Search This Blog

Showing posts with label ஜோதிடம். Show all posts
Showing posts with label ஜோதிடம். Show all posts

14.3.09

ஜோதிடப் பைத்தியமும்- தேர்தலும்





ஜோதிடர்களின் ஆதிக்கம் அரசியலில் அதிகம்; மெத்தப்படித்த மேதாவிகள் - அரசியலில், பழந்தின்று கொட்டை போட்டவர்கள் கூட, ஜோதிடர்களின் வலையில் சிக்கி தங்களது அறியாமையை, முட்டாள் தனத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுவதில் வெட்கப்படுவதே இல்லை!

வரும் பொதுத்தேர்தல் தேதிகள் நல்ல நாள்களில் நடைபெறாததால், நாட்டிற்குப் பெருங்கேடு ஏற்படுமாம்!

டெல்லி ஜோதிடர், மும்பை ஜோதிடர், இப்படி பலரும் நல்ல கொழுத்த வருமானத்தை இந்த மூட நம்பிக்கையாளர்களான அரசியல்வாதிகளிடம் கறக்கிறார்கள்!

நிலையான ஆட்சியாக ஒரு கட்சி வராமல் பல கட்சி ஆட்சி வருமாம்! இதைச் சொல்ல ஒரு ஜோதிடரா தேவை? தொடர்ந்து செய்திகளை அறியும் எவருக்கும் தெரியுமே!

அத்வானிக்கு ஏழரை நாட்டுச் சனியன் என்று கூறி அவர் பிரதமராக வரவேமுடியாது என்று கூறுகிறார் இன்னொரு ஜோதிடர்.

அந்த நம்பிக்கை உடையவர்கள், பாவம், தூங்கா இரவுகளாக தங்கள் வாழ்நாளின் தேர்தல் காலத்தைக் கழிப்பார்கள்!

எல்லாவற்றையும் மிஞ்சிவிட்டார் அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் செல்வி ஜெயலலிதா!

அக்கட்சியின் புர்ரட்சி எவ்வளவு என்றால், வேட்பாளர்கள் ஜாதகத்தையும் தாக்கல் செய்ய வேண்டுமாம்!

அண்ணா பெயரில் கட்சி - இப்படி ஒரு அசிங்கம்!

சென்ற 2004 தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டு சேர்ந்த அம்மையார் அப்போதும் பரப்பனம்பாடி உன்னிக்கிருஷ்ணன் பணிக்கர் முதல் பலவகை ஜோதிடர்களின் ஆலோசனை கேட்டுத்தானே களம் இறங்கினார்!

ஏன் பூஜ்ஜியத்தை - தேர்தல் முடிவுகளை - ராஜ்யமாகப் பெற்றார்?

நேற்று விழுந்த குழியிலே இன்றும் விழுவதை விட - மூடநம்பிக்கைகளின் உச்சம் வேறு உள்ளதா?

எந்த வண்ணம், எந்த உடை இவைகளைக் கூட ஜோதிடர்களா தீர்மானிப்பது? வெட்கம்! மகா வெட்கம்! இந்த 21 ஆம் நூற்றாண்டில் சந்திரயான் விண்வெளிக்கலம் நிலவை அடைந்துள்ள இன்றைய காலகட்டத்தில் இப்படி ஒரு மானக்கேடா?

எந்த ஜோதிடரும் நவம்பர் 26 (2008) மும்பை நிகழ்வு பற்றி முன்கூட்டியே கூறவில்லையே ஏன்?


ஜோதிடத்தை தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர் போன்ற பகுத்தறிவாளர்கள்தான் ஏற்கவில்லை என்று கருதவேண்டாம்!

தேசிய கவி பாரதியார் - ஜோதிடந்தனை இகழ் என்று ஆத்திச் சூடி எழுதினார்!

திரு ராஜகோபாலாச்சாரியார் - ராஜாஜி - ஜோதிடத்தை மிகவும் கண்டித்தார்!

பண்டித ஜவஹர்லால் நேரு ஜோதிடர்களைப் பற்றி மிகவும் கடுமையாகச் சாடியுள்ளார்!


100-க்கும் மேற்பட்ட நோபல் பரிசு பெற்ற பல விஞ்ஞானிகள், ஜோதிடம் என்பது புரட்டு, அது அறிவியல் அல்ல - அது ஒரு போலி விஞ்ஞானம் (Pseudo Science) என்று குறிப்பிட்டு கையொப்பமிட்டு அறிக்கையே வெளியிட்டுள்ளர்கள்!

என்றாலும், பலர் இதனை வைத்து மக்களைச் சுரண்டிக் கொழுக்கின்றனரே!

மூன்றாவது அணியை இப்போது உருவாக்கும் கர்நாடகத்தில் அழைப்பு விடுத்த தேவகவுடா பார்க்காத ஜோதிடமா? நாமக்கல் செல்லப்ப அய்யர் ஆஞ்சனேயர் என்ற குரங்குசாமி திருநள்ளாறு சனீஸ்வர பகவான் வரை கேட்டும் அவர் பதவியில் தொடரமுடியவில்லையே!

அறிவியல் மனப்பான்மையைப் பெருக்குவதை அடிப்படைக் கடமையாகக் கூறும் நமது அரசியல் சட்டத்தின் கீழ் நடைபெறும் ஆட்சியில் இப்படிப்பட்ட மூடத்தனங்கள் முற்றாக ஒழிக்கப்பட தடைச் சட்டங்களை இயற்றிட முற்போக்கு சிந்தனையாளர்கள் ஆங்காங்கு இயக்கங்களை நடத்தி அரசுகளுக்கு அழுத்தம் (Pressure) கொடுக்க வேண்டும்! ஜோதிடத்தால் கெட்டவர்கள்; செத்தவர்கள், தற்கொலை செய்துகொண்டவர்கள், ஏமாந்தவர்கள், நாளும் ஏமாறுபவர்கள் எண்ணிக்கையோ பெருகிய வண்ணம் உள்ளது! உடலின் தொற்று நோய்களைத் தடுப்பது மட்டும்தானா முக்கியம்? உள்ளத்தின் அறிவின் தொற்று நோய்க்கிருமி, அது உற்பத்தியாகும் இடத்திலேயே அழிக்க அரசும் , மக்களும் முன்வர வேண்டாமா?

அனைத்து முற்போக்குச் சிந்தனையாளர்களும் இதுபோன்ற பணிக்கு கூட்டணி அமைத்துப் பிரச்சாரம் செய்ய முன்வாருங்கள்! மக்களை அறியாமையிலிருந்து காப்பாற்றுவது மிகமிக முக்கியம் அல்லவா?

------------------ 14-3-2009 "விடுதலை" இதழில் - கி. வீரமணி அவர்கள் எழுதிய கட்டுரை

7.3.09

சோதிடன் சொன்ன விபரீதம்

சோழ அரசன் சுபதேவர் சோழவளநாட்டை ஆட்சி செய்து வந்தார். இவருடைய மனைவி கமலவதியார். இத்தம்பதியர் திருமணமாகி நெடு நாட்களாகியும் மக்கட்பேறு இல்லாமல் மனம் வருந்தினர்.

பிறகு சுபதேவர் - கமலவதி யார் தம்பதியருக்குக் குழந்தைச் செல்வம் கிட்டிற்று. கமலவதியார் மணிவயிற்றில் கரு வளர்ந்து, குழந்தை பிறக்கும் பிரவசத் தருணம் நெருங்கியது.

அப்போது அரண்மனை சோதிடர்கள் ஓடிவந்து குழந்தை இந்த நேரத்தில் பிறப்பது நல்லதல்ல அரண்மனைக்கு ஆகாது. ஆகவே இதைத் தவிர்க்க இன்னும் ஒரு நாழிகை கழித்துப் பிறக்குமே யானால், மூவுலகையும் ஆளக் கூடிய ஆற்றலைப் பெறும் குழந்தையாக இருக்கும் என்றார்கள். சோதிடர் கூறியதைப் பிள்ளைப் பேற்றுக்கான பிரசவ நிலையில் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் அரசியாரிடம் அந்த வேதனையான நேரத்தில் நேரம் சரியில்லை என்று எடுத்துக் கூறினார்கள்.

சோதிடர் கூறியக் கருத்தை ஏற்றுக் கொண்ட அரசியார் -பத்து மாதம் சுமந்த நாம் இன்னும் ஒரு நாழிகை (சோதிட முறைப்படி ஒரு நாழிகை என்பது இருபத்து நான்கு நிமிடங்கள்) தாமதித்துத் தமக்குக் குழந்தை பிறக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அரசியார் அந்தப் பிரசவ வேதனையான நேரத்திலும் உடனடியாக என்னைத் தலைகீழாகக் கட்டித் தொங்க விடுங்கள் என்று அரசியார் வலியால் அழுது கொண்டே ஆணையிட்டார். அவ்வண்ணமே அரசியார் தலை கீழாகக் கட்டித் தொங்கவிடப் பட்டார். (கசாப்புக் கடையில் ஆடு தொங்கவிட்டதுபோல).

சோதிடன் கூறிய அந்த நல்ல நேரமும் நெருங்கியது அந்த ஒரு நாழிகையும் கழிந்தது. தலை கீழாகத் தொங்கவிடப்பட்ட அரசியாரின் கட்டு அவிழ்க்கப் பட்டுப் படுக்கையில் கிடத்தப் பட்டார். அழகான ஆண் குழந்தை பிறந்தது. தன் குழந்தையை அரசியார் உச்சி மோந்து முத்தமிட்டார். அதுதான் அரசியாரின் கடைசி மகிழ்ச்சி! ஆம்! அரசியார் இயற்கைக்கு விரோதமாக பிரவச நேரத்தில் தலை கீழாகத் தொங்க விடப்பட்டதில் உள்ளுறுப்பில் சிக்கல்கள் ஏற்பட்டுப் பிரசவம் ஆன சில நிமிடங்களில் உயிரிழந்திருக்கிறார்!

அரண்மனை சோதிடப் பயல்கள் சொன்னார்கள் என்ப தற்காக ஒரு நாழிகை தள்ளிப் போட்டு முரண்பாடான பிரவசம் ஏற்படுத்தி அரசியார் கொல்லப்பட்டுவிட்டார். அவர் சாவுக்கு சோதிடப் பயல்கள் சொன்ன நல்ல நேரம் என்ற விபரீதமேக் காரணம்!


------------------------புலவர். மா. வீரஅரசின் தடயம் என்ற நூலிலிருந்து

29.8.08

பயத்தை உதறிய மாமி!

ஓரளவு அறிவு வளர்ச்சி பெற்றுள்ள இந்தக் காலத்தில்கூட பேய் பிசாசு என்று மக்களிடத்தில் பயத்தை உண்டாக்கி வருவது போல், சோதிடர்களும் அக்காலம் முதல் இக்காலம் வரை மன்னர்களிடத்திலும் மக்களிடத்திலும் ஒரு பயத்தை ஊட்டியே வந்திருக்கின்றனர். இது வரலாற்று உண்மை!

சோதிடர்கள் மக்களிடத்திலே பயத்தை ஊட்டியே அதை நம்பும்படி செய்து வருகின்றனர்!

பெண்ணின் மூல நட்சத்திரம் மாமனாருக்கு ஆகாது!

ஆயில்ய நட்சத்திரம் மாமியாருக்கு ஆகாது!

கேட்டை நட்சத்திரம் கணவரின் அண்ணனுக்குக் கேடு!

விசாக நட்சத்திரம் கணவரின் தம்பிக்குக் கேடு!

உத்திர நட்சத்திரம் கணவருக்குக் கேடு!

இப்படி பயமுறுத்துகிறது சோதிடம்,


இந்தப் பயமுறுத்தலைக் கண்டு அஞ்சாமல் துணிச்சலுடன் தன் மகனுக்கு ஆயில்ய நட்சத்திரத்துப் பெண்ணை மருமகளாக்கிக் கொண்ட சம்பவத்தை 2004-ஆம் ஆண்டு பிப்ரவரி மங்கையர் மலர் இதழில் வெளியிட்டிருக்கிறார்கள். அவர் வைதீகக் குடும்பத்தைச் சேர்ந்தவர்தான். ஆனாலும், சோதிடத்தின் பயமுறுத்தலைத் தகர்த்து, தன் மகனுக்கு ஆயில்ய நட்சத்திரத்துப் பெண்ணை மணமுடித்து வைத்தார். அதனால், மாமியாருக்கு எதுவும் ஆகிவிடவில்லை! அந்தத் தம்பதிகளும் சிறப்போடு வாழ்ந்து வருகிறார்கள். இதுபற்றி ஆயில்ய நட்சத்திரத்தில் பிறந்த தன் பெண்ணை மருமகளாக ஏற்றுக் கொண்ட மாமியாரைப்பற்றி அவர் சம்பந்தியம்மா கூறும்போது, ஆயில்யம் அவரை அண்ட முடியாது!

ஜாதகப் பொருத்தம் அமைந்தவர்களுக்குக் கஷ்டமே வந்ததில்லையா? ஜாதக தோஷம் போன்ற காரணங்களால் பெண்ணை வதைக்காதீர்கள்! என்றுகூறி இருக்கிறார். ஆயில்ய நட்சத்தித்துப் பெண்ணை மருமகளாக்கிக் கொண்ட மாமியாருக்கு எந்த தீங்கும் ஏற்படவில்லை. நலமாகவே இருக்கிறார்.

இந்த உண்மைச் சம்பவத்தைப் படித்துப் பார்த்த பிறகாவது சோதிடம் பற்றிய பயத்தை நீக்கி பகுத்தறிவோடு வாழ முற்படும்படி மக்களைக் கேட்டுக் கொள்கிறோம். சோதிடத்தால் எதுவும் ஆகப் போவதில்லை என்ற துணிவு கொண்டவர்களால் சோதிடத்தை உதறித் தள்ள முடியும்.

--------------- தி. பொன்னுசாமி - நூல்: "சோதிட மறுப்பும் வானவியல் சிறப்பும்"

17.7.08

மண்டியிடுகிறது மதம்!

கோபர் நிகஸ் (1473-1543) உலகம் மறக்க முடியாத ஒரு விஞ்ஞானியின் பெயர் இது. பைபிள் கூறியதற்கு மாறாக - வானவியல்பற்றிய கருத்தினை வெளியிட்ட விஞ்ஞானி இவர். வானவியல் விஞ்ஞானத்தின் தந்தை என்று போற்றப்படுபவர்.

உலகம் ஒரே இடத்தில் நிற்கவில்லை. தன்னைத்தானே 24 மணிநேரத்திற்கு ஒருமுறை சுற்றிக் கொள்கிறது; சூரியனையும் அது சுற்றி வருகிறது - இதற்கு அது எடுத்துக்கொள்ளும் காலம் ஒரு வருடம்.

உலகத்தைப்பற்றி அன்றைய கற்பனை என்ன? எப்படி யெல்லாம் சித்திரங்கள் தீட்டப்பட்டு இருந்தன கடவுள் தன் கையிலிருந்து தொங்கும் ஒரு கயிற்றால் இந்த உலகம் என்ற பந்தைத் தொங்கவிட்டுக் கொண்டிருந்தார். மற்றொரு கையால் அந்தப் பந்தைச் சுற்றிக் கொண்டிருந்தார் என்று கருதினர்.

அதற்கு மாறாக, அறிவியல் அடிப்படையில் கோபர்னிகஸ், தான் கண்டுபிடித்த உண்மையை உடனடியாக உலகிற்கு அறிவிக்க முடியவில்லை; காரணம், மதத்தின் உருட்டல் மிரட்டல்தான். தான் கண்டறிந்த இந்த அரிய உண்மையை 43 ஆண்டுகளுக்குப் பிறகுதான் நூல் வடிவில் கொண்டு வர முடிந்தது; அநேகமாக அது அவர் மரணத்தைத் தழுவும் காலகட்டமாகும்.

வான சாஸ்திரத்தை தலைகீழாக ஆக்கப் பார்க்கிறான் இந்தக் கோபர்னிகஸ் என்னும் முட்டாள் என்று லூதர் என்னும் பாதிரி அர்ச்சித்தார். கிறிஸ்துவின் வார்த்தைகளைக் காட்டிலும் கோபர்னிகஸ் கொள்கைகளை யாரே ஏற்பர் என்று சங்வின் என்னும் இன்னொரு பாதிரியார் கதறினார்.

இவர்களை விட்டுத் தள்ளுங்கள். பல்கலைக் கழகப் பேராசிரியர்களே கோபர்னிகஸ் கண்டுபிடிப்புக்கு எதிராக ஆர்ப்பரித்து நின்றனர்.

சூரியன் சுற்றவில்லை; பூமிதான் சுற்றுகிறது என்று எந்தெந்த நூல்கள் எல்லாம் கூறுகின்றனவோ அவையெல்லாம் கறுப்புப் பட்டியலில், கண்டனப் பட்டியலில் வைக்க ரோமாபுரி மதக் கோயில் ஆணையிட்டது.

இவற்றையெல்லாம் கூறுவதற்குக் காரணம் அண்மையில் நிகழ்ந்த ஒரு நிகழ்வாகும்.
கோபர்னிகஸின் புதிய கண்டுபிடிப்பு அடங்கிய அந்தப் புத்தகத்தின் முதல் பதிப்பு அண்மையில் நியூயார்க் நகரில் ஏலம் விடப்பட்டது. எவ்வளவு பெரிய தொகைக்குத் தெரியுமா? 22 லட்சம் டாலர்கள்; அதாவது ரூபாய் கணக்கில் 970 லட்சமாகும்.

பகுத்தறிவின் முன், அறிவியலின் முன் எந்த மதமும் மண்டியிட்டே தீரும் என்பதில் அய்யமில்லை.

கலிலியோ, டார்வின் போன்ற விஞ்ஞானிகள் கண்டறிந்த கருத்துகள் எல்லாம் மதவாதிகளால் மறுக்கப்பட்டன. கலிலியோ போன்றவர்கள் கடும் தண்டனைக்கு ஆளானார்கள்.
எந்த மதம் அவர்களுக்குத் தண்டனை கொடுத்ததோ அதே மதத்தின் வாடிகன் போப் அந்தத் தவறுக்கு வருத்தம் தெரிவித்து, கலிலியோ, டார்வின் கருத்துகளை ஏற்றுக்கொள்வதாக வும், பள்ளிகளில் அவர்களின் கண்டுபிடிப்புகளை நடத்தலாம் என்றும் பகிரங்கமாக பிற்காலத்தில் அறிவித்துவிட்டார் என்றால், இந்தத் தன்மையை நினைத்துப் பார்க்கவேண்டும்.


வானவியலைப்பற்றி மூடத்தனமாகக் கருதிக் கொண்டிருந்த கருத்துகளை மய்யப்படுத்திதான் ஜோதிடம் என்ற அடி முட்டாள்தன ஏற்பாடும் உருவாக்கப்பட்டது.

சூரியன் ஒரு நட்சத்திரமே தவிர, அது கோள் அல்ல என்பதுகூடத் தெரியாமல் நவக்கிரகங்களில் சூரியனைக் கொண்டு போய் வைத்துவிட்டனர்.

பூமி ஒரு கிரகம்; ஆனால், சோதிடத்தில் அதற்கு இடம் இல்லை; பூமியின் துணைக் கிரகமான சந்திரன் நவக்கிரகத்தில் ஒன்றாக இடம் பிடித்துவிட்டது. ராகு, கேது என்று சோதிடத்தில் சொல்லப்படும் கிரகங்கள் எதுவும் கிடையாது. யுரேனஸ், நெப்டியூன் போன்ற புதிய கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள னவே - மேலும் பல புதிய கிரகங்கள் இப்பொழுது கண்டுபிடிக்கப் பட்டுள்ளனவே, அவற்றிற்கெல்லாம் ஜோதிடத்தின்மூலம் பலன்களைச் சொல்ல முடியாத பரிதாப நிலையாகும்.


மக்கள் எண்ணிக்கையில் அதிகமாக மத நம்பிக்கை கொண்டுள்ளனர் என்பதற்காக மதம் உயர்ந்ததாகிவிடாது. பகுத்தறிவுவாதிகள், அறிவியல் சிந்தனையாளர்கள் எண்ணிக் கையில் குறைவாக இருப்பதாலேயே அவர்கள் தாழ்ந்தவர்கள் ஆகமாட்டார்கள்.
உண்மையைச் சொல்லவேண்டுமானால், இந்தச் சிறிய எண்ணிக்கையில் உள்ளவர்களின் தயவாலும், முயற்சியாலும் அறிவாலும்தான் அந்தப் பெரிய எண்ணிக்கை உடைய மக்கள் வாழ முடிகிறது.

------------------நன்றி: "விடுதலை" தலையங்கம் -17-7-2008

ஜோசியத்தை நம்புபவர்கள் 30 கோடி ஏன் தரவேண்டும்? --நாட்டுநடப்பு

வந்துட்டாங்கய்யா....

அணுசக்தி ஒப்பந்தம் மின் உற்பத்திக்கே மிக அவசியம் என்கிறது காங்கிரசும், அதன் கூட்டணிக் கட்சிகளும். அந்த ஒப்பந்தம் கூடவே கூடாது, மின் உற்பத்தியைவிட முக்கியம் அமெரிக்காவுடன் ஒப்பந்தம் கூடாது எனும் சித்தாந்தம் என்கிறது இடதுசாரிக் கூட்டணி.

இதில் வேதனையான வேடிக்கை என்னவென்றால், பச்சை இந்து மதப் பிற்போக்குப் பாசிச வலதுசாரிக் கும்பலான பா.ஜ. கட்சி இதில் இடதுசாரிகளுடன் சேர்ந்து கொண்டுள்ள நிலை. யார் முதலில் வலதுகாலை எடுத்து வைத்துச் சேர்ந்தார்கள் என்பதை ஆராய்வதைவிட, இருவரும் இணைந்து இந்திய அரசைக் கவிழ்க்க முனைகிறார்கள் என்பதுதான் கவலை தரக்கூடியது. இவர்களுக்குள் குறைந்தபட்சத் திட்டம் (CMP) மன்மோகன்சிங் அரசு விலகவேண்டும் என்பதுதான்.


ரூ.25 கோடி என்றும், ரூ.30 கோடி என்றும் ஊடகங்களில் விலை கூறப்படும் செய்தி வந்துகொண்டிருக்கும் நிலையில், ஜோதிடமும் தன் அசிங்க மூக்கை அரசியலில் நுழைக்கிறது.
ஜூலை 9 ஆம் தேதி பகல் 11.45 மணியிலிருந்து 12 மணிவரை குடியரசுத் தலைவரை இடதுசாரிகள் சந்தித்தார்களாம். இது ராகுகால நேரமாம். அப்படிப்பட்ட நேரத்தில் ஆதரவைத் திரும்பப் பெறுவது என்கிற முடிவை அறிவித்ததால், இடதுசாரிகளுக்குப் பின்னடைவாம். அரசுக்கு ஆதாயமாம். வேதாகோபாலன் என்கிற அம்மையார் ஜோசியம் கூறியிருக்கிறார். அன்றைய நாளில் 12 - 1.30 ராகுகாலமாம். ஒன்றிரண்டு நிமிடங்களுக்கு முன்பு இடதுசாரிகள் தம் கருத்தைக் கூறியிருப்பதால், ராகுகாலம் தொடங்கிய நேரமாம்.
இடதுசாரிகள் சந்தித்துவிட்டு வந்த பின்னர், சமாஜ்வாடிக் கட்சியினர் பார்த்தார்களாம். அது நல்ல மரண யோகமாம். அதுவும் தேய்பிறைக் காலமாம். ஆனாலும், சதுர்தசியாம். சதுர்தசி நல்ல நாளான காலமாதலால் அய்க்கிய முற்போக்குக் கூட்டணிக்கு யோகமாக அமையுமாம். நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி கிடைக்குமாம்.

வாக்கெடுப்பு நடக்கும் நாள் சதய நட்சத்திரமாம். கும்ப ராசியாம். மூன்று கிரகங்கள் வலுவான கூட்டணி அமைத்துள்ளனவாம். அரசியல் நிலையை சூரியன் தான் எடுக்குமாம்; நம் நாட்டைப் பொறுத்தவரை சனிக் கிரகத்தின் வீடுதான் முக்கியமாம். ஜூலை 22 இல் சூரியனும் சனியும் மிகவும் வலுவாக இருப்பதால், நாட்டுக்கு நல்லதே நடக்குமாம். ஆளும் கூட்டணிக்கு நல்லதே நடக்குமாம்.

ஜோசியர் சொல்லி விட்டார்; ஜோசியத்தை நம்புபவர்கள் 30 கோடி ஏன் தரவேண்டும்? பேசாமல் மூலையில் அடங்கவேண்டியதுதானே!

------------- நன்றி: "விடுதலை" 17-7-2008

9.7.08

'பரிகாரம்' செய்வதாக கூறி பெண்ணை நிர்வாண பூஜைக்கு அழைத்த ஜோதிடருக்கு அடி உதை!



பரிகாரம் செய்வதாக கூறி பெண்ணை நிர்வாண பூஜைக்கு அழைத்ததாக ஒரு ஜோதிடரை சட்டையை பிடித்து இழுத்து, நடு ரோட்டில் வைத்து தாக்கினார்கள். ஈரோட்டை அடுத்த ரங்கம்பாளையத்தில் பிரம்மரிஷி என்கிற ஜோதிட நிலையம் வைத்து இருப்பவர், கிரி எஸ். அய்யர். இவரிடம் ஜோதிடம் பார்ப்பதற்காக ஈரோடு வீரப் பன்சத்திரம் பகுதியை சேர்ந்த கணவன் மனைவி நேற்று முன்தினம் வந்தார்கள். ஓட்டல் வியாபாரத்தில் நொடிந்து போய் இருப்பதாகவும், அதற்கு பரிகாரம் தேட ஆலோசனை கூறும்படியும் ஜோதிடரிடம் கேட்டனர். அவர்களிடம் பேசிய ஜோதிடர் பூஜைக்காக எலுமிச்சை பழம் வேண்டும் என்று கூறினார். உடனே எலு மிச்சை பழம் வாங்குவதற்காக அந்தப் பெண்ணின் கணவர் வெளியே சென்றார். அதன் பிறகு அவர் அந்தப் பெண் ணுடன் தனியாக பேசிக் கொண்டு இருந்தார். கணவர் வந்ததும் சிறு பூஜை செய்து விட்டு, மீண்டும் நாளை வரு மாறு கேட்டுக்கொண்டார்.

நிர்வாண பூஜை

அவர்கள் வெளியே வந்ததும், அந்தப் பெண் அழத் தொடங்கினார். அவருடைய கணவர் என்ன நடந்தது என்று விசாரித்தபோது, ஜோதிடர் தன்னிடம் ஆபாசமாக பேசியதாகவும், தொழில் பெருகி, செல்வம் அதிகரிக்க ஒருநாள் முழுவதும் நிர்வாணமாக இருந்து பூஜை செய்ய வேண் டும் என்று கூறியதாகவும் அழுது கொண்டே கணவரி டம் தெரிவித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர், நேரடியாக கேட்டால் ஜோதி டர் சரியான பதில் கூறமாட் டார். அவரது வழியிலேயே சென்று பிடிக்க திட்டமிட் டார். அவர் பூஜை செய்ய அழைத்தபடி நேற்று தனது மனைவி மற்றும் உறவினர்களு டன் ஜோதிட நிலையத்துக்கு வந்தார். முதலில் கணவன் மனைவி மட்டும் அங்கு சென்றார்கள். அவர்கள் வந்ததும், ஜோதிடர் கிரி, பூஜைக்கு பூ வாங்கி வரும்படி கூறினார். மனைவியை அங்கு விட்டு விட்டு, கணவர் மட்டும் புறப்பட்டு சென்றார். உடனடியாக கதவை தாழிட்ட ஜோதிடர், அந்தப் பெண்ணிடம் நிர் வாணமாக இருக்கும்படி கூறியதாக தெரிகிறது.

நடுரோட்டில் அடி உதை

அதைக்கேட்டு ஆத்திரம் அடைந்த அந்தப் பெண் அருகில் கிடந்த நாற்காலியை எடுத்து ஜோதிடரை தாக்கினார். சத்தம் கேட்டு அங்கு நின்று கொண்டு இருந்த உறவினர்களும் ஓடி வந்து ஜோதிடரை அடித்து உதைத்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அந்தப் பகுதியில் ஏராளமானவர்கள் கூடினார்கள். அவர்களுடன் வந்த உறவுப் பெண் அந்த ஜோதிடரை நடுரோட்டில் சட்டையை பிடித்து இழுத்து தாக்கியதால், வேடிக்கை பார்க்க கூட்டம் திரண்டு விட்டது.

இது பற்றி தகவல் அறிந்த தாலுகா காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஜோதிடரை மீட்டு காவல் நிலையம் அழைத்து சென்றார்கள். அங்கு காவல் நிலைய ஆய்வாளர் சுப்பிரமணியம் விசாரணை நடத்தி வருகிறார்.

ஜோதிடர் கிரி எஸ்.அய்யர் கேரள மாநிலம் கொல்லம் பகுதியை சேர்ந்தவர். கடந்த 10 ஆண்டுகளாக ஈரோடு ஜீவா நகரில் வசித்து வருகிறார். இவருக்கு மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளார்கள்.

இச்சம்பவம்பற்றி தாலுகா காவல்துறையினர் தீவிரமாக விசாரணை செய்து வருகிறார்கள்.

19.6.08

உள்ளங்கையில் உண்டாயிருக்கும் கோடுகள் (ரேகை) தோன்றியது எப்படி?

குறி பார்த்தல் (3)

இன்றைக்கு வாலுடைய குரங்குகளும், வாலில்லாக் காட்டு மனிதக் குரங்குகளும் அம்மாதிரியாகவே தாவிச் செல்கின்றன. அப்படித் தாவிச் செல்வதால் கைகளும் மடிக்க வேண்டி வருகின்றன. கைகள் மடியுண்ட இடங்களில் வரி வரியாகக் கோடுகள் உண்டாயின. அப்படி உண்டான கோடுகள்தான் அந்தச் சந்ததி மூலமாக நமக்கும் வந்திருக்கின்றன. இதுதான் நமது உள்ளங்கையில் உண்டாயிருக்கும் கோடுகளின் உற்பவம். மரத்தைத் தாண்டி மடிந்த இடங்களைக் கொண்டு நமது நடத்தைகளை எப்படி அறியக் கூடும் எனக் கேட்கின்றோம்? இரண்டு வரி அய்ந்தாம் விரலுக்குக் கீழ் இருந்தால் அவனுக்கு இரண்டு பெண்சாதியாம்! ஆனால் ஒரு வரியுடய பலருக்கு பல பெண்சாதிகள் இருப்பதை காணலாம். ஆதலின் இந்த வரிகளைக் கொண்டு நமது நடவடிக்கைகளைக் குறிப்பது ஆங்கிலத்தில் pureguess என்று சொல்லலாம். அதாவது வெறும் உத்தேசம்! இந்த வெறும் உத்தேசத்தை உண்மையென நினைத்துக் கொண்டு மோசம் போகின்றவர்கள் அநேகர் உளர்.


இந்த ஆதாரத்திற்கு இன்னொரு நியாமும் உண்டு. விரல்கள் மடியும் இடங்களில் கோடுகளைப் பார்க்கலாம். இந்தக் கோடுகள் விரல்கள் மடியுண்டபடியால் விரல் மடிப்புகளிலெல்லாம் விரல் வரிகள் தோன்றியுள்ளன. இந்தப் பிரத்தியட்ச காட்சி போலவே மற்ற கைவரிகளும் தோன்றியுள்ளன. ஆனால் விரல் மடிப்புகள் பிரயோஜன மில்லையெனில் மற்ற கை மடிப்புகள் மாத்திரம் பிரக்யாதி பெற்றது எவ்விதம்? எவனோ ஒருவன் ஒரு காலத்தில் கைக் கோடுகளைப் பார்த்து குறிசொல்லி இருப்பான். அது முதலில் வெறும் உத்தேசமாகவே சொல்லி இருப்பான். இதை உண்மையென நம்பி, பழக்க வாசனையால் கையைப் பார்த்துக் குறி சொல்லும் பழக்கம் வந்திருக்க வேண்டும். இவ்விதமாகத்தான் நமது கையைப் பார்த்து குறி சொல்லும் பழக்கம் உண்டாகி இருத்தல் வேண்டும். எந்த மூடனும் இந்த பழக்கத்தைக் கையாளலாம். ஆனால் இந்த மூடநம்பிக்கையில் விஸ்வாசமுள்ளவர்களைப் பற்றித் தான் நாம் வருந்துகின்றோம்.


விளக்கு வைத்துப் பார்த்தல் என்னும் ஒரு மூடப் பழக்கம் பாமர மக்கள் வீடுகளில் வழங்கி வருகின்றது. ஒரு பூசாரி தன்முன் விளக்கை ஏற்றி, அந்த எரியும் சுடரை அந்த அம்மன், இந்த அம்மன் என்று வர்ணித்து, இதைச் சொல்லம்மாவென எரியும் சுடருடன் பேசுவதைப்போல் நடித்து, சுடர் அசையாமலிருந்தால் அம்மா உத்தரவு அளிக்கவில்லை என்றும், அசைந்தால் அம்மா உத்தரவு கொடுத்தாள் எனவும் அர்த்தப்படுத்திக் கொண்டு மக்களை ஏமாற்றும் விதம் ஒன்றுண்டு. இதுவும் ஒரு ஜீவன உபாயமென அறிக. கிராமாந்திரங்களில் ஏழைகள் நோய் வாய்ப்பட்டால் இம்மாதிரியான மூடப் பழக்கங்களைக் கொண்டு நிவர்த்திக்கப் பார்க்கின்றார்கள். இதனுடைய ஆபாசத்தை சற்று விளக்கிப் பார்க்கவேண்டும்.


கோடானுகோடி கோடி தீபங்கள் தெரிகின்றன. அசையாத தீபங்களையும் தற்காலத்தில் பார்க்கின்றோம். அதாவது, மின்சார தீபங்கள். இந்தத் தீபச் சுடர்கள் காற்றிலும் அசைவதில்லை. காற்றில்லாமல் போமாகில் அசைவற்று எரியும். காற்று வீசியதும் தீபச் சுடர்கள் அதைப் பார்க்கலாம். இந்தச் சுடர்கள் அசேதனங்கள்; அதாவது உயிரற்றவை. நமது சொல்லையும் கேட்க முடியாதவை. காலில் மிதிபடும் கல்லுக்கும் விளக்கில் எரியும் தீபச் சுடர்களுக்கும், மேற் கண்ட விஷயங்களில் வித்தியாசமில்லை. அப்படியிருக்க, எவ்விதம் சுடர்களுடன் பேசக் கூடுமோ அது நமக்கு விளங்க வில்லை. பைத்தியம் பிடித்தவர்கள்தான் சுடருடனும், சுவருடனும், செடி , மரங்களுடனும் பேசுவார்கள். இந்த விஷயத்தை யோசியாமல் விளக்கு வைத்துப் பார்த்து அத்துடன் பேசுவதென்றால் என்ன மூடத்தன மென்று எண்ணவேண்டும்? பூசாரிதான் அவன் ஜீவனத்திற்கு மோசம் செய்கின்றான். பகுத்தறிவுடைய ஏழை மக்கள் அவன் பித்தலாட்டத்திற்கு ஏமாந்து, அவன் பிதற்றுவதைக் கேட்டு, அவனை நம்புவதென்றால், என்ன மதி மோசம்! விளக்கில் அம்மனோ, சாத்தானோ, சனியனோ, புகுந்து கொண்டு பூசாரி கேட்பதற் கெல்லாம் விடை கொடுப்பதாகச் சொன்னாலும், முன் நம்பிக்கையைவிட இது நம்பத்தகாதது; அதனினும் ஆபாசமே ஆகும்.


தீபச் சுடர்களைக் காற்றில்லாத அறைகளில் எரிய வைத்து, திருஷ்டாந்தமாக இதனை யாரும் பரீட்சித்து பார்க்கலாம். காற்றில்லாத கூடத்து அறையில் விளக்கை ஏற்றி அதன் அருகே உட் கார்ந்து கொண்டு, காற்றை மெதுவாக வாயின் மூலமாக இழுத்தால் சுடர் அசைவற்று நிற்கும். அது நமது, இஷ்டப்படி அசையவேண்டுமானால், கையை ஆட்டினாலும், நமது தேகத்தை ஆட்டினாலும், அல்லது மெதுவாக ஊதினாலும் தீபச்சுடர் அசையும் இவ்வித இவ்விதச் சலனமற்ற நிலையையும், அசையும் நிலைமையையும் யாரும் செய்து காட்டலாம். ஆனால், இவ்விதமாகச் சுடர்களை அசையச் செய்வதையும், அசையாமல் இருக்கச் செய்வதையும், யாரும் தகுந்த இடங்களில் செய்து காட்டலாம். இவ்விதமாக யாவரும் செய்துகாட்ட முடியும்போது, எந்த அம் மனும், மாரியாத்தாளும், மதுரை வீரனும் தீபச் சுடரில் புகுந்து கொண்டதாக எண் ணுவதில்லையே. ஆனால், பூசாரி அதே மாதிரி அசைய வைத்தால், அந்த அசைவு தெய்வங்களால் உண்டானதாக எண்ணுவது பைத்தியக்காரத் தனமல்லாது வேறென்ன?
காற்றில்லாமலிருந்தால் சுடர் அசைவற்று எரிகிறது. காற்றுப்பட்டால் அசைகிறது. ஆதலின் அசைவுக்கும் அசையா தன்மைக்கும் காற்றே காரணம். இதற்கு எந்த அம்மன் தயவும் வேண்டுவதில்லையே! இந்தப் பித்தலாட்டங்களைச் செய்யும் பூசாரிகளையும், அவர்கள் சொல்வதைக் கேட்கும் பாமர மக்களையும் ஒன்று கேட்கின்றோம். அதாவது காற்றடிக்கும் அறைகளில் அதாவது ஜன்னல்களுக்கு எதிரிலாகிலும், வாசல்களிலும், தெருக்களிலாகிலும், தீபத் தைக் குத்து விளக்கில் ஏற்றி அதன் சுடரை அசைவற்று நிற்கும்படிச் செய்யுங்கள் பார்ப்போம்? என்னதான் நீங்கள் உரத்து அம்மனை வர்ணித்தாலும், அந்த அம்மன் சுடரில் நுழையவே மாட்டாள்! இந்தத் தந்திரத்தை அறிந்த பூசாரி, கூடத்து மூலையிலும் காற்றில்லா அறையிலுமே சுடரை எரியப் பார்ப்பான்; இதுதான் பூசாரிகள் செய்து வரும் தந்திரம்.



----------ம.சிங்காரவேலர் அவர்கள் எழுதிய கட்டுரை

12.6.08

குறி பார்த்தல் (2)

பதர் நெற்களை கதிர் விடச் செய்யலாமே! சில சமயங்களில் குறி கேட்கப் போனவர் களுடைய கோரிக்கைகளைக் குறி சொல்லுகின்றவன் அவர் கள் அவனிடம் சொல்லாமலே அவன் தெரிந்துகொண்டவன் போல் தெரிவிக்கிறான். இதை மாயாவாதத்தில் எண்ணத்தைத் தெரியப்படுத்தாமலே தெரிந்துகொள்வததென்று கூறுவர். இதனை மறைவான ஞானமெனவும் கூறுவர். இந்தக் குறி வித்தையில் சில மோசங்கள் நடக்கின்றன. சில இடங்களில் ரகசிய ஆள்களைக் கொண்டு விசாரித்துத் தெரிந்து கொண்ட பிறகு குறி சொல்லு கிறார்கள்.

சாதாரணமாகக் குடுகுடுப்பைக்காரர்கள் இந்த மோசத்தைச் செய்கிறார்கள். சிலர் தங்களுடைய குறைகளை உதடு அசைவதாலும், கை விரல்கள் ஆடுவதாலும், மெதுவாகத் தங்களுக்குள்ளே பேசிக் கொள்வதாலும், தங்கள் முகப்பார்வையாலும் தெரியும்படி செய்கின்றார்கள். கூர் மையான பார்வையுடையோ னாகிய குறி சொல்வோன், இந்தக் கைகளைக் கொண்டே அவர்களுடைய எண்ணங் களைத் தெரிந்து கொள்கின் றான். குறி சொல்லுகின்றவன் கேட்கும் கேள்விகளுக்குக் கொடுக்கும் விடைகளாலே யும், தங்களுக்குத் தெரியாமலே தங்கள் கோரிக்கைகளை வெளியிட்டு விடுகின்றார்கள்.

இத்தியாதி தந்திரங்களால் குறி சொல்லுகின்றவன் தன் னைப் பிறர் நம்பும்படி செய் கின்றான். இந்தச் சூழ்ச்சிகளை அறியாத பாமர மக்கள் குறி காரன் சொல்வதெல்லாம் மது ரைவீரன் அருளாலென்றும், தெய்வீகத் தன்மையாலென் றும், மதி மயங்கி மூடநம்பிக் கையை வளர்த்து வருகின் றார்கள். இந்தக் குறி மேடை களில் எத்தனைபேர் தங்கள் பொருளை இழந்தவர்கள், மதியை இழந்தவர்கள், மானத்தை இழந்தவர்கள். இவைகளுக்குக் கணக்கில்லை! ஆனால் நமக் கும், நமது நாட்டுக்கும் நன்மை பயக்க நமது சுயமரியாதை யோர் அதிர்ஷ்ட வசமாகத் தோன்றி இத்தியாதி மோசங் கள் வெளிப்படுத்திவரும் நமது நாட்டின் பாக்கியமே பாக்கியம்.

அதாவது கை பார்த்துக் குறி சொல்லும் வித்தையொன்றுள்ளது. கை ரேகைகளைப் பார்த்துக் குற வர்கள் சாதாரணமாகக் கிராமங்களில் குறி சொல்வதுண்டு, குடுகுடுப்பைக்காரனும் இவ் விதக் குறிகளைச் சொல் கின்றான். பண்டார வேஷம் போட்டுக் கொண்டு, ஓலைச் சுவடியொன்றை கையிலேந்தி, கையைப் பார்த்துக் குறி சொல்லும் வேஷக்காரர்களைச் சென்னைத் தெருக்களிலும், நாட்டுப்புறங்களிலும் பார்க்க லாம். நமது சென்னை மூர் மார்க்கெட்டுக்கு அருகில் அநேகர் ஆரூடம் அதாவது ஒருவிதக் குறி சொல்லிப் பிழைக்கின்றார்கள். கையைப் பார்கின்றான், ஓலைச் சுவ டியோ, அல்லது காகிதச் சுவ டியையோ திருப்புகின்றான். உடனே உனது காரியம் கை கூடுமென்கின்றான். உனது மகன் திரும்பி வருவான் என்கின் றான். உனது புருஷனுக்கு வேலை கிடைக்குமென்கின்றான்.

இத்தியாதி அற்ப விஷயங் களைத்தான் தெரிந்து சொல் வதுபோல நடித்து இந்தக் குறி சொன்னதற்கு கால் அணா அதாவது மூன்று பைசா பெறு கிறான். இந்த ஏழை சொல்லும் குறிக்கும், இந்து முதலிய பேப்பர்களில் விளம்பரப்படுத்தும் பிரசண்ட சோதிடருக்கும் ஒன்றும் வித்தியாசமில்லையென அறிக; ஒரே வித்தியாசமுண்டு. அதா வது, ஒருவன் காலணாவுக்குக் குறியோ, சோதிடமோ, ஆரூடமோ சொல்கின்றான். மற்றொருவன் ஒரு ரூபாய் முதல் 5, 10, 15 வரை பெறுகின் றான் இரண்டு நபரும் சொல் லும் சோதிடங்களில் ஒன்று மெய்யில்லை. எல்லாம் மன மயக்கே பொய்யை நம்புவதற்கு வெறும் நம்பிக்கை தான் வேண்டும். லண்டன் பட்டணத்தில் சில பெரிய தெருக்களில் கொட்டை கொட்டையான எழுத்துகளால் இங்கு கைபார்த் துக் குறி சொல்லப்படும். இங்கு எல்லாக் குறைகளும் நிவர்த் திக்கப்படும் மென்று விளம் பரமிடும் விளம்பரப் பலகை களைப் பார்க்கலாம். அங்கும், இங்கும் எங்கும் பாமர ஜனங் கள் தங்கள் சஞ்சலங்களை சிரமமான வழிகளில் போக்கிக் கொள்ளாமல் மூட சோதி டனிடம் குறிகேட்டு மயங்கு கின்றார்கள். அறிவை இழந்தவர்கள்தான் இத்தியாதி பித்தலாட்டங்களுக்கு இடம் கொடுப்பார்களே யொழிய அறிவுடையோர் இந்த மூட நம்பிக்கைகளுக்கு இடம் கொடார்கள். உலகில் கோடானு கோடி மக்கள் காலை முதல் இரவு வரை உழைத்து தங்கள் ஜீவனத்தைச் செய்து உயிர் பிழைத்து வருகின்றார்கள். ஆனால், சிலர் வேலையொன் றும் செய்யாமல் சோம்பல் கொண்டு அறிவையும் வளரச் செய்யாமல், பகுத்தறிவையும் கொன்று சிற்சில மோச வார்த்தைகளைக் கேட்டு ஒருவித ஆறுதலை அடைகின் றார்கள். சோதிடம், ஆரூடம், குறி முதலிய வித்தைகள் ஒரு வகுப்பார் பிழைக்க ஏற்படுத் திக் கொண்ட உபாயங்களென அறிக.

விஞ்ஞான முறையால் இனிவரும் சம்பவங்களை அறி வது போல் இந்தக் குறிகளா லும், சோதிடத்தாலும் கைகுறி களாலும், ஒன்றும் தெரிந்து கொள்ள வகை இல்லை. எங்கும் தெரிந்துகொண்டவரு மில்லை. சோம்பேறிகள் மனத் திருப்திக்காக உண்டாக்கிக் கொண்டது இந்த வித்தை களேயொழிய பொதுமக்களுக் குப் பொதுப் பிரயோசனத் துக்கு ஏற்பட்ட வித்தைகள் அல்லவென அறிதல் வேண்டும்.

கையிலுள்ள கோடுகளைப் பார்த்து ஜோஸ்யம் சொல்வது உலகம் முழுமையும் பரவி யுள்ள ஓர் வித்தையாகும். அது வெறும் பழக்கமே அல்லாது உண்மையல்ல. நமது கையி லுள்ள கோடுகளைப் போல் நமக்கு ஒரு காலத்து பூர்வப் பங்காளிகளாகிய வாலில்லாக் குரங்குகளுக்கும் உண்டு. இன் னும் தூரப் பங்காளிகளாகிய வாலுடைய குரங்குகளுக்கும், கையில் கோடுகள் இருக் கின்றன. ஆனால், காட்சி சாலைகளில் வசிக்கும் காட்டு மனிதக் குரங்குகளின் கைகளைப் பார்த்து சோதிடம் சொல்வார் யாருமில்லை! நமது கைகளில் இருக்கும் கோடுகள் பூர்வ காலத்தில் நமது குரங்கு மூதாதையர்கள் மரத்தில் தாவிப் பிடித்துத் தாண்டும் காலை யிலுண்டான தோல் மடிப்புகள், அந்த வம்சத்திலிருந்து வந்தவர்களாகிய நமக்கும் அந்த மடிப்புகள் பரம்பரை யாக தோன்றுகின்றன. நமது கைகோடுகள் காட்டுக் குரங்கு களின் வம்ச பரம்பரையாக வந்தவை. பல கோடி வருஷங் களாக நமது மூதாதைகள் மரங்களில் வாழுங்காலை தாவுவதற்குத் தங்கள் கைகளை உபயோகித்து வந்து இருக்க வேண்டும்.

----------- ம. சிங்காரவேலர் அவர்கள் எழுதியது

7.6.08

சோதிட மூடத்தனம் சூரியனை நிலவு முந்தி விடுமா?

வானவெளியை 12 பகுதிகளாகப் பிரித்து ஒவ்வொரு பகுதிக்கும் மேஷம், ரிஷபம், மிதுனம் என்று 12 பெயர்களை சூட்டி இருக்கிறார்கள். சூரியன் ஒவ்வொரு ராசியிலும் ஒரு மாதம் சஞ்சரிக்கிறது. ஒரு ஆண்டில் 12 ராசிகளைக் கடந்து வருகிறது. சந்திரன் ஒரு ராசியை இரண்டரை நாள்களில் கடந்து விடுகிறது. சோதிடத்தில் இந்த ராசியும், பிறந்த லக்கனமும், கிரகங்களும் நட்சத்திரங்களும் முக்கிய பங்கு வகிக்கிறது. இவைகள்தான் சோதிடத்திற்கு அடிப்படை என்று சோதிட நூலில் சொல்லப்பட்டிருக்கிறது. இதில் நமக்கு மிகப் பெரிய சந்தேகம்! சூரியன் வினாடிக்கு 230 கி.மீ. வேகத்தில் விண்வெளியில் ஒரு ராசி வட்டத்தைக் கடக்க ஒரு மாதம் ஆகிறது. பூமியோடு செல்லும் நிலவு வினாடிக்கு 30 கி.மீ. வேகத்தில் சென்று ஒரு ராசி வட்டத்தில் இரண்டரை நாள் சஞ்சரித்து விட்டு அடுத்த ராசிக்குக் கடந்து செல்வதாக சோதிட நூல் கூறுவது 230 கி.மீ., வேகத்தில் செல்லும் சூரியனை 30 கி.மீ. வேகத்தில் செல்லும் நிலவு முந்தி விடுமாம்!

வேகமாக ஓடும் முயலை ஆமை முந்தி விட்டது என்று சொல்வதுபோல் இருக்கிறது. இப்படிக் கூறும் சோதிடத்தை நம்ப முடியுமா? ஏற்றுக் கொள்ளக் கூடியதா!

வானவெளி வட்டத்தை 27 பகுதிகளாகப் பிரித்து, அதில் ஒளியோடு புலப்படும் ஒரு நட்சத்திரத்திற்குப் பெயரைச் சூட்டினார்கள் இந்த நட்சத்திரங்கள் ராசி வட்டத்தைக் கடந்து செல்லும் பாதையை கணக்கிலெடுத்து இருபத்தேழு நட்சத்திரங் களின் ஆதிக்கத்தில்தான் மனிதர்கள் பிறக்கிறார்கள் என்று சோதிடம் கூறுகிறது.

ஒரு குழந்தை பிறந்த நேரத்தில் பூமி இருக்கும் ராசிக் கூட்டத்தில் கண்ணுக்குத் தெளிவாகப் புலப்படும் நட்சத்திரமே அவர் பிறந்த நட்சத்திரமாகக் கொள்ளப்படுகிறது. அந்த நட்சத்திரத்தில் பிறந்த குழந்தை இன்னின்ன குணாதிசயங்களைப் பெற்றிருப்பார்கள். அவர்கள் வாழ்க்கை எப்படிப்பட்டதாக யிருக்கும் என்று சோதிடத்தில் கணித்துக் கூற முடியும் என்று சோதிடர்கள் கூறுகிறார்கள்.

கிருத்திகை நட்சத்திரம்

ஒரு குழந்தை ரிஷப ராசியில் கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தது என்றால் அந்த நட்சத்திரத்திற்கும் அக்குழந்தைக்கும் உள்ள தொடர்பு என்ன என்பதை ஆராய்வோம்!
அக்குழந்தை பிறந்த நேரத்தில் கிருத்திகை நட்சத்திரம் பூமியிலிருந்து 410 ஒளியாண்டுத் தொலைவில் இருக்கும். அந்த நட்சத்திரத்தின் ஒளியாற்றல் வினாடிக்கு 3 இலட்சம் கி.மீ. வேகத்தில் பூமிக்கு வந்த சேர 410 ஆண்டுகள் ஆகும்! அக்குழந்தை 100 ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்தால்கூட அந்த நட்சத்திரத்தின் ஒளியாற்றல் பூமிக்கு வந்து சேர வாய்ப்பில்லை! குழந்தை பிறந்தபோது பூமியில் கிருத்திகை நட்சத்திரத்தின் ஒளியாற்றல் இருந்ததென்றால் அக்குழந்தை அணுவாகவோ கருவாகவோ உண்டாகாத காலத்திற்கு 410 ஆண்டுகளுக்கு முற்பட்டது! அந்த ஒளியாற்றலை அக்குழந்தைக்குரியதாக ஏற்றுக் கொள்ள முடியுமா? அந்த ஒளியாற்றலை வைத்து சோதிடம் கணிக்கப் படுவதாகக் கூறுவது எப்படிச் சரியாகும்! எப்படிப் பொருந்தும்.

கிருத்திகை 500 நட்சத்திரங்களைக் கொண்டது

கிருத்திகை நட்சத்திரம் பல நட்சத்திரங்களைக் கொண்ட கூட்டமாகும்! வானியல் மேதை கலிலியோ தொலை நோக்கி மூலமாக 36 நட்சத்திரங்களைக் கண்டார். 500-க்கு மேற்பட்ட நட்சத்திரக் கூட்டம் அது! அதன் வயது 25 இலட்சம் ஆண்டுகள். கிருத்திகை நட்சத்திரக் கூட்டத்திலுள்ள அல்சியோன் நட்சத்திரம் சூரியனைவிட 1000 மடங்கு ஒளியுடையது. அதன் குறுக்களவு 90 இலட்சம் கிலோ மீட்டர்! கிருத்திகையில் எந்த நட்சத்திரத்திதை வைத்து சோதிடம் கணிக்கப்படுகிறது. கிருத்திகையிலுள்ள மற்ற நட்சத்திரத்தின் ஆற்றல் பயனற்றதா அல்லது பயன்படாததா? சோதிடர்கள் இதற்குப் பதில் கூற முடியாது. இது அறிவியல் ஆதாரத்தோடு கூடியது! சோதிடர்களுக்கு இவை எதுவுமே தெரியாது. எனவே சோதிடர்கள் கூறுவது ஏற்றுக் கொள்ள முடியாதது மட்டுமல்ல! அறிவுக்கும் பொருந்தாதது! இது போன்றுதான் மற்ற ராசியிலுள்ள நட்சத்திரங்களின் தூரம் உள்ளது. அந்த நட்சத்திரங்களின் ஒளியாற்றலும் பூமிக்கு வந்து சேர நூற்றுக்கணக்கான ஆண்டுகள் ஆகிறது. எனவே குழந்தை பிறந்த நேரத்திற்கும் நட்சத்திரத்திற்கும் எந்த சம்பந்தமும் இருக்க முடியாது! எனவே சோதிடம் சொல்வது அறிவியல் அடிப்படையில் அமைந்தது அல்ல! நம்பத் தகுந்ததும் அல்ல!

நட்சத்திரங்களின் தூரம்

(ஒளி வினாடிக்கு 3 லட்சம் கி.மீ. வேகத்தில் ஓராண்டிற்குச் செல்லும் தூரம் ஒளியாண்டு ஆகும்)
ரிஷபராசியில் - கிருத்திகை நட்சத்திரம் 410 ஒளியாண்டுத் தொலைவு
ரிஷப ராசியில் - ரோகிணி நட்சத்திரம் 130 ஒளியாண்டுத் தொலைவு
மிதுன ராசியில் - புனர்பூச நட்சத்திரம் 36 ஒளியாண்டுத் தொலைவு
மிதுன ராசியில் - காஸ்டர் நட்சத்திரம் 46 ஒளியாண்டுத் தொலைவு
கடக ராசியில் - ஈட்டாகரினா 6000 ஒளியாண்டுத் தொலைவு
சிம்ம ராசியில் - மகம் நட்சத்திரம் 84 ஒளியாண்டுத் தொலைவு
கன்னி ராசியில் - சித்திரை நட்சத்திரம் 211 ஒளியாண்டுத் தொலைவு
கன்னி ராசியில் - சுவாதி நட்சத்திரம் 36 ஒளியாண்டுத் தொலைவு
விருச்சிகராசியில் - கேட்டை நட்சத்திரம் 300 ஒளியாண்டுத் தொலைவு
மகர ராசியில் - அசுவினி நட்சத்திரம் 84 ஒளியாண்டுத் தொலைவு
மிதுன ராசியில் - திருவாதிரை நட்சத்திரம் 1140 ஒளியாண்டுத் தொலைவு

சூரியன் ஒரு சிறிய நட்சத்திரம்!

சூரியன் ஒரு சிறிய நட்சத்திரம். பூமியிலிருந்து 14 கோடியே 94 இலட்சம் கி.மீ. தூரத்தில் உள்ளது! சூரிய ஒளி பூமிக்கு வர ஏழரை நிமிடம் ஆகும். சூரியனின் குறுக்களவு 13 இலட்சத்து 92 ஆயிரம் கி.மீ., சூரியனின் மையப்பகுதியில் வெப்பம் 1 கோடியே 50 லட்சம் சென்டி கிரேடு! விளிம்பில் 6000 டிகிரி சென்டிகிரேட்! சூரியன் அண்டத்தை மணிக்கு 8 இலட்சத்து 64 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் சுற்றி வருகிறது. இதே வேகத்தில் அண்டத்தை ஒரு சுற்று சுற்றி வர 25 கோடி ஆண்டுகள் ஆகிறது!

சூரியனுடன் சேர்ந்து பூமியும் மற்றக் கோள்களும் நாள் 1-க்கு 2 கோடியே 7 இலட்சத்து 36 ஆயிரம் கி.மீ., தூரம் அண்டத்தை சுற்றி வருகின்றன. சூரியன் அண்டத்தின் மையப் பகுதியிலிருந்து 30 ஆயிரம் ஒளியாண்டுத் தொலைவில் ஒரு ஓரத்தில் உள்ளது. சூரியனோடு சேர்ந்து நாமும் அண்டத்தைச் சுற்றுகிறோம்!

நட்சத்திரங்களின் ஆற்றல்!

ரோகிணி நட்சத்திரம் 5 கோடியே 10 இலட்சம் கிலோ மீட்டர் குறுக்களவு கொண்டது. ரோகிணியைச் சுற்றி 200-க்கும் மேற் பட்ட நட்சத்திரக் கூட்டம் உள்ளது! அந்த நட்சத்திரக் கூட்டத் தின் குறுக்களவு 33 ஒளியாண்டு! வயது 100 கோடி ஆண்டு!

ஈட்டாகரினா என்ற நட்சத்திரம் சூரியனைவிட 60 இலட்சம் மடங்கு பிரகாசமுடையது. ஒளி குன்றி வருவதால் செம்பூதமாக மாறி பெரு வெடிப்புக்கு உள்ளாகலாம் என்று ஆய்வுகள் கூறுகின்றன.
மகம் நட்சத்திரம் சூரியனைவிட 140 மடங்கு ஒளியுடையது. 14 ஆயிரம் டிகிரி வெப்பமுடையது.
சுவாதி நட்சத்திரம் சூரியனைவிட 115 மடங்கு அதிக ஒளியுடையது. 5000 டிகிரி வெப்பமுடையது.
கேட்டை நட்சத்திரம் சூரியனைவிட 285 மடங்கு குறுக்களவு கொண்டது. 30 மடங்கு சூரியனைவிட அதிக எடை 7500 மடங்கு அதிக ஒளி!

திருவாதிரை நட்சத்திரம் சூரியனைவிட 450 மடங்கு விட்டம் கொண்டது.
நமது அண்டத்தில் கோடிக்கணக்கான நட்சத்திரங்கள் உண்டு! அவற்றில் மனித வாழ்க்கையோடு தொடர்புபடுத்திய சில நட்சத்திரங்களை மட்டுமே இங்கு குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இந்த அறிவியல் முடிவுகளை ஆராய்ச்சியாளர்கள் எவ்வளவோ காலம் ஆராய்ந்து வெளியிட்டிருக்கிறார்கள். ஆராய்ச்சியாளர் களின் இந்த முடிவுகளை சோதிடம் ஏற்றுக் கொள்ளவில்லை.


- ------- ("சோதிட மறுப்பும் - வானவியல் சிறப்பும் நூலிலிருந்து...")

5.6.08

குறி பார்த்தல்

மூடநம்பிக்கைகளில் சிலவற்றை, விஞ்ஞான முறைப்படி விசாரித்து வந்ததில் அவை இரண்டு காரணங்களால் உண் டாகியிருக்க வேண்டுமென அறிந்தோம். அவையாவன:

வெறும் பழக்க வார்த்தைகளைக் கொண்டே பல மூடநம்பிக்கைகள் நிலைத்து வருகின்றன. இரண்டாவது, ஏகதேச சந்தர்ப்பங்களிலிருந்து மூடநம்பிக்கைகள் பிறந்திருக்க வேண்டுமெனவும் தெரிந்து கொண்டோம். சில மூடநம் பிக்கைகளுக்கு நமது ஆசையே காரணமாய் இருக்கலாம் எனவும் தெரிந்தது. இந்தக் காரணமொன்றே பல பொய் நம்பிக்கைகளின் மேல் வைத் துள்ள விஸ்வாசத்திற்கு ஆதார மென அறிதல் வேண்டும். நமது ஆசையின்படியே விஷயங்கள் நமக்கு அனுகூலமாகவே வேண்டுமென்ற மனப்பான்மை பெரும்பாலாருக்குண்டு.

இந்த மனப்பான்மை யாலேயே ஜோசியத்தின் மேலும், ஜாதகத்திலேயும், குறி சொல்லும் விஷயங்களிலேயும், கைப்பார்ப்பதிலேயும், மை போட்டுப் பார்ப்பதிலேயும் நம்மவர்களில் பலருக்கு நம் பிக்கை ஏற்படுகின்றது. கஷ்டப் படாமலே நமக்குச் செல்வம் வராதா? நாம் முயற்சி செய்யாமலே நம்மை விட்டுப் பிரிந்தவர்கள் திரும்பிவர மாட்டார்களா? உழைப்பின்றிச் சம்பத்தும், செல்வமும், கீர்த்தியும் வராதா? என்ற நோக்கங்கள் நமது மனத்தில் அடுத் தடுத்து எழுவதால் ஆரூடம் என்ன தெரிவிக்கின்றது. குறி சொல்லுகிறவன் நமக்கு என்ன ஆதாரமளிக்கின்றான்? கைரேகை என்ன குறிக்கின்றது? என்று அவாக் கொண்டு இந்த மோச வார்த்தைகளின்மேல் நம்பிக்கை வைக்கின்றோம்.

குறி சொல்லும் விஷயங்களில் நமது பாமர ஜனங்களுக்கு மிகுந்த நம்பிக்கை யுண்டு. நமக்குப் பல குறைகள் நேரிடுகின்றன. இந்தக் குறை களை நீக்கிக் கொள்ள ஆசை மேன்மேலும் உண்டாவது சகஜம். இந்த ஆசையால் குறி சொல்லுகிறவன் சொல்லை நம்ப நேரிடுகின்றது. அவன் சொல்லுவது மெய்யோ, பொய்யோ, நம்முடைய கோரிக் கையின்படி நிறைவேறும் என்று அவன் சொல்லுகின்ற படியால், அவன் சொல்லின் மேல் நம்பிக்கை ஏற்படுகிறது. குறி சொல்வார் யார் என்று பார்ப்போம்.

குறி மேடையில் குறி சொல்லுகின்றவர்களில் பலர் நரம்பு வியாதியால் பாதிக்கப் பட்டுள்ளனர். அவர்கள் எளிதில் கோபம், சந்தோஷம் அடைவார்கள். இவர்களு டைய ஆடம்பரங்கள் பாமர ஜனங்களின் மனத்தை உருகச் செய்து விடுகின்றன. உடுக்கை, சிலம்பு முதலிய வாத்தியங்கள் குறிகேட்க வந்திருப்போரை ஓர்வித மயக்க முண்டாக்கக் கூடியதாக இருக்கின்றன. குறி சொல்லும் இடங்களில் மதுரை வீரன் படமும், அதில் குதிரைச் சவாரி நாய்களுடன் செல்வதாக வரையப்பட்டுத் தொங்கவிட்டிருக்கும். குறி சொல்பவனும், பகல் வேஷத் திற்குரிய திருநீறு, குங்குமம் திரேக முழுமையும் பூசி கொண்டு, கழுத்தில் பொன், உத்திராக்கம், கைகளில் பொன் தோடா, பட்டாடை முதலிய வஸ்திரங்களை அணித்து, உடுக்கைச் சிலம்புடன் அவன் இஷ்ட தேவதையை வசிய மாக்க முயற்சி செய்வான்.
இந்த வேஷங்களைக் கண்டோர் மயங்கி விடுகின்றார்கள். இவர்கள் மயக்கத்தை அதிகரிக்க, உடுக்கையையும், சிலம்பையையும் உரத்துத் தட்ட ஆரம்பிப்பான். அவ னுக்கு ஆவேசமும் வருவதாக நடிப்பான். இந்த ஆவேசத்திற்கு வேண்டிய மதுபானமும் அருந்துவதோடு, புட்டியிலும் சாராயம் மதுரை வீரனுக்காகப் படையல் போட்டிருக்கும். வேலை ஒன்றுமில்லாத வீணர் கள் அந்தக் குறிமேடைகளில் சென்று பக்திவான்களைப் போல நடிப்பார்கள். இந்தச் சூதை அறியாத பெண்கள் தங்கள் குறைகளைத் தெரிவிப் பார்கள். இவைகளை ஏதோ அலட்சியமாகக் கேட்டு, அதற்கு ஏதோ ஓர் பரிகாரத்தைத் தெரிவிப்பான். இந்த பித்தலாட்டங்களுக்கு ஏமாந்து கையிலிருக்கும் பணத்தையோ, நகையையோ, தட்சணையாகக் கொடுப்பார்கள். இந்த விதமாக அந்தப் பெண்கள் மதிமோசம் போவார்கள்.


முக்கியமாக, ஸ்தீரிகள் பிள்ளை வரம்பெறக் குறி மேடைகளுக்குப் போவதைப் பார்க்கலாம் அல்லது தனக்கும் தனது புருஷனுக்குமுள்ள மனஸ்தாபத்தைக் குறித்துக் குறி கேட்கப் போவதுமுண்டு. இந்த இரண்டு விஷயங்களைக் குறி சொல்லுகிறவன் எப்படித் தீர்ப்பானோ என்று விசாரிப்பதே கிடையாது. இதைப் போன்ற மூடநம்பிக்கையைக் காண் பதரிது. பிள்ளை பிறப்பதற்கு ஆண் பெண் இருவர் திரேகம் தக்க பருவத்தில் இருத்தல் வேண்டும் ஆயிரக்கணக்கான ஸ்தீரி புருஷர்களுடைய திரேகம் பக்குவப்பட்டு இருப்பதால், அவர்களுக்குச் சந்ததி விருத்திக்குத் தடையொன்றுமில்லை. ஆனால், ஏகதேச மாக ஏதோ ஒருவர் இருவ ருக்குத் திரேக பக்குவமில் லாமல் இருக்கும்; அதனால் கர்ப்பம் தரிக்க முடியாமற் போகும். இதனையும் தீர்த்துக் கொள்ள அவுஷதங்களும், சிகிச்சைகளும் இருக்கின்றன.

மலட்டு ஸ்தீரி புருஷர் சிற்சில சிகிச்சையால், சந்தான விருத்தி பெறுகிறார்கள். அப்படியும் சிலருக்குக் குணப் படுவதில்லை. மலட்டு ஸ்தீரி புருஷர்களைப் போல் மலட்
டும் ஆடும், மாடும், புழுப் பூச்சிகளும், செடிகளும், மரங் களும் உலகில் ஏகதேசமாக இருக்கின்றன. விளையாத நிலங்களும் சில இருக்கின்றன. இவைகளை ஏதாவது செடி, மரம், புழு, பூச்சி, ஆடு, மாடு களை உற்பத்தி செய்ய மதுரை வீரனால் முடியாதிருக்க, ஸ்தீரி புருஷர்களை மாத்திரம் பிரஜா விருத்தி செய்வதென்றால் யார் நம்புவது? இதை உன்மத்தர் கள்தான் நம்பக்கூடும்! பிரஜாவிருத்திக்குத் தடையை நீக்க டாக்டர்களுக்கே தெரியுமே அல்லாது மோசக் காரர்களாகிய குறி சொல்கின்றவர்களுக்கு ஒன்றும் தெரியா. மதுரை வீரன் படத் தாலும் உடுக்கை சிலம்பாலும், தீபத்தின் சுடர் அசைவாலும் மலட்டுத்தனம் நீங்குமாயின் இவ்வளவு சுளுவாகக் கோடானு கோடி கறம்பு நிலங்களை விளைய வைக்கலாமே!


---------- ம. சிங்காரவேலர் அவர்கள் எழுதிய கட்டுரை

30.5.08

சோதிடத்தில் கோள்களின் வரிசையே தவறானது

சோதிடத்தில் கிரகங்களின் இருப்பிடத்தை வைத்த பலாபலன் சொல்லப் படுகிறது. சோதிட நூலில் கோள்களின் வரிசையில் சூரியன், சந்திரன், செவ்வாய், புதன் குரு (வியாழன்) சுக்கிரன் (வெள்ளி) சனி, ராகு, கேது என்று வரிசைப்படுத்தியுள்ளனர். சோதிடம் குறிப்பிட்டுள்ள இந்த வரிசையே தவறானது. சூரியன் என்ற நட்சத்திரத்தை மய்யமாகக் கொண்டு சுற்றிவரும் கிரகங் களின் நீள்வட்டப் பாதையில் சூரியனுக்கு அடுத்துயிருக்கும் கிரகம் புதன் அதைத் தொடர்ந்து வெள்ளி, பூமி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன், புளூட்டோ ஆகிய கிரகங்கள் இருக்கிறது. சோதிடம் காட்டும் வரிசை தவறாக இருக் கும்போது அதன் கணிப்பும் தவறாகத்தானே இருக்க முடியும்! சோதிடத்தில் சூரியனை ஒரு கிரகமாகவே எடுத்துக் கொள்ளப்பட் டிருக்கிறது.

சூரியனின் பேராற்றல்!

பேராற்றல் மிக்க சூரியனை கிரகங்கள் வரிசையில் வைத்துக் கணக்கிடுவது எவ்வளவு பெரிய தவறு! 15 கோடி கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் சூரியனில் ஹைட் ரஜன் வாயும், ஹீலியமும் சேர்ந்து அணுக்கதிர் வெடிப்பு உண்டாக்கி ஒரு நொடியில் 60 கோடி டன் ஆற்றலை வெளியிட்டு பிரமிக்கத் தக்க தீப்பிழம்பாகவும், காந்தப் புயலாகவும், கதிர் வீச்சாகவும் பாய்ந்து 15 கோடி கி.மீ. தொலைவிலுள்ள பூமியில் பல விளைவுகளை உண்டாக்குகிறது.

வானவியல் ஆய்வுப்படி சூரியனின் வெப்பம் அதிகரித்துக் கொண்டேயிருப் பதால் இன்னும் சில நூற்றாண்டுகளில் பூமியில் கடல் வற்றிப் போகுமாம்! புதன் வெள்ளி ஆகிய கிரகங்கள் ஆவியாகி விடு மாம்! இவ்வளவு பேராற்றல் மிக்க சூரியனை சோதிடத்தில் செத்துப்போன எரிமலையும், வறண்டு போன ஆறுகளும் கடுங்குளிரும் கொண்ட கிரகங்கள் வரிசையில் சேர்த்துக் கணக்கிடுவது எவ்வளவு பெரிய தப்பு! சோதிடத்தில் கிரகங்களின் வரிசையே தவறாக இருக்கும் போது சோதிடத்தின் கணிப்பு எப்படி சரியாக இருக்க முடியும்!

அறிவியலுக்கு மாறாத சோதிடர்கள்!

பூமியை மய்யமாக வைத்து சூரியனும் மற்றக் கிரகங்களும் சுற்றிவருவதாக ஆதியில் நம்பினார்களே அந்தத் தவறான நம்பிக் கையிலிருந்து சோதிடர்கள் அறிவியல் சிந் தனைக்கு இன்னும் மாறவில்லை. இதிலிருந்து அறிவியலுக்கும் சோதிடத்திற்கும் சம்பந்தம் இல்லை என்பது தெளிவாகிறது! ஊகத்தின் அடிப்படையில் பூமியை மையமாகக் கொண்டு சூரியனும் மற்றக் கிரகங்களும் சுற்றுவதாக நம்பி அதையே அடிப்படை யாகக் கொண்டு ஊகத்தில் எழுதப்படு வதுதான் சோதிடம்!


அறிவியலை அடிப்படையாகக் கொண்டு சோதிடம் எழுதப்பட்டிருந்தால் பூமியின் துணைக்கிரகம் சந்திரனை சோதிடத்தில் சேர்த்து கொண்டது போல செவ்வாய் கிரகத்தின் 2 துணைக் கிரகங்களையும், வியாழன் கிரகத்திற்குள்ள 12 துணைக் கிரகங்களையும் சனிக்கிரகத்திற்குள்ள 9 துணைக் கிரகங்களையும் சோதிடக் கணக்கிலே சேர்த்திருக்க வேண்டும்! சோதிடருக்குத் தெரிந்தது பூமியின் துணைக் கிரகம் ஒன்றுதான்! மற்றது அவர்களுக்கு தெரியாது! மூன்று முக்கிய கிரகங்கஙகளான யுரேனஸ், நெப்டியூன், புளூட்டோ கிரகங்கள்கூட அவர்கள் தெரிந்திருக்கவில்லை!

அறிவியலை அடிப்படையாகக் கொண்டு சோதிடம் எழுதப்பட்டிருந்தால் பூமியின் துணைக்கிரகம் சந்திரனை சோதிடத்தில் சேர்த்து கொண்டது போல செவ்வாய் கிரகத்தின் 2 துணைக் கிரகங்களையும், வியாழன் கிரகத்திற்குள்ள 12 துணைக் கிரகங்களையும், சனிக்கிரகத்திற்குள்ள 9 துணைக் கிரகங்களையும் சோதிட கணக் கிலே சேர்த்திருக்க வேண்டும்! சோதிடருக்குத் தெரிந்தது பூமியின் துணைக் கிரகம் ஒன்றுதான்! மற்றது அவர்களுக்கு தெரியாது! மூன்று முக்கிய கிரகங்களான யுரேனஸ், நெப்டியூன், புளூட்டோ கிரகங்கள்கூட அவர்கள் தெரிந்திருக்கவில்லை!

வானவியல் அடிப்படையில்தான் கிரகங் களின் நிலையைக் கொண்டு சோதிடம் கணிக் கப்படுகிறதென்றால் முக்கிய கிரகங்கள் மூன்றும், துணைக் கிரகங்கள் 23-ம் சேர்க்கப்படாதது ஏன்? அக்கிரகங்கள் இருப் பதே சோதிடருக்குத் தெரியாது, மேலும் பல புதிய கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருப் பதுவும் தெரியாது. அரைகுறையாகத் தெரிந்ததைக் கொண்டு சோதிடம் என்று பொய்யும் புரட்டும் சொல்லி மக்களை ஏமாற்றுகின்றனர்!

பூமியிலிருந்து கிரகங்களின் தூரம்!

புதன்கிரகம் உள்ள தூரம் 5 கோடி 70 லட்சம் மைல் வெள்ளி (சுக்கிரன்) கிரகம் உள்ள தூரம் 2 கோடி 60 லட்சம் மைல்
பூமி கிரகம் உள்ள தூரம் 9 கோடி 30 லட்சம் மைல் (சூரியனிலிருந்து)
செவ்வாய் கிரகம் உள்ள தூரம் 4 கோடி 85 லட்சம் மைல்
வியாழன் (குரு) கிரகம் உள்ள தூரம் 39 கோடி 3 லட்சம் மைல்
சனிக்கிரகம் உள்ள தூரம் 79 கோடி 31 லட்சம் மைல்
யூரேனஸ் உள்ள தூரம் 169 கோடி 40 லட்சம் மைல்
புளூட்டோ உள்ள தூரம் 357 கோடி மைல்

எல்லாக் கிரகங்களும் சூரியனை மையமாக வைத்து நீள்வட்டப் பாதையில் சுற்றி வருவதால் கிரகங்கள் இருக்கும் இடத்தைப் பொருத்து தூரங்கள் சிறிது வித்தியாசப்படக் கூடும்!
புளூட்டோ கிரகத்தைத் தாண்டி 2004 ஆண்டு ஆரம்பத்தில் ஒரு புதிய கிரகமும், 28.5.2004-ல் சுமார் 12,700 ஒளியாண்டுத் தொலைவில் ஒரு புதிய கிரகமும் 2004-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் மேலும் இரு கிரகங்களும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. சூரியனைச் சுற்றி வரும் கிரகங்கள் இதுவரை கண்டுபிடிக்கப் பட்டது 13 ஆகும்! சோதிடத்தில் எடுத்துக் கொண்டதோ செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி ஆகிய 5 மட்டுமே! சோதிடம் அரைகுறையாகத் தெரிந்ததைக் கொண்டு சொல்லப்படுகிறது என்பதற்கு இதுவே போதும்!

கிரகங்களால் பாதிப்பா!


கிரகங்கள் இருக்கும் நிலையைக் கொண்டு தனி மனிதனின் வாழ்க்கையில் மாற்றங்களும், ஏற்றத் தாழ்வும் உண்டாகுமென்று சோதிடர்கள் கூறுகிறார்கள். ஒவ்வொரு கிரகத்திற்கும் ஈர்ப்பு விசை உண்டு! பூமியின் ஈர்ப்புவிசை கூட சிறிது உயரத்திற் கேயுண்டு! பூமியின் ஈர்ப்பு விசையில் 6-ல் 1 பங்குதான் துணைக் கிரகம் சந்திரனுக்கு. அதுபோலவே மற்றக் கிரகங்களுக்கும் ஈர்ப்பு விசை மாறுபடும்! துணைக்கிரகம் சந்திரன் பூமிக்கு மிக நெருக்கமாக இருப்பதால் அதன் ஈர்ப்பு விசையால் சில பாதிப்புகள் பூமியில் ஏற்படலாம்! மற்றக் கிரகங்கள் எல்லாம் வெகு தொலைவில் இருப்பதால் அக்கிரகங்களின் ஈர்ப்பு விசை சிறிது தூரத்திற்கேயுண்டு. பூமியை எட்ட வாய்ப்பில்லை. எனவே பூமியில் இருக்கும் மனிதர்களுக்கு கிரகங்களால் எந்த மாற்றத் தையும், ஏற்றத்தையும் உண்டாக்குவதற்கு வாய்ப்பு சிறிதும் இல்லை. வெகு தொலைவிலுள்ள செவ்வாய் கிரகமும், சனிக்கிரகமும் பூமிக்கு மிக நெருங்கி வந்தாலும் எந்தப் பாதிப்பும் பூமிக்கு ஏற்படாது என்கிறது அறிவியல்! 2003-ம் ஆண்டு ஆகஸ்ட் 27-ஆம் தேதி 38 கோடி கி.மீ. தூரத்திலுள்ள செவ்வாய் கிரகம் பூமிக்கு அருகில் ஐந்தரைக் கோடி கி.மீ. தூரத்திற்கு வந்தது. பூமியில் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லையே! சனிக்கிரகம் 2003-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி 120 கோடி கி.மீ தூரத்திலிருந்து பூமிக்கு மிக அருகில் வந்தது. பூமியைவிட 755 மடங்கு பெரிய சனிக்கிரகத்தால் கூட அப்போது பாதிப்பை ஏற்படுத்த முடியவில்லையே! சனி கிரகத்தை முழுமையான பாபக்கிரகம் என்றும், சனி தசை 19 ஆண்டுகள் பாடாய் படுத்துமென்றும் சோதிடம் நம்மைப் பயம் காட்டுகிறது!
நம் காலத்தில்தானே இரு கிரகங்களும் பூமியை நெருங்கி வந்தது! செவ்வாய், சனி கிரகங்களால் எந்தப் பாதிப்பும் பூமிக்கு ஏற்படவில்லை என்பதை அறிந்திருந்தாலும் சோதிடர் செவ்வாய் தோஷமென்றும், சனி கெட்ட நேரம் என்றும் நம்மிடத்திலே கூறிப் பயங்காட்டுவதை நம்பலாமா? சிந்தித்துப் பாருங்கள். அறிவியல் முடிவுகளை ஏற்று துணிச்சலோடு சோதிடத்தை தூக்கி எறியுங்கள்!

---------- நன்றி: தூத்துக்குடி கவிஞர் தி. பொன்னுசாமி அவர்கள் எழுதிய -"சோதிட மறுப்பும் - வானவியல் சிறப்பும்" நூலிலிருந்து