Search This Blog

30.12.10

சேஷலூ குட்டி அடுத்தாத்து சுக்கூருடன் ராத்திரி ஓடிட்டா.!


அப்போதே வாக்குக் கொடுத்திட்டேன்


தாய்: ஏண்டி சேஷலூ குட்டி அவன் சாயபு ஆச்சுதேடி அவன்கிட்டே என்னடி ரகசியம் பேசுறே.

மகள்: இல்லே அம்மா நான் சின்னக் குழந்தையா இருக்கச்சே வீதியிலே விளையாண்டிருந்தப்போ மணலிலே ஒரு வீடு கட்டினேன். அதை வந்து இந்த அடுத்த ஆத்து சுக்கூர் இடிக்க வந்தான். நான் இடிக்காதடா என்று சொன்னேன், அப்படியானால் என்னைக் கட்டிக்கிறாயா என்று கேட்டான், நானு வீடு இடிந்துபோமேன்னு ஆகட்டுமென்று சொல்லிட்டேன். அதை இத்தனை நாள் மனசிலே வெச்சிண்டிருந்து இப்ப வந்து கேக்கராண்டி.

தாய்: நீ என்னடி சொன்னாய்.

மகள்: நான் என்னம்மா சொல்லட்டும், ஆகட்டுமென்னுதான் சொல்லித் தொலைச்சேன்.

தாய்: அடிஅடி நாசமாப்போன முண்டே! துலுக்கனையா கட்டிக்கிரேண்ணு சொன்னே, நீ பேதியிலே போக, நீ பிளேக்கிலே போக, உனக்கு ஒரு உளமாந்தை வர.

மகள்: கோவிச்சுக்காதே அம்மா! அப்ப நான் ஆகட்டும் என்னு சொல்லியிருந்தேன் அல்லவா, அதை வச்சிண்டு வந்து கேட்டான். பின்னே நான் என்ன சொல்றது.

அப்ப நான் அப்படி சொல்லாதெ இருந்தா வீட்டை இடிச்சிருப்பானம்மா?

தாய்: உன் தலையிலே நெருப்பைக் கொட்ட, நான் 2, 3 வருஷத்திற்கு முன்னையே உன்னைக் கல்யாணம் பண்ணனும் என்னு உங்கப்பாஓடே சொன்னபோது, உங்கப்பா சாரதா சட்டமோ லக்ஷிமி சட்டமோ என்னமோ பேரெழவு சட்டம் குறுக்கிடறதடி என்று சொன்னார் அந்தப் பிராமணன். இப்போ நீ மண்ணுக் கொளிச்சிண்டு விளையாடற போதே அவனுக்கு வாக்குக்கொடுத்துட்டேன் என்கின்றாயே, இன்னம் கொஞ்ச நாள் போனா பறையனுக்கும் சக்கிலிக்கும் பால் குடிக்கிறபோதே வாக்குக்கொடுத்துட்டே னென்றல்லவாடி சொல்லுவாய். என் வயிறு பத்தி எறியரதேடி, நீ அந்த சுக்கூரோடு கொஞ்சினதைப் பார்த்து.

மகள்: இல்லே அம்மா உன்னெதிரிலே நான் கொஞ்சுவேனா அம்மா? 2, 3, வருஷத்திற்கு முன்னே கல்யாணம் ஆயிருந்தால் கூட அப்பவும் நான் வாக்குத் தவறமாட்டேனம்மா. இதுக்கு நீதான் ஒரு வழி சொல்லேன். இப்ப அவன் வந்து நீ சொன்ன வார்த்தை என்னடி சேஷலூ குட்டி என்றானே, அப்பவும் இப்படித்தானே கேட்பான்.

தாய்: அடி சண்டாளி சொன்ன வார்த்தையாவது மண்ணாங்கட்டியாவது அவன் இனிமே இங்கே வந்தா உன் மயிரை அறுத்துடுவேன் தெரியுமா?

சின்னக் குழந்தையாய் இருக்கும்போது என்னமோ சொன்னாளாம் அவன் வந்து இப்போ கேக்கறானாம் என்னடி அனியாயம் இது?

மகள்: நீ மயிரை அறுக்கவாண்டாம் அம்மா சுக்கூரே என் மயிரைக் கத்தரிச்சூடறேன் என்று சொல்லி இருக்கான். யாரோ சரோஜனி குட்டிகளாம் அதுகள் மயிரைக் கத்திரிச்சிண்டிருக்காம். அதுமாதிரி என்னையும் கத்தரிச்சு விட்றேன்னு சொன்னான்.

தாய்: அய்யய்யோ கெட்டுப்போச்சடி காரியம். நம்ம குடும்பத்தையே ஜாதியையே பாழாக்கீட்டாயே நான் காவேரியில் போய் வீழ்ந்துடறேண்டி உன்னாலே.

மகள்: அம்மாம்மா, வேண்டாம்மா பின்னெ நான் என்னாம்மா சொல்லட்டும் சுக்கூருக்கு?

தாய்: என்னடி சொல்லறது. நான் அப்போ கொழந்தையா இருக்கச்சே வேடிக்கையா சொன்னா இப்ப என்னமாடா வந்து இத்தனை தைரியமாக் கேக்கறாய் என்று அதட்டிச் சொல்லடி.

மகள்: இப்பவும் நான் கொழந்தை தாம்மா.

இப்ப யாரையாவது கட்டிண்டா கட்டின ஆம்படையானை இன்னும் 10 நாள் பொறுத்து நான் கொழந்தையா இருக்கும்போது கல்யாணம் செய்தூண்டேன் நீ வாண்டாம் போண்ணு சொன்னா போய்டுவானா? அப்படிதாம்மா சுக்கூரும் கேட்பான். ஒரு தடவை வாக்குத் தவறினால் என்ன? இரண்டு தடவை வாக்குத் தவறினால் என்ன? அப்புறம் தினம் தினம் வாக்குத் தவறினால் தான் என்னம்மா?

நான் சுக்கூர் கிட்ட சொல்லீட்டேன். கட்டினா அவனைக் கட்டிக்கிறேன். இல்லாவிட்டால் கன்னியா மடத்தில் சேர்ந்துக்கிறேன். எனக்குப் புருஷனே வாண்டாம், சுக்கூர் முகத்தில் மறுபடியும் நான் எப்படி விழிப்பேன்.

தாய்: உங்கப்பா வரட்டுமடி, நாளை காலையில் வரப்போரார். இதெல்லாம் அவரிடம் சொல்லி உன்னை இந்த வாரத்துக்குள்ளாகவே எவன் தலையிலாவது கட்டித்தொலைத்து விட்றேன்.

மகள்: அப்படியா என்னமோ செய்துக்கோ நான் என்னமோ சுக்கூருக்கு வார்த்தை கொடுத்திட்டேன்.

தாய்: உம், உம் கொடுப்பேடி ஆள் எளப்பாளியாய் இருந்தால் (என்று சொல்லி விட்டு பேச்சை முடித்து விட்டாள்.)

(இரவு 1 மணிக்கு சுக்கூரும் சேஷலூக் குட்டியும் டப்பிள். தகப்பனார் வந்தார்.)

தாய்: ஏம் பேசலே கேட்டீளா சேஷலூ குட்டி அடுத்தாத்து சுக்கூருடன் ராத்திரி ஓடிட்டா.

தகப்பன்: அவனோடு தான் போனாள் என்று உனக்கு எப்படிடீ தெரியும்.

தாய்: நேற்று அவனோடு சிரிச்சிண்டு பேசிகிண்டிருந்தா. நான் கண்டிச்சேன். அவள் ஒரு தைரியம் சின்ன கொழந்தையாய் மண்ணுக் கொளிச்சிண்டு விளையாடும்போது அவனைக் கட்டிக்கிறேண்ணு வாக்குக் கொடுத்துட்டாளாம். அதுக்காக அவனை கட்டிக்கணுமாம். அப்படின்னு என்னிடம் சொல்றா, வஸ்சேன் அப்பா வந்த சொல்ரேண்ணே. பயந்துண்டு ஓடிட்டா முண்டை.

தகப்பன்: சனியன் தொலைந்தது போ. அவன் மேலே அவளுக்கு ஆசை வந்துட்டுது என்னமோ சொல்லிண்டு ஓடிட்டா. நல்லகாரியம் இந்த நம்ம அயோக்கிய ஜாதியிலேயே அவளுக்கு தகுந்த மாப்பிள்ளை வேணுமுண்ணா 5000 ரூ வரதக்ஷணை கல்யாணச் செலவு 2000 ரூ ஆக 7000 ரூபாயிக்கு எங்கே போரது யாரை விக்கிறது.

போகட்டும் போ அவனும் SSLC. பாசுபண்ணி இருக்கான். நல்ல அசல் சாயபு. பிராமணனாட்டமா செக்கச்செவேரெண்ணு இருக்கான். பிராமணன் M.A. படிக்கிறதும் சரி சாயபு SSLC படிக்கிறதும் சரி, சீக்கிரத்திலெ ஏதோ வேலைக்கு வந்துடுவன், நம்மை விட்டது சனியன்.

தாய்: ஐயய்யோ அசட்டு பிராமணா அப்படிதான் இருந்தாலும் ஒரு முதலி நாயக்கன் இல்லையா சாயப்போடவா ஓடரது.

தகப்பன்: என்னமோ அவ கண்ணுக்கு பிடிச்சவனோடு போய்ட்டா. நம்ம ஜாதியில் இல்லாவிட்டால் வேறு யாரோடு போனால்தான் என்ன? முதலிக்கும் சாயபுக்கும் என்னடி வித்தியாசம் மொட்டை ஒன்றுதானே, உனக்கு என்னத்துக்கடி இத்தனை ஆத்திரம்.

தாய்: சுக்கூர் அவாத்திலே பொண்ணை மூடி போட்டல்லவா வெச்சூடுவா. இனி அவளைப் பார்க்க முடியுமா.

தகப்பன்: நீ வேணுமன்னா அவாத்துக்கு போய் தினம் பாத்துட்டு வாடி யாரு வாண்டாமென்றா.

தாய்: சரி சரி அவாத்துக்கு போனா நாலுபேரு என்ன சொல்லுவா.

தகப்பன்: என்னமோ சொல்லுவா நான் சம்மதிச்சா அப்பரம் யார்டீ கேக்ரெவா இனி அப்படித்தாண்டி எல்லாம். ராஜகோபாலாச்சாரியார் சேட்டுக்கு பெண் கொடுக்கலையா?

சூரியராவ் நாயுடு ஒரு சாயபுக்கு பெண் கொடுக்கலையா? நீலகண்ட சாஸ்திரி வெள்ளைக்காரனுக்கு பெண் கொடுக்கலையா? சடோபாத்தியாயா நாயுடுக்கு பெண் கொடுக்கவில்லையா? நாம்தானா கெட்டுப்போயிட்டோம். அதுவும் நாமா கல்யாணம் செய்து கொடுத்தமா அவளே ஓடிட்டா.

நமக்கு என்னடி பயம் ரூ 7000 மிச்ச மாச்சடி சுக்கூர் அவப்பா சிபார்சிலே நம்ம மணிக்கி கூட ஒரு உத்தியோகம் வந்துடும். நீ ஒண்ணும் சத்தம் போடாதே. யாராவது கேட்டால் காங்கிரஸ்காரர் கேட்டா இந்து முஸ்லீம் ஒற்றுமை என்று சொல்லடி. ஜஸ்டிஸ்காரர் கேட்டா சுயமரியாதையில் சேர்ந்துட்டோம் என்று சொல்லடி, அப்பரம் யார் நம்மண்டை வருவா பார்ப்போம்.

தாய்: சரி பகவானே காலம் இப்படியா கெட்டுப்போகணும்?

தகப்பன்: என்னடி கெட்டுப்போச்சி? நாளவருஷத்துக்குப் பார்டீ சேஷலூகுட்டி தங்க விக்கிரகமாட்டமா பிள்ளை பெத்துடப்போரா எங்கயோ அவா சௌக்கியமாய் இருந்தால் சரி, போய் வேலையைப் பார்.

------------------- சித்திரபுத்திரன் என்ற பெயரில் தந்தைபெரியார் எழுதியது --- “பகுத்தறிவு” - ஜனவரி 1936

29.12.10

பார்ப்பனர் எதிர்ப்பா? பார்ப்பனீய எதிர்ப்பா? எது சரி?


பார்ப்பனர் எதிர்ப்பா? பார்ப்பனீய எதிர்ப்பா? எது சரி?

நீங்கள் வெறுப்பது பார்ப்பானையா? அல்லது பார்ப்பனீயத்தையா? அல்லது பார்ப்பனீயம் என்பது என்ன? என்ற கேள்விகளுக்குப் பதில் என்பது என்ன? பார்ப்பானில் இருந்துதானே பார்ப்பனீயம் வந்தது; எனவேதான் பார்ப்பான் ஒழிய வேண்டும் என்கிறேன்.

திருடனை வெறுக்கிறாயா அல்லது திருட்டை வெறுக்கிறாயா என்பது போல் இருக்கிறது; திருடனாக இருப்பதால்தானே அவன் திருடுகிறான்; எனவே இது அர்த்தமற்றதாகும். திருட்டுதனத்தை வெறுக்கும்போது திருடனையும் வெறுப்பதாகத்தானே அர்த்தம்? எனவே பார்ப்பானில் இருந்துதான் பார்ப்பனீயம் வந்தது; மூலத்தை ஒழிக்கப்பாடுபடுகிறேன்.

------------ 31.08.1959 சிதம்பரத்தை அடுத்த கண்ணன்குடியில் பெரியார் ஈ.வெ.ரா.சொற்பொழிவு. “விடுதலை” 11.09.1959

முட்டாள்கள் என்ன இந்தியாவுக்கே ஏக போகமா?

யாகம் என்னும் கலாச்சாரம்!

யாகம் என்ற பெயரால் தீயில் உயிர்களைப் பலி கொடுப்பது என்பது ஆரியர்களின் கலாச்சாரம்.

ஆரியர்களின் இந்தத் தாக்கத்தால் தமிழ் அரசர்களும் கெட்டுக் குட்டிச் சுவர் ஆனதும் உண்டு. பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதிகள் தோன்றினார்கள். சிலப்பதிகாரத்திலும் பார்ப்பன யாகக் கடை விரிக்கப்பட்டுவிட்டது.

வடபுலம் என்று வீரப் பராக்கிரமம் காட்டி கனக விசயன் தலையில் கல்லேற்றி வந்த வீராதி வீரன் செங்குட்டுவன் மாடல மறையோன் என்னும் பார்ப்பன நஞ்சு, ஊட்டிய மதப் போதையில் சிக்கி யாகம் நடத்தி, மானம் கெட்டான்.

பார்ப்பனர்களின் இந்த யாகத்தை எதிர்த்து கவுதமப் புத்தர் 2500 ஆண்டுகளுக்குமுன் போர்க் கொடி தூக்கினார்.

ஆடு, மாடுகளைத் தீயில் பலி கொடுத்து சொர்க்கம் போக முடியும் என்றால், உமது தகப்பனாரை யாகத் தீயில் போட்டுப் பொசுக்கி, நேரடியாக மோட்சம் போவதுதானே? என்ற அறிவு சார்ந்த வினாவை நாக்கைப் பிடுங்கும்படிக் கேட்டார்.

தசரதன் நடத்திய புத்திரகாமேஷ்டி யாகம், காட்டு விலங்காண்டித்தனமானது. வெட்டுண்ட குதிரைகளுடன் தசரதனின் பட்டத்தரசிகள் கட்டிப் புரண்டனர் என்பது என்னே கண்ணராவி!

யாகப் புரோகிதர்களுடன் பட்டத்தரசிகளை அனுப்பி வைத்து அவர்கள்மூலம் கர்ப்பமாக்க வைத்த காரியம்தான் இந்து மதக் கலாச்சாரத்தின் உச்சகட்டம்.

ஆரியர்களின் யஜுர் வேதம் என்பது முழுக்க முழுக்க உயிர்க் கொலை யாகங்கள் பற்றியே பிரஸ்தாபிப்பதாகும். 30 வகை யாகங்கள்பற்றிக் கூறப்படுகின்றன. அதில் ஒன்று அஸ்வ, மனுஷ்ய, அஜ, கோ பசுப்ர சமஸா என்பதாகும்.

குதிரை, மனிதன், ஆடு, மாடு முதலிய உயிர்களைக் கொன்று யாகம் நடத்துவதாகும்.

அரிச்சந்திரன் என்ற அரசன் புத்திரப் பேறில்லாது வருந்திக் கொண்டிருந்தபோது வருண தேவனின் கட்டளைக்கிணங்கி அஜூகர்த்த முனிவரின் புத்திரனான சுன சேபன் என்பவனை விலைக்கு வாங்கி, அவனைக் கொன்று நரமேத யாகம் செய்த தகவல் ரிக் வேதத்தில் கூறப்பட்டுள்ளது. விசுவாமித்திரனின் சகோதரியின் மகன் அச்சிறுவன்; கடைசி நேரத்தில் தன் தவ வலிமையால் காப்பாற்றினாராம் முனிவர்.

இந்தக் காட்டுவிலங்காண்டித்தனத்தை எதிர்த்த பவுத்தர்களையும், சமணர்களையும் படுகொலை செய்தது பார்ப்பனியம்.

எண்ணாயிரம் சமணர்களைக் கழுவில் ஏற்றிய கொலைகார மதம்தான் இந்தப் பார்ப்பன இந்து மதம்.

வேத வேள்வியை நிந்தனை செய் துழல்

ஆத மில்லிய மனோடு தேரரை

வாதில் வென்றழிக்க திரு வுள்ளமே

வேதங்களை யாகங்களைப் பழிக்கும் சமணர்களை வென்று அழித்திட அருள்புரிவாயாக என்று கடவுளுக்கு விண்ணப்பம் போடுகிறான் தேவார திருஞான சம்பந்தன்.

யாகங்களை பவுத்த சமணர்கள் எதிர்த்ததும், அவர்களைப் பார்ப்பனர்கள் அழித்ததும் நமது வரலாறாகும்.

இவ்வளவு பீடிகையும் எதற்காக? அண்மைக்காலமாகப் பார்ப்பனர்கள் யாகக் கலாச்சாரத்தை ஊக்குவித்து வருகிறார்கள். உலக க்ஷேமத்தை யாகம் என்று சொல்லிக் கொள்கிறார்கள்.

எத்தனை எத்தனை ஆண்டுகாலமாக இத்தகைய யாகங்களை நடத்தி வருகிறார்கள்? நாட்டில் அமைதி தாண்டவம் ஆடிவிட்டதா?

இதோ ஒரு செய்தி:

கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பையடுத்த குமாரகுடியில் ஏகாதசி மகா ருத்ர யாகமாம்.

இதில் ஜப்பான் நாட்டினர் நூறு பேர்கள் கலந்துகொண்டனராம். (முட்டாள்கள் என்ன இந்தியாவுக்கே ஏக போகமா? என்று தந்தை பெரியார் கேட்ட கேள்விதான் நினைவிற்கு வருகிறது).

150-க்கும் மேற்பட்ட வேதப் பார்ப்பனர்கள் இந்த யாகத்தை நடத்தினார்களாம். ஸ்ரீ அகத்திய நாடி ஜோதிட நிலையம் மற்றும் ஜப்பான் நாட்டின் அபி இண்டர்நேஷனல் இன் கார்ப் நிறுவனமும் இணைந்து உலக நன்மை வேண்டி இந்த யாகத்தை நடத்தினவாம்.

எவ்வளவு உணவுப் பொருள்கள் பாழாகி இருக்கும்? எவ்வளவுப் பட்டுச் சேலைகளைக் கொளுத்தியிருப்பார்கள்?

உற்பத்தி நாசம் செய்யும் இந்தக் கொடியவர்களைத் தண்டிக்க வேண்டாமா?

வேதப் பார்ப்பனர்கள் சுரண்டிக் கொழுத்து, பார்ப்பனக் கலாச்சாரத்தைத் தூக்கி நிறுத்தத்தான் இத்தியாதி யாகங்கள்.

சிந்திக்கும் திறனிருந்தால் சிந்தியுங்கள்!

-------------- கருஞ்சட்டை -27-12-2010 "விடுதலை” யில் எழுதிய கட்டுரை

27.12.10

கருஞ்சிறுத்தைகளும்-விடுதலை சிறுத்தைகளும்

உலகப் பந்தில் தமிழர்களுக்கென தனி நாடு உருவாக

கருஞ்சிறுத்தைகளும், விடுதலை சிறுத்தைகளும் ஒன்றிணைந்து போராடும்!

தமிழர் இறையாண்மை மாநாட்டில் தமிழர் தலைவர் பிரகடனம்!

உலகில் தமிழர்களுக்கென ஒரு நாடு உருவாக, ஈழம் மலர விடுதலைச் சிறுத்தை களும், கருஞ்சிறுத்தைகளும் போராடும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள். ஒடுக்கப்பட்ட மக்கள் உரிமைப் பதாகையை எரிமலையாகத் தங்கள் தோள்களில் சுமந்து எழுந்துவிட்டார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டாக ஒரு மாநாடு சென்னையையடுத்த மறைமலை நகரில் நேற்று நடைபெற்றது.

பல லட்சம் மக்கள் - பரந்த கடல் என இன எழுச்சி அலைகளை மலை உயரத்திற்கு எழுப்பிய ஓர் உணர்ச்சிக் காவியத்தை நேற்று மாலை எழுதி யது.

தமிழர் இறையாண்மை மாநாடு - விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஏற்பாடு செய்யப் பட்ட மாநாடு அது.

அணி அணியாக - அலை அலையாக மக்கள் திரள்

நேற்று பிற்பகல் முதற்கொண்டே மறைமலை நகரை நோக்கி தமிழ்நாட்டின் பல திசைகளிலி ருந்தும் வாகனங்கள் மூலமாக விடுதலைச் சிறுத்தை கள் கட்சியின் தோழர்கள் திரண்டுகொண்டே இருந்தனர். அந்த ஊர் இந்த மக்கள் கடலைத் தாங்குமா என்கிற அளவுக்குப் பொதுமக்களே திகைத்தனர். ஏற்பாடு செய்து அழைத்து வரப்பட்ட கூட்டம் அல்ல இது! எழுச்சி அக்னிக் கடலாக அல்லவா குழுமியிருந்தனர்!

இந்த நிகழ்ச்சியிலே பங்குகொள்ள தமிழர் தலைவர் திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் கார்மூலமாகப் புறப்பட்டு, தாம்பரத்தைக் கடந்து மறைமலை நகரை அடைவதற்குள் பெரும்பாடு!

அவ்வளவு வாகனங்கள் - மக்கள் திரள்! மாநாட்டு மேடைக்கு மக்கள் சமுத்திரத்தில் நீந்திதான் அவர் செல்ல வேண்டியிருந்தது. கழகத் தோழர்களும், விடுதலைச் சிறுத்தைத் தோழர்களும் இருமருங்கும் சங்கிலியாகக் கைகளை இணைத்து மேடைக்குக் கொண்டு செல்வதற்குள் போதும் போதும் என்று ஆயிற்று!

அய்.நா. சபைக் கட்டடம்

தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், கட்-அவுட்டுகள் மின்னொளியில் பிரகாசித்தன. திறந்த வெளி மேடையாக அமைக்கப்பட்டிருந்தது. மேடையின் பின்புறத்தில் (Backdrop) அய்.நா. சபைக் கட்டடமும், அதில் பல நாடுகளின் கொடி பறக்கும் காட்சியும் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டிருந்தது.

உலகம் முழுவதும் பத்து கோடிக்கும் மேல் தமிழர்கள் வாழ்ந்து கொண்டிருந்தாலும் தமிழனுக் கென்று உலகில் ஒரு நாடு இல்லையே, தாயகம் இல் லையே என்ற ஏக்கம் உலகத் தமிழர்கள் மத்தியில் கனன்று கொண்டிருக்கும் உணர்வுதானே! அதன் வடிகாலைத்தான் அந்த மாநாட்டின் அப்பழுக்கற்ற உணர்ச்சியின் பிரவாகத்தில் காண முடிந்தது.

தமிழர் தலைவருக்கு வரவேற்பு

மாநாட்டு மேடைக்கு தமிழர் தலைவர் சென்று கொண்டிருந்தபோது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித் தமிழர் மானமிகு தொல். திருமாவளவன் அவர்கள் அன்பு வரவேற்பு முழக்கத்தைக் கொடுத்தார். மக்கள் கடல் பலத்த கரவொலி எழுப்பித் தமிழர் தலைவரை வரவேற்றது.

ஏராளமான தோழர்கள் புடைசூழத் தமிழர் தலைவர் தமிழர் இறையாண்மை மாநாட்டுக்குச் சென்றார்.

மாநாட்டு மேடைக்கு வந்த தமிழர் தலைவருக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் பொன்னாடை போர்த்தியும், பூங் கொத்து கொடுத்தும் வரவேற்றார். மாநாட்டு மலரை யும், தமிழ் செம்மொழி நூலினையும் நினைவுப் பரிசாக அளித்தார். தொல். திருமாவளவனுக்குத் தமிழர் தலைவர் சால்வை அணிவித்து வாழ்த்தினார்.

தீர்மானங்கள்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி. 30 அரிய தீர்மானங் களை முன்மொழிந்தார். ஒவ்வொரு தீர்மானமும் வலம்புரி முத்தாக ஜொலித்தன. 30 தீர்மானங் களையும் முன்மொழிய அவர் எடுத்துக்கொண்ட நேரம் 30 நிமிடங்களாகும்.

முதல் தீர்மானம் இரங்கல் தீர்மானமாகும்.

அதனையடுத்து கட்சித் தலைவரால் முன்மொழி யப்பட்ட ஒவ்வொரு தீர்மானத்தையும் மக்கள் கடல் ஆர்ப்பரித்து வரவேற்றது.

30 தீர்மானங்களும் முன்மொழியப்பட்ட நிலையில், கோடையிடியென மக்கள் மாக்கடல் பலத்த கரவொலி அலைகளை எழுப்பி தீர்மானங்களை நிறைவேற்றிக் கொடுத்தது.

தமிழர் தலைவர் உரை

கொடியை ஏற்றி முடிந்தவுடன், உணர்ச்சிப் பிரவாகத்திற்கிடையில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்களின் உரை கருஞ்சிறுத்தையின் கர்ச்சனையாக அமைந்திருந்தது.

தமிழர்களின் எழுச்சி வரலாற்றில் திருப்புமுனை மாநாடு இது. தமிழர்களின் உணர்வைப் பதிவு செய்யும் மாநாடு (பலத்த கரவொலி!). தமிழர்களின் உணர்வினை உலகம் உணர்ந்து கொள்ளச் செய்யும் அச்சாணி மாநாடு.

இங்கு நிறைவேற்றப்பட்ட 30 தீர்மானங்கள் ஒவ்வொன்றும் உலகத் தேசிய இனங்களால் ஆராயப்படக் கூடியவை.

நானும் வழிமொழிகிறேன்!

பல கோடி தமிழர்கள் சார்பாகவும், தந்தை பெரியாரின் தொண்டன், அண்ணல் அம்பேத்கரின் மாணவன் என்ற முறையிலும் இந்தத் தீர்மானங் களை நானும் ஒருமுறை வழிமொழிகிறேன்.

தமிழினம் தளர்ந்து போய்விட்டது என்று நம் எதிரிகள் கணக்குப் போட்டுக் கொண்டிருக்கும் ஒரு காலகட்டத்தில் அது தப்புக் கணக்கு; சோதனைகளை வெல்லுவோம் தோள் தூக்கிப் புறப்பட்டோம் என்று காட்டுகிற மாநாடு இது! புலிகளை அடக்கிவிட்டோம் என்று மனப்பால் குடித்தவர்களுக்கு இதோ கருஞ்சிறுத்தைகளும், விடுதலைச் சிறுத்தைகளும் இணைந்து புறப்பட்டு விட்டன என்று காட்டக்கூடிய வரலாற்றுச் சிறப்புமிக்க எழுச்சி மாநாடு இது!

மிகப்பெரிய போர்ப் படையை நடத்தும் தளபதியாக எனது அருமைச் சகோதரர் தொல். திருமாவளவன் இந்த எழுச்சி மாநாட்டைக் கூட்டியுள்ளார்.

வெள்ளம்போல் தமிழர் கூட்டம் இது. உடலால் பலராய்க் காண்பினும், உள்ளத்தால் ஒருவராய்க் கூடியிருக்கிறோம்.

பேச்சல்ல - திட்டங்களும் செயல்களுமே முக்கியம்!

நிறைய பேச வேண்டிய அவசியம் இல்லை. இந்த முப்பது தீர்மானங்களையும் எப்படி செயல்படுத்தப் போகிறோம் என்று திட்டம் தீட்டுவதுதான் மிக முக்கியம்.

இத்தீர்மானங்கள் நாடெங்கும் விவாதிக்கப்படும் - விவாதிக்கவும்படட்டும். இன்று இல்லாவிட்டாலும், நாளை அரசு சட்டங்களாக வெளிவர வாய்ப்புள்ள தீர்மானங்கள் இவை.

இதே செங்கற்பட்டு மாவட்டத்தில் செங்கற் பட்டில் 1929 இல் தந்தை பெரியார் அவர்களால் கூட்டப்பெற்ற முதல் மாகாண சுயமரியாதை மாநாட்டில் தந்தை பெரியார் நிறைவேற்றிய தீர்மானங்கள் பிற்காலத்தில் சட்டமானதுண்டு. தமிழ்நாட்டில் மட்டுமல்ல; இந்தியாவில் மட்டுமல்ல; அந்தத் தீர்மானங்களில் பல வெளிநாடு களிலும் கூட சட்டமாகியுள்ளன. அதேபோல்தான் இத்தீர்மானங்களும் செயல்படுத்தப்பட வேண்டி யவை - நாட்டின் சட்டங்களாக ஆகவேண்டியவை.

நான் கலந்துகொள்வதேன்?

இந்த மாநாட்டில் நான் பங்கேற்க வேண்டும் என்று சகோதரர் தொல்.திருமாவளவன் தொலைப்பேசியில் கேட்டார் - உடனே ஒப்புக் கொண்டேன்.

கருஞ்சிறுத்தைகளாகிய எங்களுக்கும், விடுதலைச் சிறுத்தைகளுக்கும் அதிக வேறுபாடு கிடையாது. ஒரே ஒரு கோடுதான் இடையில் வித்தியாசம்.

நாங்கள் சட்டசபைக்கோ, நாடாளுமன்றத் துக்கோ போகக் கூடியவர்கள் அல்லர் - தேர்தலில் நிற்கக் கூடியவர்களும் அல்லர்.

ஆனால், நாங்கள் சட்டமன்றம், நாடாளுமன்றம் செல்லாவிட்டாலும், யார் அந்த இடத்துக்குச் செல்ல வேண்டுமோ, அவர்களை அனுப்பி வைக்கக் கூடியவர்கள் நாங்கள். தி.க.வும் - தி.மு.க.வும் இரட்டைக் குழல் துப்பாக்கி என்பதுபோலவேதான் விடுதலைச் சிறுத்தைகளும் எங்களுக்கு.

தமிழர்களுக்கு ஒரு தாயகம் வேண்டும்; ஈழத்தில் தனிக்கொடி பறக்கவேண்டும் என்ற உணர்வை வெளிப்படுத்திடும் வண்ணம் இந்தக் கொடியை நானும், சகோதரர் திருமாவளவனும் இணைந்து ஏற்றியிருக்கிறோம். இந்தக் கொடி தாழாது - வீழாது. இது ஒரு தொடக்கம்!

மதுரையில் நடத்திய ஈழ விடுதலை மாநாடு

மதுரையிலே தமிழ் ஈழ விடுதலை மாநாட் டினைத் திராவிடர் கழகம் நடத்தியது (1983 டிசம்பர் 18) அந்த மாநாட்டிலே ஈழத்துத் தோழன் குமரி நாடன் ஈழ விடுதலைக் கொடியை ஏற்றினான். அதற்கடுத்து அதே உணர்வோடு இங்கு இந்தக் கொடியை ஏற்றியிருக்கிறோம். இது ஒரு அடையாளம்தான் என்றாலும், நாளையோ, நாளை மறுநாளோ கட்டாயம் நடக்கப் போவதுதான்! (பலத்த கரவொலி!).

உலகிலேயே தலைசிறந்த நிருவாகி என்று பெயர் எடுத்தவர் சிங்கப்பூர் அதிபராகயிருந்த லீக்வான்யூ - அவர் ஒன்றும் நம் இனத்துக்காரர் அல்ல; பொதுவான மனிதர்; அவர் எழுதி வெளிவந்துள்ள நூலில் மிகத் தெளிவாகவே குறிப்பிட்டுள்ளார். தமிழர்களை அழித்துவிடலாம் என்று ராஜபக்சே நினைக்கலாம் - ஆனாலும், அதில் அவர் வெற்றி பெற முடியாது. ஈழத்திலே ஒரு நாள் தமிழர்கள் தங்கள் நாட்டை அடைந்தே தீருவார்கள் என்று எழுதியுள்ளாரே!

அய்.நா. ஏற்றுக்கொண்ட ஒன்றுதான்!

உலக மக்களின் இனவழி தேசிய உணர்வை, இன வாரியான தேசியத்தை அய்.நா. ஏற்றுக் கொண்டி ருக்கிறது. மக்களின் வாழ்வுரிமைக்கு உத்தரவாதம் தேவை என்பதும் உலகம் ஒப்புக்கொண்ட ஒன்றுதான். ஈழத் தமிழர்கள் அதில் விதிவிலக்கல்ல.

அந்த அடிப்படை உரிமை உணர்வோடுதான் இந்த மாநாடு இங்கே நடத்தப்படுகிறது. தீர்மானங் களும் வடிக்கப்பட்டுள்ளன.

மேக்னகார்ட்டா!

இவை உலகத் தமிழினத்தின் பேரறிக்கை ஆயபயேஉயசவய (பலத்த கைதட்டல்!). எங்கள் தமிழர் எடுத்த வியூகத்தில் தோற்று இருக்கலாம்; சில களங்கள் தோல்வியிலும் முடிந்திருக்கலாம். அதற்காகப் போரில் தோற்று விட்டோம் - இனி எழ மாட்டோம் என்று அதற்கு அர்த்தமல்ல! எங்கள் தமிழர் மீண்டும் எழுவார்கள் - உரிமைகளை மீட்பார்கள் என்பதற்கான அடை யாளமே இம்மாநாடு.

நானும், திருமாவளவனும் சேர்ந்து பேசுவோம்!

இந்தத் தீர்மானங்கள் இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்டதோடு முடிந்துவிட்டதாகக் கருதக்கூடாது. இது மக்கள் மத்தியில் கொண்டு செல்லப்படவேண்டும். நானும், சகோதரர் திருமாவளவனும் தமிழ்நாட்டின் முக்கிய இடங்களில் இந்தத் தீர்மானங்களை விளக்கிப் பேசுவோம்! (பலத்த கரவொலி! ஆரவாரம்!!)

ஒரு நெல்சன் மண்டேலா 27 ஆண்டுகள் சிறையில் இருக்கவில்லையா? அதனால் என்ன தனி நாடு கிடைக்காமலா போயிற்று? சிறைக்குச் செல்ல வேண்டுமானாலும், உயிரைக் கொடுக்கவேண்டு மானாலும் அதற்காகத் தயாராக இருக்கக் கூடியவர்கள்தான் நாங்கள்.

அதற்காக ஆத்திரப்பட்டு எங்கள் உயிரைக் கொடுத்துவிடுவோம் என்று பொருளல்ல. வெற்றி கிட்டுவதற்காக - ஒருக்கால் அந்த வெற்றியைக் காண முடியாத நேரத்தில், நீங்கள் எல்லாம் அந்த வெற்றியை அனுபவிக்கும் நிலை ஏற்பட்டால், அதற்காக எங்கள் உயிரையும் கொடுக்கத் தயார்.

விகற்பத்தை விதைக்காதீர்கள்!

திராவிடர் கழகமோ, விடுதலைச் சிறுத் தைகளோ, ஈழத் தமிழர் பிரச்சினையைக் கைகழுவி விட்டதாக சிலர் பிரச்சாரங்களைச் செய்து கொண்டிருக்கிறார்கள். இது தேவையற்ற ஒன்று. தயவு செய்து சகோதரர்கள் மத்தியில் விகற்பத்தை ஏற்படுத்த முயலாதீர்கள் - அது தேவையில்லாத ஒன்று. அவரவர்களும் அவரவர்கள் உசிதப்படி அவரவர்களின் எல்லையில் நின்று பணிகளைச் செய்யட்டும். வீண் விமர்சனங்களால் எந்தப் பயனும் இல்லை; தமிழர்களின் ஒற்றுமை உணர்வைக் குலைக்கத்தான் அது பயன்படும்.

தமிழர்களுக்காக ஒரு நாடு!

விடுதலைச் சிறுத்தைகளும், கருஞ்சிறுத்தைகளும் ஒன்றுபட்டு ஒரே களத்தில் நிற்கிறோம் - அவ்வாறு நிற்போம் என்று ஒரு மாநாடு கூட்டி அறிவித்தி ருக்கின்ற விடுதலைச் சிறுத்தைகளுக்கு நன்றி!

பூமிப் பந்தில் தமிழர்களுக்கு ஒரு நாடு உருவாக ஒன்றுபட்டு உழைப்போம்; உறுதி கொள்வோம்!

வாழ்க பெரியார்!

வாழ்க அம்பேத்கர்!

வருக தமிழ் ஈழம்!

என்று தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் உணர்ச்சிப் பிழம்பாக உரையாற்றினார்.

தொடர்ந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொறுப்பாளர்களும் உரையாற்றினர்.

--------------------”விடுதலை” 27-12-2010

நுழைவுத் தேர்வும் - எதிர்ப்பின் வரலாறும்


வழிகாட்டும் தலைமைச் செயற்குழு! வெற்றி நமதே-வீறு கொண்டெழுக!

(1)

தோழர்களே, நமக்கு அடுக்கடுக்கான பணிகள். ஒரு நிமிடம் சிந்தனையைப் பின்னோக்கிப் பயணிக்க வைத்தால் எத்தனை எத்தனைப் பயணங்கள்! மலைப்பாகவே இருக்கிறது!

கரூர் மாநாடு, வாலாஜா மாநாடு, சீர்காழி மாநாடு, திருப்பத்தூர் மாநாடு, திருவரங்கம் மாநாடு, மதுரை மாநாடு என்று அடுக்கடுக்காக அலைகள்!

திருப்பத்தூரில் பொதுக்குழுவுடன் கூடிய மாநாடு-ஒரு திருப்பு முனையாக அமைந்திருந்தது. நமது தோழர்களும் சளைக்காமல் ஈடு கொடுத்து இணையற்ற பணிகளைத் தோள் மீது சுமந்து புது அத்தியாயங்களைப் படைத்து வருகின்றனர்.

மருத்துவக்கல்லூரிகளில் சேர அகில இந்திய அளவில் பொது நுழைவுத்தேர்வாம்-நமது மாநிலத்தில் மருத்துவக் கல்லூரியில் மாணவர்களை எப்படிச் சேர்ப்பது என்பதை முடிவு செய்ய நமக்கு உரிமையில்லையாம், நமது தமிழ்நாடு அரசுக்கு அருகதையில்லையாம்.

டில்லியில் குளிர் சாதனம் பொருத்தப்பட்டுள்ள சொகுசு அறையில், அட்டாணிக்கால் போட்டு உட்கார்ந்து கொண்டிருக்கும் நாமதாரிகள் முடிவு செய்கிறார்களாம்.

சூட்சமம் புரிகிறதா? நுழைவுத் தேர்வை ஒழித்துவிட்ட காரணத்தால் நமது சுப்பனும், குப்பனும், காத்தாயி மகள் கருப்பாயும் மருத்துவக் கல்லூரிகளில் காலடி எடுத்து வைத்துள்ளார்களே,

கருவேல் முள்ளாக உறுத்தாதா, இந்தக் கனக விசயன் பரம்பரைக்கு?

நெடுநாள் போராடி நம் மக்களுக்கு நாம் பெற்றுத்தந்த உரிமைகளையெல்லாம் நெட்டித்தள்ள-நெடுநாள் பகைவர்கள் சூழ்ச்சி வலைகளைப் பின்னுகிறார்கள்.

எம்.ஜி.ஆர் அவர்கள் நுழைவுத்தேர்வைக் கொண்டு வந்த நேரத்திலேயே அதனை எதிர்த்துக் கனல் கக்கியவர்கள் நாம்- போராட்டம் நடத்தியவர்கள் கருஞ்சட்டையினர்!

மானமிகு கலைஞர் அவர்களின் காலத்தில்-சமூக நீதி வரலாற்றின் நெடும்பாதையில், ஒரு கட்டத்தில் நுழைவுத் தேர்வை ஒழித்துக்கட்டியது-காலத்தைக் கடந்த கல்வெட்டாக நிலைக்கக்கூடியதாகும்.

சமூகநீதிக்காகப் பிறந்தது திராவிடர் இயக்கம். அதன் ஒரே அரசியல் வாரிசு தி.மு.க-அதன் தன்னிரகற்ற தலைவர். தலைகொடுத்தேனும் சமூகநீதிப் பயிரைக் காக்கும் பகுத்தறிவாளர்.

அதனால்தான் உச்சநீதிமன்றத்தின் முன் மார்பை நிமிர்த்திக்காட்டி, தமிழ்நாடு அரசையும், நுழைவு தேர்வு சம்பந்தப்பட்ட வழக்கில் இணைத்துள்ளார் (Implead). மிக மிகப் பிற்படுத்தப்பட்டவன் நான்; இதில் எத்தனை, எத்தனை மிக என்பதை வேண்டுமானாலும் இணைத்துக்கொள்வீர்! என்று சட்டப்பேரவையில் சங்கநாதம் செய்த சரித்திரத் தலைவர் கலைஞர்.

நுழைவுத்தேர்வில் தொடக்கத்தில் தடுமாற்றத்திற்கு ஆளாகிய மத்திய அரசினை தன் அரிமாக் குரலால் நேர்கோட்டில் கொண்டு வந்து நிமிர்த்தி வைத்த சாதனை நமது மானமிகு கலைஞர் அவர்களையே சாரும். மத்திய அரசு சொன்னாலும் கேட்கமாட்டோம், மாநில அரசுகளும் சட்டம் செய்தாலும் குப்பைக்கூடையில் தூக்கி எறிவோம் என்ற இறுமாப்பில் மருத்துவக் குழுமம் மமதையோடு இருப்பதாகத் தெரிகிறது. முதலமைச்சர் கலைஞர் சங்கநாதம் செய்துவிட்டார், நுழைவு தேர்வுக்கு தமிழ்நாட்டில் இடம் இல்லையென்று கறாராக அடித்துக்கூறிவிட்டார். திராவிடர் கழகம் வழக்கம்போல் வீதிக்கு வந்து விட்டது- நேற்று (டிச.18) சென்னையில் தமிழர் தலைவர் தலைமையில் நடைபெற்ற தலைமைச் செயற்குழு கூட்டத்தில் அவர்களின் வழிகாட்டுதலின் படி தீர்மானித்து விட்டோம். வரும்29 ஆம் தேதி மாலை 4மணிக்கு மாவட்ட தலை நகரங்களில் (கழக மாவட்டங்கள் அல்ல). ஆர்ப்பாட்டம் போர்ப்பாட்டு பாட தீர்மானம் நிறைவேற்றப்பட்டுவிட்டது.

திராவிடர் கழக இளைஞரணி, மாணவரணித் தோழர்கள் முன்னின்று மாணவர் பட்டாளத்தை ஒன்று திரட்டி கிளம்பிற்று காண் சிங்கத்தின் கீர்த்திமிகு கூட்டம் என்று காட்ட வேண்டும். இந்தியா முழுமையும் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களின் பாதுகாப்புப் பெட்டகம்-அதன் திறவுகோல் தந்தை பெரியார் பிறந்த தமிழ்மண் அல்லவா!

களம் காண்பதிலே தம் காலத்தைச் செலுத்தி, நாட்டின் வரலாற்றை மாற்றும் கட்டுமானப் பணியில் ஈடுபடும் கருஞ்சட்டைப் படை தேதி குறித்துவிட்டது.

சமூகநீதிக்கொடி மூச்சுக்காற்றை தாழ்ந்து பறக்க அனுமதிக்காத அரிமா சேனையே!

டெல்லி மாநகரை அசைத்துக்காட்ட டிசம்பர் 29அய் ஒரு குறியீடாகக் கொண்டு களத்தில் குதித்திடுவீர்!

இடஒதுக்கீட்டுக்காக இந்திய அரசமைப்புச் சட்டத்தை முதன் முதலாகத் திருத்திய சாதனைக்குச் சொந்தக்காரர் நமது தலைவர் தந்தை பெரியார். மண்டல் குழு பரிந்துரையை மக்கள் மத்தியில் பரிமாறச் செய்ய அழுத்தம் கொடுத்துச் செயல்படுத்திய இயக்கம் திராவிடர் கழகம். ஆம், இந்தப் போராட்டத் திலும் வென்று காட்டுவோம்!

தமிழர் தலைவர் மானமிகு வீரமணி அவர்களின் தலைமையிலே மண்டல் குழுப் பரிந்துரைகளின் பலன் இந்தியா முழுமையும் உள்ள பிற்படுத்தப்பட்ட மக்களுக் குப் போய்ச்சேர முழுமுதற் காரணமாகப் போராடி வெற்றிக்கொடியை சமூகநீதித் தம்பத்தில் ஏற்றி காட்டினோமே! அதே போல நுழைவுத்தேர்வைத் தூக்கி எறியச் செய்து கோடானு கோடி ஒடுக்கப்பட்ட மக்களின் வயிற்றில் பால் வார்த்துக் காட்டுவோம்.

இது உறுதி! இது சபதம்! இந்த வகையில் நேற்று கூடிய கழகத்தின் தலைமைச் செயற்குழு கூட்டம் வரலாற்றில் ஒரு வைரக் கல்வெட்டாகும்.

வெற்றி நமதே வீறு கொண்டெழுக!

காரணம் புரிகிறதா?

தமிழ்நாட்டில் 2010ஆம் ஆண்டுக்கான மருத்துவக் கல்லூரி சேர்க்கையின் புள்ளி விவரம் இதோ:

திறந்த போட்டிக்குரிய இடங்கள் : 460

இதில் பிற்படுத்தப்பட்டவர்கள் : 300

மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் : 72

தாழ்த்தப்பட்டோர் : 18

முஸ்லிம்கள் : 16

உயர்ஜாதியினர் : 54

இதில் 200க்கு 200 கட் ஆஃப்

மதிப்பெண் வாங்கியோர் : 8

இதில் பிற்படுத்தப்பட்டவர் : 7

மிகவும் பிற்படுத்தப்பட்டவர் : 1

உயர் ஜாதியினர் : பூஜ்யம்

மானமிகு கலைஞர் ஆட்சியில் சட்ட ரீதியாக நுழைவுத் தேர்வு நொறுக்கித் தூக்கி எறியப்பட்டதால் ஏற்பட்ட பலன் இது.

இதுதான் உயர்ஜாதிக்காரர்களின் கண்களை உறுத்துகிறது. எனவேதான் மீண்டும் நுழைவுத் தேர்வைக் கொண்டு வர பூணூலை முறுக்கிக் கொண்டு கிளம்புகிறார்கள்.

உஷார்! உஷார்!! உஷார்!!!

------------------ "விடுதலை”19-12-2010


***********************************************************************************

வழிகாட்டும் தலைமைச் செயற்குழு (2)

நுழைவுத் தேர்வும் - எதிர்ப்பின் வரலாறும்


எம்.ஜி.ஆர். அவர்கள் முதலமைச்சராக இருந்த நேரத்தில் தொழிற்கல்லூரிகளில் சேர மாணவர் களுக்கு நுழைவுத் தேர்வு கொண்டு வரப்பட்டது.

தமிழ்நாடு அரசு செய்தி, சுற்றுலா மற்றும் (தமிழ்) பண்பாட்டு (செய்தி வெளியீட்டுத்துறை) செய்தி வெளி யீடு எண். 322; நாள் 30.5.1984 நுழைவுத் தேர்வுக்கான சுற்றறிக்கையாக இது அமைந்தது.

இதனை எதிர்த்து முதலாவதாகப் போர்ச் சங்கு ஊதி கலகக் கொடி உயர்த்தியவர் தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி ஆவார்கள் (விடுதலை, அறிக்கை, 8.6.1984).

நுழைவுத் தேர்வுக்கு அரசு ஆயத்தமாகிவிட்டதாம்; நாமும் கிளர்ச்சிக்கு ஆயத்தமாவோம்!

கிராம மக்களே,

பெற்றோர்களே,

தயாராகுங்கள்!

பல ஆயிரக்கணக்கானோர் சிறைச் சாலைகளை நிரப்பத் தயாராகுங்கள்!

அரசின் வீண் பிடிவாதம் உடையும்வரை போராடு வோம்!

காமராஜர் செய்யாததை, அண்ணா செய்யாததை, எம்.ஜி.ஆர். செய்வது எவ்வளவு சமூகத் துரோகம்?

இதனை எதிர்த்துப் போராடுவோம்!

நுழைவுத் தேர்வு ஒட்டகம் நுழையும் கதைதான் - மறந்து விடாதீர்கள்! (விடுதலை, 8.6.1984) என்று திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் மானமிகு கி. வீரமணி அவர்கள் அறிக்கை வெளியிட்டார்.

அதற்கு முன்னதாகவே திராவிடர் கழகத்தின் சார்பில் அனைத்துக் கட்சிக் கூட்டம் ஒன்று அவசர அவசரமாக சென்னை பெரியார் திடலில் கூட்டப்பட்டது (25.3.1984). திராவிடர் கழகப் பொதுச்செயலாளர், கி. வீரமணி அவர்கள் தலைமையில் நடைபெற்ற அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள்: திருவாளர்கள் எஸ்.ஜே. சாதிக் பாட்சா (தி.மு.க. பொருளாளர்) அப்துஸ் சமது எம்.பி., டி.என்., அனந்தநாயகி (காங்கிரஸ், தேவர் பேரவை) தி.சு. கிள்ளிவளவன் (பொதுச்செயலாளர், தமிழ்நாடு காமராஜ் காங்கிரஸ்), கே.ஆர். ராஜகோபால் (தலைவர், ஜனநாயகக் கட்சி, இளைஞர் பிரிவு) அய். சங்கரமணி (சாலியர் மகாஜனசங்கத் தலைவர்) ஆர். அருணாசலம் (பொதுச்செயலாளர், பிற்படுத்தப்பட்ட அரசு அலுவலர் சங்கம்) கே. சண்முகவேலு (தலைவர், தமிழ்நாடு சேனைத் தலைவர், மகாஜன சங்கம்), டாக்டர் வி. இராமகிருஷ்ணன் (பொதுச்செயலாளர், தமிழ்நாடு தேவர் பேரவை), ஆர். கதிர்வேலு (தலைவர், தமிழ்நாடு சலவைத் தொழிலாளர் முற்னேற்ற சங்கம்), ஆர். நாகராசன் (துணைத் தலைவர், அனைத்திந்திய பிற்படுத்தப்பட்டோர் இரயில்வே தொழிலாளர் கழகம்), அர. அரவிந்தன் (பொதுச்செயலாளர், அனைத்திந்திய பிற்படுத்தப்பட்டோர் அஞ்சல் - தந்தித் துறை ஊழியர் சம்மேளனம்), பண்டரிநாதன் அய்.ஏ.எஸ்., (ஓய்வு) (பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை முன்னாள் இயக்குநர்) முதலியோர் பங்கேற்ற அந்தக் கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழ்நாட்டில் தொழில் படிப்பு சொல்லித்தரும் கல்லூரிகளில் மருத்துவம் மற்றும் பொறியியல் மாணவர்களைச் சேர்க்க, ஏற்கெனவே நடைமுறையில் இருந்த நேர்முகத் தேர்வை நிறுத்திவிட்டு, இந்த ஆண்டுமுதல் நுழைவுத் தேர்வு ஒன்றைக் கொண்டு வர தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளதை இந்தக் கூட்டம் மிகவும் கவலையோடு விவாதித்தது. நம்முடைய வருங்கால சந்ததியினருடைய படிப்பு பெரிதும் பாதிக்கப்படும் என்பதாலும், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் தொழிற்கல்வி வாய்ப்புப் பெரிதும் பாதிக்கப்படும் என்பதாலும், குறிப்பாகத் திறந்த போட்டி என்ற பொதுப் போட்டியில் கிடைக்கவேண்டிய பங்கு மற்ற முன்னேறிய ஜாதிக்காரர்களால் கபளீகரம் செய் யப்படும் என்பதாலும் ஊழலை ஒழிப்பது என்பதுதான் இதன் அடிப்படை என்றால், நுழைவுத் தேர்வுமூலம் ஊழல் வராது என்பதற்கு எந்தவித உத்திரவாதமும் இல்லை என்பதாலும், தமிழக அரசு அறிவித்துள்ள நுழைவுத் தேர்வு முறையை உடனடியாக கைவிடவேண் டும் என இக்கூட்டம் ஒருமனதாகக் கேட்டுக்கொள் கிறது.

அப்படி உடனடியாகக் கைவிடவில்லையானால், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களையும் ஒன்று திரட்டி பெரும் போராட்டம் நடத்துவதென்றும், திராவிடர் கழகம் இதனை முன்னின்று நடத்தவேண்டுமென்றும் இதற்கு அனைவரும் தோளோடு தோள் நின்று ஒத்துழைப்புக் கொடுப்போம் என்றும், இதை அரசியல் பிரச்சினை யாகக் கருதாமல் சமுதாயக் கண்ணோட்டத்தோடு எல்லா அரசியல் கட்சிகளும், சமுதாய அமைப்புகளும் இதற்கு ஒத்துழைக்கவேண்டும் என்றும் ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டது.

திராவிடர் கழகம் மூட்டிவிட்ட எதிர்ப்புத் தீ நாடெங் கும் பற்றிக்கொண்டு விட்டது. எதிர்க்கட்சித் தலைவர் கலைஞர் அவர்கள் கண்டன மாரி பொழிந்தார்.

கோவையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி யில் பின்வருமாறு குறிப்பிட்டார்:

செய்தியாளர்: தொழிற் கல்லூரிகளுக்கெல்லாம் இன்டர்வியூ முறையை நீக்கிவிட்டு நுழைவுத் தேர்வு முறையை வைக்கப் போவதாக சொல்லியிருக்கிறார் களே?

கலைஞர்: இண்டர்வியூ முறையினால் ஊழல் ஏற்படுகிறது என்று சொல்லிவிட்டு அதை ஒழிப்பதாகச் சொல்கிறார்கள். இண்டர்வியூ முறை என்பது காமராசர் காலம், பக்தவத்சலம் காலம், அண்ணா அவர்கள் காலம், நான் முதலமைச்சராக இருந்த காலம் - அப்போதெல்லாம் அந்த முறையில்தான் நடைபெற்றிருக்கிறது. அப்போது யாராவது மாணவர்கள் ஒன்றிரண்டு பேர் தங்களுக்கு வாய்ப்புக் கிடைக்கவில்லை என்று நீதிமன்றத்திற்குச் சென்றிருக்கிறார்கள்.

ஆனால், எம்.ஜி.ஆர். ஆட்சியில் 140-க்கு மேற்பட்ட மாணவர்கள் பாதிக்கப்பட்டு நீதிமன்றம் சென்று மீண்டும் ஒரு இண்டர்வியூ தேர்வு அவர்களில் பெரும் பாலோருக்கு நடைபெற இருக்கிறது. அதனால் அந்த முறையில் ஒன்றும் தவறு இல்லை. அதை நடைமுறைப் படுத்துகிறவர்கள் ஊழல் புரிகின்ற காரணத்தி னால்தான் இப்படிப்பட்ட நிலைமை ஏற்படுகிறது.

ஏற்கெனவே ப்ளஸ் 2 (பன்னிரண்டாவது வகுப்பு) அரசுத் தேர்வு எழுதி அதில் தேறியவர்கள் மீண்டும் பொறியியல், மருத்துவக் கல்லூரிகளுக்கு ஒரு பரீட்சை எழுதவேண்டும் என்பது முதலில் அரசாங்கம் நடத்திய பரீட்சையை சந்தேகிப்பதாக ஆகும்.

புதிய முறை ஏற்கப்பட்டால், இண்டர்வியூ முறை எடுக்கப்பட்டால், அது பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சமுதாய மக்களுக்குத்தான் தீங்காக முடியும்.

வகுப்புவாரி பிரதிநிதித்துவ - இட ஒதுக்கீட்டு முறை யின்மீது எப்போதுமே எம்.ஜி.ஆருக்கு ஒரு வெறுப்பு உண்டு. அதை பலமுறை அவரே வெளிப்படையாகச் சொல்லியிருக்கிறார். உண்மையான திராவிடர் இயக் கத்திற்குப் பயந்துகொண்டுதான் அந்த முறை இப் பொழுது அமலில் இருப்பதற்கு எம்.ஜி.ஆர். இடம் கொடுத்திருக்கிறார். அவருடைய எண்ணத்தைச் செயல்படுத்தக் கையாளுகின்ற வேறொரு வழிதான் இப்பொழுது அறிவிக்கப்பட்டுள்ள முறையாகும்.

மருத்துவக் கல்லூரி, பொறியியல் கல்லூரி அட் மிஷன்களுக்கு அமைச்சர்களும், ஆளுங்கட்சிக்காரர் களும் லட்சக்கணக்கிலே லஞ்சம் பெற்றதால் இப் பொழுது ஏற்பட்டுள்ள விளைவுகளுக்கு இன்டர்வியூ முறையைக் குறை கூறுவது சரியல்ல.

இது எப்படி இருக்கிறது என்றால், ஜலதோஷம் பிடித்துவிட்டது என்பதற்காக மூக்கை அறுப்பதுபோல் இருக்கிறது என்று கூறினார் கலைஞர் அவர்கள்.

முசுலிம் லீக், வன்னியர் சங்கம் (வன்னிய அடி களார்), ஃபார்வர்டு பிளாக், யாதவர் மகாசபை, நாயுடு சங்கம், அம்பேத்கர் மக்கள் இயக்கம், மக்கள் கட்சி (டாக்டர் சந்தோஷம்), இந்தியக் குடியரசுக் கட்சி, ஜனதா கட்சி, காமராஜ் காங்கிரஸ் (பழ. நெடுமாறன்) முதலியோர் எதிர்ப்புக் கற்களை வீசினர்.

அ.தி.மு.க.வுக்குள்ளேயே மதுரை முத்து அவர்கள் கண்டனத்தைத் தெரிவித்துக் கொண்டார். அமைச்சர்கள் காளிமுத்து, எஸ்.டி. சோமசுந்தரம் போன்றவர்களும் நுழைவுத் தேர்வைக் கொண்டு வந்ததில் அதிருப்தி உள்ளவர்களாக இருந்தனர்.

எம்.ஜி.ஆர். அவர்களுக்கு திராவிட இயக்கப் பின்னணியோ, அதனைச் சார்ந்த சித்தாந்தமோ தெரிந்திருக்க - தெரிந்திருந்தாலும் உளப்பூர்வமான ஈடுபாடு கொள்ள வாய்ப்பில்லையே! அவர் நுழைவுத் தேர்வைக் கொண்டு வந்ததும், பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீட்டில் வருமான வரம்பினைக் கொண்டு வந்ததும் இந்தத் தன்மையால்தான்.

இல்லாவிட்டால் இப்படிப் பேசியிருப்பாரா?

பிராமணர்கள் சங்கம் வைத்திருக்கிறார்கள். இதற்கும் எதிர்ப்புக் கிளம்பியிருக்கிறது. அவர்கள் ஏன் சங்கம் வைத்திருக்கிறார்கள்? அந்த நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டு இருக்கிறார்கள் (மாலைமுரசு, 31.5.1981, தஞ்சாவூர்).

இப்படிப் பேசியிருப்பவர் எப்படி திராவிட இயக்கத் தைச் சேர்ந்தவராக, அய்யா - அண்ணா கொள்கை களைப் புரிந்தவராக இருக்க முடியும்?

இன்னொரு படி மேலே சென்றும் பேசினார்:

நானாக ஒரு அரசியல் கட்சியைத் தொடங்கிய பொழுது, ராஜாஜி என் பின்னால் இருந்து ஆதரவு காட்டி அறிவுரைகளை வழங்கினார். அவர் கூறிய அறிவு ரையைப் பயன்படுத்திய நேரத்தில், அதைப் பார்க்க அவர் இல்லையே என்று எண்ணுகிறேன். (சென்னை, பாரதீய வித்யா பவன் நடத்திய விழாவில் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். பேசிய பேச்சு, 20.4.1984).

அரசியலில் நுழைந்த திராவிடர் இயக்கத்தின் பாட்டையில் பல காலகட்டங்களில் இத்தகு தடுமாற்றங்கள் எல்லாம் நடந்திருக்கின்றன.

தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் நுழைவுத் தேர்வை எதிர்த்துப் போராட்டத்தினை அறிவித்துவிட்டார்!

23 இடங்களில் நுழைவுத் தேர்வு ஆணையினை எரிக்கும் போராட்டம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கில் இப்போராட்டத்தில் கருஞ்சட்டைத் தோழர்கள் குதித்தனர். நாடே தீப்பற்றி எரிந்தது போன்ற உணர்வு ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியிலே தகித்தது.

இதுதான் தமிழ்நாடு. இதனைப் புரிந்துகொள்ளாமல், டில்லியில் உள்ள மருத்துவக் குழுமம் வாலாட்டிப் பார்க்கிறது.

வரும் 29 ஆம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் திராவிடர் மாணவர் கழகம் - இளைஞரணியினர் களத்தில் குதிக்கின்றனர். ஆர்ப்பாட்டப் போர்ச் சங்கு முழங்க இருக்கின்றனர்.

தமிழகம் தொடங்கிவிட்டது - இந்தியா எதிரொலிக்கப் போகிறது.

-------------- “விடுதலை” 23-12-2010 இல் கலி. பூன்குன்றன் அவர்கள் எழுதிய கட்டுரை

அய்யப்பனும் பம்பா நதியும்


பம்பா நதி

சபரிமலை அய்யப்பன் கோயிலுக்குச் செல்லும் பக்தர்கள் கண்டிப்பாக பம்பா நதியில் முழுக்குப் போடுவார்கள். பொதுவாகவே கோயிலையொட்டி இருக்கும் குளம் அல்லது நதிகளில் போடும் முழுக்குக்குப் பெயர் புண்ணிய முழுக்காம்.

கும்பகோணம் மகாமகத்தில் குளிப்பது என்பதுதான் பிரதானம்! 12 வருடம் செய் யும் பாபங்கள் ஒரே முழுக்கில் (Whole Sale) காலி!

இப்படி பாவங்களைத் தைரியமாகச் செய்யத் தூண்டும் ஏற்பாட்டுக்கு - லைசென்சுக்குப் பெயர்தான் கோயில் வழிபாடு - புண் ணிய முழுக்கு - இத்தியாதி... இத்தியாதி!

நாட்டில் குற்றங்கள் பெருகினால்தான் மதச் சம்பந்தப்பட்ட சமாச்சாரங்கள் அனைத்திற்கும் கொள்ளை லாபமும் - கொண்டாட்டமும்!

கடவுள்களே குற்றங்கள் செய்தார்கள் - கொலை செய்தார்கள் - கொள்ளை அடித்தார்கள் - கற்பழித்தார்கள் என்று எழுதி வைத்திருப்பதும் - அவற்றிற்காக விழாக்கள் கொண்டாடுவதும் எல்லாம் மக்கள் மத்தியில் ஒழுக்கம் பரவவேண் டும் என்பதற்காக அல்ல - மாறாகக் குற்றங்கள் பெருக வேண்டும்; அதன்மூலம் பிராயச்சித்தம் - கழுவாய், நேர்த்திக் கடன் என்று கூறி மக்களிடமிருந்து பணத்தைப் பிடுங்கலாம் - பொருளைச் சுரண்டலாம் என்பதுதான் இந்த முடிச்சுக்குள் பதுங்கி யிருக்கும் இரகசிய சதி!

இந்த வகையில் ஒவ் வொரு கோயிலுக்கும் - நதிகள் மற்றும் ஆறுகளுக் கும் தலப் புராணங்கள் எழுதி வைத்துள்ள சூழ்ச்சியும் இதுதான்.

காந்தியாரைச் சுட்டுக் கொன்றதற்கே காஞ்சிசங் கராச்சாரியார் சந்திரசேக ரேந்திர சரஸ்வதி என்ன கூறினார் தெரியுமா? தோஷங்களுக்கெல்லாம் பரிகாரம் ஸ்நானம்தான் என்றார். இதன் பொருள் காந்தியாரை இந்து மத வெறியன் - பார்ப் பான் சுட்டுக் கொன்றதுகூட ஒரு குளியலில் (ஸ்நானத் தில்) தீர்ந்து போய்விடுமாம்.

அறிவியல் ரீதியில் உண்மை என்னவென்றால், இந்தப் புண்ணிய நதிகள் என்று விளம்பரப்படுத்தப்படுபவை எல்லாம் நோய்களின் ஒட்டுமொத்தமான உறைவிட மாகும். கிருமிகள் மொத்த குத்தகை எடுத்துக் கொண்டு குலாவும் இடமாகும்.

அய்யப்பப் பக்தர்கள் பம்பா நதியில் குளித்துக் குதித்தாடும் காட்சிகளை ஏடுகள் படம் எடுத்துப் போட்டுள்ளன.

இதனைப் பார்க்கும் பொழுது, படிக்கும்பொழுது நமது மனிதநேய நெஞ்சம் பதைபதைக்கிறது. பக்தி புத்தியைக் கெடுத்து உடல் நலனையும் கெடுத்துத் தொலைக்கிறதே என்கிற பரிதாபம்தான் பகுத்தறி வாளர்களுக்கு.

பம்பா நதிபற்றி இதற்கு முன் வந்த தகவல்களைக் கொஞ்சம் அறிவுத் தராசில் எடை போட்டுப் பார்க்கட்டும்!

நூறு லிட்டர் பம்பா நதியில் 3 லட்சம் எம்.பி.என். கோலிஃபார்ம் பாக்டீரியாக்கள் இருப்பதாகக் கண்டு பிடித்துச் சொல்லியுள்ளனர். 1999-2000 ஆம் ஆண்டில் இந்த அளவு 2 லட்சத்து 55,000 கிருமிகள் இருப்பதாகக் கூறப்பட்டது. பெரும் பாலும் பம்பா நதி மனிதக் கழிவுகளால் பாழ்பட்டதாகக் கூறுகிறார்கள்.

இந்த வகை பாக்டீரியாக் கள் 500 என்ற அளவில் இருந்தாலே ஆபத்து - இரண்டரை லட்சம் என்கிற போது தலையே சுற்றுகிறது!

மனிதநேயப் பகுத்தறிவுவாதிகள் பரிதாபப்படுகிறார்கள் - பதறுகிறார்கள். மத வாதிகளோ சபாஷ் போட்டு, சுரண்டலுக்குக் கோணிப்பைகளைத் தயாராக வைத் துள்ளனர்!

--------------- மயிலாடன் அவர்கள் 17-12-2010 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

26.12.10

கவிஞர் வாலியும் - நாத்திக நன்னெறியும்


நாத்திகமே நன்னெறி!

கவிஞர் வாலி அவர்கள் ஆனந்தவிகடன் இதழில் ஒரு தொடரை எழுதிக் கொண்டு வருகிறார். எளிய தமிழில் சுவையாகவே இருக்கிறது. அவர் ஓர் ஆன்மிக வாதி என்பது அவரது தோற்றத்தைப் பார்த்தாலே எளிதில் தெரிந்து கொள்ளலாம்.

இந்த வார இதழில் இரண்டு நாத்திகர்களைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். ஒருவர் - அவரது ஊர்க் காரர் - இளமைக்காலந் தொட்டுப் பழகி வந்த நண்பர் நடராஜசுந்தரம்.

சிறீரங்கம் கழுதை மண்டபத்தில் ஒரு நிகழ்ச்சி. ஒரு நாள் வாலியும் அவரது நண்பரும் பேசிக் கொண்டிருந்த போது, வாலியின் பின்னால் வந்த கோதுமை நாகத்தை அடித்துக் கொன்று வாலியை மரணத்திலிருந்து நடராஜசுந்தரம் காப்பாற்றினாராம்.

அந்த நண்பர் - நடராஜ சுந்தரம் சிறீரங்கம் பொதுக் கூட்டத்தில் பேசினாராம். பாம்பையும், பாப்பானையும் கண்டால் முதலில் பாப்பானை அடி எனப் பேசி னாராம்.

ஆனால் மறுநாள் வாலி என்ற பாப்பானை பாம்பு கடிக்க வந்தபோது, அவரது நண்பரான நடராஜசுந்தரம் வாலியை அடிக்காமல் பாம்பை அடித்து, அதன் மூலம் வாலியான பார்ப்பனரைக் காப்பாற்றியிருக்கிறார்.

இந்தப் பழமொழி பெரியார் சொன்னதாக அவர் கூறியுள்ளார். அதுகூடத் தவறுதான். தந்தை பெரியார் அப்படிக் கூறியதாக எந்த இடத்திலும் இல்லை; இன்னும் சொல்லப்போனால் அது வட இந்தியாவி லிருந்து வந்த ஒன்று என்ற ஒரு கருத்துக்கூட இருக்கிறது.

பார்ப்பான் பணக்காரனாக ஆவது பற்றி எனக்குக் கவலையில்லை. அவன் உயர்ஜாதிக்காரனாகவும், இன்னொருவன் தாழ்ந்த ஜாதியாகவும் நிலவும் நிலை மாற்றப்பட வேண்டும் என்பதுதான் தனது கருத்து என்று பார்ப்பான் பணக்காரனானால் என்னும் கட்டு ரையிலே குடி அரசில் (9.11.1946) தந்தை பெரியார் எழுதியுள்ளார்.

நீ சினிமாவுல ஒரு பெரிய ஆளா வருவே! என்று தமது நாத்திக நண்பர் சொன்னது இப்பொழுது பலித்துவிட்டது என்று எழுதும் கவிஞர் வாலி , நடராஜ சுந்தரத்தின் வாக்கு தெய்வ வாக்காகப் பலித்தது; நான் சினிமாவில் பெரிய கவிஞனாக வளர்ந்து விட்டேன். அதைப் பார்க்க அவன்தான் இல்லை என்கிறார்.

நாத்திகரான நடராஜசுந்தரம் கூறியது ஒரு கணிப்பே தவிர, அது தெய்வவாக்கு என்பது நடராஜ சுந்தரம் ஏற்றுக் கொண்ட கருத்தை ஒரு வகையில் கொச்சைப் படுத்துவதாகவே கருதவேண்டும்.

இதற்கு முன்பேகூட இதே தொடரில் (17.11.2010) பின்வருமாறு எழுதியுள்ளார்:

சுப்பிரமணிய துதியமுது பாடிய பாவேந்தர் - பின்னாளில் பகுத்தறிவைப் பாடினாலும் - அதையும் அவர் உள்ளிருந்து ஓதிய எம்பிரான் முருகன் எனலாம் என்று எழுதியுள்ளார். இதுவும் தன் கருத்தை புரட்சிக் கவிஞர் மேல் திணிக்கும் முறையாகும்.

1926 இல் சுப்புரத்தினமாக இருந்த நிலையில், சிறீ மயிலம் சுப்பிரமணியன் துதியமுது நூலை எழுதியது உண்மைதான். 1928 இல் தந்தை பெரியார் கொள் கையை ஏற்றுக் கொண்ட நிலையில், 1933 இல் ம. சிங்காரவேலர் தலைமையில் சென்னையில் நடை பெற்ற நாத்திகர் மாநாட்டின் பதிவேட்டில், நான் ஒரு நிரந்தர நாத்திகன் என்று எழுதி கையொப்பமிட் டுள்ளார் புரட்சிக்கவிஞர்.

அத்தகைய புரட்சிக் கவிஞரை வாலி அவர்கள் பாடபேதம் செய்வதைத் தவிர்க்க வேண்டும். மானமிகு கலைஞர் அவர்களைப் பற்றிக்கூட இதே பாணியில் கவிஞர் வாலி கூறியதுண்டு. அதே போல எழுத்தாளர் குஷ்வந்த் சிங்கைப் பற்றிக் கூறும்போது ஒரு காலத்தில் அவர் நாத்திகராக இருந்தார். இப்பொழுது குருத்துவாரத்தில் சரணடைந்தார் என்று எழுதியுள்ளார்.

ஆனால், குஷ்வந்த் சிங் தன்னைப் பற்றிக் குறிப்பிட்டுள்ள கருத்து டெக்கான் கிரானிக்கல் ஏட்டில் (28.11.2010) வெளிவந்துள்ளது. அதில் தன்னை, அக்னாஸ்டிக் என்றே குறிப்பிட்டுள்ளார். அதாவது கடவுள் உண்டு என்றோ, இல்லை என்றோ கூறாத - நம்பாத ஒரு நிலையினர் ஆவார்.

இந்த வார ஆனந்த விகடனில் (29.12.2010) இன்னொரு நாத்திகரைக் குறிப்பிட்டுள்ளார். அப்பல்லோ மருத்துவமனையில் என்னைச் சந்தித்து, எனக்குப் பேச்சு வரும் என்று சொல்லி, அவர் சொன்ன சொல் பலித்தது என்று சொன்னேனே - அவர் ஒரு நாத்திகர். அவர்தான் திராவிடர் கழகத் தலைவர் மானமிகு திரு. வீரமணி அவர்கள் என்று கூறியுள்ளார்.

தமது கருத்தை இந்த நாத்திகர் மீது திணிக்காதது வரவேற்கத்தக்கது.

இந்தத் தொடரில் ஒரு கருத்தை கவிஞர் வாலி பதிவு செய்துள்ளார்.

நாணயமான ஒரு நாத்திகன், நாணயமற்ற ஓர் ஆத்திகனை விட நூறு மடங்கு மேலானவன் என்று எழுதியுள்ளார்.

உண்மைதான். நாணயமான மனிதராக வாழ நாத்திகமே நன்னெறி!

-------------------- "விடுதலை” தலையங்கம் 25-12-2010

25.12.10

பெரியார் மீது தினமணிப் பார்ப்பானுக்கு என்ன அக்கறை?


தினமணி அய்யர்வாளும் - வால்களும்!


தந்தை பெரியார் நினைவு நாளில் உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் அய்யா அவர்களின் சிந்தனைகளை, கொள்கைகளைப் பரப்பும் நாளாகவும், கூர்தீட்டிக் கொள்ளும் நாளாகவும், உறுதி எடுக்கும் நாளாகவும் கடைப்பிடிக்கின் றனர்.

சென்னையில் திராவிடர் கழகத் தலைமை இடத்தில் நூல்கள் வெளியீட்டு விழாவும், கருத்தரங்கமும் நடைபெற்றன. தமிழ்நாடெங்கும் திராவிடர் கழகத் தோழர்கள் தந்தை பெரியார் நினைவு நாளில் கொள்கை வழிப்பட்ட செயல்பாடு களில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த வரலாற்றுக் குறிப்பு நாளில் - பச்சை ஆர்.எஸ்.எஸ்.காரரும், திருவாளர் சோ ராமசாமியின் சீடருமான ஒருவரை ஆசிரியராகக் கொண்ட பார்ப்பன நாளேடு ஒன்று தந்தை பெரியார் நினைவு நாளைக் கொச்சைப்படுத்தும் வேலையில் இறங்கியிருக்கிறது. இயக்கத்திலிருந்து ஒழுங்கு கட்டுப்பாட்டின் அடிப்படையில் வெளியேற்றப்பட்ட சிலரை இதற்காகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது.

இதுபோன்றவர்கள் தமிழகத்தில் மலிவாகக் கிடைப்பார்கள் என்பதுதான் தெரிந்த செய்தியாயிற்றே!

தந்தை பெரியார் இறுதியாகப் பயன் படுத்திய வேன் புத்தூரில் உள்ள பெரியார் மாளிகை வளாகத்தில் குப்பைபோல கிடக்கிறதாம் - அடடே, பெரியாரின் வேன் மீது இந்த ஆர்.எஸ்.எஸ். பத்திரிகைக் காரருக்கு எவ்வளவு பெரிய அக்கறை - எத்தகைய கரிசனம்!

திருச்சி பெரியார் மாளிகையில் பெரியார் வேன் ஒன்றும் குப்பை போல கிடக்கவில்லை. அதற்கென்று ஷெட் ஏற்பாடு செய்யப்பட்டு, அதில்தான் நிறுத்தப் பட்டுப் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. யார் வேண்டுமானாலும் நேரில் போய்ப் பார்த்துக் கொள்ளலாம். அந்த ஷெட்டின் முகப்பில் தந்தை பெரியார் இறுதியாகப் பயணம் செய்த வேன் என்றும் பொறிக்கப்பட்டுள்ளது. அதன் பக்கத்திலேயே அய்யா - அம்மா படிப்பகம் இருக்கிறது.

இதில் உள்ள பார்ப்பனத்தனம் என்ன தெரியுமா? அந்த எழுத்துகள் தெரியாமலும், பக்கத்தில் உள்ள படிப்பகத்தை மறைத்தும் நிழற்படத்தை வெளியிட் டுள்ளது.

அதேநேரத்தில் பெரியார் சர்வீஸ் ஸ்டேஷன் என்ற பெயர்ப் பலகை தெரியும் வகையில் அந்தப் படத்தை வெளியிட்டு பார், பார்! பெரியார் கடைசியாகப் பயன் படுத்திய வேன் எப்படி இருக்கிறது? பெரியார் சர்வீஸ் ஸ்டேஷன் எப்படி இருக் கிறது? என்று விளையாட்டு காட்டுகிறது. இதில் என்ன பெரிய பிரச்சினை இருக் கிறது? பெரியார் வேன் பெரியார் மாளிகை யில் இருக்க வேண்டிய இடத்தில் பத்திரமாக இருக்கிறது - சர்வீஸ் ஸ்டேஷன் இருக்கவேண்டிய இடத்தில் இருக்கிறது. இதில் எந்தப் புதிரைக் கண்டுபிடித்துவிட் டார் இந்தப் புதிய பூணூல் வாஸ் கோடகாமா?

பெரியார் கற்றுத் தந்த புத்தி என்று ஒன்று இருக்கிறது. பார்ப்பான் ஒரு பிரச்சினையைக் கையில் எடுத்துக் கொள்கிறான் என்றால், அதுவும் தந்தை பெரியார் பற்றிப் பேச வருகிறான் என்றால், அதில் ஏதோ வஞ்சகம் இருக்கிறது, வன்மம் இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளவேண்டாமா?

தந்தை பெரியார் மீதோ, அவர்தம் கொள்கை மீதோ - இந்தத் தினமணிப் பார்ப்பானுக்கு என்ன அக்கறை?

தந்தை பெரியார் சொல்லுவார் - இராமாயணத்தில் இராமனுக்கென்று இருந்த சொந்தப் படை என்ன? ஒன்றும் கிடையாது - வானரப் படையைக் கொண்டே இராவணனை எதிர்த்துச் சண்டை போட்டான்; ஒரு பார்ப்பனர் இராமாயணத்தில் செத்தான் இல்லை என்பார்கள்.

பார்ப்பனர்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதற்கு இராமாயணத்தைப் படித்துக் கொள்ளவேண்டும் என்று சர்.சி.பி. இராமசாமி அய்யர் சொன்னது தான் இப்பொழுது நினைவிற்கு வருகிறது.

அந்த இராமாயண யுக்தியை அனுசரித்தே இந்த மூன்று பேர்களைப் பிடித்து தந்தை பெரியார் அவர்களுக்குப் பிறகு, அவர் விட்டுச் சென்ற பணிகளை வீரியத்துடனும், விவேகத்துடனும் நடத்தி வெற்றிகளைக் குவித்துக் கொண்டிருக்கும் திராவிடர் கழகத் தலைவர்மீது சேறு வாரி இறைக்கச் செய்கிறது ஒரு பார்ப்பன ஏடு என்றால், இதன் தன்மையைப் புரிந்துகொள்ள வேண்டும்.

பெரியார் என்ற வார்த்தையை உச்சரித்தால் மட்டும் போதாது. ஒரு பார்ப்பன ஏடு எந்த நோக்கத்தில் தங்களைக் கையாளாகப் பயன்படுத்திக் கொள்கிறது என்கிற அடிப்படையைக் கூடப் புரிந்துகொள்ள முடியாதவர்கள், ஒரு காலத்தில் எப்படித்தான் கறுப்புச் சட்டை போட்டுக்கொண்டு கழகத்தில் இருந்தனர் என்கிற கேள்வியைத்தான் எழுப்புகிறது.

எப்படியோ விளம்பரம் கிடைத்து விட்டது - போட்டோவும் வெளிவந்து விட்டது பார்ப்பன ஏட்டில் - அதுபோதும் என்கிற மலிவான நிலைக்கு ஆளான வர்களைக் கண்டு பரிதாபப்படத்தான் வேண்டியுள்ளது.

அய்யயோ பெரியார் சொத்துகளை விற்கிறார்கள், விற்கிறார்கள் என்று மாரடித்து ஒப்பாரி வைக்கிறார்கள்.

தந்தை பெரியார் விட்டுச் சென்ற சொத்துகள் என்ன? பெரியார் மறைவிற்குப் பிறகு அவை வளர்ந்திருக்கிறதா - தேய்ந்து இருக்கிறதா என்பது கருத்துக் குருடர்களைத் தவிர மற்றவர்கள் அனைவருக்குமே தெரிந்த விடயம்.

பெரியார் திடலில் நடிகவேள் ராதா மன்றம் எப்படி இருந்தது? இப்பொழுது அது எப்படி இருக்கிறது? விடுதலைப் பணிமனை எப்படி இருந்தது - இப்பொழுது அதன் பொலிவு என்ன?

விடுதலை அச்சுக்கூடம் எப்படி இருந்தது? இப்பொழுது எந்த அளவுக்கு நவீன மயமாகி உள்ளது? விடுதலை யின் அச்சும், வடிவமும் எப்படி இருந்தது? (விடுதலையைப் படிப்பதற்கே ஒரு தனிப் பயிற்சி வேண்டும் என்ற நிலைதான் அன்று) இப்பொழுது அதன் எழிலும், தெளிவும் வாசகர்களை எப்படிக் கவர்ந் திருக்கிறது. உண்மை இதழும் அப்படியே!

தந்தை பெரியார் காலத்தில் வெளி வந்த இயக்க வெளியீடுகளையும், இப்பொழுது வெளிவரும் வெளியீடுகளையும் ஒப்பிட்டுப் பார்க்கட்டும். அறிவு நாணயம் உள்ளவர்கள் உண்மையை ஒப்புக்கொள்வார்கள்.

டில்லியில் கம்பீரமாக நிற்கும் பெரியார் மய்யம் எதிரிகளையும், துரோகிகளையும் பார்த்து எள்ளி நகையாடும். டில்லியில் பெரியார் மய்யம் கொள்கிறார் என்றால், தினமணிக் கூட்டத்துக்கு நெரி கட்டுவதைப் புரிந்து கொள்ள முடிகிறது; விபீடணர்களுக்கு வாந்தியும், பேதியும் ஏற்படுவானேன்?

பெரியார் படிப்பகங்கள்பற்றியெல்லாம் கிறுக்கி இருக்கிறார்கள்.

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதி களிலும் நிரந்தரமான கான்கிரீட் கட்டடங்களாக அவை உருமாறியிருக்கின்றன என்ற உண்மையைக் கூடத் தெரியாமல், உளறுகிறார்களே, என்ன செய்ய! புதிய இடங்களில்தான் எத்தனை எத்தனை பெரியார் படிப்பகங்கள் - நூலகங்கள்!

பெரியார் திடலில் இயங்கும் நூலகம் - ஆய்வகம் உலகத் தரத்தில் ஓங்கி நிற்கிறதே! 52333 நூல்கள் அணி வகுக்கின்றனவே - தமிழர் தலைவர் அரிதில் சேர்த்து வைத்த தமது சொந்த 10,277 நூல்களை அளித்து உதவினாரே! பன்னாட்டைச் சேர்ந்தவர்களும் ஆய்வுக்காக இங்கே தானே வந்து கொண்டிருக்கின்றனர்!

வாய்ப் புளித்ததோ, மாங்காய்ப் புளித்ததோ என்று எழுதலாமா?

ஒரு பெரியார் மய்யத்தை பி.ஜே.பி. ஆட்சியில் இடித்தார்கள் என்றால், அதன் பலன் என்ன? ஒன்றுக்குப் பதில் இரண்டு பெரியார் மய்யங்கள் - புதுடில்லியில்.

பெரியார் மய்யத்தின் அருமை - அதனால் ஏற்படப் போகும் விளைவு பார்ப்பனர்களுக்கும், சங் பரிவார்க் கூட்டத்துக்கும் நன்கு தெரிந்திருக்கிறது. பெரியார் அங்கு சுற்றி இங்கு சுற்றி இந்தியாவின் தலைநகரான டில்லிக்கே வந்துவிட்டாரே என்கிற ஆத்திரப் புயலில் அவதிப்படுகிறார்கள்.

இவர்களுக்கு என்ன வந்தது? பெரியார் மய்யம் இடிக்கப்பட்டபோது ஒருக்கால் இவர்களும் லட்டு சாப்பிட்டு இருப்பார்களோ!

நாகம்மையார் குழந்தைகள் இல்லத்தின் பழைய நிலையையும், புதிய பொலிவையும் பார்த்துப் பூரித்துப் போகிறார்கள்; பொறாமைக்காரர்களோ புழுங்கிச் சாகிறார்கள்.

சமூகநீதிக் காவலர் வி.பி. சிங் தமது கவிதை (ஒரு துளி வானம் ஒரு துளி பூமி!) நூல் விற்பனை இலாபத்தை நாகம்மையார் இல்லத்திற்கு அளித்து மகிழ்ந்தார். நல்லவர்கள் பாராட்டுகிறார்கள்; நல்லவர்களாக இருக்க முடியாதவர்கள் தங்களின் அருங் குணங்களைக் காட்டிக் கொள்கி றார்கள், அவ்வளவுதான்!

ஒவ்வொரு காலகட்டத்திலும் இயக்கத்தால் விளம்பரம் ஆனவர்கள். அவ்வப்போது துரோகிகள் ஆகாமல் தப்பிக்க முடியாதவர்களாகவே ஆகி யிருக்கின்றனர். தமிழர்களின் யோக்கியதை இதுதான் போலும்!

தந்தை பெரியார், அன்னை மணியம்மையார் ஆகியோரின் மறைவிற்குப் பிறகு கழகத்தின் பணிகள், தமிழர் தலைவர் தலைமையில் வீறுநடை போட்டுக் கொண்டிருக்கின்ற சாதனைகள் அளப்பரியன.

திராவிடர் கழகம் - பெரியார் திடல் விடுதலை என்ன வழிகாட்டுகிறதோ அதுதான் உண்மையான பெரியார் பாட்டை என்பது உலகம் பூராவும் ஒப்புக்கொள்ளப்பட்ட ஒன்று.

இந்தத் தலைமை, அமைப்பின் மூலம் தான் தந்தை பெரியார் என்ற அங்கீ காரத்தோடு காரியங்களைச் சாதித்துக் கொடுக்க முடியும்; தமிழர்களின் உரிமை களை மீட்டுக் கொடுக்க முடியும்; சமூகநீதிக் கொடியை வெற்றிகரமாகப் பறக்க விட முடியும்; பகுத்தறிவுப் பணியை வலுவாகச் செய்ய முடியும் என்பது உறுதி செய்யப்பட்டு விட்ட ஒன்று. தினமணிகள் நற்சான்று கொடுக்கத் தேவையில்லை.

கிராமப் பிரச்சாரம், கல்வி நிறுவனங்கள் முன் பிரச்சாரம், தெருமுனைப் பிரச்சாரம், புத்தகக் கண்காட்சி, பெரியார் நகர்வுப் புத்தகச் சந்தை, பெரியாரியல் பயிற்சி முகாம்கள், குழந்தைகள் பழகு முகாம், சுயமரியாதைக் குடும்பங்களின் சங்கமம், பெரியார் சமூகக் காப்பு அணி, பெரியார் வீர விளையாட்டுக் கழகத்தின் சார்பில் சடுகுடுப் போட்டிகள், தந்தை பெரியார் பிறந்த நாளையொட்டி கல்லூரி மாணவர்கள், உயர்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுக்குத் தனித்தனி பேச்சுப் போட்டி; தலா முதல் பரிசு ஒரு லட்சம்; இரண்டாம் பரிசு 75 ஆயிரம்; மூன்றாம் பரிசு 50 ஆயிரம்; 2010 இல் மாணவ, மாணவிகள் பங்கேற்பு 20 ஆயிரம்.

பெரியார் சுயமரியாதை ஊடகத் துறை, பெரியார் திரை குறும்படப் போட்டி, பெரியார் வலைக்காட்சி, திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம் உருவாக்கம், தமிழர் கலை, பண்பாட்டுப் புரட்சி விழா (புரட்சிக்கவிஞர் விழா), முத்தமிழ் மன்ற விழா,

பெரியார் திரைப்படம் சாதாரணமா? (தெலுங்கிலும் வெளிவந்துவிட்டது). உலகப் புகழ்பெற்ற நாத்திக நெறி நூலான கடவுள் ஒரு பொய் நம்பிக்கை என்ற பெயரில் தமிழில் வெளியிடும் உரிமை பெற்று வெளியிடப்பட்டது.

குடியரசுத் தொகுப்பு இதுவரை 25.

4 பக்கங்களாக வெளிவந்த விடுதலை இப்பொழுது எட்டுப் பக்கங்கள்;

சென்னையில் மட்டும் இருந்த பதிப்பு, மேலும் திருச்சியிலும் ஒரு பதிப்பு.

தந்தை பெரியார் காலத்தில் மாதம் ஒரு முறை வெளிவந்த உண்மை இதழ் இப்பொழுது மாதம் இருமுறை.

நிறுத்தப்பட்ட தி மாடர்ன் ரேசனலிஸ்ட் மீண்டும் தொடங்கி வெளிவருதல்;

புதிதாகக் குழந்தைகளுக்காகப் பெரியார் பிஞ்சு மாதப் பத்திரிகை.

அலை அலையான மாநாடுகள்; அண்மைக் காலத்தில் மட்டும் சென்னை யில் மாணவர் கழக மாநாடு; மதுரையில் மாணவர் கழக மாநாடு; கரூர், வாலாஜா, சீர்காழி, திருப்பத்தூர், திருவரங்கம் திராவிடர் எழுச்சி மாநாடுகள்;

இந்தியப் பகுத்தறிவாளர் சங்கக் கூட்டமைப்பின் (ஃபெரா) 7 ஆவது இந்திய மாநாடு - சென்னையில்!

ஒரு ஆறு மாத காலத்துக்குள் இத்தனை இத்தனை மாநாடுகளையும், மாநாடுகளை ஒட்டிய மூட நம்பிக்கை ஒழிப்புப் பேரணிகளையும் திராவிடர் கழகத்தைத் தவிர வேறு எந்த அமைப்பு கள் நடத்தியுள்ளன என்று சவால் விட்டுக் கேட்கிறோம்.

போராட்டங்கள்தான் கொஞ்சமா, நஞ்சமா?

ஈழத் தமிழர் வாழ்வுரிமைக்கான ஆர்ப்பாட்டம் (16.2.2010).

மத்திய அரசின் புதிய கல்வி மசோ தாவை எதிர்த்து திராவிடர் மாணவர் கழகத்தின் சார்பில் சென்னையில் பேரணி (23.2.2010).

சாமியர்களின் கயமத்தனங்களை எதிர்த்து ஆர்ப்பாட்டம் (11.3.2010).

ஜாதிவாரிக் கணக்கெடுப்பைக் கோரி மத்திய அரசை வலியுறுத்தும் ஆர்ப்பாட்டம் (10.5.2010).

சேது சமுத்திரக் கால்வாய்த் திட் டத்தை உடனடியாகச் செயல்படுத்தக் கோரி ரயில் மறியல் போராட்டம் (5.6.2010).

என்.எல்.சி. பங்குகளை தனியாருக்கு விற்கக் கூடாது என்று நெய்வேலியில் ஆர்ப்பாட்டம் (30.6.2010).

தமிழக மீனவர்கள் சிங்களவர்களால் தாக்கப்படுவதைக் கண்டித்து

நாகப்பட்டினத்தில் ஆர்ப்பாட்டம் (14.7.2010).

நாடாளுமன்ற முடக்கத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் (10.12.2010).

நுழைவுத் தேர்வை எதிர்த்து மாவட்டத் தலைநகரங்களில் கழக மாணவரணி - இளைஞரணி சார்பில் வரும் 29 ஆம் தேதியன்று ஆர்ப்பாட்டம். இப்படி அலை அலையாகப் போராட்ட நிகழ்ச்சிகள்! சாதனைகள்தான் கொஞ்சமா?

எம்.ஜி.ஆர். காலத்தில் கொண்டுவரப்பட்ட வருமான வரம்பு ஆணை ஒழிக்கப்பட்டதற்கு யார் காரணம்? அதன் விளைவாக 49 சதவிகிதமாக இருந்து வந்த இட ஒதுக்கீட்டின் சதவிகிதம் 68 ஆக உயர்ந்ததற்குக் காரணம் யாருடைய முயற்சி?

பிற்படுத்தப்பட்டோருக்கு மத்திய அரசுத் துறைகளில் இட ஒதுக்கீடு அறவேயில்லை என்பதை மாற்றி, மண்டல் குழுப் பரிந்துரைப்படி 27 சதவிகித இட ஒதுக்கீடு இந்தியா முழுமையும் உள்ள பிற்படுத்தப்பட்டோருக்குக் கிடைத் திடக் காரணமாக இருந்தது யார்?

(42 மாநாடுகள், 16 போராட்டங்களை திராவிடர் கழகம் நடத்தியுள்ளது!).

அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை (கலைஞர் அவர்கள் 5 ஆவது முறையாக ஆட்சிப் பொறுப்பு ஏற்ற நிலையில், மீண்டும் இதற்காக மசோதா நிறைவேற்றம் - உச்சநீதிமன்ற முட்டுக்கட்டையால் தீர்ப்பின் தாமதத்தால் நிலுவையில் நிற்கிறது).

தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு.

சிதம்பரம் நடராஜன் கோயில், தீட்சதர்ப் பார்ப்பனர்கள் கையிலிருந்து இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டுக்கு வந்தது.

(பேரணியையும், பொதுக்கூட்டத்தையும் கழகம் நடத்தியது!).

இவ்வளவையும் தொகுத்துப் பார்த்தால், இவை நடைபெறுவதற்குக் காரணமாக இருந்த கழகத் தினருக்கே மலைப்பாகத் தோன்றுகிறது!

பார்ப்பனர்களுக்கு இதன் தன்மை நன்கு புரிந்தே இருக்கிறது. அதனால்தான் பழனியில் மாநாடு கூட்டி தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்களைப் பார்ப்பனர்கள் பாடை கட்டித் தூக்கிச் சென்றனர். இதுதான் முக்கியமான அளவுகோல்.

தினமணியின் பூணூல்தேள் கொடுக்கை நீட்டிக் கொண்டு அலைவதற்குக் காரணமே, தமிழர் தலைவர் தலைமையிலான திராவிடர் கழகத்தின் இத்தகு ஓய்வறியா மலை மலையான, அலை அலையான நடவடிக்கைகளே!

இந்தக் காரணத்துக்காகப் பார்ப்பனர்கள் ஆத்திரம் கொள்கிறார்கள் - கொச்சைப்படுத்துகிறார்கள் என்றால்,

கழகத்தால் வெளியேற்றப்பட்டவர்கள் கடை விரித்தேன் கொள்வாரில்லை; கட்டிக் கொண்டோம் என்ற வெறுமையில், இயலாமையில் பார்ப்பனர்களோடு கூட்டணி சேர்ந்துகொண்டிருக்கிறார்கள். விளம்பர சடகோபம் எத்தனை நாளைக்கு?

வெட்கம்! வெட்கம்!! மகா வெட்கம்!!!

1974 இல் மூன்று தொகுதிகளை வெளியிட்டு, அதற்குப்பின் 36 ஆண்டுகள் கழித்து அடுத்த பதிப்பைக் கொண்டு வந்த சாதனை சக்ரவர்த்தி ஒருவரும் சேர்ந்துகொண்டு மண்ணை வாரி இறைக்கிறார்.

அரசாங்கத்திடம் இடம் வாங்கி அறக்கட்டளை ஏற்படுத்தியுள்ளாரே - அரசிடம் எந்தக் காரணங்களைப் பணிகளைச் செய்வதற்கு இனாமாக இடம் வாங்கினாரோ அந்தப் பணிகள் நடைபெற்றுள்ளனவா என்ற கேள்வியை எழுப்பினால், அந்த டிரஸ்ட் அரசாங்கத்தின் கஜானாவுக்குள் முடங்கிவிடுமே!

திருச்சி அருகில் (நாத்திகக் கல்லூரிக்காக) அரசிடம் நிலம் வாங்கி தனிச் சொத்தாக்கி விற்றுக் கடன் கட்டப்பட்டதா இல்லையா?

தோழர்களே,

1971 நிலை தமிழ்நாட்டில் மீண்டும் சுழன்று வீசிக்கொண்டு இருக்கிறது.

2011 சட்டப் பேரவைத் தேர்தலும், 1971 தேர்தலின் மறு அச்சாக நடைபெற உள்ளது.

1971 தேர்தலில் இதே தினமணி அய்யப்பனையும், வினாயகனையும் வேண்டிக் கொள்ளவில்லையா - தி.மு.க. தோற்கவேண்டும் என்று!

அந்த நிலையை இப்பொழுதும் பார்ப்பனர்கள் கையில் எடுத்துக் கொண்டு இருக்கிறார்கள்!

மானமிகு கலைஞர் அவர்களும் ஆரியர் - திராவிடர் போராட்டத்தைச் சந்திக்கத் தயார் என்று தோள் தட்டிவிட்டார்!

ஆரியத்தின் படைக்கலன் வரிசையிலே தினமணி பூணூலை முறுக்கி முண்டா தட்டுகிறது.

இந்த நிலையில், திராவிடர் கழகத்தைக் கொச்சைப் படுத்தித் தீரவேண்டிய கட்டாயம் அதற்கு ஏற்பட்டு இருக்கிறது.

யுத்த இரகசியத்தில் எப்பொழுதும் அந்தக் கால இராமாயண சுக்ரீவன், விபீஷணன்கள், இந்தக் கால கருணாக்களும் தேவைப்படுவார்கள்.

அய்ந்தாம் படைதானே ஆரியத்துக்குத் தேவை. அதில் ஒரு கட்டம்தான் தினமணி கட்டுரையின் (24.12.2010) சாரமாகும்.

தினமணி அய்யர்வாளுக்கு வால்களும் கிடைத்திருக்கின்றன.

நமது செயல்பாடு என்கிற எரிமலை வீச்சுக்கு முன்னே இந்தப் பஞ்சு மூட்டைகள் எம்மாத்திரம்!

குறிப்பு: இன்று எனக்குள்ள குறையெல்லாம் தமிழர் சமுதாயத்தில் விபீஷணப் பரம்பரை வளர்ந்து வருவதுதான்.

- தந்தை பெரியார்

(விடுதலைமலர், 17.9.1969).


----------------------------25-12-2010 “விடுதலை” யில் மின்சாரம் அவர்கள் எழுதிய கட்டுரை

24.12.10

தந்தை பெரியார் பற்றி தலைவர்களின் புகழாரங்கள்



தந்தை பெரியார் மறைந்தபோது தலைவர்கள் தந்தை பெரியார் பற்றி கூறியவை சில

குடியரசுத் தலைவர் வி.வி.கிரி

காலஞ்சென்ற திரு.ஈ.வெ.ராமசாமி நயம்மிக்கதோர் தலைவர், வீரம் மிக்கதோர் போராட்டக்காரர். அன்னாரது மறைவுச் செய்தி கேட்டு நான் மிக்க வருத்தமுறுகின்றேன். அவர் எப்பொழுதுமே சிறந்ததோர் போராட்டக்காரராக நிகழ்ந்திருக்கிறார். தேச விடுதலைக்கான போராட்டத்தில் அவர் முக்கியமான பங்கினை வகித்திருக்கிறார். பின்னர், அவர் முக்கியமான பங்கினை வகித்திருக்கிறார். பின்னர், அவர் தாம் கண்ட கருத்துக்கிசைய சமூக சீர்த் திருத்தங்களுக்காகத் தம்மை அர்ப்பணித்துக் கொண்டார். அன்னாரை இழந்து துயருறுகின்றவர்களுக்குத் தயவு செய்து எனது ஆழ்ந்த அனுதாபத்தைக் கூறுங்கள்.

பிரதமர் இந்திராகாந்தி

பெரியாரது மறைவுபற்றி அறிந்து துயருற்றேன். சர்ச்சைக்குரியனவற்றில் ஈடுபாடு கொண்டு, அதில் களிப்பெய்திய முனைப்பாற்றல் மிக்க மனிதர் அவர். ஏற்றுக் கொள்ளப்பட்ட பல கருத்துகளை எதிர்த்து அறைகூவி நின்றவர் அவர். அவருடன் சேர்ந்து பணியாற்றிய அவர் இயக்க ஊழியர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறேன்.

ஜெயப்பிரகாஷ் நாராயண் (சர்வோதயத் தலைவர்)

பெரியார் அவர்கள் வாழ்நாள் முழுவதும் ஜாதி மூட நம்பிக்கை களை முழுமூச்சாக எதிர்த்த பெருந்தலைவர்.

இந்தியாவில் அவரைப் போன்ற ஒரு தலைவரைப் பார்க்கவே முடியாது. கொடுமைக்கு எதிராகப் பெரும் போர் தொடுத்தவர் அவர்.

தமிழக ஆளுநர் கே.கே.ஷா

ஆர்வம் மிக்க சமூகச் சீர்த் திருத்தவாதியான திரு.ஈ.வெ.ராமசாமி யின் மறைவு குறித்து நான் பெரிதும் வருந்துகிறேன்.

தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர்

பெரியார் தன்னுடைய சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டார். 95 ஆண்டுகள் வரை வாழ்ந்த அந்தப் பகுத்தறிவுச் சிங்கம், கடைசி மூச்சு வரை சமுதாயப் பணியை நடத்திய சரித்திரத்தை யாரும் மறக்க முடியாது. இன்று தமிழ்நாடு தன்மான உணர் வோடு தலைதூக்கி நிற்பதற்குக் காரணமாக இருந்த மாபெரும் தலைவர் அவர். அவரால் சமுதாய அந்தஸ்து பெற்ற லட்சோப லட்சம் மக்கள் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப் பட்ட மக்கள் இந்த இழப்பைத் தாங்கிக்கொள்ள முடியாது. எங் களை எல்லாம் ஆளாக்கிய எங்கள் வழிகாட்டியின் இந்தப் பிரிவு பற்றி என்ன சொல்வதென்றே புரியாமல் திண்டாடுகின்றேன். இந்தியாவின் தலைசிறந்த சீர்த்திருத்தப் புரட்சிக் காரரை இழந்துவிட்டோம். அவர் தன்னுடைய சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டார்; நாம் தொடர்வோம்.

டாக்டர் நாவலர் (கல்வித்துறை அமைச்சர்)

யாருக்கும் அஞ்சாமல், எதற்கும் அஞ்சாமல் தமிழகம் எங் கணும் வீர நடை போட்டு வந்த பகுத்தறிவுச் சிங்கம் இன்று சாய்ந்து விட்டது என்ற செய்தி பெரும் அதிர்ச்சியையும். பெரும் துக்கத்தையும் அளிக்கின்றது.

பகுத்தறிவுத் தந்தை பெரியார் அவர்கள் நாட்டு விடுதலைப் போராட்டத்திலும், சமூகச் சீர்த் திருத்தக் கிளர்ச்சிகளிலும், மொழி யுரிமைப் போராட்டத்திலும் பங்கு கொண்டு அவர் புரிந்த சாதனைகள் பலவாகும்.

பொதுத்தொண்டு புரிபவர்களுக் குச் சிறந்ததோர் எடுத்துக்காட்டாக அவர் திகழ்ந்து வந்தார். பொதுவாக, தமிழ்ப் பெருங்குடி மக்களுக்குக் குறிப்பாகத் தமிழக அரசுக்கும் அவர் பெரும் துணையாக இருந்து அருந் தொண்டு ஆற்றி வந்தார். அவரது இழப்பு திராவிட முன்னேற்றக்கழ கத்துக்கு, ஆட்சிக்கும் பேரிழப்பு ஆகும்.

அவர் பரப்பிவந்த பகுத்தறிவு நெறியை, அறிவியலின் துணை கொண்டு தொடர்ந்து பரப்புவதில் ஈடுபடுவதுதான் நாம் அவருக்குக் காட்டக் கூடிய நன்றிக்கடனாகும்.

வளம்மிகுந்த தமிழ்நாடு, வளர வொட்டாமல் தடுத்து வருகின்ற மூடப்பழக்க வழக்கங்களையும் அவர் கூறிய அறிவுரைகளை ஏற்று, அவற்றை ஒழித்து, சிறந்த தமிழ கத்தைக் காண நாம் அனைவரும் ஈடுபடுவோமாக. வாழ்க பெரியார் புகழ்!

வெல்க அவருடைய பகுத்தறிவு நெறி!

கு.காமராஜர்

நமது நாட்டின் லட்சோப லட்சம் மக்களால், பெரியார் என்று பாசத்துடன் அழைக்கப் பட்டு வந்த திரு. ஈ.வெ. ராமசாமி இன்று நம்மைவிட்டு மறைந்தார். அன்னாரது மறைவு பொது வாழ்க்கைக்குப் பெரிய இழப்பு.

நாம் ஆர்வத்துடன் நம்பிய இலட்சியங்களுக்காக அவர் கடந்த அரை நூற்றாண்டுகளுக்கும் மேலா கத் தம்மை அர்ப்பணித்துக் கொண்டு பணி புரிந்துவந்தார்.

நமது நாட்டில், குறிப்பாகத் தமிழ்நாட்டில் சமூக விழிப்பு ஏற்பட அவர் ஆற்றிய பணி, அவர் வகித்த பாத்திரம் மிகப் பெரியது. அவர் ஒரு மாபெரும் தேச பக்தர்.

ஆரம்பத்தில் அவர் இந்திய தேசிய காங்கிரஸ் தீவிர உறுப்பி னராக இருந்து காந்தியார் துவக்கிய இயக்கங்களில் பங்கேற்றார்; பல முறை அவர் சிறையேகினார்.

பின்னர், தீவிரமான சமூக சீர் திருத்தப் பிரச்சாரப் பணியைத் தமக்கென வரித்துக் கொண்டார்.

பெரியார் நமது சமூகத்துக்கு ஆற்றிய சேவைகள் நம் மனத்தில் நீண்டநெடுங்காலம் நிலைத்து நிற்கும். தமது கருத்துகளைப் பயம் துளியுமின்றி எடுத்துக்கூறியவர் களில் பெரியாரும் ஒருவர். கடைசி வரை அவர் விடாமுயற்சியுடன் சலி யாத கடும் பணியில் ஈடுபட்டிருந் தார்.

அன்னாருக்கு எனது மரியாதை கலந்த இரங்கல்.

சி.சுப்பிரமணியம் (மத்திய தொழிலமைச்சர்)

தந்தை பெரியார் மறைவு பற்றி செய்தி அறிந்து ஆழ்ந்த வருத்தம் அடைந்துள்ளேன். தமிழ்நாடு மட்டுமல்லாமல், மனித சமுதாயம் முழுமைக்குமே இது பெரும் இழப்பாகும்,

பி.இராமச்சந்திரன் (த.நா.கா.க.தலைவர்)

திராவிடர் கழகத்தின் தலைவர் திரு.ஈ.வெ.ராமசாமி அவர்களின் மறைவு இந்த நாட்டின் பொது வாழ்க்கையில் குறிப்பாக, தமிழ் நாட்டின் பொதுவாழ்க்கையில் மாபெரும் இழப்பாகும்.

அவர் தீவிர காங்கிரஸ்காரராக இருந்தார்; தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராகப் பொறுப்பு வகித்திருக்கிறார்; விடு தலை இயக்கத்தின் முன்னணியில் அவர் இருந்தார்; அவர் வைக்கம் சத்தியாகிரகத்தில் பங்கேற்று சிறைச்சாலை ஏகினார்.

தேசத்தின் விடுதலைக்கும், சமூகச் சீர்த்திருத்தத்துக்குமாக வேண்டி நடத்திய போராட்டங்கள் அவரது பொதுவாழ்வில் நிரம்பியிருந்தன. தாழ்த்தப்பட்ட மக்களை முன் னேற்றுவதற்காக அவர் ஆற்றிய பணிகள் மக்களால் என்றும்

நினைவில் நிறுத்திக் கொள்ளப் படும்.

மறைந்த தலைவருக்கு நான் எனது மரியாதை கலந்த அஞ்சலி யைச் செலுத்துகிறேன்.

ம.பொ.சிவஞானம் (தமிழரசுக் கழகத் தலைவர்)

பெரியார் ஈ.வெ.ரா. உலகில் தோன்றிய சமுதாய சீர்திருத்தப் புரட்சியாளர்களில் தலைசிறந்த வராகத் திகழ்ந்தார். தனக்கெனப் புதிய சரித்திரம் படைத்து, உலக சரித்திர நாயகர்கள் வரிசையில் சிறப்பிடம் பெற்று விளங்கியவர் பெரியார்.

உயிர் விடும்வரையில் தம்மு டைய குறிக்கோள்களில் பெரியார் கொண்டிருந்த உறுதியும், எதிர்ப் புக்கு அவர் ஈடுகொடுத்த தீரமும், இன்னொருவரை இணை சொல்ல முடியாது.

பெரியாரோடு தமிழக அரசியல் ஒரு சகாப்தம் முடிந்துவிட்டது.

தவத்திரு. குன்றக்குடி அடிகளார்

தமிழகத்தின் காவலர், புரட்சி கரமான சிந்தனையாளர் தலைவர் பெரியார் மறைந்தது இன்றைய தமிழகத்தில் ஈடுசெய்ய முடியாத இழப்பு. வாழ்நாள் பெரும் பகு தியை தலைவர் பெரியார் போல் பொதுப்பணியில் ஈடுபடுத்தியவர் அருமையிலும் அருமை. தமிழகத்தின் அரைநூற்றாண்டு வரலாற்றில் அவர் முத்திரை பதியாத துறையே இல்லை எனலாம். கலக்கமில்லாத, கருத்துப் பிடிப்பு, உண்மையான உழைப்பு அவருக்கே உரிய குண நலன்கள்.

தமிழன் என்ற இனஉணர்வை முன்னிலைப்படுத்தி, அயராது உழைத்த பெரியவர்; பழகுவதற்கு இனிய பண்பாளர்; கடுமையான கருத்து வேற்றுமை உடையவர் இருந்தும் கூட, அவர் காட்டிய கண்ணியம் பொதுவாழ்க்கையில் ஈடுபட்டிருப்போருக்கு எடுத்துக் காட்டாகும்.

தமிழர் என்ற இன உணர்வைத் தூண்டி வளர்த்து, அது செழித்து வளர்ந்து, பூத்துக் காய்க்கின்ற போது அவர் நம்மைவிட்டுப் பிரிந்து விட்டார். ஆயிரம் கருத்து வேற்றுமை இருந்தாலும் அவர் மனித குலத்தின் மீது கங்கு கரையற்ற அன்புடையவர் என்பதை யாராலும் மறுக்கமுடியாது ஜாதி வேறு பாடற்ற சமுதாய அமைப்பு. தமிழர் இனத்தின் முன்னேற்றம் ஆகியவை அவர் நமக்கு வீட்டுச் சென்றிருக்கிற பணிகள். அந்தப் பணிகளைச் செய்து நிறைவேற்று வது தலைவர் பெரியாருக்குச் செய்யும் கடமையாகும்.

தமிழினத்தின் பகையைக் கண்டு, சிம்ம முழக்கம் செய்த ஒரு ஆன்மா ஓய்ந்துவிட்டது. ஆனால், அவர் ஏற்றி வைத்த விளக்கு, எடுத்துத் தந்த லட்சியம் ஓயாது பயணம் செய்யும்.

பி.இராமமூர்த்தி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர்)

பெரியார் ஈ.வெ.ரா. தமிழ் நாட்டில் மட்டுமின்றி, இந்தியா பூராவிலும் தனித்தன்மை கொண்ட தலைவராகத் திகழ்ந்தார்.

அரசியலைப் பொறுத்த வரையில் ஒருவருக்கு, அவருடன் கருத்து வேறுபாடு இருக்கலாம். ஆனால், அவர் நாட்டின் வைதிகத்தின் காழ்ப்பையும், வெறுப்பையும் தீரத்துடன் எதிர்த்து நின்று மக்களை ஒடுக்கிக் கேவல நிலையில் வைத் திருந்த ஜாதிக் கொடுமை, மூடநம்பிக்கை ஆகியவற்றையும் மக்களை நிரந்தரமாக அடிமைத்தளையில் வைத்திருக்க மக்களிடம் ஊட்டப் பட்ட கடவுள் நம்பிக்கையையும் எதிர்த்து சமூக நீதிக்காக 50 ஆண்டு களுக்கும் மேலாக அயராது போரா டியவர். இது இந்நாட்டின் வரலாற்றில் என்றென்றும் சிறப்பான அத்தியாயமாகத் திகழ்ந்துவரும், பிறப்பில் தாங்கள் உயர்ந்த குலத்தைச் சேர்ந்தவர்கள் என்று பிராமண சமூகத்தினர் கருதிக் கொண் டதை பெரியார் எதிர்த்துப் போராடினார். ஆனாலும் தனிப்பட்ட வாழ்க்கையில் காட்டியது கிடை யாது.

சமூக ரீதியில் ஒடுக்கப்பட்ட மக்கள், பெரியாரின் மறைவின் மூலம் சமூகக் கொடுமைக்கு எதிராகப் போரிட்டு வந்த ஒரு மாபெரும் வீரரை இழந்து விட்டனர்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி

தமிழகத்தில் கடந்த 50 ஆண்டு களாக ஒடுக்கப்பட்ட மக்களுக்காக சமூகச் சீர்த்திருத்த இயக்கம் துவக்கி நடத்திய பெரியார் மறைவு அதிர்ச்சி தரும் செய்தியாக உள்ளது.

எம்.ஜி.இராமச்சந்திரன் (அ.தி.மு.க.தலைவர்)

தமிழர் சமுதாயம் தனது பாது காவலனை இன, மொழி உயர் வுகளுக் காக அரசியல், பொருளாதார விடுதலைக்காகப் போராடி, போராட்டத்திலேயே தனது வாழ்நாளின் பெரும் பகுதியைக் கழித்த விடுதலை வீரரை இன்றைக்கு இழந்து விட்டது.

இந்தியத் துணைக்கண்டம் ஒரு நூற்றாண்டு வரலாறு படைத்த பேராண்மையும், பேராற்றலும் மிக்க மாவீரர்களின் வரிசையிலே கடைசிச் சின்னத்தை இழந்துவிட்டது. திராவிடர் இயக்கத்திலே தங்களை ஒப்படைத்துக் கொண்ட லட்சோப லட்சம் குடும்பங்கள் தங்களது தந்தையை இழந்து தவித்து நிற்கிறது.

உலகம் ஓர் ஆற்றல் மிக்க சிந்தனையாளரை, மக்கள் சமுதாய வழி காட்டிகளில் ஒருவரை இழந்து விட்டது.

பரூக் மரைக்காயர் (புதுவை முதல்வர்)

தந்தை என்று உரிமையோடு அழைக்கப்பட்டு வந்த தனிப்பெருந் தமிழகத் தலைவர் தந்தை பெரியாரின் மறைவுச் செய்தி கேட்டு மீளாத் துயருற்றேன்.

தமிழ்ச் சமுதாயத்தின் அறிவுக் கண்ணைத் திறந்து மக்களிடையே மலிந்து கிடந்த மூடப்பழக்கவழக் கங்களையும், அர்த்தமற்ற வழிமுறை களையும் தூக்கி எறிந்து பகுத்தறிவு உணர்ச்சியைத் தோற்றுவித்த பெருமை பெரியாரையே சாரும்.

எண்ணற்ற இளம் தலைவர்களை உருவாக்கியும், சமுதாயத்தில் புதிய தோர் விழிப்புணர்ச்சியைத் தோற்று வித்தும், ஜாதியின் பெயரால் கொடு மைகளுக்கு ஆளான சமுதாயத்தின ருக்குப் புதுவாழ்வு தந்தும் பெரியார் என்ற தனி மனிதர் தமிழரின் வரலாற்றில் ஈடற்ற ஓர் சகாப்தமாகத் திகழ்கின்றார்.

வாழ்நாள் முழுமையும் சமுதாய சீர்த்திருத்தங்களுக்காகவே அர்ப்பணித்து, இறுதி வரையில் தான் நிறுவிய திராவிடர் கழகம் அரசிய லில் ஈடுபடாமல், சமுதாய முன் னேற்றத்துக்காகப் பாடுபட்டு வரும் நிகழ்ச்சி, இந்திய வரலாற்றிலேயே போற்றுதற்குரியதாகும்.

தந்தைபெரியாரின் மறைவு ஈடு செய்யமுடியாத பேரிழப்பு ஆகும். அவரது சீர்திருத்தக்கருத்துகளையும், சுயமரியாதை எண்ணங்களையும் மக்களிடையே பரப்புகின்ற நற்பணி யில் நம்மை மேலும் ஈடுபடுத்தி, பெரியாரின் அரிய நினைவுக்கு அஞ்சலி செலுத்துவோம்.

தந்தை பெரியாரின் இறப்பினால் வருந்துகின்ற எண்ணற்ற தமிழ் நெஞ் சங்களோடு நானும், என் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

பக்தவத்சலம் (தமிழக முன்னாள் முதல்வர்)

யாரைப்பற்றியும், எதைப்பற்றியும் என்ன நினைக்கிறாரோ அதை ஒளிக்காமல் சொல்லக்கூடிய அஞ்சா நெஞ்சம் படைத்தவர் ஈ.வெ.ரா.

பெரியார் ஒரு தனி மனிதரல்ல; அவர் ஒரு பெரிய ஸ்தாபனம்.

ஆரம்பகாலத்தில் பெரியார் காங் கிரசின் தீவிர தலைவராக இருந்தார். ராஜாஜியின் நெருங்கிய நண்பராகவும் இருந்துவந்தார்.

பெரியாரின் மறைவு ஈடுசெய்ய முடியாத இழப்பு ஆகும்.

தேவராஜ் அர்ஸ் (கருநாடக முதல்வர்)

தமிழ்நாட்டு அரசியலில் பல் லாண்டு காலம் புரட்சிப் புயலாய் விளங்கியவர் பெரியார். அவர் பிரச் சாரம் செய்த எல்லாக் கொள்கை களையும் நாம் ஏற்கமுடியாமல் இருக்கலாம்; அவர் கையாண்ட வழி முறைகளையும் நாம் ஏற்கமுடியாமல் இருக்கலாம். என்றபோதிலும் ஏழை, எளியவர்களுக்காகவும், தாழ்த்தப் பட்ட மக்களுக்காகவும் அவர்காட் டிய இரக்க உணர்ச்சியைப் பாராட் டாமல் இருக்க முடியாது. இம் மக்களின் பொருளாதார, சமூக நிலை மேம்பாடடைய அவர் நடத்திய மாபெரும் போராட்டங்களைப் பாராட்டாமல் இருக்கமுடியாது.

பெரியார் இலட்சியத் தலைமை பூண்ட ஓர் நாயகன். தமது வாழ் நாளிலேயே காவிய நாயகனாகத் திகழ்ந்தவர்.

-----------------------”விடுதலை” 24-12-2010