Search This Blog

31.3.12

அண்ணா தி.மு.க.வால் கொச்சைப்படுத்தப்படுகிறார் அண்ணா!

அண்ணாவை அவமதிக்காதீர்!

அண்ணா என்ற பெயர் அண்ணா தி.மு.க.வால் கொச்சைப்படுத்தப்படுகிறது. திராவிட என்ற ஆரியப் பண்பாட்டுப் படையெடுப்புக்கு எதிரான இன அடையாளத் தத்துவம் தரைமட்டமாக்கப்படுகிறது.

பவுத்தமார்க்கத்தில் பார்ப்பனர்கள் புகுந்து திரிபுவாதப் புயலை நுழைத்து சேதப்படுத்தியதுபோல திராவிடர் இயக்கத்தில் ஆரியம் ஊடுருவி உருக்குலைக்கும் வேலை வேகமாக நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. நீதிக்கட்சியில் பார்ப்பனர்களைச் சேர்க்கலாம் என்று ஆந்திர மாநிலம் நெல்லூரில் நடைபெற்ற மாநாட்டில் (6.10.1929) தீர்மானம் ஒன்றை ஏ.பி. பாத்ரோ முன்மொழிந்தார். தந்தை பெரியார் கடுமையாக எதிர்த்தார். ஆர்.கே. சண்முகம் அவர்களும் கடுமையாக (ஆங்கிலத்தில் பேசி) எதிர்த்தார்.

மக்கள் பிறவியில் ஜாதி உண் டென்ற கொள்கை உள்ளவரையில் நமது கட்சியில் எந்தப் பார்ப்பனரையும் எவ்வித நிபந்தனைக்கு ஒப்புக் கொண்டாலும் சேர்ப்பது நமக்குப் பயன்படாது என்றார் தந்தை பெரியார்.

தந்தை பெரியார் அவர்களின் உரைக்குப் பிறகு கூட்டத்தின் தலைவர் முனுசாமி நாயுடு வாக்கெடுப்புக்கு உத்தரவிட்டார். பார்ப்பனர்களை நீதிக்கட்சியில் சேர்த்துக் கொள்ளலாம் என்ற பாத்ரோவின் தீர்மானத்துக்கு வெறும் ஏழு வாக்குகளும், அதனை எதிர்த்த தந்தை பெரியார் அவர்களுக்கு நூற்றுக்கு மேற்பட்ட வாக்கு களும் கிடைத்து தீர்மானம் தோல்வியைத் தழுவியது.

இரண்டாவது தீர்மானமாக பார்ப்பனர்களைச் சட்டசபையில் சேர்த்துக் கொள்ளலாம் என்பதாகும். அத்தீர்மானத்திற்கு ஆதரவாக 13 வாக்குகளும், எதிராக 14 வாக்குகளும் அளிக்கப்பட்டதால் அந்தத் தீர்மானமும் தோற்றுப் போனது.
----------------(குடிஅரசு 13.10.1929)

நெல்லூர் மாநாடு நடைபெறுவதற்கு முன்பே, அதன் நோக்கத்தைப் புரிந்து கொண்ட தந்தை பெரியார் குடிஅரசு இதழில் பின் வருமாறு எழுதினார் (22.9.1929).

எந்தக் காரணத்தை முன்னிட்டும் பார்ப்பனர்களை இவ்வியக்கத்தில் சேர்த்தால், அவ்வியக்கம் அன்றே தேன் கூட்டில் நெருப்பு வைக்கப்பட் டது போல் இயக்கம் செத்து, பார்ப்பன ஆதிக்கத்திற்கு மற்றொரு சாதனமாய் ஆகிவிடும் என்பதை மட்டும் அழுத்தந் திருத்தமாய் உறுதியாகச் சொல்கிறோம் என்று எழுதினாரே!

1929இல் தந்தை பெரியார் எச்சரித்ததை இப்பொழுது 2012இல் க(சா)ட்சியாகப் பார்க்க முடிகிறது.

திராவிடர் கழகத்திலிருந்து தி.மு.க. பிரிந்தபோது திராவிடர் என்பதற்குப் பதிலாக திராவிட என்பதோடு நிறுத்திக் கொண்டு பார்ப்பனர்களும் தி.மு.க.வில் சேரலாம் என்ற கதவைக் கொஞ்சம் திறந்துவிட்டது.

வி.பி. இராமன் போன்ற பார்ப்பனர்கள் தி.மு.க.வில் சேர ஆரம்பித் தனர். ஆனாலும் தேர்தலில் ஈடுபட முடிவு எடுத்த திமுக இதுவரை எந்த ஒரு பார்ப்பனரையும் திமுக வேட் பாளராக நிறுத்தவில்லை என்பது இமயமலை போன்ற உண்மையாகும். தி.மு.க. வெற்றி பெற்று அண்ணா அவர்கள் முதல் அமைச்சர் ஆன நிலையில் செய்தியாளர்கள் கேட்ட கேள்வி. அமைச்சரவையில் பிராமணர்களுக்கு இடம் உண்டா? என்பதுதான் அந்தக் கேள்வி.

என்னை நம்பி யாரும் வர வில்லையே! என்பதுதான் அண்ணா அவர்கள் அளித்த அழகான பதில். இன்றுவரை தி.மு.க.வில் இந்த நிலை உறுதியாகப் பின்பற்றப்பட்டு வருகிறது.

தி.மு.க.விலிருந்து பிரிந்து அண்ணா தி.மு.க.வை உருவாக்கிய எம்.ஜி.ஆர். அவர்கள் திராவிட இயக்கக் கொள்கையை மிகவும் நீர்த்துப் போகச் செய்தவர்.

ஆட்சியைப் பிடித்த எம்.ஜி.ஆர். எச். வெங்கட்ரமண ஹண்டே என்ற பார்ப்பனருக்கு அமைச்சரவையில் இடம் கொடுத்து தவறான வழிகாட்டி, தீராப் பழியைத் தேடிக் கொண்டார். கட்சிக்கு செல்வி ஜெயலலிதா என்ற பார்ப்பனப் பெண்மணியை கொள்கை பரப்புச் செயலாளராகவே ஆக்கி, திராவிடர் இயக்கத்தின் ஆதார அடி வேர்மீதே வெடி குண்டை வீசினார்.

ஆம், வரலாற்றில் பவுத்த மார்க்கத்துக்குப் பார்ப்பனர்களால் ஏற்பட்ட பாதகம் அ.இ.அ.தி.மு.க.வின் பார்ப்பனத் தன்மை மூலம் ஏற்பட்டு விட்டது.

அதன் அப்பட்டமான அடையாளம்தான் சேது சமுத்திரத் திட்டம் செயல்பாட்டுக்கு வரக் கூடாது; ராமன் கட்டிய பாலத்தை இடிக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றத்தில் அ.இ.அ.தி. மு.க.வின் பொதுச் செயலாளர் வழக்குத் தொடுத்ததாகும்.

இப்பொழுது அடுத்த கட்டமாக, ராமன் பாலத்தைத் தேசிய நினைவுச் சின்னமாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்று பிரதமருக்கு தமிழ்நாடு முதல் அமைச்சர் செல்வி ஜெயலலிதா எழுதியுள்ள கடிதமாகும். (28.9.2012).

அண்ணாவின் பெயரைக் கட்சி யிலும், உருவத்தைக் கொடியிலும் வைத்துள்ள அ.இ.அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளர் இப்படிஒரு கடிதத்தை பிரதமருக்கு எழுதி இருப்பது எந்த வகையில் சரி?

அண்ணா ராமனை ஏற்றுக் கொண்டவரா?

இராமாயணத்தை அண்ணா அவர்கள் ஒப்புக் கொண்டதுண்டா?

தீ பரவட்டும்! என்ற சொல்லை யாவது செல்வி ஜெயலலிதா கேள்விப் பட்டு இருப்பாரா? தீ பரவட்டும் என்ற ஒரு நூல் வெளிவந்துள்ளதே அறிவாரா?

டாக்டர் ரா. பி. சேதுபிள்ளை அவர்களோடு சென்னையிலும், நாவலர் சோமசுந்தர பாரதியாரோடு சேலத்திலும் இராமாயணத்தையும், பெரிய புராணத்தையும் கொளுத்துவதா கூடாதா? என்ற விவாதப் போரில், கொளுத்தப்பட வேண்டும் என்ப தற்கான காரண காரியங்களை அடுக்கடுக்காக எடுத்து வைத்துத் திணற அடித்த வரலாறு எல்லாம் அறிந்தவரா இந்த அம்மையார்?
திராவிடர் இயக்கப் பெரும் புலவர் குழந்தை அவர்களை அறிவாரா? அவர் எழுதிய இராவண காவியம் பற்றி கேள்வியாவது பட்டதுண்டா?

அந்த நூல் காங்கிரஸ் ஆட்சியில் தடை செய்யப்பட்டது தெரியுமா? பிறகு கலைஞர் முதல் அமைச்சராக இருந்தபோது அந்தத் தடை நீக்கப்பட்ட வரலாறெல்லாம் புரியுமா?

புலவர் குழந்தையின் இராவண காவியத்துக்கு அண்ணா தந்த அணிந்துரையை ஒருமுறை செல்வி ஜெயலலிதா படித்துப் பார்க்கட்டும்! -- இதுவரை படிக்காவிட்டால் படிக்குமாறு இந்த நேரத்தில் பரிந்துரையும் செய்கிறோம்.

இராமதாசர்களுக்கு இராவணதாசர் விடுக்கும் மறுப்புரையல்ல புலவர் குழந்தை அவர்களின் இராவண காவியம். இராமதாசர் களுக்குத் தன்மான தமிழர்தரும் மயக்க நீக்க மருந்து இது. தாசர் நிலைகூடாது தமிழா! இராமதாசர் என்பது ஆரிய தாசராக்குவதற்கே பயன்படும் நண்பா! என்று அறிவு றுத்தவே இராவண காவியம் நூல்.

இராவணகாவியமும், இராமா யணமும் இரண்டும் கற்பனைகளே. முன்னது இராமனைத் தேவனாக்க! இஃது (இராவண காவியம்) இரா வணனைத் தேவனாக்க அல்ல, தமிழனாக்க, அதாவது வீரனாக்க என்று அண்ணா எழுதியுள்ளாரே!

இராமாயணம்பற்றி அண்ணாவே இவ்வளவு எழுதியிருக்கிறார் என்றால், தந்தை பெரியார் அவர்கள் எழுதிக் குவித்ததோ. அளவிடற்கரியது. குறிப்பாக தந்தை பெரியார் எழுதி இலட்சக்கணக்கில் வெளிவந்திருக்கும் இராமாயணப் பாத்திரங்கள் இராமாயணக் குறிப்புகள் என்ற இரு நூல்களைப் படித்தாக வேண்டும்.

சச்சு இராமாயணம் என்று அது இந்தியிலும் வெளி வந்துள்ளது. Ramayana A True Reading என்று ஆங்கிலத்திலும் வெளிவந்துள்ளது.

திராவிடர் இயக்கத்திற்குத் தலைமை வகிப்பது என்றால் சாதாரணமானதா? இந்த அடிப்படை உயிர் எழுத்துக் களையும், மெய்யெழுத்துக்களையும் படிக்காமல், உணராமல், ஏற்காமல் எப்படி திராவிடர் இயக்கத்தில் உறுப்பினராகக்கூட ஆக முடியும்? உறுப்பினராகவே ஆக முடியாது என்றால் எப்படி கட்சியின் பொதுச் செயலாளராக இருக்க முடியும்?


இது ஒன்றும் அரசியல் அல்ல- _ அடாவடித்தனமாகப் பேசுவதற்கு?

ஒரு மாபெரும் இயக்க வரலாற்றின் ஆரம்பப் பாடங்கள்.

கடைசி கடைசியாக நமது கேள்விகள் மூன்றே மூன்றுதான்!

அண்ணாவின் கொள்கையை ஏற்காதவர் எப்படி அண்ணா தி.மு.க.வுக்கு பொதுச் செயலாளராக இருக்க முடியும்?

தந்தை பெரியார் அவர்களின் கொள்கைகளை சீரணிக்க முடியாதவர் எப்படி திராவிட இயக்கத்தில் இடம் பெற முடியும்?
திராவிடர் இயக்கச் சித்தாந்தத்தின் எதிரியாக இருக்கக் கூடியவர் திராவிட இயக்கத்தில் இருக்க முடியுமா? இது அசல் ஊடுருவல் அல்லவா?

இப்பொழுது ஒரே வழி தான் இருக்கிறது. இந்தக் கொள்கைகளை ஏற்கா விட்டால் கட்சியிலிருந்து விலகி நிற்க வேண்டும் இல்லை இவர்தான் தலைமை வகிக்க வேண்டும் என்றால் கட்சியின் பெயரிலிருந்து அண்ணா வையும், திராவிட பெயரையும் விலக்கிக் கொள்ள வேண்டும்.

அதுதான் அறிவு நாணயம் என்பது.

இறுதியாக அண்ணா திமுக தொண்டர்களுக்கு ஒரு முக்கிய வேண்டுகோள்.

அய்யாவையும் அண்ணாவையும் அவர்கள் கண்ட திராவிடர் இயக்கக் கொள்கைகளையும் ஏற்காத ஒருவர்தான் உங்களுக்குத் தலைவரா? சிந்தியுங்கள்! சிந்தியுங்கள்!!

தீபரவட்டும்!

சுயமரியாதைக்காரர்களின் சீர்திருத்த முயற்சிகளை ஆரியம் கெடுத்துக் குலைத்து வருகிறது. இஸ்லாமியர் இரண்டாண்டிலே இவ்வளவு வலிமை பெற்றுத் தனிக்கலை, தனிநெறி கொண்டு, இந்துக்கள் என்பவரின் நெறி, கலை ஆகியவை தமதல்ல, வேறு என்பதைத் தெரிந்து வாழ்ந்து வருவதனால்தான். ஆரிய மார்க்கத்தையும் கலையையும் தனதெனக் கருதிக்கொண்டு, ஆரியக் கற்பனைகளைத் தமிழ்க் கலையிலே கலக்கிக் கொண்டதனாலேயே, இன்று தமிழர் என்ற தனி உரிமைக்கோ, தன்மானத்துக்கோ, தன்னரசுக்கோ போரிட முடியாத நிலை பெற்றனர். எனவே, தமிழரும், இஸ்லாமியர் போலவே தங்களின் தனிக் கலையைப் போற்றிப் பிற இனக்கலையை ஒழித்து வந்தால்தான், சுயமரியாதையுடன் வாழமுடியும். ஆகவேதான், கம்ப இராமாயணம், பெரிய புராணமாகிய ஆரிய நெறி கூறும் ஏடுகள், பொசுக்கப்பட வேண்டும் என்று கூறுகிறோம்.

*******

இராமாயணம் வைணவர்க்கு மேலான நூல்; பெரிய புராணம் சிவனடியார்களின் பக்தியை விளக்கிடும் நூல். சைவம், வைணவம் எனும் இரு மார்க்கங்களையும் பின்பற்றும் தமிழ் மக்கள் முறையே பெரிய புராணம், கம்ப இராமாயணமாகிய இரு நூற்களையும் தமது மார்க்க நூற்களாகக் கொள்கின்றனர். வைணவம், சைவம் எனும் இரண்டும் இந்து, மார்க்கத்தின் கிளைகள், தமிழர் இந்துக்களல்லர். தமிழருக்குத் தனி நெறி உண்டு என்றாலும் இவ்விரு மார்க்கங்களையும் தழுவிக் கொள்வதால், தமிழர் தம்மை இந்துக்கள் என்று கருதிக் கொள்வதால் தமிழர், தாங்கள் தனி இனம் என்பதை மறுத்து, இந்துக்களில் ஒரு பகுதி என்று எண்ணி, தன்மானத்தையும், தன்னரசையும் இழந்தனர்.
-------------- அறிஞர் அண்ணா, (நூல்: தீ பரவட்டும்!)

------------------- மின்சாரம் அவர்கள் 31-3-2012 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

30.3.12

திராவிடர் கழகத் தலைவரை சீண்டும் திருவாளர் சோ



துக்ளக் ஆண்டு விழாவில் பேசிய திருவாளர் சோ ராமசாமி பொருத்தமில்லாத இடத்தில், தேவையில்லாமல் திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்களை வம்புக்கு இழுத்திருக்கிறார். பார்ப்பன வட்டாரங்களுக்கு அவர்தான் இலக்கு. காரணம் அவர்தானே திராவிடர் இயக்கத்தில் அடிப்படைக் கொள்கையாகிய ஆரிய ஆதிக்கத்தின் ஆணி வேரை சுட்டுப் பொசுக்குகிறார்!

நாள்தோறும் தினமலர் அர்ச்சனை செய்கிறது ஆசிரியர் வீரமணி அவர்களை என்றால், அதற்கான காரணத்தைப் புரிந்து கொள்வது வெகு எளிதே!

முல்லைப் பெரியாறு அணை நீர்ப் பிரச்சினையில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை கேரள அரசு மீறிய தற்காக அம்மாநில அரசை டிஸ்மிஸ்ஸே செய்யலாம்.

வீரமணி போன்றவர்கள் சுப்ரீம் கோர்ட்டை எப்படி மீறலாம் என்கிறார்கள்.

இதற்கெல்லாம் யார் வழிகாட்டிகள்? இடஒதுக்கீடு விஷயத்தில் உச்சநீதிமன்ற உத்தரவை மீறி நடந்து, வழிகாட்டியதே தமிழ்நாடுதானே? மீற முடியும், மீறலாம். கோர்ட் என்று நாம் பெயருக்குத்தான் வைத்திருக்கிறோம். அதற்கு நாம் எவ்வளவு தூரம் கீழ் படிகிறோம் என்பது கேள்விக்குரியதுதான் என்று பேசி இருக்கிறார் (துக்ளக் 4.4.2012 பக்கம் 6)

இதே திருவாளர் சோ ராமசாமி நீதிமன்ற தீர்ப்பு தமது இனத்தைச் சேர்ந்தவர்களுக்குப் பாதகமாக இருந்தால் அதனை எந்தப் பார்வையில் பார்க்கிறார்? குஜராத் கலவரத்தில் நீதிபதி நானாவதி தலைமையிலான ஆணையம் மோடிக்கு ஆதரவாகக் கருத்துத் தெரிவித்தபோது ஆகா! அற்புதம் அற்புதம்! என்று ஆடினார்.

பாபர் மசூதி இடிப்புப்பற்றி விசாரித்த லிபரான் ஆணையம் பி.ஜே.பி., ஆர்.எஸ்.எஸ்., தலைவர்கள் சம்பந்தப்பட்டுள்ளனர் என்று சொன்னால் அது அபத்தம் என்று எழுதக் கூடிய சோ நீதிமன்ற தீர்ப்புப்பற்றியெல்லாம் விமர்சிக் கலாமா?

இடஒதுக்கீடு விஷயத்தில் நீதிமன்ற தீர்ப்பை மீறுவதாகக் கூறி, அதில் திராவிடர் கழகத் தலைவர் அவர்களை சம்பந்தப்படுத்துகிறார். 50 சதவிகிதத்துக்கு மேல் இடஒதுக்கீடு போகக் கூடாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு சொன்னால், இடஒதுக்கீடு என்னும் சமூக நீதிக்காகத் தொடர்ந்து குரல் கொடுக்கும், பாடுபடும் ஓர் இயக்கத்தின் தலைவர் போராடிப் பெற்ற 69 விழுக்காடு இடங்களைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபடுவது அவரின் கடமையல்லவா!

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் உள்ள சரத் துக்களைப் பயன்படுத்தி, அதற்குச் சட்டப் பாது காப்பை உண்டாக்கித் தருதல் எப்படி சட்ட விரோத மாகும்?

தமிழ்நாட்டின் 69 சதவிகித இடஒதுக்கீடு நாடாளுமன்றத்தில் 76ஆவது திருத்தத்தையும் பெற்று குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடன் ஒன்பதாவது அட்டவணையிலும் சேர்க்கப்பட்டு, பாதுகாப்பு ஏற்பாடும் செய்யப்பட்டதே.

எந்த உச்சநீதிமன்றம் 50 சதவிகிதத்துக்கு மேல் இடஒதுக்கீடு செல்லக் கூடாது என்றதோ, அதே உச்சநீதிமன்றம், தமிழ்நாடு அரசு செய்துள்ள சட்ட ஏற்பாடு செல்லும் என்று தீர்ப்புக் கூறிவிட்டதே - சட்டப்படியான இந்தச் செயல் எப்படி நீதிமன்றத்தைச் சிறுமைப்படுத்தியதாகும்?

உண்மை என்னவென்றால் நீதிமன்றம் தமிழ் நாட்டின் இந்தச் சட்டத்தை ஏற்றுக் கொள்ளாமல் செல்லாது என்று சொல்லியிருக்க வேண்டும் என்பதுதான் இந்த சோ ராமசாமி அய்யர்களின் ஆசையும் - வெறியுமாகும்.

இந்தியாவில் அரசமைப்புச் சட்டத்தில் முதல் திருத்தம் வந்ததே இந்த இடஒதுக்கீட்டுக்காகத் தானே? அதற்காகவும் போராடி வெற்றி பெற்றதும் தந்தை பெரியாராலும், தமிழ்நாட்டின் சமூக நீதி ஆர்வலர்களாலும்தானே! காமராசரை மதிப்பதாகக் கூறும் இதே துக்ளக் ராமசாமிக்கு இடஒதுக்கீடுப் பிரச்சினையில் அவரின் நிலைப்பாடு என்ன என்று தெரியாதா?

நீதிமன்ற தீர்ப்புப் பிரச்சினையில் சற்றும் பொருத்த மில்லாமல் திராவிடர் கழகத் தலைவரை இழுத்துப் போட்டுக் குளிர் காய்வதன் மூலம் தன் பார்ப்பன ஆற்றாமையை வெளிப்படுத்திக் கொண்டு இருக்கிறார் என்று பொருள்.

69 சதவிகித இடஒதுக்கீட்டைப் பாதுகாப்பதற்காக திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களைக் குறைகூறும் இதே சோ, திராவிடர் கழகத்தலைவரின் ஆலோசனையைக் கேட்டு அதன்படி நடந்து கொண்ட முதல் அமைச்சர் செல்வி ஜெயலலிதா பற்றி விமர்சிக் காதது ஏன் - அதற்குப் பெயர்தான் இனப்பற்று என்பது. பார்ப்பன எதிர்ப்பாளரான வீரமணி கூறிய கருத் தினை ஏற்று இப்படி நடந்து கொண்டு விட்டாரே ஜெயலலிதா என்ற கோபம் உள்ளுக்குள் இருக்கலாம் என்றாலும் இனப்பற்று வெளிப்படையாக விமர்சிக்கத் தடை போடுகிறதே!

பார்ப்பனீயத்தின் நயவஞ்சகம் கறுப்புச் சட்டைக்காரர்களிடம் எடுபடாது - எச்சரிக்கை!

-------------- --------------------"விடுதலை” தலையங்கம் 30-3-2012

ஜப்பான்காரன் - ஜெர்மன்காரன் இவர்களைப் பேய் பிடிக்கிறதா?



தோழர்களே, விசுவரெட்டிப் பாளையத்தில் என்னை அழைத்து கூட்டம் நடத்த வேண்டும் என்று இரண்டாண்டுகளுக்கு முன்பிருந்தே முயற்சி செய்தும், இப்போதுதான் அந்த வாய்ப்பு ஏற்பட்டது. அதற்கு என் நன்றி.

எங்கள் கொள்கை மிகக் கசப்பான கொள்கை! உங்களுக்கு இனிப்பாக இருக்கும் வகையில் எங்களுக்குப் பேசத் தெரியாது. இன்றுள்ள பிரத்தியட்ச நிலைமையை எங்கள் மனத்தில் பட்டதை - உங்களிடமிருந்து எதுவும் எதிர்பார்க்காமல் தைரியமாகச் சொல்கிறோம். உங்கள் அறிவுக்குப் பட்டதை எடுத்துக் கொள்ளுங்கள். மீதியை விட்டுத் தள்ளுங்கள். நாங்கள் சொல்லுவதுதான் சரி. இதைத்தான் கேட்க வேண்டும் என்ற கட்டாயம் எதுவுமில்லை.

இப்படியே சுமார் 2,500 ஆண்டுகளுக்கு முன்பு சித்தார்த்தன் என்பவர் எதையும் உங்கள் புத்தியைக் கொண்டு ஆய்ந்து பார்த்து உங்கள் புத்திக்கு சரி எனப்பட்டதை ஏற்றுக் கொள்ளுங்கள் என்று பிரச்சாரம் செய்தார். அதனால்தான் அவருக்கு புத்தர் எனப் பெயர் ஏற்பட்டது.

அதற்குப் பின் வள்ளுவர் இருந்தார். அவரும், எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவுஎன்று சொல்லிவிட்டுப் போனார்.

அதற்குப் பின் ஒருவரும் தோன்றவில்லை. எத்தனையோ நாயன்மார்களும் - ஆழ்வார்களும் தோன்றியும் மக்களுக்குள்ள இழிவு ஒழிய பாடுபட்டதில்லை. அவர்களெல்லாம் பார்ப்பனர்களுடைய தயவால் ஆழ்வார் களாகவும், நாயன்மார்களாகவும் ஆக முயற்சித்தார்களே தவிர, மக்களுக்கு ஏன் இந்த இழிவு? பாடுபடும் பாட்டாளி மக்கள் இழிஜாதியினராக - தீண்டப்படாதவர்களாக - சூத்திரர்களாக - பார்ப்பானின் வைப்பாட்டி மக்களாக இருக்க வேண்டும்? என்று கேட்டதே இல்லை. நாங்கள்தான் துணிந்து பகுத்தறிவுப் பணியாற்ற முன் வந்திருக்கிறோம். எங்கள் கொள்கைகளை விளக்கி பல புத்தகங்கள் போட்டிருக்கிறோம். இதையெல்லாம் நீங்கள் வாங்கி படிக்க வேண்டும். நூல் நிலையத்திலெல்லாம் திராவிடர் கழகத்தின் ஏடுகள் இருக்காது. இன்னும் அந்தத் துணிவு அவர்களுக்கு வரவில்லை.

பேய் பிடித்தாடும் மடமை இன்னும் நம் மக்களிடம் தானே இருக்கிறது? ஜப்பான்காரன் - ஜெர்மன்காரன் இவர்களைப் பேய் பிடிக்கிறதா? இல்லையே. ஏன்? கடவுள் யோக்கியதை தான் என்ன? திருடனும் கடவுளைக் கும்பிடுகிறான் - திருட்டுக் கொடுத்தவனும் கடவுளைக் கும்பிடுகிறான். கடவுள் யாருக்கு நல்லவர்? கடவுளுக்காக நாமா? நமக்காகக் கடவுளா என்பதே விளங்கவில்லையே!

மதம் என்றால் என்ன? யாராவது சொல்ல முடியுமா? மதத்தின் தத்துவம்தான் என்ன? மதத்தின் பிரச்சாரம்தானே நாம் சூத்திரர்கள். ஜாதி இழிவைக் காப்பாற்றுவதும் இந்த மதந்தானே? இந்த இருபதாவது நூற்றாண்டிலும் ஜாதி ஒழிய வேண்டும் என்று நாங்கள்தானே சொல் லுகிறோம்; அதற்காகப் பாடுபடுகிறோம் - சிறைக்குப் போகிறோம். ஜாதி ஒழிய வேண்டுமென்றால், இந்து மதம், சாஸ்திரம், சம்பிரதாயப் புராண, இதிகாசம் எல்லாம் ஒழிய வேண்டும். காந்தியார்கூட ஜாதியைப் பாதுகாக்க வருணாசிரம மதத்தை நிலை நிறுத்தவே பாடுபட்டார். அதனால்தான் காந்தியார் சிலையை உடைக்க வேண்டும் என்றேன். நமக்கு ஒரு அறிவு அதிகமிருந்தும் பயன் என்ன? மிருகங்களுக்கு ஒரு அறிவு குறைவு என்றாலும் ஜாதி இல்லையே! மிருகங்களுக்கு அறிவில்லாததின் பயன் ஜாதி இல்லை. நமக்குள்ள இழிவு ஜாதியால்தானே. இதைச் சிந்திக்க வேண்டாமா?

------------- ---------------விசுவரெட்டிப்பாளையத்தில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய பேருரை - விடுதலை 8.7.1961.

29.3.12

ராமன் பாலம் தேசிய நினைவுச் சின்னமா?அண்ணா தி.மு.க. அண்ணாவைக் கொச்சைப்படுத்தலாமா?


ராமன் பாலத்தை தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்கக் கோரி
முதல் அமைச்சர் செல்வி ஜெயலலிதா பிரதமருக்குக் கடிதம் எழுதுவதா?


கழகத் தோழர்களே, மதச் சார்பற்ற கொள்கை உடையோரே!
முதல்வர் கோரிக்கையை எதிர்த்து பிரதமருக்குத் தந்தி கொடுப்பீர்!


தமிழர் தலைவர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை

ராமன் பாலத்தைத் தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்க வேண்டும் என்று தமிழ்நாடு முதல் அமைச்சர் செல்வி ஜெயலலிதா பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தைக் கண்டித்தும், இதனை எதிர்த்துப் பிரதமருக்குக் கழகத் தோழர்களும், மதச் சார்பற்ற கொள்கையுடையவர்களும் தந்தி கொடுக்க வேண்டும் என்று கோரியும் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

தமிழ்நாடு முதல் அமைச்சரும், அண்ணா தி.மு.க. பொதுச் செயலாளருமான செல்வி ஜெயலலிதா அவர்கள் ராமன்பாலத்தை தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்க வேண்டும் என்று கோரி பிரதமருக்கு நேற்று கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த தொல்பொருள் ஆராய்ச்சி மற்றும் பாரம்பரிய மதிப்புமிக்க ராமர் பாலத்தின் முக்கியத்துவம் கருதி அதனை தேசிய நினைவுச் சின்னமாக அறிவிப்பது குறித்த மத்திய அரசின் கருத்தை தாமதமின்றி, உடனடியாக உச்சநீதிமன்றத்திற்குத் தெரிவிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இந்த விவகாரத்தில் தமிழக அரசு, ஒரு பதில் மனு மூலமாக, தமது கருத்துக்களை தனியே, உச்சநீதிமன் றத்தில் தெரிவிக்கும் என்று பிரதமருக்கு முதல் அமைச்சர் செல்வி ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். (டாக்டர் நமது எம்.ஜி.ஆர். 29.3.2012 பக்கம் 1 மற்றும் இரண்டு).

நாடாளுமன்றத்திலும் அதிமுக உறுப்பினர்கள் இந்தத் திசையில் குரல் கொடுத்துள்ளனர். தி.மு.க. உறுப்பினர்கள் எதிர்த்துள்ளனர்.
அண்ணாவின் கொள்கை என்ன?

1) முதலாவதாக செல்வி ஜெயலலிதா பொதுச் செயலாளராக இருக்கக் கூடிய கட்சியின் பெயர் அண்ணா தி.மு.க. என்பதாகும்.

ராமன் பிரச்சினையில் அண்ணாவின் கொள்கை என்ன என்பதைத் தெரிந்து கொண்டு, அதற்கேற்ப செயல்பட வேண்டும்.

இராமாயணத்தைக் கொளுத்த வேண்டும் என்று கூறி டாக்டர் ரா.பி. சேதுப்பிள்ளை, நாவலர் சோமசுந்தர பாரதியார் ஆகியோருடன் வாதிட்டு வென்றவர் அறிஞர் அண்ணா.

புலவர் குழந்தையின் இராவண காவியம் எனும் நூலுக்கு முன்னுரை அளித்த அறிஞர் அண்ணா அவர்கள்,

இராமதாசர்களுக்கு இராவண தாசர் விடுக்கும் மறுப்புரையல்ல புலவர் குழந்தை அவர்களின் இராவண காவியம். இராமதாசர்களுக்கு தன்மான தமிழர்தரும் மயக்க நீக்க மருந்து இது. தாசர் நிலைகூடாது தமிழா! இராமதாசர் என்பது ஆரிய தாசராக்குவதற்கே பயன்படும் நண்பா! என்று அறிவுறுத்தவே இராவண காவியம் நூல்.

இராவணகாவியமும், இராமாயணமும் இரண்டும் கற்பனைகளே. முன்னது இராமனைத் தேவனாக்க! இஃது (இராவண காவியம்) இராவணனைத் தேவனாக்க அல்ல - தமிழனாக்க, அதாவது வீரனாக்க என்று அண்ணா எழுதியுள்ளாரே! (மேலும் முக்கிய பகுதிகளை இரண்டாம் பக்கம் காண்க)

அண்ணாவை அவமதிக்கலாமா?

அண்ணா தி.மு.க. என்று கட்சிப் பெயரையும், கொடியில் அண்ணா உருவத்தையும் பொறித்துக் கொண்டு இருக்கும் நிலையில், அண்ணாவின் சிந்தனைக்கும், கொள்கைக் கோட்பாட்டுக்கும் எதிராக அண்ணா தி.மு.க. பொதுச் செயலாளராக இருக்கக் கூடிய முதல் அமைச்சர் செல்வி ஜெயலலிதா நடந்து கொள்ளலாமா? இதன்மூலம் அண்ணாவை அவமதிக்கலாமா?

அண்ணா தி.மு.க.வில் அண்ணாவின் கொள்கைக்காக இருக்கும் அக்கட்சித் தொண்டர்கள், முன்னணியினர் சிந்திப்பார்களா?

ஆரியர் - திராவிடர் போராட்டத்தில் செல்வி ஜெயலலிதா எந்தப் பக்கம்?

(2) இராமாயணம் என்பது ஆரியர் - திராவிடர் போராட்டத்தைச் சித்திரிப்பது என்று பண்டித ஜவகர்லால் நேரு, விவேகானந்தர், பி.டி. சீனிவாசய்யங்கார் போன்ற வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிட்டுள்ளார்களே -

அப்படியென்றால் முதல் அமைச்சர் செல்வி ஜெயலலிதா ஆரியர் பக்கம் நின்று திராவிடர்கள்மீது போர் தொடுக்கிறாரா?

சூத்திரன் சம்புகன் தவம் இருந்தான் என்பதற்காக ராமன் சம்புகனை வாளால் வெட்டிக் கொன்றானே - அந்த ராமனுக்கு வக்காலத்து வாங்குவதன் மூலம் வருணாசிரம தர்மத்தை ஏற்றுக் கொண்டு விட்டாரா?

அண்ணா என்ற பெயரையும், திராவிட என்ற இனச் சுட்டையும் கட்சியில் வைத்திருக்கும் காரணத்தால் தாய்க் கழகம் என்ற முறையில் திராவிடர் கழகம் இந்த வினாக் களை எழுப்புவதற்கு உரிமையும், கடமையும் பெற்றுள்ளது.

எந்த தொல்பொருள் ஆய்வு கூறியது?

(3) தொல் பொருள் ஆராய்ச்சி கூறுவதாகக் குறிப்பிட்டுள்ளாரே - எந்தத் தொல் பொருள் ஆய்வு 17 லட்சத்து 25 ஆயிரம் ஆண்டுகளுக்குமுன் ராமன் பாலம் கட்டினான் என்று கூறியிருந்தது?

முதல் பாலம் கட்டப்பட்டதே எகிப்தில்தானே - நைல் நதியில் அவ்வாறு கட்டப்பட்டது. கி.மு. 2650 இல் என்கிற போது 17 லட்சத்து 25 ஆயிரம் ஆண்டுகளுக்குமுன் ராமன் பாலம் கட்டினான் என்பது கடைந்தெடுத்த பொய்யல்லவா!

நாசா மறுத்துவிட்டதே!

அமெரிக்காவின் நாசா சொல்லியிருக்கிறது என்று ஒரு கதையைக் கிளப்பிய நேரத்தில் சேது சமுத்திரத் திட்டத்தின் தலைவர் என்.கே. இரகுபதி நாசாவுக்கு மின்னஞ்சல் மூலம் விளக்கம் கேட்டபோது (26.7.2007) அன்று மாலையே நாசா பதிலையும் அனுப்பவில்லையா?

இந்தியா - இலங்கையிடையே உள்ள ஆதாம் பாலம் இயற்கையான மணல் படிவுகளால் உருவான மணல் திட்டுதான் என்று தெரிவித்து விட்டதே!

இதுபோன்ற மணல் திட்டு இராமேசுவரம் - இலங்கைக்கு இடையே மட்டுமல்ல; ஆஸ்திரேலியா கண்டத்தின் கிழக்கே ஆயிரம் மைல் நீளத்திற்கு மேலாக இருக்கிறதே - அதையும் ராமன்தான் கட்டினானா?

அ.இ.அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை என்ன கூறுகிறது?

4) 2001 சட்டப் பேரவைக்கான அ.இ.அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் இதே செல்வி ஜெயலலிதா குறிப்பிட்டது என்ன?

இந்திய தீபகற்பத்தைச் சுற்றி இதுவரை தொடர்ச்சியான கப்பல் போக்குவரத்திற்கு ஏற்ற பாதைகள் இல்லை. மேற்கிலிருந்து கடல் வழியாக கிழக்கு நோக்கிக் கப்பல்கள் செல்ல வேண்டுமென்றால், இலங்கையைச் சுற்றிக் கொண்டுதான் செல்ல வேண்டியுள்ளது.

இதற்குத் தீர்வாக அமைவதுதான் சேது சமுத்திரத் திட்டம், இத்திட்டத்தின்படி ராமேசு வரத்திற்கும், இலங்கையின் தலைமன்னாருக்கும் இடையில் உள்ள ஆடம்ஸ் பிரிட்ஜ் பகுதியில் கப்பல் போக்குவரத்திற்குத் தடையாக உள்ள மணல் மேடுகள், பாறைகளை அகற்றி ஆழப்படுத்தும் கால்வாய் அமைப்பதுதான் சேது சமுத்திரத் திட்டத்தின் தலையாய நோக்கம் (2001 - அ.இ.அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை பக்கம் 83-84).

இந்தப் பகுதியில் தெளிவாகக் காணப்படுவது என்ன?

(அ) சேது சமுத்திரத் திட்டம் தேவையானதுதான்.

(ஆ) இராமேசுவரத்திற்கும் தலைமன்னாருக்கும் இடையில் உள்ளது ஆடம்ஸ் பிரிட்ஜ் - அது மணல் மேடுகள், பாறைகள்தான் (இராமன் பாலம் அல்ல)

இவ்வளவு தெளிவாக தேர்தல் அறிக்கையில் குறிப் பிட்ட பிறகு, அதற்கு முற்றிலும் எதிராக அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளருக்குத் திடீர் ஞானோதயம் ஏற்பட்டதன் பின்னணி என்ன?

மதச்சார்பின்மையைச் சிதைக்கலாமா?

5) மதச்சார்பின்மை என்பதுதான் இந்தியாவின் அரசமைப்புச் சட்டப்படியான நிலை. இதில் மதவாதத்தைத் திணிப்பது எப்படி சரி?

அண்ணா அவர்கள் முதல் அமைச்சராக வந்த நிலையில், அரசு அலுவலகங்களில் உள்ள அனைத்து மத சம்பந்தமான கடவுள் படங்களையும் நீக்க வேண்டும் என்று சுற்றறிக்கை அனுப்பி அரசின் மதச் சார்பின்மை என்னும் கொள்கைக்கு மதிப்பைக் கூட்டினாரே!

அந்த அண்ணா பெயரைத் தாங்கும் கட்சியின் பொதுச் செயலாளர் மதச் சார்பின்மைக்கு விரோதமாக இந்துத்துவாவின் கதாநாயகனான ராமனுக்காகக் கொடி தூக்கலாமா?

வரலாறு என்பது வேறு - இதிகாச புராணங்கள் என்பது வேறு. இரண்டும் ஒன்றல்ல. இந்த நிலையில் இதிகாசங்களையும் புராணங்களையும் விஞ்ஞான ரீதியான ஒரு திட்டத்தில் திணித்துத் தடை செய்வதை ஏற்றுக் கொள்ள முடியுமா?

விஞ்ஞான மனப்பான்மையை வளர்ப்பது இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனி(ளி)ன் கடமை என்று கூறுகிறது இந்திய அரசமைப்புச் சட்டம் (51ஏ(எச்).

இந்த நிலையில் விஞ்ஞான மனப்பான்மைக்கு எதிராக நடந்து கொள்வது சட்டப்படியாகவே குற்றமாயிற்றே!

மாநில அரசோ, மத்திய அரசோ, நீதிமன்றமோ விஞ்ஞான மனப்பான்மைக்கு விரோதமாக சிந்திக்க முடியுமா? செயல்படத்தான் முடியுமா?

வழிபாட்டுத்தலம் 25 கி.மீ. இருக்க முடியுமா?

(6) இதே உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் ரவீந்திரன், பன்சால் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இவ்வழக்கு வந்தபோது நீதியரசர் ரவீந்திரன் அவர்களால் எழுப்பப் பட்ட வினாக்கள் முக்கியமானவை.

நாம் பூமியைத் தாயாக வணங்குகிறோம். அதனால் அதனைத் தொட முடியாது என்று அர்த்தமல்ல. இமயமலையை நாம் வணங்குகிறோம். அதனால் இமால யத்தைத் தொட முடியாது என்று அர்த்தம் அல்ல.

கோவர்த்தன மலையை நாம் வணங்குகிறோம், அதனால் கோவர்த்தன மலையை எதுவும் செய்ய முடியாது என்று அர்த்தமா? என்ற வினாக்களை எழுப்பிய நீதியரசர் ரவீந்திரன் இன்னொரு அர்த்தமிக்க வினாவையும் தொடுத்தாரே -

ஒரு வழிபாட்டுத்தலம் 25 கி.மீ. நீளத்திற்கு இருக்குமா? என்பதுதான் அந்த மில்லியன் டாலர் கேள்வியாகும். இந்த அறிவார்ந்த வினாவுக்கு ஜெயலலிதாவோ, சு.சாமியோ, அவர்கள் சார்பில் வாதிட்ட வழக்குரை ஞர்களோ, பி.ஜே.பி. உள்ளிட்ட சங்பரிவார்க் கூட்டமோ இதுவரை பதில் சொன்னதுண்டா?

ராமராஜ்ஜியம் உருவாக்கத் துடிக்கும் கும்பல்!


ராமராஜ்ஜியத்தை உருவாக்கப் போகிறோம் என்றுகூறிக் கொண்டு அலைகிற கூட்டத்தின் பிரதிபிம்பமாகவும், மதச் சார்பின்மைக்கு விரோதமாகவும் திராவிட இயக்கக் கொள்கைகளுக்கு எதிராகவும் தமிழக முதல் அமைச்சர் செல்வி ஜெயலலிதா சிந்திக்கிறார் - செயல்படுகிறார் என்பதற்கு அடையாளம்தான் பிரதம ருக்கு இவர் எழுதிய அதிகாரபூர்வமான கடிதம் ஆகும்.

பிரதமருக்குத் தந்தி கொடுங்கள்!

இந்த நிலையில் கழகத் தோழர்களே, திராவிட இயக்கச் சிந்தனையாளர்களே, பகுத்தறிவாளர்களே, அறிவியல் சிந்தனை கொண்டோரே, மதச் சார்பின்மைக் கொள்கையில் நம்பிக்கை கொண்ட நண்பர்களே, கட்சிகளைக் கடந்து தமிழக முதல் அமைச்சர் செல்வி ஜெயலலிதா பிரதமருக்கு எழுதிய கடிதத்திற்கு இசைவு தரக் கூடாது - மதச் சார்பற்ற தன்மையோடு மத்திய அரசு செயல்பட வேண்டும் என்று பொருள்படும்படியாக தந்திகளை இலட்சக்கணக்கில் பிரதமருக்கு அனுப்பி வையுங்கள் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்.

மதச் சார்பற்ற கொள்கையுடைய அத்தனைக் கட்சித் தலைவர்களும் கண்டித்து அறிக்கை கொடுக்க வேண்டும். அகில இந்திய அளவிலும் பிரதமருக்குக் கடிதங்களை எழுத வேண்டும்.

இதில் நாம் நமது கடமையைச் செய்யாவிட்டால், ராம ராஜ்ஜியத்தை உருவாக்குவோம் என்று புறப்பட்டுள்ள மனுதர்மவாதிகளுக்கு வலிமையை உண்டாக்கிக் கொடுக்கிறோம் என்று பொருள்.

மதச்சார்பின்மையைக் காப்போம்!

பாபர் மசூதியை இடித்தது சரிதான் என்பதற்கு இசைவு கொடுத்து விட்டோம் என்று பொருளாகும். இதனைத் தடுத்தே தீர வேண்டும்.
மதவெறி மாய்ப்போம்!

மனிதநேயம் காப்போம்!

மதச் சார்பின்மையைக் கட்டுவோம்!!

----------------கி.வீரமணி தலைவர், திராவிடர் கழகம். "விடுதலை” 29-3-2012

சகல துறைகளிலும் அறிவைப் பயன்படுத்த வேண்டும் -பெரியார்


தந்தை பெரியார் அவர்கள் உரை நிகழ்த்துகையில் குறிப்பிட்டதாவது:-

பெருமை சான்ற கல்லூரி துணைத் தலைவர் அவர்களே, கல்லூரி மாணவர் யூனியன் தலைவர் அவர்களே, ஆசிரியர்களே, மாணவர்களே! நான் இந்தக் கல்லூரிக்கு வந்து சொற்பொழிவாற்ற வேண்டும் என்று அழைக்கப்பட்டு இருக்கின்றேன்.

நான் இங்கு வந்ததுமே எதைப் பற்றி பேசப் போகிறீர்கள் என்று மாணவர் தலைவர் கேட்டார். எனக்கும் எதைப் பற்றிப் பேசுவது என்று புரியவில்லை. நமது தேவைகளைப் பற்றித்தான் பேசலாம் என்று இருக்கின்றேன் என்று கூறினேன்.

நான் சொல்லுவதை அப்படியே ஏற்றுக் கொள்ளாமல், உங்கள் அறிவுக்கு சரி என்று பட்டதை மட்டுமே ஏற்றுக் கொண்டு மற்றதை தள்ளிவிட வேண்டு கின்றேன்.நமது நாட்டில் சொல்லுகின்றதைக் கேட்டு உங்கள் அறிவுக்குப்பட்டதை ஏற்றுக் கொண்டு மற்றதை தள்ளுங்கள் என்ற அறிவுரையோ, உபதேச மோ நீண்ட நாளாகவே இல்லை.

நீ எதிலும் உன் சொந்தப் புத்தியைப் பயன்படுத் தாதே. முன்னோர்கள் சொன்னபடி, சாஸ்திரம் சொன்னபடி, மகான்கள் சொன்னபடி நட என்றுதான் சொல்லி வைக்கப்பட்டு இருக்கின்றதே ஒழிய, அறிவுப் படி நட என்று கூறப்படவே இல்லை. நம்நாட்டில் உள்ள பெரிய குறைபாடு இதுதான். இக்குறை இல்லாதிருந் தால் நாம் எவ்வளவோ முன்னுக்கு வந்து இருப்போம்.

இன்றைக்கு நம் நாட்டை எடுத்துக் கொண்டால் எது குறைபாடு என்று சொல்லத் தோன்றவில்லை. எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டாலும் மிகுந்து தான் இருக்கின்றது. ஆனால், அறிவுக் குறைபாடு ஒன்றுதான் உள்ளது. மதத் துறையை எடுத்துக் கொண்டாலும், கடவுள் துறையை எடுத்துக் கொண் டாலும், சாஸ்திரத் துறையை எடுத்துக் கொண்டாலும் ஏராளமாக உள்ளன. இருக்கின்றதை குறைக்க வேண்டுமானால் முடியுமே ஒழிய, கூட்ட இடமே இல்லை.

அரசியல் துறையினை எடுத்துக் கொண்டாலும் நமக்குத் தேவைக்கு மேல் உரிமை வந்துள்ளது. எழுதப் படிக்கத் தெரியாத தற்குறிகளுக்குக் கூட ஓட்டு கொடுக்கப்பட்டுள்ளது. இதைவிட என்ன வேண்டும்?

பொருளாதாரத் துறையை எடுத்துக் கொண் டாலும், வாழ்க்கைத் துறையை எடுத்துக் கொண்டாலும் எவ்வளவோ முன்னுக்கு வந்துள்ளோம். சட்டியில் சோறு தின்றவன்கள் எல்லாம் இன்று எவர்சில்வர் பாத்திரத்தில் அல்லவா சாப்பிட்டு வருகின்றார்கள். அன்று கோவணம் கட்டிக் கொண்டு தான் பெரும் பாலான கிராமத்துக்காரர்கள் இருந்தார் கள். சட்டையே போட மாட்டார்கள். இவர்கள் எல்லாம் இன்று குதிக்கால் மறைய வேட்டி, சட்டை உள்ளே பாடி மேலே, அங்கவஸ்திரம் இதுகளுடன்தான் வெளிவரு கின்றார்கள். முன்பு வேலை செய்யும் பெண், பிள்ளைகள் எல்லாம் கிழிந்த ஜால்ரா சேலைதான் கட்டியிருப்பார்கள். ரவிக்கை கிடையாது. இன்று அவர்கள் ஆடை, அணிகலன்களில் எல்லாம் எவ்வள வோ மாறுதல் அடைந்து இருப்பதைக் காண்கிறோம்.

முன்பு 12 அணாவுக்கு வேலைக்கு வந்த கொல்லத்துக்காரன் இன்று 3 ரூபாய், 3.50 ரூபாய் வாங்கு கின்றான். 3.50 ரூபாய் வாங்கியும் போதவில்லை என்கின்றான். ஆனால், தினம் இவன் ஒன்றிரண்டு ரூபாய்க்கு காப்பி குடிக்கின்றான்.

வேலை இல்லா திண்டாட்டம் என்று கூறப்படு கிறது. இது சுத்த பொறுப்பு இல்லாத பேச்சு. இன்று வேலைக்குத் திறமையான ஆள் இல்லை என்று தான் கூற வேண் டும். இன்று 4 ரூபாய் வாங்கிக் கொண்டும் வேலை செய்ய நல்ல கொத்தான், தச்சன் கிடைக்க வில்லையே.

நாலு எழுத்துப் படித்துப் போட்டு பேனா பிடித்து உத்தியோகம் பண்ண நினைத்துக் கொண்டு வேலை இல்லையே, வேலை இல்லையே என்று கூப்பாடு போடுகின்றார்கள். இவர்கள் படித்து உத்தியோகம் கிடைக்கவில்லை என்பதைத்தான் வேலை இல்லாத் திண்டாட்டம் என்கின்றானே ஒழிய, அத்தியா வசியமான வேலைகளுக்குத் தகுதியான, போதுமான ஆட்கள் கிடைக்க வில்லையே. அவர்களிடத்தில் நாணயம் இல்லையே என்பதில் எவன் கவலைப்படு கின்றான்?

என் தொண்டு நாட்டிலே வெகு பேர்களுக்குப் பிடிக்காது. ஆனால், என் தொண்டின் பயனை அனுபவிக்கிறதில் வேண்டுமானால் விரும்புவார்களே ஒழிய, எங்கள் தொண்டின் போக்கை ஒத்துக் கொள்ள மாட்டார்கள். வெறுக்கத்தான் செய்வார்கள்.

தோழர்களே, நான் ஒரு பகுத்தறிவுவாதி. இந்த நாட்டில் பகுத்தறிவுவாதிகள் மிக மிகக் குறைவு. பகுத்தறிவுவாதிகள் தங்களுக்கு முன்னோர்களைத் துணைக்கு இழுத்துப் பேச மாட்டார்கள். எதையும் அறிவு கொண்டு சிந்திக்க வேண்டும் என்று கூறுவதன் காரணமாக நாஸ்திகன் என்று தூற்றப் படுகின்றான்.

இந்த நாட்டில் நம்பிக்கைவாதிகள்தான் அதிகம். நம்பிக்கை வாதிகள் என்றால் எதை எடுத்தாலும் முன்னோர்களையும், கடவுள்களைத் துணைக்கு இழுத்துப் பேசுவார்கள். முன்னோர்கள் நடப்புக்கு மாறாகி நடக்கக் கூடாது என்பார்கள். இவர்களுக்குப் பெயர் இந்த நாட்டில் ஆஸ்திக சிகாமணிகள் என்று எல்லாம் போற்றப்படுகின்றார்கள். இந்த நாட்டில் முதன்முதல் அறிவுப் பிரச்சாரம் செய்தவர் புத்தர்தான். இவர் இயற்பெயர் புத்தர் அல்ல, சித்தார்த்தர் என்பது. இவர் புத்தியை ஆதாரமாகக் கொண்டு எதையும் சிந்தித்து எடுத்துச் சொன்னதின் காரணமாக புத்தியை உபயோகப்படுத்தி எதையும் பார்க்கச் சொன்ன காரணத்துக்காக ஒழிக்கப்பட்டு இருக்கின்றார். மடாலயங்களை எல்லாம் இடித்து பாழ் செய்து இருக்கின்றார்கள்.

இந்நாட்டில் புத்தியை உபயோகப் படுத்தச் சொன்ன ஆள் புத்தருக்குப் பிறகு வள்ளுவர் தான்.

இவர், எப்பொருள் யார்வார்
வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு
எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு

அவருக்கு அடுத்தபடி நாங்கள் தான் சொந்த புத்திக் கொண்டு எதையும் சிந்தித்துப் பார்த்து சரி என்று பட்டதை ஏற்றுக் கொண்டு, மற்றதை தள்ளி விடுங்கள் என்கின்றோம் என்று குறிப்பிட்டு, மேலும் பேசுகையில், மாணவர்கள் சகல துறைகளிலும் அறிவைப் பயன்படுத்தி காரியம் ஆற்ற வேண்டும் என்றும், மூட நம்பிக்கைகளை அறவே விட்டொழிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார். மேலும் பேசுகையில், நமது கடவுள், மதம், சாஸ்திரங்களின் பேரால் நாம் கீழ்மக்களாகவும், அறிவுத் துறையில் பின்னடைந்து இருப்பவர்களாகவும் இருப்பது பற்றியும் தெளிவுபடுத்திப் பேசினார்.

---------------------24.8.1961 அன்று விருதுநகர் செந்தில்குமார் கல்லூரி மாணவர்களுக்கு தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய அறிவுரை - விடுதலை 5.9.1961.

28.3.12

ஓநாய் ஒருபோதும் சைவமாகாது! ஒரே தீர்வு தனி ஈழமே!!


ஜெனிவா தீர்மானத்திற்குப் பிறகும் சிங்கள அரசின் ஆணவமும், திமிரும் அடங்கிடவில்லை!
ஓநாய் ஒருபோதும் சைவமாகாது! ஒரே தீர்வு தனி ஈழமே!! திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அறிக்கை
ஜெனிவாவில் அய்.நா.வின் மனித உரிமைக் குழுக் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவால் கொண்டுவரப்பட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பிறகும் கூட, இலங்கை அரசின் திமிரும், ஆணவமும் அடங்கிப் போய்விடவில்லை; மாறாக இந்தியாவின் சுயமரியாதைக்கே சவால்விடும் வகையில் நடந்துகொண்டு வருகிறது. இலங்கை சிங்கள அரசின்கீழ் தமிழர்களின் உரிமை வாழ்வுக்கு உத்தரவாதம் இல்லை என்ற நிலையில், தனி ஈழம் ஒன்றே இறுதித் தீர்வு என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

இலங்கையில் இராஜபக்சே அரசின் போர்க் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள்பற்றி ஆராய்ந்து அறிந்து, அய்.நா. பொதுச்செயலாளர் பான்-கி-மூன் அவர்கள் நியமித்த மூன்று நாட்டு உறுப்பினர்கள் குழு அதன் அறிக்கையை தந்து 10 மாதங்களுக்குமேல் உருண்டோடிவிட்டன.

ஜெனிவா தீர்மானம்


அண்மையில் சென்ற வாரம் (23.3.2012) ஜெனிவாவில் கூடிய அய்.நா. மனித உரிமைக் குழு கூட்டத்தில் இலங்கையின் இந்தப் போர்க் குற்ற, மனித உரிமைகள் மீறல்பற்றி அமெரிக்கா முன்வந்து, இலங்கைமீது கண்டனத்தோடு, மீண்டும் ஈழத் தமிழர் வாழ்வுரிமைக்கு வழிவகை செய்ய வற்புறுத்தும் தீர்மானத்தை முன்மொழிந்தது.

இந்தியா உள்பட 24 நாடுகள் ஆதரித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்தத் தீர்மானத்தினை வரவிடாமலும், அது வெற்றியடையாது இருக்கவும் தன்னாலான அத்துணை முயற்சிகளையும் - பல்வேறு முறைகளையும் கையாண்டும், கெஞ்சிக் கூத்தாடிப் பார்த்தும், இறுதியில் படுதோல்வியைத்தான் அடைந்தது.
இந்திய அரசுக்குத் தமிழ்நாட்டின் அழுத்தம்

இந்திய அரசு தமிழ்நாட்டுத் தமிழர்கள் கோபாவேசம், கட்டுப்பாடான குரல், அய்க்கிய முற்போக்குக் கூட்டணியிலிருப்பதையும் மறுபரிசீலனை செய்வோம் என்ற தி.மு.க.வின் எச்சரிக்கை நடவடிக்கைகள், தமிழக காங்கிரஸ் கட்சி, தமிழக ஆளுங்கட்சி, இடதுசாரிகள் எல்லாம் அனைத்துக் கட்சிகள், அமைப்புகள் குரல் கொடுத்ததால் ஏற்பட்ட நிர்ப்பந்தம் - அழுத்தம் காரணமாக பிரதமர் மன்மோகன்சிங், அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தை இந்தியஅரசு ஆதரிக்கும் என்று நாடாளுமன்றத்தில் அறிவித்ததோடு, ஆதரித்து வாக்களிக்கவும் இந்திய அரசு முன்வந்து, தனது மனித உரிமைக்கான கவுரவத்தை உயர்த்திக் கொண்டது - தமிழர்களின் நன்றிக்குரியதாகவும் ஆயிற்று.

இலங்கை அரசு என்ற அடிபட்ட ஓநாய்!

இது கண்டு அடிபட்ட ஓநாய் சீறி எகிறிப் பாய்வதுபோல, தன்னைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றி நிறுத்தி, உலகத்தின் பற்பல நாடுகளுக்கு தனது உண்மையான கோரமுகம் வெளிச்சத்திற்கு வந்து தெரிந்துவிட்டதே என்ற எரிச்சலால் நிலை தடுமாறி நடந்துகொள்ளுகிறது இலங்கையின் இராஜபக்சே அரசு!
நாம் எதிர்பார்த்த ஒன்றுதான் இது! தன்னுடைய அரசு இலங்கையின் தீவிரவாதத்திற்கு எதிரானதுதானே தவிர (இலங்கை) ஈழத் தமிழர்களுக்கு - சிவிலியன்களுக்கு - எதிரானதல்ல என்ற பழைய பாட்டைப் பாடிக் கொண்டே, சொந்த நாட்டு குடிமக்கள் மீதே விமானம்மூலம் குண்டு வீசி அழித்த கொடுமை உலக வரலாறு இதற்குமுன் அறியாத ஒன்று!

நம்பிய மக்களைக் கழுத்தறுத்த இலங்கை இராணுவம்!

தமிழர்களே வன்னிப் பகுதிக்கு பத்திரமாக வந்து விடுங்கள்; உங்களுக்கு அது பாதுகாப்பான பகுதி என்று முன்பு கூறியது இலங்கை அரசு. குழந்தை குட்டிகளும், பெண்களும், முதியவர்களும் ஆக சுமார் மூன்றுலட்சத்து முப்பதாயிரம் மக்கள் அங்கே போனால் குண்டு விழாது என்று நம்பிச் சென்ற நிலையில், அந்த மக்களை வான்வழித் தாக்குதல் (குண்டுவீச்சு) மூலம் சிங்கள இராணுவம் கொன்று அழித்ததே! (நேரில் பார்த்த ஒரு செய்தியாளர் விவரிப்பு இரண்டாம் பக்கம் காண்க) அய்.நா. மனித உரிமை மீறல்பற்றி ஆய்வு அறிக்கை தரும் தகவல் இது!
போர் முடிந்ததே; முள்வேலிகளுக்குள் - ஆடு, மாடுகளை விடக் கேவலமாக அந்நாட்டுத் தமிழர்கள் அடைபட்டுக் கிடக்கும் அவலம் நீங்கியதா?
180 நாள்களில் முகாம்களில் உள்ளவர்களை மீள்குடியமர்த்துவோம் என்ற உத்தரவாதத்தை இராஜபக்சே தந்தது நீர்மேல் எழுத்தா? காற்றில் பறந்த குரலா?
இந்நிலையில், காலந்தாழ்ந்தாவது உலகப் பார்வை வெளிச்சம் இந்த அடிமை இருட்டில் வதியும் எமது ஈழத் தமிழினத்திற்குக் கிடைத்தது கண்டு நம்மைப் போன்ற - கருமத்திற்குரிய கடமையாளர்கள் ஆறுதல் அடைகிறோம்.

இப்பொழுதும் நடப்பது என்ன?

1. இலங்கை அரசு உண்மையிலேயே தீவிரவாதத்தை ஒடுக்குவது மட்டும்தான் அதன் குறி என்றால், ஈழத் தமிழர்களுக்கு மறுவாழ்வு தந்து அவர்களது நம்பிக்கையை, நல்லெண்ணத்தைப் பெற்று, நல்லாட்சி தமது ஆட்சி என்று உலகத்தாருக்குக் காட்டியிருக்க வேண்டாமா?
ஆனால், இன்று அங்கே இலங்கையில் நடப்பது என்ன? உலக செய்தியாளர்களுக்கும் அடி- உதை; அவர்கள் போர்க்குற்றங்களை விமர்சித்தனர் என்பதற்காக கை, கால்களை உடைப்போம் என்று பகிரங்கமாக பண்பற்றுப் பேசுகிறார் இராஜபக்சே பரிவாரங்களில் ஒருவரான இலங்கை அமைச்சர் பெர்வின் சில்வா என்ற சிங்களர்.
2. வெளிப்படையாகவே அய்.நா. தீர்மானத்திற்கு நாங்கள் கட்டுப்படமாட்டோம் என்று திமிருடன் உலக நாடுகளுக்கும், அய்.நா.வுக்கும் சவால் விடுகின்றது சிங்கள இராஜபக்சே அரசும், அதன் பரிவாரங்களும்.

இந்தியாவை அவமதிக்கும் பேச்சு!

3. நமது இந்திய அரசிடம் பெற வேண்டியதை கெஞ்சி, கொஞ்சிக் கூத்தாடிப் பெற்றுக் கொண்டு, நமது பிரதமர் இலங்கை அதிபருக்கு விளக்கம் தந்து எழுதிய கடிதத்தையும், இந்தியப் பிரதமரையும், அவரது அரசையும் மிகவும் கேவலப்படுத்துவதுபோல், இந்தியப் பிரதமருக்குப் பதில் எழுதவேண்டிய அவசியம் இல்லை என்று ஆணவத்துடன் கூறுகிறார் சிங்கள வெளியுறவுத் துறை அமைச்சர் ஜி.எல்.பெரீஸ் என்ற சிங்கள ஓநாய்க் கூட்டத்தின் ஓருருவம்!
4. அமெரிக்கத் தீர்மானத்தை ஆதரித்த நாடுகளில் இலங்கைத் தூதரகத்தை மூட யோசிக்கிறார்களாம்! ஆற்றிடம் கோபித்து கால் கழுவாமல் போன புத்திசாலி போன்ற நடவடிக்கை அல்லவா இது!
ஈழத் தமிழர்களை சுயமரியாதையுடன் வாழ வைக்கும் கடமை நமக்கு உண்டு என்று நமது பிரதமர் சாதுபோல் நாடாளுமன்றத்தில் தனக்கே உரிய மென்மைக் குரலில் பேசினார்!
இப்போது ஈழத் தமிழர்கள் சுயமரியாதைக்கு சிங்கள அரசால் ஏற்பட்ட பங்கம், அவமரியாதை இந்திய அரசுக்கும், பிரதமருக்குமே அவர்களது திமிர்வாத அகங்கார ஆணவப் பேச்சால் வெளியாகிவிட்டது!
இதுதான் சிங்கள வெறியர்களின் உண்மை முகம்! இதை இப்போதாவது இந்திய அரசு புரிந்துகொள்வது முக்கியம்!

நிரந்தரத் தீர்வு - தனி ஈழமே!

ஓநாய் சைவமாகிவிட்டது என்பதை நம்பினால், அது ஓநாயின் குற்றமல்ல, நம்புபவரின் தவறு. அல்லது தப்புக் கணக்கு!
5. அமெரிக்காவின் தீர்மானத்தை செயல்படுத்த அழுத்தம் தரவேண்டியதில் இந்தியாவின் பங்கு மேலும் பெருகவேண்டும்.
அய்.நா.வில் பொருளாதாரத் தடை போன்ற கடும் நடவடிக்கைகள் வரவேண்டும். தமிழீழம்தான் இனி நிரந்தரத் தீர்வு என்ற தி.க., தி.மு.க.வின் யோசனைதான் இனி ஒரே ஒரு வழி.
மருந்துகளால் முடியாதது - இனி அறுவை சிகிச்சையால்தான் முடியும். இந்திரா காந்தி காட்டிய வழியை (வங்கதேசம்) இனி மத்திய அரசு மறக்கக் கூடாது.

----------------கி. வீரமணி, தலைவர், திராவிடர் கழகம் --"விடுதலை” 28-3-2012

27.3.12

தமிழ்நாடு அரசின் பட்ஜெட் 2012-13

2012-2013 ஆம் ஆண்டின் தமிழ்நாட்டுக் கான நிதி நிலை அறிக்கை நேற்று தமிழ்நாடு சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து உரத்த முறையில் விவாதங்கள்  எல்லா மட்டங்களிலும் வெடித்துக் கிளம்பி யுள்ளன.

பொருளாதாரம் சம்பந்தமான பிரச்சினைகளை நிதி நிலை அறிக்கை பேசினாலும் சமுதாயத்தின் பக்கம் அரசின் பார்வை அறவே இல்லை என்பது வேதனையானது.

தி.மு.க. ஆட்சிக் காலத்தில் பெரியார் நினைவு சமத்துவபுரம் என்ற திட்டம் அறிமுகப்படுத்தப் பட்டது. ஜாதி ஒழிப்புக் கண்ணோட்டத்தில் மகத்தான பாய்ச்சலாகக் கருதப்பட்டது. இந்தியத் துணைக் கண்டத்தில் மற்ற   மாநிலங்களும் இதனை ஒரு வியப்பாகவே கருதின.

புதிதாக பெரியார் நினைவு சமத்துவ புரங்களை உருவாக்கும் மனம் இல்லா விட்டாலும், ஏற்கெனவே உருவாக்கப்பட்டுள்ள இந்தச் சமத்துவபுரங்கள் சரிவரப் பராமரிக்கப்படுமா என்று தெரியவில்லை.

தலைவர்களின் நினைவுச் சின்னங்கள் புதுப்பிக்கப்படுவதற்காக நிதி ஒதுக்கப்பட் டுள்ளது வரவேற்கத்தக்கதே! அதே நேரத்தில் தலைவர்களுக்கெல்லாம் தலைவரான தந்தை பெரியார் நினைவகம் - (வைக்கத்தில்) ஈரோடு அய்யா, அண்ணா நினைவு இல்லம் மேம்பாடு குறித்து பேசப்படவில்லையே!

வேளாண் பிரச்சினைக்கு ரூ.3800 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் விவசாயிகள் விளைவிக்கும் பொருட்களை விற்பதற்கு உழவர் சந்தைகள் தி.மு.க. ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்டன.

அதுபற்றிய பேச்சுக்கே இடம் இல்லை இந்த நிதி நிலை அறிக்கையில்; அவர்களின் உற்பத்திக்கு நல்ல விலை பற்றிய வாடையும் இல்லை. இந்துஅறநிலையத்துறை என்ற தலைப்புப் பற்றிப் பேசும்போது இந்துக் கோவில்களில் அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைக்கான தமிழ்நாடு சட்டத்தை செயல்படுத்துவதுபற்றி ஒரு சிறு குறிப்பும் பேசப்படவில்லையே!

அன்னை நாகம்மையார், டாக்டர் தருமாம்பாள், அன்னை மணியம்மையார், மூவலூர் இராமாமிர்தம் அம்மையார், டாக்டர்முத்துலட்சுமி ரெட்டி போன்ற வீராங்கனைகளின் பெயர்களால் மகளிர் முன்னேற்றத்திற்கு கலைஞர் தலை மையிலான அரசால் புதிய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இதுபோல ஏதாவது ஒரு புதிய மறுமலர்ச்சித் திட்டத்தைப்பற்றி இந்த ஆட்சி இதுவரை சிந்தித்ததுண்டா? அறிமுகப்படுத்தியதுண்டா?

இந்தப் புதிய திட்டம் இதுவரை யாராலும் சிந்திக்கப்படாதது, நாங்கள் மட்டுமே முதன் முதலாகக் கொண்டு வந்துள்ள திட்டம் என்று சொல்லும் படியாக இவ்வாட்சி இதுவரை எதையாவது அறிவித்ததுண்டா?

இந்த ஆட்சி தனித் தன்மையாக செய்வது ஒன்று உண்டு என்றால் இது ஏற்கெனவே இருந்த ஆட்சி அறிமுகப்படுத்திய நல்ல திட்டங்களை ஒன்றுமில்லாமல் செய்வதுதான்!

விலைவாசி என்று எடுத்துக் கொண்டால் ஏற்கெனவே பால் விலை, பேருந்துக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், மின்கட்டணம் உயர்த்தப்பட உள்ளது என்கிற இடி தலைமேல் விழும் என்கிற அபாயம் ஒரு பக்கம் மிரட்டிக் கொண்டிருக்கும்போது எண்ணெய்க்கு வரி விதிப்பது ஒவ்வொரு சமையல் கட்டிலும் பெண்களால் அர்ச்சனைக்கு ஆளாகும் என்பதில் அய்யமில்லை. ஓட்சுக்கும், கோதுமைக்கும் வரியைக் குறைத்து எண்ணெய்க்கு வரியை உயர்த்துவது யார் நன்மைக்காக? 1500 கோடி ரூபாய்க்கு வரி விதிக்கப்பட்டுள்ளது. நிதி நிலை அறிக்கையா? பள்ளிக்கூட ஆண்டு அறிக் கையா என்று தெரியவில்லை.

             -------------"விடுதலை” தலையங்கம் 27-3-2012

26.3.12

பெரியார்-அம்பேத்கர் உருவாக்கிய சுயமரியாதை உணர்வுக்கு வெற்றி!


மகளிர் உரிமைப் பாட்டையில் புதிய மைல் கல்

மண விலக்கு, சொத்துரிமை, தாம்பத்தியம் ஆகியவைபற்றி மத்திய அரசின் புதிய சட்டம் வரவேற்கத்தக்கவை!

தந்தை பெரியார், அம்பேத்கர் உருவாக்கிய சுயமரியாதை உணர்வுக்கு வெற்றி! தமிழர் தலைவர் விடுத்துள்ள அறிக்கை

நாடாளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற் றப்பட்ட மகளிர் உரிமைக்கான சட்டத்தை வர வேற்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களால் வெளியிடப்பட்ட அறிக்கை வருமாறு:

நம் நாட்டுத் திருமண சட்டங்கள் - குறிப்பாக இந்து திருமண சட்டங்கள் திருமணத்தை ஒரு புனிதக்கட்டு - பிரிக்க முடியாத, பிரிக்கக்கூடாத பந்தம் - புனிதம் (Sacrament) என்று ஆக்கியதன் மூலம் பெண்கள் வெறும் ஜடங்களாக, பொருள்களாக, மிருகங்களைப் போல நடத்தப்பட்ட நிலையை மாற்றிவிட அன்றைய சட்ட அமைச்சர் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் பல்வேறு திருத்தங்களைக் கொண்டுவந்து இந்து சட்டத் திருத்த மசோதா(Hindu Code Bill) என்ற அந்த அற்புத உரிமைச் சாசனத்தை நிறைவேற்றிட முயலுகையில், அன்றைய ஆட்சி பீடத்தின் வைதீகத் தலைமை இராஜேந்திரபிரசாத் போன்றவர்களும் பழைமை வாதிகளும் கடும் எதிர்ப்புக் காட்டினார்கள்.

பிரதமர் நேருவால் சமாளிக்க முடியவில்லை; துவக்கத்தில் அம்பேத்கருக்கு அளித்த வாக்கு றுதியை அவரால் காப்பாற்ற இயலவில்லை; விளைவு அமைச்சர் பதவியிலிருந்து - கொள்கைக்காக - அண்ணல் அம்பேத்கர் விலகினார்.

கிடப்பில் போடப்பட்ட பெண்ணுரிமைகள்

சொத்துரிமை, மணவிலக்கு உரிமை, தத்து எடுத்துக் கொள்ளுதல் போன்ற பல்வேறு சீர்திருத்த புரட்சிக் கருத்துக்கள், பெண்களுக்குப் பாலியல், சமூகநீதி வழங்கும் வாய்ப்புள்ளவை கிடப்பில் போடப்பட்டன.

பிறகு காலம் கனிந்தது; நம் இயக்கம் போன்றவை களால் ஏற்பட்ட புயல் வேக பிரச்சாரம், திராவிடர் இயக்கமாம் தி.மு.க. போன்றவை மத்தியில், மாநிலத்தில் ஆளுங் கட்சியானதன் விளைவு - சில மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. பெண்களுக்குச் சொத்துரிமை, சுயமரியாதைத் திருமண உரிமை, பெண்களுக்கு எதிராக நடத்தப்படும் வன் கொடுமை, பாலியல் கொடுமை, பெண்ணை மதிக்காமை - பெண்களிடம் கேவலமாக நடந்து கொள்ளல் எல்லாம் ஒழிக்கப்படும் வகையில் இன்று சட்ட பூர்வமாக மத்தியில் உள்ள அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் புதிய சட்டங்களால் - புதிய திருத்தங்களால் பல்வேறு நல்ல திருப்பங்களைக் கண்டு வருகிறது.

1929இல் தந்தை பெரியார் நிறைவேற்றிய தீர்மானம்

ஆண்களையொத்த சொத்துரிமை பெண்களுக்கும் வேண்டும் என்று அய்யா தந்தை பெரியார் 1929 செங்கற்பட்டு மாநாட்டில் போட்ட தீர்மானம் 2005-2006இல் மத்தியில் சட்டமாகி, நடைமுறைக்கு வந்துள்ளது. இணைந்து வாழ முடியாத பெண்கள், மண விலக்குப் பெறுவதில் தேவையற்ற சிக்கல்கள், கால தாமதங்களைத் தவிர்த்து அவர்கள் உடனே விலகி, மன நிம்மதியுடன் வாழச் செய்யும் வகையில் அண்மையில் 2010 திருமணச் சட்டத் திருத்தத்திற்கு மத்திய அமைச்சரவை கடந்த 23.3.2012 அன்று ஒப்புதல் அளித்துள்ளது மிகவும் வரவேற்கத்தக்கது ஆகும்.

தந்தை பெரியார் அவர்கள் வெகு காலமாக சொல்லி வந்த ஒரு கருத்து, மற்ற மேலை நாடுகள் போல மணவிலக்கு - விவாகரத்து - எளிமையாக்கப்பட வேண்டும் என்பதாகும்.

வரவேற்கத்தக்க புதிய சட்டம்

1) சில கணவன்மார்கள் வழக்கை நீட்டி, இழுத்தடித்து - வேண்டுமென்றே - மீண்டும் வாழ விரும்புவதுபோல நாடகம் ஆடுவதை தற்போது உள்ள சட்டம் அனுமதிக்கும் நிலை - புதிய சட்டத் திருத்தம் மூலம் இனி முடியாது. காத்திருக்கும் காலம் என்பது ரத்து செய்யப்பட்டு - இரண்டு பேரும் இணைந்து தந்த மணவிலக்கு மனுவினை நீதிமன்றங்கள் ஏற்று - அனுமதி அளிக்க வழி செய்கிறது!

2) கணவன் சொத்தில் மனைவிக்கு மணவிலக்கு பெற்ற நிலையிலும் சொத்தில் உரிமை தர வேண்டும் என்பதும் முக்கிய திருப்பமாகும்.

படிப்பறிவில்லாத பல பெண்கள் - மனைவிமார்களுக்கு - இப்படி சொத்தில் உரிமை கோரலாம் என்பதே தெரியாத அறியாமை நிலைதான் நாட்டில் உள்ளது. அதற்கும் இந்தத் திருத்தம் விடியலை ஏற்படுத்துகிறது!

டில்லி உயர்நீதிமன்றம்கூட நேற்று முன்னாள் ஒரு தீர்ப்பில் பாலுறவு - தாம்பத்யம் வைத்துக் கொள்ள மறுப்பதையே ஒரு தகுந்த காரணமாக கொண்டு மணவிலக்குப் பெற வாய்ப்பு உண்டு என்று ஒரு புரட்சிகர தீர்ப்பைத் தந்துள்ளது!

தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் ஆகியோர் எழுப்பிய புயல்

பல மாதங்களாக தாம்பத்திய வாழ்வே நடத்தாது வெறும் அக்னிசாட்சியாக, சப்தபதி சடங்குகள் செய்து ஊருக்கு, உலகத்தாருக்கு கணவன், மனைவி என்று வாழ்ந்தால் எஜமானன் - அடிமை உறவு தானே? எங்கே தோழமை உள்ளது? அதனையும் சுட்டிக் காட்டியுள்ளது உச்சநீதிமன்றம்.

தந்தை பெரியார் அவர்களின் திராவிடர் இயக்கக் கொள்கைகள், அண்ணல் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் முயற்சிகள் என்னும் சூறாவளி எங்கும் சுழன்றடிக்கிறது!

இது மேலும் நல்ல சமுதாய மாறுதலை உருவாக்கும்.

--------------கி.வீரமணி தலைவர், திராவிடர் கழகம் --”விடுதலை” 26-3-2012

25.3.12

தாலி ஒரு விளம்பரப் பலகை! - பெரியார்


சைவ - வைணவ சம்பாஷணை

வைணவதாசன்: என்ன தேசிகர்வாள், உடம்பெல்லாம் இவ்வளவு சாம்பல் விபூதியை எடுத்து அப்பிக் கொண்டிருக்கிறீர்களே! இது என்ன, பார்வைக்கே அசிங்கமாக இல்லையா?

சைவப் பண்டாரம்: அசிங்கமென்னையா வந்தது? ஒரு சிம்ட்டா சாம்பல் மேலே பட்டால் பட்ட வஸ்து பிணமானாலும், கட்டையானாலும் அது எவ்வளவு பாவம் செய்திருந்தாலும் மோட்சத்திற்குப் போய்ச் சேர்ந்துவிடும் என்பதாக விபூதி மான்மியத்தில் சொல்லப்பட்டிருக்கின்றது. நாம் நல்ல காரியம் செய்து மோட்சத்திற்கு ஒரு காலமும் போகமுடியாதபடி சைவநெறிகள் ஏற்பட்டு விட்டது. ஆதலால், விபூதி பூசியாவது மோட்சத்திற்குப் போகலாமென்றால் இதில் உமக்கேன் இத்தனை பொறாமை.


வைணவ: எனக்கு ஒன்றும் பொறாமையில்லை. சந்தோஷமாய் தாங்கள் மோட்சத்திற்குப் போங்கள். ஆனால், எனக்கு ஒரு சந்தேகம். ஒரு சிமிட்டா சாம்பல் பட்ட வஸ்துக்கள் எல்லாம் மோட்சத்திற்கு போய்விடும் என்கிறீர்களே. மக்கள் இங்கு அதிகமாக சாம்பலை மலத்தின் மீது கொட்டி மலமே தெரியாமல் மூடுகிறார்களே, சனியன் பிடித்த அந்த மலங்கள் எல்லாம் மோட்சத்திற்குப் போயிருக்குமே! அப்போது தாங்களும் அங்கிருந்தால் மோட்சத்திற்குப் போய் அந்த எழவு நாற்றத்தை எப்படி சகிப்பது என்கின்ற சந்தேகம்தான்.

சைவ: சரி, சரி! நீர் சுயமரியாதைக்காரர் போல் தெரிகின்றது; உம்முடைய யோக்கியதையைப் பார்ப்போம். பட்டையாய் வலிப்பு மாட்டுக்கு சூடு போட்டதுபோல் போட்டுக் கொண்டிருக்கிறீர்?

வைணவ: உம்மை கேட்ட சங்கதிக்குப் பதில் சொல்லும்; பிறகு நான் பதில் சொல்லுகிறேன்.

சைவ: நாளைக்காவது சொல்லுவீரா?

வைணவ: நான் நீர் சொன்ன பிறகுதான் சொல்லுவேன்.

------------------9.11.1930 குடி அரசு இதழில் தந்தை பெரியார் அவர்கள் சித்திரபுத்திரன் என்ற புனை பெயரில் எழுதியது

கிண்டல் (தாலி மகத்துவம்)

ராமன்: தாலி என்றால் என்ன?

கிருஷ்ணன்: அது ஒரு விளம்பரப் பலகை!

ராமன்: அதை ஏன் பெண்கள் கழுத்தில் கட்ட வேண்டும்?

கிருஷ்ணன்: அட அப்பாவி! நாய் வளர்ப்பவர்கள் அதன் கழுத்தில் ஒரு பாஸ் கட்டுகிறார்கள் அது ஏன் தெரியுமா?

ராமன்: முனிசிபாலிட்டியார் அதனை பிடிக்காம லிருப்பதற்காக.

கிருஷ்ணன்: அதுபோலத்தான் தாலியும் பெண் களுக்கு உதவுகிறது. தாலி ஒரு விளம்பரப் பலகை. அது பறை சாற்றுவதென்னவென்றால் இந்துப் பெண்மாடு ஒருவனுக்கு விற்கப்பட்டு விட்டது. எனவே இம்மாட்டை வேறு ஒருவரும் விரும்பி விடாதீர்கள். எச்சரிக்கை!

------------------தந்தை பெரியார் -" பகுத்தறிவு"- 1936

ஆண்டாள் வழியில் அய்யா பெரியாரா? - நாஞ்சில் சம்பத்துக்கு பதிலடி

மறுமலர்ச்சி எங்கே போகிறது?


(மறுமலர்ச்சி தி.மு.க.வின் கொள்கை பரப்புச் செயலாளராக இருக்கக்கூடிய தோழர் நாஞ்சில் சம்பத் அவர்கள் தந்தை பெரியார் அவர்களைக் கொச் சைப்படுத்தும் வகையில் ஆண்டாள் வழியில் அய்யா- என்று கூறி இருப்பதால் இதனை எழுத நேர்ந்தது. ஆன்மிகப் பிரச்சாரம் செய்யப் பெருமைப் படுவதாகக் கூறி இருக்கும் ஒருவர் ம.தி.மு.க.வின் கொள்கை பரப்புச் செயலாளரா? என்ற கேள்வியும் எழுகிறது).

தமிழகத்தில் தமிழினம் மரபு சார்ந்த அடையாளங்களை இழந்து வரும் இத்தருணத்தில் மரபுகளைக் காப்பாற்றும் வகையில் வி.பி.எம்.எம். கல்வி நிறுவனங்கள் மார்கழி பாவை விழாவைநடத்திக் கொண்டிருக்கின்றன. சமயத்திற்கும் சம்பத்துக்கும் என்ன சம்பந்தம் என்ற சந்தேகம் பலருக்கும் வரலாம். தமிழை வளர்ப்பதில் சமயங்களுக்குப் பெரும் பங்கு இருந்தது. சைவமும் வைணவமும் போட்டி போட்டு தமிழை வளர்த்தன. சமயங்கள் தமிழை வளர்த்திருக்காவிட்டால் இன்று தமிழ், ஆளுமைத் தமிழாக இருந்திருக்காது.

தமிழை மறந்த தமிழன்

அதிலும் தமிழன் தமிழையும் மறந்துவிட்டான் ; தமிழகத்தையும் மறந்துவிட்டான். அடிபடும்போது மட்டும்தான் ஆ. . . ஆ . . . என்று அலறும்போது மட்டுமே தமிழைப் பேசுகின்றான். நான் தென் திருவிதாங்கூர் கல்லூரியில் படித்தேன். மாணவர் தலைவராக இருந்தேன். அப்போது திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் பங்கேற்ற சொற்பொழிவு எங்கள் கல்லூரியில் நடைபெற்றது. அதில் நான் நன்றியுரை ஆற்றினேன். தமிழை வாரி வழங்க வாரியாரை விட வேறு யார் இருக்கிறார்கள் என்று குறிப்பிட்டேன். உடனே என்னை அழைத்த வாரியார், நெற்றி நிறைய திருநீற்றைப் பூசிவிட்டு, இரை தேடும்போது, இறையையும் தேடு என ஆசீர்வாதம் செய்தார். நான் தேடிய ஞானச்சிறுவன் இவன்தான். எனவே இந்த மாணவனுக்கு ஞானச் சிறுவன் என்ற பட்டத்தை வழங்குகிறேன் என்றார்.

அன்றைய தினம் மாலையில் நடைபெற்ற சொற்பொழிவில் என்னை கந்தர் அலங்காரம் பேசச் செய்தார். அவரது ஆசீர்வாதத்தால் அறிந்தோ, அறியாமலோ, சரியோ, தவறோ நான் அரசியல் பாதையைத் தேர்ந்தெடுத்து விட்டேன். தமிழ் மீது காதல் கொண்டு நான் சொற்பொழிவாளனாக நிற்கிறேன்.

அதே நேரம் தமிழகத்தில் தலைசிறந்த பேச்சாளனாக வேண்டும். ஆனாலும் தமிழைப் பேசும் வாய்ப்பு கிடைத்தால் நாத்திக மேடையல்ல. அரசியல் மேடையல்ல. சைவமும், வைணவமும் பேசும் ஆன்மீக மேடையில் கூட பேச முடிவு செய்துவிட்டேன்.

பெரியாரை நச்சாறு என்று கூறிய வாரியார் அண்ணாவிடம் எப்படி வாங்கிக் கட்டிக் கொண்டார் என்பது பரிதாபம் - இந்தச் சம்பத்துக்குத் தெரியாது போலும்! (காண்க, திராவிட நாடு 6.7.1944).

நல்ல கணவனுக்காக பாவை விழா?

மார்கழி பாவை விழா என்பது நல்ல கணவன் கிடைக்க வேண்டும் என்பதற்காக மகளிர் நோற்கும் நோன்பல்ல. ஆண்டாளின் பாவை நோன்பை ஆன்மீக ரீதியாக மட்டும் பார்க்கக் கூடாது. அதனை ஆன்மீகம் கடந்த சமூக நலன் நோக்கிலும், அறிவியல் நோக்கிலும் மகளிர் பார்க்கவேண்டும்.

அரங்கன்மீது அளவற்ற காதல் கொண்டாள் ஆண்டாள். மணம் புரிந் தால் அரங்கனை மட்டுமே மணப்பேன், மானிடர்க்கல்ல நான் என்ற கொள்கையில் உறுதியாக இருந்து வென்றாள் ஆண்டாள். ஆண்டாள் கொண்ட உறுதியை இக்காலப் பெண்கள் ஆன்மீக ரீதியால் மட்டுமல்லாமல், தமிழ் மரபு சார்ந்த கலாச்சார ரீதியாக பின்பற்ற வேண்டும்.

ஆண்டாள் வழியில் அய்யா பெரியார்

ஆண்டாளின் திருப்பாவையில் 23 ஆவது பாடலை அய்யா பெரியாருக்கு ஒப்பிட்டுப் பார்க்கிறேன். நாத்திகவாதிக்கு திருப்பாவைப் பாடலுடன் ஒப்பிடலா? என்று நீங்கள் கருதலாம். பழமைகளில் இருந்து - புதுமைக்கும், சமுதாயத் தாழ்வுகளில் இருந்து சமுதாய மேன்மைக்கும் மானிட சமுதாயத்தைக் கொண்டு சென்றவை ஆண்டாளின் திருப்பாவைப் பாடல்கள்.
ஆணாதிக்கம் மிகுந்த இச்சமயத்தில் ஆண்டாளின் திருப்பாவையே பெண்களை சமுதாயத்தின் சிகரங்களை நோக்கி அழைத்துச் சென்றது. பெண் சமுதாயத்தின் சிறகுகளை விரிக்கச் செய்தது. பெண்களுக்கு லட்சியத்தையும், வைராக்கியத்தையும் உருவாக்கி வெற்றி பெறும் நம்பிக்கையை உருவாக்கியது.

பெரியார் சிந்தனைக்கு முன்னோடி ஆண்டாள் திருப்பாவை

தந்தை பெரியார் மேற்கொண்ட சமூக சீர்திருத்த சிந்தனைக்கு முன்னோடியாக அமைந்தது ஆண்டாளின் திருப்பாவை. எனவேதான் ஆண்டாளின் 23 ஆவது பாடலை பெரியாருக்குப் பொருத்திப் பார்க்கிறேன். ஆண்டாள் பாசுரம்தான் பாரதிக்கும் ஆதர்ச வழிகாட்டியாக இருந்தது. கனவு காணுங்கள் எனக் கூறி வரும் அப்துல் கலாமுக்குக் கூட ஆண் டாள் திருப்பாவை வழிகாட்டியாக இருந்தது.

ஆண்டாள் கண்ட தமிழகம் எங்கே?

ஆனால் ஆண்டாள் கண்ட தமிழகம் இன்று இருக்கிறதா? என்றால் இல்லை. வடக்கே திருவேங்கடம் என்கிற திருப்பதியும், தெற்கே அரங்கன் பள்ளி கொண்ட திருவனந்தபுரமும், கிழக்கே வேதாரண்யமும், மேற்கே சேரன் ஆண்ட திருச்சூரும்தான் ஆண்டாள் கண்ட தமிழகமாக இருந்தது. 12 ஆழ் வார்களில் 8 ஆழ்வார்களுடைய தலங்கள் எல்லாமே கேரளத்திலும், ஆந்திரத்திலும்தான் உள்ளது. ஆண்டாள் கண்ட தமிழகம் இன்றும் இல்லை. அனைத்தையும் இழந்து அம்மணமாக நிற்கிறோம். இழந்ததைத் தமிழகம் மீட்டெடுக்கவேண்டும். புதுமை செய்யும் பெண்களுக்கு ஆண்டாள் கதவைத் திறந்து வைத்துள்ளாள். மாதம் மும்மாரி மழை, தானே பால் சுரக்கும் பசுக்கள், துள்ளி விளையாடும் மீன்கள், பசுமைப் புல், வயல்வெளிகள் இவை எல்லாம் ஆண்டாள் சுட்டிக் காட்டிய தமிழக மாகும். அந்தத் தமிழகம் இன்று அழிந்து வருகிறது. இந்த நிலையை இன்றைய மாணவ சமுதாயம் மாற்றி அமைக்க வேண்டும். அதற்கான மாணவிகள் சமுதாயம் ஆண்டாள் திருப்பாவையை ஆன்மீக நோக்கில் பார்க்காமல் அதனைக் கடந்து தமிழ்ச் சமுதாயம் சீர் பெறவும், முன்னேற்றத்தை நோக்கிச் செல்லவும், தமிழகம் இழந்த பெருமை களைப் பெற்றுத் தரவும் _ கொண்ட கொள்கையில் உறுதி என்ற மன உறுதியைப் பெற்று புதிய தமிழகம் படைக்க மாணவிகள் திருப்பாவைக்குப் புதிய உருவம் கொடுக்க வேண்டும். இதன் மூலம் ஆண்டாள் கண்ட தமிழகம் உருவாக இன்றைய மாணவிகள் சமுதாயம் மேற்கத்திய கலாச்சாரத்தை மறந்து தமிழ் மரபுகளைப் பின்பற்றி புதிய ஆண்டாள்களாக உருவாக வேண்டும்.
--------------------(மதுரை மணி 14.-1.-2012)

ஆண்டாள் வழியில் அய்யா என்று இப்படிப் பேசி இருப்பவர் சேங்காலிபுரம் தீட்சிதர்வாளின் வாரிசு அல்ல - குறைந்த பட்சம் சுகி சிவமும் அல்ல.

தி.மு.க.வையும் தாண்டி மறு மலர்ச்சியை முன்னோட்டமாகக் கொண்ட ம.தி.மு.க.வின் கொள்கை பரப்புச் செயலாளராக இருக்கக்கூடிய அருமைத் தோழர் சம்பத் அவர்கள்தான் இப்படிப் பேசி இருப்பவர்.

திராவிடர் இயக்கத்தைப் பற்றிக் கொச்சைப் படுத்திப் பிரச்சாரம் செய்ய ஒரு கூட்டம் புறப்பட்டுள்ள நிலையில் மறுமலர்ச்சித் தி.மு.க.வின் கொள்கை பரப்புச் செயலாளராக இருக்கக்கூடிய ஒருவர், தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் போன்ற பெரிய தலைவர்களின் கருத்துக்களுக்கும், கொள்கைக் கோட்பாடுகளுக்கும் முற்றிலும் விரோதமாக மலத்தில் அரிசி பொறுக்கக் கிளம்பி இருப்பது பரிதாபமே!

ஒரு சமயம் தந்தை பெரியார் தஞ்சையில் ஒரு வாலிபர் சங்கத்தில் தலைமை தாங்கினார். அங்குப் பேசிய தமிழன்பர் ஒருவர் பெரியார் இராமாயணத்தைக் குறை கூறுவது தவறு என்றும், கலையுணர்ச்சிக்காகவும் அதனைப் போற்ற வேண்டும் என்றும் கூறினார். அதற்குப் பெரியார் கூறிய பதில்:

நான் கலையுணர்ச்சியையும், தமிழ் உணர்ச்சியையும் வேண்டாம் என்று கூற வில்லை. தங்கக் கிண்ணத்தில் அமேத்தியம் (மலம்) இருந்தால் தங்கக் கிண்ணம் என்பதற்காக அமேத்தியத்தைப் புசிக்க முடியுமா? அதுபோல் கம்ப ராமாயணப் பாட்டுகள் சிறந்தவைதான். அவற்றில் உள்ள மூடநம்பிக்கைக்கும், தமிழர் இழிவுக்கும், ஆரியர் உயர்வுக்கும் ஆதாரமானவற்றை வைத்துக் கொண்டு எப்படி அவற்றைப் பாராட்ட முடியும்? என்றார். - (தமிழர் தலைவர் சாமி சிதம்பரனார் பக்கம் 162)

கம்ப இராமாயணத்தையும், பெரிய புராணத்தையும் ஏன் கொளுத்த வேண்டும் என்ற விவாதப் போரில் டாக்டர் ரா.பி.சேதுப்பிள்ளை, நாவலர் சோமசுந்தர பாரதியார் ஆகியோருடன் கலந்து கொண்ட அறிஞர் அண்ணா அவர்கள் புராணங்களை ஏன் கொளுத்துகிறோம்? இலக்கியத்தில் உள்ள கலை அம்சத்தைக் கவனித்துக் கொள்ள வேண்டாமா என்ற கேள்விக்கு மிக அருமையாகப் பதிலடி கொடுத்தார்.

ஏடுகளை ஏன் கொளுத்தவேண்டும்?

புலியைக் கொன்று தோலை ஆசன மாக்குவது போல் சுயமரியாதைக்காரர் களாகிய நாம் ஆரிய ஏடுகளைக் கொளுத்துவதன் மூலம் ஆரிய நச்சுக் கொள்கைகளை நாட்டு மக்கள் கை விடவேண்டும் என்பதை வலியுறுத்து கிறோம். எமது செயலின் விளைவாக அந்த ஆரிய நச்சுக் கொள்கை அழிந்தொழிந்தபின், புலி செத்தபின் தோலை உபயோகிப்பது போல் - ஆரியம் அழிக்கப்பட்ட பிறகு ஏடுகளின் இலக் கண, இலக்கிய எழிலை எடுத்து தழுவிக் கொண்டு நீங்கள் பூரித்து வாழுங்கள்.
-------------(அறிஞர் அண்ணா, திராவிட நாடு 9-.5.19-43)

தமிழும் - மதமும்

முதலாவதாக தமிழ் முன்னேற்ற மடைந்து உலக பாஷை வரிசையில் அதுவும் ஒரு பாஷையாக இருக்க வேண்டுமானால் தமிழையும் மதத்தையும் பிரித்துவிட வேண்டும். தமிழுக்கும், கடவுளுக்கும் உள்ள சம்பந்தத்தையும் - கொஞ்சமாவது தள்ளி வைக்க வேண்டும்.

மத சம்பந்தமற்ற ஒருவனுக்குத் தமிழில் இலக்கியம் காண்பது மிகமிக அரிதாகவே இருக்கிறது. தமிழ் இலக்கணம் கூட மதத்தோடு பொருத்தப்பட்டே இருக்கிறது. உதாரணமாக மக்கள், தேவர், நரகர் - உயர்திணை என்றால் என்ன? நரகர்கள் யார்? தேவர்கள் யார்? இலக்கணத் திலேயே மதத்தைப் போதிக்கும் சூழ்ச்சி தானே இது?

-----------(13.1.1936 அன்று சென்னை பச்சையப் பன் கல்லூரியில் தந்தை பெரியார் ஆற்றிய உரையிலிருந்து குடிஅரசு 26-.1.-1936)

புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களோ சொற்பொழிவாளர்களுக் கென்றே தமிழியக்கத்தில் தலையில் குட்டி சொல்லியிருக்கிறார்.
சமயமென்னும் சூளையிலே தமிழ் நட்டால் முளையாது. ம.தி.மு.க.வின் சொற் பொழிவாளர் தோழர் சம்பத் இதனைப் படித்ததுண்டா என்று தெரியவில்லை.

நமது முக்கிய வேலை முதலாவதாகக் கடவுளைப் பற்றியும், சமயத்தைப்பற்றியும் ஆழ்வார், நாயன்மார்கள் என்பவர்களைப் பற்றியும் மக்கள் பேசிக்கொண்டு திரியாமலிருக்கும் படிச் செய்ய வேண்டும். அவற்றின் மீது பழி போட்டு மக்களை ஏமாற்றிச் சோம்பேறிகளாக்கி வயிறு வளர்ப் பவர்களின் தொழிலையும், செல்வாக்கையும் அடியோடு ஒழிக்க வேண்டும். ஆக இவ்விரண்டு காரியமும் நம் சுயமரியாதைத் தொண்டர்களுக்கு முக்கியப் பிரச்சாரமாயிருக்க வேண்டும்.

இரண்டாவதாக விதவை மணமும் கலப்பு மணமும் எங்கும் நடக்கும்படியாகப் பிரச்சாரம் செய்ய வேண்டும்.

புராணங்களிலும், புராண மதங்களிலும் நம்பிக்கையுள்ள அல்லது அவற்றை ஜீவனமாகக் கொண்ட பண்டிதர்களை எங்கும் பகிஷ்கரிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். ஏனென்றால் அவர்களேதான் மக்களுக்கு மூடநம்பிக்கை என்னும் விஷத்தைச் செலுத்துகின்ற கொடிய ஜந்துக்களாய் இருக்கிறார்கள்.
---------(குடிஅரசு 18-.5-.1930)

தோழர் சம்பத் வக்காலத்து வாங்கும் சைவ, வைணவ நாயன்மார்கள், ஆழ்வார்களைப் பற்றியும் இப்படி கடுமையாக விமர்சித்துள்ளார் தந்தை பெரியார்.

பக்தி இலக்கியங்களில் சீர்திருத்தம் இருக்கிறது என்று பேசுவோர்க்கு அண்ணா அவர்கள் அழகாகப் பதில் தந்துள்ளார்.

புராணங்களில் எதற்காகச் சீர்திருத்தக் கருத்துகளைப் புகுத்தப் பார்க்கிறார்கள்? பசுவும் புலியும் ஒரே துறையில் நீர் குடிப்பதையும், சிவன் ரிஷப வாகன ரூபமாக வந்து சேர்ந்ததையும், வெட்டப்பட்ட தலை மீண்டும் ஒட்டிக் கொண்டது என்ற அற்புதங்களைப் புராணத்தில் புகுத்தி, இவை யாவும் ஈசனை நேசித்ததன் பலன் என்று முடித்து, இத்தகைய மேலான பலனை ஆண்டவன் அருளைப் பெற வேண்டுமானால் நீங்களும் பக்தி செலுத்திக் கொண்டிருங்கள் என்று உபதேசம் செய்ய இந்தப் புராணங்கள் எழுதப்பட்டன.

இதில் சீர்திருத்தம் நுழைய என்ன அவசியம் இருக்க முடியும்? சீர்திருத்தம் என்றால் என்ன ? இருப்பதைச் சீராகும்படி திருத்துவது, கெட்டுக் கிடக்கிறது. ஆனால் திருத்தக் கூடிய அளவிலே இருக்கிறது திருந்தி விட்டால் கேடு போய் சீராகி விடும் என்பதுதான் இதன் பொருள். அடி யார்கள் எதைக் கெட்டுக் கிடக்கிறது என்கிறார்கள்? சமூகத்திலே சாதி பேதம் தலைவிரித்தாடுகிறது. அதை ஒழித்தாக வேண்டும். எல்லா மக்களையும் ஒன்று படுத்த வேண்டும். ஏழை பணக்காரன் என்ற பேதத்தை ஒழிக்க வேண்டும். சேரிகளைச் சீர்திருத்தம் செய்ய வேண்டும். உழவனின் உழைப்புக்கேற்ற ஊதியத்தைத் தரவேண்டும் என்ற இன்னோரன்ன பிற சீர்திருத்தங்கள் தேவை என்று செப்பினரா? அதற்காக அவர்களிடம் அன்பு காட்டி, அரசரிடம் வாதாடினரா? பிரச்சாரம் புரிந்தனரா? இல்லையே! அவர்களுடைய கவலை யெல்லாம் பக்தி பரவ வேண்டும். பரமனைத் தொழ வேண்டும். மூர்த்தி, ஸ்தலம், தீர்த்த யாத்திரைகளின் பெருமையை மக்கள் அறிதல் வேண்டும் என்பதிலே சென்றதேயொழிய இன்று நாம் சீர்திருத்தம் என்று எண்ணுவதில் அவர்கள் அக்கறை காட்டினரா? காட்டியிருக்க முடியுமா? என்று அறிஞர் அண்ணா அவர்கள் அடுக்கடுக்கான வினாக் கணைகளைத் தொடுத்துள்ளாரே!
----------------(திராவிட நாடு 3-.2.-1946)

தோழர் சம்பத் இனி ஏதாவது பதில் சொல்வதாக இருப்பின் அண்ணாவின் இந்தக் கேள்விகளுக்குத்தான் பதில் சொல்லவேண்டும் - அதற்கான சரக்கு இருந்தால். பதில் சொல்ல வேண்டிய இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளார்.

அண்ணா அவர்களின் கேள்விகளை நெஞ்சில் தாங்கி எதிர் முகாம்களின் மீது ஏவுகணை ஏவ வேண்டிய ஒரு திராவிட இயக்கத்தின் கொள்கை பரப்புச் செய லாளருக்கு அண்ணாவை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பது பரிதாபம் அல்ல - அவலம் ஆகும்!


அவர் எந்த அளவுக்குச் சென்றுள்ளார் என்றால் அரசியல், ஆன்மீகம் இரண்டும் உலகம் உவக்கவே செயல்படுகின்றன. எனவே நான் ஆன்மீகமும் பேசுவேன், அரசியலும் பேசுவேன் என்று சொல்லும் அளவுக்குச் சம்பத் சாஸ்திரியாகத் தம்மை உருக்குலைத்துக்கொண்டுள்ளார்.

அதோடு மட்டுமா? அடுத்த கட்டத்துக்கும் தாவிவிட்டார். சன்னியாசி என்பவர் பிச்சை எடுத்து உண்ண வேண்டும். ஆதி சங்கரர் பிச்சை கேட்டுச் சென்ற வீட்டில் வறுமை தாண்டவமாடியது. ஆனால் அந்த வீட்டுப் பெண்மணி வறுமையை வெளிக்காட்டாமல் கண்களில் கலக்கத்துடன் தன்னிடமிருந்த நெல்லிக் கனியை ஆதி சங்கரரின் திருவோட்டில் இட்டார். இதைக் கண்ட ஆதி சங்கரர் கனகம் மாரிபோல பொழிய கனகதாரா ஸ்தோத்திரம் பாட, அந்த வீட்டில் பொருள் மாரி போல் பொழிந்ததாம்.

அவ்வளவு ஆற்றல் மிக்க ஆதி சங்கரருக்குத் தீராத நோய் வரவேண்டி அபிநவகுப்தன் என்பவன் அபிசார வேள்வி செய்து நோய் ஏற்படச்செய்தார். நோயால் அவதியுற்ற ஆதிசங்கரரின் கனவில் ஆத்மலிங்கேஸ்வரர் தோன்றி, நோய்தீர வேண்டுமானால் ஜெயந்திபுரம் (இப்பொழுது திருச்செந்தூர்) சென்று அங்குள்ள முருகனை வழிபடுமாறு கூறினாராம். ஆதிசங்கரருக்கே தீர்வு பெற்றுத் தந்தது திருச்செந்தூர்.

ஆவினன் குடி முருகனுக்கு ஆளாவது எப்படி என்று சிந்திக்க வேண்டும். மனத்தில் உள்ள அசுத்தம், அழுக்காறு நீங்க இந்தப் பயணம் உதவ வேண்டும் என்று பேசி இருப்பவர் மறைந்த பித்துக் குளி முருகதாஸ் அல்ல. ம.தி.மு.க.வின் கொள்கை பரப்புச் செயலாளர். அதிலும் எந்த நிகழ்ச்சியில்?

இப்படி அற்புதங்களை நம்புவோர் குறித்து இதோ அண்ணா பேசுகிறார்:

ஆறுகாலுடைய எருமைக் கன்று. மூன்று கண்ணுடைய மாடு, ஆண் பெண் இல்லாது அலியாக இருக்கும் கோழி, இரு பக்கம் தலையுள்ள பாம்பு, கிளைகளை உடைய பனை மரம் இன்னும் இதுபோன்ற பலவற்றை இயற் கையின் விசித்திரம் என்பர். இயற்கைக்கு இவை மாறுபட்டிருக்கிற காரணத்தால்.

சிவலிங்கம் சாட்சி சொல்வது, எலும்பு பெண்ணுருவாவது, பனை ஓலைத் துண்டு வெள்ளத்தை எதிர்த்துச் செல்வது, கருங்கல் பாறை மிதப்பது, நரி பரியாவது, அறுத்துக் கறி சமைத்த பிள்ளை உயிர் பெற்று எழுந்து வருவது, பன்றியும் அன்னமும் அடிமுடி தேடுவது, ஒருவர் முதுகில் பிரம்பால் அடித்ததும் அனை வர் முதுகிலும் அடிவிழுவது, யானை கதறினதும் ஆண்டவன் வருவது, சிலந்தி பந்தல் போடுவது, சிவனாரை பூஜித்த யானை சிவபாதம் அடைவது போன் றவை எங்கும் எக்காலத்திலும் நிகழ்ந் திருக்குமா? நிகழ்ந்திருக்க முடியுமா? சிந்தியுங்கள்.

-----------(பள்ளியறையில் பரமசிவன் (சிறுகதை) -திராவிட நாடு இதழ் (16.4.1944)


தோழர் நாஞ்சில்சம்பத் அவர்கள் தான் இதற்குப் பதில் சொல்ல வேண்டும்.

சிவகங்கை சிறீபாலதண்டாயுதபாணி பழனி பாதயாத்திரை விழாவை முன்னிட்டு சிவகங்கை விஸ்வநாத சுவாமி கோவிலில் ஆன்மீகச் சொற்பொழிவு நடைபெற்றது. அதில் நாஞ்சில்சம்பத் கலந்து கொண்டு பேசியதுதான் மேலே காண்பது. (தினமணி மதுரை பதிப்பு 1-.2.-2012)

அனுப்பி உதவியவர். தென் மாவட்டப் பிரச்சாரக் குழுத் தலைவர் மானமிகு தே.எடிசன் ராஜா அவர்கள்).

ஆதிசங்கரரின் அற்புதங்களைக் கொட்டியளக்கவும், திருச்செந்தூர் முருகனின் திவ்வியங்களைத் தேன் சொட்டச் சொட்ட பேசும் அளவுக்கு ரொம்பவும்தான் முன்னேறிவிட்டார்.

பூணூல் மகாத்மியத்தைப் பற்றி புளகாங்கிதத்துடன் அ.தி.மு.க.வின் நமது எம்.ஜி.ஆர். ஏடு சிலாகிக்கிறது. மனு தர்மத்துக்கு வக்காலத்து வாங்கி எழுதுகிறது. கோவில் அர்ச்சகர் பார்ப்பனர்களை உறுப்பினர்களாக்கி அண்ணாவுக்கும், அவர் கண்ட தி.மு.க. வுக்கும் பெருமை சேர்த்துக் கொண்டு இருக்கிறது என்றால், ம.தி.மு.க.வின் கொள்கைபரப்புச் செயலாளரோ, திருச்செந்தூர் பக்தராகவே மாறிவிட்டார். (மறுமலர்ச்சி என்பது இதுதானோ?)

திருப்பாவை பாடிய ஆண்டாளைப் பற்றி அவதானித்துள்ளார். ஆண்டாள் வழியில் அய்யாவாம்! - அடேயப்பா எவ் வளவு பெரிய ஆராய்ச்சி! பெண் சமுதாயத்தின் சிறகுகளை ஆண்டாள் அம்மையார் விரிக்கச் செய்து விட்டாராம் . அப்படி என்ன புரட்சியை உண்டாக் கினார் ஆண்டாள்? நாச்சியார் திருமொழி என்றும் அவர் பாடியதாக வெளிவந்துள் ளது. அதில் ஒரு பாடல் இதோ:

ஏக்கத்தின் உருக்கத்தால் பாடும்போது :

முத்தன்ன வெண்முறுவல் செவ்வாயும் முலையும் அழகழிந்தேன் நான்!

புணர்வதோ ராசையினால் என்
கொங்கை கிளர்ந்து
குமைத்துக்
குதூகலித்து ஆவியை ஆகுலம்
செய்யும் அங்குயிலே!
கண்ணீர்கள்
முலைக்குவட்டில் துளி
சோரச்சோர் வேனை
காமத்தீயுள் புகுந்து
கதுவப்பட்டு இடைக்கங்குல்
ஏமத்தோர் தென்றலுக்கு
இங்கிலக்காய் நானிருப்பேனே
என்னாகத்திளங் கொங்கை
விரும்பித்தாம் நாள்தோறும்
பொன்னாகம் புல்லுதற்கு
எனப் புரிவுடைமை
செப்புமினே!
கொங்கைமேல் குங்குமத்தின்
குழம்பழியப் புகுந்து
ஓர் நந்நாள்
தங்குமேல் என்னாவி
தங்குமென்று உரையீரே!

ஒரு பக்தை கடவுளைக் கணவனாக்கிக் கொள்ளத் துடிப்பது (பக்தைக்குக் கடவுள் தந்தையல்லவா?), அவனோடு புணரத் துடிப்பது, இந்த காமவெறி பிடித்த பக்தைதான் விரகதாபம் எடுத்து வெறியின் உச்சியில் அலமரும் ஒரு பெண்தான். பெண்குலத்தின் சிறகுகளை விரிக்கச் செய்து கிரகங்களை நோக்கி பறக்கச் செய்தவராம்.

இந்த ஆண்டாள் வழிதான் அய்யா பெரியார் சென்றாராம். பகுத்தறிவு தன்மான இயக்கத்தின் வழி வழி வந்ததாகக் கூறிக் கொள்ளும் மதிமுகவின் கொள்கைப் பரப்புச் செயலாளர் இப்படி திரிபுவாதம் செய்வதை அக்கட்சி அனுமதிக்கிறதா?

ஆமாம், நன்றாகத்தானே இருந்தார். சம்பத்துக்கு என்ன நேர்ந்தது? என்று கேட்கலாம். கட்சியின் பொதுச் செயலாளர் மானமிகு வைகோ அவர்களைத் தான் கேட்க வேண்டும்.


தமிழை வளர்த்ததா பக்தி இலக்கியங்கள்?

பக்தி தமிழை வளர்த்ததாகப் பசப்புகிறார் தோழர் சம்பத்.

மணிப் பிரவாளம் என்னும் நடையைப் பெரும்பாலும் புகுத்தியவர்களே வைணவர்கள்தாம்.

தேவாரம் பற்றி அண்ணா அவர்கள் கூறுவதும் கவனிக்கத் தக்கதாகும்.

தேவாரம் பாடப்பட்டதன் நோக்கமே பிறரைத் துன்புறுத்துவதுதான் என்பதனைத் தேவாரத்தை நடு நிலையுடன் படிக்கும் எவரும் எளிதில் புரிந்து கொள்வர். தேவாரத்தைப் படிக்கும்போது ஒரு வைணவன் பக்கத்தில் நிற்கமாட்டான். ஒரு சமணன் நிற்க மாட்டான். ஒரு புத்தன் நிற்க மாட்டான். இன்னும் விளக்கமாகச் சொல்ல வேண்டுமானால், சமரச சன்மார்க்கம் பேசும் ஒரு சைவன் கூட - அதன் பக்கத்தில் நிற்கமாட்டான். அந்த அளவுக்கு வசைமொழிகளை வாரி வாரி இறைத்திருப்பார்கள். தேவாரத்தைப் பாடிய திருஞானசம்பந்தரும், பிற நாயன்மார்களும் தெருச் சண்டைக்கு நிற்பவன் வாயில்கூட வராத வசை மொழிகள் பல தேவாரம் பாடிய நாயன்மார்கள் வாயினின்றும் வந்திருக்கின்றனவே என்கிறார் அறிஞர் அண்ணா.

(டாக்டர் பரிமளம் தொகுத்த அறிஞர் அண்ணாவின் பகுத்தறிவுக் களஞ்சியம் - பக்கம் 126)

பக்தி வளர்த்த தமிழின் இலட்சணம் இதுதானே! முடிந்தால் அண்ணாவை மறுக்கட்டுமே தோழர் நாஞ்சில் சம்பத்.

வைணவர்கள் வளர்க்கும் தமிழ் எத்தகையது? அதனையும் தெரிந்து கொள்ள வேண்டாமா?

சென்னையில் 11-2-1978 அன்று நடந்த திருப்பாவை - திருவெம்பாவை மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்தான் என்ன?

பிராந்திய மொழிகளில் அர்ச்சனை நடத்துவது சாஸ்திரங்களுக்கு விரோதமானது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஒரே மொழியில் சமஸ்கிருதத்தில் அர்ச்சனை நடந்தால்தான் தேசிய ஒருமைப்பாடு பலப்படும். - (தினமணி 13.-2.-1978)


அய்யாவும் - அண்ணாவும்

பொதுவுரிமை இல்லாத நாட்டில் ஏற்படும் பொதுவுடைமை மறுபடியும் அதிக உரிமை இருக்கிறவனிடம்தான் போய்ச் சேர்ந்து கொண்டே இருக்கும் என்பது பொது வுடைமைத் தத்துவத்துக்குப் பாலபாடம் என்பதை மக்கள் உணரவேண்டும்.

(தந்தை பெரியார் குடிஅரசு 25-.3-.1944 பக்.9)

பார்ப்பனீயத்தை வைத்துக் கொண்டு எவ் வளவுதான் பார்ப்பனர்களின் ஆதிக்கத்தைக் குலைத்தாலும், பார்ப்பனீயமாவது பார்ப்பனர்களை உண்டு பண்ணிக் கொண்டு பார்ப்பன ஆதிக்கத்தை ஏற்படுத்திக் கொண்டு இருக்காதா?

(அறிஞர் அண்ணா திராவிடநாடு 22.-4.-1945 பக்கம் 9)


ஆண்டாள் உண்மையா?

ஆண்டாளைப்பற்றி அவதானிக்கும் தோழர் சம்பத் அவர்களின் கவனத்துக்கு: வைணவரான ராஜாஜி என்ன கூறுகிறார் என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும்.

வைணவ மதத்தின் ஆழ்வார் களுள் ஒருவர் எனப்போற்றிப் புகழ்படுபவரும், சூடிக் கொடுத்த நாச்சியார் என்று கூறப்படுபவரும், மார்கழி மாதத்திலே பஜனை என்ற பெயரால் பக்தர்களால் பாடப் பெறும் பாடல்களுக்கு உரிமை உடையவர் என்று கூறப்படுபவருமான ஆண் டாள் என்ற பக்தையே கிடையாது என்று ராசகோபாலாச்சாரியார் கூறி இருக்கிறார்.

ஆண்டாள் என்னும் ஸ்திரி இருந்ததே இல்லை. நாலாயிரதிவ்விய பிரபந்தத்தில் ஆண்டாள் பாடியதாகச் சொல்லப்படும் பாசுரங்கள் அவர் பாடியவை அல்ல. பெரியாழ்வார் என்னும் ஆழ்வார் சில பாசுரங்களைப் பாடி அப்பாசுரங்களை ஆண்டாள் என்னும் ஒரு பெயரால் வெளிப் படுத்தினார் என்று திரிவேணி என் னும் ஆங்கில மாதப் பத்திரிகையில் 1946ம் ஆண்டு செப்டம்பர் இதழில் ராசகோபாலாச்சாரியார் எழுதியுள்ளார்.

ஆச்சாரியாரும் ஒரு வைண வர்தான். அவரே கூறிவிட்ட பிறகு வைணவப் பக்தர்கள், ஆழ்வார்கள் 12 பேர் என்பதை மாற்றி ஆழ்வார்கள் 11 பேர்தான் என்று ஒப்புக் கொள் வார்களா? மார்கழி பஜனையையும் மறுபரிசீலனை செய்வார்களா?


அண்ணா சழக்கர் என்றது யாரை?

தேவார - திருவாசக பிரபந்தங்களிலும் ஏனைய சைவ-வைணவ நூல்களிலும் கூறப்படும் எந்தக் கடவுளும் பண்டைத் திராவிட மக்களால் வழிபட்டவை அல்ல. பண்டைத் திராவிட மக்கள் பால் இவ்வேதாகமங்களுக்கு ஏற்ற கடவுள் வழிபாடு என்ற ஒரு வேண்டப்படாத மூடக் கொள்கை இருந்திருக்க முடியாதென்றும் யாம் கூறும் உண்மை நிலைபெறுதல் காண்க. காணவே கருத்தழிந்த சிலர் திருக்குறளையும் தேவார, திருவாசக பிரபந்தங்களையும் பண்டைத் தமிழ் நூல்களின் சாரம் என்று கூறுவது சழக்கர் உரையாம் என்று கருதப்படும். - (அறிஞர் அண்ணா திராவிட நாடு 15-.10.-1944)

---------------------24-3-2012 “விடுதலை”ஞாயிறுமலரில் மின்சாரம் எழுதிய கட்டுரை

24.3.12

மீண்டும் டெசோ தேவைப்படுகிறது! -கி. வீரமணி


ஜெனிவாவில் நடைபெற்ற அய்.நா.வின் மனித உரிமைக் கவுன்சிலின் கூட்டத்தில் அமெரிக்காவால் கொண்டு வரப்பட்ட தீர்மானம் இந்தியா உள்பட 24 உலக நாடுகளின் வாக்குகளைப் பெற்று நிறைவேற்றப்பட்டது. ஒரு வரலாற்றுத் திருப்பம் - நல்ல தொடக்கம்.

உலகறிய செய்த ஜெனிவா தீர்மானம்

இதன் மூலம் இனப்படுகொலை இலங்கை அரசால் நடத்தப்பட்டது; போர்க் குற்றம் நடைபெற்றுள்ளது என்பது உலகறியச் செய்யப்பட்டு விட்டது.

இலங்கை அரசு நியமித்த விசாரணைக் குழுவேகூட (LLRC) இலங்கையில் நடைபெற்றுள்ள போர்க் குற்றங்களை மறுக்கவில்லை. என்னென்ன நலத் திட்டங்கள் செய்யப்பட்ட வேண்டும் என்றும் கூறியிருக்கிறது என்றாலும் எந்தவிதமான வளர்ச்சித் திட்டம் நோக்கியும் இலங்கை அரசு பயணிக்கவில்லை என்பது கசப்பான உண்மையே.

இலங்கை தலைமை நீதிபதியின் தீர்ப்புப் போன்ற கருத்து

மனித உரிமைக் கவுன்சிலின் கண்காணிப்பில் ஈழ தமிழர்களுக்கான நலத் திட்டங்கள். அரசியல் தீர்வு மேற்கொள்ளப்பட வேண்டும் என்றாலும் இலங்கை அரசின் ஒத்துழைப்பு எந்த அளவு இருக்கும் என்பதுகேள்விக்குறியே!

இலங்கையின் தலைமை நீதிபதி சரத் என்சில்வா முள்வேலி முகாம்களில் முடக்கப்பட்டுக் கிடந்த பல்லாயிரக்கணக்கான ஈழத் தமிழர்களைப் பார்த்துக் கண்ணீர் விட்டு என்ன சொன்னார்?

"நமது நாட்டின் சட்டத்தின் மூலம் தமிழர்கள் நீதியை எதிர்பார்க்க முடியாது. தமிழர்களின் துயரங்கள் நீதிமன்றத்தின் முன் கொண்டு வரவேபடவில்லை. இலங்கையில் சிறுபான்மையினர், பெரும்பான்மையினர் என்ற இரண்டு இனம் இல்லை. ஒரே இனம்தான் என்று நாம் சொல்லிக் கொண்டு இருப்பதெல்லாம் பச்சைப் பொய்கள். இவைகளை நான் பகிரங்கமாகவே வெளிப்படுத்துகிறேன். இந்நிலை நீடித்தால் விடுதலைப்புலிகளின் போர் மீண்டும் வெடிக்கலாம் . இப்படிச் சொல்வதன் மூலம் இலங்கை அதிகாரிகளால் நான் தண்டிக்கப்படலாம், கவலையில்லை" என்று சிங்களவரான தலைமை நீதிபதியே ஒரு தீர்ப்பு போல சொன்னதற்குப் பிறகு இலங்கை அரசின்கீழ் தமிழர்கள் சுயமரியாதையுடன், உரிமைகளுடன் கூடிய குடிமக்களாக வாழ்ந்திட முடியுமா?

இப்பொழுதும் நிலை என்ன?

இப்பொழுதும் நிலைமை என்ன? இலங்கையின் அதிகார பூர்வமான ஆட்சிமொழி சிங்களம் மட்டுமே - தமிழ் கிடையாது, பவுத்த மதத்தைப் பின்பற்றும் சிங்களவர் ஒருவர் மட்டுமே இலங்கையின் குடியரசு தலைவராக வர முடியும் என்று சட்டமாக்கிவிட்ட பிறகு இலங்கைத் தீவில் சிங்கள இன அரசாட்சியின் கீழ் தமிழர்கள் சமத்துவ நிலையில் வாழ முடியுமா?

பிரிட்டன் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்ட படுகொலைக் காட்சிகளைப் பார்த்த பிறகு இலங்கையில் சிங்களவர்களும், தமிழர்களும் ஒன்றிணைந்து இனியும் வாழ முடியும் என்பதை நினைத்துத்தான் பார்க்க முடியுமா?

ஓர் இனத்தையே அடையாளம் தெரியாமல் முற்றிலும் கண்மூடித்தனமாக அழித்து விட்டு, கொஞ்சம்கூட மனசாட்சியின்றி சொல்லுகிறார் ராஜபக்சே. The Largest Humanitarian Rescue Operation in Human History - மனிதகுல வரலாற்றில் மிகப் பெரிய எண்ணிக்கையில் மக்களைக் காக்கும் மகத்தான நடவடிக்கையை ராஜபக்சே மேற்கொண்டாராம். இத்தகைய கொடூரர்களை நம்பி தமிழ் மக்களை மறுபடியும் ஒப்படைக்க முடியுமா? 180 நாட்களில் முகாம்களில் உள்ளவர்களைக் குடியமர்த்துவோம் என்று உத்தரவாதம் கொடுத்தாரே - மூன்று ஆண்டுகள் ஆகியும் முடிக்கவில்லையே!

இந்தநிலையில் தனியீழம் தவிர வேறு வழியே கிடையாது என்பது திட்டவட்டமான தெளிவாகும்.

1985இல் டெசோ

இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டேதான் தனியீழம்தான் இதற்குத் நிரந்தரமான தீர்வு என்பதை முடிவு செய்தோம்!

1985ஆம் ஆண்டில் (மே15) டெசோ என்ற ஒரு அமைப்பை உருவாக்கினோம். (Tamil Elam Supporters Organigation).

தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்களின் தலைமையில் பொதுச் செயலாளர் பேராசிரியர் க. அன்பழகன், திராவிடர் கழகப் பொதுச் செயலாளராகிய நான், மதுரை பழ. நெடுமாறன் ஆகியோர் உறுப்பினர்களாகக் கொண்ட அந்த அமைப்பு தமிழ்நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்து மாபெரும் எழுச்சியை தமிழர்கள் மத்தியில் உருவாக்கியது.

தமிழ்நாட்டில் இருந்து வந்த தமிழீழத் தலைவர்கள் சந்திரகாசன் (தந்தை செல்வா அவர்களின் மகன்) பாலசிங்கம் ஆகியோர் நாடு கடத்தப்பட்டபோது டெசோ அமைப்பு கொடுத்த அழைப்பினை ஏற்று, தமிழர்கள் ஒருமுகமாகத் திரண்ட நிலையில் 24 மணி நேரத்தில் அந்த உத்தரவு ரத்து செய்யப்பட்டதே!

டெசோ முன்னின்று நடத்திய இரயில் நிறுத்தப் போராட்டம் (30.8.1985) தமிழ்நாட்டையே வெறிச் சோடச் செய்ததே! 1983 டிசம்பர் 17,18 நாட்களில் மதுரையில் உலகத் தமிழர்களை ஒன்று இணைத்து திராவிடர் கழகம் ஈழ விடுதலை மாநாட்டையே நடத்தியதே!

மீண்டும் தேவை டெசோ!

உலக நாடுகள் இலங்கை சிங்கள அரசின்கீழ் தமிழர்கள் நிம்மதியாக வாழ முடியாது என்று உணர வைக்கப்பட்ட இந்தக் கால கட்டத்தில், டெசோ அமைப்பு மீண்டும் தேவைப்படுகிறது.

அய்ந்து முறை முதலமைச்சராகவும், தி.மு.க. தலைவராகவும் இருக்கக் கூடிய மானமிகு கலைஞர் அவர்கள் தனியீழம்தான் ஒரே தீர்வு என்ற கருத்தினை வெளிப்படுத்தியிருப்பது மிகச் சரியான - இக்கால கட்டத்திற்கு அவசியமான கருத்தும் - முடிவுமாகும். எனவே டெசோவை மீண்டும் உருவாக்கவேண்டும் என்று திராவிடர் கழகம் கருதுகிறது.

முதலமைச்சர் மாண்புமிகு செல்வி ஜெயலலிதாகூட ஒரு கட்டத்தில் தனியீழம்தான் தீர்வு என்ற கருத்தையும் வெளியிட்டுள்ளார்.

பிரிப்பதைத் தவிர்ப்போம்!

இந்தப் பிரச்சினையில் நம்மைப் பிரிக்கும் வேறு சில கருத்துக்களைத் திணிக்காமல் தனியீழம்தான், ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமைக்கான நிரந்தரத் தீர்வு என்பதில் ஒன்றுபடும் தோழர்களை, அமைப்புகளை ஒருங்கிணைத்து, மீண்டும் டெசோவின் நோக்கத்தினை நிறைவேற்ற வேண்டும் என்று திராவிடர் கழகம் கருதுகிறது.

இந்தக் கால கட்டத்தில் ஆற்றப்பட வேண்டிய முக்கிய கடமையாகவும் இதனைக் கருதுகிறது.

அரசியலுக்கு அப்பாற்பட்ட திராவிடர் கழகத்தின் முயற்சி

அரசியல் கட்சியில்லாத சமுதாய இயக்கமான திராவிடர் கழகம் இதனை முன்னின்று நடத்துவதால் இதில் அரசியல் பிரச்சினைக்கும் இடம் இல்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

மாச்சரியங்களை மறந்து, இன்னமும் முள்வேலிக்குள் ஈழத் தமிழர்கள் வாடி வதங்குகிறார்கள்; மன ரீதியாக பாதிக்கப்பட்டு, உரிமை இழந்து நிற்கும் நம் தொப்புள்கொடி உறவுகளுக்கு ஆதரவு தர வேண்டாமா?


---------------கி.வீரமணி தலைவர், திராவிடர் கழகம் --"விடுதலை” 24-3-2012