Search This Blog

8.3.12

எனது சுயநலம் திராவிட சமுதாயமே! - தந்தை பெரியார்


தோழர்களே! தோழர் வெங்கலவன் அவர்கள் என்னை பாராட்டிப் புகழ்ந்துப் பேசினார். அவருக்கு என்னால் ஒன்றும் செய்யமுடிய வில்லை என்பது உண்மைதான். நான் செய்து வரும் தொண்டு பெரிதும் பொது மக்களையும், சிறப்பாக தாழ்த்தப்பட்ட வகுப்பு மக்களையும் பொறுத்து பொதுவில் ஆற்றி வருகிறேனே ஒழிய, தனிப்பட்ட மனிதர்கள் விஷயத்தில் நான் அதிகம் செய்ய முயற்சிப்பதில்லை என்பதோடு, அது என்னால் முடியக் கூடிய காரியமும் அல்ல; முடிவதானாலும் தனிப்பட்ட மனிதர்களைப் பற்றி எவ்வளவுக்கெவ்வளவு கவலை எடுத்துக் கொள்ளுகிறேனோ அவ்வளவுக்கவ்வளவு எனது சிறிது செல்வாக்குக்கும் பலக் குறைவு ஏற்பட ஏதுவாகிறது.

அப்படி இருந்தும் நான் தவறாமல் தினம் ஒன்றுக்கு 4, 5 சில சமயங்களில் 10 வீதம் கூட சிபாரிசு கடிதங்கள் கொடுத்துக் கொண்டுதான் வருகிறேன். சில சமயங்களில் நான் வெளியூர் போகும் நிகழ்ச்சியைக் கூட பத்திரிகையில் தெரிவிப்பதில்லை. காரணம் என்னவென்றால் நான் போகும் ஊர்களுக்குக்கெல்லாம் 10, 15 பேர்கள் வந்து அதற்கு சிபாரிசு இதற்கு சிபாரிசு என்று என்னால் முடியாததற்கெல்லாம் கேட்கிறார்கள். கொடுக்காவிட்டால் அவர்கள் புது விரோதிகள் ஆகி விடுகிறார்கள். கொடுத்து அது பயன்படாவிட்டால் நான் சரியாய் முயற்சித்திருந்தால் கிடைத்திருக்காதா என்று நிஷ்டூரப் பட்டுக் கொள்ளுகிறார்கள், சில சமயம் ஒருவருக்கு கொடுத்தது போதாதென்று வேறு நமக்கு தெரியாத நபருக்குக் கேட்கிறார்கள். கொடுக்காவிட்டால் முன் கொடுத் ததும் வீணாகி விரோதமும் கொண்டு விடுகிறார்கள். 10 தடவை கொடுத்து ஒரு தடவை கொடுக்க முடியாமல் போனால் வெளிப்படையான எதிரியாகவே ஆகி விடுகிறார்கள். சிபாரிசு கொடுத்து அனுகூலம் ஆகி அவர்கள் தகுந்த யோக்கியதைக்கு வந்தாலும், அதற்கும் மேல், யோக்கியதைக்கு போக நம்மை வைதால் அனுகூலமாகும் என்று கருதினால், தைரியமாய் வைகிறார்கள். தங்களுக்குக் கீழ் இருப்பவர்கள் நமக்கு வேண்டியவர்களாயிருந்தால் தொல்லை கொடுக்கிறார்கள். நமக்கு விரோதமாகவும் சதியாலோசனையில் கலந்து கொள்ளுகிறார்கள். சிபாரிசோ, அல்லது வேலையோ நம்மால் கிடைக்காவிட்டால் இந்தக் கட்சி என்ன சாதித்தது என்கிறார்கள். வேலை கிடைத்து நல்ல பதவியில் உட்கார்ந்து கொண்டு மேலால் நம் தயவு தேவை இல்லை என்று கண்டு கொண்டால் நான் ஒரு கட்சியாலும் ஒருவர் ஆதரவாலும் இப்பதவி பெற்றவன் அல்ல. இந்த கட்சியால் கட்சித் தலைவரால் எனது முற்போக்கு கெட்டுப் போய்விட்டது. என்னுடைய தனிப்பட்ட கெட்டிக்காரத்தனத்தினால் முன்னுக்கு வந்தேன் என்றும், என்ன கட்சி? கட்சிக்கு என்ன செல்வாக்கு? கட்சி எங்கே இருக்கிறது? என்றெல்லாம் கூடப் பேசுகிறார்கள். இந்த விதமான நிலைமை நம் மக்களிடம் இன்று நேற்றில்லாமல் கட்சி தோன்றிய காலம் முதல் தியாகராயர், பனகல் அரசர், பொப்பிலி அரசர் காலம் முதல் இருந்து வருகிறது.

