Search This Blog

17.12.10

மருதையா பிள்ளைக்கும் மார்க்க சகாய தீக்ஷதருக்கும் சம்பாஷணை





மருதையாபிள்ளை: வாங்கய்யா தீக்ஷதரே! சௌக்கியமா? ரொம்பநாளாக காணமே.

மார்க்க சகாய தீக்ஷதர்: ஆமாம், என்ன செய்கிறது? பிழைக்கிறவழி பார்க்கவேண்டாமா?

மருதையா: நீங்கள் என்ன பாடுபடவா போகிறீர்கள், யாரோ சம்பாதிக்கிறான், எப்படியோ உங்கள் காரியம் நோகாமல் நடந்து விடுமே, என்ன குறை?

மார்க்க: பூர்வீகம் போல் எண்ணிக்கொண்டு ஒன்றுந் தெரியாதவர் போல் பேசறீர்களே.

மருதையா: பூர்வீகமென்ன? நவீனமென்ன? எப்போதும் போலவேதான் உதயம் அஸ்தமனம் ஆகிக்கொண்டே வருகிறது. உமக்கு மாத்திரம் என்ன வித்யாசப்பட்டு காண்கிறதோ? எனக்கு ஒன்றும் தோணவே இல்லையே.

மார்க்க: ஆமாம், உமக்கென்ன தெரியவேண்டி இருக்கிறது? எங்களைப்போல தூங்கி விழித்ததும் எங்கு கல்யாணம், எங்கு கருமாதி என்று வீடுவீடாக அலைந்தாலல்லவோ தெரியும். அப்படித்தான் அலைந்தாலும் முன் போல ஏதாவது மரியாதையுண்டா? இல்லாவிட்டாலும் தக்ஷணையாவது அணாக்கணக்கில் உண்டா? எல்லாம் வர வரக் கெட்டுப் போய்விட்டது. அந்த வயித்தெரிச்சலைக் கிளப்பாதேயும். வேறு ஏதாவது பேச்சிருந்தால் பேசுங்கோ.

மருதையா: என்ன தீக்ஷதரே, மிக வருத்தமாகவும் சலிப்பாகவும் பேசுகிறீர்கள். ஏதாவது உங்களுக்கு வரவேண்டிய கடனை இல்லை என்று மறுத்து விடுகிறார்களா? அல்லது யாசிப்பது தவறு என்று அறிந்துகொள்ளுமாறு செய்கிறார்களா? எனக்கு ஒன்றும் புரியவில்லை.

மார்க்க: கடனாவது இழவாவது ஏதோ சுபா சுபங்களில் பிராமணனாயிற்றே என்று கொஞ்சமும் தற்கால ஜனங்கள் கவனிக்கிறதே இல்லை. தர்ம மில்லை; தக்ஷணை இல்லை; தாம்பூலமில்லை. வர வர மிகவும் கேவலமாகி விட்டது. என்னமோ விருதா செலவாக நினைத்து வருகிறார்களே ஒழிய இதற்கெல்லாம் பலாபலன் கிடைக்கு மென்பது தோணுகிறதே இல்லை. மகா மோசம். அதைக் கேட்க வேண்டாம்.

மருதையா: அவனவன் வீட்டு நல்ல காரியம் கெட்ட காரியங்களில் உமக்கென்ன பங்கு? யார் முதலை யாருக்கு இல்லை என்கிறார்கள்? இதில் வரும் பலா பலனென்ன? மிகவும் வருத்தப்படுகிறீர்களே விபரம் விளங்கும்படிதான் சொல்லுங்களேன்.

மார்க்க: அவர் காரியங்களில் பங்கில்லா விட்டாலும் என்னய்யா தான தர்மமில்லையா, புண்ய பாபமில்லையா? அவர் முதலானாலும் ப்ராம்மணா சூத்ராள் இல்லையா, மேல் கீழில்லையா? பெண் பிள்ளைகள் கூட கேவலமாக துச்சமாக நினைத்து பேசற காலம் வந்துட்டதே! உமக்கொன்றும் தெரியாது போல் பேசரேளே, வயித்தெரிச்சலைக் கிளப்பரேளே.

மருதையா: இன்னொருவனுடைய பாப புண்யத்தில் உமக்கென்ன கவலை, நீர் பிராமணனானால் மற்றவர்களுக்கென்ன, அவர் சூத்திரனானால் உமக்கென்ன? மனித வர்க்கத்தில் மேல் கீழ் என்ன? "பெண் பிள்ளை கூட" என சொல்கிறீர்களே, பெண்ணென்றால் கேவலமாக நினைத்துக் கொண்டீரா? இவ்வளவு வயித்தெரிச்சலை நீரே ஏன் உண்டாக்கிக் கொள்ள வேண்டும்? உம்ம அலுவலை நீர் கவனித்துக்கொண்டு போனால் உமக்கேன் இவ்வளவு வருத்தம் வருகிறது? இதற்கெல்லாம் காரணமே புலப்படவில்லை.

மார்க்க: நீர் வயசானவராகவிருந்தும் நவீன ஜனங்களைப்போல பேசரேளே ஒழிய கொஞ்சமும் சாஸ்திர ஞானத்தோடு பேசறதில்லையே.

மருதையா: எனக்கு சாஸ்திரக் கியானமுமில்லை; அதை நான் நம்புகிறதுமில்லை. உமக்கு எதாவது ஃ ஞானம் இருந்தால் விபரமாகவும் பகுத்தறிவுக்குப் பொருந்துமாறும் சொன்னால் நான் தெரிந்து கொள்ளுகிறேன்.

மார்க்க: அப்படியானால் விபரமாக சொல்வதைக் கேளும். பிராமண க்ஷத்திரிய வைசிய சூத்திரரென்கிற நான்கு வருணங்களுண்டு. அதில் பிராமணனுக்கு ஆறு தொழில் உண்டு. அவைகளாவன: வேதம் வாசித்தல், வாசிப்பித்தல், யாகம் செய்தல், செய்வித்து வைத்தல், தானம் கொடுக்கல், யாசித்தல் என்கிறவைகளாகும். ஆகையால் அவர்களுக்கு யாரிடமாவது சென்று யாசிக்க நேரும் சமயங்களில் மற்றவர்கள் அப்பிராமணர்களுக்கு உபசாரத்துடன் அவர்களுக்கு வேண்டியவைகளை உதவ வேண்டும். பெண்கள் முதலிய துச்சமானவர்களை விட்டு பதில் சொல்லும்படி செய்யக்கூடாது.

மருதையா: ஓஹோ! யாசிப்பவர்க்கு மரியாதையோடு உபசரிக்க வேண்டுமா? சரி சரி பெண்களை தாழ்மையாக நினைக்க வேண்டுமா பேஷ்! நன்றாக இருக்கிறது.

மார்க்க: உமக்கிதெல்லாம் கேலியாக் காணலாம், அப்படி நினையாதேயும். சாஸ்திரத்தில் அதிதிகளை தெய்வமாக பாவித்துபசரிக்க வேண்டுமென்று சொல்லப்பட்டிருக்கிறது. பெண்களை மிகவும் கேவலமாகச் சொல்லி யிருப்பதாகச் சொன்னால் நம்பமாட்டீர். அதை வேணுமானால் அப்படியே சொல்லி விடுகிறேன் கேளும்.

"நண்ணருங் கடுவெங் கூற்றரு கரகேழ்

பிறப் பிறப்புறு புலி நாகம்

திண்கரியரி மாவலகை திண்குறளி தீவளி

கோடி வெந்தேட்கள்

விண்ணிடியேறுகழு புழு குளவி வேதை செய்வன

வெலாந் திரண்டு

பெண்ணுருவெடுத்த....." என்றும்,

ஆயிரநான்கு நூறொரு நான்கு பத்தொரு நான்(கு)

எட்டாவறையும்

நோய் கொளவரினுமமையுமந்தோவோர் நுண்

ணிடைப் பெண்ணலம் வேண்டேம்"

என்றும் இன்னும் இதைப்பற்றி பலவாறாகச் சொல்லி இருப்பதை யெல்லாம் அறியாதவராகப் பேசறளே; என்ன சொல்கிறது.

மருதையா: இவைகளெல்லாம் தன்னலக்காரரால் எழுதிவைத்துக் கொண்டு ஊரை ஏமாற்றி வருவதற்கு உபயோகப்படுத்தி வருகிற வழக்க மென்று எனக்குத் தெரிந்தது தான். இம்மாதிரி எல்லாம் இனி சொல்லாது ஒழுக்கமுள்ளவைகளைக் கைப்பற்றி அவைகளிலுள்ளதை மனதில் வைத்து நடந்து வாரும்.

மார்க்க: ஆனால் ஒழுக்கமுள்ளதையும் பொதுநலக்காரர் அனுஷ்டிப் பதையும் நீர் தான் சொல்லுமே பார்ப்போம்.

மருதையா: ஆனால் சொல்லுகிறேன் கேளும். அதாவது அழையாமல் கண்ட இடங்களுக்குச் செல்லக்கூடாது.. அப்படிப்போனால் *"திறந்து கிடக்கும் வாசல்தோறும் நுழைந்து திரியும் பதார்த்த"மாக பாவிக்கப்படுவீர். யாரிடமும் ஒன்றும் யாசிக்கக்கூடாது. அப்படி செய்வீர்களானால் உம்மை திருடனுக்குச் சமானமாக பாவிப்பார்கள். எப்படி எனில் திருடனும் தனக்குப் பாத்தியமில்லாத மற்றொருவன் முதலை தான் பெற இச்சிக்கிறான். யாசகனும் தனக்கு பாத்தியப்படாத மற்றொருவன் முதலை அடைய இச்சிக்கிறான். இதில் இன்னொருவன் முதலை இச்சிப்பதில் இருவருக்கும் பேதமென்ன விருக்கிறது? நீர் சொன்ன பெண்ணைப்பற்றி இழி சொற்களுக்கும் ஒரு பதில் சொல்லி விடுகிறேன்.

"கண்டு கேட்டுண்டுயிர்த்து ற்றறியுமைம் புலனும்

ஒண்டொடி கண்ணே யுள"

"உலகின் வாழ்க்கை செவ்வனே நடைபெறுதற்குத் தாயகமான பெண்கள் என்பவர்கள் இன்றியமையாதவர்கள்" என்னும் சீரிய பொன்னுரைகளைக் கேட்டிலர் போலும்.

ஆகையால் இன்று முதல் ஏதாவது ஒரு நல்ல தொழிலைக் கடைப் பிடித்துச் ஜீவித்து வாரும். இந்தப் பழய சோம்பேறி வாழ்க்கைகளை இனி கனவிலும் நினையாதீர். உம்முடன் பழகின தோஷத்திற்கு இவைதான் நான் உமக்குச் சொல்லக்கூடும். நான் போய்வருகிறேன் நேரமாகிவிட்டது.

-------------------- கோமாளி யெழுதுவது என்ற பெயரில் தந்தைபெரியார் அவர்கள் எழுதிய உரையாடல் - “பகுத்தறிவு” சூலை 1936

0 comments: