Search This Blog

17.12.13

பகுத்தறிவைப் பயன்படுத்து! - பெரியார்

பகுத்தறிவைப் பயன்படுத்து!


அறிவுடைய மனிதன் எல்லாத் துறைகளிலும் அறிவு பெற்றிருக்கிறானா என்றால் சில துறைகளில் மாத்திரம்தான் பெற்றிருக்கிறான். ஆனால், சில துறைகளிலே பயன்படுத்தவே மாட்டான். பயன்படுத்தினால் பாபம் என்று சொல்லி விட்டனர். அதனால் பயந்து சில துறைகளிலே பயன்படுத்தவே மாட்டான். பயன்படுத்துவதே இல்லை. அந்தக் காரணத்தினாலேதான் நாம் சூத்திரர்களாக, பஞ்சமர்களாக, கீழ்மக்கள், பிற்பட்ட மக்கள் என்று சொல்லும்படியாக இருக்கிறோம். அந்தத் துறையில் நாம் ஆராய்வது இல்லை. ஆராய்ந்தால் பாபம் என்று சொல்லுவார்கள். அப்படி ஆராய்வதாலே ஏதாவது தண்டனை ஏற்பட்டு விடும் - கிடைத்து விடும் என்று பயந்து ஆராயாமல் இருக்கிறார்கள். 

ஆனால், மனிதனுக்கு அறிவு இல்லை என்று சொல்ல முடியுமா? அறிவு இருக்கிறது; சில காரியங்களில்தான் அந்த அறிவைப் பயன்படுத்துகிறார்கள். சில காரியங்களில் பயன்படுத்துவதே இல்லை.
விருந்துக்கு அழைக்கப்பட்டவர் கால், கைகளைக் கழுவிக் கொண்டு இலையில் உட்கார்ந்ததும், சாணி உருண்டையை வைத்துச் சாப்பிடுங்கள் என்று சொன்னால் அவன் என்ன செய்வான்? என்ன அயோக்கியப் பயல், நம்மை மடையன் என்று நினைத்தானா, அல்லது அவன் மடையனா என்று ஆத்திரம் அடைந்து எழுந்து போய்விடுவான், ஏன்? - அறிவு இருக்கிறதினாலே!   எந்த மடையனாவது சாணியைச் சாப்பிடுவானா? என்று கருதியேயாகும். 

ஆனால், அதே மனிதனிடத்தில் அதே சாணியைக் கொழுக்கட்டை பிடித்து, அதன் தலையிலே அருகம்புல் குத்தி வைத்து, குங்குமத்தை இட்டு, விழுந்து கும்பிட்டுவிட்டு வா சாப்பிடப் போகலாம் என்றால் உடனே கும்பிடுவான். சோறாக வைத்த பொழுது கோபம் அடைந்த மனிதன் அதைச் சாமியாக வைத்தால் விழுந்து கும்பிடுகிறான். தலையில் குட்டிக் கொள்ளுகிறான். இது ஏன்? அவனுக்கு அறிவு இல்லையா?
அறிவு இருக்கிறது; அந்த அறிவைச் சோற்றுச் சங்கதியில் செலுத்தலாம். ஆனால், கடவுள் சங்கதியில் செலுத்தினால் அழிந்தே போய் விடுவோம் என்கிற பயம் உண்டாக்கப் பட்டிருப்பதால் அவன் சிந்திப்பதில்லை. இரண்டும் அறிவுதான். ஆனால், பாபம், தோஷம் என்கிற தடை குறுக்கே நிற்கின்றது.
மனிதனுக்கு நல்ல பகுத்தறிவு, ஆலோசனை அறிவு, சிந்திக்கத் தகுந்த அறிவு இருந்தாலும் மேல் காட்டியபடி சில விஷயங்களில் உபயோகப்படுத்துவான், சில விஷயங்களிலே உபயோகப்படுத்துவதே இல்லை.
ஏன் நெற்றியில் சாம்பல் அடித்துக் கொள்கிறாய் என்றால் கோபம் வந்து விடும்.
அது சிவபிரானை வணங்கும் பக்திச் சின்னம். முன்னோர்கள் காலம் முதற் கொண்டு செய்து வருகிறோம். அது மேலே பட்டால் பாபம் போகும். அதைக் குற்றம் சொல்லுகிறாயே என்று கேட்பார்கள். அந்தச் சாம்பலை அடுப்பிலிருந்து முறத்தில் வாரி வந்து தெருவிலே நின்று அவன் முகத்திலே கொஞ்சம் வாரி அடித்தால் உடனே அவன், என் முகத்தைக் குப்பைத் தொட்டி என்று நினைத்துக் கொண்டாயா என்று சண்டைக்கு வந்துவிடுவான்.
மற்றும் அதே சாம்பலை ஒரு தட்டிலே வைத்துக் கொண்டு, இந்தப் பொண்ணுக்குப் பேய் பிடித்து இருக்கிறது. பேய் ஓடக்கடவது என்று சொல்லி ஒரு பெண்ணின் முகத்திலே அடித்தால் பக்கத்தில் யாராவது பாட்டிகள் இருந்தால், இன்னும் கொஞ்சம் நன்றாய்ப் போடுங்கள் என்று சொல்வார்கள். வெறும் சாம்பலை ஒருவனுக்குத் தெரியாமல் அள்ளி வந்து, இது சாமிப் பிரசாதம் என்று கொடுத்தால் பக்தியோடு இரண்டு கைநீட்டி வாங்கி வாயிலும் போட்டுக் கொள்ளுகிறான். அதற்காக விழுந்தும் கும்பிடுகிறான். தட்டதிலே தட்சிணையும் போடுகிறான். ஆனால், இதைப் பற்றிச் சிந்திக்கிறதேயில்லை.
ஆனால், நான் சொல்லுவதென்னவென்றால், எந்தச் சங்கதியாக இருந்தாலும் நன்றாகச் சிந்திக்க வேண்டும். ஆராய்ந்து பார்க்க வேண்டும். இது கடவுளாச்சே, இது சாஸ்திரமாச்சே, மதமாச்சே, பகவான் வாயிலிருந்து வந்ததாச்சே, பெரிய புராணம் சொல்லுதே, சிறிய புராணம் கழறுதே என்றெல்லாம் நினைக்கக் கூடாது.
நமக்கு அறிவு இருக்கிறது; அனுபவம் ஆராயும் திறன் இருக்கிறது. அதைக் கொண்டு எந்தச் சக்தியானாலும் ஆராய்ந்து பார்த்துத்தான் ஒப்புக் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்து கொள்ள வேண்டும். அதுதான் திராவிடர்களுடைய நீதியாகிய குறள் வாக்கியம். அதாவது வள்ளுவர் சொல்லுகிறார், எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும், அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு. மனிதனுக்கு அறிவு இருக்கிறது என்றால் போதாது. அந்த அறிவுக்குச் சில காரணம் வேண்டும். யார் சொல்லுவதாக இருந்தாலும் நன்றாக அலசிப் பார்த்து அதனுடைய உண்மையை அறிவதற்குப் பெயர்தான் அறிவே தவிர, முட்டாள்தனமாக கண் மூடிப் பின்பற்றுவது அறிவல்ல. ஆராய்ந்து பார்த்து அதனுடைய உண்மையைக் கண்டுபிடிக்க வேண்டும். அதை யார் சொன்னாலும் ஆராய வேண்டும் ஒருமுறை என்று சொல்லியிருக்கிறார். இன்னுமொருமுறை அது எப்படிப்பட்ட சங்கதியாக இருந்தாலும் ஆராய்ந்து பார்க்கத்தான் வேண்டும் என்று சொல்லி இருக்கிறார். எப்பொருள் எத்தன்மைத் தாயினும், அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு. எப்படிப்பட்ட சங்கதியாக இருந்தாலும் ஆராய்ந்து பார்க்க வேண்டும். அது எதுவாக இருந்தாலும் ஆராய்ந்து பார்க்க வேண்டும். அதுதான் மனிதனுடைய அறிவுக்கு லட்சணம். அந்த அறிவினுடைய சிந்திக்கிற தன்மையிலே உலகத்திலே உள்ள நாட்டாருக்கு எல்லாம் சுதந்திரம் உண்டு. ஆனால், நம் நாட்டாருக்குத்தான் அறிவுச் சுதந்திரம் கிடையாது.
மற்ற நாட்டாருக்கு எல்லாம் அறிவிலே சுதந்திரம் இருப்பதனாலே தங்கு தடை இல்லாமல் யோசிக்கிற தன்மை இருக்கிறதனாலே அவர்கள் அற்புதமான அதிசயங்களை எல்லாம் கண்டுபிடித்தார்கள்.
ஆனால், நமக்கு இவ்வளவுதான் யோசிக்கலாம், இவ்வளவுதான் பார்க்கலாம், அதற்கு மேல் யோசனை செய்தால் பாபம் என்று ஏற்பட்டிருக்கிறதனாலே நாம் இன்னமும் கீழ் ஜாதித் தன்மையில் இருக்கிறோம்.
மனிதன் தாராளமாகச் சிந்திக்கிற உரிமை கொண்டு இருக்கிறதினாலே அவனுடைய அறிவு வளருகிறது. அவன் நாடு முன்னேற்றம் அடைகிறது. அவன் வாழ்க்கை இன்பம் நிறைந்ததாக இருக்கிறது. சகல சவுகரியங்களும், போக போக்கியமும் ஏற்படுகிறது. எல்லா அதிசயங்களையும் கண்டு மகிழ வசதி ஏற்படுகிறது.
-------------------------25.3.1951 அன்று பெரம்பூர் - செம்பியம் திராவிடர் கழக 3-ஆம் ஆண்டு விழாவில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய உரையிலிருந்து... - "விடுதலை" 26.3.1951

15 comments:

தமிழ் ஓவியா said...


அய்யப்பன் கோயில் தரிசனச் சீட்டில் மோசடி!

திருவனந்தபுரம், டிச. 17- சபரிமலை அய்யப்பன் கோயிலில் தற்போது மண்டல கால பூஜைகள் நடந்து வருகின்றன. சபரிமலையில் பக்தர்கள் எளிதில் தரிசனம் செய்ய கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் ஆன்லைன் தரிசன முன்பதிவு தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் வெகு தொலைவில் இருந்து வரும் பக்தர்களால் எளிதில் தரிசனம் செய்ய முடிந்தது. இந்நிலையில் பக்தர்கள் போலி ஆன்லைன் டிக்கெட்களுடன் சபரிமலை வருவது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. ஒருவர் பயன்படுத்திய டிக்கெட்டில் புகைப்படத்தை மாற்றி ஒட்டியும், தேதியை திருத்தியும் பக்தர்கள் பயன் படுத்தி வருவது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து தென்மண்டல ஏடிஜிபி ஹேமச்சந்திரன் கூறுகையில், இவ்வருடம் பக்தர்கள் போலி ஆன்லைன் தரிசன டிக்கெட்டை கொண்டு வந்தது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. சில கணினி மய்யங் களில் இதுபோன்ற டிக்கெட்களை எடுத்து கொடுத்தது தெரியவந்துள்ளது. இவ்வாறு போலி ஆன்லைன் டிக்கெட் கொண்டு வரும் பக்தர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஆன்லைனில் பதிவு செய்வதற்கு எந்த கட்டணமும் கிடையாது. ஆனால் சில கணினி மய்யங் களில் இதற்கு கட்டணம் வசூலிக்கின்றனர். இவ்வாறு கட்டணம் வசூலிக்கும் கணினி மய்யங்கள் மீது நடவடிக்கை எடுக்கப் படும் என்றார்.

தமிழ் ஓவியா said...


தி.மு.க. பொதுக்குழுத் தீர்மானங்களுக்கு வரவேற்பும் பாராட்டும் - சுப. வீரபாண்டியன் அறிக்கை!

சென்னை, டிச.17- காங்கிரஸ், பா.ஜ.க., ஆகிய இரு கட்சிகளையும் விட்டு சம தூரத்தில் விலகி நிற்பது என தி.மு.க., பொதுக் குழுத் தீர்மானங்களை வரவேற்று திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச் செயலாளர் பேராசிரியர் சுப. வீரபாண்டியன் விடுத்துள்ள அறிக்கைவருமாறு:

15.12.2013 அன்று சென்னையில் கூடிய திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுக் குழு, தமிழக மக்களின் நலன் சார்ந்த பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளது. இறுதியில், வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான கூட்டணி குறித்து, தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்களின் அறிவிப்பு பெரும் ஊக்கத்தையும் மகிழ்ச்சியையும் தருவதாக உள்ளது. காங்கிரஸ், பா.ஜ.க., ஆகிய இரு கட்சிகளையும் விட்டு சமதூரத்தில் விலகி நிற்பது என்னும் தி.மு.கழகத்தின் முடிவு மிகுந்த பாராட்டிற்கும், வரவேற்பிற்கும் உரியது. காங்கிரஸ் போன்ற கட்சிகளை கால காலமாக தூக்கிச் சுமந்ததும் போதும், மதவாதக் கட்சிகளோடு உறவும் ஒரு நாளும் வேண்டாம் என இரு திசைகளிலும் எடுக்கப்பட்டிருக்கும் நல்ல முடிவு இது. தி.மு. கழகத் தொண்டர்களிடம் புதியதோர் எழுச்சியை உருவாக்கியிருக்கும் இவ்வறிவிப்பு, பொது மக்களிடமும் ஏற்றதொரு வரவேற்பைக் கண்டிருக்கிறது. வழக்க மாகவே ஊக்கம் குறையாமல் தேர்தல் பணியாற்றும் தி.மு.கழகத் தொண் டர்கள் இம் முறை முழு மூச்சில் களத்தில் இறங்கிப் பணியாற்றுவார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது. தி.மு.க. பொதுக்குழுவின் தீர்மானங்கள் அனைத்தையும் திராவிட இயக்கத் தமிழர் பேரவை மீண்டும் ஒரு முறை மகிழ்வுடன் வரவேற்கிறது.

தமிழ் ஓவியா said...


வகுப்புக் கலவரத் தடுப்பு மசோதா மத்திய அமைச்சரவை ஒப்புதல்


புதுடில்லி, டிச.17- வகுப்புக் கலவரத் தடுப்பு மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை திங்கள் கிழமை ஒப்புதல் அளித் தது. இதையடுத்து, "இந்த மசோதா செவ்வாய்க் கிழமை நடைபெறும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்' என்று அமைச்சரவைக் கூட்டத் துக்கு பிறகு செய்தியா ளர்களிடம் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே தெரிவித்தார். அதே நேரத்தில் இந்த மசோதா நாட்டின் மத நல்லிணக்கத்துக்கு அச் சுறுத்தலாக உள்ளதால், நாடாளுமன்றத்தில் இதற்கு எதிர்ப்பு தெரிவி க்கப்படும் என்று பாஜக கூறியுள்ளது. வகுப்புக் கலவரத் தடுப்பு மசோதாவில் குறிப்பிடப்பட்டிருக்கும் அம்சங்கள் மாநில அர சுகளின் அதிகாரங் களைப் பறிக்கும் வகை யில் உள்ளது என்று தமிழக முதல்வர் ஜெய லலிதா, மேற்கு வங்க முதல்வர் மம்தா பாணர்ஜி ஆகியோர் ஏற்கெனவே எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், வகுப்புக் கலவ ரம் ஏற்பட்டால் அதற்கு பெரும்பான்மை சமுத யத்தினரே பொறுப் பேற்கும் வகையில் உள் ளதாக பாஜக உள் ளிட்ட சில கட்சிகள் குற்றம்சாட்டின. இதையடுத்து, அந்த அம்சத்தில் திருத்தம் செய்யப்பட்டு அனைத்து தரப்பினரும் பொது வாக கருதப்படுவார்கள் என்று திருத்தப்பட்டுள் ளதாக தெரிகிறது. "வகுப்புக் கலவரங்கள் ஏற்பட்டால் மாநில அர சுகளின் ஆலோசனை யைப் பெறாமல் மத்திய துணை ராணுவம் சம்பவ இடத்துக்கு செல்ல லாம்' என்று மத்திய அரசுக்கு அதிகாரமளிக் கும் வகையில் மசோதா வில் முன்பு குறிப்பிடப் பட்டிருந்தது. இது தற்போது, "மாநில அர சுகள் கேட்டுக்கொண் டால் தான் மத்திய அரசு பாதுகாப்புப் படை களை அனுப்பும்' என்று மாற்றம் செய்யப்பட் டுள்ளது.

தமிழ் ஓவியா said...


பி.ஜே.பி.- காங்கிரசுடன் கூட்டணி இல்லை தி.மு.க. தலைவர் கலைஞர் பேட்டி

சென்னை, டிச.18- பி.ஜே.பி. மற்றும் காங் கிரசுடன் கூட்டணி கிடையாது என்று தி.மு.க. தலைவர் கலைஞர் செய்தியாளர் களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

பேட்டி விவரம் வருமாறு:

கலைஞர் அவர்கள் நேற்று (17.12.2013) காலை தமது இல்லத்திலிருந்து அண்ணா அறிவாலயத்திற்குப் புறப்பட்டபோது செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-

செய்தியாளர்: லோக்பால் மசோதா இன்றையதினம் (17.12.2013) நாடாளுமன் றத்தில் விவாதிக்கப்படுகிறது. அந்த மசோதாவை தி.மு. கழகம் ஆதரிக்குமா? கலைஞர்: நாடாளுமன்ற தி.மு.கழகக் குழுவின் தலைவர் டி.ஆர்.பாலு, இந்த மசோதா விவாதத்திற்கு வருகின்ற நேரத் தில் எப்படி முடிவெடுக்க வேண்டு மென்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறார். அந்த முடிவு எடுத்த பிறகு உங்களுக்கும் தெரியும்.

செய்தியாளர்: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தமிழ் மாநிலத் தலைவர் பேராசிரியர் காதர் மொய்தீன் இன்று (17.12.2013) அளித்த பேட்டியில், தமிழகத்தில் உங்கள் தலைமையில் மூன்றாவது அணி உருவாகும் என்று சொல்லியிருக்கிறாரே?

கலைஞர்: மகிழ்ச்சி.

செய்தியாளர்: நேற்றையதினம் தமிழ் நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் ஞான தேசிகன் அளித்த பேட்டியின்போது, தி.மு.கழகம் அய்க்கிய முற்போக்குக் கூட் டணியிலே தற்போது இல்லை என்றும் ஏற்கெனவே விலகி விட்டதாகவும், வரு கின்ற நாடாளுமன்றத் தேர்தலுக்காக தி.மு.க.விற்கு ஆதரவு கேட்டு எந்தவித மான கடிதமும் தான் எழுதவில்லை என்றும் சொல்லியிருக்கிறாரே?

கலைஞர்: அதிலிருந்தே நீங்களே தெரிந்து கொண்டிருக்கலாம். காங்கிரசை விட்டு விலகியதற்கு வேறு காரணம் தேவையில்லை என்று ஞானதேசிகன் அவர்களே சொல்லிவிட்டதற்காக நன்றி.

செய்தியாளர்: தமிழகத்தில் காங் கிரஸ், பா.ஜ.க.வுடன் சேராது, தி.மு.கழகம் தனித்துப் போட்டியிடப் போகிறதா?

கலைஞர்: ஆமாம். ஏற்கெனவே எங் களுடன் உள்ள தோழமைக் கட்சி களுடன் சேர்ந்து போட்டியிடுவோம்.

செய்தியாளர்: பா.ஜ.க. சார்பில் நேற்றைய தினம் பேட்டியளித்த நிர்மலா சீத்தாராமன், தி.மு.கழகம் கூட்டணிக் காக அழைப்பு விடுத்தால் பரிசீலிப்போம் என்று சொல்லியிருக்கிறாரே?

கலைஞர்: பா.ஜ.க.வை நாங்கள் அழைப்பது என்று எதுவும் முடிவு செய்யவில்லை.

- இவ்வாறு தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் பேட்டியளித்துள்ளார்.

Read more: http://viduthalai.in/e-paper/72203.html#ixzz2nptN7FRt

தமிழ் ஓவியா said...


செய்தியும், சிந்தனையும்!


பற்றாக்குறை

இந்தியாவில் 9.55 இலட்சம் செவி லியர்கள் பற்றாக்குறை

(படித்துவிட்டு வேலையில்லாத செவிலியர்கள் ஏராளம் இருக்கும் போது, இந்தப் பற்றாக்குறையைக் கணக்கில் எடுத்துக்கொள்ளவேண் டாமா?).

குழந்தைகளுக்கு

மூளை வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு நிதி திரட்டிட ஜனவரி 5 ஆம் தேதி சென்னையில் மாரத்தான் போட்டிக்கு ஏற்பாடு.

(கர்ம பலன் என்று நினைக் காமல், இப்படி ஒரு முயற்சியை மேற்கொள்வோர்க்குப் பாராட்டுகள், வெற்றி பெற வாழ்த்துகள்!)

வெட்டு-குத்து

பேருந்தில் பயணம் செய்துகொண்டிருந்த மாநிலக் கல்லூரி மாணவர்களை வெட்டிய பச்சையப்பன் கல்லூரி மாண வர்கள் கைது.

(மாணவர்கள் படிக்கச் செல்கிறார் களா? அல்லது ரவுடிசத்தை அரங் கேற்றச் செல்கிறார்களா? நம் நாட்டின் கல்வி முறைகள் ரவுடிசத்தைத்தான் வளர்க்கிறதோ? சம்பந்தப்பட்டவர்கள் சிந்திக்கவேண்டும்!)

நீதிமன்ற அவமதிப்பு

ஆயுள் கைதி ஒருவரை விடுதலை செய்யக்கோரி உயர்நீதிமன்றம் உத்தர விட்டும், விடுதலை செய்யாததால், நீதிமன்ற அவமதிப்பு வழக்குக்கு ஆளாகி உள்துறை செயலாளருக்கு சென்னை உயர்நீதிமன்றம் தாக்கீது (நோட்டீசு) அனுப்பியுள்ளது.

(வேலியே பயிரை மேய்கிறது என் பார்களே, அது இதுதானோ! அரசன் எவ்வழி, குடிகள் அவ்வழி!)

பார்வையற்றோர்

அண்ணா மேம்பாலச் சந்திப்பு அருகே நடைபாதையில் திடீர் என்று முளைத்த கட்-அவுட்டுகளால் பார்வையிழந்தோர் தடுக்கி விழுந்து காயமடைந்தனர்.

(ஆளும் கட்சி சார்பான கட்-அவுட்டு களுக்கு கெட்-அவுட் கிடையாது. அர சாங்கத்தின் கோழி முட்டை, குடிமக் களின் குழவிக் கல்லையும் உடைக்குமே!).

கொடி கட்டி

பண்ருட்டியையடுத்த ஆ.நத்தம் பகுதி யில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி யினர் கொடிக்கம்பம் அமைத்தபோது வன்னிய சமுதாயத்தினர் எதிர்த்தனர்.

(தாழ்த்தப்பட்டவரும், பிற்படுத்தப் பட்டவரும் ஒன்றிணைந்து போரா டினால்தான் சமூகநீதி பாதுகாக்கப் படும் என்ற அடிப்படையை, தலை வர்கள் போதிக்கவேண்டாமா? இங்கு எங்களுக்கு மட்டும்தான் கொடிகட்டிப் பறக்கிறது என்று எண்ணலாமா?).

யானைகள் முகாம்

புதுச்சேரி நாகூர் தர்கா யானை களும், யானைகள் சிறப்பு நல்வாழ்வு முகாமுக்கு அனுப்பப்படுகின்றன.

(பரவாயில்லை, இதிலாவது மதச் சார்பின்மை கடைப்பிடிக்கப்படுகிறதே! ஆனாலும், கஜேந்திரா பக்தி சமாச் சாரம் இதற்குள் புதைந்து கிடக்கிறது. ஆன்மீக தி.மு.க. ஆட்சியல்லவா!)

கும்பாபிஷேகம்

115 ஆண்டு வயதுள்ள சென்னை சட்டக் கல்லூரி கட்டடம் சேதமடைந்து நொறுங்கிக் கொண்டிருக்கிறது.

(அதனால் என்ன, குழவிக் கல்லு சாமி குடியிருக்கும் கோவில்களைப் புனரமைத்து க்ஷிரணத் தோரண பூர்ண கும்பாபிஷேகம்தானே முக்கி யம், அவசியம், அவசரம்!)

Read more: http://viduthalai.in/e-paper/72205.html#ixzz2nptZ7OEa

தமிழ் ஓவியா said...


சபாஷ், சரியான நடவடிக்கை!


உயர்நீதிமன்ற நுழைவாயிலில் உள்ள அம்மன் கோயிலை இடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு


சென்னை,டிச.18- உயர் நீதிமன்ற நுழைவாயிலில் உள்ள அம்மன் கோயிலை இடிக்க நீதிபதிகள் உத் தரவிட்டனர்.

சென்னையில் உள்ள சாலையோரக் கோயில் களை இடிக்கக் கோரி யும், உயர்நீதிமன்ற நுழை வாயிலில் சாலையோரம் உள்ள ஒரு மாரியம்மன் கோயிலை இடிக்கக் கோரியும் டிராபிக் ராம சாமி என்பவர் உயர்நீதி மன்றத்தில் பொதுநலன் வழக்கு தாக்கல் செய் தார். இந்த வழக்கை உயர் நீதிமன்றம் ஏற்கெனவே விசாரித்து, சாலையோ ரக் கோயில்களை இடிக்க உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து அம் மன் கோயிலை இடிக் கும்படி அதன் அறங் காவலர் காந்தா சீனிவா சனுக்கு மாநகராட்சி தாக்கீது அனுப்பியது. இதை ரத்து செய்யக் கோரி காந்தா சீனிவா சன் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

அதில், முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். வெளிநாட்டில் சிகிச்சை பெற்று வரும்போது அவர் குணமடைய இந்த அம்மன் கோயில் கட் டப்பட்டது. அதன்பிறகு அவர் குணமடைந்து சென்னை வந்தார். அவர் நினைவாக இந்தக் கோயில் உள்ளது. இதை இடிக்கக் கூடாது. மாநக ராட்சி அனுப்பிய தாக் கீதை ரத்து செய்யவேண் டும் என்று கூறியிருந் தார்.

இந்த வழக்கை நீதி பதிகள் அக்னிகோத்ரே, சசிதரன் ஆகியோர் விசாரித்து அளித்த தீர்ப்பு வருமாறு:

சாலை யோரம் உள்ள அனைத்துக் கோயில் களை யும் இடிக்க உத் தரவிடப் பட்டுள்ளது. அதன் அடிப் படையில் தான் மனுதார ருக்கு மாநகராட்சி தாக் கீது அனுப்பியுள்ளது. இதில் எந்தத் தவறும் இல்லை. எனவே மனுவை தள்ளுபடி செய்கிறோம். இந்தக் கோயிலை மாநக ராட்சி இடிக்கலாம்.
இந்தக் கோயில் அனு மதியில்லாமல் கட்டப் பட்டுள்ளது என்று தெளிவாகத் தெரிகிறது. உயர்நீதிமன்ற வளாகத் தின் சுற்றுச்சுவரை யொட்டி கோயில் உள் ளது. கோயில், மசூதி, கிறிஸ்தவ கோவில் ஆகியவற்றை தனியார் இடத்தில் வைக்க உரி மையுள்ளது. பொதுமக் களை பாதிக்கும் வகை யில் வைக்கக் கூடாது என்று உயர்நீதிமன்றம் ஏற்கெனவே பல்வேறு தீர்ப்புகளில் கூறியுள் ளது. மதரீதியான கட்ட டங்களை பொது இடத் தில் கட்ட யாருக்கும் உரிமையில்லை. எனவே இந்த வழக்கை தள்ளு படி செய்கிறோம்.
- இவ்வாறு நீதிபதி கள் தீர்ப்பில் கூறியுள் ளனர்.

Read more: http://viduthalai.in/e-paper/72204.html#ixzz2nptlqmPB

தமிழ் ஓவியா said...


பழங்குடியினர் பட்டியலில் நரிக்குறவர்கள்


புதுடில்லி, டிச.18- பழங் குடியினர் பட்டியலில் நரிக்குறவர் ஜாதியைச் சேர்க்க வகை செய்யும் அரசமைப்புச் சட்டத் திருத்த மசோதா மக்கள வையில் செவ்வாய்க் கிழமை தாக்கல் செய்யப் பட்டது. இந்த மசோ தாவை மத்திய பழங்குடி யினர் விவகாரத் துறை அமைச்சர் கிஷோர்சந் திர தேவ் அறிமுகம் செய்தார்.

இந்த சட்டத் திருத்த மசோதாவில், பழங்குடி யினர் பட்டியலில் தமி ழகத்தில் இருந்து நரிக் குறவர் ஜாதியும், சட் டீஸ்கரில் இருந்து தனு ஹர், தனுவார் ஆகிய இரு ஜாதிகளும் சேர்க் கப்பட்டுள்ளன.

இதையடுத்து, முறைப் படி இந்த மசோதா மக்களவையிலும், அதைத் தொடர்ந்து மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்ட பிறகு, குடியரசுத் தலை வர் அதற்கு ஒப்புதல் தெரிவிப்பார். அதன் பிறகு, மேற்கண்ட மூன்று ஜாதிகளும் பழங்குடியி னர் பட்டியலில் சேர்க் கப்படுவதற்கான ஆணை மத்திய அரசிதழில் வெளியாகும்.

தற்போது தமிழகத் தில் பழங்குடியினர் பட் டியலில் 36 ஜாதிகளும், சட்டீஸ்கர் மாநிலத்தில் பழங்குடியினர் பட்டி யலில் 42 ஜாதிகளும் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

Read more: http://viduthalai.in/e-paper/72207.html#ixzz2npu7bQ8X

தமிழ் ஓவியா said...

வள்ளுவரின் குறள் எனது வாழ்வை வளப்படுத்தியது! ஆசிரியர் தாத்தா பிறந்த நாள் 02.12.2013



மாணவப் பருவத்தில் ஆசிரியர் தாத்தா

எனது நான்காம் படிவம் முதல் ஆறாம் படிவம் வரை எனக்கு அரசு உதவித் தொகையில் சம்பளம் போக இரண்டு ரூபாய்கள் மிஞ்சும். ரூபாய் ஆறரை சம்பளம் போக ரூபாய் இரண்டரை மிஞ்சும். (10 ரூபாய் சம்பள ஸ்காலர்ஷிப்) எங்கள் பள்ளியின் கடைநிலை ஊழியர் தோழர் தனபால் அந்த மாத காசோலையை (செக்கினை) உதவித் தொகைக்காக வங்கியில் மாற்றி வருவார்.

அவருக்கும் ஒரு சிறு தொகை தவறாது அதில் கொடுப்பேன் -மனமுவந்து.- அவர் தொடக்கத்தில் மறுத்தாலும்கூட - இந்த உதவித்தொகை எனக்குக் கிடைக்க என்னுடைய ஆசிரியர், தலைமையாசிரியர் பரிந்துரை காரணம் என்றாலும், பலர் போட்டியிட இதனை ஒரேயொரு மாணவருக்குத் தந்ததற்கு ஒரு நிகழ்ச்சி காரணம் என்று சொல்ல வேண்டும்.

ஒரு நாள் (D.E.O) மாவட்டக் கல்வி அதிகாரி சோதனை (இன்ஸ்பெக்ஷன்); அவர் தமிழ் மொழி இனப்பற்றாளர் - திரு. முருகேச முதலியார் என்பது அவரது பெயர். சென்னையிலிருந்து வந்தவர். ஒவ்வொரு வகுப்புகளையும் சுற்றிப் பார்ப்பார்!

சில வகுப்புகளுக்குள்ளும் சென்று ஆசிரியர் பாடம் நடத்துவதைக் கண்காணிக்க சிறிது நேரம் தங்கி மாணவர்களையும், ஆசிரியரையும் கேள்வி கேட்டு வெளியேறும் கடமை வீரர் அவர். எல்லா ஆசிரியரின் வகுப்பறைகளும், துப்புரவாகவும், துடிதுடிப்புடனும், எச்சரிக்கையுடனும் அவரது வருகையை எதிர்நோக்கியிருந்தன.

இரண்டு நாள் தொடர் இன்ஸ்பெக்ஷன். இரண்டாவது நாள் அவர் எங்கள் வகுப்பிற்கு வந்தார்.- உள்ளூர் பிரமுகர் திரு. அழகானந்த முதலியார் கட்டித் தந்த அழகானந்த கூடம்.

அந்த வகுப்பறையில் எங்கள் தமிழாசிரியர் திரு. பழனியாண்டி (முதலியார்) தமிழ் வகுப்பு நடத்திக் கொண்டிருந்தார்.

(டர்பனுடன் இருப்பார் ஆசிரியர்) நுழைந்தார் கல்வி அதிகாரி. அமர்ந்தார் நாற்காலியில். வகுப்பு நடைபெறுவதைத் தொடரச் சொன்னார். முன்பே நடத்திய பாடத்தையே நடத்தினார் எங்கள் ஆசிரியர்; கேள்வி கேட்டாலும் மாணவர்கள் தெளிவாகப் பதில் சொல்ல வாய்ப்பு அதனால் சிறப்பாக ஏற்படுமென்பதால்!

கல்வி அதிகாரி திடீரென்று மாணவர்களாகிய எங்களை நோக்கி திருக்குறளில் எத்தனை குறள்கள் உங்களுக்குத் தெரியும்? தெரிந்த மாணவர்கள் யாரேனும் சொல்லுங்கள் என்றார். ஓர் நிமிடம் அமைதி. தமிழாசிரியரேகூட எதிர்பார்க்காத கேள்விக்கணை அது! ஆசிரியர் எங்களைப் பார்த்தார்; உடனே அச்சமின்றி, துணிவைத் துணைக்கு அழைத்துக் கொண்டு, சில குறள்பாக்களை மடமடவென்று உரத்த குரலில், மேடையில் பேசுவது போல சொல்லத் தொடங்கினேன்.

அப்போது எனக்கு எந்தத் திருக்குறள் அதிகாரமும் முறையாக 10 தொடர்ந்து தெரியாது என்றாலும், நான் நமது மேடைகளில் பல சொற்பொழிவாளர்கள் கூறுவதைக் கேட்டும் குடியரசு, திராவிட நாடு, விடுதலை போன்ற நமது கொள்கை ஏடுகளில் வரும் கட்டுரையின் மேற்கோள்களைப் படித்து மனத்தில் பதிய வைத்திருந்தவற்றையே ஒப்புவித்தேன்.

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் என்னும் குறள், எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள் என்ற குறள்,

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் என்ற குறள்-, இப்படி சில குறள்களைக் கூறினேன்.

மகிழ்ந்தார்; பாராட்டினார்; போதுமென்றார்; என்னைக் காப்பாற்றினார் மாவட்டக் கல்வி அதிகாரி! வகுப்பிலுள்ள மற்ற மாணவர்கள் மவுனமாகிவிட்ட நிலையில், பளிச்சென்று எழுந்து நான் குறள்பாக்களைக் கூறியது பற்றி எங்கள் தமிழாசிரியர் அவர்களுக்கும் மெத்த மகிழ்ச்சி.

மாவட்டக் கல்வி அதிகாரி திரு. முருகேச முதலியார் உடனே உன் பெயர் என்னவென்று கேட்டார். பிறகு சென்றுவிட்டார். அவர் சென்ற நிலையில் அடுத்த நாள் எங்கள் பள்ளி மாணவர் உதவித்தொகை பற்றிய குறிப்புகள் கொண்ட கோப்புகளை அவர் காண நேர்ந்தது;

அவர் முடிவெடுக்க வேண்டிய அதிகாரி என்பதால் -எனது பெயரை அவர் மிக நன்றாக நினைவில் கொண்டதன் பேரிலும், எனக்கே அந்த உதவித்தொகையை (ஸ்காலர்ஷிப்) அளிக்க ஆணை பிறப்பித்தார்.

நான்காம் படிவத்திலிருந்து பள்ளியிறுதி வகுப்பான 6ஆ-வது படிவம் (S.S.L.C. Sixth form) வரை மூன்று ஆண்டுகளும்- அது தொடர்ந்து கிடைத்தது. காரணம், ஒவ்வொரு ஆண்டும் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்று வந்த மாணவன் என்ற கூடுதல் தகுதியும் அதற்குரியவனாக என்னை ஆக்கிற்று. வள்ளுவரின் குறள் எனது வாழ்வை வளப்படுத்தியது; அதற்கு மூல காரணம் திராவிட இயக்கச் சார்பே ஆகும்.

நூல்: அய்யாவின் அடிச்சுவட்டில் (பாகம்-1

தமிழ் ஓவியா said...

முதல் மதிப்பெண்ணுக்கு மோதாதீர்!

- சிகரம்

முதல் மதிப்பெண் மோகம், வேகம், தாகம், கிடைக்காவிடின் சோகம் என்பவை பெற்றோர், நிர்வாகம், மாணவர் என்ற முத்தரப்பிலும் முனைந்து நிற்கும் முதன்மை உணர்வு.

சில நிர்வாகமும், சில பெற்றோரும் இதற்காக மாணவர்களுக்குக் கொடுக்கும் நெருக்கடியும், நிம்மதிச் சிதைப்பும், உளைச்சலும், உதையும், வதையும் ஏராளம்!

100க்கு 97 மதிப்பெண் எடுத்த ஒரு மாணவி தற்கொலை செய்து கொண்டாள். காரணம், முதல் மதிப்பெண் பெற 1 மதிப்பெண் குறைந்துவிட்டதாம்! எவ்வளவு கொடுமையான முட்டாள்தனம்; மூளைச்சலவை; மூடநம்பிக்கை பாருங்கள்!

ஒரு மதிப்பெண்தான் வாழ்வா? 97 மதிப்பெண் பெற்றது என்ன சாதாரண சாதனையா? சாதாரண உழைப்பா? அதைவிட ஒரு மாணவர் என்ன சாதிக்க வேண்டும்?

இங்கு அவள் ஆயுளைப் பறித்தது எது? அறியாமையா? வறட்டுப் பெருமையா? மானப் பிரச்சனையா? பெற்றோர் கொடுத்த உளைச்சலா? விசாரித்தபோது பெற்றோர் திட்டியதுதான் காரணம் என்று தெரிந்தது. இப்படி ஒரு படிப்பாளிப் பெண்ணைப் பாராட்டுவார்களா? பழிப்பார்களா?

படிக்காத பெற்றோர் யாரும் இப்படிச் செய்வதில்லை; படித்த முட்டாள்கள் படுத்தும் பாடுதான் இது! முதல் மதிப்பெண்ணில்தான் தன் மானமும், மரியாதையும் அடங்கியிருப்பதாக அலையும் அவலம்.

40 மாணவர்களில் முதன்மை வந்தால், நாலு பள்ளிகளில் முதன்மை இல்லை; மாவட்டத்தில் முதன்மை வந்தால் மாநிலத்தில் முதன்மை இல்லை.

மாநிலத்தில் முதன்மை வந்தவர் மேற்படிப்பில் முதன்மை இல்லை! இதுதானே யதார்த்த நிலை? இதற்கா இத்தனைப் போட்டி? பொறாமை?

பகுத்தறிவின்பாற்பட்ட முயற்சி எது என்றால், நாம் எதிர்காலத்தில் என்னவாக விரும்புகிறோம் என்பதைத் திட்டமிட்டு, அதற்கேற்ற தகுதி மதிப்பெண்ணை அடைய உழைப்பதே! சரியான அணுகுமுறை அதுவே!

நமக்குத் தேவையான உணவை உண்பதுதானே உடல்நலம் காக்கும் அறிவுடைய செயல்? அடுத்தவனைவிட ஒரு உருண்டை கூடுதலாகச் சாப்பிட வேண்டும் என்று முனைவது முறையா? அதுதானே மதிப்பெண்ணுக்கும்!

பணிக்குப் போகும்போதும், படிக்கப் போகும்போதும், அவை கிடைக்க என்ன மதிப்பெண் தேவையோ அதைப் பெற திட்டமிட்டு முயலுவது என்ற செயல்திட்டமே சிறந்தது, உகந்தது; சமூக நல்லிணக்கம், மனிதநேயம், நட்பு இவற்றிற்கு ஏற்றது. மற்றபடி போட்டியிட்டு மோதுவது மூடத்தனம் என்பதை பெற்றோர் முதலில் கருத்தில் கொள்ள வேண்டும்.

கல்வி நிறுவனங்கள் வணிக நோக்கில் தன் பள்ளி முதலிடம் பெறவேண்டும் என்ற சுயநலத்தில், மாணவர்களை வாட்டி வதைப்பது கண்டிக்கத்தக்கது.

ஒரு மாணவனை முதல் மதிப்பெண் வாங்க வைக்க அலைவதைத் தவிர்த்து, 100 மாணவர்களைத் தரமாக உருவாக்க முயற்சிப்பதே உண்மையான கல்விச் சேவை. தன் பிள்ளைக்குத் தேவையான மதிப்பெண் கிடைக்க பிள்ளைக்கு வேண்டிய கடமைகளைச் செய்வதே பெற்றோரின் பொறுப்பு.

தன் எதிர்காலத் திட்டத்திற்கு - இலக்கிற்கு ஏற்ற மதிப்பெண்ணைப் பெறப் பாடுபடுவதே படிப்போர்க்குச் சிறப்பு. அதை விடுத்து முதல் மதிப்பெண்ணுக்காக மோதுவதும், சாவதும் முட்டாள்தனம்; மூடத்தனம்! எனவே, பெற்றோரும், நிர்வாகத்தினரும், மாணவரும் இந்த மூடத்தனத்திலிருந்து முதலில் விலக வேண்டும்.

முயற்சிக்கு ஓர் உந்துதல் வேண்டாமா? சிலர் கேட்பர். முதல் மதிப்பெண்தான் உந்துதலா?

அது போட்டிக்கும் பொறாமைக்குமே வழிவகுக்கும். தனக்குத் தேவையான மதிப்பெண் இவ்வளவு. அதைப் பெறவேண்டும் என்றால் உந்துதல் வராதா?

கல்வி என்பது விளையாட்டுப் போட்டியோ, பந்தயமோ அல்ல. அது அறிவுத் தெளிவு; ஆற்றல் வளர்ப்பு.

ஓட்டப் பந்தயத்தில்தான் முதல், இரண்டு, மூன்று என்பதெல்லாம். படிப்பில் மதிப்பெண்ணில் அல்ல.

விளையாட்டில் போட்டி ஆர்வம் தரும்; கல்வியில் போட்டி உளைச்சல் தரும்.

98% மதிப்பெண் பெற்றிருக்கிறோம் என்று உண்மையில் மகிழ்வதற்குப் பதில், 99% இன்னொருவன் பெற்று முதலிடம் வந்து விட்டானே! என்று ஏங்கிக் கவலைப்படுவது அறிவிற்கு அழகா?

98% பெறும் அளவிற்கு நாம் படிப்பாளி என்று பெருமை கொள்ளமுடியாமல் செய்வது முதல் மதிப்பெண் மோகம் என்றால், அது மூடத்தனம் அல்லவா?

தமிழ் ஓவியா said...


தந்தை பெரியாரின் மரண சாசனம்


எனவே தோழர்களே! நம் முடைய நிலைமை உலகத்திலே பெரிய மானக்கேடான நிலைமை. 2000 வருடமாக இருக்கிற முட்டாள்தனத்தைவிட இந்தச் சட்டத்திலே இருக்கிற, இந்து லாவிலேயும், அரசியல் சட்டத் திலும் அது பெரிய முட்டாள்தனம். முதலிலே இதை மாற்றச் சொல் லாமல், இந்த ஆட்சியிலே குடிமகனாக இருக்கிறோமே, அது மகா மகா முட்டாள்தனம். பொறுக்கித்தின்பவனுக்கு இந்த ஆட்சி வேண்டும். மானத்தோடு பொழைக்கிறவனுக்கு இந்த ஆட்சியை ஒழித்துத்தானே ஆக ணும்? உன்னைப்போல் நான், என்னைப்போல் நீ மாற்றுகிறாயா? இல்லை. மூட்டை கட்டுகிறாயா என்று தானே கேட்க வேண்டும்? இல்லாவிட்டால் வழி? இன்னும் எத்தனை நாளைக்கு இப்படியே இருப்போம் என்று என்ன நிச்சயம்? நான் இறந்தால் நாளைக்கே மாறிவிடுவான்.

கலைஞரின் தீர்மானம்!

நமது கலைஞர் கருணாநிதி அவர்கள், கல்லுதான் - யார் வேண்டுமானாலும் பூஜை செய்ய லாம், இப்படி இப்படிச் செய்ய வேண்டும் என்று எல்லோருக் கும் அனுமதி கொடுத்தார். பார்ப்பான் கோர்ட். சுப்ரீம் கோர்ட் என்றால் பார்ப்பான் கோர்ட் என்று பெயர் (சிரிப்பு) சிரிக்காதீர்கள்; அதிலே தமிழ னுக்கு இடமே இல்லை. போனா லும் அவனுடைய அடிமைதான் அங்கு போவான், அவன் சாஸ்திரத்தைப் பார்த்துத்தான் தீர்ப்புச் சொல்வான். இந்த ஜனம் கோயிலுக்குள் போவது தப்பு; அது சாஸ்திர விரோதம். அட முட்டாள்களே! சாஸ்திரம் என்றால் எது? எப்ப எழுதியது? எவன் எழுதினான்! எவனை யாவது சொல்லச் சொல்லு, ஆகமத்தின்படி எழுதினான் என்கிறான். அய்கோர்ட் ஜட்ஜ் பார்ப்பான் ஆதிக்கமுள்ளது. பார்ப்பாத்தியால் நியமிக்கப்பட் டவர்கள் அவர்கள். அவர்கள் அப்படித்தானே எழுதுவார்கள்? எனவே, நமது இழிவு ஒழிந்தாக வேண்டும்; அதுதான் முக்கியம்.

தேங்காது! இப்போது நாம் கஷ்டப்பட் டால், பிறகு வட்டியும் முதலுமாய் உயரலாம். நமது நாட்டு முன் னேற்றம் ஒன்றும் தேங்கிப் போய்விடாது. எனவே இவ்வளவு நேரம் பொறுமையாக இருந்து கேட்ட உங்களுக்கு எனது நன் றியைத் தெரிவித்து, எனது உரையை முடித்துக்கொள்கிறேன்.

சென்னை தியாகராயர் நகரில் தந்தை பெரியார் தம் வாழ்வின் இறுதி உரையாக (19.12.1973) - மரண சாசனமாக ஆற்றிய உரையின் முடிவுப் பகுதி இது.

Read more: http://viduthalai.in/e-paper/72294.html#ixzz2nuzwBRnl

தமிழ் ஓவியா said...


ஆருத்ரா


மாயேந்திரன்: (வேலைக்காரன் வெள் ளையைப் பார்த்து) கடை வீதியிலே யாருட்டயோ சொன்னியாமே - எங்க எஜமான் ஊருக்கு நல் லது தான் செய்றாரு. ஆனா கோயிலில் இருக் கிறதெல்லாம் கல்லுன்னு சொல்றாருன்னு சொன்னி யாமே! அப்படியா சொன்னே.. கோயில்லே கல் இல்லாம வேற என்னடா இருக்கு?

வெள்ளை: சாமிதா னுங்க எஜமான் இருக்கு.

மாயே: சாமியா? இங்கே வாடா! (வருகி றான் பக்கத்தில்) ஒரு காலைத் தூக்கடா.. கையை இப்படி வைடா (நடராஜர் சிதம்பரத்திலி ருப்பது போல் நிற்கச் செய்கிறார்;

நிற்கிறான் வெள்ளை); பத்திரிகை படித்துக் கொண்டிருக் கிறார் மாயேந்திரன், வெள்ளை காலை ஊன்று கிறான். டேய் தூக்குடா காலை, நில்லுடா என்கி றார் எஜமான் மாயேந் திரன் (மறுபடியும் தூக்கி சிறிது நேரம் நின்று விட்டு காலை ஊன்று கிறான்). டேய், ஏண்டா ஊண்டுன... தூக்குடா காலை - என்கிறார் எஜமான்.
வெள்ளை: கால் வலிக்குதுங்க எஜமான்.

மாயே: ஏண்டா ரெண்டு நிமிஷம் நிக்கிற துக்கே கால் வலிக்கு துன்னு சொல்றீயே - அப்ப தூக்கின காலை இன்னும் கீழே ஊன்றாம இருக்குதேடா...

வெள்ளை: எங்கே எஜமான்!
மாயே: சிதம்பரத்திலே

வெள்ளை: அது கல்லு எஜமான்.

மாயே: என்ன அது கல்லா? ஏண்டா கல் லுன்னா சொன்ன? கல்லை கல்லுன்னு நீ சொன்னா என்ன - நான் சொன்னா என்ன? நான் சொன்னா எங்க எஜமான் கல்லுன்னுசொல்றாருன்னு எல்லார் கிட்டேயும் போய் சொல்ற....

வெள்ளை: இனிமே சொல்ல மாட்டேனுங்க எஜமான். மேலே கண்ட உரை யாடல் சாட்சாத் அறிஞர் அண்ணா அவர்களால் எழுதப்பட்ட சந்திரோத யம் நாடகத்தின் ஒரு காட்சி.

கல்லுன்னு பக்தன் வாயாலேயே சொல்ல வைத்திருக்கிறார் அறிஞர் அண்ணா.. இந்த உண்மையை மறுக்க முடியுமா?

சிதம்பரத்திலே ஆருத்ரா தரிசனம் பற்றி தடபுடலாக விளம்பரங் கள் செய்யப்படும் இந்தக் கால கட்டத்தில் இந்தச் சிந்தனைப் பொறி பெரி யார் திடலிலிருந்து கிளம் புகிறது பக்தர்களே சிந் திப்பீர்!

- மயிலாடன்

Read more: http://viduthalai.in/e-paper/72278.html#ixzz2nv04b4zJ

தமிழ் ஓவியா said...


நமது இனமானப் பேராசிரியர் வாழ்க! வாழ்கவே!! கழகத் தலைவர் வாழ்த்து!

நமது இனமானப் பேராசிரியர் அவர்களுக்கு 92 ஆவது பிறந்த நாள் விழா இன்று!

இது நமக்கெல்லாம் இனமானத் திருவிழா - பெருவிழா.

நமது இனமானப் பேராசிரியர் அவர்கள் தி.மு.க.வின் பொதுச் செயலாளர்; அது மட்டுமல்ல நமது இனத்தின் தன்மானப் பெருங் குரல், உரிமைக் குரல்!

மனதிற்பட்டதை ஒளிவு மறைவின்றிப் பேசிடும் உண்மையின் உலா அவர்!

கொள்கை, லட்சியங்களையே முன்னிறுத்தி பதவி, பொறுப்புகளை பின்னிறுத்தும் லட்சியத்தின் ஒளி காட்டும் கலங்கரை விளக்கம். அண்ணாமலைப் பல்கலைக் கழகம் அவருக்கு பேரா சிரியராக உயர்ந்திட உதவியது.

அய்யாவும், அண்ணாவும் அவரை இனமானப் பேரா சிரியராக செதுக்கியவர்கள்.
92 வயது இளைஞர்!

உடல் நலம் சீராகி, சிறு கால ஓய்வுக்குப் பின் அவர்தம் இனமானப் பணி இன்றுமுதல் புத்தாக்கத்துடன், புத்தெழுச்சியுடன் புறப்படுகிறது.
92 வயது இளைஞர் அவர் - உணர்வால்!

அவர் பிறந்த இந்நாள் ஒரு வரலாற்றுத் தொடர்ச்சி நாள் என்றே கொள்ள வேண் டும். தந்தை பெரியார் என்ற பகுத்தறிவுப் பகலவன் நமக்கெல்லாம் இனமானம் போதித்த ஆசான், தன் இறுதி முழக் கத்தை முடித்துக் கொண்ட இந்நாள் (19 டிசம்பர்) பேராசிரியரின் பிறந்த நாள்!

திராவிடர் இயக்கத்தின் முழக்கம் தொய்வடையாது தொடரும் என்பதற்கான சரித்திரச் சான்று என்றும் கொள்ளலாம்!

தாய்க் கழகம் வாழ்த்துகிறது

நல்ல உடல்நலத்துடன் நமது இனமானப் பேரா சிரியரின் நூற்றாண்டு விழாவை மானமிகு கலைஞரும், தி.மு.க.வும், தாய்க் கழகமாம் திராவிடர் கழகமும் அவரை வைத்தே கொண்டாடுவோம் என்ற நம்பிக்கையோடு, நல்லெண்ண வாழ்த்தைக் கூறு கிறோம்!

மருத்துவ அறிவியல் வளர்ச்சியில் இது நியாயமான ஆசையே தவிர, பேராசை அல்ல.

இனமானப் பேராசிரியர் வாழ்க,

அவர் பணி தொடர்க வெல்க!

கி.விரமணி
தலைவர்,திராவிடர்கழகம்

முகாம் சிங்கப்பூர்

19 டிசம்பர் 2013

Read more: http://viduthalai.in/e-paper/72293.html#ixzz2nv0CUBv1

தமிழ் ஓவியா said...

பக்தர்கள் பலி




கொழிஞ்சாம்பாறை, டிச.19- கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் கடவளூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் மணீஸ் (வயது 28), ராஜன் (49), சுதாகர் (35), முகேஷ் (29), உண்ணி (35), சுஜா (30) ஆகிய 6 பேர் கடவளூரில் உள்ள சிவன் கோவிலில் நடைபெற்ற திருவா திரை விழாவுக்கு நேற்றுமுன்தினம் இரவு 11 மணிக்கு புறப்பட்டனர். கோவில் அருகே வந்த போது பக் தர்கள் கூட்டத்தில் அவர்கள் கலந் தனர்.

அந்த நேரத்தில் திருச்சூரில் இருந்து கோழிக்கோட்டுக்கு டேங்கர் லாரி வந்தது. எதிரே கோழிக் கோட்டில் இருந்து திருச்சூருக்கு லாரி ஒன்று வந்தது. கோவில் அருகே 2 லாரியும் வந்தபோது எதிர்பாராத விதமாக பயங்கரமாக மோதின.

கட்டுப்பாட்டை இழந்த லாரி பக்தர்கள் கூட்டத்தில் புகுந்தது. கண் இமைக்கும் நேரத்தில் மணீஸ், ராஜன், சுதாகர், முகேஷ், உண்ணி, சுஜா ஆகியோர் மீது லாரி பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் உண்ணி, சுஜாவை தவிர மற்றவர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் பலியானார்கள். உண்ணியும், சுஜாவும் படுகாயம டைந்து உயிருக்கு போராடினர். இதை பார்த்த மற்ற பக்தர்கள் அதிர்ச்சி யடைந்து நாலாபுறமும் சிதறி ஓடினர். இது குறித்து தகவல் கிடைத்ததும் திருச்சூர் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

உயிருக்கு போராடிய உண்ணி யையும், சுஜாவையும் மீட்டு கடவ ளூரில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சேர்த்தனர். இறந்த 4 பேரின் உடல்களையும் பிரேத பரி சோதனைக்காக அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்து குறித்து காவல்துறை யினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கோவிலில் பூட்டை உடைத்து ரூ.24 ஆயிரம் கொள்ளை

சேலம், டிச 19- சேலம் அருகில் உள்ளது உடையாப்பட்டி. இங் குள்ள செல்வநகரில் ராஜகணபதி திருக்கோவில் உள்ளது. இந்த கோவி லுக்கு உடையாப்பட்டி மற்றும் அருகில் உள்ள பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் பலர் வந்து சாமியை வணங்கி செல்வார்கள்.

இந்த கோவில் பூசாரி நேற்று முன்தினம் இரவு கோவிலை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார். நேற்று அதிகாலை கோவிலுக்கு அய்யப்ப பக்தர்கள் சிலர் வந்தனர். அப்பேது கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள் இதுபற்றி கோவில் பூசா ரிக்கு தகவல் தெரிவித்தனர். அவர் உடனே கோவிலுக்கு வந்து பார்த்தார்.

கோவிலில் பொருட்கள் ஏதும் திருட்டு போகவில்லை. ஆனால் கோவிலில் இருந்த பீரோவை காணவில்லை. இந்த பீரோவை திருடர்கள் எங்கு தூக்கி சென்றனர் என அக்கம் பக்கம் அனைவரும் தேடினர்.

அப்பேது இந்த பீரோ கோவில் அருகில் உள்ள ரயில் தண்டவாளம் பகுதியில் கிடந்தது. இதன் பூட்டை உடைத்து உள்ளே இருந்த ரொக்கம் ரூ.24ஆயிரத்தை திருடர்கள் திருடிச் சென்று இருந்தனர். பின்னர் பொது மக்கள் இந்த பீரோவை கோவிலுக்கு தூக்கி வந்தனர். கோவிலில் வேறு ஏதும் பொருட்கள் திருடு போக வில்லை. இந்த துணிகர திருட்டு குறித்து கோவில் பூசாரி பகவதி வீரா ணம் காவல்துறையில் புகார் செய் தார். இதன் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Read more: http://viduthalai.in/page-2/72267.html#ixzz2nv0chIYj

தமிழ் ஓவியா said...


அவசியம்


மூடநம்பிக்கைகளை விடுத்துச் சிந்தனைச் செல்வத்தைப் பெருக்கி, அனைவரும் நாத்திகராக வேண்டியது அவசியம். - (விடுதலை, 12.10.1967)

Read more: http://viduthalai.in/page-2/72262.html#ixzz2nv0lXBay

தமிழ் ஓவியா said...


இலங்கைச் சிறையில் வாடும் தமிழக மீனவர்களை மீட்க மத்திய அரசு இதுவரை உறுதியான நடவடிக்கை எடுத்திடவில்லை


கவிஞர் கனிமொழி குற்றச்சாட்டு

புதுடில்லி, டிச.19- இலங்கைச் சிறையில் வாடி வரும் நூற்றுக்கணக்கான தமிழக மீனவர்களை மீட்டுவர, உறுதியான நடவடிக்கை எதையும் மத்திய அரசு இதுவரை எடுத்திடவில்லை என மாநிலங் களவை தி.மு.க. உறுப்பினர் கவிஞர் கனிமொழி குற்றம் சாட்டியுள்ளார்.

பாதிக்கப்படும் இந்தியர்களைக் காத்திட வெளியுறவுக் கொள்கையில் மாற்றங்களை கொண்டு வர வேண்டியது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். மாநிலங்களவையில் நேற்று (18.12.2013) பேசிய கவிஞர் கனிமொழி, அமெரிக்காவில் இந்திய பெண் அய்.எஃஎஸ் அதிகாரி தேவயானி கைவிலங்கிடப் பட்டு அவமரியாதை செய்யப்பட்டதை குறிப் பிட்டதோடு ஒரு தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த பெண் என்பதாலேயே அவருக்கு இந்த அநீதி இழைக்கப்பட்டதாக அவர் குற்றம் சாட்டினார். அமெரிக்கா தனது செயலை நியாயப்படுத்தி யிருப்பதற்கும் கண்டனம் தெரிவித்தார்.

பெண் அதிகாரி அவமானப்படுத்தப்பட்ட விவகாரம், நாட்டில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளதையும், இந்த விவகாரத்தில் மத்திய அரசு பல எதிர் நடவடிக்கைகளை எடுத்திருப் பதையும் கவிஞர் கனிமொழி சுட்டிக் காட்டினார்.
இந்திய அரசியல் தலைவர்கள் பலர் அமெரிக்காவில் இதுபோன்ற அத்துமீறல்களுக்கு ஆளாகியிருக்கிறார்கள் என்பதையும் அவர் நினைவூட்டினார். இதேபோல், இலங்கைக் கடற்படையால் சிறை பிடித்துச் செல்லப்பட்ட நூற்றுக்கணக்கான தமிழக மீனவர்கள், அந்நாட்டு சிறையில் வாடி வருவது தெரிந்தும், அவர்களை மீட்க மத்திய அரசு இது வரை உறுதியான நட வடிக்கை எடுக்க வில்லை யே ஏன்? என்றும் கவிஞர் கனிமொழி கேள்வி எழுப் பினார்.
பாதிக்கப்படும் இந்தியர் களைக் காத்திட வெளி யுறவுக் கொள்கையில் மாற்றங்களை கொண்டு வர வேண்டியது அவசியம் என்றும் கவிஞர் கனிமொழி வலியுறுத்தினார்.
இலங்கையில் நூற்றுக்கணக்கான மீனவர்கள் சிறையில் வாடி வருகின்றனர். அவர்களை மீட்க மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதிகார மட்டத்தில் பேச்சு வார்த்தையும் நடத்த வில்லை. யாருமே இதனை பெரியதாக எடுத்துக் கொள்ளவில்லை, என்றும் குறிப்பிட்டார்.
நமது உரிமைகளுக்காக நாம் போராடவும் இல்லை. இதில் தீர்வு காண்பதற்கு பதிலாக இந்திய அரசு பணிந்து போய் கொண்டிருக்கிறது என்று அவர் குற்றம் சாட்டினார்.
வெளிநாடுகளில் இந்தியர்கள் தாக்கப்படுவதைத் தடுக்க உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தியர்களை பாதுகாக்கும் வகையில் வெளி நாட்டுக் கொள்கைகளில் திருத்தம் கொண்டு வர வேண்டியது அவசியம் இப்போது ஏற்பட்டுள்ளது என்று கவிஞர் கனிமொழி குறிப்பிட்டார்.

Read more: http://viduthalai.in/page-3/72313.html#ixzz2nv1AmIy4