Search This Blog

31.8.14

விநாயகரின் மனைவியர் பட்டியல்-விநாயகன் இறக்குமதி சரக்கே...!


பண்டை இலக்கியத்தில் விநாயகர் இல்லை
நம் தமிழ்நாட்டில் பண்டைத் தமிழ் நூல்களில் இவ்விநாயகர் வழிபாடு சொல்லப்படவில்லை. திருஞான சம்பந்தர் தன் தேவாரத்தில் விநாயகர் வழிபாட்டைப் பற்றிக் கூறியுள்ளார். உமையம்மை பெண் யானையின் வடிவு கொள்ளச் சிவபிரான் ஆண் யானை வடிவு கொண்டு யானை முகத்தை உடைய கணபதியைத் தோற்றுவித்தான் என்கிறார். சிறுத்தொண்டர் பரஞ்சோதி என்ற பெயரோடு வட பகுதியில் வாதாபி என்ற நகர் மேல் படையெடுத்துச் சென்று அந்நகரை அழித்து வெற்றி கொண்டு வந்தபோது அங்கு சிறப்பாகக் காணப்பட்ட கணபதியின் படிமத்தையும் கொண்டு வந்து தம்மூரில் கணபதீச்சுரம் செய்து வழிபட்டார் என்ணீபதும், வாதாபி யிலிருந்து கொணர்ந்தமையால் வாதாபி கணபதி எனப் பெயர் பெற்றார் என்பதும் இங்கு நினைவு கூர்தல் வேண்டும்.
---------------------------(தமிழாகரர் வித்துவான் செ. வெங்கடராமச் செட்டியார், அண்ணாமலைப் பல்கலைக் கழகம், "தன்னை நினையத் தருகிறான்" என்ற கட்டுரையில் பக்கம் 17)
(மேல் இரு கருத்துகளுக்கும் ஆதார நூல்: சிதம்பரம் முக்குறுணி விநாயகர் திருக்குடமுழுக்கு விழா மலர் 8+9+1978)
சிவனுக்குப் புதிய உறவு
பாடல் பெற்ற கோயில்களில் நாயன்மார் காலத்தில் விநாயகரை வைத்து வழிபட்டதாகத் தெரியவில்லை. விநாயகர் தமிழகத்துத் தெய்வம் அல்லர். முருகன் சங்க நூல்களில் இடம் பெற்றிருப்பது போல விநாயகர் இடம் பெற வில்லை. விநாயகர் வழிபாடு பம்பாய் மாகாணத்தில்தான் மிகுதியாகக் காணப்படுகிறது. அம்மாகாணம் பல்லவர் காலத்தில் பண்டைச் சாளுக்கியரால் ஆளப்பட்டு வந்தது. சிறுத் தொண்ட நாயனார் சாளுக்கியர் தலை நகரான வாதாபியைக் கைப்பற்றியபோது இப்புதிய கடவுளை அங்கு கண்டார். தாம் முன்னர் கண்டறியாத அத்திருவு ருவத்தைக் கண்டதும் வியப்புற்று அதனை எடுத்து வந்து தம் ஊரில் சீராளதேவன் கோயிலில் வைத்து வழிபட லானார். அது முதல் சீராளன் கோயில் கணபதீச்சுரம் எனப் பெயர் பெற்றது என்பதே தெரிகிறது. இக்கணபதீச்சுவரமே சம்பந்தர் பாடல்களில் இடம் பெற்றது. பின்னர் நாளடைவில் இப்புதிய கடவுளுக்கும், சிவபெருமானுக்கும் உறவுமுறை கற்பிக்கப்பட்டது. அதன் பயனாக விநாயகர் சிவபெரு மானுக்கு முதல் திருமகனாராகக் கருதப்பட்டார். இவ் விநாயகர் வாதாபியிலிருந்து குடியேறிய தெய்வம் என்பதை 'வாதாபி கணபதி பஜேம் பஜேம்' என்ற தோத்திரத்தாலும் நன்குணரலாம்.
------------------------------(சைவப் பெரும்புலவர் டாக்டர் மா. இராசமாணிக்கனார் எழுதிய "சைவ சமயம்" என்ற நூலில் பக்கம் 62)
6ஆம் நூற்றாண்டில் விநாயகர்
வடமொழியில் புராண நூல்கள் இயற்றினவர், இழிந்த மக்களின் நடையைக் காட்டிலும் அருவருக்கத்தக்கச் செய்திகளைப் பொய்யாகப் பிணைத்துக் கட்டிச் சிவபிரான் மேலும் உமைப் பிராட்டியார் மேலும் அவை தம்மை ஏற்றி யானை முகம் உடைய பிள்ளையார் அவ்விருவர் பால் நின்று தோன்றிய வரலாறுகளைப் பலவாறு ஒன்றோ டொன்று மாறுபடப் பகர்ந்திருக்கின்றனர்.
யானை முகம் உடைய பிள்ளையாராகிய கடவுள் வணக்கம் கி.பி. 5ஆம் நூற்றாண்டின் ஈற்றிலாதல் 6ஆம் நூற்றாண்டின் துவக்கத்திலாதல் தோன்றியதாகல் வேண்டும்.
---------------------------(மறைமலைஅடிகள் எழுதிய "தமிழர் மதம்" என்ற நூலில்+ பக்கம் 190)

விநாயகரின் மனைவியர் பட்டியல்
விநாயகர் தன்னை வணங்கியவர்க்கு விக்கினத்தை நீக்குவோரும், அவ்வகை வணங்காதவர் க்ரு விக்கி னத்தைத் தருபவரும் ஆவார். இவர் சித்தி, புத்தி, வல்லபை, விஷ்ணு மூர்த்தியின் குமாரிகளாகிய மோதை, பிரமோதை, சுமகை, சுந்தரி, மனோரமை, மங்கலை, கேசினி, காந்தை, சாருகாசை, சுமத்திமை, நந்தினி, காமதை முதலியவரை மணந்தார். இவரது பிறப்பைப் புராணங்கள் பல பேதபடக் கூறும் (பக்கம் 1440)

யானைத் தலையர்
கஜமுகர்: ஒரு காலத்தில் சிவமூர்த்தியும், பிராட்டியும் நந்தவனத்துச் சித்திர மண்டபத்தில் எழுதி இருந்த ஆண், பெண் யானைகளைப் பார்க்க அவற்றினின்றும் கஜமுகர் தோன்றினார். (பக்கம் 315)
----------------------------(மேற்கூறிய இரு கருத்துகட்கும் ஆதாரம் ஆ.சிங்கார வேலு முதலியார் தொகுத்த "அபிதான சிந்தாமணி")
இந்த இறக்குமதி சரக்குதான் தமிழ்நாட்டின் கடவுளா? சிந்திப்பீர்.
                   -----------------------" விடுதலை” 28-8-2014
Read more: http://viduthalai.in/page1/86655.html#ixzz3BvhcNHsv

இதுதான் வால்மீகி இராமாயணம் - 24


இதுதான் வால்மீகி இராமாயணம்

(இதிகாசங்கள் என்றும் புராணங்கள் என்றும்  மக்களிடையே உலவ விடுகிறார்கள். இவற்றிற்குத் தெய்வீக முத்திரைகள் குத்துகின்றனர் இவற்றைப் படித்தால், இவற்றின்படி ஒழுகினால் நல்லது நடக்கும் - நற்கதி கிடைக்கும் என்றெல்லாம் இன்றுவரை கூடப் பிரச்சாரம் செய்கிறார்கள். உண்மையில் அவை என்ன? இவற்றின் தன்மை என்ன? ஒழுக்கத்திற்கு இடம் இருக்கிறதா? பகுத்தறிவுக்கு வழி இருக்கிறது? ஒன்றும் இல்லை. வால்மீகி இராமாயணம் பற்றி சைவப் பெரும் புலவரான பண்டித இ.மு.சுப்பிரமணிய பிள்ளை  (சந்திரகேகரப் பாவலர்) குடிஅரசில் எழுதிய பகுதிகள் (நூலாகவும் வெளிவந்துள்ளன). இங்கே வாரம் இருமுறை வெளியிடப்படுகிறது. படியுங்கள் - பகுத்தறிந்து பாருங்கள் - தெளிவு பிறக்கும்.)
அயோத்தியா காண்டம்

ஏழாம் அத்தியாயம்

ராமனை உடனே அழைத்து வரும்படி தசரதனாலே ஏவப்பெற்ற சுமந்திரன் பல தெருக்களையும் கடந்து இராமனுடைய அரண்மனையையடைந்து, காவலுள்ள பல கட்டுகளையும் கடந்து உட்கட்டிற் புகுந்தான். அங்கேயும் பல இளமையான வீரர்கள் காவல் புரிந்தனர். அங்கே தொண்ணூற்றைந்து வயதுக்கு மேற்பட்ட கிழவர் சிலரும் கையிற் பிரம்பேந்தி நின்றனர். இராமன் தன் தந்தையின் அரண்மனையில் உண்டி முடித்துக்கொண்டு திரும்பி வந்தவுடன், அவனை அக்கிழவர்கள் தமது மடியில் வைத்துக் கொண்டு உச்சி நுகர்ந்து மார்புறத் தழுவிப் போகச் சொல்லுவார்கள். அதனால் இராமனுடைய உடலிலிருந்த குங்குமப் பூக்களாலும், கஸ்தூரி முதலிய நறுமணங்களாலும் அவர்களுடைய உடல்கள் பூசப்பட்டிருந்தன.


சுமந்திரன் விடைபெற்று உட்சென்று இராமனைக் கண்டு, வந்த செய்தியைக் கூறினான். இராமனுடைய உடலில் குங்குமம் கலந்து பன்றியினுடைய இரத்தம் போலச் சிவந்த சந்தனம் பூசப்பட்டிருந்தது. இராமன் சீதையைப் பார்த்து, என் சிறிய தாய் எனக்கு முடிசூட்டை அவசரப்படுத்தியிருப்பர். அதனால் நான் போய் வருகிறேன் என்று கூறி அவளுடைய பாதங்களைக் தொட்டு அவளைச் சமாதானப்படுத்திச் சென்றான். சீதையும் சிறிதுதூரம் பின்சென்று வாழ்த்தினள். இலக்குவன் இராமனுக்குக் காவல் செய்து சென்றான்.


கைகேயியின் அரண்மனையையடைந்த இராமன் உள்ளே சென்று தசரதன் வாடிய முகத்துடன் படுத்திருப்பதையும், கைகேயி பக்கத்தில் நிற்பதையும் கண்டு இருவரையும் தனித்தனியே வணங்கினான். தசரதன் ஒருமுறை இராமா! என்று கூப்பிட்டான். பின் கவலையால் நீர் பெருகிய கண்களுடன் பேசமுடியாம லிருந்தான். அத்துயரத்துக்குத் தான் காரணமாயிருக்கலாமோ என்று இராமன் சந்தேகித்தான். அக்கவலை தன்னாலே நேர்ந்திருக்கலாமென்றே எண்ணி இராமன் கைகேயியை நோக்கி, அம்மா! நான் ஏதேனும் குற்றம் செய்தேனோ? அவருக்கு நோயோ? தாங்கள் ஏதாவது கடுமையாகப் பேசி வருத்த முண்டாக்கினீரோ! உண்மையைக் கூறும் என்று கேட்டான். கைகேயி இராமா, அவர் உன்னிடத்தில் ஏதோ சொல்ல விரும்புகிறார். ஒருவேளை நீ கேட்க மாட்டாயோ என்ற அச்சத்தால் கலங்குகிறார். இவர் எனக்கு வாக்குறுதி செய்யத் தயங்குகிறார். அது நன்மையோ தீமையோ அப்படியே நடக்கிறனென்று நீ வாக்குறுதி செய்தாலுன்னிடம் அவருக்குப் பதிலாக நானே சொல்லுகிறேன் என்றாள். இராமன் தன்மேல் அவ்வாறு அய்யமுற்றதற்காக வருந்தி எதைச் சொன்னாலும் கேட்பதாக வாக்குறுதி செய்தான். உடனே கைகேயி நான் கேட்ட இரண்டு வரங்களால் பரதன் நாடாளவும், நீ பதினான்காண்டு காடாளவும் உன் தந்தை வாக்குறுதி செய்திருக்கிறார். நீயும் இப்போது செய்த வாக்குறுதிப்படி உடனே காட்டுக்குப்போ. இதை உன் தந்தை உன்னிடம் சொல்ல மாட்டாமல் தயங்குகிறார் என்று கூறினாள். தசரதன் தன் கண் முன்னாலேயே இக்கொடிய சொல்லைக் கேட்டுத் தவித்தான்.


அது கேட்ட இராமன், அம்மா! அப்படியே ஆகட்டும். ஆனால், ஒன்று மட்டும் என் மனத்தைப் புண்படுத்துகிறது. பரதனுக்கு முடிசூட்ட வேண்டியதைப் பற்றி அவர் ஏன் என்னிடம் சொல்லவில்லை? எனக்கு வருத்தமுண்டாகு மென்று சொல்லவில்லையென்றால், பரதன் என் தம்பியல்லனா? சீதையை நான் மணம் செய்யும்போது அவளைத் தனக்கு வேண்டுமென்று அவன் கேட்டாலும் உடனே கொடுப்பேன். இவ்வரசாட்சி எனக்கு ஒரு பொருட்டா? பரதன் நாடாளட்டும், நான் காடேகுகிறேன் என்று புகன்றான். கைகேயி அவனை உடனே காடேக  அவசரப்படுத்தி, உன் தந்தை வெட்கத்தால் உன்னோடு பேசவில்லை என்றாள். அதைக்கேட்ட தசரதன், என்ன அநியாயம் என்று கூறி மூர்ச்சித்து விழுந்தான். இராமன் ஓடி அவனையெடுத்தான். இராமன், அம்மா! குடிகளை என் வசப்படுத்தி அரசாள முயல எனக்கு எண்ணமில்லை. அவ்வாறு தாங்கள் வருந்தவேண்டாம். நான் தாமதித்திருந்தால், ஒரு வேளை பரதன் எனக்கரசைக் கொடுத்துவிடுவானோ என்று அஞ்சுகிறீரோ? நீங்களே என்னிடம் கட்டளையிட்டால் உடனே போகேனோ? இந்த அற்பமான காரியத்தைத் தாம் அரசரிடம் கேட்கவும் வேண்டுமோ? இதோ என் தாயிடமும் சீதையிடமும் விடைபெற்றுப் போகிறேன். அதுவரை தாமதியும் என்று கூறி அவளையும் தசரதனையும் வணங்கிச் சென்றான். தசரதன் வாய்விட்லறினான். இராமன் துக்கத்தை வெளிக்காட்டினால் தன் நண்பர் வருந்துவராதலால், அடக்கிக்கொண்டு வெளியே வந்தான். அப்போது அங்கிருந்த பெண்கள் யாவரும், இந்த இராமனைக் காட்டிற்கனுப்பி மிகுந்த துக்கத்தை உலகுக்கு உண்டாக்கப் போகிறார் அரசர் என்று வாய்விட்டுக் கதறித் தசரதனை நிந்தித்தார்கள். இக் கூக்குரல் தசரதனுடைய காதில் விழ, அவன் வெட்கமும் துக்கமும் கொண்டு மூர்ச்சித்தான். அக்கூக்குரலைக் கேட்ட இராமன் பெருமூச்சு விட்டுக்கொண்டு போய் இலக்குவன் பின் தொடர்ந்துவரக் கோசலையின் அரண்மனையையடைந்தான். இவ்வரலாற்றை ஆய்வோம்.
சுமந்திரனுடைய இழி குணத்தையும், செயலையும் பெண்வழிப்பட்ட தசரதன் கண்டித்தமையை முன் கட்டுரையிற் கண்டோம். தசரதன் இராமனை அந்தரங் கமாக அழைத்து அவனுக்கு மிகவும் வேண்டியவர். இரவு முழுவதும் சாக்கிரதையாகக் காவல் புரியச் சொல்லியதையும் அதன்படி சகோதர வஞ்சகனாகிய இராமனும் தனக்குற்ற நண்பர்களையழைத்துப் பேசியிருந்ததையும் முன் கட்டுரையில் கண்டோம். அதன்படியே அவன் மிகவும் வேண்டியவர்களாலே காவல் புரியப்பெற்றிருந்ததைச் சுமந்திரன் காண்கிறான். காவல் வீரரோடும் சில கிழவர்களும் இருந்தார்களாம். அவர்கள் இராமனை மார்போடணைத்து மடிமேல் வைப்பார்களாம். இராமன் பால்குடி மறவாத பிள்ளையல்லவா! அவனை அவ்வாறுதான் செய்தல் வேண்டும். என்னே அநியாயம்! சீதையை மணஞ்செய்து முடி சூட்டுக்குத் தயாராக இருந்ததோடு, பல தாரங்களோடு கூடி மகிழ்ந்திருந்த முழு ஆண்மகனான இராமனைக் கிழவர்கள் மார்போடணைப்பதாம்! மடிமீதிருத்துவதாம்! என்னே வித்தை! அதனால் இராமன மேலிருந்த வாசனைப் பூச்சுகளெல்லாம் அக்கிழவர்கள் மேல் ஒட்டுவதாம்! அவன் ஒவ்வொரு நாளும், அவனுடைய தந்தையாகிய தசரதனிடம்போய் உண்டி முடித்து வாசனை பூசித்திரும்பும்போதெல்லாம் இக்கிழவர்கள் இச்செயல் புரிவார்களாம்! 

இவ்விழி செயலுக்கு இராமனும் உட்பட்டிருந்தானாம்! அநியாயம்! அநியாயம்!! இவ்விதமான இழி செயல்புரிந்தே தசரதனும் இராம னிடம் மயங்கி, அவனை எப்போதும் தன் பக்கத்திலேயே வைத்துப்பார்க்க வேண்டுமென்கிறானென்று நாம் முன் கட்டுரையில் விவரித்த உண்மைகளை மேலே குறித்துள்ள உண்மைகள் நன்கு வலியுறுத்தப் போதிய சான்றுகளாகின்றன.
இராமனுடைய மார்பிலே பூசப்பெற்றிருந்த செஞ்சந்தனத்துக்கு உவமையாகப் பன்றியின் இரத் தத்தை வால்மீகி கூறுகிறார். இவ்வால்மீகியின் இழிந்த மனப்பான்மைதா னென்னே! சிவந்த நிறத்திற்கு உவமை கூறப்பன்றி யிரத்தந்தான் சிறந்த உவமையாகும் போலும்!


தன்னை விட்டுப்பிரிய மனமில்லாதவளாகிய சீதையை அவளுடைய கால்களைத் தொட்டு இராமன் சமாதானம் செய்தானாம். என்னே விந்தை! கணவர் மனைவியிடம் விடை பெறும்போது, ஆரியர்களுடைய முறை இதுதான் போலும்! இவ்விதமான ஒழுக்கங்களைத் தற்கால உலகம் கற்றுக்கொள்ள வேண்டியது அவசியம், அவசியம். இதனால் தசரதன் கைகேயியைப் பலமுறை பணிவுடன் அவள் காலத் தொட்டு வேண்டுவதாகக் கூறியதும், ஒரு முறை அவள் காலில் வீழ்ந்ததும் வியப்பிற்கிடமானது அன்று. ஏனெனில், இவ்வாறு மனைவியின் காலைச் சாதாரணமாக விடைபெறும்போதே தொட்டு வேண்டி விடை பெறுவது அவ்வாரிய வகுப்பினரில் இயற்கையாக இருக்கிறது. என்னே இவர்தம் நாகரிகம்!
சகோதரனாகிய பரதனை வஞ்சித்து நாடாள எண்ணிப் புத்திரத்துரோகியாகிய தசரதனோடு கூடி முயன்ற தீயவனாகிய இராமன், கைகேயி வீட்டில் தசரதன் வாடிய முகத்தோடிருந்ததைக் கண்டவுடனே திகிலடைந்தான். தசரதனுக்கு அவ்வருத்தம் தன்னையொட்டியே ஏற்பட்டிருக்க வேண்டுமென எண்ணுகிறாள். அதாவது தன் முடிசூட்டைக் கைகேயி கலைத்திருக்க வேண்டும். அதனாலேயே தசரதன் வருத்தமுற்றுளா னெனத் தீர்மானித்து உண்மையை அறிய ஆவலோடும் கைகேயியிடம் தந்திரமாக நான் ஏதாவது தவறுதல் செய்தேனோ, அரசர்க்கு நோயோ, நீ அவர் மனம் வருந்தக்கூடிய பேச்சைப் பேசினாயோ என்று கேட்கிறான். இராமனைப் போலும் தந்திரசாலிகளைக் காண்பதரிது. சரித்திரங்களிலும் இவனைப் போன்றார் ஒரு சிலரே காணப்படுகின்றனர். முதலில் குற்றத்தைத் தன்மீதேற்றிக் கடைசியில் கைகேயி ஏதாவது கேடு செய்ததுண்டா எனத் தன் குறிக்கோளைக் கூறுகிறான். இராமன் தன்மீது  கைகேயி அய்யமுற்றதற்காக வருந்துவது போலும பாசாங்கு செய்கிறான். அவனுடைய மனம் அவனுடைய முடிசூட்டுக்குக் கேடு வந்ததை எண்ணியெண்ணி வருந்தியது. ஆனால் அவன் மிகவும் தந்திரசாலியாதலின், தன் வருத்தத்தை ஒரு சிறிதும் வெளிக்காட்டாது மறைக்கிறான்.


கைகேயி அன்றே பரதன் முடிசூடவேண்டுமென்று கூறினாளாதலின் எப்படியும் பரதன் அன்று வந்துவிடுவான், அவன் அன்று வந்துசேர அவள் முன் னேற்பாடு செய்திருக்க வேண்டும். அதனால் அவன் வரும்வரை ஏதாவது சாக்குக் காட்டிக் காடேகாமல் தாமதித்துவிட்டால் அவன் மிகவும் கண்ணோட்டமுள்ள வனும் சூதுவாது தெரியாதவனுமாதலின், எப்படியாவது தனக்கு நாட்டினைக் கொடுத்துவிடுவான் எனத் தந்திரமாக எண்ணிய இராமன், பரதனுடைய முடிசூட்டைப் பற்றித் தசரதன் என்னிடம் ஏன் கூறவில்லை என்று கேள்வி கேட்கிறான். ஆனால் தந்திரசாலியாதலின் தான் காடேகுவதில் தடையில்லை யென்றும் கூறிக்கொள்ளுகிறான்.

                         -------------------------"”விடுதலை” 29-08-2014

28.8.14

மூடத்தனம் என்ற நோயை ஒழித்ததால்தான் அம்மை நோய் ஒழிக்கப்பட்டது


அம்மை என்பது ஒரு நோய் என்று அறியாமல், மாரியம்மன் என்னும் கடவுளின் கடுங்கோபம் என்று கருதிய காலம் ஒன்றுண்டு. அம்மை நோய் கண்டால் மாரியம்மன் கோவிலில் கூழ் காய்ச்சி ஊற்று வார்கள் - நோயாளியின் தலை மாட்டில் உட்கார்ந்து மாரியம் மன் தாலாட்டுப் பாடல்களைப் பாடுவார்கள்.

இந்த நிலையில் வெள்ளை யர்கள் ஆட்சியின்போது அம்மை நோய்க்குத் தடுப்பு நடவடிக்கைகள் என்றால், மூட நம்பிக்கையில் முட்டையிட்டுப் பொரித்த மூளை உள்ளவர்கள் ஏற்கமாட்டார்களே! என்ன செய் தனர்!
தடுப்பூசி நடவடிக்கையை அம்மன் பிரசாதம் என்றே கூறுவார்களாம்.

1937 ஆம் ஆண்டு காரைக் குடி ஊராட்சி உறுப்பினர் (கவுன்சிலர்) சார்பில் தெய்வத் தன்மை தெய்வீக முறை என்ற பெயரில் அம்மை நோய் போட்டுக் கொள்வதற்கான கையேடுகள் வெளியிடப்பட் டன. அதில் பெரியம்மை எனும் தொற்றுநோயை அழிக்க அம்மன் தந்த வரப்பிரசாதமே அம்மைப் பால் என்ற வகை யில் வரிகள் இடம்பெற்றிருந்தன.

இது மட்டுமா? நாடகங் களில்கூட அம்மைக்கான தடுப் பூசி அம்மன் பிரசாதமாகவே காட்டப்பட்டு, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. 1933 ஆம் ஆண்டு திருப்பத்தூரில் கிருஷ்ணசுவாமி என்ற சுகாதார துறை ஆய்வாளர் எழுதிய நாடகத்தின்மூலம் விழிப் புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இந்தத் தகவல்களை சென்னை நாளை முன்னிட்டு தரமணி ராஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தில் அறிவி யலுக்கும் மதத்துக்கும் தொடு புள்ளியாய் அம்மன் எனும் தலைப்பில் அமெரிக்க உதவிப் பேராசிரியை பெருந்தேவி குறிப்பிட்டுள்ளார்.

 உண்மையில் அம்மை என்பதுதான் என்ன?

பெரியம்மை நோய்க்கு எப்படியாவது தீர்வு காண வேண்டும் என்ற வேட்கை காரணமாக செய்த எட்வின் ஜென்னர் இருபது ஆண்டுகள் தொடர்ந்து ஆராய்ச்சி செய்தார். தனது ஆய்வை ப்யூஸ்டெரின் மருத்துவ முறை மூலம் தீர்வு உண்டு என்று உறுதியாக நம்பினார் ஜென்னர்.

இதைச் சோதித்துப் பார்க்க எண்ணிய ஜென்னர் 1796 ஆம் ஆண்டு மே 14 ஆம் நாள் தனது தோட்டக்காரரின் மகனான ஜேம்ஸ் பிப்ஸ் என்ற எட்டு வயது சிறுவனுக்கு அம்மைக்கான தடுப்பூசி போட எத்தனித்தார் ஜென்னர். சாரான நில்மெசு என்ற பண்ணைப் பெண்ணின் கையிலிருந்த கவுபாக்சு கொப்புளத்திலிருந்து எடுத்த பாலை ஊசி மூலம் ஜேம்ஸ் பிப்ஸின் உடலுக்குள் செலுத்தினார். எதிர்பார்த்தது போலவே அச்சிறுவனுக்கு கவுபாக்சு நோய் ஏற்பட்டது. ஆனால் விரைவில் குண மடைந்தான்.


சில வாரங்கள் கழித்து பெரியம்மை கிருமியான அம்மைப் பாலை ஊசி மூலம் அதே சிறுவனுக்கு செலுத்தி னார். மற்ற மருத்துவர்கள் அவரை எள்ளி நகையாடினர். சிறுவனின் உயிரோடு விளை யாடுகிறான் என்று வசைபாடினர். ஆனால் ஜென்னர் சற்றும் மனம் தளராமல் அந்தத் தடுப்பூசியை சிறுவனுக்குக் குத்தினார். கிராமவாசிகள் எண்ணியதைப் போலவே, ஜென்னர் ஆராய்ச்சி செய்து உறுதிப்படுத்தியது போலவே அந்த சிறுவனுக்கு பெரியம்மை நோய் ஏற்பட வில்லை. அம்மைக்கான தடுப் பூசி கிடைத்துவிட்டது என் பதை உறுதி செய்தமைக்கும், ஜேம்ஸ் பிப்ஸ் என்ற அந்த சிறுவனுக்கும் மருத்துவ வர லாற்றில் அழியா இடம் கிடைத் தது.  அதன்பின் மேலும் பல ஆய்வுகளை செய்து தனது முடிவுகளை 1798 ஆம் ஆண்டு அம்மை நோயின் காரணங் களும், விளைவுகளும் பற்றிய ஓர் ஆய்வு என்ற தலைப்பில் ஒரு நூலாக வெளியிட்டார்.


எட்வர்டு ஜென்னருக்கு முன்னர் 1770-களிலேயே இங்கி லாந்து மற்றும் ஜெர்மனியைச் சேர்ந்த அய்ந்து கண்டுபிடிப்பா ளர்கள் (செவெல், ஜென்சன், பெஞ்சமின் ஜெஸ்டி 1774, ரெண்டெல், பிளெட் 1791) கவுபாக்சு நோயிலிருந்து தடுப் பூசியினை பெரியம்மையால் பாதிக்கப்பட்ட மனிதர்களின் உடலில் செலுத்தி வெற்றிகரமாக சோதனை செய்திருந்தனர். இதில் பெஞ்சமின் ஜெஸ்டி என்பவர் பெரியம்மை நோய்க் கெதிரான தடுப்பூசியினை தானும், தனது மனைவி மற்றும் இரு குழந்தைகளுக்கும் செலுத்தி வெற்றி பெற்றார். ஆனால் 20 ஆண்டுகள் ஆய்வு செய்து எட்வர்டு ஜென்னர் வெளியிட்ட முடிவுகளே விளக் கத்துடன் புரிந்து கொள்ளக் கூடியதாகவும் இருந்தது.

ஆக மூடத்தனம் என்ற நோயை ஒழித்ததால்தான் அறிவியல் அடிப்படையில் அம்மை நோய் ஒழிக்கப்பட்டது என்பதை அறிக.

------------------------ மயிலாடன் அவர்கள் 28-08-2014 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

27.8.14

புராண லோகங்களும் வானியல் கோள்களும் ஒன்றா? மடமைக் கருத்துக்கு மறுப்பு





    யார் என்பதா? எது என்பதா?
    நிலவுக்கு அப்பால் _ என்பது அறிவியல் கட்டுரைகள் சில அடங்கிய ஒரு நூல். இதன் ஆசிரியர் திரு. ஏ.டி.பக்தவத்சலம் எம்.எஸ்ஸி., எம்.ஏ., எம்.எட்., டிசி.எம். ஆவார். இவரது நூல்களில் உள்ள கட்டுரைகளுள் ஒரு கட்டுரையின் தலைப்பு. யார் அந்தக் கதிரவன்?

    உண்மையிலேயே, எது அந்தக் கதிரவன்? என்றிருக்க வேண்டும் அந்தத் தலைப்பு. ஏதோ சூரியன் என்பது உயிருள்ள _ அறிவுள்ள உயர்திணைப் பெயராக எண்ணி இவ்வாறு எழுதியுள்ளார். கட்டுரையின் தொடக்கத்தில் பின்வருமாறு எழுதி, இல்லை கிறுக்கியிருக்கிறார். அது இது:
    புவிக்கு மேலே ஏழு உலகம் உள்ளன என்று நம் முன்னோர் நம்பி வந்தனர். அவர்கள், மற்ற கோள்களையே இவ்வாறு கருதினர்.


    யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்?

    புவி(பூமி)க்கு மேல் ஏழு உல(லோ)கம் உள்ளன என்று நம்பி வந்தனர் நம் முன்னோர் என்று எழுதிய ஆசிரியரின் கட்டுரையில் வரும் நம்பி வந்தனர் என்ற தொடர், அவர்கள் கண்டறிந்தனர் என்று வான் அறிவியல் அடிப்படையில் இல்லாமல் வெறும் குருட்டு (மூட)நம்பிக்கை அடிப்படையில் கருதி வந்தனர் என்பது அறிவியல் அல்ல: ஆய்வுக்கு உரியதும் அல்ல.
    யார் அந்த முன்னோர்?

    இதில் நம் முன்னோர் நம்பி வந்தனர் என்கிறார். யார் அந்த நம் முன்னோர்? தம்முடைய இந்துமத முன்னோர்களையே இப்படிக் குறிப்பிடுகிறார். மகரிஷிகள் முதலானோர் எழுதி வைத்துப் போன மூடநம்பிக்கை _ முழுக் கற்பனை _ வேடிக்கைக் கதையைத்தான் நூலாசிரியர் முன்னோர் என்கிறார்.
    சரி, இனி செய்திக்கு வருவோம். புவிக்கு மேலாக ஏழு உலகங்கள் உள்ளன என்கிறது இந்துமத முன்னோர் எழுதிய நூல்கள்.

    ஏன் எழுதவில்லை?

    நம் முன்னோர்கள் நம்பி வந்த அந்த ஏழு உலகங்கள் என்னென்ன? என எழுதவில்லை! ஏன்? எழுதினால் என்ன? எழுதியிருக்க வேண்டும். சரி போகட்டும்.


    காஞ்சி சங்கரமட நூலில் காணப்படுபவை:

    அபிதான சிந்தாமணி என்னும் நூலிலிருந்தும் இந்துமத நூல்களிலிருந்தும் அவற்றைப் பொறுக்கி எடுத்து நாம் கூற இருக்கிறோம். இவற்றை அனைவரும் அறிந்து எள்ளி நகையாட வேண்டும். அபிதான சிந்தாமணி நூலிலிருந்தும், காஞ்சி காமகோடி பீட சங்கரமட ஆதரவில், சங்கராச்சாரியார் ஆசியில் இந்து சமய மன்றம் வெளியிட்டுள்ள நூல், ஹிந்து தர்மங்கள் என்பது அதிலிருந்தும் எடுத்துக் கூறவுள்ளோம்.

    எடுத்த எடுப்பிலேயே தவறு:

    புவிக்கு மேலே உள்ள ஏழு உலகங்கள் என எழுதியிருப்பதே தவறு. புவி (பூமி) உள்ளிட்ட ஏழு உலகங்கள் என்றுதான் எழுதியிருக்க வேண்டும். தொடக்கமே பிழை.

    போவோமா ஊர்கோலம் லோகங்கள் எங்கெங்கும்?

    இப்பொழுது, அபிதான சிந்தாமணி மற்றும் ஹிந்து தர்மங்கள் நூல்களில் எழுதப்பட்டுள்ள ஏழு லோகங்களைப் பார்க்கப் போகிறோம். தயாராக இருங்கள். பூமி அதாவது பூலோகம் என்பது அதில் கூறப்படும் முதல் லோகம். இனி, நாம் போக இருப்பன பூலோகத்திற்கு மேலே உள்ள மற்ற ஆறு லோகங்கள். ஏவுகணை (Rocket)  இல்லாமல், விண்கலம் இல்லாமல் எண்ணம் அளவில் பறந்து போவோம். போவோமா ஊர்கோலம்?

    இதோ! இரண்டாம் லோகம்

    இதோ 2ஆம் லோகம் வந்து விட்டோம். இது புவர் லோகம் எனப்படுகிறது. இந்த லோகம் பூமியிலிருந்து எத்துணை தொலைவு தெரியுமா? 15 லட்சம் யோசனை தூரம். ஒரு யோசனை என்பது இன்றைய அளவீட்டு முறையில் 10 மைல் அல்லது 16 கி.மீ.

    இனி, இந்த அளவீட்டு மாற்ற அடிப்படையிலேயே குறிப்பிடப் போகிறோம். 15 லட்சம் யோசனை என்பது 240 லட்சம் கிலோ மீட்டர் ஆகும்.

    என்னென்ன? யார் யார்?

    இந்தப் புவர் லோகத்தில்தான் சூரிய _ சந்திர கிரகங்கள், 27 நட்சத்திரக் கூட்டங்கள் இருக்கின்றனவாம். (சூரியனும், சந்திரனும் கிரகங்களை என்று கட்காதீர்கள். வந்துவிட்டோம்... பார்த்துவிட்டோம். இங்கே, பதினெண் கணங்களான கின்னரர், கிம்புருடர் முதலானவர்களும், வித்யாதரர்களும் வாழ்கின்றனராம்!

    அவற்றையும், அவர்களையும் பார்த்து விட்டோம். புவர் லோகத்திற்கு மேலே உள்ள லோகம் வந்துவிட்டோம். என்ன வேகத்தில், ஒலி வேகத்திலா, ஒளி வேகத்திலா எனக் கேட்டு விடாதீர்கள்.
    சுகலோகமா? சுவர்க்க லோகமா?

    நாம் வந்து சேர்ந்த 3ஆவது மேலுலகம்தான் சுவர்க்க லோகம் என்பது. பூஜை, புனஸ்காரம், வேத பாராயணம், நியம நிஷ்டை, தவங்கள் இல்லாமலேயே எத்துணை எளிதாக சுவர்க்கம் வந்துவிட்டோமே? பூமியிலிருந்து 1600 லட்சம் கி.மீ. தொலைவில் உள்ளது இது.

    கொட்டிக் கிடக்கும் குறைவிலாச் சுகம்

    அதோ! நன்றாக உற்றுப் பாருங்கள்! நான்கு கட்டிளங் கன்னிகைகள், கவர்ச்சிக் காரிகைகள் நின்று கொண்டிருக்கிறார்கள். யார் அவர்கள்? அவர்கள் ரம்பா, (நம்ம ஊர் திரைப்பட நடிகையல்ல) மேனகா, ஊர்வசி, திலோத்தமா ஆகிய தேவலோக நாட்டியத் திலகங்கள்! நடன நங்கையர்கள்!! தேவதாசிகள்!! இங்கே எல்லாச் சுகங்களை அனுபவிக்கவும் வாய்ப்புண்டு _ (நூல்: ஹிந்து தர்மங்கள், பக்கம்: 65)

    இதற்குமேல் இந்த லோகத்தில் நாம் இருக்க வேண்டாம்! நம் கற்புக்கு ஆபத்து வந்துவிடும். பார்வை ஒன்றே போதும்! நெருங்க வேண்டாம். நம் ஏழு லோகப் பயணம் தடைப்பட்டுவிடும். இதோ, சுவர்க்கத்தை விட்டுப் புறப்பட்டு விட்டோம்.


    வந்தது பெண்ணா? தேவதை தானா?

    4ஆவது மேலுலகம் வந்து விட்டோம். இது பூமியிலிருந்து 320 கோடி கி.மீ. தொலைவில் உள்ளது. இதன் பெயர் மஹர் லோகம் என்பது. இங்கே வாழ்பவர் பெண்கள் அல்லர்! வானகத்துத் தேவதைகள்! சொக்கவைத்து உள்ளத்தைச் சுண்டி இழுக்க வைக்கும் சுந்தரத் தேவதைகள்!

    நெருங்க வேண்டாம்! உங்களை ஒருவழி பண்ணிவிடுவர்! தொலைந்தீர்கள். இப்பொழுது உடனடியாகப் புறப்பட்டு 5ஆவது மேலோகம் வந்துவிட்டோம். பெயர் ஜனோ லோகம். இந்த லோகம் பூமியிலிருந்து 80 லட்சம் யோசனை தூரத்திலுள்ளது. அதாவது 1280 கோடி கி.மீ.


    ஈருடல் ஓருயிர்

    ஜனோ லோகத்தில், ஆண்களும் பெண்களும் இடைவெளியின்றி உடலுறவு இன்பம் கொண்டிருக்கும் காட்சி! யார் இவர்கள்? கணவன்மார் இறந்தவுடன் அவர்களோடு உடன்கட்டை (சதி) ஏறித் தீயினில் வெந்து நீறாகிப் போன மனைவிமார்கள். இந்த வாழ்விணையர்கள்தான் ஜனோ லோகம் சென்று அங்கே சரசம் சல்லாபம் அனுபவிக்கிறார்களாம்!

    பரவசக் காட்சிகளைப் பார்த்தது போதும்!

    உடன்கட்டை ஏறி உயிர் நீக்கப்பட்ட பெண்களுக்கு இப்படிப்பட்ட இன்பசுகம்? காமக் களியாட்டம். என்னமோ ஆசைகாட்டி, கணவனை இழந்த மங்கையரை உடன்கட்டையில் சாகடிக்கிறது இந்து மதம்! இந்துமத வேதம்! இந்து தர்மம்!! பார்ப்பன ஆரிய ஏமாற்று வேலை! இங்கு பார்த்தது போதும்! அடுத்த லோகம் கிளம்புவோம்.


    வைகுண்ட - சிவலோக பதவிகள்

    இதோ, அடுத்த 6ஆவது லோகம் வந்துவிட்டோம்! இதன் பெயர் தபோ லோகம்! இங்கேதான் விஷ்ணு லோகமாகிய ஸ்ரீவைகுண்டம், சிவலோகமாகிய ஸ்ரீகைலாஸம் இருக்கின்றன. இரண்டையும் நாம் பார்த்துவிட்டோம். இந்த லோகம் பூமியிலிருந்து 12 கோடி யோசனை அதாவது 120 கோடி மைல் _ அதாவது 192 கோடி கி.மீ.

    சத்தியம் - இது சத்தியம்!

    தபோ லோகம் விட்டு 7ஆம் மேலோகம் வந்து விட்டோம். இதன் பெயர் ஸத்ய லோகம். இது, பூமியிலிருந்து 272 கோடி கி.மீ. தொலைவில் உள்ளது. இது பிர்ம்ம லோகம் எனவும் அழைக்கப்படும். படைப்புக் கடவுள் தன் பத்தினி சரஸ்வதியோடு இங்குதான் ஆனந்த பரவசத்தில் ஆழ்ந்து கிடக்கிறானாம். அவனது ஆனந்தத்திற்கு இடையூறு செய்யாமல், நாம் புறப்படுவோம். புறப்பட்டு விட்டோம்.

    விண்ணைத் தாண்டி வருவாயா?
    வருவோம்! உறுதியாக வருவோம்! வந்தே விட்டோம் மறுபடியும் மனிதர் வாழும் நமது பூலோகத்திற்கு. என்ன இன்பமான விண்வெளிச் சுற்றுலா!!
    வெட்கப்பட வேண்டாமா?
    மேலே கண்ட, மத புராணப் புளுகுகளை உண்மை என்று கொண்டு இந்தப் புவி உட்பட மேல் ஏழு உலகங்கள்தான் கதிரவனைச் சுற்றும் மற்றைய கோள்கள் என மனம் கூசாமல், வெட்கப்படாமல் எழுதுகிறாரே, திரு. பக்தவத்சலம் என்னும் இந்த நூலாசிரியர்?

    மீண்டும் தவறு
    மேல் உலகம் ஏழும்தான் வானியல் கோள்கள் என்கிறார். இங்கேயும் புவிக்குமேல் ஏழுகோள் என்கிறார். சூரியனுக்கு மிக அண்மையில் உள்ள புதன், வெள்ளிக் கோள்களை இவர் கூற்றுப்படி, கீழ்க் கோள்கள் என்று விலக்கிவிட்டாலும் அடுத்ததாக உள்ள புவிக்கு மேல் உள்ள 7 கோள் என்கிறாரே, அது எப்படிச் சரியாகும்? புவியினைச் சேர்த்தால்தான், செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன், புளூட்டோ ஆகியவற்றோடு ஏழு கோள்கள் ஆகும். இவரோ புவிக்கு மேலே உள்ள 7 கோள்கள் என்கிறாரே?
    இன்னொரு கோள் எது? எதை வேண்டுமானாலும் ஆதாரமின்றி அறிவியல் அடிப்படையின்றி எழுதி விடுவதா, பக்தவத்சலனார் அவர்களே! வேண்டாம் அய்யா, இந்த வீண் வேலை!
    -தொடரும்
                     - பேராசிரியர் ந.வெற்றியழகன்-- "உண்மை” ஜூலை 01-15 - 2014

    ***********************************************************************

     மடமைக் கருத்துக்கு மறுப்பு - 3

    மடமைக் கருத்துக்கு மறுப்பு - 3

      புராண லோகங்களும் வானியல் கோள்களும் ஒன்றா?

      மேலும் இல்லை; கீழும் இல்லை
      இனி, வானியல் கோள்களை _ அதாவது புவியைச் சேர்த்து மீதி உள்ள 6 கோள்களை அறிவியல் ஆய்வு அடிப்படையில் பார்ப்போம். பக்தவத்சலனார் புவிக்கு மேலுள்ள லோகங்கள், கோள்கள் என எழுதுகிறார். விண்வெளியில் மேல், கீழ் என்பதாக பிரிவினை இல்லை. புராண லோகங்கள்தான் ஒன்றன்மேல் ஒன்றாக நிலையாக இருந்து கொண்டிருப்பதாகச் சொல்லப்பட்டுள்ளன. வானியலில் அப்படி இல்லை. எந்தக் கோளும் நிலையாக, நின்றுகொண்டே இருப்பதில்லை. சூரியனை மய்யமாக வைத்துச் சுற்றிக் கொண்டே இருக்கின்றன. புவியினை அடுத்து என்று தொலைவு அடிப்படையில் கூறலாமே தவிர மேல்கீழ் என்று கூறுவதில்லை.
      இனி புவிக்கோளை விட்டு மற்ற 6 கோள்களை அறிவியல் அடிப்படையில் சுருக்கமாகப் பார்ப்போம்.
      செல்வோம் செவ்வாய்க்கு
      புவியிலிருந்து 22 கோடியே 64 லட்சம் கி.மீ. தொலைவில் செவ்வாய் (Mars) உள்ளது. சிவப்பு நிறமுடையது. வெப்பநிலை 700 _1500 தி உடையது. 2012ஆம் ஆண்டில் செவ்வாய் மேற்பரப்பில் அமெரிக்க கியூரியாசிட்டி விண்கலம் இறங்கியது. இங்கு உயிரினங்கள் இருக்க வாய்ப்பில்லை என்ற தகவலை அறிவித்தது. இதன் இரு துருவங்களில் உள்ள பனியினால் நீர் நிறைந்திருக்கிறது. புவியிலிருந்து 22,64,00000 கி.மீ. தொலைவில் உள்ளது.
      மாபெரும் கோள் மண்டலம்
      செவ்வாய்க்கு அடுத்து இருப்பது மாபெருங் கோள் வியாழன் (Jupitor). 2000 F வெப்பநிலை உடையது. புவியிலிருந்து 58 கோடியே 72 லட்சம் கி.மீ. தொலைவில் உள்ளது.
      வளையங்கள் உள்ள வான்கோள்
      அடுத்துள்ளது தன்னைச் சுற்றிலும் வளையங்கள் கொண்ட சனி (Saturn).இதன் வெப்பநிலை 2250 தி. வியாழனிலும் சனியிலும் மனிதன் இறங்கவே முடியாது. புவியிலிருந்து 128 கோடி கி.மீ. தொலைவில் உள்ளது.
      கற்பனைக்கெட்டா கடுங்குளிர்க் கோள்
      சனிக்கு அடுத்துள்ள கோள் யுரேனஸ் (Uranus). புவியிலிருந்து 282 கோடி கி.மீ. தொலைவு. கற்பனைக்கெட்டா கடும் குளிர் கொண்டது. நச்சுக்காற்று நிறைந்துள்ளது.
      நிரம்பச் சுவையுள்ள நெப்டியூன்
      யுரேனஸை அடுத்துள்ளது நெப்டியூன் (Neptune). புவியிலிருந்து 437 கோடி கி.மீ. தொலைவிலுள்ளது. இங்கேயும் நச்சுக்காற்றுதான் நிறைந்துள்ளது.

      புத்தம் புதுக்கோள்
      நெப்டியூனை அடுத்துள்ளது புளூட்டோ (Pluto) புவியிலிருந்து 573 கோடி கி.மீ. தொலைவிலுள்ளது.
      ஒப்பீட்டுப் பார்வை உணர்த்தும் உண்மை:
      இதுவரை, புராணக் கற்பனை மேல் ஏழு உலகங்களையும், வானியல் கோள்களையும் 7அய்யும் பார்த்தோம். இரண்டு வகையும் வேறு வேறு; முதலாவதாக உள்ளது இல்லாதது; கற்பனை; புராணம், புளுகுமூட்டை; பொய்க்கூற்று. மற்றது, அறிவியல், ஆய்வு உண்மைகள். ஆதாரங்கள் உள்ளவை.
      புராண லோகங்கள்தான் வானியல் கோள்கள். இரண்டும் ஒன்று: கோள்களைத்தான் முன்னோர் லோகங்கள் என்று நம்பினர் என்று கதைக்கிறார் நூலாசிரியர்.
      புராண லோகங்களில், தேவர்கள், தேவதைகள், மகரிஷிகள், மும்மூர்த்திகள், நடனமாதர்கள், ஆண்கள் பெண்களின் காமக் களியாட்டம் எல்லாம் கூறப்பட்டுள்ளன.
      ஆனால், வான் அறிவியல் கோள்களில் முதனிலை நுண்ணுயிரிகள் கூடத் தோன்ற, வாழ இடமில்லை; சூழல் இல்லை.
      இப்படியிருக்க உயிரினங்களின் உச்சகட்டமான மனித இனம் இருக்க, வாழ வழியில்லை. ஒப்பீட்டுப் பார்வை காட்டும் உண்மை இது.
      தயங்கோம், தளரோம்:
      இரண்டும் ஒன்றுதான் என முன்னோர் நம்பினர் என்று எழுதி புல்லரித்துப் போகிறார் நிலவுக்கு அப்பால் நூலாசிரியர்.
      இவர் போன்றவர் இவ்வாறு மதப் புராணக் கருத்தோடு, அறிவியல் உண்மைகளோடு ஒப்பிட்டு இரண்டும் ஒன்றுதான் என்று எழுதினால் தந்தை பெரியார் பகுத்தறிவு, அறிவியல் நெறி நடக்கும் நாம் சும்மா இருக்க மாட்டோம். இவர்கள் தங்கள் போக்கை மாற்றிக் கொள்ளாதவரை நாமும் மறுப்புரைக்கத் தயங்கோம்; தளரோம்!

      ------------------- பேராசிரியர் ந.வெற்றியழகன்-- "உண்மை” ஜூலை 01-15 - 2014

      ஈழத் தமிழர்கள் விரும்பும் அரசியல் தீர்வு தேவை!



      டெசோ  சார்பில் நான்கு முக்கிய தீர்மானங்கள்:
      அய்.நா. அமைத்த விசாரணைக் குழுவை இலங்கையில் அனுமதிக்காத ராஜபக்சேவையோ, பிரதிநிதிகளையோ அய்.நா.வில் பேச அனுமதிக்கக்கூடாது!
      தீர்மானங்களை வலியுறுத்தி செப்.3 ஆம் தேதி
      டெசோ சார்பில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம்! ஆர்ப்பாட்டம்!!
      டெசோ கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்



      சென்னை, ஆக.26- அய்.நா.வால் நியமிக்கப்பட்ட விசார ணைக் குழுவை இலங்கையில் அனுமதிக்காத ராஜபக்சே மற்றும் இலங்கை அரசின் பிரதிநிதிகளை அய்.நா. பேரவை யில் உரையாற்றிட அனுமதிக்கக்கூடாது என்ற தீர்மானம் உள்பட நான்கு தீர்மானங்களை வலியுறுத்தி டெசோ சார்பில் வரும் செப்டம்பர் 3 ஆம் தேதி பெருந்திரள் ஆர்ப்பாட்டம் சென்னையில் நடைபெறும் என்று இன்று (26.8.2014) சென்னை அண்ணா அறிவாலயத்தில் டெசோ தலைவர் கலைஞர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


      தமிழ் ஈழம் ஆதரவாளர் அமைப்பின் (டெசோ) தலைவர், தி.மு. கழகத் தலைவர் கலைஞர் அவர்கள் தலைமையில், இன்று (26.8.2014,  செவ்வாய்க்கிழமை) காலை 10.30 மணியளவில் சென்னை அண்ணா அறிவாலயத்தில், தமிழ் ஈழம் ஆதரவாளர்கள் அமைப்பின் (டெசோ) அவசரக் கூட்டம் நடைபெற்றது.
      இந்தக் கூட்டத்தில் டெசோ அமைப்பின் உறுப்பினர் களான தி.மு. கழகப் பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன், திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், பேராசிரியர் சுப.வீரபாண்டியன், திருமதி சுப்புலட்சுமி ஜெகதீசன் மற்றும் சிறப்பு அழைப் பாளர்களாக தி.மு. கழகப் பொருளாளர் தளபதி மு.க.ஸ்டா லின், தி.மு.கழகத் துணைப் பொதுச்செயலாளர் துரை முருகன், அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், ரவிக்குமார், வழக்குரைஞர்கள் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், அசன் முகமது ஜின்னா, திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் ஆகியோர் கலந்துகொண்டனர்.


      கூட்டத்தில் விரிவான விவாதத்திற்குப் பிறகு பின்வரும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.


      தீர்மானம் 1:


      ஈழத் தமிழர்கள் விரும்பும் அரசியல் தீர்வு தேவை!


      இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக இலங்கை தமிழ்த் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு 23.8.2014 அன்று டில்லியில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களைச் சந்தித்து உரையாடியதன் தொடர்ச்சியாக, மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரதமர் நரேந்திர மோடி யைச் சந்தித்துப் பேசிய தமிழ்த் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், இலங்கையில் உள்ள நிலவரம் குறித்தும், அதிகாரப் பகிர்வு தொடர்பான தங் களுடைய எதிர்பார்ப்புகள் குறித்தும் விளக்கிக் கூறினார் கள். இலங்கையில் தமிழர்கள் சம உரிமை, நீதி, கவுரவம், சுயமரியாதையுடன் வாழ்வதை உறுதி செய்யவேண்டும் என்று இலங்கை அரசை பிரதமர் நரேந்திர மோடி வற்புறுத்தியுள்ளார். இலங்கை அரசு உள்ளிட்ட அங்குள்ள அனைத்துத் தரப்பினரும் ஒருங்கிணைந்து பரஸ்பர ஒத்துழைப்புடன் செயல்பட்டு, ஒன்றுபட்ட இலங்கை என்ற அடிப்படையில் தமிழர்கள் பிரச்சினைக்கு அரசியல் ரீதியில் ஆக்கபூர்வமான தீர்வு காணவேண்டும் என்றும் அவர் வற்புறுத்தியிருக்கிறார். இவையெல்லாம் இலங்கை அரசியல் சாசனத்தின் 13 ஆவது சட்டத் திருத்தத்தின்படி நடைபெறவேண்டும் என்றும், அவர் கேட்டுக்கொண்டுள் ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


      ஈழத் தமிழர்கள் தாங்கள் விரும்பும் அரசியல் தீர்வை அவர்களே தேர்ந்தெடுத்துக் கொள்வதற்கு ஏதுவுக அவர்களிடையே பொது வாக்கெடுப்பு நடத்தி முடிவு செய்யப்படவேண்டுமென்று டெசோ ஏற்கெனவே பலமுறை தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பியிருக்கிறது.
      பிரதமர், நரேந்திர மோடி அவர்களின் தலைமையிலான தற்போதைய மத்திய அரசு இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண முன்வந்திருப்பது ஆறுதல் அளிப்பதாக அமைந்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து முன்னெடுத்துச் சென்று ஈழத் தமிழர்கள் விரும்பும் அரசியல் தீர்வு கனியும் காலகட்டத்தை விரைவுபடுத்திடத் தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு உடனடியாக மேற்கொள்ளவேண்டுமென்று டெசோ அமைப்பின் இந்த அவசரக் கூட்டம் வலியுறுத்துகிறது.


      தீர்மானம் 2:


      தமிழக மீனவர்களின் படகுகளை மீட்டுத் தருக!


      இந்தியாவின் விடுதலை நாளை முன்னிட்டு, இலங்கையிலே சிறைப்பட்டிருந்த மீனவர்களை யெல்லாம் விடுவிக்க அதிபர் ராஜபக்சே உத்தரவு பிறப்பித்த போதிலும், இலங்கை கடற்தொழில் அமைச்சர், தமிழக மீனவர் படகுகளை விடுவிக்க முடியாது என்று அறிவித்தார். இலங்கை அரசு இப்படியெல்லாம் மாற்றி மாற்றிப் பேசி தமிழக மீனவர்கள் பிரச்சினையிலும், ஈழத் தமிழர்கள் பிரச்சினையிலும் தொடர்ந்து இந்திய அரசுக்கு விளையாட்டுக் காட்டிக் கொண்டிருக்கிறது. ஏதோ தமிழக மீனவர்கள்பால் அக்கறை உள்ளவரைப் போலவும் இந்திய சுதந்திரத்தின்மீது மிகுந்த மரியாதை கொண்டிருப்பவரைப் போலவும் காட்டிக் கொள்ள, இலங்கை அதிபர் மீனவர்களை விடுவிப்பதாக அறிவிக்கிறார். ஆனால், அந்நாட்டின் கடற்தொழில் அமைச்சர் திட்டவட்ட மாக தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிக்க முடியாது என்று அறிவிக்கிறார். இலங்கையிடம் இவ்வாறு தமிழக மீனவர்களின் 62 படகுகள் சிக்கியிருக்கின்றன. அந்தப் படகுகள் இல்லாமல் தமிழக மீனவர்கள் வாழ்வாதாரத்திற்கு அடிப்படையான தங்கள் தொழிலினை நடத்த முடியாது. செய்தியாளர்கள், இலங்கை அமைச்சரிடம் இந்திய மீனவர்களின் விசைப்படகுகள் விடுவிக்கப்படுமா என்று கேட்டதற்கு இந்திய மீனவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட 62 படகுகளை விடுவிக்கும் பேச்சுக்கே இடமில்லை என்று ஆணவத்தோடு தெரிவித்திருக்கிறார். அந்த விசைப் படகுகளை விடுவிக்கக் கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் 31 ஆவது நாளாக தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். தமிழக மீனவர்களின் விசைப்படகுகளை விடுவிப்பதில் இலங்கை அமைச்சர் ஒருவர் இவ்வாறு திட்டவட்டமாக பதில் கூறியிருப்பது இந்திய அரசையே ஏமாற்றுகின்ற செயலாகத் தெரிகிறது. தமிழக மீனவர்கள் பிரச்சினையில் அவர்களுடைய விசைப் படகுகளை மீட்டுத் தருவதோடு, தமிழக மீனவர்கள் நெடுங்காலமாக சந்தித்துவரும் துயரங்களுக்கு முடிவு கட்டும் வகையில் அவர்களுக்கு நிரந்தரத் தீர்வு ஒன்றும் காணும் வகையில், மத்திய - மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளவேண்டு மென்று டெசோவின் இந்தக் கூட்டம் வலியுறுத்துகிறது.


      தீர்மானம் 3:


      அய்.நா.குழுவின் விசாரணையை இந்தியாவிலும் நடத்த அனுமதிக்கவேண்டும்!

      இந்த ஆண்டு மார்ச் மாதம் ஜெனீவாவில் நடந்த அய்.நா. மனித உரிமை ஆணையத்தின் கூட்டத்தில் இலங்கையின் மனித உரிமை மீறல்கள் குறித்து அய்.நா. குழு விசாரணை நடத்துவதென்று தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. இந்தியா மற்றும் இதர நான்கு தெற்காசிய நாடுகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தன. குறிப்பாக இந்தியா, இலங்கைக்கு அய்.நா. விசாரணைக் குழுவை அனுப்புவதற்கு எதிராக வாக்க ளித்தது. அய்.நா. மனித உரிமைகள் ஆணையக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், அய்.நா. மனித உரிமை ஆணையர் நவநீதம் பிள்ளை, கடந்த ஏழு ஆண்டுகளாக இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை நடத்துவதற்காக, அய்.நா. விசாரணைக் குழுவை நியமித்தார். இந்த அய்.நா. விசாரணைக் குழு இந்தியாவுக்குள் வந்து விசாரணை நடத்த எதிர்ப்பு தெரிவித்து இந்திய அரசு அவர்களுக்கு விசா வழங்க மறுத்திருக்கிறது. இந்த விசாரணைக்கு இலங்கை ஒத்துழைக்க மறுத்ததால், இலங்கையின் நெருங்கிய நாடுகளிலே இருந்து விசாரணையைத் தொடங்க அய்.நா. குழு முடிவு செய்தது. அந்த அளவில் இந்தியா மிகவும் முக்கியமான நாடு. ஆனால், இந்தியா விசாரணைக் குழுவையே அனுமதிக்கவில்லை. இதனால், அய்.நா. விசாரணைக் குழு தெற்காசிய நாடுகளுக்கு வெளியிலே விசாரணையை நடத்த முடிவு செய்துள்ளது. இலங்கை மீதான மனித உரிமை மீறல்கள் குறித்த அய்.நா. குழுவின் விசாரணையை இந்தியாவில் நடத்துவதற்கும், அந்தக் குழுவிற்கு அதற்கான விசாவினை வழங்குவதற்கும் இந்திய அரசு முன்வரவேண்டுமென்று டெசோ அமைப்பின் இந்த அவசரக் கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.


      தீர்மானம் 4:


      செப்டம்பர் 3 ஆம் தேதி பெருந்திரள் ஆர்ப்பாட்டம்!

      இலங்கையில் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை செய்ய அய்.நா. மனித உரிமை ஆணையத்தால் அமைக்கப்பட்ட விசாரணைக் குழுவினரை, இலங்கைக்குள் அனுமதிக்க முடியாதென்று அறிவித்த இலங்கை அதிபர் ராஜபக்சேவை 25.9.2014 அன்று தொடங்கும் அய்.நா. பொது உறுப்பினர் கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. அய்.நா.வின் மனித உரிமை ஆணையத்தால் அமைக்கப் பட்ட விசாரணைக் குழுவினரையே அனுமதிக்க மறுத்த ராஜபக்சேவையோ, அந்த நாட்டின் வேறு எந்தப் பிரதிநிதியையோ அய்.நா.வின் பொது உறுப்பினர் கூட்டத்தில் கலந்துகொள்ள அனுமதிக்கக் கூடாது என்று டெசோ அமைப்பின் இந்த அவசரக் கூட்டம் அய்.நா.வை கேட்டுக்கொள்கிறது.

      இந்த நான்கு தீர்மானங்களையும் வலியுறுத்தும் வகையில், செப்டம்பர் 3 ஆம் தேதி காலையில் சென்னையில் டெசோ அமைப்பின் சார்பில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் ஒன்றினை நடத்துவதென்று இந்தக் கூட்டம் தீர்மானிக்கிறது.

                           -----------------------"விடுதலை” 26-08-2014

      26.8.14

      இதுதான் வால்மீகி இராமாயணம் -23

      அயோத்தியா காண்டம்

      ஆறாம் அத்தியாயம் தொடர்ச்சி
      இராமனைக் குடிகளுக்கும், முக்கியமாகக் கைகேயிக்கும் வேண்டியவனாக நடந்து கொள்ளுமாறு அவன் தூண்டியிருக்கிறானென்பது அவன் பேச்சி னாலேயே தெரிகிறது. இராமன் மிகவும் தந்திரசாலி யாதலின், அவ்வாறே நடந்து வந்திருக்கிறான். அதனாலேயே கைகேயியும் அவனை நல்லவனென மயங்கியிருந்திருக்கிறாள். தசரதன் மிகவும் தீயவனா தலால், தன் தீய எண்ணத்திற்கேற்பப் பரதனையும் இகழ்கிறான். உண்மையாக அரசாட்சிக்கு உரியவனாகிய பரதனை வஞ்சித்து; நாட்டை விட்டு ஓட்டிப் பாட்டன் நாடடையுமாறு விடுத்ததோடு நில்லாமல், அவனுக்கு உரிய அரசாட்சியையும் இராமனுக்குக் கொடுக்கத் துணிந்து நின்ற தசரதனினும் கொடியவருளரோ? இவ்வஞ்சகனுடைய சூழ்ச்சியை ஒருவாறு கண்டு கொண்டு, பரதனே உண்மையில் ஆட்சிக்குரிய வனெனத் தெரியாம லிருந்தாலும் அவனுக்கு முடி சூட்டவும், அக்கிரமமாக முடிசூட முனைந்து உலகை ஏமாற்றி நல்லவனைப்போல் பாசாங்கு செய்து நிற்கும் இராமனை நாட்டைவிட்டுக் காட்டுக்கு அனுப்ப வேண்டுமென்று தற்காப்பின் பொருட்டு முனைந்து நிற்கும் கைகேயி எவ்வாறு கொடியவளாவாள்? அய்யோ! புலவர்கள் நல்லவர்களைக் கெட்டவர் களாகவும், கெட்டவர்களை நல்லவர்களாகவும் உலகுக்குக் காட்டி மயங்கச் செய்கிறார்களே! என்னே பரிதாபம்! மேன்மைத் தமிழ் மக்களே! பெரியோர்களே! உண்மையாராய்ச்சியாளரே! இவ்வுண்மைகளை யெல்லாம் நன்கு சிந்தித்துப் பார்த்து உங்கள் நண்பர் களுக்கும் உண்மையை எடுத்துக்காட்டி நல்வழிப்படுத்த முன் வாருங்கள்; முன் வாருங்கள்.


      இனித் தசரதனுடைய வஞ்சகச் சூழ்ச்சிகளுக்கு உடந்தையாயிருந்த சுமந்திரனுடைய செயலைப் பாருங்கள். அவன் அரசனை நெருங்கி அவனுடைய உண்மை நிலையை ஆராயாமலே பேசுகிறான். இது எவ்வளவு அற்பப்புத்தி? பின் தன் பேச்சால் அரசன் வருந்துகிறானென்று தெரிந்தும், அவ்வருத்தத்துக்குக் காரணத்தை அறிய முயலாமல் அவனைவிட்டுப் போய்விட முயல்கிறான். இதனாலெல்லாம் இவன் ஏதோ தன் மனத்தில் களங்கத்தோடு நடக்கிறானென்பது ஊகித்தறியவிருக்கிறது. இவனுக்கு அரசனுடைய சூழ்ச்சி, கேட்டை அடையக்கூடுமென அச்சமும், அய்யமும் இருக்கின்றன. அதனாலேயே கைகேயி இராமனை அழைத்துவரச் சொன்னவுடன் போனவன், பின் ஏதோ சந்தேகப்பட்டு நொண்டிக்குதிரைக்குச் சருக்கியது சாக்கெனத் திரும்பவும் வந்து தசரதனை அடைந்து, முடிசூட்டுக்கு எல்லாம் தயாராயிருக்கிறபடியால் மேல் உத்தரவு என்ன வென்று கேட்கிறான். இதனாலேயே இவன் தசரதனுடைய சூழ்ச்சியிலீடுபட்டு எவ்வாற்றாலும் இராமனுக்கு முடிசூட்ட முயல்கிறானென்பதும், கைகேயியினுடைய பேச்சில் அய்யங்கொண்டே திரும்பி வந்தானென்பதும் தெளிவாகும். கைகேயியி னுடைய மையலிற் சிக்குண்டு கிடந்த தசரதன், அவள் பேச்சுக்கிசைந்து இராமனை அழைத்து வருமாறு தானே கட்டளையிடுகிறான். அதன் பின்னர்ச் சுமந்திரன் நேராக இராமனை நாடிப்போகிறான். இவ்வரலாற்றைக் கம்பர் எவ்வாறு புரட்டுகிறாரென ஆராய்வோம்.

      இராமன் பதினான்கு ஆண்டுகள் காடேகவேண்டு மென்று வரங்கேட்டதாக வால்மீகி கூறக் கம்பரோ,

      ஏய வரங்களிரண்டி னொன்றினாலென்
      சேயரசாள்வது சீதை கேள்வனொன்றால்
      போய் வனமாள்வதெனப்பு கன்று நின்றாள்

      என்றே கூறுகிறார். கூனி கூற்றாக இராமன் பதினான்காண்டு காடேகவரம் கேளெனவும், பின் கைகேயி கூற்றாக இராமனிடம் பதினான்காண்டு காடேகிவர என அரசன் கூறினானெனவும், கம்பர் கூறுகிறாரேயன்றி தசரதனிடம் இவ்விரு வரத்தைக் கைகேயி நேரிற்கேட்டதாகக் கம்பர் கூறவேயில்லை. முக்கியமான இடமாகிய இதில் கம்பர் பிழைப்பட்டார். இராமன் உயிருள்ளளவும் காட்டில் வாழவேண்டுமென்று கேட்டதாகவல்லவா தசரதன் நினைத்துக் கொண்டான்? இவ்விதமாக மயங்க வைத்தார்கள்.
      தசரதனுக்கும் கைகேயிக்கும் நடந்த வாக்கு வாதத்தைக் கூறும்போது வால்மீகி மிகவும் இயற்கையான முறையிற் கூறியிருக்கிறார். கம்பரோ உலக இயற்கைக்கு மாறுபடக் கூறுகிறார். முதன்முதலாக உனக்குப்புத்தி மயங்கியதா? அன்றித் தீயோர் செய்த சூழ்ச்சியா? உள்ளதைக்கூறு என்று தசரதன் கேட்பதாகக் கம்பர் கூறுகிறார். இது தசரதனைச் சூதுவாது அறியாதவனாக உலகுக்குக் காட்ட அவர் செய்யும் முயற்சியே. வால்மீகியோ வஞ்சத் தசரதன் இச் சந்தர்ப்பத்தில் எவ்வாறு பேசுவானோ அவ்வாறே பேசுவதாக எழுதுகிறார். பலமுறை கைகேயியின் காலைத்தொட்டு வணங்குவதாகத் தசரதன் கூறியதாகவும், ஒரு முறை அவள் காலில் விழுந்ததாகவும் ஆனால் அவள் காலைத்தொட முடியவில்லை என்றும் வால்மீகி எழுதுகிறார். கம்பரோ, தசரதன் அவள் கால்மேல் விழுந்தான் என்று கூறுகிறார். பெண்களையெல்லாம் சுடவேண்டும் என்று கூறிய தசரதன், ஒருத்தி கெட்ட வளாயிருக்கப் பெண்களையெல்லாம் நிந்தித்தேனே எனத் தன்னைக் கண்டித்துக் கொள்கிறானென வால்மீகி கூறுகிறார். கம்பரோ, பெண்களே ஏழுலகத்திலுமில்லை யென்னும்படி கூரிய வாளால் கொன்று குவிப்பேன் என்று தசரதன், பொங்கிக் கூறுவதாகப் பாடுவதோட மைகிறார். இதனால் உண்மையில் மிகவும் கேவலமா னவனான தசரதனைத் தம்மையறியாமலே தமது நோக்கத்துக்கு மாறாக மேலும் கெட்டவனாக அவர் காட்டுகிறார்.


      இராமனுக்கு முடிசூட்டவும், அவனைக் காட்டுக்கனுப் பாமலிருக்கவும் ஆக இவ்விரண்டுக்கும் சேர்த்தே தசரதன் கடைசிவரை மன்றாடுவதாக வால்மீகி கூறுகிறார். கம்பரோ, முதலில் அவன் இரண்டுக்கும் சேர்த்துப் போராடியதாகவும், பின் பலியாதென எண்ணிப் பரதனுக்கு முடிசூட்ட இசைந்து பின் இராமன் காடேகாமைக்குமட்டும் மன்றாடுவதாகவும் எழுதுகிறார். அப்பாட்டு வருமாறு:-


      நின்மகன் ஆள்வான் நீ இனிதாள்வாய் நிலமெல்லாம்
      உன்வயமாமே ஆளுதிதந்தேன் உரைகுன்றேன்
      என் மகன் என்கண் என்னுயிர் எல்லா உயிர்கட்கும்
      நன்மகன் இந்த நாடிறவாமை நயஎன்றான்

      கைகேயியும் தந்த வரத்தைத் தவிர்கென்றல் நல்லறமாமோ என்று இராமன் காடேகுவதை விட்டுக்கொடேனென்று கூறுவதாகக் கம்பர் கூறுகிறார். பின்னரும கம்பர் கூற்றுப்படி தசரதன் இராமனைப் பிரியமுடியாமலே வருந்துகிறான். கைகேயியும் இராமனைக் காட்டுக்கனுப்ப வில்லையென்றால் இறப்பேன் என்றாள். உடனே இராமனைக் காட்டுக்கனுப்பத் தசரதன் இசைகிறான். ஈய்ந்தேன் ஈய்ந்தேன் இவ்வரம் என்சேய் வனமாள என்பது கம்பர் கூற்று. இவ்வாறாக ஒவ்வொரு வரத்தையும் தனித்தனியே கொடுத்ததாகக் கம்பர் கூறுகிறார். இது வால்மீகி கூற்றுக்கு முற்றிலும் மாறுபட்டது.


      பின் விடியுமட்டும் கைகேயி தூங்கியதாகக் கம்பர் கூறுகிறார். இது இயற்கைக்கு முற்றும் பொருந்தாது. வால்மீகியோ, அவர்கள் பேசிக் கொண்டிருக்கும்போதே விடிந்துவிட்டதென்று கூறுகிறார். கைகேயி தான் மற்றைய பெண்களைவிட அதிக இன்பந்தந்ததாகக் கூறுவதையும், தசரதன் கடைசிவரை அவளைப் பலவாறு ஏமாற்றித் தன் வசப்படுத்த முயன்று கெஞ்சியதையும் கம்பர் கூறவில்லை. விடியும்போது தசரதனை எழுப்ப வந்தவர்களைத் தசரதன் தடுத்ததையும் கம்பர் கூறவில்லை.


      பின்னர்ச் சுமந்திரன் வந்ததையும், சந்தேகித்துத் திரும்ப வந்ததையும் இன்னும் அவனுடைய செயல் களையும் கூறாது கம்பர் மறைத்தார். இவருக்குச் சுமந்திரன் முதலியோரை மிகவும் நல்லவர்களாகக் காட்டி, அவர்களுடைய தீய செயல்களை மறைக்க வேண்டுமென்பதே முக்கிய நோக்கமாக இருந்திருக் கிறது. ஆதலின் சுமந்திரனுடைய கள்ளச் செயல்களை யெல்லாம் மறைத்துப் பின்வரும் பாடல்களைப் பாடுகிறார்.


      விண்டொட நிவந்தகோயில்
      வேந்தர்தம் வேந்தன்றன்னைக்
      கண்டிலன் வினவக்கேட்டான்
      கைகயள் கோயில் நண்ணி
      தொண்டைவாய் மடந்தைமாரிற்
      சொல்லமற் றவருஞ்சொல்லப்
      பெண்டிரிற் கூற்றமன்னாள்
      பிள்ளையைக் கொணர்கவென்றாள்


      இப்பாடலின் கருத்து: சுமந்திரன் தசரதனை அவனுடைய அரண்மனையிலே தேடிக் காணாமல் கைகேயி அந்தப்புரமடைந்து பணிப்பெண்கள் மூலமாகச் சொல்லி விட, கைகேயி இராமனை அழைத்துவர அவனை ஏவினாள் என்பது; இதனால் சுமந்திரன் தடையொன்றுமின்றி போகக் கைகேயி யரண்மனையில் தசரதனையடைந்து பேசியதும், தசரதன் கூறியதும் சுமந்திரன் திரும்பி வந்தபோது தசரதன் அவனைக் கண்டித்து இராமனை அழைத்துவரக் கட்டளையிட்டதுமாகிய வால்மீகி கூறும் உண்மை வரலாறுகளையெல்லாம் கம்பர் மறைத்து விட்டார். உண்மையை மறைக்கும் கம்பரின் இவ்விழி செயலென்னே! இதனால் கம்பர் தமது காலத்திருந்த வைணவரிடம் புகழ் பெறவே இவ்வாறு பல முக்கிய மான உண்மை வரலாறுகளையெல்லாம் மறைத்தாரென நாம் முன்னரே கூறியது மேலும் மேலும் வலுப்பெறு கின்றது. இவ்வுண்மைகளையெல்லாம் அறிஞர்கள் உணர்வார்களாக! 

      திருமாலிடத்திலே உண்மையான பக்தியுடையவர்கள் இக்கதையின் உண்மையையறிந்து, இத்தகைய இழி குணமுள்ள ஆரிய மன்னனாகிய இராமனைத் தங்கள் தெய்மாகிய திருமாலின் தோற்றமெனக் கூறி உலகை ஏமாற்றி செயல்களை நன்கு தெரிந்து இன்னும் இம்மயக்கத்திலழுந்தியிராமல் உண்மையை நாடி உணர்வார்களாக!

                                              -----------------------------”விடுதலை” 27-08-2014

      செத்த மொழிக்குச் சிங்காரம் - ஏன்?சமஸ்கிருதம் பற்றி பார்ப்பனர்கள்





      சமஸ்கிருத வாரம் கொண்டாட வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துவிட்டது. அது தமிழ்நாட்டில் பெரும் கிளர்ச்சியை ஏற்படுத்திவிட்டது. திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் அதனை எதிர்த்து ஆகஸ்டு முதல் தேதி கண்டன ஆர்ப்பாட்டத்தை அறிவித்துவிட்டார்.

      சமஸ்கிருதமும் ஒரு மொழிதானே _ குறிப்பிட்ட பள்ளிகளில்தானே கொண்டாடச் சொல்லியிருக்கிறார்கள் என்று சிலர் முட்டுக் கொடுக்கக் கிளம்பியுள்ளனர். அப்படிப்பட்டவர்கள் ஆர்.எஸ்.எஸ். _ இந்துத்துவா வகையறாக்களைச் சேர்ந்தவர்கள்.

      சமஸ்கிருதம் என்பது இந்தோ _ ஆரியக் குடும்பத்தைச் சேர்ந்தது. ஆரியக் கலாச்சாரத்தின் சின்னம்! இதுகுறித்து பார்ப்பனரான சூரிய நாராயண சாஸ்திரியே (பரிதிமாற்கலைஞர்) தெளிவுபடுத்திவிட்டார்.

      வடமேற்கே பல்லாயிரங் காலத்திற்கு அப்புறமுள்ளது, அய்ரோப்பாக் கண்டத்தினொரு பகுதியாகிய ஸ்காந்திநேவியம் என்ற இடத்தினின்றும், ஆரியர் என்ற சாதியார் புறப்பட்டு, நாலா பக்கங்களிலும் சென்று சேர்ந்தனர். அவ்வாரியருள் ஒரு பிரிவினர் மத்திய ஆசியாவின் மேற்குப் பாகத்திலுள்ள துருக்கிஸ்தானம் என்ற இடத்திற்றிறங்கினர். இவ்விடம் தங்கிய ஆரியர்களே, கைபர் கணவாய் வழியாக இந்தியாவிலும் புகுந்தனர். அவர்கள் அவ்வாறு புகுந்தமை தமிழர்களது நன்மைக்கோ, அன்றித் தீமைக்கோ? இதனை யறிவுடையோர் எளிதிற் உணர்ந்து கொள்வார்கள். (தமிழ் மொழியின் வரலாறு _ பக்கம் 22, 23)

      அத்தோடு நிற்கவில்லை பரிதிமாற் கலைஞர். தமிழர்க்கு ஆரியர் இந்தியாவிற்கு வருமுன்னரே, எழுதப் படிக்கத் தெரியும். எழுத்து சுவடி யென்பன தனித்தமிழ்ச் சொற்களாதலுங் காண்க. இதனால் அகத்திய முனிவர் தமிழ்ப் பாஷைக்கு நெடுங்கணக்கு வகுத்தனரென்பதும் ஆரியரோடு கலந்த பிறகே தமிழர் தங்கள் பாஷைக்கு நெடுங்கணக்கு வகுத்தனரென்பதும், பொருந்தாமை யறிக (தமிழ் மொழியின் வரலாறு _ பக்கம் 24) என்று கூறுகிறார் ஆய்வாளரான பரிதிமாற் கலைஞர்.

      அத்தோடு அய்யர் குலத்தில் பிறந்த  அவர் நின்றுவிடவில்லை.
      வடமொழி தமிழ்நாட்டில் வெகுநாள்  காறும் இயங்கியும் அதற்குத் தமிழ்மொழியைத் தன் வழியிலே திருப்பிக் கொள்ளுதற்குற்ற ஆற்றலில்லாது போயிற்று. வடமொழியாளர் தமிழர்களது ஒழுக்க வழக்கங்களை யுணர்ந்து அவற்றிற்கேற்ப வடமொழியில் நூல்கள் வகுப்பான் புகுந்தனர். அவர்களெல்லாம் ஆன்ம நூற் பயிற்சி மிக்குடையாராயும், கலையுணர்ச்சி சான்றவராயு மிருந்தமை பற்றித் தமிழரது திவ்விய ஸ்தலங்களுக்குப் புராணங்கள் வகுத்தனர்; தமிழர்களிடத்தில்லாதிருந்த அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என்ற நால்வகைச் சாதி முறையை மெல்லமெல்ல நாட்டிவிட்டனர்.

      முற்கடைப் பலனில் வேறாகிய முறைமைசொல்
      நால்வகைச் சாதியிந் நாட்டினில்நீர் நாட்டினீர்

      என்று ஆரியரை நோக்கி முழங்குங் கபிலரகவலையுங் காண்க. இன்னும் அவர்தம் புந்திநலங்காட்டித் தமிழர்களிடம் அமைச்சர்களெனவும், மேலதிகாரப் பிரபுக்களெனவும் அமைத்துக் கொண்டனர்.
      தமிழரிடத்திலிருந்த பல அரிய விஷயங்களையும் மொழிபெயர்த்துத் தமிழர் அறியு முன்னரே அவற்றைத் தாமறிந்தன போலவும், வடமொழியினின்றுமே தமிழிற்கு அவை வந்தன போலவும் காட்டினர்.
      (அதே நூல் பக்கம் 26, 27)

      ஆரியர் உண்டாக்கிய பிராமண, சத்திரிய, வைசிய, சூத்திரர் என்ற பிரிவுகளைத்தான் அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என்று தமிழாக்கிக் கூறியுள்ளார் என்பது அடிக்கோடிட்டுக் காணத் தகுந்ததே!

      மனித சமூகத்திலே பிறப்பின் அடிப்படையில் நான்கு கூறுகளாகப் பிரித்தது போதாதென்று தமிழிலும் ஊடுருவி தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு என்று நான்கு பிரிவுகளாகப் பிரித்துத் தள்ளிவிட்டது சமஸ்கிருத ஆரியம்.
      சூரிய நாராயண சாஸ்திரி என்ற பரிதிமாற் கலைஞர் அவர்களே இந்த உண்மையை உரித்துக் காட்டியிருக்க, ஏதோ கால்டுவெல் என்ற கிறித்தவர் ஆரியர் _ திராவிடர் என்று பிரிவினை விஷத்தை உண்டாக்கிவிட்டார் என்று பார்ப்பனர்கள் கூறுவது எவ்வளவு பெரிய அப்பட்டமான திரிபுவாதம்!
      தந்தை பெரியார் அவர்களும் இதே கருத்தினை தன் ஆய்வு மூலம் கூறியதுண்டே! (விடுதலை 15.2.1960)

      இவ்வழி மொழிகளிலே தெலுங்குதான் வடமொழியோடு மிகவுங் கலந்து விசேடமான திருத்தப்பாடடைந்தது; தனது நெடுங்கணக்கையே திருத்தி விரித்துக்கொண்டது; பல்லாயிரஞ் சொற்களையும் மேற்கொண்டது; வடசொல் இலக்கணத்தையும் மிகத் தழுவிக்கொண்டது.

      தெலுங்கிலக்கணமெல்லாம் தமிழ்ப்போக்கில் இயங்க வேண்டியிருக்க, அதை விடுத்து வடமொழிப் போக்கை அனுசரிக்கப் புகுந்தன. புகுதலும் வடமொழியிலே தெலுங்கிலக்கணம் அமைவதாயிற்று. இஃது இடைக்காலத்திலிருந்த நன்னயப்பட்ட ராதிய பிராமண வையாகரணர்கள் செய்த தவறு. இத்தவறு காரணமாகத் தெலுங்கு தமிழின் வழிமொழி யன்றென்பது அசங்கதமாம்.

      இவ்வாறே கன்னடமுந் தெலுங்கை யொட்டிப் பெரிதும் இயங்கினமையான் அதுபோலவே பல்லாற்றானுந் தன்னைச் சீர்படுத்திக்கொண்டது. இதனாலன்றோ பழங்கன்னடம் என்றும் புதுக்கன்னடம் என்றும் அஃது இருவேறு பிரிவினதாகி யியங்குகின்றது. பழங்கன்னடத்தைத் தமிழினின்றும் பிறந்ததெனக் கூறுங் கன்னடப் புலவர் பலர் இன்றுமுளர்.
      இனி மலையாளமோ வெகுநாள் காறுந் திருந்தாதிருந்தது. இறுதியில் ஏறக்குறைய முந்நூற்றியாண்டுகட்கு முன்னர் எழுத்தச்சன் என்பானொருவனால் மிக்க திருத்தப்பாடு அடைந்தது; உடனே வடமொழிச் சொற்களையுஞ் சொற்றொடர்களையும் சந்திகளையும் முடிபுகளையும் மலையாளம் மேற்கொண்டது.
      (தமிழ் மொழியின் வரலாறு _ பக்கம் 25, 26)

      சமஸ்கிருதம் தமிழுக்கு, தமிழர்களுக்குச் செய்த நாசங்கள் கொஞ்சமா _ நஞ்சமா?


      தமிழர்களின் ஊர்ப் பெயர்களையெல்லாம் தமிழ் அரசர்களைக் கையில் போட்டுக் கொண்டு சமஸ்கிருதமயமாக்கினார்களே!

      திருமறைக்காடு என்ற அழகிய தமிழ்ப் பெயர் வேதாரண்யம் ஆனது எப்படி?
      திருமுதுகுன்றம் _ விருத்தாசலம் ஆகிவிட்டதே! புளியந்தோப்பு _ திண்டிவனம் ஆன கதை என்ன?

      குடமூக்கு கும்பகோணம் ஆனதும், குரங்காடுதுறை கபிஸ்தலம் என்று தாவியதும், திருச்சிற்றம்பலம் சிதம்பரம் ஆனதும், மயிலாடுதுறை மாயூரம் ஆனதெல்லாம் பாழ்படுத்தும் பார்ப்பனர்களின் சமஸ்கிருத வேட்டைதானே!
      ஊர்ப் பெயர்கள் எல்லாம் மட்டுமல்ல; தமிழர்களின் பெயர்கள் எல்லாம் சமஸ்கிருத மயமாக்கப்பட்ட கொடுமையை என்னென்று சொல்லுவது!
      அருண்மொழித் தேவனாகிய தமிழரசன்கூட தன் பெயரை ராஜராஜனாக மாற்றிக் கொண்ட மயக்கத்தை ஒரு கணம் எண்ணிப் பார்க்க வேண்டாமா?
      கேசவன் என்றும் ஆதிகேசவன் என்றும் பெயர் சூட்டிக்கொண்ட நம் தமிழர்கள் வெட்கப்பட வேண்டாமா? (கேசம் -_ மயிர் இதற்குமேல் விளக்கத் தேவையில்லையே!)

      செங்குட்டுவன், இளங்கோவன், நெடுஞ்செழியன், இளவழகன், அறிவுடை நம்பி என்ற தமிழ்ப் பெயர்கள் எல்லாம் தொலைந்தது இந்தப் பாழும் சமஸ்கிருத நஞ்சால்தானே!

      தமிழன் கட்டிய கோவிலுக்குள் அடித்து வைக்கப்பட்டுள்ள குழவிக் கற்களாகிய கடவுள்களுக்கெல்லாம் தமிழில் பெயர் உண்டா?

      கபாலீஸ்வரன், அருணாசலேஸ்வரர், சுந்தரேஸ்வரர், ஜம்புகேஸ்வரர், ஏகாம்பரேஸ்வரர், சிறீரெங்கநாதர், அபயாம்பாள், கற்பகாம்பாள் என்று பட்டியல் நீள்கிறதே!

      இவையெல்லாம் சமஸ்கிருதம் என்னும் ஆரிய பார்ப்பன மொழியின் ஆதிக்க அழுக்குகள் அல்லவா?

      தமிழ் இலக்கியத்திற்குள்ளும் அதன் வாலாட்டம் உண்டே!

      கலித்தொகை, குறுந்தொகைகளில் அகநானூறு, புறநானூறுகளில் இரண்டு விழுக்காடு, திருக்குறளில் மூன்று விழுக்காடு, சிலப்பதிகாரம், மணிமேகலைக் காப்பியங்களில் ஆறு விழுக்காடு, தேவார, திருவாசகங்களில் பதினைந்து விழுக்காடு, வில்லிபாரதம், கம்பராமாயணம், கந்த புராணங்களில் 20  முதல் 25 விழுக்காடு, பிற்காலத்தில குவிக்கப்பட்ட தல புராணங்களில் 50 விழுக்காடு என்று சமஸ்கிருத கழிவுநீர் தமிழ் இலக்கியத்திற்குள் கலந்துவிட்டதே.
      பாட்டியலில் பன்னீருயிரும், முதலாறு மெய்யும் பிராமண வருணம் என்றும், அடுத்த ஆறு மெய்கள் சத்திரியர் வருணமென்றும், நான்கு மெய்கள் வைசிய வருணமென்றும் பிற இரண்டும் சூத்திரர் வருணம் என்றும் புகுத்தியதும் ஆரியம் _ சமஸ்கிருதம் என்பதையும் எண்ணிப் பாரீர்!

      நமது தமிழ் மன்னர்கள் எல்லாம் கல்விக் கழகங்களில் சொல்லிக் கொடுத்தது எல்லாம் சாரக சமிதை, அஷ்டாங்க இருதய சமிதை என்கிற வடமொழி சாத்திரங்கள்தானே கற்றுக் கொடுக்கப்பட்டன. அவற்றைத் தமிழர்கள் படிக்க முடியுமா என்றால் அதுதான் இல்லை. சூத்திரன் அவற்றைப் படிக்கலாமா? படித்தால் நாக்கை அறுக்க வேண்டுமே.

      தன்மான இயக்கம் தலைதூக்கியதற்குப் பிறகுதானே தந்தை பெரியார் அவர்கள் தலைமை தமிழர்களுக்குக் கிடைத்த பிறகுதானே தலைகீழ் மாற்றம் வந்தது.

      1937இல் பிரதமராக இருந்த ஆச்சாரியார் (ராஜாஜி) இந்தியைப் புகுத்திய நிலையில் தந்தை பெரியார் தலைமையில் கிளர்ந்து எழுந்த இந்தி எதிர்ப்பு இயக்கம் கொடுத்த நன்கொடைதானே தமிழர் மறுமலர்ச்சி.

      நாராயணசாமி நெடுஞ்செழியன் ஆனதும், இராமையன் அன்பழகன் ஆனதும், சோமசுந்தரம் மதியழகன் ஆனதும், அரங்கசாமி அரங்கண்ணல் ஆனதும், கோதண்டபாணி வில்லாளன் ஆனதெல்லாம் அதற்குப் பிறகு அல்லவா!
      அக்ராசனாதிபதி தலைவர் ஆனார், உபந்நியாசம் சொற்பொழிவானது, வந்தனோபசாரம் நன்றி என்று மலர்ந்தது. நமஸ்காரம் ஒழிந்து வணக்கம் வந்ததெல்லாம் எப்பொழுது முகிழ்த்தது என்பதை _ திராவிடத்தால் வீழ்ந்தோம் என்று பார்ப்பன தொங்கு சதைகளாக இருந்து குரல் கொடுக்கும் தமிழ்த் தேசியவாதிகள் சிந்தித்துப் பார்க்கட்டும்!

      சென்னை பிரசிடென்சி கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராக இருந்த பெரும்புலவர் கா.நமச்சிவாய முதலியாருக்கு மாதச் சம்பளம் ரூ.81, அதே நேரத்தில் சமஸ்கிருதப் பேராசிரியராக இருந்த குப்புசாமி சாஸ்திரிக்கு மாதச் சம்பளம் ரூ.300க்கு மேல். இதனைச் சுட்டிக்காட்டி தந்தை பெரியார் எழுதியதன் பலன்தானே நீதிக்கட்சி பிரதமர் பனகல் அரசர் ஆணை பிறப்பித்து சமமாக்கினார். (விடுதலை 15.2.1960)

      மருத்துவக் கல்லூரியில் சேருவதற்குச் சமஸ்கிருதம் படித்திருக்க வேண்டும் என்றிருந்த நிபந்தனையைக் கிழித்தெறிந்ததும் நீதிக்கட்சியே!

      அண்ணாமலைப் பல்கலைக்கழக வெள்ளி விழாவில் பங்கேற்க வந்த திருவாங்கூர் மன்னர் ஒரு லட்ச ரூபாயை நன்கொடையாக அளித்து சமஸ்கிருத வளர்ச்சிக்குப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்ட நேரத்தில், தந்தை பெரியார் கடும் எதிர்ப்பினைச் சுடச்சுட வெளிப்படுத்தினார்.
      வடமொழியைப் பரப்புவோர்க்கு ஆயுதமாக அண்ணாமலைப் பல்கலைக்கழகம் ஆகிவிடக் கூடாது, வேண்டுமென்றால் அந்த நன்கொடையைத் திருப்பிக்கூட அனுப்பிவிடலாம் என்று ஆவேசப்பட்டார். அந்தச் சூழலில் திருவாங்கூர் மன்னர், வள்ளல் அண்ணாமலையார், பேராசிரியர் இரத்தினசாமி ஆகியோர் கலந்து பேசி, பல்கலைக்கழக மாணவர் விடுதியை விரிவுபடுத்திட அந்நிதியைப் பயன்படுத்துவது என்று முடிவுக்கு வந்தனர் _ அந்த முடிவுக்காக தந்தை பெரியார் பாராட்டினார். (விடுதலை 12.7.1943, தலையங்கம்)

      1956இல் சமஸ்கிருத கமிஷன் ஒன்றை மத்திய அரசு அமைத்தது. பல்கலைக் கழகங்களிலும் வெளியிலும் சமஸ்கிருத மொழிக்குப் புத்துயிர் ஊட்டுவதுதான் அதன் நோக்கம். அந்தக் காவிகளின் கருத்துரைப்படியே உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பதஞ்சலி சாஸ்திரி தலைமையில் எட்டு உறுப்பினர்களைக் கொண்ட மத்திய சமஸ்கிருத போர்டு ஒன்று உருவாக்கப்பட்டது. அதற்காக அந்தக்கால மதிப்பில் பல லட்ச ரூபாய்க்குக் கொட்டி அழப்பட்டது.

      1959ஆம் ஆண்டில் சமஸ்கிருத விஸ்வ பரிஷத்தின் கூட்டம் புதுடில்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் அதன் தலைவர் பாபு ராஜேந்திர பிரசாத் தலைமையில் நடந்தது. அதில் போடப்பட்ட தீர்மானம் என்ன தெரியுமா? அரசிடம் சொல்லி _ சமஸ்கிருதப் படிப்புக்கென்று ஒதுக்கப்பட்டுள்ள தொகையைச் செலவழிக்காவிட்டாலும்கூட, அதை சமஸ்கிருதம் அல்லாதவற்றிற்குச் செலவு செய்யக் கூடாது; அது சம்பந்தமாக சட்டங்கள் இயற்றுவதோ உத்தரவு பிறப்பிப்பதோ தடுக்கப்பட வேண்டும் என்று  முடிவு செய்து அதற்காக நாடாளுமன்றத்தின் சபாநாயகர் அனந்தசயனம் அய்யங்கார், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.பி.சின்ஹா, உட்பட பலரையும் நியமித்துக் கொண்டனர். (பவன்ஸ் ஜர்னல் _23.3.1959) என்றால் அந்தப் பெரிய மனிதர்களின் தாராள உள்ளத்தைத் தாராளமாகவே தெரிந்து கொள்ளலாமே!
      சமஸ்கிருதம் பேசுவோர் நாட்டில் 0_01 சதவிகிதமாக இருந்தாலும்கூட இந்தியாவில் பெரும்பாலான பல்கலைக்கழகங்களில் அந்தத் துறையை வைத்துக் கொண்டுதானே இருக்கிறார்கள்.

      தங்களுக்கு அதிகாரம் கிடைக்கும் பொழுதெல்லாம் செத்த மொழியைச் சிங்காரிக்கும் வேலையில்தானே இறங்குகிறார்கள். வாஜ்பேயி தலைமையிலான ஆட்சியில் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருந்த முரளி மனோகர் ஜோஷி என்ன செய்தார் என்பதை நினைவுப்படுத்திக் கொள்ளலாமே!

      1998_1999 ஓர் ஆண்டையே சமஸ்கிருத ஆண்டாக அறிவித்ததோடு அவர் திருவாய் மலர்ந்தது என்ன?

      சமஸ்கிருதம் நமது வேத மொழி, நமது கலாச்சாரம் சமஸ்கிருதத்தில்தான் உள்ளது. நாம் மொழியை மறப்பது நமது கலாச்சாரத்தை மறப்பதற்கு ஒப்பாகும். தெய்வீக மொழியான சமஸ்கிருதம் அனைத்துப் பள்ளிகளிலும் அட்டவணைப் படுத்தப்பட வேண்டும். அனைத்துப் பள்ளிகளிலும் சமஸ்கிருதத்திற்கு முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும். பள்ளிகளில் சரஸ்வதி வந்தனா கட்டாயம் இடம்பெற வேண்டும்.

      நாட்டின் வளமான எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு அனைத்து அரசியல் கட்சிகளும் இதற்கு ஆதரவு தரவேண்டும். இதை மத ரீதியாகப் பார்க்காமல் கலாச்சாரப் பாதுகாப்பு ரீதியாகப் பார்க்கவேண்டும். என்று சொன்னாரே! இதைத்தான் அறிஞர் அண்ணா அவர்கள் அழகாகப் படம் பிடித்துக் காட்டினார்.
      தமிழ்நாட்டில் பிறந்தும், தமிழ்மொழி பயின்றும், தமிழரெனச் சொல்லிக்கொண்ட போதிலும் தமிழ்மொழி மூலம் பிழைத்து வந்தாலும்; தமிழிலே பண்டிதரெனப் பட்டம் பெற்றாலும், சங்க நூல் கற்றாலும், பார்ப்பனர்கள் தமிழிடத்திலே அன்பு கொள்வதில்லை. அதனைத் தம் தாய்மொழியெனக் கருதுவதில்லை. அவர்களின் எண்ணமெல்லாம் வடமொழியாகிய சமஸ்கிருதத்தின் மீதுதான் (திராவிட நாடு 2.11.1947)
      தமிழ்நாட்டுப் பார்ப்பனர்களைப் பற்றி அண்ணா அவர்கள் படம் பிடித்துக் காட்டினாலும் இந்தியாவில் மட்டுமல்ல; உலகம் முழுவதும் உள்ள பார்ப்பனர்களின் நிலைப்பாடும் இதுதான்.

      பார்ப்பனர்கள் தங்கள் செத்த மொழி மீது இவ்வளவு வெறி பிடித்துக் காணப்பட்டாலும் தமிழர்கள் தங்கள் மொழி உணர்வை வெளிப்படுத்தினால், அதன் வளர்ச்சிக்காகக் குரல் கொடுத்தால், செயல்பட்டால் பார்ப்பனர்கள் என்னென்னவெல்லாம் பட்டம் சூட்டுவார்கள் தெரியுமா?

      தமிழை வளர்க்கிறேன் என்று அரசு நிர்வாகத்தில் புகுந்து குட்டிச்சுவராக்கும் இவர்களை மொழி நக்சலைட்டுகள் என்றுதான் கருதவேண்டும். முதல்வர் (கலைஞர்) தமிழைச் சொல்லி ஏமாற்றுகிறவராக இருப்பதால், சென்னை மேயர் முதல் தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் வரை தமிழை அமல்படுத்துகிறோம் என்று கம்பு, கடப்பாரை சகிதம் கிளம்பி விடுகிறார்கள். துப்பாக்கி ஏந்துகிறவர்கள்தான் தீவிரவாதிகள் என்பதல்ல. இதுபோல நடைமுறைக்கு ஒவ்வாத மொழிவெறி பிடித்து அலைகிறவர்களும், அந்த மொழிவெறியைத் தங்கள் அதிகாரத்தின் மூலம் ஜனங்கள் மீது திணிக்கிறவர்களும் தீவிரவாதிகள்தான். இவர்கள் மொழி நக்சலைட்டுகள். (துக்ளக் 15.9.2010)

      தமிழ்மொழியைச் செம்மொழியாக்க சட்டம் கொண்டு வந்தால், ஒரு வேளை கஞ்சிக்கே வழி இல்லாதவருக்கு மூன்று வேளையும் மட்டன் பிரியாணி கிடைக்குமா என்று (தினமலர் வாரமலர் 13.6.2004) எழுதுகிறதே! செத்தொழிந்த சமஸ்கிருதத்தை மத்திய அரசு அதிகாரத்தின் துணைகொண்டு விழா கொண்டாடச் சொல்லும் கூட்டம்தான் நம்மைப் பார்த்து மொழி நக்சலைட்டுகள் என்று பட்டம் சூட்டுவதைக் கவனிக்க வேண்டும்.
      நம் தமிழ் வேந்தர்கள்கூட பார்ப்பன சமஸ்கிருதத்தைத்தான் கட்டியழுது கொண்டு இருந்தனர். நாயக்க மன்னர்களைப் பற்றிக் கேட்கவே வேண்டாம்.
      மதுரையில் நாயக்க மன்னர் ஆண்ட காலத்தில் பத்தாயிரம் மாணவர்கள் படித்தனர். அத்தனைப் பேரும் பார்ப்பனர்களாக இருந்தனர் என்று ராபர்ட்_டி_நொபிலி பாதிரியார் எழுதிய கடிதத்தில் (22.11.1610) குறிப்பிட்டுள்ளார் என்றால் அந்தக் கல்வி முழுமையும் சமஸ்கிருதத்தில் உள்ள வேதக் கல்விதான்.

      திருக்குறளுக்கு உரை எழுதிய பரிமேலழகரின் பூணூல்தனம்தான் சாதாரணமானதா?

      குறளில் வரும் அறம் என்னும் சொல்லுக்கு உரை எழுதும்பொழுது _ அறம் என்பது மனு முதலிய நூல்களுள் விதித்தன செய்தலும், விலக்கியன ஒழித்தலும் ஆம்! என்றுதானே எழுதினார்.

      பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற திருவள்ளுவர் எங்கே, ஒரு குலத்துக்கொரு நீதி சொல்லும் வருணதரும மனுதர்மம் எங்கே?
      சமஸ்கிருதம் _ ஆரியப் பார்ப்பனப் பண்பாட்டு ஆதிக்கத்தின் குறியீடு என்று சொல்லுவது இந்த அடிப்படையில்தான்.

      சமஸ்கிருதத்தைப் பற்றி விவேகானந்தர் கூறியிருப்பதை தமிழ்க்கடல் மறைமலை அடிகள் சுட்டிக் காட்டுகிறார்: மதச் சண்டைகளும்; சாதி வேற்றுமைக் கலகங்களும் பல்குவதற்கு ஒரு பெருங் கருவியாய் இருந்ததும் _ இருப்பதும் சமஸ்கிருத மொழியே யாகும் என்றும், சமஸ்கிருத மொழி நூல்கள் தொலைந்து போகுமானால் இப்போராட்டங்களும் தொலைந்து போகுமென்று வருந்திக் கூறினார் விவேகானந்தர். (மறைமலை அடிகளின் தமிழர் மதம் _ பக்கம் 24)

      சமஸ்கிருதம் செத்துச் சுண்ணாம்பாகிப் போனதற்குக் காரணமே இந்தப் பார்ப்பனர்கள்தான். பார்ப்பனர்களைத் தவிர, மற்றவர்கள் வேதங்களைப் படிக்கக் கூடாது, படித்தால் நாக்கை அறுக்க வேண்டும்;  காதால் கேட்கக் கூடாது; கேட்டால் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்ற வேண்டும் என்று எழுதி வைத்திருந்தால் _ பெரும்பான்மை மக்களுக்குத் தடை விதித்திருந்தால் அந்த மொழி செத்து ஒழிவதைத் தவிர வேறு வழியில்லையே! சமஸ்கிருதத்தைப் பொறுத்தவரை அதுதான் நடந்தது.

      சமஸ் = எல்லாம்; கிருதி = தொகுக்கப்பட்டது என்று பொருள். டர்கிஸ் மொழி, ஈரானிய மொழி, பர்மீயன் மொழி, கிரேக்க மொழி ஆகிய மொழிகளின் கூட்டுக் கலவையே இது. கி.மு.53இல் குசான வம்சத்தைச் சேர்ந்த கனிஷ்கர்தான் சமஸ்கிருத மொழியை உருவுக்குக் கொண்டு வந்தவர். இந்த லட்சணத்தில் சி.பி.எஸ்.இ. இயக்குநர் சுற்றறிக்கையில் எல்லா மொழிகளுக்கும் சமஸ்கிருதம்தான் தாய்மொழி என்று தம்பட்டம் அடிக்கிறார்.

      நடராஜப் பெருமான் தன்னை மறந்து ஆடிக் கொண்டிருந்தபோது அவரது உடுக்கிலிருந்து ஹயவரடு _ ஹல் முதலிய பதினான்கு வேறு வேறான சப்தங்கள் வெளிவந்தன. அவற்றை முறைப்படுத்த பாணினி ரிஷி சமஸ்கிருதத்தை உண்டாக்கினார் என்ற கதையளப்பும்கூட உண்டு. அதனால்தான் இது தேவ பாஷையாம்.

      அப்படியென்றால் எதிர்க்கேள்வி இடியாக இறங்காதா? தெய்வ மொழி செத்த மொழி ஆனது ஏன்? என்பதுதான் அந்தக் கேள்வி.
      என்னதான் முட்டுக் கொடுத்தாலும் விளக்கெண்ணெய்க்குக் கேடே தவிர செத்த மொழியான பிள்ளை பிழைக்காது - பிழைக்கவே பிழைக்காது!




      சமஸ்கிருதம் பற்றி பார்ப்பனர்கள்

      பார்ப்பனர்கள் தங்களைப் பார்ப்பனர்களாகவேதான் கருதுகின்றனரே தவிர தங்களைத் தமிழர்கள் என்று ஒருக்காலும் உளப்பூர்வமாக ஒப்புக் கொள்வதில்லை; தமிழைத் தங்கள் தாய்மொழியாக ஏற்றுக் கொள்வதில்லை. அதற்கு ஒரு தேர்வு வைத்துப் பார்க்கலாம். சமஸ்கிருதம்பற்றி பார்ப்பனர்களின் எண்ணம் என்ன என்பதை காஷாயதாரியாகிய சங்கராச்சாரியிலிருந்து லவுகீகம் பேசும் அரசியல் பார்ப்பனர்கள் வரை கூறியுள்ள கருத்துகள் எடுத்துக்காட்டிற்காக கீழே திரட்டித் தரப்பட்டுள்ளன. இவற்றின் வழி பார்ப்பனர்கள் யார்? அவர்களின் உள்ளுணர்வு எத்தகையது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
      காஞ்சி சங்கராச்சாரியார்
      சமஸ்கிருத பாஷை பிரம்மத்திற்குச் சமானம். அதாவது பரம்பொருளுக்குச் சமானம். பரம்பொருள் எங்கும் நிறைந்திருக்கிறது. அதற்கென்று ஒரு குறிப்பிட்ட பகுதியோ ஒரு தேசமோ கிடையாது. இதைத்தான் சர்வ வியாபகத்வம் என்பார்கள்.
      உலகில் முதன்முதலில் தமிழ்மொழி தோன்றிற்று. அதுவும் அகத்தியரால் தோற்றுவிக்கப்பட்டது. பிறகுதான் சமஸ்கிருதம் வந்தது. அதுவும் கொஞ்ச நூற்றாண்டுகளுக்கு முன்புதான் பாணினி என்ற ஒருவர் இந்த சமஸ்கிருதத்திற்கு இலக்கண சாஸ்திரங்களை இயற்றினார். அது முதற்கொண்டுதான் அந்த மொழியும், பாஷையும் வளர்ச்சி ஏற்பட்டிருக்கும் என்று கூறுகிறார்கள். ஆனால் பாஷா சாஸ்திரம் என்று சொல்லக் கூடிய (Philology) சாஸ்திரத்தில் சமஸ்கிருதம்தான் பண்டைய காலத்திலிருந்து வந்த ஒரு பாஷை என்று கூறப்பட்டுள்ளது.
      (காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரசுவதியின் ஞான வழி (வானதி பதிப்பக வெளியீடு) என்ற நூலிலிருந்து)
      சி.ராஜகோபாலாச்சாரியார்
      தமது முன்னோர்கள் தமக்கு வைத்துவிட்டுப் போன பழைய பெருமைகளைப் புறக்கணிப்பது தவறாகும். நமக்கிருக்கும் பெருமைகள் ஸம்ஸ்கிருதத்துடன் இணைக்கப்பட்டவை.
      பள்ளிக்கூடங்களிலிருந்தும், கல்லூரிகளி லிருந்தும் வெளியே வரும் மாணவர்களுக்கு நமது முன்னோர்கள் நமக்கு வைத்துவிட்டுப் போன பெருமைகளின் சாவி போன்ற ஸம்ஸ்கிருதம் தெரியாவிட்டால் மகா பெரிய விபத்தாகும்.
      அது பணம் இருக்கும் பெட்டியின் சாவியைத் தொலைத்துவிட்டு சாப்பாட்டுக்குப் பிச்சையெடுப்பதற்கு ஒப்பாகும்.
      ஒரு பள்ளிப் படிப்பில் ஸம்ஸ்கிருதம் சேர்ந்திருக்க வேண்டியது மிகவும் அவசியம். ஹிந்துவாயிருந்தாலும், முஸ்லீமாயிருந்தாலும் நமது பழைய பெருமைகளுக்குத் திறவுகோல் ஸம்ஸ்கிருதம்தான்.
      புத்தர்கள், ஹிந்துக்கள், இந்தியக் கிறிஸ்தவர்கள் முதலியவர்களுக்கு ஸம்ஸ்கிருதத்தைத் தவிர வேறு பெருமைகள் கிடையாது.
      இப்போதைய நவீன கல்விகளுடன் ஸம்ஸ்கிருதத்தையும் சேர்த்துக் கற்றுக் கொண்டால் இன்னும் ஒரு தலைமுறைக்குள் ஹிந்து மதம் இப்போது இருப்பதுபோல் இராது. ஸம்ஸ்கிருதம் ரொம்ப அழகான பாஷை. அதை ஈசுவர பாஷை என்றுகூடச் சொல்லலாம்.
      _ சென்னை லயோலா கல்லூரி ஸம்ஸ்கிருத சங்கத்தின் துவக்க விழாவில் 24.7.1937 அன்று பிரதமர் அமைச்சர் சி.ராஜகோபாலாச்சாரியார் பேசியது.

      சர். சி.பி.ராமசாமி அய்யர்
      1914-_1919 ஹோம் ரூல் இயக்கக் காலத்தில் நான் இந்தியாவெங்கும் சுற்றுப் பயணம் செய்து, இந்தியாவுக்கு ஒரு பொதுமொழி தேவையென்றும், அந்தப் பொதுமொழி சமஸ்கிருதம் என்றும் பிரச்சாரம் செய்து வந்தேன். அப்போது கொண்ட இந்தக் கருத்தை பின்னரும் நான் விடவில்லை. உண்மைத் தேசிய மொழியும் ஹிந்தி மொழியின் தாயுமான இந்த சமஸ்கிருத மொழி, எளிமையாக்கப்பட்டு மக்கள் அனைவரும் புரிந்து கொள்ளவும் பேசவும் தகுந்ததாகச் செய்யப்பட வேண்டும்
      _அண்ணாமலைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் சர்.சி.பி.ராமசாமி அய்யர், உதகமண்டலத்தில் (5.6.53) நடைபெற்ற இந்தி பிரசார சபைக் கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டிப் பேசியதிலிருந்து.



      எஸ்.சத்தியமூர்த்தி அய்யர்




      என் கைக்கு அதிகாரம் வந்தால் நான் சர்வாதிகாரி இந்தியுடன் சமஸ்கிருதத்தையும் கட்டாயப் பாடமாகப் படிக்கச் செய்வேன். சர்க்கார் உத்தியோகஸ்தர்கள் அத்தனைப் பேரும் கட்டாயம் சமஸ்கிருதம் படித்திருக்க வேண்டும் என்கின்ற நிபந்தனையும் உடனே ஏற்படுத்திவிடுவேன். ஏனெனில் காந்தியார் உயிருடன் இருக்கும்போதே இராமராஜ்யம் ஏற்பட்டுவிட வேண்டும் என்பது என் ஆசை. இராமராஜ்யமென்பது வருணாசிரம தருமத்தை _ அவரவர் தம்தம் சாதி முறைப்படியே தொழில் செய்ய வேண்டும் என்ற தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது. ஒரு திராவிடக் கவியாகிய கம்பரே இதை ஒப்புக் கொண்டும் இருக்கிறார். இது பற்றிய வடமொழி இலக்கியத்தைத் தமிழில் மொழிபெயர்த்தும் இருக்கிறார். இராமராஜ்யம் ஏற்பட வேண்டுமானால் எல்லோரும் சமஸ்கிருதம் படித்தே தீர வேண்டும்.
      _ எஸ்.சத்தியமூர்த்தி அய்யர், மெயில் 25.7.1939.


      வி.வி.கிரி


      சமஸ்கிருதம் நாட்டு மொழியாக ஆக்கப்பட்டால் மொழிப் பிரச்சினையே இருக்காது. இதை நான் 1957 முதல் பிரச்சாரம் செய்து வந்திருக்கின்றேன்.
      _ சிலப்பதிகார சமஸ்கிருத மொழி பெயர்ப்புப் புத்தக வெளியீட்டு விழாவில் வி.வி.கிரி ஆற்றிய உரையிலிருந்து 2.1.1968
      கோல்வாக்கர்
      மொழிப் பிரச்சினைக்கு ஒரே தீர்வுதான் இருக்கிறது; சமஸ்கிருதம் ஆட்சி மொழியாக வருகின்ற காலம்வரை, இந்திக்கே நாம் முன்னுரிமை தந்து, நமது வசதிக்காக ஆட்சி மொழியாக்கிக் கொள்ள வேண்டும்.
      _ கோல்வாக்கரின் ‘Bunch of thoughts’ அத்தியாயம் 8, பக்.113. ஆர்.வெங்கட்ராமன்


      புதிய கல்விக் கொள்கையின் பள்ளிக்கூடப் பாடத்திட்டத்தில் சமஸ்கிருதம் ஒரு விருப்பப் பாடமாக சேர்க்கப்படவில்லை. இந்தக் குறை நீங்கி பள்ளிக்கூட மாணவர்கள் சமஸ்கிருதம் படிக்க வசதி கிடைக்க வேண்டும். நாட்டின் அறிஞர்களிடையே கலாச்சார ஒற்றுமையை வளர்க்கும் ஒரு இணைப்பு சமஸ்கிருதம். ஒரு காலத்தில் இந்தியாவின் மொழி, சிந்தனையில் சமஸ்கிருதம் நிரவி நின்றதோடு, அதன் ஆன்மப் பிரதிபலிப்பாகவும் விளங்கியது.
      _ பாலக்காடு மாவட்டத்தின் பட்டாம்பியிலுள்ள அரசு சமஸ்கிருத கல்லூரி பவள விழா நிகழ்ச்சியில் குடியரசுத் துணைத் தலைவர் திரு.ஆர்வெங்கட்ராமன் ஆற்றிய உரை
      (ஆதாரம்: தினமணி சென்னைப் பதிப்பு: நாள்: 15.12.86 பக்,9)
      ஆனந்த விகடன்
      முதல் மூன்று பாரங்களில் மட்டுமே இந்தி கட்டாயம் இருப்பதால், அதற்கு மேல் உள்ள வகுப்புகளுக்கு சமஸ்கிருதத்தை விருப்பப் பாடமாக வேணும் வைக்கலாம்.
      _ ஆனந்த விகடன் 17.10.1937 
      *************************************************************************************
      தந்தை பெரியாரின் கணிப்பு
      பார்ப்பனர்களில் ஒரு சாரார் வெகுநாள்களுக்கு முன்னாலேயே இந்த நாட்டுக்கு குடி வந்திருந்தாலும் இந்த நாட்டிலேயே நிலையாக வாழ்பவர்களானாலும் இந்த நாட்டுப் பழங்குடி மக்கள் எல்லோரையும்விட தாங்கள் மேலானவர்கள் என்று பிரித்துக் காட்டி தனித்து நிற்க வகைசெய்து கொண்டிருக்கிறார்கள். இந்தப் பார்ப்பனர்கள் தமிழ்மொழியைத் தங்களது வாழ்க்கை வழிக்காகவும் வசதிக்கு ஆகவும் பேசுகிறவர்களே ஒழிய அம்மொழியில் உள்ள அன்புக்காகவோ, ஆர்வத்திற்கு ஆகவோ பேசுகிறவர்கள் அல்ல. உதாரணம் என்னவென்றால், இந்தப் பார்ப்பனர்கள் தங்களுடைய வைதீக காரியங்களிலும் தேவாதி பூஜை பிரார்த்தனைகளிலும் தமிழை விலக்கி வைத்திருக்கிறவர்கள்.
      இந்தப் பார்ப்பனர்கள் ஆரிய மொழி (வடமொழி)யையே மேலாக எண்ணுவதோடு அதனுடைய மேன்மையைக் காப்பாற்றவே அதிகமாய் முயற்சிப்பவர்கள்.
      இந்தப் பார்ப்பனர்கள் தங்களுடைய ஒழுக்க ஆதாரங்கள் தமிழ் மொழியை சூத்திர (இழிவான - மிலேச்ச) பாஷை என்று குறை கூறுகிறதை ஏற்றுக் கொண்டு அதன்படி பெரிதும் ஒழுகுபவர்கள்.
      _ தந்தை பெரியார், குடிஅரசு, 4.5.1939) 
       -----------------------------------------------------------------------------------------------------------------------------------
      ராமலிங்க அடிகளாரும் சமஸ்கிருத வழிபாடும்

      இது, திருவருட்பா 6-_ஆவது திருமுறையில் வசன பாகத்தில், சத்தியப் பெரு விண்ணப்பம் என்னும் தலைப்பின்கீழ். (தென்மொழி -_ தமிழ்) என்னும் துணைத் தலைப்பில் உள்ளது.
      இடம்பத்தையும், ஆரவாரத்தையும், பிரயாசத்தையும், பெருமறைப்பையும், போது போக்கையும் உண்டு பண்ணுகிற ஆரிய முதலிய பாஷைகளில் எனக்கு ஆசை செல்ல வொட்டாது. பயிலுதற்கும் அறிதற்கும் மிகவும் இலேசுடையதாய், பாடுதற்கும் துதித்தற்கும் மிகவும் இனிமை உடையதாய், சாகாக் கல்வியை இலேசில் அறிவிப்பதாய்த் திருவருள்வலத்தால் கிடைத்த தென்மொழியொன்றனிடத்தே மனம் பற்றச் செய்து அத்தென்மொழிகளாற் பலவகைத் தோத்திரப் பாட்டுகளைப் பாடுவித்தருளினீர் என்கிறார். அவர் நம்பும் கடவுளை நோக்கிக் கூறுகிறார் வடலூர் இராமலிங்க அடிகளார்; அத்தகைய தமிழ் வழிபாட்டு மொழியாகத் தகுதி இல்லை என்கின்றனர். எப்படி இருக்கிறது?
       ------------------------------------------------------------------------------------------------------------------------
      ------------------------------ கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள்  ஆகஸ்ட் 01-15 2014 “உண்மை” இதழில் எழுதிய கட்டுரை

      25.8.14

      இதுதான் வால்மீகி இராமாயணம் - 22



      இதுதான் வால்மீகி இராமாயணம்

      (இதிகாசங்கள் என்றும் புராணங்கள் என்றும்  மக்களிடையே உலவ விடுகிறார்கள். இவற்றிற்குத் தெய்வீக முத்திரைகள் குத்துகின்றனர் இவற்றைப் படித்தால், இவற்றின்படி ஒழுகினால் நல்லது நடக்கும் - நற்கதி கிடைக்கும் என்றெல்லாம் இன்றுவரை கூடப் பிரச்சாரம் செய்கிறார்கள். உண்மையில் அவை என்ன? இவற்றின் தன்மை என்ன? ஒழுக்கத்திற்கு இடம் இருக்கிறதா? பகுத்தறிவுக்கு வழி இருக்கிறது? ஒன்றும் இல்லை. வால்மீகி இராமாயணம் பற்றி சைவப் பெரும் புலவரான பண்டித இ.மு.சுப்பிரமணிய பிள்ளை  (சந்திரகேகரப் பாவலர்) குடிஅரசில் எழுதிய பகுதிகள் (நூலாகவும் வெளிவந்துள்ளன). இங்கே வாரம் இருமுறை வெளியிடப்படுகிறது. படியுங்கள் - பகுத்தறிந்து பாருங்கள் - தெளிவு பிறக்கும்.)



      அயோத்தியா காண்டம்

      ஆறாம் அத்தியாயம் தொடர்ச்சி
      -என்று பிதற்றிக் காலை நீட்டிக்கொண்டு உட்கார்ந்தி ருக்கும் கைகேயியின் பாதங்களைப் பிடிக்கக் கீழே குனிந்து வேரற்ற மரம்போல் அவளைத் தொட முடியாமல் கீழே விழுந்தான்.

      கைகேயி திரும்பவும் அவனைப்பார்த்து, நீ மிகவும் யோக்கியனைப் போலப் பேசிக்கொள்கிறாய். எனக்குக் கொடுத்திருக்கிற இரண்டு வரங்களுக்கு என்னிடத்தில் ஏன்கடன்பட விரும்புகிறாய் என்றாள். அதைக் கேட்ட தசரதன் மூர்ச்சையடைந்தான்.

      பின் அவன் தெளிந்து கடுங்கோபத்தோடு, கொடி யவளே! விண்ணுலகத்தில் தேவர்கள் என்னைப்பார்த்து பெண்ணுக்காக மகனை எப்படிக் காட்டுக்கனுப்பினீ ரென்று கேட்டால்,
      நான் எப்படி உயிரை வைத்துக் கொள்வேன்? இராமனுக்கு முடி சூட்டுகிறேனென்று கூறிய வாக்குப்பொய்யாகுமே. அறுபதினாயிரம் ஆண்டுகளுக்கப்பால் பெற்ற பிள்ளையாயிற்றே. இப்பிடிவாதத்தை விட்டுவிடு என்று புலம்பினான்.

      சூரியன் மறைந்தான், இரவு ஆரம்பித்தது. மூன்று யாம நிலவுள்ள அவ்விரவு அவனுக்கு ஒரு யுகம்போலிருந்தது - இரவே விரைவில் மடிய மாட்டாயா என்று அவன் ஏங்கினான்; பிறகு வேறு கதியில்லையென்று கண்டு கைகுவித்து வணங்கி, அவளைச் சமாதானஞ்செய்ய முயன்றான். அவன், பெண்ணே! நீ நல்லவளாயிற்றே, தயவுசெய்; நான் உனக்குச் செய்த வாக்குறுதியோ ஒருவருக்கும் தெரியாது; இராமனுக்கே பலரறியச் செய்தது. நாளை முடிசூட்டு என்று பலரறியச் சொல்லிவிட்டேன். அது நடைபெறவிலைலையென்றால், என்னை எல்லோரும் இகழ்வார்கள். ஆகையால், நீ விட்டுக்கொடுக்க வேண்டும். நான் உணக்குச் சொன்னபடி இந்த நாடு உன்னதே. நீ இந்த நாட்டை அவனுக்குத் தானங்கொடு; அதனால் உனக்கு மிகவும் புகழுண்டாகும். பருத்த தொடைகளை உடையவளே! பரதனும் மகிழ்ச்சியடைவான். அவன் மிகவும் நல்லவனா யிற்றே என்று வேண்டினான். இவ்வேண்டுதலாலும் கைகேயி மனம் இளகவில்லை. உடனே அவன் மூர்ச்சித் தான். இவ்வாறு அவன் துக்கத்தோடு அன்றிரவைக் கழித்தான். பொழுதும் விடிந்தது, எழுப்ப வந்தவர்களை வேண்டா மென்று தடுத்துவிட்டான்.

      கைகேயி அவனைப் பார்த்து, சொன்ன வார்த்தை தாண்டாதேயும். ஏன் தரையிற்கிடந்து புரளுகிறீர். சத்தியமே சிறந்தது;  இராமனைக் காட்டிற்கனுப்பும்; உம்மை மும்முறை எச்சரிக்கிறேன். இல்லையானால் என் உயிரை விடுகிறேன் என்றாள். அதைக்கேட்ட தசரதன், பாவி; இந்த முடிசூட்டு விழாவைத் தடுத்தால், நீயும் உன் மகனும் எனக்கு உத்திரகிரியைகளைச் செய்ய வேண்டாம் என்றான். கைகேயி திரும்பவும் உமது வார்த்தைகள் என் மனத்தை வருத்துகின்றன. இராமனை இப்போதே வரவழைத்துக் காட்டுக்கனுப்பிப் பரதனை அரசனாக்கி உமது வாக்கை நிறைவேற்றும் என்று கூறினான். தசரதன், தர்ம பாசத்தால் நான் கட்டுப்பட்டி ருக்கிறேன், ஆனாலும் என் மகனை இன்னுமொரு முறை பார்க்க விரும்புகிறேன் என்று கதறினான்.
      பொழுது விடிந்தது. வசிட்டமுனி முடிசூட்டுக்குத் தயாராக வந்தவன், அந்தப்புரத்தருகே சுமந்திரனைக் கண்டான். உடனே வசிட்டன் தான் வந்திருப்பதையும், முகூர்த்தம் நெருங்குவதையும் தசரதனிடம் போய்க் கூற அவனை அனுப்பினான்.

      சுமந்திரன் உள்ளேபோய்த் தசரதனிருக்குமிடத்தை அடைந்து அவனருகே சென்று அவனிலையை அறியாமல் பலவிதமாகப் புகழத்தொடங்கினான். தசரதன் அச்சொற்களால் இன்னும் மனம் நொந்து, சுமந்திரரே! சொல்லமுடியாத துக்கத்தை அடைந்து கொண்டிருக்கும் என் மனத்தை உம் சொற்கள் இன்னும் அதிகமாகப் புண்படுத்துகின்றன என்று பரிதாபகரமான குரலுடன் சொன்னான். அதைக்கேட்டுச் சுமந்திரன் திடுக்கிட்டுத் துக்கத்தால் சோர்ந்திருக்கும் மன்னனை உற்றுப்பார்த்து, ஒன்றும் பேசாமல் கை கூப்பிக் கொண்டு அங்கிருந்து போகப் புறப்பட்டான். அரசன் துக்கமேலீட்டால் ஒன்றும் கூறமுடியாது தவித்ததைக் கண்ட கைகேயி, அரச நீதியை அனுசரித்து இராமனுக்கு முடிசூட்டும் பேச்சைப்பேசி இரவு முழுவதும் மகிழ்ச்சியால் தூக்கமில்லாமல் சோர்ந்திருக்கிறார் மன்னர். இராமனை இப்பொழுதே போய் அழைத்து வாரும், சீக்கிரம் என்று கட்டளையிட்டாள். சுமந்திரனும் இராமனுக்கு நன்மை வருமென மகிழ்ந்து அழைத்து வரச்சென்றான்.
      வாசலில் மன்னர் பலர் கூடியிருந்தனர். அவர்களைக் கண்ட சுமந்திரன் நீங்கள் காத்திருப்பதை அரசனிடம் தெரிவிக்கிறேன், என்று கூறி, மறுபடியும் தசரதனி ருக்குமிடம் சென்றான். மன்னனிருந்த இடத்தினருகே சென்று, அங்கே போடப்பட்டிருந்த திரைக்கு எதிரே நின்று கொண்டு, அவன் விடிந்து நெடுநேரமாயிற்று, உத்தரவுப்படி எல்லாம் தயாராயிருக்கிறது, தயவு செய்து மேலே நடக்க வேண்டியதைக் கட்டளையிட வேண்டும். எல்லோரும் காத்திருக்கிறார்கள் என்று கூறினான். இச்சொற்கள் தசரதனுடைய காதில் விழ அவன் விழித்துக்கொண்டு, சுமந்திரரே! உம்மிடம் இராமனை அழைத்துவரும்படி கைகேயி சொன்னாளல்லவா? இன்னும் ஏன் என் கட்டளைப்படி அழைத்து வரவில்லை. தூங்குகிறேனென்று நினைக்க வேண்டாம், சீக்கிரமாய்ப் போய் இராமனை அழைத்து வாரும் என்று மறுபடியும் உத்தரவு செய்தான். சுமந்திரன் தலைவணங்கி இராமனுக்கு ஏதோ நன்மை உண்டாகப் போகிறதென்று மகிழ்ந்து இராமனை அழைத்துவரப் புறப்பட்டான். இவ்வரலாற்றை ஆய்வோம்.

      மேற்கண்ட வரலாற்றிலே தசரதன் மிகவும் அற்ப அறிவும், அற்பக்குணமுமுள்ளவன் என்பது தெரிய வருகிறது. அவன் கைகேயியை மணஞ்செய்யும்பேது, அவள் வயிற்றிற் பிறக்கும் பிள்ளைக்கே அரசைத் தருவதாக வாக்குறுதி செய்தான். பின் அவ்வாக்குறுதிக்கு மாறாக இராமனுக்கு முடிசூட்ட நினைத்துப் பலவாறு முயல்கிறான். அதனால் பரதனை வஞ்சித்து, அவன் பாட்டனுடைய ஊருக்குத் தந்திரமாக அனுப்பி விடுகிறான். எல்லோருக்கும் நல்லவனாக நடந்து எல்லோருடைய அன்பையும் பெறவேண்டும்; அப்படியானாலே அரசைப் பெறலாம் என இராமனிடம் கூறி எல்லோரிடமும், முக்கியமாகக் கைகேயியிடத்தில் மிகவும் நல்லவனாக நடந்து கொள்ளுமாறு தூண்டு கிறான். கிரமமாக அரசாட்சி பரதனுக்கே உரியதாகும். அதனால் அதைப்பெறுவதற்குத் தன் தந்தையினுடைய சூழ்ச்சிகளின்படி தான் நடந்து கொண்டாலே நினைத்தது கைகூடுமெனத் துணிந்து இராமன் அவ்வாறே நடக்கிறான். தசரதன், வசிட்டன், சுமந்திரன் முதலிய அமைச்சரையும் தன் வசப்படுத்திக் குடிகளையும், குறுநில மன்னரையும் அழைத்துப் பாசாங்கு பண்ணி உண்மையறியாத அவர்களையும் இராமனுக்கு முடி சூட்டச் சம்மதிக்கச் செய்து, அம்முடிசூட்டும் மறுநாளே நடைபெற வேண்டுமெனவும் முடிவு செய்கிறான். யாவரும் இசைகின்றனர். அரசனுடைய வஞ்சனையை வசிட்டனும் சுமந்திரனும் உணர்த்தும் அவனுக்கு உடந்தையாயிருக்கின்றனர். இராமனை வரவழைத்து அரசனிடம் உண்மை தெரிந்து, பரதனுக்கு வேண்டியவர் களாக யாராவது இருந்தால், அவர்கள் அவனுக்குக் கேடு சூழக்கூடும். ஆகையால் மிகவும் வேண்டிய நண்பர்களின் பாதுகாவலிலிருக்க வேண்டுமென்று சொல்லுகிறான். பரதனுக்குத் தெரிவதன் முன்னரே முடிசூட்டல் நடைபெற வேண்டுமெனவும் தசரதன் விரைகிறான். இராமனும் அரசாட்சிப் பேராசையால் இவ்வளவு வஞ்சனைகளுக்கும் இசைந்திருக்கிறான். அரசன் திரும்பவும் கூப்பிடுகிறானெனச் சுமந்திரன் கூறியபோது, முடிசூட்டுக்கு இடையூறோ என நடுங் கினான்.

      இவ்விவரங்களெல்லாம் நாம் முன் கட்டுரை களில் விவரமாக ஆராய்ந்தவை.
      ஒன்றை நினைக்கின் அது ஒழிந்திட்டொன்றாகு மல்லவா! தற்செயலாக இராமனுடைய முடிசூட்டை அறிந்த கூனி கைகேயிக்கு வரும் ஆபத்துகளை எடுத்துக்கூறி வசப்படுத்தித் தசரதனிடம் இரண்டு வரங்களையும் கேட்கத் தூண்டுகிறாள். தசரதன் கைகேயிக்கு இவ்விவரம் தெரியாதென முற்றும் நம்பி, இதை எதிர்பார்க்காமலும் காமவசப்பட்டும் முன்னைய வரங்களைக் கொடுக்க இசைந்து விட்டான்.

      மேற்கண்ட வரலாற்றில் தசரதன் தன்னை மிகவும் வயதானவனென்றும், சாவை எதிர்பார்த்துக் கொண்டி ருக்கிறதாகவும் கூறுவதைக் காணலாம். இவ்வளவு தாழ்ந்த நிலையிலிருப்பவன் விடியத் தன் மகனுக்கு முடிசூட்டை வைத்துவிட்டு அந்த அவசரத்திலும் காமப்பித்தேறி கைகேயியைத் தேடி வருகிறான். இவ்வரலாற்றில் அவன் இராமனை மிகவும் அழகுள்ள வனாகப் புகழ்கிறான. அவனுடைய அழகை விவரிக் கிறான்! அவனைப் பிரிய முடியாமல் வருந்துகிறான். கடைசிவரை அவனுக்கு எப்படியாவது முடிசூட்ட வேண்டுமென்று முயல்கிறான். மத்தியில் அரசைப் பரதனுக்குக் கொடுப்பதாகவும் ஆனால் இராமனைக் காட்டுக்கனுப்பாமல் கிழவனாகிய தன் பக்கத்திலே வைத்துப் பார்க்க அனுமதி கொடுக்கவேண்டுமென்றும் மன்றாடுகிறான்; மற்றைய பிள்ளைகளைக் காட்டிலும் இராமனிடமே மிகவும், அளவிலடங்காத ஆசை தனக்கிருப்பதாகக் கூறுகிறான்; அதனால், தன் ஆசைக் கிருப்பிட மானவளாகிய கைகேயியின் மகனாகிய பரதனை வஞ்சிக்கப்பலவாறு முயல்கிறான். இவ்வாறு மற்றைய மக்களைக் காட்டிலும் இராமனிடம் அதிக ஆசைவைப்பதற்கும், அதற்காக ஒரு மகனைத் துணிந்து வஞ்சிப்பதற்கும், மகனாகிய பரதனை வேண்டுமென்று வேறு நாட்டுக்கு அனுப்பியவனே, மற்றொரு மகனாகிய இராமனைப் பிரியமாட்டாமல் தவிப்பதற்கும் தகுந்த காரணமிருத்தல் வேண்டும்.

      ஒரு பெண்ணாகிய கைகேயியிடத்திலிருந்த ஆசை யைக் காட்டிலும் ஓர் ஆணாகிய இராமனிடத்தில் தசரதன் கொண்டிருந்த ஆசைக்கோர் அளவில்லை போலும். உலகத்துச் சிலரைப்போல இத்தசரதன் ஆண்பித்துக் கொண்டவன் போலும்! கிழவனாகிய இவன் தன்னருகிலேயே இராமனை வைத்துப் பார்க்க வேண்டுமென்று பித்து நிரம்பக் கொண்டு புலம்புகிறான். இப்பித்தே இராமனுக்கு உண்மையில் உரிமையில்லாத அரசாட்சியையும் கள்ளத்தனமாக வஞ்சித்து, அவனுக்குக் கொடுக்குமாறு தசரதனைத் தூண்டியது போலும்!

      இவ்வளவு கேவலமான பித்தேறிய புத்தியுடைமை யாலேயே தசரதன் தனக்குக் கேடாதல்பற்றிக் கைகேயி யின் வேண்டுதலுக்கு ஒரு நாளும் இசையேனெனக் கூறுகிறான். தகாத காரியமாகிய அவள் காலைத்தொட்டு பணிந்து பலமுறை வேண்டுதலைச் செய்கிறான்; பலவாறு அவளை இகழ்கிறான்; பலவாறு அவளையும் பரதனையும் புகழ்கிறான்; காட்டுக்குப் போகமாட்டேனென்று சொல்லி இராமன் மறுத்துவிட மாட்டானா எனக்கூறுகிறான். கடைசியாகத் தன் ஆசைக்கிருப்பிடமான இராமன் தன்முன் அப்போது இல்லாமையாலும், தன் ஆசைக் கிருப்பிடமான கைகேயி தன் முன் இருந்தமையினாலும் கைகேயி புறமே சாய்கிறான்.

      பலரறியக் கூறாத வாக்கானதால், அதனை வற்புறுத்தாமல் விட்டுவிடுமாறு தசரதன் கைகேயியை வேண்டுகிறான். அவள் எதற்கும் அசையவில்லை. புத்தி மயக்கத்தால் தசரதன் விண்ணுலகத்தில் தேவர்கள் பெண்ணுக்காக மகனைத் துரத்தலாமா என்று கேட்டால், எவ்வாறு உயிர் தரிப்பேனென்று புலம்புகிறான். விண்ணுலகம் போனபின் உயிர் இம்மண்ணுடலில் தரிப்பதெப்படி? இவ்வுயிர் போயன்றோ விண்ணுலக மடைதல் வேண்டும்?

                                  -------------------------”விடுதலை” 22-8-2014


      Read more: http://viduthalai.in/page1/86324.html#ixzz3BEEtmDCc