Search This Blog

30.6.22

வெந்த புண்ணில் வேலால் குத்த வேண்டாம்! - பெரியார்

 

வெந்த புண்ணில் வேலால் குத்த வேண்டாம்!

 


ஆரியர்கள் இந்நாட்டில் குடியேறி 3,000 ஆண்டுகளுக்கு மேலாக ஆகின்றன. ஆரியர்கள் என்றைக்கு இந்நாட்டில் புகுந்தனரோ அன்றே வந்தது அனர்த்தம். ஜாதி மத பேதமற்ற மக்கள் இந்தச் சழக்கர்களின் வரவால், இவர்களின் குயுக்தி வேலையால், நயவஞ்சகச் சூழ்ச்சியால், ஆயிரக்கணக்கான ஜாதிகளாகப் பிரிக்கப்பட்டனர் - பிரியலாயினர். நாளுக்கு நாள் வளர்ந்தன, ஆரியர் உண்டாக்கிய அறிவுக்கொவ்வாச் ஜாதிகள், ஜாதிக்குச் ஜாதி வித்தியாசம். வித்தியாசம் மட்டுமல்ல, வெறுப்பும் தலைவிரித்தாட ஆரம்பித்தது. ஒருவரை ஒருவர் வேறாக, அயலானாக, எதிரியாக எண்ணும்படி, நோக்கும்படி, நடத்தும்படி செய்தது இந்த ஜாதி திமிர். இதற்கு அன்று இரையானவர்கள் தான் குறிப்பிடத்தக்க இந்நாட்டுப் பழங்குடி மக்கள்.

 

மூவாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக ஆதிதிராவிடர் மக்கள் பொதுச் சமூகத்திலிருந்து பிரிக்கப்பட்டு ஒதுக்கப்பட்டு, ஒதுக்கப்பட்டு  அடிமையாக்கப்பட்டுவிட்டனர். அன்று வீழ்த்தப்பட்ட சமூகம் இன்னும் விடுதலை பெற இயலவில்லை. எவ்வித உரிமையோ, உயர்வோ எய்த முடியவில்லை. உயர்ச்சியற்று, உரமிழந்து, மனவலிமை குன்றி உழைத்துழைத்து அலுத்துப் போய்விட்டார்கள். "நாம் ஏன் இவ்வளவு இழிவாக நடத்தப்படுகிறோம்? தீண்டப்படாமல் துரத்தப்படுகிறோம்? நாயினும் கீழாய் நலிந்து விட்டோம்? ஓய்வின்றி இராப்பகலாக மழை என்றோ, வெய்யிலென்றோ, பனி என்றோ பாராமல் உழைக்கிறோம்; நாம் வெட்டாத குளமில்லை! கட்டாத கிணறில்லை! போடாத சாலை இல்லை! செப்பனிடாத பாதை இல்லை! உழாத நடாத வயலில்லை! நாட்டில் உற்பத்தியாகும் அவ்வளவு உணவுப் பொருள்களையும் நாம் தான் உற்பத்தி செய்கிறோம்! ஆனால், நமக்கு ஏன் உணவில்லை? ஏன் உடை இல்லை? ஏன் வீடு இல்லை? ஏன் படுக்கப்பாயில்லை? ஏன் குளமில்லை? ஏன் கிணறில்லை? ஏன் பாதையில்லை? குடிப்பது கூழாகத்தானே இருக்கிறது; கட்டுவது கந்தையாகத்தானே உள்ளது; குடியிருப்புக் குடிசையாகத்தானே இருக்கிறது", என்று உணர்வதற்குக் கூடச் சக்தி இல்லாமல் செய்துவிட்டது, ஆசிரியர் புகுத்திய ஜாதிப் பாகுபாட்டால் ஏற்பட்ட அடிமை மனப்பான்மை இல்லை என்றால் மூவாயிரம் ஆண்டுகளாக ஆரியத்திற்கும், ஜாதி இந்துக்களுக்கும், இந்து மதத்திற்கும் பிறவி அடிமைகளாக இருப்பார்களா இந்நாட்டுப் பழங்குடி மக்கள்? உலகத்தில் எங்கு பார்த்தாலும் உரிமைப் போராட்டம் நடக்கும் இந்த 1947-இல் கூட, இந்தச் சமூகம் உணர்ச்சியோ, எழுச்சியோ, கிளர்ச்சி மனப்பான்மையோ இல்லாமல் இருக்குமா? பழங்குடி மக்களுக்குப் பாதுகாவலர்கள் என்பவர்கள் கூடக் கவலையற்றதனமாகக் காலத்தைக் கடத்துவார்களா?

 

ஆகையால், பழங்குடி மக்கள் சமுதாயம் பரிதாபத்துக்குரிய நிலையில் உள்ளது; எடுப்பார் கைப் பிள்ளையாக இருக்கிறது; தன்னை யார் என்ன சொன்னாலும் எப்படி நடத்தினாலும் ஏனென்று கேட்க வலியற்று, மான உணர்ச்சியற்று இருக்கிறது.

 

இந்த நிலை ஜாதி இந்துக்களுக்குச் சாதகம்; ஆரியர்களுக்கு ஆக்கம். ஆகையால், ஆரியர்களும், அவர்களது அடிவருடிகளும் ஆதி திராவிடர் மக்களை அநேக நூற்றாண்டுகளாக சொல்லொண்ணாத் துயரத்திற்கு உள்ளாக்கி இருக்கின்றனர். அடிமை வாழ்க்கையே நடத்தி வருவதால் விடுதலை வேட்கை இன்றி இழிநிலையிலுள்ளனர். பழங்குடி மக்கள். இவ்வளவு இழி நிலையிலுள்ள மக்கட்கு அதிகமான இழிவு தரும் "ஹரிஜன்" என்னும் பட்டப் பெயரை அளித்தவர் யார்? மகாத்மா காந்தி. 1932-இல் பழங்குடி மக்களுக்கு இந்த இழிவுப் பெயர் இடப்பட்டது. 15- ஆண்டுகளாகின்றன. ஆதிதிராவிடர் மக்களுக்கு அடிமை முத்திரையை அந்த மகாத்மாவுக்குச் சொந்தக்காரராகிய காந்தியார் மாற்றி நிலையாக இருக்க வைத்தது.

 

பழந்தமிழர் மக்கள்; பூர்வீகக் குடிமக்கள்; ஆதிதிராவிடர்கள் என்னும் அழகிய பெயர்கள் உண்டு. ஆதித்திராவிடர் சமூகத்திலுள்ள பல பிரிவினரையும் ஒன்று சேர்த்து, அரசியல் சலுகை வழங்க ஏதுவான முறையிலே "ஷெடியூல்டு" வகுப்பினர் என்று மரியாதையாக உண்மைப் பொருள் நிறைந்ததாக அழைத்தனர் ஆங்கிலேயர். முன்பு குறிப்பிட்டு வந்த பெயர்கள் மனது பூரிப்புக்கும், மரியாதை உணர்வுக்கும் முன்னேற்றச் செய்கைக்கும் உகந்தவை. ஆனால் நாட்டுக்குச் சொந்தப்படுத்தி அழைக்க நா எழவில்லை அஹிம்ஸா மூர்த்திக்கு! மரியாதைப் பெயர் கொண்டழைக்க மனமில்லை மகாத்மாவுக்கு! ஏன்? அவர் ஜாதி இந்து; சனாதனி, வர்ணாசிரம தர்மி. ஆகையால் "ஹரிஜன்" என்னும் பெயரைச் சூட்டினார், உள்ள பெயரை வைத்துக் கொண்டே தாழ்த்தப்பட்ட மக்கள் உயர உழைத்தால் தன் சேவையை உலகமறியாது என்று! இது வெந்த புண்ணில் வேலால் குத்தும் செய்கையல்லவா?

 

மேல்நாட்டு வித்வான்களும் பண்டிதர்களும் புதிய கருத்துக்களையும், புதிய காட்சிகளையும் கண்டுபிடிப்பதில் தங்கள் அறிவைச் செலுத்தி வருகிறார்கள். இந்தியப் பண்டிதர்களோ முன்  ஒருவன் எழுதிவைத்ததை குருட்டு உருப்போட்டு புதிய தத்துவார்த்தம் கூறுவதிலும், கொங்கை, அல்குல், தொடை, உதடு, கூந்தல் ஆகியவைகளை வர்ணப்பதிலும், கடவுளைப் பற்றி போராடுவதிலும், கண்ணில் நீர்பெருகப் பாடுவதிலும் கருத்தை செலுத்தி வருகிறார்கள்.

 

                     ---------------------- "ஊழியன்" என்ற புனைப்பெயரில் தந்தை பெரியார் அவர்கள் எழுதிய கட்டுரை. "குடிஅரசு", 29.11.1947

29.6.22

ஆண்களுக்கும் பத்தினித் தன்மை வேண்டாமா? - பெரியார்

 

ஆண்களுக்கும் பத்தினித் தன்மை வேண்டாமா?

 


தாய்மார்களே! தோழர்களே! இப்போது இங்கு நடைபெற்ற இந்த நிகழ்ச்சியானது, இதுவரை நம்மிடையே நடைபெற்று வந்த நிகழ்ச்சிக்கும், பெரும்பாலான மக்களால் நடத்தப்படும் நிகழ்ச்சிக்கும் முற்றிலும் மாறுபாடானதாகும். இதுபோன்ற ஒரு நிகழ்ச்சி தமிழர்களுக்கு இருந்தது என்பதற்குச் சரித்திர ஆதாரமோ, வேறு எந்த ஆதாரமோ இல்லை என்பதோடு, இந்நிகழ்ச்சியினைக் குறிக்கும்படியான சொல் தமிழில் ஒன்று கூடக் கிடையாது. 'திருமணம்' என்கிற சொல் இந்தி எதிர்ப்பின் போது தமிழுக்கு ஏற்பட்ட செல்வாக்கினால் ஏற்படுத்திக் கொண்டதே ஆகும். அதுவும் இதனைக் குறிக்கக் கூடியதல்ல.

 

தொல்காப்பியம் தமிழனுடைய இலக்கியமல்ல. அது தமிழில் எழுதப்பட்டிருப்பதாலும், தமிழனுக்குப் பகுத்தறிவு இல்லாததாலும், இந்த இலக்கியத்தைத் தனது இலக்கியமாக்கிக் கொண்டான். அந்த தொல்காப்பியத்தைப் பழந்தமிழ் இலக்கியமென்று பெருமை பேசிக் கொள்கிறான்.

 

அந்த இலக்கியத்திலேயே "பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் அய்யர் யாத்தனர் கரணம் என்ப" - "பார்ப்பனனிடம் ஒழுக்கக் கேடும், நாணயக் கேடும் ஏற்பட்ட பிறகு, பார்ப்பானால் ஏற்படுத்தப்பட்டது தான் திருமணச் சடங்குகள் என்பதாகும்" என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. அய்யர் என்பதற்குத் தமிழ்ப் புலவர்கள், பார்ப்பான் என்ற உண்மையைச் சொல்லாமல் உயர்ந்த மனிதன், அறிவாளி என்று இவர்களாக ஒரு பொருளைக் கூறுவார்கள்.

 

அடுத்து வருவதில் மேலோர் மூவர்க்கும் புணர்ந்த கரணம் கீழோர்க்காகிய காலமும் உண்டே என்ற பாட்டின் மூலம் இந்தக் கரணம் என்பவை (சடங்குகள்) மேல் ஜாதிப் பார்ப்பானுக்காகவே ஏற்பாடு செய்யப்பட்டவை. இவை கீழேரான சூத்திரர்களுக்குமாகி விட்டன என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

 

இதன் மூலம் பார்ப்பானுக்காக ஏற்பாடு செய்யப்பட்டதே சடங்குகள் (திருமணம்) என்பதை வலியுறுத்திக் கூறியிருக்கின்றார். இப்படிச் சொல்வதால் இந்த முறை நமக்கில்லையா என்று கேட்கலாம். தமிழர்களும் வாழ்ந்தார்கள் புருஷன் - மனைவியான அல்ல; காதலன் - காதலி என்கின்ற முறையில், எஜமான் - அடிமை என்பதல்லாமல் நண்பர்களைப் போல வாழ்ந்தார்கள்.

 

இந்தப் பழம் திருமணங்கள் மூலம் ஆண் என்றால் பெண்ணிற்கு எஜமான்; பெண் என்றால் ஆணிற்கு அடிமை என்று ஆக்குவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டவையே யாகும். இன்றும் ஆந்திரா கன்னட நாடுகளில் கணவனை எஜமானர் என்றே அழைக்கின்றனர். எப்படி மேல் ஜாதிக்காரன் (பார்ப்பான்) கீழ்ஜாதிக்காரனென்று நம்மையெல்லாம் அழுத்தி வைத்திருக்கிறார்களோ; அதுபோல ஆண்கள், பெண்கள் சமுதாயத்தை அழுத்தித் தங்களின் அடிமைகளாக வைத்திருக்கிறார்கள்.

 

பெரிய அறிவாளி என்று எல்லோரும் கருதிக் கொண்டிருக்கிற வள்ளுவனே என்ன சொல்கிறான் என்றால், பெண்கள் அடிமையாக கணவனைத் தொழுபவளாக இருக்க வேண்டுமென்று சொல்லியிருக்கிறான். பெண்களுக்கு நீதி, ஒழுக்கம் எப்படி அமைத்திருக்கிறான் என்றால், பெண் என்றால், "அச்சம், நாணம், மடம், பயிர்ப்பு உள்ளவளாக இருக்க வேண்டும். அவள் தான் பதிவிரதையாவாள்" என்று சொல்லி இருக்கிறான். இதைப் பெண்களுக்கு நீதி கூற வந்த எல்லோருமே சொல்லியிருக்கிறார்கள். இதன் பொருள் என்னவென்றால், பெண் ஆணைக் கண்டால் அஞ்சி நடுங்க வேண்டும். ஆண்களைப் பார்க்க வெட்கப்பட வேண்டும். பிறர் பார்ப்பதற்கு அசிங்கமாக, அருவெருப்பாக (பயிர்ப்பு) இருக்க வேண்டும். இதோடு மடமை (பகுத்தறிவற்றவளாக) நிறைந்தவளாக, மடைச்சியாக இருக்க வேண்டும்.

 

வள்ளுவன் என்ன சொல்கிறான். "தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை" என்கிறான்.

 

இது மனுதர்மத்தின் மறுபதிப்பு என்றே சொல்ல வேண்டும். எப்படியென்றால் மனு தர்மத்தில் சூத்திரன் கடவுளை நேரிடையாகக் கும்பிடக் கூடாது.

பார்ப்பானையே கடவுளாக எண்ணிக் கும்பிட வேண்டும். அப்படி இல்லாமல் நேரிடையாகக் கடவுளைத் தொழுதால் அவன் கொலை செய்யப்படுவான் என்று குறிப்பிட்டிருக்கின்றது. இராமாயணத்தின் முடிவே சம்பூகன் என்ற சூத்திரன், பார்ப்பானைக் கும்பிடாமல் நேரிடையாகக் கடவுளுக்காக தவம் செய்ததால், இராமனால் கண்ட துண்டமாக வெட்டப்பட்டான் என்பதேயாகும். இதுபோலத் தான் வள்ளுவரும் பெண்கள் தங்கள் கணவனைத் தொழ வேண்டும்; அவனுக்கு அடிமையாக இருந்து அவனுக்குத் தேவையான தொண்டுகளைச் செய்ய வேண்டுமென்று சொல்லி இருக்கிறாரே தவிர, ஆண்களைப் போல் சம உரிமையோடு வாழ வேண்டுமென்று குறிப்பிடவில்லை. எல்லோராலும் போற்றப்படுகிற வள்ளுவருடைய நிலையே இப்படி என்றால், மற்றவர்களைப் பற்றிக் கேட்க வேண்டுமா? தமிழ்ப் புலவர்கள், அறிஞர்கள் எல்லோருமே பெண்களை அடிமையாக இருக்க வேண்டுமென்று வலியுறுத்துகின்றார்கள். பெண்களும் அப்படி இருப்பது தான் தங்கள் கடமை என்று எண்ணும்படிச் செய்து விட்டார்கள்.

 

ஆண்கள் கெட்டுப் போய் விட்டார்கள் என்றால், அதற்குக் காரணமே பெண்கள் அடக்கி வைக்கப்பட்டு அடிமைகளாக்கப்பட்டதே யாகும். பெண்கள் பதிவிரதையாக இருக்க வேண்டுமென்று சொல்வது, ஆண்கள் எப்படி வேண்டுமானாலும் நடந்து கொள்ளலாம் என்பதற்கு லைசென்ஸ் கொடுப்பது போன்றது தானே! ஒழுக்கம் என்றால் இரண்டு பேருக்கும் ஒன்றாகத் தானே இருக்க வேண்டும்? பெண்களுக்கொரு நீதி, ஆண்களுக்கொரு நீதி எதற்காக இருக்க வேண்டும் என்று முதன் முதல் கேட்டவர்கள் நாங்கள் தான்! வேறு எந்த மகானோ, தெய்வ சக்தி பொருந்தியவனோ, மகாத்மாவோ, வெங்காயமோ எவனுமோ இதுபற்றிக் கவலைப்படவில்லை. நாங்கள் தான் இதற்காக 40, 50 வருடமாகப் பாடுபட்டு வருகின்றோம். பெண்களின் இழிவை அடிமையைப் போக்கவே இம்முறையானது கொண்டு வரப்பட்டு 40, 50 வருடமாக நடைபெற்றும் வருகிறது. இப்புதிய முறையில் ஆணுக்குப் பெண் அடிமையல்ல; புருஷன் - மனைவி என்பது கிடையாது. இருவரும் நண்பர்கள். தாங்கள் விரும்புகிறவரை சேர்த்து இருக்கலாம். இல்லாவிட்டால் பிரிந்து கொள்ளலாம். அத்தனை உரிமை இருக்கிறது.

 

            ----------------------------------- 11.03.1968  அன்று ஈரோடு திருமண விழாவில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய அறிவுரை. "விடுதலை", 01.04.1968