்டு காய்களை அடிக்கும் இந்த சாமர்த்தியம் நம் மக்களுக்கு எங்கிருந்து வரப்போகிறது?

மின்னஞ்சல் மூலமாக தொடர்பு கொண்டதில் நூறு வாழ்நாள் உறுப்பினர்கள் கிடைத்துள்ளனராம்.

இன்னொன்றுதான் முக்கியம். சென்னை அய். அய்.டி.யில் உள்ளோர் (முழுக்க அக்கிரகாரம் தானே!) மத்திய அரசின் சில துறைகளிலிருந்து நிதியைத் திரட்டுவதற்கு முயற்சிகளை எடுத்துக் கொண்டுள்ளனராம். (அவர்களால் முடியக் கூடிய காரியம்தானே!)

செத்தமொழி என்றாலும் அதனைச் சிங்காரிக்க பார்ப்பனர்கள் என்ன பாடு படுகிறார்கள் பார்த்தீர்களா?

மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்போது நீடாமங்கலத்திலிருந்து ஒரு பார்ப்பனர் மின்னஞ்சல் மூலம் பார்ப்பனர் வட்டாரத்துக்குத் தகவல் அனுப் பினாரே நினைவிருக்கிறதா? தவறாமல் தாய் மொழி சமஸ்கிருதம் என்று சொல்லுங்கள் என்று அந்த மின்னஞ்சலில் தெரிவிக்கப்பட்டு இருந்ததே! தமிழர்களே இந்த இனப்பற்று உங்களுக்கு எப்பொழுது வரப் போகிறது?

----------------- மயிலாடன் அவர்கள் 24-6-2012 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

21.6.12

நிலவுக்குச் சுற்றுலா செல்ல வேண்டுமா?


நிலவுக்குச் சுற்றுலா செல்ல ரூ.900 கோடி செலவாகும். தங்களைத் தொடர்பு கொள்ளுமாறு ருசியாவில் உள்ள ஒரு தனியார் நிறுவனம் அறிவித்துள்ளது.

நிலா நிலா ஓடிவா, நில்லாமல் ஓடி வா, மலை மேல் ஏறி வா, மல்லிகைப்பூ கொண்டு வா! என்று பாட்டுப் பாடி குழந்தைகளுக்குச் சோறூட்டும் காலம் ஒன்று இருந்தது. நிலா இங்கே வராது - நிலாவுக்குத்தான் நாம் செல்ல வேண்டும்.

இனிமேலாவது பித்தா பிறை சூடிப் பெருமானே - சிவபெருமான் தலையில் சூட்டப்பட்டிருக்கும் சந்திரனே என்று சொல்லும் செய்யுள்களைக் குப்பைக் கூடை யில் தூக்கி எறிந்தால் புத்திக்கு மதிப்புக் கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள் என்று நம்பலாம்.

குரு பத்தினியைக் கற்பழித்து விட்டான் சந்திரன், குருவின் சாபத்தால் தேய்பிறையானான் என்கிற மூளிகளை மூளையிலிருந்து கூட்டிப் பெருக்கி, மூலையில் ஒதுக்கினால் ஓகோ, கொஞ்சம் சிந்திக்க ஆரம்பித்து விட்டனர் எனும் பாராட்டுக்கூடக் கிடைக்கப் பெறலாம்.

ராகு, கேது என்ற பாம்புகள் சந்திரனை விழுங்குவதால்தான் சந்திரன் தேய்ந்து கொண்டு போகிறான் என்கிற புராண மூட் டையைப் பொசுக்கி எறிந்தால், அடுத்த தலை முறையினராவது அறிவு ஆரோக்கியத்துடன் வாழ்வார்கள்.

நவக்கிரகங்களுள் முக்கியமானதான பூமியைப் பட்டியலில் சேர்க்காமல், பூமியின் துணைக் கோளான சந்திரனை நவக்கிரகப் பட்டியலில் சேர்த்துள்ள சோதிடர்களை - மக்கள் மத்தியில் இந்திய அரசமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள விஞ்ஞான மனப்பான்மைக்கு எதிராக (51ஹ () முட்டாள் தனத்தை முதலாக்கி வியாபாரம் செய்ய முனைந்தார்கள் என்ற குற்றச்சாட்டின் அடிப் படையில் சிறைக் கொட்டடியில் அடைத்தால் விஞ்ஞான மனப்பான்மை இந்தியாவில்கூட முளை விட ஆரம்பித்து விட்டது என்று மன நிறைவு அடையலாம்.

விஞ்ஞானத்தையும் ஒரு பக்கத்தில் அன்றாடம் அனுபவித்துக் கொண்டு, இன்னொரு பக்கத்தில், அஞ்ஞானத்தையும் ஆலிங்கனம் செய்யும் இரட்டை வேடக்காரர்கள் இனியாவது திருந்துவார்களா?

------------------- மயிலாடன் அவர்கள் 21-6-2012 “விடுதலை” டில் எழுதிய கட்டுரை

19.6.12

பாட்டிலில் விற்கப்படும் பசு மூத்திரத்தை குடிக்கும் முட்டாள்தனம்!


பாட்டி சொன்னால் கேட்காதவர்கள் பாட்டிலில் அச்சடித்துச் சொன்னால் கேட்கிறார்களாம்.

இது என்ன பூடகம்? வேறு ஒன்றும் இல்லை. மாட்டு மூத்திரத்தைக் கோமியம் என்று சொல்லி பாட்டிலில் அடைத்து ரூபாய் 20க்கு (200 மில்லி) விற்றுக் கொண்டு இருக்கிறார்களாம்.

திதியின் போது பார்ப்பனப் புரோகிதர்கள் பஞ்ச கவ்யம் என்ற ஒன்றைக் கொடுப்பார்கள். மாட்டு மூத்திரம், மாட்டுச் சாணம், பால், தயிர், வெண்ணெய் என்கிற பசு மாட்டின் மூலம் கிடைக்கும் அய்ந்து பொருள்களையும் கலக்கிக் கொடுப்பதுதான் பஞ்ச கவ்யம்.


பார்ப்பனப் புரோகிதன் கொடுக்கும் இந்த கோமியத்தை நம் வீட்டுப் பெரியவர்கள் தட்சணை கொடுத்து வாங்கி முடக்கு முடக்கு என்று பக்திப் பரவசத்தால் குடிப்பார்கள். அது கீழே சிந்தி விடக் கூடாதாம். அப்படி சிந்துகின்ற அந்த மாட்டு மூத்திரம் கலந்த அந்தப் பஞ்ச கவ்யத்தைக் கைகளில் பிடித்து பய பக்தியுடன் தலையிலும் தடவிக் கொள்வார்கள். பக்தியின் பெயரால் இந்த ஆபாசம் - அநாக ரிகக் கூத்து அரங்கேறுவதுண்டு.

இதுகுறித்து தந்தை பெரியார் அவர்கள் நம் மக்களுக்குப் புரியும்படி ஒன்றைச் சொல்லுவார்கள்.

அந்த மாட்டு மூத்திரம், சாணியைக் கரைத்துக் குடிக்கும்போது முகம் சுளிக்காமல் குடிக்கிறானா என்று பார்ப்பான் பார்ப்பானாம்; முகம் சுளிக்காமல் குடித்தால், பரவாயில்லை இந்த முட்டாள் பசங்களை இன்னும் ஆயிரம் வருஷங்களுக்கு மொட்டை அடிக்கலாம் - சுரண் டலாம்! என்று பார்ப்பான் முடிவுக்கு வருவான் என்று கூறிய பகுத்தறிவுப் பகலவன் பஞ்சகவ்யத்தை நம் மக்கள் குடிப்பது - நமது முட்டாள்தனத்தை அளக்கும் தர்மாமீட்டர் என்று குறிப்பிட்டாரே பார்க்கலாம்.
முட்டாள்தனம் பாட்டிலில் அடைத்து விற்கப்படுவதும், இந்த அடி முட்டாள்கள் காசு கொடுத்து அதை வாங்கிக் குடிப்பதும் எவ்வளவுக் கேவலம்!

கடைசியில் ஒரு கேள்வி (Tailpiece) பாட்டிலில் அடைத்து விற்கப்படும் அந்தப் பசு மூத்திரத்தை கிண்டி கிங் இன்ஸ்டியூட்டுக்கு அனுப்பி பரிசோதிக்கத் தயாரா? விஞ்ஞானத் துக்கு உட்படுத்தப்படாத இந்த அசிங்கத்தை ஆபத்தை அரசு எப்படி அனுமதிக்கிறது?

------------------- மயிலாடன் அவர்கள் 19-6-2012 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

10.6.12

பார்ப்பன எழுத்தாளர் மாலன் முதல் ஞானி வரை


இந்திய அரசமைப்புச் சட்டத்தின் சிற்பி என்று போற்றப்படும் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் அவர்கள் பற்றி என்.சி.இ.ஆர்.டி. தயாரித்த பாடப் புத்தகத்தில் இடம் பெற்ற கார்ட்டூன் இந்தியாவில் பெரும் சர்ச்சைப் பூகம்பத்தை ஏற்படுத்திவிட்டது. நாடாளுமன்றம் வரை அதன் எதிரொலியைக் காண முடிந்தது.

இந்திய அரசமைப்புச் சட்டம் உருவாக்கப்பட 2 ஆண்டுகள் 11 மாதம் 17 நாட்கள் ஆயின. இந்த கால தாமதத்தைக் குறிக்கும் வகையில் நத்தையின் மீது டாக்டர் அம்பேத்கர் ஊர்ந்து செல்வது போலவும், பிரதமர் நேரு சாட்டையைச் சுழற்றி விரட்டுவது போலவும் ஒரு கார்ட்டூன் படத்தை பிரபல கார்ட்டூனிஸ்ட் கேசவ சங்கர பிள்ளை என்பவரால் 1949 இல் வரையப்பட்டது.

63 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தக் கார்ட்டூன் பள்ளிப் பிள்ளைகளின் பாடத் திட்டத்தில் வைக்கப் பட்டது ஏன் என்பதுதான் இப் பொழுது செங்குத்தாக எழுந்து நிற்கும் கேள்வி.

இது குறித்து நேற்று புதிய தலைமுறைத் தொலைக்காட்சியில் வாதப் பிரதி வாதங்கள் நடந்தன.

சொல்லி வைத்தாற்போல பார்ப்பனர்கள் எல்லாம் அந்தக் கார்ட்டூனை வரவேற் றும், மற்றவர்கள் எல்லாம் அதனை எதிர்த்தும் கருத்து சொன்னதும் கவனிக்கத் தக்கதாகும்.

இது தவிர பார்ப்பன எழுத்தாளர் மாலன் முதல் ஞானி வரை கார்ட்டூனை ஆதரித்துக் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

சகிப்பு மனப்பான்மை வேண்டாமா? கருத்துச் சுதந்திரத்துக்கு இடம் அளிக்க வேண்டாமா? என்றெல்லாம் பரந்து விரிந்த மனப் பான்மையைக் குத்தகை எடுத்தவர்கள் போல சண்டப் பிரசண்டம் செய்கிறார்களே, அவர்களைப் பார்த்து நாம் கேட்கும் கேள்வி.

தீண்டாமை ஷேமகரமானது என்று கூறியவர் மறைந்த காஞ்சி சங்கராச் சாரியாரான சந்திரசேகரேந்திர சரஸ்வதி. அதற்காக அவரை விரட்டியடிப்பது போலவும், அவர் மிரண்டு ஓடுவது போலவும் கார்ட்டூன் ஒன்று வெளியிடப்பட்டால் இந்த பரந்து விரிந்த (?) மனப்பான்மைக்குச் சொந் தக்காரர்களான பார்ப்பனர்கள் ரசிப்பார்களா? பலே, பலே பிரமாதமான கார்ட்டூன் என்று கைதட்டுவார்களா?

இதில் ஒன்றை நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும். அரசமைப்புச் சட்டத்தை உருவாக்குவதில் காலதாமதம் ஏற்பட்டதற்கு அப்பொழுதே அண்ணல் அம்பேத்கர் விளக்கம் அளித்துவிட்ட நிலையில், இந்தக் கார்ட்டூனைப் பாடப் புத்தகத்தில் வெளியிடுவதன் உள் நோக்கமென்ன ?

கார்ட்டூனை அச்சடித்துக் கொடுத்தவர்கள், அம்பேத்கர் அப்போது அளித்திருந்த விளக்கத்தையும் இடம் பெறச் செய்யாதது ஏன்?

இங்குதான் பார்ப்பன நாகம் படம் எடுத்து ஆடுகிறது! இவர்கள் தரும் வெண்டைக்காய், விளக்கெண்ணெய் வியாக்கியானம் ஒரு பக்கம் இருக் கட்டும்! அந்தக் கார்ட்டூனைப் பார்க்கும் அளவில் எந்த எண்ணத்தைத் தோற்று விக்கும்? அதுதான் முக்கியம்.

--------------- ----- மயிலாடன் அவர்கள் 10-6-2012 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

30.5.12

என்றும் போற்றுவோம் அஞ்சாநெஞ்சனை!

அஞ்சா நெஞ்சன்

தந்தை பெரியார் இயக்கத்தின் தளகர்த்தராய் - அரிமா குரலுக்குச் சொந் தக்காரராய் - 1938 இல் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் திருச்சியிலிருந்து புறப்பட்ட தமிழர் பெரும்படையை நடத்திய தளபதியாய், பெரும் பணக்காரர்கள், பெரும் பதவிக்காரர்கள் மத்தியில் கூட வளைந்து குனியாத வாகை நோக்குடையவராய், நிமிர்ந்த பார்வையுடையவராய், இராணுவத்தில் பணியாற்றிய அந்த மிடுக்குக் குறையாதவராய் 49 ஆண்டுகளே வாழ்ந்தாலும் (பிறப்பு 20.3.1900; மறைவு 28.3.1949) குறுகிய காலத்தில் கொள்கைக் குன்றாக வாழ்ந்து, திராவிடர் கழகத் தோழர்கள் மத்தியில் மட்டு மல்ல; தமிழ்நாட்டு மக்கள் மத்தியிலும் அழகிரி பேச்சா? அனல் புயல் ஆயிற்றே - சுழல் காற்றாயிற்றே! பொங்குமாங்கட லாயிற்றே! இளைஞர்களை ஈட்டி முனையாய் வார்த் தெடுக்கும் போர்ப் பட்டறை யாயிற்றே! - தந்தை பெரியார் அவர்களின் தத்துவத்தைத் தனக்கே உரித் தான தன்மையில் தனிப் பாணியில் தருபவராயிற்றே- நுட்பமான புத்தியினாலே கூர்மையான கத்தியைக் கொண்டு முகத்திலே உள்ள உரோமங்களை உருவத்திற்கும் ஒன்றும் ஆகாமல், உரோமங்களும் முகத்தில் தங்காமல் மழிக்கிறானே - அந்தத் தொழிலாளி அம்பட்டனா? இழிவானவனா? அழகுபடுத்தும் நம் சினேகிதன் அன்றோ! என்ற வினாவின் மூலம் ஜாதிக் கட்டுத் திமிர் என்னும் யானையை அடக்கும் அங்குசமாய்- அழகிரி பேசிய பொதுக் கூட்டத்திற்குள் பார்ப்பனக் கைக்கூலிகள் கழுதையை விரட்டிவிட்ட நேரத்தில், அந்தக் கழுதையைப் பிடித்து வரச்சொல்லி, மேடையின் ஒருபக்கம் கட்டச் சொல்லி, அந்த உரை முழுவதும் பார்ப்பனியத்தின் நச்சுப் பல்லை உடைத்துக் காட்டி, ஒவ் வொரு கருத்தையும் சொல்லி முடிக்கும் பொழுது, கேளு கழுதையே கேள்! என்ற சொல் கட்டோடு பேசிய அந்த யுக்தியைப் பழம்பெரும் சுயமரியாதை இயக்கத் தொண் டர்கள் கூறுவார்களே-

பெருங்கூட்டத்தில் ஒற்றை ஆளாக இருந் தாலும் நெஞ்சு நிமிர்த்தி, ஆனை மிடுக்காய், சிங்கக் கர்ச்சனையாய், எதிரிகள் குலை நடுங்கும் எரிமலை யாய் வாழ்ந்து காட்டிய அந்த அஞ்சாநெஞ்சன், கருஞ்சட்டைத் தோழர்களுக்கு உறுதியின் ஒளிவிளக்கு! என்றும் போற்றுவோம் அந்த அஞ்சாநெஞ்சனை!

---------------- மயிலாடன் அவர்கள் 28-3-2012 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

18.5.12

கடவுள் காளியின் பெயரால் பீர் விற்பனை!


இந்துக்களின் கடவுளான காளியின் பெயரால் அமெரிக்காவில் உள்ள ஒரு நிறுவனம் பீர் விற்பனை செய்து வருகிறதாம். ஒரேகான் மாநிலத்தில் பர்ன்சைட் பிரவிங் என்ற நிறுவனம் காளி-மா என்ற பெயரில் பீர் விற்பனை செய்து வருகிறதாம் - பீர்பாட்டிலில் காளி படமும் ஒட்டப்பட் டுள்ளதாம். இது இந்துக் களின் மனதைப் புண்படுத்துகிறதாம். உடனடி யாக இந்திய அரசு இதில் தலையிட வேண்டுமாம்! அமெரிக்கத் தூதருக்குத் தாக்கீது அனுப்பி நேரில் அழைத்து விசாரிக்க வேண்டுமாம். இப்படி மாநிலங்களவையில் பிஜேபியைச் சேர்ந்த ரவிசங்கர் பிரசாத் என்ற உறுப்பினர் வற்புறுத்தி யுள்ளார்.


இதில் என்ன குடி மூழ்கிப் போய் விட்டதாம்? இந்துக் கடவுள்கள் குடிப் பழக்கம் உள்ளவர்கள் என்று எத்தனை எத்தனையோ புராணங்கள் கூறுகின்றனவே.

இந்திரன் என்ற கடவுள் மகாக்குடியன் -மொடாக்குடியன் என்று ரிக்வேதம் கூறவில்லையா?


இந்திரனே உனக்காகப் பிழிந்துள்ள நின் சோமபானத்தைக் குடிக்க வா! தாடியில் ஒட்டியுள்ள சோமச் சிதறவைத் தட்டி விடு!


------------------(ரிக் - 2112 சுலோகம்)

அத்வர்யுக்களே பசுக்களை ஒட்டிச் சென்ற திரீபிகனைக் கொன்று அவைகளை மீட்டுக் கொண்டு வந்தவனும், வலனைக் கண்டுபிடித்துக் கொன்றவனுமான இந் திரனுக்குச் சோமரசத்தைக் கொடுங்கள். இந்திரனை சோமபானத்தில் குளிப்பாட் டுங்கள்

------------------------(ரிக் 2145)

இந்த யோக்கியதையில் உள்ள குடிகாரன்கள் எல்லாம் இந்து மதத்தில் கட வுள்களாக வைத்துக் கொண்டு, எங்கோ அமெரிக்காவில் ஒரு தனியார் நிறுவனம் காளியின் பெயரால் பீர் விற்கிறது என்றவுடன் மீசை(?) துடிப்பது ஏன்?
இந்து மதத்தில் கற்பழிக்காத கடவுள் உண்டா? கொலை செய்யாத கடவுள் உண்டா?

பெற்ற மகள் சரசுவதியையே பெண்டாண்ட வன்தானே - இந்து மதத்தின் படைப்புக் கடவுள் என்று கூறப்படும் பிர்மா!


இதைவிடக் கேவலம் உலகத்தில் எங்கே இருக்கிறது? மனிதர்களையே நெருப்பில் போட்டுப் பொசுக்கி யாகம் நடத்தியவர்கள் நல்லது பற்றி யெல்லாம் பேச நாக்கைச் சுழற்றலாமா?

சிவபுரம் நடராசன் சிலை கடத்திக் கொண்டு செல்லப்படவில்லையா? அதனை விலை கொடுத்து வாங்கிய நாட்ரன் என்பார். அந்தச் சிலையின் கையில் இருந்த தட்டினை சிகரெட் சாம்பலைத் தட்டுவதற்குப் பயன்படுத்திக் கொண் டாரே! (ஹளா கூசயல) திரிபுரம் எரித்ததாகக் கதை கட்டுகிறார்களே - அந்த சிவனான நடராசன், நாட்ரன் பிரபுவை என்ன செய்து கிழித்தான்? பேசாமல் கண்டு கொள்ளாமல் செல்லுங்கள் - அதுவரை நல்லது.

--------------- மயிலாடன் அவர்கள் 17-5-2012 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

11.5.12

பெரியார்பொதுவாழ்வின்முன்னுரைஅன்னைநாகம்மையார்



இன்று அன்னை நாகம்மையார் நினைவு நாள் (1933) சாதாரண குடும்பத்தில் பிறந்த இந்தப் பெண்மணி செல்வச் செழுமையில் திளைத்த ஈ.வெ. ராமசாமி அவர்களை கைப்பிடித்தார். அந்தக் கால கட்டத்திலேயே இருவரும் ஒருவரை ஒருவர் விரும்பிப் பிடிவாதமாக இருந்து திருமணம் செய்து கொள்வது என்பது சாதாரணமானதல்ல.

வைதிகப் பழக்க வழக்கத்தில் வளர்ந்த இந்தப் பெண் சுட்டெரிக்கும் பகுத்தறிவுச் சூரியனின் வெப்பத்தைத் எதிர் கொள்வதில் மூச்சுத் திணறியவர்தான்.

பெரியாரிடமா நடக்கும்? தம் வழிக்குக் கொண்டுவர பல உபாயங்களை மேற் கொண்டு வெற்றியும் பெற்றார்.

நான் மட்டும்தான் பகுத்தறிவுவாதி - வீட்டில் அப்படி இல்லை என்று சொல்பவர் களுக்கு இது ஒரு பாடம்! குடும்பத்தைத் திருத்தாத நீயா குவலயத்தைத் திருத்தப் போகிறாய்? என்ற கேள்வியை அனாவசியமானதாகக் கருத முடியாதே!

எந்த அளவுக்கு அம்மை யார் தயாரிக்கப்பட்டார்? கள்ளுக்கடை மறியலைத் தலைமை தாங்கி நடத்தும் அளவுக்கு -காங்கிரஸ் தலைவர் காந்தியாரின் கவனத்தையும், கருத்தையும் கவரும் அளவுக்குத் திற மையை வெளிப்படுத்தியவர்.

சட்டமறுப்பு இயக்கத்தை நிறுத்துவது என் கையில் இல்லை. ஈரோட்டில் இருக்கும் இருபெண்மணிகளின் கைகளில் (தந்தை பெரியாரின் இணையர் நாகம் மையார் - தங்கை எஸ்.ஆர். கண்ணம்மாள்) இருக்கிறது என்று காந்தியார் மதிக்கும் அளவுக்கு நிமிர்ந்து நின்றார். வைக்கம் தீண்டாமை ஒழிப்புப் போராட்டத்தில் தந்தை பெரியார் சிறைப்பட நேர்ந்தபோது, அப்போராட் டத்தைத் தலைமை தாங்கி நடத்தும் அளவுக்கு அவர் உயர்ந்தார்.

அய்ரோப்பிய நாடுகளுக்கு அவரது துணைவர் பெரியார் சுற்றுப் பயணம் செய்தபோது இயக்கத்தையும், குடிஅரசு இதழையும் நிருவகிக்கும் அளவுக்குத் திறமை பெற்றார்.

தம் துணைவரோடு சிங்கப்பூர் சென்று திரும்பிய காலை அன்பின் மிகுதியால் தங்களுக்குப் பரிசு பொருள் என்ன வேண்டும் என்று அம்மக்கள் கேட்ட பொழுது நீங்கள் எல்லாம் இங்கு சுயமரியாதை இயக்கத்தைப் பரப்பி வருகிறீர்களே அந்த அன்பு போதும்! என்று சொல்லும் அளவுக்குப் பக்குவம் பெற்றார். அகில இந்திய காங்கிரஸ் கட்சி உறுப்பினர் என்னும் நிலையை அடையும் அளவுக்கு பிரபலமானார். சுயமரியாதைத் திருமணங்களைத் தலைமை தாங்கி நடத்தும் அளவுக்கு முன்னேறினார்.


வீட்டுக்கு வருவோரை வரவேற்று விருந்தோம்புவதில் அவர் ஒரு தாய். எந்த நேரத்தில் சென்றாலும் சூடாக எப்படி அந்த சுவையான தோசை கிடைக்கிறதோ என்று ஆச்சாரியார் ஆயாசப்படும் அளவுக்குச் சிறந்தவர்.

தந்தை பெரியார் அவர்களின் பொது வாழ்வின் முன்னுரை அன்னை நாகம் மையார் - பின்னுரை அன்னை மணியம்மையார்.

--------------- மயிலாடன் அவர்கள் 11-5-2012 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

4.5.12

அலெக்ஸ் பால்மேனன் கடத்தப்பட்டதற்கு காரணம் கடவுளா?

சத்தீஷ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்டுகளால் கடத்தப்பட்ட மாவட்ட ஆட்சியர் அலெக்ஸ் பால்மேனன் நேற்று விடுதலை செய்யப்பட்டார் என்ற செய்தி மகிழ்ச்சிக்கு உரியதே!

இவரின் விடுதலைக்காக சத்தீஷ்கர் மாநில அரசு உட்பட இந்தியா வில் உள்ள கட்சிகளுக்கு அப்பாற்பட்ட மக்களும், தலைவர்களும், அமைப்புகளும், தனி நபர்களும் குரல் கொடுத்துள்ளனர்.

அகில இந்திய அளவில் கொடுக்கப்பட்ட இத்தகைய அழுத்தத் தினால்தான் மாவட்ட ஆட்சியர் மாவோயிஸ்டுகளால் விடுவிக்கப் பட்டார்.

உண்மைகள் இவ்வாறு இருக்க, ஊடகங்கள் பரப்பும் தகவல்கள் எந்தத் திசையில் இருக்கின்றன?

சர்வ மதப் பிரார்த்தனைகளாலும் கடவுளின் கருணையாலும் தான் அவர் விடுவிக்கப்பட்டார் என்று திட்டமிட்டுப் பரப்புகின்றனவே - இவை அறிவு நாணயம்தானா?

மாவட்ட ஆட்சியர் அலெக்ஸ் பால்மேனன் விடுதலை செய்யப்பட்ட தற்குக் காரணம் கட வுளின் கருணை என்றால் மாவோயிஸ்டுகளால் அவர் கடத்தப்பட்டாரே - அதற்கு யார் காரணமாம்?

அதற்கும் கடவுள் தான் காரணம் என்று சொல்ல முன்வருவார்களா? அப்படி அவர்கள் சொல்ல வேண்டும் அல்லவா!

கடத்தப்பட்டதற்குக் காரணம் கடவுள் அல்ல - அது மேனனின் தலையெழுத்து என்று சொல்லித் தப்பிக்கப் போகி றார்களா?

பரிதாபம்! கடவுளைக் காப்பாற்ற இந்த மக்கள் எவ்வளவு பாடுபடுகிறார்கள் பார்த்தீர்களா? எல்லாம் வல்லவர் கடவுள் என்று ஒரு பக்கத்தில் சொல்லிக் கொண்டு இன்னொரு பக்கத்தில் கடவுள் இருக்கிறார்; அவருக்குச் சக்தியிருக்கிறது என்பதை நிரூபிக்க, இதுபோன்ற சம்பந்தா சம்பந்தம் இல்லாத இடங்களில் எல்லாம் கட வுளைத் திணிக்க முயலும் பேதைமையை என்ன சொல்ல!


மனித முயற்சிகளால் தான் மேனன் விடுதலையானார் - அதனைக் கொச்சைப்படுத்த வேண் டாம்!

----------- மயிலாடன் அவர்கள் 4-5-2012 “விடுதலை”யில் எழுதிய கட்டுரை

20.4.12

உ.வே.சா.வின் தமிழ்ப் பற்றின் தன்மை?


உ.வே.சா


ஓர் ஏழை வேலைக் காரனைப் பார்த்து சோறு தின்றாயா என்று கேட்கலாம்; ஆனால் ஒரு கனவானைப் பார்த்து போஜனம் ஆயிற்றா என்று கேட்க வேண் டும். துறவிகளைப் பார்த்து பிக்ஷை ஆயிற்றா என்று கேட்க வேண் டும்

--------------- 1942இல் வானொலியில் உ.வே.சா.வின் பேச்சிலிருந்து இது தரப்படுகிறது.

இதன் மூலம் உ.வே. சாமிநாதய்யரின் தமிழ்ப் பற்றின் தன்மையும், வருணாசிரமக் கண்ணோட்டமும், முதலாளித்துவ மனப்பான்மையும் பளிச் என விளங்குமே!

இப்பொழுது உ.வே.சா. எங்கிருந்து வந்தார்? இந்த விமர்சனம் எதற்காக? என்ற வினாக்கள் எழுலாம்.

திருவல்லிக்கேணி கலாச்சார அகாதமி சார்பில் கஸ்தூரி சீனிவாசன் நூலகத்தின் பொன் விழா மற்றும் உ.வே. சாமி நாதய்யரின் படத்திறப்பு விழாவும் நடைபெற்றுள்ளன.

உ.வே.சா. படத்தினைத் திறந்து வைத்த தினமணி ஆசிரியர் திருவாளர் கே. வைத் தியநாதய்யர் உரையாற்றுகையில் தமிழ் செம்மொழியானதற்குக் காரணம் உ.வே.சா என்று பேசியுள்ளார்.

இது உண்மை என்றால் தமிழ் செம்மொழியாக எவ்வளவோ ஆண்டுகளுக்கு முன் வந்திருக்க வேண்டுமே! ஏன் வரவில்லை? மத்தியில் பிஜேபி ஆட்சியின்போது ஏன் கொண்டு வரப்படவில்லை?

தி.மு.க. ஆட்சியில் முதல் அமைச்சர் கலைஞர் அவர்களின் தளரா முயற்சியால் அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் தமிழ் செம்மொழி ஆனதை மனந்திறந்து ஏற்றுக் கொள்ள முடியாத ஆற்றாமையால் இப்படிப் பேசி யுள்ளார் என்றே கருத வேண் டும்.

கோவையில் நடைபெற்ற உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டின் வரவேற்புக் குழு ஒன்றில் அங்கம் வகிப்பதற்கு இதே வைத்தியநாதய்யர் எப்படியெல்லாம் முரண்டு பிடித்தார் என்பது நமக்குத் தெரியாதா?

தமிழ்செம்மொழியானால் வீட்டுக்கு வீடு பிரியாணி பொட்டலம் வருமா என்று கேட்ட தினமலர்; செம்மொழி மாநாட் டுக்கு எதற்காக அரசு விடுமுறை என்று எழுதிய துக்ளக்குக்கு தினமணி சவுக்கடி கொடுத்திருந்தால் இப்பொழுது தமிழ் செம்மொழி ஆனது பற்றிப் பேச திருவாளர் வைத்தியநாத அய்யர்வாளுக்குத் தகுதி வந்திருக்கக் கூடும்.

உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் தமிழ் செம்மொழி ஆனதை சாக்காகக் கொண்டுதான் இப்பொழுது சமஸ்கிருதமும் அந்தப் பட்டியல் இடம் பிடித்தது என்பதை எந்தப் பார்ப்பனராவது அவர்களின் எந்த ஏடாவது - இதழாவது தெரிவித்ததுண்டா?

இன்னொரு கூடுதல் தகவல்:

தமிழைச் செம்மொழி என அறிவிக்க வேண்டும் என்று 1918ஆம் ஆண்டில் நீதிக்கட்சி மாநாட்டுத் தீர்மானம் கூறுகிறது.

1918 மார்ச் 30, 31 ஆகிய நாட்களில் தஞ்சை, திருச்சி பார்ப்பனரல்லாதார் முதல் மாநாடு நடைபெற்றது. அம்மா நாட்டுத் தீர்மானங்களில் ஒன்று.
தீர்மானம் 8(ஆ)

எல்லாப் பழைமையான மொழிகளைப் போல பழைமையான, வளமான, உயர்தரமாக உருவாக்கப்பட்ட பல, திறன்பட்ட இலக்கியங்களைக் கொண்டது தமிழ் மொழி. இது பல்கலைக்கழகத்தால் பாரசீக, அரேபிய, சமஸ்கிருத மொழிகட்கு ஈடாக மதிக்கப்பட்டுச் செம்மொழி என ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும்.

முன்மொழிந்தவர்: திரு. ஜே.பி. நல்லுசாமி பிள்ளை பி.ஏ.பி.எல். மதுரை.

வழிமொழிந்தவர்: திரு. ந.மு. வேங்கடசாமி நாட்டார். தமிழ்ப் பண்டிதர், எஸ்.பி.ஜி. கல்லூரி, திருச்சிராப்பள்ளி.

ஆதரித்தவர்: திருமதி. அலர்மேலு மங்கை தாயாரம் மாள், சென்னை.

தீர்மானம் நிறைவேறியது. அரசு ஆணையிலும் பதிவு செய்யப்பட்டது.

--------------- மயிலாடன் அவர்கள் 19-4-2012 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

6.4.12

அய்ந்தொழிலையும்இறைவன்இடைவிடாமல்செய்து கொண்டேஇருக்கிறாரா?


மயிலை கபாலீசுவரர் கோவில் பங்குனித் திருவிழாவின் இறுதி நாளில் கூத்தப் பெருமான் திருக்காட்சி நடக்கும். சிவபிரானின் தொன்மையான திருக்கோலங்களில் ஒன்றான கூத்தப் பெருமான் திருவடிவத்தில், வலது பின் கையில் ஏந்தியுள்ள உடுக்கை படைப்புத் தொழிலைக் குறிக்கும்.

அபயகரம், காத்தல் தொழிலைக் குறிக்கும். இடது பின்னணியில் உள்ள நெருப்பு அழித்தலைக் குறிப்பிடுகிறது. ஊன்றிய திருவடி அல்லது குஞ்சிதபாதம் அருளைக் குறிக்கும். ஆக அய்ந்தொழிலையும் இறைவன் இடைவிடாமல் செய்து கொண்டே இருக்கிறார் என்று ஒரு பார்ப்பன ஏடு சிலாகிக்கிறது.

பொதுவாக ஊடகக்காரர்கள் அரசியல் பிரச்சினை என்றால் முடி பிளந்து, அணுவை உடைத்து ஆராய்ச்சி சக்ராயுதத்தை ஏவுவார்கள்.

அதே நேரத்தில் இது போன்றவற்றில் எறும்பின் கால் முனையளவுக்குக் கூட அறிவைப் பயன்படுத்தாது அப்பட்டமான முட்டாள்தனக் கடலில் மூழ்கி எழுந்து முத்து முத்தாக எழுதுகிறார்களே, வெளியிடுகிறார்களே -இதை என்ன சொல்வது?

இவர்கள் முட்டாள்களா? அல்ல.. அல்ல.. இப்படிப் பரப்புகிறவர்களை அயோக்கியர்கள் என்று தந்தை பெரியார் கணித்தது கடல் போன்ற உண்மையல்லவா!

இந்த அய்ந்தையும் செய்வது திருக்கூத்தர் பெருமான் என்றால் - நாட்டில் நிலவும் அத்தனை தாழ்வுக்கும், வறுமைக்கும், கொள்ளைக்கும் சுரண்டலுக்கும், ஏற்றத் தாழ்வுகளுக்கும் அவன்தானே பொறுப் பாளி?

காவிரியில் தண்ணீர் வரவில்லையென்றால் கருநாடகத்தோடு ஏன் மோத வேண்டும்?

எல்லையில் எந்த நேரத்தில் என்ன நடக்குமோ என்ற திகிலில் பனிக் கட்டிக்காட்டில் நமது சிப்பாய்கள் ஏன் இரவும், பகலுமாக, துப்பாக்கியும் கையுமாக நிற்க வேண்டும்?

அரசு ஏன்? அய்ந் தாண்டுத் திட்டங்கள் ஏன்? மருத்துவமனைகள் ஏன்? மக்கள் நலத் திட்டங்களும்தான் ஏன்? ஏன்? ஏன்?

நாணயமாகப் பதில் சொல்லியாக வேண்டும். பெங்களூருவில், திருவள்ளுவர் சிலையைத் திறந்தால், காவிரியில் கரை புரண்டு தண்ணீர் வருமா என்று பேனா வைத் தூக்கிக் கொண்டு புறப்படும் இந்த எழுத்துச் சண்டியர்கள், இந்த அய்ந்து தொழிலையும் சரிவர செய்யாத கடமை தவறிய கூத்தனை நோக்கி கடப்பாறைகளைத் தூக்கிக் கொண்டு கிளம்ப வேண்டாமா? குறைந்தபட்சம் கிளம்பும்படி பக்தர்களுக்குத் தான் வழிகாட்ட வேண் டாமா?

----------------- மயிலாடன் அவர்கள் 6-5-2012 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

5.4.12

பன்றிக்காய்ச்சல் கிரிக்கெட்நோய் நேரக்கொல்லியே!



இந்தியா ஏழை நாடாம்? அய்.பி.எல். 20-20 கிரிக்கெட் இந்தியாவில் நேற்று முதல் தொடங்கி விட்டது. பெரிய பெரிய பண முதலாளிகள் கிரிக்கெட் விளையாட்டுக்காரர்களை அடிமைச் சந்தையில் வாங்கும் பொருள்களாக்கி விட்டனர். சாதாரண அடிமைகள் அல்ல விலை உயர்ந்த அடிமைகள் இவர்கள். பணம் என்று வந்து விட்டால் மானம்! வெட்கம்! ஏது?

நிமிடம் ஒன்றுக்கு விளையாட ரூ.1200 மட்டும் தானாம். வெளிநாடுகளிலிருந்து இங்கு வந்து விளையாடுபவர்கள், கிரிக்கெட் டிலிருந்து ஓய்வு பெற்றாலும் அவர்களுக்கு ஓய்வூதியத்தையும் வழங்கும் தாராள உள்ளம் - இந்திய முதலாளி மார்களுக்கு.

இந்தப் போட்டிகளை ஒளிபரப்பிட ஸ்டார் தொலைக்காட்சியுடன் ஒப்பந்தம்; இந்தவகையில் எவ்வளவு தொகை இந்தி யக் கிரிக்கெட் குழுமத் துக்குக் கிடைக்கப் போகிறது தெரியுமா? கொஞ்சம் கொஞ்சம்தான் 3851 கோடி ரூபாய் தானாம். (மக்கள் தொகையில் 77 சதவிகிதத்தினர் நாள் ஒன்றுக்கு ரூ.20 மட்டுமே ஈட்டும் நாடு இது!).

இந்தச் சோம்பேறி விளையாட்டைப் பார்ப்பதற்கு அனுமதிச் சீட்டை வாங்கிட நாள் முழுவதும் வரிசையில் நிற்கும் நம் நாட்டு வீரதீர இளைஞர்களை எதைக் கொண்டு சாற்ற?

நமது கழகத் தோழர்கள் சித்தார்த்தன், பெரியார் நேசன் குழுவினர் நடத்தும் வீதி நாடகத்தில் இந்தக் கிரிக்கெட் பற்றி நடத்தும் காட்சியை வீதிக்கு வீதி நடத்தினால்கூட நல்லது.

இந்தக் பன்றிக் காய்ச்சல் கிரிக்கெட் நோய், நேரக் கொல்லி மட்டுமல்ல; முட்டாள் தனத்தை வட்டி போட்டு குட்டிப் போட்டு வளர்த்து வருகிறது. கையில் கயிறு, கழுத்தில் உருத்திராட்ச மாலைகள் கத்தை கத்தையாக! இவர்கள் விளை யாட்டு வீரர்களா? சாமியார் மடத்து எடுபிடிகளா?

குறிப்பிட்ட குழுவினர் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக யாகங்கள் கூட நடத்துகின்றனர் - இந்தப் பாரத புண்ணிய பூமி புத்திரர்கள்.

இந்தத் தொற்று வியாதி, பாமர மக்கள் மத் தியில்கூட பரவி விட்டது. கிராமத்து வயல்வெளி களில்கூட கிரிக்கெட் விளையாட்டு!

இந்தக் கேடுகெட்ட நிலையை உற்பத்தி செய்த தில் நம் நாட்டுத் தொலைக் காட்சிகள்தான் புண்ணியம் கட்டிக் கொள்ள வேண்டும்.

கால் பந்தாட்டத்திலோ, சடுகுடு விளையாட்டிலோ கலந்து கொள்ளும் ஒரே ஒரு பார்ப்பானைக் காட் டுங்கள் பார்க்கலாம். 120 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியா, உலகக் கால் பந்தாட்டத்தில் உலகத் தகுதி நாடுகளின் பட்டிய லில்கூட இடம் பெற முடியாத நிலை!

பார்ப்பனீயத்தால் நாடு பாழ்பட்டது ஒரு துறையா, இரு துறைகளா! எல்லாத் துறைகளும்தான்.

-------------------- மயிலாடன் அவர்கள் 5-4-2012 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை