Search This Blog

17.7.08

மண்டியிடுகிறது மதம்!

கோபர் நிகஸ் (1473-1543) உலகம் மறக்க முடியாத ஒரு விஞ்ஞானியின் பெயர் இது. பைபிள் கூறியதற்கு மாறாக - வானவியல்பற்றிய கருத்தினை வெளியிட்ட விஞ்ஞானி இவர். வானவியல் விஞ்ஞானத்தின் தந்தை என்று போற்றப்படுபவர்.

உலகம் ஒரே இடத்தில் நிற்கவில்லை. தன்னைத்தானே 24 மணிநேரத்திற்கு ஒருமுறை சுற்றிக் கொள்கிறது; சூரியனையும் அது சுற்றி வருகிறது - இதற்கு அது எடுத்துக்கொள்ளும் காலம் ஒரு வருடம்.

உலகத்தைப்பற்றி அன்றைய கற்பனை என்ன? எப்படி யெல்லாம் சித்திரங்கள் தீட்டப்பட்டு இருந்தன கடவுள் தன் கையிலிருந்து தொங்கும் ஒரு கயிற்றால் இந்த உலகம் என்ற பந்தைத் தொங்கவிட்டுக் கொண்டிருந்தார். மற்றொரு கையால் அந்தப் பந்தைச் சுற்றிக் கொண்டிருந்தார் என்று கருதினர்.

அதற்கு மாறாக, அறிவியல் அடிப்படையில் கோபர்னிகஸ், தான் கண்டுபிடித்த உண்மையை உடனடியாக உலகிற்கு அறிவிக்க முடியவில்லை; காரணம், மதத்தின் உருட்டல் மிரட்டல்தான். தான் கண்டறிந்த இந்த அரிய உண்மையை 43 ஆண்டுகளுக்குப் பிறகுதான் நூல் வடிவில் கொண்டு வர முடிந்தது; அநேகமாக அது அவர் மரணத்தைத் தழுவும் காலகட்டமாகும்.

வான சாஸ்திரத்தை தலைகீழாக ஆக்கப் பார்க்கிறான் இந்தக் கோபர்னிகஸ் என்னும் முட்டாள் என்று லூதர் என்னும் பாதிரி அர்ச்சித்தார். கிறிஸ்துவின் வார்த்தைகளைக் காட்டிலும் கோபர்னிகஸ் கொள்கைகளை யாரே ஏற்பர் என்று சங்வின் என்னும் இன்னொரு பாதிரியார் கதறினார்.

இவர்களை விட்டுத் தள்ளுங்கள். பல்கலைக் கழகப் பேராசிரியர்களே கோபர்னிகஸ் கண்டுபிடிப்புக்கு எதிராக ஆர்ப்பரித்து நின்றனர்.

சூரியன் சுற்றவில்லை; பூமிதான் சுற்றுகிறது என்று எந்தெந்த நூல்கள் எல்லாம் கூறுகின்றனவோ அவையெல்லாம் கறுப்புப் பட்டியலில், கண்டனப் பட்டியலில் வைக்க ரோமாபுரி மதக் கோயில் ஆணையிட்டது.

இவற்றையெல்லாம் கூறுவதற்குக் காரணம் அண்மையில் நிகழ்ந்த ஒரு நிகழ்வாகும்.
கோபர்னிகஸின் புதிய கண்டுபிடிப்பு அடங்கிய அந்தப் புத்தகத்தின் முதல் பதிப்பு அண்மையில் நியூயார்க் நகரில் ஏலம் விடப்பட்டது. எவ்வளவு பெரிய தொகைக்குத் தெரியுமா? 22 லட்சம் டாலர்கள்; அதாவது ரூபாய் கணக்கில் 970 லட்சமாகும்.

பகுத்தறிவின் முன், அறிவியலின் முன் எந்த மதமும் மண்டியிட்டே தீரும் என்பதில் அய்யமில்லை.

கலிலியோ, டார்வின் போன்ற விஞ்ஞானிகள் கண்டறிந்த கருத்துகள் எல்லாம் மதவாதிகளால் மறுக்கப்பட்டன. கலிலியோ போன்றவர்கள் கடும் தண்டனைக்கு ஆளானார்கள்.
எந்த மதம் அவர்களுக்குத் தண்டனை கொடுத்ததோ அதே மதத்தின் வாடிகன் போப் அந்தத் தவறுக்கு வருத்தம் தெரிவித்து, கலிலியோ, டார்வின் கருத்துகளை ஏற்றுக்கொள்வதாக வும், பள்ளிகளில் அவர்களின் கண்டுபிடிப்புகளை நடத்தலாம் என்றும் பகிரங்கமாக பிற்காலத்தில் அறிவித்துவிட்டார் என்றால், இந்தத் தன்மையை நினைத்துப் பார்க்கவேண்டும்.


வானவியலைப்பற்றி மூடத்தனமாகக் கருதிக் கொண்டிருந்த கருத்துகளை மய்யப்படுத்திதான் ஜோதிடம் என்ற அடி முட்டாள்தன ஏற்பாடும் உருவாக்கப்பட்டது.

சூரியன் ஒரு நட்சத்திரமே தவிர, அது கோள் அல்ல என்பதுகூடத் தெரியாமல் நவக்கிரகங்களில் சூரியனைக் கொண்டு போய் வைத்துவிட்டனர்.

பூமி ஒரு கிரகம்; ஆனால், சோதிடத்தில் அதற்கு இடம் இல்லை; பூமியின் துணைக் கிரகமான சந்திரன் நவக்கிரகத்தில் ஒன்றாக இடம் பிடித்துவிட்டது. ராகு, கேது என்று சோதிடத்தில் சொல்லப்படும் கிரகங்கள் எதுவும் கிடையாது. யுரேனஸ், நெப்டியூன் போன்ற புதிய கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள னவே - மேலும் பல புதிய கிரகங்கள் இப்பொழுது கண்டுபிடிக்கப் பட்டுள்ளனவே, அவற்றிற்கெல்லாம் ஜோதிடத்தின்மூலம் பலன்களைச் சொல்ல முடியாத பரிதாப நிலையாகும்.


மக்கள் எண்ணிக்கையில் அதிகமாக மத நம்பிக்கை கொண்டுள்ளனர் என்பதற்காக மதம் உயர்ந்ததாகிவிடாது. பகுத்தறிவுவாதிகள், அறிவியல் சிந்தனையாளர்கள் எண்ணிக் கையில் குறைவாக இருப்பதாலேயே அவர்கள் தாழ்ந்தவர்கள் ஆகமாட்டார்கள்.
உண்மையைச் சொல்லவேண்டுமானால், இந்தச் சிறிய எண்ணிக்கையில் உள்ளவர்களின் தயவாலும், முயற்சியாலும் அறிவாலும்தான் அந்தப் பெரிய எண்ணிக்கை உடைய மக்கள் வாழ முடிகிறது.

------------------நன்றி: "விடுதலை" தலையங்கம் -17-7-2008

0 comments: