Search This Blog

2.2.23

ஆத்மா பற்றி பெரியார்

ஆத்மா பற்றி பெரியார்


 


சமீபத்தில் சுமார் 10 வருடங்களுக்கு முன்பு வக்கீல் உயர்திரு. மைலாப்பூர் எஸ்.ஸ்ரீனிவாச அய்யங்கார் அவர் களுடன் காங்கிரஸ் பிரசாரமாக ஆங்காங்கு சென்ற காலையில், ஒரு நாள் மதுரையில் இரவு 10 மணிக்கு மேல் படுத்துக்கொண்டு வேடிக்கையாகப் பேசிக் கொண்டிருக்கையில், ஆத்மாவைப் பற்றியும், கடவுளைப் பற்றியும் இதே அபிப்பிராயம் சொன்னபொழுது, உடனே அவருக்குக் கோபம் வந்து, உம்மிடம் சாவகாசம் வைத்ததே தப்பு என்றும், நீர் இவ்வளவு கீழான மனிதனென்று எனக்கு இதுவரையிலும் தெரியா தென்றும் சொல்லிப் பேசாமல் திரும்பிப் படுத்துக் கொண்டார்.

ஆனால், அப்படிப் பேசுவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்புதான் கிருஷ்ணராயர் தெப்பக்குளத்தில் அவருடைய தலைமையின்கீழ் ஒத்துழையாமை சம்பந்தமான பிரசங்கம் செய்த பிறகு, தலைவர் முடிவுரையாக என்னைப் பற்றி அவர் பேசும்போது, ஸ்ரீமான் ஈ.வெ.-இராமசாமி நாயக்கர் ஒரு பெரிய ராஜரிஷி யென்றும், இவர் நமக்குத் தலைவராகக் கிடைத்தது நமது பாக்கியம் என்றும், மற்றும் பல விதமாகப் புகழ்ந்து பேசினார். மறுநாள் காலையில் அவருடைய கோபம் தணிந்த பிறகு, தானாகவே என்னுடன் பேசவந்த பொழுது, நாயக்கர்வாள்! கோபஞ்செய்து கொள்ளாதீர்கள். இராத்திரி தாங்கள் அம்மாதிரி பேசியதற்குக் காரணம் இன்னதென்று தெரிந்து கொண்டேன்.

அதாவது, சீமைக்குச் சென்று, கல்வி கற்றுவந்த உங்களுடைய குழந்தைகள் திடீரென்று இறந்து போன வெறுப்பினால் தாங்கள் இவ்வித எண்ணங்கொண்டு விட்டதாக உணர்ந்தேன். ஆதலால் கோபித்துக் கொள்ளாதீர் களென்று சமாதானம் சொன்னார். நான் அதற்கும், இதற்கும் சம்பந்தமில்லை என்றும், அக்குழந்தைகள் என் தமையனார் குழந்தைகள் என்றுமே அவருக்கு மீண்டும் உரைத்து, எனதபிப்பிராயத்தையே பலமாக மறுபடியும் வற்புறுத்தினேன். ஆகவே, நான் இந்த விஷயங்களெல்லாம் வெகு நாளாகவே கொண்டுள்ள அபிப்பிராயங்களானாலும், அவற்றின் சம்பந்தமான சகல தொல்லைகளையும் மேற்போட்டுக் கொண்டு, பிரசாரம் செய்கிறதென்கிற வேலையாக இப்பொழுதுதான் திரிகிறேன். இதற்கு முன் நான் எந்தத் தொழிலில் ஈடுபட்டிருந்தாலும், சிநேகமாக ஏற்பட்டவர்களிடமெல்லாம் இதைப்பற்றியே பேசியும் இருக்கிறேன்.

ஆத்மா என்னும் விஷயத்தில் சுருக்கமாக பதில் சொல்ல வேண்டுமானால், அது ஒருவித உணர்ச்சியே ஒழிய ஒரு தனிப்பட்ட வஸ்துவல்ல. அவ்வுணர்ச்சியானது சரீரத்தின் அசைவு நின்றவுடன் ஒழிந்துபோகும் என்பதேயாகும். இதைப்பற்றி இரண்டு விசயங்கள் குடிஅரசுவில் முன்னாலேயே எழுதப்பட்டிருக்கிறது. மூன்றாவது விஷயமும் சமீபத்தில் வரும் ஆத்மா என்பதைப் பற்றிய பேச்சே பேசாமலிருந்தால் நல்லதென்றும், இதனால் பல ஜனங்களுடைய அதிருப்தி ஏற்பட்டு, நமக்கு வெளி உதவிகள் குறைந்து போகுமெனவும் சிலர் கூறுகின்றார்கள். அதை ஒத்துக் கொள்ள என்னால் முடியவில்லை. எனது அபிப்பிராயங்களைச் சொல்லுவதை நமது கடமையாக வைத்துக் கொள்ளுவோம். மற்றவர்களுக்குத் துன்பமில்லாத முறையில் அதைப் பிரசாரம் செய்வோமென்பதைத் தவிர, வேறு விஷயங்களை எதிர்பார்த்துக் கொண்டு, அபிப்பிராயங்களை மூடி வைத்துக் கொண்டிருப்பது நியாயமாகாது. நமது ஆயுள் காலத்திற்கு எவ்வித அளவும், உறுதியும் பந்தோபஸ்-துமில்லையாதலால், கூடுமானவரை சவுகரியமிருக்கும்பொழுது நமது அபிப்பிராயங்களை எல்லாம் சொல்லி விடுவதுதான் சரியென்று நினைக்கின்றேன்.

                             -----------------------------தந்தைபெரியார் -”குடிஅரசு” 31,5.1931

1.2.23

பார்ப்பானை எதிர்த்துப் பிழைத்திருப்பவர் நாமே! ஜாதி ஒழிப்பே நமது முக்கியப் பணி!

 ஜாதி ஒழிப்புக்கு என்ன செய்ய வேண்டும் என்பதையும், சாதியை அடியோடு ஒழிக்க வேண்டும் என்பதையும் உணராத மக்களே இல்லை.

 

ஜாதி காரணமாக மக்கள் மனவருத்தமும், தொல்லையும் அடைவதை நாம் காண்கிறோம். அந்தச் ஜாதி இழிவை ஒழிக்க நாங்கள் பாடுபடுகின்றோம். இப்படிச் ஜாதியில் கஷ்டம் (தொல்லை) அனுபவிப்பவன் கூட வருவதில்லை. ஏன் 3000- ஆண்டாக எவனுமே வரவில்லை. நாங்கள் தான் பாடுபடுகிறோம்.

 

ஜாதி ஒழிப்பு வேலை என்பது மேல் ஜாதிக்காரனுக்கு ஆபத்து. அவன் நம்மை ஒழித்து விடுவான் என்று எண்ணுவதாலும், பயன்படுவதாலும் எவனும் இந்த வேலைக்கு வருவதே இல்லை.

 

எந்தச் சாதனமும், கருவியும் மேல் ஜாதிக்காரன் கையில் சிக்கி விட்டது. கடவுள், மதம், சாஸ்திரம் ஆட்சி எல்லாம் மேல் ஜாதிக்காரர் என்பவர்கள் கையில் தான் சிக்கி விட்டன.

 

நம் அறிவு வளர்ச்சி அடையும்படியான கல்வியோ மற்ற சாதனங்களோ நமக்கு அளிக்கப்படவே இல்லை. மூவேந்தர் காலத்திலே ஆகட்டும், அடுத்து "நாய்க்கன் முஸ்லிம்கள் மராட்டியன்" ஆட்சியிலும் கூட நமக்கு அறிவு பெறக் கல்வி அளிக்கவே இல்லை. 1961- இல் நாம் 100-க்கு 7- பேர்கள் தான் படித்து இருந்தோம். 1910-இல் ஏழரை பேர், 1920- இல் 9-பேர், 1931- இல் நாம் 100- க்கு 10- பேர்கள் தான் படித்து இருந்தோம். பிறகு அட்வைசர் ஆட்சியின் காரணமாகவும், ஜஸ்டிஸ் கட்சி ஆட்சியின் காரணமாகவும் 1951- இல் 100- க்கு 16- பேர்களாகவும் வந்தோம். அதற்கு அடுத்து தமிழகத்தில் பதவிக்கு வந்த ஆச்சாரியார் ஆட்சியில் 16- பேரை 10- பேராகவும் முயற்சியில் இறக்கினார் ஆச்சாரியார்.

 

நல்ல வேலையாக தமிழ்நாட்டில் ஆச்சாரியார் ஆட்சி ஒழிந்து காமராஜர் ஆட்சி ஏற்பட்டதன் பயனாக 16- பேராக இருந்தவர்கள் இன்று 100- க்கு 32- பேர்கள் படித்த இருக்கும் படியான நிலைமை ஏற்பட்டுள்ளது.

 

தோழர்களே! இப்படி நமது கல்வி வளர்ச்சியில் அக்கறை காட்டும் காமராசரை ஒழிக்க வேண்டும் என்று தான் அத்தனைக் கட்சிகளும் பாடுபடுகின்றன.

 

காமராசர் கட்சியும், எங்கள் கட்சியும் தான் அவர்கள் ஒழியக் கூடாது என்று பாடுபடுகிறோம். மற்றவன் எல்லாம் தாங்கள் எப்படி எதைச் செய்தாவது தாங்கள் பதவி அடைந்தால் போதும் என்று எண்ணிக் கொண்டு காமராசரை எதிர்க்கின்றார்கள்.

 

தோழர்களே! இன்று பார்ப்பானை எதிர்த்துக் கொண்டு நாட்டில் வாழ்கின்றவர்கள் என்றால் நாங்கள் தான். மற்ற யாராவது இருக்கின்றார் என்றால் அது காமராசர் தான். மற்றவர்கள் எல்லாம் பார்ப்பானை எதிர்க்காததோடு அவன் கால் அடியில் கிடக்கின்றவர்கள் ஆவார்கள்.

 

இன்று நாட்டில் அரசியலில் எந்தக் குறையும் மக்களுக்கு இல்லை. 21- வயது ஆன எல்லோருக்கும் எழுதப்படிக்கத் தெரிந்தாலும், தெரியாவிட்டாலும், வோட்டுரிமை கொடுக்கப்பட்டு விட்டது. பின் இன்னும் என்ன உரிமை வேண்டும்?

 

எருமைக்கு குதிரை ஓட்டு வேண்டும் என்கிறீர்களா? புரியனுமே!

 

நமக்கு இன்று வேண்டியதுசமூதாயக் குறை ஒழிய வேண்டும். ஜாதி ஒழிய வேண்டும் என்பதற்காகப் பாடுபடுவது தான்.

 

தோழர்களே! நான் இந்தத் தொண்டை 30- ஆண்டுகளாகச் செய்து கொண்டு தான் வருகிறேன். என்னை "என்ன! ஓட்டைக் குடத்தில் தண்ணீர் எடுக்கும் பணியில் ஈடுபட்டு இருக்கிறாயே"? என்று கேலிப் பேசினார்கள். நாங்கள் கவலைப்படாமல் பாடுபட்டுக் கொண்டு தான் வந்தோம். நல்ல வேலையாக காமராசர் பதவிக்க வந்ததன் காரணமாக இன்று கூப்பாடு பயன் அளிக்க ஆரம்பித்துள்ளது.

 

இன்று நடைபெறும்படியான போராட்டமானது பழமைக்கும், புதுமைக்கும் நடைப் பெறும்படியான போராட்டமாகும்.இராஜாஜி பழமையை அலட்சியம் செய்யாது காக்க வைத்துக் கொண்டு பாடுபடுகிறார். அவருக்கு வால் பிடித்துத் திரிவது தானா நமது தமிழர்களின் செயல்? நம் மக்கள் சிந்திக்க வேண்டும்.

 

பார்ப்பான் கையில் இருந்து வந்த காங்கிரஸ் ஆனது இன்றைக்குத் தான் கைக்கு வந்து தமிழர்களுக்குப் பலன் அளிக்க வல்லதாக இன்று வந்து உள்ளது.

 

நமக்கு கல்வி, உத்தியோகம் முதலியவைகளில் என்றைக்கும் இல்லாத அளவு நன்மைகள் ஏற்பட்டு உள்ளன.

 

இன்றைக்கும் ஆள்கள் டாக்டராகவோ, எஞ்சினியர்களாகவோ படித்து வரும்படியாக ஏற்பட்டு உள்ளது. இதற்கு முன் இருந்த ஆட்சியில் இவை நமக்கு இல்லை. இன்றைக்குத் தான் காமராசர் ஆட்சியில் தான் ஏற்பட்டு உள்ளது.

 

இந்த ஆட்சியானது மீண்டும் ஏற்பட வேண்டும். இதற்கு நீங்கள் உங்கள் ஓட்டை மட்டும் அளிப்பதோடு மட்டும் இல்லாமல் ஓவ்வொரு கவலை எடுத்துக் கொண்டு பாடுபட வேண்டும். காமராசர் ஆட்சி ஏற்பட அவர் கட்சி வெற்றி பெறவும் பாடுபட வேண்டும்.

 

                                           --------------------------------------------- 22.10.1961- அன்று திருச்சியில் தந்தை பெரியார் 83-ஆம் பிறந்த தின விழாவில் பெரியார் .வெ.ரா சொற்பொழிவு. "விடுதலை", 25.10.1961

31.1.23

மதத்தில் இருந்து தமிழ் விலகினாலொழிய தமிழுக்கும் தமிழருக்கும் சுயமரியாதை உண்டாகாது!

 

தமிழ்த் திருநாள்


கடவுள் வணக்கம் இல்லை 

அன்புள்ள தலைவர் அவர்களே! தோழர்களே! நீங்கள் இவ்வளவு பெரிய கரகோஷமும் ஆரவாரமும் செய்து என்னை இப்பொழுது வரவேற்ற மாதிரி எனது உபன்யாச முடிவில் எனக்கு மகிழ்ச்சியான வழியனுப்பு செய்ய மாட்டீர்கள் என்றே நினைக்கிறேன். ஏனெனில் தமிழ் பாஷைக்கு வாழ்த்துக்கூறும் வேலை இலேசானதல்ல. அதிலும் என்போன்ற அதாவது தமிழ் பாஷைக்கு வல்லின இடையின எழுத்து பேதமும், பிரயோகமும் பாஷையின் இலக்கண இலக்கியமும் அறியாதவனும், தமிழ் பாஷையையே கெடுத்து கொலை செய்து வருபவன் என்கின்ற பழியைப் பெற்றவனுமான நான் தமிழ் வாழ்த்துக்கு தகுதி உடையவனாவேனா என்று பாருங்கள்.

அன்றியும் தமிழைப்பற்றி அபிப்பிராயங்களிலும் பண்டிதர்களுக்கும் எனக்கும் எவ்வளவோ துறையில் நேர்மாறான கருத்துக்கள் இருந்து வருவதும் எவரும் அறியாததல்ல.

இவைகள் எல்லாம் ஒருபுறம் இருந்தாலும் வாழ்த்துதல் என்பதையும் நான் இவ்வளவு சாதாரணமாய்க் கருதுபவனுமல்ல. வாழ்த்துதல் என்றால் பார்ப்பனர்கள் ஏதோ மஞ்சளையும் அரிசியையும் கலந்து பொறுப்பும் பொருளும் இல்லாத ஒன்றின் பெயரைச் சொல்லி வாழ்த்தி (ஆசீர்வாதம் செய்து) விட்டு ஏதோ பெற்று வயிறு வளர்ப்பது மாதிரி வாழ்த்தை அவ்வளவு ஏமாற்றமாக நினைப்பவன் அல்ல. ஆனால் வாழ்த்துதலின் அவசியத்தையும், அதன் பெருமையையும் நான் உணர்ந்தவனேயாவேன். தகுதியும் பொறுப்பும் உடையவர்களே வாழ்த்த வேண்டும். வாழ்த்துபவர்கள் தங்களுக்கு பொருப்பு இருப்பதை உணர்ந்தவர்களாயிருக்க வேண்டும். தமிழை வாழ்த்தி விட்டு தமிழுக்கு இடுக்கண் ஏற்படும்போது கவலை அற்றவரும் எவ்வித உதவியும், ஆதரவும் அளிக்கத் தகுதி அற்றவர்களும் வாழ்த்திப் பயன் என்ன? ஆகையால் இங்கு வாழ்த்துதலுக்கு தகுதியைக் கருதாமல் மூப்பையும் நரையையும் கருதியே கட்டளை இடப்பட்டு விட்டேன் என்பதாகக் கருதுகிறேன்.

தமிழில் எந்த அளவும் பள்ளியில் பயின்றவனல்ல. தமிழைப்பற்றி தமிழ் மக்கள் நலம், தமிழ் மக்கள் தன் மதிப்பு என்பதல்லாமல் வெறும் பாஷையைப் பற்றியே நான் எவ்வித பிடிவாதம் கொண்டவனுமல்ல. தமிழுக்கு ஆக என்று எவ்வித தொண்டு புரிந்தவனுமல்ல.

தமிழுக்கு வாழ்த்துக்கூற தலைவரும், எனது நண்பருமான தோழர் திரு.வி.கல்யாணசுந்திர முதலியார் அவர்களும், தமிழ்ச்சங்க அமைச்சர் தோழர் கா. நமச்சிவாய முதலியாரும் மற்றும் அவர்கள் போன்ற பெரியார்களே உண்மையில் தகுதி உள்ளவர்கள்.

தலைவர் கல்யாணசுந்திர முதலியார் அவர்களின் தமிழ்த் தொண்டை நானே நன்றாய் அறிந்தவன். அவரது தமிழ்த்தொண்டுக்கு எடுத்துக்காட்டு வேண்டுமானால் நானேயாவேன். நான் தமிழ் பேசுவதும் எழுதுவதும் தமிழைக்கொலை புரியும் மாதிரியானாலும் நான் பல பத்திரிகைகள் நடத்துவதும், சுமார் 50, 60 புத்தகங்கள் வெளியிட்டதும் தலைவர் கல்யாணசுந்திர முதலியார் அவர்கள் தமிழ் பாஷையில் தேசபக்தன், நவசக்தி முதலிய பத்திரிகைகளின் தொண்டேயாகும். திரு.வி.க. முதலியார் அவர்களது தேசபக்தன் பத்திரிகைக்குப் பிறகே தமிழ் அரசியல் மேடைகளைக் கைப்பற்றிற்று என்று சொல்லுவேன். அரசியல் தலைவர்களையும் தமிழ் அடிமை கொண்டதற்குக் காரணமும் அவர்களது பத்திரிக்கைகளேயாகும்.

அப்பத்திரிகைகள் என்னைவிட மோசமானவர்களையும், தமிழ் பாஷையில் அரசியலை உணரவும், தமிழ்பேசவும் செய்துவிட்டதால் தமிழ் பாஷையைக் காதில் கேட்டால் தோஷம் எனக்கருதும் ஜாதியாரும் தமிழில் கலந்து கொள்ளவும், தமிழை வேஷத்துக்காவது மதிக்கவும் செய்துவிட்டது.

பெரியார் நமச்சிவாய முதலியார் அவர்களது உழைப்பும் தமிழுக்கு மிகப்பெரியதொன்றும் தமிழர் மறக்க முடியாததுமான தொண்டாகும். பெரியார் நமச்சிவாய முதலியார் அவர்களின் துணிந்த முயற்சி இல்லா திருக்குமானால் இன்று தமிழ்ப்பாட புத்தகங்கள் பெரிதும் ஆரியமத உபாக்கியானங்களாகவும், ஆரியமும் தமிழும் விபசாரித்தனம் செய்து பெற்ற பிள்ளைகள் போலவும் காணப்படும். ஆதலால் தான் தமிழுக்கு வாழ்த்துக்கூற, அப் பெரியார்களும் அவர்கள் போன்றார்களுமே தக்கார் என்று உரைத்தேன்.

தோழர்களே! எனக்கிட்ட கட்டளையில் ஏதேனும் ஒரு சிறு பாகமாவது நிறைவேற்றப்பட வேண்டுமானால் தமிழைப்பற்றிய எனது உள்ளக் கிடக்கையை உண்மையாய் எடுத்துரைத்தாக வேண்டும். ஆதலால் ஏதோ நான் சொல்வது பற்றி நீங்கள் தவறாகக் கருதாமல் என் கபடமற்ற தன்மையை அங்கீகரித்து உங்களுக்கு சரி என்று பட்டதை மாத்திரம் ஏற்று மற்றதை தள்ளி விடுங்கள். அதற்கு ஆக என் மீது கோபமுறாதீர்கள்.


தமிழும் மதமும்


முதலாவதாக தமிழ் முன்னேற்றமடைந்து உலக பாஷை வரிசையில் அதுவும் ஒரு பாஷையாக இருக்கவேண்டுமானால் தமிழையும், மதத்தையும் பிரித்துவிடவேண்டும். தமிழுக்கும் கடவுளுக்கும் உள்ள சம்மந்தத்தையும் கொஞ்சமாவது தள்ளிவைக்கவேண்டும்.

மதசம்மந்தமற்ற ஒருவனுக்கு தமிழில் இலக்கியம் காண்பது மிகமிக அரிதாகவே இருக்கிறது. தமிழ் இலக்கணம்கூட மதத்தோடு பொருத்தப் பட்டே இருக்கிறது.


மதமும் இலக்கணமும்


உதாரணமாக “மக்கள் தேவர் நரகர் உயர்திணை” என்றால் என்ன? நரகர்கள் யார்? தேவர்கள் யார்? இலக்கணத்திலேயே மதத்தைப் போதிக்கும் சூழ்ச்சிதானே இது?

இனி பள்ளிக்கூடங்களில் பிள்ளைகளுக்குத் தமிழ் இலக்கியத்துக்குப் புத்தகங்கள் எவை? கம்ப ராமாயணம், பாரதம், பாகவதம், பெரிய புராணம், தேவாரம், திருவாய் மொழி போன்ற மத தத்துவங்களையும், ஆரிய மத தத்துவம் என்னும் ஒரு தனிப்பட்ட வகுப்பின் உயர்வைப் போதித்து மக்களை மானமற்றவர்களாக்கும் ஆபாசக் களஞ்சியங்களும் அல்லாமல் வேறு இலக்கியங்கள் மிதந்து காணப்படுகின்றனவா? இன்றையப் பண்டிதர்களுக்கு உலக ஞானத்தைவிடப் புராண ஞானங்கள் தானே அதிகமாயிருக்கின்றன?


மேல்நாட்டு இலக்கியம்


மேல்நாட்டுப் புலவர்கள் மேல்நாட்டு இலக்கியங்கள் ஆகியவைகளுக்கு இருக்கும் பெருமையும், அறிவும் நம் தமிழ்ப் புலவர்களுக்கு இருக்கின்றது என்று சொல்ல முடியுமா? ஷேக்ஸ்பியர் வேண்டுமா? இங்கிலாந்து வேண்டுமா? என்றால் இங்கிலீஷ் மகனே ஷேக்ஸ்பியர் வேண்டும் என்பானாம். நாம் எதைக் கேட்பது?

இந்தியா வேண்டுமா? கம்ப ராமாயணம் வேண்டுமா என்றால் உண்மைத்தமிழ் மகன் என்ன சொல்லுவான்? இரண்டு சனியனும் வேண்டாம் என்று தானே சொல்லுவான்.

மேல் நாட்டில்தான் அறிவாளிகள் உண்டு என்றும், கீழ்நாட்டில் அறிவாளிகள் இல்லை என்றும் நான் சொல்ல வரவில்லை.

மேல்நாட்டு அறிவாளிகள் தாங்கள் செய்த இலக்கியங்களை மத சம்மந்தமன்னியில் கடவுள் சம்மந்தமன்னியில் பெரிதும் செய்து வைத்தார்கள். அதனால் நூற்றுக்கணக்காக மேல்நாட்டு இலக்கியங்களும் பண்டிதர்களும் போற்றப்படுகிறார்கள்.

கீழ் நாட்டில் குறிப்பாக இந்தியாவில் எத்தனை இலக்கியம் உலகத்தால் மதிக்கப்படுகின்றன? எத்தனை பண்டிதர்கள் உலகத்தால் போற்றப்படுகிறார்கள்? டாக்கூர் அவர்கள் கவிக்கு ஆக போற்றப்படலாம். ஆகவே மதம் கடவுள் சம்பந்தமற்ற இலக்கியம், யாவருக்கும் பொதுவான இயற்கை ஞானத்தைப் பற்றிய இலக்கியம், யாவரும் மறுக்க முடியாத விஞ்ஞானத்தைப்பற்றிய இலக்கியம் ஆகியவைகள் மூலம் தான் ஒரு பாஷையும் அதன் இலக்கியங்களும் மேன்மையும் முடியும் என்பது மாத்திரமல்லாமல் அதைக் கையாளும் மக்களும் ஞானமுடையவர்களாவார்கள்.


மலத்தில் அரிசி பொறுக்கலாமா?


கம்ப ராமாயணம் அரிய இலக்கியமாய் இருக்கிறதாகச் சொல்லு கிறார்கள். இருந்து என்ன பயன். ஒருவன் எவ்வளவுதான் பட்டினி கிடந்தாலும் மலத்தில் இருந்து அரிசி பொறுக்குவானா? அதுபோல் தானே கம்பராமாயண இலக்கியம் இருக்கிறது. அது தமிழ் மக்களை எவ்வளவு இழிவாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. தமிழரின் சரித்திர கால எதிரிகளை எவ்வளவு மேன்மையாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. சுயமரியாதையை விரும்புகிறவன் எப்படி கம்ப ராமாயண இலக்கியத்தை படிப்பான். இன்று கம்ப ராமாயணத்தால் தமிழ் மக்களுக்கு இலக்கியம் பரவிற்றா இழிவு பரவிற்றா என்று நடு நிலையில் இருந்து யோசித்துப் பாருங்கள்.


கடவுளால் பாஷை உயராது


தமிழ் பாஷையின் பெருமை பரமசிவனுடைய டமாரத்தில் இருந்து வந்ததென்றோ, பரமசிவன் பார்வதியிடம் பேசிய பாஷை என்றோ, சொல்லி விடுவதாலும் தொண்டர் நாதனை தூதிடை விடுத்ததாலும், முதலை உண்ட பாலனை அழைத்ததாலும், எலும்பை பெண்ணாக்கினதாலும், மறைக் கதவைத் திறந்ததாலும் தமிழ் மேன்மையுற்றதாகி விடாது. இந்த ஆபாசக் கதைகள் தமிழ் வளர்ச்சியையும் மேன்மையையும் குறைக்கத்தான் பயன்படும்.

பரமசிவனுக்குகந்த பாஷை தமிழ் என்றால் வைணவனும் துருக்கனும் தமிழைப் படிப்பதே பாவமல்லவா? அன்றியும் அந்தப்படியிருந்தால் பார்ப்பான் தமிழ் மொழியை சூத்திர பாஷை என்றும், அதைக் காதில் கேட்பதே பாவம் என்றும் சொல்லுவானா? என்று யோசித்துப் பாருங்கள்.


இந்திப் புரட்டு


இன்று, தமிழ்நாட்டில் வந்து தமிழ் கற்று வயிறு வளர்ப்பவர்களாகிய பார்ப்பனர்களே இந்தி பாஷை இந்திய பாஷை ஆக வேண்டு மென்று முயற்சித்து வெற்றி பெற்று வருகிறார்கள். கோர்ட் பாஷை, அரசாங்க பாஷை ஆகியவை எல்லாம் இந்தி மயமாக வேண்டும் என்கிறார்கள். காரணம் கேட்டால் இந்தி பாஷையில் துளசிதாஸ் ராமாயணம் நன்றாய் விளங்குமென்கிறார்கள்.

தமிழ்ப் பண்டிதர்களுக்கு இதைப்பற்றிச் சிறிதும் கவலை இருந்தது என்று சொல்ல முடியவில்லை; தமிழ்ப்பண்டிதர்கள் இந்த அரசியல்வாதி களின் கூச்சலுக்கும் பார்ப்பனர்கள் ஆதிக்கத்துக்கும் பயந்து கொண்டு வாயை மூடிக்கொண்டு இருக்கிறார்கள்.


செத்த பாம்பு


பார்ப்பனர்கள் செத்த பாம்பான சமஸ்கிருதத்தை எடுத்து வைத்துக் கொண்டு எவ்வளவு ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள். பொதுப்பணம் சமஸ்கிருதத்தின் பேரால் எவ்வளவு செலவாகின்றது? பொது ஜனங்களின் வரிப்பணம் சமஸ்கிருதத்துக்கு ஆக ஏன் ஒரு பைசாவாவது செலவாக வேண்டும். தமிழ் மக்கள் யாரும் இதைப் பற்றி கவனிப்பதில்லை. தமிழ் தமிழ் என்று எங்கோ ஒரு மூலையில் இரண்டு பண்டிதர்கள் தான் சத்தம் போடுகிறார்கள். ஆனால் சமஸ்கிருதத்துக்கும் இந்திக்கும் கேப்னெட் மெம்பர்கள் ஐகோர்ட் ஜட்ஜிகள் முதல் எல்லா பார்ப்பன அதிகாரிகளும் பாடுபடுகிறார்கள். நம்ம பெரிய அதிகாரிகளுக்கோ, பெரிய செல்வாக்கும் செல்வமும் உள்ளவர்களுக்கோ தமிழைப் பற்றி கவலையும் இல்லை; தமிழைப் பற்றி அதிகம் பேருக்கு ஒன்றும் தெரியவும் தெரியாது.


தமிழபிமானம் தேசத்துரோகம்


தமிழினிடத்தில் ஒருவன் அபிமானியாக இருந்தாலே அவன் தேசத் துரோகி, வகுப்புவாதி, பிராமணத்துவேஷி என்றெல்லாம் ஆய்விடுகிறான். ஆதலால் மீட்டிங்கிக்கு வரக்கூட நமது மந்திரிகள் பயப்படுகிறார்கள்.

தமிழின் பரிதாப நிலைக்கு இதைவிட வேறு என்ன வேண்டும். தமிழ்பாஷையில், எழுத்தில் ஒரு சிறு மாற்றமோ முற்போக்கோ செய்யக்கூட ஒரு தமிழ் அபிமானியும் முயற்சிப்பதில்லை. யாராவது முயற்சித்தாலும் ஆதரவளிப்பதுமில்லை. தற்கால நிலைக்கு தமிழ் போதியதாகவும், சௌகரியமுள்ளதாகவும் ஆக்க யார் முயற்சித்தார்கள்.


மாறுதல் அவசியம்


மேல்நாட்டு பாஷைகள் எவ்வளவு மாற்றமடைந்து வருகின்றன. எழுத்துக்களில் எவ்வளவு மாறுதல் செய்து வருகிறார்கள். ரஷ்யாவில் சில பழைய எழுத்துக்களை எடுத்து விட்டார்கள். புதிய எழுத்துக்கள் சேர்த்தார்கள். அமெரிக்காவில் எழுத்து கூட்டுவதாகிய இஸ்பெல்லிங் முறையை மாற்றி விட்டார்கள். துருக்கியில் துருக்கி பாஷைக்கு உண்டான எழுத்துக்களையே அடியோடு எடுத்துவிட்டு ஆங்கில எழுத்துக்களை யேற்படுத்திக் கொண்டார்கள். தமிழர்கள் தமிழுக்கு ஆக நமக்கு விவரம் தெரிந்த காலமாய் என்ன காரியம் செய்தார்கள். காலத்துக்கு ஏற்ற மாறுதலுக்கு ஒத்துவராதவன் வெற்றிகரமாய் வாழமுடியாது; மாறுதலுக்கு மனிதன் ஆயத்தமாய் இருக்கவேண்டும். முன்னேற்றம் என்பதே மாறுதல் என்பதை உணர்ந்த மனிதனே உலகப்போட்டிக்கு தகுதியுடையவனாவான்.

தமிழ் எழுத்துக்களில் ஒரு சில மாற்றம் செய்தேன். அநேக பண்டிதர்கள் எனக்கு நன்றி செலுத்தி என்னைப் பாராட்டினார்களேயல்லாமல் ஒருவராவது அம்முயற்சிக்கு ஆதரவளித்தவர்கள் அல்ல.

இவ்வளவு பெரிய காரியத்தைச் செய்ய நான் தகுதியற்றவன் என்பதை நான் ஒப்புக்கொள்ளுகிறேன்.

ஆனால் தகுதி உள்ளவர்கள் எவரும் வெளிவராவிட்டால் நான் என் செய்வது? என்னைக் குறைகூறவோ திருத்தவோ முயற்சிப்பதின் மூலமாகவாவது இதற்கு ஒரு வழி பிறக்காதா என்றுதான் துணிந்தேன். இதுவரை யாரும் அதை லக்ஷியம் செய்யவில்லை.

ஆனாலும் நான் அம்முறையிலேயே இரண்டு மூன்று பத்திரிக்கைகள் நடத்துகிறேன். அம்முறையிலேயே 10, 20 புத்தகங்களும் வெளியிட்டிருக் கிறேன். இன்னம் எவ்வளவோ செய்ய வேண்டி இருக்கிறது.


பார்ப்பன ஆதிக்கம்


இவைகளையெல்லாம் பார்ப்பனர்களே செய்வதாகப் பாசாங்கு செய்து பார்ப்பனர்கள் தமிழின் மீது ஆதிக்கம் செலுத்தப் பார்த்தார்கள். அநேக பண்டிதர்கள் அவர்களுக்கு ஆதரவும் அளித்தார்கள். கடைசியில் டாக்டர் மாசிலாமணி முதலியார் போன்றவர்களே அம்முயற்சியைப் பாழாக்கி அதைக் காப்பாற்றினார்கள்.

தலைவர் திரு.வி.க. அவர்களும் சிறிது நமக்கு உதவி செய்தார்கள் என்றாலும் வெளியில் வந்து செய்திருந்தால் அதில் நாம் ஆதிக்கம்பெற்று இருக்கலாம்.


எங்கும் திருநாள்


எப்படி ஆனாலும் தமிழ் பாஷை உணர்ச்சி தமிழ் மக்களுக்கு இன்றியமையாதது. அதன் மூலம் தமிழ் மக்கள் ஒன்று சேர வசதி உண்டு. தலைவர் திரு.வி.க. அவர்களும் அமைச்சர் கா. நமச்சிவாய முதலியார் அவர்களும், இத்திருநாளை இம்மாதிரி ஒழிந்த நேரத் திருநாளாக இல்லாமல் தமிழ் மக்களுக்கு ஒரு புது எழுச்சியையும், ஊக்கத்தையும், உண்டாக்கும் திருநாளாகச் செய்ய வேண்டும். வருஷம் ஒவ்வொரு ஊரில் தலைமைத் திருநாள் நடைபெறச் செய்ய வேண்டும். தீபாவளி போன்ற மூடநம்பிக்கையும், சுயமரியாதை அற்றதும், ஆபாசமானதுமான பண்டிகைகள் கொண்டாடுவதைவிட இப்படி தமிழ்த் திருநாள் என்று தமிழ் மக்கள் கூட்டுறவுக்கும், மகிழ்ச்சிக்கும், கொண்டாட்டத்துக்கும் அனுகூலமாகத் திருநாள்களை பரப்பவேண்டும். நமது பெண்களுக்குப் பகுத்தறிவும், சுயமரியாதையும் இருந்தாலும் ஒரு திருநாள் வேண்டி இருக்கிறதால் தீபாவளியையும், மாரி பண்டிகையையும் கொண்டாட ஆசைப்படுகிறார்கள். ஆதலால் தக்கது செய்ய வேண்டுகிறேன்.

கடைசியாக தோழர்களே தமிழ் முன்னேறும் என்பது பற்றி எனக்கு அறிகுறிகள் தென்பட்டுவிட்டன அதென்ன வென்றால் என்னை இங்கு உள்ளே விட உங்களுக்கு தைரியம் ஏற்பட்டுவிட்டது ஒன்றே போதுமான ஆதாரமாகும்.

அன்றியும் இந்தப்பெருமை என்னையும் ஒருபடி உயர்த்திவிட்டது. என்னவென்றால் தமிழ்ப் பண்டிதர்கள் கூட்டத்தில் கலந்துகொள்ளும் படியான பெருமை ஏற்பட்டுவிட்டதல்லவா? நான் எவ்வளவு தமிழ் அறியாதவனாய் இருந்தாலும் தமிழில் எனக்கு உள்ள ஆசை உங்கள் யாரையும்விட குறைந்ததல்ல என்பதை தெரிவித்துக் கொண்டு, அந்த ஆசையின் மயக்கத்தால் நான் பேசியவற்றுள் ஏதும் குற்றம் குறைகள் இருப்பின் அவற்றை மன்னித்துக் களைந்துவிட்டு சரி என்று பட்டவையை மாத்திரம் ஏற்று அதற்காவன செய்ய வேண்டிக்கொண்டு விடைபெற்றுக் கொள்ளுகிறேன்.

                           -----------------------13-01-1936 ஆம் நாள் சென்னை பச்சையப்பன் கல்லூரி பெரிய மண்டபத்தில் நடைபெற்ற தமிழ்த்திருநாள் விழாவில் தந்தை பெரியார் அவர்கள்  ஆற்றிய சொற்பொழிவு - "குடி அரசு" சொற்பொழிவு 26.01.1936