Search This Blog

17.12.10

பெரியார் செய்த புரட்சி

இந்தியாவினுடைய வரலாற்றிலேயே
மனித உரிமைக்காக நடத்திய முதல் மனித உரிமைப்போராட்டம் வைக்கம்-சத்தியாக்கிரகம் வைக்கத்தில் தமிழர் தலைவர் நெகிழ்ச்சி உரை

இந்தியாவினுடைய வரலாற் றிலே மனித உரிமைக்காக நடத்திய முதல் மனித உரிமைப் போராட்டம் வைக்கம் சத்தியாக்கிரகம் என்று தமிழர் தலைவர் நெகிழ்ச்சியுடன் உரை யாற்றினார்.

கேரள மாநிலம் வைக்கத்தில் 26.11.2010 அன்று நடைபெற்ற முப்பெரும் விழாவில் கலந்துகொண்டு திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரை வருமாறு:

இயக்க வராற்றில் குறிப்பிடத்தக்க நாள்

அனைவர்க்கும் என்னுடைய தலைதாழ்ந்த அன்பு வணக்கத்தை, நன்றி கலந்த வணக்கத்தைத் தெரி வித்துக்கொள்கிறேன்.

இந்த நாள் நம்முடைய இயக்க வரலாற்றிலே குறிப்பிடத்தக்க நாள் என்பது மட்டுமல்ல, நம்முடைய வாழ்நாளிலும் குறிப்பிடத்தக்க நாள் என்பதுதான் மிகச் சிறப்பானது.

முன்புத்தி இல்லாத கூட்டம்

ஏனென்றால் நம்முடைய அறிவு ஆசான் தலைவர் தந்தைபெரியார் அவர்கள் 1973 டிசம்பர் 24ஆம் தேதியன்று மறைந்த அந்த நேரத்திலே ஆரியம் மகிழ்ந்தது. ஆரியத்திற்கு ஏதோ பெரிய வீரியம் வந்துவிட்டதைப் போல துள்ளிக்குதித்தது. இனிமேல் பெரியாருடைய குரல் கேட்காது. இனிமேல் பெரியாருடைய இயக்கம் எங்கும் இருக்காது.

இதோடு பெரியாருடைய கொள்கை முழக்கம் தீர்ந்துவிட்டது என்று அவர்கள் இனிப்பு வழங்கி மகிழ்ந்தார்கள்.

எப்பொழுதுமே முன்புத்தி இல்லாத கூட்டம் அது அதாவது பின்புத்தி உள்ளவர்கள் என்று தந்தை பெரியார் அவர்கள் சொல்லுவார்கள். அதற்கு அடையாளம்தான் 1973 டிசம்பர் 24ஆம் தேதி தந்தை பெரியார் மறைந்ததற்குப் பின்னாலே உருவத்தால் மறைந்ததற்குப் பின்னாலே இன்றைக்கு தமிழ்நாட்டிற்கு மட்டும் உரியாராக இருந்த பெரியார் இந்திய நாட்டு முழுமைக்கும் ஒப்புக் கொள்ளப்பட்டிருக்கிறார் என்பது ஒரு பேருண்மை. அதைவிட உலக நாடுகள் எல்லாம் தந்தை பெரியார் அவர்களைப் போற்றி, ஏற்றி பெருமை செய்கின்றன என்பது அதைவிட பதிவு செய்ய வேண்டிய வரலாற்றில் ஏற்கெனவே பதிவாகிவிட்ட மிக அருமையான ஓர் உண்மை யாகும். எனவே புரட்சிக் கவிஞர் அவர்கள் சொன்னதைப் போல பெரியாரின் மண்டைச் சுரப்பை உலகு தொழுது கொண்டி ருக்கிறது.

தொழுதல் என்றால் பின்பற்றுதல் என்று பொருள். உலகம் இன்றைக்குப் பின்பற்றிக் கொண்டிருக்கிறது. வணங்குகிறது. கீழே விழுந்து கும்பிடுகிறது. தேங்காய் பழம் உடைத்து ஆராதனை காட்டுகிறது என்று அல்ல அதற்குப் பொருள்.

சிறைச்சாலை கம்பிகளுக்குப் பின்னால்...

மாறாக பின்பற்றுகிறது. பெரியாரின் கொள்கை தான் இனிவருங்காலத்தின் விடியல்-இந்த சமுதாயத் திற்கு என்பதை ஏற்காதவர்களே இன்றைக்கு இல்லை. இதுதான் மிகப்பெரிய வெற்றி-நம்முடைய காலத்தில். எனவே இந்த முப்பெரும் விழா என்று சொன்னால் சாதாரண விழா அல்ல. நாம் பிறக்காத காலத்தில் தந்தை பெரியார் இந்த மண்ணிலே போராடிய அந்தக் காட்சியைப் இதோ இப்போது பார்க்கிறோம். பெரியாரின் மனிதநேயம்

சிறைச்சாலையினுடைய கம்பிகளுக்குப் பின்னாலே ஈரோட்டிலே செல்வச் சீமானாக வாழ்ந்த ஒரு தலைவர் கதர் மூட்டையைச் சுமந்து தனக்கு சம்பந்தமில்லாத ஒரு இடத்திற்கு வந்து, தன்னால் அதற்கு பாதகமில்லை, தன்னுடைய தமிழ்நாட்டு மக்களுக்குப் பாதகமில்லை என்று கருதாமல் உலகம் ஒரு குலம். நாம் அனைவரும் சகோதரர்கள். அனைவரும் உறவினர் என்ற மனிதநேயத்தினுடைய அடிப் படையிலே இன்னும் ஒரு படி மேலே போய் சொன்னால் திராவிட சமுதாயம் திருத்தப்பட வேண்டிய சமுதாயம் என்பதற்காகத்தான் இங்கே ஒரு போராட்டம் நடந்தது.

வைக்கம் சத்தி யாக்கிரகம்.

இந்த சிறிய நகரம் உலக வரைபடத்திலே வைக்கம்-வைக்கம்-வைக்கம் என்று பெயர் எடுத்தது என்று சொன்னால், அதற்குத் தலைவர் தந்தை பெரியார் அவர்களுடைய போராட்டம்தான் காரணம் (கைதட்டல்).

மனித உரிமை போராட்டம்

உலக நாடுகளிலே இருக்கிறவர்கள் தேடு கிறார்கள். இந்தியாவினுடைய வரலாற்றிலேயே மனித உரிமைக்காக போராட்டம் நடத்திய முதல் மனித உரிமைப்போராட்டப் போர். அந்த சத்தியாக்கிரகம் எங்கே நடந்ததென்றால், அது இந்த மண்ணிலே என்று நினைக்கின்றபொழுது இந்த மண்ணிலே நாம் கூடியிருப்பதற்காக குதூகலிக்க வேண்டிய நாள் இந்த நாள்.

சாதாரணமல்ல. நாம் இன உணர்வோடு போட்டிருக்கின்ற கருப்புச் சட்டையை எதற்கோ போட்டுக்கொண்டு அலைகிறான். ஆனால் நாம் போட்டிருக்கின்ற இந்த கருப்பு இருக்கிறதே இதுதான் இழிவைத் துடைத்து விடுதலையை மனிதகுலத்திற்கு வாங்கித்தரக்கூடிய மிகப்பெரிய கருப்பு (கைதட்டல்).

இன்றைக்கு கட்சி வேறுபாடு இல்லாமல் பேசினார்கள். காலையிலே மேனாள் வனத்துறை அமைச்சர் திருவாஞ்சூர் ராதாகிருஷ்ணன் அவர்கள் இங்கே பேசும்பொழுது சொன்னார்கள்.

கருப்பு எல்லோர்க்கும் பிடித்த கலர்

நீங்கள் எல்லாம் கருப்புச்சட்டை போட்டிருக் கிறீர்கள். அவர் காங்கிரஸ்காரர் என்று நான் நினைக்கின்றேன். கருப்புச் சட்டை போட்டிருக் கின்றேனே வேறு என்று நீங்கள் நினைக் காதீர்கள். எங்களுடைய தோலே கருப்புத் தான். ஆகவே தனியே கருப்பு போட வேண்டிய அவசியமில்லை என்று சொன்னார் என்றால் கருப்பு இப்பொழுது எல்லோருக்கும் பிடித்த கலர் என்று சொல்லக் கூடிய அளவுக்கு அந்த வாய்ப்பை எல்லோரும் உருவாக்கியிருக்கிறார்கள்.

ஜாதியை ஒழித்தாக வேண்டும்

அமெரிக்காவிலே ஒரு காலத்திலே அடக்கி வைக்கப்பட்ட கருப்பினம் இன்றைக்கு அமெரிக் காவின் அதிபராக ஒபாமா வந்திருக்கிறார். ஒரு மார்ட்டின் லூதர் கிங் கண்ட கனவை ஒரு பாரக் ஒபாமா நிறைவேற்றி முடித்து வைக்கிறார் என்று சொன்னால் அதே உணர்வு கலைஞர் ஆட்சியின் மூலமாக நடந்து கொண்டிருக்கிறது என்கிற காரணத்தால்தான் அதே கருப்பின அமைச்சர் ஒரு இராசாவாக இருக்கிற காரணத்தால்தான்-அவரைப் பழிவாங்க அவர்மீது ஏவுகணை வீச ஜாதி உணர்ச்சிதான் முன்னாலே நிற்கிறது.

எனவே ஜாதியை ஒழித்தாக வேண்டும் என்பதற்கு மனு காலத்திலே இருந்து இன்றைய நாடாளு மன்றம் தள்ளி வைக்கப்படுகிறதே-முடக்கப்படு கிறதே இந்த இராசா காலம் வரையிலே ஜாதியி னாலே நீதியின் குரல்வளை நெரிக்கப்படுகிறது.

தந்தை பெரியார் புகழ்

நான் சொன்னேன். தந்தை பெரியாருடைய புகழ் உலகளாவிய நிலையிலே இருக்கிறது என்பதற்கு அடையாளம் ஏதோ நம்முடைய தலைவர் தனது தலைவரைப் பெருமைப்படுத்த வேண்டும் என்பதற்காக இதைப் பேசவில்லை.

இதோ என்னுடைய கையிலே இருக்கிற நூல் சில மாதங்களுக்கு முன்னாலே வந்த ஒரு புத்தகம். Makers of Modern India. நவீன இந்தியாவை உருவாக்கியவர்கள். இராமச்சந்திர குகா கருநாடகத்திலே இருக்கக்கூடிய ஒருவர், அமெரிக்காவுக்குப் போய் அங்கு பல ஆண்டு காலம் வாழ்ந்து பிறகு இங்கே வந்திருக்கின்ற பார்ப்பன உயர்ஜாதி ஆதிக்க வர்க்கத்தினர். முழு பார்ப்பனரா அரை பார்ப்பனரா நமக்குத் தெரியாது. இருந்தாலும் இவர் திராவிட இயக்கத்திற்கு ஆதரவான கருத்துகளை வரலாற்றுக் குறிப்புகளிலே எழுதக்கூடியவர் என்று சொல்ல முடியாது.

நவீன இந்தியா

அப்படிப்பட்டவர் துருவித் துருவி ஆராய்ந்து நவீன இந்தியா என்று சொல்லக்கூடிய Makers of the Modern India - புது இந்தியா என்பதை உருவாக்க வேண்டும் என்று சொல்லுகின்ற நேரத்தில் அதைத் தேடித் தேடி ஒரு பத்தொன்பது பேரைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.

19 தலைவர்கள்-19 துறைகள் - அந்தத் துறைகளிலே இருந்து அவர் தேர்வு செய்து அந்த 19 பேருடைய வரலாற்றுக் குறிப்புகளை எழுதியிருக்கின்றார்கள்.

அதே போல அந்த வரலாற்றுக் குறிப்புகளிலே என்னென்ன துறைகளிலே இருந்து வந்தார்கள் என்பதை அளவுகோல் வைத்து ஆய்வு, செய்து எழுதியிருக்கிறார்கள். இதை நான்கு பாகமாகப் பிரித்திருக்கிறார்கள். ஒன்று-முதல் பாகம் ‘The Opening of the Indian Mind’

19 பேர்

இந்தியர்களுடைய மனம் அதனுடைய துவக்கம் -அதன் நுழைவுவாயில் எப்படித் தொடங்கியது என்று ராஜா ராம்மோகன்ராய் சதியை ஒழித்தார் என்று படிக்கிறோமே, அந்த சமூகப் புரட்சியாளருடைய காலத்திலேயிருந்து தொடங்கி அடுத்து, Reformer and Radical சீர்திருத்தவாதிகள், புரட்சியாளர்கள் என்ற தலைப்பு. அதற்கடுத்து மூன்றாவது, Nothing a Nation’ ஒரு நாட்டை வளர்ப்பது என்பது மூன்றாவது பிரிவு. நான்காவது பிரிவு- ‘Debating Democracy’ ஜனநாயகத்தைப் பற்றி விவாதித்து அதை உருவாக்கக் கூடிய நிலை. அய்ந்தாவது, பழைமையை உறுதிப்படுத்தி விடாப்பிடியாக முதலையாகப் பிடித்துக்கொண்டிருக்கின்ற ஒரு சிலர்.

எனவே, அய்ந்து பாகங்களாக இருக்கக்கூடிய இந்த 19 பேருமே இந்த 5 பாகத்திற்கு உரியவர்கள், நவீன இந்தியாவை உருவாக்கியவர்கள் என்று சொல்லக்கூடிய அத்துணை பேரும் வடநாட்டிலே கிழக்கே, மேற்கே என்றெல்லாம் வந்த நேரத்திலே தெற்கேயிருந்து-தென்னாட்டிலேயிருந்து இந்த 19பேரிலே ஒருவரைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் என்றால் அவர்தான் தந்தை பெரியார் அவர்கள்! (பலத்த கைதட்டல்).

பெரியார் செய்த புரட்சி

பெரியார் செய்த புரட்சிக்கு ஈடு இல்லை, இணையில்லை என்று இவரே சொல்லுகின்றார். மற்றவர்களைப் போல் அல்ல; அவர் யாருக்காகவும் தலை வணங்காதவர்; யாருக்காகவும் அஞ்சாதவர் என்று சொல்லியிருக்கின்றார்.

அம்பேத்கர், பெரியார், ஜோதிபா ஃபுலே இவர்களைப் பற்றி விளக்கமாக எடுத்துச் சொல்லியிருக்கின்றார். ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். இன்றைக்கு எப்படிப்பட்டவர்களும் இருட்டடிப்புச் செய்த காலம் மாறி, எதிர்த்த காலம் மாறி, திரிபு வாதங்கள் செய்த காலம் மாறி திக்கெட்டும் பெரியார் பெருமையைப் பேசித்தான் தீரவேண்டும் என்று சொல்லக்கூடிய அளவிற்கு இன்றைக்கு பெரியார் கொள்கை வளர்ந் திருக்கிறது.

பெரியார் கொள்கை-எல்லை தாண்டி...

பெரியார் கொள்கை எல்லைகளைத் தாண்டி சென்றிருக்கிறது. இதைத்தான் புரட்சிக்கவிஞர் தெளிவாகச் சொன்னார். மண்டைச் சுரப்பை உலகு தொழும் என்று அழகாகச் சொன்னார். பெரியாருக்கு யுனெஸ்கோ என்ற உலக அமைப்பு அய்நாவினுடைய ஒரு பிரிவு அவருக்கு விருது கொடுத்த நேரத்திலே அந்த விருதின் முதல் வாக்கியம்-புத்துலகத்தின் தீர்க்கதரிசி, தொலை நோக்காளர்-ஒரு புது சமுதாயம்-புதிய கால கட்டத்தை உருவாக்கக்கூடியவர்கள் என்று பாராட்டி விருது கொடுத்தார்கள். அதுமட்டுமல்ல; பெரியாரை தென்கிழக்கு ஆசியாவின் சாக்ரட்டீஸ் என்று சொன்னார்கள்.

அந்த சாக்ரடீசுக்குக் கிடைத்த வாய்ப்பு

ஆனால், அந்த சாக்ரடீசுக்கு ஒரு தனிச் சிறப்பு என்னவென்று சொன்னால், அந்த சாக்ரடீசுக்குக் கிடைக்காத வாய்ப்பு இந்த சாக்ரடீசுக்குக் கிடைத் ததற்கு என்ன தனிப்பெருமை என்று சொன்னால், அவர் சிந்திக்கச் சொன்ன நேரத்திலே அவருக்கு விஷம் கொடுத்தது கிரேக்கம். சிந்திக்கச் சொன்ன நேரத்திலே அதை ஏற்று பெரியாருக்கு அவருடைய சீடர்களால் அமைச்சரவையே அர்ப்பணிக்கப்பட்டது.

அவருடைய கொள்கைகள் சட்ட வடிவமாக்கப் பட்டன என்றால், இதைக் காண பெரியார் இருந்தார். தந்தை பெரியார் 95 ஆண்டு காலம் வாழ்ந்தார். இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார். பெரியார் அவர்கள் மறையவில்லை, மறைய முடியாது. ஏனென்றால், பெரியார் தனிமனிதரல்லர். அண்ணா அவர்கள் சொன்னபடி பெரியார் ஒரு தத்துவம். ஒரு சகாப்தம். ஒரு காலகட்டம். ஒரு திருப்பம் (கைதட்டல்). ஆகவே, அப்படிப்பட்ட தந்தை பெரியார் அவர்கள் செய்த மாற்றங்கள் என்ன?

அமைச்சருக்கோ வியப்பு

இன்றைக்கு காலையிலே சில செய்திகளை நான் எடுத்துச் சொன்னபொழுது அமைச்சருக்கே வியப்பு. நம்முடைய நண்பர்கள் எல்லாம் வியந்து போயிருந்தார்கள்.

இதே வைக்கத்திற்குப் பெரியார் வருகிறார். அறநிலையப் பாதுகாப்புத் துறை தேவஸ்வம் போர்டு- அதுதான் மகாதேவன் கோவிலை நிர்ணயிக்கக் கூடியது. அங்கே அவர்கள் எதிர்க்கிறார்கள்.

பெரியாருக்கு ஆறுமாத சிறைத் தண்டனை. முதலில் 15 நாள் சிறைத் தண்டனை வைத்தால் ஏதோ சாதாரணமாகப் போய்விடுவார் என்று நினைத் தார்கள்.

நம்முடைய நாட்டிலேகூட காலையிலே சிறைச் சாலைக்குப் போய் மாலையிலே வெளியே வந்தவுடனே அதை பிரமாதமாக விளம்பரப் படுத்திக்கொள்வார்கள். மாலையிலே விட்டு விடுவார்கள் என்று தெரிந்தும் விடுதலை செய் என்று சுவரொட்டியே அடித்திருப்பார்கள்.

அந்தக் காலத்தில் சிறை வாசம் என்பது வசதியான இடமல்ல. சிறைச்சாலை எப்படிப்பட்ட கொடுமை யானது என்பதை நீங்கள் வைக்கம் வரலாற்றிலே படித்துப் பார்க்க வேண்டும்.

அப்படிப்பட்ட அந்த சிறைச் சாலையைவிட்டு பெரியார் வெளியே வந்தவுடன் அவர் போய்விடுவார், அவருடைய தொல்லை ஒழிந்துவிடும் என்று திருவிதாங்கூர் ராஜஸ்தானத்திலே நினைத்தார்கள்.

பெரியார் சொல்லுகிறார், மீண்டும் அனை வருக்கும் பொதுவாக இந்தத் தெரு திறந்துவிடுகின்ற வரையிலே நான் என்னுடைய சத்தியாகிரகத்தைப் போராட்டத்தை நடத்துவேன்-என்று சொல்லி மறுபடியும் நடத்தினார்.

இரண்டாவது முறையாக பெரியாருக்கு 6 மாத கடுங்காவல் தண்டனை கொடுக்கப்பட்டது. காந்தியார் குறுக்கிட்டார் என்று சொன்னார்கள். ஆம்! காந்தியாரிடம் பெரியார் கேட்டார். தனது கொள்கையில் எந்த நிலையிலும் சமரசம் செய்து கொண்டதில்லை. அந்தப் பாரம்பரியம்தான் எங்களுக்கு இன்றைக்கும் இருக்கிறது.

ஆகவே, பெரியார் தொண்டர்கள் நாங்கள். யாரிடமும், எந்தக் காலகட்டத்திலும் சமரசம் செய்துகொள்ள மாட்டோம். செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் எங்களுக்குக் கிடையாது.

அந்தக் காலத்திலே, இதே வைக்கத்திலே தந்தை பெரியார் கேள்வி கேட்டார். வைக்கத்தின் தெருக்களிலே நாய் போகிறது, பன்றி போகிறது; கழுதை நடமாடுகிறது. ஆனால், என்னுடைய சகோதரன்- ஈழவன் என்ற காரணத்திற்காக-அவன் புலையன் என்று அழைக்கப்பட்ட காரணத்தாலே-அவன் தெருக் களிலே நடக்கக் கூடாது என்றால் நாயைவிட, பன்றியைவிட, மனிதன் கேவலமானவனா? மகாத்மா காந்தி அவர்களே, மகாத்மா ஜி அவர்களே நாயும், பன்றியும், கழுதையும் இந்தத் தெருவிலே நட மாடுகின்றனவே, அது எந்த சத்தியாக்கிரகத்தை நடத்தி இந்த உரிமையைப் பெற்றது? ஆனால் மனிதன் மட்டும் சத்தியாக்கிரகம் நடத்த வேண்டுமா?

------------------ -தொடரும். "விடுதலை” 16-12-2010

0 comments: