Search This Blog

31.12.13

சமதர்மவாதிகள் ஏன் நாஸ்திகர்கள் என்று சொல்லப்படுகிறார்கள்?-பெரியார்


 

தோழர்களே! சமதர்மம் என்கின்ற வார்த்தை ஒரு பொது வார்த்தை. இது ஆங்கிலத்தில் உள்ள சோஷலிசம் என்னும் வார்த்தைக்குத் தமிழ் மொழி பெயர்ப் பாகக் கையாளப்படுகிறது என் றாலும் சோஷலிசம் என்ற வார்த்தையே தேசத்திற்கு ஒரு விதமான அர்த்தத்தில் கையாளப்படுகிறது. அநேகமாக அந்த வார்த்தை அந்தந்த தேச நிலைமைக்கும், தகுதிக்கும், சவுகரியத்துக்கும், அரசாங் கத்துக்கும் தகுந்தபடிதான் பிரயோகிக் கப்படுகிறது. சில இடங்களில் சட்ட திட்டங்களுக்குக் கட்டுப்பட்டும், சில இடங்களில் சட்ட திட்டங்களுக்கு மீறின தாயும் உள்ள பொருள்களுடன் சமதர்மம் என்ற வார்த்தை பிரயோகிக்கப்படுகிறது.

ஆகவே சோஷலிசத்துக்கு இதுதான் அர்த்தம் என்று வரையறுக்க அவ்வார்த் தையில் எவ்விதக் குறிப்பும் இல்லை.

சில இடத்து சோஷலிசத்துக்கும், பொதுவுடைமை என்பதற்கும் பேதமே இல்லாமல் அர்த்தம் இருந்து வருகிறது. சில இடங்களில் வெகுசாதாரண விஷயத்துக்கும் அப்பெயர் இருந்து வருகிறது. சில இடத்தில் பொதுவுடைமை வேறாகவும் சமதர்மம் வேறாகவும் இருந்து வருகின்றது.

இங்கு சமதர்மம் என்கின்ற வார்த்தைக்குச் சமூகத் துறையிலும் பொருளாதாரத் துறையிலும், மக்கள் உயர்வு தாழ்வு இல்லாமல் சமத்துவமாய் (அபேதமாய்) வாழவேண்டும் என்பதையே சமதர்மம் என்று நான் கருத்து கொண்டு சமதர்மம் என்கின்ற வார்த்தையை இங்கு பிரயோகிக்கின்றேன்.
ஏனெனில் மற்ற நாட்டில் சமூகத் துறையில் நமது நாட்டில் உள்ளது போன்ற உயர்வு தாழ்வு பேதா பேதம் இல்லை. பொருளாதார சம்பந்தமே பெரிதும் மற்ற நாடுகளில் இருக்கின்றது. நமது நாட்டு சமுதாய உயர்வு தாழ் வானது பிறவியிலேயே வகுக்கப்பட்டு அதை மதத்தோடு பொருத்தி அதற்கு அரசியல் பாதுகாப்பு அளிக்கப்பட்டு இருந்து வருகிறது.

முதலில் சமுதாயத்தில் பிறவியின் பேரால் உள்ள பேதங்களை ஒழித்தாக வேண்டும். அதுவே இந்நாட்டு சமதர்மத் துக்கு முதல் படியாகும். 

அதனாலேயே பொருளாதார சமதர்மமே மனித சமூக சாந்திக்கு மருந்து என்று கருதி இருக் கும் நான் சமுதாயத்தில் வாழ்க்கையில் சமதர்மத்தை அபேத வாதத்தை முக்கியமாய் வலியுறுத்தி வருகிறேன்.

நிற்க பொதுவாகவே சமதர்மம் என்பது எந்த அர்த்தத்தில் இருந்தாலும் சமுதாயம் முக்கியமானாலும், பொருளா தாரம் முக்கியமானாலும் அதற்கு கடவுள் உணர்ச்சி மத நம்பிக்கை என்பவை எதிராகவே இருந்து வந்திருக்கின்றன. சர்வதேச சமதர்ம வாதிகளும் பெரிதும் கடவுள் உணர்ச்சியும் மத நம்பிக்கையும் சமதர்மத்திற்கு விரோதமானது என்று தான் சொல்லியிருக்கிறார்கள். ஆதலால் எந்த சமதர்மவாதிக்கும் இதைப் பொறுத்தவரையில் அபிப்பிராய பேதம் இருக்கும் என்று நான் நினைக்க வில்லை. இந்த வேலை அபிப்பிராய பேதமில்லாமல் நடந்துதான் தீரும்.
நம் நாட்டிற்கு இன்று முதலில் ஜாதி பேதங்கள் ஒழிந்து மக்கள் யாவரும் பிறவியில் சமம் என்கின்றதான சமதர்ம முயற்சியே செய்ய வேண்டியிருக்கிறது. ஜாதி பேதம் பிரிவு ஆகியவை ஒழிந் தால்தான் சமூக வாழ்க்கையில் சமதர்மமாய் மனிதன் வாழ முடியும். பொருளாதார பேதத்துக்கும் சமூக ஜாதி பேத முறைதான் பெரிதும் காரணமாய் காவலாய் இருந்து வந்திருக்கிறது. இன்றும் பெருவாரியான மக்களுக்கு ஜாதிபேதமே பொருளாதார சமதர்ம முறையை நினைக்கக்கூட இடம் கொடுக் காமல் அடக்கி வருவதுடன் பொருளா தார பேதத்துக்கு இடமளித்தும் வரு கிறது. எந்தக் காரணத்தைக் கொண் டாவது இன்று நாட்டிலுள்ள பொருள் களையெல்லாம் எல்லா மக்களுக்கும் சமமாக்கி வைத்து விட்டாலும் நமது ஜாதி முறைகள் மறுபடியும் வெகு சீக்கிரத்தில் பழைய நிலைமையைத்தான் உண்டு பண்ணிவிடும். மற்ற நாட்டு மக்களுக்குப் பொருளாதார சம தர்ம உணர்ச்சி ஏற்பட்டதற்குக் காரணமெல்லாம் அவர்களில் பிறவியில் கீழ் மேல் நிலை இருக்கும்படியான ஜாதி பேதம் இல்லாததேயாகும். நம் மக்களுக்கு வெறும் பொருளாதார சமதர்மம் சுலபத்தில் புரியவே புரியாது. ஜாதி பேதம் ஒழிப்பது என்ற சமதர்மத்தைச் சொல்லி பொருளாதார சமதர்மத்தைச் சொன் னால்தான் உண்மையாகக் கஷ்டப் படுகிற மக்களுக்கு உணர்ச்சி உண் டாக்க முடிகின்றது.

ஆகவே, சமூக சமதர்மம் ஏற்பட ஆசைப்படுகிற நாம் ஜாதி பேதத்தை ஒழிக்க வேண்டும் என்று கருதுகிற நாம் பொருளாதார சமதர்மத்துக்காகவே பிறவி ஜாதியை ஒழிக்க வேண்டியிருக் கின்றது என்றும் பிறவி ஜாதியை ஒழிப்பதற்கு அதற்கு ஆதரவான மதத்தையும் ஒழிக்க வேண்டும் என்றும் சொல்லுகின்றோம்.  மதத்தைப் பற்றியோ மதத்தில் உள்ள ஏதாவது ஒரு கொள் கையைப்  பற்றியோ பேசினாலும் அதை ஒழிக்க வேண்டும் என்று சொன்னாலும் அதை நாஸ்திகம் என்று சொல்லி விடுகிறார்கள். அதனால்தான் சமதர்மம் பேசுகின்ற யாரும் கண்டிப்பாய் நாஸ்தி கர்களாகியே தீரவேண்டி இருக்கிறது.

நாஸ்திகனாவதற்குக் கடவுள் இல்லை என்று கூட சொல்ல வேண்டிய தில்லை. மதக் கொள்கையைப் பற்றி ஆராய்ச்சி செய்து பேசினாலே போது மானதாக இருக்கிறது.

ஜாதிகள் கடவுளால் உண்டாக்கப் பட்டதாக - கடவுளால் கற்பிக்கப்பட்ட தாக - கடவுளே சொன்னார் என்று மத சாஸ்திரங்களில் சொல்லப்பட்டிருக் கின்றது.
அந்த மத சாஸ்திரங்கள் வேத மாகவும், வேதம் போன்றதாகவும், கருதப்படுகின்றன. உதாரணமாக பகவத் கீதை என்பது இந்துக்கள் என்பவர் களுக்கு மிகப் புனிதானதும் மேலானது மான புஸ்தகம் என்று கொள்ளப்படு கின்றது.

மகமதியர்கள் கொரானை மதிப்பதை விட கிறிஸ்தவர்கள் பைபிளை மதிப்பதை விட கீதையை அதிக பக்தியாய் அநேக இந்துக்கள் மதிக்கிறார்கள். ஆனால் அப்புஸ்தகத்தில் நான்கு ஜாதிகளும், நான்கு பிரிவான ஜாதிப் பெயர்களும், அதற்குத் தனித்தனி வேலைக் கிராமங் களும் சொல்லப்பட்டிருக் கின்றன. கீதை என்றாலே பகவான் வாக்கு என்று அர்த்தம்.

ஜாதி ஒழிய வேண்டும் என்று பேசு கிறவர்களில் கூட 100 க்கு 99 பேர்கள் கீதையைப் பகவான் வாக்கு என்று நம்பிக் கொண்டுதான்  இருக்கிறார்கள்! இந்நிலையில் இப்படிப்பட்ட மக்களால் ஜாதிப் பிரிவுகளுக்கு உள்ள மேல் கீழ் நிலைகள் எப்படி ஒழிக்க முடியும்? கீதை முறை தனது அல்ல என்றோ, கீதை கடவுள் சொன்னது அல்ல என்றோ, அப்படித்தான் கடவுளே சொல்லி இருந் தாலும் அதைப் பற்றிக் கவலை இல்லை என்றோ, சொல்லத் துணியாவிட்டால், சொல்ல தைரியமில்லாத மக்கள் யாவரையும் அந்தப்படி சொல்லத் தயார் செய்யாவிட்டால் ஜாதிப் பிரிவு ஜாதி வித்தியாசம் ஆகியவை எப்படி ஒழியும்? ஆகவே இந்தப்படி சொல்லும்படியான ஒருவன் கீதையையும், கிருஷ்ணனையும் நம்பும் மக்களால் நாத்திகன் என்று சொல்லப்படாமல் இருக்க முடியாது.

ஆதலால் நாஸ்திகனாகவோ நாஸ்தி கனாவதற்குத் தயாராகவோ நாஸ்திகன் என்று அழைக்கப்படுவதற்குக் கலங் காதவனாகவோ இருந்தால் ஒழிய ஒருவன் சமதர்மம் பேச முடியவே முடியாது.

இது மாத்திரமல்லாமல் சர்வமும் கடவுள் செயல் என்னும் மனித சமூகத்தில் பிறவி மூலமாகவும் வாழ்வு மூலமாகவும் இன்று இருந்து வரும் பிரிவுக்கும் பேதத்துக்கும் உயர்வு தாழ்வுக்கும் கடவுளே பொறுப்பாளி யென்றும், கடவுள் சித்தத்தினால்தான் அவற்றில் ஒரு சிறு மாற்றமும் செய்ய முடியும் என்று சொல்லப் படுமானால் அதை நம்பாமல் இருப்பது நாஸ்திகமா னால் கண்டிப்பாக ஒவ்வொரு மனிதனும் நாஸ்திகராகத்தான் ஆக வேண்டும்.
ஏனெனில் செல்வவான்களிடம் இருக்கும் செல்வமும், பார்ப்பான் பாராட்டிக் கொள்ளும் உயர்ந்த ஜாதித் தத்துவமும், கடவுள் கொடுத்தது என்றும். கடவுள் சித்தத்தால் ஏற்பட்டது என்றும் சொல்லப் படுமானால் அந்தக் கடவுளை யார்தான் ஏற்றுக் கொள்ள முடியும்?

அதை யார்தான் நிலைத்திருக்க விட்டுக் கொண்டிருக்க முடியும்? எந்த மாதிரியான மூடக் கடவுளும், எந்த மாதிரியான அயோக்கியக் கடவுளும், மனிதரில் ஒருவனை மேல் ஜாதியாக்கிப் பாடுபடாமல் ஊரார் உழைப்பில் சாப்பிட்டுக் கொண்டு இருக்கும்படிக்கும் மற்றொருவனைக் கீழ் ஜாதியாக்கி பாடுபட்டு பாடுபட்டு சோம்பேறிகளுக்கு அழுதுவிட்டு பட்டினியாய், நோயாய், கட்டக் கந்தையற்று, இருக்க இடமற்றுத் திரியும்படி சொல்லி இருக்கவே முடியாது.

இந்தக் காரியங்களுக்குக் கடவுளைப் பொருத்துகின்றவர்களை யோக்கியர் கள் என்றோ, அறிவாளிகள் என்றோ யாராலும் சொல்ல முடியாது.
ஊரார் உழைப்பைக் கொள்ளைக் கொள்ளாமல் எவனும் பணக்காரனாக முடியாது.

நாட்டிலே சிலர் 10 லட்சம், 20 லட்சம் கோடிக்கணக்கான ரூபாய் சொத்துள் ளவர்கள் இருக்கிறார்கள். இவர்களுக்கு இந்தப் பணம் ஏது? இவர்கள் படும் பாட்டுக்கு இவர்கள் அனுசரிக்கும் முறைக்கும் இவர்கள் நடந்து கொள்ளும் மாதிரிக்கும் எந்தக் கடவுளாவது இவ் வளவு பணம் கொடுத்திருக்க முடியுமா?
ஏதோ இதெல்லாம் அவரவர் பிரயத் தனத்தினால் தொழில் முறையினால் மன வலிமையினால் சம்பவங்களால் ஏற்பட் தென்று சொல்லாமல் வேறு என்ன சொல்ல முடியும்?

இவ்வளவு பணம் இவர்களுக்குச் சேருவதற்கு ஆதார மாயிருந்த முறையை  யார்தான் சரியான முறையென்று சொல்லிக் கொள்ள முடியும்? இவ்வளவு பணம் இவர்களுக்குக் கொடுத்தவர் களில் பெரும்பான்மை மக்கள் இன்று இருக்கும் நிலையை யார்தான்  நல்ல நிலை என்று சொல்ல முடியும்? இதையெல்லாம் மாற்ற வேண்டும் என்று சொல்லும்போது கடவுளையும், மதக் கொள்கை களையும் கொண்டு வந்து குறுக்கே போட்டால், அக் கடவுளையும், மதத்தையும் ஒழிக்காமல் எப்படி இருக்க முடியும்?
மற்றும் கடன்பட்டு வட்டி கொடுத்த மக்க ளுடையவும் பாடுபட்டுப் பயனைக் கொடுத்த மக்களுடையவும் மனமும், வயிறும், வாயும் பற்றி எரிய எரிய அப்பணங்களைக் கோவில் கட்ட, சாசனம் செய்ய, சாமிக்குக் கிரீடம் செய்ய, கல்யாணம் செய்ய, தாசி வீட்டுக்குப் போக, தாசிகளை வைத்து உற்சவம் வாண வேடிக்கை செய்யப் பாழ் பண்ணப்படுமானால் யார்தான் சகித்துக் கொண்டு இருக்க முடியும்?  இந்த அக்கிரமங் களைப் பார்த்துக் கொண்டு எந்தக் கடவுள்தான் இருக்க முடியும்?

அப்படியும் ஒரு கடவுள் இருக்கிறது என்று சொல்லப்படுமானால் அப்படிப் பட்ட கடவுளை அழித்து ஒழித்து விடு வதில் யாருக்கு என்ன  நஷ்டம் வரும்?
அப்படிப்பட்ட கடவுளை யாரும் ஒழிக்க முடியாது என்று சொல்லப்படுமானால் அது ஒழிந்தது என்று ஒருவராவது ஏன் வருத்தப்பட வேண்டும்?
தோழர்களே, இதையெல்லாம் பார்க்கும்போது கடவுளைக் கற்பித்தது நல்ல எண்ணம் கொண்டு என்பதாக நம்ப நம்மால் முடியவில்லை.

சோம்பேறிக் கொள்ளைக் கூட்டங்கள் கொடுங்கோன்மைக் காரன், பேராசைக்காரன் முதலிய கூட்டத்தாரின் சுயநலனுக்குத்தான் பயன்படுகிறதே ஒழிய வேறு காரியத்துக்குக் கடவுள் பயன்படுவதே இல்லை. மனித சமூக வாழ்க்கை ஒழுக்கத்திற்கு  என்று கடவுள் சிருஷ்டிக்கப்பட்டிருக்குமானால் அப்படிப் பட்ட கடவுளைப் பற்றி அது இருந்தாலும் அது இல்லாவிட்டாலும் நமக்குக் கவலையில்லை.

இதுவரை எந்தக் கடவுளால் யாருக்கு எப்படிப்பட்ட ஒழுக்கம் ஏற்பட்டது என்று யாராவது சொல்லமுடியுமா? என்று கேட்கிறேன்.

கடவுளைச் சதாகாலம் கட்டியழுது அதனாலேயே ஜீவனம் நடத்தும் அர்ச் சகர்கள், குருக்கள் ஆகியவர்கள் முதலில் ஒழுக்கமாய் இருக்கிறார்களா? இவர்களுடைய ஒழுக்கக் காரியங்கள் நமக்குத் தெரியாதா?

கடவுளுக்காக 10 லட்சம் பணம் போட்டு கோவிலைக் கட்டிக் கும்பாபி ஷேகம் செய்து அய்ந்து வேளை ஆறு வேளை பூசை செய்து மானியம் விட்ட கடவுள் பக்தர்களில் எவராவது ஒழுக்க மாய் யோக்கியமாய் நடக்கிறார்களா? 

கடவுளுக்காகவே சன்யாசியாய், குரு வாய், சங்கராச் சாரியாய், தம்பிரானாய், முல்லாவாய், மவுலானாவாய் இருக் கிறவர்களிலாவது எல்லோரும் ஒழுக்க மானவர்கள் என்று சந்தேகமறச்  சொல் லத்தக்கவர்களாய் இருக்கிறார்கள் என்று சொல்ல முடியுமா? இவர்கள் நிலையே இப்படி இருக்க கடவுள் நம்பிக்கை உள்ள சாதாரண பாமர மக்களிடத்தில் எப்படி ஒழுக்கம் யோக் கியதை எதிர்பார்க்க முடியும்?

எப்படியானாலும் கடவுளைப் பற்றிய எண்ணமே யாருக்கும் இருக்கக்கூடாது என்பதற்காக நான் பேச வரவில்லை. மனித சமூக சமதர்ம வாழ்வுக்குத் தடையாய் எந்தக் கடவுளும் இருக்கக் கூடாது என்றும் அப்படிப்பட்ட கடவுளை இருக்க விடக்கூடாது என்றும் தான் சொல்ல வருகிறேன். மனித வாழ்க்கைக் கும், பேதா பேதங்களுக்கும், கடவுள் சம்பந்தமில்லை என்று சொல்லும் பட்சத்தில் அக்கடவுளைப் பற்றி நமக்கு என்ன கவலை?

ஆகவே தோழர்களே! சமதர்மவாதி கள் ஏன் நாஸ்திகர்கள் என்று சொல் லப்படுகிறார்கள்? அவர்கள் ஏன் நாஸ் திகர்கள் என்று சொல்லப்பட வேண்டி யவர்களாகிறார்கள்? என்பதை நீங்கள் உணர வேண்டும் என்பதற்காகவே இதை எடுத்துச் சொன்னேன்.

----------------------------------------1935 செப்டம்பர் தேவக்கோட்டையில் முதல் வாரத்தில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு  (`விடுதலை, 2.12.1951).

23.12.13

இறை நம்பிக்கை இல்லாதவர்கள் வெற்றி பெற முடியாதா?

இறை நம்பிக்கை உள்ளவர்களுக்கு அதிசயம் ஏற்படும். நம்பிக்கையை இழப்பவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெறவே முடியாது. இறைவனிடம் அசைக்க முடியாத நம்பிக்கை உங்களிடம்  இருந்தால் உங்கள் வாழ்வின் வெற்றி நிச்சயம்!

இவ்வாறு பேசியிருப்பவர் வேறு யாராகத் தான் இருக்க முடியும் -  அம்மையார் ஜெயலலிதாவைத் தவிர?

இந்தக் கருத்தைக் கூறுமுன் ஒரே ஒரு நொடி, தந்தை பெரியாரை நினைத்துப் பார்த்திருக்க வேண் டாமா? அப்படி நினைத்துப் பார்க்கும் நிலை இல்லாவிட்டால் உங்கள் சுவரொட்டிகளில் தந்தை பெரியார் படம் எதற்கு?

பெரியார் உருவாக்கிய திராவிட எதற்கு? என்ற கேள்வி எழாதா?

அனைத்திந்திய அண்ணா தி.மு.க. என்பதற்குப் பதிலாக அக்கிரகார முன்னேற்றக் கழகம் என்று வைத்துக் கொள்ளலாமே!

அண்ணாவின் பெயரைக்கூட கட்சியில் வைத்துக் கொள்ளும் அருகதை கூடக் கிடையாதே!

அண்ணா எந்தக் கோயிலுக்குச் சென்றார்? அண்ணா யாகம் நடத்தினார், மண் சோறு சாப்பிடச் சொன்னார் என்று சொல்ல முடியுமா?

இறை நம்பிக்கை இல்லாதவர்கள் வெற்றி பெற முடியாதாமே!


அடேயப்பா - எப்படிப்பட்ட கண்டு பிடிப்பு!

சமுதாயப் புரட்சி இயக்கம் நடத்தி மக்களிடம் மண்டிக் கிடந்த மூடநம்பிக் கைகளை, ஆரியச் சழக்குகளை, ஆண்டவன்களின் ஆபாசச் சேற்றை யெல்லாம் அணு அணுவாகச் சிதைத்து விழிப்புணர்வு எரிமலையை ஏற்படுத்தி, மாபெரும் வெற்றி பெற்ற உண்மையான புரட்சித் தலைவர் தந்தை பெரியார் அல்லவா!

அதனால்தானே அறிஞர் அண்ணா அவர்கள் பெரியார் ஒரு தனி மனிதரல்லர்; ஒரு சகாப்தம், கால கட்டம், திருப்பம்! என்று  ஆணி அடித்தது போல கணித்தார்.

பெரியார் கடவுள் மறுப்பாளர்தான்!

கடவுள் இல்லை; இல்லவே இல்லை
கடவுளைக் கற்பித்தவன் முட்டாள்
பரப்பியவன் அயோக்கியன்
வணங்குகிறவன் காட்டுமிராண்டி

என்று அழுத்தம் திருத்தமாகச் சொன்னவர்தான்.

அந்த பெரியார் அவர்களுக்குத் தான் இந்த அமைச்சரவையே காணிக்கை என்று தமிழ்நாடு சட்டப் பேரவையில் முதல் அமைச்சர் அண்ணா பிரகடனப்படுத்தினார்.

இந்த வரலாறெல்லாம் அம்மையா ருக்குத் தெரியாது என்றால் யாருக் காவது அ.இ.அ.தி.மு.க.வில் திராவிடர் இயக்க வரலாறு தெரியும் என்றால்(?!) அவர்களிடம் பாடம் கேட்டுத் தெரிந்து கொள்ளட்டும்! அல்லது விடுதலை ஏட்டை நாளும் படிக்கட்டும்; அல்லது திராவிடர் கழக வெளியீடுகளைப் படித்துப் பார்க் கட்டும்!

அ.இ.அ.தி.மு.க. என்பதில் அண்ணா இருக்கிறார் - திராவிடமும் இருக்கிறது. இந்த இரண்டுக்கும் அப்பாற்பட்டு கருத்துச் சொல்ல அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாள ருக்கு அதிகாரம் கிடையாது. அவர் கருத்தை பாரம்பரியமிக்க  கருத்தாக் கமுடைய சொல்லாடல்களைக் கொண்ட கட்சியின் மீது திணிக்க முடியாது - திணிக்கவும் கூடாது.

ஒன்றை வேண்டுமானால் வெளிப் படையாகக் கூறட்டுமே பார்க்கலாம்; அ.இ.அ.தி.மு.க.வில் இருப்பவர்கள் கடவுள் நம்பிக்கை உள்ளவர்களாக இருக்க வேண்டும்.

நெற்றியிலே பட்டையும், குங்குமமும் அணிந் திருக்க வேண்டும்,
கழுத்திலே உருத்திராட்சக் கொட்டை தொங்க வேண்டும். கையிலே மந்திரக் கயிறு கட்டி இருக்க வேண்டும் - இவை இருந்தால்தான் அ.இ.அ.தி.மு.க. உறுப்பினர் என்று அதிகார பூர்வமான சட்ட விதிகளிலே திருத்தம் கொண்டு வரலாமே!

ரிலேட்டி விட்டி விதியைக் கண்டு பிடித்த அய்ன்ஸ்டின் நாத்திகர்தான் - அந்தத் தத்துவத்தை மட்டும் அவர்  கண்டு பிடிக்கவில்லையென்றால் இன் றைக்கு ஏற்பட்டுள்ள விஞ்ஞான சாதனைகளில் மஞ்சள் குளிக்க முடியுமா?
நோபல் பரிசு பெற்ற பெரும் பாலான விஞ்ஞானிகள் எல்லாம் நாத்திகர்கள்தான். நோபல் பரிசு பெற்ற அமர்த்தியாசென்கூட கடவுள் மறுப்பாளர் தான்.

கடவுள்தான் மனிதனைப் படைக் கிறார் - மனிதன் ஆயுளை நிர்ணக் கிறான் என்பது இப்பொழுது தவிடு பொடியாகவில்லையா?

கடவுள் துகள் கண்டுபிடிக்கப் பட்டு விட்டதே!

காலரா நோய்க்கு காரணம் காளியாத்தா - அம்மை நோய்க்குக் காரணம் மாரியாத்தா என்று நம்பி கோயில்களில் கூழ்  காய்ச்சி ஊற்றிக் கொண்டு கிடந்தார்களே அவற்றாலா காலராவும், அம்மையும் ஒழிந்தன?
தடுப்பு மருந்தைக் கண்டுபிடித்த தால் அல்லவா - பெரியம்மை இருப்ப தாகக் கண்டுபிடித்துச் சொன்னால் ஆயிரம் ரூபாய் பரிசு என்று அரசு விளம்பரம் செய்ததே!

அம்மைத் தடுப்பு நோயைக் கண்டுபிடித்த ஜென்னரையும்,  உலகம் உருண்டை என்ற கலிலியோவையும்,  பரிணாமத் தத்துவத்தைக் கண்டு பிடித்த டார்வினையும் எதிர்த்ததும் அவர்களைத் தண்டித்ததும்கூட மதம் தானே!
டார்வின்மீதும், கலிலியோ மீதும் கிறித்துவ மதம் தண்டனையை ஏவிய தற்காக போப் - இப்பொழுது வருத்தம் தெரிவித்துள்ளாரே. இந்த வரலாறு எல்லாம் அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளருக்குத் தெரியுமா?

Religious People are less intelligent than atheists - Study finds என்ற சிறப்பு மிக்க கட்டுரையை முதல் அமைச்சர் படித்துப் பார்த்ததுண்டா?

அமெரிக்காவின் ராச் செஸ்டர் பல்கலைக் கழக ஆய்வு பற்றி அறி வாரா?
மிரான் ஜீக்கர் மேன் என்ற ராச் செஸ்டர் பல்கலைக் கழகப் பேராசிரி யரின் தலைமையில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில், அறிவாற்றலுக்கும், மதப் பழக்கத்திற்கும் ஏற்பட்டுள்ள வேலைப் பாடுகளைப் பற்றிய 63 ஆய்வுகளில் 53 ஆய்வுகள் மத நம் பிக்கை உடையவர்கள் குறைந்தளவு அறிவாற்றல் உடையவர்கள் என்பதை ஆய்வுகள்மூலம் நிரூபித்துள்ளனரே!

அரசியலில் அடாவடித்தனமாகப் பேசுவதுபோல பகுத்தறிவாளர்கள் மீதும், அறிவியல்வாதிகள்மீதும் கல்லெறியலாம் என்று அம்மையார் ஆசைப்பட வேண்டாம்.




தோழர் தா.பா.வும் தோழர் ஜி.ஆரும் என்ன செய்தார்களாம்?

தமிழக முதலமைச்சர் மாண்புமிகு ஜெ. ஜெயலலிதா பேசிய இந்தக் கூட்டத்தில் இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் தமிழ் மாநில  செயலாளர் தோழர் தா.பாண்டியன், இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் (மார்க்சிஸ்ட்டு) தமிழ் மாநில  செயலாளர் தோழர் ஜி. இராமகிருட்டிணன் ஆகியோரும் அந்தக் கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்களே - முதல் அமைச்சர் ஜெயலலிதா சொன்ன கருத்து அவர்களையும் சேர்த்துத்தானே?

மார்க்சும் - ஏங்கல்சும் கடவுள் நம்பிக்கை இல்லாமல் இருந்ததால் அவர்கள் வெற்றி பெறவில்லையா? அந்த இடத்தில் முதல் அமைச்சருக்குப் பதில் கூற வாய்ப்பு அவர்களுக்கு இல்லாமல் போயிருக்கலாம். அவர்கள் கட்சியின் அதிகாரபூர்வ ஏடு களானஜனசக்தி தீக்கதிரில் முதல் அமைச்சர் கருத்துக்கு மறுப்புக் கூறுவார்களா? எங்கே பார்ப்போம்!

Read more: http://viduthalai.in/e-paper/72465.html#ixzz2oCpqUrW522-12-2013

------------------ மின்சாரம் அவர்கள் 22-12-2013 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

22.12.13

இந்து மதத்தில் ஸ்தாபகனோ, மத நூலோ, வயதோ உண்டா?- பெரியார்

இன இழிவு ஒழிய...

தோழர்களே, பகுத்தறிவுக் கழகம் என்பது மக்கள் எல்லோருமே சேர்ந்ததுதான் பகுத்தறிவாளர் கழகம் மனிதன் என்றாலே பகுத்தறிவுவாதிதான்; அப்படி இருக்கும்போது பகுத்தறிவாளர் கழகம் என்று வைத்துக் கொண்டு அதில் சிலர் மட்டும் உறுப்பினர் களாக இருப்பது என்றால் அதில் பங்கு பெறாதவர்களுக்கு என்ன என்று பெயர்? அவர்கள் எல்லாம் பகுத்தறிவற்றவர்களா?

மனிதன் எனப்படுகிறவன் கூடுமான வரை எல்லாக் காரியங்களிலும் பகுத்தறிவுவாதி யாகத்தான் இருந்து வருகிறான். ஆனால், கடவுள் - மதத் துறையில் மட்டும் பகுத்தறி வற்றவனாக வாழ்கிறான். இந்தத் துறையில் சிந்திப்பதைப் பாவம் என்றே ஆக்கி விட்டதால் மனிதன் சிந்திக்கப் பயந்து விட்டான்.

திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர்கள், தி.மு.க. தோழர்களிலே குறிப்பிட்ட பகுதியினர் இவர்களைத் தவிர, மற்ற அத்துணை பேரும் நமது மதப்படி, சாஸ்திரப்படி, இந்து சட்டப்படி எல்லோரும் சூத்திரர்கள்தானே. பார்ப் பனர்க்கு வைப்பாட்டி மக்கள் தானே; இதை இல்லை என்று எவனாவது நிரூபித்தால் தலை வணங்கி ஏற்றுக் கொள்கிறேன்.

முதன்முதலாக நமக்குத் தேவை எல்லாம் நமது இழி ஜாதித் தன்மை ஒழிய வேண்டிய தாகும். இதற்காகத் தான் கடந்த 50 ஆண்டு காலமாக இயக்கம் நடத்தி வருகின்றேன்.

எங்கள் கழகத்தைத் தவிர, இந்த மனிதத் தொண்டுக்கு பாடுபடுகிறவர்கள் எவன் இருக்கிறான்? அரசியல் கட்சிக்காரன் கவலை எல்லாம் சட்டசபைக்குச் சென்று பொறுக்கித் தின்பதுதானே!

இந்த கம்யூனிஸ்டுக்காரனைத் தான் எடுத்துக் கொள்ளுங்களேன். அவன் வாயிலே கூட ஜாதி ஒழிக என்று வராதே! காந்தியைத்தான் எடுத்துக் கொள்ளுங்களேன் - அந்த ஆளும், ஜாதி ஒழிய வேண்டும் என்று பாடுபடவில்லையே! நாங்கள் பாடுபட்டு வந்த காரணத்தால்தான் இன்றைக்குப் பார்ப்பான் நம்மைப் பார்த்து சூத்திரன்' என்று சொல்ல முடியாத நிலைமை உண்டாகி விட்டது.

எதிரியின் வாயை அடைத்து விட்டோம். இன்றைய நிலைமை என்ன என்றால் நாம் இழி ஜாதி என்பதை நாமேதான் ஏற்றுக் கொள் கிறோம். இனி நம் ஆட்களோடுதான் போராட வேண்டியிருக்கிறது.

பார்ப்பானை இன்றைய தினம் ஒழித்தே கட்டி விட்டோம். இனி அவன் தலை எடுத்து நம்மை ஆட்டிப் படைப்பது என்பது கனவிலும் கிடையாது. அவன் ஒழிந்தே போய்விட்டான்.

நம்ப ஆட்கள் அவனுக்குக் காட்டிக் கொடுத்து இடம் தந்தால்தான் உண்டு. இன்றைக்கு பார்ப்பான் மனித சமுதாயத்தில் தீண்டத்தகாதவனாகி விட்டான். எங்களுக்கு விகிதாசாரம் தேவை என்று கூப்பாடு போடுகிற அளவுக்கு பார்ப்பான் நிலைமை கேவலமாகி விட்டது.

நாங்கள் வகுப்புவாரி பிரதிநிதித்துவ உரிமை கேட்டபோது, இது வகுப்புத் துவேசம் என்று சொன்ன பார்ப்பான் இன்றைக்கு அவனே தங்களுக்கு வகுப்புவாரி உரிமை வேண்டும் என்கிறான்! நிலைமை என்ன ஆயிற்று என்றால், இன்றைக்கு உயர்நீதி மன்றத்திலே ஒரு ஆதிதிராவிடன் நீதிபதி கீழே இருக்கிற பார்ப்பன வக்கீல் எல்லாம் அவனைப் பார்த்து ஓ! மை லார்டு' என்கின் றான்! நிலைமை எவ்வளவு மாறி இருக்கிறது!!

இன்றைய தினம் நமது தொண்டால் சமுதாயத்தில் பலன்கள் பெருகி இருக்கிறதே தவிர, வெற்றி பெற்று இருக்கிறதா என்றால் அதுதான் இல்லை. இதற்குக் காரணம் நாமேதான்.

கோயிலுக்குள் செல்கிறாயே, கம்பிக்கு வெளியே நின்று கொண்டு இருக்கிறாயே - கர்ப்பக்கிரகத்திற்குள் உன்னால் நுழைய முடியவில்லையே! காரணம் - நீ சூத்திரன் என்பதால் தானே! உன்னை சூத்திரன் என்று ஒப்புக் கொண்டு எதற்கு அந்தக் குழவிக் கல்லு கோயிலுக்குப் போக வேண்டும்?

உலகத்திலே இருக்கிற மதங்களிலேயே ஆதாரமற்றதும் தெளிவற்றதுமான ஒருமதம் இருக்கிறது என்றால் அது இந்த இந்து மதம்தானே!

கிறித்தவனுக்கோ, இஸ்லாமியனுக்கோ வரலாறு, மத நூல்கள் ஒழுங்காக இருக்கின் றனவே! உன் இந்து மதத்தில் ஸ்தாபகனோ, மத நூலோ, வயதோ உண்டா? இந்து மதத் திற்கு ஆதாரம் என்னடா என்றால் உன்னைப் பார்த்து சூத்திரன் என்று சொல்வதைத் தவிர, வேறு என்ன ஆதாரம் இருக்கிறது?
கடவுளைப் பற்றி பெரிதாக பேசுகிறார்கள். எந்தக் கடவுளிடத்தில் நீ சொல்கிற கடவுள் தன்மை இருக்கிறது? உன் இந்து மதக் கடவுள்களின் யோக்கியதையை நான்கு பெண்களை வைத்துக் கொண்டு பேச முடி யாதே! அவ்வளவு நாற்றம் அடிக்குமே! தோழர் களே, உங்களிடம் வலியுறுத்திக் கூறுவது எல்லாம் நம்முடைய இழிவை நாமே எதிரி இல்லாமலேயே ஒப்புக்கொண்டு வாழ்கிறோம். இதற்கு நாம் ஒரு முடிவுக்கு வந்தாக வேண் டும். சும்மா வெறும் பொதுக்கூட்டங்களை போட்டுக் கொண்டு பேசிக் கொண்டே போனால் என்ன பிரயோசனம்?

இன்னும் எத்தனை நாளைக்குத்தான் நான் கத்திக் கொண்டு இருப்பேன்? எனக்குப் பின்னால் இதை எல்லாம் எடுத்து  சொல்ல எவன் இருக்கிறான்? உலகம் இருக்கிறவரை இதையே பேசிக் கொண்டுதான் நாம் சாக வேண்டுமா? நாம் என்றைக்குத் தான் மனிதராக மாற வேண்டியது?

நாம் இந்து அல்ல' என்று பத்திரிகையில் எழுதி விடுங்கள். கோயிலுக்குப் போவதில்லை என்று கூறுகிறவர்களின் பெயர்களை எல்லாம் கெஜட்டிலேயே வெளியிட வேண்டும்.

                --------------------------14.4.1973 அன்று சீர்காழி பகுத்தறிவாளர் கழக இரண்டாம் ஆண்டு விழாவில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய அறிவுரை - "விடுதலை' 30.4.1973

காவல்துறையினர் வசூலுக்குக் கிளம்பினால்!-துப்பாக்கிகளுக்கெல்லாம் சந்தனப் பொட்டு - குங்குமப் பொட்டு

காக்கிகள் காஷாயம் ஆகலாமா?



காக்கிச் சட்டை அணிவது எதற்கு? காவல் காக்கும் தைரியசாலிகள் நாங்கள் என்று காட்டுவதற்கு கவாத்துப் பயிற்சிகள் எதற்கு? உடலையும், உள்ளத்தையும் உறுதிப்பட வைப்ப தற்கு!
முடி வெட்டி இருப்பதைப் பார்த்த போதே கூறி விடலாம். இவர் காவல் துறையைச் சேர்ந்தவர் என்பதை; அவர்கள் எடுப்பாக இருக்க வேண்டியவர்கள்; பார்த்த மாத்திரத்திலேயே அந்தக் கம்பீரத்தைக் கண்டு மதிக்கத் தோன்ற வேண்டும்.
விதிமுறைகளையும், சட்டத் திட்டங்களையும் காக்கும் வேலிகள் என்று கருதப்பட வேண்டியவர்கள்.
காவல்துறையினர் இப்பொழுதெல்லாம் அப்படித்தான் இருக்கிறார்களா?
கையில் மந்திரக் கயிறுகள் கத்தைக் கத்தையாக - வண்ண வண்ணமாக!
நெற்றியிலே திருநீற்றுப் பட்டை - குங்குமம் சகிதம். அய்யப்பன் சீசனிலோ கேட்கவே வேண்டாம் கழுத்து நிறைய மணிமணியான கொத்துக்கள்.
காவல் நிலையம் அரசு நிலையம் தானே.. மதச் சார்பற்ற தன்மை கொண்ட அரசமைப்புச் சட்டத்தில் நுணுக்கங்களைக் கண்ணிமையாகக் காக்க வேண்டிய பொறுப்புகள் அவர்களுடையதுதானே?
போய் பாருங்கள், ஒவ்வொரு காவல் நிலையத்திலும்; கடவுள் கடவுளச்சிப் படங்கள் அலங்கரிப்பது ஒருபுறம் இருக்கட்டும்! கோயிலே கட்டி வைத்திருக்கிறார்களே! அந்தக் கோயிலை அவர்கள் பணத்திலா கட்டுகிறார்கள்? வசூல்! வசூல்!!
அரசு ஊழியர்கள் வசூலில் ஈடுபடலாமா? அதுவும் காவல்துறையினர் வசூலுக்குக் கிளம்பினால், பொது மக்கள் மத்தியில் மரியாதை எங்கிருந்து கிடைக்கும்?
ஆயிரம் ரூபாய் நன்கொடை கொடுத்துவிட்டு, அடுத்த நாள் ஆதாயத்துக்காக வர மாட்டானா?
ஆயுதப் பூஜை வந்தால் போதும்! சரியான வசூல், - ஏலம்கூட விடுவ துண்டு. ஒலி பெருக்கிகள் காவல் நிலையத்தில் முழங்கும்!
துப்பாக்கி களுக்கெல்லாம் சந்தனப் பொட்டு - குங்குமப் பொட்டு.
இத்தகு நடவடிக்கைகளில் ஈடுபட்ட பிறகு வீரம் விஞ்சுமா? விவேகம் கொஞ்சுமா? கோழைத்தனமான புத்தியல்லவா ஆட்கொள்ளும்.
அதனுடைய விளைவு எதுவரை சென்றிருக்கிறது தெரியுமா? குறிப்பிட்ட காவல் எல்லைக்குக் கொலைகள் அதிகம் நடந்தால், குற்றங்கள் அதிகம் நடந்தால் அதற்குரியவர்களைக் கண்டுபிடிக்க முடியாத மன நிலைக்கு ஆளாகி விடுகிறார்கள்.
உடனே பரிகாரம் பூஜை என்று ஆரம்பித்து விடுகிறார்கள். கிடா வெட்டிப் பூஜைகள் செய்கிறார்கள் யாகங்களும் நடத்துகிறார்கள்.
ஏதோ.. விளையாட்டல்ல -_ அள்ளுப்புள்ளியல்ல நாம் கூறுவது!
புதுக்கோட்டை மாவட்டம் மாத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கடந்த பல மாதங்களாக குற்றச் சம்பவங்கள் அதிகரித்தனவாம்.
கடந்த செப்டம்பர் 2ஆம் தேதி தொண்டை மாநல்லூரில் தொழிலதிபர் அழகு என்பவர் வீட்டில் 40 பவுன் நகைகள் மற்றும் சொகுசு கார் பறி போனது. அதே மாதம் காரைப்பட்டு கிராமத்தில் மனைவியை கொலை செய்த கணவன் தூக்குப் போட்டுக் கொண்டு செத்தான்.
அக்டோபர் 4ஆம் தேதி செங்களாக்குடியில் மணல் கடத்தலை காவல்துறைக்குக் காட்டிக் கொடுத்த அண்ணன் தம்பிகளான ராஜேஷ், கார்த்திக்  ஆகியோர் வெட்டிக் கொல் லப்பட்டனர்.
கடந்த தீபாவளியன்று நாசரேத்தில் யாகப்பன் என்பவரை அவரது மனைவியும் கள்ளக் காதலனும் சேர்ந்து வெட்டிக் கொன்றனர்.
அடுத்து மாத்தூரில் மூதாட்டியைக் கொன்று விட்டு 10 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது.
இத்தியாதி இத்தியாதி குற்றங்கள் குலை குலையாகத் தொங்க ஆரம் பித்து விட்டன.

இந்தக் குற்றங்களைச் செய்தவர் களைக் கண்டுபிடிக்க முடியாத கையா லாகாத நிலைக்குத் தள்ளப்பட்டனர். காவல்துறையினர்; மேல் அதி காரிகளோ மெமோ மெமோ என்று குடைச்சலைக் கொடுக்கின்றனர்.
இந்தச் சூழலில் மாத்தூர் காவல்துறை அதிகாரிகள் புதிதாக ஒன்றைக் கண்டுபிடித்து விட்டார்கள்; என்ன குற்றவாளிகளையா? அல்ல... அல்ல.. ஏதோ கெட்ட ஆவிகள்தான் இதற்கெல்லாம் காரணம் என்று கண்டுபிடித்தார்களே பார்க்கலாம்.
கடந்த நவம்பர் 14 நாள் நேரம் காலம் சுபமுகூர்த்தம் பார்த்து யாகம் நடத்தினார்கள். சிவாச்சாரியார்ப் பார்ப்பனர்களும் வரவழைக்கப்பட் டார்கள்; காவல் நிலைய வராண் டாவில் வாஸ்து, சாந்தி பூஜையும், காவல் நிலையத்திற்குள் அக்னி குண்டம் வளர்த்து சிறப்பு யாகமும் சும்மா ஜாம் ஜாமென்று நடத்தப்பட்டது.
காவல்துறை ஆய்வாளர் மாரிமுத்து என்பவர் புதுப்பட்டு வேட்டி, சட்டை சகிதமாக கழுத்தில் மாலையுடன் -வந்து அமர்ந்தார்.
கணபதி ஹோமம் மற்றும் நவக் கிரகப் பூஜைகளும் ஓகோ என்று நடந் தன. திருஷ்டி கழிக்க வேண்டாமா? தென்னங் கீற்றில் தீ பற்ற வைத்து காவல் நிலையத்தைச் சுற்றி வந்தனர்.
காவல் நிலையத்தின் கம்பீரத்தை இப்படி கழைக் கூத்தாடித்தனமாக ஆக்கி விட்டார்கள்.
இனிமேல் காவல்துறைக்கு ஆள் எடுக்கும்பொழுது மந்திரம் தந்திரம் தெரியுமா? வாஸ்து சாஸ்திரம் தெரியுமா என்று கேட்பதோடு நில்லாமல் அவைகளுக்குப் பரீட்சை நடத்தி அதிக மார்க்கு வாங்குகிறவர்களைத் தேர்வு செய்யலாமே!
உயரம் எத்தனை அடி? உயரத் தாண்டுதலில் எத்தனை அடி? மார்பு அளவு என்ன? மூச்சு இழுத்து விட்டால் எவ்வளவு - -_ மூச்சு விடாத போது எவ்வளவு? நூறு மீட்டர் ஓட்டம் எத்தனை நொடிகளில்? கயிறு தாவுதல் (Rupe Climbing) என்கிற தேர்வுகள் எல்லாம் இனித் தேவையில்லை.
மாறாகப் பஞ்சாங்கப் பரீட்சைகள் வைத்துத் தேர்வு செய்யலாம்.
ஒரு காவல் நிலையத்தில் காவல்துறையினர் என்றால் வெறும் இந்துக்கள் தானா? கிறித்துவர் இருக்க மாட்டாரா? முஸ்லிம் இருக்க மாட் டாரா?
கடவுள் நம்பிக்கை மத நம்பிக் கையற்ற பகுத்தறிவுவாதிகள் இருக்க மாட்டார்களா?  இது மதச் சார்பற்ற அரசு அல்லவா! அப்படி இருக்கும் பொழுது குறிப்பிட்ட மதம் சார்ந்த யாகங்களை, சடங்குகளை நடத்தலாமா? சட்டப்படி இது சரியானது தானா?
உச்சநீதிமன்றம் வரை தீர்ப்பு வந்த தெல்லாம் இந்தக் காவல்துறை அதி காரிகளுக்குத் தெரியவே தெரியாதா?
அவ்வளவுத் தூரம் கூடப் போக வேண்டாம் காவல்துறைத் தலைமை இயக்குநர் (DGP) அண்மையில் சுற்ற றிக்கை ஒன்றைக்கூட அனுப்பியுள் ளாரே!
அதைக்கூட மதிக்கத் தயாராக இல்லையா?
காவல்துறை வளாகங்களில் வழிபடும் இடங்களான கோயில் தேவாலயம் (சர்ச்சு) மசூதி ஆகியவை இயங்கி வருகின்றன என்கிற தகவல் எங்கள் கவனத்துக்கு வந்துள்ளது.
காவல்துறையில் உள்ள அனைத்து அதிகாரிகளுக்கும், அறிவுறுத்தப்படுவது என்னவெனில் இத்தகைய வழிபாட்டுத் தலங்களை அனுமதிக்கக் கூடாது என்பதாகும்.
- (ஓம்) கே. இராமனுஜம் காவல்துறைத் தலைமை இயக்குநர்

வேலியே பயிரை மேயலாமா?
காவல் துறையின் இத்தகு நடவடிக்கைகளை எதிர்த்து நீதிமன்றம் சென்றால் அவர்கள் நிலை என்ன? கூண்டிலேறியல்லவா தலைகுனிந்து பதில் சொல்ல நேரிடும்!
யாகத்தினால் குற்றங்களைத் தடுக்க முடியும் என்றால் காவல்நிலையங் களையெல்லாம் கோயில்களாக்கி, அங்கே பூசாரிகளை நியமித்து விடலாமே!
கொலைகளுக்குக் காரணம் கெட்ட ஆவி என்றால், கொலை குற்றவாளி நான் என்ன செய்யட்டும்! கெட்ட ஆவிதான் என்னைக் கொலை செய்ய வைத்தது என்று சொன்னால் ஏற்றுக் கொள்வார்களா?
என்ன செய்வது! மதச் சார்பற்ற அரசின் முதல் அமைச்சரே யாகம்- -_ யோகம் -_ கோயில் என்ற வட்டத் துக்குள் சிக்கி இருப்பதால் அரசன் எவ்வழி குடிகளும் அவ்வழி என்று நினைத்துவிட்டதோ காவல்துறை!
---------------------------------------------------- மின்சாரம் அவர்கள்  21-12-2013 “விடுதலை” ஞாயிறுமலரில் எழுதிய கட்டுரை

21.12.13

வகுப்புரிமைப் போராட்டம் - பேராசிரியர் க. அன்பழகன்

வகுப்புரிமைப் போராட்டம் (கம்யூனல் ஜி.ஓ.)
"92ஆம் அகவையில் அடி எடுத்து வைக்கும் திமுக பொதுச் செயலாளர் பேராசிரியர் க. அன்பழகன் அவர்களால் எழுதப்பட்டு முதல் பதிப்பாக 1951ஆம் ஆண்டில் வெளிவந்தது, வகுப்புரிமைப் போராட்டம் என்ற நூல். 2013ஆம் ஆண்டில் அந்நூலை திராவிடர் கழகம் வெளியிட்டுள்ளது. அதில் இடம் பெற்ற ஒரு கட்டுரை தீர்ப்புக்குப்பின்! அது இங்கே வெளியிடப்பட்டுள்ளது.

                                -------------------------------------------------- பேராசிரியர் க. அன்பழகன்

சில உரையாடல்கள்:

கல்லூரி மாணவர்கள் சிலர்:-

டேய், கிட்டு நம்மளவா எதை எடுத்தாலும் ஜெயந்தாண்டா, பார்த்தியோன்னோ, கம்யூனல் ஜி.ஓ. மண்ணைக் கவ்விண்டு போயிட்டுது!

ஆமாண்டா, ரகு, அதான் அந்தப் பசங்கள்ளா, ஒரே ஆத்திரமா, கும் பலா கூடிக்கூடிப் பேசிண்டிருக்கா!

நோக்கு, ஏன்டா, அதுபற்றிக் கவலை. அந்தப் பசங்களையெல்லாம் நம்ம பிரின்ஸ்பால் நோட் பண் ணிக்காமலா இருப்பார்? அதிருக் கட்டும், வர்ற வருஷத்திலேருந்து, நம்மப் பிடிச்ச கலி ஒழிஞ்சுது. ஜாம், ஜாம்னு மெடிக்கல், இன்ஜினீயரிங் காலேஜ்லேயெல்லாம் நாமே சேர்ந்துடலாம்.

அடுத்த வருஷம் இருக்கட் டுண்டா, இப்பவே நம்ம ஃபிரண்ட்ஸ் Friends எல்லாம் நம்மையே ஒரு மாதிரி - பார்க் கிறாளேடா?

அந்தப் பசங்க இப்ப அப்படித் தாண்டா, கோபமா இருப்பா, நாலு நாள் ஆனா, அப்புறம் அதெல்லாம் அடங்கிடும். நீ ஏண்டா பயப்படுறே? வாடா, அய்ஸ்கிரீம் சாப்பிட்டு வரலாம்.

அரசாங்க அலுவலகத்தில்... உத்தியோகஸ்தர்கள் இருவர்:-

என்ன ஓய், வேம்புவா? வாரும், ஒரே குஷிதான் போலே இருக்கு! நம்மளவா, வெகுநாள் மனோபீஷ்டம் நிறைவேறிப் போச்சோல்லியோ?

ஆமாம், ஆமாம். சாம்பு சாஸ் திரிகளே! அவா, அதோட விட்டுடு வாண்ணு தோணல்லியே, அப்பீலுக் குப் போவாப் போல இருக்கே!

போனாதான், என்னங் காணும்? நம்ம அல்லாடியின் திறமை, சாமர்த் தியம், எல்லாம் எங்கே போயிடும் ஓய்! இப்பதான் அல்லாடியின் புத்தி தீட்சண்யட்தை தேசமே தெரிஞ்சுடப் போகுதுங்காணும்.

அதிருக்கட்டும். இப்ப நம்மள வாளை, ஊரெல்லாம் தூஷித்துப் பேசறதை, நெனச்சாத்தான், கொஞ்சம், என்னமோ போல இருக்கு ஓய்!

என்னங்காணும் வேம்பு! அதைப் பார்த்தே அசந்துட்டீர் போல இருக்கே! இப்படிப்பட்ட நேரத்திலே மனோ தைரியத்தை இழந்துடு வாளோ? அவாள்ளாம் இப்ப, அப் படித்தான் ஆத்திரமா கொதிச்சிண் டிருப்பா. இப்பத்தான் நாம கொஞ்சம் ஜாக்கிரதையா, ஏதோ ஒண்ணும் அறியாதவா மாதிரி சந்தோஷத்தை வெளிக்குக் காட்டாம நடந்துக்கணும்.

அதென்னமோ, அவன்களைப் பார்த்தா, காந்தி செத்தப்ப முகத்தை வைச்சிண்டிருந்தான்களே, அப்ப டீண்ணா இருக் கானுங்க.

வருத்தம் இருக்காதோ அவாளுக்கு. இது ஒண்ணுதான் அவா வாழ வழியா இருந்தது. அதுவும் போச் சுண்ணா, அய்யோடாண்ணு குந்த வேண்டியதுதானே? இருந்தாலும், காந்தி செத்தப்ப மஹாராஷ்டிரத்திலே யெல்லாம் நடந்துகிட்டான்களே, ஆத்திரமா, அப்படி நடந்துக்க மாட் டாங்காணும். இவா தென்னாட்டுக் காராளோல்லியோ, நாசகாரியத்திலே பிரவேசிச்சுட மாட்டாங்காணும்!

என்ன இருந்தாலும், ஆத்திரம் வந்தா? அப்புறம் நம்ம கதி?

அதாங்காணும், இப்ப ஜாக் கிரதையா இருந்துட்டம்ணா, அப் புறம் நம்மபாடு வேட்டைதான். கொஞ்ச நாளிலே அதுங்கள்ளியே சிலது, இதையெல்லாம் மறந்துட்டு வாலைக் குழைச்சிண்டு, நம்ம பின்னாலியே வரும் ஓய்! அது வரையிலே தான் நாம நிஷ்காமிய கருமி மாதிரி நடந்துக்கணும் ஓய். அப்புறம் நம்ம அல்லாடிக்குக் கோயிலே கட்டினா கூட, அவாளே பொருளுதவி பண்ணுவாங்காணும்.

சரி, சரி, மணி 4 ஆச்சு, வாரும் ஆத்துக்குப் புறப்படலாம்.

பத்திரிகாலயத்தில்...

ஆசிரியரும், உதவி ஆசிரியரும்:-

என்ன, மிஸ்டர் சீனு! இது ரொம்ப ரொம்பத் தொல்லை யான்னா போச்சு. கம்யூனல் ஜி.ஓ. சட்டப்படி செல்லாதுண்ணு தீர்ப்பு கிடைச்சதிலேருந்து ஊரெல்லாம் ஒரே ரகளையான்னா இருக்கு.

ஆமாம், எடிட்டர் சார்! நியூஸ் வேறே அதைப்பத்தியே ஏராளமா வந்துண்டே இருக்கு. நாம்தான் இருட்டடிப்புச் செய்தாகுணுமே? மற்றவா பத்திரிகையிலே மட்டும் கொஞ்சமாவது வெளியிட்டுடுவாளே? என்ன செய்றதுண்ணு யோசிச்சிண்டு இருந்தேன்.

அந்த நியூஸே ஒரு நியூசன் சான்னா போச்சு, அதைப் போடற துக்கு எடம் குப்பைக் கூடைதான் சீனு. ஆனா, நம்மளவாளுடைய  இந்த ஜெயத்தைப் பாராட்டி - ஒரு சப் லீடர் எழுதக் கூடண்ணா அதிர் ஷ்டம் இல்லாம போச்சுங்கிறதை நினைச்சாத்தான் மனசு ரொம்ப கஷ்டப்படுது!
ஏன் சார்? வழக்கம்போல, வேறொரு பிரச்சினையிலே கலந்து, தென்னாப்பிரிக்கா பிரச்சினை மாதிரி ஒண்ணுலே சேர்த்து, நம்ம கருத்தை எழுதிட்டாப் போச்சு!

நம்ம கருத்தை யாருங்காணும் கேக்கிறா? நாம வெளிப்படையா வர்றமாண்ணுதானே பாக்கிறா? இவ்வளவு காலமா எதைப் பத்தி வாரந் தவறாம எழுதி ஜெயமாச்சோ, அதையே அப்படி குழப்பினா, நம்ம பத்திரிகைக்கு ஜனங்ககிட்டே என்னா மதிப்பிருக்கும்ணு, நம்ம ஆத்துக் காரியே கேட்பாளே நாளைக்கு?

அப்படீண்ணா, தைரியமா, ஜெயத்தைப்பாராட்டி எழுதிட வேண்டியதுதான்.
ஆத்துக்காரி சொல்லுவா ளேண்ணா? சொன்னா சொல்லட் டுமே, நம்ம கிட்டத்தானே சொல் லுவா? நீர் சொல்றாப்பிலே எழு திட்டா அவ்வளவுதான், வேறே வினை வேண்டியதில்லை. நம்ம பத்திரிகையிலே பாராட்டி எழுதினா, உண்மை புரியாதவாளும் புரிஞ்சு டுவாளே! அதிலும், இப்ப அந்த இனத்தா வேறே நம்ப பத்திரிகையை ஏராளமா படிச்சிண்டிருக்கா, இப்ப இதை எழுதினா, நம்ம பத்திரிகைக்கு நாமே உலை வைச்சுண்ட மாதிரி தான்.

ஆமாம் சார், இப்பவே கிளர்ச்சி யிலே நான்பிராமின் காங்கிரஸ்காரா உட்பட எல்லோரும் ஒண்ணு சேர்ந் துட்டா! இப்ப எதை எழுதினாலும் நெருப்பிலே நெய் வார்த்தாப் பிலேதான்.

ஆமாம் சீனு, அல்லாடியைப் பாராட்டி எழுதாட்டியும் போறது, அவர் ஒண்ணும் கோபிக்க மாட் டார். அவரது சேவையையும், புத்தி தீட்சண்யத்தையும் நாம எழுதித் தானா நம்மளவா தெரிஞ்சுக்கப் போறா? இல்லாட்டி, நாம எழுதி னாத் தான், மத்தவர் நம்பப் போறாளா என்ன?

ஆமாம், ஆமாம்! நம்ம ஆபீசை நோக்கி ஆபத்து வராம இருந்தா அதுவே போதும்!

அது கிடக்கட்டும், நம்மளவா பயந்தவா பாரும்! அவாளுக்கும் ஒண்ணும் கஷ்டம் வரக்கூடாது நம்ம பத்திரிகையாலே! அதைக் கவனியும் முதல்லே.

சங்கீத சபாவில் இரு ரசிகர்கள்:-

கச்சேரி எப்படி இன்னைக்கு?

கவனிக்கல்லியே!

ஏன்? ஓய்!

கம்யூனல் ஜி.ஓ. தொலைஞ்ச விஷ யத்திலே அதே நினைவா இருந்துட் டன் ஓய். அரியக்குடி பாட்டா நுழைஞ்சுது காதிலே, அல்லாடி பேச்சுண்ணா கேட்டுண்டிருந்தது!

அட, போங்காணும், நீர் இந்த லோகத்திலேயே இல்ல போலிருக்கே. ஊரெல்லாம் நடக்கிறதைப் பார்த்தா பெரிய கஷ்டமால்ல முடியும் போலத் தோணுது, நம்மளவாளுக்கு. அந்தத் திகில்லியே - சங்கீதம் காதிலே ஏறல்லைங்காணும் நேக்கு.

ஸ்திரீகள் சங்கத்தில் இருவர்:-

ஏண்டி, சுகுணா! நீ சொன்ன படியே ஆயிட்டுதேடி, உன் வாய்க்கு சர்க்கரை தாண்டி கொட்டணும்.

போடி, போடி லீலா! முந்தி யெல்லாம், நம்மளைக் கண்டா மத்தவா, என்னா அன்பா, திருப்தியா பார்த்திண்டிருந்தா? இப்ப அதெல் லாங் காணண்டி! ஒரே துவேஷமா, கோபமா பார்க்கிறாடீ.

ஆமாண்டி, அதான் பஸ்ஸிலே டிராம்லே எல்லாங்கூட நம்மைக் கண்டதும் எழுந்திருச்சு உட்காரச் சொல்லிண்டிருந்த புருஷாகூட இப்ப இடம்தர மாட்டேங்கிறாடி, காலெல்லாம் வலியா வலிக்குதடி.

இதையெல்லாம் பார்த்தா நேக்குக்கூட, ஏண்டி இந்த வீண் விரோதமெல்லாம்ணுதான் தோன்றது! ஜாதியாம், ஆசாரமாம், எல்லாம் நமக்குத்தாண்டி விஷமா வந்துது! - நம்ம புருஷா சொன்னா கேட்கிறாளா, என்ன? அதாலேதான் இந்தக் கஷ்டமெல்லாம் நமக்கு?

* * *

இவ்விதந்தான், உரையாடல்கள் நிகழ்ந்திருக்க வேண்டும், ஆதிக்க வகுப்பார் சந்திக்கும் இடங்களி லெல்லாம்.

கல்வித் துறையில் கம்யூனல் ஜி.ஓ. செல்லாது என்ற தீர்ப்புக் கிடைத்த வுடன், அவர்களது உள்ளமெல்லாம் உவகை வெள்ளம் கரைபுரளத் தொடங்கிய அதே நேரத்தில், தென்னாட்டுப் பெருங்குடி மக்கள், கம்யூனல் ஜி.ஓ.வை இழக்க மன மின்றி, காத்து நிற்கத் தீர்மானித்து, வரிந்து கட்டி, வரிசை வரிசையாகக் கிளம்பி, வானளாவ முழக்கமிட்டு, வரிப்புலிகளெனக் காட்சியளித்தது கண்டு, ஆதிக்கவாதிகள் திகில் கொண்டு, அச்சத்திற்கும், ஆசைக்கும் இடையிலே ஊசலாடுகின்றனர் இன்று.

அவர்களுடைய மனம் ஜெய பேரிகை கொட்டுகிறது. நாவோ, அதை வெளியிடத் துடித்து விளைவை எண்ணி மென்று விழுங்குகின்றது. அவர்களது மூளை வெற்றியை விவரிக்க, புதிய புதிய தொடர்களையெல்லாம் நினைவுபடுத்துகின்றது. கைகளோ தீட்டுதற்கு அஞ்சுகின்றன, தம் எண்ணம் வெளிப்பட்டு விடக்கூடாதே என்பதால். தமது இனத்தின் வெற்றிக் களிப்பும், பூரிப்பும் வெளியே பரவினால், மாற்றினத்தின் மரமண்டைகளும் மனப்பொம்மைகளுங்கூட உண்மையை உணர்ந்து, உரிமைப் போரில் பங்கு கொண்டு எதிர்ப்புச் சக்தியை, புரட்சித் தீயாக வளர்த்து விடுவரே என்ற அச்சமே, ஆதிக்கவாதி களின் நாவையும், கையையும் ஆடா மல், அசையாமல், ஆரவார மின்றியே அடங்கிக் கிடக்கச் செய்துள்ளது.

காவலுக்கு வைக்கப்பட்டவனே நடுநிசியிலே மாளிகையிலே நுழைந்து, தலையணைக்கடியிலே இருந்த சாவிக் கொட்தையும் எடுத்து, இரும்புப் பெட்டியையும் திறந்து பொருள் குவியலை அள்ளி மடியில் கட்டித் திரும்புகையில் கால் இடறியதால் செம்பு உருண்ட சப்தம் கேட்டு வீட்டுக்குரியவன் விழித்துக் கொண்டு, காவல்காரனைக் கூப்பிட, அவனோ, அதே இரும்புப் பெட்டிக்குப் பின் னால் ஒளிந்து கொண்டுள்ளதைப் போன்றுதான், இன்று வாய்மூடி மவுனிகளாக, இமை மூடாக் கண்ணினராகக் காட்சியளிக்கின்றனர் - ஆதிக்கவாதிகள்.

இந்துவும், மித்திரனும், கல்கியும், விகடனுங்கூட இந்த வெற்றி குறித் துப் பாராட்டி எழுத முன்வரவில்லை யெனில், அவர்களது திகைப்பு - குற்றம் செய்த உள்ளம் குறுகுறுக்குந் தன்மை தெளிவாகாமற் போகாது.
அவர்களது தந்திரமாகிய திறமை பொதுமக்களின் ஆத்திரத்தைக் கிளறிவிடாமல் தப்பித்துக் கொள்ள உதவுகிறது. உதவட்டும், வரவேற் கிறோம். ஆனால், அதே திறமைதான் - சூழ்ச்சியோடு கூடிய, சுயநலப் பேராசை எண்ணந்தான் அவர்களை - பொதுமக்களின் நிரந்தர வெறுப்புக்கு ஆளாக்கி, வருங்கால வாழ்வையே இழக்கச் செய்யக் காரணமாகும் என்பதை அவர்கள் உணர்ந்ததாகத் தெரியவில்லை.

எப்படி உணர முடியும் அந்த மேதைகளால்? அவர்கள்தான், பரம்பரை பரம்பரையாகப் பல நூறு ஆண்டுகளாகத் தந்திர மந்திரத் தினாலேயே, சோம்பேறிச் சுக வாழ்வைட் தேடிக் கொண்டவர் களாயிற்றே? பிறர் கஷ்டம் உணராத உயர்ஜாதிக்காரர் ஆயிற்றே? அப்படிப்பட்டவர்கள், மக்களாட்சிக் காலமாகிய இப்பகுத்தறிவு நூற்றாண் டில், அதே திறமைதான் தாம் வீழக் காரணமாகிவிடும் என்பதை எங்கே உணரப் போகிறார்கள்? அந்தட் தெளிவு எப்படிப் பிறக்கும் அகம் பாவப் பிறவிகளுக்கு? ஆதிக்கவாதி களின் திறமை, வழக்கு மன்றத்தை நாடி, சமூக நீதிக்கு வழிவகுத்த கம்யூனல் ஜி.ஓ. இந்த அரசியல் சட்டப்படிக் கல்வித் துறையில் செல்லத்தக்கதல்ல என்ற உயர்நீதி மன்றத் தீர்ப்பைத் தேடித் தந்தவுடன், பொதுமக்களிடம் ஏற்பட்டுள்ள ஏமாற்றமும், அவநம்பிக்கையும் சொல்லுந் தரத்தது அன்று.

ஜூலை 27-க்குப் பின்!

உயர்நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கிய நாளான 27.07.1950  அன்று தோன்றிய அதிர்ச்சி, நாட்டு மக்களின் உள்ளங்களிலே ஏற்பட்ட கொதிப்பு, பிற்படுத்தப்பட்டவர்களின் நெஞ்சிலே நிறைந்த சோகம், மாண வர்களின் மனத்திலே பொங்கிய குமுறல் இன்னும் ஆறவில்லை, அண்மையில் ஆறவும் வழியில்லை.

இன்றைய தமிழகம் குமுறும் எரிமலையாக இருக்கிறது. தென் னாட்டுப் பொதுமக்களின் உரிமை உணர்ச்சியும், எழுச்சியும் ஓரள வேனும், ஆள வந்தோரால் மதிக் கப்படுகிறது என்பதற்குச் சில அறிகுறிகள் காணப்படுவதாலேயே குமுறும் எரிமலை புதைந்த படி உள்ளது, கனல் கக்கவில்லை; புரட் சிக் குழம்பு நாட்டில் பரவவில்லை, ஆதிக்க வெறியர்களை ஆபத்து இன்னும் அணைக்கவில்லை.

ஆனால், இந்த நிலைக்குக் கார ணமான தீர்ப்பைப் பெறுவதற்குட் தான் எவ்வளவு முயற்சி, என்னபாடு? அடடா, எவ்வளவு பெரிய மனிதர் களின் - அதிமேதாவிகளின் புத்திச் செலவு? சட்டத்தின்படி சரியென்றே ஒப்புக்கொள்ளினும், சமூக நிலைமைகளின்படி -

நியாயமில்லாத, கல்வித் துறையில் கம்யூனல் ஜி.ஓ. செல்லாது என்ற இந்தத் தீர்ப்பைப் பெறத்தானா இவ்வளவு காலமும், முயற்சியும் செலவாக வேண்டும்? என்ன பலன் கண்டார்கள்? மலையைக் கெல்லி எலியையாவது பிடித்திருக்கிறார்களா? என்றால், எலி இருந்திருக்க வேண்டிய வளையில் பாம்பல்லவா படமெடுத்துச் சீறு வதைக் காண்கின்றனர்!

பொதுமக்களோ, பிற்படுத்தப் பட்டவர்கள் எல்லோரும், ஜாதி, மதம், கட்சி முதலிய வேறுபாடுகள் எதையும் விலக்கி, சமூக நீதியை நிலைநாட்ட, உறுதிகொண்டு ஒன்று பட்டுவிட்டனர். மாணவர்களோ எத்தகைய விலைகொடுத்தும், சமூக நீதியை நிலைநாட்டத் தீர்மானித்து விட்டனர். வாலிபர்கள் போருக்குத் தயாராகி விட்டனர். இந்நிலையைக் கண்ட பின்பே, அரசியல் சட் டத்தையே மாற்றியமைக்க வேண்டி நேரிட்டாலும், மாற்றியமைத்தேனும், இன்னும் சிறந்த வடிவிலேயே சமூக நீதி நிலைநாட்டப்பட்டுத் தீருமே தவிர, சரியவிடப்பட மாட்டாது என்ற உறுதி பிறக்கின்றது நமக்கு.
 
----------"விடுதலை” ஞாயிறுமலர் - 21-12-2013

20.12.13

கம்பன் கவிதைகளிலே காமரசம் பற்றி...அன்று அண்ணாவிடம் கேட்ட ???

(திராவிட நாடு ஏட்டிலே அறிஞர் அண்ணா அவர்கள் கேள்வியும் பதிலும் என்ற பகுதியிலே வாசகர்கள் கேட்ட கேள்விகளுக்கு விடுத்த முக்கிய பதில்கள். ஆதாரம்: 21.11.1947, திராவிட நாடு)

கல்லூரி மாணவர்கள், மக்கள் மனதிலே பதிய  பகுத்தறிவு இயக்கத்துக்கு எந்த வகையில் பணியாற்ற முடியும்?

கட்சிமாச்சரியங்களை மறந்து, பகுத்தறிவு பரவ வேண்டும் என்ற ஒரு நோக்கத்துக்காக கூடி, நமது நாட்டு மக்களின் வாழ்க்கையிலே ஊறிப்போயுள்ள பழைய, பயனற்ற, கேடுதரும், எண்ணங்களை அகற்றும் வகையிலே பேசுவது, பாடுபடுவது, ஓவியங்கள் தீட்டுவது, பொருட் காட்சிகள் நடத்துவது, நாடகங்கள் நடத்துவது, விஞ் ஞானிகள், வீரர்கள், அறிஞர்கள் ஆகியோரின் வாழ்க்கை வரலாறுகளை எடுத்துக் கதை வடிவில் கூறுவது, உலகிலே எங்கெங்கு, என்னென்ன வகையான மூட நம்பிக்கைகள் இருந்து வந்ததை அவைகள் எப்படி அகற்றப்பட்டன என்பவற்றை விளக்குவது - இவ்விதமாகப் பணியாற் றலாம் - பலன் உண்டு.

கூடுமானவரையில் நடைமுறை அரசியல் பூசல்களிலிருந்து ஒதுங்கியிருந்து நடத்துவதே நல்லது. பெரிய நகர்களிலே நடத்தப்படுவதைவிட, கிராமங்களில் இந்தப் பிரச்சாரம் நடைபெற வேண்டும். எழுச்சியூட்டும் சொற்பொழிவு விழாக்களாக மட்டுமே அமையாமல் மக்கள் மனதிலே பதியக் கூடிய விதமான உரையாடல்களாக அமைவது நல்லது.

கம்பன் கவிதைகளிலே காமரசம் பற்றி...

கம்பன் கவிதைகளிலே காமரசம் அதிகம் என்று கண்டித்து எழுதிவிட்டு, ரோமாபுரி ராணிகள் என்ற புத்தகத்தில் காமரசத்தைக் கலக்கியது சரியா?

சரியல்ல, கலக்கி இருந்தால்! காமரசக் களஞ்சியம், அந்த அரசிகளின் வாழ்க்கை அதன்பயனாக அரசு அழிந்தது என்பதை முன்னுரையில் கூறிவிட்டு, வெறும் போக போக்கியத்தில் மிருக இயல்புடன் புரள்வோர் நாடாள்வோராக இருக்கக்கூடாதென்று எச்சரிக்கவே இப்புத்தகம் தீட்டுகிறேன் என்பதை விளக்கினேன். எனவே காமரசத்தைக் கலக்கிய குற்றம் என்பாலில்லை.



அது போலவே, அந்த ரசத்தைப் போற்றியதாகவோக, பாராட்டுவதாகவோ, அதனை முன் மாதிரியாகக் கொள்ள வேண்டுமென்று சிபாரிசு செய்வதாகவோ என்மீது குற்றம் சுமத்தக்காரணம் இல்லை. குற்றம் ஏதேனும் சுமத்தலாம் என்று தேடிடும் போது இது மட்டுமா இன்னும் உருவற்ற பலனற்ற பல கிடைக்கும் தேவையுள்ளோர் அந்தத் திருப்பணியில் தாராளமாக ஈடுபடட்டும்.
நிற்க! ரோமாபுரி ராணிகள், கம்பன் ஏடுபோல, கடவுள் கதை அல்ல, பஜனை ஏடல்ல, புண்ணிய கதையாகவும், பிறவிப் பெருங்கடலைக் கடக்க உதவும் பெரும் துணையாகவும், பெருமானின் பொருளைப் பெற்றுத் தரவல்ல புனித ஏடாகவும் கூறப்படும் இராம கதையிலே ஏன் காமரசம் கலக்கினார் கம்பர் என்பது என்கேள்வி.

அந்தக் கேள்வியும் கண்டனமும், நான் ரோமாபுரி ராணிகள் வெளியிட்டதால் பயனற்றுப் போய்விடாது, பழி கூறு படலத்துக்குப் பரபரப்புடன் சிலபல தேடுவோர், என்மீது பழுதையை வீசிவிட்டு, பாம்பை வீசிவிட்டோம் என்று களிப்பதிலே, எனக்கோர் நஷ்டமும் இல்லை. அவர்கள் ஆசையும் தீர்ந்து போகட்டுமே, நமக்கென்ன நஷ்டம், என்ற கைவல்ய வாக்கியந்தான் கவனத்திற்கு வருகிறது.

வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும்?

வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும், என்று பகுத்தறிவுவாதிகளாகிய நீங்கள் கருதுகிறீர்கள்?

மாயப் பிரபஞ்சம் - நீர்மேற்குமிழி என்பன போன்ற கருத்துக்களை விரும்பாத பகுத்தறிவாளர்கள், வாழ்க் கையைப் பற்றிக் கொண்டுள்ள கருத்து, வெறும் மிருக இச்சை பூர்த்திதான் என்ற தப்புப் பிரச்சாரம் பரவி இருக்கம் இந்நாளில், இந்தக் கேள்வி கேட்கப்பட்டது பற்றி மிக மகிழ்ச்சி - உண்மையை விளக்க ஓர் வாய்ப்பு ஏற்படுவதால்.

இவ்வுலகில் உயிரோடு இருப்பது மட்டுமல்ல வாழ்க்கை - கல்வி கேள்விகளில் சிறந்து, மக்களை மக்களாக மதித்து நடந்து, சோம்பித்திரியாது சுறுசுறுப்பாக உழைத்து, செல்வத்தைப் பெருக்கி, தேவைக்கேற்ற அளவு பெற்று, இன்பம் பயக்கும் பல சாதனங்களையும் கண்டு வாழ்வதுதான் - மனித வாழ்வின் முடிந்த லட்சியம் என் பதை நாம் ஒவ்வொருவரும் தீர்மானித்துக் கொள்ள வேண்டும்.

இந்த உயர்ந்த வாழ்வு நினைத்த மாத்திரத்தில் நினைப்புக் கொள்வதால் மட்டும் சித்தியாகிவிடாது. எடுத்து விளக்குவது முக்கியமாயினும், வெறும் விளக்க உரையால் மட்டும் சாத்தியமாகக் கூடியதென்று இந்த லட்சியத்தைப் பெறுவதற்காக நம்மில் பலரின் சுகபோகங்களை - கிடைத்தற்கரிய உயிர்களைப் பணயம் வைக்க வேண்டும்.

ஒரே நாளில் வெற்றிப் பெற்று விடக் கூடியதுமன்று. இந்த இன்ப வாழ்வைப் பெறமுடியாமல், மனிதனின் அறி வையும், முயற்சியையும் குலைப்பதற்கு அவனுக்குப் பூட்டப்பட்டுள்ள விலங்குகளோ அனைத்தும் வன்மை மிக்கது.  ஒவ்வொன்றாகத் தான் நொறுக்க முடியும் ஒரு விலங்கு ஒடிந்ததும், எதிர்பார்த்த லட்சியம் கூடவில் லையே என  மனச் சோர்வுக்கு இடங்கொடாமல் மேலும் மேலும் விலங்கொடிக்கும் வேலையில், முன்னிலும் மும்முரமாகப் பங்கு கொள்ள வேண்டும்.

இத்தகைய பணி எதிர்பார்த்ததைக் காட்டிலும் குறுகிய கால அளவில் முடிவுற்றாலும் முடியலாம் - நாள் கூடினாலும் கூடலாம் எதற்கும் இப்போராட்டத்தில் சம்மந்தப் பட்டுள்ள சக்தி - எதிர்ச் சக்தியின் பலத்தைப் பொறுத்திருக்கிறது.

அவதிக்குக் காரணம்

வாழ்க்கை இன்பம் சிலருக்கு மட்டுமே கிடைக்கக் கூடிய அவ்வளவு பொருள் பஞ்சம் பூமியில் இல்லை. அறிவுப் பஞ்சம் கூட அல்ல, இன்றுள்ள அவதிக்குக் காரணம் தன்னலம், பிறர் நலத்துடன் பிணைந் திருக்கிறது என்ற பேருண்மையை உணராததாலேயே, சுரண்டல் முறை வளருகிறது.
அதன் விளைவாக பெரும்பாலோர் வாழ்வு தேய்கிறது. தேயும் வாழ்வினருக்கு, எதையேனும் கூறித் திருப்தியைத் திணிக்க விரும்பும் தத்துவார்த்திகள் கிளம்பி, வாழ்க்கை வானவில் போன்றது, பொம் மலாட்டம் என்ற சில பல கூறி, வாழ்க்கையின் அடிப்படை உண்மையை மறைக்கின்றனர்.

யோசித்துப் பாருங்கள் - பெரியார்

யோசித்துப் பாருங்கள்

னிதன் தனது சமூகத்தை வஞ்சித்துப் பொருள் சேர்த்துப் `பகுத்தறிவுள்ள தனது பெண்டு பிள்ளைக்குப் பணம் சேர்த்து வைக்கவேண்டுமென்று சொல்கிறான். ஆனால், மிருகம், பட்சி ஆகியவை பகுத்தறிவு இல்லாத தமது பெண்டு, பிள்ளைகளுக்குச் சொத்துச் சேர்த்து வைக்கக் கருதுவதில்லை. தன் குட்டிகளையும், குஞ்சுகளையும் அவை தாமாக ஓடியாடும் பருவம் வந்தவுடன் தனித்து வாழ்ந்து கொள்ளும்படி கடித்தும், கொத்தியும் துரத்தி விடுகின்றன.
அவற்றைப்பற்றிய கவலையோ, ஞாபகமோ கூட அவற்றுக்குக் கிடையாது.
மனிதனின் பிறப்பு கடவுளால் என்கிறோம்; இறப்பு கடவுளால் என்கிறோம். இவ்விரண்டுக்கும் காரணமாய்க் காணப்படுவது மனிதன் நடப்பாய் இருப்பதால், அந்த நடப்பும் கடவுளால்தான் என்று சொல்ல வேண்டியதாகின்றது.

ஆகவே, மனிதனின் நடப்பையும், கடவுளால்தான் நடைபெறுகின்றது என்று சொல்கிறார்கள். மனிதனுடைய நடப்போ பெரிதும் நான் மேலே சொல்லியதுபோலவே தான் கவலையும், கொடுமையும் நிறைந்ததாய் இருந்து வருகின்றது. இப்படிப்பட்ட நடப்புக்குக் கடவுளைக் காரணமாக்குகின்றவர்கள் இதன் பயனாகிய பிறப்பு, இறப்புக்குக் காரணமாக்குகின்றவர்கள் கடவுளை மேன்மைப்படுத்தினவர்களா? அல்லது கீழ்மைப்படுத்தினவர்களா? என்று யோசித்துப் பாருங்கள்.

செல்வவான் (சோம்பேறியாய் இருந்து வாழ உரிமை உடையவன்) என்கின்ற ஒரு நிலைமை உலகில் இல்லையானால், கடவுளுக்கும், மதத்திற்கும், ஜாதிக்கும், அரசனுக்கும் உலகில் இடம் இருக்குமா? என்று யோசித்துப் பாருங்கள்.

-------------------தந்தை பெரியார் -------------"உண்மை" 14.8.1971

19.12.13

பார்ப்பனர் கூறும் ஜாதி ஒழிப்பின் ரகசியம்!



"ஹிந்து சமூகத்தில் ஜாதி, வர்ணம் வகுப்பு சம்பந்தமான வேற்றுமைகளுக்கு அங்கீகாரம் கொடுத்தலாகாது என்ற நோக்கத்தைக் கொண்டு" தோழர் (தென்னேட்டி) விஸ்வநாதம் என்பார் (இவர் ஆந்திரப் பார்ப்பனர். இட ஒதுக்கீடு அரசு ஆணை கூட்டத்தில் ஜி.ஓ. கூடாது என்று சட்ட மன்றத்தில் வாதாடிய தெலுங்குப் பார்ப்பனர் ஆவார்) இவர். சட்டசபையில் ஒரு மசோதாவைக் கொண்டு வருவதற்கு நோட்டீஸ் கொடுத்திருப்பதாக அறிகிறோம். "எந்த ஹிந்துவும் தனது பெயருடன் ஜாதியைக் குறிக்கும் வார்த்தையைச் சேர்த்துக் கொள்ளக் கூடாது என்றும், ஜாதியின் காரணமாக அணுகூலம் தேடுகிறவரோ, கொடுப்பவரோ, ஒரு மாத வெறுங்காவல் அல்லது 1.000 ரூபாய் அபராதம் தண்டனையாக விதிக்கப்படலாம் என்றும், ரிக்கார்டுகளில் ஜாதியைக் குறிக்கும் வார்த்தைகள் எடுபட்டு விட்டதாகக் கருதப்படும் என்றும், இதற்குச் சட்டத்தில் அங்கீகாரம் கிடையாது" என்றும் இம்மசோதாவில் காணப்படுகிறது.

வாசகர்கள் கீழேயுள்ளதையும் படிக்குமாறு வேண்டுகிறோம்:-

"மக்கள் பிறவியினால் உயர்வு தாழ்வு உண்டு என்ற கொள்கையை அடியோடு மறுப்பதுடன், அதை ஆதரிக்கின்ற மதம், வேதம், சாஸ்திரம், புராணங்கள் ஆகியவற்றைப் பொதுமக்கள் பின்பற்றக் கூடாது என்றும்;

வருணாசிரமம் என்ற கொடுமையான கட்டுப்பாட்டையும் சமுதாய முறையில் காணப்படும் பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர், பஞ்சமர் முதலிய ஆட்சேபகரமான பிரிவுகளையும் ஏற்றுக் கொள்ளக் கூடாது என்றும்;

மக்கள் தங்கள் பெயர்களோடு ஜாதி அல்லது வகுப்பைக் காட்டுவதற்காகச் சேர்க்கப்படும் பட்டங்களை விட்டுவிட வேண்டும் என்றும்;

ஜாதி அல்லது சமயப்பிரிவுகளைக் காட்டும் குறிகளை யாரும் அணிந்து கொள்ளக்கூடாது என்றும்;

இம்மகாநாடு தீர்மானிக்கிறது"

1929-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 17, 18 தேதிகளில் தோழர் சௌந்திரபாண்டியன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற செங்கற்பட்டு முதலாவது சுயமரியாதை மாகாண மகாநாட்டில் நிறைவேற்றப்பட்ட 5, 6, 9, 10 ஆகிய நான்கு தீர்மானங்களே மேலே நாம் எடுத்துக் காட்டியிருப்பவை.


அந்தக் காலத்தில் தோழர் விஸ்வநாதம் ஆகட்டும், அவரை ஆதரித்து இன்று பத்தி பத்தியாக எழுதும் "பாரத தேவி" ஆசிரியர் ஆகட்டும், சமுதாயப் பிரச்சனை சம்பந்தப்பட்ட மட்டில் விலாசம் தெரியாத பேர்வழிகள்; அல்லது சுயமரியாதைக்காரர்களை இதே தீர்மானங்களுக்காகக் கல்லாலும் சொல்லாலும் தாக்கிய வைதீகத்திற்குத் துணை நின்ற காங்கிரசில் கலந்தவர்கள்.

தொலையட்டும் இத்தகைய புரட்சிக் கருத்துக்களுக்கு 18 ஆண்டுகளாக விதையூன்றிய ஓர் இயக்கத்திற்கு இப்போதாவது இவர்கள் நன்றியுடையவர்களாக இருக்கிறார்களா என்றால், அதுவுமில்லை. சுயமரியாதைப் பற்றுக் கொண்ட பள்ளி ஆசிரியர்கள் மீதும் பொது மக்கள் மீதும் பாணம் தொடுக்கிறார்கள்! காரணம் மத எதிர்ப்புப் பிரசாரமும் நாஸ்தீகப் பிரச்சாரமும் செய்கிறார்களாம்! ஜாதிகளை ஒழிக்கக்கூடாது என்று மதமோ, கடவுளோ கூறுவதாக வைதீகர்கள் ஆதாரம் காட்டுவார்களேயானால், அப்போது தென்னேட்டி விஸ்வநாதம் அவ்வைதீகர்களுக்குப் பதில் கூறுவாரா அல்லது தம் மசோதாவை நழுவ விட்டு விடுவாரா? பதில் கூறுவாரேயானால் வருணாசிரம தர்மத்தை வற்புறுத்தும் பகவத் கீதையை மறுத்துக் கூறுவாரா? "தஸ்யூக்கள் (திராவிடர்கள்) தலையில் இடியைப் போடு. ஓ, இந்திரனே!" என்று கூறும் வேதத்தைத் தீயிலிட்டப் பொசுக்க வேண்டும் என்று கூறத் துணிவாரா?

"பிராமணன் சம்பளம் கொடுத்தேனும் கொடாமலேனும் சூத்திரனிடத்தில் வேலை வாங்கலாம்; ஏனெனில் சூத்திரன் பிராமணனுக்குத் தொண்டு புரிவதற்காகவே பிராமணனால் சிருஷ்டிக்கப்பட்டிருக்கின்றானல்லவா?" என்று எட்டாவது அத்தியாயம் 413- வது சுலோகத்தில் கூறும் மனுதர்ம சாஸ்திரத்திற்கு விஸ்வநாதம் என்ன பதில் கூறுவார்? அது அபத்தம், சுத்தப் பித்தலாட்டம், அயோக்கியத்தனம் என்று கூறத் துணிவிருக்குமா? அப்படிக் கூறினால் அவருடைய கூட்டுத் தோழர்களான சகஜானந்த "சாமி"யும் "சர்தார்" வேதரத்தினமும் கொண்டு வரவிருக்கும் மதக் கண்டனத் தடை மசோதாவின்படி தண்டிக்கப்படுவாரே!

தோழர் விஸ்வநாதம் முயற்சியானது உண்மையிலேயே ஜாதியை ஒழிக்கும் நல்லெண்ணத்துடன் கொண்டுவரப்படுவதாக நாம் கருதவேயில்லை. சுப்பிரமணி பாரதியார் பேரனுக்கு விவசாயக் கல்லூரியில் இடங்கிடைக்க கஷ்டமாயிருந்தது என்பதற்காகவும் திருச்சி ஹாலாஸ்யமய்யரின் மகனுக்கு மெடிக்கல் காலேஜில் இடம் கிடைக்கவில்லை யென்பதற்காகவும், அருணாசலமய்யர் (அய்.சி.எஸ்) கூட்டுறவு இலாகா ரிஜிஸ்டரார் பதவியை விட்டுப் போக வேண்டி ஏற்பட்டது என்பதற்காகவும், சென்னை கவர்னர் பதவியை தோழர் ஆச்சாரியாருக்குக் கொடுக்கக்கூடாது என்று தோழர் ஓமத்தூர் ராமசாமியவர்கள் பிடிவாதமாயிருந்தார் என்பதற்காகவும், இம்மாதிரி ஒரு மசோதாவைக் கொண்டு வருகிறாரே தவிர உண்மையில் ஜாதிகள் ஒழிய வேண்டும் என்ற எண்ணம் இவருக்கு இருப்பதற்காத் தெரியவில்லை. 

அப்படி இருக்குமேயானால் கீழ்க்கண்ட காரியங்களையும் அவர் சட்டம் மூலம் சாதிக்க வேண்டும்:-

1. எவரும் பூணூல் அணியக்கூடாது.

2. எவரும் ஜாதியைக் குறிக்கும் நெற்றிக் குறியை அணியக்கூடாது.

3. கிருஸ்தவர்களும் ஜாதிப்பட்டங்களை விட்டுவிட வேண்டும்.

4. ஆரியர்கள் திராவிடர் வீடுகளுக்குப் புரோகிதம் வைப்பதன் மூலம் தங்கள் ஜாதி உயர்வை நிலைநாட்டுவதை ஒழிக்க வேண்டும்.

5. ஆரியர்கள் கோவில் மடப்பள்ளி, மூலஸ்தானம் ஆகிய இடங்களை விட்டு வெளியேறிவிட வேண்டும்.

6. பிராமண மகா சபை, நாடார் சங்கம், முதலியார் சங்கம், வன்னியர் சங்கம், வன்னியர் சங்கம் போன்ற ஜாதிச் சங்கங்கள் எல்லாம் சட்ட விரோதமாக்கப்பட வேண்டும்.

7. ஒரே ஜாதியில் திருமணம் செய்து கொள்வது சட்டபூர்வாகத் தடுக்கப்பட வேண்டும்.

8. ஜாதியைக் குறிக்கும் பாடம் புத்தகங்கள், கதைகள், புராணங்கள், இதிகாசங்கள், மனுதர்மம், பகவத் கீதை போன்ற நூல்கள் யாவும் கொள்ளுத்தப்பட வேண்டும்; அல்லது சட்டம் மூலமாகத் தடுக்கப்பட வேண்டும்.

9. நகரங்களிலும் கிராமங்களிலும் 'அக்கிரகாரங்கள்' என்ற பெயரால் இருந்துவரும் ஆரியச் சேரிகள் காலி செய்யப்பட வேண்டும்; அல்லது அங்கு மற்றவர்களும் கலந்து குடியிருக்க வேண்டும்.

10. ஜாதி உயர்வைப் பாராட்டாமல் ஆரியர்களும் அவர்களைக் காப்பியடிக்கும் "மேல் ஜாதிக்காரர்களும்" மற்றவர்களைப் போலவே சவரத் தொழிலோ, துணி வெளுக்கும் தொழிலோ, பயிர் வேலையோ, வீடு கட்டுவதோ, வண்டியிழுப்பதோ கல்லுடைப்பதோ - எதையும் செய்ய முன்வர வேண்டும்.


இவ்வளவும் நிகழ்ந்தாலொழிய ஜாதி ஒழியாது. இவைகள் நிகழும் போது இந்து மதம் சவக்குழியில் சவக்குழியில் கிடக்கும்; அதன்மீது புல் முளைத்திருப்பதைக் காணலாம். இதைதான் சு.ம.காரர்களும் கூறி வருகின்றனர். இவர்களைத் தான் முட்ட வருகின்றன. வைதீகப் பிறவிகள். தோழர் விஸ்வநாதம் அவர்களின் ஜாதி ஒழிப்பு மசோதாவானது ஜாதி ஒழிப்பதற்குப் பயன்படவே படாது என்பதை பொது மக்கள் கல்மீது செதுக்கி வைத்துக் கொள்ளலாம். திராவிடர்கள் கண்ணில் மிளகாய்ப் பொடியைத் தூவி ஆரியர்கள் சர்க்கார் பதவிகளில் அமர்வதற்கும் ஆரிய மாணவர்கள் 20 ஆண்டுகளுக்கு முன்பு பள்ளிகளை ஆக்கிரமித்து கொண்டிருந்தது போல இனியும் ஆக்கிரமித்துக் கொள்ளவதற்குத்தான் பயன்படும்.

மேற்குறிய நம் ஆலோசனைகளை ஏற்காவிடில் இந்த மசோதவைத் திராவிடர்களாகப் பிறந்த யாவரும் எதிர்த்து மண்டையிலடித்தே தீர வேண்டும். அதையும் மீறி சட்டமாக்கப்படுமானால் அந்தச் சட்டத்தை மீறி சட்டமாக்கப்படுமானால் அந்தச் சட்டத்தை மீறி சிறைக் கூடங்களை நிரப்புவதுதான் திராவிட இனத்தில் பிறந்தவர்களின் முதல் வேலையாயிருக்க வேண்டும்.


------------------------------ தந்தைபெரியார் - “விடுதலை” தலையங்கம், 05.08.1947

18.12.13

ஆருத்ரா தரிசனக் கூத்து!

          ஆருத்ரா தரிசனமாம்


ஏடுகளை எடுத்தால் இந்த ஆருத்ரா தரிசனக் கூத்துதான் - இணைப்பு இதழ்கள் (Supplementary)  வேறு.

அச்சுப் போட்டு வெளியிடுகின்ற முதலாளிகளுக்கும் சரி, பத்திரிகை ஆசிரியர்களுக்கும் சரி - இந்தப் புராணக் கதைகள் அக்மார்க் முத்திரைப் பொய் சரக்கு என்பது வெகு நன்றாகவே தெரியும்.

ஆனாலும், நாய் விற்ற காசு குரைக்காது என்ற பழமொழியை முற்றும் உணர்ந்த (அஞ்)ஞானிகளாக இந்தக் கேடுகெட்ட தொழிலைச் செய்கின்றனர். உண்மையைச் சொல்லவேண்டுமானால், நாணயமான அரசுகள் இங்கு நடக்குமானால், மக்களிடம் பொய்யை விற்று கோணிப் பைகளில் பணத்தைத் திணித்துக் கொண்டிருக்கும் இந்தக் கூட்டத்தைக் கைது செய்து நீதிமன்றத்தின்முன் நிறுத்தவேண்டும்.

விண்ணில் 27 நட்சத்திரங்களில், திரு என்ற அடைமொழிக்கு உரியவை இரண்டே இரண்டு நட்சத்திரங்களாகும். ஒன்று திருவோணம், இன்னொன்று திருவாதிரையாம். திருவோணம் திருமாலுக்கும், திருவாதிரை நடராசருக்கும் உகந்த திருநாள்களாம். (எதிலும் சைவ, வைணவப் போட்டிகளே!).

தொடக்கத்திலேயே ஒன்றைத் தெளிவுபடுத்திக் கொள்ளவேண்டும். விண்ணில் 27 நட்சத்திரங்கள் இருக்கின்றன என்று எழுதுகிறார்களே - அப்படி எழுதுவதற்குக் கொஞ்சமாவது வெட்கப்படவேண் டாமா? விண்ணில் இலட்சசோப லட்சம் நட்சத்திரங்கள் இருக்கின்றன.

இந்தப் புராண புளியோதரை பத்திரிகை முதலாளிகளும், ஆசிரியர்களும் 27 நட்சத்திரங்கள் இருப்ப தாகக் கூறுகிறார்களே - இதைப் படிக்கும் மக்கள் எள்ளி நகையாடவேண்டாமா?

மார்கழி மாதத்தில் இந்தத் திருவாதிரை நாளில் நடராசக் கடவுள் திருநடனம் ஆடுவதுதான் இந்த ஆருத்ரா தரிசனமாம். அந்நாளில் நோன்பு இருந்து நடராஜனைத் தரிசித்தால் நல்லது நடக்குமாம்.

வருடாவருடம் இந்த ஆருத்ரா தரிசனம் நடந்து கொண்டுதான் இருக்கிறது.
பக்தர்களும் உண்ணா நோன்பிருந்து நடராஜனை வழிபட்டுத்தான் வரு கிறார்கள். நோய்கள் தீர்ந்ததா? வறுமைதான் ஒழிந்ததா? நடராஜக் கடவுள் உள்ள சிதம்பரத்திலே நோய்கள் தீர்க்கும் மருத்துவமனைகளோ, மருந்துக் கடைகளோ இருக்கலாமா? அப்படி இருந்தால் அவை நடராஜக் கடவுளை அவமதிப்பது அல்லாமல் வேறு என்னவாம்?

இந்தக் கோணத்தில் எந்தப் பக்தர் சிந்திக்கிறார் சொல்லுங்கள் பார்ப்போம்.

சிதம்பரம் நடராஜன், அய்ந்தொழிலையும் செய்யக் கூடியவராம். படைத்தல், காத்தல், அழித்தல், நிறுத்தல், விடுத்தல் இவைதான் அவன் செய்யும் அய்ந்தொழில்களாம்.

இந்த அய்ந்துத் தொழில்களையும் சிவனாகிய நடராஜன் செய்வது உண்மை என்றால், அதிலும் குறிப்பாகக் காத்தல் தொழிலை செய்வது நிசமே என்றால், மக்கள் பசி, பட்டினியில் கிடந்து உழலுவது ஏன்? நோய் நொடிகளில் கிடந்து தவிப்பது ஏன்? அப்படி என்றால், இந்தக் கடவுள் தனது காத்தல் தொழிலைச் செய்யத் தவறிய குற்றவாளி என்று ஆகிவிடவில்லையா?

இதில் உள்ள முரண்பாட்டையும் கவனிக்கத் தவறக்கூடாது.

காத்தல் தொழிலைச் செய்வது கடவுள் செயல் என்றால், அவனே எப்படி அழித்தல் தொழிலைச் செய்ய முடியும்? ஒரு பொருளை செய்தவனே, அதனை உடைத்துக் கொண்டு இருந்தால் அவனுக்குப் பெயர் கிறுக்கன் அல்லது பைத்தியக் காரன் என்றுதானே சொல்லவேண்டும்.

இதே ஆன்மீகவாதிகள் இன்னொன்றையும் சொல்கிறார்கள். படைத்தல் தொழிலைச் செய்பவன் பிரம்மன் என்றும், காத்தல் தொழிலைச் செய்பவன் விஷ்ணு என்றும், அழித்தல் தொழிலைச் செய்பவன் சிவன் என்றும் எழுதி வைத்துள்ளனர்.

ஆனால், இந்த ஆருத்ரா சங்கதியின் கதையோ இவற்றையெல்லாம் சிவன் மட்டுமேதான் செய்கிறான் என்று ஏகபோக உரிமையைச் சிவனுக்கே கொடுத் துள்ளனர்.

சிவனின் இந்தக் கதையை வைணவர்கள் ஒப்புக் கொள்கிறார்களா? என்பதைக் கேட்டுச் சொல் லுங்கள்.

அட முரண்பாடே, உன் பெயர்தான் அர்த்தமுள்ள இந்து மதமா? ஆருத்ரா விழா சிதம்பரத்தில் விசேஷம் தான். அந்த சிதம்பரம் கோவில் உரிமைப் பிரச் சினையை நீதிமன்றம்தானே தீர்க்கவேண்டியுள்ளது.

ஆருத்ரா கதாநாயகனான நடராஜன் நிலை பரிதாபமே!

பக்தர்களை நினைத்து இரங்கவும் வேண்டி யுள்ளது

                            ------------------------------------”விடுதலை” தலையங்கம் 18-12-2013


17.12.13

மாலைகளை கழற்றி எறிந்து பக்தி சனியனிலிருந்து விடுபட்ட அய்யப்பப் பக்தர் !


திராவிடர் கழக வெளியீடுகளாக இருந்தாலும் சரி, பிரச்சாரக் கூட்டங்களாக இருந்தாலும் சரி, அவற்றைக் கொண்டு சேர்ப்பது மாத்திரமே நமது வேலை; கொண்டு சேர்த்து விட்டால், அவை அவற்றின் வேலையைக் கண்டிப்பாகச் செய்தே தீரும்.

சங்கராச்சாரி யார்? எனும் தலைப்பில் திராவிடர் கழகத் தலைவர் ஆற்றிய உரை நூலாக  வெளி வந்தது; ஆங்கிலத்திலும் Saint of Sectarian என்று வெளியி டப்பட்டது. அதனைப் படித்து சிங்கப்பூரைச் சேர்ந்த தோழர் திரு டி. கோவிந்தசாமி என்பவர்  உங்கள் நூல் என் கண்களைத் திறந்துவிட்டது (Your Book has Opened My Eyes) என்று மின்னஞ்சல் மூலம் மனந்திறந்த மடல் ஒன்றை அனுப்பினாரே! (9.8.1997).

புதுவை பெரியார் பெருந் தொண்டர் மறைந்த கனக லிங்கம் அவர்களின் தந்தை யார் பசுவ லிங்கம் என்ற பெரியவர் தந்தை பெரியாரின் உரையைச் செவி மடுத்து, நீண்ட காலமாக தான் அணிந்து வந்த தங்கத்தி னாலான சிவலிங்கக் கொட் டையைத் தூக்கி எறிந்தாரே! மரணத்துக்குப்பின் தன் உடலை மருத்துவமனைக்கு ஒப்படைக்கும் அளவுக்கு அவர் உள்ளத்தைத் தந்தை பெரியாரின் உரை பக்கு வப்படுத்தியதே!

இதே போல எத்தனை எத்தனையோ  நிகழ்வுகளை எடுத்துக் காட்ட முடியும்!

கரூரிலிருந்து விடுதலை செய்தியாளர் தோழர் அலெக்ஸ் ஒரு செய்தியை அனுப்பியுள்ளார். கரூர் மாவட்டம் வெள்ளியணையில் மூடநம்பிக்கை ஒழிப்புப் பிரச்சாரப் பொதுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கழகச்சொற்பொழிவாளர் மானமிகு இராம அன்பழகன் உரையாற்றினார். மூட நம் பிக்கைக் கருத்துக்களை நகைச்சுவையுடன், பாடல்கள் மூலமாகவும் வெளிப்படுத் தினார்.

அந்தக் கூட்டத்தை அய்யப்பப் பக்தர் (அதற்கே உரிய உடையுடனும், மாலையுடனும்) ஆர். அண்ணாதுரை என்ற தோழரும் கேட்டுக் கொண்டி ருந்தனர்.  கழகச் சொற்பொழிவாள ரின் உரையைச் செவி மடுத்த அந்த  அய்யப்பப் பக்தர், தான் கழுத்தில் அணிந்திருந்த மாலைகளையெல்லாம்  கழற்றி எறிந்து கழகப் பேச்சாளர் மானமிகு இராம. அன்பழகன் அவர்களின் கைகளைப் பிடித்துக் குலுக்கி மகிழ்ச்சியைத் தெரி வித்ததுடன் இன்று முதல் இந்தப் பக்தி சனியனிலி ருந்து விடுபட்டேன் என்று கூறியுள்ளார்.

இதற்கு முன்புகூட புதுக் கோட்டை தோழர் மானமிகு தருமராசன் அவர்களும்கூட கழகப் பிரச்சாரத்தைக் கேட்டு தான் அணிந்திருந்த அய்யப்பப் பக்தருக்குரிய அடையாளமான மாலையைக் கழற்றி எறிந்து அய்யப்பன் கறுப்புடைக்குப் பதிலாகக் கழக கறுப்புடை அணிய தலைப்பட்டு, இன்று புதுக் கோட்டை ஒன்றிய திராவிடர் கழகச் செயலாளராகப் பணி யாற்றிக் கொண்டு இருக்கிறார்.

மதம், பக்தி, கடவுள் நம்பிக்கை என்பதெல்லாம் ஊதி உப்பிய பலூன் போல; கழகப் பிரச்சாரம் என்பது குண்டூசியின் ஒரு முனை போல என்று சொல்லுவது வார்த்தையழகல்ல - ஆழ மான கருத்தழகு என்பதற்கு இது ஒன்று போதாதா?

 --------------------- மயிலாடன் அவர்கள் 17-12-2013 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

பகுத்தறிவைப் பயன்படுத்து! - பெரியார்

பகுத்தறிவைப் பயன்படுத்து!


அறிவுடைய மனிதன் எல்லாத் துறைகளிலும் அறிவு பெற்றிருக்கிறானா என்றால் சில துறைகளில் மாத்திரம்தான் பெற்றிருக்கிறான். ஆனால், சில துறைகளிலே பயன்படுத்தவே மாட்டான். பயன்படுத்தினால் பாபம் என்று சொல்லி விட்டனர். அதனால் பயந்து சில துறைகளிலே பயன்படுத்தவே மாட்டான். பயன்படுத்துவதே இல்லை. அந்தக் காரணத்தினாலேதான் நாம் சூத்திரர்களாக, பஞ்சமர்களாக, கீழ்மக்கள், பிற்பட்ட மக்கள் என்று சொல்லும்படியாக இருக்கிறோம். அந்தத் துறையில் நாம் ஆராய்வது இல்லை. ஆராய்ந்தால் பாபம் என்று சொல்லுவார்கள். அப்படி ஆராய்வதாலே ஏதாவது தண்டனை ஏற்பட்டு விடும் - கிடைத்து விடும் என்று பயந்து ஆராயாமல் இருக்கிறார்கள். 

ஆனால், மனிதனுக்கு அறிவு இல்லை என்று சொல்ல முடியுமா? அறிவு இருக்கிறது; சில காரியங்களில்தான் அந்த அறிவைப் பயன்படுத்துகிறார்கள். சில காரியங்களில் பயன்படுத்துவதே இல்லை.
விருந்துக்கு அழைக்கப்பட்டவர் கால், கைகளைக் கழுவிக் கொண்டு இலையில் உட்கார்ந்ததும், சாணி உருண்டையை வைத்துச் சாப்பிடுங்கள் என்று சொன்னால் அவன் என்ன செய்வான்? என்ன அயோக்கியப் பயல், நம்மை மடையன் என்று நினைத்தானா, அல்லது அவன் மடையனா என்று ஆத்திரம் அடைந்து எழுந்து போய்விடுவான், ஏன்? - அறிவு இருக்கிறதினாலே!   எந்த மடையனாவது சாணியைச் சாப்பிடுவானா? என்று கருதியேயாகும். 

ஆனால், அதே மனிதனிடத்தில் அதே சாணியைக் கொழுக்கட்டை பிடித்து, அதன் தலையிலே அருகம்புல் குத்தி வைத்து, குங்குமத்தை இட்டு, விழுந்து கும்பிட்டுவிட்டு வா சாப்பிடப் போகலாம் என்றால் உடனே கும்பிடுவான். சோறாக வைத்த பொழுது கோபம் அடைந்த மனிதன் அதைச் சாமியாக வைத்தால் விழுந்து கும்பிடுகிறான். தலையில் குட்டிக் கொள்ளுகிறான். இது ஏன்? அவனுக்கு அறிவு இல்லையா?
அறிவு இருக்கிறது; அந்த அறிவைச் சோற்றுச் சங்கதியில் செலுத்தலாம். ஆனால், கடவுள் சங்கதியில் செலுத்தினால் அழிந்தே போய் விடுவோம் என்கிற பயம் உண்டாக்கப் பட்டிருப்பதால் அவன் சிந்திப்பதில்லை. இரண்டும் அறிவுதான். ஆனால், பாபம், தோஷம் என்கிற தடை குறுக்கே நிற்கின்றது.
மனிதனுக்கு நல்ல பகுத்தறிவு, ஆலோசனை அறிவு, சிந்திக்கத் தகுந்த அறிவு இருந்தாலும் மேல் காட்டியபடி சில விஷயங்களில் உபயோகப்படுத்துவான், சில விஷயங்களிலே உபயோகப்படுத்துவதே இல்லை.
ஏன் நெற்றியில் சாம்பல் அடித்துக் கொள்கிறாய் என்றால் கோபம் வந்து விடும்.
அது சிவபிரானை வணங்கும் பக்திச் சின்னம். முன்னோர்கள் காலம் முதற் கொண்டு செய்து வருகிறோம். அது மேலே பட்டால் பாபம் போகும். அதைக் குற்றம் சொல்லுகிறாயே என்று கேட்பார்கள். அந்தச் சாம்பலை அடுப்பிலிருந்து முறத்தில் வாரி வந்து தெருவிலே நின்று அவன் முகத்திலே கொஞ்சம் வாரி அடித்தால் உடனே அவன், என் முகத்தைக் குப்பைத் தொட்டி என்று நினைத்துக் கொண்டாயா என்று சண்டைக்கு வந்துவிடுவான்.
மற்றும் அதே சாம்பலை ஒரு தட்டிலே வைத்துக் கொண்டு, இந்தப் பொண்ணுக்குப் பேய் பிடித்து இருக்கிறது. பேய் ஓடக்கடவது என்று சொல்லி ஒரு பெண்ணின் முகத்திலே அடித்தால் பக்கத்தில் யாராவது பாட்டிகள் இருந்தால், இன்னும் கொஞ்சம் நன்றாய்ப் போடுங்கள் என்று சொல்வார்கள். வெறும் சாம்பலை ஒருவனுக்குத் தெரியாமல் அள்ளி வந்து, இது சாமிப் பிரசாதம் என்று கொடுத்தால் பக்தியோடு இரண்டு கைநீட்டி வாங்கி வாயிலும் போட்டுக் கொள்ளுகிறான். அதற்காக விழுந்தும் கும்பிடுகிறான். தட்டதிலே தட்சிணையும் போடுகிறான். ஆனால், இதைப் பற்றிச் சிந்திக்கிறதேயில்லை.
ஆனால், நான் சொல்லுவதென்னவென்றால், எந்தச் சங்கதியாக இருந்தாலும் நன்றாகச் சிந்திக்க வேண்டும். ஆராய்ந்து பார்க்க வேண்டும். இது கடவுளாச்சே, இது சாஸ்திரமாச்சே, மதமாச்சே, பகவான் வாயிலிருந்து வந்ததாச்சே, பெரிய புராணம் சொல்லுதே, சிறிய புராணம் கழறுதே என்றெல்லாம் நினைக்கக் கூடாது.
நமக்கு அறிவு இருக்கிறது; அனுபவம் ஆராயும் திறன் இருக்கிறது. அதைக் கொண்டு எந்தச் சக்தியானாலும் ஆராய்ந்து பார்த்துத்தான் ஒப்புக் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்து கொள்ள வேண்டும். அதுதான் திராவிடர்களுடைய நீதியாகிய குறள் வாக்கியம். அதாவது வள்ளுவர் சொல்லுகிறார், எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும், அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு. மனிதனுக்கு அறிவு இருக்கிறது என்றால் போதாது. அந்த அறிவுக்குச் சில காரணம் வேண்டும். யார் சொல்லுவதாக இருந்தாலும் நன்றாக அலசிப் பார்த்து அதனுடைய உண்மையை அறிவதற்குப் பெயர்தான் அறிவே தவிர, முட்டாள்தனமாக கண் மூடிப் பின்பற்றுவது அறிவல்ல. ஆராய்ந்து பார்த்து அதனுடைய உண்மையைக் கண்டுபிடிக்க வேண்டும். அதை யார் சொன்னாலும் ஆராய வேண்டும் ஒருமுறை என்று சொல்லியிருக்கிறார். இன்னுமொருமுறை அது எப்படிப்பட்ட சங்கதியாக இருந்தாலும் ஆராய்ந்து பார்க்கத்தான் வேண்டும் என்று சொல்லி இருக்கிறார். எப்பொருள் எத்தன்மைத் தாயினும், அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு. எப்படிப்பட்ட சங்கதியாக இருந்தாலும் ஆராய்ந்து பார்க்க வேண்டும். அது எதுவாக இருந்தாலும் ஆராய்ந்து பார்க்க வேண்டும். அதுதான் மனிதனுடைய அறிவுக்கு லட்சணம். அந்த அறிவினுடைய சிந்திக்கிற தன்மையிலே உலகத்திலே உள்ள நாட்டாருக்கு எல்லாம் சுதந்திரம் உண்டு. ஆனால், நம் நாட்டாருக்குத்தான் அறிவுச் சுதந்திரம் கிடையாது.
மற்ற நாட்டாருக்கு எல்லாம் அறிவிலே சுதந்திரம் இருப்பதனாலே தங்கு தடை இல்லாமல் யோசிக்கிற தன்மை இருக்கிறதனாலே அவர்கள் அற்புதமான அதிசயங்களை எல்லாம் கண்டுபிடித்தார்கள்.
ஆனால், நமக்கு இவ்வளவுதான் யோசிக்கலாம், இவ்வளவுதான் பார்க்கலாம், அதற்கு மேல் யோசனை செய்தால் பாபம் என்று ஏற்பட்டிருக்கிறதனாலே நாம் இன்னமும் கீழ் ஜாதித் தன்மையில் இருக்கிறோம்.
மனிதன் தாராளமாகச் சிந்திக்கிற உரிமை கொண்டு இருக்கிறதினாலே அவனுடைய அறிவு வளருகிறது. அவன் நாடு முன்னேற்றம் அடைகிறது. அவன் வாழ்க்கை இன்பம் நிறைந்ததாக இருக்கிறது. சகல சவுகரியங்களும், போக போக்கியமும் ஏற்படுகிறது. எல்லா அதிசயங்களையும் கண்டு மகிழ வசதி ஏற்படுகிறது.
-------------------------25.3.1951 அன்று பெரம்பூர் - செம்பியம் திராவிடர் கழக 3-ஆம் ஆண்டு விழாவில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய உரையிலிருந்து... - "விடுதலை" 26.3.1951

16.12.13

கல்கியின் சாய்ந்த தராசு!இதற்குப் பெயர்தான் மனுநீதி! புரிகிறதா?

இவ்வார கல்கி ஏட்டில் (22.12.2013) ஒரு கேள்விக்குப் பதில் அளித்துள்ளார் கல்கி ஆசிரியர் - தராசு பகுதியில்

* பி.எஸ். பூவராகவன், படியூர் கேள்வி:  சிதம்பரம் நடராஜர் கோயில், தீட்சிதர்களுக்குச் சொந்த மானது அல்ல என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியிருக்கிறாரே?

பதில்: கோயில் யாருக்குச் சொந்தம், சொந்தமில்லை என்பது பிரச்சினை இல்லை. பல காலமாக அனுபவித்து வரும் உரிமைகள் பறிக்கப்படும்போது எதிர்ப்பு எழுவது இயல்பு. எனவேதான் கோயிலைத் தமிழகஅரசு,   அறநிலையத் துறையின் கீழ் எடுத்து நடத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்படுகிறது.

எது நியாயம் என்பதை நீதிமன்றத் திடம் விட்டு விட்டு அதன் தீர்ப்பை ஏற்பதே சிறந்த வழி - இதுதான் கல்கியின் பதில்.

கல்கியார் கண்ணீர் சிந்துகிறார்; அதுமட்டுமல்ல. கட்டப் பஞ்சாயத்து செய்வதுபோல இடைத் தீர்ப்பு வழங் குகிறார்!

ஆனால் எடுத்த எடுப்பிலே ஒன்றை அவர் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களின் கருத்துக்கு மாறாக கூறவில்லை; அதனை முதற் கட்டத்தில் மறுக்காமல் ஒப்புக் கொள் ளுகிறார்!

ஆனால் பல காலம் அனுபவித்து வரும் உரிமைகள் பறிக்கப்படும்போது எதிர்ப்பு எழுவது இயல்பு என்று கூறி, தீட்சிதத் திருமேனிகளுக்காக ஆதரவு காட்டுகிறார்; நாம் கேட்கிறோம்.

உரிமையாளர்கள் மக்கள் அரசின் துறை - ஆகவே அது மற்ற கோயில்களைப் போல - இந்து அற நிலையப் பாதுகாப்புத் துறை (H.R. & C.E.) யின்கீழ் வருவது தானே நியாயம்? ஏன் இப்போது எடுக்க வேண்டிய அவசியம்? இது 1888 முதலே வழக்கு  நடந்துகொண்டுள்ள விவகாரம்!

இல்லையானால் 1888 வெள்ளைக்கார நீதிபதி லார்டுஷெப்பர்டு மற்றும் இந்தியர் முதல் நீதிபதி என்ற பெருமை பெற்ற சர்.டி. முத்துசாமி அய்யரும் இணைந்து, இந்தக் கோயில் பொதுக் கோயிலே தவிர, தனிப்பட்ட தீட்சிதர்களுக்குச் சொந்தமல்ல என்று தீர்ப்பு வழங்கினரே!

அதற்குப் பிறகு சில ஆண்டுகளுக்கு முன் சென்னை உயர்நீதிமன்றத்தில், இந்தக் கோயிலில் நடைபெற்ற முறை கேடுகள், ஊழல்கள், பொருள்கள் திருட்டு; வைர நகைகள் உட்பட திருட்டுப் போனதை தீட்சிதர்களில் சிலரே தமிழக அரசிடம் (எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது மனு கொடுத்துள்ளனர்). வருவாய்கள் அபகரிப்பு கையாடல்கள் எல்லாம் நடைபெற்றதால் இதை இந்து அறநிலையப் பாதுகாப்புத் துறையின் கண்காணிப்பு நிர்வாகத்தின்கீழ் (நு.டீ) நிர்வாக அதிகாரியைப் போட்டு மேற் பார்வையிட்டது சரியானதே என்றும், அதன்பிறகு  உண்டியல் வருவாயி லிருந்து எல்லாம் அதிகமாக கோயில் திருப்பணிகள் சிறப்பாக நடைபெறு கின்றன என்றும் சென்னை உயர்நீதி மன்ற தனி நீதிபதி (ளுபேடந துரனபந) பிறகு இரு நீதியரசர்களைக் கொண்ட டிவிஷன் பெஞ்ச் தனி அமர்வு இவைகள் எல்லாம் இரண்டு முக்கிய தீர்ப்புகளை சட்ட ரீதியாக அலசி ஆராய்ந்து தந்துள் ளனரே!

நில அபகரிப்பில்கூட ஏற்கெனவே பல காலம் அல்லது சில காலம் அனுப வித்தவர்களிடமிருந்து அதைப் பறித்து முறையாக உரியவர்களிடம் அளிப்பது தானே சட்டப்படி, நியாயப்படி, நீதிப்படி சரியானதாகும்?

திருட்டு சொத்தை உரியவர்களுக்குத் தானே தர வேண்டும்!

அதை எடுக்க நேர்ந்த அவசியம் என்ன என்பதுதான் முக்கியம் அங்கு சிதம்பரம் கோயிலில் தீட்சிதர்களால் நடைபெற்ற கொள்ளை - சுரண்டல் களைத் தடுக்க பக்தர்களே வைத்த கோரிக்கைதானே முக்கிய காரணம்?

அபகரிக்கப்பட்ட சொத்தை எடுத்து உரியவரிடம் கொடுத்தால் எதிரிகள் சில காலம் அவர்கள் அனுபவித்த ஒரே காரணத்தினாலேயே அது நியாயமற்ற தாகி விடுமா?

கல்கியாரின் வாதம், ஒரு சார்பு (மனு) வாதம் அல்லவா?

தீர்ப்பை நீதிமன்றத் திடம் விட்டுவிட்டிருந்தால் சுப்ரமணிய சுவாமிகளும், தீட்சிதர்களும் இப்படி உச்சநீதிமன்றத்திற்குச் சென்று, நாங்கள் மேலே இருந்து குதித்து வந்த வர்கள் என்ற புருடாவை அங்கே விடுவார்களா?

கோயில் கட்டியவர் களுக்கான வரலாறு, தீட்சிதர்கள் குடியேறிய கால கட்டம் எல்லாம் ஆய்வாளர்களாலே நிர்ணயிக்கப்பட்டுள்ளன. முந்தைய தீர்ப்புகளில் அலசப்பட்டுள்ளதே!

இந்து அற நிலையப் பாதுகாப்புத் துறை இப்படி எத்தனையோ கோயில் களை, நிலங்களை மீட்டுள்ளதே!

அதனை முன்பு வரவேற்ற இந்து முன்னணி ராம. கோபாலய்யர்களும், கல்கியும் இப்படி தீட்சிதர்கள் விஷயத்தில் மட்டும் வேறு அணுகுமுறை, அளவுகோல் வைத்து அளக்கலாமா?

இதற்குப் பெயர்தானே ஒரு குலத்துக் கொரு நீதி மனுநீதி இல்லையா!
மனச்சாட்சியை அடகு வைத்து விட்டு பிறழ் சாட்சிகளினாலும் நீதியையே நாட்டில் விலைக்கு வாங்கும் நிலையில் இதிலாவது நியாயப்படி பேச வேண் டாமா?

தராசு சாயக் கூடாது பாவம், கல்கியாரின் தராசு (ஒருபால்) சாய்ந்த தராசாக அல்லவா ஆகிவிட்டது! இதற்குப் பெயர்தான் மனுநீதி! புரிகிறதா?

-------------- ஊசி மிளகாய் அவர்கள் 16-12-2013 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

15.12.13

பகுத்தறிவாளர் கழகம் என்றால் மனிதர்கள் கழகம் - பெரியார்

மனிதர்கள் கழகம்

மேன்மைக்குரிய தலைவர் அவர்களே, தாய்மார்களே, பெரியோர்களே!
இன்றைய தினம் இந்த செயங் கொண்டத்தில் பகுத்தறிவாளர் கழகத்தை துவக்கி வைக்கும் பேறு கிடைத்ததற்காக மகிழ்ச்சி அடைகிறேன்.

நான் கூறுகிற, கருதுகிற கருத்து களை நீங்கள் கேட்கத்தான் கடமைப் பட்டவர்களே தவிர, அப்படியே நம்பக் கடமைப்பட்டவர்களல்ல. கேட்பவற்றை எல்லாம் நம்ப வேண்டுமென்றால், இதுவரை இந்த நாட்டில் என்னைவிட அதிகமாகக் கூறப்பட்ட கருத்துகள் ஏராளம்! ஆகவே, எதையும் நம்பாமல் அறிவு கொண்டு சிந்திக்கக் கேட்டுக் கொள்கிறேன்.

பகுத்தறிவாளர் கழகம் என்றால் மனிதர்கள் கழகம் என்று பெயர் மனி தனுக்குத்தான் பகுத்தறிவு என்ற ஒன்று இருக்கிறது. உலகத்தில் எத்தனையோ கோடி ஜீவன்கள் இருக்கின்றன என் றாலும் அவைகளுக்கு எல்லாம் ஆறாவது அறிவாகிய பகுத்தறிவு கிடையாது. மனிதன் ஒருவனுக்குத்தான் பகுத்தறிவு உண்டு. அப்படி இருக்கும்போது நாம் ஏன் பகுத்தறிவாளர் கழகம் துவக்க வேண்டும்?

இந்தக் கூட்டத்திற்கு வராதவர்கள் எல்லாம் பகுத்தறிவு அற்றவர்களா? பகுத்தறிவாளர் கழகத்தைச் சேராத வர்கள் எல்லாம் பகுத்தறிவு அற்ற வர்களா? சிந்திக்க வேண்டும்.

நான் முன்பு ஒருமுறை ஒரு சுய மரியாதை மாநாட்டிற்கு குமாரசாமி ரெட்டியார் என்ற மந்திரியாரை அழைத்து இருந்தேன். அவர் வந்தும் பேசினார். அப்போது சொன்னார், "சுயமரியாதை மாநாடு என்று பெயர் வைத்து இருக் கிறார்கள். அப்படியானால், மற்றவர் களுக்கு சுயமரியாதை இல்லை என்று அர்த்தமா?" என்று கேட்டார்.

அதற்குப் பின்னால் நான் பேசும் போது, அவரைக் கேட்டேன். "நீங்கள் என்ன ஜாதி?" என்று. 'ரெட்டியார்' என்றார். கோவி லுக்குச் சென்றால் எந்த இடத்தில் நிற்கிறீர்கள்? ஓட்டலுக்குச் சென்றால் எங்கே உட்காருகிறீர்கள்? அதற்குக் காரணம் என்ன? நீங்கள் சூத்திரன் என்பதால் அல்லவா என்று கேட்டேன். அசட்டுச் சிரிப்பு சிரித்தார். கூடியிருந்த மக்கள் எல்லாம் கைதட்டி ஆரவாரம் செய்தார்கள்.

விளையாட்டுக்காக நான் சொல்ல வில்லை. இன்றைக்கும் நம் நிலைமை என்ன? சாஸ்திரப்படி மட்டுமல்ல - இன்றைய இந்தியாவின் அரசியல் சட்டப்படியும் நாம் சூத்திரர்கள்தான். எவன் கிறித்தவன் இல்லையோ, எவன் முஸ்லிம் இல்லையோ, அவனெல்லாம் பார்ப்பானைத் தவிர்த்து பகுத்தறிவுவாதி - நாத்திகன் உட்பட சூத்திரன் என்று இன்றைய சட்டத்திலும் இருக்கிறது.

இதற்கு ஒரு பரிகாரம் செய்ய வேண் டும் என்றுதான் தீவிரமாக இருக்கிறேன். நான் 50 ஆண்டுகளாக இந்த நாட்டில், பகுத்தறிவு சுயமரியாதை பிரச்சாரம் செய்தும் வருகிறேன்.

நம்முடைய இலட்சிய சொல்லாக 'கடவுள் இல்லை - கடவுள் இல்லை! கடவுள் இல்லவே இல்லை! கடவுளைக் கற்பித்தவன் முட்டாள் - பரப்பியவன் அயோக்கியன் - வணங்குகிறவன் காட்டுமிராண்டி' என்று கொண்டு இருக்கிறோம்.

உலகத்திலே இருக்கிற மற்ற நாட்டு பகுத்தறிவுவாதிகள் எல்லாம் புதிய புதிய கருவிகளை எல்லாம் கண்டுபிடித்து இருக்கிறார்கள். ஆணும், பெண்ணும் "படுக்காமலேயே" குழந்தை பெறக் கூடிய சாதனங்கள் எல்லாம் ஏற்படுத்தப் பட்டு இருக்கின்றன. கடுமையான வியாதிகளுக்கு எல்லாம் மருந்து வகைகள் எல்லாம் கண்டு பிடிக்கப்பட்டு விட்டன. இவை எல்லாம் பகுத்தறிவை பயன்படுத் தியதால் மற்ற நாட்டுக் காரன் செய்து காட்டிய சாதனை.

1952-இல் நம்முடைய சராசரி ஆயுள் 29. இன்றைக்கு நமது சராசரி ஆயுள் 52. இன்னும் நம் நாட்டு வைத்தியன் எல்லாம் செத்தான் என்றால் அது 75 ஆகி விடும். நம் நாட்டு வைத்தியன் செய்த புண்ணியமெல்லாம் நம் உயிரைக் கொன்று தீர்த்தது தான். வெள்ளைக்காரன் வைத்தியம் நாட்டில் வளர்ந்து விட்ட பிறகுதான் நம்முடைய ஆயுள் நீண்டு வருகிறது.

இன்றைக்குச் சொல்கிறேன், ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். கி.பி. 2,000 முடிவில் இந்திய மனிதனின் சராசரி வயது 75 ஆகவும், வெள்ளைக்காரன் வயது 110ஆகவும் ஆகப் போகிறது. நான் அப்போது இருக்க மாட்டேன். நீங்கள் அதை அனுபவிப்பீர்கள்.

எனக்கு பல ஆண்டுகளுக்கு முன்பு நாக்கில் புற்று வந்தது. அந்தத் தழும்புக் கூட இன்னும் இருக்கிறது. டாக்டர் ரத்தின வேலு சுப்பிரமணியமும், டாக்டர் ராயும் வைத்தியம் பார்த்தார்கள்.

டாக்டர் ராய் எலக்டிரிக் டிரீட்மெண்டு செய்து என்னைப் பிழைக்க வைத்தார். இப்படி எல்லாம் மனிதனின் பகுத்தறிவு விஞ்ஞானத் துறையில்; இன்னும் எவ்வளவோ வளர்ந்து வருகிறது.

நம் நாட்டைப் பொறுத்த வரையில் என்னுடைய கவலை எல்லாம் நம்முடைய பகுத்தறிவு, நமது மானத்தைக் காப்பாற் றப் பயன்பட வேண்டும் என்பது தான்.
மற்ற நாட்டுக்காரன் பகுத்தறிவு எல்லாம் வளர்ந்து சந்திர மண்டலத்தில் வீடு கட்டிக் கொண்டு இருக்கப் போகி றான். உணவு முறையிலும் மாறுதல் ஏற்படப் போகிறது.

நம்முடைய நாட்டு மக்களைப் பொறுத்த வரையில், பகுத்தறிவுவாதி களாக இருப்பதற்கு மான உணர்ச்சி வந்தாக வேண்டும். எவ்வளவு கேவலம்? இந்த நாட்டுக் குடிமக்களை நூற்றுக்கு மூன்று பேராக உள்ள ஒரு கூட்டம் தங் களுக்குத் தாசி மக்கள் என்று இன்றைக் கும் சொல்லி வருகிறது என்றால் இதைவிட ஒரு கேவலம் வேண்டுமா?

எனக்கு ஒருவனுக்கு மட்டும்தான் இந்த வேதனையா? 1925ஆம் வருடத்தி லிருந்தே இதற்காக நான்தானே பாடுபட்டு வருகிறேன். எந்த அரசியல் காரன் பாடுபட முன்வந்தான்? அரசியல் காரனுக்கு எல்லாம் என்னோட சேர்ந்து இருப்பதற்கே பயம். காரணம், இவனோடு சேர்ந்தால் ஓட்டுக் கிடைக்காதே என்ற பயம்தான்!

நான் இவ்வளவு பாடுபட்டும் இன்னும் முடிந்த பலனை அனுபவிக்க முடிய வில்லையே. நம்முடைய இயக்கத்தால் பார்ப்பானின் ஆதிக்கத்தை சகல துறைகளிலும் முறியடித்து விட்டோம். கல்வி, உத்தியோகத் துறைகளில் எல்லாம் நாம் தலையெடுத்து விட்டோம். இவ்வளவும் அமைதியான புரட்சியாக செய்து முடித்து இருக்கிறோம்.

ஒரு பார்ப்பானைக் கொல்லவில்லை, ஒரு பார்ப்பனத்தியைக் கெடுக்கவில்லை. எந்தவித பலாத்காரத்தையும் கையாளா மல் இந்த மாறுதல்களைச் செய்து இருக்கிறோம்.

ஒரு பார்ப்பான் கூட மந்திரியாக இல்லாத ஒரு மந்திரி சபையை தமிழ் நாட்டில் நிலை பெறச் செய்து விட்டோமே! இது ஒன்று போதாதா நம்முடைய வெற்றிக்கு? அதுவும் எப்படிப்பட்ட ஆட்சி! இராமனை செருப்பால் அடித்து வெற்றி பெற்று வந்த ஆட்சி! இது என்ன சாதாரண காரியமா?

வேறு மதக்காரர் ஆளும் நாட்டில் அந்தக் கடவுள்களை இப்படிச் செய்து ஓட்டு வாங்க முடியுமா? இங்கு இராமனை செருப்பால் அடித்து ஓட்டு வாங்கி விட்டோமே! இது என்ன சின்ன காரி யமா? கடவுளாவது - வெங்காயமாவது என்று கருதும் அளவுக்கு மக்களுக்கு உணர்ச்சி வந்து விட்டதே!

மனிதன் ஒவ்வொரு துறையிலும் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் வருகிறான். இப்படி எல்லாத் துறைகளி லும் மாற்றமும், முன்னேற்றமும் ஏற்பட்டு விட்ட பிறகு, நம்மை தேவடியாள் மக்கள் என்னும் சூத்திர இழிவு ஏன் ஒழிய வில்லை? இதில் மட்டும் மாற்றம் ஏற்படவில்லையே, ஏன்?
மானம் இல்லாததாலா? உணர்ச்சி இல்லாததாலா? அறிவு இல்லாததாலா? இல்லை - இல்லை. இவை எல்லாம் மனிதனுக்குத் தாராளமாக இருக்கிறது. இருந்தும் ஏன் பயன்படுத்தவில்லை?

மனிதன் பகுத்தறிவைக் கொண்டு எல்லாவற்றையும் சிந்திக்கலாம். ஆனால், கடவுள், மதம் விஷயங்களில் மட்டும் மனிதன் பகுத்தறிவைப் பிரயோகப்படுத் தக் கூடாது. அப்படி பயன்படுத்தினால் அவனைக் கொல்லலாம் என்று இருக் கிறது. இதை விட என்ன வேண்டும்?

இராமாயணத்திலே கூறப்பட்டு இருக்கிறது, பகுத்தறிவைப் பயன்படுத்தி கடவுள், மத விவகாரங்களில் எவன் தர்க்கம் செய்கிறானோ, அவனைக் கொன்றுவிட வேண்டும் என்று இராமன் கூறுவதாக ஒரு காட்சி வருகிறது. அந்த நிலைமைதான் இன்றைக்கும்.

காந்தியாரைத் தீர்த்துக் கட்டியதும் இதே கருத்துப்படிதான். சாஸ்திரத்தில் தீண்டாமை இருக்கிறது. அதில் கை வைக்க வேண்டும் என்று காந்தியார் முயற்சித்தபோது சாஸ்திரப்படி அவரைத் தீர்த்துக் கட்டி விட்டான்.

இன்றைய அரசியல் சட்டம் கூட அப்படித்தான். அரசியல் சட்டத்தில் எதைத் திருத்தினாலும் 'அடிப்படை சட்டங்கள்' என்ற பகுதியை மட்டும் திருத்தக் கூடாது என்று எழுதி வைத்திருக்கிறான். அரசியல் சட்டத்தில் தீண்டாமை ஒழிய வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது. அந்தத் 'தீண் டாமை' என்ற வார்த்தை இன்வர்ட்டடு கமாவுக்குள் போடப்பட்டுள்ளது. அப்படிப் போடப்பட்டு இருப்பதற்குக் காரணம், அதற்குத் தனி அர்த்தம் இருக்கிறது என்பதுதான்.
வருகிற டிசம்பர் 8, 9 தேதிகளில் சென்னையில் ஒரு பெரிய மாநாடு கூட்டப் போகிறேன். சட்டப்படி இருக்கிற நம்முடைய இழி நிலையை மாற்ற தீர்மானம் கொடுக்கப் போகிறேன். மாற்றினால் போச்சு, இல்லாவிட்டால் போராடத்தான் வேண்டும். போராடி னால் கடுமையாகத் தண்டிப்பான்.

ஏழாண்டு வரை கொடுப்பான். ஏற்கத் தான் வேண்டும். நீங்கள் எல்லாம் ஜெயிலுக்கு வரத் தான் வேண்டும். எதெல் லாமோ செய்து நம்மை ஒழித் துக்கட்டப் பார்ப்பார்கள்.  அதற்கெல்லாம் நாம் தயாராக இருக்க வேண்டும்.
இந்து இல்லை என்று எவன் ஒருவன் சொல் கிறானோ, அவனை விடுதலை செய்ய வேண்டும். அவனை அந்த இழிவுக்குள் புகுத்தக்கூடாது என்று கூறப்போகிறோம். அதற்கு இந்த ஆட்சி என்ன செய்யப் போகிறது என்று பார்ப்போம்.

இந்த ஆட்சியை ஒழித்து விட்டால் மறுநாளே தீர்ந்தது. நம்முடைய இழிவை ஒழிக்க மறுநாளே ஏற்பாடு செய்து விடலாம். அதற்கு நாம் தயாராக இருக்க வேண்டும்.

அதற்கான ஆயத்தமான மாநாடு தான் நடக்க இருக்கும் சென்னை மாநாடு. மாநாட்டிற்கு ஆண்களும் பெண்களுமாய் இதுவரை மாநாடுகளில் கூடாத அளவுக்கு வந்து கூடியாக வேண்டும். எந்தெந்த வகையில் உங்களது ஒத்துழைப்பு இருக்க முடியுமோ அவ்வளவும் இருக்க வேண்டும். பண வசதி உள்ளவர்கள் தாராளமாக உதவ லாம். ஜெயிலுக்கு வர வாய்ப்புள்ளவர்கள் ஏராளமாக வரவேண்டும்.

முதன்முதலில் வடநாட்டுக்காரன் கடையில் மறியல் செய்யலாம் என்று இருக்கிறேன். அவனுக்கு இங்கு என்ன வேலை என்று கேட்போம்.
பம்பாயில் சிவசேனைக்காரன் நம்மவர் களை அங்கு விரட்டவில்லையா?
அவன் அங்கு செய்யும்போது நாம் ஏன் இங்கு செய்யக்கூடாது?
துணியவேண்டும். பதவிக்குப் போகிற நாலுபேர்களை அதற்கென்று விட்டு விடுவோம். மற்றவர்கள் நம்முடைய இழிவை ஒழித்துக்கட்ட முயற்சிக்க வேண்டும்.

நமக்கு பதவி வந்தால் போதாது - நம்மில் பலர் இலட்சாதிபதியானால் போதாது. நமக்கு இன்றைக்கு தேவை எல்லாம் நமது மானம் மீட்கப்பட்டாக வேண்டும், நமது இழிவை ஒழித்தாக வேண்டும்.

இன்னும் எத்தனை நாளைக்கு நான் இருக்கப் போகிறேன். எத்தனை நாளைக்கு கத்தப்போகிறேன் நாளைக்கே பொசுக் கென்று போய்விடுகிறேன் என்று வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் கெதி என்ன? என் இடத்தில் உட்கார எவன் வரப்போகிறான். வர விரும்புகிறவன் இருந்தாலும் எவனை இந்த அளவுக்கு மதிக்கப் போகிறீர்கள்?

மக்களிடம் மதிப்பு பெறுவது என்பது சின்ன காரியமா? அந்த மதிப்பைப் பெற எவ்வளவு பட்டாக வேண்டும்.

ஆகவே தோழர்களே! நாளைக்கு எனக்கு ஏதாவது என்றால் நம் கெதி அவமானகரமானதாகப் போய்விடும்; தலை எடுக்க முடியாது.
எனவே, நீங்கள் எல்லாம் நமது இழிவை ஒழிக்கும் காரியத்தில் துணிந் தாக வேண்டும்.

உங்கள் பெயரை எல்லாம் பட்டியல் போட்டுக் கொடுங்கள். யார் யாரை எப்படி எப்படி எல்லாம் பயன்படுத்திக் கொள்ள முடியுமோ அப்படி எல்லாம் பயன்படுத்திக் கொள்கிறேன்.

எனக்காக, என் தயவுக்காக நீங்கள் போராட முன்வர வேண்டாம். உங்களுக் காக - உங்கள் பிள்ளைக் குட்டிகளுக்காக உங்கள் சந்ததிக்காக முன் வாருங்கள்.

-----------------------------10.11.1973 அன்று ஜெயங்கொண்ட சோழபுரத்தில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய அறிவுரை - "விடுதலை" 12.11.1973