பனகல் அரசர், ஒரு வேலை காலியானால், அதனால் எனக்கு 20 விரோதியும் ஒரு சந்தேகப்படத் தக்க நண்பனும் ஏற்படுகிறான் என்று சொல்லி இருக்கிறார்.

கட்சி என்றால் தனிப்பட்டவர்களுக்கு உத்தியோகம், பதவி, பட்டம், பொருள் லாபம் என்பதாகத்தான் பெரும்பாலான மனிதர்கள் நினைத்திருக்கிறார்களே தவிர, பொது உழைப்பு என்றோ, பயன் அடைந்தவர்கள் நன்றி காட்டுவது என்றோ வெகு பேர் கருதுவதே இல்லை. பார்ப்பனர் அப்படி நினைப்பதே இல்லை. கட்சிக்காகப் பொதுவாகப் பாடுபடுவதும் பலனை வரும்போது அனுபவிப்பதும் என்று கருதுகிறார்கள். நம்மவர்கள் பாடுபடாமல் தனக்கு தனக்கு தனக்கு என்கின்றார்கள். இந்த லட்சணத்தில் நன்றியும் கிடையாது. அது மாத்திர மல்லாமல் எதிரியுடனும் சேர்ந்து கொள் ளுவது சகஜமாக இருக்கிறது.

உதாரணமாக அய்க்கோர்ட் ஜட்ஜு தேவஸ்தானபோர்டு கமிஷனர் முதலிய பதவியை எடுத்துக் கொள்ளுங்கள். பார்ப்பனரல்லாத அய்க்கோர்ட் ஜட்ஜுகளும், தேவஸ்தான போர்டு ஆரம்பமான காலமுதல் இன்று வரை அதில் நியமனம் பெற்ற கமிஷனர்கள் அத்தனை பேரும் கட்சி ஆதரவி னாலேயே நியமனம் பெற்றார்கள். அப்படி இருந்தும் அவர்களில் பெரும்பாலோர் கட்சிக்கு எதிரிகளானார்கள். எதிரி களுடன் சேர்ந்தார்கள், கட்சியைப்பற்றிக் கவலையற்றவர்களானார்கள். கட்சி மக்களுக்கும், கட்சி கொள்கைக்கும் துரோகம் செய்து தங்கள் முற்போக்கை கருதுபவர்களானார்கள்.

இன்னும் இப்படி எத்தனை உதா ரணம் வேண்டுமானாலும் சொல்லலாம். ஒருவர் தன் மகனுக்கு ஒரு புரோ மோஷனுக்கு சிபாரிசு கேட்டு, அது ஒரு அளவுக்கு செய்யப்பட்டு, அந்த அளவு அவருக்கு திருப்தி இல்லையானால் உடனே வேறு தலைவர் ஏற்பட்டால் தான் கட்சியால் மக்களுக்கு நன்மை ஏற்பட முடியும் என்று சொல்லி விடு கிறார். இப்படி ஒரு கட்சியை தனிப் பட்டவரின் பெரும் பதவிக்கும் லாபத்துக்கும் மாத்திரம்தான் என்று கருதினால் கட்சி எப்படி முன்னுக்கு வர முடியும்? பதவியும் லாபமும் கிடைத் தாலும் கிடைத்ததின் செல்வாக்கை கட்சிக்கோ கட்சி மக்களுக்கோ பயன் படுத்தாவிட்டால் எப்படி முடியும்? எல்லோரும் இப்படி என்று நான் சொல்ல வரவில்லை. அநேக நல்லவர்களும் யாதொரு நலனும் இல்லாவிட்டாலும் கட்சிக்குத் தன் கைக்காசைச் செலவழித்துக் கொண்டு அநேக அசவுகரியங்களையும், ஏமாற்றங்களையும் பொறுத்துக் கொண்டு பாடுபடுகிறவர்கள் பலர் இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர் களால் இன்று கட்சியின் காரியம் பெரிதும் நடந்து வருகிறது. அவர்கள் இந்த சமுதாயம் உள்ளவரையில் இருந்து கொண்டுதான் இருப்பார்கள். அதில் சந்தேகமில்லை என்று உறுதியாய்ச் சொல்லுவேன்.

தவிர, தோழர் வெங்கலவன் அவர்கள் என்னை சுயநலமில்லாதவன் என்றும், பதவியில் ஆசையில்லாதவன் என்றும், இருந்தால் சில பெரியவர்களைப் போல் பெரிய பதவிக்கு வந்திருக்கக் கூடும் என்றும், இந்த நெருக்கடியில் பெரும் பணம் சம்பாதித்தும் இருக்கக் கூடும் என்றும் நான் பெரிய தியாகம் செய் திருப்பதாகவும் சொல்லிப் புகழ்ந்தார். அதை நான் ஏற்றுக் கொள்ளவில்லை.

நான் இந்த தொண்டு வேலை செய்வதைத் தவிர வேறு எந்தப் பதவிக்கும் தகுதி அற்றவன் என்பது எனக்குத் தெரியும். பதவி வந்தாலும் அதை சுமந்து கொண்டு இருக்க என்னால் முடியாது என்பது உங் களுக்குத் தெரியும்.

அன்றியும் இன்று எனக்கு பணம் இல்லாமலோ, பதவி இல்லாமலோ நான் இருக்கவில்லை. எனக்கு செலவுக்கு வேண்டியதற்கு மேல் என்னிடம் பணம் உண்டு - அதை என்ன செய்வது என்பதே எனக்குப் பெரிய பிரச்சினையாய் இருக்கிறது. எனக்கு இருக்க வேண்டியதற்கு மேலான பதவியையும் நீங்கள் அளித்திருக்கிறீர்கள்.

நீங்கள் கருதுகிற அளவு செல்வ மும், நீங்கள் கருதுகிற பெரிய பதவியும் எனக்கு இருந்தால் எனக்கு இன்றுள்ள மதிப்பு இருக்குமா என்று யோசித்துப் பாருங்கள். நீங்கள் கருதுகிற பணக்காரரைவிட, நீங்கள் கருதுகிற பதவியாளர்களைவிட உங்கள்முன் நான் பெருமை உள்ளவனாக இருக்கிறேன். நீங்களும் பெருமையாய்க் கருதுகிறீர்கள் என்றே கருதுகிறேன்; எனக்கு சுயநலமில்லை என்று கருதாதீர்கள். நான் மகா பேராசைக்காரன்; என்னுடைய ஆசையும் சுயநலமும் எல்லையற்றது. நான் என் சொந்த சுயநலம் என்பதை திராவிட சமுதாயம் என்று எண்ணியிருக்கிறேன். அச்சமுதாயத்திற்கு வேண்டிய செல் வமும் பதவியும் என்பவற்றில் அளவற்ற ஆசை கொண்டிருக்கிறேன். அந்தச் சுயநலத்திற்கே உழைக்கிறேன். அதைத் தவிர, என் சொந்தம் என்று எண்ணுவ தற்கு அவசியமான சாதனம் எனக்கு ஒன்றுமே இல்லை. இருந்தாலும் இதற்கு மேல் என்ன வேண்டி இருக்கிறது?

ஏன் இவ்வளவு தூரம் (தற்பெருமை யாய் கருதும்படி) சொல்லுகிறேன் என்றால், ஒவ்வொரு மனிதனும் தோழர் வெங்கலவன் அவர்கள் குறிப்பிட்டவர்களான ராஜா சர் போலவோ, சர். இராமசாமி போலவோ, சர். சண்முகம் போலவோ வர வேண்டும் என்று கருதுவதைவிட அதாவது பெரிய செல்வவான்களாகவும், பதவியாளர் களாகவும் வர வேண்டுமென்று கருதுவதைவிட, நல்ல தொண்டனாக தாழ்த்தப்பட்ட, கொடுமை செய்யப் பட்ட மக்களுக்கு விடுதலை அளிப்பவர்களாக, அவர்களை செல்வவான்களாகவும் பதவியாளர்களாகவும் ஆக்குபவர்களாக இருப்பதினால் பெருமை இல்லாமல் போகாது என்பதை வாலிபர்களுக்கு எடுத்துக் காட்டவேயாகும். முன் சொன்னவர் களால் ஏற்படும் நன்மையைவிட பின் சொன்னவர்களால் ஏற்படும் நன்மை குறைந்து போகாது. ஆதலால் வாலிபர்களுக்கு செல்வத்திலும் பதவி யிலுமே கண்ணும் கருத்தும் இருக்கக் கூடாது என்றும், பொதுத் தொண் டுக்கு இறங்கி தொண்டனாகவே ஆக ஆசைப்பட வேண்டும் என்றும், நம் சமுதாயத்துக்கு தொண்டாற்ற செல் வமும் பதவியும் கருதாத தொண்டர்கள் அநேகர்கள் வேண்டி இருக்கிறார்கள் என்றும் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

-----------------------திருச்சி சலவைத் தொழிலாளர் தோழர் முத்து அவர்கள் மகள் திருமணத்தில் தந்தை பெரியார் ஆற்றிய சொற்பொழிவு -”குடிஅரசு” - சொற்பொழிவு - 24.06.1944


0 comments: