Search This Blog

7.12.10

சுயமரியாதை இயக்கம் அரசியலில் பிரவேசிப்பது ஏன்?


சுயமரியாதை இயக்கம்
தோழர் ஈ.வே. ராமசாமி அறிக்கை

சுயமரியாதை இயக்கத்தைப் பற்றி அதன் சமுதாய சம்மந்தமான கொள்கைகளின் எதிரிகளால் கிளப்பிவிடப்பட்ட பலவிதமான கற்பனைச் சேதிகளாலும் விஷமப் பிரசாரங்களாலும் பொது மக்களுக்குள் சில தப்பு அபிப்பிராயங்கள் பரவி வருவதாகத் தெரிகின்றது.

இதைப்பற்றி பல சமயங்களில் நாம் பொது ஜனங்களுக்கு விளக்கி இருந்தும் சில பகுதிகளில் அவ்வித தப்பு அபிப்பிராயங்கள் மாறியதாகத் தெரியவில்லை. ஆதலால் முன்பு விளக்கியவைகளையே மறுபடியும் விளக்க வேண்டியிருக்கிறது.

சுயமரியாதை இயக்கத்தின் முக்கியமான கருத்தெல்லாம் தாழ்த்தப் பட்ட மக்களுக்கும், பெண்களுக்கும், ஏழை மக்களுக்கும் நன்மை செய்வதற்கு உழைப்பதேயாகும். அதாவது அவர்களை தற்போது இருக்கும் கஷ்டமான நிலையிலிருந்து விடுவித்து சமூகத் துறையிலும் பொருளாதாரத் துறையிலும் சமத்துவமாக வாழச் செய்ய வேண்டும் என்பதே.

இந்தக் கருத்து வெற்றி பெற வேண்டுமானால் அரசியல், சமுதாய இயல், பொருளாதார இயல் ஆகிய மூன்று துறைகளிலும் கவலை எடுத்து உழைத்து வந்தாலொழிய பயனேற்படாது. ஆதலால், சுயமரியாதை இயக்கமானது முக்கியமாய் இத் துறைகளில் உழைத்து வரவேண்டியதாகிறது.

எனவே, இம் மூன்று துறை உழைப்பிலும் இயக்கத்தின் திட்டம் என்ன என்பதை ஒருவாறு பொது ஜனங்களுக்கும், அரசாங்கத்திற்கும், இயக்கத்தைக் குறை கூறுகின்ற நண்பர்களுக்கும் விளங்குவதற்காக கீழே விவரிக்கின்றேன்.

அரசியல்

சுயமரியாதை இயக்கம் ஆரம்ப காலத்தில் அரசியல் துறையில் பிரவேசிக்கக் கூடாது என்கின்ற ஒரு அபிப்பிராயத்தைக் கொண்டிருந்த போதிலும், அரசியலின் பெயரால் காங்கிரஸ் என்னும் ஒரு ஸ்தாபனத்தை பார்ப்பனர்கள் கைப்பற்றி அதைத் தங்கள் ஆதிக்கத்திற்கு அனுகூலமான ஆயுதமாக பயன்படுத்திக் கொண்டு வந்து இந்நாட்டில் எவ்விதமான சமுதாய சீர்திருத்தமும், பொருளாதார சீர்திருத்தமும் ஏற்பட முடியாமல் அவ்விரண்டுக்கும் முட்டுக்கட்டையாகவே இருந்து வந்ததால், குறிப்பாகவும், தெளிவாகவும் சொல்ல வேண்டுமானால் காங்கிரசை சுயமரியாதைக் கொள்கைகள் முழுவதற்குமே விரோதமாக வேலை செய்வதற்கே பயன்படுத்தி வந்ததால், அப்படிப்பட்ட காங்கிரசை எதிர்க்க வேண்டியதும், அதன் ஆதிக்கம் குறைக்கப்பட வேண்டியதற்கு எவ்வித முறையையும் கையாள வேண்டியதும் அவசியம் என்னும் தன்மையில் அரசாங்கத்துடன் ஒத்துழைப்பது அவசியமானால் அந்தப்படியும் செய்வது என்றும் கருதி வந்திருக்கிறது என்பதோடு இனியும் அந்தக் கருத்தையே கொண்டிருக்கிறது. ஆதலால் சுயமரியாதை இயக்கம் அரசியலில் பிரவேசிக்கிறது என்று சொல்லப்படுமானால், பார்ப்பன ஆதிக்கத்தை குறைப்பதற்காகவும் காங்கிரசை பார்ப்பனர்கள் சுயமரியாதை இயக்கத்திற்கு விரோதமாய் உபயோகப்படுத்தி பயன் பெறாமல் இருப்பதற்காகவுமே ஒழிய மற்றபடி அரசாங்க சட்டதிட்டங்களை எதிர்க்கவோ அவற்றிற்கு மாறாக நடக்கவோ என்பதற்காக அல்லவென்று தெரிவித்துக் கொள்ளுகிறோம். இதே அபிப்பிராயத்தை இதற்கு முன்னும் பல தடவை தெரியப்படுத்தியுமிருக்கிறோம். அன்றியும், சுயமரியாதை இயக்கக் கொள்கைகள் பல அமுலுக்கு வர வேண்டுமானால் அரசாங்கத்தின் மூலம் பல சட்டத்திட்டங்கள் ஏற்பட வேண்டி இருப்பதால் அதை உத்தேசித்தும் அரசியலில் தலையிட வேண்டியது அவசியமாகிறது. ஆகவே சுயமரியாதை இயக்கம் ஏதாவது எப்போதாவது அரசியலில் தலையிட்டது என்று சொல்ல வேண்டிவருமானால் அரசாங்க சட்ட திட்டங்களை மீறவோ, அவைகளுக்கு இடையூறு உண்டாக்கவோ அல்ல என்பதை அறிய வேண்டுகிறேன்.

பொருளியல்

நாட்டு மக்களின் பொது நலத்துக்கும், ஏழை மக்களின் வாழ்க்கை உயர்வுக்கும் பொருளாதார நிலையை விருத்தி செய்து அது எல்லா மக்களுக்கும் ஒரு அளவுக்காவது சமமாய் பரவப்படும்படியாயும் ஒரே கையில் ஏராளமாய் குவியாமலும் பார்த்துக் கொள்ள வேண்டியது முக்கியமானதும் அவசியமானதுமான காரியமாகும். ஆதலால் அந்த அளவுக்கு பயன் ஏற்படும்படி செய்ய வியாபாரம், லேவாதேவி, விவசாயம் முதலிய துறைகளில் சில மாற்றம் செய்ய வேண்டியது அவசியம் என்பது யாவரும் ஒப்புக் கொள்ளத்தக்கதாகும்.

அப்படிச் செய்வதிலும் பலாத்காரம் செய்வதோ திடீரென்று தலைகீழ் புரட்சியான காரியங்களால் மனித சமூகத்தில் பயமும், அதிருப்தியும், சமாதான பங்கமும் ஏற்படும்படி செய்து, சட்டம், சமாதானம் சீர்குலையும்படி செய்வதோ ஆகிய காரியங்கள் இல்லாமல் பொதுஜன உபயோககரமான தொழில் சாலைகள், வியாபாரங்கள், லேவாதேவி முதலான காரியங்களை அரசாங்க நிருவாகத்திற்குள்ளாகவே கொண்டு வரும்படி செய்வதும், அரசாங்க நேர்பார்வை நிர்வாகத்திற்குட்பட்ட கூட்டுறவு முறையின் கீழ் அவை நடைபெறும்படி செய்து லாப நஷ்டங்கள் எல்லா மக்களுக்கும் சமமாய் இருக்கும்படி செய்வது முதலான சமதர்மக் கொள்கையே இயக்கத்தின் பொருளாதாரத் தத்துவமாகும்.

சமூக இயல்

மக்கள் அரசியலிலாகட்டும், பொருள் இயலிலாகட்டும் கீழ்மைப்பட்டும், இழிவுபடுத்தப்பட்டும் கிடப்பதற்கு சமுதாயத்துறையிலுள்ள பழக்க வழக்கங்களும், மதத் துறையிலுள்ள பேத உணர்ச்சிகளும், பிரிவினைகளும் பெரியதொரு அளவுக்குக் காரணமாய் இருப்பதால் ஜாதி மத சம்பந்தமான மூடக்கட்டுப்பாடுகளும் குருட்டு நம்பிக்கைகளும் ஒழிக்கப்பட வேண்டியது மிகவும் அவசியமாகும். இதை சுயமரியாதை இயக்கம் ஆதியிலிருந்தே வற்புறுத்தி வந்திருக்கிறது.

ஆகவே இந்தக் காரியங்கள் செய்வதற்கு வகுப்பு பேதங்கள், ஜாதி பேதங்கள் ஆகியவைகளை அறவே ஒழிக்க முயற்சிப்பதும், ஜாதி வகுப்பு முதலியவைகளுக்கு ஆக்கமளிக்கும் மதங்களின் தன்மைகளை வெளிப் படுத்துவதும், நியாயமான முறைகளில் ஜாதி, வகுப்பு, மதம் ஆகியவைகளின் தத்துவங்களைக் கண்டிப்பதுமான காரியங்கள் செய்ய வேண்டியது அவசியமென்றும் கருதுகிறது.

இப்படிச் செய்வதில் ஜாதி வகுப்புத் துவேஷங்களை உற்பத்தி செய்ய வேண்டுமென்பதோ, எந்த ஜாதி, எந்த மதம் ஆகியவற்றைச் சேர்ந்தவர்களுக்குள் துவேஷமோ, மனவருத்தமோ உண்டாகும்படி செய்வதோ அல்லது வேண்டுமென்றே அவமானப்படுத்துவது என்பதோ சிறிதும் லட்சியமல்ல என்பதோடு அதை ஒரு நாளும் இயக்கம் ஒப்புக் கொள்ளுவதும் இல்லை.

முடிவு

எனவே சுயமரியாதை இயக்கத்தின் அரசியல் கொள்கையானது பார்ப்பன ஆதிக்கக் காங்கிரசை எதிர்ப்பதும் அதற்காக எவ்வளவு அவசியப் பட்டாலும் அவ்வளவு அரசாங்கத்துடன் ஒத்துழைப்பதும் சமுதாய இயலில் ஜாதிமத பேதங்களை அகற்றுவதும் மூட நம்பிக்கைகளை ஒழிப்பதும் பொருளியலில் சமதர்மமுமேயாகும். இவைகளைப் பற்றிய விஷயங்களை மக்களிடை பிரசாரம் செய்யவும், அமுலுக்குக் கொண்டு வரச் செய்யவுமான காரியங்கள் நடைபெற வேண்டுமானால் காங்கிரஸ் ஆட்சியைவிட பிரிட்டிஷ் ஆட்சியே மேலானது என்பது என்னுடைய வெகு நாளைய அபிப்பிராயமாகும்.

------------------------------------ ஈ.வெ. ராமசாமி - “குடி அரசு” அறிக்கை 10.03.1935

0 comments: