Search This Blog

23.12.10

மக்களின் நலன் கருதி சோதிடத்தைத் தடை செய்யவேண்டும்!


தடை செய்க சோதிடத்தை!

சோதிடம் என்னும் மூட நம்பிக்கையால் அன்றாடம் நிகழும் கொடுமைகள் நாளேடுகளில் வந்துகொண்டுதானிருக்கின்றன.

சென்னை மேடவாக்கத்தைச் சேர்ந்த வில்வராஜ் என்ற துணி வியாபாரி, சோதிடன் கூறினான் என்று கூறி, ஏற்கெனவே மனைவி இருக்க, வேறு ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து அதற்காக ஈடுபட்ட நிலையில், இன்னொரு பெண்ணால் ஆள் வைத்துக் கொல்லப்பட்டார் என்ற செய்தி ஏடுகளில் வெளிவந்துள்ளது.

தன் பிள்ளை பிறந்த நேரம் சரியில்லை என்று சோதிடர் சொல்ல, பெற்ற பிள்ளையையே அடித்துக் கொன்றான் என்ற ஒரு செய்தி சில மாதங்களுக்கு முன்பு வந்தது.

சோதிடனின் பேச்சைக் கேட்டு தான் பெற்ற பிள்ளையைக் கிணற்றில் வீசி எறிந்தாள் ஒரு பெண் என்ற செய்தி இந்த வாரமே வெளிவந்தது.

சென்னையில் பிரபல ஓட்டல்காரர் சோதிடனின் பேச்சைக் கேட்டு, இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்து, அதன் பின்விளைவாக என்னென்ன வெல்லாம் நிகழ்ந்தன என்பது பரவலாகத் தெரிந்த தகவலாகும்.

உலகில் ஒரே ஒரு இந்து ராஜ்ஜியம் நடக்கும் நாடு என்று பெருமையாகப் பேசப்பட்ட நேபாளத்தில் என்ன நடந்தது?

சோதிடன் பேச்சை நம்பி இளவரசனுக்குத் திரு மணத் தேதியைத் தள்ளிப் போட்டுக் கொண்டே போனதால், ஆத்திரப்பட்ட இளவரசன் தன் பெற்றோர்கள் உள்பட பலரை துப்பாக்கிக் குண்டுகளால் தீர்த்துக் கட்டி தன்னையும் சுட்டுக்கொள்ள வில்லையா?

இவ்வளவுக்குப் பிறகும் கூட சோதிடக் கிறுக்கு நம் மக்களை ஆட்டிப் படைப்பது ஒரு வகையில் பரிதாபமும், இன்னொரு வகையில் வேதனையும் பகுத்தறிவாளர்களை, மனிதநேயர்களைப் பிய்த்துத் தின்னுகிறது.

மக்களிடம் அறிவியல் மனப்பான்மையை வளர்க்கவேண்டும் என்று அரசமைப்புச் சட்டத்தில் எழுதி வைத்துக் கொண்டு - இதுபோன்ற சோதி டர்களை அனுமதிப்பது எந்த வகையில் சரி?

ஆங்கில ஏடுகள் உள்பட சோதிடப் பலன்களை, அன்றாட இராசிப் பலன்களை வெளியிட்டுக் கொண்டிருந்தால் மக்கள் புத்தி எப்படி திருந்தித் தொலையும்? போதும் போதாதற்குத் தொலைக் காட்சிகள் போட்டி போட்டுக் கொண்டு, இந்த சோதிட மூட நம்பிக்கையைப் பரப்புவதில் தீவிரம் காட்டித் தொலைகின்றன.

ஒரு நாளேட்டில் ஒருவருடைய இராசிபலன், வியாபாரம் லாபம் என்று இருக்கும். அதே ஆசாமிக்கு இன்னொரு ஏட்டில் நட்டம் என்றிருக்கும். இந்த முரண்பாடுகளை யார் கண்டுகொள்ளப் போகிறார்கள் என்ற தைரியம்தான்.

தெய்வப் பிரசன்னம் பார்க்கும் உன்னிக்கிருஷ்ண பணிக்கரே இப்பொழுது சிக்கலில் மாட்டிக் கொண்டு இருக்கிறார். ஜெயமாலா என்ற சினிமா நடிகை அய்யப்பன் விக்ரகத்தைத் தொட் டது தொடர்பான பிரச்சினையில் உன்னிக்கிருஷ்ண பணிக்கர்தான் முதல் குற்றவாளியாகச் சேர்க்கப் பட்டுள்ளார்.

ஜெயலலிதா அம்மையாருக்கும் இவர்தான் சோதிடர். தன் சோதிடத்தை அவரால் கணித்துக் கொள்ள முடியவில்லையே! சோதிடத்தின் யோக்கியதை இதுதான்!

காந்தியாருக்கு திருத்தணி சோதிடர் வி.கே. கிருஷ்ணமாச்சாரி என்பர் 125 வயது என்று ஆயுள் கணித்தாரே - என்ன நடந்தது - எண்பது ஆண்டு காலம் கூட அவர் உயிர் வாழ முடியவில்லையே!

கடந்த மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர்கள் சோதிடத்தின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டனர்.

விளைவு என்ன? விளக்கெண்ணெய்க்குக் கேடானதே தவிர, பிள்ளை பிழைத்தபாடில்லையே!

மக்களை மடையர்களாக்கும், இழப்புகளுக்கு ஆளாக்கும் சோதிடத்தை அரசுகள் கண்டிப்பாகத் தடை செய்யலாம். தனி மனித உரிமை என்று சொல்லுவதையெல்லாம் ஏற்றுக் கொள்ள முடியாது. திருடுவது, விபச்சாரம் செய்வதுகூட தனி மனித உரிமை என்ற தலைப்பின்கீழ் வந்துவிடுமே!

எனவே, மக்களின் நலன் கருதி சோதிடத்தைத் தடை செய்யவேண்டும் என்பதே நமது வேண்டுகோள்!

---------------------"விடுதலை” தலையங்கம் 23-12-2010

3 comments:

தமிழ் said...

http://www.dinamani.com/edition/Story.aspx?SectionName=Tamilnadu&artid=350906&SectionID=129&MainSectionID=129&SEO=&Title=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%20%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D?

தமிழ் said...

அய்யா ஓவியா அவர்களே , சுட்டியை சொடுக்கி கட்டுரையை வாசிக்கவும். பதிலை உமது பதிவில் போடவும்.- பெரியாரின் உண்மை தொண்டனாக இருக்கும் தமிழன்.

தமிழ் ஓவியா said...

பெரியார் மீது தினமணிப் பார்ப்பானுக்கு என்ன அக்கறை?
http://thamizhoviya.blogspot.com/2010/12/blog-post_25.html

படியுங்கள்- தெளிவடையுங்கள்