Search This Blog

27.2.18

பார்ப்பனர்களைப் பொறுத்தவரை கொட்டினால்தான் தேள்!-ஆப்பதனை அசைத்துவிட்ட அய்.அய்.டி.


சென்னை அய்.அய்.டி.யில் மத்திய அமைச்சர்கள் இருவர் பங்கேற்ற  நிகழ்ச்சியில் (26.2.2018) தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் புறக்கணிக்கப்பட்டு, சமஸ்கிருதப் பாடல் பாடப்பட்டுள்ளது. இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், அய்.அய்.டி. இயக்குநரான பாஸ்கர் ராமமூர்த்தி என்ற பார்ப்பனர் தெரிவித்துள்ள கருத்து ஆணவத்தின் உச்சியில் நின்று கொக்கரிப்பதாகும்.
‘‘நாங்கள் எந்தப் பாடலைப் பாடவேண்டும் என நிர்ப்பந் திப்பதில்லை. மாணவர்களின் விருப்பப்படி பாடுகிறார்கள். சில நேரங்களில் இந்தியில் பாடுவர்; மராட்டியில் பாடுவர். இதை சர்ச்சையாக்க விரும்பினால், உங்கள் விருப்பம்; எதிர்காலத்தில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாட வைப்போம்'' என்று கூறியுள்ளார்.
இது சரியான, நியாயமான விளக்கமா? அரசு நிர்வாகம் என்றால், அதற்கென்று விதிமுறைகள் கிடையாதா? மாணவர்கள் விருப்பத்துக்குப் பாடலாமா? மாணவர்கள் விருப்பம் இந்தப் பாடல் என்று  முன்கூட்டியே முடிவு செய்யப்பட்டதா? திடீரென்று அனைத்து மாணவர்களும் சமஸ்கிருதப் பாடலை ஒரே மாதிரியாகப் பாடியது எப்படி?
பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் அவர்களுக்குத் தெரிந்த மொழியில் பாடுகின்றனர் என்கிறாரே இயக்குநர்,  அய்.அய்.டி.யில் படிக்கும் மாணவர்களில் எத்தனைப் பேர்களுக்கு சமஸ்கிருதம் தெரியும் - கணக்கெடுத்துக் கூறு வார்களா?
தெரிந்த மொழிகளில் பாடுவோர் என்றால், ஒரே நேரத்தில் அவரவர்களுக்குத் தெரிந்த மொழியில் கடவுள் வாழ்த்துப் பாடலாமா?
பல்வேறு மதங்களைச் சார்ந்தவர்கள், மதநம்பிக்கை இல்லாதவர்கள் என்று பல நிலைகளில் மாணவர்கள் படிக்கும் நிலையில், குறிப்பிட்ட இந்து மதத்தின் பாடலை மட்டும் பாடுவது இந்திய அரசமைப்புச் சட்டத்தின் மதச்சார்பின்மைக்கு விரோதம் இல்லையா?
இதை சர்ச்சையாக்கினால் உங்கள் விருப்பம் என்று இயக் குநர் கூறும் கருத்தின் தொனி எந்த வகையைச் சார்ந்தது? நாங்கள் அப்படித்தான் செய்வோம் - உங்களால் ஆனதைப் பார்த்துக் கொள்ளுங்கள் என்று சவால் விடுகிறாரா? முண்டா தட்டுகிறாரா?
அரசு விழா என்றால், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடப் படவேண்டும் என்பது தமிழ்நாட்டில் சட்ட விதிமுறைகள் இருக்கின்றன.
அதற்குக் கட்டுப்படவேண்டியது ஓர் அரசு நிறுவனத்தின் தவிர்க்க முடியாத அடிப்படைக் கடமையாகும். அதனை மீறுவது கண்டிப்பாக சட்ட மீறலாகும்.
இதற்காகவே சென்னை அய்.அய்.டி. இயக்குநர்மீது வழக்குப் பதிவு செய்து சட்டப்படியான நடவடிக்கையை மேற்கொள்ள இடம் இருக்கத்தான் செய்கிறது.
ஆனால், அய்.அய்.டி. என்பது மத்திய அரசு நிறுவனம் - சம்பந்தப்பட்டவரோ அசல் பார்ப்பனர்.
மொத்தம் 536 பேராசிரியர்களுள், 86.57 விழுக்காடு பார்ப்பனர்கள் (454 பேர்). தாழ்த்தப்பட்டோர் 2.05 விழுக்காடு (சட்டப்படி அவர்களுக்குரிய இடம் 15 விழுக்காடு). பிற்படுத் தப்பட்டோர் 11.01 விழுக்காடு (27 விழுக்காடு சட்டப்படி அவர்களுக்கு உண்டு).
பழங்குடியினர் 0.31 விழுக்காடு (சட்டப்படி இவர்களுக் குரிய இடம் 7.5 விழுக்காடு).
இது தகவல் உரிமை சட்டத்தின்கீழ் பெறப்பட்ட புள்ளி விவரமாகும்.
நூற்றுக்கு மூன்று பேர்களாக உள்ள பார்ப்பனர்கள் அய்.அய்.டி.யில் 86.57 விழுக்காடு இடங்களை விழுங்கி, ஏப்பம் விடுகிறார்கள் என்றால், இந்தக் கொடுமைக்கு என்னதான் முடிவு - இதற்குப் பரிகாரம்தான் என்ன? என்பது கூர்மையான செங்குத்தான இந்திய அரசமைப்புச் சட்டத்தில் உறுதி செய்யப்பட்ட சட்டப்படியான வினாவாகும்.
பார்ப்பனர் பண்ணையம் கேட்பாரில்லை என்பதற்கு மத்திய அரசு நிறுவனமான இந்த அய்.அய்.டி.களே கண் கண்ட சாட்சிகளாகும்.
சட்ட விரோதமாக சமஸ்கிருதத்தில் கடவுள் வாழ்த்துப் பாடும் தைரியத்தைக் கொடுத்தது - இந்த அடங்காத்தனமான ஆரிய ஆதிக்கம்தானே!
தப்பித்தவறி இந்த நிறுவனத்தில் இடம் கிடைத்துப் படிக்கவரும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட இருபால் மாணவர்களும் முழுவதுமாகப் படித்து வெளியேறுவது என்பது  முயற்கொம்பே! பல மாணவர்கள் தற்கொலை கூட செய்துகொண்டதுண்டு.
தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்குப் பதிலாக சமஸ்கிரு தத்தில் பாடியது என்பது - இந்தப் பின்னணியின் திமிர் கொண்ட தாக்கமே!
பார்ப்பனர்கள் முன்புத்தி இல்லாதவர்கள் என்பார் தந்தை பெரியார். தமிழ்நாட்டில் எதில் கை வைக்கக்கூடாதோ, மூக்கை நுழைக்கக் கூடாதோ அந்த மின் கம்பியில் சிக்கிக் கொண்டு விட்டனர் பார்ப்பனர்கள்.
அதுதான் தந்தை பெரியாரால் கிளர்ந்து எழுப்பப்பட்டு இருக்கும் மொழிப் பிரச்சினையில் கை வைத்துவிட்டனர். கட்சிகளுக்குஅப்பாற்பட்டு,ஒருமுகமாகதமிழகத்தலை வர்கள் கண்டனக் கணைகளைக் கூர் மழுங்காது ஏவி விட்டுள்ளனர். இந்த உணர்வு ஒருமுகப்படுத்தப்பட்டு, கண் டன ஆர்ப்பாட்டத்தை திராவிடர் கழகம் ஒழுங்கு செய்யும்.
ஆப்பதனை அசைத்துவிட்டனர். பார்ப்பனர்களைப் பொறுத்தவரை கொட்டினால்தான் தேள்!
                  --------------------"விடுதலை’’ தலையங்கம் 27-02-2018

10.2.18

இந்து மதக்காரருக்கு மனம் புண்படுகிறதாம்! - பெரியார்

 
இந்து மதம் என்பதாக ஒரு மதம் இல்லை. இந்து மத ஆதாரம் என்பதாக நம்மைப் பயன்படுத்தும்படி செய்யப் பட்டிருப்பவை புராண இதிகாசங்களும், புராண இதிகாசக் கடவுள்களும்தாமே ஒழிய வேறில்லை.

இந்து மதத்தின் பெயரால் நம்மை நடந்து கொள்ளும்படி செய்திருப்பதெல்லாம் ஜாதிப் பிரிவுகளும், அப்பிரிவுகளில் நாம் கீழ் ஜாதியாய், பார்ப்பானின் தாசி-அடிமைப் பெண்ணின் மகனாக ஆக்கப்பட்டும், நம்மை அதை ஏற்கும்படியும் செய்திருப்பதுதான். இந்த நிலையில்தான், நாம் இந்தப் புராண நடப்புகளுக்கும், கடவுள்களுக்கும் விரோதமாய் நடக்கிறோம் என்றும், கண்டிக்கிறோம் என்றும், வெறுக்கிறோம் என்றும், இந்நடத்தைகளுக்காக நம்மை அரசாங்கம் தண்டிக்க வேண்டும் என்றும் பார்ப்பனர்கள் பாடுபடுகிறார்கள்.

புராணங்கள், இதிகாசங்கள் எல்லாம் பார்ப்பனர்களால் 2000, 3000 ஆண்டுக் காலத்திற்குள் எழுதப்பட்டவைகளேயாகும். அவற்றில் வரும் கடவுள்கள், அவற்றின் செய்கைகள் எல்லாம் அது போலவே, பார்ப்பனர் தங்கள் நலனுக்கேற்றபடி அவைகளுக்கு அமைத்து உருவாக்கி யவைகளே ஆகும்.

எந்தப் புராண, இதிகாச நடப்பும், கடவுள் செய்கையும் இன்றைய நிலைக்கு ஏற்றவை அல்லவே அல்ல. ஏனெனில், 2000, 3000 ஆண்டு களுக்கு முற்பட்டதென்றால், அந்தக் காலம் எப்படிப்பட்ட காலமாய், எவ்வளவு காட்டுமிராண்டி, முட்டாள்தனமான காலமாய் இருந் திருக்கும்! எனவே, அவை இன்றைய புதுமை, விஞ்ஞான, பகுத்தறிவு உணர்ச்சி கருத்துக் காலத்திற்கு ஏற்குமா? இவை ஏற்படுத்தப்பட்ட வெகு காலத்திற்குப் பிறகுதான் வேறுமதஸ்தர் களால் ஒரு கடவுள் என்பதும், ஒழுக்கம், நேர்மை என்பனவாகிய நல்ல குணங்கள் என்பவைகளும் கற்பிக்கப்பட்டனவாகும். இந்தக் கற்பனைகளுக்கு முன்பு கடவுள்கள் தன்மை, அவற்றின் நடப்புகள் எவ்வளவு அசிங்கமும், ஆபாசமும் அயோக்கியத் தனமுமானவை என்பதற்கு ஆதாரம் வேண்டு மென்றால், அவற்றின் யோக்கியதைகளை அவர்கள் எழுதி இருக்கிறபடி அவற்றில் உள்ளதை உள்ளபடி எடுத்துச் சொன்னாலே, தங்களுக்கு மன நோவையும், மானக் கேட்டையும் உண்டாக்கி விட்டதாகப் பதறித் துடித்து எந்த அக்கிரமமான காரியத்தைச் செய்தாவது என்ன மாய்மாலக் கூப்பாடு போட்டாவது மற்றவர்களுக்குத் தெரியாமல் மறைத்து விடலாம் என்று துடிக்கிறார்கள்.

உதாரணமாக, இவர்களால் உண்டாக்கப்பட்ட ஆதாரங்களில் உள்ளபடியே நாம் பிரம்மா, விஷ்ணு, சிவன் இவர்களைப் பற்றியோ, இவர்கள் மனைவிகளைப் பற்றியோ, அக்கால தெய்வீக மக்களைப் பற்றியோ, அவதாரங்களைப் பற்றியோ எடுத்துச் சொன்னால் இவர்களுக்கு மானக் கேடும், மனப் புண்ணும் ஏன் ஏற்படவேண்டும்? அந்தப்படி இல்லை, அது பொய், கற்பனை என்று பதில் கூறாமல் ஆத்திரப்படுவதென்றால் அவை மானாபிமானம் அறிவு இல்லாத காலத்தில் செய்யப்பட்டன என்றுதானே பொருள்! இப்படிப்பட்ட முட்டாள் தனமானதும் அயோக்கியத்தனம் என்று சொல்லக் கூடியதுமான காரியங்களை,  அவை இன்றைக்குப் பொருந்தா; யாரும் அவற்றை ஏற்க வேண்டிய தில்லை என்று யோக்கியமாய்ச் சொல்லி அவைகளை மறைத்து விட்டால் யாரும் அவற்றைக் குற்றம் சொல்லமாட்டார்கள்.

அப்படியல்லாமல்  அவற்றைப் பண்டிகைகளாக, உற்சவங்களாக, பழி தீர்க்கும் காரியங் களாகக் கொண்டாடுவது என்றால், இதற்குப் பரிகாரம் பதிலுக்குப் பதில் காரியங்கள் செய்யாமல் இருப்பதா?

உதாரணமாக, இராவணன் இராமன் மனைவியை எடுத்துப்போய்க் கற்பழித்து விட்டான் என்ற ஆத்திரத்தில் இராவணனைக் கொடியவனாக ஆக்கி மக்களுக்குப் பிரச்சாரம் செய்து அவன் உருவத்தை ஆண்டு தோறும் நெருப்பில் கொளுத்துகிறார்கள். அரசாங்கமே அதில் பங்கு கொள்ளுகிறது.

இந்த இராவணன் செய்கையின் உண்மை, ஆதாரப்படி அந்தப்படி இல்லை.
சீதை சம்மதித்தே இராவணனுடன் சென்றதாகவும், அவன் வீட்டிலேயே இருந்து வாழ்ந்ததாகவும், அதனால் சீதைக்குக் கர்ப்பம் ஏற்பட்டதாகவும் தான் ஆதாரத்தில் துருவிப் பார்த்தால் தெரிய வருகிறது.

மற்றும் தேடிப் பார்த்தால் இராமனே சீதையை இராவணன் அழைத்துப் போகவும் அதற்கு வசதி செய்யவும் ஏற்பாடு செய்தான் என்றும் சொல்வதற்கு ஆதாரங்கள் இருக்கின்றன.

மற்றும் இராவணன் ஆரியர்களுக்கு எதிரியாய் இருந்த தானாலேயே அவனைக் கொல்ல இந்த ஏற்பாடு செய்ததாகவும் ஆதாரங்கள் இருக்கின்றன.

இராவணனைப் பார்ப்பனர்கள் எரிக்கிறார்கள். அவமானப் படுத்துகிறார்கள் என்றால்,

நம்மையெல்லாம் சூத்திரர்கள், நான்காம் ஜாதியார்கள் ஆகவும், நம் பெண்களைப் பார்ப்பனர் அனுபவிக்கும் தாசிகளாகவும் ஆக்கி வைத்து அந்தப் படி சாஸ்திர தர்மங்கள் எழுதி வைத்துக்கொண்டு மேலே குறிப்பிட்ட இராமாயணத்திலேயே சூத்திரன் பிராமணனை (பார்ப்பானை)க் கடவுளாக வணங்காமல், கடவுளை நேராகக் காண வணங்கினான்.  அதனால் பிராமணனுக்குக் கேடு வந்தது; ஆகையால் அந்தச் சூத்திரனைத் துண்டு துண்டாக வெட்டி வதைக்கிறேன் என்று சொல்லி சித்திரவதை செய்து இராமன் கொன்றான் என்றால், அந்த ராமனை நெருப்பில் கொளுத்துவதோ அவமானம் செய்வதோ பெரும் குறையா கிவிடுமா? குற்றம் என்று கூறலாமா? என்பதுதான்சிந்திக்க வேண்டியதாகும். பார்ப்பனர் இதைக் குற்றமென்று சொல்வதற்குக் காரணம் தங்கள் உயர் நிலையைக் காப்பாற்றிக் கொள்ளவே ஒழிய வேறில்லை.

அது போலத்தான் சூத்திரர்கள் (பார்ப்பனர் தாசி மக்கள்) என்று பார்ப்பனரால் சொல்லப் படுகிற நாம் நம் இழிநிலையைப் போக்கிக் கொள்ள மான உணர்ச்சியோடு முயற்சிக்கிறோம்.  அதற்கு ஏற்றதைச் செய்கிறோம், செய்ய இருக்கிறோம். அதற்கேற்ற விலை கொடுக்கவும் தயாராக இருக்கிறோம்.

இதை மனம் புண்படுகிறவர்கள் உணர வேண்டுகிறோம்.

                 

-------------------------------   “உண்மை”, 14.2.1971

7.2.18

பார்ப்பன வைரி பாவாணர்

பாவாணரைப் பார்ப்பனர்கள் மறக்க மாட்டார்கள். காரணம், பார்ப் பனீய சமஸ்கிருத அடிவேருக்கு எரி மலைக் குழம்பினைப் புகுத்தியவர்.
‘‘பாவாணர் நினைவலைகள்’’ எனும் நூலினை அவரின் மகன் தே.மணி இவ்வாறு குறிப்பிடுகிறார்.
‘‘தமிழை வட மொழியினின்றும், தமிழனை ஆரியனிடமிருந்தும் மீட்க வேண்டுமென்பதே என் குறிக்கோள். அதற்கென்றே மொழியாராய்ச்சியைக் கற்றாய்ந்தேன். தமிழ் திராவிடத்திற்குத் தாயும், ஆரியத்திற்கு மூலமும் என்ற உண்மையை உலகமறியச் செய்ய வேண்டும்‘’ என்று பாவாணரின் கருத் தைப் பதிவு செய்துள்ளார் இந்நூலில்.
திருநெல்வேலி மாவட்டம் சங்க ரன் கோவில் திரு.ஞானமுத்தனார்- பரிபூரணம் அம்மையார் ஆகிய வாழ்விணையருக்குப் பத்தாவதாகிய கடைக்குட்டி மகனாகப் பிறந்தவர் தான் தேவநேயனார் (7.2.1902).
வாழ்நாள் எல்லாம் வறுமைச் செந்தேளால் கொட்டப்பட்டவர் என்றாலும், ஆரியத்தின் மூர்க்கக் கொம்பை தன் எழுத்தாணியால் முறித்துப் போட்ட மூண்ட பெரு நெருப்பாகக் கடைசிவரை கனன்றவர் அவர்!
1940 ஆம் ஆண்டில் மொழி ஆராய்ச்சி நூலான ‘‘ஒப்பியன் மொழி நூல்’’ ஒப்பானதும் மிக்கானதும் இல்லாத மேருமலைச் சிகரமாகும்.
அந்தோ, தமிழனின் நிலையை என்ன சொல்ல! அந்நூல் விற்பனைத் தளத்தில் வீழ்ந்துபட்டது. மிகுந்த பண நெருக்கடி, தந்தை பெரியார் வாயிலாக அரை விலைக்கு விற்க நேர்ந்தது என்று இந்நூலாசிரியரும், பாவாணரின் மகனுமான தே.மணி குறிப்பிட்டுள்ளார் (நூல் பக்கம் 37).
பாவாணரின் நெஞ்சில் வேர்ப் பிடித்து நின்ற அந்த வேழத்தின் வேகப் பாய்ச்சல் எத்தகையது?
சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழக அமைச்சர் திருவரங்கனாருக்குப் பாவாணர் எழுதிய கடிதம் அதற்கான ஆவணப் பெட்டகம்.
அது இதோ:
‘‘அன்பார்ந்த அய்யா,
நலம்; நலமாக.
கடந்த 5000 ஆண்டாகத் தமிழையே பேசித் தமிழாலேயே வயிறு வளர்த்துவரும் பார்ப்பனக் கயவர் சங்க காலத்திலிருந்து இதுவரை ஏராளமான தென்சொற்களையும், தென்னூல்களையும் கொஞ்சம் கொஞ்சமாகக் கொள்ளை கொண்டு, நமக்கும், நமது முன்னோர்க்கும் முட் டாட் பட்டங்கட்டி அகமகிழ்ந்து, தூற்றியது போதாதென்று தமிழ் மொழியையும், வடமொழி போல வழக்கொழிந்து சிதையும்படி வழிய மைத்து மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிபோடுவது போலக் குடியரசிற்கும் இந்திக்கும் இயைபு கற்பித்து, அதைச் சட்டசபைத் தேர்தல் நிகழ்ந்து பதவி பற்றும்வரை எழுதாக் கிளவியாக மட்டுமின்றி ஓதாக் கிளவியுமாக மறைத்துக் காத்துத் தீதுநலமறியாத கோடிக்கணக்கான பேதை மக்களின் நம்பிக்கையைப் பல்வகை விரகு நெறியிற் கவர்ந்து இன்று நட்டாற்றிற் கழுத்தறுப்பது போலத் திடுமென இந்தி கட்டாயக் கல்வியைத் தமிழரின் விருப்பத்தைக் கேளாதுஆங்கிலேயரினும்பன் மடங்கு ஆணவத்தோடும், அகங் காரத்தோடும் எடுத்தும் உரப்பியும் கனைத்துக் கூறி வருகின்றனர்’’ என்று அக்கடிதத்தில் அனல் கக்கியுள்ளார்.
சமஸ்கிருதம், இந்தி என்ற இரு பார்ப்பனக் கூறுகள் கொம்பைத் தீட்டிப் பாயும் இக்காலத்தில் பாவா ணரை உரிய முறையில் நினைவு கூரவேண்டாமா? நாட்டு மக்களும் கூர்மை பெறவேண்டாமா?

   ------------ மயிலாடன் அவர்கள் 7-2-2018 ‘விடுதலை’ யில் எழுதிய கட்டுரை