Search This Blog

30.4.08

அமாவாசை ஏன்?

அச்சோதை என்னும் புண்ணிய நதி வடிவமான பெண் மாரீ மக்களாகிய பிதுர்க்களுக்குக் குமாரி. இவள் தன் பிதுர்களால் நிருபிக்கப்பட்ட அச்சோதமென்னும் நதிக்கரையில் 1,000 வருஷம் தவஞ்செய்ய, பிதுர்க்கள் பிரத்தியட்சமாயினர். அவர்களுள் ஒருவ னாகிய மாவசு என்பவனை நாயகனாக எண்ண, அதனால் சுவர்க்கத் திலிருந்து தள்ளப்பட்டு, பூமியில் விழாது அந்தரத்தில் நின்று தவஞ் செய்தாள். அவள் வசமாகாத மாவசு இச்செய்தி நடந்த தினத்தை 'அமாவாசை'ஆக்கினான்.

(அபிதான சிந்தாமணி பக்கம் 26)

--------- நூல்: "இந்துமதப் பண்டிகைகள்" பக்கம் 46

சுயமரியாதை இயக்கம் செய்த புரட்சி

1899 ஆம் ஆண்டில் இருந்த நிலை

என்னுடைய கையிலே இருப்பது 1899 ஏறத்தாழ 109 ஆண்டுகளுக்கு முன்னாலே உங்களை அழைத்துப் போகின்றேன்.

சென்னையிலே ஒரு நாடகம். அந்த நாடகத்தை ஒட்டி ஒரு நோட்டீஸ் போடப்பட்டிருக்கின்றது. அதுவும் சென்னை தியேட்டரிலே. சென்னை இந்து விநோதசபை. அபிராம சுந்தரி சரித்திரம். செனை யானை கவுனியை அடுத்த வால் டாக்ஸ் ரோட்டில் அமைந்திருக்கும் ஸ்ரீ லட்சுமி விலாச நாடக சலையில் 1899 மார்ச் 21 செவ்வாய் கிழமை இரவு 9 மணி முதல் அபிராம சுந்தரி சரித்திர நாடகம் நடைபெறும். இது ஒரு புராண ராஜாக்கள் மாதிரியான நாடகம். அந்த காலத்திலே நோட்டீஸ் அடித்துப் பாட்டுக்கள் எல்லாம் போட்டிருப்பார்கள்.

நாடக விளம்பர நோட்டிஸ்

மக்களை மிகப் பெரிய அளவில் ஈர்ப்பதற்காக நாடக விளம் பர நோட்டிஸ். அந்த கதைகளை கொஞ்சம் எடுத்துக்காட்டி மக்கள் வரவேண்டும் என்பதற்காக போட்டிருப்பார்கள். அதில் போடப்பட்டிருந்த கட்டணம். ஷோபா ஒரு ரூபாய், அதாவது ஷோபாவில் அமருவதற்கு ஒரு ரூபாய் என்றால், நீங்கள் கற்பனை செய்து பாருங்கள். அடுத்து ரிசர்வ் சேர் 12 அணா, இண்டர்மீடியம் சேர் 8 அணா, அன் ரிசர்வேசன் 6 அணா, கேலரி 4 அணா, ஸ்ரீகளுக்கு பாய் 3 அணா.

அந்த காலத்தில் இப்படி எத்தனை வகையறா இருக்கிறது என்று பாருங்கள். பத்து வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு அரை டிக்கெட் 2 அணா. சண்டை சச்சரவு செய்பவர்களையும், சுருட்டு, லாகிரி வஸ்துகளுடன் வருபவர்களையும் பழைய டிக்கெட் இவைகளைக் கொண்டு வருபவர்களையும் போலிசாரிடம் ஒப்படைக்கப்படும். இதெல்லாம் நாடக நோட்டிசில் உள்ள கண்டிசன். விளம்பரத்தில் போட்டுவிட்டு, அடுத்ததுதான் மிகவும் முக்கியம். பஞ்சமர்களுக்கு இடமில்லை.

சென்னை தலைநகரில் நடந்த கொடுமை

இது எங்கே நடந்தது? சென்னை தலைநகரத்தில் நடந்த சம்பவம். ஒரு நூற்றாண்டுகளுக்கு முன்னாலே. நினைத்தால் எவ்வளவு பெரிய கொடுமையாக இருக்கிறது பாருங்கள்.
காசு கொடுத்து நாடகத்தைப் பார்க்க வருகின்றான். இலவசமாக அல்ல, ஒரு ரூபாய் இருந்தால் அவன் ஷோபாவில் போய் உட்காரலாம். பாய் வரையில் உண்டு. ஆனாலும் பொருளாதாரத்தில் இப்படி எல்லாம் வசதி இருந்து அவன் போனால்கூட அவன் பஞ்சமன் என்று சொன்னால், பஞ்சமர் களுக்கு நாடகம் பார்க்க இடம் இல்லை, அனுமதி இல்லை.
ஜாதிச் சான்றிதழோடு போகவேண்டுமா?

அப்படியானால் என்ன அர்த்தம்? இவன் ஜாதி சர்டிபி கேட்டோடு போகவேண்டும். சென்னை தலைநகரத்திலே பஞ்சமர்களுக்கு இடம் இல்லை. இப்படி இருந்த காலகட்டம். இதுதான் தமிழ்நாடு. சுயமரியாதை இயக்கம் பிறப்பதற்கு முன்னால் பெரியாருடைய மகத்துவமான தொண்டு உருவாவதற்கு முன்னால் சென்னை நகரத்திலே இருந்த நிலை. இன்னமும் இந்த நாட்டிலே பல இடங்களில் இரட்டை குவளைகள் இருக்கிறதே என்பதை எண்ணும்பொழுது நமக்கு உறுத்தல்களாக இருக்கின்றன.
பேதத்தை ஒழிக்கப் போராடிக் கொண்டிருக்கின்றோம்
அதையே உடைத்து நொறுக்க வேண்டும். இன்னமும் சுடுகாட்டில் கூட, கல்லறைகளில் கூட பேதம் இருக்கிறது. ஒழிக்கப்பட வேண்டும் என்று இன்றைக்குப் போராடிக் கொண்டிருக்கின்றோம். ஒரு நூற்றாண்டுக்கு முன்னாலே இருந்த நிலை இது இன்றைக்கு இப்படி ஒரு அறிக்கையை வெளியிட முடியுமா? பஞ்சமன் என்று சொல்லி இப்படி ஒரு துண்டறிக்கை அடித்தாலே அடித்தவனும் சரி, இதை விநியோகித்தவனும் சரி, அவன் குற்றவாளியாக கருதப்பட்டு கூண்டுக்குள்ளே சிறைச் சாலைக்குள்ளே தள்ளப்படக் கூடிய சூழ்நிலை ஏற்படும்.

சுயமரியாதை இயக்கம் செய்த புரட்சி

தாழ்ந்த ஜாதிக்காரன் என்று சொன்னாலே மிகப் பெரிய குற்றம் என்று ஆக்கப்பட்டிருக்கின்றது. தாழ்ந்த ஜாதிக்காரன் என்பது எப்படி வந்தது? இது என்ன வரம் கொடுத்து வந்ததா? அல்லது திடீரென்று சத்திய சாயிபாபா கையைத் தூக்கினால் பொத்தென்று விழுந்தது என்று ஏதாவது மாய மந்திரத்தில் வரவழைத்தது போன்று வந்ததா என்றால் இல்லை.
சுயமரியாதை இயக்கம் செய்த மகத்தான புரட்சிகளிலே தலையாய புரட்சி. அதுமட்டுமல்ல, நண்பர்களே, நீங்கள் சுருக்கமாகத் தெரிந்துகொள்ள வேண்டுமானால், இங்கே ஒரு சிறிய நூல் கிடைக்கும். பெரிய நூல் என்றால் பலர் படிப்ப தில்லை. படிப்பதற்குக் கூட கொஞ்சம் சோம்பல். அதற்காக உங்களுக்குத் தெரியுமா? என்று நாங்கள் வெளியிட்டிருக்கின்ற ஒரு சிறிய நூலிலே பல்வேறு சூழ் நிலைகளை எடுத்துக் காட்டியிருக்கின்றோம். இவைகளை நீங்கள் படிக்கவேண்டும். தெரிந்துகொள்ள வேண்டும். நாடகக் கொட்டைக்குள் போகக் கூடிய வாய்ப்பு மட்டும் கிடைக்கவில்லை என்று எண்ண வேண்டாம்.

பொருளாதாரமா? சமுதாயமா?

சுயமரியாதை இயக்கத்தினுடைய தாக்கம் ஏற்படுவதற்கு முன்னால 1935லே இன்றைக்கு ஏறத்தாழ 73 ஆண்டுகளுக்கு முன்னாலே என்ன சூழல் என்று சொன்னால் தமிழ் நாட்டிலே பேருந்துகளில் பஞ்சமர்களுக்கு இடமில்லை. பேருந்துகளில் பஞ்சமர்கள் ஏறக்கூடாது.
பொருளாதாரமா? சமுதாயமா? என்று கேட்பதற்கு சுலபமான விடை பொருளாதார மாற்றம் ஏற்பட்டால் எல்லாம் சரியாகப் போய்விடும் என்று ரொம்ப நாள் தவறாகச் சொல்லிக் கொண்டிருந்தார்கள். அவனிடம் காசு இருக்கிறது. ஆனால், அவனுக்கு காசு கொடுக்கக் கூடிய கட்டணம் கொடுக்கக் கூடிய தகுதி இருந்தாலும் அவனுக்கு இடமில்லை. ஜாதியினாலே அவன் கீழ்ஜாதி, அதற்கு ஏதாவது அடை யாளம் உண்டா? ஒன்றும் கிடையாது. ஜாதி என்பது ஒரு கற்பனை. அந்த கற்பனையை மனதிலே ஏற்றி ஏற்றி மிகப் பெரிய அளவுக்கு ஒரு மோசமான சூழ்நிலையை ஏற்படுத்தி விட்டார்கள்.

பேருந்தில் பஞ்சமர்களுக்கு இடமில்லை

பேருந்துகளுக்குரிய டிக்கெட்களிலும் பஞ்சமர்களுக்கு இடம் இல்லை என்று அச்சிட்டிருந்தார்கள். இதை மாற்றிய பெருமை தந்தை பெரியார் அவர்களுடைய கொள்கையிலே ஈடுபாடு கொண்ட சுயமரியாதை இயக்கத்திற்கு நிறுவனத் தலைவராக தந்தை பெரியார் அவர்கள் இருந்தாலும் டபிள்யூ பி.ஏ., சவுந்தர பாண்டியன் அவர்களை சுயமரியாதை இயக்கத்தினுடைய தலைவராக ஆக்கினார் பெரியார். சென்னையிலே பாண்டி பஜார் என்று அழைக்கப்பட்டு வந்தது. நம்முடைய முதல்வர் கலைஞர் அவர்கள் சவுந்திரபாண்டியன் அங்காடி என்று இப்பொழுது பெயர் வைத்திருக்கின்றார் (பலத்த கைதட்டல்). யாரோ பாண்டி என்று நினைக்கக்கூடிய ஒருவர்அல்ல என்று அண்மையிலே அந்த மறுமலர்ச்சியை நமது முதல்வர் அவர்கள் செய்திருக்கின்றார்கள்.
பேருந்துகளிலே பஞ்சமர்கள் ஏறக்கூடாது என்பதை டபிள்யூ பி.ஏ. சவுந்திரபாண்டியன்தான் அவர்கள் அதை ஒழித்தார்கள். சிறு சிறு நூல்களிலே இந்த இருக்கின்றன.
பல வகையில் உரிமை இல்லை

தெருக்களிலே நடக்க உரிமை இல்லை. படிக்க உரிமை இல்லை. ஒருவரைப் பார்க்க உரிமையில்லை. வாழ உரிமை இல்லை என்றிருந்த இடத்திலே சமுதாயத்தை மாற்றியமைத்த பெருமை தந்தை பெரியார் அவர்களையே சாரும். (கைதட்டல்).

------------------------ சென்னை பல்கலைக் கழகத்தில் ``தமிழக வரலாறும் சுயமரியாதை இயக்கமும் என்ற தலைப்பில் சிறப்புச் சொற்பொழிவு 17.4.2008 அன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியின் திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி அவர்கள் கலந்து கொண்டு ஆற்றிய சிறப்புரை : ----- "விடுதலை" 22-4-2008

29.4.08

பெரியாரும் - நெரிஞ்சிப் பேட்டை சாமியாரும்

ஒரு தடவை, எங்கள் ஊருக்கு நெரிஞ்சிப் பேட்டை சாமியார் (சங்கராச்சாரி போன்றவர்) வந்தார். அது 1902-ம் வருஷமாய் இருக்கலாம்; அவருக்கு, எங்கள் ஊர் நகரத்துச் செட்டியார் வகுப்பு வியாபாரிகள் தடபுடலாய் பிக்ஷ (பிட்சை) நடத்துகிறார்கள். எங்கள் தகப்பனாரும் 50 ரூபா கொடுத்தார். பெரிய சமாராதனை நடக்கிறது. அந்தச் சாமியார் தம்பி ஒரு மைனர்; கடன்காரன்; அவனும் கூட வந்திருந்தான். அவன், ஈரோட்டில் ஒரு வியாபாரிக்குக் கடன் கொடுக்க வேண்டும்; அது கோர்ட்டில் டிக்ரி ஆகி இருந்தது. அந்தச் சமயம், அந்த வியாபாரி அக்கடனை வசூல் செய்ய, என்னை யோசனை கேட்டார். நான் அவசரமாய், ‘படிபோட்டு, வாரண்டு கொண்டுவா' என்று சொன்னேன். உடனே நிறைவேற்று விண்ணப்பம் போட்டு, அன்றே, வாரண்டு வந்தது. மறுநாள், பகல் 12 மணிக்கு வாரண்டு எடுத்துக் கொண்டு' சேவகனுடன் அந்த வியாபாரி என்னிடம் வந்தார்.

நான் அவர்களைக் கூட்டிக் கொண்டு, ஈரோட்டில் சாமியார் இறங்கியிருந்த ‘‘எல்லைய்யர் சத்திரம்'' என்கின்ற இடத்துக்குப் போனேன். உள்ளே, சுமார் 200 பேர்கள், சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள்; சத்திரத்திற்குப் பக்கத்தில், வெளியில், நான் நின்று கொண்டு, சாமியார் தம்பிக்கு நான் ஆள் அனுப்பினேன்; உள்ளே இருந்து, அவர் ரோட்டுக்கு வந்தார் சேவகனுக்கு கைகாட்டி, ‘இவர்தான்' என்று சொன்னேன்.

சாமியார் தம்பி, ‘வாரண்டு' என்று தெரிந்ததும், ஓடினார். நான் கூடவே கையைப் பிடித்துக் கொண்டு, இழுத்துக் கொண்டே போனேன்; திமிரிவிட்டு - ‘சட்'டென்று வீட்டுக்குள் புகுந்து, வெளிக் கதவைத் தாளிட்டுக் கொண்டான். நான் உடனே தூணைப் பிடித்து, தாழ்வாரத்தின் மீது ஏறி, ஓடுகள் உடைய ஓடி, புறக்கடைப் பக்கம் வீட்டிற்குள் குதித்து சாப்பாடு இருக்கும் இடத்தையும், பார்ப்பனர் சாப்பிடும் பந்தியையும் தாண்டி வந்து, வீதிக் கதவைத் திறந்து விட்டு, சாயபு சேவகனைக் கூப்பிட்டு ஒரு அறைக்குள் ஒளிந்து கொண்ட, சாமியாரின் தம்பி கையைப் பிடித்து ஒப்பிவித்தேன். அவன் திமிரினான்; என் கடை ஆட்கள் நாலைந்து பேர்கள் அங்கிருந்தவர்களை- 'இவனைப் பிடித்து, வெளியில் தூக்கிக் கொண்டு போங்கள்' என்று சொன்னேன்; தூக்கி வந்து விட்டார்கள்.

கூட்டம் சேர்ந்துவிட்டது. சாப்பிட்டுக் கொண்டிருந்த பார்ப்பனர்கள் சுமார் 200 பேர்கள், அரைச் சாப்பாட்டோடு இலையை விட்டெழுந்து கை கழுவிக் கொண்டார்கள். ஆளைப் பிடித்து ஒப்புவித்துவிட்டு நான் நேரே வீட்டிற்கு சாப்பாட்டுக்குப் போய் விட்டேன். சாமியார் கோஷ்டி போலீசில் பிராது எழுதி வைத்துவிட்டு, டெபுடி கலெக்டரிடம் பிராது கொடுக்க ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதாக எனக்குத் தெரிய வந்தது, பிட்ஷை நடத்துபவர்கள் வியாபாரிகள்; என் தகப்பனாரும் 50 ரூபா கொடுத்திருக்கிறார்; ஈரோடு நகரத்துச் செட்டிமார் பெரிதும் என் தகப்பனாரிடம் லேவாதேவி செய்பவர்கள்; சினேகமுறையில் பழகுபவர்கள்; ஈரோடு வக்கீல்களும் பிராமணர்களும் என் தகப்பனாரிடம் தாக்ஷன்ய மனோபாவமுடையவர்கள்; ‘என்ன நடக்கிறது, என்று பார்க்கலாம்' என்றே கலக்கத்துடன், சாப்பிட்டுவிட்டு கடைக்கு வந்தேன்.

கடை வீதியில், வழிநெடுக இதைப்பற்றிப் பெரிய பிரஸ்தாபம், கடையில் வந்து நான் உட்கார்ந்த உடன் ‘‘நீ அந்தப் பார்ப்பானைப் பிடித்துக் கொடுத்தது சரி ஆனால் அந்த பிராமண சமாராதனையைக் கெடுத்து விட்டாயே. அதைப் பற்றிதான் உன்மீது எல்லோருக்கும் வெறுப்பேற்பட்டு விட்டது” என்று என்னிடம் வந்து பலர் சொன்னார்கள். சிலர் ''நல்ல வேலை செய்தாய்; எப்படியும் அந்தப் பார்ப்பானைப் பிடித்தே தீர்த்தாயே. அவன் எத்தனை பேர்களை ஏமாற்றிக் கொண்டு வாங்கின கடன் கொடுக்காமல் திரிகிறான்'' என்று சிலர் சொன்னார்கள். நான் அப்போது தான் ‘‘நாம் கண்ணால் பார்த்தால், சமாராதனை எப்படிக் கெட்டுப் போகும்; இந்தப் பார்ப்பான்கள் அங்கு வந்து சாப்பிட்டது தண்டசோறு; நாம் கொடுத்த பணம்; நான் ஒன்றையும் தொட்டுவிடவும் இல்லை; இப்படி இருக்க சமாராதனை எப்படிக் கெடும்?... கெட்டால் தான் கெடட்டுமே, என்ன முழுகிப் போய் விட்டது? பார்க்கலாமே!' என்று, ஒரு மாதிரி திடப்படுத்திக் கொண்டு கடைவேலை பார்த்துக் கொண்டு, வருகிறவர்கள் போகிறவர்களிடம் இதைப் பற்றிப்பேசிக் கொண்டும் இருந்தேன்.

என் தகப்பனாருக்கு, இதைப்பற்றி ஒன்றும் தெரியாது. அவர் பிற்பகல் 3 அல்லது 4 மணி சுமாருக்கு வீட்டிலிருந்து கடைக்கு வந்தார். வந்து சிறிது நேரம் ஆனவுடன் ஒரு கூட்டம் சுமார் இருபது பேர்கள் கடைக்கு வந்தார்கள். அவர்கள் பெரிதும் நகரத்துச் செட்டியார் வகை; பெரிய ஆள்கள்; வக்கீல் குமாஸ்தா; பார்ப்பனப் பிள்ளைகள் - 2, 3 பேர், சாமியாருடைய அதிகாரி ஒருவர், இப்படியாக வந்தார்கள்.

இவர்கள் வந்த உடன் என் தகப்பனார் மறுபடியும் சாமியார் விஷயத்திற்கு ஏதாவது வசூலுக்கு வந்திருக்கிறார்களோ என்னமோ என்று நினைத்துக் கொண்டு மேலும் ஏதாவது கொடுக்கவே முடிவு செய்து கொண்டு சாமியார் ‘‘பிட்க்ஷ (சமாராதனை, ஊர்கோலம்) ‘நன்றாய் நடந்ததா?' என்பது பற்றிச் சிரித்த முகத்துடன் விசாரித்தார். வந்தவரில் பெரிய வர்த்தகச் செட்டியார் ஒருவர் ‘‘அந்தக் கண்றாவியை ஏன் கேட்கிறீர்கள். அங்கு வந்து பாருங்கள், 200-300 பேர் பட்டினி. இனி மேல்தான், சமையல் நடக்க வேண்டும். ஆச்சார்ய சாமிகளுக்கு மிகமிக மன வேதனை'' என்று சொல்லிக் கொண்டு வரும்போதே, ஒருவர், ‘எல்லாம் பாழாய் விட்ட'தென்றும், மற்றொருவர், ‘இந்த அக்கிரமம், இது வரை எங்கும் நடந்திருக்காது' என்றும், என்ன என்னமோ என்னைப் பார்த்துக் கொண்டே பேசுகிறார்கள்.

நான் கடைக்கு உள் உட்கார்ந்திருந்தவன், வெளியில் வந்து, தாழ்வாரத்தில் சுவருடன் சாய்ந்து நின்று கொண்டேன். என் தகப்பனாருக்கு, ஒன்றும் புரிய வில்லை. சங்கடமான வருத்தக்குறியுடன் முகத்தைச் செய்து கொண்டு ‘என்ன சங்கதி?' என்று ஆச்சரிய பாவத்துடன் கேட்டார். ‘‘சங்கதி என்ன, எல்லாம் உங்கள் மகன் நம்ம ராமுவால்தான்'' என்று செட்டியார் பதில் சொன்னார். ‘‘எங்க ராமனாலா? அவன் என்ன, இந்தக் காரியத்தில் சம்பந்தம்?' என்று மனவருத்தத்துடனும், ஆத்திரத்துடனும் கேட்டார், என் தகப்பனார். ‘‘அந்த அநியாயத்தை ஏன் கேட்கிறீர்கள்? அங்கு வந்து பாருங்கள், சாப்பாடு பண்டங்கள் நாசமாய்க் கிடப்பதை, மலையாட்டம் கெட்டுப்போன பண்டம் குவிந்து கிடக்கிறது'' என்றார் வக்கீல் குமாஸ்தா பார்ப்பனர்; ‘‘என்ன சங்கதி? எனக்குப் புரியவில்லை. சொல்லுங்கள் புரியும்படியாக'' என்று அவசரமாகக் கேட்டார் தகப்பனார்.

சமாராதனை நடந்து கொண்டிருக்கும்போது, உங்க ராமு வீட்டின்மீது ஏறிப் புறக் கடைப்பக்கம் குதித்து, பந்தி நடந்த பக்கம் வந்து வெளிக் கதவைத் திறந்து துலுக்கனையெல்லாம் கூட்டி வந்து உள்ளேவிட்டு விட்டான்; பிராமணாள் 200, 300 பேர் சாப்பிடச் சாப்பிட இந்த அக்கிரமம் நடந்ததால், அவர்கள் அத்தனை பேரும் எழுந்து விட்டார்கள். பின்புறம் செய்து வைத்திருந்த சாப்பாடு, கறி, குழம்பு, பதார்த்தம் எல்லாம் நாசமாய்விட்டது'' என்றார் மற்றொரு வக்கீல் குமாஸ்தா பார்ப்பனர்; ‘‘சொல்லுங்கள் சாமி. நன்றாய் நாய்க்கருக்கு விளங்கும்படி சொல்லுங்கள்'' என்றார் மற்றொரு செட்டியார்; என் தகப்பனார் மகா ஆத்திரத்துடன் ''என்னடா ராமா என்ன நடந்ததுடா? அங்கென்னத்துக்கு நீ போனாய்? என்ன சங்கதி சொல்லு...'' என்று ஆவேசம் தாண்டவமாட, அதிகார தோரணையில் கேட்டார்.

நான் ‘ஒன்றும் இல்லையப்பா; இந்தச் சாமியார் தம்பியை வாரண்டு சேவகன் வாரண்டில் பிடித்து விட்டான்; பிறகு, கையெழுத்துப் போடாமல் தப்பி ஒடி எல்லைய்யர் சத்திரத்திற்குள்ளே போய்ப் புகுந்து கதவைத் தாளிட்டுக் கொண்டார்; நான் ‘சட்டென்று ஒட்டுமேல் ஏறிக் குதித்துக் கதவைத் திறந்து விட்டேன்; பிறகு, சேவகன் வந்து பிடித்துக் கொண்டு போய் விட்டான். அதனால் இவர்கள் சமாராதனை கெட்டுப் போய்விட்டதாம்'' என்றேன். என் தகப்பனாருக்கு ஏற்பட்ட கோபத்துக்கும், ஆத்திரத்துக்கும் அளவே இல்லை? ‘‘அடத்தேவடியாள் மகனே, உனக்கென்ன அங்கு வேலை. வாரண்டுக்காரனிடமிருந்து ஓடி விட்டால், சேவகன் என்னமோ பார்த்துக் கொள்ளுகிறான். நீ ஏன் சுவர் எட்டிக் குதித்து உள்ளே போனாய்?'' என்றார். இதற்கு மத்தியில் ‘‘அது மாத்திரமில்லிங்கோ நாய்க்கர்வாள்; பிராம்மணர் வரிசையாகப் பந்தியில் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்த மத்தியில் இலைகளை மிதித்துக் கொண்டு ஓடிக் கதவைத் திறந்துவிட்டு ஒரு நூறு பேருக்கு மேல் துலுக்கன் மலுக்கன் கண்டவன், நின்றவன், தெருவில் போனவன், எவனெவனோ வந்து உள்ளே புகுந்து அத்தனையையும் தோஷமாக்கி வெளியில் வாரிக்கொட்டப்பட்டது. இன்னமும் இப்ப மணி 4 ஆகியும் அத்தனை பிராம்மனாளும் பட்டினியாய் இருக்கிறார்கள். என் மனம் பதறுதுங்கோ'' என்று சொன்னார்.

‘‘ஆமாங்காணும், உங்கப்பன் வீட்டுச் சாப்பாடு நாசமாய்ப் போய்விட்டதாக்கும்; மிகப் பாடுபட்டு உழைத்த பிராமனாள் பட்டினி கிடக்கிறாங்களாக்கும். வாங்கின கடனை மோசம் பண்ணி, கடங்காரனை ஏமாத்தி விட்டு, வாரண்டு சேவகனிடமிருந்து தப்பிக் கொண்டு திருட்டுப் பயலாட்டம் ஓடி விடுகிறது; சமாராதனையில் போய் ஒளிந்து கொள்வது; கதவைத்தாள் போட்டுக் கொள்வது; இதெல்லாம் மிக நியாயமான சங்கதி... நான் கதவைத் திறந்ததால்... உலகம் முழுகிப்போய் விட்டது. இந்தப் பிராமணாள் பட்டினி கிடந்தால் உலகமே இருண்டு போகுமாக்கும். ஏகாதசி என்று நினைத்துக் கொள்ளட்டுமே... வந்து விட்டார்கள்... வெட்கமில்லாமல், பிராது சொல்ல'' என்று நானும் ஆத்திரமாகக் கேட்டேன். உடனே என் தகப்பனார் எழுந்தார். ‘‘ரங்கேசா... எனக்கு இப்படிப் பட்ட பிள்ளையையா நீ கொடுக்க வேணும்?... நான் முன் ஜென்மத்தில் என்ன பாவம் பண்ணினேன்'', என்று மார்மாராக, பெண்களைப் போல் ஓங்கி ஓங்கி அடித்துக் கொண்டார்.

‘‘என்ன முழுகிப்போய்விட்டது? அந்தத் திருட்டுப் பார்ப்பான் பண்ணினதைப் பற்றிச் சிந்திக்க மாட்டேன் என்கிறீர்கள். இவர்கள் கொழுத்துப் போய்ச் சோற்றை எடுத்துத் தெருவில் கொட்டி விட்டால், அதற்கு யார் என்ன பண்ணுவார்கள்? இன்னமும் பணம் அடிக்கலாம் என்று இந்தப் பார்ப்பான்கள், இந்தச் செட்டியார்களைக் கூட்டிக் கொண்டு வந்திருக்கிறார்கள்'' என்றேன். அதற்குள் வக்கீல் குமாஸ்தா பார்ப்பனர் ‘‘நான் அப்போதே சொல்லவில்லையா?... கலெக்டரிடம் பிராது கொடுத்து விடுங்கள் என்று'' என்று சொன்னார். என் தகப்பனாருக்கு நான் சொன்ன பதில் மேலும் ஆத்திரத்தைக் கிளப்பி விட்டது ‘‘சாமி நீங்க சும்மா இருங்க'' என்று சொல்லிக் கொண்டு, குனிந்து பக்கத்தில் இருந்த அவரது செருப்புகளில் ஒன்றை எடுத்துக் கொண்டு, என்மீது வெத்திலை பாக்கு எச்சிலைத் துப்பி, என் குடுமியைப் பலமாய்ப் பிடித்துக் கொண்டு தலை-முகம்-முதுகு-என்று ஒன்றும் பார்க்காமல் 7, 8 அடி வாயில் வந்தபடி வைதுக்கொண்டு, பலமாக அடித்தார்.

செட்டியார்மார்கள் எல்லோரும் எழுந்து ‘அண்ணா, அண்ணா விட்டு விடுங்கள்... விட்டுவிடுங்கள், தம்பி சின்னப்பையன்... அவனுக்கு இன்னமும் சரியாப் புத்திவரவில்லை; நாளாவட்டத்தில் வந்து விடும்; அடிக்காதீர்கள்'', என்று மத்தியில் புகுந்து அடிப்பதைத் தடுத்து நிறுத்தினார்கள். தகப்பனாருக்கு கோபம் தணியவில்லை; நானும் அடிக்குப் பயந்து, குனிந்து கொடுக்காமல் - இந்தப் பார்ப்பனர்களை முறைத்துப் பார்த்த வண்ணமே - நின்று கொண்டிருந்தேன். என் தகப்பனார் செருப்பைக் கீழே போட்டுவிட்டு, கையைக் கழுவிக் கொண்டு, பெட்டிக்கு முன் உட்கார்ந்து, பெட்டியைத் திறந்து ஒரு அய்ம்பது ரூபாய் நோட்டு ஒன்றையெடுத்து பெரிய செட்டியார் கையில் கொடுக்க, எழுந்து நின்று ''நீங்க பெரிய மனது பண்ணி, என்னை மன்னித்து, இதை மறந்துவிட வேண்டும். இவன் எனக்கு மகனல்ல; சத்ரு... என் பெயரைக் கெடுக்கத் தோன்றினவன். ஏதோ இரண்டு ஆளைவிட்டு, நன்றாக உதைத்து, கையையோ, காலையோ ஒடித்துவிடுங்கள். நான் ஏன் என்று கூடக் கேட்பதில்லை. எனக்குப் போதும்... இந்தப் பிள்ளையைப் பெற்ற பெருமை. இவன் தொலைய வேண்டும்; இல்லாவிட்டால் நான் தொலைய வேண்டும்; இனி இரண்டில் ஒன்று தான். சரி, இனிமேல் என்ன செய்வதென்பதை நான் பார்த்துக் கொள்கிறேன்'' என்று சொல்லிக் கொண்டே, கண்களில் நீர் தாரை தாரையாக ஒழுக அவர் கையைப் பிடித்துக் கொண்டு ‘நீங்கள் பெரிய மனசு பண்ணி மன்னிக்க வேண்டும்'', என்று சொல்லி 50 ரூபா நோட்டைக் கையில் கொடுத்தார்.

------நூல்: "தந்தைபெரியாரே எழுதிய சுயசரிதை" பக்கம் 4 - 9

28.4.08

நமக்குத் தோன்றும் அவசர சமாதான மார்க்கம்

நமக்குத் தோன்றும் அவசர சமாதான மார்க்கம் என்ன வென்றால் -முதலாவதாக, பிறவியால் கீழ்-மேல் உயர்வு-தாழ்வு கற்பிக்கும் ஜாதிமுறை என்பதை அடியோடு போக்கடிக்க
வேண்டும்.

கோயில் முறை எடுக்கப்பட்டு பிரார்த்தனை இடங்களாக - உருவ சம்பந்தமே இல்லாத பொது மண்டபங்கள் இருக்கலாம்.

உற்சவங்கள் ஒழியவேண்டும்
கண்காட்சி அமைய வேண்டும்


மடம் மடாதிபதி, குரு ஆகியவகைளும், கோயில் சொத்து,
மடசொத்து ஆகியவைகளும் எடுபடவேண்டும்.

உற்சவங்களை நிறுத்தி, கண்காட்சி விழாக்கள் நடத்த
வேண்டும்.

யாவருக்கும் ஒரு மாதிரி உடை, ஒரு மாதிரி சாயல் ஏற்படுத்த
வேண்டும். நகரங்களில் தொழிற்சாலைகள் தவிர மற்ற
கட்டடங்கள், குடி இருக்கும் வீடுகள் ஒன்று இரண்டு மூன்று
தரத்துக்கு அடங்கிய ஒன்று போன்ற அளவு வசதி உள்ளதாக
இருக்க வேண்டும்.


மொழிகளில் மக்களை மதிப்பிட ஒருமை பன்மை உயர்வு
தாழ்வு குறிப்பு ஆகிய சொற்கள் இருக்கக் கூடாது.

ஆண், பெண் தன்மையில் கண்டிப்பாய் தங்கள் வாழ்க்கைத்
துணையை அவரவர்களே தேர்ந்தெடுத்துக் கொள்ள
விட்டுவிடவேண்டும்.

யாவருக்கும் ஆரம்பக் கல்வி 10 வயதுக்கும் கொடுக்கப்பட்டே
ஆக வேண்டும்.

எஸ்.எஸ்.எல்.சி க்கு மேல் பொது உத்தியோகத்துக்குப் படிப்பு
யோக்கியதை வைக்காமல் சம்பளத்தையும் அதிக வித்தியாசம்
ஆக்காமல் திட்டப்படுத்த வேண்டும்.லாபம் வரையறுக்கப்பட வேண்டும்


அவசியமில்லாத வசதிகளுக்கு இடம் கொடுக்கக் கூடாது.
லாபம் வரையறுக்கப்பட்டுவிடவேண்டும்.

அதிக பெறுமானமுள்ள நகைகள் அணிந்துகொள்ள
அனுமதிக்கக்கூடாது.

தனிப்பட்டவர்கள் லேவாதேவி செய்ய அனுமதிக்கக்
கூடாது.

உணவு, உடை, ஸ்டோர்கள் (விற்பனை இடங்கள்) தனிப்
பட்டவர்களுக்கு இல்லாமல் சர்க்காருடையதாக ஸ்தல
ஸ்தாபனங்களுடையதாக சர்க்கார் ஆதிக்க கூட்டுறவு
ஸ்தாபனங்களுடையதாக இருக்க வேண்டும்.

சரி பகுதி பெண்களுக்கே!


பண்ட உற்பத்தியை சர்க்கார் காண்ட்ராக்ட்டுக்கு
(குத்தகைக்கு) விட்டு சேகரிக்கலாம்; அல்லது தொழிற்
சாலை உற்பத்திகளை சர்க்கார் வாங்கிக்கொள்ளலாம்.

உத்தியோகங்கள், சரிபகுதி பெண்களுக்குக் கொடுக்க
வேண்டும்.

ஆசிரியர் பயிற்சி 100-75 க்கு குறையாமல் பெண்களுக்கு
கொடுக்கப்பட வேண்டும்.

ஆண்களுக்கு ஆசிரியர் வேலை கொடுப்பதானால் பெண்
ஆசிரியர்களது கணவன்மார்களுக்குக் கொடுக்கலாம்.

சர்க்காருக்கு ஏராளமான வீடுகள் சொந்தமாக இருக்கவேண்டும். அதற்காகவே நூற்றுக்கணக்கான கோடி ரூபாய்ஒதுக்கிவைத்து தனி இலாகா வேலை செய்ய வேண்டும்.

தச்சர் , கொத்தர்களை சர்க்கார் சாதாரண மேஸ்திரிகள்
கீழ்பயிற்சி கொடுத்து அதிகமாக உண்டாக்கவேண்டும்.

காடுகளில் மரம் 'சைஸ்' ( தேவைக்கு ஏற்றபடி ) செய்ய
வேண்டும்.

இயந்திர வசதிகள் பெருகவேண்டும்!


இயந்திரவசதி மூலம் செய்தால் 500 பேர்கள் உள்ள தச்சுப் பட்டறையில் 1 நாளைக்கு 1000 ஜன்னல் கூடும் 1000 நிலவுக்கூடும் செய்யலாம். உதாரணமாக ஓர் இயந்திரம் 25 அடி நீளமுள்ள 1புஞூ3பு கனமுள்ள சட்டங்கள் 24 பக்கம் பக்கமாக வரிசை வைத்து கம்பி அளவுபோட, இயந்திரத்தை திருப்பினால் 5 நிமிடத்தில் தொளையைப் போட்டு இணைப்பைச் செலுத்தி அளவுப்படி துண்டும் போட்டுவிடுகிறது. பிறகு ஆம்கள் எடுத்துச் சேர்த்து, கம்பிகோர்த்து ஆப்பு இறுக்கி அடுக்க வேண்டியதுதான். இப்படியே கட்டடத்துக்கு வேண்டிய மற்ற காரியங்களையும் செய்து , ஒரு நாளைக்கு பல வீடுகள் முடிக்கலாம்.
பேதம் பெருமளவு குறையும்!ஒரு 10 ஆண்டில் வீடு கஷ்டம் இந்த ஒரு இலாகாவால் ஒழிந்துவிடும்.


அதுபோல் ஏராளமான தண்ணீரை இறைக்கும் இயந்திரம் மோட்டார், எண்ணெய், இன்ஜீன் செய்து வாடகைக்குச் சர்க்கார் உதவி செய்யலாம் இப்படியே பல இலாகாக்களால் 10 ஆண்டில் உணவு, உடை, வீடு குறை நீக்கலாம்.

இவற்றால் எல்லா மக்களிடையேயும் பேத உணர்ச்சி போதாமை, கவலை , மனிதனுக்கு மனிதன் அன்பில்லாமை வெறுப்பு, பொறாமை ஆகியவை பெரும் அளவுக்கு குறையும்.

இது குறைந்த இடங்களில் திருப்தி, மகிழ்ச்சி, ஒற்றுமை, அன்பு வளரும். கொள்ளை, திருட்டு, மோசம், துரோகம், வஞ்சகம் ஆகிய காரியங்களுக்கு அவசியமும் இடமும் இருக்காது. இப்படிப்பட்ட தன்மைக்கு எந்தப் பேர் வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளுங்கள்.


--------------கவிஞர் கலி.பூங்குன்றன் - நூல்: "பெரியார் ஒரு வாழ்க்கை நெறி"

ஜாதி ஆபத்து - எம்டன் கப்பல் வரவு

மகாயுத்த ஆரம்ப காலத்தில் புதுவைத் துறைமுகத்தில் எம்டன் என்னும் செர்மனிக் கப்பல் வந்ததற்காகப் புதுவை வாசிகளில் ஏழைகளும் பணக்காரருமாகப் பலபேர்கள் குடும்ப சகிதம் மேற்கில் பத்துப் பதினைந்து மைல் தூரமுள்ள கிராமங்களுக்குப் போய்விட்டார்கள். அதிலொரு கிராமம் கூனிச்சம்பட்டு. கூனிச்சம்பட்டுக் கிராமத்தார் தங்களூரை நோக்கி அஞ்சி ஓடிவரும் புதுவை வாசிகளை வரவேற்று, அவர்கள் தங்கிச் சமையல் செய்து கொள்ளத் தாங்கள் வசிக்கும் வீடுகளிலேயே இடம் கொடுத்தனர். கூனிச்சம்பட்டுக் கிராமத்தார் தம்மை நாடி வந்தவர்கள் அனைவரும் மொத்தத்தில் பட்டினவாசிகள் என்று கருதினார்களேயன்றி அவர்களால் இவர் இன்ன ஜாதி என்பதை நினைக்க வில்லை. பட்டினவாசிகளும் தங்களுக்குத் தங்க; இடம் கொடுத்தவர்களும் இன்னவர் இன்ன ஜாதி என்பதை அலசிப் பார்த்துத் தத்தமக்கு ஏற்ற ஜாதிக்காரர் வீட்டில் தங்கினதாகவும் சொல்லமுடியாது. எனவே கூனிச்சம்பட்டில் புதுவை வாசிகள் தங்கியிருந்த வரைக்கும் தமது ஜாதிப் பைத்தியத்தினின்று நீங்கிச் சமத்துவ வாழ்வு வாழ்ந்தனர். வாசகர்கட்கு நன்றாய் ஞாபகம் இருக்கட்டும்; புதுவை வாசிகள் இரண்டொரு நாள் கூனிச்சம்பட்டியில் சமத்துவமாயிருக்க ஜெர்மனிக் கப்பல் புதுவைத் துறை முகத்துக்கு வரவேண்டியிருந்தது!


அக்கப்பல் மறுநாள் போய்விட்டது! போய்விட்ட செய்தி கூனிச்சம்பட்டியிலிருந்த புதுவை வாசிகளுக்கு நிச்சயப்பட்டது. கூனிச்சம் பட்டிலும், அதன் அண்டைக் கிராமங்களிலும் சத்த வண்டிகள் தயாராயின. ஒரு ரெட்டியார் வீதி. அவ்வீதியில் புதுவைக் குடும்பம் பத்துக்கு மேல் தங்கியிருந்தன. அக்குடும்பங்களில் ஒரு குடும்பம் மிக்க தாழ்ந்த சாதி. பக்கத்து வீட்டில் இறங்கியிருந்த குடும்பம் உயர்ந்த ஜாதி. அதன் பக்கத்தில் நடுத்தரம். எதிர்த்த வீட்டில் தங்கியிருந்ததோ கொஞ்சம் சுமார். புதுச்சேரி வேளாளக் கிழவி ஒருத்தி - ஜெர்மனியான் கப்பல் வந்தாலும் வந்தது! இந்த இடத்தில் கீழ்ச்சாதி - மேல்ஜாதி என்று இல்லாமல் எல்லாரோடும் சரிசமானமாய் இருக்க நேரிட்டது என்று சொன்னாள்.

பக்கத்து வீட்டில் நின்றிருந்த கீழ்ச்சாதி புதுவைப் பெண்ணின் காதில் இது விழுந்தது; அப்பெண், ஏன் முதலியார் வீட்டம்மா! அந்தக் கீழ்ச்சாதி நேற்று நினைப்பில்லாமல் போனதென்ன? இன்றைக்குத்தான் நினைப்பு வந்தது என்றால் உங்கள் மேல்ஜாதிப் பெருமையைச் சொல்லிக் கொள்ளாதிருந்தால் முழுகிப் போவது ஒன்றுமில்லையே என்றாள். இதுதான் சொன்னாள். கிழவிக்கு வந்தது கோபம்.

தாழ்ந்த ஜாதியின் வர்ணனை ஆரம்பிக்கப்பட்டது. அந்த ஜாதிக்கே உரிமையென்று பல செயல்கள் வெளிவந்தன. தாழ்ந்த ஜாதிப் பெண் திகைத்தாள். அவளுக்குத் திட்டத் தெரியாது. நாணமும் பொறுக்க முடியவில்லை. கண்ணீர் விட்டாள். ஆனால் அவள் புருஷன் புதுவைக்கு போகச் சத்த வண்டியோடு வந்துவிட்டான். இதைக் கேள்விப்பட்டான். நன்றாகக் கிழவியைத் திட்டினான். கிழவியின் மருமகனான முதலியார் உள்ளே சாப்பிட்டுக் கொண்டிருந்தவர் காதில் கேட்டது. அவரும் வந்து தாழ்ந்த ஜாதி ஆண் பிள்ளையை எதிர்த்தார். அச்சண்டையில் அவரின் காரியக்காரனும் முதலியாருக்கு உதவி செய்தான். மேலும் தாழ்ந்த ஜாதிப்பாடல்கள் நடந்து கொண்டு இருக்கின்றன. தடிகள் உபயோகிக்கப்பட்டன. விஷயம் பரவிற்று. உள்ளூர்த் தாழ்ந்த ஜாதிக்காரர்களும் அங்கு நெருங்கினார்கள். மேல் ஜாதியாரும் நெருங்கினார்கள். இரண்டு நிமிஷத்தில் இரு பக்கத்திலும் பத்துப் பேர்கள் வீதம் நின்று, ஆயுதங்களைச் சுழற்றினார்கள். அடுத்த இரண்டாவது நிமிஷம் நூறுபேர் வீதம் இரு தரப்பிலும் சேர்ந்தார்கள். அதற்குமேல் உயர் ஜாதிக்காரருக்குக் கூட்டம் சேரவில்லை. எதிரிகளின் தொகை அதிகப்பட்டுக் கொண்டே வந்தது. முடிவு: 20 பேருக்கு ஆபத்தான காயம், ஒருவன் இறந்தான்; 15 பேருக்கு கைமுறிவு, கால்முறிவு! கூனிச்சம்பட்டில் ஆஸ்பத்திரி ஏது? புதுவை ஆஸ்பத்திரியை நோக்கி வண்டிகள் வரிசையாக நோயாளிகளையும் சொந்தக்காரர்களையும் ஏற்றிப் போய்க் கொண்டிருந்தன. வழியில் என்ன விஷயமென்று கேட்பவர்களுக்கெல்லாம் பதில் சொல்ல வெட்கமாயிருந்தது.

வெட்கக்கேடு. ஜெர்மனியின் அக்ரமமான சண்டைக் கப்பலுக்குத் தப்பித்துக் கொள்ளுவது சாத்தியம். ஆனால், மனு வகுத்த ஜாதி என்னும் அக்ரமத்திற்குத் தப்பி உயிர் பிழைப்பது முடியவில்லை.

---------- - புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் - "புதுவைமுரசு" 12.1.1931

27.4.08

புரட்சிக் கவிஞரைச் சுற்றி ஒரு பொய் வலை

அண்மையில் பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் புரட்சி கவிஞர் பாரதிதாசனைப் பற்றி ஒரு கருத் தரங்கு நடைபெற்றுள்ளது. இக்கருத்தரங்கில் `பாரதிக்குப் பின் பாரதிதாசன் என்ற தலைப்பில் முனைவர் சிவத்தம்பி பேசிய சில செய்தி களைத் `தினமணி ஏடு (9.2.2008) வெளியிட்டுள்ளது. முனைவர் சிவத்தம்பி, இடது சாரிச் சிந்தனையாளர் என்பது குறிப்பிடத் தக்கது.

பொதுவாக இடதுசாரிச் சிந்தனையாளர்கள் பாரதிக்குப் பின் யாரையும் கவிஞர் எனக் கண்டு பாராட்ட மாட்டார்கள். பாரதியைப் போல வேறு எவரையும் அவர்கள் புகழ்ந்து பேசவும் மாட்டார்கள். பாரதி மார்க்சீயத்தின் மறுபதிப்பு என்பது அவர்கள் கருத்து. பொதுவுடைமையை யும் லெனினையும் பாரதி எப்படியெல்லாம் தரக் குறைவான சொற்களால் வசைமாரி பொழிந்துள்ளார் என்பதைப் பலரும் எடுத்துக் காட்டியுள்ளனர். சோவியத் ஒன்றியத்தில் ஏற்பட்ட புரட்சி `மாகாளி பராசக்தியின் கடைக்கண் பார்வையால் கிடைத்த பரிசு என்று கூறி யவர் பாரதியார்.

முனைவர் சிவத்தம்பி`

பாரதிக்குப் பின் பாரதிதாசன் என்ற தலைப்பில் உரையாற்றிய முனைவர் சிவத்தம்பி ``சமூக மாற்றத் துக்கான படைப்புகளில் பாரதிதாசனால் ஒரு கட்டத்துக்கு மேல் செல்ல முடியாதது ஏன் என்பது குறித்து மாணவர்கள் ஆய்வு மேற்கொள்ள வேண்டிய தேவை இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தில் ஆராய்ச்சி இரு வகைப்படும். ஒன்று ஆய்ந்தாய்ந்து அந்த ஆய்வின் வாயிலாகக் கிடைக்கும் தரவுகளைக் கொண்டு முடிவுகளைச் சென்றடைவது. டாக்டர் கால்டுவெல் பேராசிரியர் சதாசிவ பண்டாரத்தார், தேவநேயப் பாவாணர், டாக்டர் வ. சுப. மாணிக்கம் முதலானோர் இவ்வகையினர்.

இரண்டாவது வகை ஆய்வு, முதலிலேயே முடிவு செய்து கொண்டு அந்த முடிவிற்கேற்றவாறு காரணங் களைத் தேடி அலைவது! (பேரா. வையாபுரியார் இதற்கு எ-டு). முனைவர் சிவத்தம்பி, பாரதிதாசன் ஒரு கட்டத் துக்கு மேல் செல்லவில்லை என்ற முடிவை முதலிலேயே எடுத்துக் கொண்டு விட்டுப் பின்னர், `ஏன் செல்லவில்லை என்பதைப்பற்றி மாணவர்கள் ஆராய வேண்டும் என்கிறார். அதாவது இந்தக் கோணத்தில்தான் ஆய்வு நிகழ்த்த வேண்டும் என்று சிவத்தம்பி ஆய்வாளர்களைக் கட்டாயப்படுத்துவது நேர்மையான அணுகுமுறையாகத் தோன்றவில்லை.

பொதுவாகத் திராவிடர் இயக்கப் படைப் பாளிகளை, இடதுசாரிகள் சரியாக மதிப்பீடு செய்வதில்லை என்பது வருந்தத்தக்க உண்மையாகும். அறிஞர் அண்ணா, கலைஞர், புரட்சிக் கவிஞர் முதலான திராவிடர் இயக்கப் படைப்பாளிகள் வெறும் படைப்பாளிகள் மட்டுமல்லர்; தமிழ்ச் சமூகத்தில் நிலவிய ஏற்றத் தாழ்வுகளை எடுத்துக் காட்டி அவற்றை ஒழிப்பதற்காகக் கலை இலக்கியத் தளங்களிலும் நேரடிப் போராட்டங்களிலும் ஈடு பட்டுச் சிறையில் துன்பம் அனுபவித்து வெளிவந்த போராளிகளும் ஆவர். ஆகவே இவர்கள் படைப் பாளிகள் மட்டுமல்லர்; போராளிகளும் ஆவர். தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, புரட்சிக் கவிஞர், புலவர் குழந்தை, கலைஞர் ஆகியோருடைய நூல்கள் கொடுங்கோல் அரசுகளால் தடை செய்யப் பட்டன. இந்தப் பெருமை இந்தியத் துணைக் கண்டத்தில் வேறு எந்த இயக்கத்தினர்க்கும் இல்லை என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். சமூக இழிவு களை ஒழித்துச் சமநிலை காண்பதற்காகத் திராவிடர் இயக்கப் படைப்பாளிகள் செய்த ஈகம் அளப்பரியதாகும்.

சமூகத்துக்கான முழுப் புரட்சி சிந்தனை

தந்தை பெரியார், எல்லைக் கோடுகளைக் கடந்து மானிடத்தை நேசித்த உலகளாவிய சிந்தனையாளர். மனித நேயத்தை மய்யப் பொருளாகக் கொண்ட அவருடைய சிந்தனைகள் - சமூக மாற்றத்திற்கான சிந்தனைகள் என்பதைவிடச் சமூகத்தின் முழுப் புரட்சிக்கான சிந்தனைகள் என்பதே பொருந்து வதாகும். பொதுவுடைமைச் சிந்தனைகளைத் தமிழ் மக்களுக்கு அறிமுகப்படுத்தியவர் தந்தை பெரியார். சோவியத் ஒன்றியம் விரும்பி அழைத்த தலைவர் பெரியார்! மாவீரன் லெனினோடு பணியாற்றிய இந்தியப் பொதுவுடைமைவாதிகள் பெரியார் காலில் விழுந்து வணங்கிவிட்டுப் போயிருக்கிறார்கள்.

இத்தகைய பெருமைகளுக்குரிய பெரியார் பெண் விடுதலை, தீண்டாமைக் கொடுமை இரண்டையும் ஒரு சேர வைத்துப் போராடி வெற்றி கண்டவர். கடவுள் மறுப்பு, கைம்பெண் மறுமணம், பெண் கல்வி, பெண்களுக்குச் சொத்துரிமை, மூடநம்பிக்கை ஒழிப்பு, சாதி ஒழிப்பு, வருணாசிரம முறை தகர்ப்பு, பார்ப்பனீய ஒழிப்பு - என்று பல்வேறு தளங்களில் நின்று பெரியார் போராடினார்; வெற்றி கண்டார்.



தந்தை பெரியார் வழியில் புரட்சிக் கவிஞர்


தந்தை பெரியாரின் கொள்கைகளை அப்படியே கவிதையில் வடித்தவர் புரட்சிக் கவிஞர்.

`கோரிக்கையற்றுக் கிடக்குதண்ணே இங்கு
வேரில் பழுத்த பலா! - மிகக்
கொடிய தென்றெண்ணிடப் பட்டதண்ணே
குளிர்வடிகின்ற வட்ட நிலா!


என்று கைம்பெண்களுக்காகக் குரல் கொடுத்தவர் புரட்சிக் கவிஞர். கைம்பெண் மறுமணத்தை வலியுறுத்திப் பாடிய முதற்கவிஞர் பாரதிதாசனேயாவார்.

இந்தியத் துணைக் கண்டத்தில் குடும்ப நலம்பற்றி யாரும் சிந்திக்காத தொன்மைக் காலத்திலேயே அதுபற்றிச் சிந்தித்தவர் தந்தை பெரியார். குடும்பக் கட்டுப்பாடு ஆண் - பெண் இருபாலார்க்கும் பொது வானது. பெண்களைவிட ஆண்கள் செய்து கொள் வது எளியது; நல்லது. மேலும் குடும்பக் கட்டுப்பாடு என்பது மக்கள் தொகைப் பெருக்கத்தைக் கட்டுப் படுத்துவதற்காகவோ, உணவுப் பற்றாக் குறைக் காகவோ அல்ல; பெண்ணின் உடல் நலம் பேணப் படுவதற்காகவும், பெண் விடுதலை பெறுவதற்காக வும் சமுதாயப் பொதுப் பணிகளில் பெண்கள் ஈடுபட வேண்டும் என்பதற்காகவும் தந்தை பெரியார் குடும்ப நலத்தை வலியுறுத்தி ஊர்தோறும் சென்று மக்களை நல்வழிப்படுத்தி வந்தார்.

``காதலுக்கு வழி வைத்துக் கருப்பாதை சாத்தக்
கதவொன்று கண்டறிவோம் இதிலென்ன குற்றம்?


என்று புரட்சிக் கவிஞர். தந்தை பெரியாரின் கருத்துக் களைக் கவிதைகளாக்கினார். இந்தியாவில் முதன் முதலாகக் குடும்ப நலம் பற்றிப் பாடிய கவிஞர் பாரதி தாசனே யாவார்!
புரட்சிக் கவிஞரின் `குடும்ப விளக்கு!


குடும்ப விளக்கில் பாரதிதாசன் படைத்துள்ள பெண், கல்வியறிவு பெற்றவள்; தன் குழந்தைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுக் கும் நல்ல ஆசிரியர்; தன் வாழ்வினையர் மீதும் குடும் பத்தின் மூத்த உறுப்பினர் மீதும் அன்பைப் பொழியும் அன்புப் பெட்டகம்! `இந்தப் பெண் பாரதி கண்ட புது மைப் பெண்ணைப் போல இல்லை; சமூக மாற்றம் பற் றிய சிந்தனை, குடும்ப விளக் குப் பெண்ணிடம் இல்லை என்கிறார் சிவத்தம்பி. காலங் காலமாகக் கல்வியறிவின்றிக் கிடந்த குடும்பப் பெண்களிடம் கல்வியறிவு மிக்க ஒரு சிறந்த பெண் மணியைப் பாரதிதாசன் படைத்துக் காட்டியிருக்கிறார். ஈராயிரம் ஆண்டுகளாக இருண்டு கிடந்த வீடு களில் ஒரு பெண் படித்தவளாகப் படைக் கப்பட்டிருப்பது பார்ப்பனர்க்குப் பிடிக்காமற் போகலாம்; சிவத்தம்பிக்குமா அப்படி?

தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் தெரசா மகளிர் பல்கலைக் கழகத்தில் உரையாற்றும்போது குறிப் பிட்டதைப்போலப் பாரதி கண்டது புதுமைப் பெண்ணாக இருக்கலாம்; ஆனால் தந்தை பெரியார் கண்டது புரட்சிப் பெண்! சமூக அவலங்களைக், கொடுமைகளை எதிர்த்து வீதிக்கு வந்து போராடும் நெஞ்சுரம் கொண்ட பெண்கள் கூட்டத்தை உருவாக் கியவர் தந்தை பெரியார்! அத்தகைய புரட்சிப் பெண்களைத் தாம் புரட்சிக் கவிஞர் தம் கவிதை களில் வைத்துப் போற்றி மகிழ்கிறார்!
தமிழர்களின் விருந்தோம்பல் பண்பு!

தமிழ் மக்களின் மிக உயர்ந்த பண்பு விரும் தோம்பல்; மானிடப் பற்றும் மனித நேயச் சிந்தனை யும் இதில் அடங் கிக் கிடக்கின்றன. விருந்தளிக்கும் செயலில் சிறந்து விளங்கும் குடும்ப விளக்குத் தலைவியை, மனித நேயச் சிந்தனையாளராகப் பார்க்க மறுக்கும் பார்வை பழுதுபட்ட பார்வை!

``அய்தீக ஆதர்ஷிக்கப்பட்ட (இந்தச் சமற்கிருதச் சொற்றொட ருக்கு நேர் எதிரானவர் பாரதிதாசன் என்பதைச் சிவத்தம்பி ஏன் புரிந்து கொள்ள வில்லை) பாரம்பரிய வழியானவராகவே பாரதிதாசன் காணப்படு கிறார் என்று சிவத்தம்பி குறிப்பிடுவ திலிருந்து அவர் எந்த இடத்தில் நின்று திறனாய்கிறார் என்பது விளங்கும். சிவத்தம்பி தமிழக வரலாற்றையும் தமிழ்ச் சமூக வரலாற்றையும் நன்கு கற்க வேண்டும். ஒரு நடுநிலைப் பார்வையோடு அருள்கூர்ந்து பாரதி தாசனைப் பாருங்கள்.

புரட்சிக் கவிஞரின் கோட்பாடுகள் தந்தை பெரியாரிட மிருந்து பெற்றுக் கொள்ளப்பட்டவை. `சமூக மாற்றத் துக்கான படைப்புகளில் பாரதிதாசனால் ஒரு கட்டத்துக்குமேல் செல்ல முடியவில்லை என்பதற்குப் பதிலாகப் `பெரியாரால் செல்ல முடிய வில்லை என்று உங்களால் சொல்ல முடியுமா? சொல்லிப் பாருங்களேன்!

பாரதிதாசன் ஒரு மட்டத்துக்கு மேல் செல்ல வில்லை என்று சிவத்தம்பி கூறுவது ஒரு சார்பு டையது. `சுருட்டுகின்றார் தம்கையில் கிடைத்த வற்றைச் சொத்தெல் லாம் தமக்கென்று சொல்வார் தம்மை வெருட்டுவது பகுத் தறிவே...

என்றும் ``எல்லார்க்கும் எல்லாமும் என்றிருப்ப தான இடம் நோக்கி நடக் கின்றது இந்த வையம் என்றும் பாடு கின்ற புரட்சிக் கவிஞரைப் பற்றியா இவ்வாறு கூறுவது? பாரதி அடிப்படையில் ஓர் இந்துத்துவவாதி; ஆரியர் களுக்காகப் பரிந்துபேசும் ஆரியக் கவிஞர்.

`பிச்சை வாழ்வுகந்து பிறனுடை ஆட்சியில்
அச்சமுற்றிருப்போன் ஆரியன் அல்லன்

என்று வெளிப்படையாகவே பாடியவர். இந்துத் துவப் பார்வை யோடுதான் சோவியத் ஒன்றியத்தை யும் பொதுவுடை மைக் கொள்கையையும் பார்த்தவர் பாரதி. ஆனால் பாரதி தாசன் அப்படியா?

``பொதுவுடைமைக் கொள்கை திசையெட்டும் சேர்ப்போம்;
புனிதமோடு அதை எங்கள் உயி ரென்று காப்போம்! என்று பாடியவராயிற்றே பாரதிதாசன்!

``பாரடா உனது மானிடப் பரப்பை;
``மக்களை ஒன்று சேர்!
மக்கள் கடலில் சங்கமமாகு

என்றெல்லாம் பாடிய புரட்சிக் கவிஞரை ஒரு கட்டத்துக்கு மேல் செல்லவில்லை என்று கூறுவது வேடிக்கையாக இருக் கிறது. சிவத்தம்பி, பாரதிதாசனைச் சரியாகப் படிக்க வில்லை என்றே தோன்றுகிறது. ஆனால் ஒன்று மட்டும் உண்மை இத் தகைய திறனாய்வுகளால் புரட்சிக் கவிஞரின் புகழை எவராலும் கெடுக்க முடியாது.

பாரதிதாசனைப்பற்றிய ஓர் எதிர்மறைச் சிந்தனை, பாரதிதாசன் பல்கலைக் கழகத்திலேயே, பாரதி தாசன் உயராய்வு மய்யத்திலேயே ஒலித்திருப்பது வருந்துவதற்குரியது! பாரதிதாசன் ஒரு புரட்சிக் கவிஞர்! மனிதநேயர்! தமிழ் இனத்தின் மேம் பாட்டிற்காக அல்லும் பகலும் பாடுபட்ட ஒரு மாபெருங் கவிஞன்! அவன் காலத்தை வென்று வாழும் கவிஞன்! காரிரு ளால் அவனை மறைத்துவிட முடியாது!
நெல்வயலில் ரோசா கூட்டங்களைதான்
பாரதிதாசன் புகழைப் பரப்பவும் நிலைநிறுத்தவும் தோற்றுவிக்கப்பட்ட துறைகளிலேயே அவருக்கு எதிரான கருத்துரைகள் முளைவிடத் தொடங்கி விட்டன. இவை களையப்பட வேண் டியவை! நெல்வயலில் ரோசாச் செடிகள் கூடக் களைகள் தானே! பாரதிதாசனைப் போல ஒரு புரட்சிக் கவிஞர் அவருக்கு முன்னும் இல்லை; பின்னும் இல்லை என்னும் தந்தை பெரியாரின் மதிப்பீட்டைச் சிவத்தம்பியைப் போன் றோர் ஊன்றிக் கற்க வேண்டும். பத்தாயிரம் ஆண்டுத் தமிழ் இலக் கிய வரலாறு தந்தை பெரியாரின் கூற்றில் அடங்கி இருக்கிறது.


-----------டாக்டர் ப. காளிமுத்து எம்.ஏ; பி.எச்.டி., -- 26-4-2008 "விடுதலை" ஞாயிறு மலரிலிருந்து.

நாம் சூத்திரர்களா?

சிந்தியுங்கள்...

நான் சொல்வதற்கு முன்பு உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்வது என்ன வென்றால், நான் சொல்வதை நம்பாதீர்கள்; அதன் படி நடக்க வேண்டுமென்று உடனே இறங்கிவிடாதீர்கள்; என்ன செய்ய வேண்டுமென்றால் சொல்லுவதைச் சிந்திக்க வேண்டும். சரியா, தப்பா என்று ஆராய வேண்டும். உங்களுக்கு எது சரி என்று பட்டதோ அதை ஒத்துக் கொள்ள வேண்டும் மற்றும் எந்தக் காரியம் செய்ய வேண்டும் என்று தோன்று கிறதோ அதைச் செய்ய வேண்டும். நாங்கள் சொன்னோம். நான் சொன்னேன் என்பதற்காக ஒன்றையும், எதையும் ஏற்றுக்கொள்ளக்கூடாது.

ஏன் சிந்திக்க வேண்டும்?

ஏன் என்பதை வலியுறுத்தி முதலில் சொல்லுகிறேன். நாங்கள் பகுத்தறிவுப் பிரசாரம் செய்து மக்களையெல்லாம் பகுத்தறிவுடையவர்களாக ஆக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறவர்கள். நாங்கள் சொல்லுவதைக் கேளுங்கள் என்றால் என்ன அர்த்தம்? நாங்கள் ஒன்றும் மூட நம்பிக்கைப் பிரசாரகர்கள் அல்ல; கடவுளைப் பற்றியோ, மதத்தைப் பற்றியோ, சாஸ்திரம் சம்பிராதாயங்களைப் பற்றியோ, கடவுளுடைய பிள்ளை, அவதாரம், குமாரர், தூதர் என்று சொல்லுகிறவர்கள் சொல்லுவதைப் போல் நாங்கள் ஒன்றும் சொல்லுவது இல்லை. நாங்கள் சொல்லுகிறோம்.

எங்கள் புத்திக்கு எட்டியதைச் சொல்லுகிறோம். எங்களைப் போலவே உங்களுக்கும் புத்தி இருக்கிறது. உங்கள் புத்திக்கு அது படுகிறதா? சரி என்று தோன்றுகிறதா? என்று சிந்தியுங்கள். இந்த உணர்ச்சி வந்து இருந்தால் மக்களுக்கு வேறு ஒன்றுமே தேவையில்லை. உணர்ந்திருப்பார்கள்.

சொந்தப் புத்தி!

இதே மாதிரி உணர்ச்சி மக்களுக்கு ஏற்பட இடமில்லாமலும் ஏற்பட விடாமலும் நாங்கள் சொல்லுவதைக் கேளுங்கள். எனக்குக் கடவுள் சொன்னார்; நான் கடவுள் அவதாரம்; நான் கடவுளாக இருக்க வேண்டும்’’ என்று இப்படி எல்லாம் சொல்லி மக்களை ஏமாற்றி அவர்கள் அவரவர்களின் கருத்தைப் புகுத்திய தன் பயனால் உங்களுக்குச் சொந்தப் புத்தியைப் பயன்படுத்த வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது. இன்றைக்கல்ல நேற்றைக்கல்ல; 2000, 3000 வருஷங்களாக இப்படி, மனிதன் என்பவன் அருமையான அறிவைப் படைத்தவன்; அப்படிப்பட்டவன் இன்றைக்குத்தான் பகுத்தறிவைப் பயன்படுத்து என்று கேட்டுக் கொள்ள வேண்டியவனாக ஆகி இருக்கிறான். பகுத்தறிவாளர் கழகம் இன்றைக்கு ஆரம்பமாகிறது. பகுத்தறிவாளர் கழகம் ஆரம்பமாகிறது என்று சொன்னால் மனிதர்களுடைய கழகம் இன்று ஆரம்பமாகிறது என்று அர்த்தம். மனிதர்கள் என்பவர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதைப் பற்றி இன்றைக்குப் பேசப்படுகிறது.

மனிதனும் மிருகமும்!

பகுத்தறிவு சிந்தனையே இல்லாதவர்களுக்கு மிருகம் என்றுதான் பெயர். ஏன்? அறிவிலே பகுத்தறிவு இல்லாத ஜீவன் மிருகம், பகுத்தறிவுடையவன் மனிதன். அறிவிலே பிரிவுபட்டிருக்கிறபடி ஓரறிவு, ஈரறிவு, மூன்றறிவு, நாலறிவு, அய்ந்தறிவு, ஆறறிவு என்பது புல்பூண்டுகளையெல்லாம் ஓரறிவு என்று சொல்லலாம். அதற்கு ஒன்றும் தெரியாது. உண்ண வேண்டியது தான். பூச்சிப் புழுக்கள் அப்புறம் மூன்றறிவு என்பார்கள். குணம் கொஞ்சம் கொஞ்சம் மாறும். சிலதுக்கு நாலு அறிவு இருக்கும். சிலதுக்கு அஞ்சு அறிவு இருக்கும்.

ஆனால் சிந்தித்துச் செயல்படுவது என்பது ஆறாவது அறிவு. அது மனிதனுக்குத்தான் அதிசயமான காரியங்கள் செய்யக்கூடிய ஜீவன்கள் உண்டு. நம்மால் செய்ய முடியாத காரியங்கள் எல்லாம் சில ஜீவன்கள் செய்யும். ஒரு எறும்பை எடுத்துக் கொண்டால், நமக்குத் தெரியாத வாசனை அதற்குத் தெரியும். ஒரு குருவியை எடுத்துக் கொண்டால், நம்மால் பறக்க முடியாமல் இருக்கும்போது அது பறக்கும். ஒரு குரங்கை எடுத்துக்கொண்டால் நாம் தாவமுடியாத அளவுக்குத் தாவும். யானையை அடிக்கும் சிங்கம். இப்படி இந்த மாதிரி மனிதனுக்கு மேற்பட்ட, மனிதனால் முடியாத சில விஷயங்கள் மற்ற அறிவுள்ளவைகளுக்கு உண்டு. சிந்தித்து, வளர்ச்சிக்கேற்ற வண்ணம் தன்னுடைய வாழ்வு நிறைவு பெறும் வண்ணம் பயன்படுத்துகிற அளவு மனித னுக்குத்தான் உண்டு. வேறு யாருக்குமே இல்லை.

மதியை இழந்த மனிதன்!

அப்படிப்பட்ட மனிதன் மதியை இழந்துவிட்டான். அதைப் பயன்படுத்தாமல் போய்விட்டான். பல காலங்களில், அதனால் மனிதன் வளர்ச்சியடையவில்லை. ஆனால் மனிதன் நம் நாட்டைப் பொறுத்தவரையிலும் மான உணர்ச்சியைப்பற்றிக்கூட லட்சியம் பண்ண முடியவில்லை. சாதாரணமாக நாம் பகுத்தறிவுடையவர்கள். உலகத்தை எல்லாம் கூட தெரிந்திருக்கிறோம். பார்க்கிறோம். செய்தி எல்லாம் வருகிறது. நாம் மாறவில்லை.

நாம் சூத்திரர்களா?

நமக்குப் பெயர் சூத்திரன், நாம் என்றால் - சூத்திரன் என்றால் பார்ப்பானின் வைப்பாட்டி மகன்; எப்படி என்றால், சாத்திரப்படி! யாரோ சொன்னாங்கன்னா என்றால், கடவுள் சொன்னார். இதை எல்லாம் நம்புவதன் மூலம் மானம் ஈனம் எல்லாம் இழந்துவிட்டு நம்முடைய வளர்ச்சியைப் பாழாக்கிவிட்டோம்; வயிற்றுப் பிழைப்பைத்தான் பிரமாதமாக எண்ணி விட்டோம். அது மிருகங்களுக்குத் தான் உண்டு. நாம் அதைத் தான் பின்பற்றி வந்திருக்கிறோம். இது வரைக்கும் முன்னால் பேசிய நண்பர் கூட சொன்னார்.

சிந்தனையும் பகுத்தறிவும்!

இந்த நாட்டில் எவனுமே பகுத்தறிவைப் பற்றிப் பேசவே இல்லை. இன்றைய தினம் வரைக்கும். யாராவது பேசினார்களென்றால் 3000, 2000 வருடங்களுக்கு முன்னே அதுவும் அந்தக் காலத்துப் பகுத்தறிவுதான். அதுவும் இன்றைக்குச் சரியானபடி பின்பற்றுவது இல்லை. வேறு யாரும் இவைகளைப்பற்றிச் சிந்திக்கவும் இல்லை. ஏன் அப்படி ஆகிவிட்டது என்றால் அவைகள் பகுத்தறிவுக்கு விரோதமான கொள்கைகள், செயல்கள், கடவுள்! அவர் உண்டாக்கினார்; அவர்தான் சக்தி உடையவர்; அவர் இப்படிச் சொன்னார்; அப்படிப் பண்ணினார்! அவருடைய மகன் இப்படிச் சொன்னார்; அவருடைய தூதன் இப்படிச் சொன்னார்.

அவருடைய அவதாரம் அப்படிச் சொன்னது! இந்த மாதிரி புத்திகளைக் கொண்டு வந்து மக்களுக்கிடையே புகுத்தியதால் இவனுடைய அறிவுக்கு வேலையே இல்லாமல் போய்விட்டது. அவர்களே எல்லாம் சொல்லிவிட்டார். அந்தப்படியே நடந்தால் போதும்; அதனாலே மனி தன் வளர்வதற்கு வாய்ப்பில்லை. எப்படி வாய்ப்பில்லை என்று கேட்பீர்கள். பகுத்தறிவைப் பயன்படுத்த முன் வந்தவர்கள் எந்த அளவுக்கு முன்னேற்றம் அடைந்திருக் றார்கள்! மற்ற நாட்டார் இன்றைய தினம் ஆகாயத்தில் 2 லட்சத்து 30,000 மைல் தாண்டி சந்திர மண்டலம் என்ற ஒரு உலகத்திலே உலாவிவிட்டு வருகிறார்கள். மணிக்கு 5000 மைல் 6000 மைல் பறக்கிறார்கள். இதில் எதைப் பண்றான் நம்மவன்?

ரிஷிகள், முல்லாக்கள், பாதிரிகள்

நமக்கு நண்பர்கள், கட்டுப்பட்டு நடக்கவேண்டியவர்கள், அறிவைச் சொல்பவர்கள் என்று ஆயிரக்கணக்கான தலைவர்கள், ஆயிரக்கணக்கான ரிஷிகள்; ஆயிரக்கணக்கான முல்லாக்கள்; ஆயிரக்கணக்கான பாதிரிகள்; ஆயிரக்கணக்கான பண்டார சன்னிதிகள் இருக்கிறார்கள். இவர்களைத் தவிர மதங்கள் இருந்தும் நாம் அடைந்த பயன் என்ன? ஒன்றும் முடியவில்லையே! காரணம் மனுஷன் தோன்றி எத்தனை வருஷங்கள் இருக்கும்! நம்மாலே கணக்கு எடுக்க முடியவில்லை. எவனோ ஆராய்ச்சிக்காரன் கணக்கெடுக்கிறான்; ஒருத் ன் லட்சம் வருஷங்கள் என்கிறான். ஒருத்தன் 18 லட்சம் வருஷங்கள் என்கிறான்.

அதற்கு முன்னே “உலகம் என்றைக்குத் தோன்றியதோ அன்றே மனிதன் தோன்றி னான்’’ என்கிறான். கடவுள் உண்டாக்கினான் என்கி றான். அன்று முதல் இன்று வரைக்கும் கண்ட பலன் என்ன? சாதாரணமாக ஒரு 100, 105 வருஷத்திலே உலகம் எவ்வளவு மாறியிருக்கிறது. நம் நாட்டிலேயே எவ்வளவு வளர்ச்சிக்கான சாதனங்கள் ஏற்பட்டிருக்கின்றன. 100, 105 வருஷத்திலேயே இவ்வளவு வளர்ச்சியிருந்தால் மனுஷன் தோன்றிய லட்சக்கணக்கான வருஷத்திலே அல்லது 3000, 4000 வருஷத்திலே எவ்வளவு வளர்ந்திருக்க வேண்டும்? ஏன் வளரவில்லை? நம்ம நாட்டில் என்ன கடவுள் இல்லை? பல்லாயிரக்கணக்கான கடவுள்கள் இருக்கின்றன. மகான்கள் இல்லையா?

மூடநம்பிக்கை!


ஏராளமான மகான்கள், நினைச்சவனெல்லாம் சாமியார்; நினைச்சவன் எல்லாம் மகாத்மா; நினைச்சவனெல்லாம் அந்த பக்தன்; இந்தப் பக்தன். இத்தனை பேர் இருந்தும் ஒரு சாதனை கூட நம்மால் ஏற்பட்டது என்று சொல்ல முடியவில்லையே! அவதாரங்களும், அதிசயங்களும் நாம் இன்றைக்கு அனுபவிக்கின்ற அதிசயமான பொருளெல்லாம் மற்றவன் செய்து நாம் அனுபவிக்கிறோம். உங்க கடவுள் மகனும் பொறந்தான்; கடவுள் தூதன் பொறந்தான்; கடவுள் அவதாரங்கள் ஒரு வண்டி பொறந்தார்கள்; தினமும் மாட்டு ரிஷி களென்றும், முனிவர்கள் என்றும் நினைச்சா சாபம் கொடுக்கிறவனும் நினைச்சா மலையைத் தூக்கி மலை மேல் போடறவனும், எவ்வளவு அற்புதமான மனிதர்களெல்லாம் தோன்றினார்கள்! அப்பொழுதும் ஒரு அற்புதம் கூட இன்னும் நடக்கவில்லையே.அறிவின் மேன்மை!

நெருப்புக் குச்சிகூட வெள்ளைக்காரன் வாரதிருந்தால் நமக்கு வந்திருக்குமா? இருட்டில்தான் உட்கார்ந்திருப்போம். சிக்கிமுக்கிக் கல்லில்தானே நம்ம வாழ்வு இருக்கும். பூமியில் எருமையில் ஏறி சவாரி செய்து வந்தவனுக்கு ஆகாசக் கப்பல் வந்தாச்சு. இதெல்லாம் எப்படி வந்தது? தொழுதா வருமா? ஜபம் பண்ணினா வருமா? இல்லை. யாகம் பண்ணினா வருமா? இல்லை, கடவுளே என்று சொன்னா வருமா? ஆகவே மனிதன் மனிதனாக இருந்து அதனாலே அடைய வேண்டிய காரியங்களைச் செய்து, கொள்ள முடியாமல், கடவுள், மதம், சாஸ் திரம், வேதம், தர்மம், பெரிய வர்கள், மகான்கள், இந்த மாதிரியான முட்டாள்தனமான பேச்சுகளுக்கெல்லாம் நாம் காது கொடுத்து இன்றைய தினம் நாம் மிருகமாக இருக்கிறோம் எப்படீன்னு கேட்பீங்க!

மூட நம்பிக்கையும், முட்டுக்கட்டையும்!

எனக்கு முன்னால் பேசிய தோழர்கள் எல்லாம் சொன்னார்கள் - “நமக்கு எங்கே அய்யா அறிவு இருக்கிறது?’’ எதை எடுத்தாலும் சாஸ்திரம், சம்பிரதாயம், முன்னோர்கள் சொன்னது, வேதத்தில் சொன்னது என்று அது எவன் சொன்னானோ என்பதைப்பற்றியெல்லாம் கவலையே இல்லை! நண்பர்கள் சொன்னார்கள், பூனை குறுக்கே போனால் உட்கார்ந்துக்குவான், அப்புறம் போகலாமென்று ஏன்டான்னா, சகுனம் சரியா இல்லை என்பான். காக்கா கத்துதுன்னா வெளியே போகக்கூடாதுன்னு உட்கார்ந்துக்குவான். குளிச்சிப் போட்டு வெளியே போகலாம் என்பான். முன்னெச்சரிக்கையாக ஒருத்தனையும் தொடமாட்டான். கட்டின வேட்டியோட குளிப்பான்.

மனுஷன்தான், மாடல்ல இதெல்லாம் செய்கிறவன்? என்ன இருக்கிறது! மற்றும் இந்தக் கிழமையாகாது. அந்தக் கிழமையாகாது; இந்த நேரம் தப்பு; இது நல்ல நேரம் என்பதெல்லாம் எதுல சேர்ந்தது? அறிவைப் பற்றிப் பேசறதுக்கே ஆள் இல்லை. அறிவின் பயனை, அதன் பலனைப்பற்றி எடுத்துச் சொல்ல துணிவு எவனுக்கும் வரவில்லை. இது பெரிய காட்டுமிராண்டி நாடு, நாம் அப்படியே இருக்கிறோம். இதுதான் சொல்ல முடியும்.


அன்னியராட்சி!

இப்பத்தான் நல்ல வாய்ப்பா நம்ம நாட்டுக்கு அன்னியன் வந்தான். சில மாறுதலைப் பண்ணினான். அவனை நம்ம மதத்துக்கு விரோதி என்று விரட்டி அடிச்சிட்டாங்க. அப்புறம் வெள்ளைக்காரன் வந்தான்; அவன் பல மாறுதல்களை உண்டு பண்ணினான். அவனையும், மதத்திலே பிரவேசித்தான். சாத்திரத்திலே பிரவேசித்தான். அதுலே அப்படி இப்படின்னு அவனை ரகளை பண்ணினாங்க; அதோட நின்னு போச்சே தவிர அதுக்கு மேலே ஏறலே; நம்ம நாட்டில் இதுவரைக்கும் அவன் இல்லாதிருந்தால் ரொம்பப் பின்னேறி இருப்போம்.

அதிலே ஒன்றும் ஆட்சேபனை இல்லை. அவனாலே அமைப்பு கெட்டுப் போகுதுன்னு மக்களை ஏமாற்றிப் பிழைக்கிற அயோக்கியர்கள். அவன் இருந்தால் நாம், வாழ முடியாதென்று அவனுக்கு மோசமெல்லாம் பண்ணினாங்க. அப்புறம் எவனுமே தோணல்ல! துணிஞ்சு நாங்கதான் தோன்றினோம். துணிஞ்சு தோன்றினோம். இருக்கிற கொடுமையைப் பார்த்து அரசியலின் பெயராலே மதத்தின் பெயராலே மக்களுக்குச் செய்யும் கொடுமையைப்பார்த்து நம்ம மக்களுக்குப் புத்தி இல்லாமல் அவர்கள் மடையர்களாக இருக்கிறதைப் பார்த்து, இதற்கு ஒரு பரிகாரம் பண்ண வேண்டும். இந்த முயற்சியைப் பண்றவன் தான் மனுஷன். மத்த முயற்சி பண்றவனெல்லாம் வயிற்றுப் பிழைப்புக்காரன் அப்படீன்னு முடிவு பண்ணி நாங்கள்தான் ஆரம்பிச்சோம்.

சுயமரியாதை இயக்கம்!

என்ன ஆரம்பிச்சோம்? சுயமரியாதை இயக்கம் என்றுதான். மனுஷனுக்கு மானம் என்கிற உணர்ச்சி ஊட்ட வேண்டுமென்று! எத்தனையோ பேர் எல்லாம் எங்களோட சண்டை போட்டாங்க; சுயமரியாதை இயக்கம் ஆரம்பித்தபோது ஒரு பெரிய மந்திரியே என்னிடம் வந்து, “என்னையா சுயமரியாதைன்னா நமக்கெல்லாம் மானமில்லை, மரியாதை இல்லை என்றா அர்த்தம்? இந்தப் பேரே வெட்கக்கேடா இருக்குது! எவனாவது கேட்டா கேலி செய்யமாட்டானா?’’ அப்படி என்று என்னை வந்து கேட்டார். அப்புறம் திருப்பிச் சொன்னேன்; “வருத்தமாக இருக்குது எங்களுக்கு, தயவு செய்து சொல்லுங்க. நீங்க யாரு? எனக்குத் தெரியணும்’’ “என்னத்துக்காகக் கேட்கிறீர்’’ என்றார். கேட்கிறேன்,

சமுதாயத்திலே நீங்க யாரு? எத்தனாவது? உங்க அந்தஸ்து என்ன? உங்க தொழில் என்ன? ‘ரெட்டியாருன்’’னாரு, “மந்திரியா இருந்தா என்ன? நீங்க யாரு? ரெட்டியாருங்கறது. சும்மா நாம் வெச்ச பேரு. நாம் ஏற்படுத்திக்கிட்ட பேரு. சும்மா கவுண்டன், செட்டியார் இந்த மாதிரியெல்லாம். பொதுவாக சாஸ்திரப்படி, சம்பிரதாயப்படி, மதப்படி, சமயத்துப்படி, நீங்க யாரு? எத்தனையாவது ஜாதி?’’

அவர் ஒன்றும் பேச முடியவில்லை. சிரிச்சிட்டாரு. “சிரிக்காதீங்க! நீங்க எத்தனாவது ஜாதி?’’ 4-ஆவது ஜாதிதானே; அது சாத்திரப்படி நீண்ட நாளாக இருக்குது.’’ நாமெல்லாம் அந்த நீண்ட நாளாக இருக்கறதைத்தான் ஒழிக்கணும்னுதான், உங்களுக்கு மானம் வரவேண்டுமென்று தான் இதை நாங்க ஆரம்பித்தோம்.


மேல்ஜாதியும், கீழ்ச் ஜாதியும்!

“அப்படீன்னா உங்க ஜாதி என்ன?’’ “சூத்திரன்’’, சூத்திரன்னா என்ன? “பார்ப்பானுக்கு வைப்பாட்டி மகன்.’’ எத்தனாவது ஜாதி, 4-ஆவது ஜாதி உங்களுடையது! நீங்க பி.ஏ., பி.எல்., படிச்சீங்க. நீங்க மூன்று வருஷம் மந்திரியாப் பார்த்துட்டீங்க! இப்ப மறுபடியும் மந்திரியா இருக்கீங்க! நீங்க மந்திரிப் பதவியில் இருந்தும் இப்ப சூத்திரன், தேவடியா மகன்! ஆனா, உங்ககிட்டே பிச்சை எடுக்கிறவன், உங்களுக்கு வேணும்னாலும் கூட்டிக் கொடுக்கத் தயாராக இருக்கிறவன், அவன் தன்னை மேல் ஜாதிங்கறான். நீங்களும் அவனை மேல் ஜாதின்னு ஒத்துக்கறீங்க! நீங்க அவன் காலில் விழுகறீங்க! அவன் காலைக் கழுவித் தண்ணீரைக் குடிக்கிறீங்க?’’ இதற்குப் பதில் இதைத்தான் சொன்னார்.

அதனால்தான் இவ்வளவு கடுமையான முயற்சி நாம் செய்யவேண்டி இருக்கிறது. இன்று ஏற்பட்ட புண்ணா இருந்தா ஒரு கட்டுப்போட்டால் போதும், வெகு நாளா ஏற்பட்ட புண்ணு! நாத்தமும் எடுத்து புழுத்தும் போயிருக்கிறது! அந்தப் புண்ணை அறுத்துத்தானே ஆகணும். அதனால்தான் ரொம்ப நாளாச்சுங்கறதுனால இப்ப அறுக்க ஆரம்பிச்சிருக்கோம்’’
, அப்படின்னு சொல்லி அந்த மாநாட்டை நடத்தினோம்.

-------------தந்தைபெரியார் -நூல்: "சிந்தனையும் பகுத்தறிவும்" பக்கம் 1 - 7

26.4.08

விவேகானந்தர்பற்றி...

சென்னை - காமராசர் கடற்கரை சாலையில் உள்ள விவேகா னந்தர் இல்லம்பற்றி பிரச்சினை எழுப்பப்பட்டுள்ளது. அந்த இல்லத்தை வேறு இடத்திற்கு மாற்றவேண்டும் என்று தமிழ்நாடு அரசு வற்புறுத்துவதாக ஒரு சேதி; அந்த நினைவுக் கட்டடத்தை இடிக்கப் போகிறது அரசு, மற்றொரு சேதி - இப்படி பல்வேறு சேதிகள் கிளம்பின.

உடனே சோ ராமசாமி, இல. கணேசன் உள்ளிட்ட அக்ரகார வட்டாரமும், துணை போகும் கூட்டமும் வரிந்து கட்டிக்கொண்டு கோதாவுக்குத் தயாரானதுபோல காட்டிக் கொண்டன.
டில்லியில் நிலத்தை வாங்கி அதில் பெரியார் மய்யத்தை முறைபபடி பெரியார் அறக்கட்டளை கட்டியிருந்தது. சட்ட விரோத மாக நியாய விரோதமாக பாரதீய ஜனதா ஆட்சியில் இடித்துத் தரை மட்டமாக்கினார்கள் - அதைப்பற்றி ஒரு வரி பேசாத, எழுதாத கூட்டம், அரசுக்குச் சொந்தமான இடத்தை அரசு எடுத்துக்கொள்ளப் போகிறது (உண்மை இல்லையென்றாலும்) என்று கூக்குரல் போடுவதை எண்ணிப் பார்க்கவேண்டும்.

சட்டமன்றத்தில் பல்வேறு கட்சிக்காரர்கள் இதுபற்றிக் கருத்து களை எடுத்துக்கூறி, அவரவர்களும் அவர்களின் அடையாளங் களைக் காட்டிக் கொண்டு விட்டனர். அதுவும் ஒரு வகையில் நன்மைக்கே.

முதலமைச்சர் மானமிகு மாண்புமிகு கலைஞர் அவர்கள் மிகவும் சாதுரியமாக அவர்களை எல்லாம் பேசவிட்டு வேடிக்கை பார்த்துள்ளார்; இரசித்தும் உள்ளார். தமது உரையில் விவேகானந் தரையும் வெளிப்படுத்தியுள்ளார்; இன்னொரு வகையில் அவர் ஒரு பார்ப்பன எதிர்ப்பாளர் என்பதையும் தமக்கே உரித்தான பாங்கில் பேசி, சட்டமன்ற நடவடிக்கைக் குறிப்பிலும் பதிவு செய்துவிட்டார்.

இது அவருடைய பழுத்த அனுபவத்தையும், சாதுரியத்தையும், நம் கொள்கையில் இருக்கும் பிடிப்பினையும்தான் வெளிப்படுத்தும்.
சந்தோடு சந்தாக விவேகானந்தர் புகை பிடிப்பவர், இறைச்சி சாப்பிடக் கூடியவர் என்பதையும் சொல்லிவிட்டார்.

விவேகானந்தர் இல்லத்திற்காகப் பார்ப்பனர்கள் வக்காலத்து வாங்கியது விவேகானந்தருக்காக அல்ல - அவர் என்னவெல்லாம் பார்ப்பனர்களைப்பற்றித் தோலுரித்துக் காட்டியுள்ளார் என்பது அவாளுக்குத் தெரியாதா? பின் ஏன் கோபம் என்றால், சரியாகவோ, தவறாகவோ விவேகானந்தர் என்றால் இந்துமதத் துறவி - அமெரிக்காவரை இந்து மதம்பற்றி கித்தாப்பாகப் பேசி வந்தவர் என்ற நிலையில் அவர் பெயரால் உள்ள நினைவு இல்லம் பறிபோனால், அது இந்து மதத்தின் தலையில் விழுந்த பேரிடியாக இருக்கும் என்பதால்தான் இந்த முறுக்கு?
கீதையைப் படிப்பதைவிட கால்பந்து விளையாடு என்று சொன்னவர் விவேகானந்தர்.
கீதை, மகாபாரதத்தின்மீது தம் விமர்சனக் கணைகளைக் கூர்மையாகப் பாய்ச்சியவர் அவர்.
கீதை என்ற நூல் மகாபாரதத்தின் ஒரு பகுதியாகும். கதையைச் சரிவரப் புரிந்துகொள்ள, மிகமிக முக்கியமான பலவற்றைப் புரிந்துகொள்ளவேண்டும்.

முதன்முதலில் மகாபாரதத்தின் ஒரு பகுதியாக - அதாவது வேத வியாசர் எழுதியதா? அல்லது அதில் புகுத்தப்பட்டதா?

இரண்டாவதாக கிருஷ்ணன் என்பவர் சரித்திர ரீதியாக உயிர் வாழ்ந்த ஒருவரா?
மூன்றாவதாக கீதையில் கூறப்படும் குருக்ஷேத்திரப் போர் உள்ளபடியே நடந்ததா?
நான்காவதாக அர்ஜுனனும், ஏனையவர்களும் உள்ளபடியே உயிர் வாழ்ந்தவர்கள்தானா? என்பன; கீதையை சங்கராச்சாரியார் எழுதி மகாபாரதத்தில் புகுத்தினார் என்று சிலர் கருதுகிறார்கள்.

எது எப்படியாகயிருந்தாலும் சரி, யார் கீதையை வெளியிட்டி ருந்தாலும் சரி - குருக்ஷேத்திர யுத்தம் நடைபெற்றது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

யுத்தத்தில் கிருஷ்ணன், அர்ஜுனனுடன் எல்லையற்ற விவா தத்தில் இறங்கினான் என்றால், இதை எவ்வாறு ஏற்றுக்கொள்ள முடி யும்? அப்படியே உரையாடினார்கள் என்றால் பக்கத்தில் ஒரு சுருக்கெழுத்தாளரை வைத்துக்கொண்டா என்ற பிரச்சினை எழுகிறது.
அர்ஜுனன் ஏனைய பெயர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளனவே தவிர, இவர்கள் இருந்தனர் என்றோ, குருக்ஷேத்திர யுத்தம் செய்தனர் என்றோ கூறுவதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை என்று ஓங்கியடித்து மட்டை இரண்டு கீற்றாகக் கீதையையும், மகாபாரதத்தையும் கிழித்துவிட்டாரே விவேகானந்தர்
(ஆதாரம்: கீதையைப்பற்றிக் கருத்துகள் என்ற நூல் - ஏ.எஸ்.கே. (அய்யங்கார்) எழுதிய பகுத்தறிவுச் சிகரம் பெரியார் என்ற நூல் பக்கம் 116, 117).
மானமிகு மாண்புமிகு கலைஞர் அவர்கள் விவேகானந்தர் பற்றிச் சொன்ன விமர்சனத்தின் பொருள் இந்த வெளிச்சத்தில் பார்த்தால் பளிச்சென்று புரிந்துவிடுமே!


---------------நன்றி:"விடுதலை" தலையங்கம் 25-4-2008

24.4.08

திராவிட மாயையா? ---2

மதிப்பிற்குரிய ஆசிரியர் அவர்களுக்கு

தங்கள் இதழின் ஏப்ரல் பதிப்பில் ``எந்தப் பெயரில் அழைத்தாலும் ரோசா ரோசாதான்” கட்டுரையை காண நேர்ந்தது. அது குறித்த எங்களின் கீழ்க்கண்ட வினாக்களுக்குரிய விளக்கங்களை அடுத்து வரும் இதழில் வெளியிடச் செய்யுங்கள். ஏற்கனவே விளக்கங்கள் எழுதியிருந்தாலும் அந்தத் தகவலைத் தாருங்கள்.

1. நாம் இனத்தால் ``திராவிடர்” என்ற வாதம் மானிட இயல் - சமூக இயல் - ஆகிய அறிவியல் அடிப்படையில் சரியானதா?

2. இந்த வகையான வாதத்தினைக் கட்டுரையாளர் புறந்தள்ளி, எதிர் கொள்ள மறுப்பதேன்?

3. தமிழ்ச் சமூகத்தின் திராவிட இயக்கத்தின் தாக்கம், குறிப்பாக பெரியாரின் பங்கு பணிகளை மதிப்பிடுவதற்கும் ``திராவிடர்’’ குறித்த அறிவியல் விளக்கத்திற்கும் வேறுபாடு வேண்டாமா?

4. நமது அரசியல் சமூக பொருளாதார விடுதலைக்கு இன்றியமையாத் தேவையான தமிழ்த் தேசியம் குறித்த தெளிவு, இந்த இயக்கம் வலுவடைய தேவைப்பட்ட ஒன்றல்லவா?

பின் குறிப்பு:

மேற்குறிப்பிட்ட கட்டுரையில் உள்ள எள்ளல், எகத்தாளம், இழிமொழி, ஆபாச உவமைகள், வக்கனை வசனங்கள், அத்துணையும் கட்டுரையாளரின் அறிவு நாணயத்தின் அடையாளத்தினைக் காட்டியிருக்கிறதே தவிர அவர் வாதத்திற்கு வலுவூட்டவில்லை.

மார்க்சிய படிப்பு வட்டம், - மா. ராமதாஸ்
ராமாரெடிமேட் மாடி, 11-05-2006
திருத்துறைப்பூண்டி.


ஒரு விளக்கம்

இனம் என்கிற கருது கோளில் மதிப்பீட்டில் இரு விதத் தன்மைகள் உண்டு.

ஒன்று-நிற இனம்

மற்றொன்று - தேசிய இனம்

தேசிய இனம் என்கிற கொள்கை புதிதாய் அரும்பும் முதலாளித்துவ எழுச்சியுடன் தொடர்புடையது.

தேசிய இனக் கொள்கைக்கு முன்பும், இப்போதும் கூட ஆதிக்க சக்திகளின் வலிமை வாய்ந்த கொள்கையாய் விளங்குவது நிற இனக் கொள்கையே!

காலனி ஆதிக்கத்திலிருந்தும், முடியரசின் பிடியிலிருந்தும் விடுதலை பெற விரும்பும் தேசிய இனங்களின் போராட்டங்களைக் கூட நிறவெறிக் கொள்கை நசுக்கிவிடத் துடிக்கிறது.

வெள்ளை நிறத்தவர் உயர்ந்த இனத்தவர்.

மஞ்சள் நிறத்தவரும் கறுப்பு நிறத்தவரும் தாழ்ந்தவர்கள் என்கிற கருத்து இன்று வரையிலும் முன்னிறுத்தப்படுகிறது.

மேற்குலகில் ஐரோப்பிய ஆதிக்க சக்திகளுக்கு உதவும் இந்த நிற இனக் கொள்கை இந்தியாவில் பார்ப்பனர்களுக்கு உதவுகிறது.

`வர்ணாஸ்ரம தர்மம்’ என்று இன்றும் இங்கே அது போற்றப்படுகிறது.

`நீ என்ன சாதி?’ - என்று கேட்பதற்குப் பதிலாக, `என்ன வர்ணம்!’ என்று பல கிராமங்களில் இப்போதும் கேட்கப்படுவதுண்டு.

பார்ப்பனர் அல்லாதார் யாவரும் தாழ்ந்தவர்களே என்பதுதான், வேதங்களும் கீதோபதேசங்களும், மனு தர்மங்களும் வலியுறுத்தும் கோட்பாடாகும்.

உயர் வர்ணத்தவரான பார்ப்பனர்களே சாத்திரப் படியும், சமூக ஏற்பாட்டின் படியும், வணக்கத்துக்குரியவர்கள்; தெய்வீக உரிமை பெற்றவர்கள் என்கிற சனாதனக் கருத்தை அரசியல் சாசனத்தால்கூட மீற முடிவதில்லை.

ஏடறிந்த வரலாறனைத்தும் வர்க்கப் போராட்டங்களின் வரலாறாகும் என்றால் இந்தியாவில் அது பார்ப்பனர் - பார்ப்பனர் அல்லாதார் போராட்டங்களாகவும் அமைந்திருக்கின்றன.

பார்ப்பனியம், அல்லது மனுதர்மம், அல்லது நிற இனக்கொள்கை எனும் வர்ணாஸ்ரம தர்மத்துக்கு எதிராக, பார்ப்பனர்களால் தாழ்ந்தவர்கள் என்று கருதப்பட்ட மக்களின் போராட்ட வடிவமாக எழுந்ததுதான்

பார்ப்பனர் அல்லாதார் இயக்கம் -அல்லது - திராவிட இயக்கம்.

நிறவெறிக்கொள்கை பார்ப்பனியம் என்றால், நிறவெறிக் கொள்கைக்கு எதிரானதே திராவிடவியம்.

தேசிய இனங்களின் எழுச்சியை ஒடுக்க நினைப் போர் அனைவரும் நிறஇனக் கொள்கையின் ஆதரவாளர்களாகவே நிற்கிறார்கள்.

இதனால், தேசிய இன எழுச்சி என்பது பார்ப்பனியத்தை - நிற இனக் கொள்கையை - எதிர்த்துப் போராடுவது தவிர்க்க முடியாத வரலாற்றுத் தேவையாகிறது.

பார்ப்பனியத்தை ஆதரிக்கும் எவரும் தேசிய எழுச்சி, விடுதலை என்று விளக்கவும் முழங்கவும் முடியாது.

வெள்ளை நிறத்தவர் - பார்ப்பனர் உயர்ந்தோர், `ஆரியர்’ என்கிற கருது கோள் இருக்கும்வரை, அதை எதிர்க்கும் `திராவிடர்’ என்கிற வாதமும் அறிவியல் அடிப்படையில் சரியானதே!

இனத்தால் நான் திராவிடன் என்று சொல்வது தேசிய இனத்தைக் குறிப்பதல்ல. வர்ண இனத்தைக் குறிப்பதாகும். `நான் திராவிடன்’ என்பது, `இன வெறிக் கொள்கைக்கு எதிரானவன்’ மனுநீதியை எதிர்க்கும் மனித நீதியாளன் - என்பதே அறிவியலும் அரசியலும் சார்ந்த பொருளதிகாரமாகும்.

பார்ப்பனியத்துடன் சமரசம் செய்து கொள்ளும் இயக்கமே அறிவியல் அடிப்படையில் தவறானதாகும்.

பார்ப்பனியத்துடன் சமரசம் செய்து கொள்ளும் போக்கு, வரலாற்றில் பாட்டாளி வர்க்கத்தின் தலைமைப் பாத்திரத்தையும் ஒதுக்கித் தள்ளிவிடும்.

`மக்கள்’ என்கிற உற்சாகத்துடன் வர்க்கப் போராட்டத்தையே நிராகரிக்கும். கடைசியில் `தேசிய உணர்ச்சி’ என்பது சலிப்பைப் போக்கிக் கொள்ளும் கவிதைப் பரவசமாக, முற்போக்கு இயக்கங்களுக்கும் பொதுவுடைமைக்கும் எதிர் நிலையில், ஆதிக்க சக்திகளின் கூலிப்படையாக மாற்றிவிடும்.

அப்போது, ஒரு காலத்திலே இலட்சியக் கனவுகளை மலர்வித்த சிவப்பு நிறம், நேரவிருக்கும் பேரழிவுக்கான அபாய அறிவிப்பாகத் தோன்றும். அரிவாள் சுத்தியல் தாங்க முடியாத சுமையாகவும், தவிர்க்கப்பட வேண்டிய பயங்கரவாதச் சின்னங்களாகவும் தோன்றுமளவுக்கு நைந்துபோகும் கொடி. அதைத் தூக்கி எறிந்துவிட்டு, ‘மூலதனத்துக்கும் தனியுடைமைக்கும் சாமரம் வீசும் புதிய கொடி மீது ஆசை வரும். விவாதங்களையோ விமர்சனங்களையோ எதிர்கொள்ள முடியாத நடுக்கும் குளிரில் பொருள் விளங்காச் சொற்களின் அரற்றலும் முனகலுமே எஞ்சி நிற்கும். `கதவை’ச் சாத்திக் கொள்வது சுகமாக இருக்கும்.

சான்றாக - தமிழ்த் தேசியம் - பொதுவுடைமை என்கிற முழக்கத்துடன் தொடங்கப்பட்ட ஒரு கட்சி, மெல்லமெல்ல பொதுவுடைமையைக் கைகழுவத் தொடங்குவதாகவும், பார்ப்பனிய மயக்கத்தில் ஆழ்ந்துவருவதாகவும் அக்கட்சியின் நிலைப்பாட்டின் மீது விமர்சனம் வைக்கிறார் கவிஞர் தணிகைச் செல்வன். (கட்சியின் தொடக்ககால நிறுவனர்களில் அவரும் ஒருவர்) கவிஞரின் விமர்சனம் மௌனத்தில் மூழ்கடிக்கப்படுகிறது.

கவிஞர் தணிகைச் செல்வன் எழுப்பும் பிரச்னை மற்றவர்களிடமும் பற்றிக் கொண்டால் என்ன செய்வது? கட்சி ஒரு புரட்சிகரமான பாத்திரம் வகிப்பதாகச் சிலரையாவது நம்ப வைக்க வேண்டுமே! பெரியாரையும், திராவிட இயக்கத்தையும் கொச்சைப் படுத்திக் குழப்பியடிப்பதில் இம்மாதிரியான இயக்கங்களுக்குச் சுயதிருப்தி.

1. மறுபடியும் சொல்கிறோம் `திராவிடர்’ என்கிற நிலைப்பாடு ஒரு தேசிய இனத்தைக் குறிப்பதாக பெரியாரோ திராவிட இயக்கமோ சொன்னதில்லை. நிற பேதக் கொள்கையின் எதிர்ப்பு நிலையில் `பார்ப்பன ஆதிக்க சக்திகளையும், பார்ப்பனியச் சிந்தனைகளையும் மறுக்கும் எதிரணி - எதிர் இனம் என்கிற பொருளிலேயே திராவிட இனம் என்கிற கருதுகோள் முன் வைக்கப்படுகிறது.

பார்ப்பனிய நிறவெறிக் கொள்கையின் அவலங்களையும், அபாயங்களையும் மூடி மறைக்க விரும்பு வோர்க்குத் `திராவிட இனம்’ என்பது அறிவியல் அடிப்படை அற்றதாகவே தோன்றும்.

2. இம்மாதிரியான வாதங்களைப் புறந்தள்ளுவதற்குக் காரணம் இயலாமை அல்ல. அறிவுடைமை! வீழ்ச்சியுறும் தோழர்களின் அற்ப சுகத்தைக் கெடுக்கவேண்டாம் என்கிற பரிவுணர்ச்சி’

3. `திராவிடர்’ குறித்த அரசியல் - அறிவியல் விளக்கத்தின் அடிப்படையிலேயே தமிழ்ச் சமூகத்தில் திராவிட இயக்கத்தின் தாக்கம் - குறிப்பாகப் பெரியாரின் பங்கு பணிகளை மதிப்பிட வேண்டும். `திராவிடர்’ என்பதிலுள்ள அரசியலைப் பிரித்துவிட்டு, வெறும் சொல் ஆராய்ச்சியில் இறங்குவதையே மயிர் பிளக்கும் வாதம் என்கிறோம்.

`அங்கே’ உள்ளடக்கத்தை விட சொற்கள் முக்கியமானவை. `இங்கே’ சொற்களைக் காட்டிலும் உள்ளடக்கம் முக்கியமானது.


4. நமது அரசியல், சமூக, பொருளாதார விடுதலைக்கு இன்றியமையாத தேவையான தமிழ்த் தேசியம் குறித்தத் தெளிவு இந்த இயக்கம் வலுவடையத் தேவைப்பட்ட ஒன்றல்லவா என்கிறார் தோழர்.

பாட்டாளி வர்க்கத்தின் - அல்லது சூத்திர இனத்தின் - தலைமையும் தத்துவமும் இல்லாத தேசிய விடுதலை என்பது பிற்போக்குத் தனத்துக்கு மகுடம் சூட்டவே பயன்படும். இதுதான் பெரியாரியத்தின், திராவிட இயக்கத்தின் தெளிவான நிலைப்பாடாகும்.

இதையே - பாட்டாளி வர்க்கத் தலைமையும் தத்துவமுமே புரட்சிக்கும், மானுட விடுதலைக்கும் முன் நிபந்தனையாகும் என்பதையே - மார்க்சியமும் வலியுறுத்துகிறது.

பார்ப்பனியத்தை அரவணைக்கவும் மார்க்சியத்தை ஒதுக்கவும் விரும்புவோர்க்கு திராவிட இயக்கம் பற்றிக் கவலை ஏன்?
பின்குறிப்பு:

`எந்தப் பெயரில் அழைத்தாலும் ரோஜா ரோஜாதான்’ என்கிற (ஏப்ரல் இதழ்) கட்டுரையில் உள்ள எள்ளல், எகத்தாளம், இழிமொழி, ஆபாச உவமைகள் அத்துணையும் கட்டுரையாளரின் அறிவு நாணயத்தின் அடையாளத்தைக் காட்டுகிறதே தவிர அவருடைய வாதத்திற்கு வலுவூட்டவில்லை - என்று பின்குறிப்பாய்ச் சொல்கிறார் தோழர் மா.ராமதாஸ்.

குறிப்பிட்ட கட்டுரை தொடர்பாக வந்துள்ள பல கடிதங்களும் கட்டுரையின் சிறப்பைப் பாராட்டியே இருக்கின்றன. இழி மொழியோ, ஆபாச உவமைகளோ இருந்ததாக எவரும் குறிப்பிடவில்லை. எதிர் முகாமுக்குப் பதில் என்கிற முறையில் எழுதப்படும் எந்தக் கட்டுரையிலும் எள்ளல், எகத்தாளம் இருக்கத்தான் செய்யும். உணர்ச்சிகளற்ற பாவத்தில் பிரச்னையைப் பிரதிபலிக்கும் கலை அந்தக் கட்டுரையாளருக்குத் தெரியாதுதான்.

நீரை H2O என்று குறிப்பிடுவது அறிவியல் மதிப்பீட்டுக்குச் சரியாக இருக்கலாம். ஆனால் உணர்ச்சி மீதுற `வானமுதே’ என்று நீரைப் புகழ்வதுதான் மனித இயல்பு. மூன்று சென்டிமீட்டர் கண் என்பது பிரேத பரிசோதனைக்குச் சரியாக இருக்கலாம். ஆனால் `காதள வோடிய கண்ணாள்’ என்றே உணர்ச்சியுள்ள மனிதன் வெளிப்படுத்துகிறான். சொற்களின் அழகும் ஆளுமையும் புரியாதபோது எல்லாம் `அறிவுநாணயக் கேடாகவே’தெரியும்.

`அறிவு நாணயம்’ என்பது என்ன? தனது கருத்துக்களையும் இலட்சியங்களையும் ஒளித்து வைப்பதை இழிவாகக் கருதுவது அறிவு நாணயம்.

`எந்தப் பெயரில் அழைத்தாலும் ரோஜா ரோஜா’ தான் கட்டுரையாளர் அறிவு நாணயக் கேடாக எதையும் எழுதவில்லை என்பதே பலரின் கருத்து.

----- "தமிழ்ச்சான்றோர் பேரவைச் செய்திமடல்" - ஜூன் 2006

திராவிட மாயையா? -- 1

பயனற்ற வாதங்களால் பொழுதழிக்கும் வேலையற்றதுகளின் போக்கை `மயிர் பிளக்கும் வாதம்’ என்று மக்கள் எள்ளலாய்க் குறிப்பிடுவார்கள். உடலும் பொருளும் தேய்ந்துபோன 'மைனர்’களுக்குத்தான் இம்மாதிரியான மயிர் பிளக்கும் வாதங்கள் உற்சாகம் தரும் என்றில்லை. புலமைப் பகட்டர்களுக்கும் இதில் போதை ஏறுவதுண்டு. சித்தினி பத்தினியாக இருக்க முடியுமா? 'இலை’ வடிவம் எம்மாதிரியானது? என்கிற ஆராய்ச்சியில் மைனர்களுக்கு உற்சாகம் என்றால், பெரியார் தாடியில் எத்தனை மயிர்? திராவிட இயக்கம் என்பது விஞ்ஞான வகைப்பட்டதா? என்பன போன்ற வாதங்களில் புலமைப் பகட்டர்களுக்கு உற்சாகம். இவர்கள் `அறிவுப் பூர்வமாகவும்’ ‘ஆதாரப் பூர்வமாகவும் திராவிட இயக்கத்தை எதிர்ப்பதன் மூலம் என்ன சாதிக்கப் போகிறார்கள்? `திராவிட மாயை’யிலிருந்து தமிழர்களை விடுவித்து, தமிழ்த் தேசிய உணர்வை வளர்த்தெடுத்து, விடுதலை பெற்றதொரு புதிய நாட்டை உருவாக்கப் போகிறார்களா?

ஏறத்தாழ எண்பது ஆண்டுகளாக அதாவது திராவிடர் கழகம் என்றோர் அமைப்பு தோன்றிய நாள் முதலாகவே இம்மாதிரியான திராவிட இயக்க எதிர்ப்புக் குழுக்களும் விவாதங்களும் இருந்து கொண்டுதான் இருக்கின்றன. இப்போது போலவே அப்போதும் திராவிட இயக்கத்துக்கு எதிராகத் தமிழை நிறுத்திய பலரும் இறுதியில் திராவிட இயக்கத்தின் கருணைக்கு ஏங்குகிறவர்களாகவே உயிர் விட்டார்கள்.

திராவிட இயக்கத்திலிருந்து தமிழையோ, தமிழிலிருந்து திராவிட இயக்கத்தையோ பிரிக்க முடியாது. பிரித்தால் எஞ்சுவது பூஜ்யமே என்று எதிர்ப்பாளர்களுக்கும் தெரியும், ஆனால் புலமைப் பகட்டு சும்மா இருக்க விடுவதில்லை. திராவிட இயக்கத்தை எதிர்ப்பதற்கு இனி மேல் புதிய ஆதாரமாக நடிகர் விஜயகாந்தின் கட்சியையும் திராவிடக் கட்சி என்று குறிப்பிடுவார்கள்.

நடிகர் ராஜேந்தர், கல்வி வர்த்தக சபைத் தலைவர் என்று அறியப்பட்ட பி.டி. குமார் என்று இன்னும் பலரும் கூட திராவிடக் கட்சிக்காரர்களாகவே பேசப்படுகிறார்கள். திராவிடக் கட்சிகளின் எண்ணிக்கை பெருகுவதால், தந்தை பெரியாரின் கருத்துக்கள் பல முனைகளில் பரவுகிறது என்று யாரும் கருதவில்லை. உண்மையில் திராவிட இயக்கத்தை எதிர்ப்பவர்களும் கூட 'திராவிட’ அடைமொழிகளுடனும் அலங்காரத்துடனுமே வருகிறார்கள். திராவிட இயக்க எதிர்ப்பாளர்களுக்கு இந்த 'திராவிடக்’ கட்சிகளும் தேவைப்படுகின்றன.

இந்தியத்தின் பெயரால், தமிழின் பெயரால், திராவிடத்தின் பெயரால், புரட்சியின் பெயரால், தலித் என்கிற பெயரால், திராவிட இயக்கத்தை எதிர்ப்பவர்கள் புறப்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள். ஒரு பத்திரிகை நடத்த முடிந்தாலே கட்சி கட்டி விட்டதாகவும், தனது கருத்துக்களால் நாடே கிளர்ந்தெழுந்து விட்டதாகவும், 'திராவிட மாயை’ இனி எடுபடாது என்பதாகவும், பெரியாரின் இடத்தில் இனி 'உலகம்’ தன்னையே அமர்த்தப் போவதாகவும் புலமைப் பகட்டர்களுக்கு ஒரு புல்லரிப்பு.

'திராவிடம் என்ற சொல் வடவர் தந்தது. திராவிடம் என்பது தமிழரைக் குறிக்காது. திராவிடர் என்று தமிழரை அழைப்பது அவமானம். திராவிடம் என்பது தேசியம் ஆகாது' என்று நூறுவிதமான மயிர் பிளக்கும் விவாதங்கள் வெகுகாலமாய் இங்கே காதைக் கிழிக்கின்றன.

இந்த வாத - பிரதிவாதங்களுக்கு அப்பால் அரசியல் - சமூக - தத்துவ - மக்கள் பார்வையில், திராவிட இயக்கம் என்றால் பெரியார் கட்சி அல்லது பெரியார் கருத்துக்களை ஏற்கும் இயக்கம்; அவ்வளவுதான்.

பெரியார் தன் இயக்கத்துக்குத் திராவிடம் என்ற சொல்லை ஏன் தேர்ந்தெடுத்தார்? திராவிடம், திராவிடன் என்கிற சொல் திருஞான சம்பந்தனுக்கு ஒரு விதமாய்ப் புரிந்திருக்கலாம். கால்டு வெல்லின் ஆய்வில் திராவிடத்துக்குப் பிறிதொரு பொருள் விரியலாம். ஆனால், பெரியாரின் 'திராவிட’ இயக்கம் என்பது புதிய உள்ளடக்கம் கொண்டது. நிற - இன (வர்ணாஸ்ரம தர்மத்தை) வெறியை எதிர்ப்பது. பகுத்தறிவை வளர்ப்பது. தனிமனித சுயமரியாதையிலிருந்து தேசிய இனங்களின் சுய நிர்ணய உரிமை வரை பொதுநலம் கெடாத சுதந்திரத்தை அனுமதிப்பது. மத மூடநம்பிக்கையிலிருந்து மனித குலத்தை மீட்பது. சமூக மாறுதலை முன்னிறுத்திப் போராடுவது. விஞ்ஞான சோஷலிசத்துக்குச் சமூகத்தை அழைத்துச் செல்வது என்று பெரியாரின் ‘திராவிட’த்துக்குப் பன்முகத் தன்மை உண்டு என்றபோதிலும் பாசிச (மனுதர்ம) எதிர்ப்பு என்கிற வரலாற்றுத் தேவையே இந்த இயக்கத்தைப் படைத்தளித்ததனால் பாசிச எதிர்ப்பு (பார்ப்பனிய எதிர்ப்பு) என்கிற அம்சம் முதன்மை பெற்றது.

பாசிசம் - பார்ப்பனியம் - என்கிற சமூகக் கொடுமைக்குப் பலியான மக்களையே அதற்கெதிரான படையாக நிறுவுவது என்கிற அம்சத்தில் பெரியாரின் இயக்கம் தனித்தன்மை பெற்றது. சுயமரியாதை இயக்கமாய் அரும்பிய இந்தநிறுவனம் மார்க்சியத்தின் முகடு வரை தொட்டபோதிலும் சமதர்ம இயக்கம் என்றோ வேறு எந்தப் பெயரோ ஏற்காமல் திராவிடர் கழகம் - இயக்கம் என்று அறிவித்தது ஏன்? இம்மாதிரியான ஒரு கேள்வி 1848-இல் மார்க்ஸ் - எங்கெல்சுக்கு முன்னேயும் எழுந்தது. எந்த ஓர் இலட்சியமும் உறுதியான ஓர் அமைப்பையும் தலைமையையும் கொண்டிருக்கவில்லையென்றால் அது மனவெளிகளிலேயே அலைந்து மறையும் என்பதால் 'தொழிலாளி வர்க்கத்தின் விடுதலையை முன்னிபந்தனையாகக் கொண்ட ஓர் அமைப்பை அவர்கள் கட்டுகிறார்கள். அதற்கான அறிக்கை ஒன்றையும் தயாரிக்கிறார்கள். அப்போது தான் அந்தப் பிரச்சினை எழுகிறது.

தங்களது அறிக்கைக்கு என்ன பெயர் சூட்டுவது?
சோஷலிஸ்ட் கட்சி அறிக்கையா?
கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையா?
'அறிக்கை'க்குச் சூட்டப்பட்ட பெயரின் தேர்வு குறித்து எங்கெல்ஸ் எழுதுகிறார்:

"தற்போது சோஷலிச இலக்கியங்கள் யாவற்றிலும் 'அறிக்கை’ மிகவும் பல்கிப் பரவி, அதிக அளவுக்கு அகிலம் தழுவிய வெளியீடாக இருக்கிறது. என்பதிலும், சைபீரியாவிலிருந்து கலிபோர்னியா வரையில் கோடானு கோடித் தொழிலாளி மக்களால் பொது வேலைத் திட்டமாய் ஏற்கப்பட்டிருக்கிறது என்பதிலும் அய்யப்பாட்டுக்கு இடமில்லை. ஆயினும் அது (அறிக்கை) எழுதப்பட்ட காலத்தில் அதற்கு நாங்கள் சோஷலிஸ்ட்டு அறிக்கை என்று பெயர் சூட்ட முடியவில்லை.

1847-இல் சோஷலிசம் மத்திய தரவர்க்க இயக்கமாய் இருந்தது. கம்யூனிசம் தொழிலாளி வர்க்க இயக்கமாய் இருந்தது. சோஷலிசம் 'கண்ணியவான் மனப்பாங்கு’ கொண்டதாய் இருந்தது. கம்யூனிசம் அதற்கு நேர்மாறானதாய் இருந்தது.

ஆரம்பத்திலிருந்தே எங்கள் கருத்தோட்டம் "தொழிலாளி வர்க்கத்தின் விடுதலை நேரடியாய்த் தொழிலாளி வர்க்கத்தின் செயலால்தான் பெறப்பட்டாக வேண்டும்’’ என்பதாய் இருந்ததால், 'சோஷலிசம்’, 'கம்யூனிசம்’ என்கிற இவ்விரு பெயர்களில் நாங்கள் எதைத் தேர்ந்தெடுப்பது என்பதில் சந்தேகத்திற்கு இடம் இருக்கவில்லை. அன்று முதலாய் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை என்கிற பெயரை நிராகரிக்கும் எண்ணம் ஒருபோதும் எங்களுக்கு ஏற்பட்டதில்லை.’’

கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை பல மொழிகளில் வெளியிடப்பட்டபோதும் முன்னுரைகளில் இதை மறவாமல் குறிப்பிட்டிருக்கிறார் எங்கெல்ஸ். தமிழகத்தில் நிலவிய அரசியல் சமூகப் பின்னணியில் தந்தை பெரியாரும் அறிஞர் அண்ணாவும், மார்க்ஸ் - எங்கெல்ஸ் எடுத்த அதே முடிவுக்குத்தான் வர முடிந்தது. பெரியாரின் சுயமரியாதை இயக்கம் தோன்றியபோது இந்தியாவில் சோஷலிசம் என்கிற பெயர் மாத்திரமல்ல, கம்யூனிசம் என்கிற பெயரும் கூட அதிகம் படித்தவர்களின் மத்தியிலேயே செல்வாக்குப் பெற்றிருந்தது. தோழர் ஜீவாகூட மத்தியத் தலைமைக்கு இதைச் சுட்டிக் காட்டியிருக்கிறார். பெரியாரோ சமூகத்தின் அதலபாதாளத்தில் உள்ள மக்களைப் பற்றிச் சிந்தித்ததால் அவர்களுக்கான அமைப்பு என்பது அதன் பெயரிலேயே தெரியவேண்டும் என்று விரும்பினார்.

இவை எல்லாமே இந்த இயக்கத்தின் இயல்பும் இலட்சியங்களும்தான். ஆனால் பாசிச (மனுதர்ம) எதிர்ப்பு என்கிற வரலாற்றுத் தேவையே இந்த இயக்கத்தைப் படைத்தளித்தது. அதனால் பாசிச எதிர்ப்பே இயக்கத்தின் முன்னிபந்தனையாக விதிக்கப்பட்டிருக்கிறது. பாசிசம் அதிகார முழக்கங்களோடு வந்தாலும், இதிகாச விளக்கங்களோடு வந்தாலும் திராவிட இயக்கம் அதை எதிர்த்தே நிற்கும். அடக்குமுறைகளும் மதவகைப்பட்ட போதனைகளும் ஒன்றுக்கொன்று ஆதாரமானவை என்பதை மறந்துவிடவேண்டாம்.

இந்த இயக்கத்துக்குக் கம்யூனிஸ்ட் கட்சி என்றோ, தமிழர் கழகம் அல்லது தமிழியக்கம் என்றோ பெயரிடாமல் திராவிடர் கழகம் - திராவிட இயக்கம் என்று அறிவித்தது ஏன்?

தமிழியக்கத்தின் தமிழுணர்வோடும், நீதிக்கட்சியின் சமூக நீதியோடும் சுயமரியாதை இயக்கம் இசைந்து செல்ல முடியும். ஆனால் முரண்படும் அம்சங்களோ பல உண்டு. ஓர் அரசியல் கட்சி என்கிற முறையில் நீதிக்கட்சி 'சமூக நீதி’யுடன் நிறைவு கொண்டு விட்டது. ஆனால் பெரியாரும் அண்ணாவும் இந்த எல்லையோடு நின்று விடவில்லை. சுயமரியாதை, தேசியம், பகுத்தறிவு, சோஷலிசம் என்று பரந்த அளவில் தமது போராட்டங்களை நடத்தினார்கள். சுயமரியாதை இயக்கத்தின் தொடர்பு எங்கே கொண்டு செல்லுமோ என்று நீதிக்கட்சியினர் அஞ்சினார்கள். பெரியாரை அப்புறப்படுத்தவே எண்ணினார்கள். வரலாற்றுப் புகழ்மிக்க 'அண்ணா தீர்மானம்’ நிறைவேற்றப்பட்டதும் 'போதும் பொது வாழ்க்கை’ என்று ஒதுங்கிக் கொண்டார்கள். நீதிக்கட்சி தனது வரலாற்றுக் கடமையை முடித்துக் கொண்டு அரங்கிலிருந்து மறைந்து போனது.

தமிழியக்கம் என்பது சமயப் பற்றுள்ள புலவர் குழுவாக இருந்தது. 'பாமர மக்களின் கொச்சைத் தனத்திலிருந்து’ தமிழைத் தனிமைப்படுத்தித் தூய்மைப்படுத்த விரும்பியது. சைவ சித்தாந்தத்தைப் பரப்புவதில் தீவிரமாக இருந்தது. அதன் தமிழுணர்வு இதற்கு மேல் வளர முடியாதிருந்தது. பெரியாரின் பகுத்தறிவுப் பிரச்சாரத்தைக் கண்டு அது கசப்புற்றது. தமிழியக்கத்திற்கும் பெரியார் இயக்கத்திற்கும் ஒரு மௌன யுத்தம் தொடர்ந்து நடந்தது. பெரியாரின் இயக்கம் ஆரிய வேதங்களையும் அநீதிகளையும் மாத்திரம் கேள்வி கேட்கவில்லை. 'தமிழ் மறை’களையும் விசாரணைக்குக் கொண்டு வந்தது.

'தமிழும் சைவமும்’ என்கிற முழக்கத்துடன் எண்ணாயிரம் தமிழறிஞர்களை - அவர்கள் புத்தர்களாகவும், சைனர்களாகவும், நாத்திகர்களாகவும் இருந்த ஒரே காரணத்துக்காகக் - கொன்று குவித்தவர்களை அறிவின் மேடையில் பெரியார் இயக்கம் விசாரணை செய்த போது பல 'தமிழறிஞர்கள்’ இங்கே மனத்துள் புழுங்கினார்கள். பொதுவில் தமிழியக்கம் பார்ப்பனர்களை அப்புறப்படுத்தி விட்டு 'அந்த இடத்தில்’ தன்னை வைத்துப் பார்த்தது. பெரியாரோ வர்ணாசிரம தர்மத்தின் அமைப்பு முறையையே மறுத்தார்.

தமிழியக்கம் 'மேலோர்’ சார்ந்த இயக்கமாய் இருந்தது. பெரியார் இயக்கமோ ஒடுக்கப்பட்டோரின் இயக்கமாய் வளர்ந்தது. தமிழியக்கத்தின் தமிழுக்குப் பின்னே 'இறையியல்’ நின்றது. பெரியார் இயக்கத்தின் தமிழுக்குப் பின்னே 'அறிவியல்’ நின்றது.

பெரியார் பொதுவாழ்க்கைக்கு வந்த நேரத்தில் கம்யூனிசம் என்பது அதிகம் படித்தோர் இயக்கமாகவும், நீதிக்கட்சி என்பது பார்ப்பனர் அல்லாத செல்வந்தர் கட்சியாகவும், தமிழியக்கம் என்பது புலவோர் இயக்கமாகவும் இருந்தது. அதேசமயம் திராவிடர் என்றால் தீண்டப்படாதார், இழிந்தோர் என்றே அரசு ஆவணங்கள் கூறின. பெரியாருக்கும் அண்ணாவுக்கும் அந்தப் பெயரே தங்கள் இயக்கத்துக்குப் பொருத்தமாக இருக்கும் என்று தோன்றியது. சமூகத்தின் கடைக்கோடி மக்களின் கட்சி என்று அறிவிப்பதற்காகவே திராவிடர் கழகம் என்னும் பெயரைத் தெரிவு செய்தார்கள்.

திராவிடர் கழகம், திராவிட இயக்கம் பண்பும் பயனும், சாரமும் சரித்திரமும் இதுதான். புலமைப் பகட்டர்களின் மயிர்பிளக்கும் வாதங்களுக்கும், பொறாமைக்காரர்களின் சூழ்ச்சி விமர்சனங்களுக்கும் அப்பால் திராவிட இயக்கம் ஒரு வரலாற்றுத் தேவையாய் எழுந்தது.

இந்த இயக்கத்தைக் கொச்சைப்படுத்துகிறவர்கள் தங்கள் ஆடைகளையே கிழித்துக் கொள்கிறார்கள். என்பதை வரலாறு உணர்த்தும். திராவிட இயக்கம் திசை திரும்பலாமா? என்று கேளுங்கள். அதன் வேகமும் போதாது என்று குறை சொல்லுங்கள். தன் வரலாற்றுக் கடமையை உணராத எந்த இயக்கமும் வீழ்ச்சியுறும் என்று எச்சரியுங்கள். ஆனால் பூமியின் முகத்தை அழகுபடுத்த நினைக்கும் யாரும் திராவிட இயக்கத்தின் பங்களிப்பைப் புறந்தள்ளி விடமுடியாது.

திராவிட இயக்கம் என்கிற பெயரே எனக்குப் பிடிக்கவில்லை என்று முகம் சுளிக்கிறவர்களைத் திருத்தவே முடியாது. அது ஒரு மேட்டுக்குடி மனோபாவம். 'பாவங்களிலேயே’ மிக மோசமானது அது.

--------------- ஏப்ரல் 2005 "தமிழ்ச் சான்றோர் செய்திமடலில்" இளவேனில் அவர்கள் எழுதிய கட்டுரை

பெரியார் செருப்படி பட்டது, ஒரு குறிப்பிட்ட சாதி வெறிகொண்ட பிற்படுத்தப்பட்டோர் மத்தியில்தான் என்ற உண்மையை மறந்துவிடக் கூடாது.

தமிழ்ச் சிந்தனைகள், வரலாற்று அடிப்படையில் இன்னும் முழுமையாகத் தொகுக்கப்படவில்லை. பிற துறைகளில் காணப்படும் வரலாற்று வறட்சிக்குத் தமிழ்ச் சிந்தனை மரபும் தப்பியதாகத் தெரியவில்லை. ஆளும் வர்க்கங்களின் கருத்துகளே தமிழ்ச் சிந்தனையின் ஆதியும் அந்தமாய் காட்டப்படும் போக்கு, இன்றும் அதிகாரத்தில் இருக்கிறது. இந்தப் பழமைப் பிடிப்பு, காலமாற்றங்களை மறுதலிக்கும் ஒரு நோய் மனோபாவத்தை உண்டாக்கி வருகிறது.

சாதியொழிந்த விடுதலை பெற்ற மானுடம் என்ற கோட்டில் அம்பேத்கரும் பெரியாரும் கைகோர்த்தே செல்லுவதை நாம் பார்க்க முடியும். இப்படி மானுட விடுதலையை முன்னிறுத்திய இந்தச் சிந்தனையாளர்கள் மீது விமர்சனம் என்ற பெயரில், அவதூறுகளும் கண்டனங்களும் எழுவது புதிதல்ல. இத்தகைய அவதூறுகளுக்கு பதிலுரையாக பெரியாரியத்தின் பகுத்தறிவு, தன்மானம், பெண் விடுதலை, சமத்துவம், தமிழர் விடுதலை முதலிய பன்முகப் பார்வைகளின் தொகுப்பு நோக்காக "பெரியாரின் இடதுசாரித் தமிழ்த் தேசியம்' என்ற நூலை சுப. வீரபாண்டியன் எழுதியுள்ளார்.

"இந்திய விடுதலையும் பகத்சிங்கும்' நூலுக்குப் பிறகு சுபவீயின் ஆய்வு முயற்சியுடன் கூடிய நூலாக இந்நூல் அமைந்திருக்கிறது. அய்ந்து இயல்களாக இயங்கும் இந்நூலில் 2, 3, 4 இயல்களில் பெரியாரியத்தின் தேசியப் பார்வை, பல்வேறு தரவுகளுடனும் தர்க்கங்களுடனும் விளக்கப்படுகிறது. "தேசிய இனச் சிக்கலும் தமிழ்த் தேசியம்' என்ற முதல் இயலும், "தமிழ்த் தேசியம் இன்றைய சூழலில்' என்ற இறுதி இயலும், நூல் நுதலும் பொருளுக்கான முன்னுரைகளாகவும், முடிவுரைகளாகவும் அமைந்திருக்கின்றன. முதல் இயலில், தமிழ்த் தேசியம் என்ற கருத்தாக்கம் எவ்வாறு வளர்ச்சி பெற்று வந்தது என்பதை இலக்கியத்தரவுகளிலிருந்து கட்டமைக்கிறார். இக்கட்டமைப்பு, மரபுவழிப்பட்ட புலவர்களின் பார்வையை ஒத்தே தொடக்கத்தில் செல்கிறது.

சமண பவுத்தர்களை தமிழறியாதவர்கள் என்று சைவக் குரவர்கள் சொல்வதை சுபவீ சுட்டிச் செல்கிறார். இந்தக் கூற்றின் மீது வரலாற்று வகைப்பட்ட திறனாய்வைச் செய்திருக்க வேண்டும். ஏனெனில், அய்ம்பெருங்காப்பியங்களும், அய்ந்து இலக்கணங்களும் சமண பவுத்தர் தொட்டதனால் தோன்றியவை. அதற்கும் அப்பால், வேள்வியாலும் வேதங்களாலும் அதிகாரத்தில் அமர்ந்து வைதீகத்துக்கு அறைகூவல்களாகவும் விளங்கியவை சமண பவுத்தங்களே. சைவ வைணவத்தின் பெயரால், பார்ப்பனிய அதிகாரம் தன்னைப் பதுக்கிக் கொண்டது தமிழ்ச் சமுதாயம் இன்றளவும் உணராமல் இருக்கிற அறியாமையாகும்.

இந்நூலின் தலைப்பு, இரண்டு வகையான விளக்கங்களைப் பெறுதல் வேண்டும். "பெரியாரின் இடதுசாரித் தமிழ்' என்றும், "பெரியாரின் இடதுசாரித் தமிழ்த் தேசியம்' என்றும் அவ்விளக்கங்கள் அமைதல் வேண்டும். இடதுசாரித் தமிழ் என்பது, மொழிவகைப்பட்ட, பண்பாட்டு வகைப்பட்ட அனைத்து மூடத்தனங்களுக்கும் எதிராக நிற்பது. மொழித் தோற்றம் என்பதை தெய்வீகம் சார்ந்ததாக சைவம் உள்ளிட்ட வைதீக நோக்கர்கள் கதை கட்டிய காலத்தில், மொழிக்கு அறிவியல் அடிப்படையில் விளக்கம் சொன்னது சமணம் பவுத்தம்தான். "மொழி முதற்காரணமாம் அணுத்திரள் ஒலி எழுத்து என்பது சமணர் தேற்றம்' அதனால் பெரியாரின் இடதுசாரித் தமிழ் குறித்த தேடுதலுக்குச் சமண பவுத்த சமயங்களின் பங்களிப்புதான் பேரளவுக்கு உதவும்.

எனினும், தமிழ் உணர்வை சைவ மரபில் தேடும் ஆய்வாளர்கள், சமணம் பவுத்தம் தமிழுக்கும், கலைகளுக்கும் எதிராக நின்றன என்ற கூற்றை தமிழ்ச் சிந்தனை மரபில் உடுக்கடித்துப் பதிய வைத்துள்ளனர். சமயம் தவிர்த்த மொழியை முன்னிறுத்திய பெரியாரின் பார்வையை இன்றளவும் தனித்தமிழ் ஆர்வலர்களும், அறிஞர்களும் புறந்தள்ளுவதற்கான கால வித்து இங்குதான் அமைந்திருக்கிறது.

விரிவான இந்த இயலில் வேறொரு செய்தியும் பேசப்பட்டிருக்க வேண்டும். செவ்விலக்கிய தமிழ் மரபுக்கு உழைக்கும் மக்கள் வழங்கிய பங்களிப்பு, இன்னும் விரிவாக ஆராயப்பட வேண்டும். வடமொழியும், தெலுங்கும், உருதும், ஆங்கிலம், பிரெஞ்சும் அதிகார மொழிகளாகக் கோலோச்சிய காலங்களில், பீடத்திலிருந்தோர் எல்லாம் இம்மொழிகளின் அன்பர்களாக நின்றார்கள். பக்தி சுவை நனி சொட்டச் சொட்டப் பாடிய புலவர்களுக்கு, வடமொழியின் இருப்பும் பயன்பாடும் உறுத்தியதாகத் தெரியவில்லை.

இக்கால கட்டங்களில் எல்லாம், தமிழின் தனித்தன்மையைக் காப்பாற்றி நின்றவர்கள் உழைக்கும் வெகுமக்களே. அவர்கள் "நீரை' "ஜலம்' ஆக்கவில்லை. "சோற்றை' "சாதம்' ஆக்கவில்லை. செவ்விலக்கியங்களாக அவர்கள் எதையும் வழங்கவில்லைதான். இருந்தாலும், முத்தமிழின் இசையை அவர்கள் வயல்களிலும் வாய்க்காலிலும், கடலிலும் கரையிலும், தொட்டிலிலும் கட்டிலிலும் வளர்த்தார்கள். ஒருபோதும் எழுத்தாக்கப்படாத நாடகத்தை, தங்கள் வாழ்வின் ஒவ்வொரு தருணத்திலும் கூத்தாக ஆடினார்கள்.

இந்நூலில் மிகச் சரியாக விமர்சிக்கப்படும் ம.பொ. சிவஞானத்தின் வடமொழி ஆதரவு, அவர் காங்கிரஸ் இயக்கத்தில் இணைந்து நின்றதிலோ, தமிழரசுக் கழகத்தைத் தொடங்கியதிலோ தோற்றம் கொள்ளவில்லை. பழஞ் சைவ மரபின் புதுக் கொழுந்துதான் சிவஞானம் என்பதைச் சேர்த்துச் சுட்ட வேண்டும். தமிழ்த் தேசியத்தின் தோற்றுவாய்களை சுப. வீரபாண்டியன் பெருமுயற்சி செய்து தொகுத்திருக்கிறார். எனினும், மேற்சொல்லப்பட்ட திறனாய்வுப் பார்வைகள், இன்னும் வாய்க்கவிருக்கும் கருத்துகள், இந்த இயலுக்கு வலுவூட்டும். உ.வே.சா.வின் பதிப்பு முயற்சிகளை நன்றியோடு நினைவுகூறும் சுபவீ, அவரின் வடமொழிச் சார்பையும் சாதியத் தள்ளாட்டத்தையும் தெளிவாகவே அடையாளம் காட்டுகிறார். இத்தகைய அடையாளம் காட்டும் முயற்சிகள்தாம், ஒரு இடதுசாரித் தமிழ்ப் பார்வையை அடைய உதவும்.

மொழி குறித்தும், தேசிய இனத்தின் உரிமை குறித்தும், உலக இடதுசாரிகள் கொண்டிருந்த கருத்துகள் பெரியாரிடம் தீவிரம் கொள்கின்றன. ருஷ்ய மொழியின் தனித்துவத்திலும் தூய்மையிலும் அக்கறை கொண்டவர் லெனின். அது அவரது தாய்மொழி. ஆனால், ருஷ்ய மொழி ருஷ்யா முழுவதுக்கும் ஆட்சி மொழியாக வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டபோது, அதை லெனின் மறுத்தார். “சின்னஞ்சிறு சுவிட்சர்லாந்து ஒரேயொரு ஆட்சி மொழியை கொண்டது அல்ல. ஜெர்மன், பிரெஞ்சு, இத்தாலியன் ஆகிய மூன்று ஆட்சி மொழிகளைப் பெற்றுள்ளது. இதனால், அதற்கு எந்தக்கேடும் ஏற்பட்டு விடவில்லை; நன்மையே உண்டாகி இருக்கிறது'' ("தேசிய இனப் பிரச்சினைகளும் பாட்டாளி வர்க்க தேசியவாதம்' பக்கம்: 20).

தமிழின் மீது சமஸ்கிருத அதிகாரத்தை எதிர்த்தது போலவே, தமிழின் சைவ, வைணவ சாதிய அதிகாரத்தையும் பெரியார் எதிர்த்தார். தமிழின் தொன்மை என்பதும், வளம் என்பதும் தமிழ் மக்களின் விடுதலைக்கும் முன்னேற்றத்துக்கும் எந்த வகையில் உதவும் என்று கேட்டார். இதுதான் அவரை, மறைமலை அடிகள் போன்ற வலதுசாரித் தேசியவாதிகளில் இருந்து துல்லியமாக அடையாளம் காட்டுகிறது. பெரியாரின் இந்தத் தனித் தன்மையை சுபவீ, எவ்விதத் தயக்கமுமின்றி விளக்குகிறார்:

முதலாவதாக, தமிழ் முன்னேற்றமடைந்து உலக பாஷை வரிசையில் அதுவும் ஒரு பாஷையாக இருக்க வேண்டுமானால், தமிழையும் மதத்தையும் பிரித்துவிட வேண்டும். தமிழுக்கும் கடவுளுக்கும் உள்ள சம்பந்தத்தைக் கொஞ்சமாவது தள்ளி வைக்க வேண்டும்...'' இது தொடர்பான கருத்துகளை இன்னும் நெடிதாகவே மேற்கோள் காட்டி ஏற்கும் சுபவீ, இதைத் தொடர்ந்து கூறுவது மிக மிகச் சரியானதாகும்: "தமிழரின் முன்னேற்றம், தமிழரின் மேம்பாடுபற்றியே காலமெல்லாம் எண்ணிக் கொண்டிருந்த பெரியார், அதற்குத் தடையாக எது வந்தாலும் அது தமிழாகவே இருந்தாலும் எதிர்த்தார் என்பதைத்தான் மேற்காணும் வரிகள் நமக்கு உணர்த்துகின்றன'' (பக்கம்: 138).

பெரியாரின் மனித விடுதலையை அடிப்படையாகக் கொண்ட இத்தகைய பார்வைதான்,பெண் விடுதலை என்ற நோக்கில் திருக்குறளையும் கேள்வி கேட்க வைத்தது. வள்ளுவர் பாராட்டும் கற்பு, கணவனைத் தொழுதெழுதல், பரத்தைமையைக் கண்டித்தல் இவற்றையெல்லாம், எவ்விதத் தயக்கமின்றிப் பெரியார் கேள்வி கேட்டார். திருக்குறளை அவர் பாராட்டினார் என்பது உண்மைதான். ஆனால் நிபந்தனைகள் எதுவுமில்லாமல் பாராட்டவில்லை.

மொழி பற்றிய பெரியாரின் இந்த அணுகுமுறை, பெர்டோல்ட பிரக்ஸ்ட் என்ற ஜெர்மானிய நாடகாசிரியரின் ஒரு கூற்றை எனக்கு நினைவுபடுத்துகிறது: “ஜெர்மானிய மொழியை நாம் சலவை செய்ய வேண்டும்.'' இதை நான் அடிக்கடி மேற்கோள் காட்டுகிறேன். அத்துடன் கூட ஒன்றையும் சேர்த்துச் சொல்கிறேன்: “தமிழ் மொழியையோ வெறும் சலவை செய்தால் போதாது; அதை வெள்ளாவிப் பானையில் வைத்து அவிக்க வேண்டும்.''

பெரியாரின் ஆங்கில ஆதரவு, தமிழன்பர்களால் கண்டனம் செய்யப்படுகிறது. இது குறித்தும் சுபவீ தெளிவான வாதங்களை முன்வைக்கிறார். இதில் சுபவீ, மறைமலை அடிகளின் ஆங்கில நாட்குறிப்பு, தேவநேயப் பாவாணரின் ஆங்கிலம் குறித்த கருத்து (பக்கம்: 142), “தமிழர் தமிழையும் ஆங்கில மொழியையும் அமிழ்தெனக் கற்க ஆங்கிலம் பெறுகவே'' என்று பெருஞ்சித்திரனாரைக் காட்டும் மேற்கோள் ஆகியவை, ஆங்கிலத்தை தன்மைப்படுத்தும் நோக்கிலானவை அல்ல; தமிழுக்குரிய தலைமையை உறுதிப்படுத்த வேண்டும், அதே நேரத்தில் உலகத் தொடர்புகளை மேம்படுத்த ஆங்கிலத்தின் தேவையை மறுதலிக்க முடியாது என்ற நோக்கில்தான்.


இந்நூலின் மிக முதன்மையான பகுதி "பெரியாரின் இடதுசாரித் தமிழ்த் தேசியம்' என்பதுதான். இதில் பெரியாரின் தமிழ் குறித்த பார்வை, திராவிடம் - திராவிட நாடு என்று முதலில் கூறினாலும், அது தமிழ்த் தேசியமாகவே உருவான தன்மை, தனித் தமிழ் இயக்கம் கண்ட மறைமலையடிகளோடு பெரியார் முரண்பட்ட நூலை, பெரியாருக்கு முந்தியே தமிழின உணர்வு, சமூக விடுதலை ஆகியவற்றை முன்மொழிந்த அயோத்திதாசப் பண்டிதரின் பங்களிப்பு, அதன் நிறை குறைகள், இப்படி நிறையவே பெரியாரியத்தை வகைப்படுத்திக் கொண்டு வந்தவர், பெரியாரியத்தின் சாரமாகப் பின்வரும் முடிவைக் கண்டடைகிறார்:

"... சமூக மொழித் தேசியவாதத்தை, இடதுசாரித் தன்மையுடன் முன்னெடுத்த பெரியார், சாதி ஒழிப்பு, பெண் விடுதலை ஆகிய இரண்டினையும் தமிழ்த் தேசியத்தின் இரு கூறுகளாகக் காலம் முழுவதும் எடுத்துச் சென்றுள்ளார்.''

இத்துடன் கூட ஒன்றையும் சேர்த்துச் சொல்ல வேண்டும். புராண மாயைகளை மட்டுமின்றி, தமிழ்த் தொன்மை குறித்த மாயைகளையும் உடைத்த முதல் சிந்தனையாளர் பெரியார்தான். தமிழ் மாயைகளை மறுத்த பெரியாரை, தமிழ்த் தேசிய மறுப்பாளராகவே சித்தரிக்க முயலும் அ. மார்க்சையும் உரிய வகையில் சுபவீ மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. தாழ்த்தப்பட்ட மக்களுக்காகப் பெரியார் எழுதியதையும் பேசியதையும் போராடியதையும் சுபவீ விரிவாகவே எழுதியுள்ளார். ரவிக்குமாரின் பெரியார் மறுப்பு வாதங்களுக்கு இப்பகுதியும் வலுச்சேர்க்கும். பெரியார், பிற்படுத்தப்பட்டவர்களுக்குத்தான் தலைவர் என்ற வாதத்தை சுபவீ, சரியான தர்க்கத்தினால் மறுக்கிறார்:

“... ஒரு சாதிக்குள்ளேயே பல குழுக்களும் தலைவர்கள் பலரும் இருக்கும்போது பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட அனைத்துச் சாதிகளுக்கும் ஒரு தலைவர் என்பது கற்பனை. சாதிகள் அல்லது தொகுப்புகளின் அடிப்படையில் "ஒற்றைத் தலைவர்' ஒரு நாளும் வரமுடியாது. இன்றைக்கும் தங்களின் "சாதிவட்டம்' என்பதுதான் சாதித் தலைவர்களின் பலம் பலவீனம். அவர்கள் ஒரு சாதியை விட்டு ஒரு சாதிச் சங்கத்தை விட்டு வெளியில் வரும் வரை, எல்லாச் சாதியினருக்கும் தலைவராக முடியாது'' (பக்கம்: 168 69).

பெரியார், "பிற்படுத்தப்பட்ட மக்களின் தலைவர்' என்று முத்திரை குத்தும் தலித்தியச் சிந்தனையாளர்கள், இது குறித்து ஆழ்ந்து ஆராய வேண்டும். பெரியார் செருப்படி பட்டது, ஒரு குறிப்பிட்ட சாதி வெறிகொண்ட பிற்படுத்தப்பட்டோர் மத்தியில்தான் என்ற உண்மையை மறந்துவிடக் கூடாது. முதுகளத்தூர் கலவரத்தின் போது பெரியார் எடுத்த நிலைப்பாடு, கம்யூனிஸ்டுகளால் கூடத் துணிய முடியாதது. வெண்மணி குறித்து "விடுதலை' தலையங்கம் எழுதியதை ஏற்றுக் கொண்டுதான் அவரை விமர்சிக்க வேண்டும்.

பெண்ணியம் குறித்த நிலைப்பாட்டில், ஒட்டுமொத்த தமிழ் மரபுச் சிந்தனையாளர்களுக்கும் எதிராக ஒலித்த ஒரு குரல் பெரியாருடையது மட்டும்தான். பெரியாரை ஆழ்ந்து பயிலும்போது, பெண் விடுதலை குறித்து அவர் வெளியிட்டது வெறும் அதிர்ச்சி மதிப்புச் சார்ந்தது என்பது, நியாயமற்ற குற்றச் சாட்டாகவே நிற்பது புலனாகும். அவருடைய தேடலில் அவர் கண்டடைந்த முடிவுகள் ஆணாதிக்கத்துக்கும், சாதியத்துக்கும் அதிர்ச்சியளிப்பவைதான். கோப்பர் நிகசும், கலிலியோவும் கண்டடைந்த முடிவுகளை அறிவியலாளர்கள் வெறும் அதிர்ச்சி மதிப்புக்குரியவை என்று கூறுவார்களா? எனினும், பழமைவாதிகளுக்கு அவை அதிர்ச்சியளித்தது உண்மைதான். சிந்தனையாளர்களின் ஆய்வு முடிவுகள், எத்தகைய தரவுகளின் பரிசீலனையில் உருவானவை என்பதை நோக்குவதுதான் தன்மையானது. பெரியாரியத்தை வசைபாடும் தோழர்கள், மானுட விடுதலை குறித்த பெரியாரியப் பார்வைக்கு நியாயம் செய்யவில்லை.


உண்மையான பெரியாரியவாதிகளுக்கும் பல செய்திகளைச் சொல்ல வேண்டும். 1967 இல் இருந்து பெரியாரை ஏற்றுக் கொண்டதாகச் சொல்லும் கழகங்கள்தாம் தமிழகத்தை ஆளுகின்றன. இதற்கு முந்திய காங்கிரஸ் ஆட்சியில் நடந்ததைவிடக் கூடுதலாக தலித்துகள் அவமானப்படுத்தப்படுவதும் தாக்கப்படுவதும் கொலை செய்யப்படுவதும் கழகங்களின் ஆட்சியில்தான். இந்தக் கொடுமைகளைக் கட்டவிழ்த்து விடுவதில் கழக முன்னோடிகளின் பங்கு கணிசமானது. ஆட்சிக்குக் கட்டுப்பட்ட காவல் துறையின் அத்துமீறல்கள், நாகரிக உலகைத் தலைகுனியச் செய்யும். இந்தக் கொடுமைகளை முதன் முதலாக தலித்துகள்தான் எதிர்த்துக் குரல் கொடுக்கிறார்கள், போராடுகிறார்கள். பொதுவுடைமைக் கட்சிகள் அவ்வப்பொழுது கண்டனம் செய்கின்றன.

ஆனால், தி.மு.க., அ.தி.மு.க., ம.தி.மு.க. முதலிய ஆட்சி அதிகாரத்தைக் கையில் எடுத்துக் கொண்ட கட்சிகள், இந்தக் கொடுமைகளுக்கு எதிரான சமரசமற்ற ஒருபோராட்டத்தை ஏன் முன்னெடுக்கவில்லை? இந்தக் கட்சிகள் அனைத்தும் "பெரியார் சுழி'யோடுதான் தங்கள் வரலாற்றைச் சொல்கின்றன. எனில், சாதியக் கொடுமைகள் தலைவிரித்தாடும்போது, மவுனம் காக்க வேண்டும் என்று பெரியார் கற்பித்தாரா? இந்தக் கழகங்களைச் சேர்ந்தவர்களின் சாதிய ஈடுபாடு, தமிழக வரலாற்றை நாறச் செய்கிறதே! இதற்கு இக்கழகங்களின் தலைவர்கள் என்ன பரிகாரம் செய்யப் போகிறார்கள்?

சோவியத் யூனியனில் கம்யூனிஸ்டு கட்சியின் பெயரால் பல அத்துமீறல்கள் நடந்தன; ஊழல் புரையோடிப் போனது; உரிமைகள் மறுக்கப்பட்டன. இவற்றுக்கெல்லாம் காரணமான கட்சித் தலைவர்கள், லெனினை முன்னிறுத்தியே தங்கள் தவறுகளைத் தொடர்ந்தனர். சினம் கொண்ட இளைஞர்கள் கட்சியை வெறுத்தனர். கட்சி கேடயமாகப் பயன்படுத்தப்பட்ட லெனினை வெறுத்தார்கள். இந்த வெறுப்புணர்ச்சியை வளர்ப்பதில் உலக முதலாளியம் முன்னின்றது என்பது உண்மைதான். ஆனால், அதற்கு கட்சியின் தவறுகள் இடங்கொடுத்தன. சோவியத் யூனியன் சிதறியபோது, லெனினுடைய சிலையும் சேர்ந்தே சிதறியது.

கழகங்களின் ஆட்சிக் காலத்தில் நடைபெறும் சாதியக் கொடுமைகளால், தன்னுணர்வு பெற்ற தலித்துகள் வெறுப்படைந்து போயிருக்கிறார்கள். அந்த வெறுப்பு, பெரியார் எதிர்ப்பாக மாறக்கூடிய எல்லா வாய்ப்புகளும் இருக்கின்றன. இதற்கு, பார்ப்பனியம் தூபம் போடலாம். அதற்கு முன்பு கழகங்கள் தன்நெஞ்சறிவது பொய்க்கக்கூடாது. பெரியாருக்கு நியாயம் செய்வது, இன்று தலித்துகளுக்கு நியாயம் செய்வதுதான்.


-------------------- "தலித்முரசு" -ஆகஸ்டு-2005 இதழில் இன்குலாப் அவர்கள் எழுதியது.

22.4.08

ஒழுக்கமில்லாக் கடவுள்கள்

எங்களைப் பார்த்து முன்பு எல்லோரும் தேசத் துரோகிகள், நசகாலர்கள் என்று சொன்னார்கள். இப்பொழுது எதுவும் சொல்ல முடியாது. அவ்வளவு சேவை செய்திருக்கிறோம். இப்பொழுது நாங்கள் கேட்கிறோம்; பறையனுக்கும், சக்கிலிக்கும் எங்கிருக்கிறது சுயராஜ்யம்? ஆகவே முதலில் ஜாதி ஒழிய வேண்டும் என்று ஈடுபடும் பொழுதுதான், எங்களை நாத்திகர் என்று கூறுகிறார்கள். இந்த வேலையை இப்பொழுது மந்திரிகள், நீதிபதிகள்; பார்ப்பனப் பத்திரிகைகள் அனைவரும் செய்து வருகின்றனர்; இதைப்பற்றிய கவலை எங்களுக்கில்லை. ஜாதியைக் காப்பாற்ற கடவுள் எதற்கு? நாங்கள் கடவுள் இல்லையென்று சொல்லுபவர்கள் அல்ல; கடவுளை நம்ப வேண்டாம் என்று சொல்லவும் இல்லை. மேலும் எங்களுக்கு கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பது வேறு சங்கதி, கடவுள் என்பது என்ன? கிறிஸ்தவர்களுக்கும் கூட கடவுள் இருக்கிறார். அதை ஏன் நீ கடவுள் என்று ஒப்புக் கொள்ளக்கூடாது? அவர்கள் கடவுளுக்கு இறப்புமில்லை, பிறப்புமில்லை, கண்ணுக்குத் தெரியாதது என்று கூறுகிறார்கள். ஏன் ஒப்புக்கொள்ளக் கூடாது?

அன்பான கடவுள், கருணையுள்ள கடவுள், ஒழுக்கமுள்ள கடவுளை நான் வேண்டாமென்று சொல்லவில்லை. ஒரு கடவுள் என்று சொல்லிய பிறகு இத்தனை கடவுள்கள் எங்கிருந்து வந்தன? உருவமில்லாத கடவுளுக்கு இத்தனை உருவங்கள் எப்படி வந்தன? ஒன்றுமில்லாத கடவுளுக்கு மனைவி ஏன்? கல்யாணம், கருமாந்தரமேன்? ஒரு மனைவி இருந்தால்கூட பரவாயில்லையே! எந்தக் கடவுளுக்கு இரண்டுக்குக் குறைந்து இருக்கிறது? எந்தக் கடவுள் தேவடியாள் வீட்டுக்குப் போகாமல் இருக்கிறது? மலத்தைத் தின்றால்தான் கடவுளை நம்புகிறவன் என்று ஒருவன் சொன்னால், நீ மலத்தைத் தின்றுகாட்ட வேண்டுமா? கடவுள் அன்பு, கருணை வடிவானவர் என்று கூறுகிறாயே; நீ கும்பிடும் கடவுளுக்கு வேல், சூலம், அரிவாள், கத்தி எதற்கு? நீ வணங்கும் கடவுள்களில் கொலை செய்யாத கடவுள் எது? பிறகு எப்படி அன்பு, கருணை என்று கூறுகிறாய்? ஒழுக்கமுள்ள கடவுள் என்கிறாய்; பிறர் மனைவியைக் கைப்பிடித்து இழுக்காத கடவுள் எது? இருந்தால் ஒரு கடவுளைக் காட்டேன். இதைச் சொன்னால், ராமசாமி நாயக்கர் கடவுளைத் திட்டுகிறார், கடவுள் இல்லையென்று சொல்கிறார் என்று பத்திரிகையில் எழுதிவிடுகிறார்கள். கடவுள் இப்படிச் செய்கிறார் என்று நானா சொல்கிறேன்? பார்ப்பனர் எழுதி வைத்திருப்பதைப் பார்த்துப் படித்துவிட்டுச் சொல்கிறேன். ஏழைப் பிள்ளைகளை படிக்கவைக்க பணமில்லை என்று கூறுகிறார்கள். கோயில்களில் ஆயிரக்கணக்கில் நிலங்களும் நகைகளும் இருக்கின்றனவே; அதை யார் வயிற்றில் வைத்து அழுவது? இந்த நாட்டு மக்களின் கல்வியைப்பற்றிக் கவலையில்லாமல் ஜாதியைக் காப்பாற்ற கோயில் கட்ட வேண்டும் என்றும், கோயில்களை `ரிப்பேர்' செய்ய வேண்டுமென்றும் கூறுகிறாய். நேற்றுகூட பழனியாண்டவர் கோயிலுக்கு லட்சக்கணக்கில் செலவு செய்யப் போவதாகச் சொன்னார்கள்! இந்தப் பணத்திற்கு எத்தனை கல்லூரிகள் கட்டலாம்? கள் குடித்தால், சூதாடினால், தேவடியாள் வீட்டுக்குப் போனால் மக்கள் பணம் பாழாகிவிடுகிறது. ஆனால், கோயிலுக்குப் போனால் மட்டும் வரும்படியா வருகிறது? வருடத்திற்கு கோயில்கள்மூலம் 45 லட்ச ரூபாய் வருகிறதே, எப்படி வருகிறது? 1956ஆம் வருடத்திலும் இந்த அக்கிரமமா?


இராமன் பட எரிப்புக் கிளர்ச்சி செய்தால் மக்களுக்கு இதனால் சோறு வருமா என்று கேட்கிறார்கள். கேட்கிறவர்கள் சோற்றுக்காக என்ன பாடுபட்டார்கள்? இதை அழித்தால், இன உணர்ச்சி வந்தால், ஜாதி அழிந்தால், தானாகச் சோறு கிடைக்கிறது. அவனே தெரிந்து கொள்கிறான். இந்த நாட்டைப் போல வேறு எந்த நாட்டில் ஆண்டவன் பெயரால் கோடிக்கணக்கில் பணம் பாழாகிறது? ஆகவேதான் இந்த இழி தன்மையைப் போக்கப் பாடுபடுகிறோம். யாராவது சொல்லட்டுமே, எனக்குக் கடவுள் பக்தி இருக்கிறதென்று, நான் கடவுள் யோக்கியதையைப் பார்த்துக் கொண்டுதானே வருகிறேன். நானும் கடவுள் பெயரைச் சொல்லி பல செயல்களைச் செய்தவன் தான்; புராண காலட்சேபம் செய்து யார் ஒழுக்கமாக வாழ்கிறார்கள்? சங்கராச்சாரி வாழ்கிறாரா? சந்நிதானங்கள் யாராவது வாழ்கிறார்களா? கடவுள் பக்தி வேண்டும் என்றும், ஆத்மா இருக்கிறதென்றும் நீதிபதி முதல் மந்திரிகள் வரையில் பிரச்சாரம் செய்கிறார்கள். இந்த நாட்டில் பக்தி இல்லையா? எவராவது பக்தி இல்லையென்று சொல்ல முடியுமா? தமிழ்நாட்டில் ஏறக்குறைய இருபதினாயிரம் கைதிகளுக்குமேல் இருப்பார்கள். அவர்கள் காலையில் எழுந்த உடனே பட்டை பட்டையாக அடித்துக் கொள்வார்கள். ஏண்டா என்றால், சீக்கிரம் விடுதலையாக வேண்டும் சாமி என்று கூறுவான் - யாராவது ராசா, மந்திரி சாகமாட்டானா, நான் விடுதலையாக மாட்டேனா என்று வேண்டிக் கொள்வான்.

இப்பொழுது திருடாமல், பொய் பேசாமல் யார் இருக்கிறார்கள்? இனி மேலாவது மக்கள் ஒழுக்கத்தை அனுசரிக்க வேண்டும்; அன்பைக் கடைப்பிடிக்கவேண்டும். இப்படியே எல்லோரையும் ஏய்த்துக் கொண்டு போய்க் கொண்டிருந்தால் மிருகமாவது தவிர வேறு என்ன? யார் கடவுள் இருக்கிறார் என்று வாசற்படியைத் திறந்து வைத்துக் கொண்டு தூங்குகிறார்கள்? பெட்டியில் எண்ணி வைத்த பணத்தை திரும்பி எண்ணிப் பார்க்காதவர்கள் யார்? யார் பணப்பெட்டியைத் திறந்து வைத்துக் கொண்டு இருக்கிறார்கள்? பக்தியோடு இருக்கிறவன் சாமியிடத்தில் வந்து கும்பிட்டு விட்டு, சாமிமேல் இருக்கும் ஆபரணங்களையும், பெண்சாமியை நிர்வாணமாக்கி விட்டு சேலையையும் எடுத்துக் கொண்டு ஓடிவிடுகிறான். இதைப்பற்றி சாமியாவது மற்றவர்கள் யாராவது கவலைப்படுகிறார்களா? உயர்தர நீதிமன்றத்தில் இருக்கும் நீதிபதி எத்தனைக் கொலைகாரர்களை பார்க்கிறார்; எவ்வளவு திருடர்களைப் பார்க்கிறார். அவருக்குத் தெரியாதா, பக்தியில்லாமல் திருடுகிறானா, பக்தியிலிருந்து கொலை செய்கிறானா என்று? அவர்களைப் பார்த்துவிட்ட பிறகு, மக்களிடம் பக்தியிருந்தும் ஒழுக்கமில்லை என்றல்லவா சொல்லவேண்டும்? ஆகவே, மக்களை ஒழுக்கத்தின் பக்கம் திருப்பவேண்டும். இன்னும் ஒழுங்கீனமாக நடக்கக் கூடாது. எவ்வளவு ஒழுங்கீனமாக நடந்து கொள்ள முடியுமோ அவ்வளவும் நடந்துவிட்டோம். ஆகவே, கோயில் கட்டுவதனாலும், உற்சவம் கொண்டாடுவதனாலும் பயனில்லை; இலாபமில்லை.

லட்சக்கணக்கான மக்கள் மாமாங்கத்திற்காகக் கூடினார்கள். அது முட்டாள்தனத்தைக் காட்டுவதைத் தவிர வேறு என்ன? அங்கு போய் அழுக்குத் தண்ணீரில் தானே குளிக்கிறார்கள். குளத்தில் இருக்கும் மேல் தண்ணீரை இறைத்து விடுகிறார்கள். அழுக்குத் தண்ணீர் இருக்கிறது. எல்லோரும் இறங்கினால் தண்ணீர் உயரம் அதிகமாகிறது. யாரும் இல்லாதபொழுது கணுக்காலில் இருக்கும் தண்ணீர், எல்லோரும் இறங்கிய பிறகு கழுத்தளவுவரை வருவதில் ஆச்சரியமென்ன? குளத்தில் இறங்கி விட்ட பிறகு சிறுநீர் வந்தால் எங்கே போவது? அதைக் குளத்திலேயே ஒவ்வொருவரும் விட்டால் நுரை பொங்குகிறது. இதைப் பார்த்து நம் பைத்தியகார மக்கள் `பார் சிவன் தண்ணீர் விடுகிறான், நுரை பொங்குகிறது பார்'' என்று சொல்லுகிறார்கள். சொல்லுவதோடு மட்டுமல்லாமல் அந்தத் தண்ணீரைத் தலையில் தடவிக் கொள்கிறார்கள். வடநாட்டில் கும்பமேளா நடந்தது. சுமார் எண்ணூறு சாமியார்கள் நிர்வாணமாக அங்கு வந்தார்களாம். அவர்களைப் பார்க்கப் போய் ஆயிரக்கணக்கான மக்கள் மடிந்தார்கள். புண்ணிய க்ஷேத்திரத்திற்கு நிர்வாணமாகத்தான் போக வேண்டுமா? இதை வெளிநாட்டான் கேள்விப்பட்டால் என்ன நினைப்பான்? இன்னும் நீ இப்படியே நுரை பொங்குகிறதென்று சொல்லிக்கொண்டிருக்கப் போகிறாயா? எந்தப் பார்ப்பானாவது காவடி எடுத்து ஆடியிருப்பதைப் பார்த்திருக்கிறாயா? எந்தப் பார்ப்பனத்தியாவது திருப்பதி வெங்கடேசா, கோவிந்தா என்று தெருவில் புரண்டு பிச்சையெடுப்பதைப் பார்த்திருக்கிறாயா? இதைக் கண்ட பிறகாவது திருந்த வேண்டாமா நம் மக்கள்?

--------- தந்தைபெரியார் - "விடுதலை" 10.9.1956

மாமிசம் விரும்பிச் சாப்பிட்ட இராமன்

டி. பரமேசுவர அய்யர் எனும் ஆய்வாளர் ``ராமாயணமும் லங்கையும் என்றொரு ஆங்கில நூலை 1940 -இல் எழுதியுள்ளார். பெங்களூரில் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்ட அந்நூலில், ராமனின் ``கல்யாண குணங்களைப்பற்றி சவிஸ்தாரமாகவே வெளுத்துக் கட்டியிருக்கிறார்.


``ராமன் தெய்வீகமானவன் என்ற கருத்து வால்மீகியின் கண்களுக்குத் திரையிடவில்லை, அவனுடைய மானுடத் தன்மையை மறைக்கவில்லை. வில் வித்தையை ராமன் மிகவும் விரும்பினான். வேறெவரையும் விடச் சிறந்த வில்லாளியாக விளங்கினான். அவன் மனம், அவன் தசைத் திரட்சிமிக்க உடல்கட்டு எல்லாமே இறைச்சிக்காக வேட்டியாடியதால் அமைந்தவையே! வில் வித்தை, வேட்டையில் வேட்கை. மாமிசம் தேவை என்பதற்காகச் செய்த வேட்டைகள், சீதையின் மேல் காதல் இவைய னைத்தும் அவனது எலும்புகளில் ஊறித் திளைத்திருந்தன (பக்கம் 129).


``கோசகல நாட்டின் எல்லையைத் தாண்டிய போது திரும்பி, அயோத்தியிருக்கும் திசை நோக்கி ராமன்தன் மதுரமான குரலில் கூறுகிறான் - எப்பொழுது நான் திரும்பி வந்து இந்தக் காட்டில் மீண்டும் வேட்டை ஆடப் போகிறேன்? இந்த வேட்டை ராஜரிஷிகள் சம்மதித்த தல்லவா? (அயோத்யா காண்டம் சர்க்கம் 49 பாடல் 25,26,27) இறைச்சி உண்பதற்கான ஆசையின் அடிப்படையில்தான் வேட்டையை விரும்பினான் ராமன்.

``விடை பெறும்போது தன் தாயிடம் கூறுகிறான் - காட்டில் 14 ஆண்டுகள் முனிவனைப் போல் இருக்கப் போகிறேன். தேன், பழங்கள், கிழங்குகள் முதலியவற்றை மட்டும் புசித்துக் கொண்டு இறைச்சியைச் சாப்பிடாமல் இருக்கப் போகிறேன் என்று கூறுகிறான் (அயோத்யா காண்டம், சர்க்கம் 20 பாடல்கள் 27,28,29), (நூலின் பக்கம் 130).

குகனிடமிருந்து விடைபெற்றுக் காட்டுக்குப் போகக் கங்கை நதியைக் கடக்கும்போது ராமனின் தர்மபத்தினி சீதை சங்கல்பம் செய்கிறாள் - பத்திரமாக நான் திரும்பி வந்தால் ஓராயிரம் குடம் (ஒயின்) மதுவும், இறைச்சி உணவும் உனக்குப் படைப்பேன் என்கிறாள். (அயோத்யா காண்டம், சர்க்கம் 52, பாடல் 89)

காட்டிற்குள்நுழைந்த அன்று, ராமன், லட்சுமணன், சீதை ஆகியோர் இரவுப் பட்டினி. விடிந்ததும் விடியாததுமாக ராமனும், லட்சுமணனும் வில், அம்பை எடுத்துக்கொண்டு வேட்டைக்குப் போய்விட்டனர். ஒரு காட்டுப் பன்றி, ஒரு சாம்பார் மான், ஒரு புள்ளிமான், , ஒரு பெரிய ருரு ஆகிய நான்கு விலங்குகளை வேட்டையாடிக் கொன்று, கொண்டு வந்து ஒரு மரத்தடியில் சமைத்துச் சாப்பிட்டனர். (அயோத்யா காண்டம், சர்க்கம் 52, பாடல் 102) சீதையும் சேர்ந்துதான் சாப்பிட்டாள். சுவையான இறைச்சியை அவளுக்குத் தந்து அவளை ராமன் திருப்திப்படுத்தினான் (அயோத்யா காண்டம், சர்க்கம் 96, பாடல் 1).


அதோடு போகவில்லை அவர்களின் மாமிச மோகம்! நீர்க்கோழி (கி.)களில் இறைச்சி அதிகமாக இருக்குமாம். ஆகவே அவையும் மீன்களும் மிகவும் பிடிக்குமாம். கபந்தன் என்பான் லட்சுமணனிடம் கூறுகிறான் - தெள்ளிய ஆற்று நீரில் பம்பா ஏரியில் மீன்கள் துள்ளி விளையாடுகின்றன. அவற்றை உன் கூரிய அம்பை எய்துக் கொன்று ருசி பாருங்கள், ராமனுக்கு ரொம்ப ஆசையான உணவு இது என்கிறான் (நூலின் பக்கங்கள் 131, 132).


இத்துடன் முடியவில்லை. ``இறைச்சிப் படலம்! விருந்தினர்களுக்கு, அவர்கள் வேண்டாத விருந்தாளியாக இருந்தாலும், இறைச்சிச் சாப்பாடு போட்டிருக்கிறார்கள். தனியே இருந்த சீதையின் குடிலுக்கு மாறு வேடத்தில் ராவணன் வருகிறான். அவனை வரவேற்றுப் பேசி சீதை கூறுகிறாள் - சவுகரியமாக இருங்கள், என் கணவர் விரைவில் வந்து விடுவார். காட்டுப் பொருள்கள் (புஷ்கலம், வன்யா) கொண்டு வருவார். மான்கறி கொண்டு வருவார்; இஷ்னுமான் (முதலை முட்டை சாப்பிடும் விலங்கு) காட்டுப் பன்றிகளைக் கொன்று அவற்றின் இறைச்சியைக் கொண்டு வருவார் (ஆரண்ய காண்டம், சர்க்கம் 47, பாடல்கள் 22,23).

யமுனை நதியின் தெற்குக் கரையில் உள்ள ஆலமரத்தைத் தாண்டி காட்டினுள் சென்று வேட்டையாடி ஏராளமான (எண்ணெய்) மான்களை வேட்டையாடி வந்தனர் (அயோத்யா காண்டம், சர்க்கம் 55, பாடல் 32) (நூலின் பக்கங்கள் 139, 141). இராமன் கறி தின்றதை, ஏதோ ஓரிடத்தில் எழுதினார் என்றில்லாமல் பலப்பல இடங்களில் குறித்துள்ளார் வால்மீகி எனும்போது (வால்மீகியும் வேடர்தான், இறைச்சிப் பிரியர்தான்) ராமன் இறைச்சியையே விரும்பி உண்ணும் இளைஞன் என்பது வலியுறுத்தப் படுகிறது. இந்த லட்சணத்தில் `ராமன எதோ சுத்தப் சுயம்பிரகாசம் என்பது போலச் சிலர் இங்கே பேசுகிறார்கள், இன்றைக்கும் பேசுகிறார்கள் என்றால், இவர்களை என்ன பெயரிட்டழைப்பது?


---------- "சார்வாகன்" அவர்கள் 20-12-2007 "விடுதலை" இதழில் எழுதியது.

தமிழ்நாடு பெரியார் நாடு

தமிழகத்தில் சாதி வெறி, மதவெறி தலை விரித் தாடும் நிலை வரும்போதெல்லாம் அதைக் கட்டுக்குள் வைத்திருந்தவர் தந்தை பெரியார்தான். மதவெறி மேலோங்கும் போதெல்லாம் அரணாக நின்று, ஓர் இசுலாமியனுக்கும் எனக்கும், ஒரு கிறித்தவனுக்கும் எனக்கும், நாம் யார்? நாம் தமிழர்கள் என்று உணர்த்தி நமக்குள் ஓர் உறவுப் பாலத்தை ஏற்படுத்தினார்.


குஜராத் சம்பவங்களை யாராலும் மறந்திட முடியாது. ஓர் இசுலாமிய கர்ப்பிணிப் பெண்ணின் வயிற் றைக் கிழித்து, குழந்தையை எடுத்து அதை நெருப்பில் போட்ட கயவனின் செயல் யாராலும் மறந்திட முடியாது. அப்படிப்பட்ட கொடுந்துயரம் தமிழகத்தில் நிகழாமல் தடுத்து, அரணாக இருந் தவர் நம் பெரியார் தான். அவர் இறந்து இத்தனை ஆண்டுக்காலம் ஆனா லும் அவர்தாம் இன்னும் அரணாக உள்ளார்.

இன்றைய இளைஞர்களுக்குப் பெரியாரைப் பற்றி ஏதாவது தெரியுமா? அப்படித் தெரியாமலே போய் விட்டால் நம்முடைய இனம் என்னவாகும்? நாம் மிகவும் கடினப்பட்டுப் பெற்றிருக்கும் மதிப் பீடுகள் என்னவா கும்? மீண்டும் ஆதிக்கச் சமு தாயத்தை நோக்கிப் போய்விடுமோ என்று அச்சமாகவே இருக்கிறது. நிச்சயமாக நம் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு பெரியார் என்றால் யார் என்று தெரியாது!

பாடப்புத்தகங்கள் அவரைப் பற்றிப் பெரிதாக எதையும் சொல்வதும் கிடையாது. சொல்லிக் கொடுப்பவர்களுக்கும் அவரைப் பற்றித் தெரியுமோ, தெரியாதோ. அவர்களுக்கு அவர் பற்றிய அக்கறையும் கிடையாது.

பெற்றோர்களுக்கும் நம் பிள்ளைகள் நல்ல மதிப்பெண்கள் பெற்றுக் கல்லூரியில் போய்ச் சேர்ந்தால் போதும் என்ற குறிக் கோளோடுதான் இருக்கிறார் களே தவிர, சமூக நீதி என்றால் என்ன? இட ஒதுக்கீடு என்றால் என்ன? போன்ற செய்திகளை எல்லாம் சொல்வதே இல்லை. இதனால் என்ன ஆனது? என் கண் முன்னால், 100 பேர் அமர்ந்துள்ளார்கள். இவர்கள் பெரியாரைப் பற்றி அறிந்ததால் தான் எழுத்தாளர்களாக உருவாகி இருக்கிறார்கள்.

நாம் யார் என்ற அடிப்படை புரிதல் கூட இன்றைய இளைய தலைமுறை உருவாகும்போது அவர்கள் தெரிந்து வைத்திருக்கும் கருத்துகளும் என்னவாக இருக்க முடியும்? பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இட ஒதுக்கீடு என்றால் என்ன என்று கேட்கிறார்கள். இட ஒதுக்கீட் டிற்கு என்ன அவசியம்? தகுதியின் அடிப் படையில்தான் இடஒதுக்கீடு ஒத்துவரும் என்று அறியாமை யோடு பேசி வருகிறார்கள். இடஒதுக்கீடு அடிப்படையில் பயன்பெற்ற இளைய சமுதா யம் பெரியாரைப் பற்றியும், திராவிட இயக்கப் போராட்டங்கள் பற்றியும் அறியாமல் வளர்ந்தால் இப்படித்தான் பேசும்.

தமிழ்ச் சமூகம் என்று சொல்லப்படும் வார்த்தைகூட ஆங்கிலத்தை முன்னிறுத்தும் பள்ளி களில் ஏளனமாகப் பார்க்கப்படும் நிலைதான் இன்று உள்ளது. நம்முடைய அடையாளம் என்ன? நம்முடைய மொழி தமிழ் என்கி றோம். ஒவ்வொரு தமிழருக்கும் ஓர் உறவு இருந்தது. ஏதோ ஒரு மூலையில் தமிழன் தாக்கப்படு கிறான், அழிக்கப்படுகிறான் என்றால் எனக்குத் தெரிந்து இந்தச் சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் பலர், அதுவும் சாதாரண இளைஞர்கள் அல்ல... இந்த நாட்டை மாற்றக்கூடிய கருத்து களை உடைய இளைஞர்கள் பலர் அதைக் கேலிக்குரிய விசய மாகப் பார்க்கத் தொடங்கி விட்டார்கள். தொப்புள் கொடி உறவு என்பதே ஒரு கிண்டலுக்குரிய விசயமாக மாறிக் கொண்டிருக் கிறது. இது எல்லாம் மறு உருவாக்கம் ஆவதற்கு என்ன காரணம் என்றால் நாம் பெரியாரை மறந்த ஒரு காரணமே. அதைத் தவிர வேறு எதுவாகவும் இருக்க முடியாது.

நாம் பெரியாரை மீண்டும் புரிந்து கொள்ளவேண்டும். மறுபடியும் படித்துத் தெரிந்து கொள்ள வேண்டும். பெரியாரை எதிர்மறையாகப் பார்ப்பதும், அவரைப் பற்றி கேள்விகள் கேட்பதும் என மாறி உள்ளனர். ஆனால் அவரைப் பற்றிய விமர்சனங்களையும், கேள்விகளையும், எதிர்ப்புகளையும் தாங்கித் தாண்டி வந்தவர்.

இதுபற்றிய விவாதம் வந்தால் அவரைப் பற்றிய கருத்துகள் அழிந்து விடும் என்ற கவலை கிடையாது. அதைத் தாங்கி நிற்கும் செழுமையான, அழுத்தமான சிந்தனையாளர் அவர். குறைந்த பட்சம் இந்த மாதிரி விவாதங்களையாவது நாம் உருவாக்க வேண்டும். பெரி யாரைப் பற்றியும், நம் சமூகத்தைப் பற்றியும், நாம் யார்? என்பதைப் பற்றியும் புரிய வைக்க வேண்டும். அதைச் செய்ய வைக்க வில்லை என்றால், தமிழினம் மறுபடியும் தன் முகத்தை, தன் அடையாளத்தை இழந்து விடும்.


---------------- கவிஞர் கனிமொழி - "தாகம்" அக்டோபர் 2006 இதழில்

கிழிந்து தொங்கும் "ஞாநி"யின் முற்போக்கு முகமூடி

பார்ப்பனர்களின் குணம் பற்றி பல அறிஞர் பெருமக்கள் சொல்லியுள்ளதை நாம் கவனத்தில் எடுத்துக் கொண்டே ஆக வேண்டும். ஏன் என்றால் முற்போக்கு பேசும் பார்ப்பனர்கள்,அவர்கள் என்னதான் முற்போக்கு பேசினாலும் ஒரு காலகட்டத்தில் தன்னுடைய உண்மையான பார்ப்பனிய குணாம்சத்தை காட்டி விடுவார்கள். இது இன்று நேற்று ஏற்பட்டதல்ல பல ஆண்டுகளாக தொடர்ந்து வரும் உண்மைகள். தற்போது ஞாநி என்ற பார்ப்பனர் குமுதம் இதழில் உண்மைகளை எல்லாம் தலைகீழாகப் புரட்டிப் போட்டு கட்டுரைகள் எழுதிவருகிறார். ஆனந்த விகடனில் இருப்பார்; அப்புறம் திடீரென்று குமுதத்துக்கு போவார். குமுததின் மீது குற்றம் சாட்டி விட்டு தனியாக பத்திரிக்கை ஆரம்பிப்பார். அப்புறம் குமுதத்துக்கே வந்து விடுவார். என்ன குழப்பமாக இருக்கிறதா? பார்ப்பனியம் என்பதே குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பதுதானே! இந்த ஞாநி ஒரு காலத்தில் சென்னைத் தொலைக்காட்சியில் முற்போக்கு முகமூடியுடன் "அய்யா" ( பெரியார் வாழ்க்கை வரலாற்றுத் தொடர்) எடுத்து பெரியாரின் தொண்டர்களுடன் ஊரெல்லாம் சுற்றுப்பயணம் செய்து தன் முற்போக்கை வெளிச்சம் போட்டுக் காட்டி அவர்களை வசப்படுத்தப் பார்த்த கதைகள் எல்லாம் உண்டு.

இப்போது குமுததில் தன்னுடைய பார்ப்பனிய மையை ஊற்றி தமிழர்களுக்கு விரோதமாக எழுதிவருகிறார். சமீபத்தில் அவர் எழுதிய கட்டுரைகளுக்கு தோழர் அதிஅசுரன் இரண்டு மறுப்புக் கட்டுரைகளை சரியான ஆதாரங்களுடன் எழுதி இணையத்தில் உலவவிட்டுள்ளார். பல தோழர்கள் படித்து உண்மையை உனர்ந்து வருகின்றனர். தோழர் அதிஅசுரனுக்கு நமது பாராடுதழ்களையும் நன்றிகளையும் இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்

ஞாநியின் முற்போக்கு முகமூடிகளை அம்பலப்படுத்தி பல அறிஞர்கள் எழுதிய கட்டுரைகளை உங்கள் பார்வைக்கு கொண்டு வருகிறேன். படியுங்கள். உண்மையை உணருங்கள். பார்ப்பனர்களிடம் எப்போதும் எச்சரிக்கையாக இருங்கள்.

1.'ஓ போடலாமே!'

தோழர் ஞானி - `ஆனந்த விகடனை விட்டு `குமுதம் கிளைக் குத் தாவியுள்ளார்.
இவர் `குமுதம் கிளைக்குத் தாவி யதுகூட அவரின் அறிவு நாண யத்தின் சேதாரத்தைத்தான் வெளிப் படுத்தும்.

அவர் சில நாள்கள் `தீம்தரிகிட என்ற ஒரு இதழை நடத்திப் பார்த்தார் - 1982-இல் மூன்று, இதழ்கள்.
1985-இல் ஆறு இதழ்கள், 2002-இல் மீண்டும் துளித்தது, வழக்கம்போல் கண் மூடி விட்டது. கொள்வார் இல்லாமையால் கடையைக் கட்டிக் கொண்டு விட்டார்.

ஏப்ரல் - மே 2002 இதழில் ஒரு அறிவிப்பைக் கொடுத்தார்.

`தீம்தரிகிட இதழில் வெளியாகும் படைப்புகள் அந்தந்த படைப்பாளர்களுக்கே உரிமை உடையவை. தீம்தரிகிட இதழில் வெளியானவற்றை மேற்கோள் காட்டி எவரும் பயன்படுத்தலாம்; குமுதம் குழும இதழ்களைத் தவிர - என்பதுதான் அந்த அறிவிப்பு.



சரி, எதற்காக அந்த அறிவிப்பு? அதே இதழின் 22-ஆம் பக்கத்தில் அதற்கான காரணம் கூறப்பட்டது.

குமுதம் இதழில் ஆசிரியர் குழு பிரசுர விவரங்கள்பற்றிய குறிப்பில் படைப்பாளிகளின் அடிப்படை உரிமையைப் பறிக்கும் அறிவிப்பு சில ஆண்டுகளாக இருந்து வருகிறது. குமுதம் இதழில் வெளிவரும் படைப்புகளின் உரிமை குமுதத்தில் வெளியீட் டாளருகே உரியதாம்.
திரும்ப அதை நூலாகவோ, வேறு எந்தவிதத்திலோ படைப்பாளி பயன்படுத்த வேண்டுமென்றால், குமுதம் வெளியீட்டாளரிடம் அனுமதி பெற வேண்டுமாம். அதாவது குமுதத்தில் எழுதும் பிரபஞ்சன், பாலகுமாரன், அப்துல்கலாம் யாரானாலும் சரி, அவர்கள் எழுதியதன் உரிமை குமுதத்துக்குப் போய் விடுகிறது! பிரபஞ்சனின் சிறு கதைகள் தொகுப்பாக வெளி வரும் போதோ தொலைக் காட்சிக்குத் தரப்படும் போதோ அவர்தான் எழுதிய கதைக்குக் குமுதத்திடம் போய் அனுமதி கேட்க வேண்டும் என்று இதற்கு அர்த்தம். நடைமுறையில் இதைப் பின்பற்றுகிறார்களா என்பது முக்கியமல்ல. இப்படி அறிவிப்பு செய்ததே தவறானது. படைப்பாளிகள் சார்பாக இதற்கான தார்மிக எதிர்ப்புதான் எங்கள் அறிவிப்பில் உள்ள நிபந்தனை உள்ளபடியே மனிதன் சுயமரியாதைச் சூடு பறக்கத்தான் இந்த அறிவிப்பை வெளியிட்டதற்காக ஒரு `ஓ கூடப் போடலாம்.

அது சரி.. அப்படிப்பட்ட எழுத்தாளரின் உரிமையை ஊனப் படுத்தும் குமுதத்தில் சேர்ந்து கொண்டு இப்பொழுது `ஓ போடுகிறாரே அது எப்படி?

ஓகோ! எழுத்தாளரின் உரிமை `காசுக்குச் சலாம் வைத்து விட்டதோ! ஞானியின் சுயமரியாதை இப்பொழுது; எங்கே போய் முக்காடு போட்டுப் பதுங்கிக் கொண்டது? தார்மீகம் தார்பூசிக் கொண்டு விட்டதா?

தான் மட்டுமே எந்த எதிர்ப்பையும் பொருட்படுத்தாத கம்பீரமான எழுத்தாளர் என்பது போல காட்டிக் கொண்டவரின் கவட்டுத்தனம் இப்பொழுது அம்பலமாகி விட்டதே!

சரி... இன்னொரு செய்தி; இவ்வார குமுதத்தில் (2.4.2008) `நாறும் தேச பக்தியைப்பற்றி அலசிவிட்டு, இடை இடையே சில பெட்டிச் செய்திகளையும் உலவவிட்டுள்ளார்.
அதில் ஒன்று.. கலைஞர் மகள் கனிமொழியைப் பற்றியது. ஞானி யின் ஒரே இலக்கு கலைஞர்மீது பாணம் தொடுப்பதே!



திராவிட இயக்கக் கொள்கையில் அழுத்தமான ஒருவர் ஆட்சிப் பொறுப்பில் இருப்பது மகா பெரிய ஆபத்து என்ற அச்சத்தில் அவாள் வட்டாரத்தால் ஏவப்படும் `நஞ்சுதோய்ந்த அம்புகள் அவை.

`துக்ளக் `கல்கி, `தினமணி வரிசையில் இவரும் இருக்கிறார் என்பதுதான் இதன் பொருளும் - உண்மையுமாகும்.

``தன் மகள் கனிமொழி ஓர் இந்து பெண் என்று அறிவித்திருக்கும் கலைஞர் கருணாநிதியும் இந்துவா? அப்படியானால் நாத்திகர் களுக்குக் கடவுள் கிடையாது. மதம் மட்டும் உண்டா? அப்படி ஒரு நாத்திகக் கோட்பாடு ஏற்கெனவே உள்ளதா? அல்லது கலைஞர் கண்டருளியதா? - இதுதான் இவ்வார `குமுதத்தில் தோழர் ஞானி உதித்திருக்கும் பூச்செண்டு! இந்தப் பிரச்சினை எங்கிருந்து கிளம்பியது?

மாநிலங்களவைத் தேர்தலில் திமுகவில் இந்தத் தடவை இந்துக்களுக்கு இடம் தரப்படாதது கண்டு அதிர்ச்சி அடைந்ததாக ஒருவர் எழுதிட அதற்குப் பதில் அளிக்கும் வகையில் கலைஞர் `முரசொலியில் (19.3.2008) எழுதினார்:

`கடந்த முறை மாநிலங்களவைத் தேர்தல் நடைபெற்ற போது திருச்சி சிவா கனிமொழிஆகிய இரண்டு இந்துக்களைத் தானே நிறுத்தினோம் என்ற கலைஞர் அவர்களின் இந்தப் பதிலை வைத்துதான் ஞானி பேனாவைச் சொடுக்கியுள்ளார்.

நாத்திகத்துக்குக் கடவுள் கிடையாது; மதமும் கிடையாதுதான் ஆனால் இந்திய அரசமைப்புச் சட்டப்படி என்ன நிலைமை?

நாத்திகன் என்று சொன்னாலும் அவர் இந்துதான். பவுத்தன் என்று சொன்னா லும் அவனும் இந்துதான், சீக்கியன் என்று சொன்னாலும் அவனும் இந்துதான். அப்படி அரசமைப்புச் சட்டம் இந்தியாவில்! கலைஞரை நோக்கிக் கணையைத் தொடுக்கக் கிளம்பும் முன் இந்திய அரசமைப்புச் சட்டத்தில் உள்ள இந்தப் பார்ப்பனீயத்தை பட்டை கழற்றிருக்க வேண்டாமா? தோலை உரித்துத் தொங்க விட்டிருக்க வேண்டாமா? மூலத்தை விட்டு விட்டு நிழலோடு சண்டை போடுவதா வீரம்? ஊருக்கு இளைத்தவர் கலைஞர் தானா? அக்கிரகாரத்தின் கண்களுக்குக் கலைஞர் கருவேலமுள்ளா?



அதேபோல விண்ணப்பங்களில் ஜாதி என்ற இடத்தில் எதையும் போடாமல் கோடு கிழித்தாலும் அதனை எப்படி கணக்கில் எடுத்துக் கொள்கிறார்கள் தெரியுமா?

உயர்ஜாதி (Forward Community) என்ற பட்டியலில்தானே அடைக்கிறார்கள்?
இதைப்பற்றியெல்லாம் இவாள் எழுத மாட்டார்கள் - காரணம், இவையெல்லாம் பார்ப்பனீயத்தைக் கட்டிக் காக்கும் கோட்டைக் கொத்தளங்களாயிற்றே! இந்து மதத்தில் கடவுள் மறுப்பாளன் நாத்திகனல்ல; வருணா சிரமத்தை எதிர்ப்பவன்தான் நாத்திகன் என்பதை திருவாளர் `ஞானியார் சுவாமிகள் அறிவாரா!


புரியவில்லையென்றால் மரணமடைந்த காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி `சுவாமிகளின் ``தெய்வத்தின் குரல் இரண்டாம் தொகுதியை (பக்கம் 407-08) கொஞ்சம் புரட்டிப் பார்க்கட்டும் - அப்படியே மனுதர்மத்தையும் கொஞ்சம் துழாவட்டும்! (அத்தியாயம் இரண்டு சுலோகம் II).

கலைஞரும் சரி, கவிஞர் கனிமொழியும் சரி நாத்திகர்கள்தான். அதற்கு ஞானிகளின் சான்றிதழ்கள் தேவையில்லை.


--------"மயிலாடன்" அவர்கள் "விடுதலை" 30-3-2008 இதழில் எழுதியது.


2. ஞாநியின் ‘முற்போக்கு’ முகம்

தந்தை பெரியார், பார்ப்பனர்களை, வைதீகப் பார்ப்பனர் என்றும், லௌகீகப் பார்ப்பனர் என்றும் இரண்டு வகையாகப் பிரிப்பார். ஞாநி ஒரு லௌகீகப் பார்ப்பனர். அவர் அரசியலை அலசுவார், சமூகநீதி பேசுவார், அறிந்தும் அறியாமலும் இருக்கும் பாலியல் உணர்வுகளைப் பாடமாய் நடத்துவார், எங்கு சென்றாலும், தன் முற்போக்கு முகத்தை மறக்காமல் எடுத்துச் செல்வார்.

ஆனால், அவருக்குள் புதைந்து கிடந்த திராவிட இயக்க எதிர்ப்பு, கலைஞர் எதிர்ப்பு போன்றவை பூனைக்குட்டி வெளியே வருவது போல் இப்போது வெளிவரத் தொடங்கி விட்டன.

முரசொலி மாறனுக்கு அஞ்சல்தலை வெளியிட்டது பற்றி எழுதுகையில், தேசிய விலங்குகளுக்கு எல்லாம் கூட அஞ்சல்தலை வெளியிடப்படும்போது மாறனுக்கும் வெளியிட்டால் என்ன என்பது போல் குறிப்பிட்டிருந்தார். நெஞ்சு நிறைய அப்பிக்கிடக்கும் பகையும், வன்மமும் அந்த வரிகளில் அப்படியே வெளிப்பட்டன.

கண்ணகி சிலையைக் கரடி பொம்மையோடு ஒப்பிட்டுத் தன் மேதாவித் தனத்தை ஒருமுறை வெளிப்படுத்தினார். இப்போது ஆனந்த விகடனில், ஸ்டாலினுக்கு இருக்கும் எல்லாத் திறமையும் பரிதி இளம்வழுதிக்கும் உண்டுதானே என்று எழுதி, தி.மு.க.விற்குள் சிண்டுமுடியும் சின்னத்தனத்தில் ஈடுபட்டிருக்கிறார்.

என் குடும்பத்தில் தலித் மருமகள் இருக்கிறார் என்பது போன்ற வெற்று அறிக்கைகள் விடுவதைக் கைவிட்டுவிட்டு, எங்கள் கட்சியின் சார்பில் ஒரு தலித் முதலமைச்சராக்கப்படுகிறார் என்று கலைஞர் அறிக்கைவிட வேண்டுமாம், ஒரு தலித் முதலமைச்சர் ஆக வேண்டும் என்று ஞாநி கனவு காண்கிறாராம். அடடா, தலித் மக்கள் மீது ஞாநிக்குத்தான் எத்தனை பரிவு, எத்தனை பாசம்.

அண்மையில் அவருக்கு ஆனந்தவிகடனில் ஒரு பெரிய பொறுப்பு கொடுத்துள்ளதாகக் கேள்விப்பட்டேன். அந்தப் பதவி எல்லாம் எனக்கு வேண்டாம், யாராவது ஒரு தலித் நண்பருக்குக் கொடுத்துவிடுங்கள் என்று அவர் சொன்னதாகத் தெரியவில்லை. கனவெல்லாம், கலைஞரைப் பற்றி மட்டும்தான் போலும். குறைந்த பட்சம் ஜெயலலிதாவிடம் இருந்தும் அப்படி ஓர் அறிக்கை வர வேண்டுமென்று அவர் கனவு கண்டிருக்கலாம்.

தங்கள் நெஞ்சில் பட்டதை அப்படியே சொல்லிவிடும் முரடர்கள்தான் நாமெல்லாம். உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசும் பக்குவமெல்லாம் நம்மில் பலருக்கு இன்னும் கைவரவில்லை. பாருங்கள். அது ஞாநிக்கு எவ்வளவு அழகாய்க் கைவருகிறது என்று!

தி.மு.க. விற்குள் உட்கட்சி சண்டையும், குழப்பமும் வரவேண்டும் என்னும் தன் ஆசையை நேரடியாகச் சொல்லும் முரட்டுத்தனம் அவரிடம் இல்லை. பரிதி முதலமைச்சராக வரவேண்டும் என்று கனவு காண்பதாகச் சொல்லிவிட்டால், பிறகு அதை எதிர்ப்பது கடினம். எதிர்ப்பவர்களைத் தலித் விரோதி என்று சொல்லிவிடலாம், ஞாநியின் கனவு பலிக்கும் வரையில், தி.மு.க.விற்கும் தலித் விரோதக் கட்சி என்று முத்திரை குத்திவிடலாம்.

இப்படிப் பல்வேறு சித்து விளையாட்டுகளை ஞாநி அந்தக் கட்டுரையில் செய்து பார்த்திருக்கிறார்.

ஆனாலும், வரலாறு நமக்கு ஓர் உண்மையைச் சொல்கிறது. திராவிட இயக்கத்தில் தலித் தோழர்களுக்கு எப்போதும் இடம் இருந்திருக்கிறது என்பதே அந்த உண்மை. மீனாம்பாள், சிவராஜ், தொண்டு வீராசாமி, சத்தியவாணி முத்து தொடங்கி இன்று வரை அதன் தொடர்ச்சியை நம்மால் காணமுடியும். அண்மையில் கூட தன் பேரனை அகற்றிவிட்டு, அந்த இடத்தில் அனைத்துத் தகுதிகளும் வாய்ந்த ஆ.இராசாவைத்தான் அமைச்சராக ஆக்கியுள்ளார் கலைஞர். தமிழக அரசிலும், ஆதிதிராவிட நலத்துறைக்கு மட்டுமின்றி, பால்வளத்துறைக்கும் ஒரு தலித் நண்பரே அமைச்சராக உள்ளார் என்பதை நாம் அறிவோம்.

இந்த உண்மைகளை எல்லாம் மறைத்து விட்டு, தலித் மக்களின் முன்னேற்றத்தில் தி.மு.க. அக்கறை காட்ட வேண்டும் என்பது போல் அறிவுரை சொல்வதும், கனவு காண்பதாய்க் கதைவிடுவதும், கிழிந்துதொங்கும் அவரது முற்போக்கு முகமூடியையே நமக்கு அடையாளம் காட்டுகிறது.

பரிதிஇளம்வழுதியின் மீது நமக்கெல்லாம் இல்லாத பாசம், திடீரென்று அவருக்கு எங்கிருந்து பொத்துக் கொண்டு வந்தது? இதுவரை பரிதியின் திறமையைப் பாராட்டி அவர் எத்தனை இடங்களில் எழுதியும் பேசியுமிருக்கிறார்? எந்தெந்த வகைகளில் ஸ்டாலின் மற்றும் பரிதியின் திறமைகளை ஒப்பிட்டு ஆராய்ந்திருக்கிறார்? பொத்தாம் பொதுவில். போகிற போக்கில், ஒரு குற்றச்சாட்டை வீசிவிட்டுப் போவதென்பது, எவ்வளவு உள்நோக்கமுடையது என்பதை நாம் உணரவேண்டும்.

தந்தை பெரியார் ஓர் இடத்தில் சொல்லுவார், வைதீகப் பார்ப்பனர்களைவிட லௌகீகப் பார்ப்பனர்களே ஆபத்தானவர்கள் என்று!

-------------- சுப.வீ அவர்கள் செப்டம்பர் - 2007 "கருஞ்சட்டைத்தமிழர்" இதழில் எழுதிய கட்டுரை.

3. ஞாநி எந்தப் பக்கத்தில்?


“சேது சமுத்திரத் திட்டத்துக்காகக் கடலடி மணல் திட்டுக்களை உடைக்கும் சர்ச்சையை, போலிபக்திக்கும் போலி பகுத்தறிவுக்கும் இடையில் நடக்கும் போராட்டம் என்றுதான் சொல்ல வேண்டும்.

ஏனென்றால், அத்வானி போன்றோர் சுற்றுச் சூழலுக்கு ஆபத்து என்பதால் எதிர்க்கவில்லை. அதுராமர் பாலம் என்கிற, பகுத்தறிவுக்கு அப்பாற்பட்ட பக்தி அடிப்படையில் சொல்கிறார்கள்.

ராமர் பாலத்தை உடைத்தே தீருவோம் என்று முழக்கமிடும் கருணாநிதி போன்றோரும், பகுத்தறிவு அடிப்படையில் திட்டத்தை அலசத் தயாராக இல்லை. இது தமிழனின் பல நூற்றாண்டு காலக்கனவு என்று இன் னொரு வகையான மூட பக்தி’யை இதில் காட்டுகிறார்கள்.

அசல் பக்திக்கும் அத்வானிக்கும் தொடர்பு இல்லை. அசல் பகுத்தறிவுக்கும் கருணாநிதிக்கும் சம்பந்தம் இல்லை.

-இப்படிச் சொல்கிறார் சங்கரன் ஞாநியார். போலி பக்தியையும் போலி பகுத்தறிவையும் சாடித் தகர்க்கும் இவர் ‘அசல் பக்திக்கும்’ ‘அப்பட்டமான பகுத்தறிவுக்கும் இடையே பாலம் கட்டுவதில் தீவிரம் காட்டும் ஓர் அனுமார் பக்தரேதான்.

அத்வானி ஒரு போலி பக்தர். பகுத்தறிவில்லாதவர் என்று சங்கரன் எழுதுவ தால் அக்கிரகாரமோ, சங்கப் பரிவாரமோ, சாமியார் கூட் டமோ ஞானியின் தலையை வெட்டு, நாக்கை அறு என்று ஆர்ப்பாட்டம் செய்யப் போவதில்லை. அவர்களுக்குத் தெரியும், ‘இவன் நம்ப பிள்ளை’ என்று. என்ன சாதுரியமாய் சூத்திரவாள் மீது தாக்குதல் நடத்துகிறான் என்று ‘அவாள்’ கூட்டம் மெச்சிக்கொள்ளவே செய்யும்.

அத்வானி பற்றிய ஞாநியின் மதிப்பீடு உண்மையாகக் கூட இருக்கலாம். ஆனால் கலைஞரின் பகுத்தறிவு போலித்தனமானது என்று அவரை அறிந்த எவரும் சொல்லத் துணியார்.

ஓட்டு அரசியலில் நம்பிக்கையுள்ள எந்த அரசியல் தலைவரும் ஏட்டில், எழுத்தில், அரசியல் மேடையில், திருமண விழாக்களில் பகுத்தறிவைப் பிரச்சாரம் செய்து கொண்டிருக்க மாட்டார். ஆனால் தனது பிள்ளைப் பருவம் முதல் இன்றுவரை எங்கும் எப்போதும் அறிவை முன்னிறுத்துகிறவர் கலைஞர். “கருணாநிதியைத் திருத்தவே முடியாது’’ என்று இராம கோபாலன் பலமுறை சாபம் இட்டது ஏன்? இராம கோபாலன் போன்றோரின் வகையும் வயிற்றெரிச்சலும் கலைஞரின் பகுத்தறிவுப் பற்றுக்குச் சூட்டப்படும் புகழாரங்கள் அல்லவா!

ஞாநி போன்றோரின் வாதங்கள் பல நேரங்களில், பலரது மனங்களில் இது வன்றோ நடுநிலை வாதம்’ என்கிற எண்ணத்தை ஏற்படுத்தக் கூடும். ஆனால் சிந்திக்கத் தெரிந்த யாருக்கும் இம்மாதிரியான `பெருந்தன்மையான’ பேச்சுக்கள் ஒரு கபடதாரியின் நேர்மையற்ற உளறல் என்பது புரிந்து விடும்.

கருத்துக்கள் மோதுவதும், வர்க்கங்கள் பகைமை கொள்வதும், இனங்கள் எதிரெதிராய் நிற்பதும் அறியாமையாலோ, போலித்தனத்தாலோ அல்ல. அது போலவே கருத்து மோதல்களில், களத்துப் போர்களில் நடுநிலை என்பதும் சமரசம் என்பதும் புனிதமானதோ போற்றுதற்குரியதோ அல்ல.

தாய்வழிச் சமூகத்திலிருந்து, தந்தைவழிச் சமூக உறவுக்கு மாறும்போது, பொது உரிமைக் கருத்திலிருந்து தனிச்சொத்துரிமைக்கு மாறும்போது நேரும் போர்க்களக் காட்சி தான் குருச் சேத்திரம்!

உறவினர்களுக்குள் நேர்ந்த சண்டையில் கூட சமரசமற்ற, கண்டிப்பு மிகுந்த பேராசிரியராகவே காட்சி தருகிறான் கண்ணன். “இந்தப் போரிலே வென்றால் சொத்து கிடைக்கும்; இறந்தால் சொர்க்கம் கிடைக்கும். தயங்காதே துணிந்து போரிடு’’ என்பது தான் கீதோபதேசம்.

எல்லா உயிர்களையும் நேசிப்பதாகச் சித்திரிக்கப்படும் பரமாத்மா, கொலையை ஆதரிப்பது ஏன்? ஒருபக்கம் சார்ந்து நிற்பது ஏன்? போர்க் களத்திலே நடுநிலை சாத்தியமில்லை சங்கரா!


இரண்டாயிரம் ஆண்டு களுக்கும் மேலாக இங்கேயும் ஒரு யுத்தம் நடந்து கொண்டிருக்கிறது திராவிட - ஆரியப் போர். இதிலே ஆதிசங்கரனிலிருந்து ஞாநி சங்கரன் வரை ஓர் அணியில் நிற்கிறார்கள். புத்தனிலிருந்து குப்பன்வரை எதிரணியில் நிற்கிறார்கள். ஆரியப் பிரதிநிதியாக அத்வானியும் திராவிடப் பிரதிநிதியாகக் கலைஞரும் களத்தில் நிற்கிறார்கள் என்பதுதான் உண்மை. இங்கே அத்வானியின் பக்தி மெய்யானதா, போலியானதா? கலைஞரின் பகுத்தறிவு மெய்யானதா போலியானதா என்பதல்ல பிரச்னை. மனுதர்மத்துக்கும் சமதர்மத்துக்குமான போராட்டத்தில் யார் எந்தப் பக்கத்தில் என்பதுதான் பிரச்னை.

ஞாநி போன்றவர்கள் அத்வானிகளை - அதாவது ‘போலி பக்தர்களை’ - எதிர்ப்பதுபோல் காட்டிக் கொள்வது கலைஞரையும் அவர் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒடுக்கப்பட்ட மக்களையும் எதிர்ப்பதற்காக நடத்தப்படும் போலித்தனமான காரியங்களே!

இம்மாதிரியான போலி மனிதர்கள் பதுங்கிக் கொள்வதற்குக் கிடைத்த ‘தத்துவப் புதர்’ தான் பாரதி, இவர்களுக்கு, உலகில் இதற்கு முன் இருந்த, இப்போது இருக்கிற, இனிமேல் வரப்போகிற எல்லாப் பிரச்னைகளுக்கும் பாரதிதான் தீர்வு!

சேது சமுத்திரத் திட்டம் குறித்து, பாரதி என்ன சொல்கிறான்?

“சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்; சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்’’ என்கிறான் பாரதி.

பாரதி சொல்வதுபோல் ராமேஸ்வரத்திலிருந்து இலங்கைக்குப் பாலம் அமைக்கலாம்? அப்படி ஒரு திட்டம் கொண்டு வந்தால் ஞாநியார் கூட்டம் அதையும் எதிர்க்கும். விடுதலைப் புலிகள் எளிதாகத் தமிழ் நாட்டுக்குள் வந்து போவார்கள். தமிழகம் தீவிரவாதிகளின் புகலிடமாக மாறிவிடும் என்றுதான் அப்போது கூச்சலிடுவார்கள்.

தமிழகத்துக்கும் இலங்கைக்கும் இடையே கடல் வழிப்பாதை ஏற்படுத்துவதால் வருவாய் அதிகரிக்கிறதா? போக்குவரத்து எளிதாகிறதா? வேலைவாய்ப்பு பெருகிறதா? தொன்மையான ‘வரலாற்றுச் சின்னம்’ அழிகிறதா? இந்துக்களின் மனம் புண்படுகிறதா? என்கிற அறிவு பூர்வமான, அல்லது குருட்டுத்தனமான, மெய்யான, அல்லது போலியான வாதப் பிரதிவாதங்களுக்கு அப்பால், இந்தப் புதிய கடல்வழிப்பாதையை ஆதரிப்போர் யார்? எதிர்ப் போர் யார்? என்று கூர்ந்து கவனித்தால் இது திராவிட - ஆரியப் போராட்டத்தின் தொடர்ச்சி என்பது தெளிவாகப் புரியும். மேம்போக்கான பார்வையில் இது ‘வழக்கொழிந்த’ வர்ண இனப் போராட்டம் என்பது போல் தோன்றினாலும் இதன் சாரப்பொருள் வரலாற்றை இயக்குவது கடவுள் நம்பிக்கையா, மனித முயற்சியா? என்பதுதான்!

கடவுள் நம்பிக்கை எப்போதும் ஆதிக்க சக்திகளுக்கு ஆதரவானதே! மனித முயற்சி எப்போதும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உறுதுணையானதே!

“மெய்யான பக்தர்களும் மெய்யான பகுத்தறிவாளர்களும் கருத்து வேறுபடுவார்கள். ஆனால் ஒருபோதும் மூர்க்கத்தனமான சண்டைகளில் ஈடுபடமாட்டார்கள். காரணம் அசல் ஆன்மீகமும் அசல் பகுத்தறிவும் சந்திக்கும் புள்ளி என்பதே மனிதர்கள் மீதான அன்பு என்பதாகும். போலி பக்தர்களும் போலி பகுத்தறிவாளர்களும் மனிதர்களை நேசிப்ப தில்லை. வெறுமே பயன்படுத்திக் கொள்பவர்கள். அதைத்தான் இப்போது அத்வானியும் கருணாநிதியும் செய்து கொண்டு இருக்கிறார்கள் - என்று ஒரு நடு நிலையாளனின் பாத்திரத்தில் திறம்படவே நடிக்க முயற்சிக்கிறார் சங்கரன்.

மதம், கடவுள் பக்தி, இறை நம்பிக்கை என்கிற இந்த சமாச்சாரங்கள் உண்மையில் இயற்கையைக் கண்டு அஞ்சிய மனிதனின் பய உணர்ச்சியின் அடையாளமே அன்றி, அது மனித நேயத்தின் அடையாளமாக வரலாற்றின் எந்தக் காலத்திலும் இருந்ததில்லை.

ஒடுக்கப்பட்ட மக்களின் உணர்வுகளுக்கு வடிகாலாக மதம் அல்லது கடவுள் நம்பிக்கை இப்போதும் இருக்கிறது என்றால் அது தன்மீதும் தான் சார்ந்திருக்கிற சமூகத்தின் மீதும் மனிதன் நம்பிக்கை இழந்து விட்ட நிலையில் தோன்றும் சுய ஆறுதலே தவிர மனித நேயத்தில் பிறந்த மறு மலர்ச்சித் தீர்வல்ல. சிலுவைப் போர்களும், ரத யாத்திரைகளும், இஸ்லாமியத் தீவிரவாதங்களும் ஆதிக்க சக்திகளின் அரசியல் போராட்டங்களேயன்றி, மனித நேயத்தை வளர்க்கும் செயல் திட்டங்கள் அல்ல.

இவர்கள் போலி பக்தர்கள். உண்மையான பக்தி ஆயுதம் ஏந்தாது. வள்ளலாரைப் பாருங்கள்... என்று பேசுகிறவர்கள், பற்றி எரியும் ஒரு பிரச்னையிலிருந்து விலகிச் செல்லும் கபட தாரிகளே தவிர யோக்கியர்கள் அல்ல.

வள்ளலாரே மனங்கசந்து விரக்தியில் பேசுகிறாரே! “கடை விரித்தேன்; கொள்வாரில்லை!’’ என்கிற அவரது சுயவிமர்சம் என்ன சொல்கிறது? நிலவுகிற சமூக அமைப்புக்கும் நினைப்புக்கும் தொடர்பில்லாமல் இருப்பது பயனற்றது என்பதையே வள்ளலார் வாக்கு ஒளியுறுத்துகிறது. முரண்பாடுகள் நிறைந்த ஒரு சமூக அமைப்பில் வாழ்ந்து கொண்டு தூய அன்பின் பெயரால் துறவிக்கோலம் கொள்வது சுயநலம் மிகுந்த கோழைத் தனமாகும்.

சங்கர ஞாநியார் குறிப்பிடுவது போல் இங்கே ‘போலி பக்தர்’ அத்வானிக்கும், ‘போலி பகுத்தறிவார்’ கலைஞருக்கும் இடையே நடக்கும் ‘யுத்தம்’ போலித் தனமானதல்ல. சாந்தி, சமாதானம், சமதர்மம், என்கிற இந்தக் கருத்துரு வாக்கம் இனியதுதான். ஆனால் அமைதி எப்போதும் அமைதியான முறையில் வந்ததே இல்லை!

உலகில் சாந்தி நிலவ வேண்டும்; சமாதானம் செழிக்கவேண்டும்; சமதர்மம் நிலைக்கவேண்டும். என்றால் வரலாறு கேட்டும் ஒரே கேள்வி இதுதான்: “நீங்கள் எந்தப் பக்கத்தில்!’’


----------ஆனாரூனா அவர்கள் அக்டோபர் -2007 "தமிழ் சான்றோர் பேரவை செய்தி மடல்" இதழில் எழுதிய கட்டுரை.

தற்போதைக்கு ஞாநியின் உண்மை முகம் தெரிய இந்தளவுக்கு போதுமானது. தேவைப்பட்டால் இன்னும் நிறை செய்திகள் தேடி வரும். படியுங்கள் தெளிவடையுங்கள்.


------------- நன்றி: "www.jaathiolippu.blogspot.com"